Tuesday 22 February 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 58 -- பூபேஷ் குப்தா

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 58



பூபேஷ் குப்தா – தலைச் சிறந்த பாராளுமன்ற ஆளுமை,

கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்

--அனில் ரஜீம்வாலே

நன்றி : நியூஏஜ் (ஜன.23 --29)

            பூபேஷ் குப்தா இந்திய நாடாளுமன்றத்தின் ‘புயல் கடற்பறவை’, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒளிரும் அரிய நட்சத்திரம், ஆகச் சிறந்த சொற்பொழிவாளர். கிழக்கு வங்கத்தின் (தற்போதைய பங்களாதேஷ்) மைமென்சிங் மாவட்ட இட்னா என்ற ஊரில் 1914 அக்டோபர் 20ம் நாள் பிறந்தார். அவருடைய தந்தை ஸ்ரீ மகேஷ் சந்திர குப்தா பணக்கார பெருநிலக்கிழார். செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் அது குறித்து அக்கறைப்படாது 16 வயதிலேயே தேசிய இயக்கத்தில் குதித்தவர், பின்னர் ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாது வாழ்நாள் முழுவதும் தேச சேவை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நன்மை என்ற ஒரே திட சிந்தனை அர்ப்பணிப்புடன் ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

            இளமையில் படிக்கும் காலம் முழுமையும் பூபேஷ் புத்திசாலி மாணவராகக் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜ் (சுவாமி விவேகானந்தர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள்) மற்றும் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் கல்வி கற்றார். தனது எஃப்.ஏ., மற்றும் பி.ஏ., தேர்வுகளைப் பெஹ்ராம்பூர் தடுப்பு முகாமிலிருந்து சிறப்புத் தகுதியுடன் தேர்வானார். பெஹ்ராம்பூர் முகாமின் ஒரே அறையில், சிபிஐ கட்சியைப் பீகாரில் நிறுவியவரான சுனில் முகர்ஜியுடன் ஒன்றாய், அவர் நான்கு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.

புரட்சிகர இயக்கங்களிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்

            விரைவில் பூபேஷ் தேசியப் புரட்சியாளர்களின் மேஜிக் வட்டத்திற்குள் ஈர்க்கப்பட்டு சுரேந்திர மோகன் ஹோஷ் தலைமையிலான அனுஷீலன் (ஆயுதப்) புரட்சிக் குழுவில் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். 1930, 31 மற்றும் 1933ம் ஆண்டுகளில் பலமுறை கைதாகி 1937வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு மார்க்ஸியத் தத்துவக் கோட்பாடுகளுடன் அறிமுகம் ஏற்பட்டது.

          அவருடைய தந்தையோ அரசியலிலிருந்து அவர் விலகியிருக்க விரும்பினார். எனவே மேல் படிப்புக்காகப் பூபேஷை இங்கிலாந்து அனுப்பும்படி அரசுக்குக் கடிதம் எழுதினார்; அரசும் அதனை ஏற்க பூபேஷ் சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். சட்டக் கல்விக்கான இங்கிலாந்தின் நான்கு அமைப்புகளில் ஒன்றான லண்டன் மிடில் டெம்பிளிலிருந்து அவர் அழைக்கப்பட்டார். (பாரிஸ்டர்களாக இங்கிலாந்து பார் கவுன்சிலிலுக்குத் தங்கள் உறுப்பினர்களைப்  அழைக்க உரிமைபெற்ற The Honourable Society of the Middle Temple தவிர மற்ற மூன்று அமைப்புகள் இன்னர் டெம்பிள், கிரேஸ் இன் மற்றும் லிங்கன்ஸ் இன்)

            ஆனால் இங்கிலாந்தில் அவருக்குக் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) மற்றும் மாணவர் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட கம்யூனிஸ்டாக மாறினார். இந்தியக் கம்யூனிஸ்ட்கள் உள்பட மிகப் பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட்களை அங்கே அவர் சந்தித்தார். 1941ல் இந்தியா திரும்பிய பூபேஷ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகத் தன்னை அர்ப்பணித்தார். தொடக்கத்தில் சிபிஐ தலைமறைவுத் தலைமையகத்தில் பணியாற்றினார். 1941ல் நிறுவப்பட்ட “சோவியத் யூனியன் நண்பர்கள்” (FSU) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக அவர் விளங்கினார்.

1943ல் வங்கத்தின் பெரும் பஞ்சத்தின்போது ‘ஜன ரக்க்ஷ சமிதி’ (மக்கள் பாதுகாப்புச் சபை) அமைப்பின் உறுப்பினராக பூபேஷ் ஏராளமான பெரும் பணிகளை ஆற்றினார். ‘மக்கள் நிவாரணக் கமிட்டி’யின் நிறுவனராகவும் இருந்தார். 1946ல் குற்றம் சாட்டப்பட்ட தேபகா விவசாயிகளுக்கு ஆதரவாக வாதாடினார். இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் 1946ல் கட்டாய நடுவர் தீர்ப்பு விசாரணையில் டெல்கோ உட்பட ஜாம்ஷெட்பூர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் வாதாடினார்.

பிடிஆர் காலத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் பூபேஷ்

            கட்சிக்குப் பெரும் சேதத்தை விளைவித்த 1948 –50களில் பிடிஆர்-இன் (படத்தில் பாலச்சந்திர திரியம்பக் ரணதிவே) இடதுசாரி குழுவாதச் சாகசப் போக்கு பாதையின்போது பூபேஷ் தலைமறைவாகச் சென்றார்.

            1947ல் சிபிஐ-யின் மேற்கு வங்க மாகாணக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951ல் கட்சி வங்காளமொழி தினசரியான ‘ஸ்வாதின்தா’ (சுதந்திரம்) ஆசிரியர் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அரசு சிபிஐ கட்சியைச் சட்டவிரோதம் என அறிவித்ததால் 1951ல் கைது செய்யப்பட்ட அவர் 1952 ஏப்ரல் வரை சிறையில் இருந்தார்.

            தேர்தலில் போட்டியிடுவது எனக் கட்சி முடிவெடுத்த பிறகு மாநிலங்கள் அவைக்கு அவர் 1952ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து அவர் மறையும்வரை நீண்டகாலம் அந்த அவையின் உறுப்பினராக அவர் சேவையாற்றினார். 1977 ஜூன் 22 அன்று மக்களவையின் (ராஜ்ய சபா) வெள்ளிவிழா மற்றும் அந்த அவையின் 100வது கூட்டத் தொடரில் பூபேஷ் குப்தா தனித்துவமாகப் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்.

           

அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் (AIPSO) மற்றும் சமாதான இயக்கத்தில் அவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். 1979ல் இனவாதம் மற்றும் இனஒதுக்கல் குறித்து அவர் ஆற்றிய அற்புதமான சொற்பொழிவுக்குப் பிறகு கிங்ஸ்டன், ஜமைக்கா போன்ற நகர்களின் நாளிதழ்கள் அவரைக் காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டின் கதாநாயகன் என்று புகழ்ந்து கொண்டாடின.

கட்சியில் வகித்த பொறுப்புகள்

            1953 –54ல் மதுரையில் நடைபெற்ற மூன்றாவது கட்சி காங்கிரசில் பூபேஷ் குப்தா சிபிஐ மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 பாலகாட் காங்கிரசில் முதன் முறையாக அவர் பொலிட் பீரோவுக்குத் தேர்வானார். 1958 அமிர்தசரஸ் மாநாட்டில் கட்சி அமைப்பு மாற்றியமைக்கப்பட்ட பிறகு மத்திய செயலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூபேஷ் 1981ல் அவர் மறையும்வரை அப்பொறுப்பை வகித்தார்.

