Friday 30 October 2020

அக்.31, 2020 தோழர் குருதாஸ் குப்தா முதலாவது நினைவு நாள்

 

அக்டோபர் 31

--தோழர் குருதாஸ் தாஸ் குப்தா நினைவுநாள்!

மீள்பதிவு 

தோழர் குருதாஸ் குப்தாவுக்கு

முன்னாள் பிரதமர் புகழஞ்சலி

‘தேசம் தனது அர்ப்பணிப்புமிக்கத் தலைவர்களில் ஒருவரை இழந்து விட்டது’

 

        டெல்லியில் 2019 நவம்பர் 18 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த அஞ்சலிக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய நினைவஞ்சலி உரையிலிருந்து:

        “பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் குரலை ஓங்கி ஒலித்தத் திரு குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. நீண்ட காலம் அவரை நெருங்கி அறியும் வாய்ப்பைப் பெற்றவன். எங்களுக்குள் கொள்கை முரண்பட்டாலும் தாஸ்குப்தா ஓர் அர்ப்பணிப்புள்ள தேசியவாதியாக, அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குடியாட்சியின் மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் பற்றுறுதி மிக்கவராக அவர் எப்போதும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.

        நமது ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக்க அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுபடுத்திக் கொள்ள வாய்ப்பு தந்துள்ளது இந்த அஞ்சலிக் கூட்டம். குருதாஸ்குப்தாவை ஒரு தலைச்சிறந்த பாராளுமன்றவாதியாக நாம் நினைவுகொள்வோம். ஏழைகள், தொழிலாளர் வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தனது தனித்துவமான ஆற்றல்மிகு சொற்பொழிவுகளால், அரசியல் கட்சி சார்புகளைக் கடந்து, வெளிப்படுத்தியுள்ளார். அப்படி அவர் நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றும்போது ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைவருமே கவனமாக உற்றுக் கேட்பது வழக்கம்.

         தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர், பொது எதிரிக்கு எதிராக வேறுபட்ட சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஐக்கிய முன்னணி கட்டுவதில் முன்னோடி. அவரது மறைவில் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, நமது நாடும்  அர்ப்பணிப்பு மிக்கத் தலைவர்களில் ஒருவரை, மக்கள் மிகவும் நேசித்த ஒருவரை இழந்து விட்டது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்தப் பெருமகன் அவர்.

        குருதாஸ் குப்தாவின் போற்றத்தக்க குணம் அவர் ஒருபோதும் அதிகாரம் விரித்த வலைகளில் சிக்கி தனது பணிகளை நிறுத்திக் கொண்டதில்லை. எதிர்கட்சியின் முக்கியத்துவத்தை அறிந்து மதித்தவர் அவர்; எனினும் மோதலை மீறி ஒருமனதான தீர்வுகளை ஏற்பவர். நமது ஜனநாயகத்தின் பேரழகு, தத்துவார்த்த ரீதியில் எதிர் கொள்கையைச் சேர்ந்த திரு குருதாஸ் குப்தா நாட்டிற்கு ஆற்றிய நல்ல பணிகளை நினைந்து போற்ற நாம் எல்லோரும் ஒன்று கூட முடிகிறது என்பதுதான்.

  மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக இரண்டு முறையும் பணியாற்றிய தாஸ்குப்தா தலைச் சிறந்த பாராளுமன்றவாதி. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தீப்பொறி பறக்கும் ஆவேச உரைகளில் தொழிலாளர்கள், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தும் உண்மையான தலைவர். மத்திய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அவருடைய தலைமையில் ஏஐடியுசி மிக பிரம்மாண்டமான சங்கமாக வளர்ச்சி பெற்றது என்பதிலிருந்தே அவரது தொழிற்சங்க உழைப்பின் மேன்மை விளங்கும். ஏஐடியுசி பொதுச்செயலாளராக அவர் இருந்தபோது சக்திமிக்க பல போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். சங்கங்களை ஒன்றிணைக்கப் பாடுபட்டு இணைந்த போராட்டங்கள் மூலம் தொழிற்சங்கங்களின் அவசரமான கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். வங்கி,காப்பீடு மற்றும் எண்ணைத் தொழிற்துறை சார்ந்த சங்கங்களின் வலிமைக்கு அவர் தூண் போன்ற உற்ற துணையாக விளங்கினார்.

       எளிமையாக, பணிவும் தன்னடக்கத்துடன் வாழ்வதன் பேராற்றலை நாம் பலபோழ்து உணராது இருக்கிறோம். கட்சிசார்பு கடந்து அவர் அனைவராலும் மதித்துப் போற்றப்பட்டார். பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. அவரது கட்சியின் பல தோழர்கள் போலல்லாது எதிரிகளோடும் கூட வெளிப்படையாக பழகும் பண்புடையவர் குருதாஸ் குப்தா. அதனால் பாராளுமன்ற செயல்பாடுகளில் எந்தப் பிரச்சனைகளில் எப்போது மற்றவர்களின் அதரவைத் திரட்ட வேண்டுமோ அப்போது எதிர்கட்சித் தலைவர்கள் எவரையும் தயக்கமின்றி அவரால் சந்திக்க முடிந்தது.

        அவருடைய போல்ஷ்விக் தூய்மைக்கு உண்மை விஸ்வாசமாக, அதற்கேற்றபடி தோழர் குருதாஸ் தாஸ்குப்தா சிக்கனமான எளிய வாழ்வை மேற்கொண்டாலும், உயர்ந்த கோட்பாடு கொள்கைகளைப் பற்றி ஒழுகினார். தற்பெருமை விளம்பரம் மற்றும் தற்புகழ்ச்சிகளை அவர் வெறுத்தார். தற்காலத்தில் அவர் போன்ற தலைவர்களைக் காண்பதரிது. அவரது மறைவால் தேசம் பெரும் சொற்பொழிவாளரை, புகழ்பெற்ற தொழிற்சங்கவாதியை, திறன்மிக்க நிர்வாகியை, அனுபவமிக்க பாராளுமன்றவாதியை இழந்து விட்டது.

சமூகத்தின் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வாதாடிப் போராடிய தலைவர்

அவர் இந்தத் தேசத்திற்கு ஆற்றிய சேவை மற்றும் அரும் பங்களிப்புகளுக்காக அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.

வாழ்க திரு குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் புகழ்.”

          --செய்தி : நியூஏஜ்

--தமிழில் : நீலகண்டன்,   

என்எப்டிஇ, கடலூர்


Wednesday 28 October 2020

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும்?

 

உருவாகி வரும் உலக ஒழுங்கமைவு முறையும் இந்தியாவும்

--டி ராஜா

        “கடந்த சமீப காலங்களில் இந்திய அரசின் வெளிஉறவுக் கொள்கை முன்னுரிமைகள் மேலும் மேலும் அமெரிக்கா பக்கம் சாய்ந்து வருகிறது; புதிய தாராளமயக் கட்டமைப்பின் பால் தங்களை அவர்கள் ஒப்படைத்து விட்டதையே அது காட்டுகிறது. இந்தக் கொள்கை மாற்றத்திற்கு நடைமுறைக்கேற்ற இயல்பான எந்த நியாயங்களும் இல்லை; மாறாக, இந்திய நலன்களை அமெரிக்க நலன்களோடு முடிச்சுப் போடுவது மோசமான அழிவையும், சார்ந்திருக்கக் கூடிய இழிநிலையையும் இந்தியாவிற்கு ஏற்படுத்திவிடும். மோடி அரசின் அமெரிக்கச் சார்பு கொள்கைகளால் இந்தியாவிற்கு லாபம் ஒன்றும் இல்லை, ஆனால் பாரதத்தின் தார்மிக ரீதியான மிக உயர்ந்த அடிப்படையை அது பறித்து விட்டது.”

            நவீன வரலாற்றில் மிக மோசமான சுகாதார நெருக்கடியில் உலகம் தத்தளிக்கும்போது, வேறுசில நீண்டகாலப் பிரச்சனைகளும் தலையெடுக்கின்றன. லடாக்கில் இந்தியா சீனாவிற்கு இடையே பதற்றம், (ஜோர்டான் நதியின்) மேற்குக் கரைப் பகுதியை இஸ்ரேல் தனது நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப் போடும் திட்டங்கள் -- உலக மக்கள் அனைவரும் தொற்று, நோய், துன்பம், பேரதிர்ச்சி மற்றும் பெருமளவிலான வேலைஇன்மை இவற்றின் பிடியில் சிக்கி உழலும்போது எழுப்பப்பட வேண்டிய பிரச்சனைகளா? ஆனால் இவை போன்ற பிரச்சனைகள் உலக அதிகாரப் போட்டி இயக்கவியலைச் சுற்றிய விவாதங்களை மேலே கொண்டு வந்துள்ளன.

