Tuesday 6 February 2024

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –82 ‘சகாவு’ கிருஷ்ணப்பிள்ளை

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –82


‘சகாவு’  கிருஷ்ணப்பிள்ளை
--கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட்

-- அனில் ரஜீம்வாலே

--நன்றி : நியூஏஜ் (2023 பிப்.26 -.மார்ச் 4)

சகாவு P கிருஷ்ணப்பிள்ளை 42 ஆண்டுகளே இந்த மண்ணில் வாழ்ந்தாலும், அவரது பெயர் கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டது. சகாவு என்றால் தோழர் என்று பொருள். 1906 ஆகஸ்ட் 10ம் நாள் அவர் அமைதி தவழும் வைக்கம் முனிசிபல் நகரத்தில் பிறந்தார். அந்த ஊர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வேம்பநாட்டு காயல் (அல்லது வேம்பநாட்டு ஏரி) கரையில் அமைந்த அழகு மிளிரும் புகழ்பெற்ற உப்பங்கழி அருகே இருந்தது. அங்கிருந்து வைக்கம் ஆலயம் வெகு தொலைவில் இல்லை. அவரது தந்தை மயிலெழுத்து மன்னம்பள்ளி நாராயணப் பிள்ளை ஒரு கிராம அதிகாரி, தாயார் பார்வதி. அவர்களுக்குப் பத்து குழந்தைகள் பிறந்தாலும் நான்கு பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர்.

அவர் 13 வயது இருந்தபோது நெஞ்சத்தைப் பிளப்பதாக அவரது தாய் திடீரென்று மரணமடைந்தார், அடுத்த ஆண்டே தந்தையும் மாண்டு போனார். குழந்தைகள் அவர்களின் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் மாமா நாராயணப் பிள்ளை மற்றும் மூத்த சகோதரியின் கணவர் சங்கரப் பிள்ளை பாதுகாப்பில் வளர்ந்தனர்.

1919 வாக்கில், உள்ளூர் மலையாளப் பள்ளியில் படித்து வந்த கிருஷ்ணப்பிள்ளை 4வது வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டார். சிலகாலம் தனது சகோதரி கௌரி அம்மாள் அவர்களுடன் ஆலம்புழா (ஆலப்பி)வில் வசித்தபோது அங்கே ஒரு கயிறு தயாரிக்கும் ஆலையில் வேலை செய்தார். பின்னர் சிலகாலம் நாகர்கோயில் மற்றும் பிறகு தமிழ்நாடு முழுவதும் அலைந்தார். கிழக்குத் திருவிதாங்கூரின் மலயாரயாஸ் மலைவாழ் பழங்குடி மக்கள் மத்தியில் காடுகளில்கூட வசித்தார். 1922ல் கிருஷ்ணா வைக்கம் திரும்பினார். அது போருக்குப் பிந்தைய பொருளாதார மந்தநிலை சூழ்ந்த காலம். போரின் பாதிப்பை வேளாண் பொருளாதாரம் சந்தித்தது. அது நடுத்தரமாக நிலம் வைத்திருந்த பலரையும் பின்னடையச் செய்து அழிவை ஏற்படுத்தியது. கிருஷ்ணப்பிள்ளை குடும்பமும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. திருவிதாங்கூரின் மகராஜா 1924 –25 நாயர் (சமூக) ஒழுங்குபடுத்துதல் சட்டம் மூலமாகக் கூட்டுக் குடும்பத்தின் சொத்துடைமைகளைப் (partition of joint family holdings) பிரிப்பதாக அறிவித்தார்.

