Friday 19 January 2024

ஆழ்ந்த மதவாதம் நிலவும் ராஜியத்தில் அறிவியல்பூர்வ மனதைத் தேடி …

 


ஆழ்ந்த மதவாதம் நிலவும் ராஜியத்தில்

அறிவியல்பூர்வ மனதைத் தேடி …

                                                          --கார்கி சக்ரவர்த்தி

    பல்வேறு துறைகளில் விஞ்ஞானம் தனது புதிய கண்டுபிடிப்புச் சாதனைகளுடன், வெளிப்படையாகத் தெரியும் சமூக மாற்றத்துடன் சமூகம் முன்னோக்கிச் செல்ல உதவுகிறது; எனினும், பொருளாதார ற்றத்தாழ்வுகள் பளிச்சென கண்ணை உறுத்தும் ஒரு நாட்டில் அதனை அப்படிப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. கல்வியியல் பிரிவு என்ற வகையில் அறிவியல், நமது கல்விப் படிநிலை வரிசையில் உச்சத்தில் உள்ளது, குழந்தைகளுக்கு வாழ்வில் ஒரு சாதனையாளராக மாறும் அளவுகோலாகவும் இருக்கிறது. அதன்

நேர்மறை பங்களிப்பு ஒருபுறம் இருக்க, அறிவியல் கண்டுபிடிப்புகள் மாபெரும் இராணுவக் கருவிகள், ஆயுதங்கள், நவீனத் தொழில்நுட்பத்துடன் அமைந்த போர்த் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் மாபெரும் இராணுவ உற்பத்தி வர்த்தகத் தொழிலுடனும்கூட இணைக்கப்பட்டுள்ளது –அதன் மூலம் சாவு வியாபாரிகளின் கொள்ளை லாபம், உலகெங்கும் போர்ப் பதற்றம், வன்முறை மற்றும் அழிவும் அதிகரிக்கின்றன.

            எனினும், அறிவியல் பற்றிய மாபெரும் கதையாடல், அதன் மிக முக்கிய விளைவான எதையும் கேள்வி கேட்கும் பார்வை மற்றும் ஆராயும் உணர்வை மனிதகுலச் சிந்தைனையில் ஏற்படுத்தியதைக் காணத் தவறுகிறது. என்னைப் பொருத்தவரை, அறிவியல் ரீதியான மனம் உருவாவது, சமூகத்தில் ஆணும் பெண்ணுமாகப் பல பேராளுமையாளர்களை மீண்டும் கண்டுபிடிக்க ஊக்கமளிக்கும். எத்தனை எத்தனை ஆளுமைகள், ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர், இரவீந்திரநாத் தாகூர், ஜோதிபா மற்றும் சாவித்திரி பூலே, (பேகம் ரோக்கியா என்றறியப்படும் வங்கப் பெண் எழுத்தாளர், இஸ்லாமிய பெண்ணியவாதி, சமூக ஆர்வலர், பெண்ணுரிமை மற்றும் பெண்கல்விக்கான வழக்கறிஞர், சிந்தனையாளர், கல்வியியலாளர் என்ற பன்முகம் கொண்ட) ரோக்கியா ஷஹாவத் ஹூசைன் எனப் பலர். அவர்கள் அனைவரும் அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இல்லை எனினும், மதம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட கண்மூடித்தனமான பழைய சடங்குகள், பழக்க வழக்கங்களைக் கேள்வி கேட்கும் மனம் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், எழுத்துகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் மதவாதப் பழமைவாதத்திற்குச் சவால்விட்டு கேள்விகேட்ட அவர்களின் பங்களிப்புகள் நமது மனங்களில் ஆழமான பதிவை விட்டுச் சென்றுள்ளன.