            மேற்கு எல்லைப் பகுதி பதற்றத்தால் இந்தியா சீனா இரண்டு தரப்பிலும் ஏற்பட்ட உயிர் இழப்புகள், ஆசியாவின் அருகருகே அமைந்த பிரம்மாண்டமான அண்மை தேசங்கள் இரண்டின் மோதல்கள் தீர்க்கப்படாததையே வெளிப்படுத்துகிறது. சொத்துக்களைக் கட்டாயப்படுத்தித்  துறந்துவிட்டு ஓடச் செய்து பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக்க, மேற்குக்கரையைக் கபளிகரம் செய்ய டோனால்டு டிரம்பின் ஆதரவோடு செயல்படும் இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டத்திற்குப் புது உத்வேகம் கிடைத்துள்ளது.

            இந்த இரண்டு நிகழ்வுகளும், உருவாகி வரும் உலக ஒழுங்கமைவு அதிகாரப் போட்டி இயக்கவியல் குறித்துப் பரிசீலிக்கத் தூண்டியுள்ளன. 1990களில் சோவியத் யூனியன் சிதறிய பிறகு அமெரிக்க அரசியல்விஞ்ஞான தத்துவவாதியான ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா போன்ற சில விமர்சன உற்சாகிகள், ‘வரலாற்றின் முடிவு’ என அவசரப்பட்டு பிரகடனப்படுத்தத் தலைப்பட்டனர். (‘என்ட் ஆஃப் ஹிஸ்டரி‘ என்பது அவர் எழுதிய கட்டுரை மற்றும் நூலின் தலைப்பாகும். அதில் இனி இரண்டு முகாம்கள் இல்லை, மேற்கத்திய தாராள ஜனநாயக முறை ஒன்று மட்டுமே கோலோச்சும் என அவதானித்திருந்தார்). மேலும் சித்தாந்தக் கொள்கை என்பது முக்கியமற்றதும், உலக அரசியலை நடத்தப் பொருத்தமற்றது ஆகும் எனவும் எழுதினார். ‘இருவேறு உலகத்து இயற்கை’ என இரட்டை முனை உலகம் இனி இல்லை, பனிப் போருக்குப் பிறகு ஓருலகு, ஒரு முனை – அதில் அமெரிக்கா உலகப் போலீசாகவும், உலக அளவில் அனைத்து அமைப்புகளுக்கும் வெட்கமற்ற முதலாளித்துவம் தலைமையேற்கும் என்பதுவும் அவர்களின் கணிப்பு. ஆனால் இந்த மிதப்பும் செறுக்கும் அன்றும் நிலைக்கவில்லை, தற்போது நாம் காண்கின்ற இன்றும் ஏற்றுக்கொள்த்தக்கதாக இல்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. 2001ம் ஆண்டு (இரட்டை கோபுரத் தகர்ப்பு) செப்டம்பர் 11ம் நாள்  தீவிரவாதத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளைத் தூங்கவொட்டாமல் துரத்துகின்றன. வழமையல்லாதப் பாதுகாப்பு அச்சுறுத்தல் சவால்கள், வழக்கமான நிறுவப்பட்ட பாதுகாப்பு, போர் மற்றும் நவீனமயம் குறித்த கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி விட்டன. உலகப் போலீஸ்காரரான அமெரிக்கா உலகின் பிற நாடுகளின் உதவிக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

            2008ன் உலகளாவிய நிதி நெருக்கடி (ஃபினான்சியல் மெல்ட்-டவுன்) புதிய தாராளமய உலக ஒழுங்கமைவு முறையின் உண்மைத் தன்மைகளைக் கேவலமானதாக அம்பலப்படுத்தி விட்டது. பொருளாதார வளர்ச்சியைப் பொருத்து முதலாளித்துவத் தர்க்கவியல்படி திடீர் வளர்ச்சி ஊதிப் பெருத்தலும், அடுத்து உடைந்து சிறுத்தலும் நிகழ்வது தவிர்க்க இயலாது என்பார்கள்; அதன்படி 2008லும் மேற்கத்தியத் தலைமையிலான அனைத்து, கடன்வழங்கிச் சுரண்டும், (நிதிநிறுவன) அமைப்புகளும் நொறுங்கி வீழ்ந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து பராரிகள் ஆயினர்; பொதுமக்கள் பணத்தைக் கொண்டு செயல்பட்ட உலகின் மிகப் பெரிய நிதி கார்ப்பரேஷன்கள் சிலவற்றைக் காப்பாற்ற, அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டியிருந்தது எனில், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் துன்பம் அளவில்லாது.

            பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்வது முக்கியம் என அப்போதுதான் மேற்கத்திய உலகு புரிந்து கொண்டது; மேலும் பொருளாதாரத்தில் சீனாவும் இந்தியாவும் வளர்ச்சி பெற்று வருவதைப் போன்ற புதிய உலக நிலைமைகளுக்கு அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவையை உணர்ந்தன. உலகின் பொருளாதாரப் போக்கைச் செல்வாக்குடைய பெரும் பணக்கார ஜி-8 நாடுகள் நிர்ணயித்ததை மாற்றி, (புதிதாக அமைந்த) ஜி-20 நாடுகள் – என்னதான் அவை புதிய தாராளமய வரையறைக்குள் செயல்பட்டாலும்—நிர்ணயிக்கத் தொடங்கி விட்டன. உலகின் ஒதுக்கப்பட்ட நாடுகளை முடிவெடுப்பதிலிருந்து தள்ளி வைத்து, ஒவ்வொருவருக்கும் எது ஆகச் சிறந்தது எனப் பணக்காரர்களே முடிவெடுப்பதைத் தங்கள் கைகளில் வைத்துக் கொள்வதால், (ஜி-20) இதுவும் கூட ஒருவகையில் அதிகாரத்தை (எல்லா நாடுகளுக்கும் வழங்காமல்) தங்களுக்குள் பகிர்வதும், பொறுப்புக்களைத் தட்டிக்கழிப்பதுமே ஆகும். 

            இப்படி நிர்மாணிக்கப்பட்ட செயல்முறை இப்போது பல நெருக்கடிகளைச் சந்திக்கிறது, அதற்கான காரணங்கள் பலவாகும். உலகின் தொழிற்பட்டறையாகச் சீனா மாறி வருவது, கொட்டை போட்ட பல மேற்கத்திய அதிகார மையங்களை -- தங்கள் அந்தஸ்து குறித்து-- பாதுகாப்பு அற்றதாக உணரச் செய்துள்ளது. இதனால், உலக மக்களையோ சுற்றுச் சூழலையோ எப்படிக் கடுமையாகப் பாதிக்கும் என விளைவுகள் பற்றி கவலைப்படாமல், அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகம் மற்றும் யுக்தானுசாரப் போராக (ஸ்ட்ரடர்ஜிக் வார்) மாற்றி விட்டன. இப்படி ஒருமுனையில் அமெரிக்கா, மறுமுனையில் சீனா என உருவாகி வரும் இருமுனை உலகில் எந்தத் திசை வழியை, பாதையை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பதே குறிப்பாக, நம்மைப் பொருத்து, நாம் இங்கே பார்க்க வேண்டிய பொருத்தம் உடையது.

            இந்த நிலைமைகள் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அதன் விளைவுகள் இம்முறை மேலும் கடுமையானது. காலனிய ஆட்சியிலிருந்து விடுதலையடைந்த போதும் இதுபோன்ற கேள்விகள் நம்மைப் பின்தொடர்ந்து இடைமறித்தன. நம் நாட்டைப் பனிப்போர் முகாம்களில் இழுத்திட நடைபெற்ற முயற்சிகளை இந்தியா உறுதியாக எதிர்கொண்டு நிராகரித்தது மட்டுமல்ல, கூட்டுச் சேரா வெளியுறவுக் கொள்கையைத் தேர்ந்தெடுத்தது; அதன்மூலம் உலகின் புதிதாக விடுதலை அடைந்த காலனிய நாடுகள், காலனிப்படுத்தப்பட்ட நாடுகள் நலனுக்காக உறுதியாக நின்றது.

