Wednesday 1 September 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 48 : டாக்டர் ஜி அதிகாரி : விஞ்ஞானி, கட்சி அமைப்பாளர், மனித நேயர்

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 48

 


டாக்டர் ஜி அதிகாரி :

விஞ்ஞானி, கட்சி அமைப்பாளர், மனித நேயர்


--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஆகஸ்ட் 22 – 28

            டாக்டர் கங்காதர் அதிகாரி, புகழ்பெற்ற சிபிஐ கொள்கை தத்துவாசிரியர், வரலாற்றாளர் மற்றும் கட்சி அமைப்பாளர் மட்டுமல்ல அவர் ஜெர்மனியில் பேராசிரியர் மார்க்ஸ் வோல்மர் தலைமையின் கீழ் பௌதீக வேதியல் துறையில் ஒரு விஞ்ஞானியும் ஆவார். புகழ்பெற்ற பௌதீக வேதியல் விஞ்ஞானி, க்வோண்டம் துகளைக் கண்டுபிடித்த  டாக்டர் மாக்ஸ் பிளாங்க், கங்காதர் அதிகாரியின் ஆய்வு நேரடித் தேர்வின்போது (வைவா வோர்ஸ் தேர்வு நடத்திய) தேர்வாளர்களில் ஒருவராக இருந்தார். ஒப்பார் இல்லாத ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அறிவியல் மாநாடுகளில் (colloquiums) அதிகாரி கலந்து கொண்டார். அவர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆகி இருக்க வேண்டியது; ஆனால் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (ஜெர்மன் மொழியில் KPD)யுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரானார்.

            கங்காதர் மோரேஸ்வர் அதிகாரி மும்பை அருகில் உள்ள கொலாபா மாவட்டத்தின் பன்வெல் என்ற இடத்தில் 1898 டிசம்பர் 8ம் தேதி பிறந்தார். ரத்னகிரி மாவட்டத்தில் சிறு நிலக்கிழாராக இருந்த அவருடைய தாத்தா சொத்துக்களை இழந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பம்பாய்க்கு மாறிய அதிகாரியின் தந்தை அங்கே சாவ்லில் வசித்தார்.

            இத்தகைய நகரமயமான மகாராஷ்ட்டிரா குடும்பத்தில் கங்காதர் தன் மலரும் ஆண்டுகளைக் கழித்தார். முதலில் தாதர் கல்வி கூட்டுறவு சங்கத்தின் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர், 1919ல் வில்சன் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் முடித்தார். முழுமையான மும்பை மாகாணத்தில் 8வது இடத்தில் வந்து கல்வி உதவித்தொகை பெற்றார்.

அரசியலில் தொடர்பு

            1918ல் திலகர் உரையாற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டதே கங்காதரின் முதல் அரசியல் கூட்டம். கல்லூரியில் டாங்கேயும் பிறரும் நிறுவிய மராத்திய இலக்கியப் பேரவையின் சொற்பொழிவுகளையும் கேட்டார். குதிராம் போஸ் மற்றும் ஆர்ஜி பண்டார்கர் (கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி) மீது அதிகாரிக்கு ஆழமான ஈடுபாடும், உயிரியல் தாவரவியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் (ஜெசி போஸ்) மீது மிகுந்த மரியாதையும் உண்டு. 1918ல் இன்டர் அறிவியல் தேர்வுகளில் மாநிலத்திலேயே  முதல் மாணவராக வந்தார். 1920ல் பட்டப்படிப்பை முடித்தார். கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்குக் கல்வி உதவித் தொகை கிடைத்தது.

கல்வியில் பெருமிதம்

            கங்காதர் அதிகாரி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். ஜெர்மனியின் சாதனைகளால் செல்வாக்குப் பெற்றவர் ஜெர்மன் மொழியைக் கற்றார். எம்எஸ்சி முதுஅறிவியல் படிப்பின்போது வேதியல் கூட்டுப் பொருளான பேரியம் சல்பேட்டிலிருந்து வேதியல் உப்புக்களைப் பிரிப்பெடுப்பது குறித்த தீசிஸ், ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்; இதனால் நேரடி வைவா தேர்வில் கலந்து கொள்ளாமலேயே MSc பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. நேரில் வராதநிலையில் முதுகலைப் பட்டம் வழங்கப்பட்ட பெருமைக்குரிய அபூர்வமான சிலரில் அவரும் ஒருவர்.

