Sunday 29 January 2023

மகாத்மா காந்தி தேசிய ஒருமைப்பாட்டிற்காக இன்னுயிர் தந்த தியாகி

 

மகாத்மா காந்தி

தேசிய ஒருமைப்பாட்டிற்காக இன்னுயிர் தந்த தியாகி

--கார்க்கி சக்ரவர்த்தி

    சுதந்திரம் அடைந்த ஆறே மாதங்களுக்குள், நமது இந்தியாவின் தேசத் தந்தை, மகாத்மா காந்தியடிகள் 1948 ஜனவரி 30 அன்று இந்து மகா சபா ஆதரவாளர் நாதுராம் கோட்ஸே-வால்

படுகொலை செய்யப்பட்டார். தேசம் முழுமையும் அதிர்ச்சி அடைந்தது, ஆனால் இந்து தீவிரவாத அணியினர் மத்தியில் மகிழ்ச்சி கொப்பளித்தது. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் 1948 செப்டம்பர் 11ல் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில், “இந்துகளின் மனங்களில் நீங்கள் விஷத்தைப் புகட்டியதன் காரணமாகத் தேசம் இன்று வாராது வந்த மாமணி போன்ற மதிப்பிட முடியாத காந்திஜியை இழந்து துன்புறுகிறது” என்று குறிப்பிட்டார்.

      அவர் ஏன் படுகொலை செய்யப்பட்டார்? என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது. அது ஒரு தனிநபரின் கொலை அல்ல, மாறாக, காந்திஜி ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வாழ்ந்து காட்டிய ஒரு தத்துவக் கோட்பாட்டின் படுகொலை. அந்தத் தத்துவம், மதசார்பற்ற ஒன்றுபட்ட இந்தியா; சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மைச் சமூகத்தைப் போலவே அங்கே சமமான சமூக வெளியைப் பெறக்கூடிய ஒரு புது தத்துவத்தின் தேசம் அது. விடுதலைப் போராட்டம் முழுமையுமே, மதசார்பற்ற தேசியம் மற்றும் மதவாதத் தேசியம் என்ற இரு தத்துவங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போராட்டக் களமாகவே அமைந்தது.

காந்தியத் தத்துவத்தின் மீது இன்றைய தாக்குதல்

      முன்பு எப்போதையும்விட இன்று மகாத்மா காந்தியை ஞாபகம் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது; காரணம், இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. நடைபெற்று வரும் தொலைக்காட்சி விவாதங்கள், சமூக ஊடகப் பிரச்சாரங்களில் உண்மைகள் பெருமளவு சிதைக்கப் படுகின்றன; தம் வாழ்நாள் முழுவதும் எந்தத் தத்துவத்திற்காக நின்று காந்திஜி போராடினாரோ அவைகளை மறுப்பதும், கடினமாகி வருகிறது. நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து போராடிய இந்தியா குறித்த கருத்தாக்கத்தைப் பிய்த்து எறிவதற்காக அதிகாரம், பணபலம், கட்டமைப்பு பலத்துடன் முழுமையான நிர்வாக இயந்திரம் நாடு முழுவதும் பெரும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துள்ளது. சமயக் கட்டமைப்புகள், பன்மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளுடன் அமைந்த நமது இந்திய நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரித்தெறிந்து சிதைக்கும் அவர்களின் நடவடிக்கைகளை எதிர்ப்பது நம் முன் உள்ள மாபெரும் சவால்.

      தெளிவான இடதுசாரி சிந்தனையுள்ள தேசபக்தர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்ணல் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மற்றும் பிற ஆளுமைகள், இன்று அதிகாரத்தில் உள்ள பாஜக –ஆர்எஸ்எஸ் ஆளும் தரப்பின் இந்தியா குறித்த அரசியல் தத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தோட்டம் கொண்டவர்கள். அவர்களை அபகரித்துச் சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறது இன்றைய ஆளும் தரப்பு.

    காந்திஜி மரணத்துடன் இந்தியா, சிறுபான்மையின முஸ்லீம்- களின் பாதுகாவலரை இழந்தது. துல்லியமாகக் கூறினால், அவரது அரசியல் நிலைபாடு மற்றும் அதற்கு எதிரான மதவாத வகுப்பினர்கள் காரணமாகவே காந்திஜி தனது உயிரைத் தியாகம் செய்ய வேண்டி வந்தது. தேசப் பிரிவினையின்போது அவர் முஸ்லீம்களுக்கு ஆதரவாளராகவும், வேகமாக வளர்ந்து வந்த பெரும்பான்மைவாதக் கருத்தோட்ட வெற்றிக்கு இடையூறானவராகவும் கருதப்பட்டார். இன்றும்கூட, தேசப் பிரிவினைக்கும் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே அனுமதிக்கப்படவும் காந்திஜிதான் பொறுப்பு என்று பல தருணங்களில் குற்றம் சாட்டப்படுகிறார்.

தேசப் பிரிவினைக்குப் பின்னுள்ள வரலாறு

      இந்தியா, பாக்கிஸ்தான் என தேசம் இரண்டாகப் பிளவுபட்டதற்குப் பின்னால் உள்ள வரலாற்று உண்மைகளை இன்றைய தலைமுறை அறியாதவர்களாக இருக்கலாம். இரு தேசம் என்ற கோட்பாட்டை 1923ல் ‘இந்துத்துவா’ என்ற நூலில் முதலில் முன்மொழிந்து ஆதரித்தவர் சவார்க்கர்; பின்னர் 1937ல் நடைபெற்ற இந்து மகாசபா அகமதாபாத் அமர்வில் மேலும் அதை விரிவாக விளக்க, பெரும் எண்ணிக்கையிலான இந்துகளிடம் அந்தக் கருத்து செல்வாக்குப் பெற்றது. மகாத்மாவைக் கடுமையாக இந்து மகாசபா விமர்சிக்க, அதன் தலைவர் வினாயக் தாமோதர் சவார்க்கர் எப்போதும் காந்திஜியை “முஸ்லீம்களுக்குக் கூடுதல் சாதகமாக ஆதரவைக் கொட்டியவர்” என்றார். சவார்க்கரின் இந்த அம்சத்தைப் பற்றி நேதாஜி தனது ‘இந்தியப் போராட்டம்’ என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார். சவார்க்கரை இந்து தீவிரவாதிகள் தங்கள் வழிகாட்டும் குருவாகக் கருதினர். அவருடன் தொடர்பில் இருந்த கோட்ஸே பெரும் மதிப்புடன் அவரோடு பணியாற்றினார். கோட்ஸே துப்பாக்கி சுடும் மன்றங்களை நிறுவி, சிறுபான்மையினருக்கு எதிராக இந்துகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதை ஊக்குவித்தார். இந்து தீவிரவாதிகளுக்கு முஸ்லீம்களே முதல் எதிரிகள், பிரிட்டிஷ்காரர்கள் இல்லை.

      இந்து மகாசபாவின் கருத்தோட்டம் இன்னும் தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. அன்று சாந்தியின் தேவ தூதர் மகாத்மா, “பாக்கிஸ்தானில் உள்ள இந்துகளுக்கு என்னவெல்லாம் (கெடுதிகள்) செய்யப்பட்டாலும், இந்தியாவில் வாழும் சிறுபான்மையின முஸ்லீம்கள் ஏனைய சிறுபான்மையினர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று வற்புறுத்தினார். பன்முக -- பன்மைத்துவ மதச்சார்பற்ற தேசியம் (a multi-plural secular nationalism) என்ற மகாத்மாவின் இந்த அணுகுமுறையை எப்போதும் அவர்கள் “போலி மதச்சார்பின்மை” (“pseudo-secular”) என்று கேலி பேசினர் –ஏதோ மதச்சார்பின்மை என்ற வார்த்தையே எதிர்மறை பண்புடைய சொல் என்பது போல!

    இந்துகளை இராணுவமயப்படுத்துவதன் தத்துவார்த்த வழிகாட்டியாகச் சீடர்களால் போற்றப்பட்ட சவார்க்கர், இந்து மகாசபா மட்டுமே அரசியல் களத்தில் காங்கிரஸை எதிர்த்துச் சவால்விட முடியும் என்று கருதினர். 1941 மற்றும் 1944க்கு இடையே இந்து தத்துவக் கோட்பாட்டை வளர்த்துப் பாடுபடுவதற்காகச் சவார்க்கரைப் புகழ்ந்து கோட்ஸே அவருக்குப் பல கடிதங்கள் எழுதினான். இந்நிகழ்வுகளின் விளைவாய், இந்துகளை ஆதரித்து, இந்து நலன்களுக்காகப் பாடுபடக்கூடிய ஒரு கதாநாயகனாகச் சவார்க்கர் மிக இயல்பாக மற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்நோக்கப்பட்டார்.

சொல் வேறு, செயல் வேறு

      2014 முதல் காந்திஜியின் உருவம் ’ஸ்வச் பாரத்’ (தூய்மை இந்தியா-‘தூய்மையை நோக்கி ஓர் அடி‘ என்ற வாசகத்துடன்) பிரச்சாரத்தின் அடையாளச் சின்னமாக மோடி அரசால்

பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் காந்திஜியை (ஒரு சிமிழில் அடைப்பது போல) ஒரு மூலையில் முடக்குவதற்கான செயல்கள் ஆளும் வட்டாரங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. காந்தி உருவத்தை வைத்து மோடி விளையாடுகிறார் எனில், ஆளும் தரப்பின் சீடர்கள் சுதந்திரப் போரின் பிற அரசியல் பிரபலத் தலைவர்களை வைத்து விளையாடுகின்றனர், காந்தியை மக்கள் நினைவுகளிலிருந்து தொலைவில் நிறுத்துவதே அவர்களது நோக்கம். (ஒரு பக்கம், அனைவரும் அறிந்த நேரு போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்களை அவமானப்படுத்திக் கொண்டே, மறுபக்கம் முகம் தெரியாத விடுதலை போராட்டத் தியாகிகள் குறித்து ஆவணப்படுத்த ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் பல்கலைக் கழகங்களில் பேசுகிறார் என்பது அதற்கு ஓர் உதாரணம் –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

     காந்திஜியின் கருத்தோட்டங்களை ஒருபோதும் ஏற்காத, ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்து மகாசபா அணியினர் மற்றும் அவர்களின் பல்வேறு வெகுஜன அமைப்புகள் இப்போதும் அக்கொள்கைகளை நிராகரிக்கின்றன. கடந்த ஆண்டு கல்கத்தாவில் உள்ளூர் இந்து மகா சபா அமைப்பினர் ஏற்பாடு செய்த துர்க்கா பூஜா பந்தல்களில் ஒன்றில் காந்திஜியை ஓர் அசுர அரக்கனாகச் சித்தரித்துப் படம் வைத்தார்கள் என்பதொன்றும் ஏதேச்சையான விபத்து அல்ல. உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு அது மாற்றப்பட்டது. என்றாலும், ‘தங்களுக்கு

காந்தி உண்மையில் ஓர் அரக்கனேஎன்று கூறி இந்து மகாசபா வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் தங்கள் நிலைபாட்டை வற்புறுத்துகிறது. (2019 அலிகாரில் காந்தி நினைவு நாளில் அவரது உருவ பொம்மையை விளையாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய வலதுசாரி இந்து அமைப்பு நிகழ்வில் ஒரு பெண் சன்யாசினி காந்தியின் படத்தைக் குறி வைத்துத் துப்பாக்கியை நீட்டிய படத்தை எப்படி மறக்க முடியும்? –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

    எனவே, இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திய காந்தியின் கோட்பாட்டிற்காக காந்தியத்திற்கு விரோதமான நிலைபாடு இன்றும்கூட அடிநீரோட்டமாக, நீறுபூத்த நெருப்பாக நீடிக்கவே செய்கிறது; குழுப்போக்கு இந்துத்துவ தீவிர தேசியத்தின் எழுச்சி காரணமாக அந்நிலைபாடு தலை எடுக்கிறது, எச்சரிக்கை.

