Monday 27 September 2021

விவசாய உற்பத்தி பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சனை

 




குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சனை

--ஆர் எஸ் யாதவ்

            பல மாதங்களாகப் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளில் விவசாய உற்பத்திப் பொருள்களுக்குக் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ (MSP, எம்எஸ்பி) நடைமுறைக்குச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் ஒன்று. அபரிமித விளைச்சல் அல்லது சந்தை சக்திகளின் கூட்டு மோசடியால் விலை குறைவாக நிர்ணயிக்கப்படுவது போன்ற காரணங்களால் விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை வீழ்ச்சி அடைவதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசு ஏற்படுத்திய நடைமுறையே எம்எஸ்பி. அரசு முகமைகள் குறிப்பிட்ட தானியத்தை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வாங்கும் விலைதான் அது. உற்பத்தியை அதிகரிக்க ஏற்றதொரு சூழ்நிலையை உருவாக்கவும், விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் இத்திட்டம் 1960களின் மத்தியில் கொண்டுவரப்பட்டது. நாட்டில் உணவு பற்றாகுறை ஏற்பட்ட 1966 –67ல் முதன் முதலாகக் கோதுமைக்கு இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

            23 பயிர்களுக்கு எம்எஸ்பி அறிவிக்கப்படுகிறது: 7வகை தானியங்கள் (நெல், கோதுமை, மக்காச்சோளம், கம்பு, சோளம், பார்லி மற்றும் கேழ்வரகு); 5 பருப்புகள் (கடலை, துவரை (ஆர்க்கார்), உளுந்து, பயறு, மசூர் (மைசூர்) பருப்பு; 7 எண்ணை வித்துகள் (கடுகு, மணிலா, சோயாபீன், எள் , சாபிளவர், சூரியகாந்தி மற்றும் நைஜர் (காட்டு எள்) வித்து); 4 வணிகப் பயிர்கள் (பருத்தி, கரும்பு, தேங்காய் கொப்பரை மற்றும் சணல்). இருப்பினும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்ட விலை அல்ல என்பதே நடைமுறை உண்மை.

            விளைச்சலில் அரசு முகமைகளால் வாங்கப்படும் ஒரு பகுதிக்குத்தான் எம்எஸ்பி விலை கிடைக்கிறது. ஆனால் அதுபோக ஏனைய உற்பத்தி தானியங்களை எம்எஸ்பியைவிடக் குறைந்த விலைக்கு, சிலநேரம் அதனில் பாதிவிலைக்கே, தனியார் வியாபாரிகள் வாங்குகின்றனர். அப்படிக் குறைந்தவிலைக்கு வாங்கியதை அவர்கள் அரசு முகமைகளிடம், மாநிலத்திற்குள் அல்லது வெளி மாநிலத்திலே எம்எஸ்பி விலைக்கு விற்கின்றனர் என்பது இதில் கொடுமை.

            கரும்புக்கு நிர்ணயிக்கும் விலையை ‘நியாயமான மற்றும் லாபகரமான விலை’ (FRP, அது எம்எஸ்பி அல்ல) என்றழைக்கிறார்கள். பஞ்சாப், உபி, ஹரியானா, தெலுங்கானா மற்றும் கர்னாடகா போன்ற சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு கரும்புக்குத் தாங்கள் அளிக்கும் சொந்த விலையை ‘மாநில சிபாரிசு விலை’ (SAP, state advisory price) என்கிறார்கள்; அது ஃஎப்ஆர்பி லாபவிலையைவிடவும் வழக்கமாக அதிகமாக இருக்கும். சில மாநிலங்கள் அதனை ‘மாநில உடன்பாட்டு விலை’ (SAP, Agreed Price’) என்கின்றன. அம்மாநில மில் ஆலைகள் மாநிலம் நிர்ணயித்த லாபகர விலை அல்லது உடன்பாட்டு விலையைத்தான் பின்பற்ற வேண்டும்.

            ஒவ்வொரு ஆண்டும், ‘விவசாய உற்பத்திச்செலவு மற்றும் விலைக்கான கமிஷன்’ (CACP) அமைப்பு பல்வேறு வகை பயிர்களுக்கு ஆகும் உற்பத்திச் செலவை மூன்று வரையறை விளக்கங்களைப் பயன்படுத்தி நிர்ணயிக்கிறது. அந்த மூன்று வரையறைகளும் முறையே A2, A2+FL மற்றும் C2 எனப்படுகிறது.  

