Tuesday 26 May 2020

ஊரடங்கும் அதன் பின்விளைவுகளும் : தி எக்கானமிஸ்ட் கட்டுரை


ஊரடங்கும் அதன் பின்விளைவுகளும்
இந்தியப் பொருளாதாரம் இன்னும் கூடுதலாகப் பாதிப்பதுடன்
கோவிட் 19ம் இன்னும் பரவியபடிதான் உள்ளது
--நன்றி: தி எக்கானமிஸ்ட்
 (ஆசியப்பிரிவு அச்சு ஊடகத்தில் மே23ல் வெளியானது)
        உலகின் மிகக் கடுமையான ஊரடங்குகளில் ஒன்று மார்ச் 25 முதல் மே 31வரை இந்தியாவில் அமல்படுத்தப்படுவது; இதனால் இரண்டுவித தர்மசங்கடமான இரண்டாங்கெட்ட குழப்பமான நிலைகள். வீட்டிலேயே இருத்தல் விதி அமலாக்கத்தால் தொற்று வளர்ச்சிப் பரவல் அதிகரித்து உயரும் வளைவைக் கட்டுப்படுத்தி தட்டையானது உண்மைதான். இதன் பொருள் ஸ்வீடிஷ்காரர்களைவிட, 134 மடங்கு அதிக மக்கள் தொகை என்றபோதும், இந்தியாவில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனாலும் இந்தியாவில் தொற்று போதுமான அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. இதனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு தொற்றுநோயியல் நிபுணர் கூறினார், “நாம் மக்களை வீட்டிலேயே கட்டுப்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுத்தோமே தவிர கிருமியைக் கட்டுப்படுத்த அல்ல.” இதன் விளைவாக நாள்தோறும் பலியாவோர் எண்ணிக்கை 150 என்ற அளவில் உயர்ந்து கொண்டேதான் வருகிறது. (மே 25 முடிவில் இந்தியாவில் மொத்தம் பலியானோர் 4,021; தமிழகத்தில் 118 ) ஊரடங்கு முடிவுக்கு வந்து 130கோடி இந்தியர்கள் வீதிகளுக்கு வரும்போது, வீதிகள் ஊரடங்கின் துவக்கத்தில் இருந்ததைவிட அதிகஅளவு நோய் ஏற்படுத்தும் வைரஸ் நிறைந்து இருக்கப் போகிறது.
        துவக்கத்தில் பலநாடுகளும் கோவிட்19 காரணமாகப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டதைவிட ஏற்கனவே இந்தியா ஊரடங்கிற்காக மிகக் கடுமையான விலையைத் தந்துவிட்டது. மார்ச் மாதத்தில் மட்டுமே 14 கோடி தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்; இதனால் வேலையின்மை விகிதம் 8 சதவீதத்திலிருந்து தேசிய அளவில் 26% ஆனது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியிலிருந்து 8கோடி வரையானது என்கிறார்கள் – எண்ணிக்கையில் தெளிவில்லாத இந்த மதிப்பீடே சமூகத்தில் கீழ்மட்டத்தில் பணிபுரியும் அவர்களின் அவலநிலையையும் -- (சமூகத்தாலும், அரசாலும்) பார்வையில் படாத அவர்களின் அரூபநிலை அந்தஸ்து குறித்து ஆயிரம் கதைகள் கூறும்; அவர்களில் தெருக்களில் வியாபாரம் செய்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் முதலானோர் மனம் ஒடிந்து விரக்தியில் அதிக வசதிகள் இல்லாத தங்கள் கிராமங்களை நோக்கிச் செல்ல முயல்கின்றனர். வெளிநாடுகளில் வேலைசெய்யும் பல இலட்சம் இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் தொகை மிகவும் குறைந்து விட்டது அல்லது அவர்களில் பலரும் இந்தியத் தாயகம் திரும்ப திட்டமிட்டுள்ளனர். அமைப்பு சார்ந்த பணிகளில் இருக்கும் 10 சதமானவர்கள் நிலைமை சற்று பரவாயில்லை – அதற்குக் காரணம், கூடுமானகாலம்வரை அவர்களை வேலையிலிருந்து நீக்க இயலாதபடி முதலாளிகள் தடுக்கப்பட்டிருப்பதே. இப்போதுதான் அவர்கள் வேலைநீக்கப்படுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
        (Goldman Sachs) கோல்டுமேன் சச்ஸ் என்ற வங்கி இந்தக் காலாண்டில் ஆண்டு விகித அடிப்படையில், பொருளாதாரம் 45% சுருங்கும் எனவும்; இரண்டாவது பாதியில் வளர்ச்சி கூடுதலாகும் என்ற நம்பிக்கையில் முழுவருடத்திற்கும் 5% பொருளாதாரம் சுருங்கும் எனக் கணித்துள்ளது. ‘பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில்’ என்ற டெல்லியில் செயல்படும் சிந்தனைத் தேக்க (think-tank) அமைப்பு –பேரளவிலான ஊக்க உதவித் திட்டம் இல்லையானால் – பொருளாதாரம் 12.5 சதவீதம் இந்த நிதியாண்டில் சுருங்கும் எனக் கணித்துள்ளது.
        பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த வலியை அங்கீகரித்துப் பிரதமர் நரேந்திர மோடி மே 13 அன்று சாகசக் கதைகளில் வருவது போன்ற பிரம்மாண்டமான 20 லட்சம் கோடி – அமெரிக்க டாலரில் 265 பில்லியன் அல்லது ஜிடிபியில் 10%க்கு இணையான—அரசின் புதிய செலவுத் திட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் தூண்டுவதற்கு அறிவித்துள்ளார். அடுத்த ஐந்து நாட்கள் நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் படை மின்னும் காமிராக்களைச் சந்தித்து, தொகுப்புத் திட்டத்தைப் பகுதி பகுதியாக அதன் மேலுறைகளைக் கழற்றி, மிக கவனமாக திரு மோடி அறிவித்த மேஜிக் எண் கூடுதல் கிடைக்கும்படி விளக்கினர்.
        இதனை ஆய்வு செய்த சில பொருளாதார ஆய்வாளர்கள் கூடுதலாகச் செலவழிக்க எண்ணியுள்ள தொகையால் மத்திய மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை அளவு அதிகரித்து அது ஜிடிபியில் 12 சதமாக உயரக்கூடும் எனவும்; இதனால் தேசத்தின் ஒட்டுமொத்த அரசுக் கடனுக்கும் (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி) ஜிடிபிக்கும் இடையேயான விகிதம் நிலையற்றுத் தடுமாறி 80% சதமாகும் என்று கூறிப்பிட்டுள்ளனர் (இந்த விகிதம் அதிகரிப்பதானது, நாடு கடனுக்காகத் திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டியைக் கட்டுவதற்கே மேலும் கடன் வாங்கி, பொருளாதார பாதிப்பைச் சந்திக்கும் என்று பொருள்) – பலரும் இந்தத் திட்டம் பலனளிக்குமா என்பது குறித்து சந்தேகம் தெரிவித்தள்ளனர்.