ஜெர்மனியில் 

          தேச பக்தி மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக இங்கிலாந்தைவிட ஜெர்மனி செல்வதையே விரும்பி 1922 ஜூலையில் கொழும்புவிலிருந்து ஜெர்மனிக்குப் பயணமானார். அங்கே பெர்லின் ஃபெடரிக் வில்ஹாம் பல்கலைக் கழகம் (ஹம்போல்டு பல்கலைக்கழகத்தில்) சேர்ந்தார். சார்லோடென்பர்க்கின் Technische Hochschule நிறுவனத்தில் இயற்பியல் வேதியியல் எனப்படும் பௌதீக வேதியியல் கற்பதற்காகச் சேர்ந்தார். விஞ்ஞானச் சாதனைகளும் ஜெர்மன் மொழி அறிவும் கைவரப் பெற்றதால் முனைவர் பட்ட ஆய்வை (டாக்டரேட்) ஆறு ஆண்டுகளுக்குப் பதில் மூன்றே ஆண்டுகளில் நிறைவு செய்தார்.

            ஒவ்வொரு வகையிலும் அதிகாரிக்கு உதவி செய்த பேராசிரியர் வோல்மருடன் அவரது நட்புறவு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அதிகாரி மீண்டும் அவரை 1964ல் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு நாட்டில் சந்தித்தார். PhD முனைவர் பட்டம் பெற்ற கங்காதர், டாக்டர் அதிகாரி ஆகி பின்னர் ‘டாக்’(டர்) என சுருக்கமாக அழைக்கப்பட்டார். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பலரைச் சந்தித்த அதிகாரி பின்னர் லீ ஸிலார்டு மற்றும் யூஜின் விக்னர் (Lee Szilard and Eugene Wigner) முதலானவர்களோடும் இணைந்து பணியாற்றினார். அவர்கள் இருவரும் அமெரிக்காவில் மன்கார்ட்டன் அணுகுண்டு திட்டத்தில் பணியாற்றியவர்களாவர்.

            பணப் பற்றாக்குறையால் ஒரு வேளை உணவில் வாழும் கட்டாயத்தில் தள்ளப்பட்டார். எனவே அவருடைய பேராசிரியர் செராமிக் பொருள்களின் விரிவு கோஎஃபிஷியன்ட் அளக்கும் பணி பெற்றுத் தந்தார். 1927ல் ஓர் ஆலையில் வேதியியலராகக்கூட பணியாற்றியிருக்கிறார்.

      பல்கலைக்கழக ஆய்வுச் சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் ஐன்ஸ்டீன் அவரைப் பார்க்க வந்தார். அவருக்கு யார் அந்த இளம் இந்திய விஞ்ஞானி ஒருமுறை ‘பார்த்து விடுவோமே’ என்ற விருப்பம்.

            அதிகாரியால் பாடம் நடத்தப்பட்டவர்களில் டாக்டர் உசைன் ஸாகீர், பின்னாட்களில் இந்திய ‘அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழு’வின் (CSIR) இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றிவரும், ஒருவர்.

அரசியல் தொடர்புகள்

          பெர்லினில் இருந்தபோது அதிகாரி வீரேந்திரநாத் சட்டோபாத்யாயாவைச் சந்தித்தார்; ஒரு புரட்சியாளர், மற்றும், கம்யூனிஸ்டான அவர்தான் இந்தியன் அசோஸியேஷனை அமைத்தவர்; அந்தக் கூட்டங்களில் டாக்டர் அதிகாரி கலந்து கொண்டார். பிற்காலத்தில் ஜாமியா மிலியா இஸ்லாமியா (இன்று டெல்லியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகமான) கல்வி நிறுவனத்தை நிறுவிய ஜாகீர் ஹுசைன், அபித் ஹுசைன், எம் முஜீப் மற்றும் பிறரைச் சந்தித்தார்.