            இருப்பினும், கடந்த சமீப காலங்களில் இந்திய அரசின் வெளிஉறவுக் கொள்கை முன்னுரிமைகள் மேலும் மேலும் அமெரிக்கா பக்கம் சாய்ந்து வருகிறது; புதிய தாராளமயக் கட்டமைப்பின் பால் தங்களை அவர்கள் ஒப்படைத்து விட்டதையே அது காட்டுகிறது. இந்தக் கொள்கை மாற்றத்திற்கு நடைமுறைக்கேற்ற இயல்பான எந்த நியாயங்களும் இல்லை; மாறாக, இந்திய நலன்களை அமெரிக்க நலன்களோடு முடிச்சுப் போடுவது மோசமான அழிவையும், சார்ந்திருக்கக் கூடிய இழிநிலையையும் இந்தியாவிற்கு ஏற்படுத்திவிடும். மோடி அரசின் அமெரிக்கச் சார்பு கொள்கைகளால் இந்தியாவிற்கு லாபம் ஒன்றும் இல்லை, ஆனால் பாரதத்தின் தார்மிக ரீதியான மிக உயர்ந்த அடிப்படையை அது பறித்து விட்டது.

            இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீன ஆதரவுக் குரலை மௌனமாக்கியது;  கூட்டுச் சேராக் கொள்கை கைவிடப்பட்டு, அமெரிக்காவுக்கு ஒத்தூதும் பக்கவாத்தியம் ஆசியாவில் இசைப்பதை இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆசிய –பசிபிக் பகுதியில் தனது நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா சீனாவுடனான மோதலில் இந்தியாவை இழுக்க முயற்சிக்கிறது. அமெரிக்காவின் முக்கியமான அதிபர் தேர்தல் நடைபெறும் இத்தருணத்தில் –டிரம்ப் மிகப் பெரிய சவாலை அங்கு எதிர்கொள்ளும்போது – அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்பியோ வெளியிடும் அறிக்கைகள், ஏற்கனவே இந்தியா சீனா இடையே இருக்கும் பிரச்சனையை, மேலும் சிக்கல் நிறைந்தவைகளாக ஆக்குகின்றன. அவையெல்லாம் இப்பகுதியில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகக் கையறுநிலையில் செய்யப்படும் முயற்சிகள் தவிர வேறில்லை.

            வெளியுறவில் இப்படி என்றால், உள்நாட்டிலோ அமெரிக்க எஜமானர்களை மகிழ்விக்கச் செய்து கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளால் இந்திய மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் விவசாய நிலங்களை இழந்ததும், இந்தியத் தொழிலாளர் வர்க்கம் கடுமையான போராட்டங்கள் மூலம் வென்ற தொழிலாளர் உரிமைகளை இழந்ததும்தான் கண்ட பலன்.

            உலகின் இன்றைய தேவை பரஸ்பர மரியாதை, அக்கறை, ’ஒப்புரவு கண்ணோட்டம்’, ஒத்துழைப்பு மற்றும் மக்களின் பங்கேற்பு முதலிய கொள்கை அடிப்படையில் அமைந்த சர்வதேச உறவு. மேற்கத்திய நாடுகள் தங்களைப் பற்றி வானுயரத் தம்பட்டமடித்த அனைத்தும் கோவிட் -19 சுகாதார நெருக்கடியில் திவாலாகி நிற்கின்றன. மேற்கத்திய நாடுகளின் மக்களுக்கு எளிதில் கிட்டாத, தனியார்மயமாக்கப்பட்டச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு, கோவிட் தொற்று அழுத்தத்தில் வெடித்துச் சிதறி, மனிதத்தன்மையற்ற சூழ்நிலைகளையும் உண்டாக்கியதைக் காண்கிறோம்; அதே நேரத்தில் சோஷலிச நாடுகள் அல்லது பொதுச் சுகாதாரப் பராமரிப்பைச் சோஷலிசப்படுத்திய நாடுகள் அந்நெருக்கடியைச் சிறப்பாக எதிர்கொண்டன. பணக்காரர்களின் கஜானாவை நிரம்புவதற்காகக் கசப்புகளை அதிகரிக்கும் வர்த்தகப் போர்கள், மனிதத்தன்மைற்ற சர்வதேசத் தடைகள் இவற்றிற்கு ஏராளமான நிதியாதாரங்களைச் செலவிடுவதல்ல உலகின் இன்றைய தேவை; மாறாகப் பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சனைகளுக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே உலகம் எதிர்பார்க்கிறது. இரண்டு பெரும் பொருளாதாரச் சக்திகளாக, மிகப் பிரம்மாண்டமான மனித ஆற்றலோடு விளங்கும் இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் இணைந்து எவ்வளவோ பணிகளைப் பங்களிப்புச் செய்ய முடியும்.

            ‘இடம் பெரிதுண்டு கண்டீர்’ என்பதாக ஒவ்வொருவருக்குமான இடத்தை உலகில் உறுதி செய்வதன் வாயிலாக ஒத்துழைப்பின் பலன்களை அறுவடை செய்யலாம். 1990களின் ஏற்பட்டதாகக் கருதப்படும் ஒருமுனை உலகையோ, அல்லது அமெரிக்கா ஒருபக்கமும் சீனா ஒருபக்கமுமாக நின்று, மற்ற நாடுகளைத் தங்கள் ஆளுகை முகாம்களுக்குள் இழுக்க முயலுகின்ற தற்போது உருவாகியுள்ளதாகத் தோன்றும் இருமுனை உலக முறையையும் நாம் நிராகரிக்க வேண்டும். இந்தியா தனது சுயேச்சையான கூட்டுச் சேராப் பெருமிதங்களுக்கு உண்மையாக வாழவும், அனைவருக்கும் வாய்ப்பளிப்பதான பல முனை மற்றும் நியாயமான உலக ஒழுங்கமைவு முறைக்காக ஆக்கபூர்வமாகப் பாடுபடவும் வேண்டும். இதனைத் தொடங்குவதற்கு முதலில் அமெரிக்கா வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுவதை நிறுத்தி, நமது நாடு அமெரிக்கச் செல்வாக்கால் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொண்டு, தனது வெளியுறவுக் கொள்கையைச் சுதந்திரமாக வகுத்துக் கொள்ள வேண்டும்; அதற்குச் சீனா உட்பட தனது அனைத்து அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சனைகளைப் பயனுள்ள பேச்சு வார்த்தைகளை நடத்தி இந்தியா தீர்க்க முயல வேண்டும்.

            சமீபத்தில் ஐ.நா.வின் 75வது ஆண்டு பொது மாநாட்டில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு இடமளித்தல் என்று பலமுறை வலியுறுத்தப்பட்ட கோரிக்கையை மீண்டும் எழுப்பி பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து உள்நாட்டில் ஆகப்பெரும் பிரச்சாரப் பரபரப்பு உண்டாக்கப்பட்டது. நமது நாட்டின் வரலாறு, பெரும் நிலப்பரப்பு, பொருளாதாரம், உலக விஷயங்களில் ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு ஓர் உறுப்பினர் இடம் என்ற கோரிக்கை மிகக் கூடுதலாக நியாயமானது; ஆனால் மேற்கண்ட அத்தகைய நற்பண்புகள் தற்போதைய ஆளும் தரப்பின் கீழ் குறிப்பாக அண்டை நாடுகளுடன், பல்வேறு ஒவ்வாத முரண்பாடுகள் காரணமாகக் கடுமையாகக் கறைபடிந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கிடைக்கும் இட அந்தஸ்தைப் பயன்படுத்தி, மிகப் பெரும் பேச்சுவார்த்தை நடைபெறும் இடங்களில் இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத நாடுகளையும் அல்லது குறைவாகப் பிரதிநிதித்துவம் உடைய நாடுகளுக்கு ஆதரவளிக்க அவற்றின் சார்பாக நடக்க இந்தியா தனது சுதந்திரமான பார்வையுடன் முன்வர வேண்டும்; ஒடுக்கப்பட்டவர்களுக்காக, ஏகாதிபத்தியத்தால் துன்பப்படுபவர்களுக்காகக் குரல் எழுப்புவது என்ற நமது மரபு அதுவே!

