Saturday 4 September 2021

விடுதலைப் போரில் மாப்ளா கிளர்ச்சி வரலாற்று உண்மை

ஆர்எஸ்எஸ் – பாஜக இணையைத் துரத்தும் விடுதலைப் போரில் பங்கேற்காத குற்ற உணர்வு

       

   
            கையறு நிலையில் வரலாற்றை 

         மதவாத விஷமாக்கும் ஆர்எஸ்எஸ்

                                --டி ராஜா  பொதுச் செயலாளர், சிபிஐ

            வரலாற்றைச் சிதைப்பது, உண்மைகளைத் தவறாகத் திரித்துப் பிரச்சாரம் செய்வது, சில வரலாற்று ஆளுமைகள் மற்றும் நிகழ்வுகளைக் களவாடிச் சொந்தம் கொண்டாடுவது, மற்றவற்றை நிராகரிப்பது அல்லது தவறாகச் சித்தரிப்பது இவையெல்லாம் சங் பரிவார் கும்பலின் கைவசம் இருக்கும் ஸ்டாண்டர்டு உத்திகள். இந்தியக் குடியரசு மற்றும் தேசத்தின் வரலாற்றைத் திருத்தி எழுதும் அவசரம் அவர்களின் அடியாழத்தில் வேர்கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடிமைத் தளையை விரட்டும் போரில் இந்திய மக்கள் ஒன்றிணைந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பிற அடிப்படைவாதச் சக்திகள் முழுமையாக அன்னிய ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிதலுள்ள அடிமைகளாக இருந்தனர்.

            ஆர்எஸ்எஸ் --பாஜகவின் ஒரு மூத்த உறுப்பினர் 1921ல் நடைபெற்ற மாப்பிள்ளைக் கிளர்ச்சியை “இந்தியாவின் முதலாவது தலிபானிய கொள்கையின் வெளிப்பாடுகளில் ஒன்று” எனச் சமீபத்தில் சித்தரித்தார்; வரலாற்றுச் சான்றுகள் எதுவுமின்றி பேசுவது அவர்களுக்கு வழக்கமானதுதானே.

வரலாற்றுச் சூழல் பற்றிய கவலையற்று ஆர்எஸ்எஸ்-பாஜக, மாப்பிள்ளை (சமூக) விவசாயிகள் இயக்கத்தை ‘ஜிகாதி’ என்பது, இன்றைய விவசாயிகள் போராட்டத்தை அதே சக்திகள்  காலிஸ்தான் தூண்டுதல் என முத்திரை குத்துவது போலத்தான். “தங்களது கடந்த கால வரலாறு, முதாதையர்கள் மற்றும் கலாச்சாரம் அறியாத மக்கள், வேர் இல்லாத மரம் போல” என்று ஜமைக்கா நாட்டின் அரசியல், செயற்பாட்டாளர் மார்கஸ் கிராவே கூறுகிறார். இந்தியச் சுதந்திரப் போராட்டங்களை அதன் பல்வேறு கிளைகளோடு ஒரு மரம் என உருவகித்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதில் எந்தக் கிளையையும் சொந்தம் கொண்டாட முடியாது. அந்தக் கையறுநிலையால் அவர்கள் வரலாறு என்ற மரத்தையே வேரோடு பிடிங்கி எறிய முயல்கிறார்கள்; அந்த இடத்தில் பொய்யான, துருவங்களாகப் பிரித்து அணிதிரட்ட, வெறுப்பும், பிளவுபடுத்தும் கதையாடல்களை நிலைநாட்டப் பார்க்கிறார்கள்.

1921ல் நடந்த அந்தக் கிளர்ச்சியைச் சிறுமைப்படுத்தி இஸ்லாமியக் கலகம் அல்லது தலிபானியக் கொள்கையின் வெளிப்பாடு என முத்திரை குத்தி அதன் நினைவுகளை நீர்க்கச் செய்ய ஆர்எஸ்எஸ் முயற்சிப்பது இன்றைய பரிவார் கும்பலின் முரண்படும் இரட்டை குணத்திற்குப் பயன்படலாம். இந்திய மக்கள் தொகையில் ஒரு பிரிவினரை ‘மற்றவர்கள் அல்லது பிறர்’ என்ற அழைப்பதை ஒரு நூற்றாண்டாகப் பின்பற்றுவதால் இப்போதும் அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் “நாம் எதிர் அவர்கள்” என்ற மதவாத வெளிச்சத்தில் பார்க்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரையில் எல்லா விவசாயிகள் கிளர்ச்சிகளுக்கும் ஒரு மதவாதக் கோணம் --- இந்து, முஸ்லீம் அல்லது சீக்கியர் என்பதான  கோணம் – இருக்கும்; இந்து ராஷ்ட்டிரா என்ற அவர்களின் ஒற்றை வார்ப்பான கதையாடலில் பொருந்தாதவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.

