Friday 29 April 2022

மே தினம் – செயல்பட ஒரு பேரிகை முழக்கம்!


மே தினம் – செயல்பட ஒரு பேரிகை முழக்கம்!

--சுகுமார் தாம்லே

(தேசியச் செயலாளர், ஏஐடியுசி)

            1886 மே தினம், காவிய சகாப்தம், பாட்டாளி படை வரிசையில் இணையும் புதிய இளம் தலைமுறையினர் அறிவதற்காகத் திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டும்!

அன்று பணிநிலைமை

            19ம் நூற்றாண்டு காலத்தை ஒரு முறை திரும்பிப் பார்ப்போம். அன்று மனித குலம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தனது வாழ்வாதாரத்திற்கான தேவைகளை எப்படி உற்பத்தி செய்தது என்பதிலிருந்து இன்று பெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்திலிருந்து தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் மாற்றம், அடையாளம் காண முடியாத அளவு சமுதாயம் முழுமையாக மாறியிருக்கிறது. உழைப்பாளி மக்கள் வயல்களில் அடிமைகளாய் கட்டப்பட்டு உழன்ற காலம் போனது, அடிமைச் சங்கிலி வேரோடு கில்லி எறியப்பட்டு, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விடுதலை பெற்றுள்ளனர்.

            தொழிற்சாலைகள் என்ற புதிய அமைப்பு உருவாகி ஒரு கூரையின் கீழ் “கரங்களை” வேலைக்கு அமர்த்தி அன்றாடப் பயன்பாட்டுக்குரிய பொருட்கள், உடைகள், பாத்திரங்கள், வீடுகள் என ‘காண்பது எல்லாம் தொழிலாளி செய்தான்’!

            அந்த ஆலைகளில் வேலை செய்தவர்கள் பேருக்குத்தான் சுதந்திரமானவர்கள், ஆனால் வேறு எங்கும் சென்று தங்கள் வயிறைக் கழுவ முடியாதவர்கள். ஆலை முதலாளியின் எந்த நிபந்தனையையும் ஏற்று வேலை செய்வதற்காக அவர்கள் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவர். விளைவு நாம் எதிர்பார்க்கக் கூடியதுதான்: இரண்டு கால்களுடன் ஆலைக்கு நடந்து வருபவர், ஆண், பெண் அல்லது குழந்தை, எவராயினும் அவர்கள் மறுநாள் காலை உயிருடன் வந்து மீண்டும் வேலை செய்ய இயலும் அளவுமட்டுமே, சொற்ப ஊதியத்தை ஆலை உடைமையாளர் அளிப்பர். சூரியன் உதித்ததிலிருந்து மறையும் வரை வேலை நேரம்; அதுவே மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு 16, 18 அல்லது 20மணி நேரம் என வரைமுறையின்றி அதிகரிக்கப்பட்டது. ஆனால் 19ம் நூற்றாண்டிலிருந்தே அமெரிக்காவில் பணி நேரத்தை 10 மணி என வரையறுக்கக் கோரி போராட்டங்கள் தொடங்கிவிட்டன.

            வரலாற்று அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் இதைக் கவனித்து விவாதங்களை நடந்தினர் என்பது உண்மையே. அவர்கள் அப்படி விவாதித்துக் கொண்டிருக்கும்போதே மாமேதை காரல் மார்க்ஸ் தனது கூர்மையான பார்வையை முழுமையான அமைப்பின் மீது – முதலாளித்துவ உற்பத்தி முறை மீதே  -- செலுத்தினார். ‘இது மனிதர்கள் செய்த முறைமை (சிஸ்டம்); மோசமான சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர இம்முறையையை ஒழிக்க வேண்டும், ஒழிக்க முடியும்’ என்று மார்க்ஸ் பிரகடனம் செய்தார். அதனைச் செய்து முடிக்க அவர் தொழிலாளர்களின் சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார். 1864ல் அவர் ‘முதலாவது அகிலம்’ என்றழைக்கப்படும் ‘சர்வதேச உழைக்கும் மக்களின் அசோஸியேஷன்’ அமைப்பை ஏற்படுத்தினார்.  முதலாவது அகிலம் உழைப்பாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி என வரையறுத்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

சிக்காகோ இரத்த வெள்ளம்

            ‘ஹே மார்க்கெட் கிளர்ச்சி’ என்றழைக்கப்படும் அமெரிக்காவின் சிக்காகோ நிகழ்வு 1886ல் (தொழிலாளர்களின் அமைதியாகக் கூடிய கூட்டத்தின் நிகழ்வு) முதலாளிகளின் அடியாட்கள் மற்றும் போலீசாரால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. (ஜோடிக்கப்பட்ட வழக்கில் நான்கு தொழிலாளர் தலைவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டனர், சாட்சியம் இல்லை என்று மூவர் விடுவிக்கப்பட்டனர்.) ஆனால் அவர்கள் எழுப்பிய கோரிக்கை முழக்கத்தை உலக அளவில் எடுத்துக் கொண்ட 1889ம் ஆண்டின் இரண்டாவது அகிலம் தொழிலாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரமாக வரையறுக்க மே 1ம் தேதியை உலகம் முழுவதும் “மே தின”மாக அனுசரிக்க தீர்மானம் நிறைவேற்றியது; அதன்படி உலகமெங்கும், எல்லா கண்டங்களின் அனைத்து நாடுகளிலும் 1890முதல் மேதினம் அனுசரிக்கப்படுகிறது.

            பல போராட்டங்கள் நடைபெற்றன, அதன் விளைவாய் உழைக்கும் மக்கள் பல்வேறு உரிமைகளை வென்று சாதித்தனர். மேம்பட்ட பணிச் சூழல் நிலைமைகள், ஊதியம் என்பன கோரியும் பணியிடத்தில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகளைத் தடுக்கக் கோரியும் நியூயார்க் நகரத்தில் பெண்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் 1909ம் ஆண்டில் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தம் செய்தனர்; அந்தத் தொடர்ச்சியான போராட்டமே இன்று ஆண்டுதோறும் “மார்ச் 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்” அனுசரிக்க பாதையமைத்து வழிகோலியது.

இந்தியாவில் சங்க அமைப்பு

            இந்தியாவில்கூட தொழிலாளர்களுக்கு அரை மணி நேர உணவு இடைவேளையுடன் ஞாயிறு வாராந்திர ஓய்வு பத்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு 1890ல்  சாதிக்கப்பட்டது. அந்த இயக்கம் பாம்பே மில் ஹேண்ட்ஸ் அசோஸியேஷன் நடத்திய நாராயன் மெஹாஜி லோகாண்டே தலைமையில் நடைபெற்றது; அவர் மகாத்மா ஜோதிபா பூலேயின் தோழராவார்.

            இந்தியத் தொழிலாளர்களின் முதலாவது மத்திய தொழிற் சங்க அமைப்பான ஏஐடியுசி 1920 அக்டோபர் 31ல் அமைக்கப்பட்ட நிகழ்வே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது; பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற எண்ணற்றப் போராட்டங்களின் இறுதி விளைவே ஏஐடியுசி பேரியக்கம்; அது தொழிலாளர்கள் மேலும் போராடுவதற்கு ஊக்கம் அளித்தது மட்டுமல்ல, இந்திய விடுதலை போராட்டத்திற்கும் பல மடங்கு வலிமை ஊட்டியது.

தொழிலாளர் நலச் சட்டங்கள்

          தொழிலாளர் கோரிக்கை போராட்டங்கள் அவர்களின் உரிமைகளாகி இந்தியாவில் சட்டங்களாக மலர்ந்தன, அவற்றில் உதாரணத்திற்குச் சில: 1923 தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம், 1926 தொழிற்சங்கங்கள் சட்டம், 1935 ஊதியப் பட்டுவாடா சட்டம், 1947 தொழிற் தகராறுகள் சட்டம், 1948 இஎஸ்ஐ சட்டம், 1952 தொழிலாளர் பிராவிடண்ட் ஃபண்டு மற்றும் இதர பிற வசதிகள் (மிஸிலேனியஸ்) வழங்கும் சட்டம், 1961 மகப்பேறு நலச் சட்டம், 1965 போனஸ் பட்டுவாடா சட்டம், 1976 சமவேலைக்குச் சம ஊதியச் சட்டம் என்பன.