நமது கடமை        

      எனவே, காந்திஜியின் கோட்பாடுகளையும், பின்னாட்களில் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பிரதிபலித்த ஒன்றுபட்ட இந்தியா குறித்த அவரது கண்ணோட்டத்தையும் பாதுகாக்க, ஜனவரி 30அன்று நாம் சபதம் செய்வோம்! தேசப் பிதா மகாத்மாவைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸேவைப் புகழ்பவர்கள், அவனது சிலைகளை அமைப்பவர்கள் நாடு முழுவதும் பரவி இருப்பதை மறக்கலாகாது. தாங்கள் இட்டுக் கட்டி உற்பத்தி செய்யும் கதைகள் மூலம் வரலாற்று உண்மைகளைச் சிதைக்க முயலும் அவர்களின் மறைமுகத் திட்டங்களை அம்பலப்படுத்துவது தற்போது நமது கட்டாயக் கடமையாகும்! 

கொடுமைசெய் தீயோர் மனமது திருந்த

                  நற்குணம் அதைப் புகட்டிடுவோம்

            மடமை அச்சம் அறுப்போம் -- மக்களின்

                  மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்

கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி

                  உலகிலே சாந்தி நிலவ வேண்டும்!

திடம் தரும் அஹிம்ஸா யோகி நம் தந்தை 

                  ஆத்மானந்தம் பெறவே....

களங்கமில் அறம் வளர்ப்போம் -- எங்கும் 

                   சாந்தி நிலவ வேண்டும்

காந்தி மஹாத்மா கட்டளை அதுவே

கடமை மறவோம் அவர்கடன் தீர்ப்போம்!”

                                                 (--கவிதை : சேது மாதவ ராவ்)

“வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்”

--நன்றி:நியூஏஜ் (ஜன.29 –பிப்.4)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்




Saturday 28 January 2023

'மகாத்மா காந்தியடிகள்' என்ற தலைப்பில் ஒரு மாணவியின் உரை

 


மகாத்மா காந்தியடிகள்

          முதலில் ‘வாழ்விக்க வந்த காந்தி’ என்பதைவிடவும் இன்றும் நல்வழியில் ‘நம்மை வாழ்வித்து வரும் காந்தி'யை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

பேராசிரியர் ஒருவரின் கட்டுரையில் குறிப்பிட்ட செய்தி: அவர் தென்னாப்பிரிக்கா பயணம் செய்தபோது, அங்கிருந்தவர்கள் “நீங்கள் காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கிறீர்கள்; உங்களை நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்களாம். எவ்வளவு பெருமையாக இருக்கிறது. காந்தியைச் செதுக்கியது அவரது தென்னாப்பிரிக்க வாழ்க்கை. இன்று அந்த மக்கள் காந்தி குறித்து அவர்களது அன்பிற்குரிய தலைவர் நெல்சன் மண்டேலா உரைகளிலிருந்துதான் அறிந்து கொண்டார்கள்.

    ஆனால் நம் மண்ணில் பிறந்த எம்மான் காந்தியை நாம் எந்த அளவு தெரிந்திருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு வருத்தம் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டதே என்று. அந்தப் பேராசிரியர் தனது அனுபவத்தை வருத்தத்துடன் மேலும் கூறுகிறார்: டெல்லி விமான நிலையம் வந்திறங்கி டாக்ஸி டிரைவரிடம், 'ராஜ்காட் செல்ல வேண்டும்’ என்று கூறினேன். டிரைவர், ‘ராஜ்காட் எங்கே இருக்கிறது’ என்று கேட்டார். அகமதாபாத் ரயில் நிலையச் சர்வோதயா புத்தக ஸ்டாலில் காந்தி குறித்த புத்தகம் கேட்டேன். கடையில் இருந்த முதியவர் ஏற இறங்கப் பார்த்து ‘இப்போ யார் சார் காந்தியைப் படிக்கிறார்கள்’ என முணுமுணுத்தபடி தூசு படிந்த புத்தகக் குவியலில் இருந்து தேடி காந்தி சுயசரிதையைத் தந்தாராம். இந்நிலையை இத்தகைய விழாக்கள், போட்டிகள் நடத்துவதன் மூலம் நிச்சயம் மாறும். வாய்ப்புக்கு நன்றி கூறி தொடர்கிறேன்.

          காந்தி என்றதும் எவர்க்கும் அவரது சத்தியம், அகிம்சை, மற்றும் சத்தியாகிரகம் நினைவுக்கு வரும். சத்தியம்தான் காந்தியடிகளுக்குக் கடவுள். ஆனால் இதனோடு மட்டும் அவரது ஆளுமையை யாரும் குறுக்கிவிட முடியாது. இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் கட்டமைத்த இயக்கங்கள் பல. ஆனால் எந்த இயக்கத்திலும் அவர் எந்த எதிரியை எதிர்த்தும் போராடவில்லை. அவருக்கு எதிர்தரப்பு மட்டுமே உண்டு. அவர்களின் மனங்களை மாற்றுவதற்கே அவர் போராடினார். ஜனநாயகவாதி, மாற்றுக் கருத்துடையவர்களையும் மதித்த பண்பாளர் அவர், அதற்கான உதாரணங்கள் பல.

          லண்டனில் பாரிஸ்டர் பட்டப் படிப்பு மாணவராக இருந்தபோது ‘தாவர உணவு உண்போர் சங்க’த்தில் உறுப்பினராக இருந்தார். சங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக டாக்டர் தாமஸ் அலின்சன் செயற்கை கருத்தடையை ஆதரித்து நூல் வெளியிட்டபோது அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள். ஆனால் காந்தியோ அந்த நூலின் கருத்துக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் டாக்டர் தாமஸ் அவர்களுக்குத் தனது கருத்தைக் கூறும் உரிமை உண்டு என வாதாடினார்.

    காந்தியடிகளின் மிக முக்கிய சாதனையும் பெருமையும் அவர் இந்துகள் –

முஸ்லீம்களை இணைத்ததையும், விடுதலைப் போரில் சாதாரண மக்களையும், பெருமளவில் பெண்களையும் ஈடுபடச் செய்ததுதான். இந்து மற்றும் இஸ்லாமிய மக்களை இணைத்ததுடன் திருப்தி அடையாத மகாகவி தாகூர், காந்திக்கு ஒரு யோசனை கூறினார்: “இந்து இஸ்லாமிய மக்களை இணைத்தது சரி, கிழக்கையும் மேற்கையும் இணைக்க வேண்டாமா?”

     காந்தி அதற்கு தனது ‘யங் இந்தியா’ இதழில் பதில் கூறினார்: “மகாகவி நினைப்பதைப் போல மானுட சமுதாயத்தையே இணைக்க விரும்புபவன் நான். எனது வீட்டின் கதவுகளும் சன்னல்களும் எப்போதும் திறந்திருக்கும். எத்திசையிலிருந்தும் காற்றும் ஒளியும் வரலாம். ஆனால் வெளியிலிருந்து வீசும் காற்று என்னை வீழ்த்திவிட அனுமதிக்க மாட்டேன்” என்றார்.  தாகூரின் கருத்தை மதித்தாலும் காந்தி தன் தேச நலனை, தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.

    அதேபோல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அப்பழுக்கற்ற தேச பக்தியை மதித்தாலும் விடுதலைக்காக அவரது ஆயுதப் போர் முறையை ஆதரிக்கவில்லை, தனது அகிம்சை கொள்கையைக் கைவிடவும் இல்லை. மற்றொரு உதாரணம், மாவீரன் பகத் சிங் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய மகாத்மா காந்தி முயற்சிக்கவில்லை என்று சொல்லப்படுவதும் ஆகும். உண்மையில் காந்தியடிகள் தூக்கு தண்டனையை ரத்து செய்ய பலமுறை வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதினார், இறுதியில் நேரில் சென்றும் வாதிட்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இவ்வாறு அனைத்துத் தருணங்களிலும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தவர் காந்தி.

          மற்றொரு முக்கியமான பெருமை பொது இயக்கங்களில் பெருமளவு பெண்களை ஈடுபடச் செய்தது. காந்தியடிகள் வருவதற்கு முன்பும் போராட்டங்கள் நடந்தன. முக்காடிட்டு வீட்டிற்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்கள் அவற்றில் கலந்து கொள்ளவில்லை. பெண்களின் பங்கேற்பின்றி எந்த இயக்கமும் வெற்றி பெறாது என்பதைக் கூறியவர் காந்தி. சாதாரண பெண்களும் அவரது சொற்களைக் கேட்டு மாபெரும் எண்ணிக்கையில் இயக்கங்களில் கலந்து கொள்ளவும் செய்தனர். அதற்கான பெருமை காந்தியடிகளையே சாரும்.

    காந்தியடிகள் நாட்டு விடுதலைக்காக மட்டுமின்றி சமூக விடுதலைக்காகவும் போராடினார், அதற்கு அவர் நம்பியது விடாப்பிடியான உறுதி மற்றும் மக்களைத் திரட்டி அவர்களின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதே. அதிலும், அந்த இயக்கங்களில் பெண்கள் பங்கேற்பதை அவர் பெரிதும் வற்புறுத்தினார்.

      உப்புச் சத்தியாகிரகம் என்ற தண்டி யாத்திரை மிகவும் புகழ்பெற்றது, நாம்

அறிவோம். ஆனால் காந்தியடிகள் அதில் ஆஸ்ரமத்தின் ஆண்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து ஆண்கள் பங்கேற்புடன் நடத்தினாரே தவிர, பெண்களை அனுமதிக்கவில்லை. பெண்கள் கலந்து கொள்ளும் நேரம் வரும் என்றார். அதைச் செய்தும் காட்டினார்.