மதம் மக்களைத் திரட்டும் சாதனமாக

இருப்பினும், சுதந்திரப் போராட்ட இயக்கத்தை முதன்மையாக மதத்தின் வழி பார்த்தால், அப்போராட்டங்களின் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் காணாது கடந்து போய்விடும் அதற்கே உரிய பிரச்சனைகள் உள்ளன; மேலும் அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியையும் தங்கள் உள்ளூரில் அவர்களோடு கூடிக் குலாவிடுவோரையும் எதிர்க்கும் லட்சியத்துடன் நடக்கும் வர்க்க அடிப்படையிலான போராட்டங்களையும் குறைத்து மதிப்பிடச் செய்யும். ஆனால் அன்னிய ஆட்சியாளர்களை எதிர்க்க எண்ணிறைந்த போராட்டங்கள் மற்றும் விவாதங்கள் மூலமாக        அனைத்து நம்பிக்கை உடையவர்களையும் ஒன்றிணைந்த திட்டத்தின் கீழ் விடுதலைப் போராட்டம் ஒருமுகப்படுத்தி  ஈர்க்கும் காலகட்டம் வரையில், மக்களைத் திரட்ட மதம், சாதி, இனக் குழு அல்லது மத நம்பிக்கை அடிப்படையிலான தொடர்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

சோட்டா நகர் பகுதியில் பிரிட்டிஷ் மற்றும் அவர்களின் உள்ளூர் ஆதரவாளர்களான வெளியாட்களுக்கு எதிரான மலைவாழ் இனமக்களின் போராட்டங்களைத் தரம்ராஜ் (தர்மத்தின் ஆட்சி) அல்லது ‘பொற்காலம்’ என அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. மராட்டிய சித்பாவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வாசுதேவ் பல்வந்த்ராவ் பாட்கே, அது போல, தனது சமூகப் பண்டிட்டுகள் குழுவின் மூலம் ஓர் இந்து ராஜ்யத்தை நோக்கமாகக் கொண்டிருந்தபோது, அவரது குழு பல சாதியினரை உள்ளடக்கி இருந்தது. ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா மற்றும் முஸ்லீம் லீக் அமைப்புகள் மதத்தை முழுமையாகச் செக்டேரியன் நோக்கத்திற்குகாகப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, அப்படி மத நம்பிக்கையை மக்களைத் திரட்டுவதற்கான ஒரு சாதனமாகப் பயன்படுத்துவது,  மெல்ல மெல்ல அதனுடைய வீச்சை இழந்தது.

மாப்ளா கிளர்ச்சி வரலாறுதான் என்ன?

          ஒரு காலத்தில் செல்வம் மிக்க வணிகர்களான மாப்பிள்ளா முஸ்லீம் சமூகத்தினர் பின்னர் அந்தஸ்தில் வீழ்ந்து நவீன கேரளா மாநிலத்தின் மலபார் பகுதியில் சிறிய விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் மாறினார்கள். திப்பு சூல்தானிடமிருந்து அப்பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்கு வந்ததும் நிலவரிவிதிப்பு வருவாய் முறையை மாற்றி உப்பு, மரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தங்கள் ஏகபோகமாக்கினார்கள். நில வருவாய் கேட்பது மிகக் கடுமையாக இருந்தது; கட்டத் தவறிய விவசாயிகள் அதனைச் செலுத்துவதற்காகத் தங்கள் மரச் சாமான்களை அல்லது மற்ற வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி விற்க நேர்ந்தது.

            1862 – 1880 காலகட்டத்தில் வடக்கு மலபார் தாலுக்காக்களில் சுமார் 250 சதவீதம் குத்தகை வாடகை வழக்குகளும் 450 சதவீதம் (நில) வெளியேற்ற நீதிமன்ற உத்தரவுகளும் அதிகரித்தன. விவசாயிகள் அனுபவித்த கொடுமைகள் அதன் உச்சத்தில் இருந்தது. இதனால் 1919 – 1936 காலகட்டத்தில் அப்பகுதியின் இந்து விவசாயிகளும் சேர்ந்த வேளாண் மக்கள் 29 முறை ஒடுக்கு முறைக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அப்பகுதியின் மக்கள் தொகையில் பிரதானமாக முஸ்லீம்கள் இருந்தனர்; அவர்களில் பலர் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள்; காரணம், அப்பகுதியின் ஜன்மிகள் அல்லது ஜமீந்தார்கள் ஏறத்தாழ முழுவதுமாக மேல் சாதி இந்துக்களாக இருந்ததால் அவர்களின் சாதிய பாகுபாடு தொல்லைகளிலிருந்து விடுபடவே அவர்கள் மதம் மாறியிருந்தார்கள்.

