Tuesday 17 October 2023

அதிதீவிர வலதுசாரியுடன் ஒருமைப்பாடு, பேரழிவு விளைவதன் தீயசமிக்ஞை --நித்யா சக்ரவர்த்தி

                             

அதிதீவிர வலதுசாரியுடன் ஒருமைப்பாடு, பேரழிவு விளைவதன் தீயசமிக்ஞை

--நித்யா சக்ரவர்த்தி

            இப்போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே முழுமையான போர். கடந்த 4 நாட்களில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸுடன் நட்பான பிற போராளிகள் ஒருபக்கமும், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் பெரும் உதவிகளுடன் அதிதீவிர வலதுசாரி நெதன்யாகு ஆட்சி மறுபக்கமுமாகப் போரில் ஈடுபட்டு, பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதையே அனைத்து அறிகுறிகளும் சுட்டிக் காட்டுகின்றன. இதுவரை ஐ நா உட்பட எந்த உலக அமைப்பும் தாக்குதல் கைமீறிப் போவதைக் குறித்துப் பேசவில்லை. ஹமாஸும் இஸ்ரேலும் இறுதி வரை போரிடுவது எனத் தீர்மானமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

            2022 பிப்ரவரி 24ல்  உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுதான் இரண்டாவது பெரிய போர். கடந்த 20 மாதங்களில் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, போரை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிறந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன, முக்கியமாக உலகத் தென்பகுதி (க்ளோபல் சவுத்) நாடுகளிலிருந்து வேண்டுகோள்களும் விடப்பட்டன. ஐநா மற்றும் ஜி20 உட்பட பிற சர்வதேசிய அமைப்புகளும் அதுகுறித்து விவாதித்தன; ஆனால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. ரஷ்யா --உக்ரைன் போர் தொடர்கிறது; அதில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்பலியும், உக்ரைன் மற்றும் உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்ய நகரங்களில் சொத்துகளின் பேரழிவும் விலையாகத் தரப்பட்டுள்ளது.

            இன்னும் ஜி-20 அமைப்பின் தலைவராக உள்ளவரும், டெல்லி ஜி20 உச்சி மாநாடு பெரும் வெற்றி என கடந்த மாதம்  உரிமை பாராட்டியவருமான பிரதமர் நரேந்திரமோடி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாக அக்டோபர் 7ம் தேதி டிவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார். இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா இஸ்ரேலுடன் ஒருமைப்பாட்டில் நின்று, எண்ணங்களும் பிராத்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களுடன் இருப்பதாகவும் கூறினார். ஹமாஸின் திடீர் தாக்குதல் மற்றும் அப்பாவி குடிமக்கள் மரணமடைந்ததற்காகப் பிரதமர் தம் அதிர்ச்சியையை நிச்சயமாக வெளியிடலாம்; ஆனால் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய தேவை குறித்து எதுவும் கூறாமலும், பாலஸ்தீனப் பிரச்சனை பற்றியெல்லாம் எதுவும் குறிப்பிடாமல் இந்தியா, இஸ்ரேலுடன் ஒருமைப்பாட்டில் நிற்கும் என்று பேசுவது, தொடரும் இந்த இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாட்டில் ஆழமான மாபெரும் மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

      இதுவரை, வெளியுறவு அமைச்சரகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை, வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், பிரதமரின் டிவிட்டர் செய்தியை மட்டும் சுற்றுக்கு விடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிவிட்டர் செய்தியில் பிரதமரின் நிலைபாடு வெளியுறவுத் துறை அமைச்சரகத்தைக் கொதிக்கும் கஞ்சியில் விழுந்த ஈ போல, கடுமையான

நெருக்கடியில் தள்ளியுள்ளது என்பது தெளிவு; பெரும்பான்மையான உலகத் தென்பகுதி நாடுகளின் நிலைபாட்டிற்கு மாறான இந்திய நிலைபாடு குறித்து வெளியுறவு அமைச்சரகம் விளக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. அரபு நாடுகள் தவிரவும், ஜி20 செப்டம்பர் மாநாட்டில் இந்தியப் பிரதமர் புதிய உறுப்பினர் அந்தஸ்து வழங்கிய ஆப்ரிக்க யூனியனின் உறுப்பு நாடுகளும் பிரதமரின் முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவு நிலைபாட்டுடன் இணக்கமாக இருக்க மாட்டார்கள்.

