Thursday, 8 October 2026

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பொருத்தப்பாடு மகாத்மா காந்தியின் பொருத்தப்பாடு

 


CPI தேசிய செயலக உறுப்பினர்

இன்று இந்திய ஜனநாயகத்திற்கு முன் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று ஜனநாயக அமைப்புகளின் தன்னாட்சி  மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வைப் பாதுகாப்பது குறித்த கேள்வி ஆகும். பாஜக –ஆர்எஸ்எஸ் ஆட்சியின் கீழ் நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்ட அமைப்புகள், விசாரணை முகமைகள், ஊடகம் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.  மேலும் மேலும் மையப்படுத்தப்படும் அதிகாரக் குவிப்பு மற்றும் நிறுவனங்களின் தன்னாட்சி உரிமை பலவீனப்படுத்தப்படுவது குறித்த கவலைகள் ஜனநாயக விவாதங்களின் முக்கிய அங்கமாகி உள்ளது.

ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்கள் நடத்துவதற்கான முறை மட்டுல்ல; மாறாக அது, மாற்றுக் கருத்தை மதித்தல், பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், மதச்சார்பின்மை, சமூகநீதி, சுதந்திரமான அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பின் உச்சபட்ச மேலாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஓர் அமைப்பு முறையாகும். இத்தகைய சூழ்நிலையில், ஜனநாயக மரபுகளும்  பன்முகத்தன்மையை மதிக்கும் மரபுகளும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டு, ‌  நெருக்கடியில் உள்ள ஓர் அமைப்பின் காரணமாகப் பாசிச சக்திகள் உருவெடுத்து வரும்போது, மகாத்மா காந்தியின் பொருத்தப்பாடும் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரது பணிகளும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

மகாத்மா காந்தி, அவரது தத்துவம் மற்றும் படைப்புகள் உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் விவாதப் பொருளாக உள்ளன. ஜனநாயக மரபுகளும் பன்மைத் தன்மையை மதிக்கும் மரபுகளும் சவாலுக்கு உள்ளாக்கப்படும் இன்றைய உலகில், புதிய சூழலில் மகாத்மா காந்தியின் பொருத்தப்பாட்டைப் புரிந்து கொள்வது அவசியத் தேவையாகும். 

இந்தியாவின் சுதந்திரத்திற்காக மட்டும் காந்தி போராடவில்லை, மாறாக அவர் ஏகாதிபத்தியம், இனவெறி, வகுப்புவாதம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் தனது குரலைத் தொடர்ந்து எழுப்பினார்.  சத்யாகிரகம் மற்றும் அகிம்சை குறித்த அவரது கோட்பாடு பெருமளவு மக்கள் திரள் பங்கேற்கும் வகையில் ஓர் அரசியல் போராட்ட வழிமுறையாக வளர்ச்சி பெற்றது.

மகாத்மா காந்தி ஆழமான சமய நம்பிக்கையுள்ள தீவிர இந்துவாக இருந்த போதும், தன் வாழ்நாள் முழுவதும் இந்து–முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். மகாத்மா காந்தி குறித்துப் பேசும் போதெல்லாம் புகழ்பெற்ற “ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம், சப்கோ சன்மதி தே பகவான்” ("கடவுளும் அல்லாஹ்வும் உனது திருப்பெயர்களே; இறைவா, அனைவருக்கும் நல்லறிவை அருள்வாயாக) பஜனைப் பாடலை நினைவு கூர்வர். காந்தியின் மதநம்பிக்கை என்பது அவருக்குப் பிற மதங்கள்பால் வெறுப்புக்கான அடிப்படையாக அமைந்ததல்ல. மாறாக அது, பல்வேறு மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் கூடி வாழ்ந்தலுக்கான ஓர் அடிப்படையாகவே திகழ்ந்தது.  இதன் காரணமாகத்தான் காந்தியின் பொது வாழ்வில் மத நல்லிணக்கம் முக்கிய அங்கமாக விளங்கியது.

காந்தியின் ஆளுமையைப் புரிந்து கொள்ளும்போது, குறிப்பாகத் தென்னாப்பிரிக்கா வில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு அவரது கருத்துக்கள் மற்றும் ஆளுமையில் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கைப் பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது. தனது அனுபவங்கள், போராட்டங்கள், மற்றும் பல்வேறுபட்ட கொள்கை உடையவர்களுடன் நடத்திய உரையாடல் ஆகியவற்றின் மூலம் அவர் தொடர்ந்து கற்றுக் கொண்டதுடன், தனது கருத்துக்களை மறுபரிசீலனையும் செய்தார். குறிப்பாக, சாதி மற்றும் தீண்டாமை பிரச்சனைகளில் அவரது கருத்துக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிகிறது.

இது தொடர்பாக காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் இடையே நடைபெற்ற விவாதம் ஆகக் கூடுதலாக முக்கியத்துவம் உடையது

அவர்களின் கண்ணோட்டங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. சாதி அமைப்பு முறைமையைச் சமூகச் சுரண்டலின் அடிப்படை கட்டமைப்பாகப் பார்த்த அம்பேத்கர், தலித் சமூக மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சுயேச்சையான தனி அரசியல் பிரதிநிதித்துவம் முக்கியம் என்று கருதினார்.

காந்தி, தீண்டாமைக்கு எதிராகப் பரந்துபட்ட சமூக மற்றும் தார்மீகப் பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன், இந்து சமூகத்திற்குள் சீர்திருத்தத்தை வலியுறுத்தினார். (இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து இந்திய தலைவர்கள் முடிவுக்கு வராத நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் அறிவித்த Communal Award) 1932 வகுப்புவாரி தீர்வு மற்றும் பூனா ஒப்பந்தம் காரணமாக இரு தலைவர்களுக்கும் மத்தியில் தீவிரமான கருத்து வேறுபாடுகள் உருவாகின.

ஆனால் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான விவாதத்தை வெறும் பரஸ்பர எதிர்ப்பு என்று பார்ப்பது போதுமானதல்ல. இந்த விவாதம் சாதி, தீண்டாமை, சமூக சமத்துவம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய விஷயங்களை இந்தியச் சமூகத்திற்கு முன்  மையமான கேள்விகளாக மாற்றியது. காந்தியின் கருத்துக்களில் வளர்ச்சிப் போக்கு மற்றும் அம்பேத்கருடன் அவரது முரண்பாடு ஆகியவை, சமூகப் பிரச்சனைகளுடன் காந்தி தொடர்ந்து தீர்வு காண போராடிக் கொண்டிருந்தார் எனக் காட்டுகிறது. தீண்டாமைக்கு எதிரான அவரது பிரச்சாரம் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் முக்கிய அங்கம் ஆகியது.

கம்யூனிஸ்டுகளுடன் காந்தி நடத்திய உரையாடலும்கூட அவருடைய ஆளுமையின் இந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முக்கியமானது.