பொதுத்துறைகளும் சமூக நீதியும்

            இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளில் பொதுத் துறை நிறுவனங்களைக் கட்டியெழுப்ப ஏஐடியுசி பேரியக்கம் முக்கிய பங்காற்றியது. இதனால் எஃகு, நிலக்கரி, சுரங்கம், பெட்ரோலியம், மின்சாரம், இரயில்வே, சாலை மற்றும் கடல்வழி போக்குவரத்தும்; நிதிசார்ந்த பொதுப் பிரிவில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களும்; மற்றும் சுகாதாரம். கல்வி எனப் பல துறைகள் விடுதலைக்குப் பின் சாதிக்கப்பட்டதில் ஏஐடியுசி இயக்கத்தின் பங்கு முக்கியமானது. இந்த வளர்ச்சி பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு –நமது அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்த – சமமான வாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

            சுருங்கக் கூறின், பணி நிலைமைகளில் எவற்றை எல்லாம் இன்றைய தலைமுறை உரிமையாகக் கருதுகிறதோ அவை சட்டமாக்கப்பட்டதன் பின்னணியில் கடுமையான போராட்டங்களின் வரலாறு உள்ளது. உதாரணத்திற்கு மிகுதி நேரப் பணிக்கு இரண்டு மடங்கு ஊதியம் (ஓவர் டைம் அலவன்ஸ்). சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்ட பணி நேரம் 8 மணி நேரத்திற்கு மேல் பணி செய்ய, இரண்டு மடங்கு விகித ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.

இன்றைய சவால்கள்

            பணிஅமர்த்துநர் மற்றும் ஊழியர் உறவுகளில் 20ம் நூற்றாண்டு வியக்கத்தக்க பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. உலகில் முக்கியமான நிகழ்வுகளாக இரண்டு உலகப் போர்கள், ரஷ்யப் புரட்சி, ஐஎல்ஓ போன்ற முத்தரப்பு அமைப்புகள், நலவாழ்வு அரசு கோட்பாடு ஏற்பு, சங்கம் அமைக்கும் உரிமைக்கான உறுதியளிப்புக்கு மாநாடுகள், குறைந்தபட்ச கூலி, தொழிலாளர் ஆய்வு முதலியன குறித்துச் சர்வ தேச தொழிலாளர் அமைப்பில் (ஐஎல்ஓ) விவாதிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். ஐஎல்ஓ மாநாட்டுத் தீர்மானங்களுக்குத் தங்கள் தங்கள் நாடுகளில் ஒப்புதல் தரவும், அவற்றை அமல்படுத்த தேவையான உள்நாட்டு சட்டங்களை நிறைவேற்றவும் ஐஎல்ஓ-வின் உறுப்பு நாடுகள் எதிர்பார்க்கப்பட்டன.

            இரண்டாம் உலகப் போருக்குப் பின், 20ம் நூற்றாண்டின் மத்தியில், தேசிய விடுதலை இயக்கங்கள் வேகமெடுத்தன; ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) நிறுவப்பட்டு, பனிப்போர் கால சர்வதேச ராஜிய உறவுகள் தொடங்கியது. மிக மிக வேகமாக வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் முதலாளி தொழிலாளி உறவுகளை மேலும் மாற்றியது. நான்காவது தொழில் புரட்சியாக அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பம் தோன்றி வழிநடத்தத் தொடங்கியுள்ளது.

நாம் எங்கே இருக்கிறோம்?

            அரசியல் அரங்கில், 1989 --90ல் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைய, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியச் சக்திகள், திரிசூலங்களான சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்ஃஎப்), உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் உலக வங்கி இவற்றைக் கொண்டு  மீண்டும் உலகைக் கட்டுப்படுத்த முயல்கிறது. 

            ஏறத்தாழ 21ம் நூற்றாண்டின் கால் பகுதியில் இருக்கும்போது, இந்தியாவில் இந்த 2022 மே தினத்தில் நாம் எங்கே இருக்கிறோம்? வரலாறு ஒரு முழு வட்டத்தைச் சுற்றி வந்து பாட்டாளி மக்கள் மீண்டும் அதே இடத்திற்கு வந்து விட்டதுபோலத் தோன்றுகிறது, 150 ஆண்டுகளில் நமது முன்னோர்களால் வென்றெடுக்கப்பட்டு வாராதுபோல வந்து கிடைத்த மாமணியாம் உரிமைகளை இழந்து அவை பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது.

எதையும் சந்திப்போம், நம்மால் முடியும்

            நினைவிருக்கிறதா, எந்த முறையான சங்க அமைப்பும் இல்லாமல் இந்தியத் தொழிலாளர்கள் போராட்டங்களில் இறங்கிய காலம் இருந்தது. எனவே சங்கம் அமைக்கும் உரிமையைத் தொழிலாளர் குறுங்குறிகள் (லேபர் கோட்ஸ்) பறித்தால்தான் என்ன? ஃபிக்ஸட் டேர்ம் (குறுகிய கால) வேலை முறையைக் கொண்டு முறைசார்ந்த நிரந்தரப் பணியை இல்லாது ஆக்கினால் என்ன? இந்த மாற்றங்களை எல்லாம் “சுலபமாக பிசினஸ் செய்வதற்காக” கொண்டு வருவதாக ஒன்றிய அரசு வெளிப்படையாக உரிமை கோரினால்தான் என்ன? விடுதலைக்குப் பின் கடந்த 70 ஆண்டுகளில் மாபெரும் உழைப்பில் கட்டியெழுப்பிய பொதுத் துறை நிறுவனங்களை முழுமையாக ஒன்றிய அரசு கூவிக் கூவி விற்று ஒன்றுமில்லாது ஆக்க முயன்றால்தான் என்ன?

            இவை அனைத்தையும் பார்த்து கையைக் கட்டிக் கொண்டு ‘அழுது கொண்டிருப்பமோ, ஆண் பிள்ளைகள் அல்லவோ? உயிர் வெல்லமோ?’ அனைத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும்! தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேசிய

விரோதமான ஒன்றிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து செயலில் இறங்குவதற்கான பேரிகை அழைப்பே மே தினம்! இந்த அரசுதான் நமது உரிமைகள் அனைத்தையும் பறிக்கிறது. வேளாண் பெருங்குடி மக்கள் மீது ஒன்றிய அரசு திணித்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்த ஒற்றுமையும் விடாப்பிடியான உறுதிப்பாடும் அந்தக் கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய அரசை நிர்பந்திக்க முடியும் என்பதை விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் மூலம் காட்டியுள்ளனர்.

மேதினச் சபதமிது

            நாம் விழிப்பாக இருக்க வேண்டும், எஃகு போன்ற தொழிலாளர் – விவசாயி ஒற்றுமையைக் கட்ட வேண்டும்; அந்த ஒற்றுமையை வகுப்புவாத, சாதிய சூழ்ச்சிகள் மூலம் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக மேலும் ஒற்றுமையைக் கட்ட வேண்டும். சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) கூட்டமைப்பின் “மிஷன் பாரத்” (நமது விடுதலை இயக்க முன்னோடிகள் கையளித்த அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உடைய “இந்தியாவைக் காக்கும் கடமை”) முழக்கத்தை மேலெடுத்துச் செல்ல – 2024 தேர்தலில் இந்த அரசை விரட்ட – இந்த மே தினத்தில் நாம் சபதம் ஏற்போம்!

--நன்றி : நியூஏஜ் (மே 1 – 7)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

    

 

         

பாவேந்தர் பிறந்த நாள் -- ஒரு மாணவி பேசுவதற்காக


பாவேந்தரின் தமிழ் உணர்வு

தேன் சிந்தும் சித்திரப் பூஞ்சோலையில் தமிழ் மதுவை உண்ணக் குழுமியிருக்கும் அவையோருக்கு வணக்கம். தித்திப்பால் மயங்காது கொல்லிமலைத் தேன் தேறும் ஆசிரியப் பெருமக்களைத் தமிழால் வணங்கிப் பேசத் தொடங்குகிறேன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்கள் முன் நிற்கிறேன். ‘நீராரும் கடல் உடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழகத்தின் பாட்டு, மாநில கீதம், State Anthem. ‘மகன் தந்தைக் காற்றும் உதவி’யென இன்றைய தமிழக முதல்வர் அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளார் என்ற பெருமிதம். காரணம் அவரது தந்தை கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னே 1970ல் ‘நீராரும் கடல் உடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆணை வெளியிட்டார். அந்த உணர்வுப் பெருக்குடன் பாவேந்தர் தமிழ் உணர்வு குறித்துப் பேச வந்துள்ளேன்.