கிருஷ்ணா தனது தாய்வழி மாமனிடமிருந்து தனது ‘தாரவாடு’ (தாய்வழி கூட்டுக் குடும்பத்தின் பூர்வீக இல்லமான வீட்டை) பராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இப்போது அவர் ‘கரனவார்’ (தாரவாடின் தலைவர், ஏறத்தாழ தமிழில் கர்ணம் என்று கொள்ளலாம்.). அன்றைய காலத்தில் நாயர் சமூக இளைஞர்கள் நீண்ட தலைமுடியை வளர்ப்பது வழக்கம்; ஆனால் அதற்கு மாறாகக் கிருஷ்ணப்பிள்ளை நீண்ட தலைமுடியை மேற்கத்திய பாணியில் முடிதிருத்தம் செய்வது போன்ற பல புரட்சிகரமான செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

ஒரு சிறு தேநீர் கடை திறந்தார், பின்னர் சைக்கிள் ரிப்பேர் கடையில் உதவியாளராகப் பணி புரிந்த பிறகு மீண்டும் தேநீர் கடைக்குத் திரும்பினார்.

இந்திமொழி கற்றல்

தனது ஓய்வு நேரங்களில் இந்தி கற்றுக் கொள்ளத் தொடங்கினார், ஒருவேளை மேலும் நல்ல வேலைக்காக இருக்கலாம், அம்மொழியால் அவர் கவரப்பட்டார் என்பதே உண்மை. அக்காலத்தில் காந்திஜி தனது இருப்பைக் கேரளாவில் உணர வைத்தார், இந்தி பிரச்சாரம் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான கொள்கைகளின் ஒன்றாக இருந்தது. கிருஷ்ணப்பிள்ளை இந்தி மீது பெரும் ஆர்வமுடையவராக இருந்தார்.

வைக்கம் சத்தியாகிரகம் : அரசியலில் நுழைவு

      காந்திஜியின் போதனைகளின் தாக்கத்தைக் கேரளா உணர்ந்து வந்த சமயம் அது. வைக்கம் ஆலயத்திற்கு முன் ஒரு போராட்டம் நடந்தது. அதில் அவர் பங்கேற்காவிட்டாலும் கிருஷ்ணா தீவிரமாக அப்போராட்டத்தைக் கவனித்து வந்தார்.

   1924ல் நடந்த வைக்கம் சத்தியாகிரகம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. அங்கு அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கோவில்கள் மூடப்பட்டிருந்தன, அவர்கள் கோவில் இருந்த வீதிகளில்கூட  அனுமதிக்கப்படுவதில்லை.

  வைக்கம் கோவில் நிலம் இந்தந்துருத்தி நம்பூதிரிக்குச் சொந்தமானது; இறைவன் சிவபெருமானே அவரது வாடகைதாரர்! வேடிக்கை. நம்பூதிரி ஆயுதம் தாங்கிய கையாட்கள் அடியாட்களைப் பயன்படுத்தி காந்தியச் சத்தியாகிரகிகளைத் தாக்குவது வழக்கம். காந்திஜி தனது யங் இந்தியா இதழில் “யார் இந்த இந்தந்துருத்தில்?” என்று கேள்வி எழுப்பினார்.

  மகாத்மா காந்திஜியின் துணிச்சலான தலைமையின் கீழ் அந்தச் சத்தியாகிரகம்

தொடங்கப்பட்டது. அவர் வைக்கம் விஜயம் செய்ததுடன், இந்தந்துருத்தில் சந்திக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார். அவ்விருப்பத்தைக் கேட்ட இந்தந்துருத்தில், அதற்குப் பதில் அளித்தார்: “பகவான் சிவனைச் சந்திக்கவே இந்தந்துருத்தில் செல்ல மாட்டார்; (வேண்டுமெனில்) காந்தி என்னிடம் வரட்டும்!” பின்னர் அந்த வீடும் இந்தந்துருத்தில் காம்பௌண்டும் சிபிஐ தலைமையிலான கள் இறக்குவோர் சங்கத்தின் அலுவலகமானது வரலாறு.

            சத்தியாகிரகிகள் அந்தக் குண்டர்களாலும், போலீசாலும் மோசமாகத் தாக்கப்பட்டனர். கூர்மையாக நிகழ்வுகளைக் கவனித்து வந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு இதுதான் முதலாவது அரசியல் பாடம்.