       உலகத் தென்பகுதி நாடுகள் மத்தியில் நிச்சயமாக எழுந்துவிட்ட சில தவறான புரிதல்களைத் திருத்தவும், இந்தச் சூழலிலிருந்து இன்னும்கூட மீண்டுவரவும் பிரதமர் அல்லது வெளியுறவு அமைச்சரகம் தற்போதைய மேற்காசிய போர் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். ஜி20 அமைப்பின் தலைவராகத் தமது பொறுப்பின் இறுதி கடமையை ஆற்றும் வகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 அமைப்பின் மெய்நிகர் கூட்டத்தில் பிரதமர் பேச உள்ளார். தற்போதைய போர் நீடிக்குமானால், இந்த மெய்நிகர் சந்திப்பில் உலகத் தென்பகுதி உறுப்பினர்களிடமிருந்து பல சங்கடப்படுத்தும் கேள்விகளைப் பிரதமர் சந்திக்க நேரும். உக்ரைன் போர் பிரச்சனையில் தமது ராஜ தந்திர வெற்றி மூலம் ஈட்டிய நம்பகத்தன்மையை இந்தியப் பிரதமர், ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்த அவரின் நிலைபாட்டால் சிதறி நொறுங்கிவிடப் போகிறது.

      இந்தியாவின் நிலைபாடு, அமெரிக்கா தலைமையேற்ற ஜி-7 நாடுகளின் நிலைபாட்டுடன் ஒத்து இருக்கிறதே தவிர, உலகத் தென்பகுதி நாடுகளுடனும், ரஷ்யா மற்றும் சீனாவுடனும் ஒத்ததாக இல்லை.

       இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையில் ஹமாஸ் தாக்குதல் மற்றும் அப்பாவி இஸ்ரேலிய குடிமக்களின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த அதே நேரத்தில், பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வின் தேவையை அடிக்கோடிட்டு வலியுறுத்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகம் தனது அறிக்கையில், (மேற்காசியப் பிரச்சனையில்) நிரந்தர அமைதியை ஏற்படுத்த, 1967க்கு முந்தைய எல்லைகளுடனும், கிழக்கு ஜெருசலேமைப் பாலஸ்தீனத்தின் தலைநகராகக் கொண்டும், இரண்டு நாடுகளை அமைப்பதன் மூலம் தீர்வுகாண  சர்வதேச சமூகம், ஐநா மன்றம் மற்றும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.

            மேற்கத்திய நாடுகளும் சர்வதேச ஊடகங்களும் ஹமாஸ் இயக்கத்தைப் பயங்கரவாதிகள் மற்றும் பிசாசுகள் எனச் சித்தரிக்கின்றன; ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, அதிலும் குறிப்பாக

கடந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் இஸ்ரேலியப் பிரதமர் ஆனதிலிருந்து, காஸா பகுதியில் அதிகரித்து வரும் கண்ணில்படும் மக்களை மறைந்திருந்து துல்லியமாகக் சுடுகின்ற இஸ்ரேலிய ஸ்நிப்பர் (sniper) தாக்குதலை எதிர்த்துப் போராடுவது பாலஸ்தீனப் போராளிகள் பிரிவான ஹமாஸ் இயக்கமாகும். 

            இஸ்ரேல் வரலாற்றில் நெதன்யாகு தலைமை வகிக்கும் அரசு, மிகத் தீவிரமான வலதுசாரி அரசாகும். அந்த அரசைக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இஸ்ரேல் நாட்டிலேயே உள்ள

 சில எதிர்க் கட்சிகளும் பாஸிச அரசு என்று முத்திரை குத்துகின்றன. அதன் சொந்த  அமைச்சர்கள் சிலரே அதனை ஒப்புக் கொள்கின்றனர்: இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) தன்னையே ஒரு “தன்பாலின அச்சம் மற்றும் வெறுப்பு” உடையவர் (fascist homophobe) என வர்ணித்துக் கொள்கிறார். இஸ்ரேலிய பிரதமரின் 2018 நேஷன் ஸ்டேட் லா எதிர்மறை புகழ்பெற்றது; அது தனது குடிமக்களில், ‘இஸ்ரேலிய அரேபியர்’களான ஐந்தில் ஒரு பங்கினரைச் சட்டப்படி கீழ்நிலை அந்தஸ்து உடையவர்கள் என்பதாக அறிவித்தது. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதையும் பாலஸ்தீனர்களை இறையாண்மை உடைய மக்களாக அங்கீகரிப்பதையும் மறுத்து இஸ்ரேல் இந்தப் பதத்தை (இஸ்ரேலிய அரேபியர்) பயன்படுத்துகிறது.