காந்திக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே கருத்தியல் வேறுபாடுகள் இருந்தன; எனினும் காந்தி, கம்யூனிஸ்ட்களுடன் உரையாடல் நடத்துவதிலிருந்து தம்மை விலக்கி வைத்துக் கொள்ளவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் பிசி ஜோஷியுடன் காந்தியின் கடிதப் போக்குவரத்து இதற்கு முக்கிய உதாரணம். 1944 மே 6 முதல் 1945 மே 24 வரையான காந்தி  –ஜோஷி கடிதப் பரிமாற்றம் தொகுக்கப்பட்டு பின்னர் ஒரு நூலாக வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்டுகளின் கருத்துகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களுடன் அரசியல் உரையாடலில் ஈடுபடவும் காந்தி தயாராக இருந்தார் என்பதற்கு இந்தக் கடிதப் பரிமாற்றம் முக்கியமான சான்றாகும். பிசி ஜோசியுடன் அவரது உரையாடலில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, தேசிய இயக்கம், போர், தேசிய ஒற்றுமை, அரசியல் செயல் உத்தி போன்ற கேள்விகள் எழுந்தன. இந்த உரையாடல் காந்திக்குக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நெருக்கமாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தந்தது; மேலும் தனது கருத்தியல் எதிர்த்தரப்பினருடன் கூட உரையாடும் காந்தியின் ஆளுமை வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் இது அமைந்தது. 

நிச்சயமாக, கம்யூனிஸ்டுகளுக்கு மகாத்மா காந்தியுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன; ஆனால் பரவலாகப் பார்த்தால், கம்யூனிஸ்டுகளும் முக்கிய இடதுசாரி தலைவர்களும், ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான காந்தியின் போராட்டத்தைத் தொடர்ந்து பாராட்டினர். இன்றைய சூழலில் பாஜக– ஆர்எஸ்எஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மகாத்மா காந்தி மற்றும் அவரது தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையின்  தருணம் இதுவே ஆகும்.

மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவும் அவரது கூட்டாளிகளும் பாசிசத்தில் நம்பிக்கை உடையவர்கள் மற்றும் காந்தியிசத்தை எதிர்த்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை, பன்முகத் தன்மையை மதித்ததில்லை. இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற அவர்கள் விரும்பினர். காந்தியின் படுகொலை, வெறும் ஒரு தனிநபரின்  படுகொலை அல்ல; மாறாக அது, அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களுக்கும் சமமான இடத்தை அளிக்கும் ஒரு தேசமாக இந்தியாவைப் பார்த்த அரசியல் கோட்பாட்டின் மீதான தாக்குதலும் ஆகும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டு அது முசோலினி மற்றும் ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகள் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டதை  நினைவுcகொள்வது

அவசியம். ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான மூஞ்சே (B S Munje) பாசிச ஆட்சி முறைகளைக் கற்க இத்தாலி சென்றார். இந்த வரலாற்றுத் தொடர்புகளையும் அக்காலகட்டத்தின் அரசியல் தாக்கங்களையும் புரிந்து கொள்வது முக்கியம்; ஏனெனில் பாசிசம் என்பது ஓர் அரசியல் அமைப்பு அல்லது அரசின் வெறும் பெயரோ அல்ல. அது, ஜனநாயக அமைப்புகள், மாற்றுக் கருத்து, பன்மைத்துவம் மற்றும் சமூக சமத்துவத்திற்கு எதிரான பரந்துபட்ட அரசியல் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு உடனே மத அடிப்படையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எனத் தேசம் பிரிக்கப்பட்டது; இருந்த போதிலும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் ஆகியோர் இருந்ததாலும், விடுதலைப் போராட்ட இயக்க மதச்சார்பின்மை மற்றும் சகிப்புணர்வின் வலுவான மரபுகளாலும் இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அதன்படியே ஓர் அரசியலமைப்புச் சட்டமும் வடிவமைக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்ததுடன், அதற்கு எதிராகவும் செயல்பட்டது. மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து, அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல்,  ஆர்எஸ்எஸ் மீது தடை விதித்தார்; பின்னர் அந்தத் தடையை நீக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியாக ஆர்எஸ்எஸ், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அமைப்பு தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளை அளித்தது.  

இந்த முழுமையான வரலாற்று அத்தியாயம் குறித்து வேறுபட்ட அரசியல் விளக்கங்கள் உள்ளன; ஆனால் சுதந்திர இந்தியா ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றைத் தனது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அடித்தளங்களாக அமைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

காந்தியின் ஆளுமை தொடர்ந்து பரிணமித்து வந்ததைக் கருத்தில் கொண்டால், எழுகின்ற பின்வரும் கேள்வியைப் பரிசீலிப்பது அவசியம்: காந்தி படுகொலை ஆகாமல், சுதந்திர இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கவும், அதில் தலையிடவும் கூடிய ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்குமானால் பின்னர் அவரது கருத்துக்கள் சோசலிசத்திற்கு நெருக்கமாக நகர்ந்திருக்குமா? இக்கேள்விக்கு நிச்சயமான வரலாற்று பூர்வ பதில் அளிக்க இயலாது. இருந்த போதிலும் இந்தக் கேள்வி முழுமையாகப் பொருத்தமற்றது அல்ல. 

ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் குறித்த பிரச்சனைகளையும், பொருளாரச் சமத்துவமின்மை மற்றும் சொத்துரிமையின் சமூகப் பொறுப்புக் குறித்த கேள்விகளுக்குத் தீர்வு காண காந்தி தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகள் மற்றும் சோசலிசவாதிகளுடன் அவர்  நடத்திய உரையாடல் மற்றும் அவரது கருத்துக்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான மாற்றங்களைக் கவனித்தால், இந்தியக் கண்ணோட்டத்தின்- படியான சோசலிச சமூகம் பால் அவர் நெருக்கமாக நகர்ந்து இருக்கக்கூடிய சாத்தியப்பாடு இருந்திருக்க முடியும். இது வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட முடிவு அல்ல, ஆனால் காந்தியின் சிந்தனை வளர்ச்சி அடிப்படையில் அது ஒரு வரலாற்று சாத்தியக்கூறு ஆகும். 

பாஜக ஆட்சியாளர்கள் வெளிநாடு செல்லும்போது அவர்கள், சாந்தி சமாதானம் மற்றும் சகிப்புத் தன்மையைப் பேசிய, போதித்த மகாத்மா கௌதம புத்தர் மற்றும் மகாத்மா காந்தியை மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் இந்தியா திரும்பி பிறகு  –அமைதி, சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கம் மற்றும் பன்மைத்துவம் ஆகிய– அதே விழுமியங்களுக்கு அரசியல் வாழ்வில் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது இயல்பாகவே நம்முன் எழுகின்ற கேள்வி. மகாத்மா காந்தியின் மரபு என்பது வெறும் அடையாளச் சின்னங்கள், சிலைகள், சம்பிரதாய புகழுரை அஞ்சலி என  வரையறுத்து அடக்கி விட முடியாது  காந்தியின் உண்மையான செய்தி, ஜனநாயகம், சகிப்புத்தன்மை, அன்பு, உரையாடல், எளிய மனிதனின் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது.