            ஒருமைப்பாட்டின் அடிப்படையில் அமையும் அனைவரையும் உள்ளடக்கிய இந்த விரிவான உலகப் பார்வைக்கு மாறாக, கடந்த சில ஆண்டுகளில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் போக்கு, மேலும் மேலும் அமெரிக்க –இஸ்ரேலிய இணையின் பக்கம் சாயத் தொடங்கி, உலக விஷயங்களில் மேற்கத்திய ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதாக மாறி உள்ளது என்பது துரதிருஷ்டவசமானது.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவும் சீனாவும் பெரும்பான்மையான மக்கள் தொகையை உடைய, இருபெரும் பொருளாதாரச் சக்திகள். அவை பரஸ்பர நம்பிக்கையுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளவும், தற்போதைய எல்லை மோதல்களுக்கு விரைவாக முடிவு கட்டவும் வேண்டும். மேலும் அனைவருக்குமானது இந்த உலகு, நியாயபூர்வமானது, சுற்றுச் சூழல் குறித்து உணர்வுடையது என்பதாக உலகை மாற்றிட இந்தியா பாடுபட வேண்டும். இவ்வாறு, சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவது நமது நாட்டிற்கு அல்லது தெற்காசிய பகுதிக்கு மட்டுமே முக்கியமானது அல்ல; மாறாக, உலகின் பரிதவிக்கும் மக்களுக்கு இந்தியா ஆற்ற வேண்டிய முக்கியமான பங்கு அது.

‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ’ என்ற கேட்ட பாரதியார்,  

          எல்லாரும் அமரநிலை எய்து நன்முறையை

             இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம், ஆம்

             இந்தியா உலகிற்கு அளிக்கும்!”

என்று நம்பிக்கையோடு உரைத்தது நிறைவேற்றப்படுமா? 

--(நியூஏஜ் அக்.25 –31

--தமிழில்: நீலகண்டன்,

      தொடர்புக்கு 94879 22786                 

Thursday 22 October 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 17: அருணா ஆசஃப் அலி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -17

                                            


  அருணா ஆசஃப் அலி :

விடுதலைப் போராட்ட

1942 இயக்கத்தின் கதாநாயகி


--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–அக்.18 --24, 2020)

            அருணா கங்குலி (ஆசஃப் அலி) கால்கா நகரில் ஒரு வங்காள பிரம்ம சமாஜ குடும்பத்தில் 1909ம் ஆண்டு ஜூலை 16ம் நாள் பிறந்தார்.  (கால்கா நகர் தற்போது ஹரியானாவில் உள்ள பாஞ்ச்குலா மாவட்டத்தின் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது; அது ஹிமாச்சலப் பிரதேசத்தின் நுழைவாயில் எனவும் அழைக்கப்படும்) (வங்க மறுமலர்ச்சி காலத்தில் தோன்றிய இந்துமதச் சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் 1861ல் லாகூரில் பண்டிட் நோபின் சந்திர ராய் துவக்கியது. கல்கத்தாவில் அந்த இயக்கம் 1868 ஆகஸ்ட் 20ம் நாள் ராஜா ராம் மோகன் ராய் மற்றும் திபேந்திரநாத் தாகூரால் துவக்கப்பட்டது.) தந்தையின் இரயில்வே உணவகப் பொறுப்பாளர் பணியால் அருணாவின் குடும்பம் வங்கத்திலிருந்து கால்காவிற்குக் குடிமாறியது.

            கங்குலிகளின் இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்களில் அருணாதான் மூத்தவர். அவரும் தங்கை பூர்ணிமாவும் லாகூரில் உள்ள ‘புனித இருதய கான்வென்டி’ல் படித்தபோது அவர்களது தந்தை அங்கே பத்திரிக்கையாளரானார். பள்ளியில் அருணாவை ஐரீன் (Irene அமைதிக்கான கிரேக்கப் பெண்கடவுள்) எனக் கொண்டாடுவது வழக்கம். ஆன்மிகம் மற்றும் ‘தெரியாத சக்தி’யிடம் நம்பிக்கை கொண்ட அருணா ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையால் பெரிதும் ஈர்க்கப்பட்டது மட்டுமின்றி தன்னையொரு கிருஸ்துவக் கன்னியாஸ்திரியாகவும் நினைத்துக் கொள்வார். அவருடைய எண்ணத்தை அறிந்து கொண்ட பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்தவர்களாய் தங்கள் மகளை நைனிடாலுக்கு, இம்முறை புராட்டெஸ்டன்ட் பள்ளிக்கு, அனுப்பி விட்டனர். தந்தையும் அங்கே ஒரு உணவகத்தைத் திறந்தார்.

            அருணா செவ்விலக்கியங்கள், இலக்கிய நூல்கள், தத்துவம், அரசியல் என ஏராளமான புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார்.  வாழ்க்கைக்குத் தானே சொந்தமாகச் சம்பாதிக்க வேண்டும் என விரும்பி முதலில் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். நைனிடாலை விட்டு கல்கத்தாவிற்குச் சென்று, அங்கே கோகலே நினைவு பெண்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். இங்கிலாந்து செல்ல விரும்பிய அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

புதிய வாழ்க்கை

            கோடை விடுமுறையைச் செலவிட அருணாவும் பூர்ணிமாவும் அலகாபாத் சென்றனர். பூர்ணிமா பேனர்ஜி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். தங்கையின் கணவரான பேனர்ஜி டெல்லியில் இளம் பாரிஸ்டரான (சாதாரண வழக்கறிஞரிலும் மேம்பட்ட, மேல்நீதிமன்றங்களில் வழக்காடும் பெரும் வழக்கறிஞர்) தனது நண்பர் ஆசஃப் அலியை அழைத்துக் கொண்டு அலகாபாத் வந்தார். ஆசஃப் அலி அங்கே அருணாவைச் சந்திக்க இருவரிடையே மலர்ந்த நட்பு பின்னர் திருமணத்தில் முடிந்தது. அவர்களுடைய திருமணத்திற்குப் பலமான எதிர்ப்பு எழுவதற்கு மத வேறுபாடு மட்டுமின்றி இருவரிடையான பெரும் வயது வித்தியாசமும் காரணம். ஆசஃப் அலிக்கு 41 வயது, அருணாவுக்கோ அப்போது வெறும் 19 வயதுதான்.

அரசியல் நுழைவு, சிறையிலும்தான்

            அதுவரை அருணா பொதுவாக அரசியலை, குறிப்பாகக் கதரை வெறுத்தார்! அந்நேரத்தில் காந்திஜி உப்புச் சத்தியாகிரக இயக்கத்தை ஆரம்பித்தார். அதில் கலந்து கொண்ட அருணா கைதானார். ஈடுபாட்டோடு பங்கேற்றவர் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார். அவரிடமிருந்து ‘நான் இனி நல்ல வகையில் நடந்து கொள்வேன்’ என்றும் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியை டெல்லி காவல் முதன்மை ஆணையர் பெற விரும்பினார்; உறுதியாக மறுத்துவிட்ட இளம் பெண் அருணா சிறையில் அடைக்கப்பட்டார். (மன்னிப்புக் கடிதமும் இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என உறுதிப் பத்திரமும் எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர்களை ’வீர்’ (வீரர்) என்று அடைமொழி தந்து அழைக்கும் அவலம் நினைவுக்கு வராமல் போகாது – மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

            விடுதலை ஆன அருணாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது; அந்த வரவேற்பு நிகழ்வில் ‘எல்லை காந்தி’ எனப் போற்றப்படும் கான் அப்துல் காஃபர் கான் வந்திருந்து அவரைச் சந்தித்தார். அருணா மீண்டும் 1932ல் கைது செய்யப்பட்டார். அபராதக் கட்டணமாக ரூ200 செலுத்த மறுத்ததால், அவரது இல்லத்திலிருந்து விலை உயர்ந்த பட்டு சேலைகளைப் போலீசார் கைப்பற்றிச் சென்றனர்! டெல்லி சிறையில் அடைக்கப்பட்டவர், பெண் அரசியல் கைதிகளின் உணர்வுகளை மதிக்காத சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராட முயன்றார்; உடனே மிக மோசமான நிலையில் இருந்த அம்பாலாவுக்கு மாற்றி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைக்குப் பிறகு சுமார் பத்தாண்டுகள் தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தார்; அப்போதும் பெண்கள் மாநாடு போன்றவற்றில் விதிவிலக்காகக் கலந்து கொண்டார். டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் அவர் தேசபந்து குப்தா மற்றும் ஆசஃப் அலி அணியை ஆதரித்தார். (தேசபந்து குப்தா என அழைக்கப்படும் ரதி ராம் குப்தா, விடுதலைப் போராட்ட வீரர், அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர், பத்திரிக்கைச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர், பஞ்சாப் –ஹரியானா மாநிலப் பிரிப்பு மற்றும் டெல்லிக்கு மாநிலச் சட்டமன்ற அந்தஸ்து கோரியவர் : -- கூடுதல் தகவல் இணைப்பு).