            ஆஸ்ட்ரியாவில் பிறந்த மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாசிரியரான மாக்ஸ் பீர் (Max Beer) மற்றும் சிலரின் அரசியல் சொற்பொழிவு நிகழ்வுகளில் அதிகாரி இந்தியா இல்லத்தில் கலந்து கொண்டார். ஜான் ரீடு, ரஜினி பால்மேதத் (RPD) முதலானவர்களின் நூல்களைப் படித்தார். (அக்டோபர் புரட்சியை நேரடியாகப் பதிவு செய்து ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய ஜான் ரீடு அமெரிக்கப் பத்திரிக்கையாளர், கவிஞர் மற்றும் கம்யூனிஸ்ட்). இறுதியில் ரஜினி பால்மேதத்தின் ‘இந்தியா டு-டே’ அவரை மாற்றியது! ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அலுவலகத்தில் இருந்த புத்தகக் கடைக்கு மார்க்சிய நூல்களைத் தேடி விஜயம் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

            அதிகாரி அடுத்து விரைவில் இந்தியன் அசோஸியேஷனின் தலைவரானார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாமல் மோதிலால் நேரு, முகமது அலி, ஸ்ரீநிவாஸ் அய்யங்கார் முதலானவர்கள் விஜயம் செய்துள்ளனர். ஜெர்மனியில் ஜாலியன் வாலா பாக் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வில் அதிகாரி தனது முதலாவது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

            (சோவியத் இயக்குநர் செர்ஜி ஐன்ஸ்டீன் தயாரித்து 1925ல் வெளியான உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட பேச்சில்லாத மௌனச் சினிமாவான போடெம்கின் போர்க் கப்பல் என்ற) ‘பேட்டில்ஷிப் போடெம்கின்’ திரைப்படம் டாக்டர் அதிகாரியை ஆழமாக நெகிழச் செய்தது. அவர் ஜெய்சூர்யா நாயுடு, சுகாசினி சட்டோபாத்யாயா (வீரேந்திர நாத்தின் தங்கை), சரோஜினி நாயுடு முதலானவர்களை அதிகாரி சந்தித்தபோதெல்லாம் இந்தியா மற்றும் சீனாவின் நண்பரான அக்னஸ் ஸ்மெட்லேயும் உடனிருந்திருக்கிறார்.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

            1928ல் அதிகாரி ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியுடன் வீரேந்திர நாத் தொடர்பை ஏற்படுத்தினார். அதனுடைய தலைமையகம் கார்ல் லைப்னெச் (Karl Liebknecht) இல்லத்தில் அமைந்திருந்தது. அதிகாரியின் உறுப்பினர் படிவத்தை வீரேந்திரநாத்தும் வில்லி முன்சென்பர்க் இருவரும் கையெழுத்திட்டனர். வில்லி ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் பிரிவின் தலைவரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக் அமைப்பின் பொதுச் செயலாளருமாவார். அதிகாரி எம்என் ராய் மற்றும் ரஜினி பால்மேதத்தின் மூத்த சகோதரரான கிளமென்ஸ் தத் அவர்களையும் லீக் அமைப்பில் சந்தித்தார்.

            ‘கிராந்தி’ (புரட்சி எனப் பொருள்) பம்பாய் மராத்தி பத்திரிக்கைக்காக அவர் எழுதினார்; ஏங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிசம் : கேள்விகளும் பதில்களும்’ என்ற நூலை நேரடியாக ஜெர்மன் மொழியிலிருந்து மராத்தியில் மொழிபெயர்த்தார். பின்னாட்களில் மீரட் சதிவழக்கில் தோழரான லெஸ்டர் ஹட்சின்சன் அவர்களையும் அதிகாரி சந்தித்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான எனர்ஸ்ட் தாலீஸ்மன் உரையாற்றிய பெருந்திரள் மக்கள் கூட்டங்களில் வழக்கமாகக் கலந்து கொண்டார். ஜெர்மன் அதிபர் பொறுப்புக்குப் போட்டியிட்டு 12.6 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் புகழடைந்தவர், தாலீஸ்மன். 

            அதிகாரி தான் பணிசெய்த ஆலைக்கு நாள்தோறும் கட்சிப் பத்திரிக்கை ‘Rote Fahne’ (செங்கொடி) பிரதி ஒன்றுடன் செல்வார், தொழிலாளர்களுடன் விவாதிப்பார்.