        “இப்போது நமக்குத் தேவை பெரும் பகுதிகளான பணம், சந்தடியோ காரண காரிய ஆரவாரமோ இல்லாமல், (மக்கள் கையில்) புழக்கத்துக்கு, சுற்றுக்குச் சென்று சேர வேண்டும் என்பதுதான்” – இது நிதிசார்ந்த தினசரிப் பத்திரிக்கையான ‘மிண்ட்’--இன் தலையங்கம் கூறுவது. (இதன் அர்த்தம், நுகர்வோர் கையில், பொருட்கள் தேவைப்படுவோர்/ எதிர்பார்ப்போர் கையில், பொருட்களை வாங்குவதற்கான சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பது). ஆனால் இப்படி டிமாண்ட் பக்கத்தை ஊக்குவிப்பதற்கு –குறிப்பாக, ஏழைகளுக்கு அவசரமாக ரொக்க ஆதரவைப் பணமாக வழங்குவதற்கு – பதிலாக, திரு மோடி (பொருட்களை வழங்குநர்களான)  சப்ளை பக்கத்தே, சப்ளை சைடு ஊக்குவிப்புகள் மற்றும் கடன் உத்தரவாதம் முதலிய சீரமைப்புத் திட்ட உதவிகளைத் தாறுமாறான குவியலாக வழங்கி ‘பொருளாதாரமே எழுந்து நட, ஓடு’ என வலியுறுத்துகிறார் – இத்தகைய சீரமைப்புத் திட்டங்களின் பலன் தெரியவர குறைந்தபட்சம் சில காலம் பிடிக்கும். ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டத்தின் பலவும், i) ஒன்று முன்பே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது ii) மத்திய வங்கியைக் கடன் வழங்க வற்புறுத்துவதான திட்டங்களால் உருவாக்கப்பட்டது. பட்ஜெட் ஒதுக்கீடான புதிய நிதிச்சுமை செலவு என்று மோடி அரசு அறிவித்துள்ள திட்டங்களின் திட்டமதிப்பீடு மிகமிக அற்பமான ஜிடிபி-யில் 0.7% யிலிருந்து 1.3% ஜிடிபி அளவிலானதே என்ற உண்மை அறிவிக்கப்பட்ட 10 சதத்திலிருந்து எவ்வளவு தூரம் குறைவான சிறுத்துப்போன ஒன்று.
        எதிர்பார்க்கப்பட்டது போலவே திரு மோடியின் ஆதரவாளர்கள் இதற்கொரு விளக்கம் தருகிறார்கள் – இந்த நெருக்கடி எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் இப்போதே அனைத்தையும் செலவிடுவது ஜாக்கிரதையான அணுகுமுறை ஆகாது; அதனால்தான் அரசு எதிர்காலத்தில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகப் பட்ஜெட்டில் இந்தத் தொகை ஜிடிபியில் ஆறில் ஒரு பங்காக –பணக்கார நாடுகளை ஒப்பிட மிகக் குறைவாக இருப்பினும் – வரையறுத்துள்ளது. எனவே ஏழைகள் கைகளில் பணமாகத் தருவதைவிட, அந்தப் பெரும்பான்மை மக்களைப் பணியில் அமர்த்தக்கூடிய –இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகிய --சிறு வணிக நிறுவனங்களுக்குச் சுலபக் கடனாக, முதலீடு செய்ய வசதியாக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்கிறார்கள்.
        அரசும் அதன் பங்கிற்கு மிகப் பெரிய அளவில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களில் செலவு செய்கிறது என்கிறார்கள். (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைக் குறிப்பிடுகிறார் எனக் கருதலாம் –மொழிபெயர்ப்பாளர்): திரு மோடி அவர்கள் எதிர்கட்சியில் இருக்கும்போது இந்த ஊரகப்பகுதி திட்டங்களைத்தான் தேவையற்றது, வீணானது அல்லது ஊழல் நிறைந்தது என்றெல்லாம் நிராகரித்தார்.
        வேளாண் உற்பத்திப் பொருட்களின் உள்நாட்டு வர்த்தகத்தின் கட்டுப்பாடுகளை நீக்கும் அத்தகைய சீர்திருத்தங்கள், மாநில மட்டத்தில் அல்லாது தேசிய அளவில் கொண்டு சென்று மானிய விலையில் உணவுதானியப் பொருட்களை வினியோகிக்கும் சிஸ்டத்தைக் கொண்டு வருவது எழைகளுக்கு உதவிகரமாக இருப்பது மட்டுமல்ல, அரசு பணத்தையும் சேமிக்க உதவும்.
        இருப்பினும், மென்மையான இடதுசாரிகள் மட்டுமே திரு மோடியின் கஞ்சத்தனம் குறித்து குற்றம் சாட்டவில்லை; நோபல் பரிசுபெற்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் அமர்தியா சென்னும் அபிஜித் பானர்ஜியும்கூட மாதத்திற்கு 100 டாலர் (ஒரு டாலர் = ரூ75.69என இந்திய மதிப்பில் சுமார் ரூ7500/=) அவசரகாலப் பணஉதவி வழங்குவது அந்த ஏழைக் குடும்பங்கள் நெருக்கடியிலிருந்து மீள உதவும் என யோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்குப் பதிலாகத் தற்போது அரசு வழங்க முன்வந்துள்ளது 20 கோடி ஏழைப் பெண்களுக்கு மாதத்திற்கு சுமார் 6.60 டாலர் (இந்திய மதிப்பில் ரூ500/=) மற்றும் ஏழு கோடி விவசாயிகளுக்கு ஒருமுறை பட்டுவாடாவாக 26 டாலர் (இந்திய மதிப்பில் ரூ2000/=) தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 60 சதமான இந்தியர்கள் ஒருநாளைக்கு 3.20 டாலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ250/=) குறைவான தொகையில் (எப்படியோ) வாழ்வை ஓட்டுகிறார்கள் --அந்தத் தொகை நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே வருமானம் பெறுகின்ற நாடுகளுக்கான உலகவங்கியின் ஏழ்மைக் கோடு வரையறையாகும் --  அந்த அற்பமான சிறுதொகை சிலகாலம்கூட நீடிக்காது என்றபோது, அது எப்படி வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவு நுகர்ச்சியின் தேவையை எழுச்சிபெறச் செய்து, அதன் விளைவாய் பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கிவிடும்?
        கரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பு ஏற்கனவே மலையளவு வாராக் கடன் சுமையாக அழுத்திச் செலவையும் முதலீட்டையும் தடுத்துள்ளது. அப்படி இருக்கும்போது மத்திய அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் கடன்களை அதிகம் அளிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தைப் புத்தாக்கம் செய்துவிடலாம் என நம்புகிறது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் விமர்சகர்கள், பழைய கடனால் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முன், மேலும் மேலும் அவர்களையே கடன் வாங்கத் தூண்டுவது தவறான நம்பிக்கை மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட என்கிறார்கள்.   “தற்போது வங்கிக் கடன்கள் கிடுகிடுவென வளர்ந்து உயர்ந்தோங்கிவிடும் என நம்புவது சாத்தியமாகாத கனவாக மட்டுமே இருக்க முடியும்” என்று கூறுகிறார் ஒரு பத்திரிக்கை கட்டுரையாளர், திரு விவேக் கௌல்.  

--தமிழில் நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்


Friday 22 May 2020

சட்டமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் : தி வயர் கட்டுரை தமிழாக்கம்


சட்டமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும்
          திரட்டப்பட்டத் தொழிலாளர்களுக்குப் பலவிதமான உரிமைகளும் அதற்கான சட்டங்களும் இருப்பதை நாமறிவோம். திரட்டப்படாத தொழிலாளர்களின் நிலைமை, அவர்களுக்கான ஊதியம், சலுகை முதலியவற்றைப் பாதுகாக்கப் பெரிய அளவில் சட்டங்கள் இல்லை. இன்று பெரும் போராட்டம் மற்றும் தியாகத்தால் வென்றெடுத்த தொழிலாளர் நலச் சட்டங்களே நீர்த்துப் போகச் செய்ய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயல்வதைப் பார்க்கிறோம்.