            1940ல் போரை எதிர்த்து மகாத்மா காந்திஜி சத்தியாகிரகம் தொடங்கினார். அவர் தேர்ந்தெடுத்தச் சத்தியாகிரகிகளில் அருணாவும் ஒருவர். அவர் முதலில் லாகூர் சிறைக்கும் பின்னர் லாகூர் பெண்கள் சிறைக்கும் மாற்றப்பட்டார். சிறையில் அவர் பல செயல்களை ஆற்றினார். கோரிக்கை எழுப்பி சிறையில் ‘சி’ வகுப்பு பெற்று தனக்குக் கிடைத்த தனிஅறையை நன்கு அலங்கரித்தார். மற்ற பெண் கைதிகளுக்கு வாராந்திர செய்திகளைப் படித்து விவரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1942 : சரித்திரத்தில் இடம் பெற்றார் அருணா

            விடுதலையான பின் ஆசஃப் அலியுடன் 1942 பம்பாய் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். ஆசஃப் அலி ஒரு முக்கியமான தலைவர். அருணா ஜனரஞ்சகமாக அனைவருடனும் சகஜமாகப் பேசி தனது செயல்பாட்டால் அங்கே மிகவும் புகழ் பெற்றார். அப்போது அவருடன் பேசிப் பழகிய யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள், மறுதினம் அருணா சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பெறப் போகிறார் என்று.

            மறுநாள் 1942 ஆகஸ்ட் 9ம் நாள் காலை  காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைக் கேள்விப்பட்டதும், கைதிகளை ரயிலில் அழைத்துக் கொண்டு புறப்பட இருந்த, போரி பந்தர் ரயில் நிலையத்திற்கு விரைந்தார். அவரைத் தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை மீறி புறப்படக் காத்திருந்த ரயில் வண்டியில் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த நேரு காந்தி முதலானவர்களைக் கண்டார்.

            வெளியே பெரும் தலைவர்கள் யாருமில்லை, அவர் கோபத்தில் கொதித்துப் போயிருந்தார். கோபத்தில் அதனை அவர் “பேர்ல் ஹார்பர் முறை” என வர்ணித்தார். (1941 டிசம்பர் 7ல் ஹவாய்த் தீவில் இருந்த ஐக்கிய அமெரிக்கக் கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகத்தை ஜப்பானியக் கப்பற்படைத் தாக்குதல் நடத்திய பிறகே அமெரிக்க இராணுவம் அதிகார பூர்வமாக இரண்டாம் உலகப் போர்க் களத்தில் குதித்தது.) கடும் கோபத்தில் உந்தப்பட்ட அருணா ஆசஃப் அலி தற்போது கோவாலியா குள மைதானம் (பம்பாய்) எனப் புகழோடு அறியப்படும் இடத்திற்குச் சென்றார்; அங்கே முன்பு மௌலானா ஆஸாத் மூவர்ணக் கொடியை ஏற்றுவதாக இருந்தது. போலீஸ் அதிகாரி அங்கே கொடியை இறக்க வேண்டும் என உத்தரவிடுவதைக் கேட்டார். கூட்டத்தை விலக்கி முன்னேறிச் சென்ற அருணா மூவர்ணக் கொடியை பறக்க விட்டார். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்தினர் ஒரு பெரும் பேரணியாக மாறி காங்கிரஸ் அலுவலகம் சென்றனர். அவர்கள் சென்ற பத்து நிமிடத்தில் கொடி இறக்கப்பட்டு போலீஸ் அதிகாரியின் காலடியில் போட்டு மிதித்துத் துவைக்கப்பட்டது.

            அப்போது அந்த நிமிடமே, ‘பிரிட்டீஷ் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை போராடுவது’ என அருணா ஆசஃப் அலி பிரதிக்ஞை செய்தார். அங்கே போலீஸ் குண்டாந்தடி வீச்சும் துப்பாக்கிச் சூடும் நடந்தன. டெல்லி திரும்பிய அருணா உடனடியாகத் தலைமறைவானார். முழு இரண்டரை வருடம் அவர் தேசம் முழுவதும், ஒரு தலைமறைவு புரட்சியாளராகச் சுற்றித் திரிந்தார். பல குழுகளை ஏற்படுத்தி இயக்கங்களைக் கட்டினார்.

கைது செய்ய வெகுமதி

            அவரைக் கைது செய்யக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பிரிட்டீஷ் அரசு அந்த நாட்களிலேயே ரூ2000/= வெகுமதி அளிப்பதாக விளம்பரம் செய்தது. ஆனால் பிடிபடும் சிங்கமா அவர்? ஒரு பிரிட்டீஷ் அதிகாரி தனது மேலதிகாரியிடம் கூறினார்,அவர் (அருணா) டெல்லியின் ஒன்பது லட்சம் மக்களின் பாதுகாப்பில் தங்கி உள்ளார்!”

காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்திற்கு மறுப்பு

            கைதிகள் விடுதலையானதும், காங்கிரசின் மத்திய காரியக் கமிட்டிக் கூட்டம் 1945ல் நடந்தது. அதில் வெள்ளையனே வெளியேறு 1942 இயக்கம் பற்றியும் அகிம்சை குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் வன்முறையைத் தூண்டுவதாக வைஸ்ராய் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் வைஸ்ராய், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஒருவரின் மனைவி என அருணா ஆசஃப் அலியை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அவர் பெருமளவில் மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டி பிரிட்டீஷ் அரசின் போர் முயற்சிகளுக்குக் குந்தகம் விளைவிக்கிறார் எனவும் குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்.

            வைஸ்ராயின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை எதிர்த்து அருணா ஆசஃப் அலி தக்க பதிலடி கொடுத்தார். அப்போது காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தின் சில அம்சங்களை மறுத்து அவர் அறிக்கை வெளியிட்டார்; அதில் இந்தியாவின் சில இடங்களில், காங்கிரஸ் தலைவர்களின் கைதுக்குப் பிறகு, மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாகத் தங்கள் போக்கில் நடந்ததாகக் கூறுவது உண்மையல்ல; கைதாகாது மீதம் இருந்த தலைவர்கள், போதுமான அளவு காங்கிரஸ் வழிகாட்டல்களைப் பின்பற்றி நடக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களே. ஆனால் பல நேரங்களில் அகிம்சையைப் (பருநிலையில் அன்றி) சூக்கும நிலையில் அமல்படுத்த இயலாத சூழ்நிலையைப் போலீசின் அடக்கு முறை நடவடிக்கைகள் ஏற்படுத்தின என அவர் விளக்கம் அளித்தார். மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி தனது தீர்மானத்தில் அதற்கு முந்தைய மூன்று ஆண்டுளின் நிகழ்வுகளைக் குறைவாக எடைபோட்டு விட்டது எனவும் அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

தலைமறைவு வாழ்விலிருந்து வெளியே

            அருணாவுக்கு எதிரான வாரண்ட் 1946 ஜனவரி 25ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. நேரே கல்கத்தா சென்ற அவர் அங்கே தேசபந்து பூங்காவில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்த மேடை புகழ்பெற்ற நியூ தியேட்டர்ஸ் உருவாக்கிய கலை இயக்குநர் சௌரன் சென் அவர்களால் மிக அழகாகப் படைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இந்தியாவின் வைஸ்ராய் ஆர்ச்சிபால்ட் வேவல் பிரபுவைக் கடுமையாக விமர்சித்து, இந்தியாவின் விடுதலை நாளை இந்தியர்கள்தான் முடிவு செய்வார்களே தவிர, அதனை வெள்ளையர்கள் முடிவு செய்ய முடியாது எனவும் முழங்கினார். எனவே மக்கள் சுதந்திரத்திற்கான தங்கள் போராட்டத்தைத் தொடரவும் வேண்டுகோள் விடுத்தார்.