நவீன சூழ்நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட்கள், கம்யூனிசத்தை நிறுவ வேறுபட்ட வழிகள் குறித்தும், அந்தக் குறிப்பிட்ட தேசத்தில் நிலவும் மரபுகளை மதிப்பது குறித்தும் பேசி வருகின்றனர். எனவேதான் சீனக் கம்யூனிஸ்டுகள், “சீனாவின் தன்மையுடன்கூடிய மார்க்சியம்” எனப் பேசுகின்றனர். அது வியட்நாம் விஷயத்திலும் பொருந்தும் உண்மை; எனவே, ஜனநாயக மரபுகளையும் இந்திய அரசியலமைப்பையும் ஏற்றுக் கொண்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்டுகளும், “இந்திய மரபுகளுடன் கூடிய மார்க்சியம்” குறித்துப் பேச வேண்டும்.

 எனவே மகாத்மா கௌதம புத்தரும், மகாத்மா காந்தியும் விடுத்த உலக அமைதிக்கான அழைப்பையும்;  இன்றைய சூழலில், கம்யூனிஸ்ட்களால் ஆதரிக்கப்படும் உலக அமைதி என்ற கருத்தையும் புரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் உலக முதலாளித்துவம் தனது லாபங்களை அதிகரிக்க  போர்களை ஊக்கப்படுத்துகிறது. அமைதி, சகிப்புத்தன்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாப்பது, இந்திய மரபிலிருந்து வேறான கருத்து அல்ல. மாறாக, இவற்றை இந்திய சமூகத்தின் வரலாற்று மரபுகள் மற்றும் நவீன ஜனநாயக அரசியலமைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்க  வேண்டும்.

இன்று பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல;  அது, ஜனநாயக அமைப்புகளின் சுதந்திரம், அரசியலமைப்புச் சட்டப்  பாதுகாப்பு, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கட்டமைப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகும். எனவே இந்தப் போராட்டத்தில் காந்தியின் கருத்துகளின் பயனைப் புரிந்து கொள்வது முக்கியமாகும். கம்யூனிஸ்ட்களுக்குக் காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம்; எனினும் ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான அவரது போராட்டம், மத நல்லிணக்கத்திற்காக அவரது முயற்சிகள் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீது அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை, இன்றைய சூழலில் ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம்.  

இந்தச் சூழலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு மகாத்மா காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை “மதச்சார்பின்மை பாதுகாப்புத் தின”மாக அனுசரிக்கும்படி தனது அனைத்துக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. இது காந்திஜிக்கு வெறும் புகழஞ்சலி செலுத்தும் தருணமாக அமையலாகாது; மாறாக அன்றைய தினத்தில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூக நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றைப் பாதுகாக்க நாம் உறுதி ஏற்போம். காந்திஜியின் சகிப்புத்தன்மை மற்றும் அன்பு குறித்த செய்தியை இந்தியா முழுவதும் பரப்புவோம்! அதனை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவைக் கட்டி எழுப்பும் போராட்டத்துடன் இணைப்போம்!

–நன்றி : நியூ ஏஜ் (அக். 4 –10)

–தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

 

Sunday, 4 October 2026

நியூ ஏஜ் தலையங்கம் -- தூக்குமேடைகள் வாழ்வின் முடிவல்ல

 

    இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் திட்டங்களை விவரித்த சுற்றறிக்கைகளை மத்திய சட்டமன்ற ஹாலில் வீசியும், தலைவர்களையும் மக்களையும் விழிப்படையச் செய்ய வெடிகுண்டு வீசிய பிறகு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பகத்சிங், தனது வாழ்வின் இறுதி நெருங்கியதை முழுமையாக அறிந்திருந்தார். அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரி இது குறித்து அவரை எச்சரித்தார். அதற்கு பகத்சிங் அளித்த பதில், “உடல் மட்டும் தானே அழிகிறது கருத்துக்கள் அல்லவே, அவை தொடர்ந்து உயிர்ப்புடன் வாழும்.” அவர் கூறியது போலவே பகத்சிங் இன்று இல்லை; ஆனால் இப்போதும்கூட அவர் வாழ்கிறார்: நினைவுகளில் மட்டுமல்ல, மாறாக மக்களுக்காகப் போராடுபவர்களின் ஒவ்வொரு மூச்சு காற்றிலும் அவர் வாழ்கிறார்.

மகாத்மா காந்தியும்கூட அதே பாதையில், வெகுவாக விலகி இருந்த போதும், பயணித்த ஒருவர். அதுபோலவே நாட்டிற்கும் அதன் மக்களுக்குமான அவர்களின் அன்பில் மட்டுமல்லாமல் தங்கள் மரணத்திலும் ஒன்றுபோல இருந்தவர்கள். பகத்சிங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்; மகாத்மா காந்தி ஆர்எஸ்எஸ்-காரர் ஒருவரால் சுடப்பட்டார். 1869 அக்டோபர் இரண்டாம் நாள் பிறந்த காந்திஜியின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 1948 ஜனவரி 30 அவர் படுகொலை செய்யப்பட்டார்; ஆனால் வகுப்புவாத பாசிச இந்துத்துவ சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டு சக்தியாக அவர் இன்னும் ஜீவிதமாக நீடிக்கிறார்.

அடிமைப்பட்டு இருந்த இந்தியாவில் ஒரு உள்ளூர் பள்ளியில் காந்தி படித்தார்; பின்னர் சட்டம் பயில உயர் கல்விக்காக லண்டன் சென்றார். அடிமை இந்தியாவின் நிழலில் உருவாகி வந்த சுதந்திர நாட்டின் தேசியத்துடன் அவர் வளர்ந்தார். இந்தியாவில் காலனியத் தளைகளைத் தகர்க்காமலும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை நிறுவாமலும் சுதந்திரம் முழுமை பெறாது என்று அவர் பிரச்சாரம் செய்தார். அரசியல் அமைப்புச் சட்ட முகவுரையில் இறையாண்மை, ஜனநாயகம், குடியரசு போன்ற வார்த்தைகள் இடம் பெற செய்யப்பட்டன; ஏனெனில், அவர் தலைமை தாங்கிய தேசிய இயக்கத்தின் கூட்டு உறுதிப்பாடு மற்றும் கூட்டு உணர்வின்  பின்னணியில் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தன. இந்தக் கொள்கைகளுக்காகவே அவர் உயிர் துறக்கவும் செய்தார்.

