Saturday 4 May 2024

எப்போதையும்விட இன்று மார்க்ஸ் கூடுதல் பொருத்தப்பாடு உடையவர்

நியூஏஜ் தலையங்கம் (மே 5 –11)

                                                          
       
எப்போதையும்விட இன்று மார்க்ஸ் கூடுதல் பொருத்தப்பாடு உடையவர்

          காரல் மார்க்ஸ் 1818 மே 5ம் நாள் ஜெர்மனியில் புருஷியாவின் ரைன் மாகாணத்தின் டிரையர் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். அவருக்கு முன், 1776ல், தொழிற்புரட்சி, இங்கிலாந்தில் ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி சக்தியுடன், தொடங்கியது. அறிவியலுடனும் நீராவியோடும் நவீனத்துவம் மட்டுமல்ல, முதலாளித்துவமும் நுழைந்தது. இப்பரிணாம மாற்றத்திற்குச் சாட்சியாக இருந்த மார்க்ஸ், அதன் இயங்கியலைக் கண்டறிந்தார். அதனைத் தியரி (கோட்பாடு) என்றழைத்த அவர், சமூகப் பொருளாதாரக் கட்டங்களை விளக்க விஞ்ஞானபூர்வ முறையாக அதனை முன்வைத்தார். இப்பரிணாம மாற்றத்தின் கட்டங்கள் நேர்கோட்டு முறையில்– நவீனத்துவத்தின் புதுமை, பழமையுடன் பாதுகாக்கப்பட்டதாக, எனவே  ஒருபோதும் திரும்ப மீண்டும் நிகழாததாக—அமைந்தன.

   மார்க்ஸ் ஐரோப்பாவின் மூன்று பெரிய தேசங்களில் நிலவிய நிலைமைகளை ஆழமாக ஆராய்ந்தார். அவற்றில் ஒன்றான பிரான்ஸ் தேசத்தில், சோஷலிசம் மக்களின் கனவாக இருந்தது. விஞ்ஞானமும் வர்க்க உறவுகளும் இனிதான் முதிர்ச்சி அடைய வேண்டியிருந்தது; எனவே சோஷலிசம் வெறும் கற்பனாவாதக் கனவாகவே நீடித்தது. 1789 ஏப்ரல் 14ல் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் விடுதலை என்ற முழக்கத்துடனும், பாரீஸில் மன்னரின் கோட்டையான பாஸ்டில் மீது தாக்குதலுடன் புரட்சி தொடங்கியது. ஆனால் இலட்சியத்தை அடைய முடியவில்லை. இரத்த வெள்ளத்தில் பிரான்ஸ் மிதந்ததுடன், மன்னர் மற்றும் ராஜ வம்சத்தினர் தலைகள் கிலட்டின் கொலைக் கருவியில் வெட்டப்பட்டன என்பது உண்மையாயினும், சமத்துவம் மற்றும் நீதிக்கான காலம் இன்னும் முதிர்ச்சி அடையாமல் இருந்தது.

            மனித வாழ்விற்கு மிகப் பொருத்தப்பாடு உடைய சமத்துவம் மற்றும் நீதி என்ற இரு வெளிப்பாடுகள் மீதான விஞ்ஞானபூர்வ பரிசீலனையை வழங்கிய மார்க்ஸ், இருப்பினும், நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாற்றம் இன்னும் முழுமை அடையவில்லை என்று கூறினார். பூர்ஷ்வாகளாலும் (நடுத்தர வர்க்கம்), விவசாயிகள் இணைந்து கொண்ட தொழிலாளர் வர்க்கத்தாலும் தொழிற்புரட்சி வழிநடத்தப்பட்டது; ஆனால் புரட்சிக்கான சூழல் இனிதான் முதிர்ச்சி அடைய வேண்டிய நிலையில் இருந்தது. பரிணாமத்தின் கட்டத்தைப் பரிசீலித்த மார்க்ஸ், ஒவ்வொரு கோட்பாடும் அதன் சந்தர்ப்பச் சூழலின் வழி மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என விளக்கினார்.  சமூகப் பொருளாதாரக் கட்டங்களின்படி விளக்கங்கள் மாறுபடும்; அக்கட்டங்கள் அப்போதைய வர்க்கங்கள், ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் குணாம்சத்தைச் சார்ந்து அமையும். அடுத்து, இந்த வர்க்கங்கள், உற்பத்தி முறை மீதான அடிப்படையில் அமையும்.

