Thursday 30 September 2021

ஆப்கானிஸ்தானும் உலக அரசியல் சக்திகள் உறவுச் சமநிலையில் மாற்றங்களும்

 


ஆப்கானிஸ்தானும்

உலக அரசியல் சக்திகள் உறவுச் சமநிலையில் மாற்றங்களும்

--அனில் ரஜீம்வாலே

மார்க்ஸிய அறிஞர்

            ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதும் அந்நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் காட்சிகள் முழுமையாக மாறி விட்டன. சுமார் 20 ஆண்டுகள் தங்கியிருந்த பிறகு திடீரென்று அவர்கள் வெளியேறி விட்டனர். இருப்பினும் அது திடீர் முடிவாக இருக்க முடியாது; நிச்சயம் அமெரிக்க ஆளும் தரப்பு வட்டாரங்களில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டிருக்கும். 

            ஆங்காங்கே சில நவீனமயங்கள் ஏற்பட்டதைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் பெரிதும் மலைவாழ் மக்களின் செல்வாக்குள்ள சமூகம். அனைத்தையும்விட ஆப்கானிஸ்தான் அமைந்துள்ள புவிப்பகுதியின் முக்கியத்துவம்; அப்பகுதி பல அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வெட்டிச் சந்திக்கின்ற இடமாக அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இராணுவப் படைகளின் காலம் தொட்டு இந்த நாட்டை எந்த வெளிநாட்டுச் சக்திகளாலும் அடக்கி ஆள முடிந்ததில்லை. அந்த நாட்டின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (PDP)யின் உதவிக்காகச் சென்ற சோவியத்கள் உள்நாட்டு மலைவாழ் இனக்குழுக்களைச் சந்திக்க முடியாமல் திரும்ப நேர்ந்தது. இப்போது அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகள் தங்கிய பிறகு அவசர அவசரமாகத் திடீரென்று மூட்டை கட்டிச் சென்றனர். 

தலிபான் : அமெரிக்கா உருவாக்கியது

            தலிபான் அமைப்பே அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கியதுதான். கடந்த நூற்றாண்டின் 1990களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானைவிட்டு சோவியத் வெளியேற அதன் அரசியல்சக்தி வெற்றிடத்தை நிரப்பவும், ஆப்கன் சமூகம் முற்போக்குத் திசையில் மாறுவதைத் தடுப்பதற்காகவும் அமெரிக்கா உருவாக்கிய அமைப்பு.

            ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாக்கிஸ்தானின் வடக்குப் பகுதிகளில் ‘தலிபான்’ (பஷ்தூன் மொழியில் ‘மாணவர்கள்’ என்று பொருள்) அமைக்கப்பட்டது. தீவிரமான சன்னி பிரிவு இஸ்லாம் கொள்கையை மேம்படுத்துவதற்காகத் தொடக்கத்தில் அவ்வமைப்பிற்குச் சவுதி அரேபியா எல்லா உதவிகளையும் வழங்கியது; பின்பு அமெரிக்கா பெருமளவில் நிதியளிக்கிறது. தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தங்களின் சொந்தப் புரிதலின்படியான ‘ஷரியா’ (இஸ்லாமியச் சட்டம்) பதிப்பு முறையை மீண்டும் ஏற்படுத்த உறுதியளித்தனர். அண்மையிலுள்ள இரான் நாடு ஷியா பிரிவு முஸ்லீம்கள் செல்வாக்குப் பெற்றது.

            முன்பு தனது முகாஜீதீன்களைக் கொண்டு சோவியத்களை எதிர்த்த பர்க்கனுதின் ரப்பானியின்  ஆட்சியைக் கவிழ்த்து 1996ல் தலிபான் காபூலைக் கைப்பற்றியது. நீண்ட போர்களால் சோர்ந்துபோன மக்கள், அமைதி வரும் என்று நம்பி, முதலில் தலிபான்களின் ஆட்சியை வரவேற்றனர். ஆனால் விரைவில் தலிபான்கள் ஆட்சி மக்களின் ஜனநாயக, கலாச்சார மற்றும் மனித உரிமைகள் மீது அனைத்து வகைகளிலும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர்; சொல்லொண்ணா அட்டூழியங்களை நிகழ்த்தினர்: பொதுவெளியில் அனைவரும் காண தூக்கு, உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனைகளை நிறைவேற்றுவது, ஆண்களைத் தாடி வளர்க்கவும் பெண்கள் முழுமையாக மறைக்கும் பர்க்கா ஆடைகள் அணியவும் நிர்பந்தித்தல் முதலானவற்றைத் திணித்தனர். தொலைக்காட்சி, வானொலி மற்றும் சினிமா முதலியவற்றிற்குத் தடை விதித்தும் 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்க வெளியே அனுப்படுவவதையும் நிறுத்தினர்; ஒட்டுமொத்தமாகப் பெண்கள் வெளியே வரக்கூடாது என்று அவர்களின் சமூகச் செயல்பாடுகளுக்குத் தடைவிதித்தனர்.