             இதுவும், இதனுடன் திட்டமிட்ட முறையில் பாலஸ்தீனர்களை ஒடுக்கி அவர்களுக்குச் சொந்தமான (அ) முற்றுகையிடப்பட்டுள்ள நிலங்களில் குடியேறிய இஸ்ரேலின் செய்கை,

தனிமனிதச் சுதந்திரத்தில் மிக தாராளச் சிந்தனையுடைய (லிபரல்) உலகின் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) மற்றும் மனித உரிமை கண்காணிப்பு (Human Rights Watch) போன்ற அமைப்புக்களை, ‘இஸ்ரேல் ஒரு நிறவெறி அரசு’ (அபார்ட்தியேட் ஸ்டேட்) என ஒப்புக்கொள்ளத் தூண்டியுள்ளது.

 திரும்பத் திரும்ப வழக்கமான முறையில், “பாலஸ்தீன மண் மற்றும் உடைமைகளை பெருமளவில் அபகரித்தல், சட்டவிரோதக் கொலைகள், கட்டாய இட மாறுதல்கள், நடமாட கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பாலஸ்தீன மக்களுக்குத் தேசிய இனம், குடியுரிமையை மறுப்பது” ஆகிய செயல்கள், அனைத்தையும் ஒரேயடியாக ஒடுக்கும் அடக்குமுறை தவிர வேறில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை மதிப்பிட்டுள்ளது; இதைத்தான் சர்வதேசச் சட்டம் நிறவெறி ஒதுக்கல் (அபார்தெய்டு) என வரையறுத்துள்ளது.

   இருப்பினும், இஸ்ரேல் பல ஆண்டுகளாக அத்தகைய முறையைத்தான் இயக்கி வருவது மட்டுமல்ல, அது மேலும் மோசமடைகிறது. சனிக்கிழமை ஹமாஸ் திடீர் தாக்குதலைத் தொடுப்பதற்கு முன்பு 2023ல் இதுவரை பல நூறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்; ஐக்கிய நாடுகள் சபை 2006ல் இருந்து இதுவரை இந்த ஆண்டுதான் மரணங்களுக்கு வழிவகுத்த மிகக் கொடூரமான ஆண்டு என்று ஏற்கனவே மதிப்பிட்டுள்ளது. 

            இஸ்ரேலின் நீதி துறையை மாற்றி அமைக்கும் நெதன்யாகுவின் முயற்சி ஆகக் கூடுதலான மிகத் தீவிர வலதுசாரி ஓர் அவை நாடாளுமன்றத்திற்கு (கெனெசெட், Knesset) இஸ்ரேலிய உச்சநீதிமன்றத்தின் முடிவுகளை மேலதிகாரம் செய்யும் (ஓவர் ரூல்) ஆற்றலை வழங்கியுள்ளது; இது பாலஸ்தீன நிலத்தைத் திருடி அபகரிப்பதையும் பாலஸ்தீனத்தைக் காலனிமயமாக்குவதை மட்டுமே விரைவுபடுத்தும். [கெனெசெட் அவை அனைத்துச் சட்டங்களையும் நிறைவேற்றும் ஏக அதிகாரம் உடையது, முன்பு பிரதமரால் அலங்காரமாக நியமிக்கப்பட்டு வந்த குடியரசுத் தலைவரையும், அரசு கம்ட்ரோலரையும் தேர்ந்தெடுக்கும், அமைச்சரவைக்கு ஒப்புதல் வழங்கும், அரசின் பணிகளை மேற்பார்வையிடும் மற்றும் கெனெசெட் குழுகள் மூலம் நாட்டின் பிரச்சனைகளைக் கையாளும் அதிகாரம் என சர்வ அதிகாரமுள்ள அமைப்பாகும்]  

            நெதன்யாகுவின் நிறவெறி பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் ஜிவிர், பாலஸ்தீன வகுப்பினர்களை மிரட்டும் அதிகாரம் செலுத்த ஒரு புதிய “தேசியக் காவலர்” (நேஷனல் கார்டு) நியமிக்க உறுதியளித்துள்ளார்: சமீபத்தில் இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் துணைப் பிரதமராக இருந்தவருமான பென்னி காண்ட்ஸ் அது ஒரு தனியார் படை மற்றும் சட்டத்தை அதன் கையில் எடுத்துக் கொண்டு விடும் என எச்சரித்துள்ளார்.