     மனம் வெறுத்துப்போன கிருஷ்ணப்பிள்ளை மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1927ல் வைக்கத்தைவிட்டுப் புறப்பட்டார். மூதாதையர் சொத்தை விற்க அவர் சம்மதிக்க, அதன் மூலம் கிடைத்த 2000 ரூபாயைச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பிரித்துக் கொண்டனர். திடீரென்று தனது சொந்த கிராமத்தைவிட்டுச் சென்றவர், மறைந்து போனார்.

ஹரித்வாரிலும் பிற இடங்களிலும்  

     கிருஷ்ணப்பிள்ளை திடீரென்று ஹரித்வார் காட் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டு பாதையில் (டெம்பிள் காட், நதிக்கரை படித் தொடர்) கண்டு பிடிக்கப்பட்டார். அவர் மாறுவேடத்தில் இருந்தபோதும் 1927 கடைசியில் பிகே நாயர் மற்றும் கேசவன் நாயர் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். கிருஷ்ணப்பிள்ளை உச்சிக் குடுமியைத் தவிர தலையை முழுவதுமாக மழித்துக் கொண்டவராக, ஒரு கோவண ஆடை உடுத்து, மார்பின் குறுக்கே ‘புனிதநூல்’ (யக்யோபவீதம், பூணூல்) அணிந்திருந்தார். இருந்தபோதும் அவர்கள் இருவரும் அவரை அடையாளம் கண்டு, இது என்ன வேடம், ஏன் என்று கேட்டனர். “(சத்திரங்களில்) இலவசமாகத் தங்கவும் உணவு உண்பதையும் உறுதி செய்வதற்காக!” என்றார். 

      அந்த இருவரும் டிஏவி கல்லூரியில் (பன்னாலால் கிரிதர்லால் தயானந்த் ஆங்கிலோ வேதிக் கல்லூரி) இந்தி பாடத்தில் முதுகலைப் பட்டம் நிறைவு செய்த பிறகு லாகூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இந்தி பிரச்சாரக்குகளாகப் பணி செய்தனர்.

கிருஷ்ணப்பிள்ளை அலகாபாத் சாகித்திய சம்மேளத்தில் பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் படித்தார். மாதம் 30ரூ ஊதியத்தில் அவர் இந்தி பிரச்சாரக் பணியில் கேரளாவில் பணியாற்றினார்.

அவருடைய மிக விருப்பமான புத்தகங்களில் ஒன்று பிரேம்சந்த் எழுதிய ‘மகாஜனி சப்யதா’ (அதீத வட்டி லேவாதேவிக்கார்களின் நாகரீகம்). 1930ல் காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்கு அழைப்பு விடுக்க, கிருஷ்ணப்பிள்ளை, அப்போதுதான் சேர்ந்து ஒருமாதமே ஆகாத வேலையை ராஜினாமா செய்து அந்த இயக்கத்தில் கலந்து கொண்டார். காளிகட் (கோழிக்கோடு)க்குச் செல்ல இரயில் ஏறினார். 1930 ஜனவரி பையனூருக்கான உப்புச் சத்தியாகிரகிகள் குழுவில் தன்னைக் காங்கிரஸ் தொடண்டராகப் பதிவு செய்து கொண்டார்.

உப்புச் சத்தியாகிரகத்தில்

    28சத்தியாகிரகிகள் கோழிக்கோட்டிலிருந்து பையனூருக்கு அணி வகுத்துச் சென்றனர். புகழ்பெற்ற தண்டி யாத்திரை 1930 மார்ச் 12ல் தொடங்கியது. அதே நாளில் கேளப்பன் தலைமையில் பையனூருக்கு யாத்திரை புறப்பட்டது. சத்தியாகிரகிகள் குழுவில் சேர ஏராளமானோர் மனு அளித்திருந்தும், 28பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கபட, அதில் ஒருவராகக் கிருஷ்ணப்பிள்ளை இடம் பெற்றார். அப்போதுதான் அவர் பூனத்துறையில் வேலையை ராஜினாமா செய்திருந்தார்.