            தலிபான்கள் ஆட்சியை உலகில் அங்கீகரித்த ஒரே நாடு அமெரிக்கா. பின்னர் தலிபான்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டிலிருந்து தனித்துச் சென்றனர். அப்போது அமெரிக்கா அவர்கள் மீது,  உலக வர்த்தக மையக் கட்டட 9/11 தாக்குதலில் தொடர்புடைய அல்-காய்தா தீவிரவாதக் குழுக்களை ஆதரித்துப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டியது.

            தலிபான்களுடன் அமெரிக்க உறவு மோசமடைய, நேட்டோ கூட்டு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இறங்கியது. (அவர்கள் துணையோடு) ‘நார்தெர்ன் அலையன்ஸ்’ அமைப்பு (ஆப்கன் விடுதலைக்கான ஒன்றிணைந்த இஸ்லாமிய தேசிய முன்னணி) செயல்பாட்டிற்கு வந்தது;  அது தலிபான் சக்திகளை எதிர்த்துப் போராடி அவர்களைக் காபூல் ஆட்சிக் கட்டிலிலிருந்து டிசம்பர் 2001ல் விரட்டியது. தலிபான் ஆட்சி வீழ்ந்து சிதறியது. அது முதல் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானத்திலேயே முகாமிட்டுத் தங்கியது.

புவிசார்அரசியல் மற்றும் எண்ணை/ எரிவாயு தன்னலநோக்கங்களில் மாற்றம்

            பல வழித்தடங்கள் சந்திக்கும் குறுக்குப் பாதையில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது. பாக்கிஸ்தான், மத்திய கிழக்கு, இரான், உஸ்பெஸ்கிஸ்தான், தஜிஹிஸ்தான், ரஷ்யா, சீனா, இந்தியா முதலான நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகள்  ஆப்கான் சமூகம் மற்றும் அரசியலில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஏகாதிபத்திய தன்னல நோக்கங்கள் காரணமாக அமெரிக்காவும் ஆழமான செல்வாக்கைச் செலுத்துகிறது.

            9/11 இரட்டை கோபுரத் தாக்குதல் மற்றும் ஒசாமா பின் லாடனைத் தேடுவதைச் சாக்கிட்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தில் தலையிட்டது, இறுதியில் பின்லாடனையும் பாக்கிஸ்தானில் கொன்றது. இருப்பினும் தலிபான் எதிர்ப்பு அரசுக்கு உதவிட 20 ஆண்டுகள் தங்கிவிட்டது; ஆனால் தலிபான்களுடன் உள்ள தொடர்பையும் முழுமையாக முறித்துக் கொள்ளவில்லை. பயங்கரவாதிகள் எனத் தானே கைது செய்தவர்கள் உட்பட பல தலிபானியக் குழுக்களை அமெரிக்காவின் அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்தனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நீண்ட காலம் தங்கியதற்குப் பல புவிசார்ந்த பொருளாதார, புவிசார்அரசியல் காரணங்கள் இருந்தன.

            அந்தப் பெரும் காரணங்களில் அப்பிராந்தியத்தில் நிறைந்து காணப்படும் எண்ணை மற்றும் எரிவாயு படுகைகள் மற்றும் அதை எடுத்துக் கொண்டு செல்லும் குழாய் பாதைகளும் முக்கியமான ஒன்று. துர்க்மெனிஸ்தானின் எண்ணை மற்றும் அபரிமிதமான எரிவாயு படுக்கை சேமிப்பை மிகக் குறைவான தூரம் மற்றும் செலவு குறைவான பாதையில் கொண்டு செல்வதற்கு ஆப்கானிஸ்தான் வழியே செல்வதுதான் லாபகரமானது.