       இஸ்ரேல் –ஹமாஸ் யுத்தம் 4வது நாளில் நுழைந்த நிலையில், நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல், காஸா கரை பகுதியில் (காஸா ஸ்டிரிப்) கடும் தாக்குதல் தொடுத்ததுடன், தப்பிச் செல்லும் பாதைகளின் நிலம் மற்றும் கடல் பகுதியை முற்றுகை இட்டு, வழியெல்லாம் குண்டு மழையைப் பொழிகிறது. எண்ணிறைந்த விலைமதிக்க முடியாத உயிர்களைக் காவு வாங்கியதுடன், மருத்துவமனைகள், பள்ளிகள், வான் உயர் கட்டடங்கள், பாரம்பரிய மசூதிகள் மற்றும் உலகின் மூன்றாவது பண்டைய தேவாலத்தையும் இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளது. கண்மூடித்தனமான இஸ்ரேலின் பழிவாங்கலில் காஸா குழந்தைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இனஅழிப்புத் தாக்குதலில் பல குடும்பங்கள் முழுதும் துடைத்தெறியப்பட்டனர்; இந்நிகழ்முறையில் ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்திருந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், போர்க் கைதிகளும்கூட கொல்லப்பட்டனர். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்ட 20லட்சம் பாலஸ்தீனர்களுடன் காஸா பகுதி உலகின் ஆகப் பெரிய திறந்தவெளி சிறைக் கூடமாக மாறியுள்ளது.

            இந்த உண்மைகளின் பின்னணியில், பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவு ஆத்திரமூட்டும் வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பது, தீர்மானிப்பதில் மாபெரும் தவறாக வரலாற்றில் ஆழமாகப் பொறிக்கப்படப் போகிறது. அதுவும், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனையில் நீடிக்கும் இந்த மோதல் குறித்து உலகத் தென்பகுதி நாடுகள் என்ன நினைக்கிறதோ அதற்கு மாறாக, மிகத் துயரகரமான முறையில் இந்திய நிலைபாடு மாறுபட்டு நிற்கும்போது, இந்திய தேசம், ‘தெற்கு உலகின் குரல்’ எனத் தன்னை எப்படி முன்னிறுத்திக் கொள்ள முடியும்?

            போரில்லாத, அமைதியும் சாந்தமும் திகழும் உலகை நிறுவ விரும்பும் இந்தியா, தனது மரபார்ந்த பாரம்பரிய பெருமையை மீட்குமா?

--நன்றி : நியூஏஜ் (அக்.15 –21)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

Wednesday 11 October 2023

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா – ஒரு வரலாற்றுப் பார்வை

 

  பெண்கள் இடஒதுக்கீடு மசோதா – ஒரு வரலாற்றுப் பார்வை

--ஷியாமாஸ்ரீ தாஸ்

2023 செப்டம்பர் 19ல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடிய முதன் முதலான அமர்வில், “தி நாரிசக்தி வந்தன் அதினியம்” (வணக்கத்திற்குரிய பெண் சக்தி சட்ட) மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் ‘புனிதமானதும் மற்றும் தவிர்க்க முடியாததுமான குறிப்பிட்ட சில கடமைகளைச் செய்ய’ தான் படைக்கப்பட்டுள்ளதாகப் பிரகடனம் செய்தார். ஒரு வகையில் நமது பிரதமர் தன்னைத்தானே ஒரு இறைத் தூதராக உயர்நிலை படுத்திக்கொண்டார் போலும்! ஆனால் இந்த மசோதாவுக்கான தொடக்க நடவடிக்கைகள், மிக வெகு காலத்திற்கு முன்பே 1975ல், சர்வதேச அரங்கில் விவாதத்திற்கு வந்து விட்டது, ஏற்கனவே பொது வெளியில் காணக் கிடைக்கிறது.

          ஐக்கிய நாடுகள் மன்றம் 1975ம் ஆண்டைச் சர்வதேச பெண்கள் ஆண்டாக –(பெண்களுக்கு இழைக்கப்- பட்ட) வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்யும் சர்வதேச முயற்சிக்கான விருப்பத்தின் தொடக்கம் என்பதை நோக்கமாகக் கொண்டு– பிரகடனம் செய்தது. உலகத்து நாடுகளில் பெண்கள் அந்தஸ்து நிலை குறித்து ஆவணப்படுத்துவதும் தொடங்கியது. 

          நமது நாட்டிலும்கூட (பெண்கள்) அந்தஸ்து நிலை குறித்த குழு (ஸ்டேடஸ் கமிட்டி), சமூகச் செயற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் புல்ரேணு குஹா (Dr. Phulrenu Guha)

தலைமையில் அமைக்கப்பட்டது. நமது நாட்டின் பெண்கள் இயக்கத்தின் இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் (NFIW), அனைத்திந்திய ஜனநாயகப் பெண்கள் அஸோசியேஷன் (AIDWA), மகிளா தக்ஷதா சமிதி (பெண்கள் திறன் மேம்பாட்டு அமைப்பு), பெண்களின் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையம், இளம் பெண்கள் கிருஸ்துவ அமைப்பு, பெண்களின் இணைந்த புரோகிராம் அமைப்பு உள்ளிட்ட முன்னணி பெண்கள் இயக்கச் செயற்பாட்டாளர்கள், தேர்தலில் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். பெண்கள் ‘நிலை கமிட்டி’, “சமத்துவத்தை நோக்கி” என்ற தலைப்பிலான தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