            பிரெஞ்சு புரட்சியைத் தலைமையேற்று நடத்திய விவசாயிகள் தங்களின் ஒரு துண்டு நிலத்தின் மீது ஆழமான பிடிப்பு கொண்டிருந்தனர், உண்மையில் அத்துண்டு நிலத்துடன் அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போன்றிருந்தனர். மாற்றத்திற்காக அவர்கள் நின்றனர், ஆனால் அவர்கள் உழன்ற அந்த நிலத்திலிருந்து ஒருபோதும் விட்டு விலகிச் செல்ல விரும்பவில்லை – உண்மையில் அந்நிலத்தின் மீது சொத்துரிமையும் அவர்களுக்கு இருந்தது இல்லை. நிலம் மன்னனின் சொத்தாகவும், நிலத்திற்கு விவசாயிகளால் செலுத்தப்பட வேண்டிய குத்தகையை வசூலிப்வர்களாக நிலப்பிரபுகளும் இருந்தனர். எதிர்த்துக் கிளர்ச்சி செய்த சக்திகளுடன் நடுத்தவர வர்க்கம் (பூர்ஷ்வாஸி) இணைந்து கொண்டு அவர்களை ஆதரித்தனர் -- ஆனால்,அந்த ஆதரவு நிலப்பிரபுத்துவச் சக்திகளை ஒழிப்பதற்குத்தானே தவிர, சுரண்டலுக்கு முடிவு கட்ட அல்ல.

            ஒவ்வொன்றும் அதன் சொந்த வர்க்க நலனைக் கொண்டிருந்தன, எனவே நீதியும் இல்லை, அடிமை சங்கிலிகளிலிருந்து விடுதலையும் இல்லை. சமத்துவம் என்ற கேள்வியே எழவில்லை. மார்க்ஸ் அதன் வர்க்க குணத்தை விஞ்ஞானபூர்வமாகச் சுட்டும் முழக்கங்களை முன் வைத்தார். சமூகம், இரண்டு வர்க்கங்களின் ஒன்றுபடுதல் மற்றும் போராடுதல் (யூனிட்டி அண்டு ஸ்ட்ரகிள்) காரணமாக, முன்னோக்கி நகர்வதை மார்க்ஸ் கண்டறிந்தார். ஒன்றாக அவர்கள் சமூகத்தைக் கட்டமைப்பதுடன், அவ்வர்க்கங்கள் ஒவ்வொன்றும் வர்க்கப் போராட்டத்தில் அவர்களின் நிலைக்கு ஏற்றபடி, தங்களை நிறுத்துகின்றன. தொடரும் இந்நிகழ்முறை ஓர் இறுதி முடிவுக்கு வந்து, “தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி” எனத் தொகுத்துக் கூறுவது இயங்கியல் (டைலெக்டிகல்) விளக்கமாகும். எனினும் இயங்கியல் தொடர்கிறது மற்றும் மாற்றமும் தொடர்கிறது. (Together they built up the society placing each one according to their position in the class struggle. It was dialectical interpretation that arrived at a conclusion summing up the process in “the rule of the working class”, though dialectics continues and so does the change.)

          பிரெஞ்சு (புரட்சியின்) முழக்கத்தை விமர்சனம் செய்தவராக மார்க்ஸ் இருந்தார். உண்மையில் இத்தகைய அனைத்து மனிதநேய முழக்கங்களையும் அவர் விமர்சித்தார், ஏனெனில் இவற்றில் எதுவொன்றும் அடிப்படை வர்க்கப் பார்வை அம்சத்தை விளக்குவதாக இல்லை. சமத்துவம், விடுதலை, சகோதரத்துவம் என்ற கோரிக்கைகளை வர்க்கப் பார்வையிலிருந்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும். (யாருக்குச் சமத்துவம், யாரிடமிருந்து விடுதலை, யாருடன் சகோதரத்துவம் என்ற கேள்வி அந்த முழக்கங்களில் விளக்கப்படாமல் உள்ளனவே.) இந்த எதார்த்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மார்க்ஸ் மட்டுமே –அவர்தான் முதன்முறையாக வர்க்கப் போராடடத்தின் இந்த முழுமையான நிகழ்முறையில் அதன் அனைத்து வரலாற்றுத் தன்மையுடனும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