            உலக இயற்கை எரிவாயு படுக்கையின் நான்காவது பெரிய சேமிப்பு துர்க்மெனிஸ்தானில் உள்ளது: அங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்ட 19.5 டிரில்லியன் கனசதுர மீட்டர் கொள்ளளவு இயற்கை எரிவாயு சேமிப்பு என்பது உலகின் மொத்த இருப்பில் சுமார் 10 சதவீதமாகும்.

            காஸ்பியன் கடல் பகுதியின் எண்ணை எரிவாயு சேமிப்பில் அமெரிக்க அரசு மற்றும் கம்பெனிகள் பெரும் ஈடுபாட்டையும் பங்குகளையும் கொண்டுள்ளன. முதலில் பாக்கிஸ்தானுக்கு, பின்னர் சாத்தியமெனில் இந்தியாவுக்கும், எரிவாயுவை ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு செல்ல மத்திய ஆசிய எரிவாயு குழாய்பாதையைப் பெரியஅளவில் கட்டியமைக்கத் துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பாக்கிஸ்தான் மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டன. ‘மத்திய ஆசிய எரிவாயு குழாய்பாதை நிறுவனங்களின் கூட்டுப் பேரமைப்பு’ (கன்சார்டியம்) ஏற்படுத்தப்பட்டது; பேரமைப்பில் (முதலில் 47%, பின்னர் 54% பங்குகளுடனும்) ‘உனோகால்’ என்ற அமெரிக்கக் கம்பெனி, டெல்டா ஆயில் (15% பங்குடன் சவுதி அரேபிய நிறுவனம்), துர்க்மெனிஸ்தான் (7% பங்கு) மற்றும் பிற நாடுகள், நிறுவனங்களும் அதில் இடம் பெற்றன. அமெரிக்க அரசு ஆதரவளிக்க அதிக பங்குகள் உடைய உனோகால் கம்பெனி அதை வளர்ப்பதில் தலைமையேற்றது. 1997 டிசம்பரில் அமெரிக்க எரிசக்தித் துறையின் மூத்த அதிகாரிகள் தலிபான் அமைச்சர்களை வாஷிங்டனில் சந்தித்து அந்நிறுவனத்தின் பல ஆயிரம் கிமீ குழாய் பாதை செயற்பாட்டில் கூட்டாகப் பணியாற்றினர்.

            ‘உனோகால் – சென்ட்காஸ் கன்சார்டியம்’ (உனோகால் நிறுவனம் --மத்திய ஆசிய கேஸ் பைப்-லைன் கூட்டுப் பேரமைப்பு) தலிபான்களுக்கு பெரும் தொகையை வழங்க ஒப்புக் கொண்டது. உனோகாலின் போட்டியாளரான ‘பிரிதாஸ்’ என்னும் அர்ஜென்டினா நிறுவனம் கேஸ் எடுத்துச் செல்லும் கட்டணமாகத் தனிபானுக்கு ஒரு பில்லியன் டாலர் வழங்க முன்வந்தது; அந்தத் தொகை பெருமளவிலான ரயில் பாதை, சாலை நிர்மாணம் மற்றும் எரிவாயு பாதையில் வலுவான தலிபான் படைகளால் 20 கிமீக்கு ஒரு போலீஸ் காவல் வழங்கவும் தரப்பட முன்வந்தது.

பிரிதாஸ் நிறுவனத்தைவிட உனோகால் தலைமையேற்ற சென்ட்காஸ் கன்சார்டியத்திற்கு முன்னுரிமை தர துர்க்மெனிஸ்தானை அமெரிக்க அரசு கட்டாயப்படுத்தியது. கன்சார்டியம் பேரமைப்பிற்கு எரிவாயு குழாய் பாதை ஒப்பந்தம் 1997ல் கிடைத்தது. அந்த ஆண்டு மூத்த தலிபான் குழு ஒன்றிற்குப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் டெக்சாஸ் நகருக்குப் பயண ஏற்பாட்டையும் அமெரிக்கக் கம்பெனி செய்து தந்தது. ஆனால் திடீரென்று ஆப்கானிஸ்தானத்தில் அரசியல் சூழ்நிலை மோசமடைந்தது. 1998ல் தான்சானியா மற்றும் கென்யாவின் அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல்-காய்தா தாக்குதல் நடத்தியது. அதே ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தில் இருந்த பின்-லாடன் முகாம்களைத் தாக்கியது; நான்கு மாதங்களுக்குப் பிறகு உனோகால் சென்ட்காஸ் அமைப்பிலிருந்து வெளியேறியது.  