            சோவியத் யூனியன் செல்ல விரும்பி வீரேந்திரநாத்திடம் உதவி கேட்டார். அவ்வாறு சோவியத் யூனியனுக்கு அவரால் கடத்தி அனுப்பி வைக்க முடியும்; இருப்பினும் பிரிட்டீஷ் உளவாளிகள் கண்டு பிடித்தால் அவரை மோசமாகத் தொல்லைப்படுத்துவார்கள் எனக் கூறி அந்த யோசனைக்கு எதிராக அறிவுரை தந்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்தியா திரும்பல்

            இந்திய நிகழ்வுகளால் டாக்டர் அதிகாரி தனிமையில் இருப்பதாக உணர்ந்தார். இந்தியா திரும்ப விரும்பியவர், மெக்னாத் சஹா, சத்யன் போஸ் மற்றும் சர் சி வி ராமன்  முதலியவர்களைச் சந்தித்து எதிர்கால வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். உதவிட அவர்கள் உறுதி கூறினர். 1928 டிசம்பரில் அதிகாரி பம்பாய் திரும்பினார்; வரும்போது காலனியப் பிரச்சனையின் மீதான காமின்டர்ன் அகிலத்தின் 6வது கொள்கை அறிக்கைகளை (தீசிஸ்) இரகசியமாக எடுத்து வந்தார். இரகசிய சிஐடி போலீஸ் அதிகாரிகள் அவருடைய உடைமைகளைத் துறைமுகத்தில் மதியம் வரை பரிசோதனை செய்தும் மார்க்சிய நூல்கள் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. 1929ல் மீரட் சதிவழக்கின்போது அவைகளைச் ‘தடையங்க’ளாகச் சாட்சியக்குக் காட்சிப் படுத்தினர்.

சிபிஐ கூட்டங்களில்

          தொழிலாளர் விவசாயிகள் கட்சியின் (WPP) சிஜெ தேசாய், எம்ஜி தேசாய் இருவரையும் அதிகாரி தொடர்பு கொண்டார். 1928 இறுதியில் நடந்த WPP கல்கத்தா கூட்டத்தின்போது சிபிஐ மத்தியக் குழு கூட்டம் 1928 டிசம்பர் 27-29ல் இரகசியமாக நடந்தது. அந்தக் கூட்டத்தில் அதிகாரியை உறுப்பினராக அனுமதித்து அவரை மத்தியக் குழுவிலும் உறுப்பினராக்கியது. புகழ்மிக்கத் தலைவர்களை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

            பம்பாயில் தானே உணவைச் சமைத்து தொழிலாளர்கள் காலனியில் (சாவ்ல்) வசித்தார். மாதம் சொற்பமான ரூ 25 மட்டுமே செலவுக்காக அவருடைய தந்தையிடமிருந்து  கிடைத்தது. தொழிலாளர்களுக்கு மார்க்சிய கல்வியைப் போதித்தார். பின்னர் தன் இருப்பிடத்தை GKU (கிர்ணி காம்கார் சங்க) அலுவலகத்திற்கு மாற்றிக் கொண்டார்.

மீரட் சதி வழக்கில்

            1929 மார்ச் 20ல் டாக்டர் அதிகாரி மற்ற 31 தோழர்களுடன் கைதுசெய்யப்பட்டு, மனிதத் தன்மையற்ற மோசமான நிலையில் இருந்த மீரட் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தவர்கள் ஒரு குழுவாக அமைத்துக் கொண்டு அதற்கு அவரைச் செயலாளர் ஆக்கினர்; பல ஆவணங்களை அவர் தயாரித்தார். அவரையும் பிற கைதிகளையும் சந்திக்க மோதிலால் நேரு மற்றவர்களோடு வந்தார். அப்போதெல்லாம் வழக்கமாக அதிகாரி எம்ஜி தேசாயுடன் பிணைத்து விலங்கிடப்பட்டிருப்பார். மீரட் சிறை நாட்களை மார்க்சியத்தின் பல்கலைக்கழகத்தில் இருப்பது போல பயன்படுத்தியதில் அதிகாரியின் தீவிரமான பங்களிப்பு இருந்தது. உள்ளூர் மாவட்ட மேஜிட்டிரேட் நட்புறவோடு பழகி தனது சொந்த நூலகத்தைத் அவரைப் போன்ற மனிதர்களுக்குப் பயன்படுமாறு திறந்துவிடவும் செய்தார்!.