காந்திஜியின் தியாகத்திற்கு பம்பாய் சட்டமன்றத்தில் அஞ்சலி செலுத்திய அதன் உறுப்பினர் தோழர் எஸ்ஏ டாங்கே, “அவர் ஒரு முனிவர் என்பதற்காகப் படுகொலை

செய்யப்படவில்லை, நாட்டின் அரசியல் விவகாரங்களில் அவரது வழியில் அவர் தலையிட்டார் என்பதற்காகவும் அவர் படுகொலை செய்யப்படவில்லை.  இந்து –முஸ்லிம் ஒற்றுமை என்ற தேசத்தின் நெருக்கடியான கட்டத்தின் அரசியல் சூழலில் அவர் தலையிட்டது வகுப்புவாதப் பிற்போக்கு சக்திகளால் விரும்பப்படவில்லை. இந்த ஒரு பாவத்தை அவர் செய்தார்; மற்றும் குறிப்பான இந்தப் பாவத்தின் குற்றத்திற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டார். அது தவிர அமைதி, அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கருத்தியல் ரீதியில் (in the abstract) போதித்தார் என்ற காரணத்திற்காக அவர் படுகொலை செய்யப்படவில்லை. நிலப்பிரபுகள் மற்றும் குத்தகைதாரர்கள் இடையேயும், விவசாயிகள் மத்தியிலும் அவர் அன்பைப் போதித்தார்; ஆனால் கிசான்கள் அவரைக் கொல்லவில்லை. எந்த ஒரு தொழிலாளியோ, விவசாயியோ அல்லது கம்யூனிஸ்டோ அவரைக் கொல்லவில்லை. அவரைக் கொல்ல சூழ்ச்சி செய்தது மன்னர்கள், நிலப் பிரபுக்கள் மற்றும் முதலாளிகளே ஆவர்”

காந்திஜியைப் பொறுத்தவரை எதுவும் முழுமை பெற்ற ஒன்று (absolute) அல்லது மாறாதது அல்ல, வாழ்நாள் முழுவதும் அவர் தொடர்ந்து பரிசோதனை செய்த ‘உண்மை’யும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சமூகத்தில் வர்க்கப் பகுப்பாய்வு மற்றும் வர்க்கப் போராட்டத்தின் பங்கு என்பதைக் காந்திஜி ஏற்கவில்லை என்பது உண்மையே; ஆனால் அடிப்படையில் சமூக மாற்றத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

குத்தகை மற்றும் நில வருவாயைக் கணிசமாகக் குறைப்பதிலும், நிலத்தில் விவசாயம் செய்ததற்கு எதிராக நிலப்பிரபுகளுக்குச் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கிகளையும் மற்றும் கட்டாய உழைப்புமுறையை ஒழிப்பதிலும் காந்தியடிகள் நம்பிக்கை கொண்டிருந்தார். குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களால் நிலம் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்கவும் காங்கிரஸ் அமைச்சரவைகள் சட்டங்களை இயற்றின. இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டன. இடதுசாரிகளின் அரசியல் மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகள் இயக்கத்தின் அரசியல், சோசலிசத்தை ஆதரிக்காத காங்கிரஸ் வலதுசாரிகளையும் ஈர்த்தன. நிலச் சீர்திருத்தம், நிலப்பிரபுத்துவ முறை ஒழிப்பு மற்றும் உழுபவனுக்கு நிலத்தை மீண்டும் உரிமையாக்குவதை ஆதரிப்பதில் அந்த இயக்கம் முழுவதுமாக ஒரு நேர்மறையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

காந்தியடிகள் தீவிரமான பாதையை நோக்கி நகர்ந்தபோது, தேசிய இயக்கத்தின் முழுமையான கருத்தியல் போக்குமே அவரால் வழி நடத்தப்பட்டது என்று சொல்லலாம். தனிச்

சொத்துரிமையை அவர் எதிர்க்கத் தொடங்கியதுடன், அறங்காவலர் முறைக்கு  (trusteeship) தீவிர வடிவம் அளித்து முன் வைத்தார். 1942ல் அமெரிக்கப் பத்திரிகையாளர் லூயிஸ் ஃபிஷர் அறங்காவலர் முறை குறித்து அவரிடம் வினவியபோது, காந்தியடிகள் ‘அறங்காவலர்களுக்கு எதிராகச் செல்வதற்கே நான் முன்னுரிமை தருவேன்; தேவை எனில் முன்பு ஒரு நேரத்தில் தாம் ஆதரித்த அறங்காவலர்களுக்கு எதிரான வெளிப்படையான எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வேன்’ என்று பதில் அளித்தார்

‘விவசாயிகளின் மேம்பாட்டிற்கான அவரது திட்டம் என்ன’ என்ற லூயிஸ் ஃபிஷரின் கேள்விக்குப் பதிலளித்த காந்திஜி, “விவசாயிகள் நிலத்தை எடுத்துக் கொள்வார்கள். நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாம் அவர்களிடம் கூற வேண்டியது இல்லை, அவர்களே எடுத்துக் கொள்வார்கள்” என்றார்.  நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்று ஃபிஷர் தொடர்ந்து கேட்டபோது, “இல்லை, அது நிதிநிலை ரீதியாகச் சாத்தியமற்றது” என்று பதில் அளித்தார்.

மேலும் அதை விளக்கிய காந்திஜி, “கிராமங்களில் விவசாயிகள் வரி செலுத்துவதை நிறுத்துவர்… அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை நிலத்தைக் கைப்பற்றுவதாக இருக்கும்” என்று கூறினார். நிலத்தைக் கைப்பற்றுவதில் வன்முறை ஏதேனும் இருக்குமா என ஃபிஷர் கேட்டபோது, “அங்கு வன்முறை நிகழக்கூடும், ஆனால் பின்னர் நில உரிமையாளர்கள் மீண்டும் ஒத்துழைக்கவும் செய்யலாம்… அங்கிருந்து ஓடி விடுவதன் மூலம் அவர்கள் ஒத்துழைக்கலாம்”என்று காந்திஜி பதிலளித்தார்.

நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தைக் காந்திஜி வன்மையாக எதிர்த்தார். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்ததுடன், பெண்களின் விடுதலையை அவர் ஆதரித்தார். அவரது எழுத்துக்கள் எப்போதும் நலிவடைந்தோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சுரண்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வெளிப்பட்டது.

காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவர், இந்து ராஷ்டிரா திட்டத்தையும், அதற்குத் தூண்டுதலாக இருந்த கொடிய சித்தாந்தத்தையும் முழுமையாக முறியடித்திருந்தார் என்பதை அவரது வாழ்க்கைப் பயணம் வெளிப்படுத்துகிறது; அந்தக் கொடிய சித்தாந்தத்தை முன்னெடுத்த அமைப்புகளான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் இந்து மகா சபாவை இந்திய அரசியலில் ஓரம் கட்டும்  நிர்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார்.  