‘தமிழுக்கு அமுதென்று பேர்; நிலவு, நீர், வேர், மண், வான், பால், சுடர் தந்தத் தேன் என்ற அனைத்துமே போதாது என்பதால் தவறென்று கூறத் துணிகிறேன். யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். “தமிழுக்குப் பாவேந்தர்” என்றல்லவா பேர். அதைச் சொன்னால் முந்தைய அனைத்தும் வரிசையில் பின்னேதானே வர வேண்டும்.

அந்தப் பாவேந்தர் என்றாலும் அவர் தமிழ் மூதாட்டி, எங்கள் ஔவையை மறுத்துப் பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை. கொன்றை வேந்தனில் ஔவை மூதாட்டி “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றல்லவா கற்றுக் கொடுத்தார். பாரதிதாசனோ ‘தாய் சொல்லைக் கேட்காதே’ என்கிறார், எப்படி ஏற்க முடியும்?

என் தயக்கத்தை அறிந்தவராய், ‘தலைவாரி பூச்சூட்டிக் கல்விச் சாலைக்குப் போவென்று..  மலைவாழை சுவை’ ஊட்டியவர் என்னை ‘சின்னப் பெண்ணே வா’ வென்று அருகே அழைத்தார். அந்தக் குரல் நான் குழந்தையாய் தூங்கும்போது தாலாட்டு இசைத்த குரல். “பெண்ணைத் தாயென்று காட்ட வாய்த்தவளே! மூடத்தனம் வீசுகின்ற காடு கமழ வந்த கற்பூரப் பெட்டகமே ! உய்விக்க வந்த உவப்பே .. பகுத்தறிவே.. புதுமைசெய வந்தவளே! சிலர் செய்கைக்கு நாணி உறங்கு …நகைத்து நீ கண்ணுறங்கு!” எனப் பெண் குழந்தைக்குத் தாலாட்டு இசைத்த தாயுமானவர் குரல் அல்லவா. அருகே சென்றதும் சொன்னார்: “நானும் தமிழ் மூதாட்டி சொன்னபடி ‘தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே’ என்று தாயை உயர்வுதானே செய்தேன். ஆனால் அவள் ஊட்டிய தமிழ்ப்பால் என்னைப் பாட வைத்தது, ‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே’. உண்மைதான் அந்த உணர்வுதான் கனக, விஜயர் தலையில் கல் சுமக்கச் செய்தது.

பாவேந்தர் தமிழ் உணர்வு அத்தகையது. அந்த உணர்வுக்கு அவர் வாழ்விலிருந்தே இரண்டு உதாரணங்களைக் கூறுவேன். பாரதிதாசன் கடவுள் நம்பிக்கை அற்றவர், நாமறிவோம். புதுவையில் அவர் வசித்த தெருவில் –மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்-- மார்கழி மாதத்தில் கோயிலிருந்து ஆண்டாளின் திருப்பாவை ஒலிப்பது வழக்கம். திடீரென்று அந்த வழக்கம் நின்றுபோக, உடனே பாரதிதாசன் என்ன செய்தார் தெரியுமா? ‘ஏன் நிறுத்தினீர்கள்’ எனச் சண்டைக்குப் போய்விட்டார். அவர் பக்திமானல்ல, எங்கள் தமிழ் மண்ணின் கோமான். அதனால்தான் காதலைப் பாடும்போதும் தமிழின் மேன்மையைப் பாடினார்.

இன்னொரு முறை ரசிகமணி டிகேசி எனப்படும் சிதம்பரநாத முதலியார் கம்பனில் தோய்ந்து, அவற்றில் சில பாடல்கள் இடைச் செருகல் எனத் தள்ள முற்பட்டார். ‘கம்பனை மறுக்க இவர் யார் கொம்பன்’ எனச் சமருக்குப் புறப்பட்டார் பாவேந்தர். ஏனெனில் அவரே கூறுகிறார் “தமிழும் நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர்”. அது மட்டுமா, கன்னல் பிழிந்திட்ட சாறு என இனிமைகளைப் பட்டியலிட்டவர், ‘இனிமை தமிழ்மொழி எமக்கு’ என்பதோடு நிறுத்தவில்லை, “தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!” எனப் பிரகடனம் செய்கிறார்.

‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுபோல அவர் உணர்ச்சி மிக்கவர் மட்டும்தானா என்று கேட்டால், இல்லை. ’கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’ எனப் பழம் பெருமை பேசுவதோடு அவர் நிற்கவில்லை. ‘கெடல் எங்கே தமிழர் நலன் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க” என்று கட்டளை இட்டவர், தமிழ்மொழியின் சீரிளமைத் திறம் வியத்தலோடு நிற்காது, தமிழ் மொழிக்காகத் தமிழர் என்ன செய்ய வேண்டும் எனத் திட்டங்களைத் தருகிறார், இப்படியாக:

“மனிதரெலாம் அன்பு நெறி காண்பதற்கும்

 தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்குவதற்கும்

 புத்தகச்சாலை வேண்டும் நாட்டில், யாண்டும்!”

சரி, நூலகங்கள் அமைத்துவிட்டோம், வேறென்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால், அவர் தொடர்ந்து சொல்கிறார்:

            “தமிழர்க்குத் தமிழ்மொழியில் சுவடிச் சாலை

             சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்!

             தமிழில்இலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல

             தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்!”

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன், “பாவேந்தர் உணர்வு நமக்கு வேண்டும், பாவேந்தர் தமிழ் வேண்டும்…

            “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்’

            என்று சங்க நாதம் செய்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

            வாழ்க தமிழ்! வாழ்க பாவேந்தர்!    நன்றி! வணக்கம்!           

Thursday 28 April 2022

விடுதலை அடைவதற்கு முன் இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம்


விடுதலை அடைவதற்கு முன் 

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம்

--திக்காரம் சர்மா

            ஐரோப்பாவில் ஆலைத் தொழிலாளி தோன்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாகத்தான் இந்திய ஆலைத் தொழிலாளி என்போர் பிறந்தார்; அங்கே ஏற்கனவே தொழிற்புரட்சி நடந்துவிட்டதே அதன் காரணம். ஆலைகள் இல்லாத இந்தியா முழுமையாக ஒரு வேளாண் சமுதாயம் என்பதால் ஆங்கிலேய மற்றும் இந்தியத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தவர்கள் மற்றும் விவசாயம் செய்தவர்களே இங்கே உழைப்பாளிகள். இங்கே வசித்தவர்கள் விவசாயிகள், நிலச்சுவான்தார்கள் மற்றும் கைவினைஞர்களான கொல்லர்கள், நெசவாளிகள், தையல்காரர்கள், காலணிகள் செய்வோர், குயவர்கள், தச்சர்கள் போன்றோரே; அவர்கள் ‘குடைகள் செய்வோம், உழுபடைகள் செய்வோம்’ என சமுதாயத்திற்குத் தேவையான கருவிகள், உடைகள், பானைகள் முதலியவற்றைச் செய்வதை வழக்கமாகக் கொண்டனர்.

            இருப்பினும் பின்னர், நில உடைமையாளர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களால் நாசமாக்கப்பட்ட விவசாயிகளும், ஆங்கில ஆட்சியாளரால் அழிக்கப்பட்ட கைவினைஞர்களும் தங்களது கிராமங்களிலிருந்து மந்தை மந்தையாக அருகே கடற்கரைகளை ஒட்டியிருந்த புது நகரங்களுக்கு இடம் பெயர நிர்பந்திக்கப்பட்டனர்; அங்கே கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கும் சுமையாட்களாகவோ அல்லது வீட்டு வேலைக்காரர்களாகவோ பணி செய்தனர். பெரும் எண்ணிக்கையிலான இந்திய உழைப்பாளிகள் தென்னாப்பிரிக்கா, பசிஃபிக் கடற்கரை மற்றும் ஃபிஜி போன்ற நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றனர். உழைப்பாளிகளின் அத்தகைய இடப்பெயர்வு ஓட்டம் 1830ம் ஆண்டில் தொடங்கி 1922வரை நீடித்தது.