முதலாளித்துவத்தின் நெருக்கடி

    அடிப்படைகளைப் பரிசீலித்து ஆராயும்போது மார்க்ஸ் முதலாளித்துவத்தின் வட்டச் சூழற்சி நெருக்கடியையும்கூட (சைக்ளிக் க்ரைசிஸ்) கண்டறிந்தார். உற்பத்தி கட்டம் கட்டமாக நகர்கிறது. அது வளர்கிறது, விரிவடைகிறது மற்றும் பின்னர் பீடபூமி என உயர் சமதளத்தை அடைகிறது. அதன் பிறகு கீழ் நோக்கிப் பயணிக்கும் சரிவு தொடங்குகிறது. அங்கிருந்து. மெல்ல எனினும், உற்பத்தி  மீட்சி அடைகிறது. இதுபோல அந்தச் சுழற்சியின் வட்டம் தொடர்கிறது. இந்நிகழ்முறை கட்டங்களின் ஆழத்திற்குச் செல்லும்போது மார்க்ஸ் யூக வணிகம், பொய்யான மூலதனம் குறித்து எழுதியுள்ளார்; மேலும் அவர் மூலதனக் குவிப்பு நிகழ்முறையைக் கண்டுபிடித்தார்.

    உற்பத்தியிலிருந்து பணத்தைப் பெருக்குவதற்குப் பதிலாக, பணத்திலிருந்து பணத்தைச் செய்யும் போக்கையும்கூட அவர் கண்டுபிடித்தார். பணம் அல்லது மூலதனம் பங்கு மார்க்கெட்டுக்கும், யூக வணகத்திற்கும் செல்லத் தொடங்குவது, உற்பத்தி சாராத ஒரு நடவடிக்கை. (அதன் மூலம் பண்டங்கள் உற்பத்தியாக்கப்படுவதில்லை). முதலாளித்துவ நெருக்கடி தருணங்களில் யூகம் உயர்கிறது. ஓர் உதாரணம் கோவிட் பெருந்தொற்று நாள்களின்போது எழுந்த துன்பமயமான நிகழ்வுப் போக்குகள். கொன்றழித்த அந்நோயின் பிடியில் மக்கள் உழன்று மடிந்து கொண்டிருந்தபோதும், பிணங்கள் புதர்களிலும் ஆற்றோரங்களிலும் வீசி எறியப்பட்டபோதும், யூக வணிகம் அதன் உச்சத்தில் இருந்தது. தகவல் அறிக்கைகளின்படி இந்தக் காலக் கட்டத்தில் அம்பானிகள் 36 சதவீதத்திற்கும் அதிகமான உபரி மதிப்புச் செல்வத்தை ஈட்டினர்.

      முன்பு எப்போதையும்விட இன்று மார்க்ஸ் மேலும் பொருத்தப்பாடு உடையவர். அவர் மூலமாகத்தான் நாம் நமது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம்.

தன்னலம் மிக்க ஏகோபோக மூலதனத்தின் நலன்களுக்கு எதிராக நாம் நமது தனிநபர் உரிமைகள், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடி வருகிறோம். ஒவ்வொரு சமூகப் பொருளாதார அமைப்புக்கான (ஃபார்மேஷன்) அடிப்படையாகத் திகழ்வது உற்பத்தி முறைதான் என்பதை (mode of production) மார்க்ஸ்தான் கண்டறிந்தார். ஒரு சமூகத்தின் (அரசியல், சட்டங்கள், நீதிநெறி, சமயம், தத்துவம் முதலிய) முழுமையான மேற்கட்டுமானத்தின் குணாம்சம், அதன் (உற்பத்தி சக்திகள், உற்பத்திச் சாதனங்கள்,  மற்றும் உற்பத்தி உறவு முதலான) அடித்தளக் கட்டுமானத்தின்படி மட்டுமே முடிவு செய்யப்- படுகிறது என்பதை மார்க்ஸ் கண்டார். சமூகத்தின் பரிணாமம், உற்பத்தி முறை பரிணாமத்தின் அடிப்படையிலேயே அமைகிறது; மேலும், உழைப்பு மற்றும் மொழியும்கூட மனிதகுலத்தை உண்டாக்குகிறது.

