Friday 28 May 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை33 வித்யா முன்ஷி : புரட்சிகர இதழியலின் முன்னோடி

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -33

வித்யா முன்ஷி : புரட்சிகர இதழியலின் முன்னோடி 

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (பிப்.21 --27)

வித்யா கனுகா, பின்னர் வித்யா முன்ஷியானவர், குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு வழக்கறிஞர் தந்தைக்கும் சமூகச் செயற்பாட்டாளரான தாய்க்கும் பம்பாயில் 1919 டிசம்பர் 5ம் நாள் பிறந்தார். கல்வியில் சிறந்து பள்ளி இறுதித் தேர்வைப் பள்ளியின் முதல் மாணவியாகத் தேறி பம்பாய் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் ஐ.எஸ்சி (தற்போதைய +2போல அல்லது பியூசி போல) பாடப் பிரிவில் சேர்ந்தார். மருத்துவம் பயில்வதற்காகத் தனியே இங்கிலாந்து செல்வதென 1938ல் முடிவு செய்தார். அவரது லண்டன் பயணத்துக்குக் குடும்பத்தின் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. குடும்பத்தினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள அவருடைய தாய்வழிப் பாட்டியே அவருக்குத் துணையாக உறுதியாக வாதாடினார்: “அவள் ஏன் செல்லக் கூடாது? அவளுடைய தந்தையிடம் பணம் இருக்கிறது, அவளிடம் தைரியம் இருக்கிறது”. அக்காலத்தில் லண்டன் செல்வதற்கு இருந்த சமூக மற்றும் குடும்ப தடைகளை எதிர்த்துப் போராட வித்யாவுக்கு ஏராளமான துணிவு தேவைப்பட்டது. 

இங்கிலாந்தில் : கம்யூனிஸ்ட் ஆனார்

வித்யாவுக்கு அவருடைய மாமா மூலம் அறிமுகம் ஆன அரசியல், இங்கிலாந்தில்தான் மலர்ந்தது. புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞரான தந்தை அவரிடம் புத்தகக் காதலை விதைக்க, பல நூல்களைத் தேடிப் படித்தார். 1938ல் இங்கிலாந்து சென்றடைந்தபோது வித்யா மருத்துவ முன் தேர்வுக்கான தயாரிப்புகளை முடித்திருந்தார்; அப்போது இரண்டாவது உலக யுத்தம் வெடித்தது. இந்தியா திரும்ப முடியாத நிலையில் துர்ஹாம், நியூகேசலில் இருந்த கிங்க்ஸ் (மன்னர்) கல்லூரியில் சேர்ந்தார். அங்கேதான் கம்யூனிஸ்ட் தத்துவம் மற்றும் இயக்கத்துடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு படிப்பைக் கைவிட்டு இங்கிலாந்திலேயே முழுநேரச் செயற்பாட்டாளர் ஆனார். ‘இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்த இந்திய மாணவச் சமூகங்களின் சம்மேளனம்’ என்ற FEDIND அமைப்பின் செயலாளரானார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) தொடர்பு ஏற்பட விரைவில் கட்சியின் உறுப்பினரானார். அங்கு இந்தியக் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தேசியவாதிகளுடனும் அவருக்கிருந்த தீவிரமான தொடர்பு அவரது வாழ்வின் எதிர்காலப் போக்கை வடிவமைத்தது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு இயக்க நிகழ்வுகளில், குறிப்பாகப் பாசிசத்திற்கு எதிரான இயக்கங்களில், அவர் பங்கேற்றார்.  

போஸ்டர்களின் சக்தி

இங்கிலாந்தில் இருந்தபோது 1943லேயே போஸ்டர்களின் உலகம் மற்றும் அதன் சக்தி வித்யாவுக்கு அறிமுகமானது. ஷெப்பீல்டு என்னும் இடத்தில் அவர் தனது நண்பர்களுடன் இணைந்து முதலாவது போஸ்டர் கண்காட்சியை அரங்கேற்றினார். வங்காள வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பேரதிர்ச்சித் துயர்களைக் கண்காட்சியில் விரிவாக எடுத்துக் காட்டியிருந்தனர். கண்காட்சி மூலம் திரட்டப்பட்ட தொகை வறட்சி பாதித்த வங்க மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதனை மீண்டும் நினைவுபடுத்தி வித்யா கூறினார்: “அது முதலாகப் பெண்கள், இளைஞர் உரிமைகள், தொழிலாளர் பணிநிறுத்த நடவடிக்கைகளை எதிர்த்தல், சமூகத்தினரிடையே அமைதியை வலியுறுத்தல் போன்ற பல பிரச்சனைகள் பற்றி எண்ணற்ற போஸ்டர்களை வரைந்தேன். கண்களால் காணக் கூடிய காட்சி ஊடகத்தின் சக்தியை – போஸ்டர்களின் சக்தியை—குறைத்து மதிப்பிட முடியாது.” அத்தகைய பல அபூர்வமான மதிப்புமிக்க போஸ்டர்களைக் கால வெள்ளத்தில் இழந்தது நம் துரதிருஷ்டமே. 

அத்தகைய பெண்மணியை 2014 மார்ச் 1தேதி நடைபெற்ற ‘போஸ்டர் பெண்மணி என்ற கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அழைத்தது மிகப் பொருத்தமே; அதில் வித்யா முன்ஷி  சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி கலந்து கொண்டார். அவர் பேசுவதைக் கேட்கப் பல இளம் பெண்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஒருக்கால் உலகின் எந்தப் பகுதிலேயும், அத்தகைய ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது அதுதான் முதன் முறை. சுயம், சுபன், சீகல் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் நடத்திய அக்கண்காட்சி, 157 போஸ்டர்களுடன் கல்கத்தாவில் நடத்தப்பட்ட தனித்துவமான கண்காட்சி. குழு சார்பு இல்லாத அவருடைய அணுகுமுறை பலதரப்பட்ட கருத்துடையவர்களையும் அவர்பால் அன்புடையவராக்கியது. 

உலக இளைஞர் அமைப்பு நிறுவுதல்

லண்டனில் 1945 அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற ‘ஜனநாயக இளைஞர்களின் உலக சம்மேளனம்’ (WFDY) அமைப்பு மாநாட்டில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக அவர் பங்கேற்றார். அதில் 67 நாடுகளிலிருந்து சார்பாளர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் வித்யா கனுகா, கேடயூன் பூம்லா மற்றும் ஏ கே சாதர் மூவரும் சார்பாளர்களாகவும் எம் ரஸ்சித் பார்வையாளராகவும், FEDIND அமைப்பின் சார்பில் கலந்து கொண்டனர். உலகில் நிலையாக நீள நீடிக்கும் அமைதியைக் கட்டுவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு என்ற இளைஞர் மாநாட்டின் துணைக்குழு ஒன்றின் செயலாளராக வித்யா கனுகா செயல்பட்டார்.

1946, ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 5வரை பாரீஸில் நடந்த WFDY சம்மேளனத்தின் முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒரு காலனிய குழு (பீரோ) அமைக்கப்பட்டது. வித்யாவிடம் அக்குழுவின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஒரு இயக்கம் நடத்துவது என்றும் அதன் முன்னுரிமைப் பணியாக இந்தியாவுக்கு உணவு அனுப்புவது எனவும் குழு முடிவு செய்தது.

1945 பாரீஸில் பெண்களின் சர்வதேச ஜனநாயக சம்மேளனம் (WIDF) அமைப்பு நிறுவப்பட்டபோது அதன் அமைப்பு மாநாட்டில் மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி (MARS) என்ற பெண்கள் அமைப்பின் பொதுச் செயலாளரான இளா ரெய்டுடன் (Ela Reid) வித்யா கலந்து கொண்டார். 1945 நவம்பர் 26 முதல் டிசம்பர் 1தேதி வரை வெலோட்ரோம் டி‘ஹிவர் (குளிர்கால ஸ்டேடியம்) என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான துவக்க மாநாட்டில் இருவரும் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டனர்.  

உலக இளைஞர் சம்மேளனத்தின் பிரதிநிதியாக 1948ல் இந்தியா திரும்பிய வித்யா, அந்த ஆண்டு பிப்ரவரியில் கல்கத்தாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய இளைஞர்கள் மாநாட்டிற்கான தயாரிப்புக் குழுவில்  பணியாற்றினார். 

பெண்கள் இயக்கத்திலும் இதழியலிலும்

1954 கல்கத்தாவில் நடைபெற்ற ‘இந்திய மாதர் தேசிய சம்மேளன’த்தின் (NFIW) முதலாவது மாநாட்டில் வித்யா முன்ஷி கலந்து கொண்டார். பத்திரிக்கை செய்தித் தொடர்பு குழுவில் அவர் இருந்தார். அவ்வகையில் மாதர் சம்மேளனத்தை நிறுவிய தலைவர்களில் அவரும் ஒருவர். 

இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் அவர், பிற்காலத்தில் புகழ்பெற்ற அறிவாளியும், பத்திரிக்கையாளரும் கம்யூனிஸ்ட்டுமான, புவியியலாளர் சுனில் முன்ஷியைத் திருமணம் செய்து கொண்டார். சுனில் அதற்கு முன்பே பம்பாயிலிருந்து வெளியான மாணவர் பெருமன்றத்தின் புகழ்பெற்ற ‘தி ஸ்டூடெண்ட்’ பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். அந்த ‘மாணவன்’ பத்திரிக்கையில் பலமுறை வித்யாவும்கூட கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தப் பத்திரிக்கைதான் வித்யாவை ஒரு இதழியலாளராக வளர்த்தது. பின்னர் கல்கத்தா சென்ற அவர் புகழ்பெற்ற ‘ப்ளிட்ஸ்’ (Blitz) பத்திரிக்கையில் செய்தியாளராகப் பணியாற்றினார்.  

(‘செல்ல வேண்டிய பாதை’ எனப் பொருள்படக்கூடிய) ‘ச்சலர் பதே’ (‘Chalar Pathe’) என்ற  வங்கமொழி பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்க கேட்டுக் கொள்ளப்பட்டபோது அம்மொழியை அவர் நன்றாக அறிந்திருக்கவில்லை. வங்க மொழியை விரைவாகவும் கடுமையாக உழைத்தும் அவர் கற்ற வேண்டி வந்தது. 

பம்பாயின் புகழ்பெற்ற ‘ப்ளிட்ஸ்’ வார இதழின் கல்கத்தா செய்தியாளராக 1952 முதல் 1962 வரை அவர் பணியாற்றினார். அவர்தான் இந்தியாவின் முதலாவது பெண் இதழியலாளர் என்றுகூட அவரை அழைக்க முடியும். 

ப்ளிட்ஸ் இதழில் பணியாற்றியபோது பரபரப்பான பல (‘scoops’) செய்திகளைத் தோண்டித் துருவி வழங்கிய பெருமைக்குரியவர். ஒரு செய்தி, இரண்டு கனடா நாட்டு பைலட்கள் ஹாங்காங்கிலிருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு விமானத்தில் சுந்தரவனத்தில் வீச இருந்தது; அதன் பிறகு அங்கிருந்து தங்கம் கல்கத்தாவிற்குக் கடத்தப்பட இருந்தது. மற்றொரு பரபரப்புச் செய்தி அசான்சோல் பகுதியின் சின்னகுரி சுரங்கப் பேரழிவு குறித்தது. நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் அதில் கொல்லப்பட்டனர். அந்தத் துயரநிகழ்வை ‘ஆங்கர்’ (கோபம்) என்ற பெயரில் உத்பால் தத் நாடகமாக எழுதினார்.

பத்திரிக்கைத் தொழிலுக்கே உரிய இடையூறுகள் அந்த நாட்களில் இல்லாமல் இல்லை என அவர் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஒருமுறை 1953 பேரணி ஒன்றில் பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியபோது, அவரும் அதில் பங்கேற்றிருந்தார். மூத்தப் பத்திரிக்கையாளர்களைக் காயப்படுத்தி அவர்களுடைய புகைப்படக் கருவிகளைப் போலீஸ் உடைத்து நொறுக்கினர். ட்ராம் போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து நடந்த இயக்கம் குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற அவரைப் போலீசார் இரக்கமற்று அடித்துத் துவைத்தனர். போலீஸ் கடுமையாக விசாரித்தபோதும் ப்ளிட்ஸ் பத்திரிக்கையைக் குற்றச்சாட்டுகளில் சேர்க்கும் அவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தார். போலீஸ் அராஜகம், தடியடி குறித்து விசாரிக்க நீதிபதி PB முகர்ஜி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

பெண்கள் பிரச்சனைகள் குறித்து ஆய்வு

1955 முதலாகவே பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்ட வித்யா முன்ஷி, வங்காள மொழியில் சரளமாகச் சிறப்புற்று பெண்கள் இயக்கம் பற்றி வங்க மொழியிலேயே பெரும்பகுதியும் எழுதினார். ‘மேற்கு வங்கத்தில் மாறிவரும் பெண்கள் அந்தஸ்து, 1970–2000’ என்ற அறிக்கைக்காக அரசியலில் பெண்களின் பங்கேற்பு என்ற ஓர் அத்தியாயத்தைத் தயாரித்தார். மேற்கு வங்கத்திற்கான அந்தஸ்து அறிக்கையைத் தொகுக்கும் யோசனையை மற்றவர்களோடு சேர்ந்து அவர் வெளியிட்டார். அவர் எழுதிய ‘அரசியல் பங்கேற்பு’ அத்தியாயம் பெண்கள் பங்களிப்பு குறித்த பல முக்கியமான தகவல்கள் நிறைந்தது. 

நல்லதொரு பார்வை நூலாக இன்றளவும் விளங்கும் அவர் எழுதிய மிக விரிவான நூல் – “மீள் பார்வையில் : போர்க்கால நினைவுகளும் பெண்கள் இயக்கம் குறித்த எண்ணங்களும்”. அவர், ’பச்சிம் பங்கா மகிளா சமிதி’ --மேற்கு வங்க பெண்கள் அமைப்பின்—தலைவராகவும். NFIW, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசியச் செயலாளராக 1986 முதல் 1989 ஆண்டுகளிலும் அதன் செயற்குழு உறுப்பினராகப் பல ஆண்டுகளும் பொறுப்பு வகித்தார். 

இயக்கம் குறித்த பரந்த பார்வை கொண்டிருந்தார். சமிதா சென்னுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்: “இன்று பெண்களின் பல பிரச்சனைகள் மீது காந்தியவாதிகள், மார்க்சியவாதிகள் மற்றும் பெண்ணியலாளர்கள் சேர்ந்து பணியாற்ற முடிந்துள்ளது. ஆம், நம்மால் முடியும், நாம் அனைவரும் சேர்ந்துதான் செயலாற்ற வேண்டும்.” 1994ல் ‘குடும்பத்தை ஜனநாயகப்படுத்தல் : அதன் உரிமைகளைப் பாதுகாத்து விரிவுபடுத்தல்’ என்ற தலைப்பில் ஒரு சிறு கையேடு, துண்டுப் பிரசுரத்தை எழுதினார். பெண்கள் இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு முக்கியமான பாட நூல் எனலாம். NFIW மாதர் சம்மேளனம் குறித்து ஒரு சுருக்கமான வரலாற்றை ஆவணப்படுத்தி தொகுத்து எழுதியுள்ளார்.  

10 அத்தியாயங்கள் ஒளிபரப்பான ஓர் இணையத் தொடர் வித்யா முன்ஷியை, ‘பெண்கள் கண்ணோட்டத்துடன் ஒரு பத்திரிக்கையாளர்’ எனச் சித்தரித்தது; 1959ல் நடைபெற்ற புகழ்பெற்ற நானாவதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு, “தீர்ப்பு: அரசு எதிர் நானாவதி” என்ற தலைப்பில் அத்தொடர் ஒளிபரப்பானது.

(அன்று மக்கள் மத்தியில் பரபரப்பாக இருந்த வழக்கு. ப்ளிட்ஸ் பத்திரிக்கை விசாரணை விபரங்களை விரிவாக வெளியிட்டது. கமாஸ் மானெக் ஷா நானாவதி என்ற இந்திய கப்பற்படை கமாண்டர் சில்வியாவை மணந்து சுகமாக வாழ்ந்து வந்தார். மாதக் கணக்கில் பணி நிமித்தம் கப்பலில் சென்றுவிட, அவருடைய பணக்கார நண்பன் அகூஜா சில்வியாவுடன் பழக ஒரு நாள் சில்வியா அகூஜாவிடம் தன்னை இழந்தார். தவறிழைத்ததைத் திரும்பவந்த கணவரிடம் கூறினார். ஒருநாள் மனைவி குழந்தையோடு தியேட்டர் சென்ற நானாவதி இடையே நண்பன் வீட்டுக்குச் சென்று அகூஜாவைப் பார்க்கிறான். கையில் இருந்த துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு சரண் அடைந்தார். வழக்கு திட்டமிட்ட கொலையா என விசாரித்தது.

9 ஜூரிகளில் (எண்பேராயம் போன்ற அமைப்பு) 8 பேர் திட்டமிட்ட கொலை அல்ல என்றது. ஆனாலும் உயர்நீதிமன்றம் அக்கருத்தை ஏற்கவில்லை. நானாவதிக்குத் தூக்கு தண்டனை விதித்தது, உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இறுதியில் அன்றைய கவர்னராக இருந்த நேருவின் தங்கை விஜயலெட்சுமி பண்டிட்டுக்குக் கருணை மனு அனுப்ப ப்ளிட்ஸ் பத்திரிக்கையும் மக்களைக் கேட்டுக் கொண்டது. எண்ணற்ற மக்கள் ஆதரவு தந்தனர். 25 பைசா மதிப்புள்ள ப்ளிட்ஸ் இதழ் இரண்டு ரூபாய்க்கு அப்போது விற்றது. 

விசாரணையில் நானாவதி தான் தற்கொலை செய்துகொள்ளவே நினைத்ததாகவும், இறந்த பிறகு மனைவி குழந்தைகள் வாழ்வு குறித்து கவலை எழ, அகூஜாவைச் சந்தித்து அவர்களை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டதாகவும், மறுத்துவிட்ட அகூஜாவின் கெட்ட நோக்கத்தை அறிந்த தான் சுட்டுவிட்டதாகவும் கூறினார்.