            1954 முதல் 1957 வரையிலும் மற்றும் 1966லிருந்து அவர் மரணமடைந்த 1981வரை கட்சியின் நியூஏஜ்’ இதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் நியூஏஜ் இதழுக்கான அவரது தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளை 1937ல் இங்கிலாந்திலிருந்து அவர் வாங்கி வந்த அக்காலகட்டத்தின் ரெமிங்டன் டைப்ரைட்டரில் டைப் அடிப்பார். (ராஜ்யசபையில் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் கே சி பந்த், “சொத்துரிமை குறித்துப் பூபேஷ் குப்தா அக்கறைப்படுவதில் நான் மகிழ்கிறேன்”

என்று கூறியபோது, சுவரில் எறிந்த பந்தாக பூபேஷ் பதிலளித்தார்: “உண்மைதான், என்னிடம் சொத்து இருக்கிறது. நான் வைத்திருக்கும் டைப்ரைட்டர்தான் எனது விலை உயர்ந்த சொத்து” என்றார் (–தி ஹவுஸ் லாப்ஸ், ராஜ்ய சபாவில் அறிவார்ந்த நகைச்சுவையும் சிரிப்பும் என்ற தொகுப்பிலிருந்து). 1981 ஜூலையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி தீர்மானத்தின் மீது மாஸ்கோவிலிருந்து அவர் எழுதிய கட்டுரை, இறுதிக் கட்டுரையானது. இந்தத் தீர்மானத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, ‘கலாச்சாரப் புரட்சி’ என அழைக்கப்பட்ட சீனாவில் நடந்த நிகழ்வை விமர்சனம் செய்து, அந்த அழிவுக்கு மாவோதான் பொறுப்பு எனக் கூறியது.

            சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி)யிடமிருந்து மாவோயிசத் தத்துவார்த்த மற்றும் அரசியல் தாக்குதல் நடைபெற்ற நாட்களிலும் அதைத் தொடர்ந்து 1964ல் சிபிஐ கட்சி பிளவின்போதும் பூபேஷ் குப்தா பிளவைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆகச் சிறந்த முயற்சிகளைச் செய்தார்; பிளவிற்குப் பிறகும் மீண்டும் ஒன்றுபடுவதற்கானத் தீர்வுகளைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம்

            பூபேஷ் குப்தா மிக உறுதியான சர்வதேசியவாதி மற்றும் இனஒதுக்கல் (‘அபார்தீட்’ என்றால் ஆப்ரிகான்ஸ் மொழியில் ‘பிரிவினை ஆட்சி’ – கறுப்பின மக்களுக்கு எதிரான வெள்ளையர் ஆட்சி) எதிர்த்துத் தளர்வின்றிப் போர்புரிந்த போராளி. 1957ல் (ருமேனியா நாட்டின் தலைநகரான) புகாரெஸ்ட் நகரில் சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கான தயாரிப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 1957, 1960 மற்றும் 1969 மாநாடுகளில் சிபிஐ பிரதிநிதிகள் குழு உறுப்பிராக அவர் பங்கேற்றார்.  சிபிஐ பொதுச் செயலாளர் அஜாய் கோஷ் தலைமையில் 1959ல் பீக்கிங் சென்ற சிபிஐ பிரதிநிதிகள் குழுவிலும் இடம் பெற்று மா சே துங் அவர்களைச் சந்தித்தார். உலகச் சமாதானக் கவுன்சிலில் பூபேஷ் குப்தா தீவிரமாக ஈடுபட்டார். உண்மையில், அவர் இறுதியாகக் கலந்து கொண்டது 1981 டெமாஸ்கஸ் நகரில் சிரியா மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) உடன் ஒருமைப்பாட்டிற்கான சர்வதேச மாநாட்டில்தான்.

சீன ஆக்கிரமிப்புக்குக் கண்டனம்

            தேசபக்தியின் ஆகச் சிறந்த வடிவம் கம்யூனிசம் என்பதைப் பூபேஷ்’தா (வங்காள மொழியில் ஜி போன்ற மரியாதைப் பின்னொட்டு) எடுத்துக் காட்டினார். 1962ல் சீன ஆக்கிரமிப்பின்போது ராஜ்யசபாவில் இந்தியப் பாதுகாப்பு மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை கொழுந்துவிட்டு எரியும் அவரது தேசபக்த உணர்வுக்கு மிகச் சிறந்த நிரூபணம். “இந்நாட்டின் பாதுகாப்பை எதிர்க்கும் அல்லது நிகழ்ந்துள்ள ஆக்கிரமிப்புக்குப் பரிவுகாட்டும் எந்தவொரு தொழிற்சங்கத் தலைவர் அல்லது கம்யூனிஸ்டையும் நான் அறியேன் என இம்மாமன்றத்திலிருந்து நான் பிரகடனம் செய்கிறேன். அப்படி யாரேனும் இருந்தால்… தீர்மானத்திற்கும் நாட்டின் தேசபக்த நிலைக்கும் எதிராகச் சென்றால்…அப்படிப்பட்ட நபரின் செயல் ஏற்கமுடியாத ஒன்று, அவர் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இயக்கத்திலிருந்து தன்னையே வெளியே நிறுத்திக் கொள்கிறார்…” என்று உறுதிபட அவர் பிரகடனம் செய்தார்.

            தேசபக்தி மற்றும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியத்தின் மார்க்சிய அடிப்படையிலான ஒருமைப்பாட்டின் அடையாளமாக அவர் விளங்கினார்.

கிராமப்புறத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டவர்

            பூபேஷ் குப்தா சமூகத்தின் எளிய பிரிவினராகிய அரிஜனங்கள், ஆதிவாசிகள் பண்ணைத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பிற மக்களுக்காகப் பாடுபட்டவர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தியவர். பஞ்சாப், மோகாவில் 1968ல் பாரதிய விவசாயத் தொழிலாளர் சங்கம் (பிகேஎம்யு, பாரதிய கெந்த் மஸ்தூர் சங்கம்) அமைக்கப்பட்டபோது பெரிதும் மகிழ்ந்தார். தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நடைபெற்ற பிகேஎம்யு அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் பூபேஷ் தொடக்க உரை ஆற்றினார். (மெட்ராஸ் மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்ற வேண்டும் என பூபேஷ் குப்தா மாநிலங்கள் அவையில் 1963ல் தனிநபர் மசோதா கொண்டுவந்ததைத் தமிழ்நாட்டின் மக்கள் என்றென்றும் நன்றியோடு நினைவு கொள்வர்.)

            குறைந்தபட்சக் கூலி சட்டத்தைக் கறாராக அமல்படுத்தல், முறையான வேலைவாய்ப்பு மற்றும் எளிய பிரிவினர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பணிநிலைகளை மேம்படுத்துவதற்காகவும் சட்டமியற்றல் முதலிய கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார் (ராஜ்யசபா விவாதங்கள், 1962 டிசம்பர் 6.) விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வை முன்னேற்றாமல் கிராமப்புற மேம்பாடு எனப் பேசுவதெல்லாம் பயன்தராது என அவர் அழுத்தமாக எடுத்துரைத்தார்.

பெண்களுக்காகப் பாடுபட்டவர்

            1975ல் சர்வதேசப் பெண்கள் ஆண்டு தொடங்கியபோது நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உணர்ச்சி பொங்கும் உரையில் அவர் அரசைப் பார்த்து, “பெரும் எண்ணிக்கையிலான பெண்களின் சமூக அந்தஸ்தையும் வாழ்வியல் நிலைமையையும் முன்னேற்ற ஆக்கபூர்வமான உறுதியான நடவடிக்கைகள் எடுங்கள், கொண்டாட்டங்களில் மட்டும் மூழ்கிவிடாதீர்கள்” என இடித்துரைத்தார். (ராஜ்யசபா விவாதங்கள், 1975 மே 13). அந்த உரையில் அவர், “பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் ஒரு குழுவின் விடுதலை அல்ல. முக்கியமாக அது பெண்குலத்தின் விடுதலை பிரச்சனை … அதுவே அடித்தளமானது என்பதால் இறுதியில் நமது ஒட்டுமொத்தச் சமூக வாழ்வின் விடுதலை பிரச்சனையுமாகும்!” என மேலும் தெரிவித்தார்.

மதச்சார்பின்மை மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்து

            தேசிய ஒருமைப்பாடு குறித்த சிபிஐ மத்திய செயற்குழுவின் துணைக் கமிட்டிக்குப் பூபேஷ் பொறுப்பாளராக இருந்தார். தேசிய ஒருமைப்பாடு நிகழ்முறைக்கு மிகப் பெரிய தடங்கலாக இருப்பது அரிஜனங்களுக்கு எதிரான பாரபட்சமே என அவர் கருதினார். பூபேஷ்  சாத்தியமான ஒவ்வொரு அரங்கத்திலும் நமது நாட்டின் மதசார்பற்ற ஜனநாயக அமைப்பு முறையைப் பாதுகாக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தவும் சக்திமிக்க தனது குரலை உயர்த்தினார்.

            தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் சுமார் 15 ஆண்டுகள் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய பேச்சாளராக விளங்கினார். நமது நாடு நாகரீகம் அடைந்த மற்றும் முற்போக்கு பார்வை கொண்ட சமூகமாகத் தொடர்ந்து நீடித்திட வகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டம் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார். அத்தகைய வகுப்புவாதச் சக்திகளின் தீயநோக்கமுடைய திட்டங்களை முறியடித்திடவும் மதசார்பற்ற நமது நாட்டின் அமைப்பைப் பாதுகாக்கவும் அவர் உறுதியான ஆக்கபூர்வமான யோசனைகளை மிக கவனமாகத் தீட்டி தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டங்களில் முன்வைத்தார். 1968 ஜூன் மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒருமைப்பாட்டு கவுன்சிலில் முக்கியமான ஒரு யோசனையைக் கூறினார்: அமைதியற்ற கலவரப் பகுதிகளில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தினர் எந்த ஒரு அலுவலர் மீதும் நம்பிக்கை குறைவு ஏற்பட்டால், முதல் முகாந்திரத்திலேயே அந்த அலுவலரை உடனடியாக மாற்ற வேண்டும். எந்தவொரு பகுதியிலும் மதம் மற்றும் வகுப்பு அமைதி சீர்குலைந்தால், அப்பகுதியின் அனைத்து அதிகாரிகளும் பொறுப்பாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆற்றல்மிக்க எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்

            ஆங்கிலத்தில் அவர் எழுதிய எட்டு நூல்கள் அவரது பெருமை பேசும்: 1) விடுதலையும் இரண்டாவது முன்னணியும் 2) டெரர் ஓவர் பெங்கால் 3) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் – ஒரு விமர்சனம் 4) பெரும் கொள்ளை: இந்தியாவில் வெளிநாட்டுச் சுரண்டல் பற்றிய ஆய்வு 5) ஏன் இந்த உணவு நெருக்கடி 6) காமன்வெல்த்தை விட்டு வெளியேறு 7) இந்தியாவும் வியட்நாமின் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பும்; மற்றும் 8) Right reaction’s bid for power (வலது பிற்போக்குகளின் அதிகாரம் கோரல்). வங்காள மொழியிலும் பூபேஷ்‘தா சில நூல்களை எழுதியுள்ளார்; அவற்றில் உதாரணத்திற்கு : 1) Nehru Sarkarer Swarup (நேரு அரசின் சொரூபம்) 2) Pak-Markin Samarik Chukti 0 Markin Samrajyabad (பாக்கிஸ்தான் –அமெரிக்கா இராணுவ உடன்பாடும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்) 3) Kala Kanuner Rajatva (கறுப்புச் சட்டத்தின் ஆட்சி). இந்நூல்கள் அவரது அறிவார்ந்த ஞானத்தின் உயரத்திற்கு விரிவான சாட்சியமளிக்கின்றன.

            மேலோர்கள் அவை எனப்படும் மாநிலங்களவை மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக எப்போதும் “துடிப்பானதாகவும் ஜீவன் ததும்பும் அமைப்பாக”வும் விளங்க வேண்டும் என பூபேஷ் வலியுறுத்துவார். உதாரணத்திற்கு அமெரிக்க அரசு பாக்கிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மீண்டும் தொடங்க உள்ளது பற்றிய ராஜ்யசபா விவாதத்தின்போது பூபேஷ் குப்தா மிகச் சரியாக விமர்சனம் செய்தார்: ”நமது பிராந்தியத்தில் இன்று அமெரிக்கா இராணுவசக்தியின் புதிய அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தவும் அதற்காக பாக்கிஸ்தானை இராணுவத் தளமாகப் பயன்படுத்தவும் விரும்புகிறது என்பது தெளிவு. எனவே இதனைப் பாக்கிஸ்தான் நாடுதான்  ஆயுதப் போட்டியில் ஆர்வம் கொண்டிருக்கிறது, அமெரிக்காவுக்கு அந்த ஆர்வமெல்லாம் இல்லை, வெறுமே ஆயுதத்தை அமெரிக்கா விற்க மட்டுமே செய்கிறது என எடுத்துக் கொண்டுவிடக் கூடாது. …. இந்தியாவை மிரட்டினால் மட்டுமே, முடக்கி, தொல்லை கொடுத்து அச்சுறுத்திப் பணிய வைக்காதவரை – தெற்காசியாவின் இந்தப் பிராந்தியத்தில் தாங்கள் செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை என்பதை அமெரிக்கா ஏகாதிபத்தியம் நன்கு அறியும். அதன் காரணமாகவே அவர்கள் நம்மைத் தனியாகக் குறிவைக்கிறார்கள், பாக்கிஸ்தானுக்கு மீண்டும் ஆயுதங்களை வழங்குகிறார்கள்” (காண்க: ராஜ்ய சபாவில் பூபேஷ் குப்தா, ராஜ்ய சபா விவாதங்கள், 1975 மார்ச் 10).

            அவர் அடிக்கடி கிண்டலும் கேலியுமாகப் பேசுவார், ஆனால் ஒருபோதும் எவரையும் தரம் தாழ்த்திக் கொச்சையாகப் பேசியதில்லை; அவரது வாதங்களில் அறிவு மிளிரும் ஆனால் பணிவு இருக்கும்; மக்களின் நலவாழ்வு குறித்த கேள்விகள் எழும்போது அவரது வாதங்களில் அவரே அனுபவித்து ஆர்வமாக ஈடுபடுவார். பூபேஷ் குப்தா, பாடுபடும் லட்சோப லட்சம் மக்களின் கதாநாயகத் தலைவர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் மாபெரும் ஆதரவாளர்.

நாடாளுமன்ற நிபுணர், பூபேஷ்

            நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளில் பாண்டித்யம் பெற்ற அவர் ஆளும் தரப்பின் சிறிய தவறு, குறைபாட்டையும் பொறுத்துக்கொள்ள மாட்டார். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கண்ணியம் மற்றும் மேன்மையைத் தவிர வேறு எதுவும் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் உடையதில்லை. நாடாளுமன்றச் செயல்பாடுகளின் நுட்பத்தில் நிபுணரான பூபேஷ் குப்தா, அது வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவார்; கவன ஈர்ப்பு (பொது முக்கியத்துமுடைய பிரச்சனையின் மீது அமைச்சரின் பதிலைப் பெறுவதற்காகக் கவனத்தை ஈர்த்தல்), ஸ்பெஷல் மென்ஷன் (பொது முக்கியத்துமுடைய பிரச்சனையின் மீது அவையில் 250 வார்த்தைகளுக்கும் மிகாது ‘சிறப்புக் குறிப்பை’ப் படிக்கும் உரிமை), குறுகிய காலக் கேள்விகளை எழுப்புதல், அரை மணிநேர விவாதம் முதலியவற்றைப் பயன்படுத்தி அவர் தனது கருத்தை அவையினருக்கு விளக்குவார். மேலும், வெளியுறவுக் கொள்கை, குடியரசுத் தலைவர் உரை, நிதி மசோதா, நிதிஒதுக்கீடு மசோதா மற்றும் அமைச்சகங்களின் செயல்பாடு மீது விவாதம் முதலானவற்றைப் பயன்படுத்தி உறுதியான வாதங்களைப் பின்னி மிக அற்புதமான உரைகளை நிகழ்த்துவார்.

சில உதாரணம்

          அதை விளக்க ஒரு நிகழ்வு : 1954 ஏப்ரல்22ல் மாநிலங்களவையில் பிரதமர் ஜவகர்லால் நேரு, “எந்த அயல்நாட்டுப் படையையும் நம் தேசத்தைக் கடந்து செல்ல அல்லது இந்தியாவின் மீது பறந்து செல்ல அனுமதிப்பதில்லை என்பதே கடந்த ஆறு ஆண்டுகளாக அரசின் கொள்கையாக உள்ளது” என்று குறிப்பிட்டார். அப்போது ஒரு நாளிதழின் செய்தியைப் பூபேஷ் குப்தாதான் அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அந்தச் செய்தி, “1954 ஏப்ரல் 24ல் ‘குலோப் மாஸ்டர்’ என்ற அமெரிக்க விமானம் பிரெஞ்ச் படைகளை இந்தோ சீனாவிற்கு ஏற்றிக் கொண்டு டம் டம் விமான நிலையத்தில் இறங்கி விமான எரிபொருள் நிரப்பிக் கொண்டு பிறகு சென்றது” என்று தெரிவித்தது.