          கரோனா தொற்று பாதிப்பால் இலட்சக் கணக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் துயரங்களை நாளும் பார்க்கும்போது – அவர்களுக்கென எந்தச் சட்டமும் நமது நாட்டில் இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால் உண்மை இதற்கு மாறானது என்பதைத் தோழர் பட்டாபி முகநூலில் பகிர்ந்த கட்டுரையிலிருந்து தெரிந்து கொண்டபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நமது நாட்டில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஆள்வோருக்கு அமல்படுத்தத்தான் மனமில்லை. அண்ணல் அம்பேத்கர் சரியாகவே எச்சரித்தார்: “சட்டம் சிறப்பானதாக இருந்தால் மட்டும் போதாது”
          தோழர் பட்டாபி பகிர்ந்த கட்டுரை வழக்கறிஞர் சாத்விக் வர்மா (சுதந்திர லா சேம்பர்ஸ் அமைப்பின் நிறுவன வழக்கறிஞர்) மே 20ல் எழுதியது. அதன் தமிழாக்கம் வருமாறு:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்பால்
நம்_அனைவரின் ஒட்டுமொத்த தவறு
        மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரும் தொழிலாளர் (பணிநியமனம் மற்றும் சேவை நிபந்தனைகள் ஒழுங்குபடுத்துதல்) சட்டம்,1979” என்ற Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979 ஒரு சட்டம் இருப்பது சமீபகாலம் வரை பெரிதும் அறியப்படாமல் இருந்தது. சட்டத்தைக் கொண்டு வந்தபோது இருந்த நிலைமை:  பரிவு காட்டப்பட வேண்டிய இவர்கள் பெரும் கட்டுமான ப்ராஜெக்டுகளில், பணிநேர வரையறை இல்லாது பணியாற்றுவதற்காக ஒப்பந்ததாரர்களால் நியமிக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டதுடன் முறையாக கூலியும் வழங்கப்பட்டதில்லை. அப்போதிருந்த சட்டங்களின் போதாமையால் புதிய சட்டம் தேவை எனக் கொண்டுவரப் பட்டதே இந்தச் சட்டம். சட்டத்தின் காரணம் மற்றும் நோக்கமாகப் பின்வருமாறு கூறப்பட்டது: “மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத, திரட்டப்படாதவர்களாக இருப்பதால் சாதாரணமாக அவர்கள் மிகக் கடுமையான, சாதகமற்ற நிபந்தனைகளின் கீழ் உழைக்க வேண்டியதாகிறது; அத்தகைய மோசமான கஷ்டங்களைப் பார்க்குமிடத்து, நிர்வாகரீதியாகவும், சட்டரீதியாகவும் சில ஏற்பாடுகளை –அவர்கள் பணியாற்றச் செல்லும் மாநிலத்திலும், எந்த மாநிலத்திலிருந்து பணியமர்த்தப்படுகிறார்களோ அந்தச் சொந்த மாநிலத்திலுமாக இரண்டிலும் -- அவர்களைச் சுரண்டலுக்கு எதிராகத் தேவையான திறன்மிகு வகையில் பாதுகாக்க வேண்டியுள்ளது”
          சட்டம் உள்ளது என்பது ஒன்று; அந்தச் சட்டம் திறமையாக அமல்படுத்தப்படுகிறது என்பது அதற்கு மாறாக முற்றிலும் வேறான பிறிதொன்று. சமீபகாலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் சொல்லொண்ணா துயரங்கள், இந்தக் குரலற்ற உழைப்பாளிகள் பால் நமது சட்டங்கள் மற்றும் சட்டநீதி முறைமையின் பெரும் தோல்வியைக் காட்டும். அது மட்டுல்ல, ஒரு சமூகம் என்ற வகையில் நாம் அனைவருமே அந்தத் தோல்விக்குக் கூட்டுப் பொறுப்பானவர்கள் என்பதே உண்மை.  மத்திய அரசு, மாநில அரசுகள், சட்ட அமலாக்க முகமைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகம் என அனைவருமாக ‘மலர்ந்து பூரிக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள்’ எனப் புகழப்படும் இந்திய மக்களின் ஒரு பிரிவினராகிய இந்தத் தொழிலாளர்களை மிகப் பரிதாபகரமாகக் கைவிட்டு விட்டன.
          சட்ட ஷரத்துகளைப் பார்ப்பதற்கு முன் சில புள்ளி விபரங்கள்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5.6 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள். அவர்கள் இந்தி பேசும் மாநிலங்களான உபி, பீகார் ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசிலிருந்து ‘கனவு நகரங்களான’ மகாராஷ்டிரா(மும்பை) மற்றும் டெல்லிக்குச் சென்று பெரிதும் முறைசாராத / அமைப்பு சார பிரிவுகளில் தினக் கூலிகளாக, செல்லத்தக்க அடையாள அட்டையோ, தற்காலிகமாக இடம்மாறி இருத்தலுக்கான சான்றுகளோ இன்றி பணியாற்றுபவர்கள். 1991 மற்றும் 2001 கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 55 சதவீதம் உயர, 2001 மற்றும் 2011 க்கு இடையே 33 சதமாகக் குறைந்தது. அதற்குக் காரணம் அவர்கள் சொந்த மாநிலத்தில் பிற மாவட்டங்களுக்கு அல்லது பிற ‘பெரிய நகரங்க’ளை நோக்கியே இப்போதும் நகர்கிறார்கள்.  
          கனவுகளை நிறைவேற்றுவதாக ஆசை காட்டி இவர்களைச் சிக்க வைக்கும் காண்டிராக்டர்கள் இந்தச் சட்டத்தின்படி லைசென்ஸ் பெறுவது –அதிலும் தொழிலாளர்களின் சொந்த மாநிலத்தின் அதிகாரிகளிடமிருந்தும், பணிநியமனமாகும் மாநிலத்திலும் லைசென்ஸ் பெறுவது – கட்டாயமாகும். நிறுவனங்களும் பணியில் அமர்த்தும்முன் பதிவுச் சான்று பெற வேண்டும். அந்த லைசென்சில் மாநிலங்களுக்கு இடையே இடம் பெயர்தல், ஊதியம், வேலை நேரம், ஊதிய நிர்ணயம் மற்றும் பிற வசதிகள் பற்றிய ஏற்பாடு முதலியவற்றைக் குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் இடப் பெயர்ச்சிக்கான படி (displacement allowance) குறித்து வெளிப்படையான ஷரத்து உள்ளது. அவர்களுக்கு வழங்க வேண்டியவைகளில் பொருத்தமான தங்குமிட வசதி, போதுமான மருத்துவ வசதி மற்றும் (பணியிடப்) பாதுகாப்பு உடை குறிப்பிடப்பட்டுள்ளது.