உப்புச் சத்தியாகிரகத்தைவிட பிரம்மாண்டமானது 1933 –34ல் அவர் நடத்திய தீண்டாமைக்கு எதிரான யாத்திரை. நவம்பர் 7ல் தொடங்கிய யாத்திரை மறு ஆண்டு ஆகஸ்ட் 2ல் நிறைவடைந்தது, ஒன்பது மாதங்கள் நடைபெற்ற இயக்கம். அந்த ஒன்பது மாதங்களும் வேறு எந்தச் செயல்பாடுகளிலும் அவர் ஈடுபடவில்லை. அதைவிட முக்கியம், அந்த இயக்கத்தில் பெருமளவு பெண்கள் பங்கேற்றதாகும்.

       விராஜ்பூரில் பெண்களுக்கான பிரத்தேகக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு

இடையூறுகள் ஏற்படுத்தப்பட, கூட்ட இடத்திற்குப் பெண்கள் 20 மைல் சுற்றி வந்தனர். அதுமட்டுமா, விடியற்காலை நாலே கால் முதல் நாலே முக்கால் வரை நடைபெறும் பிராத்தனைக் கூட்டங்களிலும் பெண்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர். மீராபென் குழு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு பெண்களைத் திரட்டினார். பெண்களிடையே உரையாற்றினார்.

          தீண்டாமைக்கு எதிரான இந்த யாத்திரையின் மற்றுமொரு சிறப்பு, இயக்கத்திற்கு நன்கொடை கோரியபோது, பெண்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அளித்ததாகும். அப்படி நிதி கொடுப்பவர்கள் பின்பு மீண்டும் நகை அணியக் கூடாது என்று வேறு நிபந்தனை விதித்தார். இதில் முக்கியமான ஒரு கோட்பாடு உள்ளது.

பெண்கள் அழகுப் பதுமைகளாகவும், நகைகளை மாட்டிக் கொள்ளும் நகை ஸ்டாண்டாகவும் இருக்கக் கூடாது என்ற இந்தக் கருத்தையே நம் தந்தை பெரியாரும் வலியுறுத்தினார். அவர்கள் பெண் விடுதலைக்காக நின்றார்கள், சமூகத்தில் பெண்களின் சக்தியை மதித்தார்கள். அதைத் தெரிந்து கொண்டே அத்தனை அத்தனை பெண்களும் நகைகளை  வாரி வழங்கினர்.

அந்த யாத்திரையில்தான் எத்தனை எத்தனை அற்புதமான காட்சிகள். நாக்பூர் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புக்கு ஒருமுறை சென்றபோது அங்கிருந்த அய்யங்கர் என்ற பெண்மணி தன் வாழ்நாள் சேமிப்பான தங்க வளையல்களைக் கழற்றித் தந்தார். ஒரிஸாவில் பல மாணவிகள் அந்த யாத்திரையில் கலந்து கொண்டனர், களப்பணி ஆற்றினர். அந்த மாணவிகள் 21 நாட்கள் அந்தப் பயணத்தில் உடன் சென்றனர். ஆனால் நம் துரதிருஷ்டம், தண்டி யாத்திரை போல, கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணிகள் புறக்கணிப்பு இயக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டது போல காந்தியடிகள் நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பதிவுசெய்யப்படாமல் போனது.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், அடிமைப்படுத்திய அன்னிய ஆட்சியை விரட்டி விடுதலை பெறுவதற்கு இந்த இயக்கங்கள் எல்லாம் எதற்கு? அதுதான் மகாத்மா காந்திஜி. விடுதலை பெறுவதற்கும், பெற்ற விடுதலையைப் பேணிக் காக்கவும் தகுதி உடையதாகச் சமூகத்தைத் தயார்ப்படுத்தவும், பெண் விடுதலை மற்றும் சமூக விடுதலை பெறவும் நம்மை அவர் தயாரித்தார்.

சபர்மதி நதிக்கரையில் அவர் அமைத்த ஆசிரமத்தில் தொடக்கத்தில் 25 பேர்களே இருந்தனர். காந்தியிடம் ஒரு பத்திரிக்கை நிருபர் ‘இந்த 25 பேர்களை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். கோபப்படாமல் சிரித்துக் கொண்டே காந்தி, “இந்த 25 பேர்களை வைத்துக் கொண்டுதான் இந்தியா பயணிக்கும் திசையை மாற்றப் போகிறேன்” என்றார். அப்படித்தான் இந்தியா காந்தி தேசமானது. சொன்னபடி நடந்தும் காட்டினார்.  தனது வாழ்வே தான் வழங்கும் செய்தி என்றார்.

ஆனாலும் சமூகத்திலும் உலகிலும் சாந்தி நிலவவில்லை. ஏற்றத் தாழ்வுகள் நீங்கி சமத்துவமும் மலரவில்லை. அதைத்தான் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளும் உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பேராசிரியரின் அனுபவங்களும் ஆகும். ஆனாலும் நாம் சோர்வடையத் தேவையில்லை. காந்தியடிகளின் தொடக்க காலப் போராட்டங்களில் அவர் தோல்வியே அடைந்தார். இருப்பினும் தன் முயற்சிகளை அவர் கைவிடவில்லை.

அப்படித்தான் நமக்கும் காந்தியடிகள் கொள்கைகள் இன்று நமக்கு ஒளிவிளக்காகத் திகழும்.  “கருணை, ஒற்றுமை, கதிரொளி பரவி சாந்தி நிலவ வேண்டும், உலகிலே சாந்தி நிலவ வேண்டும். கொடுமை செய் தீயோர், மனமது திருந்த நற்குணம் அது புகட்டிடுவோம்! மடமை அச்சம் அறுப்போம், மக்களின் மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்! மகாத்மா காந்தி கட்டளை அதுவே – கடமை மறவோம், அவர் கடன் தீர்ப்போம்!”

நன்றி, வணக்கம்!

 

Friday 27 January 2023

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம்

 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும்
இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம்

--கார்க்கி சக்ரவர்த்தி

இது சிலை அரசியல் சகாப்தம், அது அரசியல் பிரமுகர் சிலையோ அல்லது புராண தெய்வ உருவங்கள் சிலையோ எங்கெங்கும் சிலைகள். அப்படித்தான் சமீபத்தில் டெல்லியின் முக்கியமான ‘இந்தியா கேட்’ அருகில் நம் நாட்டின் மிகப் பிரபலமான விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர

போஸ் சிலையை அவருடைய இராணுவச் சீருடையில் அமைத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிலையை நிறுவிய, தத்துவார்த்த ரீதியில் வெளிப்படையான வலதுசாரி கூட்டமைப்பான, ஆளும் தரப்பு நடவடிக்கையின் பின்னால் ஓர் உள்நோக்கம் இருக்கிறது: அது, தெளிவான இடதுசாரி சார்புடன் இருந்த உண்மையான ஒரு தேசபக்தனை அபகரிப்பதே ஆகும் –இன்று கண் முன்னே காண்பதற்கு நேர் முரணானது, நேதாஜியின் இந்தியா குறித்த கருத்துகள். இது தவிரவும் சுதந்திரப் போராட்டம் பற்றி மிக விரிவாக எழுதப்பட்ட வரலாற்றை மறுத்து, அதனை மீண்டும் எழுதும் முயற்சியும் நடக்கிறது.

     நாட்டில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், காலனியச் சுரண்டல்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் குறித்துப் பேசப்பட்டாலும், அன்று நிலவியதற்கு மாறான பார்வையிலிருந்து அவர்கள் முயற்சி உள்ளது. ‘இந்திய விடுதலை இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ்) மூலம் சுபாஷின் இராணுவமயமாக்கலுக்கு வலதுசாரிகளுடைய ஆதரவு என்பது அவர்கள் தேர்ந்தெடுத்த நேதாஜியின் வாழ்வு மற்றும் பங்களிப்பு குறித்த சித்தரிப்பின் ஒரு பகுதியே. இப்படி ஒற்றைப் பரிமாணப் பார்வையில் நேதாஜியை முன்னிறுத்துவதற்குப் பின்னுள்ள அவர்களது நோக்கம், காந்தி மற்றும் நேரு மீதான மக்களின் கவனக் குவிப்பிலிருந்து நகர்த்துவதும், நேதாஜிக்கும் காங்கிரசுக்கும் இடையே முன்பு இருந்த விரிசலைக் குவிமையமாக்குவதே ஆகும்.

காங்கிரஸ் அமர்வுகளும் நேதாஜியும்

    எவ்வாறாயினும், 1939 திரிபுரி காங்கிரஸ் அமர்வுக்குப் பின் காந்தி போசுக்கு இடையே என்னவெல்லாம் நடந்திருந்தாலும் அவை காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் வலதுசாரி –இடதுசாரி இடையேயான தத்துவார்த்த வேறுபாடுகளின் பின்விளைவுகளே ஆகும். திரிபுரி அமர்வில் அதிகாரபூர்வ அல்லது காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவை எதிர்த்து நேதாஜி மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சுபாஷின் உறவு காந்தி, நேரு இருவருடன் இறுக்கமாகி பாதிக்கப்பட்டது. சுபாஷ் போட்டியிட்டதை, அத்தருணத்தில் வலதுசாரி பிரபலங்கள் தந்த அழுத்தம் காரணமாக காந்தி -- இரவீந்திரநாத் தாகூரின் வேண்டுகோளையும் நிராகரித்து-- எதிர்த்தார். தத்துவார்த்த ரீதியில் தனக்கு நெருக்கமாகவும் இடதுசாரிகளுடன் இருந்தவருமான நேரு அப்போது நடுநிலை வகித்ததும் நேதாஜிக்கு மிகக் கடுமையான அதிர்ச்சியைத் தந்தது.

          இங்கு நாம் ஞாபகம் கொள்ள வேண்டியது, காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகள், கம்யூனிஸ்ட்களின் முழுமையான ஆதரவுடன்தான் சுபாஷ் முதலில் 1938 அரிபுராவிலும் அடுத்து 1939 திரிபுரி அமர்வில் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்தார் பட்டேல் போன்ற வலதுசாரி அணியினர் சுபாஷுக்கு எதிராக உரத்து குரல் எழுப்பிய தருணத்தில் நேருவின் எதிர்பாராத மௌனம் குறித்த தனது வேதனையை வெளிப்படுத்தி நேதாஜி 1939 மார்ச் 28ல் நேருவுக்கு நீண்ட கடிதம் எழுதினார்; அதில், “தேர்தல் பரப்புரைப் பயன்களுக்காக மகாத்மா காந்தி பெயரையும் அவரது அதிகாரத்தையும் சர்தார் பட்டேல் முழுமையாகப் பயன்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லையா? நான் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது தேசத்தின் நலன்களுக்குக் கெடுதல் நிறைந்ததாகிவிடும் எனச் சர்தார் பட்டேல் கூறியதில் எந்தத் தவறும் இல்லையா?” என்று வேதனையை வெளிப்படுத்தினார். நாடு நெருக்கடியான முக்கிய கட்டத்தில் இருக்கும்போது காங்கிரஸ் இயக்கத்திற்குள் ஏற்படக்கூடிய பிளவு குறித்த ஐயுறவில், நேரு எந்தப் பக்கமும் ஆதரிக்காது இருந்து விட்டார்.