            டெல்லி செல்லும் வழியெங்கும் ரயில் நிலையங்களில் மக்கள் பெருங் கூட்டமாக அவருக்கு வரவேற்பளித்தனர்; அவருடைய பயணத்தை அலகாபாத்தில் முடித்துக் கொள்ளும்படி நேரு கேட்டுக் கொண்டார். அருணாவை வரவேற்க நேருவே ரயில் நிலையம் வந்தார்.

            வெள்ளை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட கரோல்பாக்-ல் இருந்த அவருடைய வீடு மீண்டும் திரும்பக் கிடைத்தது. போலீஸ் பறிமுதல் செய்த அருணாவின் பேபி ஆஸ்டின் என்ற காருக்கான பணமும் அவருக்குக் கிடைத்தது.

காந்திஜியுடன் சந்திப்பு

            காந்திஜியைச் சந்திக்க 1947 பிப்ரவரியில் வார்தா சென்றார். நாக்பூரில் முப்பதாயிரம் மக்கள் திரண்ட பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார். காந்திஜியைத் “தேசத் தந்தை” என்றும் ‘இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் சின்னம்’ என்றும் பலவாக அருணா புகழ்ந்துரைத்தார். சில பிரச்சனைகளில் அவரோடு கருத்து முரண்படவும் செய்தார். இந்திய விடுதலைப் போரில் மக்களின் சுதந்திர உணர்வை எழுச்சிபெறச் செய்த 1946 பிப்ரவரி 18ல் தொடங்கிய வரலாற்றுப் புகழ்மிக்க ’ராயல் இந்தியக் கப்பல்படை’ யின் வேலைநிறுத்த (ராயல் இந்தியன் நேவி கலகம்) போராட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அருணா ஆசஃப் அலிக்கு, அது குறித்த காந்திஜியின் கருத்துகளோடு கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

விடுதலைக்குப் பிறகு நிகழ்வுகள்: அருணா சிபிஐ-யில் சேர்ந்தார்

          1946க்குப் பிறகு அருணாவின் வாழ்வில் பெரும் திருப்பமாக இடதுசாரி கொள்கைபால் திரும்பினார். 1947--48ல் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1948ல் காங்கிரஸை விட்டு விலகினார்; சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து 1950ல் இடது சோஷலிசக் குழுவை அமைத்தார். (பத்திரிக்கையாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் சோஷலிசக் குழுதலைவர்களில் ஒருவரான) எடடாட்ட நாராயணன் (Edatata Narayanan) மற்றும் ரஜினி பால்மே தத்துடன் மாஸ்கோ சென்றார். நாராயணனும் அருணாவும் சோவியத் யூனியனின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதன் பெரும் செல்வாக்கிற்கு ஆளாயினர்.

            நாடு திரும்பியதும் அருணா ஆலைத் தொழிலாளி வர்க்கம் மற்றும் பிற உழைக்கும் பகுதியினர் மத்தியில் பணியாற்றினார். பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் மார்க்ஸிய படிப்பு வட்டத்தை ஆரம்பித்தார். 1953– 54ல் தமிழ்நாடு மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது கட்சி காங்கிரசில் பங்கேற்ற அருணா கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 பெண்கள் இயக்கத்தில்

            வங்காளத்தில் இயங்கிய ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’யினரோடு 1950களின் துவக்கத்தில் அருணா ஆசஃப் அலிக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1952ல் நடந்த அந்த அமைப்பின் மாகாண மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அருணா பங்கேற்றார். 1953 கோபன்ஹெகன் சர்வதேச பெண்கள் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

           


இந்திய மாதர் தேசிய சம்மேளன (NFIW) அமைப்பின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அருணா 1967ல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1986வரை அந்தப் பொறுப்பை வகித்தார்.

            ஜோசப் ஸ்டாலின் மீது ‘குருசேவ் அறிக்கை’ என அறியப்படும் விமர்சனங்கள் வெளியானதும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகள் உண்டாயின. அந்த அறிக்கை ஸ்டாலின் காலத்தில் நடந்த அதிகார துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தின. (அதனால்) அருணா மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளவோ அல்லது அத்தகைய அநீதிகளுடன் சமரசம் செய்து கொள்ளவோ அவரால் முடியவில்லை. கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்; ஆனால் இறுதி வரை கட்சிக்கு ஆதரவாக இருந்தார்.

டெல்லி மேயராக

            1958ல் டெல்லி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அருணா ஆசஃப் அலி.  எண்பது உறுப்பினர்கள் அடங்கிய டெல்லி மாநகராட்சி கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சியோ அல்லது ஜனசங்கமோ பெரும்பான்மை பெறவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் 8பேர்.  இந்தச் சூழ்நிலையில், அருணா ஆசஃப் அலியை ஆதரிக்க முன்வந்தது சிபிஐ -- காங்கிரசும் அதுபோல ஆதரவளிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு. நேருவுடன் கலந்து ஆலோசித்த பிறகு காங்கிரசும் ஒப்புக்கொண்டது. முறைப்படி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இல்லை என்ற போதிலும், இப்படியாக டெல்லியின் முதல் கம்யூனிஸ்ட் மேயரானார், அருணா.

            இதே காலகட்டத்தில் 1958லேயே மற்றுமொரு கம்யூனிஸ்ட்டும் மேயராக இருந்தார் என்பது ஆர்வத்தைத் தூண்டும் செய்தி; அவர்தான் எஸ் எஸ் மிராஜ்கர், பம்பாய் மேயராக.

‘லிங்’ மற்றும் ‘பேட்ரியாட்’ இதழ்கள்

            1958ல் பல இடதுசாரிகள், காங்கிரஸ்காரர்கள் மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து லிங் (Link) என்ற வாராந்திர இதழை ஆங்கிலத்தில் வெளியிட்டனர். அந்தப் பத்திரிக்கை நாட்டின் முன்னணி வாராந்திர இதழாகத் திகழ்ந்தது. அருணாவும் நாராயணனும் அதன் அமைப்பாளர்களில் முக்கியமானவர்கள். பிறகு அந்தக் குழு இந்தியாவின் முதல் இடதுசாரி நாளிதழை ‘பேட்ரியாட்’ (தேசபக்தன்) என்ற பெயரில் கொண்டு வந்தபோது, அதிலும் அருணா முக்கியப் பங்கு வகித்தார்.

            1992ல் இந்தியாவின் உயர் விருதான ‘பத்ம விபூஷண்’ வழங்கப்பட்டு அருணா ஆசஃப் அலி கௌரவிக்கப்பட்டார். அமைதிக்கான லெனின் பரிசும் 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டன.  மேலும் இந்திய அரசின் மிக உயரிய குடிமை விருது ‘பாரத ரத்னா’ விருதும், அவருடைய மறைவுக்குப் பிறகு, 1997ல் அளிக்கப்பட்டு மாதர்குல ரத்தினத்தின் மணி மகுடத்தில் புகழ்பெற்றது.

            டெல்லியில் தனது 87வது வயதில் 1996ம் ஆண்டு ஜூலை 29ம் நாள் அருணா ஆசஃப் அலி மறைந்தார்.

            என்றும் புகழோடு ஒளிரும் பெண்கள் குல ஒளிவிளக்கு நினைவைப் போற்றுவோம்!

--தமிழில் : நீலகண்டன்,

      என்எப்டிஇ, கடலூர்     

 

 

Sunday 18 October 2020

கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு எந்த ஆண்டு?

 

கட்சி அமைப்பு தினம் – ஒரு வரலாற்றுப் பார்வை


--பினாய் விஸ்வம் M.P., 

                  (நியூஏஜ் ஆசிரியர் & சிபிஐ தேசியச் செயலாளர்)

           

கம்யூனிச இயக்கம் சிபிஐ, சிபிஐ(எம்) என இரண்டாகப் பிளவுபட்ட துரதிருஷ்டம் நேரிட்டு பல பத்தாண்டுகள் கடந்த பிறகு, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான உறவு, குறிப்பாகச் சமீப காலங்களில், முன்பு இல்லாத அளவு தோழமையோடு வலுப்பெற்று வளர்கிறது; தேசிய, சர்வதேசியப் பிரச்சனைகளைப் பரிசீலித்து மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளும் ஒத்திசைவாய் ஒன்றாய் உள்ளன. இது இயல்பானது என்பதற்குக் காரணம் இரு கட்சிகளும், சிக்கல் மிக்க இந்திய நிலைமையைப் புரிந்து கொள்வதில் மார்க்சிய-விஞ்ஞான அடிப்படை கொள்கையைப் பயன்படுத்துவதே. இந்த ஒற்றுமைப் போக்கு  கம்யூனிச அணிகளுக்கு மட்டுமின்றி ஜனநாயகச் சக்திகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது; ஆனால் சிலகுழுக்களுக்கு இந்த ஒற்றுமை மகிழ்ச்சி தருவதாக இல்லை.