          இந்தச் சட்டத்தில், சட்ட அமலாக்கத்தைக் கண்காணிக்கச் சோதனை அதிகாரி (இன்ஸ்பெக்டர்)கள் முறையான அரசால் நியமிக்கப்படுவது மட்டுமல்ல, தொழிலாளர்களின் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், பணியாற்றும் மாநிலத்தின் நிறுவனங்களைச் –சட்ட அமலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காகச்-- சென்று பார்வையிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. சட்டம் பின்பற்றப்படாது தவறும் நிறுவனங்களின் மீது, சிறைதண்டனை உட்பட,  ஒரளவு கடுமையான தண்டனைகள் கூறப்பட்டுள்ளது. இதில் வருத்தத்திற்குரியது, பெரும்பான்மையான இந்தத் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகள் குறித்து அறிந்ததும் இல்லை, பணியையும் ஊதியத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் கேள்வி கேட்கத் துணிந்ததும் இல்லை; பொதுவாகக் காண்டிராக்டர்கள் இவர்களைக் கைக்கும் வாய்க்குமாகப் பற்றாக்குறை இருத்தலிலேயே எப்போதும் வைத்திருப்பர். (தற்போதைய தொழிலாளர் சட்டங்களை ஒத்தி வைக்க முயலும் உபி, மபி, ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகளின் திருத்தங்களில் ‘தொழிலாளர் நலத்துறை இன்ஸ்பெக்ஷன்/ தண்டனை என்பதே இல்லை. தொழில் துவங்குவதை எளிதாக்குகிறார்களாம்)
          தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களைச் சீரமைக்க, “பணியிடப் பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் பணிநிலமைகளுக்கான குறுங்குறி (Code) 2019” பாராளுமன்றத்தில் 2019 ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய 13 சட்டங்களை  உள்ளடக்கிச் சீரமைத்த இந்த மசோதாவில் மற்றவற்றோடு புலம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓர் ஒப்பந்ததாரர் மூலமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் நியமிக்கப்படும்போது, அவர் லைசென்ஸ் பெற்றவராக இல்லாத பட்சத்தில், அவ்வாறு நியமனமாகும் புலம்பெயர் தொழிலாளர்கள் --அவர்கள் பணியாற்றும்-- நிறுவனங்களே அவர்களை நேரடியாக நியமித்த  முதன்மை பணி நியமனராக (பிரின்சிபல் எம்ப்ளாயராக) கருதப்படுவர் என இந்தக் குறுங்குறி சட்டபூர்வமாக வகை செய்கிறது. இந்தச் சட்டம் வற்புறுத்திக் கூறுகிறது, ‘புலம் பெயர் தொழிலாளர்கள் இடப்பெயர்ச்சி படி பெறுவதற்கு உரிமை உள்ளவராவர்; அந்த இடப்பெயர்ச்சி படியானது அவர்கள் பெறுகின்ற மாத ஊதியத்திற்கு 50 சதவீதத்திற்குச் சமமான தொகையாகும் எனவும் வரையறுத்துள்ளது.
          இந்தக் குறுங்குறி மசோதா 2019 இறுதியில் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதனைப் பரிசீலித்த நிலைக்குழு 2020 பிப்ரவரியில் சமர்ப்பித்த அறிக்கையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து குறுங்குறியில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது ஒருபுறம் இருக்க, மாநில அரசுகளும் மத்திய தொழிலாளர் அமைச்சகமும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்துச் சிறப்பாகத் தனியான ஓர் அத்தியாயத்தை இந்தக் குறுங்குறியில் அறிமுகப்படுத்த வேண்டும் என ஒருமனதாகக் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் நிலைக்குழு, குறுங்குறியில் ஒடிஷா மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு வசதி (டோல் பிரீ ஷராமிக் சகாயதா ஹெல்ப் லைன்), தொழிலாளர் உதவி ஒற்றைச் சாளரம் (ஹெல்ப் டெஸ்க்), இடம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பருவகால விடுதிகள், தகாத வழியில் மனிதக் கடத்தலுக்கு எதிரான பாதுகாப்பைப் பலப்படுத்தல், இடம் பெயர்வோர் உதவி மையங்கள் அமைத்தல் போன்ற ஓடிஷா மாதிரியில் குறுங்குறியில் முன்னெடுப்புகள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
          இப்படி சட்டம் இருக்குமானால், பிறகு ஏன் அது அமல்படுத்தப்படவில்லை? இடப்பெயர்ச்சி படிகள் வழங்கப்படாதது ஏன்? அது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய ஊதியம் வழங்கப்படாதது ஏன்? அரசிடமிருந்து லைசென்ஸ் பெற வேண்டிய காண்டிராக்டர், நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று  நிராதரவாக இவர்களைக் கைவிட்டு, மறைந்து போனது எப்படி? மருத்துவ வசதிகளும் மற்ற அடிப்படைத் தேவைகளும் செய்துதரப்படாதது ஏன்? இதில் சிலவற்றையாவது செய்து கொடுத்திருக்க முடியும் என்றால் அவர்கள் கூட்டம் கூட்டமாகச் சொந்த ஊர் நோக்கி ஓடாது தடுத்து நிறுத்தியிருக்கலாம். இவற்றிற்கான ஒரே பதில் சட்டம் ஓட்டை ஒடசலான அறதப் பழசு, வழக்கொழிந்தது, எங்குமே சுத்தமாக அமல்படுத்தப் படவில்லை என்பதே. (சட்டம் அப்படியே சட்டப் புத்தகத்தில் இருக்கும்போது) அது எவ்வாறு அப்படி நடைபெற முடியும் என ஒருவர் வியக்கலாம், ஆனால் மிகக் கடுமையான உண்மை அதுதான்.

          புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ‘சேவை, பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான தீர்வு’ வழங்கக் கூடிய ‘ஆஜீவிகா பீரோ’ என்ற அமைப்பு, உறுதியான கொள்கை வகுக்க இயலாததற்குப் பருவ காலங்களில் இடம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிபரத் தரவுகள் போதுமான அளவு திரட்டப்படாததே காரணம் என்கிறது. “கொள்கை வகுப்பதில் முக்கிய பங்காற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மாதிரி சர்வே (புள்ளிவிபரத் திரட்டு) அமைப்புகளாலும் பருவகால இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றி இடம்பெயர்வோர் குறித்து கண்டறிய இயலவில்லை. ஏழ்மை கோட்டிற்குக் கீழே (BPL) கணக்கெடுப்பிலும் புலம்பெயர்வோர் விடுபடுகின்றனர். இவை எல்லாவற்றையும்விட அவர்களால் சாதாரணமான தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்று, தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாததால் அடிப்படையான குடிமகனின் உரிமையும்கூட அவர்கள் மறுக்கப்பட்டவராகின்றனர்” என்று அந்த அமைப்பு தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
          மேற்கண்ட புள்ளிவிபர அறிக்கைகளின்படி அவர்கள் எண்ணிக்கையில் குறிப்பிடத் தகுந்த சதவீதத்தினராக இருந்தாலும், பெரும்பான்மையும் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்தோர் ஒருவர் கூட பட்டினியாக விடப்படவில்லை என வறட்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அரசு திட்டங்களின் உண்மை நிலவரத்தைத் திரும்பிப் பார்க்கட்டும். சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முயலும் கொள்கை அமலாக்க அமைப்பான ‘இன்டஸ் ஆக்ஷன்’, ஊரடங்கு காலத்தில் ஒருமாத காலம் ஒரு சர்வே ஆய்வை மேற்கொண்டது; 15 பெரும் மாநிலங்கள், 3400 குடும்பங்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 11ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பேசியதில் அவர்களில் 19 சதவீதத்தினரிடம் பசியாற்ற போதுமான உணவு இல்லை. அவர்களது அறிக்கையில், “பெரும்பான்மையான மற்றவர்களிடம் உணவு இருப்பு குறைவாகவே இருந்தது. இலவசமாக ரேஷன் பெற அவர்களுக்கு உரிமை இருந்தாலும் அவர்கள் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தது, அருகே இல்லாதது போன்ற காரணங்களால் இரண்டு/மூன்று மடங்கு விலைகொடுத்து வாங்க வேண்டியாயிற்று. ரேஷன் கார்டு வைத்திருந்து வாங்கப்போனால், அவர்களுக்கு உரிமை உள்ளதைவிட குறைவாகவே வழங்கப்பட்டன. அரிசி மட்டுமே வழங்கி மற்ற ரேஷன் பொருட்களான பருப்பு, எண்ணெய், சக்கரை முதலியன பலருக்கும் கிடைக்காத பொருளாயின. ரேஷனில் சேராத காய்கறி, பால், மண்ணெண்ணெய் போன்றவை வாங்குவது அடுத்த சவால். சிலர் விமர்சனம் செய்து முணுமுணுத்ததைக் கேட்க முடிந்தது, ‘எங்களுக்கு வேண்டியது ரேஷன்தானே தவிர சொற்பொழிவு அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
          மற்றொரு ஆய்வறிக்கை ‘நிராதரவாக நிற்கும் தொழிலாளர்களுக்கான நடவடிக்கை வலைப்பின்னல்’ (Stranded Workers Action Network) தனது ஆய்வறிக்கையில் புலம்பெயர்ந்தோர் துயர்களை விவரிக்கிறது: ‘நிவாரணம் வழங்கும் வேகவிகிதத்தைவிட பசி, பட்டினி, துன்பத்தின் விகிதம் அளவுகடந்ததாக உள்ளது; 11ஆயிரம் தொழிலாளர்களிடம் பேசியதில் அவர்களில் பெரும்பாலானோர் சாப்பிட்டு 4 நாட்கள் ஆகி பட்டினியின் விளிப்பில் இருந்ததும், கையில் ஒருநாள் ரேஷன் மட்டுமே மீதமிருந்ததும் தெரிய வந்தது. அவர்களில் 89% தொழிலாளர்களுக்குப் பணியாற்றிதற்கான ஊதியமோ அல்லது வேறு எந்தத் தொகையுமோ வழங்கப்படவில்லை என்பதும், 78 சதமானவர்கள் கையில் வெறும் ரூ300 மட்டுமே ரொக்கம் இருப்பதும் வெளிப்படுகிறது. அவர்களது குழந்தைகளுக்குப் பெரும்பாலும் குடிப்பதற்குப் பாலுக்குப் பதில் வெறும் சக்கரைக் கரைசல் தண்ணீர் மட்டுமே உணவாகப் புகட்டப்படுகிறது.’