            முதலாவது ஏ-2 : இது, ஒவ்வொரு பருவத்திற்கும் பயிரை வளர்ப்பதற்கு விவசாயிகள் நேரடியாக உண்மையில் செலவிடும் தொகையைப் பிரதிபலிக்கிறது. அதில் விதைகள், உரங்கள், பூச்சிமருந்து, நிலக் குத்தகை வாடகை மற்றும் தொழிலாளிகளுக்கு வழங்கும் கூலி முதலிய உள்ளீட்டுச் செலவுகள் சேரும்.

            இரண்டாவது ஏ2 + ஃஎப்எல் : முதல் முறையில் விவசாயி நேரடியாகச் செலவிடும் தொகையைத் தவிர, மேலதிகமாக விவசாயியின் குடும்ப உறுப்பினர்களின் ஊதியமில்லாத உழைப்பின் மதிப்பும் சேர்க்கப்படும். அதாவது அவர்கள் உழைக்காவிட்டால் அதற்கு பதில் மற்ற கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டிய கூலியையும் சேர்க்க வேண்டும். இங்கே ஃஎப்எல் என்பது ஃபேமிலி லேபர், குடூம்ப உழைப்பு.

            மூன்றாவது முறை சி-2 : இரண்டாவது முறையின் மதிப்போடு பயிரிடப் பயன்படுத்தும் முதலீட்டுச் சொத்தான நிலத்திற்கான வாடகை மற்றும் நிலத்தின் மீதான வட்டியும் சேர்க்கப்படும்.

            சுவாமிநாதன் கமிஷன் சிபாரிசு செய்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மூன்றாவது வரையறையான சி2 என்பதை அடிப்படையாகக் கொண்டது. சுவாமிநாதன் குழு சி 2 வை போல ஒன்னரை மடங்கு என எம்எஸ்பியை நிர்ணயித்து பரிந்துரைத்தது (அதாவது சி2 + 50%).  ஆனால் அரசு நிர்ணயித்த எம்எஸ்பி, சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தல்ல; மாறாக, இரண்டாவது A2+FL வரையறையின் வழிமுறையின்படிதான் நிர்ணயித்துள்ளது.

            எனவே அரசு அறிவிக்கும் குறைத்நபட்ச ஆதரவு விலைகள் குழுவின் சிபாரிசு விலையோடு ஒப்பிட மிகவும் குறைவானது. எனவே விவசாயிகள் இரண்டு கோரிக்கைகளை MSPல் வலியுறுத்துகிறார்கள். ஒன்று, சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த எம்எஸ்பி C2 + 50% என்று இருக்க வேண்டும். இரண்டாவது, எம்எஸ்பிக்குச் சட்டபூர்வமான உறுதி அளிக்க வேண்டும். விவசாய உற்பத்திப் பொருட்களை யார் வாங்கினாலும் வாங்கும் விலை என்பது எம்எஸ்பி-ஐவிட குறைவாக இருக்கக் கூடாது; அப்படி யாரேனும் குறைவான விலைக்கு வாங்க முயன்றால் அவர்களைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவற்றை அமல்படுத்தினால், விவசாயிகளின் பொருட்களைத் தனியார் வியாபாரிகள் எவர் வாங்கினாலும் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவர்கள் கோருவதெல்லாம் உழைப்பில் விளைந்த பொருளை எம்எஸ்பி-ஐ விட குறைவான விலைக்கு வாங்கக் கூடாது என்பதுதான். சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கினால்தான் இது சாத்தியம். அதற்காகவே விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள்.

            23 பயிர்களுக்கு எம்எஸ்பி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த விலைவிகிதத்தில் கொள்முதல் நடத்த எந்த முறையான ஏற்பாடும் இல்லை. எல்லா பயிர்களுக்கும் மற்றும் மொத்த உற்பத்திப் பொருட்களையும் எம்எஸ்பி விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யாதவரை, அறிவிப்புகளால் பயனில்லை. எம்எஸ்பி விலையில் கொள்முதலின் அவல நிலை இப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் கூச்சமின்றி தைரியமாகக் கூறுகிறார், “குறைந்தபட்ச ஆதரவு விலை நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்’. இது என்ன கேலிக்கூத்து நாடகம்?