காந்திஜியின் அளப்பரிய தார்மீக வலிமை மற்றும் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சபட்ச தலைவராக அவர் மேற்கொண்ட முழு வீச்சிலான

 முயற்சிகள் ஆகியவற்றின் காரணமாகவே, சுதந்திரமடைந்த குறுகிய காலத்திலேயே மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக தேசமாகத் திகழும் தொலைநோக்குப் பார்வையின் செல்லுபடியாகும் தன்மை கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக நிலை பெற்றது. அது அக்காலகட்டத்தின் கொந்தளிப்பான சூழலைக் கடந்து சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை ஒன்றிணைக்கும் கோட்பாடாகத்  திகழ்ந்தது.

காந்திஜியின் படுகொலையானது, சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற திட்டத்தைத் தடம் புரளச் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஆகும். காந்தியின் படுகொலைக்கு எதிராக எழுந்த மக்களின் கொந்தளிப்பு மற்றும் நீடித்த வெறுப்புணர்வு ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது, கோட்சே உண்மை என்று நம்பி முன்வைத்த தீர்வு முயற்சி இப்போது, அறியாமையில் ஊறியதாகவும், ஏன் தனக்கே பாதகமாக முடியக்கூடியதாகவும் கூடத் தெரிகிறது.

ஆனால் அப்படுகொலைக்கு வித்திட்ட சர்ச்சைக்குரியவர்கள் தப்பித்து, தொடர்ந்து நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக இருந்ததுடன், அவர்களின் தேர்தல் பிரிவான பாஜக மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும், மகாத்மா காந்திஜி போராடி தன் உயிரையே தியாகம் செய்த மதச்சார்பற்ற இந்தியாவின் அடித்தளத்தையே அச்சுறுத்தி வருகிறார்கள்

அரசு நிர்வாக அமைப்பில் பாஜக அரசு ஏற்படுத்திய சீர்கேடு என்பது, தேர்தல் ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தேர்தல் முறைகேடுகளைச் செய்வதுடன் முடிவதில்லை. அது அதைவிட பெரிதானது. அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் அச்சுறுத்துகிறது. 

             மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டுப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பொருத்தப்பாடும் முக்கியத்துவமும் இன்றைய நிலையைவிட ஒருபோதும் கூடுதல் பொருத்தமானதாக இருக்க முடியாது.

காந்தி ஜெயந்தி நாளில் மகாத்மாவுக்கு நமது அஞ்சலியை உரித்தாக்குவோம்! 


–தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்.

 





Monday, 14 September 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 155 -- P மாணிக்கம் –மெட்ராஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய அமைப்பாளர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 155 


P மாணிக்கம் –மெட்ராஸ் மாகாணத்தில் 
        கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய அமைப்பாளர்

 

–அனில் ரஜிம்வாலே

ப மாணிக்கம் 1921 அக்டோபர் 26ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகே பாடகச்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை பக்கிரிசாமி, தாயார் மகமாயி அம்மாள். பக்கிரிசாமி விவசாய விளைபொருட்கள் மொத்த விற்பனை அங்காடியில் காசாளராகப் பணியாற்றினார். அவர்களது குடும்பம் நடுத்தர வர்க்கக் குடும்பம். தஞ்சை மாவட்ட வலங்கைமானைப் பூர்வீகமாகக் கொண்ட பக்கிரிசாமி, இறுதியில் கடலூரில் குடியேறினார். கடலூர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். மாணிக்கத்தின் தந்தை முதலில் ஒரு பாடகர்; அதே நேரத்தில், இ வி இராமசாமி (தந்தை பெரியார்) மற்றும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ம சிங்காரவேலர் தலைமையிலான பரவலான சுயமரியாதை இயக்கத்தில் அப்பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டார்.

விடுதலை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தொடக்கம்

மாணிக்கம் கடலூரில் எஸ்பிஜி நடுநிலைப் பள்ளியிலும் பின்னர் கடலூர் முனிசிபல்

உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். அங்கே படிக்கும்போது பெரும் விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் வாழ்வால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது மகாத்மா காந்திதான் அஞ்சலை அம்மாள் அவர்களைத் ‘தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ என்று அழைத்தார்.

எஸ்எஸ்எல்சி முடித்த பிறகு மாணிக்கம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவரது சக மாணவரும் மார்க்சிய அறிஞருருமான சுப்பிரமணிய சர்மாவையும், இளைஞர் தலைவரான பாலதண்டாயுதத்தையும் சந்தித்தார். அவர்கள் இருவரும் அவரது வகுப்புத் தோழர்கள் மட்டுமல்ல, மாணிக்கத்தின் எதிர்காலப் பாத்திரத்தை வரையறுத்ததில் பெரும் பங்காற்றியவர்கள்.

ஸ்பெயின் தேசத்தில் ஜெனரல் பிராங்கோ பாசிசப் படைகளை எதிர்த்துப் போராடிய ரிபப்ளிக்கன் ஸ்பெயின் குழுவினருக்கு ஆதரவாக நிதி திரட்ட ஜவஹர்லால் நேரு விடுத்த அறைகூவலின்படி, அவர்கள் நிதி திரட்டினர்.

மாணிக்கம் 8 வயது மாணவராக இருந்தபோது அவரது அண்டை வீட்டுக்காரரான 25 வயது இளைஞர் இராமச்சந்திரன் அடித்தே கொல்லப்பட்டார். இந்நிகழ்வு இளம் மாணிக்கத்தின் மனதை ஆழமாகப் பாதித்தது. 1930ல் காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் இராமச்சந்திரன்.

அரசியல் நடவடிக்கைகளில் 

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அரசியல் நடவடிக்கைகளின் மையத் தொட்டிலாக இருந்தது; அவர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் இருந்தனர். கம்யூனிஸ்ட் மாணவர்கள், ‘தோழர்கள் மன்றம்’ (காம்ரேடுகள் கிளப்) அமைத்தனர்; அந்த அமைப்பு எதிர்கால நிகழ்வுகளில் முக்கியப் பங்கு ஆற்றியது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டியமைத்த தலைவர்கள் மத்தியில் சுப்பிரமணிய சர்மா இருந்தார்.

மாணிக்கம் இந்த நிகழ்வுகளின் பிரிக்க முடியாத அங்கமானார், பின்னர் பல்கலைக்

கழகத்தின் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) செயலாளராகி, மாணவத் தலைவராக உருவானார். ஏற்கனவே மார்க்சியச் செல்வாக்கின் கீழ் வந்தவர், முக்கியமாக எஸ் சர்மா மற்றும் பாலதண்டாயுதத்தின் முயற்சிகளால் ஏராளமாகப் படித்தார்.