            (இதை மொழிபெயர்க்கும் போது தோழர் ஜீவாவின், “பாலின்றி பிள்ளை அழும், பட்டினியால் தாய் அழுவாள்; வேலையின்றி நாம் அழுவோம்” என்ற ‘காலுக்குச் செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்குழைத்தோமடா –தோழா! பசையற்றுப் போனோமடா” கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. தோழர் ஜீவா நம்பிகைகையோடு கவிதையை நிறைவு செய்கிறார் என்பதையும் சேர்த்தே எண்ணிப்பார்க்கிறேன்:
           ஒன்றுபட்டுப் போர்புரிந் தே / உயர்த்துவோம் செங்கொடியை!
           இன்றுடன் தீருமடா – என் தோழனே -- இம்சை முறைக ளெல்லாம்!)
          இங்கு யாரும் கரோனா தொற்றைப் பழிசொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் மனித உயிர்கள் படும்பாட்டை, தொடரும் துன்ப துயரங்களுக்கான நெருக்கடிகள் குறித்து அவ்வாறு பழி சொல்லாமல் கடந்து போய்விட முடியுமா? இந்தக் கரோனா தொற்றுதான், உழைப்புச் சக்திகளின் மீது இதற்கு முன்னரே சமூகத்தில் நிலவிய பாதிப்புகள், தாக்குதல்கள், அக்கறையின்மை முதலியவற்றையும், தொழிலாளர்நலச் சட்டங்களின் போதாமைகளையும் அம்பலப்படுத்தி வெளிக்கொணர்திருக்கிறது. இந்தச் சமூகம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கண்ணியத்தைக் களவாடி இருக்கிறது. குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த பலநூறு குழுக்கள் உதவிகரமாகப் பல நல்ல பணிகளைச் செய்கிறது; அந்தத் தொழிலாளர்களின் துயரக் கதைகளைச் சமூக
ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும்போது அந்தத் தொழிலாளர்கள் நம் இரக்கத்தை, கருணையை வேண்டி இரந்து நிற்கவில்லை என்பதையும் சேர்த்தே கூறுகிறது. அவர்கள் தங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தை, தங்களுக்கு உரிய பங்கைதான் கேட்கிறார்கள். நாம் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்வோம், அவர்களுக்கு அதனை வழங்க நாம் தவறிவிட்டோம், தோற்றோம்.
          அரசு ஆரவாரமாக அறிவித்துள்ள பல திட்டங்களும் அவர்களைச் சென்று சேர்ந்ததா என்பது ‘கேள்விக் குறியே’ என ‘இன்டஸ் நடவடிக்கைக் குழு’ தெரிவிக்கிறது. அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியவர்களில் 94 சதவீதத்தினர் ஏதேனும் ஒரு அரசு நலவாழ்வுத் திட்டத்தின் பயனைப் பெறத் தகுதி உள்ளவர்கள்; என்றாலும், சுமார் 20 சதமானவர்கள் எந்த திட்டத்தின் கீழும் எந்தப் பலனையும் பெறவில்லை.
“கவலை அளிக்கும் இந்தப் போக்கிற்குக் காரணம், திட்டப்பயனாளிகளின் வங்கிக் கணக்கோடு அவர்களின் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அப்படி இணைப்பதில் உள்ள சிரமமுமே” என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
          நாம் எல்லோரும் கரோனா வைரஸ் பற்றி கவலைப்படும் நேரத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், நாளும் பட்டினியையும் துயரங்களையும் சந்திப்பவர்கள், எதிர்காலம் பற்றிய கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். மேற்கண்ட அறிக்கையில் சரியாகவே குறிப்பிட்டுள்ளனர், ஊரடங்கு முடிந்த பிறகு அவர்களில் 48 சதவீதத்தினர் வேலையில்லாமல் விடப்படுவர்.’ வேலை கிடைக்கும் என இருப்பவர்களும்கூட தங்கள் கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தங்களைப் புறக்கணித்து, இழிவாக நடத்திய பெரிய நகரங்களுக்கு மீண்டும் ஓடிவருவதற்கும் எந்த அவசரமும் காட்டத் துணிய மாட்டார்கள்.
          சட்டத்தின் பார்வையிலிருந்து பார்க்கும்போது, இந்த நெருக்கடியின் அவலங்களிலிருந்து பாடம் படிப்போம் எனின், பாராளுமன்ற மாநிலங்களவையில் குறுங்குறி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது—மசோதா சட்டமாவதற்கு முன்—சில மாற்றங்களைக் கொண்டு வர முடியும். மற்றவற்றோடு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தனி அத்தியாயம் கொண்டுவரப்படுமானால் அதில் ‘ஆஜீவிகா பீரோ’வின் சில யோசனைகள் சேர்க்கப்பட வேண்டும். இடம் சார்ந்த சான்றுகள் இல்லாது எல்லா ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் வழங்க வகைசெய்யும் ‘பொது விநியோக முறை’ (PDS) கொண்டுவர உத்தேசித்துள்ள அரசு, புலம் பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சுகாதாரமான தங்குமிட வசதிக்கும் வகை செய்ய வேண்டும். தனி பெண் தொழிலாளி புலம் பெயர்தலுக்கும் பாதுகாப்பு மற்றும் புலம் பெயர்வோர் ஒரு சமூகக் குழுவாக சேர்ந்து வாழவும் வகை செய்தல் வேண்டும். அடிக்கடி சுற்றுக்களில் இடம்பெயர்வோர்களுக்கு நகர சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெறவும், அப்படி ஒவ்வொன்றையும் பெற ஆவணங்கள் கேட்டு நிர்பந்தப்படுத்துவதிலிருந்தும் விடுவிக்கப் படுவதற்கும் சட்டமியற்றல் வேண்டும்.  