இதில் முக்கியமான இன்னொரு செய்தி, இந்த வழக்குதான் ஜூரிகள் (நீதிபதிகள் சட்ட அறிஞர்கள் அல்லாத சான்றோர் அவை) அமைப்பு செயல்பட்ட கடைசி வழக்கு. அதன் பிறகு ஜூரிகள் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டது.       –மொழிபெயர்ப்பாளர் இணையத்தில் தேடி இணைத்தது)  

பெண்ணியம் முதல் சர்வதேசப் பிரச்சனைகள் தலைப்பு வரை உள்ளிட்ட பெண்கள் குறித்த விரிந்துபட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பலபிரச்சனைகள் குறித்து நடைபெற்ற பல விவாதங்களில் அவர் பங்கேற்றார். 

மேற்கு வங்கக் கட்சிப் பத்திரிக்கையான ‘கலாந்தர்’ தினசரியைப் பதிப்பித்த போர்டின் (குழுவின்) தலைவராக வித்யா முன்ஷி பல ஆண்டுகள் செயல்பட்டார். மேலும் மாநில சமூக நல ஆலோசனை போர்டிற்குத் தலைமை வகித்தார்; பெண்களின் கமிஷன் அமைப்பின் முதல் ஒன்பது ஆண்டுகள், அதாவது 2000 ஆண்டுவரை தலைமை பொறுப்பேற்றார்.

பெண்கள் அமைப்பையும் இயக்கத்தையும் ஜனநாயகப்படுத்த, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும்,  கடுமையாகப் போராடினார். இந்திய மக்கள் நாடக மன்றம் IPTA உள்ளிட்ட கலாச்சார இயக்கங்களுக்காகவும் அவர் எழுதினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினராக வித்யா முன்ஷி நீண்ட ஆண்டுகள் இருந்தார்.      

  வாழ்வின் இறுதி ஆண்டுகளில் 2002ல் ஏற்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் அதனால்கூட அவரைப் பணியாற்றுவதிலிருந்து முடக்கிவிட முடியவில்லை. அந்த நிலையிலும் பலமணி நேரம் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து பத்திரிக்கைகள் மற்றும் ஆவணங்களைக் கவனமாகப் படித்தார். மொத்தமான கண்ணாடி அணிந்து உருப்பெருக்கி லென்ஸ் மூலம் பார்ப்பதும், எழுதுவதும், இடது கையால் குறிப்பெடுப்பதும் அவர் வழக்கம். இந்தியப் பெண்கள் இயக்க வரலாறு மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் குறித்த ஏராளமான குறிப்புகளை எழுதியுள்ளார். முக்கிய இயக்க நிகழ்வுகளை நினைவுகளிலிருந்து ஞாபகப்படுத்தி அவர் சொல்ல சொல்ல, அவருடைய கணவர் சுனில் முன்ஷி (சுருக்கெழுத்தில் அல்லாமல்) சாதாரண நீண்ட வரிகளில் சிரமப்பட்டு குறிப்பெடுப்பார்.

நீண்டகாலம் நோய்வாய்பட்டு, இறுதியில் 2014ம் ஆண்டு ஜூலை 8ம் நாள் அந்தப் புகழ்பெற்ற முதல் பெண் பத்திரிக்கையாளர் தமது 94ம் வயதில் இயற்கை எய்தினார்.

பத்திரிக்கைகளைக் கையில் எடுத்து ஒரு பெண் எழுத்தாளர் எழுத்துக்களைப் படிக்கும்போது தோழியர் வித்யா முன்ஷியை நினைவு கொள்வோம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Wednesday 26 May 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 32பாலாஜி ஹட்டர்: ஆர்எஸ்எஸ்--லிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -32

பாலாஜி ஹட்டர்: ஆர்எஸ்எஸ்--லிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு 

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (பிப்.14 --20)

பாலாஜி ஹட்டர் என்று புகழார்ந்து அறியப்படும் கோபால் முகுந்த் ஹட்டர், இந்திய மற்றும் சர்வதேசியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு அசாதாரணமான ஆளுமை; ஆர்எஸ்எஸ் அமைப்பை உதறி ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் கலந்து கொண்டவர், போர்க்களத்திலிருந்து இந்தியா திரும்பியதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர்.

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

கோபால் முகுந்த் ஹட்டர் 1902ல் தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்ட்லா என்னுமிடத்தில் பிறந்தார். அவருக்கு நான்கு வயது இருந்தபோது உதோஜி என்ற பிராமண விதவை ஒருவரால் தத்து எடுக்க வேண்டி நாக்பூர் அழைத்து வரப்பட்டார். நாக்பூர், மோரீஸ் கல்லூரியில் படித்துப் பெண்கள் மிஷன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1920ல் மாணவர் தலைவரானார். அவருடைய இளமைக்காலம், கல்வி குறித்து அதிகம் தெரியவில்லை. அவருடைய மனைவி மனோரமா.

ஹட்டர் தனது தொண்டுகளை இந்து மகாசபாவில் தொடங்கினார்; டாக்டர் ஹெக்டேவார் 1925ல் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்டிரிய சுயம் சேவக் சங்) அமைப்பைத் துவக்கியபோது, அவர் தேர்ந்தெடுத்த ஒரு சிலரில் ஹட்டரும் ஒருவர். இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் பிஎஸ் மூஜ்சே-வுக்கு நெருக்கமானவராக இருந்தார். விரைவில் ஹட்டர், ஆஸ்எஸ்எஸ் அமைப்பின் ‘சர் கார்யவாஹ்’ (பொதுச்செயலாளர்) பொறுப்புக்கு உயர்ந்தார். ஆனால், இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஆர்எஸ்எஸ்-ன் குறுகிய இந்து வகுப்புவாத, குழுவாத செக்டேரியன் போக்கு அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.  

விரைவிலேயே அவர் புரட்சிகர இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு, வங்கத்தின் ‘யுகாந்தர்’ புரட்சி இயக்கத்தோடு  தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். 1931ல் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டதால் ‘பாலகாட் சதி வழக்கில்’ கைதானார். 1935ல் விடுதலையானார். ‘சாவ்தான்’ (கவனம், எச்சரிக்கை எனப் பொருள்படும்) வாரப்பத்திரிக்கையைச் சிலரோடு சேர்ந்து அவர் நாக்பூரிலிருந்து வெளியிட்டார். தொடர்ந்து விரைவாக ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து விலகத் தொடங்கினார்.  

இதழியல் மற்றும் இராணுவ விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவராகத் தனது அறிவை விரிவாக்க இங்கிலாந்து பயணமானார். அதற்கு அவருடைய நண்பர்கள் உதவினர்; குறிப்பாகப் பவானி சங்கர் நியோகி ரூ 1000 தந்து உதவினார் – நல்ல செயல்களுக்காக எப்போதுமே நியோகி உதவுவது வழக்கம். 

இங்கிலாந்தில் 

முழு உலகிற்குமே கடுமையான விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பாலாஜி இங்கிலாந்து சென்றடைந்தார். இத்தாலியின் முசோலினிக்குப் பிறகு, 1933ல் ஜெர்மனியில் ஹிட்டலரும் நாஜிக்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர் --ஐரோப்பாவுக்கு, ஏன் உலகம் முழுவதற்கும் இருண்ட காலம் தொடங்கியது. 

இங்கிலாந்தில் இருந்தபோது பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்-15, ஹட்டரின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. அவருடைய கடிதப் போக்குவரத்துகளை இடைமறித்தது. பிரிட்டிஷ் இராணுவப் படைவீரர்களின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்து இந்தியா முழுவதும் இருக்கும் பிரிட்டிஷ் கன்டோன்மெண்ட் (குடியிருப்பு) பகுதிகள் மீது தாக்குதல் தொடுக்க ஹட்டர் திட்டமிட்டதாக அவர் குறித்து அறிக்கை தந்தது. 

நாடு திரும்பியதும் இந்திய விடுதலைக்காகப் போராட பாலாஜி ஹட்டர் முடிவு செய்தார்.

ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் (1937 – 39)

இன்று ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரிவதில்லை. 1936 பிரெஞ்ச் மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் பாபுலர் முன்னணிகள் ஆட்சிக்கு வந்தன. ஸ்பெயினில் அமைந்த குடியரசு (கட்சி) அரசில் முற்போக்கு, இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகள் இணைந்திருக்க பாசிஸ்ட்டுகளை ஒதுக்கி ஓரம் கட்டியது. ஆனால் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பாசிஸ்ட்டுகள் இராணுவ ஜெனரல் ஃபிரான்ஸிஸ்கோ ஃபிராங்கோ தலைமையில் ஆயுதக் கலகத்தில் ஈடுபட ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. ஃபிராங்கோவை ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாசிஸ்ட்கள் தீவிரமாக ஆதரித்தனர்; மொரோக்கன் மற்றும் ஸ்பானிய படைகளை மத்திய தரைக்கடல் வழியாக அவர்கள் ஏற்றுமதி செய்து அனுப்பினர். குடியரசு கட்சியின் அரசு 1939ல் தோற்கடிக்கப்பட்டு இராணுவச் சதி மூலம் ஃபிராங்கோ ஆட்சிக்கு வந்தார். 

(‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய்’ என வீழ்ந்துவிட்ட பெல்ஜியத்திற்குப் பாரதியார் வாழ்த்திசைத்தது போல) ஸ்பெயின் குடியரசுக்கு ஆதரவாக உலகமெங்கும், குறிப்பாக ஐரோப்பாவில் சக்திமிக்க தார்மிக ஆதரவு இயக்கங்கள் வெடித்தெழுந்தன. பல நாடுகளிலிருந்து தன்னார்வத் தொண்டர்கள் ஸ்பெயின் குடியரசு அரசைப் பாதுகாக்கப் போராட முன்வந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து அமைத்ததுதான் வரலாற்றில் ‘இன்டர்நேஷனல் பிரிகேட்ஸ்’ என அறியப்படும் சர்வதேச படைப்பிரிவு அமைப்பை ஏற்படுத்தினர்.

ஹென்றி பர்பூஸ், ஜோலியட் கியூரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஜார்ஜ் டிமிட்ரோ, ஆன்ரே மல்ராக்ஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற சர்வதேசப் புகழ்பெற்ற மிகப் பெரிய ஆளுமைகள் பலரும் ஸ்பெயின் குடியரசுக்கு ஆதரவாக வந்தனர். பிரிட்டிஷ் மற்றும் பிற கம்யூனிஸ்டுகள், ரால்ப் ஃபாக்ஸ், கிரிஸ்டபர் கட்வெல் போன்றவர்கள் ஸ்பெயினுக்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்தனர். 

அப்போது காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக இருந்த ஜவகர்லால் நேரு குடியரசு ஸ்பெயினுக்கு ஆதரவாக மக்கள் கருத்தைத் திரட்டுவதில் மிகப்பெரிய பங்கு வகித்தார்.

1936 செப்டம்பரிலிருந்து பல்வேறு நாடுகளின் தன்னார்வத் தொண்டர்கள் ஸ்பெயினில் குவியத் தொடங்கினர். சர்வதேசப் படைபிரிவுக்கு இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் லூய்கி லாங்கோ ‘கமிசார் ஜெனரல்’ எனும் தலைமைக் கமாண்டர் ஆனார்.

இன்டர்நேஷனல் பிரிகேடு அமைப்பில் ஹட்டர்

நிகழ்வுகள் பாலாஜி ஹட்டரை ஆழமாகப் பாதித்தது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்கள் மற்றும் பிற பாசிச எதிர்ப்பாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களில் பங்கேற்றார். (Duchess of Atholl) அதோல் அரசகுலச் சீமாடடியைத் தலைவராகக் கொண்ட இணைந்த தேசியக் குழு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பிரிட்டனில் அமைக்கப்பட்டது – அதில் ஆங்கிலிகன் சர்ச் (Anglican Church) மதப் பிரிவும்கூட இணைந்து கொண்டது. 

பிரிட்டிஷ் அரசு அவர்கள் பாதையில் பல தடைகளை ஏற்படுத்தியும், அவற்றை மீறி பல்வேறு ஏமாற்றுப் பாதைகளில் பிரிட்டனிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஸ்பெயின் சென்றடைந்தனர். பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 32 ஆயிரம் இளைஞர்கள் ஃபிராங்கோவை எதிர்த்தப் போராட்டத்தில் இணைந்தனர். 

ஸ்பெயின் சென்ற ஆறே இந்தியர்களில் ஹட்டரும் ஒருவர். 1937 அக்டோபர் 17ல் அங்கே சென்ற ஹட்டர், அல்பாசிட்(டே) நகரில் ஒரு தன்னார்வத் தொண்டராக ‘ஜான் ஸ்மித்’ என்ற பெயரில் கையெழுத்திட்டு இணைந்தார். ஏனெனில் பல நாடுகளும் அப்போது தொண்டராகச் செல்வதைத் தடை செய்திருந்தன. அறுவரில் மற்ற இந்தியர்கள் கம்யூனிச இலக்கிய ஆளுமை முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் அடல் மென்ஹன்லால், அயூப் அகமது கான் நக்ஸ்பண்டி, மேனுவல் ரோசா பின்டோ எனும் மூன்று டாக்டர்கள், ராமசாமி வீரப்பன் என்னும் ஒரு மாணவனும் ஆவர். 

மென்ஹன்லால் ஸ்பெயினில் கனடாவின் நார்மன் பெத்யூன் என்பவரோடு சேர்ந்து அவரைப் பின்பற்றி ஜப்பான் படைகளை எதிர்த்து சீனா சென்றார். சீனாவிலேயே குடியேறிய அவர் அங்கே 1957ல் தமது 71வது வயதில் இறந்தார்.  நக்ஸ்பண்டி 1947க்குப் பிறகு லாகூரில் மயோ மருத்துவமனை எலும்பு சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை முதலாவது பேராசிரியரானார்.  

அங்கே அப்போது குறைந்த பட்சம் நான்கு ‘ஜான் ஸ்மித்கள்’ இருந்தனர். அதில் ஒரு ஜான் ஸ்மித்தான ஹட்டரை அடையாளம் காண்பதற்கு அவரை ‘ஈராக்கியன் ஜான்’ என அழைத்தனர்! ஸ்பெயின் செல்லும் வழியில் பிரான்சை அடைந்து, பிரெஞ்சு–ஸ்பானிஷ் எல்லையைப் பைரிநீஸ் மலைகள் வழியாகக் கடந்தார். அந்தப் பயணம் பெரும் சாதனை, மிக மிகக் கடினமான ஒன்றாகும்.

சக்லத்வாலா படை’ என்று பெயரிடப்பட்ட பிரிட்டிஷ் படைப்பிரிவில் சேர்ந்து ஹட்டர் போரிட்டார். போர்க் களத்தில் பல சண்டைகளில் அந்தப் பிரிவு தனித்துவமாகச் சிறப்புற்று விளங்கியது. 15வது படைப் பிரிவான, அமெரிக்கர்கள் ஆதிக்கம் செலுத்திய ‘ஆப்ரகாம் லிங்கன் படையணி’ என்ற பிரிகேடில் அவர் போரிட்டார். அப்பிரிவில் பால்கன் பகுதி மற்றும் (பிரான்ஸ்-பெல்ஜிய எல்லை பகுதியிலிருந்து வந்த) ஃபிராங்கோ பெல்ஜியர்களும் இருந்தனர். 

போராட்ட இயக்கத்தை ஆதரிப்பதற்காகச் சக்லத்வாலாவின் 18வயது மகள் சேக்ரா சக்லத்வாலா, ‘ஸ்பெயினுக்காக இந்திய மாலைப் பொழுது’ என்ற நிகழ்ச்சியை லண்டனில் 1937 மார்ச்சில் ஸ்பெயின் – இந்தியா குழுவின் சார்பாக ஏற்பாடு செய்து நடத்தினார். அதில் கலந்து கொண்டவர்களில் ஜவகர்லால் நேருவும் ஒருவர்; குடியரசு ஸ்பெயின் தேசத்தைப் பாதுகாக்க அதற்கு ஆதரவாக மிகப் பெரிய தீவிரப் பங்காற்றினார். அதற்காக ஜெனரல் என்ரிக் லிஸ்டரின் தலைநகருக்குத் தானே  முன்னின்று ‘முனையிலே முகத்து நின்’றார். மேலும் ஸ்பெயினின் கேடலோனியா பிராந்தியத்தின் பிரிஸிடெண்ட் லூயிஸ் கம்பெனிஸ் அவர்களை நேரு சந்தித்தார்’; அப்போது (பின்னர் இந்திரா காந்தியான) இந்திரா அவரோடு இருந்தார். 

பயிற்சிக்காக ஹட்டர் 1938 பிப்ரவரி 11ம் நாள் வடக்கு ஸ்பெயினின் தரஸோனா சென்றார். பார்சிலோனாவுக்கு 100 மைல் தெற்கே, கட்டலோனியாவின் கண்டேசாவைப் பாதுகாக்க 25வது பிரிவுக்கு அவர் பொறுப்பளிக்கப்பட்டார். படையணியின் தொண்டர்கள் எப்ரோ நதியைக் கடக்க மறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டபோது அவர்களிடையே நேருவும் கிருஷ்ண மேனனும் உரையாற்றினர். இதற்கு முன் நேரு ‘ஸ்பெயினுக்கு உதவுவோம்’ என்ற பேரணியில் ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டொலோரெஸ் எபர்ரூரியுடன் தோன்றினார். 

ஹட்டர் சிறைபிடிக்கப்படுதல்

பாலாஜி ஹட்டரின் படை பார்சிலோனா நோக்கித் திரும்பிச் செல்லும்போது, ஹட்டர் ஃபிராங்கோவின் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவரது வார்த்தைகளில் சொல்வதானால், அவர் பெருமிதத்துடன் கூறினார்: எங்களது படை கண்டேசாவுக்குப் பின்புறமுள்ள குன்றுகளைச் சிலநாட்கள் துப்பாக்கிகள் துணையோடு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, ஆனால் இறுதியில் சுற்றி வளைக்கப்பட்டது.’ கைதான ஒரே இந்தியரான ஹட்டர் ‘போர் கைதி’யானார். மற்றவர்களோடு அவர் சான் பெட்ரோ டி கார்டீனாவில் சிறையிலடைக்கப்பட்டார். மற்றொரு கைதியான இவார் ஹிக்மேன் அவரை ‘ஈராக்கினா நண்பர்’ எனக் குறிப்பிட்டார். ‘கை ரேகை பார்ப்பவர்’ (!) என ஹட்டரைச் சிறைத்தோழர் கார்ல் கெய்சர் குறிப்பிடுவது மேலும் ஒரு புகழ் சிறப்பு. இந்தியச் சுதந்திரப் போராட்டம், காந்தி, நேரு பற்றி சிறையில் ஹட்டர் உரையாற்றுவது வழக்கம். 