மலபார் பகுதியில் ஒத்துழையாமை இயக்கம்

            1920களின் தொடக்கத்தில் மகாத்மா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விட்டிருந்தது; அதன்  கோரிக்கைகளில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையைச் சாதிக்கக் கிளாபத் கோரிக்கையையும் உள்ளடக்கியிருந்தது. பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துகள் முஸ்லீம்கள் இருசாராரையும் உள்ளடக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவதே அந்த இயக்கத்தின் நோக்கம். ஒத்துழையாமை இயக்கம் மலபார் பகுதியில் பரவியபோது அது வன்முறை வடிவெடுத்தது; (பாதிக்கப்பட்ட) விவசாயிகள் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் உள்ளூர் நிலஉடைமையாளர்களையும் தாக்கத் தொடங்கினர். இந்த அம்சத்தில் அது, போர்க்குணம் மிக்க பிற விவசாயிகள் எழுச்சியின்போது ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் உள்ளூர் பிரதிநிதிகளான நிலவுடைமையாளர்களையும் உள்ளூர் லேவாதேவிக்காரர்களையும் தாக்கிய நிகழ்வுகளிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டிருக்கவில்லை.

‘வேகன் ட்டிராஜடி’          

சில கிளாபத் தலைவர்கள் செல்வாக்கின் கீழ் மக்களைத் திரட்டிய மற்றும் கிளர்ச்சி வெளிப்பாட்டின் சில சம்பவங்கள் மதம் சார்ந்து இருந்தாலும், ஒட்டு மொத்தத்தில் இவ்வியக்கம் அதன் உள்ளடக்கத்தில் ஏகாதிபத்திய மற்றும் நிலவுடைமையாளர்கள் எதிர்ப்பாகவே திகழ்ந்தது. மாப்பிள்ளை கிளர்ச்சியில் வன்முறை பயன்படுத்தப்பட்டதை மகாத்மா காந்தி விரும்பாவிடினும் மாப்பிள்ளைமார்களின் வீரத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். இயக்கம் நன்கு பரவியதால் பொங்கியெழுத்த விவசாயிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்கப் பிரிட்டிஷ் இராணுவத்திற்குச் சில காலம் பிடித்தது. அந்த மோதலில் 2239 விவசாயக் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்; மிகவும் அருவருக்கத் தக்க வகையில் பிரிட்டிஷ் இராணுவம் நிகழ்த்திய ‘இரயில் வண்டித் துயரம்’ நிகழ்வும் அப்போதுதான் நிகழ்ந்தது. அதில் 64 கிளர்ச்சியாளர்களைக் கைதிகளாகப் பெல்லாரிக்கு இரயில் வண்டிப் பெட்டி ஒன்றில் அடைத்து அழைத்துச் சென்றபோது, உணவும் தண்ணீரும் இன்றி அத்தனை பேரும் மூச்சுத் திணறி சாகடிக்கப்பட்டனர். இந்தக் கொடுமையான சாவுகள் நாடு முழுவதும் சீற்றமடையச் செய்து விடுதலை போராட்டத்தை வலிமையாக்கின.

அந்தமான் சிறைகளில்

            பல கிளர்ச்சியாளர்கள் அந்தமானின் (சிறிய அறைகளைக் கொண்ட) செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டு அங்கே சித்திரவதைக்கு ஆளாகினர். 1924ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவுக்கான அன்றைய பிரிட்டிஷ் அண்டர் செக்ரெட்டரி திரு ராபர்ட்ஸ் ரிச்சர்டு கேள்வி ஒன்றுக்குப் பின்வருமாறு பதில் அளித்தார்: “கடந்த ஜூலையில்