          இப்போதைக்கு இடம் பெயர் உழைப்பாளிகள் நிர்வாக முறையில் நம்பிக்கை இழந்துள்ளதையும் நம்மைச் சந்தேகத்தோடுப் பார்ப்பதையும் அனுசரணையோடுப் புரிந்து கொள்ள முடிகிறது. காலம் செல்லச் செல்ல, நாமும் நம்புவோம் -- அவர்களின் ஆகக் குறைவான சேமிப்பும் தீர்ந்து போன நிலையில், அவர்களின் கனவுகளைச் சூறையாடி ஏமாற்றி வாழ்வையே பெரும் ரணகளமாக்கிய அதே நகரங்களுக்கு மீண்டும் திரும்ப வரக்கூடும்; மோசமாக இழிவுபடுத்திய நம்மையும் மன்னிக்கும் ‘பெருந்தன்மை‘ அவர்களுக்கு இருக்கலாம். அப்போது நாம்  என்ன நிகழ்ந்தது என்பதை மறவாது நினைவில் கொள்ள வேண்டும். நீதிநெறி சார்ந்த நம் புலனில், இனியாவது ஒரு தேசமாக, ஒரு சமூகமாக, பெரும் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் ஒற்றை மனித ஜீவனாக நாம் நடந்து கொள்ளும்போது, நம் நடத்தையில் ‘பிரம்ம தேவன் கலை இங்கு’ தொழிலாளிகளே என்று விளங்கும் அந்த உழைப்பாளர்களுக்கு, அவர்களுக்கு உரிய கண்ணியத்தை மரியாதையை அளிப்போம். சட்டங்களும் நீதி நெறி சிஸ்டமும் அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை அளிக்க நாம் முன்வருவோம். இப்படி அவர்கள்பால் சமத்தன்மையாக நியாயமாக நடந்து கொள்ளக் கூறுவது, கற்பனா வாதமாகவோ அல்லது பழைய மக்கிப்போன சர்வதேசப் பொதுச் சட்டப் புத்தகக் கொள்கையின் துர்நாற்றமாகவோ கூட இருந்து விட்டுப் போகட்டும்; குறைந்தபட்சம் நாம் மனிதர்களாக மனிதத் தன்மையோடு நடக்கலாம்தானே!  இல்லை, அதை எதிர்பார்ப்பதுகூட அதிகப்படியான ஒன்றோ?
இந்தக் கட்டுரை முதலில் ‘தி வயர்’ இணையத்தில் மே 19ல் வெளியானது.
--தமிழில்: நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

Tuesday 19 May 2020

கரோனா தொற்று மார்க்சியத்தின் உண்மையை மீண்டும் மெய்ப்பிக்கிறது : மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை


நியூஏஜ் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
கரோனா தொற்று மார்க்சியத்தின் உண்மையை மீண்டும் மெய்ப்பிக்கிறது
----கல்யாண் பந்தோபாத்யாய்
(ஆசிரியர், *கலாந்தர் பத்திரிகா,
 மேற்கு வங்க இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியின் நாளிதழ்)
       ஓவியம் நன்றி: தடம் விகடன்

        காரல் மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பிறகு இன்றைய கரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் பாதிப்புக்குப் பின்னர் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் போதனைகள் மேலும் கூர்மையாக அடிக்கோடிட்டு மேலெழுந்து முன்னிற்கின்றன. நவீன காலத்தின் ஒப்புயர்வில்லாத தத்துவவாதிகளில் மிகச் சிறந்து விளங்கும் மார்க்ஸ் அவருடைய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யில் கூறுகிறார்,
        “…முதலாளித்துவம் இதன் பிறகும் ஆளும் வர்க்கமாகச் சமூகத்தில் நீடிப்பதற்குத் தகுதி அற்றது என்பது தற்போது மிகவும் தெளிவாகிவிட்டது; சமூகத்தில் தனது இருப்பிற்கான நிபந்தனையை முன்னுரிமை வாய்ந்த சட்டமாக நிர்ப்பந்திக்கும் தகுதி அதற்கு இல்லை. தனது அடிமைத்தனத்தின் கீழ் ஓர் அடிமையான இருப்பைக்கூட உத்தரவாதப்படுத்த முடியாதக் கையாலாகாத காரணத்தால் அது ஆள்வதற்குத் தகுதி அற்றது; அடிமை உழைப்பால் உருவாகும் செல்வத்தால் இச்சமூகம் உணவளிக்கப்படுவதற்கு மாறாக, அந்த உழைப்பாளி உயிர் தரித்து இருப்பதற்கே சமூகம்தான் உணவிட வேண்டும் என்ற (இரந்து நிற்கும்) தாழ்ந்த நிலையில், அவன் மூழ்கிவிடாதிருக்க உதவ முடியாத அது, ஆள்வதற்குத் தகுதி அற்றது. சமூகம் இந்த பூர்ஷ்வா அமைப்பின் கீழ் இதற்கு மேலும் வாழ முடியாது; வேறு வார்த்தைகளில் கூறினால், முதலாளித்துவம் இதற்கு மேலும் சமூகத்தோடு இணைந்து இருப்பதென்பது முடியாது…”
                  கரோனா தொற்று காலத்தில் காண்பது என்ன? முரண்பாடுகளுடைய முதலாளித்துவம் இறந்து கொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் சில அம்சங்கள் கம்யூனிசத்தோடு நெருங்கி வருவதாக மலர்ந்து வருகிறது. அதைத்தான் உலகின் மிகப் பெரிய முதலாளித்துவக் கம்பெனிகளில் ஒன்றான ‘ஆஸ்திரேலிய சர்வதேச முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவன’மான மாக்குவரீ வெல்த் க்ரூப் (Macquarie Wealth Group) தனது முதலீட்டாளர்களிடம் கூறியுள்ளது.
        அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்டீவ் ம்யூசின் வார்த்தைகளில், “2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க வேலையில்லாதோர் விகிதத்தை 10 சதவீதமாக்கியது. அது தற்போது 30 சதத்தைத் தாண்டும். டிரம்ப் அறிவித்துள்ள இரண்டு டிரிலியன் டாலர் மதிப்பு மீட்புத் திட்டத்தால் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியாது.” 2007 -08ம் ஆண்டுகளின் போது ‘வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்’ இயக்கம் வெடித்து எழுந்தபோது பலர் நம்ப முடியாத சந்தேகத்தோடுப் புருவங்களை உயர்த்தினர், இது மிகைக் கூற்று என. கேலப் (Gallup, Inc. வாஷிங்டன் டிசி யிலிருந்து இயங்கும் கருத்துக் கணிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனம்) நடத்திய 2011 கருத்துக் கணிப்பு தேர்தலில் 51 சதவீத அமெரிக்க இளைஞர்கள் சோஷலிசக் கருத்துகளை ஆதரித்தனர் என்பது தெரிந்தது. 2018லும் அந்த விகிதம் அப்படியே நீடித்தது. எனவே இப்போது?