பிரிட்டிஷ் பிரிகேடைச் சேர்ந்த உறுப்பினர்களை விடுவிக்கப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசின் மீது அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. பிரிட்டிஷ் கைதிகளை அடையாளம் காண ஒரு குழு ஸ்பெயின் சென்றது. குழுவில் ஓய்வுபெற்ற ஒரு கர்னலும் இருந்தார், அவருடைய மகனும் அப்போது ஒரு சிறைக் கைதியாக இருந்தார். அவர் சிறை முகாமைப் பார்வையிட்டு தனது மகனைச் சந்தித்தார்; அவர் பார்த்த ஒரு ‘ஜான் ஸ்மித்’, இந்தியர் போன்று இருந்தார். திரும்பத் திரும்ப விசாரித்தபோது ‘ஜான் ஸ்மித்’, தான் உண்மையிலேயே நாக்பூரிலிருந்து வந்த ஹட்டர் என்பதை வெளிப்படுத்தினார். 

அந்தக் கர்னல்தான் நாக்பூருக்கு அருகே கேம்ப்டீ என்னுமிடத்தில் ஒரு ரெஜிமெண்டுக்குத் தலைமை வகித்தவர் என்பது அபூர்வ ஓர்மை நிகழ்வு! அவர்கள் இருவரும் நாக்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார சொந்த இடத்தின் பழம் நினைவுகளில் மூழ்கினர். கர்னல், பிரிட்டிஷ் சிறைவாசிகள் விடுதலையோடு ஹட்டரின் விடுதலை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுதான் ஸ்பெயின் சிறையில் நிலவிய சர்வதேசியம்.

விடுதலையானதும் ஹட்டர் பிரிட்டன் திரும்பினார். ஸ்பெயினிலிருந்து திரும்பி வந்த சர்வதேச பிரிகேட் உறுப்பினர்களை வரவேற்க 1938 நவம்பர் 12ல் லண்டனின் வடக்கு தேம்ஸ் நதிகரையில் உள்ள எஸ்எக்ஸ் ஹாலில் இந்திய சுயராஜ் லீக் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் கோபால் முகுந்த் ஹட்டர். வரவேற்புக் கூட்ட அழைப்பிதழில் அவரைச் சர்வதேசப் படைப்பிரிவில் இடம்பெற்ற “ஒரே இந்தியர்’‘ எனக் குறிப்பிட்டாலும், உண்மையில் படையில் ஆறு இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர். அன்றைய கூட்டத்தின் தலைவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் ரஜினி பால்மே தத் (ஆர்பிடி).

இந்தியா திரும்புதல்

ஒரு மாதத்திற்குப் பிறகு பாலாஜி ஹட்டர் 1938ல் பம்பாய் திரும்பியபோது துறைமுகப் பகுதியில் அளிக்கப்பட்ட எழுச்சிமிக்க வரவேற்பில் பெரு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு சங்கங்கள் மற்றும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டங்களை ஏற்பாடு செய்தன. ஸ்பெயினில் அவர் பெற்ற அனுபவம் மற்றும் பாசிச எதிர்ப்பு, மார்க்ஸியத் தத்துவம் முதலியன அவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக அழைத்து வந்தது. முறையாக அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1940ல் இணைந்து நாக்பூரில் இருந்து பணியாற்றினார்.  ஸ்பானிய உள்நாட்டுப் போர், இயக்கவியல், வரலாற்றுப் பொருள் முதல் வாதம் பற்றி பல சொற்பொழிவுகளை ஆற்றினார். 

1952க்குப் பிறகு மெல்ல அவர் தீவிர அரசியலில் இருந்து விலகத் தொடங்கினார். 1972ல் ஏ பி பரதனின் ஒரு சகா பெர்லின் விஜயம் செய்தபோது, சர்வதேச பிரிகேடு அமைப்பின் ஒரு மூத்த ஜெர்மானியரைச் சந்தித்தார். மரியாதைக்குரிய அந்த ஜெர்மன் மூத்த வீரர் ஒரு பேட்ஜையும் தையில்மேன் பட்டாலியன் (படைப்பிரிவு) பதக்கத்தையும் ஹட்டருக்காக ஒப்படைத்தார். பல பத்தாண்டுகளைக் கடந்த பிறகும் ஜெர்மன் பிரிகேடியர் ஹட்டரை ஞாபகம் வைத்திருந்தது வியப்பிற்குரியது! ஏபி பரதன் தானே நேரில் சென்று பதக்கத்தை ஹட்டரிடம் நேரடியாகக் கையளித்தார். 

அந்த வீர மகன், கோபால்முகுந்த் (பாலாஜி) ஹட்டர் 1981ல் மறைந்தார். ஸ்பெயின் மற்றும் இந்திய விடுதலைக்காகவும் பாசிசத்தை எதிர்த்தும் போராடிய ஒரு கம்யூனிஸ்ட் போராளியின் சாகசம் நிறைந்த கதை எவ்வளவு வியப்புடையதாக விறுவிறுப்பாக இருக்கிறது! செவ்வணக்கம்

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்  

Wednesday 19 May 2021

கேடிகே தங்கமணி : பன்முக ஆளுமை நிறைந்த தலைவர்

 


கேடிகே தங்கமணி : பன்முக ஆளுமை நிறைந்த தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜன.31—பிப்ரவரி 6)

அனைவராலும் புகழோடு ‘கேடிகே’ என்றழைக்கப்பட்ட கேடிகே தங்கமணி மதுரை திருமங்கலத்தில் 1914 மே 19ம் நாள் பிறந்தார். இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் இப்பகுதி முன்பு மெட்ராஸ் ராஜதானியில் இருந்தது. அவருடைய தந்தை கூழைய நாடர், தாயார் காளியம்மாள். ராலே இந்தியா லிட்., பிரிட்டிஷ் நிறுவனத்திற்காக இந்தோனேஷிய நாட்டின் ஜாவாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்து ஏகபோகமாகக் குழைய நாடர் ஒருவரே விநியோகிப்பாளராக இருந்து பெரும் லாபம் ஈட்டினார். அது தவிர அவருக்கு திருமங்கலத்தில் ஒன்று, மற்றொன்று தேனி மாவட்டத்திலுமாக இரண்டு டெக்ஸ்டைல் ஆலைகள் இருந்தன.

கல்வி

கேடிகே, திருமங்கலம் கேஎஸ்ஆர் வித்யாலயாவில் பள்ளிக் கல்வியைப் பெற்று பின் 1935ல் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று கணிதப் பாடத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டத்தை முடித்தார். அதே வருடம் பிரிட்டனுக்கு உயர்கல்வி பெறுவதற்காகச் சென்று லண்டன் பல்கலைக் கழகத்தின் மிடில் டெம்பிள் சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கே 1940 ஏப்ரலில் தனது பார்-அட்-லா பட்டத்தைப் பெற்றார். 

பிரிட்டனில் : கம்யூனிசத்தின் செல்வாக்கு

லண்டனில் படிக்கும்போது கேடிகே எண்ணற்ற இந்திய மாணவர்களுடன் தொடர்பு கொண்டார்; அவர்களில் என்கே கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், இந்திரஜித் குப்தா, ஜோதி பாசு, நிகில் சக்ரவர்த்தி, மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள் பின்னாட்களில் பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆயினர். மேலும் எதிர்காலத்தில் பெரும் இந்திய ஆளுமைகளாக விளங்கிய இந்திரா காந்தி, ஃபெரொஸ் காந்தி, டாக்டர் ஏகே சென் முதலான பலரையும் அவர் சந்தித்தார். 

அப்போது இந்திய மாணவர்கள் அமைப்பான இந்தியன் மஜ்லிஜ் அமைப்பில் என்கே கிருஷ்ணன் செயலாளராக இருந்தார். அதன் செயல்பாடுகளில் கேடிகே தீவிரமாகப் பங்கு பெற்று மார்க்சியத் தத்துவத்தோடு இயைந்து கற்றார். லண்டன் காக்ஸ்டன் ஹாலில் 1940 மார்ச் 13 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மைக்கேல் ஓ‘டயர், பஞ்சாபின் மேனாள் லெப்டினெட் கவர்னரை, (இந்தியப் புரட்சியாளர்) உத்தம் சிங் சுட்ட சம்பவத்தின் சாட்சியமாகக் கேடிகே இருந்தார்.  இந்த டயர்தான் ஜாலியன் வாலா பாக்கில் கூடிய ஆயுதமற்ற அப்பாவி மக்களை 1919 ஏப்ரலில் ‘சுட்டேன் சுட்டேன்’ என்று ரத்த வேட்டையாடிப் படுகொலை செய்தவன்.  

சுபாஷ் சந்திரபோஸ் 1935 –38ல் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அயர்லாந்து டப்ளின் நகரில் கேடிகே அவரைச் சந்தித்தார். அவர் லண்டனுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்தியா திரும்புதல்

இந்தியா திரும்பியதும் கேடிகே மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 1940 ஜூனில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அவர் அனைத்துத் துறை திறமைகளையும் உடைய பன்முக ஆளுமையாளர். நன்றாக ஹாக்கி விளையாடுவார், மெட்ராஸ் ராஜதானியில் சிங்காரவேலர் மற்றும் மற்றவர்களோடு இணைந்து ‘சுயமரியாதை இயக்க’த்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.  

சிங்கப்பூரில் வழக்குகளை நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர் சி பா ஆதித்தனார் அழைக்க, 1940 ஆகஸ்ட்டில் கேடிகே அங்கே சென்றார். ஒன்னரை ஆண்டுகளுக்கு மேல் அங்கே தங்கி வழங்கறிஞராகப் பணியாற்றினார். அங்கே பணக்கார வணிகரான ஏ ராமசாமி நாடாரின் மகள் வள்ளியம்மாளை (சிபா ஆதித்தனார் மனைவியின் தங்கை) 1941 அக்டோபர் 31ல் கேடிகே மணந்தார்.

அங்கே மலேஷியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. 1942 மத்தியில் ஜப்பான் சிங்கப்பூரின் மீது குண்டுவீசித் தாக்கத் தொடங்கியது. இதனால் அந்த இடத்தைவிட்டு நீங்கி கேடிகே தனது மனைவி மற்றும் ஆதித்தனாருடன் சென்னை ராஜதானிக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இந்தியாவில் மதுரை மாவட்டம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் வழக்கறிஞரானார்.  

சிங்கப்பூரில் இருந்தபோது வரலாற்றுப் புகழ்மிக்க வியத்நாம் விடுதலைப் போராட்டத் தலைவர் ஹோசிமின் அவர்களைக் கேடிகே சந்தித்தார். வியத்நாம் விடுதலைக்குப் பிறகு, வியத்நாம் அரசின் தலைவராக ஹோசிமின் இந்தியா விஜயம் செய்தபோது ஹோசிமின் கேடிகேயை மீண்டும் சந்தித்தார்.  

1942 இயக்கத்தில்

இந்தியா முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீது கடுமையான வழக்குகள் புனையப்பட்டன. அவற்றை எதிர்த்து அவர்களுக்கு ஆதரவாகக் கேடிகே தீவிரமாகப் பணியாற்றினார். திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் எண்ணற்றத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலியின் குலசேகரப்பட்டினத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல்கள் நடக்க, பிரிட்டிஷ் அதிகாரி டபிள்யு லோன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதன் பிறகு ஏற்பட்ட குழப்பத்தில் லோன் கொல்லப்பட்டார். அதில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காசிராஜன், ராஜகோபாலன் இருவருக்கும் ஆதரவாக அந்த வழக்கை கேடிகே எடுத்துக் கொண்டார். அது நினைவில் நிற்கும் வழக்காயிற்று. மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்கள் தூக்கு தண்டனை வழங்கின. அந்த வழக்கில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல வழக்கறிஞரும் பார்-அட்-லாவுமான ஏ இராமச்சந்திராவும் போராடினார்.  

அக்காலத்தில் உச்சநீதிமன்றம் இல்லாத நிலையில் இரண்டாவது மேல்முறையீடு பிரிவி கௌன்சில் முன் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கைக் கேடிகே முயற்சியால் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் வழக்கறிஞருமான டிஎன் பிரிட்(DN Pritt) எடுத்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியும்  மெட்ராஸ் ராஜதானியின் (மெட்ராஸ் மாகாண) காங்கிரஸ் கட்சியும் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்யக்கோரி பெருந்திரள் இயக்கங்களை நடத்தின.

இறுதியில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது, மிகப் பெரிய வெற்றியாகும்.

தொழிற்சங்க இயக்கத்தில்

கேடிகே கம்யூனிஸ்ட் கட்சியில் 1943ல் இணைந்தார். அதற்கு முன்பே மாபெரும் தமிழ் அறிஞரும் காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்கத் தலைவருமான திரு வி கல்யாண சுந்தரம் (திருவிக), சிங்காரவேலர் போன்றோரின் செல்வாக்கால் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். கேடிகே மதுரை பஸ் போக்குவரத்து தொழிற்சங்கத்தை நிறுவினார்; டிவிஎஸ் பஸ் போக்குவரத்து சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பிரிட்டிஷ்காரருக்குச் சொந்தமான எஸ்ஆர்விஎஸ் பஸ் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தலைவரானார். தொழிற்சங்க இயக்கச் செயல்பாடு காரணமாகப் பலமுறை கைது செய்யப்பட்டார். மேலும் கேடிகே தங்கமணி தூய்மை துப்புரவுப் பணியாளர்கள், டெக்ஸ்டைல் மற்றும் கைத்தறித் தொழிலாளர்களை அமைப்புரீதியாகத் திரட்டினார். 

இந்திய தேசிய இராணுவம் (ஐஎன்ஏ) மற்றும் இந்தியக் கப்பல்படை (ஆர்ஐஎன்) எழுச்சி போராட்டங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்கள் குவிந்தனர். 1945 மதுரையில் நடைபெற்ற ஏஐடியுசியின் மெட்ராஸ் பிராந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக கேடிகே செயல்பட்டார். 1946ல் எஸ்ஆர்விஎஸ் பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தினார். பிரிட்டிஷ் மாவட்டக் காவல் கண்காணிப்பு அதிகாரி வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தபோது, கேடிகே அவரிடம் போராடிய பிரிட்டிஷ் தொழிலாளர்களை நேரே பார்த்திருக்கிறேன் என்று கூறி நிச்சயம் வேலைநிறுத்தம் செய்வேன் என்றார். கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போர்ட் அண்டு டாக் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பொது ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார். தொழிற்சங்க இயக்கத்தின் மிக உயர்ந்த தலைவரான எஸ் ஏ டாங்கே தலைமையின் கீழ் பணியாற்றிய அவர், ஏஎஸ்கே, எம் கே (கல்யாணசுந்தரம்) போன்ற ஒளிவீசும் தலைவர்களோடும் இணைந்து பணியாற்றினார். மீண்டும் எஸ்ஆர்வி வேலைநிறுத்தத்தில் அவர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

சோவித் யூனியன் நண்பர்கள் அமைப்பு

மெட்ராஸ் மாகாணத்தில் 1943ல் ‘சோவித் யூனியன் நண்பர்கள்’ (FSU) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. விடுதலைக்குப் பிறகு அந்த அமைப்பு இஸ்கஸ் (இந்தோ சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகம் ISCUS) என மாற்றப்பட்டது. உலகறிந்த காங்கிரஸ் தலைவரும் தமிழறிஞருமான திருவிக அதன் முதல் தலைவர் மற்றும் பாலன் என்று தோழமையோடு அழைக்கப்படும் கே பாலதண்டாயுதம் அதன் செயலாளர். அதன் முதல் பிரதேச மாநாடு சிபிஐ மற்றும் காங்கிரஸ் இணைந்த பங்கேற்போடு மதுரையில் 1943ல் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவர் கேடிகே தங்கமணி. அம்மாநாட்டில் மதுரை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி எஸ் ஏ பி அய்யர் ஓவியப் புகைப்படக் கண்காட்சி ஒன்றைத் தொடங்கி வைத்தார். பத்தாயிரம் மக்களுக்கும் அதிகமாகப் பங்கேற்ற இம்மாநாடு மிக வெற்றிகரமான மாநாடாக அமைந்தது. 

மதுரை சதி வழக்கு

ப.மாணிக்கம், பி.இராமமூர்த்தி, சாந்திலால், சுப்பையா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி முதலான தலைவர்களோடு கேடிகேவும் 1946 டிசம்பரில் புகழ்பெற்ற “மதுரை சதி வழக்கு” தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். நாடு விடுதலை அடைவதற்கு முதல் நாள் 1947 ஆகஸ்ட் 14ல் விசாரணை நடைபெறாமலேயே அனைவரும் விடுவிக்கப்பட்டனர். விடுதலையான தலைவர்களுக்கு மதுரையில் பல்லாயிரம் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

‘BTR’ காலம் 

டிவிஎஸ் மற்றும் எஸ்ஆர்விஎஸ் பஸ் போக்குவரத்துக் கம்பெனிகளில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தியதற்காக கேடிகே கைது செய்யப்பட்டு 1948 ஜனவரி 30ல் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே 1948 பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெற்ற கல்கத்தா சிபிஐ இரண்டாவது கட்சிக் காங்கிரசுக்குக் கேடிகே பிரதிநிதியாகத் தேர்வானாலும் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. அது பி டி ரணதிவே தலைமையின் கீழ் இடதுசாரி குழுப்போக்கு மற்றும் சாகசப் பாதையைப் பின்பற்றிய காலம். அதனால் மெட்ராஸ் பிராந்தியத்தில் கட்சிக்கு விளைந்த சேதாரம் ஏராளம். கேடிகே மற்றும் 134 சிபிஐ தலைவர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் ஏ கே கோபாலன், ஏஎஸ்கே அய்யங்கார், பி இராமமூர்த்தி முதலானவர்களோடு அடைக்கப்பட்டனர். 