1942ல் தங்கள் கோரிக்கைக்காக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அவர்களின் தலைவரான ப மாணிக்கம் உட்பட 32 மாணவர்களை அதிகாரிகள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றினர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்தல் 

இந்நடவடிக்கைகளின் காலகட்டத்தில் மாணிக்கம், ப ஜீவானந்தம், ஏ எஸ் கே ஐயங்கார்,

பி ராமமூர்த்தி, பி ஸ்ரீனிவாச ராவ் போன்ற தலைச் சிறந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களைச் சந்தித்தார். காலக்கிரமத்தில் மாணிக்கம் கட்சியின் முழு நேர ஊழியர் ஆனார். மேலும் அவர் எஸ்.சர்மா, ஆர் உமாநாத், எம் பி ஸ்ரீனிவாசன் மற்றும் பிறருடன் கூட்டாக மாணவர் முன்னணி அரங்கிலும் பணியாற்றினார்.

1944ல் கட்சி மாணவர் அமைப்பைக் கட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கும்; பின்னர் 1945ல் பிற மாவட்டங்களுக்கும் அவரை அனுப்பியது. பிடிஆர் காலத்தின்போது அவர் திருநெல்வேலி மாவட்டக் கட்சி செயலாளரானார், அப்பொறுப்பில் 1948ல் இருந்து 1962 வரை நீடித்தார். மாணவர் இயக்கத்திற்கு உதவுவதுடன்கூட அவர், துறைமுக, டெக்ஸ்டைல், விவசாய மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க மற்றும் கட்சி இயக்கங்களுக்கான வலிமையான அடித்தளங்களை நிறுவினார்.  

திருநெல்வேலி அற்புதமான வெளிகளில் பணி

திருநெல்வேலி மாவட்டக் கட்சியில் மாணிக்கத்தின் பணிகள் அப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அடித்தளம் அமைப்பதை நோக்கி பெரும் பங்களிப்புகளை நல்கியது. கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடு 1948 ஜனவரியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் மாணிக்கம் அமைப்புச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அமைக்க முடிவு செய்தது. ஆர் நல்லகண்ணு நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

திருநெல்வேலி மெட்ராஸ் மாகாணத்தின் தென்கோடி மாவட்டம். ‘திருநெல்வேலி’ என்ற பெயருக்கு அழகான நெல் வயல்கள் சூழ்ந்த நிலம் என்று பொருள். மேலும் அது ‘புனித நெல் வயல்களால் வேலியிடப்பட்டது’, அல்லது நகரின் தலைவரான சிவபெருமான் நெல் வயல்களால் வேலியிடப்பட்டு வணங்கப்படுகிறார் என்று அறியப்படுகிறது; (திரு + நெல் + வேலி). [சிவபக்தர் ஒருவர் வீடுகளில் யாசகம் பெற்ற நெல்லைச் சிவபெருமான் நெய்வேத்தியத்திற்காக வெயிலில் உலர்த்திவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது மழை பெய்ய பதறிப்போன சிவபக்தர் நெல் நனையாமல் பாதுகாக்கத் திரும்ப ஓடி வந்தவர் அந்த அற்புதக் காட்சியைக் கண்டார்: காய வைத்த நெல்லைச் சுற்றி மட்டும் மழை பெய்ய, நெல் பாதுகாப்பாக இருந்தது. சிவன் நெல்லை வேலியிட்டு பாதுகாத்தார் என்ற இந்தப் புராணக் கதையும் நகருக்கான பெயர் காரணமாகச் சொல்லப்படுகிறது –கூடுதல் இணைப்பு]

இந்த மாவட்டம் பருத்தி உற்பத்தியின் மையமாகவும் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருந்தது. இங்கு விளையும் பருத்தி உலகச் சந்தையில் ‘tinnies’ என்று –குறிப்பாக லிவர்பூலில் தின்னவேலி காட்டன் (திருநெல்வேலி பருத்தி) என அறியப்பட்டது. பருத்தி ஏற்றுமதிக்கு முக்கிய வணிக மையம் தூத்துக்குடி. இதன் தொடர்ச்சியாக, வலிமையான விவசாய மற்றும் தொழிற்சங்க இயக்கங்கள் இப்பகுதியில் கட்டப்பட்டன.

1865க்கு பிறகு அரசு ரயத்துவாரி அடிப்படையில் நில வருவாய் முறையை அறிமுகப்படுத்தியது. ஜமீன்தாரி முறையும் கூட அமல்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி, கட்சியின் ஒரு முக்கிய மையம்; இங்கு –பலமான நிலப் பிரபுத்துவ உறவுகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாதபோதும்– விவசாயிகள் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தனர். பிரிட்டிஷ் காலனிய நில வருவாய் கொள்கைகள் நேரடியாகச் சுரண்டலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் இட்டுச் சென்றது. அதற்கு முன்பு பாளிகர் கிளர்ச்சிகள் (அதாவது பாளையக்காரர்கள் என்பதன் ஆங்கிலச் சிதைந்த வடிவம், Poligar rebellions) பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் நிகழ்ந்தன. 1908 திருநெல்வேலி கிளர்ச்சி மற்றும் வ உ சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமணிய சிவா போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த கிளர்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடந்தன.

நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கத் தடுக்கப்பட்ட தலித்கள், அடிமைகளாகக் கொடூரமாக நடத்தப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த போதும் ‘பஞ்சமி’ நிலத்திற்கான போராட்டம் மீதும் கவனம் குவிக்கப்பட்டது. [பஞ்சமி நிலம் என்பது, நிலமற்ற பட்டியல் இன (SC) ஏழை மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக 1892ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசால் (செங்கல்பட்டு ஆட்சியர் ஜே.எச்.ஏ. ட்ரெமென்கியூரி அறிக்கையின் அடிப்படையில்) ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும். சுயசார்புடன் வாழவும், வறுமையைப் போக்கவும் ஆங்கிலேயர் காலத்தில் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஐந்தாம் வர்ணத்தினர் அல்லது ‘பஞ்சமர்’ என அழைக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கப்பட்டதால் இந்நிலம் 'பஞ்சமி நிலம்' என்று அழைக்கப்பட்டது.--கூடுதல் இணைப்பு] பஞ்சமி நிலத்திற்கான போராட்டம் நில பட்டாக்களைப் பெறுவதற்காகவும் நடைபெற்றது.

விலை ஏற்றத்தாழ்வுகள் அல்லது அறுவடை எப்படி இருந்தபோதும் கவலைப்படாது, அதிகமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வரிகளை ரொக்கமாகச் செலுத்த வேண்டிய முறைகளைப் பிரிட்டிஷ் அரசு அறிமுகப்படுத்தியது. இதன் விளைவு, கடுமையான கடன்கள் மற்றும் நிலம் பறிமுதல்கள்.  காலனிய நிர்வாகத்தின் ஆதரவுடன் ஜமீன்தார்கள் அடிக்கடி பண்ணையாட்கள் அல்லது கொத்தடிமை தொழிலாளர்களை உடல்ரீதியில் கடுமையாகத் தாக்கினர். 1940களில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அல்லது விவசாய அமைப்புகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு ரீதியில் ஒன்று திரண்டு தங்கள் போராட்டங்களை நடத்தின.