            இன்று எரிவாயு குழாய் நிர்மாண வளர்ச்சியில் உனோகால் முன்னணி பாத்திரம் வகித்து வடக்கு துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கான் வழியாகப் பாக்கிஸ்தானின் அரேபிய கடல் துறைமுகத்திற்கு சுமார் 1700 கிமீ எரிவாயு குழாய் பாதை அமைத்துள்ளது.

            எண்ணை எரிவாயு வர்த்தகச் செயல்பாட்டிற்குத் தேவையான நிலைத்தன்மையை அடைய வேண்டி அமெரிக்கா தலிபான்களுடன் சமரசமாகக் குழைகிறது.

தலிபான், அமெரிக்கா மற்றும் எண்ணை வளம்   

               


ஆப்கானிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயு குழாய்பாதைக்காகச் சமீபத்தில் தலிபான் குழு திடீரென்று துர்க்மெனிஸ்தானிற்கு விஜயம் செய்தது. இதற்கு ஏற்பாடு வசதிகளைச் செய்து தந்தது அமெரிக்க அரசு. அமெரிக்கா நீண்டகாலமாகச் சாதிக்கப் பாடுபட்டதை நான்கு நாடுகளின் ஆங்கில முதல் எழுத்தைக் கொண்டு “TAPI“ என்பர் : அது ‘துர்க்மெனிஸ்தான், ப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் ந்தியா’ வழியாகச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் பாதை என்பதைக் குறிக்கும்.

                எண்ணை மற்றும் எரிவாயு தேடியெடுக்கும் ஆய்வுகள் மற்றும் குழாய் அமைப்பதில் அமெரிக்காவும் தலிபானும் தங்களுக்கிடையே ஒத்துழைப்பை மீண்டும் புதுப்பித்தனர்.

சீனாவின் பார்வையும் நோக்கங்களும்

            2009ல் மத்திய ஆசியா – சீனா இடையே பைப்-லைன் திட்டம் துவங்கப்பட்டது. அது முதலாக, துர்க்மெனிஸ்தான் 290 பில்லியன் கனசதுர மீட்டர் எரிவாயுவைச் சீனாவிற்கு அனுப்பி வருகிறது. சீனா நிதியளித்து நிர்மாணித்த அந்தப் பைப்-லைன் திட்டம் ஆண்டு தோறும் 55 பில்லியன் கனசதுர மீட்டர் துர்க்மெனிய எரிவாயுவை எடுத்துச் செல்கிறது.

            இதனால் அந்தப் பகுதி எண்ணை புவிசார் அரசியலில் சீனாவிற்கு மிகப் பெரிய ஆர்வம் இருக்கிறது; ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தனக்குச் சாதகமாக்க அந்நாடு பார்க்கிறது. துர்க்மெனிஸ்தான் எண்ணை, எரிவாயு குழாய்கள் மற்றும் தனது உறுதியான பாதுகாப்பிற்குத் தலிபானை எதிர்பார்த்து நிற்கிறது.

            அமெரிக்க ஆதரவுடன் தலிபான் துர்க்மெனிஸ்தான் மீது முக்கியத்துவமுடையதாகக் கண் வைக்கிறது. மேலும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகள் அந்நாட்டின் புதிய தலைமைக்கு அரசியல் ஆதரவையும் வழங்குகின்றன.

            இவ்வாண்டின் தொடக்கத்தில் தலிபானியக் குழு, துர்க்மெனியத் தலைநகர் அசுகாபாத் சென்று, துர்க்மெனிஸ்தான் மின்சாரத்தை ஆப்கானிஸ்தான் வழியாகப் பாக்கிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு செல்வது குறித்தும் விவாதித்தது.

            ஆப்கானிஸ்தானை மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே பாலமாகத் தலிபான் கருதுகிறது. அதன் முன்னெடுப்புத் திட்டங்களில் ஒன்று சுமார் 1840கிமீ நீண்ட குழாய்பாதையைப் பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் பஞ்சாப் மாநில ஃபாசில்கா மாவட்டம் வரை நீட்டிப்பதாகும்.