            பல்கிப் பெருகும் கட்செவி மூலமான (வாட்ஸ்அப்) வரலாறு மற்றும் சமூக ஊடகங்களின் இன்றைய நாள், எவரும் கேள்வி கேட்கும் தேடலுடன் எந்த விஷயத்திலும் ஆழமாகச் செல்ல முடியாத இழப்பின் அவலத்தைக் காண நேர்வது –ஒரு தொலைவிலிருந்து பார்க்க நேரினும்-- துயர் தருவது. ராஜா ராம்மோகன் ராய் அவர்களைச் சதி வழக்கத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுடன் தொடர்புபடுத்துவதுடன் நாம் நிறுத்திக் கொள்கிறோம். ஆனால், அனைத்து மதங்களின் போக்குகளையும் ஒன்றாய் இணைக்கும் தனித்துவமான முயற்சியான அவரது உலகெங்கும் வியாபிக்கும் மதம் என்ற கோட்பாட்டின் மீது அவர் ஆற்றியப் பேருரைகள் இன்னும் கேள்விபடாத ஒன்றாக இருப்பதுடன், நமது நினைவிலிருந்தே மறைந்தும் போனது. இன்றைய அல்லது கடந்தகால கல்வி முறை, விமர்சனபூர்வ கற்றல் செயல்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கு மாறாக, மேலிருந்து திணிக்கப்படும் எந்தவொரு விஷயம் குறித்தும் விவாதிப்பதற்கான இடம் இல்லாதது என்பது மட்டுமில்லை, அதனைக் கேள்வி கேட்கத் துணிவதையும் முனை முழுங்கச் செய்கிறது. இராமாயணம் குறித்து நம்மிடம் 300 அல்லது அதற்கு மேம்பட்டபலவிதமான கட்டுரைகள் உள்ளன. அப்படி வெவ்வேறாக இருப்பது ஒன்றே போதும் எவரையும் தேச விரோதி அல்லது இந்திய விரோதி என்று முத்திரை குத்திவிட, அதற்கு வாய்ப்புகள் ஏராளம்!.

     இருப்பினும், நெருக்கடியான சுகாதாரச் சூழ்நிலை நிலவும் நேரம், ஒரு நோயாளியை அருகில் இருக்கும், மருத்துவ அறிவியலின் ஆகச் சிறந்த உதாணமான, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமே தவிர, எந்த வழிபாட்டு இடத்திற்கும் அல்ல. ஒருவர் தனது மத நம்பிக்கைக்கு ஏற்றபடி அப்போது பிராத்தனை செய்தாலும், அச்சூழலில் அறிவியலே மதஉணர்வை வெற்றி கொள்கிறது. கட்டுப்படியாகும் செலவில் பொதுச் சுகாதார முறைமையின் தேவையை ஒருவர் உணர்கிறார். அந்த இலக்கை அடைய குறைந்தபட்சம் 6 சதவீதம் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

        எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் மற்றும் மதவாதச் சூழலில், கீழ்ப்படிதல் உள்ள குடிமக்கள், நாட்டின் எல்லா வர்க்கத்தினர் இடையேயும் பரவலாக, அரசு கேட்டுக் கொண்ட வண்ணம் கோவிட் தொற்றை ஒழிக்க மணிகளை அடித்ததையும், தட்டுக்களைத் தட்டி ஓசை எழுப்பியதையும் கண்டோம். அதுபோலவே தொழில் ரீதியில் மருத்துவரான சுகாதரத்துறை அமைச்சர் போலியோ நோயை ஒழிக்க அனைத்து ஆலயங்களிலும் மாலைநேர பூஜை நடத்துமாறு சுற்றறிக்கை அனுப்பினார். மிகவும் படித்த ஒரு முதலமைச்சர் அனுமன் சாலிசா பாடலைத் தினமும் பாடுமாறு அனைத்து மாணவர்களையும் – ஏதோ இந்து மத நம்பிக்கையைத் தவிர, வேறு மத நம்பிக்கையைப் பின்பற்றும் மாணவர்கள் இல்லாததுபோல நினைத்துக்கொண்டு -- கேட்டுக் கொண்டார்.

      79.5 சதவீதமானவர்கள் இந்துகளாகப் பிறந்துள்ளர் என்பது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அனைவருமே மதவாத உணர்வு என்ற பெயரில் முன்னிறுத்தப்படும் கருத்தியலை ஒப்புக் கொண்டு அதனை ஆதரிக்கின்றனர் என்று பொருளாகாது.  நாத்திகர்கள் அல்லது கடவுளை நம்பாதவர்கள், மதம் இந்தத் தேசத்தைக் கொன்றுவிடும் என்று கூறுவது சரிதான். மற்ற மத நம்பிக்கைகளுக்கு எதிரான வெறுப்புக் கலாச்சாரத்துடன் கூடிய மதவாதப் பிடிவாதக் கோட்பாடு நமது நாட்டின் பன்மைத்துவக் கட்டமைப்பைப் பிய்த்தெறிந்து விட்டது. தற்போது மூட நம்பிக்கைகள் அதிகரிப்புடன் கேள்வியின்றி சடங்குகளைப் பின்பற்றுவதுடன் சேர்ந்து அந்த வெறுப்புக் கலாச்சாரம் சமூகக் கலாச்சாரமாக அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்றுவிட்டது. 