சர்வதேசப் பெண்கள் மாநாடுகள்

          அதன்பின், 1975 –1995 கால கட்டத்தின் பதின் ஆண்டுகளில் நடைபெற்ற நான்கு சர்வதேசப் பெண்கள் மாநாடுகளில் சமத்துவமின்மையால் பெண்கள் படும் துன்பங்களுக்கு எதிராக CEDAW

 என்ற பிரகடனத்தை நிறைவேற்றியது.  [CEDAW என்பது, “பெண்களுக்கு எதிரான அனைத்து வடிவ பாரபட்சங்களையும் ஒழிக்கும் மாநாடு / கன்வென்ஷன்” என்பதன் ஆங்கில முதல் எழுத்துகளின் சுருக்கமாகும்.] 1995ல் பீக்கிங்கில் நடைபெற்ற நான்காவது சர்வதேச பெண்கள் கன்வென்ஷனில், அதற்கு முன் 1985ல் நைரோபியில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் CEDAW பிரகடனமும் மீளாய்வு செய்யப்பட்டு, பெண்கள் மேம்பாட்டுப் பிரச்சனையில் மேலும் முன்னெடுத்துச் செல்ல பெண்களுக்கு அதிகாரமளித்தல் (எம்ப்பவர்மெண்ட்) என்பது நிறைவேற்றப்பட்டது.

          பீக்கிங் மாநாட்டில் இந்தியாவின் பஞ்சாயத் மற்றும் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பெண்களின் இடஒதுக்கீடு முறை பெரிதும் பாராட்டப்பட்டது; மேலும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட

 செயல் திட்டம் அனைத்து நாடுகளின் சட்டமன்றங்களிலும் அத்தகைய இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது. சர்வதேசச் சூழலில் அத்தகைய வளர்ச்சிப் போக்குகளின் மத்தியில், நமது நாட்டின் பெண்கள் அமைப்புகள் சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பை அசாதாரணமாக அதிகரிக்கும் வகையில்  தேர்தல்களில் மேலும் மேலும் பெண் வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்த்தன.

          எனினும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக விமர்சனக் கருத்துக்களை ஸ்டேடஸ் கமிட்டியிடம் சமர்ப்பித்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் அமைப்புகள்  அதற்கு நேர் எதிரான காட்சியைச் சந்தித்தன. அந்தப் பதின் ஆண்டுகளில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு விகிதம் 1977ல் 4%, 1980ல் 5%, 1984ல் 8%, 1989ல் 6%, 1991 மற்றும் 1996ல் 7 சதவீதமாகவும் இருந்தது. (அதாவது எதிர்பார்த்ததுபோல பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.)

இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா

          கவலையளிக்கும் இந்நிலையின் பிரதிபலிப்புதான் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மாதர் சம்மேளனத் தலைவர்

தோழியர் கீதா முகர்ஜி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 1986 பாட்னா கட்சிப் பேராயத்தில் கொண்டு வந்த தீர்மானமாகும். பாட்னா கட்சிப் பேராயம் அத்தீர்மானத்தை ஏற்று நிறைவேற்றியது. இந்நேரத்தில் பஞ்சாயத் தேர்தல்களில் பெண்களின் பங்கேற்பும் தலைமையும் அதிகரித்தது நம்பிக்கை ஒளியாக இருந்தது. 11வது மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் அமைந்தது; ஒன்றிய அரசில் சிபிஐ பங்கு வகித்தது. இத்தகைய நிலையில், பீக்கிங் மாநாட்டின் பெண்களுக்கு இடஒதுக்கீடு பிரகடனத்தைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழியர் கீதா முகர்ஜி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரும் தனிநபர் மசோதாவை நமது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.

          அதே மசோதா, அரசியலமைப்புச் சட்ட 81வது திருத்த மசோதா பெருமையுடன், 1996 செப்டம்பர் 12ல் மக்களவையில் ஐக்கிய முன்னணி அரசின் திரு தேவகௌடாவால் சமர்ப்பிக்கப்பட்டது.