புதிய தொழிலாளர் வர்க்கம்

            1853ல் முதலாவது இரயில் பம்பாயிலிருந்து தானே வரை இயங்கத் தொடங்கியது போல அதே வருடம் முதலாவது டெக்ஸ்டைல் மில் செயல்படத் தொடங்கியது. இந்தியாவில் முதலாவது சணல் ஆலை 1853ல். இதன் விளைவாய் புதிய தொழிலாளர் வர்க்கம் பிறந்தது. 1852 முதல் 1880வரை இந்த ஆலைகளில் தொழிலாளர்கள் மிக மோசமான மனிதத் தன்மையற்ற வகையில் சுரண்டப்பட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தொழிலாளர்களும் 12 மணி நேரம், 16, 18 ஏன் 23 மணி நேரம் வரையில் உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.  5 அல்லது 6 வயதான குழந்தைகளே வளர்ந்த பெரியவர்கள்போல முழு நேரப் பணி செய்தனர். முதலாளி வர்க்கத்தின் இத்தகு கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் நிலையில் தொழிலாளர் வர்க்கம் இல்லை. எனவே சட்டப்படியான நிவாரணங்கள் அல்லது சீர்திருத்தங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.  இக்கால கட்டத்தில் நாட்டில் 156 ஆலைகளும் 44ஆயிரம் தொழிலாளர்களுக்குக் குறையாத உழைப்புச் சக்தியும் அவற்றில் ஈடுபடுத்தப்பட்டது.

 இந்த மலிவான குழந்தைத் தொழிலாளர் முறை காரணமாக ஆங்கில மற்றும் இந்திய உரிமையாளர்களின் இந்திய ஆலைகள், லங்காஷயர் பஞ்சாலைகளுடன் போட்டியிட்டது; இங்கிலாந்தின் ஆங்கில உரிமையாளர்கள், இந்தியாவில் தொழிலாளர்கள் மீதான மிகக் கூடுதலான சுரண்டலை இந்திய அரசு தடுக்க வேண்டுமெனக் கோரினர். இதன் விளைவாய் இந்தியாவில் இருந்த தொழிலாளர்களின் நிலை குறித்து விசாரிக்க ஃபாக்டரி கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அந்த விசாரணைக் குழு ஞாயிறு விடுமுறையைச் சிபார்சு செய்தது; மேலும் இந்தியக் குழந்தைத் தொழிலாளர் வயது குறித்தும், பெண்கள் இரவு நேரப் பணியாற்ற வேண்டியது குறித்தும் கவலையுற்று வருத்தம் தெரிவித்தது. 1890வாக்கில் ஞாயிறு விடுமுறை, 9 வயதிற்குக் கீழான குழந்தைத் தொழிலாளர் தடை போன்ற சிபார்சுகள் அமல்படுத்தப்பட்டன.

            ஓர் ஆலைத் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கிய என் எம் லோஹான்டே பின்னர் பத்திரிக்கையாளராகி, ஆலைத் தொழிலாளர்களிடையே பணியாற்றத் தொடங்கி அவர்களது பிரச்சனைகளைப் புரிந்து கொண்டார். அவர் ‘தீனபந்து’ என்ற மராத்தி வாராந்திரப் பத்திரிக்கையை 1877 ஜனவரியில் தொடங்கினார். (இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களின் குறைகளும் செய்திகளும் முதன்முறையாக வெளிப்படையாக வெளியிடப்பட்டன.) 1884 ஏப்ரலில் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர் கோரிக்கை கடிதத்தைத் தயாரித்தார்.  

            முக்கியமான கோரிக்கைகள்: வேலை நேரம், வாராந்திர ஓய்வு, உணவு இடைவேளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பணி. 1890 ஏப்ரலில் சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மனு ஒன்று வடிவமைக்கப்பட்டு “ஆலைக் கரங்கள்” (‘Mill Hands’) என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்புக்கு உறுப்பினர் (கட்டணம்/ சந்தா) இல்லை, அமைப்பை நடத்த நிதியும் ஏதும் இல்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகள் சம்பந்தமான ஆதாரத் தகவல்களைத் திரட்ட லோஹாண்டேவை அரசு நியமித்ததுதான் இதன் ஒரே பயன். ஆனால் துரதிருஷ்டம், 19ம் நூற்றாண்டிற்குச் சற்று முன் அவர் இறந்துவிட்டார்.

தொழிலாளர் இயக்கத்தின் இரண்டாவது கட்டம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. அச்சகத் தொழிலாளர்கள், யூனியன் மெட்ராஸ் (1903), தி பாம்பே போஸ்டல் யூனியன் (1907), தி காம்கர், ஹிட்வார்தக் சபா (தொழிலாளி, நலவாழ்வு மன்றம்) முதலிய சில தொழிலாளர் அமைப்புகள் உருவாயின. இக்கால கட்டத்தில் எண்ணற்ற வேலைநிறுத்தங்கள்  நடைபெற்றன. பஞ்சாலைகளில் பணிநேரம் குறித்த தகராறு தொடங்க, வேலைநிறுத்தங்கள் நடைபெற்று, அவை கலகங்களில் முடிந்தன. இது தவிர பிரிட்டிஷ்காரர்கள் கைகளில் இருந்த இரயில்வேயிலும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தத்தில் ஆங்கிலேய ஓட்டுநர்களும்கூட பங்கேற்றனர். இரயில்வே நிர்வாகம் அவர்கள் பங்கேற்பதைத் தவிர்க்க எடுத்த தீவிர முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.  வங்கப் பிரிவினை காரணமாக நாடுமுழுவதும் மக்களிடையே கொந்தளிப்பு நிலவியது. வங்கப் பிரிவினைக்கான அரசாணை (கெசட்) அறிவிக்கையை அச்சிட மறுத்த கல்கத்தா அரசு அச்சகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகிய மூன்று புகழ்பெற்ற தலைவர்கள் அந்த இயக்கத்தை வழிநடத்தினர்.

            தொழிற்சாலை செயல்பாடுகள் வளர்ச்சி அடைந்ததன் காரணமாகத் தொழிலாளர்கள் எண்ணிக்கை நாட்டில் அபரிமிதமாக அதிகரித்தது. சுரங்கம், எஃகு, பொறியியல், இரயில்வே, ஆயில் முதலிய புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டன. இவை அனைத்தும் தனியார் கைகளில் இருக்க, பொதுப் பணித் துறை, தபால் தந்தி மற்றும் வேறு சில அரசுத் துறையில் முதலாவது உலகப்போர் வரை இருந்தன. விரைவில் கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ், கராச்சி, கான்பூர் முதலிய புதிய மாநகர்கள் உருவாயின. புதிய தொழிற்சாலை பிரிவுகளைச் சுலபமாகத் தொடங்க முடிந்ததால் இந்திய ஆலை முதலாளிகளுக்கு இக்கால கட்டம் வளமாக அமைந்தது.

வர்க்கம் பிறந்தது

            இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தை முதலுலகப் போர் புதிய சகாப்தத்தில் செலுத்தியது. போர் இந்திய ஆலைத் தொழிலாளர் கண்ணோட்டத்தை ஒரு வர்க்கம் என்ற தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்க்கை செலவு தாக்குப் பிடிக்க முடியாத அளவு உயர்ந்ததால் ஏற்பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும் தேசிய இயக்க அலையின் எழுச்சி முக்கிய அம்சமாக விளங்கின. இன்ஃபுலுயன்சா போன்ற தொற்று பரவுவது போல தொழிற்சாலைகளின் பெருக்கத்துடன் தொழிலாளர்கள் மத்தியிலிருந்து தலைமையும் உருவாகியது. தொழிலாளர் வர்க்கம் ஓரமைப்பாக சில மையங்களில் வேலைநிறுத்தங்களை நடத்தினாலும், தொடக்கத்தில் அவர்கள் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் மட்டும் அடைந்து கிடந்தனர்.

முதலாவது அரசியல் வேலைநிறுத்தம்

            தேச விரோதக் குற்றச்சாட்டுகளின் பெயரில் திலகர் கைது செய்யப்பட்டார். முகமது அலி ஜின்னா அவரது வழக்கை எடுத்து வாதாடினார். நீதிபதிகள் ஆயத்தில் (ஜூரி) ஏழு பேர் பிரிட்டிஷ்காரர்கள்; அவர்கள் திலகரின் சிறை தண்டனையை ஆதரிக்க, இந்தியர்களான இரண்டு ஜூரிகள் அதனை எதிர்த்தனர். ஆனால் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திலகர் பர்மாவில் இருந்த மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு நாள் என பம்பாய் தொழிலாளர் வர்க்கம் ஆறு நாட்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். தொழிலாளர்கள் மட்டுமல்ல, கடைக்காரர்கள், வியாபாரிகளும் மற்றவர்களுமான நடுத்தர வர்க்கத்தினர் முழுமையாக எதிர்ப்பியக்கத்தில் பங்கேற்றனர். இதன் விளைவாய் பம்பாய் முழுவதும் ஹர்த்தாலில் ஸ்தம்பித்தது. 1908ல் இந்தியத் தொழிலாளர்கள் நடத்திய முதலாவது அரசியல் வேலைநிறுத்தம் அது.