1950 பிப்ரவரி 11ம் நாள் சேலம் மாவட்ட மத்தியச் சிறைச்சாலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 கம்யூனிஸ்ட் கைதிகள் கொல்லப்பட்டனர். ‘வர்க்கப் போராட்ட’த்தைச் சாகசத் தந்திரோபாயங்கள் மூலம் கட்டாயப்படுத்தி நிகழ்த்திக் காட்டுவது என்ற பிடிஆர் அறிவுறுத்தல்களைச் சிறைச்சாலைக்குள்ளேயே நடத்தியதால் வந்த வினை, சிறை அதிகாரிகள் மேலும் முரட்டுத்தனமான அடக்குமுறைகளை அதிகமாக்குவதில் முடிந்தது. அவர்களும் ஏராளமான சேதாரத்தை ஏற்படுத்த விளைந்தது, தேவையற்ற உயிர்பலியும் தனிமைப்படுத்தலும். கேடிகேவும் பிற சிபிஐ தலைவர்களும் வேலூர் சிறைக்குள் தொடங்கிய காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 26 நாட்கள் நீடித்தது. சிறை அதிகாரிகள் வன்முறையைக் கைக்கொண்டு ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த தலைவர்கள் மீது லத்தியால் கடுமையான தடியடித் தாக்குதலை நடத்தினர். கேடிகே தங்கமணியின் இடது கை மற்றும் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட அவர் பெரிதும் துன்பப்பட்டார்.

1952ல் அவர்கள் விடுதலையான முதல் வாரத்தில் பிராந்திய ஏஐடியுசியின் தலைமையகமான மெட்ராசில் தொழிற்சங்கச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கேடிகே அனுப்பி வைக்கப்பட்டார்.

பொதுத் தேர்தல்களில் பங்கேற்பு

1952 பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கேடிகே சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனால் அதே தொகுதியிலிருந்து 1957 பொதுத் தேர்தலில் வென்றார். பாராளுமன்றத்தில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளைத் திறமையாக எழுப்பி மிகச் சிறந்த பாராளுமன்றவாதியாக அனைவரையும் ஈர்த்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை மக்கள் பிரச்சனை தொடர்பாக எழுப்பி தீர்வுபெற உதவியதன் மூலம் பாராளுமன்றத்தின் “கேள்வி நேர”த்தை மிகத் திறமையாகப் பயன்படுத்திய முதல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற புகழைப் பெற்றார். பொதுத்துறை நிறுவனங்களை ஆதரிப்பது, வங்கி மற்றும் முக்கியமான தொழில் மற்றும் ஆலைகளைத் தேசியமயமாக்குவதை நியாயப்படுத்தி ஆதரித்தார். 1943 முதலாகப் பொதுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் நிறுவனத் தலைவராக இருந்த அவர், மோட்டார் டிரான்ஸ்போர்ட் தொழிலாளர் சட்டம் 1961 நிறைவேறுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார். 

1957 சீனாவின் பெய்ஜிங்  (பீக்கிங்) நகரில் நடைபெற்ற உலக தொழிற்சங்கச் சம்மேளன (WFTU) மாநாட்டில் கேடிகே கலந்து கொண்டார். மாசே துங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் பிற தலைவர்களோடு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த சீனா விஜயம் செய்த சிபிஐ குழுவில் அஜாய் கோஷ், பூபேஷ் குப்தா மற்றும் பிறரோடு கேடிகே  1961ல் சீனா சென்றார். (அப்போது யாரோடும் கைகுலுக்காத மாசே துங் இந்தியர் என அறிந்து தனது கையைப் பற்றிக் குலுக்கியதைக் கேடிகே வாழ்நாள் முழுவதும் பெருமிதத்தோடு கூறி வந்தார் – தோழர் டி எம் மூர்த்தி சென்ற ஆண்டு டிசம்பர் ஜனசக்தியில் எழுதிய நினைவஞ்சலிக் கட்டுரையிலிருந்து)

டெல்லியில் இருந்தபோது பிரதமர் நேரு திட்டக் குழுவின் ஆலோசனைக் குழுகளில் ஒன்றில் கேடிகே நியமிக்கப்பட அதில் ஓராண்டு திறமையாகப் பணியாற்றினார்.

1971ல் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு மதுரைத் தொகுதியிலிருந்து கேடிகே தேர்வானார். 1971 முதல் 1976 கால கட்டத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் கோரிக்கைகளை அழுத்தமாகச் சட்டமன்றத்தில் எழுப்பினார்.

கேடிகே தங்கமணி தமிழ்நாடு ஏஐடியுசி பேரியக்கத்தின் தலைவர், துணைத்தலைவர் பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புக்களை 50 ஆண்டுகளுக்கும் மேல் அவரது இறுதி மூச்சுவரை நிறைவேற்றினார். அகில இந்திய ஏஐடியுசியின் துணைத் தலைவர்களில் ஒருவராக அவர் பல ஆண்டுகள் இருந்தார்.  

தமிழ் மாநில இந்தியக் கம்யூனிட் கட்சி மற்றும் ஏஐடியுசி ஒரு சிறப்பு மலரை அவரது 80வது பிறந்த நாளையொட்டி வெளியிட்டது. அவருடைய வாழ்முறையைப் பாராட்டிய மார்க்சிய அறிஞர் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, கேடிகே தங்கமணியை எளிமையான காந்திய வாழ்முறைக்குச் சொந்தக்காரர், மார்க்சியமும் காந்தியமும் இணைந்த கவர்ச்சிகரமான கலவை எனப் புகழ்ந்துரைத்தார். அவரது மனைவி இறந்த பிறகு, பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த கேடிகே அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான சென்னை “பாலன் இல்ல”த்தின் சிறிய அறை ஒன்றிலேயே தங்கினார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினமான டிசம்பர் 26ம் நாள் 2001ம் ஆண்டு கேடிகே தமது 88வது வயதில் மறைந்தார். என்றென்றும் எம் தோழர்கள் நெஞ்சில் நிறைந்தார். 

--தமிழில் நீலகண்டன், 

 என்எப்டிஇ, கடலூர்

Tuesday 18 May 2021

இந்தியாவுக்கு மார்க்ஸ், அம்பேத்கர் இருவரும் தேவை

 

இந்தியாவுக்கு மார்க்ஸ், அம்பேத்கர் இருவரும் தேவை

--டாக்டர் யுகல் ஜெ ராயலு

“இதுவரையான தத்துவ ஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். கேள்வி இப்போது எப்படி மாற்றுவது என்பதுதான்!” – காரல் மார்க்ஸ்

இந்தியா ஒரு தனித்துவமான நாடு, இதில் ‘பொங்குபல நதிகளெல்லாம் புகுந்து கலந்து ஒன்றாய்.. கங்குகரை காணாத கடல்’ போல வேறுபட்ட கருத்துகள் மற்றும் தத்துவங்கள் தம்முள் கலந்து ஓர் அற்புதமான எண்ணங்களின் விரி வானத்தின் ஓவியத் திரையாய் காலங்காலமாக நம்மை வழிநடத்துகிறது. பன்முகம் என்பதே இந்திய சமூக – கலாச்சார அடையாளத்தின் மதிப்புமிக்க பகுதி. 

ஆழமான ஜனநாயக உணர்வோடும் ஒவ்வொரு பிராந்தியமும் அதனதன் சமூக கலாச்சார அடையாளங்களோடும் இன்றைய இந்தியா, நெடுந்தூரம் கடந்து வந்திருக்கிறது. உலகத்தின் எங்கிருந்தும் வரும் தத்துவப் போக்குகள் மற்றும் சிந்தனை எண்ண ஓடைகளுக்கு இந்தியா எப்போதுமே திறந்த மனதோடு இருந்து வருகிறது. நமது அரசியலமைப்புச் சட்டமும் அதனையே பிரதிபலிக்கிறது. ஆனால் தத்துவச் சிந்தனைகளை இந்தியத் தத்துவம், அயல் நாட்டுத் தத்துவம் (இந்தியத்துவம் அல்லாதது) என்று தவறுதலாகச் சிலர் பிளவுபடுத்துகின்றனர். அத்தகைய எண்ணம், உண்மையில் தனித்துவமான இந்தியப் பண்பாட்டு உணர்வுக்கு எதிரானது; ஏனெனில் நம்முடைய பழம்பெரும் ஞான நூல்கள் ஜகத் குறித்தும், உலகமே ஒரு குடும்பம் என்னும் ‘வசுதைவத குடும்பகம்’ (மகா உபநிஷத்) குறித்தும் பேசுகிறது. அவை கூறும்போது, நல்ல கருத்துகள், சிந்தனைகள் –அதன் பிறப்பிடம் குறித்து கவலைப்படாது – நம்முள் வந்து ஒன்று கலக்கட்டும், மேலும் மலர்ச்சிக்கு அது தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துகிறது: ‘ஆ னோ பத்ர க்ரத்வோ எந்து விஸ்வதா’ (மேன்மையான சிந்தனை கருத்துகள் எல்லா திசைகளிலிருந்தும் வரட்டும்) என்பது ரிக் வேதத்தின் 1.89.1வது வாக்கியம்.

மார்க்சும் அம்பேத்கரும் 

‘காலத்தின் மணல்வெளியில் பெரும் ஆளுமைகள் தங்கள் தடங்களைப் பதித்துச் செல்கிறார்கள்’ என்பது புகழ்பெற்ற வாக்கியம். நீண்டகாலமாக மனித குலம் அவர்களின் தளர்வற்ற முயற்சிகளாலேயே முன்னேறி வருகிறது. மாற்றமும் வளர்ச்சியும் ஓர் இரவில் மந்திரத்தால் நடந்துவிடுவதில்லை. மனிதர்களின் தொடர்ச்சியான பாடுகளாலேயே வளர்ச்சி சாத்தியமாகிறது.

இந்தியப் பாட்டாளி வர்க்கம் மார்க்ஸ், அம்பேத்கர் என்ற இரு பெரும் சிந்தனையாளர்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டது. தொழிற்சங்கங்கள் மார்க்சைத் தங்களின் வழிகாட்டும் ஒளிவிளக்காக வரித்துக் கொண்டன; சமூகத்தின் விளிம்புநிலை பிரிவு மக்களைக் கைதூக்கிவிடும் அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைத் தங்கள் அடையாளமாக்கிக் கொண்டன. 

உலகின் வேறு எந்தப் பகுதிகளையும் போலவே இந்தியாவிலும் தலைமுறை தலைமுறையாக உழைக்கும் வர்க்கத்தின் தலைவர்கள் மார்க்சியத்தால் ஊக்கமும் உற்சாகமும் பெற்றனர். நாட்டின் அனைத்து மொழிகளிலும் மார்க்சிய இலக்கியங்கள், நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன; மார்க்ஸ், மார்க்சியம் குறித்த நூல்கள் இல்லாத நூலகம் எதுவும் இம்மண்ணில் இல்லை.

அதுபோலவே டாக்டர் பி ஆர் அம்பேத்கர் குறித்து எண்ணாமல் இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழு தலைவராக இருந்து அண்ணல் அம்பேத்கர் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதற்கான சாத்தியமான அனைத்து எண்ணங்களையும் திட்டமிட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் உட்பொதிந்து பொறித்துள்ளார்!

  உலகின் மிகச் சிறந்த எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை –சமத்துவம், அனைவருக்குமான நீதி மற்றும் மதச் சார்பின்மை கோட்பாடுகளைச் சாசனத்தின் ஆன்மாவில் செதுக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை -- இந்தியா பெற்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

மிக நீண்ட சமய மரபுகள் மற்றும் நம்பிக்கைகளின் வரலாற்றைக் கொண்டதாயினும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், மனித வாழ்வு குறித்த தனது அணுகுமுறையைப் முழுமையாகப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு, மனித வாழ்வு மற்றும் சமுதாயம் குறித்து நவீன விஞ்ஞான புரிதல்களின் அடிப்படையில் கொண்டிருக்கிறது. 

உலகம் மற்றும் சமூகம் குறித்த பொருள்முதல்வாத விளக்கத்தின் மாக்சிய கோட்பாடுகளை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை பிரதிபலித்து ஒளிவீசுகிறது. எனவேதான் அது, எந்தவித மதச் சடங்காச்சாரம், சமய அடையாளங்கள் மற்றும் சமயம் சார்ந்த விளக்கங்களிலிருந்து தன்னை விலக்கியே வைத்துள்ளது. 

இந்திய மக்களை அரசாட்சி செய்யத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெண்களும் பாட்டாளிகளும், சமூகத்தின் அனைத்து பிற பகுதியினரைப் போலவே சமூக மற்றும் அரசியல் வாழ்வில் சம உரிமை அளிக்கப்பட்டார்கள். ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த அவமானங்களை அனுபவித்துத் துன்பப்பட்ட காரணத்தால் எந்த ஒரு சமூகத்திலிருந்தும் வெறுத்தொதுக்கி வைக்கப்படும் வலிகளையும் வேதனைகளையும் டாக்டர் அம்பேத்கர் நன்கு உணர்ந்திருந்தார். மக்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூகத்திலிருந்து ஒதுக்கிப் பிரித்து வைக்கும் அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் அவர் நீக்கினார்; மேலும் அரசியலமைப்புச் சட்டத்தில் முகவுரையில் அவர் சமத்துவம், நீதி மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளைப் பொருத்தி வைத்தார்.

அவர்களின் போதனைகளை நினைவூட்டிக் கொள்வது இருவருக்குமே பொருத்தமான புகழ் வணக்கம் செலுத்துவதாய் இருக்கும், அதுவும் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் அது மிகப் பொருத்தமான புகழஞ்சலியாகும்.

காரல் மார்க்சின் வாழ்வும் பணியும் 

 மார்க்ஸ் 1818 மே 5ம் நாள் ஜெர்மன் (அப்போதைய புருஷ்யா) நாட்டின் டிரியர் நகரில் பிறந்தார். பல்கலைக்கழக மாணவராக அவர் இருந்தபோது புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவவாதி ஹெகல் சீடராக இருந்தார்; பின்நாட்களில், ஹெகலின் இயக்கவியல் தத்துவத்தை மேலும் வளர்த்து இயக்கவியல் பொருள்முதல்வாதமாகத் தன் தத்துவத்தை நிறுவினார். மார்க்ஸின் வழிமுறை ஆழமான விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது; அதன் காரணமாக --விஞ்ஞான உண்மைகள் விஞ்ஞானத்தின் பிற பிரிவுகளுக்கும் பொருந்துவது போலவே -- மார்க்ஸியத் தத்துவம் உலகளாவிய பொருத்தப்பாடு பெற்றுள்ளது. 

முதலீடுகளின் முழுமையான கட்டமைப்பு மற்றும் அது செயல்படும் முறையை மார்க்ஸ் ஆழமாகக் கற்றறிந்து, உலகப் புகழ்பெற்ற “மூலதனம்” (தி கேப்பிடல், ஜெர்மன் மொழியில் ‘தாஸ் கேப்பிடல்’) என்ற நூலை எழுதி உலகுக்கு அளித்தார். மனிதகுல நாகரீகத் தோற்றத்தின் துவக்கம் முதலான உற்பத்தி நிகழ்முறைகளின் அடிப்படை கொள்கையை விளக்கினார். உற்பத்தி உறவுகள் மாறும்போது சமூகத்தின் அமைப்பும் மாறுகிறது என அவர் விளக்கினார். கருவிகளில் ஏற்படும் மாற்றம், (ஒட்டுமொத்தமாக வர்க்க சமூக அமைப்பு என்று அழைக்கப்படும்) சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் மாற்றங்கள் விளைய ஏதுவாகிறது என்பதை விஞ்ஞானிகளும் ஏற்கின்றனர். உற்பத்தி கருவிகளின் வளர்ச்சிக்கும் மனித சமூகப் பரிணாமத்திற்கும் இடையேயான உறவை மார்க்ஸ் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தார்.

உற்பத்தியில் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தி, மனிதகுல நாகரீகத்தை வடிவமைப்பதில் வகித்த உச்சபட்ச பங்கை மிகத் திறமையாக மார்க்ஸ் எடுத்துரைத்தார். அந்த உழைப்புச் சக்தியைப் பற்றியும், அவர்கள் உழைத்துக் குவிக்கும் பொருட்களின் “உபரி மதிப்பு” குறித்தும் பேசினார். பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் ஏழ்மைக்கும் சமூகத்தின் ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிவதற்குமான காரணத்தின் புதிரை விடுவிப்பதில் அவர் வெற்றி பெற்றார். 

விஞ்ஞானப் பொருள்முதல்வாதத் தத்துவமாக மார்க்ஸ் பிரச்சாரம் செய்த கோட்பாட்டின் மூன்று கூறுகள், இயக்கவியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான சோஷலிசம் ஆகும். மார்க்சியத்தின் எதிரிகள் இம் மூன்று கூறுகளைப் பற்றியும் அதன் முக்கியத்தும் மற்றும் இந்தப் பெரும் சிந்தனையாளர் அதற்களித்த பங்களிப்புகளையும் அறிய மாட்டார்கள். 

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது நமது உலகத்தைப் பொருள் சார்ந்த உலகியல் ரீதியில் புரிந்து கொள்வது. மார்க்சியத்தின் விஞ்ஞான ரீதியிலான அடிப்படையின் காரணமாகவே பெரும்பாலான மதத்தலைவர்களும் மதநிறுவனங்களும் மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள். இந்த நேரத்தில்தான் சார்லஸ் டார்வின் ஆப்ரிக்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டு பல்வேறு உயிரினங்களையும் அவற்றின் பரிணாம வளர்ச்சி மாற்றத்தையும் ஆய்வு செய்தார். புகழ்பெற்ற அவரது நூல் 1860ல் வெளியானது; மார்க்சின் இணை பிரியாத நண்பர் பெடெரிக் ஏங்கல்ஸ் மனிதர்களின் பரிணாமத்தைக் கண்டறிந்தார்.  டார்வின் மதத் தலைவர்களால் நீண்ட காலம் அடியோடு மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இயக்கவியலின் அடிப்படையில் உதித்ததே பரிணாமத்தற்கான விஞ்ஞான முறை; அதனோடு இயற்கையும் சமூகமும் இணைந்த வரலாற்று நிகழ்முறை சேர்ந்து கொண்டது. இவ்வாறு வரலாற்றுப் பொருள்முதல் வாதம், மனிதகுல சமூகத்தின் பயணத்தை, அது பல்வேறு காலகட்டத்தின் ஊடாகப் பயணித்து மனித சமூகத்தை வடிவமைத்ததில் விளைவித்த மாற்றங்களை விளக்குகிறது. அதுதான், இயக்கவியல் விதிகள் சமூக பொருளாதார பரிணாமத்தில் அமலாக்கப்படுவது என்பது.  