          இடதுசாரிகள்பால் தனது நட்பான அணுகுமுறையைக் காந்தியர்கள் ஒப்பவில்லை என நேதாஜியே உணர்ந்தார். அவர்களைப் பொருத்தவரை அது “நியாயமற்ற அதிகப்படியான நட்பு.” 1938 முதலே காங்கிரசிடம் சுபாஷ், “குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விடுதலையைக் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு இறுதி எச்சரிக்கை அனுப்பவும், ஒரு தேசியப் போராட்டத்திற்குத் தேசத்தைத் தயாரிப்படுத்தத் தொடங்கவும்” வற்புறுத்தி வந்தார். “காந்தியம் புரட்சிகரச் செயல்பாடுகளை நிறுத்தி விட்டது” என்று கருதிய சுபாஷ், “காங்கிரசுக்குள் இடதுசாரி செல்வாக்கை நிறுவுவது” எப்படி என்பது குறித்த கருத்தில் மூழ்கி இருந்தார். காந்தியம் தேங்கத் தொடங்கிவிட்டது என்ற கருத்துக்கு வந்தவர், இறுதியில் 1939 மே மாதத்தில் ‘பார்வர்டு பிளாக்’ என்ற இடதுசாரி அமைப்பை நிறுவினார். விரைவில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்தும் சுபாஷ் சந்திர போஸ் விலகினார்.

ஆயுதப் போராட்ட வழியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

      வெளிநாட்டுச் சக்திகள் உதவியுடன் அவர் ஆயுதப் போராட்டப் பாதையை அமைக்க எவை காரணமாக அமைந்தன என்ற கேள்விகள் எழுகின்றன. காந்திய அகிம்சை வழி போராட்ட உத்தி மற்றும் தேசியத் தலைவர்களின் அசட்டையான அணுகுமுறையுடன் அவர் நம்பிக்கை இழந்தார் என்பது உண்மை. (அதற்காக ஆயுதப் போராட்டத் தேர்வா? இருக்காது) எனினும் முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னா, இந்து மகாசபா தலைவர் சவார்க்கர் இருவரையும் பிரிட்டிஷ் அரசுடன் பேரம் நடத்த ஐக்கிய முன்னணி அமைக்கச் சம்மதிக்கச் செய்வதில் அவர் அடைந்த தோல்வி குறித்த அம்சம் இதுவரை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சிலபல பேட்டிகளில் ஜின்னா அவர்களுக்கு ஒன்றுபட்டப் போராட்டத்திற்கு அவர் வழங்கிய ஆலோசனைகள் அர்த்தமற்றுப் போயின. “அத்தகைய ஓர் ஒன்றுபட்டப் போராட்டம் நடைபெறும் எனில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக ஜின்னா இருப்பார்” என்ற சுபாஷின் முன்மொழிவுக்கு ஜின்னா எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதுபோலவே சவார்க்கருடன் அவர் ஏமாற்றம் அடைந்தார்: சவார்க்கர் பற்றி சுபாஷ் “இந்தியப் போராட்டம்” என்ற தனது புத்தகத்தில், “இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்தில் நுழைந்து இந்துகள் இராணுவப் பயிற்சியை எப்படிப் பெறுவது என்பதைக் குறித்து மட்டுமே திரு சவார்க்கர் சிந்திப்பதால், அவர் சர்வதேச சூழ்நிலைகளைக் குறித்த அறியாமையில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். இந்தப் பேட்டிகளின் அடிப்படையில், “உபயோகமான எதையும் முஸ்லீம் லீக் இடமிருந்தோ அல்லது இந்து மகாசபாவிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்ற முடிவுக்கு சுபாஷ் வந்தார். மேலும், “முகமதியர்கள் மற்றும் இந்துகள் இரு சாரார்களுக்குள்ளும் இருக்கும் பிரிட்டிஷ் ஆதரவாளர் குழுகள் மதவாதக் கட்சிகளாகத் திரண்டுவிட்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுவதாக மதிக்க முடியாது” என்று சுபாஷ் உணர்ந்தார்.

    நாட்டின் தேசியச் சூழலுடன் வெறுத்துப் போனவராக, இந்திய விடுதலை ஒன்றும் “எதிர்காலத்தில் பிரிட்டனில் அமைய உள்ள தொழிலாளர் அரசிடமிருந்து ஒரு பரிசுப் பொருளாக” வந்துவிடாது என்று சுபாஷ் புரிந்து கொண்டார்; எனவே பிரிட்டிஷ்காரர்களைத் தூக்கி எறிவதற்கு வெளிநாட்டு உதவியுடன் ஆயுதப் போராட்டத்தைத் தொடுக்க வேண்டி இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல அவர் திட்டமிட்டார். அது 1941 ஜனவரி 16 இரவு, முகமது ஜியாவுதீன் என்ற மாறுவேடத்தில் அவர் இறுதியில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில். காபுல் வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றார்.

நேதாஜியின் மதசார்பற்ற உணர்வு

    அவருடைய ‘இந்திய விடுதலை இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ்) குறித்து விவரிப்பதற்கு முன், ‘மதசார்பற்ற உணர்வு நிலையுடன் ஒன்றுபட்ட இந்தியா’ குறித்துத் தனது வாழ்வின் இறுதிவரை நேதாஜி கொண்டிருந்த கண்ணோட்டத்தை விவரிப்பது மிக மிக முக்கியமானது. இந்த அம்சம் பெரிதும் அறியப்படாததாக நீடிக்கிறது. பல்வேறு மதங்கள் உள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் மதச்சார்பின்மை என்பது மதம் இல்லாத நிலை என்று பொருள்படாது; மாறாக, மதம் குறித்து அரசின் நடுவுநிலைமை என்றும், அதாவது அனைத்துச் சமயக் குழுக்களுக்கும் இருப்பிட வெளியும், ஏற்பும் என்றே பொருள்படும். “விடுதலை பெற்ற இந்தியாவும் அதன் பிரச்சனைகளும்” என்ற கட்டுரையில் சுபாஷ் விடுதலை பெற்ற இந்தியாவுக்குத் தனது கண்ணோட்டம் குறித்துப் பேசுகிறார்: (சுதந்திர இந்தியாவில்) “அரசு மதம் என்ற ஒன்றுக்கு இடம் இல்லை” மற்றும் அங்கே “தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் முழுமையான மதம் சார்ந்த மற்றும் பண்பாட்டுச் சுதந்திரத்திற்கு உறுதி அளிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

       ஆழமான மத உணர்வு உள்ள ஒரு மனிதராகவும் சுவாமி விவேகானந்தரின் பிரச்சார போதனைகளின் செல்வாக்கில் ஆட்பட்ட நேதாஜி தனது மத நம்பிக்கைகளைத்

தனிப்பட்ட தன் சொந்த வாழ்வியல் வட்டத்தில் வைத்துக் கொண்டு, அந்த நம்பிக்கைகளை மக்களைத் திரட்ட ஒருபோதும் பொதுவெளியில் பயன்படுத்தவில்லை. தத்துவப் பாடத்தின் மாணவராக நேதாஜி பல்வேறு மதங்களின் சமய நூல்களைக் கற்று, அவை அனைத்தின் சாராம்சங்களை உட்செறித்து ஊக்கம் பெற்றார். அவரது ‘எனது நம்பிக்கை (தத்துவம்)’ எனும் தலைப்பிலான கட்டுரையில் தீர்மானகரமாக உணர்ந்து, “உண்மையின் மிக முக்கியமான இயல்பு அன்பு. அன்பே பிரபஞ்சத்தின் சாரம், அதுவே மனித வாழ்வின் முக்கிய கோட்பாடு” என்றுரைத்தார்.

      1928ன் தொடக்கத்திலேயே ‘கலாச்சார ஒன்றிணைவு புரிதல்’ என்ற கருத்தின் மீது அனைத்து மதச் சமூகத்தினருடன் அவர் பேசினார். பூனாவில் ஆற்றிய உரை ஒன்றில், “(சொந்த மதத்தின் மீது கொண்ட) தீவிரவாதம், வெறியான பற்று என்பது நெருக்கமான கலாச்சார உறவுப் பாதையில் மிகப் பெரிய முட்கள்; வெறியான தீவிர பற்றிற்கு நல்லதொரு மாற்று மருந்து, மதச்சார்பின்மையும் அறிவியல் கல்வியையும் தவிர வேறொரு நல்ல தீர்வு இருக்க முடியாது!” என்று கூறினார்.

     இவற்றிலிருந்து சுபாஷ் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கோ அல்லது பல மதச் சமூகத்தினரிடையே ஒன்று கலப்பது குறித்தோ ஒவ்வாமை உடையவர் அல்ல என்பது தெளிவாகிறது. கட்சி நடத்திய ஏறத்தாழ எல்லாக் கூட்டங்களிலும் பதற்றமும் கசப்பும் தலைகாட்டிய தருணங்களில் அவர் இந்த உரையை ஆற்றினார். ‘‘இன்றைய நிகழ்வுப் போக்கு செல்லும் நிலையில், இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்டு வாழும் வேறுபட்ட சமூகங்கள் மிகவும் தனித்து (பிரத்தேகக் குழுக்களாகப் பிரிந்து) கிடக்கின்றன” என்று அவர் வருந்தினார்.

    நேதாஜி வாழ்வில் பெரிதும் அறியப்படாத பல சம்பவங்கள், நடைமுறையில் முஸ்லீம்களை நெருக்கமாகக் கொண்டுவரும் கருத்தை எவ்வாறு அவர் அமல்படுத்தினார் என்பதைக் காட்டும். 1924ல் கல்கத்தா கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரியாக நேதாஜி பணியாற்றியபோது காலியாக இருந்த 33 இடங்களில் 25 இடங்களுக்கு முஸல்மான்களைத் தேர்வு செய்தார். அந்நடவடிக்கை அக்காலத்தின் வலதுசாரி இந்துகளால் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. எனினும், நேதாஜி தனது நிலைபாட்டை உறுதிப்படுத்தி, “இந்துகள் இதுவரை ஒரு வகையில் ஏகபோகமாக” என்னும் அளவு அனுபவித்துவிட்டார்கள் என்று கூறி விட்டார். (இதனால்) சுபாஷ் முஸ்லீம்களைத் தாஜா செய்கிறார் என்று எவரும் துணிந்து சொல்லிவிட முடியாது! அவரது இந்நடவடிக்கை “போற்றத்தக்கச் செயல்பாடு” என்று காந்தியால் பாராட்டப்பட்டது. முஸ்லீம்கள் மற்றும் பிற அனைத்து வகுப்பினர்களுடனும் நட்பாக இணைந்து செயல்படுதல் என்ற காந்தியின் அரசியல் செய்தி, சுபாஷிடம் ததும்பும் அன்பின் இழையாகப் பதிந்தது. 1938 அரிபுரா காங்கிரஸ் அமர்வில் நேதாஜி ஆற்றிய தலைமை உரை மற்றும் அவரது பல உரைகளில் இந்து –முஸ்லீம் உறவை மேம்படுத்துவதற்கான தேவையை வலியுறுத்தின.