    சத்தியாகிரகிகள் தொழிலதிபர் சாமுவேல் ஆரோன் இல்லத்தில் முகாமிட்டுத் தங்கினர். (சாமுவேல் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். சத்தியாகிரகிகளுக்கு ஆதரவளித்ததால் கைது செய்யப்பட்டதுடன் அவரது சொத்தும் பறிமுதலானது.)  முகாமில் கிருஷ்ணா தூய்மைப் பணியை எடுத்துக் கொண்டார். கிருஷ்ணப்பிள்ளை தகிக்கும் மே மாத வெயிலில் தலையில் கடல்நீர் நிரப்பிய குடங்களைச் சுமந்தபடிவந்த சத்தியாகிரகிகளின் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். உப்புத் தயாரித்து அருகில் இருக்கும் சந்தையில் உப்புப் பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டன. அவர் கையில் மூவர்ணக் கொடியுடன் நிற்க, மற்றவர்கள் நெருப்பை மூட்டி உப்புத் தயாரித்தனர். போலீசார் தாக்குதலில் இறங்கினர், லத்திகள் சுழன்றன, மண்டைகள் உடைபட்டன, எலும்புகள் முறிக்கப்பட்டன. கிருஷ்ணா மீது அடிகள் மழையாய் விழுந்தன. இரத்தம் சிந்த அவர் அடிக்கப்பட்டார், உதைக்கப்பட்டார். ஆனாலும் கீழே விழுந்த பிறகும், விழுந்து கிடந்தவர் உடம்பெங்கும் போலீசின் பூட்ஸ் கால்கள் மிதித்தபோதும், கையிலிருந்த மூவர்ணக் கொடியைக் கீழே விடவில்லை. ஒரு முணகல் இல்லை. காவல் நிலையத்திற்கு அவரை இழுத்துச் சென்று கைது செய்தனர்.

     கண்ணணூர் சிறையில் அவருடன் ஆர்எம் சென்குப்தா, டிஎன் சக்ரவர்த்தி மற்றும் ஆர்சி ஆச்சார்யா போன்ற புரட்சியாளர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் லாகூர் சதி வழக்குத் தொடர்பாக ஜெய்தேவ் கபூர் மற்றும் கமல்நாத் திவாரி முதலானோரும் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரின் செல்வாக்கிற்கும் கிருஷ்ணா ஆட்பட்டார்.

     ஊரில் கிருஷ்ணப்பிள்ளை ‘சகாவு’ (தோழர்) எனப் புகழ்பெற்றார்! 1931ல் குருவாயூர் ஆலயமணியை அடித்த முதலாவது நம்பூதிரி பிராமணராக அல்லாத ஒருவரானார் அவர். (அவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்.) ஜமூரின் நாயரின் (கோழிக்கோடு ஆட்சியாளர் பட்டம்) பாதுகாவலர்கள் லத்தியால் மழையென அடித்தபோதும் கிருஷ்ணப்பிள்ளை கைவிடாது தொடர்ந்து மணியை அடித்தார்.

காங்கிரஸ், சிஎஸ்பி மற்றும் தொழிற்சங்கத்தில்

          காங்கிரஸில் செயல்பாடுகள் தீவிரமாக, கிருஷ்ணப்பிள்ளை 1934 பாம்பே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பிகே பாலகிருஷ்ணன் மற்றும் மஞ்சுநாத ராவ் உடன் கலந்து  கொண்டார். அங்கே நடந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட்களின் கூட்டத்திலும் கலந்து கொண்டார்; அது ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி  (சிஎஸ்பி) அமைப்பின் தொடக்கமாகும்.