            அவர்கள் அங்கே ஏராளமான கேளிக்கைகளிலும் ஈடுபட்டனர். காட்டே மற்றவர்களோடு சேர்ந்து ‘ஆர்காம்’ (‘ARcom’ அந்தமான் ரெக்ரூட்டிங் கம்பெனி!) என்ற இதழை நடத்தினார்; அதில் கார்டூன்கள், கோட்டோவியங்கள், தனிப்பட்ட மற்றும் அரசியல் ‘மசாலா’ செய்திகளையும் ‘வெளியிட்ட’னர். கலைஞர்கள் மற்றும் கேலிச்சித்திரக்காரர்கள் கூட்டத்தை (கேங்) டாக்டர் அதிகாரி வழிநடத்தினார்! அவர்கள் அங்கே நாடகங்களையும் நடித்தனர், மெல்லிய உடம்பைக் கொண்ட அதிகாரி கையில் கோல் ஊன்றி மகாத்மா காந்தி வேடம் புனைவார்!

            தொழிற்சாலை பிரிவு வளாகத்தின் ஆய்வுத் துறையில் அதிகாரி பணியாற்றியபோது அந்தத் துறையோடு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தொடர்பு வைத்திருந்தார். அதிகாரி ஐன்ஸ்டீனுக்கு

அறிமுகமானவராக இருந்தார். இந்தத் தொடர்பு ஐன்ஸ்டீனைப் பிரதமர் ராம்சே மக்டொனால்டு அவர்களுக்கு மீரட் வழக்கைத் திரும்பப் பெறுமாறு பகிரங்கமாக எழுதத் தூண்டியது. அது தவிரவும் டாக்டர் அதிகாரியை விடுதலை செய்யுமாறு ஐன்ஸ்டீன் பொது அறிக்கையையும் வெளியிட்டார்.

            டாக்டர் அதிகாரி 1933 மார்சில் விடுதலை செய்யப்பட்டார்.

சிபிஐ பொதுச் செயலாளராக

            கட்சி அமைப்பு வெளியே மோசமான நிலையில் இருந்ததால், அதிகாரியும் வேறுசிலரும் இருந்த தோழர்களை வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை நடத்தி டாக்டர் ஜி அதிகாரியைப் பொதுச் செயலாளராகக் கொண்ட கட்சியின் இடைக்கால மத்தியக் குழு ஒன்றை அமைத்தனர். அவர் அத்தருணத்தில் கட்சியை ஒன்றுபடுத்துவதற்கான முக்கியப் பங்காற்றினார்.

            அந்நாட்களின் பரவலான வேலைநிறுத்த இயக்கங்களில் தீவிரமாகப் பணியாற்றினார்.

            1934 மே மாதம் கைது செய்யப்பட்டவர் பைகுல்லா சிறைக்கும் பின்பு பீஜப்பூர் சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அஜாய் கோஷ் உதவியுடன் 1937 பிப்ரவரியில் பீஜப்பூர் சிறையிலிருந்து துணிகரமாகத் தப்பி கல்கத்தா சென்றடைந்தார். அங்கே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் ‘புயலைச் சேகரித்து’ (Gathering Storm’) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையைத் (மேனிபெஸ்டோ) தயாரித்து காங்கிரசின் ஃபைஸ்பூர் மாநாட்டு அமர்வில் சுற்றுக்கு விட்டார்.

            பிசி ஜோஷி தற்காலிக (செயல்) பொதுச் செயலாளர் ஆனார். பம்பாய் திரும்பிய அதிகாரி கட்சிப் பத்திரிக்கை ‘நேஷனல் ஃபிரண்ட்’ (தேசிய முன்னணி) இதழின் சிற்பிகளில் ஒருவரானார்.

            ஆந்திராவின் மண்டனவாரிப்பள்ளம் கோடைக்கால அரசியல் பள்ளியில் அதிகாரி சொற்பொழிவாற்றியபோது தோழர் சி ராஜேஸ்வரராவ் முதன் முறையாக அவரைச் சந்தித்தார்.

            1939ல் சாந்தாபாய் வெங்கார்கரைத் தோற்கடித்து அதிகாரி பம்பாய் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தில்ஷத் சாரி அதிகாரியின் வாக்குச்சாவடி முகவராகவும் பலுபாய் தேசாய் தேர்தல் அதிகாரியாகவும் இருந்தனர். பிசி ஜோஷி, பரத்வாஜ் மற்றும் அஜாய் கோஷுடன் அதிகாரி சிபிஐ பொலிட் பீரோ உறுப்பினரானார். இரண்டாம் உலக யுத்தம் மூண்டதும் அவர் தலைமறைவானார். அவர் மறைந்திருந்த மறைவிடங்களில் காந்திஜியின் சரிதையை எழுதிய DG டென்டூல்கர் அவர்களின் குடியிருப்பு பிளாட்டும் ஒன்று.