இந்தியா குறித்த கருத்தோட்டம் மற்றும் மத ஒருமைப்பாடு

     விடுதலை பெற்ற இந்தியா குறித்த சுபாஷின் கண்ணோட்டம் இதுவரை பேசப்படவே இல்லை. மதச்சார்பின்மை மற்றும் விஞ்ஞானக் கல்வி கருத்துகளைத் தவிர அவர் சோஷலிசக் கட்டமைப்பையும்கூட தனது எதிர்காலக் கண்ணோட்டத்தில் கற்பனை செய்தார். “அரசியல் விடுதலை அடைந்த பிறகு, இடதுசாரித்துவம் என்பது சோஷலிசத்தைக் குறிக்கும், அதன் பிறகு மக்களின் கடமை தேசிய வாழ்வைச் சோஷலிச அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்வதாகும்“ என்று எழுதினார். எனினும் அதே கட்டுரையில் அவர், “நமது அரசியல் விடுதலையைச் சாதிப்பதற்கு முன்பு சோஷலிசம் அல்லது சோஷலிச மறுகட்டமைப்பு என்பது ஒட்டுமொத்தமாக (உரிய காலத்திற்கு முன்) முதிராத நடவடிக்கையாகிவிடும்” என்று அவர் கூறினார்.

      அவருடைய ‘இந்திய விடுதலை இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ்) ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போழ்திலும்கூட வகுப்பு ஒற்றுமை குறித்த அவரது கண்ணோட்டம் வலதுசாரி வரலாற்றாளர்கள், அரசியல்வாதிகளால் சிறப்பாகப் புகழ்ந்துரைக்கப்படவில்லை. தென்கிழக்கு ஆசியாவில் இறங்கும் முன் அவருடைய

இராணுவத்தின் கொடி ‘பாயும் புலி’ சித்திரத்தைத் தாங்கி இருந்தது –அது, பிரிட்டிஷ்காரர்களுடன் ஸ்ரீரங்கப்பட்டணம் போரில் போரிடும்போது வீரமரணம் அடைந்த திப்பு சூல்தான் இலட்சினையை நினைவுபடுத்துவதாக ஒத்து இருந்தது. பின்னர் தென்கிழக்கு ஆசியாவில் இந்திய தேசிய இராணுவத்தின் கொடியில் காந்தியின் சர்க்கா இலட்சினையாக இடம்பெற்றது. ஆனால் திப்பு சூல்தானின் பாயும் புலி இராணுவ வீரர்களின் தோள் பட்டை இலட்சினையில் தொடர்ந்து நீடித்தது. திப்புவின் பாயும் புலி இலட்சினை நேதாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு விபத்து அல்ல.

      அதுபோல, முகலாயர்களை ஒருபோதும் அவர் வெளிநாட்டவர்களாகக் கருதவில்லை என்பதையும் வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வு கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். தனது இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) ‘டெல்லியை நோக்கி அணிவகுப்போம்’ செய்தியை அறிவிப்பதற்கான மரபார்ந்த அணிவகுப்பை நடத்த ரங்கூனில் கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஸாஃபர் கல்லறை உள்ள வளாகத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்நிகழ்வின் போழ்து, 1943 செப்டம்பர் 26ல் சுபாஷ் முழங்கினார், “இந்தியர்களாகிய நாம், சமய நம்பிக்கை வேறுபாடுகளைக் கருதாது, பகதூர் ஷா நினைவைப் போற்றுகிறோம் …காரணம், அந்த மாமனிதரின் கொடியின் கீழ்தான் எல்லா மாகாணப் பிராந்தியங்களிலிருந்தும் இந்தியர்கள், வேறுபட்ட சமய நம்பிக்கைகளைப் பின்பற்றும் இந்தியர்கள், போராடினார்கள்…”

    சிங்கப்பூரில் இடைக்காலச் சுதந்திர இந்திய (ஆஸாத் ஹிந்த்) அரசை அமைத்துப் பிரகடனம் செய்தபோது அனைத்துக் குடிமக்களுக்கும் மதச் சுதந்திரம், சமமான உரிமைகள், சமமான வாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டன. அவரது ஐஎன்ஏ காலத்தின்போது இந்திய தேசிய இராணுவத்திற்கு வீரர்களைத் தேர்ந்தெடுத்தபோது அவர்கள் எல்லா மதங்களின் சமூகங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் சுபாஷ் உறுதியாக இருந்தார். வீரர்கள் சம பந்தியாக சேர்ந்து உணவு உண்ணல், அவர்களுக்கு இடையே கலாச்சார நெருக்கம் பிணைப்பு இவற்றை அவர் அறிமுகப்படுத்தியதுடன், ‘‘இந்தியாவின் ஒற்றுமை -- கடந்த காலம் மற்றும் நிகழ்காலம்’’ குறித்த உரைகளையும் ஆற்றினார். அந்த உரைகளில் முகலாயர் ஆட்சியில் இந்துகளும் முஸ்லீம்களும் எப்படிச் சகோதரர்களாக வாழ்ந்தார்கள் என்பதை அவர் எடுத்துக் கூறினார்.

போரின்போது சுபாஷின் கொள்கை நிலைபாடு

     ஜெர்மன் நாஜிகளின் கொடூரங்களைச் சுபாஷ் நன்கு அறிந்திருந்தும், அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக மாற்றமுடியாத பிடிவாதகாரராக இருந்த காரணத்தால், போர் நெருக்கடியைப் பிரிட்டிஷ்காரர்களைத் தூக்கி எறிய வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்பினார். ஜெர்மன் நாஜிகளின் கூட்டாளியான ஜப்பானிய பிரதமர் டோஜோவிடமிருந்து உதவி பெறலாம் என்பது அவரது கொள்கை நிலைபாடு. அந்த நிலைபாட்டை இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் மற்றும் குறிப்பாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைவிட ஜெர்மன் நாஸிசம், ஜப்பானிய ஃபாஸிசம் அதிக ஆபத்தானவை என்று கருதிய கம்யூனிஸ்ட்கள் ஏற்கவில்லை. நேசஅணி படைகள் போரில் இறங்க, ஹிட்லருக்கு எதிராகச் சோவியத் யூனியனும் போரில் ஈடுபடவும் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு மாறியது.

       அந்த மாறுதல், அதாவது ஏகாதிபத்தியப் போர் என்பதிலிருந்து மக்கள் யுத்தம் என்று போரின் தன்மை மாறியது இந்திய மக்கள் திரளுக்குத் தெளிவாக விளங்கவில்லை. சுபாஷின் வாதத்திற்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்

செயலாளர் பிசி ஜோஷி பின்வருமாறு எழுதினார்: “இந்தியா மற்றும் கீழைக் காலனிய நாடுகளில் உள்ள மக்கள், ‘ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து விடுதலை ஒரு பரிசுப் பொருளாக வழங்கப்படாது’ என்பதைத் தங்கள் அனுபவங்களால் கற்றிருக்கிறார்கள்; அவர்கள் மற்றொன்றையும் நன்கு அறிவார்கள், அது ஜப்பானிய ஃபாஸிஸ்டுகளின் இரத்தக் கறை படிந்த வாள் முனையிலும் அவர்களுக்குச் சுதந்திரம் வந்துவிடாது என்பதையும் அறிவார்கள்.” இந்தியாவின் கிழக்கு எல்லையில் கவிந்து சூழ்ந்து வரும் ஜப்பானிய ஃபாஸிசத்தின் ஆபத்தை பிசி ஜோஷி சுட்டிக் காட்டினார். மேலும் அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி  ஜப்பானுடன் கூட்டுச் சேரும் சுபாஷின் அணுகுமுறை உத்தியை எதிர்த்தார்.

    வங்கத்தின் கிழக்கு எல்லையில் சிட்டஹாங் மீது 44முறை குண்டுவீசித் தாக்கப்பட்டது, அதுபோல கல்கத்தா, விசாகப்பட்டினம் முதலியன 40களின் தொடக்கத்தில் குண்டுவீச்சைச் சந்தித்தன. சுபாஷ் தனது இடைக்கால அரசை சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு மாற்ற சிட்டஹாங் வழியாக டெல்லி நோக்கிய அணிவகுப்புப் பாதையை அறிவித்தபோது, ஜோஷி தனது கவலையை வெளியிட்டார். உண்மையில், நேதாஜியின் பழைய நண்பரும் பர்மிய விடுதலைப் போராட்ட வீரருமான போ அவுங் சன் பழிபாவம் அஞ்சாத ஜப்பான் அரசின் கொடூரத் தன்மை குறித்து எச்சரித்தாலும் சுபாஷ் சந்திர போஸ் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை, அவர் ஜப்பானியர்களை இந்தியாவின் நண்பர்களாகக் கருதினார்.

தேசிய இயக்கத்துடன் தொடர்பு

      எனினும், சுபாஷ் இந்திய தேசிய இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார், காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குத் தனது மனப்பூர்வமான ஆதரவை நல்கினார். பொதுவாக முஸ்லீம் சமூகத்தினரை ஈர்க்கத் தவறிய நிலையில் அந்த இயக்கத்தின் வரையறைகளை புரிந்து கொண்டாலும், ஹிருஷக் பிரஜா கட்சி உட்பட அச்சமூகத்தின் பல்வேறு முற்போக்கு முஸ்லீம் குழுக்களைப் பரந்துபட்ட தேசபக்த முன்னணி அமைக்க சுபாஷ் வற்புறுத்தினார். அவர் தனது ஆஸாத் ஹிந்த் ரேடியோ மூலம் இந்திய மக்களுடன் தொடர்பில் இருந்தார்.