    இளம் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு வகுப்பைக் கிருஷ்ணப்பிள்ளை கோழிக்கோடு கடற்கரை அருகில் நடத்தினார்.  முன்பு திருவனந்தபுரத்தில் அவர் 1934ன் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் லீக் செயற்பாட்டாளர்களை இரகசியமாகச் சந்தித்தார். அதே நேரம் மலபார் பகுதியில் காங்கிரஸ் இயக்கம் கட்டுவதற்கானப் பொறுப்பினையும் ஏற்றார். கோழிக்கோடு, பாப்பினிச்சேரி, கண்ணணூர் எனப் பிற ஆலை பகுதிகளில் பல்வேறு வேலைநிறுத்தங்களை நடத்தவும் தொழிலாளர்களைத் திரட்டினார்; மேலும் காசர்கோடு, சிராக்கல் தாலுக்காகளில் பயணம் செய்தார். பக்கலம், காரக்காட்டு முதலிய இடங்களில் நடந்த ஊர்வலங்கள் உட்பட விவசாயிகளின் சக்திமிக்க  போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். விரைவில் அவர் அப்பகுதியின் விவசாய மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின்  முக்கியத் தலைவரானார்.

        கேரளாவில் முதலாவது சிஎஸ்பி மாநாடு கோழிக்கோடு டவுன் ஹாலில் 1934ல் நடந்தது. அதில் கேளப்பன், கிருஷ்ணப்பிள்ளை, ஏகேஜி, சர்தார் சந்த்ரோத், மோயராத், இஎம்எஸ் முதலானவர்கள் பங்கேற்றனர். இஎம்எஸ் உடன் சேர்ந்து அவர் கேரளா முழுவதும் சிஎஸ்பி கிளைகளைத் திரட்டி அமைத்தார். கிருஷ்ணப்பிள்ளை சிஎஸ்பி-யின் செயலாளர் ஆனார்.

    ‘தொழிலாளர்  சகோதரத்துவம்’ (லேபர் பிரதர்குட்) இதழ் 1935ல் வெளியிடப்பட்டது. ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’ பேப்பர் பரவலாக விநியோகிக்கப்பட்டது. ‘இளம் லீக்’ அமைப்புகளை அமைத்திட கம்யூனிஸ்ட் லீக் உதவியது. அந்த அமைப்புகள் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதில் கேந்திரமான பங்கு வகித்தன.

       மேலும் கிருஷ்ணப்பிள்ளை வலுவான கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் நிறுவனரும் ஆவார்.

         முன்பு, தலைமறைவு அனுஷீலன் சமிதி அமைப்புடன் கிருஷ்ணா குறைந்த காலம் தொடர்பு கொண்டிருந்தார். (ரஷ்ய அராஜவாத கம்யூனிஸ்ட்டான பீட்டர்) க்ரோபோட்கின் எழுதிய ‘ரொட்டியின் வெற்றி’ (அல்லது ரொட்டி புத்தகம் எனப்படும் ‘கான்க்வஸ்ட் ஆப் பிரட்’) நூலின் ஒரு பகுதியையும், எமிலி பர்ன்ஸ் எழுதிய ‘சோஷலிசம் என்றால் என்ன?’ (‘வாட் இஸ் சோஷலிசம்’) என்ற நூலையும் மலையாள மொழியில் மொழிபெயர்த்தார்.

    சேர்த்தலை, (கேரளா ஆலப்புழா மாவட்டத்தின்) அம்பலப்புழா. திருவனந்தபுரம் முதலான இடங்களில் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான தீவிர பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் நடந்தன. கிருஷ்ணப்பிள்ளையிடமே நேரடியாக ஒரு சிஐடி அதிகாரி பேசும்போது, கிருஷ்ணப்பிள்ளைக்குத் தெரிய வந்தது, “மலபாரிலிருந்து ஓர் அபாயகரமான கிருஷ்ணப்பிள்ளை ஆலப்புழாவில் இருக்கிறார்…”