அரசியல் பொருளாதாரம் மார்க்சியத்தின் வெடி மருந்து, முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் எவரும் அதனைச் சந்திக்க ஒருபோதும் விரும்புவதில்லை. மனிதகுல வரலாற்றில் அது ஒரு திருப்புமுனை, பொருட் செல்வ உற்பத்தியின் உண்மையான இரகசியங்களை அரசியல் பொருளாதாரம் மனித குலத்தின் முன் முதன் முறையாக எடுத்து வைத்தது. வளர்ச்சியின் முழுமையான நிகழ்முறையில் உழைப்பின் பங்களிப்பு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது, அதன் பிறகே “நலவாழ்வு அரசு” என்ற கோட்பாடே பிறந்தது.

உண்மையாகப் பார்க்கும்பொழுது அவர், மனிதகுல வாழ்கை குறித்தான அனைத்துப் பரிமாணங்களையும் ஆழமாக, அதே நுண்மான் நுழைபுலத்துடன் ஆராய்ந்தார்; அவற்றைப் போதிய ஸ்தூலமான சான்றாதாரங்களுடன் எழுதியுள்ளார். பரந்து விரிந்த மார்க்சின் எழுத்துக்களிலிருந்து மார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி, கோட்பாட்டாளர் மற்றும் பொருளாதார நிபுணர் என்பதைச் சுலபமாக நாம் புரிந்து கொள்ள முடியும். தனது உற்ற தோழர் பெடரிக் ஏங்கெல்ஸ் உடன் இணைந்து “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை 1848ல் வெளியிட்டபோது மார்க்சுக்கு வயது 30 மட்டுமே. அரசியல் பொருளாதாரம் குறித்த அவரது தியரி உலகின் மிகப் பெரிய பனிமலையை உருட்டிவிட்ட தாக்கத்தை உண்டாக்கியது; ஏழ்மை மற்றும் செல்வக் குவிப்பு குறித்த அதுவரையிலான அனைத்து புரிதல்களையும் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தது. ‘கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்’ என்ற நிலையிலிருந்து முதன் முறையாக மக்கள் தங்கள் ஏழ்மைக்கான உண்மையான காரணத்தை அறிய முடிந்தது. 

மார்க்ஸ் இந்தியா குறித்தும் எழுதியுள்ளார். 1857 சிப்பாய் கலகம் என்று எல்லோரும் குறிப்பிட்ட போது அவரே முதன் முறையாக அதனை “இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போர்” என்று அழைத்தார். ஆங்கிலேயர்கள் அமைத்த இரயில்வே பாதைகளைக் குறித்து எழுதும்போது அதுவே அவர்களின் சாம்ராஜ்யத்தை எதிர்காலத்தில் ஒருநாள் மூடுவதற்காக அவர்கள் தோண்டும் இடுகாட்டுப் படுகுழி என்றார். (எவ்வாறெனில், அந்த ரயில்வே இந்தியாவையும் சுதந்திரப் போராட்டத்தையும் ஒன்றிணைத்தது). சாபகேடான இந்திய சாதிய முறைமையை “உறைந்து போன வர்க்கச் சமூகம்” என அவர் வர்ணித்ததன் பொருள், அந்த முறைமையில் எந்தவிதமான மாற்றமும் சாத்தியமில்லாத ஒன்று என்பதே; காரணம் அச்சமூகத்தில் மனிதனின் சமூக அந்தஸ்து அவன் அல்லது அவளின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதே.

இறந்த தன் குழந்தைக்குச் சவப்பெட்டி வாங்கவும் வக்கற்று வறுமையில் வாழ்வைக் கழித்த மார்க்ஸ்தான் உலகெங்கும் உள்ள ஏழை உழைப்பாளி மக்களுக்கு, நம்பிக்கை ஏதுமற்ற மக்களுக்கு நம்பிகையை அளித்து, கம்யூனிஸ்ட் அறிகையில் அறைகூவி அறிவித்தார்:

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை, பசி பட்டினி ஏழ்மை என்ற அடிமைச் சங்கிலிகளைத் தவிர! நீங்கள் வெல்வதற்கான பொன்னுலகம் உண்டு!”

டாக்டர் அம்பேத்கர் வாழ்வும் பணியும்

இந்த நிகழ்முறையை மேலும் முன்னெடுத்துச் சென்ற டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஒரு முறை, “மக்களுக்கான அதிகாரம்தான், உண்மையில் அதிகாரம்” என்று செம்மாந்து உரைத்தார். 

டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் மத்திய இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள சிறிய மாவ் நகரின் அம்பாவாதே என்ற கிராமத்தில் ஏழ்மையான தலித் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் காலங்களில் தலித் சிறுவர்கள் பள்ளிக் கூடங்களில் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அம்பேத்கரின் தந்தை பிரிட்டீஷ் இராணுவத்தில் பணியாற்றியதால் தன் குழந்தைகளுக்கான கல்வியைத் தர எவ்வாறோ முயன்று படிக்க வைத்தார்.

 அவரது 14வது குழந்தையான பீம்ராவ், உயர்சாதி மக்களின் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தே கல்வியைப் பூர்த்தி செய்தார். பள்ளியில் உயர்சாதி மாணவர்கள் பீமாவுடன் (இளம்வயதில் அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டார்) வகுப்பறையைப் பகிர்ந்து கொள்ள மறுத்தனர். வகுப்பின் தண்ணீர் பானையைத் தொட அனுமதி மறுக்கப்பட்டதால் நாள் முழுவதும் தாகத்தோடே நடைவழியில் உட்கார்ந்து வகுப்பறை ஜன்னல் வழியே பாடங்களைப் படித்தார். இது எவ்வாறாயினும், அவரது ஆசிரியர்கள் அவரைப் பெரிதும் உற்சாகப்படுத்தினர். பின்னர் இந்தியத் தாயின் புதல்வர்களில் மிகமிக கல்வி கேள்விகளில் உயர்ந்ததொரு புதல்வனாக கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து (முனைவர்) டாக்டர் பட்டத்தையும், லண்டன் பொருளாதாரக் கல்விக் கூடத்திலிருந்து D.Sc எனும் ஆய்வறிஞர் பட்டத்தையும் பெற்றார்.  

தனது வாழ்நாளில் டாக்டர் அம்பேத்கர் சுமார் ஐம்பதாயிரம் நூல்களுக்கு மேல் படித்துள்ளார் என்பார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு குழுவின் உறுப்பினர்களான கற்றறிந்த பல அறிஞர்களுடன், அக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் பணியாற்றி அரசியலமைப்புச் சட்டத்தை இறுதிசெய்தார். அவரது உழைப்பால் உருவான அரசியலமைப்புச் சட்டம், காலத்தின் சோதனைகளைத் தாண்டி, அதன் மதிப்புறு நல்ல அம்சங்களுக்காகப் புகழப்படும் ஒன்றாகச் செம்மாந்து நிற்கிறது. இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்தில் தலைச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 

அவரது புகழ்பெற்ற மொழிதான், “சமுதாய மக்களின் ஒன்றிணைப்பு இல்லாமல், அரசியல் ஒற்றுமையைச் சாதிப்பது முடியாத ஒன்று.”

 தலித் பிரிவினருக்கு (சூத்திரர்கள், தீண்டத்தகாதோர்) மறுக்கப்பட்ட சமஸ்கிருத மொழியைக் கற்று பாண்டியத்தோடு விளங்கிய அம்பேத்கர் வேதங்களையும் மனுஸ்மிருதியையும் கட்டுடைத்து மூடப்பட்ட அதன் மாயத் திரையை நீக்கி அம்பலப்படுத்தினார். மனித மாண்பைக் குலைத்து, குறிப்பாகப் பெண்களையும் தலித்களையும் கீழ்மைப்படுத்தி, கல்வி கற்பதிலிருந்து அவர்களை விலக்கி வைத்த மனுஸ்மிருதியை எரிக்கும் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது.

சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகத் தம் வாழ்நாள் முழுவதும் அண்ணல் அம்பேத்கர் தொடர்ந்து போராடி வந்தார். அனைவருக்குமான சமத்துவமான உரிமை கோரி 1927 டிசம்பரில் மகத் என்ற இடத்தில் அவர் நடத்திய சத்யாகிரகம் புகழ்பெற்றது. அந்தப் போராட்டம் இயற்கை ஆதாரங்களிலிருந்து சுத்தமான தண்ணீரைப் பெறுவது உள்ளிட்ட மனித உரிமைகளுக்கானது. அந்த இயக்கத்தின்போது டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த பின்வரும் தீர்மானங்களிலிருந்து அவரது நோக்கங்களையும் இலட்சியங்களையும் புரிந்து கொள்ள முடியும்: அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம், அனைவரது மனித உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது, மக்களுக்கு அதிகாரம், அனைவருக்கும் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, தொழிலாள வர்க்கத்திற்கு, உழைப்பிற்கு மரியாதை.

“எந்தவொரு நாடும் தனது மிக ஏழைகள் மற்றும் நலிந்த சிறுபான்மையினரை எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படும்” என அவர் பிரகடனம் செய்தார். அனைத்து பெரும் ஆளுமைகள் போலவே அம்பேத்கரும் மலைபோல எழுதிக் குவித்தார். பலதுறை சார்ந்த விரிந்த பல்வேறு பொருள் பற்றிய அவரது எழுத்துகளில் சில வருமாறு: தீண்டத்தகாதோரின் துயரங்கள், மகர் மற்றும் அவர்களது தேசம், மொழிவாரி மாநிலங்கள், சாதியை ஒழிப்பது, அரசும் மைனாரிட்டிகளும், இந்தியப் பிரிவினை (1940), இந்துயிசத்தின் புதிர்கள், புத்தரும் அவரது தம்மபதமும் (1950).

தமது வாழ்நாள் முழுவதும் (தலித் மக்களுக்கு நியாயம் பெற வேண்டி) இந்து சமுதாயத்தைச் சீர்திருத்த முயன்று பார்த்த பிறகு இறுதியாக டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு விலகினார். 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் தமது இரண்டு லட்சம் ஆதரவாளர்களோடு அவர் நாக்பூரின் புகழ்பெற்ற தீக்‌ஷா பூமியில் புத்தமதத்தைத் தழுவினார். இந்து மதத்தின் கொடுமையான சாதிய ஒடுக்கு முறையின் அடிமைத் தளையிலிருந்து லட்சக் கணக்கான விளிம்புநிலை தலித் மக்களை அவர் விடுவித்தார்.

இந்தத் தேசத்தின் ஆண்களும் பெண்களும் விடுதலை பெற கல்வி அறிவு பெறுதலே முதன்மையான முக்கியத்துவம் உடையது எனக் கருதினார் டாக்டர் அம்பேத்கர். இந்திய மக்களுக்கு அவர் வழங்கிய மந்திரம், “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் ”

வரலாற்றையும் சமூக நிலைகளையும் விளக்க மார்க்சும் அம்பேத்கரும் விஞ்ஞான முறைகளையே பின்பற்றிய பொருள்முதல்வாதிகள். பழைய சமூக அமைப்புகளைப் பிரித்தெறிந்து புதிய சமூகத்தை நிர்மாணிக்க விரும்பியவர்கள். இருவருமே கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தந்து மனிதர்களிடையே பாலினம் உட்பட எல்லாவித சமத்துவத்திற்காக நின்றவர்கள். 

சூழும் உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள மார்க்ஸ் “இயக்கவியல்” கோட்பாட்டை முன்வைத்தார். அவர் தனக்குமுன் இருந்த பொருள்முதல்வாத அறிஞர்களின் படைப்புகளின் மீது தொடர்ந்து தனது ஆய்வுகளை நடத்தி மனித சமூக வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை விளக்க விஞ்ஞான முடிவுகளை வந்தடைந்தார். அப்படி வந்ததுதான் ‘வரலாற்றுப் பொருள்முதல் வாதம்’; அந்தக் கோட்பாட்டைக் கொண்டு மனிதகுல சமூகம் மிகவும் புராதன நிலையிலிருந்து மிகவும் முன்னேறிய நிலைக்குப் பரிணாமம் அடைந்ததை அவர் நமக்கு விளக்கினார். இதனை விளக்கும்போது, ‘மனிதன் கடவுளால் தனியாகப் படைக்கப்பட்ட ஒரு மிருகம்’ என்ற நிலைபாட்டை உடைய இறையியல் கோட்பாடுகளுக்கு மார்க்ஸ் சவால் விடுத்தார். டார்வினைப் போலவே மார்க்சும் மனிதன் என்பவன் (கடவுளால் படைக்கப்பட்டவன் அல்ல, மாறாக) இயற்கை பரிணாமமாக, இயற்கை சக்திகளாலும் மனிதனின் சொந்த தாக்குப் பிடித்தல் மற்றும் போராட்டத்தால் வடிவமைக்கப்பட்டவன் என்றே கருதினார்.  

குடிமக்கள் விஞ்ஞான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவும் விஞ்ஞான பகுப்பாய்வின் மூலம் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் டாக்டர் அம்பேத்கர் அழைப்பு விடுத்தார். அனைத்துவிதமான மூட நம்பிக்கை மாய மந்திரச் சக்திகளையும் அவர் நிராகரித்தார்; அத்தகைய கோட்பாடுகளைக் கேள்வி கேட்டு வாழ்நாளெல்லாம் அவர் பொருள்முதல்வாதியாகத் திகழ்ந்தார். டார்வின் கோட்பாட்டைப் பின்பற்றி டாக்டர் அம்பேத்கரும் இனங்கள் அல்லது சாதிகளுக்கு இடையே எவ்வித பாகுபடுத்தலையும் நிராகரித்தார். இந்த அம்சத்தைப் பொருத்தவரையில் மார்க்சும் அம்பேத்கரும் ஒரே பக்கம் நின்றனர். 

மார்க்ஸ், பாட்டாளிகளை ஒன்று சேரவும் அனைத்துவித பொருளாதாரச் சுரண்டலும் அற்ற புதிய உலகைப் படைக்கப் போராடவும் அழைத்தார். அவரது புதிய சமூகம் ‘சோஷலிச சமுதாயம்’ என அழைக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் அரசு சோஷலிசத்தை (ஸ்டேட் சோஷலிசம்) ஆதரித்தார். உற்பத்திச் சாதனங்கள் அரசின் உடைமையாய் இருப்பதை அவர் ஆதரித்தார். இவ்வகையிலும் அவர்கள் இருவரும் மீண்டும் ஒரே பக்கத்தில். 

பொருளாதாரப் புரட்சியைத் தவிரவும், இந்தியாவில் சமூகப் புரட்சிக்கு டாக்டர் அம்பேத்கர் அழைப்பு விடுத்தார்; சமூகப் புரட்சியின் மூலம்தான் சாதிய முறைமையின் இரும்புச் சுவர்களைத் தகர்த்துச் சமத்துவ அடித்தளத்தில் ஒரு சமூகத்தைக் கட்டமைக்க முடியும் என்றார். அத்தகைய சமூகப் புரட்சியைக் கல்வியின் மூலம் கொண்டுவர விரும்பினார். மார்க்சும் அவரைப் பின்பற்றியவர்களும் ஜனநாயகப் புரட்சி குறித்து எழுதினார்கள்; அரசியல் புரட்சியின் காரணமாய் விளைந்த உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாறுதல்களுக்குப் பிறகு ஜனநாயகப் புரட்சி தவிர்க்க முடியாதது. உற்பத்திச் சாதனங்கள் சோஷலிசமயமானதற்குப் பிறகு சுரண்டல் முடிவுக்கு வரும் என மார்க்சியவாதிகள் நம்புகிறார்கள். தொழிலாளர் கைகளில் பொருளாதார அதிகாரம் வந்தால், தானே சுரண்டல்களின் அனைத்துச் செயல்முறைகளும் உடைந்து நொறுங்கும். 

இந்திய நிலைமைகளைப் பொருத்தவரை, (அரசியல் மூலமாக) ஒரு பொருளாதாரப் புரட்சியோடு ஒன்றிணைந்த சமூகப் புரட்சி, சாதிய முறைமையின் அச்சுறுத்தல்களை ஒழிக்கத் தேவைப்படுகிறது என்று நாம் கூறலாம். இதன் பொருள் இந்தியாவில் மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் இருவரும் நமக்குத் தேவை. இந்தியாவில் தொழிலாளர்கள் என்றால் அது தலித்கள் மற்றும் ஆதிவாசிகளையும் உள்ளக்கியது; அவர்கள் பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக அந்தஸ்து மறுப்பு இரண்டினாலும் துன்பப்படுகிறார்கள்.  

சிந்தனைகளில் ஒரே போன்ற ஒத்ததன்மைகள் பல இருப்பினும் மார்க்சியம் அம்பேத்கரியம் இரண்டிற்கும் இடையே ஓர் அம்சத்தில் வேறுபாடு உள்ளது. அது மதம், சமயம் குறித்தானது! புரட்சிப் பாதையில் சமயக் கோட்பாட்டு நூல்களால் ஆகப் போகும் உதவி யாதொன்றும் இல்லை என்பது மார்க்ஸ் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கை. ஒரு பொருள்முதல்வாதச் சிந்தனையாளராக மார்க்ஸ், ஏனைய அனைத்து விஞ்ஞானிகளைப் போலவே, அனைத்து அற்புதங்கள் மற்றும் இயற்கை இயல்பு தாண்டிய மாய மநதிர நிகழ்வுகளை நிராகரித்தார். மார்க்ஸ் மற்றும் மார்க்சியவாதிகளைப் பொருத்தவரையில் சமயம் என்பது, புரட்சிப் பாதையில் எவ்விதப் பொருத்தமோ சம்பந்தமோ இல்லாத, அதிக பட்சம் ஒரு தனி நபரின் சொந்தத் தேர்வு, அவ்வளவுதான்.  