           


“தேசியப் புரட்சியாளர்களில் திலகர் ஒரு தலைவர்தான், ஏகாதிபத்திய எதிர்ப்பில் அமைதியான மற்றும் அமைதியற்ற; சட்டபூர்வமான மற்றும் சட்ட விரோதமான; வெளிப்படையான மற்றும் மறைவான சூழ்ச்சி உட்பட அனைத்து வடிவ போராட்டங்களையும் இணைத்துப் போராடிய தலைவராக, எப்போதும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தும், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டும், எப்போதும் தலைமை தாங்கி மக்களை வழிநடத்தியவர்” என்று எழுதினார் தேசத் தொழிற்சங்க இயக்கம் மிக உச்சத்தில் கொள்ளும் தலைவரான எஸ்ஏ டாங்கே; அவர் எழுதிய ‘இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் ஊற்றுக் கண்கள்’ என்ற நூலில் இப்பதிவு இடம் பெற்றுள்ளது.

ஏஐடியுசி பேரியக்கம் பிறந்தது

திலகர் மட்டும் கைது செய்யப்படாது இருந்தால், 1905 –08 ஆண்டு காலகட்டத்திலேயே ஏஐடியுசி அமைக்கப்பட்டிருக்கும் என்பது சில அறிஞர்களின் கருத்து. இருப்பினும், அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரியக்கம் 1920 அக்டோபர் 31ல் அமைக்கப்பட்டது. அத்தகைய ஓர் அமைப்பு நிறுவப்பட மிக விரும்பியும் அதற்காக உழைத்துப் பாடுபட்டவருமான திலகர் அனைத்திந்திய தொழிலாளர் அமைப்பு நிறுவப்பட்டதைக் காண உயிருடன் இல்லை. அவர் 1920 ஆகஸ்ட் 1ம் நாள் மறைந்தார்.

தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள்

                     ஏஐடியுசியின் முதலாவது மாநாட்டு அமர்வு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேசியத் தலைவரான லாலா லஜபதி ராய் தலைமையில் பம்பாயில் நடைபெற்றது. அம்மாநாட்டில் 64 இணைப்புச் சங்கங்கள் மற்றும் 40 ஆதரவுச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 107 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரதிநிதிகள் தவிர மாநாட்டில் பங்கேற்ற பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரில் தேசியத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூகப் பணியாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் முதலாளிகள் போன்றோரும் இருந்தனர். மாநாட்டில் பங்கேற்காதவர்களில் மகாத்மா காந்தி, பி பி வாடியா மற்றும் அன்னிபெசன்ட் உள்ளிட்டோர் அடங்குவர். மகாத்மா காந்தி தொழிலாளர்களுக்கு விரோதமானவர் இல்லை; அகமதாபாத் மில் உரிமையாளர்களுக்கும் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் இடையில் எழுந்த தகராறுகளைத் தீர்த்து வைப்பதிலும், பிளேக் தொற்று படி வழங்கும் பிரச்சனையைத் தீர்ப்பதிலும் மகாத்மாவின் பங்களிப்புகள் அனைவரும் அறிந்ததே. இருந்த போதிலும் தொழில்வயப்பட்ட சமூகத்தில் வர்க்க உணர்வுநிலை (கிளாஸ் கான்ஷியஸ்னஸ்) என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு ஏஐடியுசி, நாடு முழுமைக்குமான முதலாவது தொழிற்சங்க மையமாக இயங்கத் தொடங்கியது. ஏஐடியுசியின் முன்னோடிகள் பொது வாழ்வில் நன்கு அறியப்பட்ட புகழ்பெற்ற முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்: அவர்கள், சமூக வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் வந்த தேசியவாதிகள் ஆவர். அவர்களில் மிகப் பிரபலமானோர் லாலா லஜபதி ராய், ஜவகர்லால் நேரு, திவான் சமன்லால், சி ஆர் தாஸ், மோதிலால் நேரு மற்றும் வேறு சிலர்.


            ஏஐடியுசி அமைக்கப்பட்ட பிறகு தொழிற்சங்க இயக்கம், இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமையில் நடந்த தேசிய விடுதலை இயக்கத்துடன் மிகவும் நெருங்கிச் செயல்பட்டது. நாட்டின் தொழிற்சங்கச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக மட்டுமின்றி, 1919ல் நிறுவப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ-விற்குத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கவும் ஏஐடியுசி அமைக்கப்பட்டது.  இந்தியத் தொழிற்சங்க இயக்கம் 1917 ரஷ்ய அக்டோபர் புரட்சியின் ஆழமான செல்வாக்கிற்கு ஆளாகி, அப்புரட்சி அன்றைய ரஷ்யாவில் நிலவிய சுரண்டல் சமுதாயத்தைப் புரட்டி அமைத்த சரித்திர மாற்றத்தின் செய்தியையும் கொண்டு வந்தது.

மெட்ராஸில் நூற்றாண்டுக்கு முன் முதலாவது மே தினம்

           

அப்படி அமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்க இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வலிமை பெற்றது. இரயில்வே, பஞ்சாலை, தபால் தந்தி, சுரங்கம், இரும்பு மற்றும் எஃகு, துறைமுகங்கள் போன்ற தொழிற்சாலைகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உழைக்கும் மக்களின் சர்வதேசத் திருவிழாவான மே தினம், இந்தியத் திருநாட்டில் முதன் முதலாக 1923ல் மெட்ராசில் கொண்டாடப்பட்டபோது சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு செட்டியார் செங்கொடியை ஏற்றினார். (அவ்வகையில் இவ்வாண்டு மேதினம் நம்நாட்டில் 100வது ஆண்டு).

            அதைக் கண்டு அச்சமுற்ற பிரிட்டிஷ் காலனியவாதிகள் தொழிலாளர் வர்க்கத்தின் மிக உயர்ந்த தலைவர்களான எஸ்ஏ டாங்கே, முஸாஃபர் அகமது, சௌகத் உஸ்மானி மற்றும் நளினி குப்தா ஆகிய நால்வரைப் பொய்யான வழக்கில் கைது செய்தனர்; அவர்கள் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறியச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த வழக்கு கான்பூர் போல்ஷ்விக் வழக்கு என்று அறியப்படுகிறது.

            தொழிலாளர் பிரச்சனைகளை இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கத்திற்குக் கொண்டு வந்த பெருமை கம்யூனிஸ்ட் முன்னோடிகளையே சாரும் என்பது உண்மை. தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி குழுகள் அமைத்து, அதற்கான நிதி ஒதுக்கினாலும் அக்கட்சி, தொழிலாளர் வர்க்க நலனுக்காகப் பணியாற்றுவதை ஒருபோதும் தீவிரமாகக் கருதியதில்லை. அதற்கு மாறாக காங்கிரஸ், தொழிற்சங்க அல்லது அரசியல் கட்சிகளாக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அமைவதை ஊக்கப்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பானது என்றே கருதியது.

போராட்டங்கள்

            1926ல் அரசு இந்தியத் தொழிற்சங்கச் சட்டத்தை நிறைவேற்றியது. 1928 ஜனவரி 3ல் சைமன் குழு இந்தியா வந்தபோது, அதனை எதிர்த்து ஏஐடியுசி தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் 1928 பிப்ரவரியில் நடைபெற்றன. பங்கேற்ற சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ‘ஏகாதிபத்தியம் வீழ்க’, மற்றும் ‘சைமனே திரும்பிப் போ’ என்று முழங்கினர். கிர்ணி காம்கார் சங்கப் பதாகையின் கீழ் டாங்கே மற்றும் பிறரால் நடத்தப்பட்ட பம்பாய் பஞ்சாலை தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆறு மாதங்கள் நீடித்தது – அக்காலத்தில் அதுவே நீண்டகாலம் நடைபெற்ற போராட்டம். வெற்றியோடு முடிந்த அந்த வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் புகழ்க் கொடியோடு செம்மாந்து வந்தனர்.

தற்காலிகப் பிளவுகள்

            சர்வதேசத் தொழிற்சங்க அமைப்புகளுடன் இணைப்புச் சங்கமாக இணையும் பிரச்சனையில் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. நாராணன் மார்கர் ராவ் ஜோஷி, திவான் சமன்லால், விவி கிரி மற்றும் பி ஷிவா ராவ் ஏஐடியுசிலிருந்து விலக முடிவெடுத்து, இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஐஎன்டியுசி இல்லை, இது ‘ITUC’) என்ற அமைப்பை நிறுவினர். தொழிற்சங்க இயக்கத்தில் ஏற்பட்ட முதல் பிளவு இது.