    எனினும், பெரும் மக்கள் பிரிவு அத்தகைய மதவாதப் பிடிவாதக் கோட்பாட்டை அல்லது தீவிர மதவெறியை ஒப்புக் கொள்ளாது அல்லது எந்தவகையான நிறுவனப்படுத்தப்- பட்ட மதத்தையும் ஆதரிக்க மறுப்பது மட்டுமல்ல, மதவாத உணர்வு மற்றும் ஆன்மிகம் இடையே வேறுபாட்டை ஏற்படுத்தவும்  அவர்கள் முயற்சி செய்கிறார்கள், “கடவுள் இல்லாத ஆன்மிகம்” அல்லது இயற்கையுடன் இயைந்த வாழ்வு குறித்தும் பேசுகிறார்கள். இங்கு முன்னிறுத்தப்படுவதுபோல வேத மரபு ஒன்று மட்டுமே அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் வைணவம், சைவம், பக்தி இயக்கம் அல்லது லோகாயதம், சாருவாகம் போன்ற பல்வேறு மரபுகளும் உள்ளன.  இவையெல்லாம் கல்விப் புலன விவாதங்களின் தத்துவப் பாடத்தின் பாடத்திட்டத்துடன் மட்டும் சுருங்கி விட்டன. இந்துக்களாகப் பிறந்தவர்களில் பெரும் பிரிவு, பௌத்தத் தத்துவத்தில் பகுத்தறிவு ரீதியான எதார்த்த விளக்கத்தைக் கண்டார்கள் –அந்தப் பௌத்தத் தத்துவம் கடவுள் இல்லை என்பதைத் தெளிவாக மறுக்கிறது; கடவுள் நம்மில் இருக்கிறார் என்கிறது; எனவே முழுமையான ஆன்ம விடுதலை கோட்பாடு மலர்கிறது.

       அண்ணல் டாக்டர் அம்பேத்கர், “சாதியை ஒழிக்கும் வழி” என்ற தனது நூலில் இந்து மதவாத சமூக முறைமைகளைக் கடுமையாக விமர்சித்த பிறகு இறுதியில், பிராமணிய ஆதிக்கத்தில் பல்லாண்டுகளாகத் துன்பப்பட்ட பெரும் தலித் சமூகத்திற்குச் சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான பாதையைக் காட்டி பௌத்தத்திற்கு மாறியது, வெறும் தற்செயல் உடன்நிகழ்வு அல்ல.

    அயோத்தியில் ராம் மந்திர் மாபெரும் தொடக்க விழா விரைவில் நடக்க இருப்பதைக் காண உள்ளோம். மதவாதப் பெரும்பான்மையினரைத் தாஜா செய்ய அல்லது ஜனரஞ்சகத்திற்காகப் பெரும் தொகையைச் செலவிட்டு, இராமர் கோவில் வளாகம் முக்கியச் சுற்றுலா மையமாக மாற்றப்பட உள்ளது; அது ஏற்கனவே  வைஷ்ணவ் தேவி ஆலயம் முதல் திருப்பதி வரையிலும் மற்றும் சோமநாத்திலிருந்து பூரி ஜகந்நாத் வரையிலும் அவ்வாறு செழித்து வருகிறது.

கொல்கத்தாவில் கீதை பாதை என்ற சமீபத்திய நிகழ்வில் மாபெரும் கூட்டம் கூடுவது, பெரும்பான்மையினரைத் தாஜா செய்வதைப் போன்ற இந்து ஒருமைப்பாட்டின் பிரகடனமும் ஆகும். இராமர் கோவில் உணர்ச்சியைத் தூண்டும் அம்சமாக வேலை செய்வதுபோல, இந்நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலும் காரணம்.