            துர்க்மெனிஸ்தான் உற்பத்தி செய்யும் பெரும்பகுதி எரிவாயுவை, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் கஸகஸ்தான் வழியே அமைக்கப்பட்ட மூன்று குழாய் பாதை ஏற்றுமதி கட்டமைப்புகள் மூலம்  சீனாவிற்குத் தற்போது துர்க்மெனிஸ்தான் வழங்கி வருகிறது.

            துர்க்மெனிய மற்றும் பிற எரிவாயு மீது ரஷ்யாவும்கூட தீவிரமான ஆர்வம் கொண்டுள்ளது.

தலிபானும் போதைப் பொருள் வர்த்தகமும்

            தலிபானும் அதன் கூட்டாளி துணை அமைப்புகளும் அபின் (ஓப்பியம்) செடிகள் பயிரிடுவது, அபின் வர்த்தகம் மற்றும் கடத்தலை ஆதரிக்கும் முக்கிய புரவலர்கள் ஆவர். (மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் முற்றிய காய்களின் விதைகளே கசகசா மருந்துப் பொருளாகும். காய் முற்றும் முன் அதைக் கீறி பாலெடுத்து உறைய வைத்துத் தயாரிப்பதே போதைப் பொருளான அபின் -- தமிழ் ஆயுர் வேதம் முகநூலில் இருந்து இணைத்தது.)

            ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி மற்றும் உலகின் 80சதவீத ஹெராயின் போதைப் பொருள் வழங்கும் நாடாகும். அந்நாட்டின் ஜிடிபி-யில் அபின் வர்த்தகம் 11 சதவீதமாகும். ஆப்கானின் 34 மாகாணங்களின் 22ல் அபின் (பாப்பி) செடி வளர்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில்தான் பெரும்பகுதி போதைச் செடிகள் பயிரிடப்படுகின்றன. அபின் பயிரிடுவதை எதிர்த்துப் ‘போரிட’அமெரிக்கா 9 பில்லியன் டாலர் செலவிட்டது. ஆனால் எதிர்ப்பில் திறமையான சட்ட நடவடிக்கைகளையோ அல்லது இராணுவ நடவடிக்கையோ அமெரிக்கா எடுக்கவில்லை என்பதே உண்மை; தலிபான்களைவிட போதைப் பொருள் வர்த்தகம் சிறியதொரு தீமை எனக் கருதிவிட்டது போலும்! அமெரிக்காவின் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை அதிகாரியான ரிச்சர்டு ஹால்ப்ரூக் கடந்த 40ஆண்டுகளில் அமெரிக்காவின் ‘முயற்சி’களைப் பயன்தராது மிகவும் வீணடிக்கப்பட்ட மற்றும் திறனற்ற நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தலிபான்களிடம் கையளித்து விட்டது

            ஆப்கானிஸ்தான் சூழலையும் வரலாற்றையும் அமெரிக்கா நன்றாக அறிந்துள்ளது. தலிபான்களின் கீழ் பெண்களே மிக மோசமாக சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவு என்பதையும் அறியும். ஆப்கான் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தைத் தலிபான்கள் சீரழிக்கிறார்கள் என்பதையும் அமெரிக்கா நன்றாகவே அறியும். அனைத்திற்கும் மேலாகத் தலிபான்களிடம் அதிகாரத்தைக் கையளித்து ஒப்படைப்பது அந்நாட்டை மீண்டும் பிற்போக்கு மத்திய காலத்திற்குத் தூக்கி எறிவதாகும் என்பதையும் நன்கு அறியும். மனித, ஜனநாயக உரிமைகள்; அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு இப்படி எதைத்தான் என்றில்லை, பலவும் அமெரிக்கா உரத்துப் பேசும். இப்போது இவை அனைத்தும் தலிபான்களால் அச்சுறுத்தப்படுகின்றன. தலிபான்களைப் பற்றி உள்ளும் புறமும்  அதன் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலம் குறித்தும் அமெரிக்கா நன்கு அறியும்.