            மேலும், கிர்ணி காம்கார் சங்கத்தை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் ஏஐடியுசி அமைப்பைக் கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான ரெட் இன்டர்நேஷனல் லேபர் யூனியனுடன் இணைப்புச் சங்கமாகச் சேர்க்கும் தீர்மானம் நிராகரிப்பு என்ற பிரச்சனைகளின் பெயரில் இரண்டாவது பிளவு 1931ல் நிகழ்ந்தது. பிரிந்து சென்ற குழு, ‘ரெட் டிரேடு யூனியன் காங்கிரஸ்’ என்ற தனி அமைப்பை ஏற்படுத்தினர்.

            இருந்த போதிலும் 1935ம் ஆண்டு ஏப்ரல் 20ல் ரெட் டிரேடு யூனியன் காங்கிரஸ் அந்த அமைப்பைக் கலைத்துவிட்டு ஏஐடியுசியுடன் ஒன்றிணைந்தது; அதைத் தொடர்ந்து ஐடியுசி சங்கமும் அதைப்போல ஏஐடியுசியுடன் இணைந்தது. சில ஆண்டுகள் பிளவு பனிபோல விலகி தொழிற்சங்க இயக்கம் மீண்டும் ஓரமைப்பானது.

            தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டுப்படுத்தி தடுக்க இந்திய அரசு விரைவாகச் செயல்பட்டது. தொழிற் தகராறு சட்டம் நிறைவேற்றியதுடன், பொது(மக்கள்) பாதுகாப்பு மசோதா போன்ற வழியில் அவசர சட்டமும் பிறப்பித்தது. 1929மார்ச்சில் தொழிற்சங்க இயக்கத்தின் பெரும் தலைவர்களும் வேறுசிலரும் –மீரட் சதி வழக்கு என்றறியப்படும் வழக்கில் -- கைது செய்யப்பட்டனர். மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஷோலாப்பூரில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். நகரம் முழுமையும் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பகுதியினர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவச் சட்டம் திணிக்கப்பட்டது. 1934 வாக்கில் மீரட் சதி வழக்கில் கைதானோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலைக்கு முன் தேர்தல்கள்

            1937ல் நாட்டில் உள்ள 1585 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் 58.23% வாக்குகளுடன் 923 இடங்களை வென்றது; முஸ்லீம் லீக், இஸ்லாமியர் ஒதுக்கீட்டு இடங்களில் 25% இடங்களுடன் மொத்தம் 425 இடங்களில் வென்றது, வாக்கு சதவீதம் 26.81%. காங்கிரஸில் இருந்த முஸ்லீம்கள் 6 சதவீத இடங்களைப் பெற்றனர். மொத்தம் 11 (ப்ராவின்ஸ்) மாகாணங்களில் காங்கிரஸ் 8ல் அதிகாரத்தைப் பிடித்தது; காங்கிரஸ் அரசு அமைக்க முடியாத மூன்று மாநிலங்கள் வங்காளம், மெட்ராஸ் மற்றும் பஞ்சாப். பஞ்சாபில் முஸ்லீம் லீக்கிற்குப் பெரும்பான்மை. மத்திய சட்டமன்றத்தின் (சென்ட்ரல் அஸம்பிளி) இடஒதுக்கீடு தொகுதிகள் அனைத்திலும் முஸ்லீம் லீக் அனைத்து இடங்களையும் வென்றது. இந்தியத் தொழிலாளர்கள் முழு மனதுடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைத் தேர்தலில் ஆதரித்தனர்; ஆனால் மாநில அரசுகள் நீண்ட காலம் நீடிக்கவில்லை, 1939 அக்டோபரில் ராஜினாமா செய்தன.

இரண்டாம் உலகப் போரும் தொழிற்சங்க இயக்கமும்

            ஜெர்மனி ஒருபக்கமும், எதிர்த்து மறுபுறம் பிரான்சு மற்றும் இங்கிலாந்தும் இருக்க இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் 1ம் நாள் தொடங்கியது. தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் இந்திய அரசு யுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்தது. அதனைக் கண்டித்து ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராகப் பம்பாயில் ஒன்பதாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். போரின் காரணமாக உயர்ந்துவிட்ட வாழ்வாதார செலவுகளை ஈடுகட்ட கிராக்கிப் படி வழங்கக் கோரியும் அவர்கள் 40 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

            இதன் மத்தியில் ஐரோப்பாவைப் பிடித்த பிறகு ஹிட்லர் 1941 ஜூன் 22ம் நாள் சோவியத் யூனியனைத் தாக்க தனது படைகளைத் திருப்பினான். இப்போது உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்தது: ஒருபுறம் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான்; மறுபுறம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சோவியத் யூனியன். 1940ல் ஏஐடியுசி-யின் பம்பாய் அமர்வில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகும் போர் மீதான பொதுவான தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை; காரணம், எந்தத் தீர்மானத்திற்கும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்கவில்லை.

            1942 ஆகஸ்ட் 9ம் தேதி அனைத்திந்திய காங்கிரஸ் கட்சி வெள்ளையனே வெளியேறு (க்விட் இந்தியா) அறைகூவலை விடுத்தது. அக்கால கட்டத் தொழிற்சங்கச் செயல்பாடுகளைப் பொதுச் செயலாளர் என் எம் ஜோஷி விடுத்த அறிக்கையிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்: “ஆய்வுக்குரிய கால கட்டத்தின்போது, பொதுவாகத் தொழிற்சங்கவாதிகளின் கொள்கை வேலைநிறுத்தங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதும், இத்தகைய சிரமமான காலத்தில் வேலைநிறுத்தங்களை நடத்துவது எத்தகைய இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை அங்கீகரித்துத் தொழிற் தகராறுகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதாகவும் இருந்தது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

மீண்டும் பிளவு

            உலகப் போரை ஆதரிக்கும் பிரச்சனையில் எம் என் ராய் ஏஐடியுசியிலிருந்து பிரிந்து ‘இந்தியத் தொழிலாளர் சம்மேளனம்’ (இந்தியன் ஃபெடரேஷன் ஆஃப் லேபர்) என்ற பெயரில் தனி அமைப்பைத் தொடங்கினார்; அவர் பொதுச் செயலாளர், ஜம்னாதாஸ் மேத்தா தலைவர். எம் என் ராய் போர் குறித்து அரசை ஆதரித்தார். அவரது சம்மேளனத்திற்கு அரசு மாதம் 13000 ரூபாய் மானிய உதவி அளித்தது. அவ்மைப்பு வேகமாக வளர்ந்து அதனை வங்காளம், பீகார் மற்றும் பஞ்சாப் இரயில்வே தொழிலாளர்கள் பெருமளவு பின்பற்றினர்.

            அந்தத் தருணத்தில் முக்கியமாக மூன்று தொழிலாளர் அமைப்புகள் நிலவின. கம்யூனிஸ்ட்கள் செல்வாக்கில் இருந்த ஏஐடியுசி போரை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. ராய் போரை ஆதரித்தார்; தேசியவாதிகளும் சோஷலிஸ்ட்களும் போருக்கு எதிரான துணிச்சலான அணுகுமுறையை மேற்கொண்டனர். ராய் தனது சம்மேளனம்தான் மிகப் பெரிது என ஐஎல்ஓ அமைப்பிற்கான இந்திய பிரதிநிதித்துவ உரிமை கோரினார்; ஆனால் ஏஐடியுசி தொழிற்சங்க அமைப்பே மிகப் பெரிது என நிரூபிக்கப்பட்டு ஐஎல்ஓ உரிமையைத் தொடர்ந்து தக்க வைத்தது. 1945ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

விடுதலையை விரைவுபடுத்திய போராட்டங்கள்

            பாசிசம் தோற்கடிக்கப்பட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெகுவாக வலிமை இழந்தது. பல காலனிய நாடுகளுக்கு அது விடுதலை அளிக்க வேண்டி வந்தது. டெல்லி, பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸில் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன: அவர்களது கோரிக்கை, போரின் இறுதியில் கைது செய்யப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தினரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே. தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிற தேசிய அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

            இராயல் விமானப் படையைச் சேர்ந்த கமிஷன் அந்தஸ்து பெறாத உயரதிகாரிகள் உட்பட ஏர் ஃபோர்ஸைச் சேர்ந்தவர்கள் இனப் பாகுபாட்டை எதிர்த்தும் நிறுத்தப்பட்ட ஊதியமாகக் கருதப்படும் பணிக்கொடை (கிராஜூட்டி) போன்றவை கோரியும் டெல்லியில் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். தி இராயல் இந்தியக் கப்பற் படையினர் 1946 பிப்ரவரி 18ல் கிளர்ச்சியில் இறங்கி, ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூவண்ணக் கொடி, முஸ்லீம் லீக்கின் பச்சைக் கொடி மற்றும் கம்யூனிஸ்ட்களின் செங்கொடிகளைக் கப்பல்களில் ஏற்றிப் பறக்க விட்டனர். வேலைநிறுத்தக் குழுக்களை அமைத்தனர்.  கிளர்ச்சிகள் மக்களின் பேராதரவைப் பெற்றன.