 [81வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டிற்காக ஐக்கிய முன்னணி அரசால் மக்களவையில் முதன்முறையாகத் தாக்கல் செய்யப்பட்டது.] அதன் மீதிப் பகுதி நீண்ட ஆண்டுகளுக்கு நடைபெற்ற போராட்டங்களின் வரலாறு ஆகும். (மசோதா தோல்வி அடைந்ததும்,) அம்மசோதாவுக்கு கீதா முகர்ஜி தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுத் தேர்வுக் குழு அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 7 நாட்களில் தோழியர் கீதா முகர்ஜி குழுவின் கூட்டத்தை ஏற்பாடு செய்து அம்மசோதா மீதான கருத்துக்களைத் திரட்ட அறிவிக்கையை வெளியிட்டார்.

          மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒட்டுமொத்தமாக 102மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பல அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சந்தித்த குழு அவர்களிடமிருந்து கருத்துக்களைத் திரட்டியது. ஆயிரக் கணக்கான வேண்டுகோள் மனுக்கள் மசோதாவை அமல்படுத்துவதற்கு ஆதரவாக வந்தன. மாணவர்கள், இல்லத்தரசிகள், சேவை வழங்குநர்களிடமிருந்து சேவைகளை நுகர்பவர்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் பெண்கள்“எனது இரத்தத்தால் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற அடுத்த அமர்வில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன்” என்ற வாசகத்துடன் -- இரத்தத்தால் எழுதப்பட்ட தபால் அட்டைகளை அனுப்பினர்.

          இந்த அனைத்துக் கடித்தங்களையும் குறிப்பிடும்போது கீதா‘டி (வங்க மொழியில் ‘கீதா அக்கா’ என மரியாதையுடன் அழைப்பது, தமிழில் கீதா அம்மா என அழைப்பதைப் போல) உணர்ச்சிகரமாகிவிடுவது வழக்கம்: அந்த உணர்ச்சியுடன் அவர், “பெண்கள் இயக்கத்தில் எனது நீண்ட ஆண்டுகள் அனுபவத்தில், அத்தகையவைகளை ஒருபோதும் நான் சந்தித்ததில்லை. மசோதாவை உடனடியாகச் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என லட்சக் கணக்கான பெருந்திரள் வேண்டுகோள்கள் பெண்கள் அமைப்புகளால் குழுவிடம் அளிக்கப்பட்டன” என்று கூறினார்.

          அறிக்கையைச் சமர்ப்பிக்கும் நேரம் வந்ததும், கூட்டுத் தேர்வுக் குழு அறிக்கையைச் சமர்ப்பித்து, அரசின் கவனத்திற்கு மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக் 

காரணமாக அம்மசோதா முடக்கப்பட்டது. 1996 முதல் 1997 வரையில், நவம்பரிலிருந்து ஐ.கே குஜரால் தலைமையிலான அரசு கவிழ்ந்த அந்த நாளில்கூட-- நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பெண்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர், டெல்லி தெருக்களில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்காக பெண்கள் அமைப்புகளின் தலைமையின் கீழ் கோரிக்கை முழங்கினர்.

          தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு 1999, 2002 மற்றும் 2003 என மூன்று முறை நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை முன்வைக்க முயன்றது. யுபிஏ -1 அரசு 2008 மே 6ல் இம்மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. பின்னர் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு 2008 மே9ல் அனுப்பியது. நிலைக் குழு தனது அறிக்கையை 2008 டிசம்பர் 17ல் அளித்தது. பிப்ரவரி 2010ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் 2010 மார்ச் 9ல் மாநிலங்களவையில் ஆதரவாக 186 வாக்குகள் எதிராக ஒரு வாக்கு என பெரும்பான்மையில் மசோதாவை யுபிஏ1 அரசு நிறைவேற்றியது.

          எனினும், “ஒரு மனதான ஆதரவு பற்றாக்குறை” என்று அழைக்கப்படும் காரணம் கூறி மசோதா மக்களவையில் முன்வைக்கப்படவே இல்லை; அதனால் மக்களவையில் மசோதா பற்றிய விவாதமே நடைபெறவில்லை. ஆனால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பிய பிறகு 2023 செப்டம்பர் 18ல் திடீரென்று மசோதா மோடி அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ளது.

நமது கேள்வி

        ஏன் மசோதாவின் தலைப்பு “நாரிசக்தி வந்தன் அதினியம்” என்று மாற்றப்பட்டது?