   1930ல் 800பேர் உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 1937 –38ல் 70ஆயிரமாக அதிகரிக்க கிருஷ்ணப்பிள்ளை பெருமளவில் உதவினார். 1937ல் திருச்சூர் அகில இந்திய தொழிலாளர் மாநாட்டில் செங்கொடியைக் கிருஷ்ணப்பிள்ளை ஏற்றினார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தல்

       காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ, தொழிற்சங்கம் மற்றும் பிற இயக்கங்களைக் கட்ட எஸ்வி காட்டே, மிராஜ்கர், பாட்லிவாலா, சுந்தரையா போன்ற தலைவர்கள் கேரளாவுக்கு வந்தபோது, கிருஷ்ணப்பிள்ளை அந்தத் தலைவர்களின் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டு கம்யூனிசத்திற்கு மாறினார்.

     கேரளாவில் சிஎஸ்பி கிளையைக் கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றிட கிருஷ்ணப்பிள்ளை தலைமையேற்றார். 1939 அக்டோபர் 13ல் தலிச்சேரி அருகே பினராய் என்ற இடத்தில் சிஎஸ்பி கட்சியின் சுமார் 90 முக்கிய செயல்பாட்டாளர்களின் இரகசியக் கூட்டம் நடந்தது. அவர்களில் கிருஷ்ணப்பிள்ளை, என்இ பலராம், ஏகேஜி, இபி கோபாலன், இஎம்எஸ் (ஏலம்குளம் மணக்கால் சங்கரன் நம்பூதிரிபாட்), வில்லியம் செனிலெக்ஸ், சந்த்ரோத் முதரலான பலரும் அடங்குவர்.

     காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் செயலாளரான கிருஷ்ணா அந்த அமைப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றும் திட்ட முன்மொழிவை முன் வைத்தார். இதற்காகவும் மற்றும் சிபிஐ குழுக்களை அமைத்தது போன்ற பிற காரணங்களுக்காகவும் கிருஷ்ணப்பிள்ளை “கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்ற பெருமைக்கு உரியவரானார். 1940 ஜனவரி 26ல் கட்சி அறிவிக்கப்பட்டது.  அவரது சொந்த கிராமமான வைக்கத்திலிருந்து அவர் 1940 டிசம்பரில் கைது செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடலக்குடி கிளை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.    

திருமணம்

      அவர் வித்தியாயமான சூழ்நிலைகளில் 1941ன் இறுதியில் தங்கம்மாவைச் சந்தித்தார். சிறையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் சிறைவழியாகக் கடந்து செல்லும் ஒரு பெண்ணிடமிருந்து இந்தி புத்தகங்களைப் பெற்றுத்தர ஒரு காவலர் உதவியைக் கோரினார்.  செய்திகள் மற்றும் படிப்பதற்கான நூல்கள், இதழ்கள், நாளிதழ்களைக் கேட்டு இந்தியில் கடிதங்களைத் தான் திருப்பி அளிக்கும் புத்தகங்களில் வைத்து அனுப்பினார். இது பல மாதங்கள் நடந்தன. இந்தியில் கிருஷ்ணா அளிக்கும் செய்திகளைத் தங்கம்மா மலையாளத்தில் மொழிபெயர்த்துத் தலைமறைவாகச் செயல்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தந்தார். கிருஷ்ணப்பிள்ளை விடுதலையானதும் 1942 ஜூலையில் அவர்கள் எளிய முறையில் சாதாரணமாகத்  திருமணம் செய்து கொண்டனர்.