        Guggenheim பார்ட்டனர்ஸ்  நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான ஸ்காட் மேனார்டு கூறுகிறார்: “கரோனா தொற்றிலிருந்து பொருளாதாரம் மீள்வதற்கான எந்த நம்பிகையும் எனக்கு இல்லை. மாறாக, செல்வக்குவிப்பு மற்றும் (வாழ்க்கை) வருமானத்திற்கு இடையேயான பெரும் பள்ளத்தாக்கு போன்ற இடைவெளியின் விளைவாய், (பாரதிதாசன் குறிப்பிடும் ‘எங்கள் உடலில் இரத்தம் கொதிப்பேறும்’)  குமுறல் அதிகரித்துள்ள (சமூகச்) சூழல், பெருந்திரள் எழுச்சிக்கே இட்டுச் செல்லும். சமூகக் கடமை மற்றும் நிதிக் கொள்கைகளை வகுத்து நிர்வகிக்கும் நிர்வாகத்தின் நீதிநெறி சார்ந்த பொறுப்பு என்ற அபாயம் --டிரம்பின் முன்– (கட்டுரையாளர் சேர்த்தது) உள்ளது. (அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாதல் போல) கொள்கைகளில் செய்த பிழைக்கான விலையை நாம் தந்தே ஆக வேண்டும். அமெரிக்கா  ஒருபோதும் மீண்டும் சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்திற்குத் திரும்ப இயலாது.”
        இதனோடு மாற்றுத் தத்துவ முகாமைச் சேர்ந்தவர்கள் கூறும் இரண்டு கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. பத்திரிக்கையாளர், தொலைகாட்சி விமர்சகர், டாக்குமெண்டரி சினிமா இயக்குநர், பொருளாதாரவியல் அறிஞர் என்ற பன்முகச் செயற்பாட்டாளரான பிரிட்டன் நிபுணர் பால் மேசன் கரோனா தொற்றுக்குப் பின் ஏப்ரல் 3ம் தேதி எழுதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 1340களில் பிளேக் நோய் மங்கோலியாவிலிருந்து ஐரோப்பா வரை பரவியது. இந்தப் பிளேக் நோயை நிலப்பிரபுத்துவச் சகாப்தம் இற்று நொறுங்கி வீழ்ந்ததற்கான முக்கிய காரணமாக நிபுணர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்; ஏனெனில், நிலப்பிரபுத்துவத்தின் ஆட்சி அதிகார அமைப்பு முறையின் எல்லை, தொற்றின் பேரழிவுக்கு ஈடுகொடுத்துச் சமாளிக்க முடியாததாக இருந்தது. இதன் விளைவு யாதெனின், ஒரு பக்கம் மனித குலத்தின் தேவைக்கும் எதார்த்தத்திற்கும் இடையே இருந்த பிளவு; மறுபுறம் மனிதகுல விடுதலைக்கான தேவைக்கும் மத்திய காலக் கருத்துகளும் இடையே நிலவிய பெரும் வித்தியாசம். இப்படி இதன் இரண்டுக்கும் இடையேயான பாரதூரமான பெரும் இடைவெளி முதலாளித்துவம் முகிழ்ப்பதற்கான ஒரு வாய்ப்பைத் தந்தது.”
        கரோனாவிற்கு முன்பு, அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பெர்னி சான்டர்ஸ் அல்லது பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் ஜெரிமி கோர்பின் மக்களின் ஆதரவு வாக்குகளைப் பெற முடியவில்லை. கரோனாவிற்கு முன்பு பொதுவாகச் சமூகப் பாதுகாப்பு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு முதலிய பிரச்சனைகளுக்கு எதிரான மனநிலையே இருந்தது, ஆனால் கோவிட் 19க்குப் பிறகு நிலைமை அவ்வாறில்லை. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, சோவியத் சோஷலிசத்தின் வீழ்ச்சியைப் பார்த்த பிறகும், கரோனா அனுபவத்திற்குப் பிந்தைய மக்கள், ’முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு’என்று தற்போது கூறத் தொடங்கி உள்ளார்கள்.
        மற்றொரு மார்க்சிய எழுத்தாளரான ராப் சீவெல் (Rob Sewell மார்க்சியம் என்றால் என்ன போன்ற நூல்களை எழுதியவர்) மார்ச் 22 அறிக்கையில் மிகத் துணிச்சலாகக் கூறுகிறார், ‘2007—08 பெரும் பொருளாதார வீழ்ச்சியின் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.’ இந்த சிஸ்டத்தைப் பற்றிய பேச்சுகள் அப்போதிலிருந்தே தொடர்கின்றன. 1930களின் பெரும் வீழ்ச்சியை விடவும் கரோனா தொற்றின் பாதிப்பு மோசமானது. 1930களின் பெரும் வீழ்ச்சியின் விளைவாய், பாசிசத்தின் பேரழிவு நிதி மூலதனத்திற்குச் சேவகம் செய்வதாய் துவங்கியது. ஆனால் தற்போதைய சிஸ்டத்தின் கையாலாகாதத்தனம் பல மடங்கு பெரியதாக 2020ன் உலகளாவிய தொற்றில் வெளிப்பட்டது மட்டுமல்ல, அது பற்றிய கூடுதல் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளதால், இந்தச் சிஸ்டத்தை மாற்றுவதற்கான களம் பண்பட்ட பெருவாய்ப்பாக உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் மீள்வதற்கான இரண்டு வழிகள் உள்ளதாக சீவெல் கூறுகின்றார்: “ஒன்று, மேலும் கூடுதலாக வணிகப் போர்களில் ஈடுபடுவது; இதை ஏற்கனவே அவர்கள் துவங்கி விட்டாலும் பயனேதும் விளையவில்லை. இரண்டாவது வழி, இன்னொரு உலகப் போரைத் துவக்குவது. அணுகுண்டின் பேரளவிலான அணுக்கதிர் பேரழிவு அபாயம் நிலவும் தற்போதைய சூழலில், இன்று அது நினைக்கப் பார்க்கவியலாத ஒன்று.”
        இதைக் கருத்தில் கொண்டே சீவெல், மார்க்சின் மறுக்கவியலாத போதனையின் தன்மையை எடுத்துக் காட்டுகிறார். அவர் எழுதுகிறார், “இது 2008 -09ன் காலம் போன்றதல்ல. இன்னும் யாரும் அதைவிட்டு வெளியே இல்லை, அது ஒரு துவக்கம்தான். ஆளும் வர்க்கம் முழுமையாகக் கையறுநிலையில் உள்ளது. பிரச்சனையின் மீது பண மழையைக் கொட்ட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அது வெறும் நிதி சார்ந்த பிரச்சனை மட்டுமில்லையே (மேலும் அது மோசமாகக் கூடும்); முதலாளித்தவ அமைப்பு நிர்வாகத்தின் நெருக்கடி அது, அந்தச் சிஸ்டம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, இனி பயனில்லை, முடியாதென ஓய்ந்துபோய் விட்டது”.