தன்னகத்தே எப்போதும் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது அவர் எந்தத் தவறான உணர்வையும் கொண்டிருக்கவில்லை; சொல்லப் போனால் தனது படைப் பிரிவுகளுக்குக் காந்தி பிரிகேடு, ஆஸாத் பிரிகேடு, நேரு பிரிகேடு (படையணிக் குழு) எனப் பெயரிட்டார். பெண்கள் படைப் பிரிவு, ராணி ஜான்சி ரெஜிமெண்ட் என்று அழைக்கப்பட்டது. 1944 ஜூலை 6ல் ரங்கூன் ரேடியோ மூலம் அவர் ஒலிபரப்பிய உரையில் காந்தியின் ஆசிகளை வேண்டினார். நேதாஜிதான் முதன் முதலாக காந்தியைத் “தேசப் பிதா” என்று விளித்து அழைத்தார். அவர் தனது உரையை, ‘இந்திய விடுதலைக்கான இந்தப் புனிதப் போரில் நாங்கள் உங்கள் ஆசிகளை, நல்வாழ்த்துகளை வேண்டி நிற்கிறோம். ஜெய் ஹிந்த்!’ என்ற வார்த்தைகளுடன் நிறைவு செய்தார். உண்மையில், இந்தக் காலக் கட்டத்தின்போது, ‘ஜெய் ஹிந்த்!’ என்பதைத் தேசிய வாழ்த்துப் பேரொலி முழக்கமாக அவர் பயன்படுத்தினார்.

போர் முடிந்தது

    1945 மே 9ல் பெர்லின் வீழ்ச்சியுடன் ஹிட்லர் முறியடிக்கப்பட போர் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஜப்பான் தோல்வியுடன் சுபாஷ் 1945 ஆகஸ்ட்டில் பின்வாங்க நேர்ந்தது. ஒரு விமான விபத்தில் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணமடைய அவரது மறைவு இந்திய மக்களுக்கு மாபெரும் இழப்பானது. இந்தத் துயர சம்பவத்திற்கு அவருடைய கடைசி தோழர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் மருத்துவமனையில் இருந்த செவிலியர் மட்டுமே சாட்சி. எனினும் மரணமடைவதற்கு மூன்று நாட்கள் முன்பு, 1945 ஆகஸ்ட் 15ல் இந்தியர்களுக்கு அவர் விடுத்த செய்தி வெல்ல முடியாத ஊற்றெடுக்கும் அவரது உற்சாக உணர்வைப் பிரதிபலிக்கிறது. பின்வாங்கிய தனது செயலை ஒரு ‘தற்காலிகத் தோல்வி’ என்றே கருதினார், எதிர்கால நம்பிக்கையுடன் இருந்தார்.

அவருடைய சுய தியாகத்தால் ஈர்க்கப்பட்ட காந்தி ஹரிஜன் பத்திரிக்கையில், என்னுடைய புகழ்தலும் வியத்தலும் இதற்கு மேல் செல்ல முடியாது” (எல்லையற்ற

புகழ்ச்சிக்கும் வியப்புக்கும் உரியவர் சுபாஷ்) என்று எழுதினார். நேதாஜி தனது கடைசி செய்திகளில் ஒன்றில் இந்திய தேசிய இராணுவப் படையின் மூத்தோரை –அவர்கள் திரும்பிய பிறகு– காங்கிரஸின் வழிகாட்டலின் கீழ் அகிம்சை வழியில் தேச ஒற்றுமைக்காகப் பாடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் என்பதைப் பின்னர் அறிய வந்தபோது மகாத்மா மீண்டும் உறுதியளிக்கப்பட்டவராக உணர்ந்தார்.

நேதாஜியை அபகரிக்கும் முயற்சி

     காங்கிரசுடன் சுபாஷுக்கு இருந்த மிகக் கசப்பான உறவைப் பெரிதுபடுத்திக் காட்டும் முயற்சிகள் இப்போதும் செய்யப்படுகின்றன. 1946 விசாரணைகளின்போது காங்கிரஸ் தலைவர் நேரு, புலாபாய் தேசாயுடன் இணைந்து மூன்று மூத்த ஐஎன்ஏ போர் வீரர்களைப் பாதுகாக்க –அவர்கள் ஒவ்வொருவரும் இந்து, சீக்கியம் மற்றும் முஸ்லீம் என வேறுவேறு மத நம்பிக்கை உடையவர்களை-- ஆதரித்த காட்சியைக் காண நேதாஜி உயிருடன் இல்லாதது துரதிருஷ்டமே. காந்தி மற்றும் நேருவுடன் கருத்தோட்ட வேறுபாடுகள் சுபாஷுக்கு உண்டு, ஆனால், வலதுசாரிகள் மற்றும் நாட்டில் இருந்த மதவாதக் கட்சித் தலைவர்களுடன் அவருக்கிருந்த கருத்து வேறுபாடுகளோ மிக மிகக் கூடுதலாகக் கடுமையானவை மற்றும் ஆழமாக வேரோடியவை ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, பாஜக போன்ற வலதுசாரி ஆட்சியாளர்கள் இன்று சுபாஷ் சந்திர போசை அபகரித்துச் சொந்தம் கொண்டாட முயற்சிப்பது ஒரு வரலாற்று முரண்நகை!

காதலாகிக் கசிந்த பேரிலக்கியக் காதலன்

சுபாஷ் குறித்து அவரை ஓர் இலட்சிய இலக்கியக் காதலனாக நினைவில் நிறுத்த வேண்டிய தேவை உள்ளது; அந்த அளவு அவருக்குத் தன் உதவியாளரான ஆஸ்திரிய சுருக்கெழுத்தாளர் எமிலி ஷென்கல் (Emilie Schenkl) உடன் ஆழமான உறவு இருந்தது.

1936 டிசம்பர் 26ல் அவரைச் சுபாஷ் இரகசியமாக மணந்தார். தனது எதிர்காலம் குறித்து நிச்சயமில்லாது இருந்த சுபாஷ், எமிலிக்கு எழுதிய கடிதத்தில், “…ஆனால் என் அன்பே, என்னை நம்பு, நீ என் இதயத்தில், என் எண்ணங்களில், எனது கனவுகளில் எப்போதும் வாழ்வாய். இந்த வாழ்வில் விதி நம்மை அவ்வாறு பிரிக்குமென்றால், எனது அடுத்த பிறவியில் உனக்காக நான் ஏங்கிக் காத்திருப்பேன்.” (படம் நன்றி :  NETAJI RESEARCH BUREAU )     [குறுந்தொகையில் அம்மூவனார் எழுதிய  பாடல் 49ல் தலைமகள், “இம்மை மாறி மறுமை ஆயினும் / நீயா கியர் என் கணவனை / யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று கசிந்துரைத்த அதே உணர்வைத் தலைமகனாகச் சுபாஷ் எமிலியிடம் வெளிப்படுத்துகிறார் எனில் சுபாஷ் செவ்விலக்கியக் காதலர்தாமே –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

          இந்தியாவில் இன்று சில மாநிலங்களில் வேறுபட்ட மத நம்பிக்கை உள்ளவர்கள் இடையே கலப்பு மணத்தைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவர எத்தனிக்கும்போது, ஒருபோதும் அத்தகைய உறவுகளை எதிர்க்காத, வேறுபட்ட மொழி

பேசும், வேறுபட்ட பழக்க வழக்கங்கள் உள்ள, வேறொரு நாட்டின் பெண்மணியைத் தேர்ந்தெடுத்து அன்பு செய்த சுபாஷை நாம் ஞாபகம் கொள்ள வேண்டிய தேவை உள்ளது, அவருடைய காதல் அழிவில்லாத என்றுமுள நித்தியமானது. அந்த அன்பின் அடையாளத்தைத் தாங்கி அவர்களுடைய ஒரே செல்வ மகள் அனிதா நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

          பரவலாக அங்கீகாரம் பெற்ற இந்திய தேசிய இராணுவத்தின் ஆயுதம் தாங்கிய போருக்காக மட்டுமல்லாமல், சோஷலிசக் கட்டமைப்புடன் மதசார்பற்ற உள்ளுணர்வை உயர்த்திப் பிடித்த அவருடைய ஒன்றுபட்ட இந்தியா குறித்த கருத்தோட்டத்திற்காகவும் இந்திய மக்கள் மாவீரர் நேதாஜி அவர்களை நெஞ்சில் நிறுத்தி ஞாபகம் கொள்ள வேண்டும். இறுதியாக அதனுடன்கூட இந்தியத் திருமகன் நேதாஜியை, எமிலிக்காக அவர் கொண்டிருந்த நித்தியப் பேரன்பிற்காகவும்கூட நாம் அவரை என்றும் நினைவில் நிறுத்துவோம். அத்தகைய பேரன்பின் உருவகமான சுபாஷ் சந்திர போஸ் எமிலிக்கு ஒரு கடிதத்தில் எழுதினார், “நான் காதலித்த முதல் பெண் நீதான். நீயே இறுதியாக இருக்கவும் கடவுள் எனக்கு அருளட்டும்! என்னுடைய பேரன்பிற்கு உரியவளே, சென்று வருகிறேன்!”               

--நன்றி : நியூஏஜ் (ஜன.22 --28)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Thursday 12 January 2023

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 77 -- ஆர் கிஸான், சுயமரியாதை இயக்கத்திலிருந்து கம்யூனிசத்திற்கு

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 77


      ஆர் கிஸான் – சுய மரியாதை இயக்கத்திலிருந்து  கம்யூனிஸத்திற்கு

--நன்றி : நியூஏஜ் (டிசம்பர் 18 –24) 

--அனில் ரஜீம்வாலே

          தமிழ்நாட்டிலிருந்து ஓர் அசாதாரணமான தலைவரின் வரலாறு இது. ஆர் கிசானின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன் அப்போதைய மெட்ராஸ் ராஜதானி பகுதிகளுக்கு இராசபுதானம் (இன்றைய ராஜஸ்தான்) பகுதியிலிருந்து வந்தவர்கள். தென்னகத்திற்குள் முகலாயர்கள் ஆக்கிரமிப்புத் தொடங்கிய காலத்தில் அவர்கள் இடம் பெயர்ந்து வந்திருக்கக் கூடும். கிசானின் தந்தை பெயர் எம் ரத்தன் சிங். கிசான் தமிழ்நாட்டின் வண்டிப் புதூர் அருகே 1910ல் பிறந்தவர். 1926ல் அவர்கள் குடும்பம் கோயம்புத்தூர் பீலமேடுக்கு மாறியது.

    கிசான் 1929ல் எஸ்எஸ்எல்சி பள்ளி இறுதித் தேர்வு பெற்றார். இதன் மத்தியில் அவரது தந்தை மறைந்தார். எனவே அதன் பிறகு மேலே எந்தத் தேர்வும் எழுதவில்லை. கூட்டுறவு வங்கிப் பணியில் சில பயிற்சிகள் பெற்றார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கூட்டுறவு வங்கிச் சேவையில் அவர் பணியாற்றினார்.

      1930ல் நாட்டில் வெடித்த ஒத்துழையாமை இயக்கத்தில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு சத்தியாகிரகத்தின்போது மரியாதைக்குரிய ஒரு வழக்கறிஞர், பாலாஜி என்பவர் போலீஸ் அடித்ததில் படுகாயம் அடைந்ததாக அவர் கேள்விப்பட்டார். அந்தச் செய்தி அவர் மனதில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

சுயமரியாதை இயக்கத்தில்

     1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்டது எங்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நிகழ்வு எந்த அளவு ஈவெ ராமசாமி நாயக்கரிடம் (ஈவெரா) பதிந்தது எனில், ‘பகத்சிங்போல தான் தூக்கிலிடப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்’ என்று கூறியதுடன், ஒவ்வொரு மாகாணத்திலும் ஒன்று அல்லது இரண்டு ‘பகத்சிங்கள்’ உருவாக வேண்டும் என்றும் கூறினார்.