பூபேஷ் மேலும் ஒரு செய்தியை மேற்கோள் காட்டினார்: “1954 ஏப்ரல் 27ல் பிரெஞ்ச் விமானப் படையைச் சேர்ந்த ‘ஸ்கை-மாஸ்டர்’ விமானம் கல்கத்தாவில் தரை இறங்கி அதன் 36 பிரெஞ்ச் இராணுவ வீரர்கள் கிராண்டு ஹோட்டலின் அறை எண்கள் 315, 320, 466 மற்றும் 490களில் சிலமணிநேரம் வசித்து விடியற்காலையின் 3.30 மணி அளவில் அவர்கள் சென்றனர்” என்று குறிப்பிட்டது. நண்பர்கள், எதிரிகளென வேறுபாடின்றி ஒருவர் போல ஒவ்வொருவரும் பூபேஷ் குப்தாவை நிபுணத்துவம் மிக்க பாராளுமன்றவாதியாக, அவரது தனித்த குணங்களைப் புகழ்ந்தனர். மிகச் சரியாக அவரை ராஜ்ய சபாவின் ‘புயல் கடற்பறவை’ எனக் குறிப்பிட்டனர்.

மறைவு

            மாஸ்கோவின் சென்ட்ரல் கிளினிகல் மருத்துவமனையில் ஜூன் மாத இறுதியில் பூபேஷ் குப்தா அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட கேன்சருக்காக 1981 ஜூலை 29ல் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பிறகு தேறிவந்த அவர் கடுமையான மாரடைப்புக் காரணமாக 1981 ஆகஸ்ட் 6ம் நாள் மாஸ்கோவில் இயற்கை எய்தினார்.

      
அவர் மறைவுச் செய்தி கேட்டுப்
பிரதமர் திருமதி இந்திரா காந்தி “…தோழர் பூபேஷ் குப்தா மறைவால், இந்த நாடு மிகுந்த அர்ப்பணிப்பும் ஒப்பற்ற பேச்சாற்றலும் மிக்க மைந்தர்களில் ஒருவரை இழந்து விட்டது” என்று தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டார்.

            

                    பூபேஷ் குப்தா மறைவுக்கு நாடு பரவலாக அஞ்சலி செலுத்தியது.

            (உலகம் புகழ, அனைத்து மக்களின் வாழ்வுயர நமது நாடாளுமன்ற அவைகளை, அரசியல் அமைப்புச் சட்ட மாண்புகளின்படி உயர்த்திப் பிடிப்பதே அவருக்கான சரியான அஞ்சலியாகும்!)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

           

 

 

  

Sunday 20 February 2022

இந்தியாவும் அதன் பல முரண்பாடுகளும் -- எக்ஸ்பிரஸ் கட்டுரை தமிழாக்கம்

 


இந்தியாவும் அதன் பல முரண்பாடுகளும்

--கே ஜெயகுமார்

கேரள மேனாள் முதன்மைச் செயலாளர் மற்றும்

மேனாள் துணைவேந்தர், துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக் கழகம்

--நன்றி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (18 -- 02 –22)

            ‘அதிசயம், அது இந்தியா’ என்பது அடிக்கடி கேட்ட அடைமொழி, இருப்பினும் இந்தியா பலவகை புதிர்களில் நம்மைத் தொடர்ந்து அதிசயக்கச் செய்கிறது. பாரதம் என்கிற இந்தியா ஒருபோதும் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெறாவிடினும் நமது அரசியல் சமூக அமைப்பு (பாலிட்டி) எப்போதும் போதுமான நெகிழ்வுத்தன்மையோடு மீண்டு வந்து அவற்றோடே வாழ்கிறது. அந்த முரண்பாடுகளை நிர்பந்தமாகச் சமாதானப்படுத்த முயலாமல் நாமும் அவற்றுடன் சகவாழ்வு நடத்த அனுமதிக்கிறோம். எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடுகளின் சுமை மெல்ல அதிகரித்து தேசிய வாழ்வில் விரிசல்கள் தொடங்கியுள்ளன. ஓர் எல்லைக்கு மேல் முரண்பாடுகள் இயல்புக்கு மீண்டுவர முடியாத நிலைக்குச் செல்வது சுய தோல்வியாக முடிந்துவிடுகிறது. இத்தகைய பழைய மற்றும் புதிய முரண்பாடுகளைத் தொடர்ச்சியாக ஒரு தேசத்திடம் நினைவூட்டிக்கொண்டே இருந்தால், அதன் உள்ளார்ந்த பதற்றம் எந்தச் சமூகத்தையும் தாறுமாறாக இழுத்துச் செல்லவே செய்யும்; அப்போது  நிலைத்த முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் சமப்பகிர்வுக்காக நியாயமாகச் செலவிட வேண்டிய ஒரு தேசத்தின் ஆக்கபூர்வமான நேரமும் சக்தியும் வீணடிக்கப்படும்.

            நம்மை ஆசிய சக்தி, எழுச்சிபெற்று வரும் உலகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் என்றெல்லாம் கற்பனை செய்து உலகளாவிய பல முன்முயற்சிகளின் அரசியல் தலைமைப் பொறுப்பையும் நாமாக வரித்துக்கொள்கிறோம். சில ஆண்டுகளில் 5லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக நாம் விரும்புகிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற வகையில் இந்தியா வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்புகிறது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் பாராளுமன்ற வளாகத்தைப் புதியதாக மீண்டும் கட்டவும், 75வது விடுதலைநாளைக் கொண்டாடும் மாபெரும் தேசத்தின் பெருமிதத்தின் அடையாளமாகப் பிற நினைவுச் சின்னங்களையும் தேசியத் தலைநகரிலும் பிற இடங்களிலும் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுருக்கமாக நாம் சரியாகவே நமக்கான மாபெரும் பெருமிதத் தோற்றப் பொலிவு வடிவத்தை உண்டாக்கிக் கொள்கிறோம்.

            சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கை இக்கண்ணோட்டத்தை நனவாக்க நெகிழ்வுத்தன்மையுள்ள புதிய இந்தியாவை உருவாக்க முயல்கிறது. நியாயமாக கூடுதல் மூலதனச் செலவு அதிகரிப்பது, உயர்தரத்தில் சாலைகள், அதிவேக ரயில்கள், மின்னணு நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் மரபணுயியல் (genomics) ஆய்வுக்கூடங்கள், செயற்கை அறிவு, 5ஜி அலைக்கற்றை முதலிய வானளாவியப் பிரிவுகளில் அழுத்தம் தரப்பட்டுள்ளது. மின்னணு கடவுச் சிட்டுகள் வழங்கவும், தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நில ஆவணங்கள், தேசிய டிஜிடல் சுற்றுச்சூழல் முறைமை, விவசாயிகளுக்கு உயர்தொழில்நுட்பச் சேவைகள் முதலியவற்றிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்றுவதற்கும், இந்திய தேசம் தனது நூற்றாண்டு விடுதலைநாளைக் கொண்டாடும் 2047ல் சூப்பர் பவர் வல்லரசு நாடாக மாற்றவும் அறிவுத்துறை சார்ந்து டிஜிடல் பல்கலைக் கழகம் மற்றும் கொத்தான புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கும் பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

            அத்தகைய கண்ணோட்டம், சில மதிப்புறு கொள்கைகளை அவசியத் தேவையென வரித்துக் கொள்கிறது; அவை, தாராளப் பொருளாதாரம், சமத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கி அணைத்துச் செல்லல், தனிநபர் முன்னெடுப்புச் செயல்களில் நம்பிக்கை, தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மற்றும் மனித வளச் செல்வாதாரத்தை மேம்படுத்துவதில் பற்றுறுதி போன்றன. இக்கண்ணோட்டம் அதன் ஆதார அடித்தளமாக அமைதியான அரசியல் சமூக அமைப்பை நம்புகிறது; அத்தகைய குடிமைச் சமூக அமைப்பில் ஒவ்வொருவரும் அவரவர் சக்தி மற்றும் செயலாற்றலுக்கு ஏற்ப வளர்ச்சியடைய இயலும். தனது ஆற்றலை நனவாக மாற்றக்கூடிய சமுதாயத்தில்  ஒரு தேசியக் கண்ணோட்டத்தைப் பிடிப்பாக வேர் கொண்டிருக்க வேண்டும். சம கால இந்தியா அக்கண்ணோட்டத்தைப் பகிர்கிறதா? இந்தியக் சமூகம் இந்த மதிப்பீடுகளைப் பகிர்கிறதா? குரோதம், வெறுப்பு மற்றும் பிறரை மற்றவர் என ஒதுக்குதல் என்பதன் அடிப்படையில் ஆளும் அரசியல் கட்சி முற்றாக வேறொரு மதிப்புகளின் தொகுப்பால் வழிநடத்தப்படும் சமூக அரசியல் கண்ணோட்டத்தைப் பின்பற்றும்போது – அரசின் உயர்ந்த லட்சியத் திட்டங்கள் மற்றும் மாபெரும் நோக்கங்கங்கள் தங்களுக்கான உண்மையான வெளியைத் தேடி இருப்புக்காகப் போராடுகிறது.