சமயம் குறித்து டாக்டர் அம்பேத்கர் வேறுவிதமான கருத்தைக் கொண்டிருந்தார். பொருள் முதல்வாதியாக இருந்த போதிலும், அவரைப் பின்பற்றுபவர்களுக்காக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கருக்கு, ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக, ஒரு மதம் தேவைப்பட்டது. மூவாயிரம் ஆண்டுகளாக இந்து சமூகத்தில் தலித்கள் அனைத்துவித மதச் சடங்குகளிலிருந்தும் ஒதுக்கித் தள்ளி வைக்கப்பட்டனர். (தலித்களைச் ‘சூத்திரர்’கள், அதாவது தீண்டத்தகாதோர் என்றழைத்தனர்). இந்தியாவில் மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாக இங்கு இல்லை. ஆலையத்திற்குள் நுழைவது என்பது தலித்களைப் பொருத்தவரை மிகப் பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. கல்வி மறுக்கப்பட்ட சூழ்நிலையில், சமூக மறுப்புக்கு ஆளான இம்மக்களுக்குப் பொருள்முதல் வாதக் கண்ணோட்டத்தில் இந்த உலகைப் புரிந்து கொள்வது சிரமம். பிராமணிய இந்து சமூகம், சமூக அமைப்பை அவ்வாறுதான் கட்டமைத்துள்ளது; அதில் சூத்திரர்கள் மதம் சார்ந்த பழக்க வழக்கங்களில் ஈடுபட அனுமதிக்கவில்லையாயினும், எப்போதும் அவர்கள் பிராமணர்கள் நடத்தும் சடங்குகளின்படியே நடத்தப்பட்டார்கள்! பிராமணிய இந்து சமூக அமைப்பு அத்தகையது.

இத்தகைய மத அடிமைத்தன விலங்குகளை டாக்டர் அம்பேத்கர் உடைத்தார். நவீனக் கல்வி, பொருள் முதல்வாதப் பகுப்பாய்வை செய்யும் சக்தியை அவருக்கு வழங்கியது. பரந்து விரிந்த எண்ணிக்கையிலான பாட்டாளிகள் மீது ஒரு சிறு இனக்குழு மேல்சாதியினர் செலுத்திய ஆதிக்கத்தை உடைக்க டாக்டர் அம்பத்கருக்கு விஞ்ஞானப் புரிதல்களுக்கான கருவிகள் செயலாற்றல் தந்தன.  

தலித் மக்களுக்கு நியாயமும் சமத்துவமும் பெற வேண்டி இந்து சமுதாயத்தைச் சீர்திருத்த இந்து மத அமைப்புகளின் தலைவர்களைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்ட பிரிவினர் அவரோடு எதையும் அனுசரிக்க மறுத்தது. இறுதியாக டாக்டர் அம்பேத்கர் எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து, சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை மற்றும் அநீதியை ஒழிக்க, பெரும் ஆதரவாளர்களோடு இந்து மதத்தை விட்டு விலகினார். 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் அவர் நாக்பூரின் புகழ்பெற்ற தீக்‌ஷா பூமியில் தமது இரண்டு லட்சம் ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவினார். இந்து மதத்தின் கொடுமையான சாதிய ஒடுக்கு முறையின் அடிமைத் தளையிலிருந்து லட்சக் கணக்கான விளிம்புநிலை தலித் மக்களை அவர் விடுவித்தார். இந்தியாவில் பௌத்தத்தை மீண்டும் மலரச் செய்தவர் என்ற பெருமை நியாயமாக டாக்டர் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது.

உண்மையில் டாக்டர் அம்பேத்கரே “மார்க்ஸா அல்லது புத்தரா?” என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு மார்க்சியதிற்குப் பதிலாக ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அதில் விளக்கியுள்ளார். அந்தக் கட்டுரை மிகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடியது. மார்க்சியம் ஒரு மதமல்ல. பௌத்தமோ (கடவுள் அற்ற) ஒரு மதம். பிறகு ஏன் அம்பேத்கர் இந்தப் புத்தகத்தை எழுதினார்? தன் ஆதரவாளர்களுக்கு இதைத் தெளிவுபடுத்த விரும்பி, “ஒரு பொருள்முதல்வாதியாக, விஞ்ஞான மனோபாவம் உடைய மனிதராக இருந்தும் ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார் எனில், சனாதன இந்துயிசத்திற்கு எதிரான ஒரு மதமாக அதைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அவர் கூறினார்.

ஆனால் அரசியல் வெளியைப் பொருத்த அளவில் அவருக்கு மார்க்சியத்தோடு எந்தப் பிரச்சனையும் இல்லை. 

“சமூக அமைப்பில் தவிர்க்க முடியாத பின்விளைவாக அதிகாரப் போட்டிகளையும் வர்க்கத்தையும் புத்தர் அங்கரித்தபோதும், தனிநபர் ஆன்ம ஈடேற்றம் அடைவதில் கவனம் குவிப்பதையே அவர் தேர்ந்தெடுத்தார்” என்று டாக்டர் அம்பேத்கர் தனது காட்மண்டு உரையில் மேலும் விளக்கியுள்ளார். 

வர்க்கப் போராட்டத்தின் பிரச்சனைகளைக் கையாளுதல், பொதுச் சொத்து மற்றும் தனிச் சொத்து குறித்தான பிரச்சனைகள், உலக ஒழுங்கு மறுகட்டமைப்பு மீதான பார்வைகள் போன்ற மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படையான சில கருதுகோள் நம்பிக்கைகள் அப்படியே இறுக்கமாகவும் பொருத்தப்பாடு உடையதாகவும் நீடிக்கிறது என்பதை டாக்டர் அம்பேத்கர் ஒப்புக் கொள்கிறார். 

நாம் என்ன செய்ய வேண்டும்?

தொகுத்துக் கூறுமிடத்து, ஒரு வர்க்க சமூகத்தில் பிரிவினைகள் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்திற்கு மிகவும் உவப்பான ஏற்புடையதாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். சமூகத்தின் மையத்திலிருந்து விலக்கி வைத்து, எப்போதும் உழைப்பாளர்களைக் கைகட்டி இருப்பவர்களாக வைத்திருக்க உலகம் முழுவதுமுள்ள முதலாளிகள் மதம், பிராந்தியம் மற்றும் மொழி அடையாள வேறுபாடுகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்; மிக கவனமாக அவர்கள் ஒருபோதும் கிளர்ச்சி செய்ய எழுந்துவிடக் கூடாது என்பதையும் பார்த்துக் கொள்கிறார்கள். 

இந்தியப் பாட்டாளிகள் இந்த அபாயத்தின் உண்மை பற்றி விழிப்புடன் இருத்தல் வேண்டும். சகல வடிவங்களிலான சுரண்டல்களையும் எதிர்த்த போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையே உயர்ந்தபட்ச முக்கியத்துமுடையது. இந்தியா பல்வேறு வேறுபாடுகளின் பூமியாக இருப்பதால் தொழிலாளர் வர்க்கத் தலைவர்கள் அனைத்து பிளவுபடுத்தும் அரசியலிருந்து விலகி இருக்க இது குறித்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் குறித்த விவாதத்தைப் பாட்டாளிகளின் ஒற்றுமை என்ற வெளிச்சத்தில்தான் பார்க்க வேண்டும், நிச்சயம் வேறுமாதிரியாக இருந்துவிடக் கூடாது. பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்த மார்க்சிய கருத்துகள், சாதியப் பிளவுபடுத்தல்களை, பிரித்துவைத்தலை ஒழிக்க வேண்டும் என்பதற்கான அம்பேத்கரின் சமூக மாற்றச் சிந்தனை கருத்துகளோடு ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஒன்றன் பின், ஒன்றை அடுத்து ஒன்றல்ல; ஏக காலத்தில்! 

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான சுதந்திர இந்திய அனுபவம் ஒரு முக்கிய பாடத்தை நமக்குக் கற்பித்துள்ளது; சிகப்பும் நீலமும் ஒன்று சேர வேண்டும்; சுரண்டல்காரர்களை வீழ்த்த மார்க்சியமும் அம்பேத்கர் கருத்துகளும் ஒன்றாய் வரவேண்டும். அவ்வாறு ஒன்றுபடவில்லை எனில், சுரண்டல்காரர்கள் வலிமையானவர்கள் நினைவில் கொள்க. பிளவுபட்ட தொழிலாளர் வர்க்கம் ஒருபோதும் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது! மார்க்ஸ் மற்றும் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் தம்முள் ஒற்றுமையை ஏற்படுத்த இயலவில்லை எனில், வரலாறு அவர்களை மன்னிக்காது. எந்தச் சக்திக்கும் முன்னால் நமது ஒற்றுமை அசாத்திய வலிமையானது!

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை என்றும் வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (மே16—22) இதழ்

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

 

Saturday 8 May 2021

சுகாசினி சட்டோபாத்யாய்

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -30

சுகாசினி சட்டோபாத்யாய் :

பன்முகத் திறன் வாய்ந்த கம்யூனிஸ்ட் 

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜன.17--.23 இதழ்)

சுகாசினி சட்டோபாத்யாய் வரலாற்றில் நன்கு தெரிந்த பெயர், ‘கம்யூனிஸ்ட் ஆன முதல் பெண்’ என்றும் சொல்லப்படுபவர். பலதுறைகளில் திறமை வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்; தொடர்ச்சியாகப் பாரம்பரிய கட்டுப்பாடுகள், சாதி தொடர்பான மற்றும் பழமைவாதம் உட்பட்டத் தளைகளை உடைத்தவர். அவருடைய தாய் பரத சுந்தரி தேவி, தந்தை அங்கோர் நாத் சட்டோபாத்யாய் –அவர் ஒரு பிரபலமான விஞ்ஞானி மற்றும் ஹைத்தராபாத் கல்லூரி முதல்வர். தேசிய இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் நிர்வாகம் அவரை ஆந்திரா மாநிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றி, கல்கத்தாவில் வீட்டுச் சிறையில் வைத்தது; அங்கேயே அவரது இறுதியும் நேரிட்டது. சரோஜினி நாயுடு, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய், மிருணாளினி, ஹரிந்திர நாத் மற்றும் பிரபலமான சிலரும் புகழ்வாய்ந்த சட்டோபாத்யாய் குடும்பத்தினராவர். சகோதர சகோதரிகள் எட்டுபேரில் சுகாசினி கடைக்குட்டி இளையவர்.

இங்கிலாந்து, ஜெர்மனி செல்லுதல்

ஆரம்பக் கல்விக்குப் பிறகு அவர் ஏசிஎன் நம்பியாரை 1919ல் மணம் முடித்து இங்கிலாந்து புறப்பட்டார். மேல்படிப்புக்காகச் சுகாசினி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர, நம்பியார் இதழியலை எடுத்துக் கொண்டார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி சென்றனர். அங்கு பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மொழி கற்றதுடன், மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டு ஆங்கிலமும் கற்பித்தார். 

விரைவில் பெர்லினில் சுகாசினி இடதுசாரி மற்றும் மார்க்சிய இயக்கங்களுடன் தொடர்பு கொண்டார். அவருடைய மூத்த சகோதரர் வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் அவர் மீது ஆழ்ந்த செல்வாக்கு செலுத்தினார். தன் சகோதரரைச் சுகாசினி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்லினில்தான் சந்திக்கிறார். ஏனெனில் சுகாசினி பிறந்த உடன் வீரேந்திரநாத் பெர்லினுக்குச் சென்று விட்டார். ஆக்னஸ் ஸ்மெட்லே எனும் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் அவர்களது சந்திப்பை விரிவாக விவரித்துள்ளார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் மற்றும் காமின்டர்ன் அமைப்புடன் வீரேந்திரநாத் தொடர்பில் இருந்தார். 1920 அக்டோபர் தாஷ்கண்டில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை நிறுவ முயன்று அரைகுறையாய் முடிந்து வெற்றி பெறாதுபோன முயற்சியில் பங்கேற்றவர் வீரேந்திரநாத். பிரபல எழுத்தாளர் சாமசெட் மாம் எழுதிய புகழ்பெற்ற ‘Giulia Lazari’ என்ற தலைப்பிலான கதையில் அவரும் ஒரு முக்கிய பாத்திரம். 

மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டதன் வாயிலாகச் சமூக ஜனநாயக, கம்யூனிச மற்றும் அராஜகவாத பார்வையிலான கருத்துகளோடுச் சுகாசினிக்கு அறிமுகம் ஏற்பட்டது. காந்தியச் செல்வாக்கிலிருந்து விடுபட்ட சுகாசினி மார்க்சியத்தைத் தழுவினார். 

கீழைப் பாட்டாளிகளின் பல்கலைக்கழகத்தில்

விரைவில் ‘மாஸ்கோவின் கீழைப் பாட்டாளிகள் பல்கலைக்கழக’த்தில் சுகாசினி சேர்ந்தார். அப்பல்கலைக் கழகத்தில் சேர உதவும்படி எம்என் ராய்க்கு 1927 ஆகஸ்ட்டில் வீரேந்திரநாத் கடிதம் எழுதினார். எம்என் ராய் உதவிட சுகாசினி அதில் சேர்ந்தார். இந்த நிகழ்வுகளின் ஊடே சுகாசினிக்கும் நம்பியாருக்கும் இடையே ஏற்பட்ட மன விரிசல், மண முறிவில் முடிந்தது. 

இந்தியா திரும்புதல் 

மாஸ்கோவிலிருந்து சுகாசினி 1928 டிசம்பர் 17ல் பம்பாய் வந்தார். அவரோடு உடன்வந்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட், லெஸ்டர் ஹட்சின்சன், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். பம்பாயின் ஹர் என்னுமிடதில் அவர் சுகாசினி மற்றும் அவரது சகோதரி மிருணாளினியுடன் தங்கினார். சுகாசினி ‘ஸ்பார்க்’ (தீப்பொறி) என்னும் இதழில் பணியாற்றினார். அவரோடு அங்கு பணியாற்றிய ஹட்சின்சன் ’நியூ ஸ்பார்க்’ இதழை வெளியிட்டு வந்ததார். விரைவில் மீரட் சதி வழக்கில் 1929ல் கைதானார். மீரட் கைதிகளுக்கு உதவிட சுகாசினி எண்ணிறைந்த பணிகளைச் செய்தார். டாக்டர் அதிகாரி, ஹட்சின்சன், பென் பிராட்லே, பிலிப் ஸ்ப்ராட் மற்றும் பிற கைதிகளைச் சிறையில் சந்தித்ததாகச் சுகாசினி மீரட்டிலிருந்து 1929 ஜூன் 20ல் எழுதினார். இது குறித்து அவர் சரோஜினி, மிருணாளினி மற்றும் பிறரோடு கடிதத் தொடர்பு கொண்டார். அங்கே கீழைப் பல்கலைக்கழகத்தில் மாஸ்கோவில் படித்த அவருடைய சகோதரி சுனாலினி பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

இக்காலத்தில் 1929ல் சுகாசினி நவ ஜவான் சபா அமைப்பின் அகில இந்திய மாநாட்டின் தலைமையேற்கவும் செய்தார். 

சிபிஐ கட்சியில் இணைதல்

1929ல் சுகாசினி சட்டோபாத்யாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னாளில் அவர் லிட்டில் பாலே நடனக்குழுவை அமைக்க உதவி செய்து ‘இந்திய மக்கள் நாடக மன்ற’ (IPTA)த்தில் தீவிரமாகச் செயலாற்றினார். 1938ல் ஆர்எல் ஜம்பேகர் என்ற பம்பாய் தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளரைத் திருமணம் செய்து கொண்டார். ‘சோவியத் யூனியன் நண்பர்கள்’ அமைப்பை (FSU) உருவாக்கும் பொறுப்பைச் சுகாசினி மற்றும் சிலரிடம் கட்சி ஒப்படைத்தது. நாஜி ஜெர்மனி சோவியத் யூனியனுக்குள் அத்துமீறி ஆக்ரமித்த நிகழ்வுக்குப் பிறகு சோவியத் நண்பர்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நாசிக் சிறையிலிருந்து ஜம்பேகர் 1942ல் விடுதலையானதும் சோவியத் நண்பர்கள் அமைப்புப் பணிகளில் உதவினார். அவர்களோடு ஷாஷி பகாயாவும் இணைந்து கொண்டார்.  அவர் காந்தியின் அறைகூவலை ஏற்று பூனா ஃபெர்குசன் கல்லூரியிலிருந்து விலகி சபர்மதி ஆஸ்ரமம் சென்றார். பின் அலகாபாத்தில் எஸ்ஜி சர்தேசாயுடன் சேர்ந்து கொண்டார். மார்க்ஸியத்தோடு அறிமுகம் ஏற்பட அவர்களுக்கு நேரு உதவினார். 

லாகூரிலும் அமிர்தசரஸிலும் பகாயா மற்றும் டாங் குடும்பங்களோடு சுகாசினி மிகவும் நெருக்கமாக இருந்தார். விமலா பகாயா, ரவி பகாயா மற்றும் சத்யபால் டாங் முதலானோருடன் நெருக்கமாகப் பழகினார். அவர் லாகூருக்குச் சென்று, அங்கே கங்கா ராம் பள்ளியின் முதல்வராக இருந்த  தனது சகோதரி மிருணாளினியுடன் தங்குவது வழக்கம். இரண்டு சகோதரிகளும் தங்கள் வட்டங்களில் (‘பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்’ என்ற) ‘சர்வதேசிய கீத’த்தை (‘The Internationale’) கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

1944 பம்பாயில் சோவியத் நண்பர்கள் அமைப்பின் முதலாவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. சரோஜினி நாயுடு தலைவராகவும் ஜம்பேகர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுகாசினி அந்த மாநாட்டை ஒருங்கமைப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார். 

1947 நியூடெல்லியில் தெற்காசிய உறவுகள் மாநாடு நடைபெற்றது. பண்டித நேருவின் முன்முயற்சியில் சுகாசினியும் ஜம்பேகரும் அம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர். சரோஜினி நாயுடு தலைமையேற்ற மாநாட்டில் மகாத்மா காந்தியும் உரையாற்றினார். 

அமீர் ஹைதர் கானுக்கு உதவுதல்

மேலே குறிப்பிட்டவாறு இந்தியா முழுவதிலுமிருந்து 32 தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் அமீர் ஹைதர் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தாலும் போலீஸ் வலையிலிருந்து அவர் தப்பினார். அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து திருப்பி இருந்த அவர் சுகாசினியின் இடத்தில் ரிஸ்வியுடன் தங்கியிருந்தார். அங்கே அவர் டாங்கே, காட்டே, அதிகாரி முதலான தலைவர்களைச் சந்தித்தார். அவர் பம்பாயில் தங்கியிருப்பது பாதுகாப்பானதில்லை என்று கூறிய சுகாசினி அவரைக் கோவா செல்லும்படி ஆலோசனை கூறினார். அமீர் ஹைதரிடமும் இத்தாலியக் கடவுச் சீட்டு இருந்ததால் அதைப் பயன்படுத்தி கோவா சென்று, அங்கிருந்து நேப்பிள்ஸ் வழியாக ஜெர்மனி சென்றார். இதற்குச் சுகாசினி அவருக்குப் பெரும் உதவி செய்தார். 