            இவ்வளவு அறிந்தும் பிறகு ஏன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவும் அதிகாரத்தைத் தலிபான்களிடம் ஒப்படைக்கும் முடிவையும் அமெரிக்கா தேர்ந்தெடுத்தது? இதற்கான பதில் அதனுடைய ஏகாதிபத்திய தன்னல நோக்கங்களில் உள்ளது. மேலே குறிப்பிட்ட மதிப்புகள், ‘விழுமியங்கள்’ குறித்து அமெரிக்கா சிறிதும் அக்கறைபடுவதில்லை. தன்னுடைய இராணுவ வீரர்கள் பற்றியே அதன் அக்கறையும் கவலையும். நீண்டகாலம் தலிபான்களுடன் விவாதங்களில் ஈடுபட்டாலும் உண்மையில் அதனால் தலிபான்களை எதிர்கொண்டு சந்திக்க இயலவில்லை. ஆப்கானை விட்டு நீங்குவது என்பது முன்பே திட்டமிட்ட ஒன்றே.

            பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதாக அமெரிக்கா உரத்துப் பெருமை பேசும் அதே நேரத்தில் பயங்கரவாதி ஹக்கானி வலைப்பின்னல் அமைப்பினருடன் நெருங்கிய  தொடர்புடைய தலிபான் அரசை ஆதரிக்கிறது. ஆப்கான் இடைக்கால அரசின் அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானி உலகப் பயங்கரவாதிகள் பட்டியலில் தீவிரமாகத் தேடப்படும் ஒருவராவார்.

            அமெரிக்கா மிக விநோதமான ஏகாதிபத்தியக் கொள்கையைப் பின்பற்றுகிறது.

            எண்ணை, எரிவாயு மற்றும் தனது பிற நன்மைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது. அரபுக் கடல் மற்றும் அதைத் தாண்டி தொலைவான பிராந்தியங்களை அடைந்து தனது செல்வாக்கு வளாகத்தை விஸ்தரிக்க அமெரிக்கா தலிபான்களுடனும் ஒத்துழைக்கும்.  

            சீனா, ரஷ்யா, துர்க்மெனிஸ்தான் முதலான மற்ற சக்திகளுக்கும் சொந்த நலன்களின் ஆர்வம் உண்டு என்பதால் அவையும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் மக்களைத் தங்களது புவிசார் அரசியல் பரிசோதனைச் சாலை எலிகளாக, சோதனைப் பொருட்களாக மாற்றுகின்றன. அமெரிகாவின் விலகல் அவர்களது ‘வாய்ப்பு’களை அதிகரித்துள்ளது.  

இந்தியாவின் நிலைபாடு

            சமீப காலங்களில் அமெரிக்க ஆதரவு கொள்கைகளைப் பின்பற்றியதற்கான விலைகளை இந்தியா தர வேண்டியுள்ளது. இப்போது திடீரென்று புதிய அபாயங்களைச் சந்திக்கிறது. இந்திய அரசின் ‘நண்ப’னான அமெரிக்கா திடீரென்று ஆப்கானிஸ்தானைவிட்டுச் சென்று விட்டதால், தலிபான்கள் மற்றும் பாக்கிஸ்தானிடமிருந்து தீவிரவாத மற்றும் பிற ஆபத்துகள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானத்தின் புதிய ஆட்சியை எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்ற மிகப் பெரிய தடுமாற்றத்தில் இந்திய அரசு உள்ளது. எரிவாயு குழாய் பாதைகள் (ஒரு முடிவிற்கு) உதவலாம், அல்லது உதவாது போகலாம். எண்ணை மற்றும் எரிவாயு தேவையின் சூழல் இந்திய அரசைத் தலிபான்களுடன் நட்பு கொள்ள நிர்பந்தித்தாலும், அவர்களுடன் இந்தியா மிகவும் நெருக்கமாக நட்புகொள்ள முடியாது.

            இந்தியாவின் நிலை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உதவியற்ற நிலையிலும் உள்ளதாகத் தோன்றுகிறது. ஆப்கன் மக்களை ஆதரித்து நிற்கும் உறுதியான முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டும்; தலிபான் – அமெரிக்கச் சூழ்ச்சிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

--நன்றி : நியூஏஜ் (செப்.26 –அக்.2)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ. கடலூர்

 

 

 

1 comment:

  1. சிறப்பான தேவையான ஆப்கன் கட்டுரை வாழ்த்துகள் நீலுவுக்கு.

    ReplyDelete