நேதாஜி தப்பிக்கத் திட்டம் வரைதல்

            1940ல் சுபாஷ் போஸ் சோவியத் யூனியனுக்குத் தப்புவதற்கான தனது திட்டங்கள் குறித்து சிபிஐ கட்சிக்கு தகவல் தந்தார். அதிகாரியின் உதவியோடு கட்சி விரிவான திட்டம் தீட்டியது. பஞ்சாப் சிபிஐ தலைவர் தேஜா சிங் ஸ்வதந்தர் வழித்தட வரைபடம் வழங்க, இந்தியாவிலிருந்து சுபாஷ், வடமேற்கு எல்லை மாகாண (NWFP, North Western Frontier Provice) சிபிஐ கட்சியின் பகத் ராம் தல்வாருடன் காபூலுக்கு 1941ல் சென்றார். பின்னர் அது குறித்த விரிவான அறிக்கையைத் தல்வார் அதிகாரியிடம் தந்தார்.

            1942ல் கட்சித் தலைமையகம் பம்பாய், ராஜ் பவனுக்கு மாற்றப்பட்டபோது அதிகாரி அங்கே வசித்தார்.

முதல் கட்சிக் காங்கிரஸ் மாநாடும் அதன் பின்னரும்

          1943 பம்பாயில் நடந்த சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் அதிகாரி மத்தியக் குழுவுக்கும் பொலிட் பீராவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 ஜூனில் அதிகாரி ‘மக்கள் யுத்தம்’ (‘People’s War’) இதழ் பிறகு ‘மக்கள் யுகம்’ (‘People’s Age’) இதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலக யுத்தம் குறித்த அவரது பகுப்பாய்வு கட்டுரைகள் பரவலாக வாசிக்கப்பட்டன.

            1943ல் கட்சிக் குடியிருப்பில் டாக்டர் அதிகாரியின் திருமணவிழா மிக எளிமையாக விமல் சமார்த் அவர்களோடு நடந்து, அங்கேயே அவர்கள் வசிக்கவும் செய்தார்கள். 1963ல் ஜுகு கடற்கரையில் நீந்தும்போது அவர்களுடைய மகன் விஜய் இறந்துபோனான்; அந்தச் சோகம் அவர்கள் இருவரையும் ஆழமாக பாதித்தது, குறிப்பாக விமல் மனரீதியில் உடைந்து போனார்.

            1943ல் அமைப்புநிலை பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அதிகாரி லாகூருக்கு அனுப்பப் பட்டார். 3 நாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்திப் பஞ்சாப் கட்சி உறுப்பினர்களுடன் பொறுமையாக விவாதித்துப் புதிய தலைமையை அமைக்க வழிகாட்டினார். மேலும் அவர் அகில இந்திய பாக்னா கிசான் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

            1946 பிப்ரவரி 18 – 20 தேதிகளில் வீறுகொண்டு நடைபெற்ற இந்திய மாலுமிகளின் கிளர்ச்சி எனப்படும் இராயல் இந்தியக் கடற்படைவீரர்கள் கிளர்ச்சியில் தீவிரமாகப் பங்கெடுத்த அதிகாரி, அது பற்றிய தனது மதிப்பீட்டில் கோட்டைக் கொத்தளங்களின் (Castle Barracks) ஆயுதக் கிடங்கை வெடி வைத்துத் தகர்க்கக் கூடாது, ஏனெனில் அது மக்களின் உயிர்களுக்கு ஆபத்தாகிவிடும் என்பதால், அவ்வாறு நடத்தக் கூடாது எனச் சமாதானப்படுத்தினார்.