            தொழிற்சங்கம் மற்றும் சிபிஐ பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, அதன் விளைவாய் பம்பாய் நகர் முழு குழப்பத்தில் ஆழ்ந்தது. தடுப்புகள் கட்டப்பட்டன, ஆனால் கிளர்ச்சியாளர்களைச் சுடுவதற்கு இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். ஆங்கிலப் படைகள்

தருவிக்கப்பட, அவர்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் இடையில் கடுமையான போராட்டங்கள் தொடங்கின. இறுதியில் 250 பேர் பலியாயினர். வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற பிற நகரங்களில் போலீஸ் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். 1945ல் நிறுவப்பட்ட உலகத் தொழிற்சங்கச் சம்மேளனம் (WFTU) அமைப்பில் எஸ்ஏ டாங்கே, ஆர் ஏ ஹாதில்கார் மற்றும் சுதீந்திர பிரமார்த் ஏஐடியுசி பிரதிநிதிகளாக இடம் பெற்றனர்.

            ஏஐடியுசி தவிர, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஏஐபிஇஏ, இரயில்வேமென் சம்மேளனம், பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனம், ஆசிரியர் கூட்டமைப்புகள் போன்ற வேறு சில சம்மேளனங்களும் இக்கால கட்டத்தில் நிறுவப்பட்டு இயங்கின. அகமதாபாத் பஞ்சாலை தொழிலில் மகாத்மா காந்தியின்மஸ்தூர் மகாஜன அமைப்பு’ தீவிரமாகச் செயல்பட்டது. மேலும் ஒரு தொழிலாளர் அமைப்பு ‘மஸ்தூர் சேவா சங்(கம்)’ என்ற பெயரில் குல்சாரி லால் நந்தாவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்பட்டது; அது ஏஐடியுசி அமைப்பைப் பிளவுபடுத்தக் கூடியதாக, காங்கிரஸ் கட்சி சார்பான “இந்திய தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்” (ஐஎன்டியுசி) என்ற பெயரில் இணையான தொழிற்சங்க மையத்தை நாடு விடுதலை அடைவதற்குச் சற்று முன்பு நிறுவியது.

தியாகத்தில் சிவந்த இயக்கத்தை மேலெடுத்துச் செல்வோம்

            அனைத்துத் தொழிலாளர் அமைப்புகளிலும் புகழ்பெற்ற தலைவர்கள் இருந்தனர்; அவர்களில் மிகவும் புகழ்பெற்றவர்களாக பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், திவான் சமன்லால், ஜெ பட்டிஸ்டா, என்எம் ஜோஷி, வி வி கிரி, எஸ் ஏ டாங்கே, மனிபென் கரா முதலானவர்களைக் குறிப்பிடலாம். கடுமையான போராட்டங்களை நடத்தி தொழிலாளர்கள் விடாமல் மோதியதன் விளைவாய் எட்டு மணி நேர வேலைநாள், வாராந்திர ஓய்வு, குறைந்தபட்சக் கூலி, வேலைநிறுத்தம் செய்யும் உரிமை போன்ற மிக முக்கியமான சில கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டன; வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு சாதனைக்காகவும் தொழிலாளர் வர்கத்தினர் செங்குருதி சிந்தி இன்னுயிர் துறந்து விலைதர வேண்டியிருந்தது. சில தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர், சிலர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர், சிலர் நீண்ட காலம் கொடும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

            காலங் காலமாக தொழிலாளர்களின் இரத்தத்தில் தோய்ந்து சிவந்த செங்கொடியை உயர்த்தி அவர்கள் லட்சியத்தை மேலெடுத்துச் செல்ல மே தினத்தில் சபதமேற்போம்!

         

ஒர்க்கர்ஸ் யூனிட்டி ஜிந்தாபாத்!

     இன்குலாப் ஜிந்தாபாத்!

          மேதினி போற்றும் மேதினம் வாழ்க!


                                                                                                                    --நியூஏஜ் (ஏப்ரல் 17 -- 23)                                                                     

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

  

Wednesday 13 April 2022

மராத்திய தலித் இலக்கியவாதி -- பாபுராவ் பாகுல்

 மராட்டிய தலித் இலக்கியவாதி


பாபுராவ் பாகுல், 

சமூக எழுச்சியின் கதைசொல்லி

--மகேஷ் ரதி

          சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர்ச்சியான கலகங்களின் நிகழ்முறையைப் பதிவு செய்த ஆவணம் என்பதும் பாபுராவ் பாகுலின் இலக்கியம் என்பதும் வேறுவேறு அல்ல. அவரது இலக்கியம், மனிதத்தன்மையற்று இழிவாகப் புறக்கணிக்கப்படும், பிற்படுத்தப்பட்ட தலித் சமூகம் படும் துயரங்களுக்கு எதிரான கலகங்களைப் படம் பிடித்துக் காட்டுவது மட்டுமல்ல, நிறுவனமயப்படுத்தப்பட்ட பிராமணிய ஒடுக்குமுறை சுரண்டல் அமைப்பையும் திரும்பத் திரும்ப அம்பலப்படுத்துவது. பிராமணிய சுரண்டலுக்கு எதிரான கலகத்தின் தீவிர எதிரொலி அவரது இலக்கியப் படைப்புகளில் தெளிவாகக் கேட்கலாம். அவரது படைப்பிலக்கியம் மராட்டிய இலக்கியத்தில், குறிப்பாக தலித் இலக்கியத்தில், புதிய மற்றும் கலக எழுச்சி உணர்வை விரிவாக்கியது.

            அவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவரோ அதே சமுதாயத்திலிருந்து வந்தவர்களே அவர் படைப்புக்களின் கதை மாந்தர்கள்; அவர்களது வலிதான் அவரது கலகத்தின் அடிப்படை. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே கதை மாந்தர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் படும் மனிதத்தன்மையற்ற துன்ப துயரங்களை இலக்கியத்தில் வடித்தார்.

            சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் குரல் எழுப்ப ஓர் உயர்சாதி அல்லது மேல் வர்க்கத்தைச் சார்ந்த தாராளச் சிந்தனையர் எவரையும் அவரது படைப்புக்களில் தலைமாந்தராகப் படைப்பதில்லை. இந்தவொரு இலக்கியத் திறனில் அவர் அண்ணா பாவ் சாத்தேவின் மரபை மேலெடுத்துச் செல்கிறார்; அதே நேரம் சமூக உளச்சான்று உணர்வை, குறிப்பாக தலித் உள்ளுணர்வை உயர்ந்த மட்டத்திற்கு மேலெடுத்துச் செல்கிறார்.

            எப்போதும் அவரது கதைமாந்தர்கள் சாதி அடிப்படையிலான மனிதத்தன்மையற்ற சமூகக் கட்டமைப்பை எதிர்த்துத் தளர்வின்றி கலகம் செய்வர், கேள்வி கேட்பர், உடன்பட மறுப்பர், இழிவுபடுத்தலை வெறுத்துச் சீற்றம் கொள்வர்… பிராமணிய சமூக அமைப்பு, உயர்வு தாழ்வான படிநிலை சமூக அமைப்பைக் கண்டு அவரது கதை மாந்தர்கள் அஞ்சுவதில்லை; அதனோடு உடன்பட மறுத்து முரண்பட்டு தளர்வின்றி எதிர்த்துக் கலகம் செய்வர்…அந்த அநீதியான அமைப்பை மாற்ற அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள்.