            இந்தியாவை எப்போதும் முரண்பாடுகள் பீடித்திருக்கின்றன. 1947ல் தேசப் பிரிவினையின் பைத்தியக்கார கலவரங்கள் இந்தியச் சமூக உணர்வில் ஆழமான காயங்களை ஏற்படுத்தின. ஆயினும், புதியதாய்ப் பிறந்த விடுதலைபெற்ற இந்தியாவின் மனதில் உற்சாக விழைவு கொப்பளித்ததால் இளம் இந்தியா தனது பெருமிதத்தை மீண்டும் திரும்ப அடைந்தது. நேருவின் இந்தியாவில் முரண்பாடுகளுக்குப் பஞ்சமில்லை; ஆனாலும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், அறிவியல் மனோபாவம், மதசார்பற்ற மதிப்பீடுகள் மட்டுமே அந்த முரண்பாடுகளைக் கடந்து செல்வதற்குப் போதுமானவையாக இருந்தன: அதுவே தேசத்தை முன்னோக்கி இழுத்துச் சென்றது. ஒப்புக்கொள்ளப்பட்ட தேசிய இலக்குகளைச் சாதிக்க  அரசியல் செயல்பாடு, அரசு திட்டங்கள்  மற்றும் சட்டமியற்றுதல் ஒருமித்துச் சென்றன. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பெருந்தன்மையான பெருமனது மற்றும் ஒருமைப்பாட்டுக் கண்ணோட்டம் நெருக்கடியான காலங்களில் உறுதியான ஆதார அடித்தளத்தை வழங்கியது.

            எனினும், கடந்த சில காலமாக, முரண்பாடுகளில் செயற்கையான முக்கியத்துவம் மற்றும் அழுத்தம் தந்ததால், இந்த நுட்பமான சமன் செய்யும் நெகிழ்வுப் போக்கு சீர் குலைந்தது. இன்றைய இந்தியா ஒன்றையொன்று மறுக்கும் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளின் துயரகரமான புதிராகக் காட்சியளிக்கிறது. பசி பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு, வேலையின்மை, மிக மோசமான கிராமப்புறச் சுகாதார முறைமை மற்றும் நகர்ப்புற அவலங்கள் நிலவுவதை ஒப்புக்கொள்ளும் ‘நன்றாம் பணிதலில்’ தயக்கம் தெரிகிறது. வேளாண் பிரிவினரின் இன்னல்கள் கவனிக்கப்படாமல், தவறான ஆலோசனைகளின் பேரில், பிரச்சனையை இரக்கமற்று நன்கு ஆராயாமல் மேலும் நலிவடையச் செய்யும் தீர்வுகள் தரப்படுகின்றன. விவசாயிகள் ஓரம் கட்டப்படுகின்றனர். பொதுக் கல்வி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கல்வித் துறையில் தனியார் முதலாளிகள் கோலோச்சுவதால் ஏற்கனவே நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகள் மேலும் அதிகரிக்கிறது. சமூகத்தின் முக்கியமான பகுதிகளிலிருந்து அரசு பின்வாங்குவதாகத் தோன்றுவது மட்டுமல்ல ஆதரவற்ற மக்கள் கூட்டம் லாப வேட்டையாடும் சந்தை சக்திகளிடம் அகப்பட்டுள்ளனர். நாகரீக நவீன வார்த்தையாடல்கள் மற்றும் வெற்றுக் கூச்சல், ஆக்கபூர்வமான கருணைமிக்க நடவடிக்கைக்கு மாற்றாக மாட்டா.

இன்றைய இந்தியா ஒரு படப்பிடிப்பு

            தற்போது அரசியல் மட்டத்தில், வழக்கொழிந்த வெறுக்கத்தக்க கருத்துகள், சொற்கள் மற்றும் செயல்கள், ஏறத்தாழ கட்டுப்படுத்தப்படாமல், நமது சமூக வாழ்வைத் தொடர்ந்து மதிப்பிழக்கச் செய்து பாழ்படுத்துகின்றன. வெறியூட்டும் கசப்பான பேச்சுகள் மற்றும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிடுவதைச் சமூக ஊடகங்கள் மீது கூட்டாகத் தாக்குதல் நடத்துவதன் மூலம் வலுவூட்டப்படுகிறது; மேலும் பல நூற்றாண்டாக இருக்கும் அனைத்து வித்தியாசங்களோடும் அனுசரித்து ‘சமாதான சக வாழ்வு’ என்ற மரபை ஏற்படுத்தி வாழும் சமூகத்தில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

            பெரும்பான்மையானவர்கள் சகிப்புத்தன்மையற்ற, ஒதுக்கி வைக்கும் மொழியைப் பேசி சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பற்ற ஒதுக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துகின்றனர். மென்மையான விமர்சனங்களுக்கும் கொடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாற்றுக் கருத்து கூறுவதைக் கலகம், தேசத்துரோகம் என அர்த்தப்படுத்தப்படுகிறது. விமர்சனம் செய்பவர்களின் குரல்வளைகள் அதிர்ச்சி அளிக்கும் கொடூரமான பலவழிகளில் நெறிக்கப்பட்டு மௌனமாக்கப்படுகின்றனர். தாராள சிந்தனை மற்றும் மதசார்பின்மை சந்தேகிக்கப்படுகிறது. தன்னாட்சி பெற்ற புகழ்மிக்க தேசிய அமைப்புகளின் முக்கிய பொறுப்புக்களில் தங்களின் தீவிர கருத்தாளர்களை நுழைப்பதன் மூலம் அவ்வமைப்புகளைப் பின்பாட்டு பாடுபவர்களாகத் தரமிறக்கப்படுகின்றன. வரலாறும் அறிவியலும் புராதன மொழியில் மாற்றி எழுதப்படுகின்றன. ஐஐடி உட்பட தேசிய நிறுவனங்களின் அறிவியல் ஆய்வு, அவ்வமைப்புக்களில் நடுவுநிலை பிழன்ற மனச்சாய்வு கோட்பாடுகள் மூலம் கடத்தி, அவர்களுக்கு இட்ட அறிவார்ந்த கூலிப் பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறது. டிஜிடல் சூப்பர் பவராக மலர விரும்பும் ஒரு தேசத்தின் இணைய சேவைகளை, அரசியல் காரணங்களுக்காக, மனம்போன போக்கில் துண்டிக்கப்படுகிறது.

            இதுவா ஆசிய சூப்பர் பவராக, டிஜிடல் உலகின் தலைவராக நம்பிக்கையுடன் காட்டிக் கொள்ளும் சமூகம்? எதிர்காலக் கண்ணோட்டமும் பிரகடனங்களும் பிரம்மாண்டமாக இருக்கும்போது, அரசியல் சட்டம் ஏற்காத புராதனச் சட்டங்கள், புறக்கணிப்பு நடவடிக்கை மற்றும் தோரணையால் பிரகடனங்களுக்குப் பொருந்தும் பயனுறு திறமை மற்றும் தொழில் நுட்பங்களைத் தொடர்ந்து ஒன்றுமில்லாது நீர்க்கச் செய்வதா? நாட்டை முன்னோக்கிச் செல்லவிடாது தடுப்பதா? அது கரையில் கட்டப்பட்ட படகில் அமர்ந்து துடுப்பு வலிப்பதைப் போல உள்ளது.

            ஒரு தேசம் முன்னேற -- விரைவாக முன்னேற – அரசியல் அமைப்பு, சமூகம் மற்றும் பொருளாதாரம் மூன்றும் சில பொதுவான கண்ணோட்டம், மதிப்புறு விழுமியங்கள் மற்றும் தோழமை உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ‘ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் உற்சாக உந்து உணர்ச்சி, பெருமிதம், பரஸ்பர விஸ்வாசம்’ என்ற அந்த (எஸ்பிரிட் டி கார்ப்ஸ், esprit de corps, பிரெஞ்ச் சொல்) ஒத்திசைவு உணர்வு இல்லாது இருப்பின், அதனை ஆட்சி அதிகாரம் செலுத்துவோர் மட்டுமே அளித்திட முடியும். (அரசு) அப்படி நடக்காவிடில், நாம் கோட்டை கட்டும் வானளாவிய பிரம்மாண்டங்கள், குறுகியகால அரசியல் பலனுக்காக மேடையில் பெரிதாய் காட்டிக்கொள்ளும் தற்புகழ்ச்சி, ஆடம்பர வீண்ஜம்பங்களாகவே முடியும்.