மொத்தமாக 1235 மாப்பிள்ளைமார் அந்தமான் போர்ட் பிளேயரில் இருந்தனர். அதில் 75 பேர் செல்லுலார் சிறையிலும் 12 பேர் சிறுவர் குற்றவாளிகளாகவும், 40 விவசாயிகளும் மற்றும் சொந்த உழைப்பாளர்களும் இருந்தனர்; மற்ற அனைவரும் குற்றவாளி முகாமில் (‘கன்விக்ட் பாரக்’குகள் என்போர் சாலை போடுதல் போன்ற பலதரப்பட்ட பணிகளைச் செய்யவும் பெண் சிறைவாசிகள் வீட்டு வேலைக்கும் பயன்படுத்தப்படுவது) இருந்தனர்”. விடுதலைக்குப் பிறகு அவர்களில் பலர் அந்தமானின் பல தீவுகளிலேயே விவசாயிகளாகவும் மீன்பிடிப்போராகவும் தங்கி விட்டனர். விடுதலை போராட்ட வீரரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான என் இ பலராம் அவர்களோடு நான் (டி ராஜா) அந்தத் தீவுகளுக்கு விஜயம் செய்தபோது கடுமையான பிரிட்டிஷ் அடுக்குமுறைகளிலிருந்து தப்பிப் பிழைத்த குடும்பத்தினர்களைத் தீவுகளில் ஒன்றில் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடினேன்.

விவசாயிகள் நலனில் கம்யூனிஸ்ட்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பும்  

            இன்றைய விவசாயிகள் எழுச்சிப் போராட்டத்துடன் ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் ஒன்ற இயலாததற்கு அவர்களது தத்துவக் கொள்கைகளே காரணம்; அக்கொள்கைகளின் விருப்பமான ஈர்ப்பு எப்போதும் பணக்கார வர்க்க முதலாளிகள் மற்றும் பிரதானமாகச் சமுதாயத்தின் உயர் சாதிகளைச் சேர்ந்த நில உடைமையாளர்கள் நலத்தின் பக்கமே இருப்பதால் விவசாயிகள் பக்கம் சேர முடிவதுமில்லை; மறுபுறம், விவசாயிகளின் துன்ப துயரங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் ஆபத்துகள் அவர்களின் கவனத்தைப் பெறுவதுமில்லை. இந்த நிலையில் நிலமற்ற தலித்கள் எண்ணிக்கையில் மிக அதிகமிருப்பதான புள்ளிவிபரங்கள் குறித்து அவர்களின் அக்கறையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.  விடுதலைப் போராட்டத்தின்போதும் அதற்குப் பிறகும் கம்யூனிஸ்ட்கள் விவசாய இயக்கங்களின் முன்னணியில் தங்கள் கிசான் சபாக்கள், விவசாயச் சங்கங்கள் மூலம் எப்போதும் முனையிலே முகத்து நின்று ஜமீந்தாரி முறையை ஒழிப்பதற்குச் சட்டங்கள் இயற்றவும் நிலச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் கருவிகளாக, காரண கர்த்தர்களாக இருந்தனர்.

            ஆர்எஸ்எஸ் ஆட்களைத் திரட்டவும் தங்கள் நிதித் தேவைகளுக்கும் தத்துவார்த்த கொள்கை அடிப்படையில் பிற்போக்கு மேல் சாதி நிலத் திமிங்கிலங்கள் மற்றும் முதலாளிகளைச் சார்ந்து இருக்கின்றனர்; எனவே எப்போதும் அவர்களின் நலனுக்காகச் சேவை செய்பவர்களாக இருந்து, பாடுபடும் மக்கள் கூட்டத்தின் நலன்களைப் புறக்கணிக்கின்றனர். இதுதான் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் வர்க்க குணம்; அதுவே மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் மீது மூர்க்கத்தனமாக வன்முறை வெறியாட்டங்களை ஏவுகிறது. இதைப் பார்க்கும்போது அவர்களின் உண்மையான புரவலர்களான பிரிட்டிஷ்காரர்களையும் அவர்கள் விவசாய இயக்கங்கள் மீது நடத்திய வன்முறை வெறியாட்டங்களையும் நினைவுபடுத்துகிறது.

            ஆர்எஸ்எஸ் அமைப்பின் கண்ணோட்டம் மிகவும் குறுகியது; இந்த அடையாளத்துடன் அவர்கள் குடிமக்களைக் காணத் தவறுவதுடன், எப்போதும் பிளவுகளையும் மதத்தின் அடிப்படையில் மோதல்களையும் உண்டாக்க முயல்கின்றனர். இருப்பினும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மற்றும் சாதிகளின் ஒற்றுமைக்கு, இந்த இரட்டை குணப் போக்குகள் அனைத்தையும் மீறி, ஒன்றிணையும் ஆற்றல் உண்டு. அது நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களிலும் நமது வரலாற்றின் மீது ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டத்தினர் நடத்துகின்ற தாக்குதல்கள் அனைத்தையும் எதிர்த்து முறியடிக்கும் என்பது நிச்சயம்!

--நியூஏஜ் (செப் 5 – 11)

--தமிழில்: நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786 

  

No comments:

Post a Comment