1931ல் நாடு திருப்பிய அமீர் ஹைதரை, பம்பாய் பாதுகாப்பானதில்லை என்பதால், மெட்ராஸ் செல்லும்படி கட்சி பணித்தது. மீண்டும் இப்போது சுகாசினியே பணத்திற்கு ஏற்பாடு செய்து உதவி செய்தது மட்டுமின்றி மெட்ராஸில் அவர் தங்கவும் ஏற்பாடு செய்து தந்தார். அங்கே அவர் கைது செய்யப்பட்டபோது சுகாசினி, அவரது சகோதரி மற்றும் ரணதிவே ஆகியோரை (வழக்கு முதலியவற்றில்) பாதுகாப்பு ஏற்பாடு செய்துதர கட்சி அனுப்பி வைத்தது.

மீரட்டிலிருந்து விடுதலையானதும் அடுத்து ஆற்றவேண்டிய பணிகள் பற்றி ஆலோசிக்க  காட்டே மற்றும் மிராஜ்கர், சுகாசினியையும் ஹைதரையும் சந்தித்தனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து வேலை செய்ய கட்சி முடிவு செய்தது. சுகாசினியும் காங்கிரஸில் சேர்ந்தார். 1940ல் நடைபெற்ற காங்கிரஸ் ராம்கார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சுகாசினி ஹைதருக்குப் பணம் தந்து உதவினார். 

வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் துயர முடிவு 

சுகாசினியும் ஜம்பேகரும் 1947ல் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியன் பயணம் மேற்கொண்டனர். 1937ல் காணாதுபோன வீரேந்திர நாத் குறித்து அவர்கள் விசாரிக்கத் தொடங்கினர். அதே நேரத்தில் அபானி முகர்ஜியும் காணாது போயிருந்தார். அவர்கள் இருவரும்  ஜெர்மனியைவிட்டுப் புறப்பட்ட பிறகு சோவியத் யூனியனில் நிரந்தரமாகத் தங்கினர். பண்டித நேரு பிரதமராக இருந்தபோது அவர்கள் இருவரையும் குறித்துச் சோவியத் அதிகாரிகளுடன் ஏராளமான முயற்சி செய்து விசாரித்ததில் சில உண்மைகள் கசியத் தொடங்கின. இன்று முழு உண்மைகளும் வெளிவந்து விட்டன.

அவர்கள் குற்றமேதும் இழைக்காவிட்டாலும் வீரேந்திரநாத்தும் அபானியும் ஸ்டாலினிய அடக்குமுறைக்குப் பலியாயினர். காரணம் கூறாமல் 1937ல் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த வருடம் 1938ல் அவர்கள் வெளிநாட்டுக் கைக்கூலிகள், எதிர் புரட்சியாளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்! தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குத் தங்கள் தரப்பை எடுத்துக்கூற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஸ்டாலின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் மரியாதை மீட்டெடுக்கப்பட்டது. அடுத்தடுத்த தருணங்களில் சோவியத் அதிகாரிகள் இந்த உண்மைகளை இந்திய அரசுக்குத் தெரிவித்தனர்.

ஆனால் சுகாசினியும் ஜம்பேகரும் விசாரித்த நேரத்தில் வீரேந்திரநாத் இருக்கும் இடமோ அல்லது மற்ற செய்திகளோ அவர்கள் அறியவில்லை.

BTR காலமும் குறுகிய அரசியல் பார்வையின் துயரங்களும்

சுகாசினியும் ஜம்பேகரும் ஐரோப்பாவிலேயே மூன்றாண்டுகள் தடைப்பட்டு தங்க வேண்டி நேரிட்டது; அடுத்த உத்தரவு வரை அவர்கள் இந்தியா திரும்ப வேண்டாம் என கட்சி அவர்களைக் கேட்டுக் கொண்டது. காரணம், சந்தேகம்! சுய அழிப்பு, பிடிஆர் சாகசப் பாதையைப் பின்பற்றியதன் விளைவாய் 1948 –50 காலத்தில் கட்சி அமைப்பு உருகுலைந்து போயிருந்தது. 1951ல் கட்சி புதிய தலைமையின் கீழ் வந்தது. சுகாசினியும் ஜம்பேகரும் இந்தியா திரும்பினர். அக்காலத்தில் அவர்கள் மீது அடிப்படையற்ற சந்தேகங்கள் சுமத்தப்பட்டன. பிடிஆர் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டிருந்தாலும், சந்தேகச் சூழல் விலகியபாடில்லை.

சுகாசினியும் ஜம்பேகரும் சோவியத் நண்பர்கள் அமைப்பு மற்றும் இந்திய சோவியத் கலாச்சார அமைப்பில் (இஸ்கஸ்) பணியாற்றினர். இந்த அமைப்புகளின் தலைமைப் பொறுப்புக்கு அவர்களை வரவிடாது ஒரு பொலிட் பீரோ உறுப்பினரும் வேறு சிலரும் தடுத்தனர். ஆனால் அவர்கள் கட்சியிலும் கட்சியின் வெகுஜன ஸ்தாபனங்களிலும் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். பின்னர் ஜம்பேகர் கட்சியின் “யுகாந்தர்” மராத்திய பத்திரிக்கையில் பம்பாயில் பணியாற்றினார். சுகாசினி கடுமையான நோய்க்கு ஆளானார். 

சீனா விஜயம் 

1954ல் சுகாசினியும் ஜம்பேகரும் சீனாவுக்கு விஜயம் செய்தனர். சீனாவின் தலைவர் மாசே துங் அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த வெகுசிலரில் சுகாசினியும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. அவர்கள் லியு ஷாவோசியையும் (Liu Shaochi) சந்தித்தனர். 

சுகாசினியின் பணியாற்றும் பாணி

சுகாசினி மிகத் திறமை வாய்ந்த தேர்ந்த பிரச்சாரகரும் அமைப்பாளரும் ஆவார். அவர் தனிப்பட்ட நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விவாதிப்பதைப் பயன்படுத்தி மக்களிடம் தன் செல்வாக்கைச் செலுத்தி, எண்ணிறைந்தவர்களை –குறிப்பாக இளைஞர்களை – சோவியத் நண்பர்கள் அமைப்பு, இஸ்கஸ் அமைப்பு மற்றும் கட்சிக்குக் கொண்டு வந்தார். அவர் பல கண்காட்சிகள், கருத்தரங்குகள், விவாதமேடை நிகழ்ச்சிகளை அமைத்து, திறமைவாய்ந்த பலர் மீது செல்வாக்குச் செலுத்தி ஈர்த்தார். சர்வதேசத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாடலான ‘சர்வதேசிய கீத’த்தை (‘The Internationale’) பிரச்சாரம் செய்து பரப்பிய ஆரம்ப காலத் தோழர்களில் சுகாசினியும் ஒருவர். அவருடைய சகோதரர் அதனை இந்தியில் மொழியாக்கம் செய்தார். சுகாசினி அந்தக் கீதத்தை பெர்லினில் பாடியிருக்கிறார்.  

தமது இறுதி ஆண்டுகளில் சுகாசினி சட்டோபாத்யாய் (ஜம்பேகர்) சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டார். 1973 நவம்பர் 26ம் நாள் முற்போக்கான அந்த வீர மங்கை இயற்கை எய்தினார்.

காசினியில் சுகாசினி புகழ் ஒளிவீசிப் பறக்கட்டும்! 

           என்றும் இசைப்போம் அவருக்குப் புகழ் அஞ்சலி!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

Tuesday 4 May 2021

மதம் குறித்துக் கம்யூனிசத்தின் அணுகுமுறை

காரல்மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

மதம் குறித்துக் கம்யூனிசத்தின் அணுகுமுறை

-- ரஜீம்வாலே

--நியூஏஜ் (மே 2—8)

மதம் பற்றி கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறை யாது? அதனை அவர்கள் எதிர்க்கிறார்களா அல்லது சகித்துக் கொள்கிறார்களா அல்லது ஆதரிக்கிறார்களா அல்லது வெறுமே நடுநிலை வகிக்கிறார்களா? மதத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் அழிக்க எண்ணுகிறதா? மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையாளர்கள் கட்சி உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுகிறார்களா? இந்தக் கேள்விகள் மீது அதிக அளவில் தவறான புரிதல் நிலவுவது மட்டுமல்ல, சில கம்யூனிஸ்ட்கள்கூட இவ்விஷயங்கள் குறித்துக் குறுகிய பார்வையே கொண்டிருக்கிறார்கள். 

மதம் மற்றும் கடவுளுக்கு எதிரானவர்கள் கம்யூனிஸ்ட்கள், சோஷலிசம் ஒருநாள் மதத்தை அழித்துவிடும் என்றெல்லாம் பரவலான பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் இப்பிரச்சாரம் நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்டது. இன்று பிற்போக்கு மதவாத மற்றும் பழைமைவாத சக்திகள், அதனையே தொடர்ந்து மேலும் சுமந்து செல்கிறார்கள்.

ஆனால் உண்மைக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதிதீவிர இடது சூப்பர் புரட்சியாளர்களும்கூட எந்திரத்தனமான குறுகிய குழுவாதப் புரிதல்களால் முதலாளித்துவத்தைத் ’தூக்கி எறியும்’ இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘மதத்தை முதலில் போராடி வெளியேற்றி’ நாத்திகத்தை நிறுவுவது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்; இச்செயல் மூலம் வலதுசாரி சக்தியினருக்கே அவர்கள் உதவுகிறார்கள். 

தொழிலாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், கூலிகள், திரட்டப்படாத தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறுவணிகர்கள், கடைக்காரர்கள் என மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் திரளும் பொதுமக்களும் மதத்தை நம்புகிறார்கள்; எனவே, கம்யூனிஸ்ட் கட்சி மதத்தைத் தாக்குவது என்பது முட்டாள்தனமானது, நடைமுறைச் சாத்தியமற்றது மற்றும் கோட்பாட்டளவில் தவறானது. நம்முடைய போராட்டம் மதத்திற்கு எதிரானது அல்ல; மாறாக, இவ்வுலக வாழ்வு மற்றும் வானுலக மயக்கக் கற்பிதங்களுக்கு மூலகாரணமான சமூகப் பொருளாதார அடிவேர்களுக்கு எதிரானது. மதரீதியான நம்பிக்கைகளின் ஜனநாயக உரிமைக்காக நாம் போராட வேண்டும்.   

மதம் பற்றி மார்க்சும் ஏங்கெல்சும்

‘மக்களுக்கு அபின்’ என்ற காரல் மார்க்சின் பொன்மொழி, பரவலாக –ஏன் அவரது ஆதரவாளர்கள் உட்பட– பலராலும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அந்தச் சொற்தொடர் மிக நீண்ட மேற்கோளின் ஒரு பகுதி. (அதற்கு முன்னும் பின்னும் உள்ள பத்திகளை விட்டு விட்டுப் படித்தால் இப்படித் தவறான புரிதல் இடர்பாடு நேரிடும்). ’ஹெகலின் சட்டத் தத்துவம் மீதான விமர்சனப் பங்களிப்பு’ (‘Contribution to the Critique of Hegel’s Philosophy of Law’) என்ற காரல் மார்க்சின் ஆக்கத்தில், ஏன் மற்றும் எப்படி மதம் தோன்றியது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் அளிக்கும்போது அவர் அந்த நீண்ட பதிவை எழுதியுள்ளார். (மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ், மதம் பற்றி, மாஸ்கோ பதிப்பகம், 1976 பதிப்பு) 

மார்க்ஸ் கூறுகிறார், “(மதம் என்பது மறுதலையான, அதாவது தலைகீழான, உலகப் பிரக்ஞை ஆகும். ஏனெனில் மதத்தில் தலைகீழான ஓர் உலகமே காணப்படுகிறது.) மதம் என்பது அந்த உலகம் பற்றிய பொதுக் கொள்கை; அதன் பல்களஞ்சியச் சுருக்கத்தின் திரட்டு; அதன் தர்க்க நியாயத்தின் ஜனரஞ்ஜக வடிவம்; மேலான அதன் ஆன்மிக நிலையில் அதன் உற்சாகம், அதன் அற அங்கீகாரமாகும். அதன் மேன்மையான பிற்சேர்க்கை, அதன் உலகளாவிய ஆறுதல் மற்றும் நியாயப்படுத்தலின் ஊற்றுக்கண். அது மனித சாரத்தின் சாத்தியமற்ற கற்பனாபூர்வ அடைதல் நிலையாகும்…” (பக்கம் 38) இங்கே மார்க்ஸ் மதம் பற்றிய கோட்பாட்டை, உலகம் பற்றிய வெகுஜன விளக்கத்தை – (அதாவது இவ்வுலகில் கஷ்டப்படுபவர் மேலுலகில் இன்பமாய் இருப்பர் என்பது போன்ற உண்மையான உலகின் கற்பனாபூர்வ பிரதிபலிப்பை) விளக்குகிறார். அரசும் சமூகமும் உலகப் பிரக்ஞையின் தலைகீழான வடிவமாக மதத்தை உண்டாக்குகின்றன. (அதாவது இம்மண்ணுலகில் உள்ள பொருள்கள் அழியும், இன்பம் காலவரையறைக்குட்பட்டது, அது சிற்றின்பம் என்பனவற்றிற்கு மாறான அழியாத சாஸ்வதப் பொருட்கள், நீடித்த இன்பம், பேரின்பம் என்பது போன்ற மறுதலையான மேல் உலகக் கற்பனை) 

பொதுமக்களின் துன்பதுயரங்களை மதம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்றும்; மற்றும் அந்தத் துயரங்களுக்கு எதிரான போராட்டமாகவும் (மதம்) எப்படிச் செயல்படுகிறதென்றும் மார்க்ஸ் மேலும் விளக்கிறார்: “மதரீதியான துயரம் (அதாவது மதத்தில் இடம்பெறும் ஆத்ம அவலம்) என்பது ஒரேவேளையில் உண்மையான துன்ப துயரங்களின் வெளிப்பாடாகவும், அந்த உண்மையான துன்பதுயரங்களுக்கு எதிரான போராட்டமாகவும் அமைகிறது”. “மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆத்ம உயிர்ப்பற்ற நிலைமைகளின் ஆத்மா. அது மக்களின் அபின்” (மார்க்ஸ், மதம் பற்றி, பக்கம் 39). மேலும் மார்க்ஸ் கூறுகிறார்: “எனவே சரித்திரத்தின் கடமை என்பது …இந்த உலகின் உண்மைநிலையை நிலைநாட்டுவதே.” (அதே நூல்) இந்த இடத்தில் மார்க்ஸ் மானுட விடுதலைக்கான எதார்த்தமான புறநிலைமைகளைப் பற்றிப் பேசுகிறார். (அதாவது பொய்யான, மாயையான இன்பத்தினைத் தரும் மதத்திற்குப் பதிலாக மக்களுக்கு உண்மையான இன்பத்தைத் தர வேண்டும் என்று கோருவதே தவிர, அது மதத்தை அழிப்பது என்று பொருளாகாது.)

மதம் அபினாக இருக்கிறது என்கின்ற மேற்கண்ட செய்திக்கு முன்னும் பின்னும் மதம் பற்றிய ஒட்டுமொத்த ஆய்வுப் பரிசீலனையை மார்க்ஸ் எழுதியுள்ளார். பலநேரங்களில் வலியைக் குறைப்பதற்குப் பயன்படும் அபின் மருந்தாக மதம் பயன்படுத்தப்படுகிறது. எந்த இடத்திலும் மார்க்ஸ் மதத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை அல்லது அதன் அழிவு குறித்துப் பேசவில்லை. மாறாக, வரலாற்றுபூர்வமான சமூக பொருளாதார வேர்களைத் தேடி அடைகிறார். மக்கள் கூட்டத்தின் உண்மையான வாழ்க்கை எதார்த்த நிலைமைகளிலிருந்து அவர்களைத் திசைதிருப்ப மதத்தை ஒரு போதை வஸ்துவாக, அபினாகப் பிற்போக்கு பழமைவாதம் எப்படிப் பயன்படுத்துகிறது என மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மார்க்ஸியர்கள் அல்லாத பல சிந்தனையாளர்களும் மதத்தை ’அபின்’ எனக் குறித்துள்ளனர். அப்படிக் கூறியவர்களுள், சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் கெனான், சார்லஸ் கிங்க்ஸ்லே; 19ம் நூற்றாண்டின் கருத்தியல் தத்துவச் சிந்தனையாளர்,  ஹெய்ன்ரிச் ஹெய்ன்; ஸ்பானிஸ் எழுத்தாளர், மிக்யூஅல் டி யுனமுனோ மற்றும் பிறர் அடங்குவர். 

மதமும் தொழிலாளர்கள் இயக்கமும் 

ஆரம்பகால கிருஸ்துவத்தை நவீனத் தொழிலாளர்கள் மற்றும் சோஷலிச இயக்கத்துடன் ஏங்கெல்ஸ் ஒப்பிட்டுள்ளார். ‘மதம் குறித்து’ என்ற தமது நூலில் ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “ஆரம்பகாலக் கிருஸ்துவ வரலாற்றில் பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் நவீன தொழிலாளர் வர்க்க இயக்க அம்சங்களோடு பொதுவானதாக உள்ளது. தொழிலாளர் வர்க்க இயக்கம் போலவே கிருஸ்துவமும் தொடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாக இருந்தது: முதலில் அது, அடிமைகள், விடுவிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து உரிமைகள் பறிக்கப்பட்ட ஏழைகளின் மதமாகத் தோன்றியது… கிருஸ்துவம் மற்றும் தொழிலாளர்களின் சோஷலிசம் இரண்டும் அடிமைத் தளை மற்றும் துயரங்களிலிருந்து விரைவில் விடுதலை கிட்டும் என்று போதிக்கின்றன.” கிருஸ்துவம் மறுஉலகில் அதனைத் தேடுகிறது; சோஷலிசமோ இவ்வுலகிலேயே அதனைச் சாதிக்க எண்ணுகிறது. (‘தேவன் நமக்குத் தேவனுடைய ராஜ்ஜியத்தையே தருவார்’ என்று கிருஸ்துவமும்; ‘இழக்கப் போவது அடிமைச் சங்கிலி, பெறப்போவது பொன்னுலகு’ என்று தொழிலாளர் இயக்கமும் கூறுவதை உதாரணமாகச் சொல்லலாம். --மொழிபெயர்ப்பாளர்) புதுப்பிக்கப்பட்ட யூதமதம் (ஜூடாயிசம்) “மனிதகுலச் சிந்தனை வரலாற்றில் ஆகப் புரட்சிகரமான ஒன்றாக மாறியது” (பக்கம் 186). மேலும் கிருஸ்துவம் மற்றும் சோஷலிசம் இரண்டும் சாதாரண மக்களின் பெருந்திரள் இயக்கங்கள் (அதே நூல்). இரண்டு இயக்கங்களும் ஒடுக்கப்பட்டவர்களின் இயக்கம் என்ற வகையில் துவக்க கால மத இயக்கத்தை முதலாவது அகிலத்துடன் (1864 –76) ஒப்பிட்டார் ஏங்கெல்ஸ். சொர்க்கம் இந்த மண்ணுலகத்திலேயே படைக்கப்பட முடியும் என மார்க்ஸ்தான் நிறைவாக முத்தாய்ப்புச் செய்தார்.