--தமிழில் நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

Tuesday 15 February 2022

அணியும் ஆடையும் மதச் சுதந்திர உரிமையும்


அணியும் ஆடையும் 

மதச் சுதந்திர உரிமையும்

--காளீஸ்வரம் ராஜ்

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்

--நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 7-2-22

        “மதச் சுதந்திரம் பன்மைத்துவத்தின் சிறப்புக் குறியீடு. நியாயமான கட்டுப்பாடுகள் ஏற்கத்தக்கன; மத வழக்கங்களில் அறிவுக்குப் பொருந்தாத் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.”

               கர்னாடக மாநில உடுப்பி கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்பில் அனுமதிக்காதது பரபரப்புச் செய்தியானது. அதுபோல கேரளாவில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து அங்கு ‘மாணவர் போலீஸ் படை’ யில் (ஸ்டூடென்ட் போலீஸ் கேடட்) முறையான கேடட் சீருடைக்குப் புறம்பான, முகத்தை மட்டும் மூடும் ஹிஜாப் அல்லது முழுமையாக உடல் மறைக்கும் ஆடைகள் அணிய அனுமதி மறுத்து அரசு உத்தரவிட்டது. அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 25(1) ஹிஜாப் அணியும் தனது உரிமையைப் பாதுகாக்கிறது எனக் கோரி ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தை அணுக, இப்பிரச்சனையில் அரசு முடிவெடுக்க உயர்நீதிமன்றம் கூறியது. அதன்படி, கேரள அரசும் மத அடையாளங்கள் அனுமதிக்கப்பட முடியாது என உத்தரவிட்டது.

               சமீபத்திய கடந்த காலத்திலும் இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்பட்டன. 2016ல் அனைத்திந்திந்திய முன் மருத்துவத் தேர்வின்போது விதித்த ஆடை கட்டுப்பாடுகளை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்வில் பிட் மறைத்தல், காப்பியடித்தல் முறைகேடுகளைத் தடுக்க அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ முகமது முஷ்டாக் உடை ஒழுங்குமுறைகளில் தலையிட மறுத்தாலும், அக்கட்டுப்பாடுகளைத் தங்கள் (மத) நம்பிக்கை சார்ந்து பின்பற்ற இயலாதவர்களுக்கு எதிராக அமல்படுத்தக் கூடாது என “தடையாணை” உத்தரவும் பிறப்பித்தார். அதுபோன்ற பிறிதொரு வழக்கில் நீதிபதி அந்தத் தாராளச் சலுகை காட்டவில்லை.  ஃபாத்திமா தஸ்நீம் எதிர் கேரள அரசு (2018) வழக்கில் தனியார் உதவிபெறும் பள்ளிக்கு உடைகட்டுப்பாடுகளை விதிக்க எல்லா உரிமைகளும் உண்டு என்று கூறி, வகுப்பறைகளில் தலை முக்காடு (ஸ்கார்ஃப்) மற்றும் கை முழு மறைப்பு சட்டை (ஃபுல் ஸ்லீவ் ஷர்ட்) –அவை விதிக்கப்பட்ட பள்ளிச் சீருடைக்குப் பொருத்தம் இல்லாத காரணத்தால் -- அணிய அனுமதிக்க முடியாது என்று கூற பள்ளிக்கு உரிமை உண்டு என நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டது. மேலும், “பள்ளி நிர்வாகத்தை நடத்த நிர்வாகத்திற்குச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை எனில், அது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறித்ததாகிவிடும்” என்று நீதி மன்றம் கூறியது.

               டிங்கர் எதிர் தெஸ் மோய்ன்ஸ் (1969) வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு பொதுப் பள்ளியின் அதிகாரிகள் சில மாணவர்கள் குழுவை இடைநீக்கம் செய்த நடவடிக்கை சட்டப்படியானதா என்பதை ஆராய்ந்தது. அந்த மாணவர்கள் வியத்நாம் போருக்கு எதிராக அமைதியாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாக கையில் கறுப்பு பட்டை அணிந்து வந்ததால் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. நீதிமன்றம் மாணவர்களுக்குச் சாதகமாக அப்பிரச்சனையில் தாராளப் பார்வை கொண்டு பின்வருமாறு கூறியது: “மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் சுதந்திரமான பேச்சு அல்லது கருத்துகளை வெளியிட அரசியலமைப்பு வழங்கிய அவர்களது உரிமையைப் பள்ளி வளாக வாயில் கதவருகே விட்டுவிட வேண்டும் என எவரும் ஒருக்காலும் வாதாட முடியாது.” (அதே போல) உடை உடுத்தல் என்பதும் கருத்துகளை வெளியிடும் ஒரு வடிவம்தான்; இச்சுதந்திரத்தின் மீது அடிக்கடி அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலதிகமான கூடுதல் வரையறை கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

               அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 25(1) அதன் உரை அமைப்பில் பெருந்தன்மையும் அதன் நோக்கக் கண்ணோட்டத்தில் தாராளமானதாகவும் அமைந்துள்ளது.    

               மதப்போர்வையின் கீழ் நடத்தப்படும் சுரண்டலைக் கடுமையாக விமர்சிக்கும் டாக்டர் அம்பேத்கர், இந்தியச் சமூகத்தில் அதன் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதற்கு மாறாக அவர் மதச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். வழக்கறிஞர் அபினவ் சந்திரசூட் குறிப்பிட்டபடி, நம்முடையது ‘மதத்தின் ஒரு குடியரசு.’ (அதாவது, நமது நாடு பல்வேறு மதங்கள் ஒன்றாக அமைந்த குடியரசு)

               சட்ட ஷரத்து 25ன்படி மனசாட்சி உளச்சான்றின் சுதந்திரம் மற்றும் அதனைச் சுதந்திரமாகப் பின்பற்றுவது, அனுசரிப்பது மற்றும் மதத்தைப் பரப்புவதைப் பொது அமைதி, ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் அரசியலமைப்பு பகுதி IIIன் கீழ் வரும் நியாயப்படுத்தல்களின் அடிப்படையில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். சீக்கியர்கள் தங்கள் மதஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் ஒருபகுதியாக விளங்கும் ‘கிர்பான்’ (வளைந்த கூரான சிறு கத்தி) அணியலாம் அல்லது எடுத்துச் செல்லலாம் என்று இந்த ஷரத்துக்கான முதலாவது விளக்கம் கூறுகிறது. நம்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் கனடா நாட்டின் உச்சநீதிமன்றம், முல்தானி வழக்கில் (2006) ஒரு சீக்கிய மாணவன் வகுப்பில் பங்கேற்கும்போது, மற்றவர்களைத் துன்புறுத்தாத வகையில், கிர்பான் அணியும் உரிமையைச் சரியென்று உயர்த்திப் பிடித்தது. அதே போன்று சமமாக இந்திய நீதிமன்றங்களின் அணுகுமுறையும்கூட தாராளமானதாகும்.

               பிஜோ இமானுவேல் எதிர் கேரள அரசு (1986) வழக்கில், ஜெகோவா சாட்சியம் எனும் கிருஸ்துவ மதப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் மத நம்பிக்கைக்கு முரண்படுவதாக தேசிய கீதம் இருப்பதால் அதைப் பாடி இசைப்பதிலிருந்து விலகி நிற்பதற்கு அனுமதித்தது. எஸ் ஆர் பொம்மை எதிர் ஒன்றிய அரசு(1994) வழக்கில், மதத்தைச் சார்ந்து ஆதரிப்பதிலிருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது.

               மதச் சுதந்திரம், பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதன் சிறப்புக் குறியீடு. அது சமூக நல்லிணக்கம்  மற்றும் பன்மைத்துவத்தை மேம்படுத்திச் செல்வதற்கானது. நியாயமான கட்டுப்பாடுகள் ஏற்கத்தக்கன எனும்போது மத வழக்கங்களில் அறிவுக்குப் பொருந்தாத மற்றும் உள்நோக்கத்துடனான தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.