      அந்நேரத்தில் சுயமரியாதை இயக்கம், தென்னிந்தியாவில் சாதி மற்றும் கலாச்சாரப் பாகுபாடு இல்லாத சமுதாயத்தைச் சாதிக்கும் நோக்கத்துடன், பரவலாகத் தொடங்கப்பட்டது. அடிப்படையில் அது பிராமணிய எதிர்ப்பு சமூகச் சீர்திருத்த இயக்கம். பிராமணிய சாதிப் படிநிலைகளின் பாகுபாடுகளுடன் அமைந்த சமூகத்தில், பின்தங்கிய மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளான சாதியினர் ‘சுய மரியாதை’யைச் சாதிப்பதை அது ஊக்கப்படுத்தியது. 1925ல் எஸ் இராமநாதன் நிறுவிய சுயமரியாதை இயக்கத்திற்குத் தலைமை ஏற்கும்படி அவர் ஈவெ ராமசாமி (பெரியார்) அவர்களை அழைத்தார். அவரது கூற்றின்படி, மேல் சாதிகள் மற்றும் கீழ் சாதிகள் இடையே பாகுபாட்டை ஒழித்தால்தான்  ‘சுய மரியாதை’ சாதிக்கப்பட முடியும். ‘சுயமரியாதை’ ஆங்கிலத்தில் ‘செல்ஃப் ரெஸ்பெக்ட்’.

      ‘சுய மரியாதை வாலிபர் சங்கம்’ என்ற இளைஞர் அமைப்பை 1932ல் கோயம்புத்தூரில்

கிசான் தொடங்கினார். அந்தச் சங்கம்தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக மே தினத்தைக் கொண்டாடியது. அப்பகுதியில் ப ஜீவானந்தம் (ஜீவா) கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி எழுப்பி வந்தார். 1931ல் விருதுநகரில் நடைபெற்ற சுய மரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாநாட்டின்போது கிசான் ஜீவாவைச் சந்தித்தார். அதிலிருந்து அவர்கள் நெருங்கிய தோழர்கள் ஆனார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜீவா ஈரோட்டில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கிசானுடன் தங்கி இருப்பது வழக்கம்.

     இந்த மனிதர்கள் ‘சுய மரியாதைக்காரர்கள்’ என அறியப்படலானார்கள். அவர்களுக்கு

தங்கள் சொந்த கருத்து வேறுபாடுகள் காந்திஜியுடன் இருந்தன. முதலில் சுயமரியாதை இயக்கம், சமூகப் பிரச்சனைகளின் மீது பிரச்சாரங்களை மட்டுமே நடத்தி வந்தது.1930க்குப் பின் பெரியாரின் ‘குடியரசு’ இதழில் சோஷலிசம் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்தும் (சிந்தனை சிற்பி) ம சிங்காரவேலர் கட்டுரைகள் பல எழுதினார். இக்கட்டுரைகளின் பெரும் செல்வாக்கிற்கு கிசான் உட்பட சுயமரியாதைக்காரர்கள் ஆட்பட்டார்கள். 

     சோவியத் சோஷலிச குடியரசு நாடுகளுக்கு (யூஎஸ்எஸ்ஆர்) பயணம் மேற்கொள்ள ஈவெரா, எஸ்.இராமநாதன் மற்றும் ராமுவுக்குச் சக்லத்வாலா உதவியுடன் சிங்காரவேலு கடவுச் சீட்டுகளை எப்படியோ பெற்றார். அங்குப் பயணமான அவர்கள் இங்கிலாந்து, ஃபிரான்சு மற்றும் பிற நாடுகளுக்கும் சென்றனர்.

     ஈவெராவுடன் இராமநாதனுக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் வளர, பின்னர் அவர் தனியாக ‘தி ரேஷனலிஸ்ட்’ (பகுத்தறிவாளர்) என்ற இதழைத் தொடங்கினார். சோவியத்

யூனியனைப் பார்த்த பின் ஈவெரா அந்நாட்டால் மிகவும் கவர்ந்து ஈர்க்கப்பட்டார். தனது பயணத்திலிருந்து திரும்பிய பின் அவர் ஈரோட்டில் சுயமரியாதை மாநாட்டினைக் கூட்டினார். அம்மாநாட்டிற்கு ம சிங்காரவேலர் தலைமையேற்றார். ஒரு சோஷலிசத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கிசானும் மற்றவர்களும் சோஷலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் ஈவெரா இந்தப் பாதையை ஏற்கத் தயாராக இல்லை. 1935ல் அவர் சோஷலிசப் போக்கிலிருந்து தன்னைத் தனித்து விலக்கிக் கொண்டார்.

சுயமரியாதை சோஷலிசக் கட்சி

      இக்கால கட்டத் தருணத்தில், கோயம்புத்தூர் மற்றும் பிற இடங்களிலிருந்து வேறு பலர்

கம்யூனிசத்தின்பால் ஆர்வம் கொண்டனர். அவர்கள் தனியாக ‘சோஷலிசச் சுயமரியாதை’ மாநாடு நடத்தி, ஜீவாவைச் செயலாளராகக் கொண்டு ‘சுயமரியாதை சோஷலிசக் கட்சி’யை நிறுவினர். ‘சமாதானம்’ என்ற இதழையும் வெளியிடத் தொடங்கினார்கள்.

    ‘சுயமரியாதை சோஷலிசக் கட்சி’யின் முதலாவது மாநாடு 1935 –36ல் திருச்சியில் நடத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் புகழ்பெற்ற தலைவர் எஸ் ஏ டாங்கே அம்மாநாட்டைத் தொடங்கி வைத்தார். டாங்கே அவரது உரையில் கீழ்க்கண்ட அம்சங்களை வலியுறுத்தினார்:

1.    கட்சி தனது செயல்பாடுகளைத் தமிழ்நாட்டிற்குள் மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது.

2. அடிமைத்தனத்தின் கீழ்ச் சோஷலிசம் சாத்தியம் இல்லை; எனவே, முதலில் தேச விடுதலைக்கான போராட்டத்தை நடத்த வேண்டும்

3. உழைப்பாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் முதலானவர்களைப் போன்ற ஒடுக்கப்பட்டவர்களை அமைப்பில் திரட்ட வேண்டும்.

4.  இந்திய தேசியக் காங்கிரஸில் சேருங்கள், ஏனெனில் அது விடுதலைக்காகப் போராடும் ஓர் அனைத்திந்திய அமைப்பு

5.    காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை (CSP) அமைத்து அதற்குள் பணியாற்றுங்கள்

காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (CSP)

    அதன்படியே, கிசானும் மற்ற அனைவரும் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (CSP)யில் சேர்ந்தனர். CSP-ன் முதலாவது மாநாடு 1936ல் சேலத்தில் நடைபெற்றது. தின்கர் மேத்தா தலைமை வகித்த அம்மாநாட்டில் மற்றவர்களுடன் கிசானும் தீவிரமாகப் பணியாற்றினார். எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பதென மாநாடு முடிவெடுத்தது. 1937 ஈரோட்டில் கிசானும் ஜீவாவும் காங்கிரசுக்காகப் பணியாற்றினர். தேர்தலுக்குப் பிறகு மதுரையில் ஒரு காங்கிரஸ் மாநாடு மற்றும், அதே நேரத்தில் CSP மாநாடும் நடைபெற்றது. ஆந்திராவிலிருந்து மாதுரி அன்னபூர்ணையா மற்றும் கேரளாவிலிருந்து கே தாமோதரன் கலந்து கொண்டனர். 1937 மாநாட்டிற்குப் பின் கிசான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர கட்சி ஊழியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

ஊட்டியில்

        இதன் மத்தியில் 1935ல் கிசான் வேலை ஊட்டிக்கு மாற்றப்பட்டது. அங்கு அவர் இளைஞர் அமைப்புகளை அமைத்துப் பிரச்சாரங்களை நடத்தினார். 1935 நவம்பர் 7ம் நாள் ஊட்டியில் ரஷ்ய புரட்சி தினம், முனிசுவாமி பிள்ளை தலைமையில், கொண்டாடப்பட்டது. இச்செயல்பாடுகள் காரணமாக அவரை மீண்டும் ஈரோட்டுக்கு மாற்றினர், 1937 வரை பணி செய்தார். பின்னர்தான் மேலே குறிப்பிட்ட மாநாட்டிற்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்த கிசான் கட்சி முழுநேர ஊழியர் ஆனார்.

திருமணம்

      1933ல் நடைபெற்ற கிசானின் திருமணம் ஒரு முன்மாதிரியான (ஐடியல், ‘ஆதர்ஷ விவாகம்’) எடுத்துக்காட்டான திருமணம். சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற அது ஒரு சாதிக் கலப்பு திருமணம். அந்தத் திருமணத்திற்காக ஈரோட்டில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் அமைச்சரவை மற்றும் தொழிலாளர்களின் இயக்கம்

    மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்ட பிறகு, பஞ்சாலைத் தொழிலாளர்களின் முதலாவது வேலை நிறுத்தம் லெட்சுமி மில்ஸ் ஆலையில் நடைபெற்றது. அந்நாட்களில் சோஷலிசத் தொழிலாளர்கள் சங்கம் மிகவும் பலம் பொருந்தியது. 1920களில் இருந்து என் எஸ் இராமசுவாமி அய்யங்கார் என்ற காங்கிரஸ்காரர் முன்னணிப் புள்ளியாக இருந்தார். பின்னர் CSP உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட்களும் தொழிலாளர் இயக்கத்தில் வலிமை உடையவர் ஆனார்கள். ஆர் கிசானின் கூற்றுப்படி, கோயம்புத்தூர் தொழிலாளர்கள் ஸ்ரீனிவாச அய்யங்கார் மற்றும் சி பாசுதேவ் செல்வாக்கின் கீழ் இருந்தார்கள். 1937 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் என்ஜி ராமசுவாமி நாயுடு, நீதிக் கட்சி வேட்பாளரான பாசுதேவை தோற்கடித்தார். இது, கோயம்புத்தூர் மற்றும் பிற இடங்களின் தொழிலாளர் இயக்கத்திற்கு ஊக்கமளித்தது. புதிய சூழ்நிலையின் பலன்களை ஒன்று திரட்ட கிசான் கடுமையாக உழைத்தார்.