கட்சித் திட்டத்தில் தீவிர இடதுசாரி, அதிதீவிர புரட்சி மற்றும் கற்பனா சோஷலிசவாதிகள் “நாத்திகத்தை” இணைக்க முயற்சி செய்ததை ஏங்கெல்ஸ் கண்டித்தார். அகஸ்டே பிளான்கியின் பிளாங்கிசம் (அராஜகம்) திட்டம் குறித்து 1874ல் விமர்சிக்கும்போது ஏங்கெல்ஸ், “மதத்திற்கு எதிரான அவர்களுடைய போர் முழக்கம், ‘ஒரு முட்டாள்தனமான துண்டுக் காகிதம்’; அது எதிரிகளுக்கு மட்டுமே உதவும்” என்று கூறியுள்ளார். ஆகப் பரவலான சாத்தியமுள்ள வர்க்கப் போராட்டங்களில் மத உணர்வுள்ள தொழிலாளர்களும் ஈர்க்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் கட்சியில் மதம் தடை செய்யப்பட வேண்டும் என்ற டூரிங்கின் போலிப் புரட்சிக் கருத்தை அவர் கண்டித்துள்ளார் (ஏங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு நூலில்) 

மதத்தை அபின் என்று கூறும் சுவாமி விவேகானந்தர்

அபின் ஒப்புவமையைப் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தரும்கூட மதத்தை விவரித்திருக்கிறாரா என்பதை அறிய எவருமே வியப்படைவர்! சுவாமி கூறுகிறார், “இயற்கையிலிருந்து அப்பாற்பட்டு ஒரு தனிநபர் போன்று கடவுளைக் கற்பனை செய்து அவரையே வணங்கி அன்பு செய்யும் கருத்து அற்புதமானது. சில நேரங்களில் இப்படிக் கருதுவது மிகவும் இளைப்பாறுதல் தருவதாகும். ஆனால்… இந்த ஆறுதல் எதுபோன்றதென்றால், அபின் கலந்த (மயக்க) மருந்தின் விளைவைப் போன்றதே தவிர, இயல்பானதில்லை. நீண்டகாலப் பயன்பாட்டில் அது சோர்வையும் உடல்பலகீனத்தையுமே கொண்டுவந்து சேர்க்கும். ” நமக்குத் தேவை வலிமை என்று அவர் வற்புறுத்தினார் (விவேகானந்தர் நூல் திரட்டு, தொகுதி 3, 1990, பக்கம் 107 -108)  

மதம் குறித்து லெனின் 

மதநம்பிக்கையாளர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர அனுமதிக்கலாமா என லெனினைக் கேட்டபோது, அவர் தெளிவாகப் பதில் கூறினார்: ஒருவர் தனது மதநம்பிக்கையைக் கைவிட வேண்டும் என்பது கட்சியில் சேர ஒரு முன்நிபந்தனை அல்ல. யாரொருவர் கட்சியின் இலட்சியங்கள், நோக்கங்கள், திட்டங்களை ஒப்புக்கொண்டு, மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்களோ அவர் கட்சியின் உறுப்பினராகலாம்.  தத்துவம், மதம் மற்றும் பிற விஷயங்கள் நீண்டகால விவாதங்களுக்கு உரியன. மத நம்பிக்கையைத் துறப்பது, கட்சியில் சேர்வதற்குக் கட்டாயம் அல்ல. 

லெனின் மேலும் தெளிவாகக் கூறுகிறார், “கடவுள் மீதான தங்கள் நம்பிக்கையை உறுதியாகப் பற்றியிருக்கும் தொழிலாளர்களைச் சமூக ஜனநாயகக் கட்சியில் சேர நாம் அனுமதிப்பது மட்டுமல்ல, நாமே தேடிப் பிடித்து அப்படிப்பட்டவர்களைக் கட்சிக்குக் கொண்டுவந்து சேர்த்திடத் திட்டமிட வேண்டும்; அவர்களுடைய மத நம்பிக்கை விஸ்வாசத்திற்குச் சிறிதளவு பாதிப்பது ஏற்படுத்தப்படுவதையும் நாம் முழுமையாக எதிர்க்கிறோம்.” (லெனின், மதத்தின் மீது தொழிலாளர்கள் கட்சியின் அணுகுமுறை, நூல் திரட்டு, தொகுதி 15). ”மதம் ஒழிக, நாத்திகம் நீடு வாழ்க” என்ற கோஷம், மேம்போக்கானது மற்றும் குறுகிய பூர்ஷ்வா பார்வை; ஏனெனில் அது பிரச்சனை (கேள்வி) யின் அடிவேருக்குச் செல்லவில்லை. முதலாளித்துவ ஆட்சிதான் எதிர்க்கப்பட வேண்டும். நாத்திகப் பிரச்சாரம் என்பது சமூகப் பொருளாதார மாற்றம் எனும் முதன்மையான பிரதானக் கடமைக்குக் கீழே அடுத்து இருப்பது மட்டுமே. (அதே நூலில்)

“ஒரு பாதிரியார் (மதக் குருக்கள்) நம்மிடம் வந்து, பொதுவான அரசியல் பணியில் பங்கெடுத்து, கட்சியின் திட்டத்தை எதிர்க்காமல் மனப்பூர்வமாகக் கட்சிக் கடமைகளை ஆற்றினால்” அவர் கட்சி உறுப்பினராக அனுமதிக்கப்படலாம். (லெனின், அதே நூல்). மத எதிர்ப்பு மற்றும் நாத்திகப் பிரச்சாரத்தை வற்புறுத்தும் அராஜகவாதிகளின் போலிப் புரட்சி அணுகுமுறையைச்  சிதறிய குழப்பமான பூர்ஷ்வா பார்வை என்று லெனின் விமர்சிக்கிறார்.

விடுதலைக்காகப் போராடும் பின்தங்கிய கீழை நாடுகளில் மத உணர்வுகள் குறித்துக் கவனமாக இருக்கும்படி லெனின் குறிப்பாக வற்புறுத்துகிறார். முக்கிய எதிரியை எதிர்த்து, அதாவது நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மதங்கள் ஆற்றிய வரலாற்றுப்பூர்வமான பங்களிப்பை லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். 

மார்க்சியம் மற்றும் மதம் குறித்து காஸ்ட்ரோ

ஏகாதிபத்தியத்தை எதிர்த்தப் போராட்டத்திலும், ஏழ்மை மற்றும் சுரண்டலை இப்புவியிலிருந்து அடியோடு ஒழித்திடும் பணியிலும் மார்க்ஸிஸ்டுகள் மற்றும் கிருத்துவர்கள் இடையே நெருங்கிய கூட்டுறவைக் கியூபா புரட்சியின் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ வெளிப்படையாகச் செயல்படுத்தினார். மிக முக்கியமான கேள்விகள் குறித்து (கிருஸ்துவ மதம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டிற்கும் இடையேயுள்ள பொதுவான பார்வைகளை அவர் வற்புறுத்தினார்.

உண்மையில் இறை நம்பிக்கையாளர்கள் பலரும் கியூபா, சீனா மற்றும் வியத்நாம் புரட்சிகளில் பங்கேற்றுள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பில் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.

மதத்தின் பங்கு / இந்தியாவில் கருத்தியல் தத்துவம்

கம்யூனிஸ்ட்களில் பலரும் பலநேரம் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மதத்திற்கு எதிரானதாகக் கலந்து குழம்பும் தவறினை இழைத்து விடுகிறார்கள். அந்த இரண்டும் வேறு வேறு. மதநம்பிக்கையாளர்களில் அபரிமிதமான எண்ணிக்கையினர் வகுப்பு வாதத்திற்கு எதிரானவர்கள், மதசார்பற்றவர்கள். விடுதலை இயக்கத்தின் மறுக்கமுடியாத தன்னேரில்லா தலைவரான மகாத்மா காந்தியே ஓர் இந்து மத நம்பிக்கையாளரே. காந்தியின் ‘ராம்’, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இராமரிலிருந்து முற்றிலும் வேறானவர். காந்திஜி இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததால் அவர் தீவிர இந்துமத வெறியர்களான போலி மதவாதிகளால் கொல்லப்பட்டார். மதவாதத் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் மதத்தைச் சிதைப்பவர்களிடமிருந்து மதஉரிமையைப் பாதுகாப்பவர்களாக உண்மையில் கம்யூனிஸ்ட்கள் திகழ்கிறார்கள். மதம் மக்களின் அடிப்படை உரிமை. வகுப்புவாதக் கருத்தியல் தத்துவம்தான் உண்மையில் மதத்திற்கு எதிரானது. 

இந்தியாவின் சமய மற்றும் தத்துவப் போக்குகள் வரலாற்றில் பலபோழ்து முற்போக்கான பங்காற்றியுள்ளன. உதாரணத்திற்குச் சார்வாகம் / லோகாயதம், சாங்கியம், நியாய வைசேடிகம் முதலானவை தத்துவச் சிந்தனை மரபில் ஆழங்கால்பட்டு வளமான வித்தியாசமான போக்குகளை வழங்கியுள்ளன. ஆரம்பகால இயற்கை விஞ்ஞான பழக்கவழக்கத்தில் பிறந்த சாதாரணமக்களின் ஆயுர் வேதத்தைச் சமூகம் வெறுத்து ஒதுக்கியது. மாபெரும் வரலாற்று அறிஞரான தேவிபிரசாத் சாட்டோபாத்யாயா தனது தீர்க்கமான செல்வாக்குமிக்க ஆய்வுப் படைப்பில் ஏன் எதற்காக இவ்வாறு செய்யப்பட்டது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார். ஆயுர் வேதம் என்பது மருத்துவ மதிப்பு மிக்க தாவரங்கள் (வேர், தழை, தண்டு, பட்டை) மற்றும் உயிரினங்களைத் தேடிச் சேகரிப்பதில் ஈடுபடுவதாகும்; (சாதாரணமக்கள் காடுகளில் தேடித் திரியும்) இச்செயலை ஆளும் வர்க்கமும் சுரண்டும் மேல்சாதியினரும் வெறுத்து நோக்கினர். (உதாரணத்திற்குத் தமிழகத்தில் நாவிதர்களே மருத்துவர்களாகவும் இருந்தனர்; அவர்களின் பலபெயர்களில் மருத்துவர் / வைத்தியர் என்பதும் ஒன்று. இருப்பினும் சாதியப் படிநிலையில் அவர்களைக் கீழே வைத்துள்ளது சமூகம் என்பதைக் குறிப்பிடலாம். –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

வரலாற்றில் பக்தி மற்றும் சுஃபி இயக்கங்கள் பெரும்பங்காற்றியுள்ளன என்பதை வகுப்புவாதப் பழமைவாதம் அங்கீகரிக்க மறுத்தது. இவ்வியக்கங்கள் சாதி மற்றும் வகுப்புப் பாகுபாடுகளை எதிர்த்தன; மேலும் கடவுளுக்கு முன் அனைத்து மனிதர்களும் சமம் என்று காட்டியது. கபீர், துக்காராம், சைத்தன்யா, மத்வாச்சாரியர், குருநானக், ஞானதேவர், நிஜாமுதின் சிஷ்டி, ரஹீம், ஜெயதேவர் முதலானவர்கள் (மக்களை/சமூகத்தை) ஒன்றுபடுத்தும் இவ்வியக்கங்களின் மாபெரும் ஞானத் தலைவர்கள் ஆவர். சமயநம்பிக்கை உடைய அவர்கள் முற்போக்கானவர்களாகவும் மனிதாபிமானிகளாகவும் இருந்தனர். அவர்கள் இன்றைய சங்பரிவார் வகுப்புவாதிகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

பழமைவாதம், மாயாவாதம் (மிஸ்ட்டிஸம்) மற்றும் மேல்சாதி ஆதிக்கத்தைச் சமூக மற்றும் சமய சீர்திருத்தப் போராட்டங்கள் எதிர்த்தன. ஜோதிபா பூலே, ராஜாராம் மோகன்ராய், சுவாமி விவேகானந்தர் மற்றும் அவர்போன்றோர் அறிவுஒளி கருத்துக்களைப் பரப்பினர். 

நமது விடுதலை இயக்கத்தின்போதுகூட மதம், முக்கியமாக காலனிய எதிர்ப்பு மற்றும் வகுப்புவாத எதிர்ப்பு எனும் முற்போக்கான பங்காற்றியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் மக்களை வகுப்புவாத மதவாதம் காட்டிப் பிளவுபடுத்த முயன்றனர். இதனைச் சமயத்தைச் சார்ந்த ஆரோக்கியமான நற்கருத்துடையோர் எதிர்த்தனர். தலைமறைவு புரட்சிகர இயக்கத்தின் ஒரு பிரிவு சமயக் கருத்துகள் மற்றும் பழக்கவழக்கத்தினால் உற்சாகம் பெற்றது.  பிள்ளையார், காளி, சிவா மற்றும்  பிற கடவுள் வழிபாடுகளுக்கு வகுப்புவாத விளக்கங்கள் வெகுகாலத்திற்குப் பிறகுதான் தரப்பட்டது. சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் மக்களைப் பழமைவாதத்திலிருந்து போதுமான அளவு மீட்பதில் முக்கியமான பங்கு வகித்தன. 

மார்க்சியத் தத்துவம் மற்றும்

 பொருள்முதல்வாத உலகப் பார்வை

மார்க்சியத்தின் மூன்று கூறுகளில் ஒன்று தத்துவார்த்தப் பொருள்முதல்வாதம்; ஏனைய இரண்டும் அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான சோஷலிசம். மதத்தைக் கைவிட்டு இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏற்பது கட்சி உறுப்பினர் ஆவதற்கான முன்நிபந்தனை அல்ல. (அப்படிக் கட்சியில் சேர்ந்த) கட்சி அணியினருக்கும் உறுப்பினர்களுக்கும் இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவம் மற்றும் முறைகளில் பயிற்சி அளிக்க மார்க்சியம் முயற்சி செய்யும். உலகில் நிலவும் வியப்பான நம்பிக்கைகளின் ஆணிவேரை --மூல காரணத்தை-- சுட்டிக்காட்டி, கட்சி உறுப்பினர்களின் விஞ்ஞானப் பார்வை மற்றும் மனோபாவத்தை வளர்த்திட மார்க்சியம் முயலும்.

இதன் பொருள் ஒருவரின் மதம் மற்றும் மத நம்பிக்கைகளைக் கட்சி தாக்கும் என்பதல்ல. மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகக் கட்சி பணியாற்றுவதே தவிர அவர்களின் சமயத்தை அவர்களிடமிருந்து பறிப்பதற்காக அல்ல. மக்கள் மற்றும் தனிநபர்களின் ஜனநாயக மத உரிமைகளைக் காத்திடும்போது கட்சி அவர்களின் தனிப்பட்ட கருத்துகளில் தலையிடுவதில்லை. அதே நேரம் மதத்தைத் தவறாகப் பயன்படுத்தி வலதுசாரி சக்திகள் மக்களைத் தவறாக வழிநடத்துவது குறித்துக் கட்சி சுட்டிக் காட்டும். நியாயமான சமய நம்பிக்கை மற்றும் பழமைவாதம் சமயத்தை நியாயமற்றமுறையில் பயன்படுத்து இரண்டும் வேறு வேறானவை. உண்மையான மத நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும்; மாறாக மதத்தை வியாபார விற்பனைப் பொருளாக்குவதும் தவறாகப் பயன்படுத்துவதும் எதிர்க்கப்பட வேண்டும். 

எந்த வகையிலும் மத உணர்வுகள் (காயப்படுத்தி) மீறப்படலாகாது. விஞ்ஞான மனோபாவம் மற்றும் பார்வைகளை ஏற்படுத்துவதற்கான போராட்டம் ஒரு நீண்டகாலப் போராட்டமாகும். ஓர் அரசியல் கட்சி என்றவகையில் நம்முடைய போராட்டம் சமயத்திற்கு எதிரானதல்ல. சுரண்டும் சமூக பொருளாதார அமைப்பிற்கு எதிரானவர்கள் நாம். ஒருவன் அல்லது ஒருத்திக்குச் சமய நம்பிக்கை இருந்தாலும், அவர் கட்சியின் திட்டம், கொள்கைகள் மற்றும் அமைப்பு விதிகளை ஏற்று நடைமுறையில் அமல்படுத்துவாரெனில், அவர் கட்சி உறுப்பினர் ஆகலாம்.  கட்சியின் எந்த ஆவணத்திலும் ஒருவர் சமயத்தைக் கைவிட வேண்டுமென முன்நிபந்தனை விதிக்கப்படவில்லை. இது குறித்து எந்தக் குழப்பமும் இருக்கத் தேவையில்லை. 

மக்கள்திரள் நம்பிக்கை வைத்துள்ள எந்த மதத்தையும் அவர்கள் பின்பற்றுவதற்கான  ஜனநாயக உரிமைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாப்பது மட்டுமல்ல, அவர்களது சமய உரிமைகள் மீதான எந்தத் தாக்குதலையும் எதிர்க்கும். ஜனநாயகம் மற்றும் சோஷலிசத்திற்கான நமது போராட்டத்தில் இது பிரிக்க முடியாத பகுதியாகும். மக்களின் மத உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பது பிற்போக்கு வலதுசாரி சக்திகள்; அதேநேரம் உரிமைகளைப் பாகாக்க நிற்பது கம்யூனிஸ்ட்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் மற்றும் கட்சியின் அரசியலமைப்பு சட்ட விதிகள் காணும் எதிர்காலச் சோஷலிச இந்தியாவில் சமய சுதந்திரம் மற்றும் பிற சுதந்திரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.  

--தமிழில்: நீலகண்டன், கடலூர்