            அண்ணா பாவ் சாத்தே (முழு பெயர் துக்காராம் பாவ் சாத்தே; மகாராஷ்டிரா, சங்கிலி

மாவட்டம் தீண்டத்தகாத மாங் சமூகத்தில் பிறந்த இலக்கிய கர்த்தா, முதலில் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு, பின் அம்பேத்காரியராக விளங்கியவர்) தொடர்பு ஏற்பட்ட பின் பாபுராவ் மார்க்சியத்தை ஆழமாகப் பயின்றார். அவர் கதைகள், கவிதைகளில் மார்க்சிய கருத்துக்களின் செல்வாக்கைத் தெளிவாகக் காணமுடியும். 1963ல் இந்தி மொழியாக்கத்தில் வெளியான அவரது ‘ஜப் மைநே அப்னி சாதி ச்சுபாய்’ (நான் எனது சாதி குறித்து மௌனித்தபோது) சிறுகதைகள் தொகுப்பில் மார்க்சியப் பதிவுகளின் சுவடுகளைக் காண முடியும். அதனை அவர் முதலில் மராத்தியில் ‘Jewa mi jat chorli hoti’ (எனது சாதியை நான் மறைத்தபோது) என்ற முதல் சிறுகதை தொகுப்பில் எழுதியிருந்தார்.

            இந்தக் கதை தொகுப்பில் பல கதைகள் தலித் உளச்சான்று உணர்வு நிலையிலிருந்து தலித் கலகம் என்பதை நோக்கிய மாற்றத்திற்கு நிரூபணமாக உள்ளன.

            இந்தக் கதையில் முக்கியமான பாத்திரம் தனது தந்தையோடு முரண்பட்டு பேசும்போது சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராக ஏதோ ஒரு வரலாற்று சாசனப் பிரகடனம் அல்லது அறிக்கையை வெளியிடுவதைப் போல இருக்கும். ‘விரோதி’ என்ற அவரது கதையின் கதாநாயகனான ஜெய் அவனது தந்தையை நோக்கிக் கேட்பார்: “பங்கியின் பையன் பங்கி ஆகத்தான் வேண்டும் என எங்கே எழுதி வைத்திருக்கிறது?” (பங்கி என்றால் தீண்டத் தகாத கீழ் சாதி, தெருக் கூட்டுபவர்கள்); மதம் மற்றும் நாட்டின் பாரம்பரிய வழக்கங்கள் குறித்த தந்தையின் உபயோகமற்ற வாதங்களை அடித்து நொறுக்கி அவரை நோக்கி ஜெய் கேட்பான், “எந்த மதம்?”

            “ஒரு மனிதனை நொறுங்கச் செய்து அவனை ஒரு விலங்காக மாற்றுவது எது, அதுவா மதம்? அதுவும் கற்சிலைகளுக்கு மனிதர்களைவிட கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் இந்த நாட்டில்? அத்தகைய மதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நமக்கு இந்த வறுமையை, இந்தப் பற்றாக்குறையைக் கொடுத்த மதம் நிராகரிக்கப்பட வேண்டும்”

         அவரது கதாபாத்திரம் முயற்சியைக் கைவிடுவது இல்லை, சூழ்நிலையை மாற்றத் தொடர்ந்து
போராடுகிறது. அது போல, ‘ஜப் மைநே…’ கதையின் காசிநாத் என்ற பாத்திரம் தேவையின் காரணமாக பிறப்பு அடிப்படையிலான வாழ்வாதாரத்தைத் தழுவ நேரும்போது உரத்துக் கத்துவான்,
“ஏய், நான் மகர் தான், ஆனா அதுக்காக அதோட அர்த்தம், நாத்தம் பிடித்த மனிதக் கழிவுகளையும் சுவரின் மீது பெய்த மூத்திரத்தையும் நான் சுத்தம் செய்வேன் என்பதல்ல!” கதை பாத்திரங்கள் ஒடுக்கு முறைக்கு எதிராகக் கலகம் செய்வது மட்டுமல்ல, மனித மேன்மையும் சமத்துவத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய உலகம் பற்றியும் கனவு காண்கின்றன.  பாகுலின் கதைகள் தாழ்த்தப்பட்ட விளிம்புநிலை சாதிகள், ஏழைகள், வக்ரமான மனநோய் பிடித்தவர்கள், குற்றவாளிகள் போன்றோரின் உண்மையான வாழ்க்கை விவரிப்புகளின் தொகுப்பாகும்.

            பாகுலின் இலக்கியம், கட்டமைத்து நிலைநிறுத்தப்படும் அரசியல் மற்றும் தத்துவச் சொற்பொழிவு கதையாடல்களை மீண்டும் மீண்டும் மறுத்து முரண்படுகிறது.

            தவறான மற்றும் போலியான உணர்வுகளின் மேல் கட்டி முன்வைக்கப்படும் அன்றைய சமகால அரசியல் மற்றும் தத்துவ யோசனைகளுக்கு மாற்றாய் -- ஊடுபாவாகப் பின்னப்பட்ட மதம் சார்ந்த உணர்வுகள் மற்றும் ‘எல்லோரும் நல்லவரே,’ சமமான உரிமை உடைய குடிமக்களே என்ற அடிப்படையில் புதிய சமத்துவ உலகுக்கான (நியூ ஈகாலிடேரியன் வோர்ல்டு) கனவுகள் – இவற்றிற்கு எதிராகப் பாகுல் தொடர்ந்து சவால் விடுகிறார். நிறுவனமயப்படுத்தப்பட்ட சுரண்டலுக்குச் சவால் விடும்போது, புரட்சிகர எழுத்தாளர் என்ற பதத்திற்கு உண்மையாக, அவர் மாறிவிடுகிறார்; இந்தப் புரட்சிக்கான அரசியல் மற்றும் தத்துவ அடிப்படை மார்க்சியம் தவிர வேறில்லை.

      

‘ஆச்சார்ய ஆத்ரே’ (படம், பிரகலாத் கேசவ் ஆத்ரே  பன்முக ஆற்றலுடைய மராத்திய இலக்கிய ஆளுமை) என்ற அவரது கதை 1957ல் “நவயுகம்’ கம்யூனிஸ்ட் இதழில் வெளியானது தற்செயல் நிகழ்வு அல்ல. அதன் பிறகு அவர் தொடர்ந்து தனது படைப்புக்களை “நவயுகம்” மற்றும் ”யுகாந்தர்” முற்போக்கு, கம்யூனிஸ்ட் இதழ்களில் வெளியிட்டார்.

      உண்மையில், அவரது கதை தொகுப்புகளில் வெளியான அனைத்துக் கதைகளையும் தொகுத்துப் பரிசீலித்தால் அவை ‘மார்க்சியம்’ மற்றும் ‘அம்பேத்கரியம்’ சார்ந்த பதிவுகளை வெளிப்படுத்துவதை அறியலாம்.

            பாபுராவ் பாகுல், மராத்தி மற்றும் தலித் இலக்கியத்தில் புகழ்பெற்ற மரியாதைக்குரிய பெயராக விளங்குகிறது; அப்போது மராத்தியில் உருவாகிவந்த தலித் இலக்கியப் போக்கிற்கு அவர் புதிய திசைவழியையும் எழுச்சியையும் வழங்கினார்.

இன்றைய காலத்தில், “மநு” இன்னும் மரணமடைந்துவிடாது மேலும் தீவிரத்துடன் தாக்குதல் நடத்தும்போது, பாகுலின் கதைகள் இத்தருணத்தில் மேலும் மிகுந்த பொருத்தப்பாடு உடையதாக விளங்குகிறது. [“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி” என்றுரைக்கும் மனோன்மணியம்]

            அரசியலமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரத்திற்கும் சமூதாய அதிகாரத்திற்கும் இடையே பிளவுபட்டு நிற்கும், ‘மநு’ இன்னும் கூடுதல் பலத்தோடு தாக்குதல் நடத்தி வருகின்ற இந்தியச் சமூகத்தைப் புரிந்து கொள்ள, பாகுலின் படைப்புக்கள் மேலும் பரவலாகப் படிக்கப்பட வேண்டும்.

            ‘மநு’வின் சமூக அதிகாரத்தை ஒழிப்பதற்கும் அதனை எதிர்த்துச் சவால்விடவும், ‘ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை, சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்ப இந்தியாவில் இல்லையே’ என்னும் சமத்துவத்தின் அடிப்படையிலான ‘சரிநிகர் சமானமான’ மேன்மைச் சமூகத்தை அமைப்பதற்கும் பாபுராவ் பாகுலின் படைப்புக்களை மக்களிடம் கொண்டு செல்வோம்! மக்கள் திரள் மத்தியில் அவற்றை உரத்து வாசிப்போம்!

--நன்றி : நியூஏஜ் (ஏப்ரல்10 -- 16)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்