நமது கோரிக்கைகள் வருமாறு

(1)    பெண் தெய்வம் என உவமித்து வழிபாடு செய்யும் வேடமிட்டு மறைத்தலின் கீழ் பெண்களை ஏமாற்றுவதை நிறுத்து. மனித ஜீவன்களாக பெண்களாகிய நாங்கள் அனைவருடனும் வரிசையில் பிரதிநிதிகளாகச் சமமாக சேர்ந்து அமர விரும்புகிறோம். இந்த வகையில் இவ்வாறு, ‘வந்தனா’ (வணங்குதல் /தொழுதல்) என்ற வார்த்தை பயன்பாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்

(2)     மசோதாவின் 5வது ஷரத்து மக்களவை இடங்களின் தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பிறகு மசோதா அமலாக்கப்படும் என்று கூறுகிறது; அதன் பொருள் மசோதா அந்தரத்தில் காலவரையறையின்றி நிற்கும் என்பதுதான். நாடாளுமன்ற இடங்களை மறுசீரமைக்கும் 2029ம் ஆண்டுவரை மசோதா அமலாக்கப்பட காத்திருக்க வேண்டும். அவ்வாறெனில், இந்த ‘அரசியல் ஏமாற்றுத் தந்திரத்திற்கு” என்ன தேவை? பாஜகவின் நோக்கம் எதிர்வரும் 2024 பொதுத் தேர்தல்களின் விளிம்பில் நிற்கும் மக்களை ஏமாற்றுவது தவிர வேறென்ன?

(3)     மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவைகளுக்கு இடஒதுக்கீடுகள் குறித்து மசோதா என் மௌனம் சாதிக்கிறது? அங்கெல்லாம் பெண்களின் பங்கேற்பு என்னாவது?

(4)     மசோதா தேசியத் தலைநகர் டெல்லி பிராந்தியம் குறித்துக் குறிப்பிடுகிறது. ஆனால் மற்ற ஒன்றிய பிரதேசங்கள் (யூனியன் டெரிடரி) சொல்லப்படவில்லை எனில் அங்குப் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையா?

(5)     மூன்று அல்லது மூன்றுக்குக் குறைவான மக்களவைத் தொகுதி இடங்கள் உள்ள மாநிலங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு எவ்வாறு அமலாக்கப்படும்? அந்த விஷயம் குறித்து மசோதா குறிப்பிடவில்லை.

ஆனால் தோழியர் கீதா முகர்ஜி 1996ல் செலக்ட் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பிலிருந்த காலத்திலேயே மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் குறிப்பான சிபார்சுகளுடன் செலக்ட் குழுவின் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளார். இப்போது ஒவ்வொருவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (ஓபிசி) பிரதிநிதித்துவ இடங்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்புவதை நாம் பார்க்கிறோம்.

தோழியர் கீதா முகர்ஜி இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பதில் அளித்துள்ளார். ஒரிஜினல் தேர்தல் முறையில் கண்டவாறு எஸ்சி, எஸ்டி மற்றும் பிசி வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு செய்தால் அவ்வகுப்பினர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள். மண்டல் கமிஷன் சிபார்சுகள் மீது நாட்டில் இயக்கங்கள் நடந்தபோது, சட்டத்தில் ஏன் இந்த இடஒதுக்கீடு இணைத்து உறுதிப்படுத்தப்படவில்லை? அந்த நேரத்தில் இந்தக் கோரிக்கை (ஓபிசி-களுக்கு இடஒதுக்கீடு) ஏன் எழுப்பப்படவில்லை? இது ஒவ்வொன்றுமே சால்ஜாப்பு நாடகம். இது குட்டையைக் குழப்பி, பெண்களை அதிகாரப்படுத்தும் வாய்ப்பைத் தடுக்கும் ஒரு சூழ்ச்சிச் செயல்திட்டம், அவ்வளவுதான்.

இன்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தோழியர் கீதா முகர்ஜியின் சந்தேகம் யாதெனில், சில சேர்க்கை/ நீக்கம் செய்யப்பட்டாலும் எவ்வழியிலேனும் மசோதா மீது விவாதம் நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையெனில், பெண்கள் ஒருபோதும் சட்டமன்றங்களை அடைய முடியாது.  அந்த நேரத்தில் கீதா அம்மா இடஒதுக்கீட்டில் 25 சதவீதம் வரையாவது அனுமதிக்க எப்படியோ தேவகௌடா அரசைச் சம்மதிக்கச் செய்தார். ஆனால் மசோதா மீது விவாதம் நடந்தபோது சில இடதுசாரி பெண்கள் அமைப்புக்களின் ஒத்துழையாமை காரணமாக மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை.