               தனிநபர் பாரபட்சத் தடுப்புச் சட்டங்கள் வலிமையாக உள்ள நாடுகளிலும்கூட மத உரிமைகளுக்கு உரிய உயர் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வகையில் மாஸ்டர்பீஸ் கேக் ஷாப் (பி) லிட் வழக்கில் ரொட்டிக்கடைக்காரர் தன்பாலின இணையர் திருமணத்திற்குக் கேக் வழங்க மறுத்ததை, அவருடைய மத நம்பிக்கைகள் மற்றும் பற்றுறுதியை ஏற்று, அமெரிக்க உச்சநீதிமன்றம் நியாயம் என்றது. இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் ஆஷர்ஸ் பேக்கிங் கம்பெனி லிட் (2018) வழக்கில், மற்றொரு ரொட்டிக்கடைக்காரர் இரு ஆண் இளைஞர்கள் திருமணத்தை  (ஹே மேரேஜ்) ஆதரித்துக் கேக்கில் வாசகங்கள் எழுத மறுத்ததை ஏற்று ஒப்புதல் அளித்தது.

               பேராசிரியர் ஹெய்னர் பிலெஃபெல்டு கூறுவதுபோல மதச் சுதந்திரத்திற்கு “நியாயமான அளவு இடமளிப்பது” என்பது, “மதரீதியான சலுகை அல்லது நம்பிக்கை சார்ந்து சிறுபான்மையினர் விஷயத்தில் (அனைவருக்குமான) சமத்துவக் கோட்பாட்டை விட்டுவிடுவது என்பது பொருள் அல்ல; ஆனால் சமத்துவக் கோட்பாட்பாட்டை முறையாகவும் பாகுபாடு இன்றியும் வேறுபட்ட சமூக எதார்த்த சூழலில் அமலாக்கி வழங்குவது” என்பதேயாகும். (மனித உரிமைகள் காலாண்டிதழ், பிப்ரவரி 2013.)  மக்களிடையே பரஸ்பர மரியாதையையும் சகிப்புத்தன்மை மட்டத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடிப்படை உரிமை என்ற கருத்தாக்கத்தை நனவாக்க வேண்டிய தேவை உள்ளது.

               ஆனால் இந்தியாவின் துயரம், அத்தகைய சர்ச்சைகளை மதத் தீவிரவாதிகள் தங்கள் குறுகிய குழுவாதப் போக்கு இலக்கை அடைய பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பதேயாம். ஹிஜாப் மாணவிகளின் முகங்களை முற்றாக மறைக்கவில்லை எனில், அந்த ஆடையை வகுப்பறையில் தடைசெய்ய வேண்டிய தேவையில்லை. அது மற்றவர்களை எந்தவகையிலும் துன்புறுத்தப் போவதில்லை. அதே நேரம் ஆசிரியர் வகுப்பைத் திறமையாக நடத்த மாணவிகளின் முகங்களைப் பார்த்து பாடம் நடத்த விரும்பலாம். தலையில் அணியும் மறைப்புச் சீலை நிச்சயமாக அனுமதிக்கப்படக் கூடியது என்றாலும் முகத்தை மறைக்கும் திரை அப்படி அனுமதிக்கப்பட முடியாது. எங்கே எது சாத்தியமோ அந்த நிதானத்தை நாம் கண்டடைய வேண்டும். மதங்களால் பிளவுபட்டு அல்லாடும் ஒரு சமூகத்தில் மதச் சுதந்திரம் பற்றிய பிரச்சனையை ஆராயும்போது அரசமைப்பு ஆட்சி முறை பற்றிய சிந்தனைத் தெளிவை மனதில் பதியவைக்க வேண்டும். மதத் தீவிரவாதம் பெரும்பான்மையினருடையதாயினும் சரி, அல்லது சிறுபான்மையினருடையதாயினும் சரி, அது சீர்குலைக்கப் போவது அழகாய் அமைந்த நல்லிணக்கமான மதசார்பற்ற பன்மைத்துவக் கட்டமைப்பையே ஆகும். (மகாகவி பாரதியார் கூறுவதுபோல, அக்கினி குஞ்சோ அல்லது மூப்போ, தழலில் வெந்து தணியப் போவது காடு.)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

   

 


 

Tuesday 1 February 2022

பாஜக -விடமிருந்து நேதாஜியை மீட்டு எடுங்கள்

 

         நேதாஜி சிலை அமைப்பதை எதிர்க்காதீர்கள்

பாஜக அபகரித்த நேதாஜியை 

அவர்களிடமிருந்து மீட்டு எடுங்கள்

--சுவாமிநாதன் எஸ் அங்கிலேசாரியா அய்யர்

டெல்லி ராஜ்பாத்தில் நிற்கும்  ஜார்ஜ் மன்னர் சிலைக்குப் பதிலாகத் தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலையை நிறுவ வேண்டும் என எப்போதும் நான் நினைப்பேன். தற்போது பாஜக அரசு சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அமைக்க முடிவு செய்துள்ளது. விடுதலை இயக்கத்தில் புகழ்பெற்ற தனது தலைவர்களாக ஒருவரும் இடம் பெறாத பாஜகவின் அம்முடிவு, விடுதலை இயக்கத்தில் காந்திஜியின் பங்களிப்பைக் குறைக்கவும் தேசியக் கதாநாயகராக நேதாஜியைக் கட்டமைத்து அவரைக் களவாடி அபகரிக்கவும் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான முயற்சி தவிர வேறில்லை.

நான் ஒருநாளும் போஸின் விசிறி அல்ல. சரித்திரத்தில் இரண்டு மோசமான ஆட்சிகளோடு அவர் கூட்டமைத்தார் –ஹிட்டலரின் நாஜிகள் மற்றும் ஜப்பானிய கொள்ளையர்கள். அவர்கள்தாம் இரண்டாம் உலகப் போரில் சொல்ல முடியாத கொடுமைகளை இழைத்தவர்கள். சீனா மற்றும் பர்மாவில் அவர்கள் அரங்கேற்றிய பலாத்காரங்களும் கொலைகளும் ஏராளம். ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால் இந்தியாவிலும் அதைவிட மோசமாக நடந்திருப்பார்கள். எவ்வளவு கதாநாயக வழிபாடு செய்து புகழ்ந்தாலும் போஸின் ஐஎன்ஏ படை அதனது ஜப்பானிய அதிபதிகளால் இராணுவரீதியாகத் தாக்கப்பட்ட உண்மையைத் திரையிட்டு மூடி மறைத்துவிட முடியாது. அவரது ஜப்பான் கூட்டாளிகள் நூற்றுக் கணக்கான இந்திய வீரர்களைக் கொன்றனர்.

அந்தமான் தீவுகளை ஜப்பான் கைப்பற்றி ஆக்கிரமித்ததும் தீவுகளில் போஸ் இந்தியக் கொடியை ஏற்றினார். அபர்ணா வைதிக் போன்ற வரலாற்றாசிரியர்கள், ’அதன் விளைவு கருணைமிக்க இந்திய ஆட்சியாக இல்லை; மாறாக காட்டுமிராண்டி ஜப்பானிய ஆட்சியே ஏற்பட்டது என்றும் உள்ளுர் மக்கள் இன்றும் அதை நினைத்து நடுங்குகிறார்கள்’ எனச் சுட்டிக்காட்டுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியைவிட ஜப்பானிய காட்டுமிராண்டித்தனம் மேலானது என நம்புவது –போஸ் அப்படித்தான் நம்பினார் – பைத்தியக்கார முட்டாள்தனம். இருப்பினும் கிளர்ச்சியை நடத்த இந்திய வீரர்களை இராணுவத்தில் சேர்த்ததன் மூலம் இந்திய விடுதலைக்கு நேதாஜி பெரும் பங்களிப்புச் செய்தார்.

இந்தியாவை அதனுடைய விருப்பத்திற்கு மாறாக ஆட்சி செய்ய முடியாதென வெகுகாலம் முன்பே பிரிட்டிஷ்காரர்கள் கூறினார்கள் – அதன் பொருள், தங்கள் படையில் மிகப்பெரும் எண்ணிக்கையில் அமைந்த இந்தியப் படைவீரர்களின் விஸ்வாசத்தைப் பெறாமல் இந்தியாவை ஆட்சி செய்வது சாத்தியமல்ல என்பதே. 1857 சிப்பாய்கள் கிளர்ச்சிக்குப் பிறகு இன்னொரு கிளர்ச்சி ஏற்பட்டால் தாங்கள் முழுமையாகத் துடைத்தெறியப்படுவோம் எனற கலக்கத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இருந்தார்கள்.