            1947 பிப்ரவரி மார்ச்சில் லண்டனில் நடைபெற்ற பிரிட்டீஷ் காலனிகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டாக்டர் அதிகாரி கலந்து கொண்டார்

பிடிஆர் காலம்

            1948 பிப்ரவரி கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் டாக்டர் அதிகாரி மத்தியக் குழுவுக்கும் பொலிட் பீரோவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளர் பிடி ரணதிவே, மற்றும் பவானி சென் மற்றும் சோமநாத் லாகிரி ஆகியோர் பிற பொலிட் பீரோ உறுப்பினர்கள். அதிகாரி பிடிஆர் பாதையை ஆதரித்தார், எனவே அவரும் அதற்குப் பொறுப்புதான். 1950ல் கட்சி, புதிய பொலிட் பீரோவைத் தேர்ந்தெடுத்து, அதிகாரி உட்பட பிடிஆர் தலைமையை நீக்கியது. பின்பு அதிகாரி போற்றத்தக்கச் சுயவிமர்சனப் பகுப்பாய்வை வெளியிட்டார். 1951ல் ஒரு சாதாரண உறுப்பினராகப் பணியாற்ற அவர் பஞ்சாப் சென்றார். அங்கே 1952 பொதுத் தேர்தல்களில் பணியாற்றினார். டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்திலும் பின்னர் பம்பாய் அலுவலகத்திலும் ஒரு சாதாரண உறுப்பினராகவும் பணியாற்றினார்.

            1953 – 54 மதுரை மற்றும் 1956 பாலக்காடு கட்சிக் காங்கிரஸ் மாநாடுகளில் அவர் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமிர்தசரஸ் 5வது கட்சிக் காங்கிரஸில் கட்சியின் புதிய அமைப்பு விதிகள் குறித்த அறிக்கையை அளித்தார். கட்சியின் தேசியக் குழுவுக்கும் மத்தியச் செயலகக் குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீண்டும் 1961 விஜயவாடா காங்கிரஸிலும் அப்பொறுப்புக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிப் பிளவும் பின்னரும்

            1960களில் நடைபெற்ற தத்துவார்த்த அரசியல் விவாதங்களின்போது அவர் விரிவாக எழுதினார்; அவற்றில் மிக முக்கியமான படைப்பு, “கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய மறுமலர்ச்சிக்கான இந்தியப் பாதை” என்ற ஆவணம் 1964ல் வெளியானது. கட்சியின் புதிய செயல்பாட்டுத் திட்டத்தை (ப்ரோகிராம்) வடித்தமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றியதுடன்,  1964 பம்பாய் கட்சி காங்கிரஸில் கட்சித் திட்டம் பற்றிய அறிக்கை மீது உரையாற்றினார். மத்திய செயலகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்குக் குறிப்பாகக் ‘கட்சி கல்வி’ பொறுப்பு அளிக்கப்பட்டது. பாட்னா கட்சி காங்கிரஸில் அவர் மத்திய செயற்குழு உறுப்பினராகத்

தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘கட்சி கல்வி மற்றும் ஆய்வுத் துறை’க்குத் தலைமை தாங்கினார். மேலும் ‘சிபிஐ வரலாற்று ஆவணங்கள்’ குறித்த தகவல்களைத் திரட்டித் தொகுத்து எழுதும் பணியின் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணியை நிறைவேற்றி பல தொகுதிகள் வெளியிடப்பட்டன. அனைத்துச் சிரமங்களையும் எடுத்து மிக கவனமாக உலகம் முழுவதுமிருந்து தேவையான தகவல்களைத் திரட்டி வளம் மிக்கத் தகவல் களஞ்சியத்தைக் கட்டி எழுப்பினார். ஏறத்தாழ தனது கண் பார்வையை இழக்கும் வரை, தன் மறைவு வரை இந்தப் பணியை அவர் தொடர்ந்தார். பின்னர் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்து விலகி முழுமையாகப் படிக்கவும் ஆராய்ச்சியை நடத்தவும் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

            வாழ்வின் கடைசி நாட்கள் வரை மத்திய கட்சிக் கட்டுப்பாடு குழுவின் தலைவராக இருந்தார்.

            டாக்டர் கங்காதர் அதிகாரி தமது 83வது வயதில் மாரடைப்புக் காரணமாக 1981 நவம்பர் 21ம் நாள் இயற்கை எய்தினார். அவருடைய மனைவி விமல் அந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மரணமடைந்தார்.

            பெரும் கல்வியாளர், விஞ்ஞானி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதிமிக்க அமைப்பாளர், மனிதநேயப் பண்பாளர் டாக்டர் அதிகாரி நினைவைப் போற்றுவோம்!

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

  

No comments:

Post a Comment