கையூர் (1943) மற்றும் புன்னபுரா வயலார் (1946)

            கேரளாவின் வடக்குக் கோடி, கையூர் என்ற இடத்தில் 1941 மார்ச் கடைசி வாரத்தில் சில விவசாயிகள், குத்தகைதாரர்கள் –நிலப்பிரபுகள் தகராறில் போலீசாருடன் மோதினர். நூற்றுக் கணக்கோனோர் கைது செய்யப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டனர். கட்சிக்காரர்கள் தேடி வேட்டையாடப்பட்டனர். அடுத்த ஆண்டு போலீஸ் கிருஷ்ணப்பிள்ளையைத் தேடி வந்தது, ஆனால் அவர் தப்பி விட்டார். அடுத்த இரு ஆண்டுகள் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 5 ஏழை விவசாயப் பையன்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 


அப்பு, அபூபக்கர், குஞ்சம்பு (நாயர்) மற்றும் சிறுகண்டம் என நால்வர் தூக்கிலிடப்பட்டனர்
. (மற்றொரு பையனான கிருஷ்ணன் நாயர் மைனர் என்பதால், மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.) கேரளா எங்கும் எதிர்ப்புகள் வெடித்தன.

     கிருஷ்ணப்பிள்ளை தொடர்பில் இருந்த மற்றொரு வரலாற்று இயக்கம் புகழ்பெற்ற புன்னபுரா வயலார் ஆகும். அது திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தது; அதன் திவான் சர் சிபி இராமசாமி அய்யர், ஒரு கூர்மையான மனிதரும் கொடூரமான ஆட்சியாளரும் ஆவார். 1943 பெரும் இந்தியப் பஞ்சத்தைத் தொடர்ந்த அப்பகுதியின் பரவலான கடும் உணவுப் பற்றாக்குறை காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பட்டினி அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தியது. அதில் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

      ஆயுதப் பயிற்சிக்கான முகாம்களை அந்த இயக்கம் அமைத்தது. 1946 அக்டோபர் 22ல் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. முகாமில் இருந்த தோழர்கள் போலீசாரை நோக்கி நகர, முகாம்களை மூடிவிட கோரப்பட்டது. போலீஸ் சூழ்ந்து கொண்டதுடன் இராணுவ சட்டம் விதிக்கப்பட்டது. 26ம் தேதி நுழைய முயன்ற இராணுவத்தினர் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் போலீசும் இராணுவமும் மீண்டும் ஒன்று சேர்ந்து திருட்டுத்தனமாக மக்கள் முகாம்களைத் தாக்கியது. அந்த முழுநாளும் ஓயாத துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதனுடன் போலீசும் கண்மூடித்தனமாக மனம்போன போக்கில் சுட்டுத் தள்ள நூற்றுக் கணக்கானவர்கள் வீழ்ந்தனர், எங்கும் குருதி வெள்ளம். இதில் கிருஷ்ணப்பிள்ளை முதன்மை பங்காற்றினார்.

      அந்த இயக்கத்தின் காரணமாகத் திவான் சர் சிபி இராமசாமி அய்யர் வீழ்ச்சி தொடங்கியது

விடுதலை

        கிருஷ்ணப்பிள்ளை இந்திய விடுதலையைப் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றார். கட்சி அலுவலகத்தில் முண்டியடிக்கும் திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர் இந்தியாவின் மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார்.

பிடிஆர் காலம்

      கேரளாவில் கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் இருந்த கட்சிக்குப் ‘பிடிஆர் (பிடி ரணதிவே) பாதை’ பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 2வது கட்சி காங்கிரஸ் (1948) தேர்ந்தெடுத்த புதிய மத்திய கமிட்டி உறுப்பினர்களாகப் பி கிருஷ்ணப்பிள்ளை, இஎம்எஸ் மற்றும் கேசி ஜார்ஜ் மூவரும் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் புதிய பாதையுடன் கிருஷ்ணா ஒத்துப் போகவில்லை, கட்சி காங்கிரஸில் கலந்து கொள்ளவில்லை. கிருஷ்ணப்பிள்ளை, கேசி ஜார்ஜ் மற்றும்ம் என்சி சேகரை உறுப்பினர்களாகக் கொண்ட தலைமறைவு கட்சி மையம் அமைக்கப்பட்டது. திருவனந்தபுரம் மற்றும் பிற இடங்களின் சிறைச்சாலைகளில், பிடிஆர் பாதையின் அதிதீவிர சாகச நடவடிக்கைகளின் காரணமாகப் பல அரிய தோழர்களின் உயிர்களை இழந்தோம். கமின்ஃபார்ம் (Cominform) அமைப்பின் [கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்ட ‘கம்யூனிஸ்ட் இன்ஃபர்மேஷன் பீரோ’ என்பதன் சுருக்கம்]  இதழில் வெளியான LPPD (1950) தலையங்கம் [for a Lasting Peace and for a  Peoples’ Democracy, அதாவது “நிலைத்த அமைதிக்காக மற்றும் மக்கள் ஜனநாயகத்திற்காக”] போதுமான அளவு தலைமையின் தீவிரத் தன்மை போக்கைத் தணித்தது. [1947ல் அமைக்கப்பட்ட கமின்ஃபார்ம் அமைப்பு 1956ல் கலைக்கப்பட்டது.]