தற்போது அறிவிக்கப்பட்ட எம்எஸ்பி

            2021 – 22ம் ஆண்டின் ஆறு ரபி பருவ (குளிர்காலப்) பயிர்களுக்கு (சந்தைப் பருவம் 2022 –23 ஆண்டிற்கான) எம்எஸ்பி விலைகளை அரசு 2021 செப்டம்பர் 8ல் அறிவித்துள்ளது. ஒப்பீட்டிற்காக முந்தைய ஆண்டின் எம்எஸ்பி விலையோடு கீழே தரப்படுகிறது:

 

பயிர்கள்

குறைந்தபட்ச ஆதரவு விலை

    (குவிண்டாலுக்கு ரூபாய்)

           மார்க்கெட் பருவம்

    2021 -- 22

  2022 -- 23

கோதுமை

1975

2015

பார்லி

1600

1635

கடலைப் பருப்பு

5100

5230

மசூர் (/மைசூர்) பருப்பு (சிகப்பு)

5100

5500

கடுகு விதை

4650

5050

சாபிளவர் (குசம்பா) [செந்தூரப் பூ]

5327

5441


            







           எம்எஸ்பி விலையை அறிவித்தபோது அரசு ‘அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான’ (‘comprehensive’) என்ற வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்தியது. (அந்த வார்த்தை மேலே குறிப்பிட்ட மூன்றாவது வகையான C2உற்பத்திச் செலவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது). ஆனால் அரசு அறிவித்த எம்எஸ்பி, அதைவிடக் குறைவானதான இரண்டாவது வகையான A2+FL என்பதை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். இது மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறில்லை.

            கோதுமைக்கு உயர்த்திய எம்எஸ்பி வெறும் 2 சதவீதம் மட்டுமே, இது பத்தாண்டுகளில் அறிவிக்கப்பட்ட மிகக் குறைவானதாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோதுமைக்கு 2%, சாப்ளவர் 2.1%, பார்லி 2.2% மற்றும் கடலைப் பருப்புக்கு 2.5% மட்டுமே எம்எஸ்பி அதிகரிக்கப் பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பணவீக்கம் 6 சதவீதம், அதாவது பணத்தின் உண்மை மதிப்பு அதற்கு முந்தைய காலத்தைவிட 6சதவீதம் குறைந்துள்ளது எனப் பொருளாகும். எனவே எம்எஸ்பி உயர்த்தப்பட்டாலும் எதார்த்த உண்மை, எம்எஸ்பி விலை மதிப்பு குறைந்து போனது என்பதே நிகர விளைவு. அதாவது ஜான் ஏறி, முழம் சறுக்கிய கதைதான். எனவே மேற்கண்ட உற்பத்திப் பொருள்களின் உண்மை விலை (பணவீக்கத்தையும் கணக்கில் கொள்ள) முறையே 4%, 3.9%, 3.8% மற்றும் 3.5% குறைந்துள்ளது. அதாவது உண்மையில் எம்எஸ்பி உயர்த்தப்படவே இல்லை. உயர்த்தப்பட்டதாகச் சொல்வது விவசாயிகளைக் கேலி செய்வதல்லவா?

மேலும் ஐக்கிய முற்போக்கு ஆட்சி காலத்தைவிட மோடி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கான எம்எஸ்பி வீழ்ச்சி அடைந்தே வருகிறது. யுபிஏவின் 2009 –13 ஆட்சி காலத்தில் எம்எஸ்பி ஆண்டுதோறும் 19.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது; மோடியின் ஆட்சியில் 2014 –17ல் 3.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்த எம்எஸ்பி 2020 –21ல் மேற்பத்தியில் குறிப்பிட்டபடி சில பயிர்களுக்கு 3 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ந்தது.