     பின்னர் அது தொடங்கி பாசுதேவ் சிறுபான்மையாக வீழ்ந்தார், ஆனாலும் ராஜினாமா செய்ய மறுத்தார். தொழிற்சங்கத்தின் நடவடிக்கை குறிப்பேட்டை (மினிட்ஸ்) ஒப்படைக்கவும் அவர் மறுத்தார். தொழிலாளர்கள் இராமநாதனிடம் புகார் செய்தனர்; அவர்களிடம் அவர் புதிய சங்கத்தை அமைக்க யோசனை கூறினார். கோயம்புத்தூர் சோஷலிஸ்ட் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் 1936ல் புதிய சங்கம் அமைக்கப்பட்டது. எஸ் இராமநாதன் அதன் தலைவராக்கப்பட்டார்.

    காங்கிரஸ் மந்திரிசபை அமைக்கப்பட்ட உடன் பாப்பநாயக்கன் பாளையம், லெட்சுமி மில்ஸில், புகுத்தப்பட்ட புதிய இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர்களின் இரட்டிக்கப்பட்ட வேலைச் சுமையின் விளைவாய் வேலைநிறுத்தம் வெடித்தது பற்றி மேலே குறிப்பிட்டோம். சங்கத்தின் தலைமையில் போராடிய தொழிலாளர்கள், தங்களை நூற்பு ஃப்ரேம்களின் ஒரு பக்கத்தில் மட்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்கள்.

       1937 செப்டம்பர் 21ல் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்து வெளியேற, போராட்டம் மற்ற ஆலைகளுக்கும் பரவியது. தொழிலாளர்களுக்கு உதவிட ஜீவா மற்றும் எஸ்வி காட்டே மெட்ராஸிலிருந்து வந்தனர். (அந்தப் போராட்டத்தில் ஜீவா இயற்றி கோவை ராம்தாஸ் பாடிய வரலாற்றுப் புகழ் மிக்கப் பாடல்தான் “காலுக்குச் செருப்புமில்லை /கால் வயிற்றுக் கூழுமில்லை / பாழுக் குழைத்தோமடா தோழனே”)

    வேலைநிறுத்தம் 18 நாட்கள் நீடித்தது. இரவு பகலாகச் சைக்கிள் மிதித்துச் சென்று கிசான் குழு கூட்டங்கள் அமைத்து நடத்திட உதவினார். மூன்று முறை அவர் 90 மைல்களுக்கு மேல் சைக்கிளில் பயணம் செய்தார். வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கு வெற்றியுடன் முடிந்தது. லெட்சுமி மில்ஸ் நிர்வாகம் சரணடைந்து சோஷலிசத் தொழிலாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்தது.

    அடுத்து விரைவில் கோயம்புத்தூர் பஞ்சாலைகளில் முழுமையான ஒரு பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. எஸ்வி காட்டே மற்றும் ஐயங்கார் கோயம்புத்தூர் வந்தனர், பொது வேலைநிறுத்தத்திற்காகத் தொழிலாளர்களைத் திரட்டினர்.

    தொழிலாளர்கள் ரஷ்ய புரட்சி தினம் அனுசரித்தனர், தங்கள் ஊர்வலங்களில் அரிவாள் சுத்தியலுடன் செங்கொடிகளை ஏந்திபடிச் சென்றனர்.

பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பிளவு

    துரதிருஷ்டவசமாக, வேலைநிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டது. விரிவான வகையில் மற்றொரு இயக்கம் நடைப்பெற்றது. 1938ல் அது மேலும் பரவியது. 1937 மெட்ராஸ் சட்டமன்றக் குழு தேர்தல்களில் தொழிலாளர்களின் சங்கம் வெங்கடேச ராவ் என்ற ஒரு தொழிலாளியைக் காங்கிரஸ் வேட்பாளராகத் தொழிலாளர் இடத்திலிருந்து போட்டியிட விரும்பினார்கள். தேர்தல்களில் தீவிரமாகப் பணியாற்றினார், கிசான். ஆனால் காங்கிரஸ் தலைவர்களே இதை எதிர்த்தனர், அவர்கள் எம்ஜி ராமசுவாமியை நிறுத்த விரும்பினார்கள். தனது குழந்தைப் பருவ நண்பரான அவர் போட்டியிடுவதைக் கிசான் ஆதரித்தார். ராமசுவாமி ஜீவானந்தத்திற்கும் உதவி செய்திருக்கிறார்.

       தொழிற்சங்க அலுவலகர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றவர்கள். எனவே ராமசுவாமியைச் சங்கத்தின் துணைத் தலைவராக உடன் சேர்த்துக் கொண்டனர். தனது தொழிற்சங்கப் பணியில் விஸ்வாசமாக இருந்த அவரை வேலைநிறுத்தத்தின்போது அதிகாரிகள் அடித்துத் தாக்கியும் இருக்கிறார்கள்.  ஆனால் வேலைநிறுத்ததின்போதே ராமசுவாமி நகர காங்கிரஸ் கமிட்டி செல்வாக்கின்கீழ்த் தொழிலாளர்களை அவர்களின் வேலைநிறுத்தைக் கைவிட்டுப் பணியில் சேருமாறு வற்புறுத்தினார். தொழிலாளர்கள் அவரை எதிர்த்தனர், அந்த விஷயத்தைக் காங்கிரஸ் குழுவிடம் புகார் செய்தனர். கமிட்டியும் அவரைச் சங்கத்தின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டதுடன் தொழிலாளர்கள் மத்தியில் மற்றொரு சங்கத்தை அமைக்குமாறு கூறியது. அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் சங்கம் செயல்பாட்டுக்கு வந்தது. ராமசுவாமி மற்றும் கிசான் மற்றும் ஜீவா தொழிற்சங்க செயல்பாடுகளைப் பொருத்தவரையில் பிரிந்து விலகிச் சென்றனர் என்றபோதிலும் தனிப்பட்ட முறையில் தங்கள் நட்புறவைத் தொடர்ந்தனர்.

    இரண்டு சங்கங்கள் அமைக்கப்பட்டதில், சிஎஸ்பி மற்றும் சிபிஐ கட்சிகளிடையேயான போட்டியும் ஒரு காரணம். என் சி ஷேகர், ஜீவா, இராமமூர்த்தி முதலானர்வர்கள் உதவியுட்ன் கிசான் இரண்டு சங்கங்களையும் ஒன்றிணைக்கத் தன்னால் இயன்ற ஆகச் சிறந்த முறையில் முயன்றார், ஆனால் அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

இரண்டாம் உலகப் போரின்போது

     1939 செப்டம்பரில் வெடித்த இரண்டாம் உலகப்போர்  நாட்டில் ஒரு புதிய சூழ்லைக் கொண்டு வந்தது. போரின் தொடக்கக் கட்டங்களில் சிபிஐ போர் எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தியது. சிபிஐ அதனை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் எனக் குணாம்சப்படுத்தியது. 1940 டிசம்பர் 19ல் போர் எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக சென்னையில் பத்து தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர் கிசான் 1941 மார்ச்சில் கைதானார். போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் மண்டை உடைய, காயம் குணமாகும் வரை வேலூர் சிறையில், போகராஜூ பட்டாபி சீத்தாராமையா மற்றும் பிறருடன் வைத்திருக்கப்பட்டார்.

      பின்னர் கிசான் கோயம்புத்தூர் சதி வழக்கில் மாட்டிவிடப்பட்டு, இரண்டாண்டு கடுங் காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சிறை வாசத்தின்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காக தண்டனை காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அவர் அலிபுரம் மற்றும் பெல்லாரி சிறைகளிலும் அடைக்கப்பட்டார்.

       போரைக் குறித்த கட்சியின் கொள்கை வழி (பார்ட்டி லைன்) ‘மக்கள் போர்’ என்று மாறியது. [முதலில் போரின் குணாம்சம் ஏகாதிபத்தியம் தொடுத்த போர் என்பதிலிருந்து ஜெர்மன் பாசிசத்தை முறியடிப்பதற்கான ‘மக்களின் போர்’ எனப் போரின் குணாம்சம் மாறியது. எனவே கட்சி, சர்வதேசிய நிலைக்கு ஏற்ப போரை ஆதரிக்கத் தொடங்கியது –கூடுதல் இணைப்பு] கிசான் மற்றும் சிலர் விடுதலையானார்கள். 1942ல் பங்கஜா மில்களில் சில சலசலப்பு தொந்தரவுகள். அது போலீஸ் துப்பாக்கிச் சூடு வரை சென்றுவிட அதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நிவாரணம் கோரியும் கிசானும் மற்றவர்களும் துண்டறிக்கைகளை வெளியிட்டனர். சுற்றறிக்கை கிசானால் எழுதப்பட்டது. இந்தக் ‘குற்றத்திற்காக’ அவருடன் ரமணி மற்றும் அச்சக உரிமையாளர் லெட்சுமணனும் குற்றவிசாரணையை எதிர்கொண்டனர். பத்து மாதங்கள் சிறை தண்டனை. ஆனால் அந்தத் தண்டனை மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டது.

1945 –49 காலகட்டத்தின்போது

    இக்காலத்தின்போது கிசான் மெட்ராஸில் இருந்தார், எண்ணற்ற செயல்பாடுகளில் பங்கேற்றார். இராயல் இந்தியக் கப்பற்படை (RIN) எழுச்சிக்கு ஆதரவான ஆர்பாட்டங்கள், பேரணிகளில் கலந்து கொண்டார். அவர்களின் பிற கோரிக்கைகளுடன் கப்பற்படை எழுச்சியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கையும் ஒன்று.

    அனைவரும் நன்றாக அறிந்ததுபோல, 1948ல் ‘பிடிஆர் பாதை’ சிபிஐ கட்சியைப் பிடித்து ஆட்டியது. கிசான் பிடிஆர் பாதையை ஆதரிக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் அவர் சிறையில் அடைபட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அவர் சேலம் சிறையில் அடைக்கப் பட்டார்.  பிடிஆர் பாதை சிறையில் பல்வேறு சாகச செயல்பாடுகளுக்கு அடியெடுத்து வைக்க சிறையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இட்டுச் சென்றது. இதனால் தோழர்கள் கொல்லப்பட்டனர். சேலம் சிறையில் மட்டும் 22 தோழர்களும் கடலூர் முகாமில் மூன்று தோழர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிசானும் கடுமையாகத் தாக்கப்பட்டார், மோசமான எலும்பு முறிவுகளில் எலும்புகள் உடைக்கப்பட்டன. சிறையிலும் அதற்கு வெளியிலும்கூட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் தங்கி இருக்க வேண்டியதாயிற்று.

    அதன் பிறகும் தொடர்ந்து தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏராளமான பங்களிப்புகளைக் கிசான் வழங்கினார்.

     1990ல் அவர் இயற்கையெய்தினார். இயக்கத்திற்கு உழைத்த பன்னூறு தோழர்களில் கிசான் மிக அசாதாரணமான தொண்டரும் தோழரும் ஆவார்.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்