          இடதுசாரி தத்துவத்திற்கு எதிராகவும் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு எதிராகவும் வன்மத்தோடு இருப்பவர்கள் அவர்கள். இந்நிலையில் சிபிஐ(எம்) கட்சி மட்டும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதன் நூற்றாண்டைக் கொண்டாட முடிவெடுத்தது எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாகவும் கொண்டாட்டமாகவும் ஆகிவிட்டது; சிண்டு முடியவும், முரண்பாட்டைக் கொளுத்திப் போடவும் முயல்கிறார்கள். [உதாரணம், மேம்போக்காக நியாயமாக இருப்பதாகத் தோன்றும் இந்து தமிழ் திசை சமஸ் கட்டுரை – ( மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது ) ].

          இதில் இரகசியம் ஏதும் இல்லை, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே எப்போது கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது என்பது உள்பட, சில பிரச்சனைகளில் மாறுபட்ட பார்வைகள் நீடிக்கிறது – இது வெளிப்படையானது. கட்சிகள் இரண்டாக நீடிக்கும் வரை இந்த வேறுபாடுகளும் தொடரக்கூடும். ஆனால் ஒரு விஷயத்தைக் குழப்பத்திற்கு இடமின்றித் தெளிவாக்கி விடலாம் : சில அணுகுமுறை வேறுபாடுகளைக் காட்டி எந்த எதிர்சக்திகளும் இரு கட்சிகளையும் அரசியல் லாவணியில் தள்ளவோ; மக்களின் எதிரிகளாகிய வர்க்க எதிரியை எதிர்த்து நடத்தும் போரில், இரண்டு கட்சிகளும் ஒன்றுபடும் திசைவழியிலான பாதையைக் (குதர்க்கமாக) அவை விளக்கமளிக்கவோ இடம் தராது. இதைத் தெளிவாக்கி விடலாம்.

          கம்யூனிஸ்ட் இயக்கம் கொள்கை அடிப்படையில் மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்ற நிலைபாட்டில் சிபிஐ நிற்கிறது என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை பளிங்கு போலத் தெளிவானது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே வலிமையான ஒத்துழைப்பு மேன் மேலும் வளர வேண்டும் என்ற நிலைபாட்டில் சிபிஐ(எம்) கட்சி நிற்கிறது என்பது அந்தக் கட்சியைப் பொருத்தும் அதே அளவு தெளிவானது.

பிரகடனப்படுத்திய தங்கள் தங்கள் நிலைபாட்டில் நின்று மேலும் எவ்வாறு முன்னேறுவது என்பதைப் பற்றியே சிபிஐயும் சிபிஐ(எம்) கட்சியும் சிந்திக்க வேண்டும். இந்த அடிப்படை உண்மையை மறந்து விடுவதை அவர்களின் உலகப் பார்வைக்கு அடித்தளமாக விளங்கும் மார்க்ஸியம் ஒருபோதும் அனுமதிக்காது. இன்று மதசார்பற்ற ஜனநாயகம் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை மதவெறி பாசிசம் சூழ்ந்துள்ள மிகக்கடுமையான அபாயத்தை அவை தெளிவாக உணர்ந்தே உள்ளன.  தற்போது கம்யூனிஸ்ட்கள் இடையே முக்கியமான கோஷம் ஒற்றுமை, மேலும் பொருள் பொதிந்த ஒற்றுமையாக மட்டுமே இருக்க முடியும்.

மேற்கண்ட கடமையை மனதில் நிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம் பற்றி பார்க்கலாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம் பற்றிய கருத்து வேறுபாடோ சர்ச்சையோ ஒன்றும் புதிதல்ல. கட்சி பிளவுபட்டது எவ்வளவு பழைமையானதோ அந்த அளவு அதுவும் பழைய சர்ச்சையே. பிளவுக்கு முன்பேகூட விவாதிக்கப்பட்டது. துவக்க காலம் தொட்டே கம்யூனிஸ்ட்கள் காலனிய அடக்குமுறைக்கு ஆளானார்கள். அந்த முன்னத்தி ஏர்கள் அக்டோபர் யுகப் புரட்சி வெற்றியால் ஆகர்ஷிக்கப்பட்ட அன்றைய இளைஞர்கள். நாட்டின் மூலைமுடுக்கெங்கும், சிலநேரம் அயல் மண்ணிலும்கூட புரட்சியாளர்கள் சோஷலிசப் பாதையைத் தேர்ந்தெடுத்து சிறு குழுக்களாகச் செயல்பட்டார்கள். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் அந்தப் புதிய எழுச்சியை அபாயமாகப் பார்த்தது. சதி வழக்குகள் புனையப்பட்டன; அப்படித்தான் லாகூர், பெஷாவர், கான்பூர் மற்றும் மீரட் சதி வழக்குகள் வந்தன. இந் நரவேட்டை அனைத்தையும் சந்தித்தாலும் கம்யூனிஸ்ட்கள் அவற்றை மீறியே இந்திய விடுதலைப் போர் நிகழ்ச்சிநிரலில் “பூரண சுயராஜ்யம்” என்ற கோரிக்கையை முதன் முதலில் இடம்பெறச் செய்தவர்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் புரட்சிகர அமைப்புக்களை அவர்கள் கட்டி எழுப்பினர். இப்படி எழுச்சிபெற்ற பெருந்திரள் மக்கள் இயக்கங்களுக்கு ஆற்றலும் வலிமையும் ஊட்ட, இயக்கங்களுக்கு அர்த்தமுள்ள தெளிவை வழங்கும் புரிதலோடு ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா) கான்பூர் நகரில் 1925ம் ஆண்டு டிசம்பரில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த அமைப்பு தினம் பற்றி பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சி காலத்திலேயே சிலருக்கு வேறுவிதமான மாறுபட்ட பார்வைகள் இருந்தன. இதில் ஓர் ஒத்த கருத்து ஏற்பட இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி வழி அமைத்தது. அமைப்பு தினம் பற்றி கட்சியின் நிலைபாட்டை அறிய அந்தத் தோழர்கள் விரும்பினர். அவர்களுக்கு அனுப்ப வேண்டிய  பதிலை முடிவு செய்ய கட்சியின் செயற்குழு 1959 ஆகஸ்ட் 18ல் கூடியது. அந்தச் செயற்குழுவில் அஜாய் கோஷ், பிடி ரணதிவே, பிசி ஜோஷி, எம் பசவபுன்னையா, இசட் ஏ அகமது, எஸ் ஏ டாங்கே, மற்றும் ஏ கே கோபாலன் பங்கேற்றனர்.

கூட்டக் குறிப்புக்களைத் தயார் செய்த பசவபுன்னையா தம் கைப்பட பதிவு செய்தார். விவாத முடிவில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டது : “கட்சி அமைப்பு நாள் – 1925”. கூட்டக் குறிப்புகளின்படி வேறு எந்தத் தேதியும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.  இதன் அடிப்படையில் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1959 ஆகஸ்ட் 20 அன்று அனுப்பிய பதிலில் கூறப்பட்டதாவது : “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டிசம்பர் மாதம், 1925ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பும்கூட தனிப்பட்ட கம்யூனிஸ்ட்களும், கம்யூனிஸ்ட் குழுக்களும் நாட்டின் பல்வேறு மையங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் நாட்டின் இந்தப் பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களின் பிரதிநிதிகளால் 1925 டிசம்பர் 26-ம்நாள் கான்பூரில் நடந்த கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது”. இந்தக் கடிதம் தோழர் பி.டி.ரணதிவே அவர்களால் வரைவு செய்யப்பட்டு அவரால் கையெழுத்திடப்பட்டது.