            சந்தைப் பருவம் 2021–22க்கான பல்வேறு காரீப் (இலையுதிர்கால) சம்பா பயிர்களுக்கு அரசு 2021 ஜுன் 9ம் தேதி அறிவித்த குறைந்தபட்ச ஆதாரவிலை வருமாறு:

 

 

பயிர்கள்

குறைந்தபட்ச ஆதரவு விலை

    (குவிண்டாலுக்கு ரூபாய்)

           மார்க்கெட் பருவம்

    2020 -- 21

  2021 -- 22

நெல் (சாதா ரகம்)

1868

1940

நெல் ( ஏ – ரகம்) 

1888

1960

சோளம் (கலப்பினம்)

2620

2738

வெள்ளை சோளம்(மால்தண்டி)

2640

2758

கம்பு 

2150

2250

கேழ்வரகு    

3295

3327

மக்காச்சோளம்       

1850

1870

துவரம் பருப்பு (ஆர்கார்) 

6000

6300

பச்சைப்பயிர்           

7196

7275

உளுந்து

6000

6300

மணிலா       

5275

5550

சூரியகாந்தி விதை

5885

6015

சோயாபீன்ஸ் (மஞ்சள்)

3880

3950

எள்   

6855

7307

நைஜர் விதை

6695

6930

பருத்தி நடுத்தர இழை

5515

5726

பருத்தி (நீண்ட இழை)       

5825

6025

  

கரும்பு : 2021 ஆகஸ்ட் 25ல் உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சர் பியூஷ் கோயல் கரும்புக்கான நியாய லாப விலையில் (FRP) குவிண்டாலுக்கு ரூ5/- அதிகரித்து அறிவித்தார். 10% அடிப்படை மீட்பு விகிதமுள்ள கருப்புக்கு (அதாவது 100 டன் கரும்பைப் பிழிந்தால் 10 டன் சக்கரை கிடைக்கும் பிழிதிறன் உள்ளது) நியாயமான லாப விலையை ரூ290 அதிகரித்தும், 9.5% குறைவான மீட்பு விகிதமுள்ள கரும்புக்கு ரூ275 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. மீட்பு விகிதம் 0.1% அதிகரித்தால் 290 விலையில் குவிண்டாலுக்கு ரூ2.90 அதிகரித்தும்; 0.1% குறைந்தால் ரூ2.90 குறைத்தும் லாபவிலை வழங்கப்படும். (9.5% க்கு குறைவான மீட்பு விகிதமுள்ள கரும்பு வகைகளுக்கு மாற்றமின்றி குவிண்டாலுக்கு ரூ275/- வழங்கப்படும்). ஒன்றிய அமைச்சர் அறிவித்த குவிண்டாலுக்கு ரூ5 அதிகரிப்பு என்பது 1.7% உயர்வாகும். பணவீக்க விகிதத்தையும் கணக்கில் கொண்டால் உண்மையில் (மாநில அரசுகள் நிர்ணயித்த FRP) நியாய, லாப விலையில் அதிகரிப்பு எதுவுமில்லை; மாறாக, விலையில் வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.

            பல மாநிலங்கள் கரும்புக்கு பலவகையில் மாநிலச் சிபாரிசு விலையை வழங்குகின்றன. இரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி விவசாயிகள் போராடிய பிறகு சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இடையே 2021 ஆகஸ்ட் 24ல் பேச்சுவார்த்தை நடந்தது; அதன் விளைவாய் பஞ்சாப் அரசு சென்ற ஆண்டின் மாநில விலையை விட குவிண்டாலுக்கு ரூ 50 அதிகரித்து ரூ360 என நிர்ணயித்து அறிவித்தது.

            பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, ஹரியானா அரசும் ரூ12 அதிகரித்து முன்னதாக அறுவடைக்கு வரும் கரும்பு ரகங்களுக்கு குவிண்டாலுக்கு ரூ362 என அறிவிக்க வேண்டி வந்தது; தாமதமாக அறுவடைக்கு வரும் ரகங்களுக்கு முன்பிருந்த ரூ 340 என்பதை 355 என அறிவித்தது.

            2017லிருந்தே உத்திரபிரதேசத்தில்  மாநில ஏற்பு விலை மாற்றி அமைக்கப்படவில்லை. இது அம்மாநில விவசாயிகள் மீது மாநில பாஜக அரசு எந்தஅளவு அக்கறையாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நான்கு ஆண்டுகளாக அதிக மகசூல் காணும் சாதாரண கரும்பின் விலை குவிண்டாலுக்கு ரூ315எனவும் முன்பருவ அறுவடை மற்றும் நிராகரிக்கப்பட்ட வகைகளுக்கு  ரூ325 எனவும் கரும்பின்விலை மாற்றமின்றி நீடிக்கிறது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு உபி அரசு கரும்பு விலையை அதிகரித்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!”



                  --நன்றி: நியூஏஜ் (செப்.26 – அக்.2)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

            

             

 

No comments:

Post a Comment