எனவே இந்திய இராணுவப் படைப்பிரிவுகளில் வெள்ளைக்காரர்களின் எண்ணிக்கை விகிதத்தை இரட்டிப்பாக்கினர். ஆனால் முதல் உலகப் போருக்கு வீரர்கள் தேவை அதிகரித்ததால் பத்து லட்சம் இந்தியர்களை இராணுத்தில் சேர்த்தனர். அடுத்து இரண்டாவது உலகப் போரில் 20 இலட்சம் இந்தியர்களுக்கு மேல் படைகளில் சேர்த்ததுடன் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் சந்தூர்ஸ்டில் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் –1857ல் தலைவர்கள் வழிகாட்டல்இன்றி நடத்தப்பட்ட இராணுவக் கிளர்ச்சிபோல அன்றி-- வருங்கால கிளர்ச்சியைத் திறமைவாய்ந்த (பயிற்சி அளிக்கப்பட்ட) இராணுவ அதிகாரிகள் தலைமையேற்று வழிநடத்துவது சாத்தியமானது.

சுதந்திரத்தின் 20வது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் நான் கலந்து கொண்டேன். அதில் உரையாற்றிய பிரிட்டிஷ் ஹைகமிஷனர் ஜான் ஃப்ரீமென்,1946 இந்தியக் கப்பல் படை கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியா விடுதலை அடைவதை நிறுத்தி மாற்றப்பட இயலாதாயிற்று’ எனக் கருத்துத் தெரிவித்தார். இந்நிகழ்வு நான் கேள்விப்பட்ட ஒன்றல்ல. இந்திய கப்பல் மாலுமிகள் மும்பையில் சிறு கிளர்ச்சியை அரங்கேற்றினர்; ஆனால் கிளர்ச்சியாளர்களைச் சமாதானப்படுத்திய சர்தார் வல்லபாய் பட்டேல் ஏற்கனவே சுதந்திரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அந்தக் கிளர்ச்சியும் சரித்திரத்தில் சிறிய அடிக்குறிப்பு என்ற அளவில் சுருங்கியது. இருந்தபோதிலும் இந்தியப் படையினரின் விஸ்வாசத்தைப் பிரிட்டன் இழந்து விட்டதை அக்கிளர்ச்சி நிரூபித்ததாக ஃப்ரீமென் குறிப்பிட்டார், மீண்டும் அவ்விஸ்வசத்தைப் பெறுவது இயலாதது. அப்போது போஸ் இறந்து போயிருந்தார், ஆனால் கிளர்ச்சி உயிர்ப்புடன் வாழ்ந்து வந்ததால், சுமுகமாக இந்தியாவைவிட்டு வெளியேறுவதை பிரிட்டிஷ் தேர்வு செய்தது.

சர்தார் சரோவர் அணையைத் தாண்டிய உயரத்தில் பட்டேலின் பிரம்மாண்ட சிலையை எழுப்பியதன் மூலம், சர்தார் பட்டேலைக் களவாடி அபகரித்த பாஜக, அவர்கள் புகழும் தலைவர்கள் வரிசையில் அவரைக் கொண்டுபோய் நிறுத்துவதில், ஏற்கனவே நரேந்திரமோடி ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். அது தண்டச் செலவு எனக் கண்டித்தன் வாயிலாக காங்கிரஸ், மோடியின் கடுமையான  தந்திர உத்தியில் வீழ்ந்து விட்டது. (காங்கிரஸ் கண்டிக்கும், அதனால் காங்கிரஸ் பட்டேலை மதிக்கவில்லை எனச் சித்தரிக்கும் உத்தி ஓரளவு வெற்றி பெற்றது எனலாம்.) மாறாக, அந்த இடத்தில் பிரம்மாண்டமான பட்டேல் மியூசியம் நிறுவ காங்கிரஸ் வாக்குறுதி தந்திருக்க வேண்டும். அதில்  பட்டேலின் மதசார்பற்ற பற்றுறுதி மற்றும் மத இணக்கம் வலியுறுத்திய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

நேதாஜி சிலை விஷயத்தில் காங்கிரஸ் மீண்டும் அந்தத் தவறைச் செய்துவிடக் கூடாது. நேதாஜி சிலை எதிர்ப்பு அரசியல் ரீதியில் முட்டாள்தனமானது; நேதாஜியின் ஆண்மைமிக்க வலிமையான தலைவர் பாரம்பரியத்தில் சிறிதளவு அபகரிக்க மோடிக்கு அது உதவுவதாகும். அதற்கு மாறாக, காங்கிரஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்  மதசார்பற்ற கருத்து உணர்வுகளை மக்களிடையே பிரச்சாரம் செய்து எவ்வாறு அவை பாஜகவின் கருத்து மதிப்புகளுக்கு அப்படியே நேர் எதிரிடையாக உள்ளன என்பதை எடுத்துக் கூறி வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வது, முன்பு முட்டாள்தனமாகத் தேர்வு செய்த மென்மையான இந்து லைன் அணுகுமுறையைக் கைவிட்டு போஸின் உறுதியான மதச்சார்பின்மை அணுகுமுறை பாதைக்கு மீண்டும் காங்கிரஸ் திரும்புவதையும் குறிப்பால் உள்ளடக்கியது.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா சொல்கிறார்: இந்து மகா சபாவின்  மதவாதக் கொள்கைகளை மிகக் கடுமையாக முற்றாகக் கண்டிப்பராக போஸ் விளங்கினார்; அதனால் தனது இந்திய தேசிய இராணுவத்தின் மைய கலாச்சாரப் பண்பாடாகச் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். அவருடைய நான்கு படைப்பிரிவுகளுக்கு (பிரிகேடு) காந்தி, நேரு, மௌலானா ஆஸாத் மற்றும் தனது பெயரான போஸ் எனவும் பெயர் சூட்டினார். அவரது ‘இந்திய தேசிய இராணுவத்திற்கு’ அவர் மக்கள் பேசும் மொழியில் “ஆஸாத் ஹிந்த்  ஃபௌஜ்” (Azad Hind Fauj) என மொழிபெயர்த்து அழைத்தார். இதில் அவர் மூன்று உருது வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இந்தி மொழிபெயர்ப்பை அவர் ஏற்க மறுத்து விட்டார்; அப்படி இந்தியில் அழைப்பதாய் இருந்தால் சமஸ்கிருத  மயமாக்கப்பட்ட (செம்மைப்படுத்திய) இந்தியில் அது “ஸ்வதந்தர பாரத் சேனா” என அழைக்கப்பட்டிருக்கும். போஸின் சமகாலத்தவர்கள், ஆங்கில மொழியைவிட போஸ் மேம்பட்ட வகையில் உருதுவில் பேசக் கூடியவர் எனக் கூறுகின்றனர்.

அவரது இராணுவத்தில் படைப் பிரிவின் உயர்ந்த தலைவர்களாக அவர் சேகல் (ஓர் இந்து),தில்லான் (ஒரு சீக்கியர்) மற்றும் ஷாநவாஸ் கான் (ஒரு முஸ்லீம்) என சமூக வகுப்புகளிடையே ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தேர்வு செய்தார். இந்தக் கோட்பாடுகள் முற்றாக அப்படியே சவார்க்கரின் இந்துத்துவா கொள்கைக்கு நேர் எதிரானது.

            நாளை மத்திய ஆட்சியில் மற்றொரு கட்சி அல்லது கூட்டணி வரக்கூடும். நாளை அவ்வாறு நிகழுமானால், அந்த அரசு இன்று பாஜக கட்டும் புதிய நினைவுக் கட்டடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மதசார்பற்ற விழுமிய உணர்வுகள் அனைத்தையும் கட்டாயம் செதுக்கிப் பொறித்திட வேண்டும். போஸின் அப்பொன்மொழிகளில்  (காந்தி, நேரு இருவரோடும் அவரது கருத்து வேறுபாடுகளைக் கடந்து) காந்தி மீதும், நேரு மீதும் வியந்து போற்றிப் புகழ்ந்த வாசகங்கள் இடம்பெற வேண்டும். இந்த உத்தி மூலம் பாஜகவின் தந்திர விளையாட்டைப் புரட்டிப் போடுவது மட்டுமின்றி, ஒருகால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பொறிக்கப்பட்ட அவ்வார்த்தைகளை அழிக்க அஞ்சுவார்கள். இத்தகைய வழியில்தான் மதசார்பற்ற கட்சிகள் சுபாஷ் சந்திர போஸை மீட்டெடுக்க முடியும்.

                                             --நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

--தமிழில் : நீலகண்டன்,

                                                                                                                          என்எப்டிஇ, கடலூர்