மார்க்சுக்கு முன்பு, உற்பத்தி நிகழ்முறையில் தேவையான அனைத்து மூன்று அம்சங்களும் மூலப் பொருட்கள், கருவிகள் மற்றும் உழைப்பைச் செலுத்தும் தொழிலாளி என்பதாக இருந்தது. தொழிலாளி மற்ற அம்சங்களைப் போல குறிப்பிடப்பட்டதே தவிர, உயிருள்ள மனித ஜீவனாக அல்ல. மார்க்ஸ்தான் முதன் முறையாக உற்பத்தியில் மனிதப் பங்கேற்பை அடையாளம் கண்டார். அவர்களை அவர் தொழிலாளி என்று அழைத்தது மட்டுமல்ல, அவர்களை ஒரு வர்க்கமாக அடையாளப்படுத்தினார். உழைப்பை நல்கும் தொழிலாளியைச் சுரண்டுவதே எப்போதும் சமூகத்தை மேலும் (மேல் நோக்கிச்) செலுத்துகிறது. அது சமூகப் பொருளாதார கட்டமைப்பின் அனைத்துக் கட்டங்களிலும் உள்ளது எனினும் முதலாளித்துவத்தின்தான் அடையாளம் காணப்பட்டது.

மார்க்ஸ், மூலதனக் குவிப்பையும், பணத்திற்காகப் பணம் என்ற கட்டத்தையும் அடையாளம் கண்டார். லெனினுக்கு ஏகாதிபத்தியத்தை அடையாளம் காண அவர், அதற்கான சூழலை உருவாக்கித் தந்தார். ஏகாதிபத்தியத்தில் ஆலைத் தொழில்துறை மூலதனமும் வங்கி மூலதனமும் ஒன்றாக இணைந்து நிதி மூலதனத்திற்கான (ஃபைனாஸ் கேபிடல்) சூழலைத் தயாரிக்கிறது. மார்க்ஸ் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி, அவரது பொருள்முதல் வாதத் தத்துவம், இயங்கியலை அடிப்படையாகக் கொண்டது. உலகத்தின் பௌதீகக் குணத்தை அவர் நிறுவினார், உலகின் பௌதீகமான பொருள் எப்போதும் மாற்றம் பெறும் முறையிலேயே உள்ளது. பௌதீகமான இந்த உலகில் எதுவுமே இறுதியானது அல்ல, இயக்கம் (மோஷன்)  ஒன்றைத் தவிர; அந்த இயக்கம்தான் மாற்றம். நகரும் / மாறும் இந்த இயக்கம், ஒன்றுபடுதல் மற்றும் மோதல் என இரண்டுடன், இயக்கவியல் தன்மை உள்ளது.

காரல் மார்க்ஸ் நெடிதுயர்ந்த தத்துவவாதி, அறிவியலாளர் மற்றும் முன்னத்தி சிந்தனையாளர். அவர், தொழிலாளி வர்க்கத் தலைமையிலேயே, வர்க்கப் பகைமையற்ற சமூகத்தை, இனிவரும் (பொன்னுலகான) சமூகமாகக் கணித்து உரைத்துள்ளார்.

அடிமை சங்கிலி அறுத்து அந்தப் பொன்னுலகு பொது உடைமை சமூகத்தைப் படைக்க, மார்க்ஸிய தத்துவம் துணை கொண்டு பாடுபட, மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5ல் சபதமேற்போம்! 

‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

 போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!

 பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்!

 புனிதமோடு அதைஎங்கள் உயிரென்று காப்போம்!’

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்