கிளாம்பூர், சிவகிரி, வள்ளியூர், கடையநல்லூர் மற்றும் பல இடங்களில் ஏராளமான எண்ணிக்கையில் விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன.

சுப்பிரமணிய பாரதி நினைவு நூலகம் ஒன்று எட்டயபுரத்தில் நிறுவப்பட்டது.

தூத்துக்குடி, அம்பாசமுத்திரம் கோவில்பட்டி முக்கிய தொழிற்சங்க மையங்களாக விளங்கின.

பாலதண்டாயுதம் மற்றும் பிறருடன் இணைந்து ப மாணிக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

அதே நேரத்தில் கட்சி பெரிய அளவில் பதிப்பகங்களை அமைத்து நூல்களை வெளியிட்டது. 1940ல் சிறையில் அடைக்கப்பட்ட எஸ் எஸ் பிள்ளை என்ற காங்கிரஸ்காரர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார், நூல்கள் வெளியிடுவதில் தீவிரமாக ஈடுபட்டார். மாவட்டக் கட்சி, மாணிக்கம் வழிகாட்டுதல் கீழ் தனது சொந்தப் பதிப்பகத்தை அமைத்தது.

மதுரை ஹார்வி மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் அரசு, மாணிக்கம், பி. ராமமூர்த்தி, கேடிகே தங்கமணி, எம் ஆர் வெங்கட்ராமன் மற்றும் பிறர் மீது சதி வழக்குகளைப் புனைந்தது. அவர்கள் ஓர் ஆண்டு விசாரணை கைதிகளாக இருந்தனர்.

மாணிக்கம் தென் மாவட்டங்களில் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு ரீதியாகத் திரண்ட பல்வேறு டெக்ஸ்டைல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றினார். மேலும் பீடி, சுருட்டு, துறைமுகம் மற்றும் பிற ஆலைகளில் பல்வேறு தொழிற்சங்கங்களை நிறுவியவர் அவர்.

மதுரைச் சதி வழக்கு 

மதுரைச் சதி வழக்கில் கேடிகே தங்கமணி மற்றும் பி இராமமூர்த்தியுடன் மாணிக்கம் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் பாளையங்கோட்டையில் கொக்கரக்குளம் மற்றும் மதுரைச் சிறைகளில் அடைக்கப்பட்டார். மதுரைச் சதி வழக்கு மற்றும் திருநெல்வேலிச் சதி வழக்கிலும் மாணிக்கம் சேர்க்கப்பட்டார்.

1949 மற்றும் 1950க்கு இடையில் விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி, களக்காடு, மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் மற்றும் பல இடங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கவிழ்க்கச் சதி செய்தது, இரயில் பாதைகள் மற்றும் தந்திப் போக்குவரத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்தது, வெடி மருந்துகள் சட்டத்தை மீறியது மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

மெட்ராஸ் மற்றும் நெல்லைச் சதி வழக்குகள் 

கேடிகே தங்கமணி உடன் ஓராண்டு மற்றும் பி இராமமூர்த்தி உடன் ஓராண்டிற்கும் 1946– 47ல் புகழ்பெற்ற மெட்ராஸ் சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகே அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 1948ல் நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1954ல் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.  அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

1950களில் அவர் திருநெல்வேலியில் இருந்து மாநில மையத்திற்கு மாறினார். முதலில் தமிழ்நாடு மாநிலக் கட்சிக்கு உதவிச் செயலாளராக இருந்தவர், பின்னர் மாநிலச் செயலாளராகி 1992 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மேலும் அவர் மத்தியச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

அவர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக 10ஆண்டுகளுக்கு மேல் இருந்தார் மற்றும் 1981 –86ஆம் ஆண்டுகளில் அவர் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மாநிலப் பத்திரிக்கை, ‘ஜனசக்தி’-யின் ஆசிரியராக அவரது வாழ்நாள் இறுதிவரை செயல்பட்டார். புகழ்பெற்ற நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) நிறுவன வலைப்பின்னல் அமைப்பைக் கட்டி எழுப்ப அவர் உதவினார்.

பி டி ஆர் காலம்

பிடி ரணதிவே கட்சிப் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் கட்சியும் தனிநபர் தோழர்களும் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகினர். பி மாணிக்கமும் கூட மிகக் கடினமான காலத்தைக் கடந்தார், தலைமறைவாகச் சென்றார். தலைமறைவு வாழ்வில் இருந்தபோது அவரது தந்தை மறைந்த போதும் தந்தையின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ளச் செல்ல முடியவில்லை.

மாணிக்கமும் வேலுசாமித் தேவரும் திருநெல்வேலி பகுதியில் மலப்புரத்தில் ஒரு மாடி வீட்டு வாடகை அறையில் மாறுவேடத்தில் வசிக்கத் தொடங்கினர். தேங்காய் வியாபாரம் செய்யும் வணிகர்களாக அவர்கள் நடித்தனர். அவர்களின் முக்கிய பணி கட்சியைத் திரட்டி அமைப்பதும், பல்வேறு இடங்களில் இருந்து கட்சித் தலைமைக்குத் தகவல்களை அனுப்புவதுமாகும்.

ஆனால் ஒரு சாலையில் நடந்து செல்லும்போது விசாரணைத் தேடுதல் குழு காவலர்களால் விரைவில் அவர்  அடையாளம் காணப்பட்டார். விரைவாக ஓடி அவர் தப்ப முயன்றாலும் அவரைப் பிடித்தக் காவலர்கள் அவரைக் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கினர்.

1949ல் பி. மாணிக்கம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்; ஆனால் தான் வரதன் என்று கூறி அவர் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டார்.

எனினும் அவர் போலீஸ்காரர்களின் சந்தேக வலையில் விழுந்தார். கட்சிப் பணிக்காக அவர் குற்றாலம் சென்றபோது, குற்றாலத்தில் ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் ஓர் உளவுத்துறை அதிகாரி மாணிக்கத்தை அடையாளம் கண்டார். 

இதனைத் தொடர்ந்து மாணிக்கம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி என பல்வேறு காவல் நிலையங்களில் அவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்.

 அந்நாளில் தான் எழுத்தாளர் ஆர் எஸ் ஜேக்கப் கைது செய்யப்பட்டார். அவர்கள் மாணிக்கத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி காவல் நிலையத்தில் போட்டனர். மாணிக்கம் இறந்து விட்டதாகப் போலீஸ்காரர்கள் கூறினார்கள். அவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த அம்மனிதனைப் புறக்கணித்து, ஜேக்கப் அவர்களைச் சித்திரவதை செய்யத் தொடங்கினர். மாணிக்கம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றார் என்று அந்த நிகழ்வை ஆசிரியர் ஜேக்கப் கூறினார்.