துயரகரமான முடிவு

    ஆலுவாவில் (பழைய பெயர் ஆல்வே) தலைமறைவு கட்சி கமிட்டி அவசரக் கூட்டத்தில்   என்சி சேகர் மற்றும் கேசி ஜார்ஜ் இருவருடன் கிருஷ்ணப்பிள்ளை கலந்து கொள்ள வேண்டியிருந்தது. கிருஷ்ணப்பிள்ளை கன்னார்கட் (முகம்மா)வில் செல்லிகண்டதுங்கல் நானப்பனின் குடிசையில் ஒரு வாரம் தங்கினார். தலைமறைவு வாழ்க்கையில் அவரது பெயர் இராமன். அடுத்த நாளே அவர் வேறு இடத்திற்கு இடம் பெயர வேண்டும், ஆனால் மிக துரதிருஷ்டவசமாக அது தள்ளிப்போனது.

     இரவு ஒன்பதரை மணி அளவில் ஒரு பாயில் ஓய்வெடுத்தவாறு கிருஷ்ணப்பிள்ளை அவரது அறிக்கையை எழுதிக் கொண்டிருந்தார். நானப்பனின் வயதான தாய் வீட்டில் இருந்தார். திடீரென்று அலறியபடி அந்த அம்மாவை அவர் சத்தமாக அழைத்தார். “என்னவாயிற்று?” என்று கேட்டார் மூதாட்டி. அவர் தனது இடது கையை அழுத்திவிட்டுக் கொண்டிருந்தார். “ஒன்றுமில்லை, ஒரு பாம்பு என் கையைக் கடித்து விட்டது.” வார்த்தைகளை மீறிய அதிர்ச்சியில் அந்தத் தாய் முதலில் தன்னால் ஆனதைச் செய்தபடி, அவரால் யாரை அழைக்க முடியுமோ அவர்களை அழைத்தார். அவர் கீழே இருந்து அறிக்கையை எடுத்தார். அதில் இவ்வாறு தொடங்கி இருந்தது: “அங்கே விமர்சனம் இருந்தது, ஆனால் சுய விமர்சனம் ஏதுமில்லை…” பாம்பு கடித்த பிறகு நடுங்கும் கைகளால் கடைசி வார்த்தைகளை எழுதினார்: “இருள் என் கண்களை மூடுகிறது. என் உடல் தளர்கிறது. என்ன நடக்கப் போகிறது எனக்குத் தெரியும். தோழர்களே! முன்னேறுங்கள்! செவ்வணக்கங்கள்!! எழுதுகோல் தரையில் விழுந்தது, கிருஷ்ணப்பிள்ளை சிகே மாதவன் மடியில் இருந்தார், மீண்டும் ஒருபோதும் எழுந்திருக்கவில்லை. அரை மணி நேரத்தில் அவர் மரணமடைந்தார்.

            அந்த நாள் 1948, ஆகஸ்ட் 19.

            செவ்வணக்கம் சகாவு! செவ்வணக்கம்!!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்