கட்சி ஆவணங்கள் மேலும் கூறுவதாவது: ஒன்றுபட்ட கட்சியில் இது மீண்டும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் வங்க மாநிலக்குழு கட்சியின் 40வது அமைப்பு தினத்தை 1960ம் ஆண்டில் கொண்டாட முடிவு செய்தது; இது தாஷ்கண்ட் கூட்டம் நிகழ்ந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்ட முடிவு. இதனையொட்டி அன்றைய ஒன்றுபட்ட கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் வங்கத் தலைமைக்கு 1960 ஜூன் 10ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது: “உங்களுடைய மாநிலக்குழு 1961ல் கட்சியின் 40வது அமைப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிய வந்தது. (மத்திய) செயற்குழு இது பற்றி விவாதித்து, இதனைத் தேசியக் குழுவைத் தவிர கட்சியின் எந்த அமைப்பும் முடிவு செய்ய முடியாது எனத் தீர்மானித்தது. எனவே இந்தப் பிரச்சனையை கட்சியின் அடுத்த தேசியக் குழுக் கூட்டத்தில் எழுப்புவதே முறையானதாக இருக்கும்” 

இதே பொருள் பற்றி 1963 ஜூன் 5ம் நாள் செயற்குழு சார்பில் தோழர் எம் என் கோவிந்தன் நாயர் வெளியிட்ட அறிக்கை:

“சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாம் தெரிவிக்க விரும்புவது யாதெனில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கான்பூரில் கம்யூனிஸ்ட்கள் மாநாட்டில் 1925 டிசம்பர் 26ம் நாள் அமைக்கப்பட்டது. இதற்கு முன்பும் கம்யூனிஸ்ட் அகிலத்திடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஏழு கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டு வந்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்று அறியப்படும் கட்சி மேற்குறிப்பிட்ட கான்பூர் மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க,  1925 டிசம்பர் 26ம் நாள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. அம்மாநாட்டில் பங்கேற்ற குறிப்பிடத்தக்க முக்கியமான தோழர்கள் முஸாபர் அகமத் (கல்கத்தா), எஸ் வி காட்டே, ஆர் எஸ் நிம்க்கர் மற்றும் ஜெ பி பகர்கட்டா (பாம்பே), அப்துல் மஜீத் (லாகூர்), சி கே அய்யங்கார் மற்றும் சிங்காரவேலு செட்டியார் (மெட்ராஸ்). 1925 டிசம்பரில் கூடிய மாநாட்டின்போது எஸ் ஏ டாங்கே மற்றும் சௌகத் உஸ்மானி சிறையில் இருந்தனர். ”கட்சியின் செயற்குழு டிசம்பர் 28ல் கூடி தோழர் எஸ் வி காட்டே அவர்களைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது.” இந்த நிகழ்வுகள் எல்லாம் 1964க்கு முன் நிகழ்ந்தவை.

இந்தியப் புரட்சி மற்றும் இந்தியத் தொழிலாளர்களின் நலன்களைப் பொருத்த அளவில் 1964 கட்சிப்பிளவு துரதிருஷ்டவசமானது. இருந்த போதினும், சோவியத் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்துதான் விட்டது. மற்றொரு முரண்படும் விஷயம், பிரதான எதிரியை எதிர்க்கும் போராட்டத்தில் இந்திய பூர்ஷ்வாக்கள் குறித்த அணுகுமுறை. இன்று இந்த பல்வேறு கேள்விகளுக்குமான விடையை, பிரிவு நிகழ்ந்து கடந்து விட்ட இந்த 55 ஆண்டுகளில், சரித்திரம் ஓரளவு வழங்கியிருக்கிறது. பிளவு நடந்த சூழ்நிலையில் நிலவிய, உணர்வு மேலிட்டால் முன் வைக்கப்பட்ட இரண்டு பக்கத்தின் பல வாதங்களும், பிரிந்து இருப்பதன் பின்னணியிலேயே நியாயப்படுத்த முடியும். இந்த வாதங்கள் எல்லாம் இயல்பாகப் பிளவின் காரணமாகத் தூண்டப்பெற்று அதனோடு இணைந்த  தன்வயக் காரணிகளின் தன்உணர்ச்சி ஆதிக்கத்தில் சொல்லப்பட்டவையே தவிர, எதார்த்தமான புறநிலைக் காரணிகள் அனைத்தையும் பரிசீலித்து முன்வைக்கப்பட்டவை அல்ல. ஆனால் மார்க்ஸியம் கற்பித்த மார்க்ஸிய ஆய்வு வழிமுறை புறநிலை உண்மைகளை, தன்னுணர்ச்சி கடந்து தன்நிலை தாண்டி பரிசீலிப்பது அல்லவா.

எனவே கட்சி அமைப்பு நாள் எது என்பது  குறித்த மலர்ந்துவரும் புதிய நிலைபாடுகளும்கூட மார்க்ஸிய ஞான வெளிச்சத்தில் காய்தல் உவத்தல் அற்ற வரலாற்று பார்வையோடே பரிசீலிக்கப்பட வேண்டும். ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’, பாரத மண்ணில் அமைக்கப்பட்டதா அல்லது அன்னிய மண்ணில் அமைக்கப்பட்டதா?  இந்த மிகத் தூலமான அடிப்படை கேள்வி சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒன்று. நம்முடைய வர்க்க எதிரிகள் கட்சியின் மீது ஓர் அயல்நாட்டு முத்திரைச் சீட்டைக் கட்டிவிடத் தீய நோக்கத்தோடு முயல்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். [உதாரணமாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் நடைபெறும் அடித்துக் கொல்லும் கும்பல் படுகொலைகளையே அயல்நாட்டு இறக்குமதிச் சரக்கு என்று நிராகரிக்க முயல்வதைச் சொல்லலாம் – இன்றைய ஆட்சியாளர்களின் வெறியுணர்வு ஊட்டப்பெற்ற தேசியவாதம் ஒரு யதார்த்த அபாயம் ( மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது ) ].

1920-ம் ஆண்டு தாஷ்கண்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஏழு பேரில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு வர்க்க எதிரிகள் அவர்களின் தாக்குதல்களைக் கூர்மைப்படுத்தக்கூடும். இப்படிக் கூறுவதால் தாஷ்கண்ட் கூட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளலாகாது.  1925-ம் ஆண்டு டிசம்பர் கான்பூரில் நடைபெற்ற அமைப்பு மாநாடு மேகக் கூட்டமாய் கூடிக் கலைந்த  நொடிப் பொழுது திடீர் நிகழ்வு அல்ல. இந்தியாவில் செயல்பட்டுவந்த ஏழு கம்யூனிஸ்ட் குழுக்களோடும், தாஷ்கண்ட்டில் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் குழுவின் பெரும் பங்களிப்போடும் அந்த அமைப்பு நிர்மாணிக்கப்பட்டது. எனவே, அந்த வரலாற்றுச் செயல்முறைகளையும் அதன் பங்களிப்பையும் முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவை 2025-ம் ஆண்டே கொண்டாட வேண்டும்.

கம்யூனிஸ்ட்களின் ஒற்றுமை என்ற லட்சியத்தை நோக்கிய நமது பயணத்தில் வரலாறு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தையும் நாம் தத்துவார்த்த, அரசியல், மற்றும் அமைப்புநிலை அம்சங்களோடு இணைத்தே விவாதிக்க வேண்டும். மிகச் சிறந்த தத்துவவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயணகுரு அருளியபடி, ’’எந்த விவாதமும் அதன் நோக்கம் –’வாதமிட்டு வெல்வதாக இல்லாமல், அதற்கு மாறாக (விவாதிக்கப்படும் பொருள் பற்றி) மேலும் அறிந்து புரிந்து கொள்வது மற்றும் (பிறரையும்) அறியச் செய்து புரிய வைப்பது’ – என்பதாக மேல்நோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும்” என்பதாக இருக்கட்டும். இந்த விவாதம் சிபிஐ, சிபிஐ(எம்) அணியிரையும் ஏனைய முற்போக்குச் சக்திகளையும் அடிப்படை லட்சியம் நோக்கி மேலும் உணர்வூட்டி வலிமை பெறச் செய்யட்டும்.

                   “நல்லதோர் வீணையை மீட்டுவோம்

                 மாநிலம் பயனுற வாழ்வதற்கே!”

--நன்றி : நியூஏஜ்

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்