வரலாற்றில் கீதா முகர்ஜி

அதனால்தான் பெண்களை அதிகாரப்படுத்தல் மேலும் தாமதமாகலாம் என கீதா அம்மா அச்சப்பட்டார். அந்த அலட்சியம் 27 ஆண்டுகளை விலையாகக் கேட்டது. கீதா அம்மா விருப்பம் 2023 செப்டம்பர் 20 அந்த நாளில் நிறைவேறியது. நாடாளுமன்றத்தில்பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக நாங்கள், இந்திய மாதர் தேசியச் சம்மேளனம்

(NFIW) மற்றும் மேற்கு வங்க மகிளா சமிதி (PBMS) சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இந்த மசோதாவைத் தயாரித்ததற்காக, நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களிலும் மசோதாவுக்கு ஆதரவாக பொதுக் கருத்தைத் திரட்ட இயக்கங்களை அமைத்து நடத்தியதற்காகவும், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் பிரபலமான ஆளுமையாளர்களைச் சந்தித்து விவாதம் நடத்தியதற்காகவும், மசோதாவின் தவறுகளைத் திருத்த சிபார்சுகளை வழங்கியதற்காக,  இவை அனைத்திற்கும் மேலாக (பெண்களுக்கு அவர்கள் வீடுகளிலிருந்தும் சொந்த ஊர்களிலிருந்தும் தொலைவில் உள்ள சட்டமன்றங்களில் கலந்து கொள்வதில் உள்ள சிரமங்கள், சட்டமன்றத்தை எதிர்கொள்ளும் திறனுக்குப் பெண்கள் பொருத்தமானவர்கள் இல்லை, பெண்கள் உரிமைக்காக நடைபெறும் போராட்டங்களில் அவர்களின் பங்கேற்பு குறைந்து விடும்… என்றெல்லாம்) பெண்களுக்கு எதிராகக் கூறப்பட்ட பல்வேறு சால்சாப்புகளுக்கு அவரது கூர்மையான மறுவினைகள் இவற்றிற்காவும் வரலாறு நிச்சயமாக கீதா அம்மாவை என்றென்றும் நினைவு கொள்ளும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடும் எதிர்ப்புக் காரணமாக, தேவகௌடா அரசு மக்களவையில் இம்மசோதாவைக் கொண்டுவர இயலாதபோது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஒன்றிய அமைச்சராக ஒன்றிய அரசில் இணையும்படி தோழியர் கீதா முகர்ஜியை வேண்டியபோது, அவர் அதை மறுத்துவிட்டார். பாலினச் சமத்துவத்திற்காகப் போராடுவதில் கீதா அம்மாவின் முயற்சிகள், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுட்ன் பிரிக்க முடியாதபடி இணைந்ததாகும்.

உச்சநீதி மன்றத்தில்

இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் இந்த மசோதாவுக்காக தனது போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து இயக்கம் எனத் தொடர்ந்தது. சமீபத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவிற்காக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது; உச்சநீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. எப்போதெல்லாம் பெண்கள் இட ஒதுக்கீடு பிரச்சனை எழுந்தாலும் மாதர் சம்மேளனத்தின் அத்தகைய முயற்சிகள் நிச்சயமாக வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும். 2023 செப்டம்பர் 5ல் நீதியரசர் சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மக்களவையில் ஏன் மசோதா அறிமுகப்படுத்தவில்லை என்ற நோட்டீசிற்கு ஒன்றிய அரசு பதில் தாக்கல் செய்வதில் அதன் தயக்கம் குறித்துக் கேள்வி கேட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் இந்த அனைத்துத் தடைகளும் எப்போதும் உயிர்ப்புடன் இருந்தன.

ஒன்றிய அரசேகூட தோழியர் கீதா முகர்ஜியை மறந்தாலும், திமுக, தேசியவாதக் காங்கிரஸ் (என்சிபி) உள்ளிட்ட கட்சிகளின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மசோதா மீது மக்களவையில் நடந்த விவாதத்தில் கீதா அம்மாவைத் தங்கள் உரைகளில் குறிப்பிட்டனர். உண்மையை நீண்ட காலத்திற்கு இரகசியமாக மறைத்து வைக்க முடியாது.

அக்காரணத்தால்தான் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் நடந்த விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியும்கூட மசோதா தொடர்பாகத் தோழியர் கீதா முகர்ஜியின் எடுத்துக் காட்டான முன்னோடி பங்களிப்பை நினைவுகூர வேண்டியிருந்தது.

இந்த மசோதாவுக்காகப் போராடிய அனைத்துத் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் (NFIW) மற்றும் மேற்கு வங்க மகிளா சமிதி (PBMS) சார்பாக நாங்கள் வாழ்த்திப் பாராட்டி வணங்குகிறோம்.

தோழியர் கீதா முகர்ஜி நீடூழி வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (அக்.8 –14)

--தமிழில் : நீலகண்டன்,

                                                               என்எப்டிஇ, கடலூர்