பின்னர் அவர் பிரம்மமூர்த்தி, எம் ஆர் வெங்கட்ராமன், கேடிகே தங்கமணி மற்றும் பிறருடன் மதுரைச் சதி வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு இடங்களில் பணியாற்றிய தோழர்களைச் சம்பந்தப்படுத்தி 1949– 50ல் நெல் சதி வழக்குகள் புனையப்பட்டன. 1951ம் ஆண்டு வழக்கில் 67 தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது, மாணிக்கம் 32வது நபராகக் குற்றம் சாட்டப்பட்டார். அரசைத் தூக்கி எறிய சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆர் நல்லகண்ணு 55வது நபர்.

மாணிக்கம் 1954ல் விடுதலையானார். நெல்லை மாவட்டக் கட்சியின் மூன்றாவது மாநாட்டில் மாணிக்கம் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் அவர் நல்ல உறவை வளர்த்தார். தொ மு சி ரகுநாதன், அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, பேராசிரியர் நா வானமாமலை, ‘திகசி’ என்ற தி க சிவசங்கரன் மற்றும் பிறர் அதில் அடங்குவர்.

1950கள் மற்றும் 1960களில் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் விவசாயிகளின் சக்திமிக்க போராட்டங்கள் நடைபெற்றன. தோழர் மாணிக்கம் அவர்களின் கூற்றுப்படி அந்தப் போராட்டங்கள் எந்த அளவு ஈர்க்கக் கூடியதாக இருந்ததெனில், அப்போராட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைத்தீர்கள் என்று பீகார் தோழர்கள் கூட கேட்டறிந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

திருமணம் 

மாணிக்கம், சரஸ்வதியை மணந்தார். அவர், மாணிக்கத்துடன் சிறையில் இருந்த தோழர் இ தளவாய் அவர்களின் சகோதரி. தளவாய் பின்னர் விக்ரமசிங்கபுரத்தில் ஏஐடியுசி தலைவரானார். தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய அவர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

மாணிக்கம் சரஸ்வதி தம்பதியருக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள். அவர்கள் குரோம்பேட்டையில் கட்டிய ஒரு வீட்டில் தொடக்கத்தில் வாழ்ந்தனர். பின்னர் மனைவி சரஸ்வதி தனது நான்காவது மகன் பாஸ்கர் வீட்டிற்கு மாறினார்.

திருநெல்வேலி மற்றும் பிற மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சி

தென்கோடி பகுதியான திருநெல்வேலி மற்றும் பிற மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது –விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியிலும் கட்சி சிறப்பாக வளர்ந்தது. எண்ணற்ற விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன; சிவகிரி, கீழாம்பூர், வள்ளியூர், கடையநல்லூர் மற்றும் பிற மையங்களில் அமைப்புகள் கட்டியெழுப்பப்பட்டன. அது தவிரவும் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் பிற பகுதிகளில் தொழிற்சங்க இயக்கம் ஒன்று திரட்டப்பட்டது.    

பாலதண்டாயுதம், வி பி சிந்தன், என் ராமச்சந்திரன், எம் ஆர் வெங்கட்ராமன்  மற்றும் பிறருடன் மாணிக்கம் மாவட்டத்தில் கட்சியை ஒன்று திரட்டி அமைத்தார்

மாநிலச் செயலாளராக மாணிக்கம் 

தமிழ்நாடு மாநிலத்தில் எம் கல்யாணசுந்தரம் கட்சி மாநிலச் செயலாளராக இருந்தபோது

மாணிக்கம் கட்சி உதவிச் செயலாளர். சில ஆண்டுகளுக்கு அவர் மாநிலப் பொறுப்புச் செயலாளராகப் பணியாற்றினார். கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 அதிலிருந்து 15 ஆண்டுகள் அவர் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

1960கள் மற்றும் 1980கள் காலகட்டம் இரண்டிலும் கட்சியில் உருக்கு போல ஒற்றுமையைப் பேண கடுமையாக அவர் பாடுபட்டார்.

மாணிக்கம் குரோம்பேட்டையில் வாழ்ந்தபோது தினமும் ரயில் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்திற்குப் பயணம் செய்தார். (சென்னை) மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கட்சி அலுவலகத்திற்கு அவர் சைக்கிள் மற்றும் ரிக்க்ஷா மூலம் பயணம் செய்வது வழக்கம். சில சமயங்களில் அவர் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு நடந்து கூட செல்வார். (அத்தகைய எளிமையான தோழர் மற்றும் தலைவர் எங்கள் பி எம் –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

பத்திரிக்கை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் 

பி மாணிக்கம் விடுதலைக்கு முன்பிருந்தே கூட கட்சி இதழியல் உடன் நெருக்கமாக உறவு கொண்டிருந்தார். எண்ணற்ற பல இதழ்களைக் கொண்டு வருவதில் உதவியும் மற்றும் அதில் அவர் பணியாற்றவும் செய்தார். கட்சிப் பத்திரிக்கையான ஜனசக்தியின் ஆசிரியராகவும் அவரது இறுதி நாள் வரை அவர் இருந்தார். சில காலங்கள் இடைவெளி இருந்தபோதும் ஜனசக்தி இதழ் தினசரியாக வெளிவந்தது.

கட்சியின் பதிப்பகமாக என்சிபிஹெச் அல்லது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அமைப்பின் இயக்குனர்கள் குழுவின் தலைவராகச் செயல்பட்டார். சிந்தனையைக் கிளரும் பல கட்டுரைகளைக் கட்சியின் ஜனசக்தி, நியூ ஏஜ், தாமரை, மார்க்சிய ஒளி முதலான பல்வேறு இதழ்களில் அவர் எழுதினார். மேலும் எண்ணற்ற பல சிற்றேடுகள் மற்றும் கையேட்டுப் பிரசுரங்களையும் அவர் எழுதினார்

கட்சிப் பொறுப்புகள் 

மாணிக்கம் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தத்துடன் பல ஆண்டுகளுக்குக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் (CEC) பொறுப்பு வகித்தார்

சட்டமன்றப் பதவிகள் 

முன்பே குறிப்பிட்டது போல அவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவர் அரசியல் பிரச்சனை முதல் கலாச்சாரப் பிரச்சனைகள் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க பல உரைகளை ஆற்றினார்.

மறைவு 

தோழர் ப மாணிக்கம் தமது 76வது வயதில் 1999 ஜூன் 22 ஆம் நாள் ஒரு தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

வாழ்க தோழர் பி எம் புகழ்! 

–நன்றி : நியூ ஏஜ் (2026, ஆக.2 –8)

–தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்