  நிகழ்வுகளை ஊடகங்கள் விரிவாகப் பிரச்சாரம் செய்வதாலும் பெருந்தொகை செலவிடப்படுவதாலும் அயோத்தி ராமர் கோவில் தொடக்க விழா உலகளாவிய பிரம்மாண்ட மெகா நிகழ்வாகப் போகிறது. ஆனால், டாக்டர் மேக்நாத் சாஹா போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் அறிவியல்

மற்றும் மதம் மீதான விமர்சனபூர்வ எழுத்துக்களின் சூழலில் வளர்க்கப்பட்ட காரணத்தால், அல்லது கோரா என்ற தலைப்பிலான இரவீந்திரநாத் தாகூரின் பிரதான இலக்கியப் படைப்பு என்பது போன்ற பல எழுத்துக்களில் குறைந்தபட்சம் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் குழந்தைகள் விரைவாகப் படிக்க் கூடிய சிறார் புத்தகமான சித்தார் பனாபஸ்” (சீதா காட்டிற்கு விரட்டப்பட்டார்) நூல்களின் சூழலில் வளர்க்கப்- பட்டதால், நாங்கள் விஞ்ஞானபூர்வ மனோபாவத்தை, வித்தியாசமாகச் சிந்திக்க, கேள்வி கேட்கும் மனங்களை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டோம்.

    [டாக்டர் மேக்நாத் சாஹா வங்காளத்தைச் சேர்ந்த இந்திய வானியல் விஞ்ஞானி. புகழ்பெற்ற கண்டுபிடிப்பான இவரது ‘சாஃஹா அயனியாக்கச் சமன்பாடு’, விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதியில் இயல்புகளை அறிய உதவுகிறது. வறுமை காரணமாக அவரது தந்தை அவரை வேலைக்கு அனுப்ப நினைத்தபோது, சாஃகாவின் பள்ளி ஆசிரியர்கள் தடுத்துச் சாஃகாவைப் பள்ளியில் தொடரச் செய்தனர். –கூடுதல் செய்தி இணைப்பு]

          அப்படி வளர்க்கப்பட்டதனால் எனது இதயம் சீதையைச் சென்றடைகிறது. சீதா எனக்கு ஒரு கதாநாயகியாக --தனது தூய்மையை நிரூபிக்க அக்னிப் பரிட்சையில் துன்பப்படவும், அதுவும் தாய்மைப் பேறில் கர்பிணியாக இருந்த நிலையிலும் கானகத்திற்கு விரட்டப்பட்ட கதாநாயகியாக-- நீடிக்கிறார். அற்புதமான அழகு மிளிரும் அயோத்தி நகருக்குத் திரும்ப வருமாறு சீதாப்
பிராட்டியை அழைத்தபோதும் வரமறுத்த அப்பெருமாட்டி முடிவெடுக்கும் தனது சொந்த மனதுடன் உறுதியாக இருந்தார். அயோத்திக்குத் திரும்புவதற்குப் பதிலாக அந்தக் கற்பின் கனலி, ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்ற புதுமைப் பெண்ணான எனது கதாநாயகி, தனது தாய் பூமி மாதா மடியில் அமைதி கொள்ளச் சென்று விட்டாள். எப்போதும் சொல்பேச்சிற்குக் கட்டுப்பட்டு அடங்கியே நடப்பது என்பதை மறுக்கும் அத்தகைய ஓர் உணர்வுடைய ஜீவனை இன்று நான் தேடுகிறேன்.

            நமது நாட்டின் புராதன நினைவுச் சின்னங்கள் சட்டத்திற்கு விரோதமாக, தலைவர்கள் கண் எதிரில், பாபர் மசூதி தகர்க்கப்பட்டதின் இடிபாடுகள் மீது புதிதாகக் கட்டப்பட்ட இராமர் கோவில் தொடக்க நாள் அன்று –எனது நெறிசார்ந்த தனிமை உணர்ச்சிக்கு ஆறுதல் தேடுவதாக– பெரும் ஊக்கஉணர்ச்சி மிகுந்த சீதைஎம்பிராட்டி மனதின் நினைவாய் நான் ஒரு மெழுகுவர்த்தி அல்லது தீபத்தை ஏற்றுவேன்.

--நன்றி : நியூஏஜ் (ஜன.21 –27)

--தமிழில்  : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்