        உற்பத்தி செய்து குவித்த பொருட்களைவிட அதற்கான சந்தை தற்போது சிறுத்துப் போயுள்ளது. (சந்தையின் தேவையைவிட கூடுதலான உற்பத்தி என்பதால்) நுகர்வைப் பொருத்த அளவில் கீழ்நோக்கிய வீழ்ச்சியான போக்கு என்பதே இதன் பொருளாகும். இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் செயற்கையான முறையில் அவர்கள் சந்தையை விரிவாக்க முயல்கிறார்கள். (சந்தையை விரிவாக்கும்போது அது இன்னும் கூடுதல் உற்பத்திக்கு வழி வகுத்து) மார்க்ஸ் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்னால் விளக்கியதுபோல, மிகை உற்பத்தி என நெருக்கடி மேலும் முற்றுகிறது. மார்க்சின் மெய்யறிவு ஞான விளக்கத்திற்கு ஒரு நிரூபணமாக இன்றைய பிரச்சனை உள்ளது. (உதாரணத்திற்கு அரசின் களஞ்சியத்தில் உணவு குவிந்து கிடக்க, பல இலட்சம் மக்கள் பட்டினியில் கிடக்கக் காரணம், சிஸ்டத்தின் தோல்வி)
        சீவெல் இவ்வாறு நிறைவு செய்கிறார், “…சோஷலிசத் திட்டமிட்டப் பொருளாதாரமே ஒரே தீர்வு; அதன்படி இந்தப் புவிமண்டலத்தின் செல்வவளம் ஒருசில ஒட்டுண்ணி கோடீஸ்வரர்களின் கைகளில் அகப்படாது, ஒவ்வொரு மனிதனின் நலவாழ்விற்காகச் செலவிடப்படும், அந்த முறையே, ஒரே தீர்வு. முதலாளித்துவம் என்ற கொடுமையான அராஜகத்திலிருந்து அது ஒன்றே நம்மைக் காப்பாற்றும்.”
        உண்மையில் இதுபோன்ற செய்திகள் வெகுகாலத்திற்கு முன்பே வந்து விட்டன. ‘தி எக்கானமிஸ்ட்’ என்பது இடதுசாரி இதழ் அல்ல. 2017ல் அது கூறியது: “இந்தப் பொருள் குறித்து மார்க்ஸ் என்ன எழுதி இருக்கிறார் என்பதிலிருந்து கற்றறிந்து கொள்வதற்கு எவ்வளவோ உள்ளன. மார்க்ஸ் அன்று கூறியது இன்றைக்கும் மிகவும் பொருத்தம் உடையதாக உள்ளது.
2015ல் வெளியான ஒரு புத்தகம், ‘முதலாளித்துவம் எப்படி முடிவுக்கு வரும்’. அதில் ஜெர்மன் பொருளியல், சமூகவியல் அறிஞரான Wolfgang Streeck கூறுகிறார், ‘முதலாளித்துவம் சந்திக்கும் நெருக்கடி, பன்முகத் தோல்விகளை உள்ளடக்கியது. இன்றைக்கு மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து, பிரச்சனையைத் தீர்ப்பதற்கான எந்த ஆயுதமும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறது.’ (Cologne ல் இருந்து செயல்படும், ‘சமூகங்களைப் பற்றி ஆய்வு நடத்தும் Max Planck ஆய்வுநிறுவன’த்தில் அவர் பெருமைமிகு நிகர்நிலை இயக்குநராகவும் உள்ளார்)
சர்வ தேச நாணய நிதியமான ஐஎம்எப் அமைப்பின் Ken Rogoff என்ற முன்னாள் இயக்குநரின் கருத்தின்படி முதலாளித்துவத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையேயான அடுத்த போர், ‘மனிதகுலத்தின் உடல்நலம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வாழ்வதற்கான வாழ்க்கைச் செலவு குறித்தான போராக’ இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.  எனவே கரோனா தொற்றின் நெருக்கடி நம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறது என நம்புவதற்குக் காரணம் இருக்கிறது.
விரும்பினால் சோஷலிசம் வந்திடுமா?
        முதலாளித்துவச் சிஸ்டத்தின் திறமையின்மை ஊரறிந்ததாக நிரூபணமாகி உள்ளது. இந்நிலையில் சோஷலிசத்தை அடைவது என்று நாம் விரும்புவதால் மட்டுமே சாதிக்கப்பட முடியாது. க்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?' என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல, சோஷலிசமும் விழைவதால் விளைந்து விடாது. சமூக எதார்த்தம் என்ற புறச்சூழல் நிபந்தனைகள் உள்ளன. ஆனால் எந்தப் புரட்சிகரப் பாதையிலும் பயணிக்க அகவயச் சூழல் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். இந்தப் பிரச்சனையில் மார்க்சியத்தை மிக உயர்ந்த படைப்பூக்கத்துடன் (வெற்றிகரமாகப்) பயன்படுத்திய ஆசான் மாமேதை லெனின் அவர்களின் கூற்று நினைவுகொள்ளத் தக்கது. புரட்சிக்கான சூழல் கனிந்து விட்டதா என்பதற்கான புறச் சூழல் மற்றும் அகவசச் சூழல் நிபந்தைகள் குறித்து லெனின் பின்வருமாறு எழுதியுள்ளார்:
        “ஆளும் வர்க்கம் அல்லது ஆட்சியின் மேற்கட்டுமான அமைப்புகள், எழுந்துள்ள (புதிய) பிரச்சனையை எதிர்கொள்ள, ஏற்கனவே பின்பற்றிவந்த அதே பழைய வழிமுறைகள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் இன்றி, அவற்றால் இனியும் சமாளிக்க முடியாது என்ற நிலையில்; அதே நேரம் சமூகத்தின் மனிதத் துயர்கள் உச்சத்தை எட்டி, அந்தச் சமூக மனிதர்கள் இனியும் அந்தப் பழைய முறையைப் பின்பற்ற விரும்பாதபோது – அந்நிலையில், மாற்றத்தை ஏற்படுத்த மக்களிடையே ஆகக் கூடுதலான பெருந்திரள் செயல்பாட்டு எழுச்சி ஏற்பட்டு -- மாற்றத்தைக் கொண்டு வர எது நேர்ந்தாலும் சந்திப்போம் என்ற உறுதிப்பாடு உண்டான நிலையில்தான் புரட்சிகர மாற்றம் சாத்தியமாகும்.”
        மேலே விவரிக்கப்பட்ட சமூக எதார்த்தக் களநிலைமை நிபந்தனைகள் ஏற்படாமல் புரட்சி சாத்தியமாகாது என்பது போல (மக்கள் உணர்வான) அகவயச் சூழல் நிபந்தனைகள் பூர்த்தியாகாமலும் புரட்சி சாத்தியமில்லை என்பதையும் அவர் மேலும் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியுள்ளார். 1905ம் ஆண்டிலும் ரஷ்யாவில் புரட்சிக்கான புறச் சூழ்நிலைகள் நிலவிய போதும், அதுவே புரட்சியாக வெற்றிகரமாக மலர்ந்து விடவில்லை; காரணம், பெருந்திரள் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் உழைக்கும் வர்க்கத்தின் சமூக உணர்வின் மட்டம் போதுமானதாகவும் இல்லை, அது விஞ்ஞான முறைப்படி மேலும் முறைபடுத்தப்பட்டு அமைப்பு ரீதியாகப் போதுமான அளவில் அணிதிரட்டி அமைக்கப்படவும் இல்லை – எனவே புறச் சூழல் இருந்தும் புரட்சி சாத்தியமாகவில்லை.
        எனவே கரோனா சூழ்நிலை பாதிப்பின் விளைவு எங்கே திரும்புகிறது; உலக மக்களிடையே போராட்டங்கள் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தும்; பாதிப்பைச் சகஜமாக ஏற்றுக் கொண்டு கடந்து போவார்களா அல்லது (கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கவோ உதவவோ உபயோகமற்ற) சிஸ்டத்தை மாற்றுவதற்காக மக்கள் திரள் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்களா என்பது போன்ற ஒவ்வொன்றையும் பொருத்தே அனைத்தும் அமையும். காரணம், உலகெங்கும் சூழல் ஒன்றுபோல் இல்லை, வெவ்வேறு இடங்களில் பெரிதும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. எனவே என்ன நிகழுமென ஆருடம் முன்கணிக்க இயலாது. ஆனால் இதன் மத்தியில், கரோனா உலகச் சமூகத்தினரிடையே ஓர் உந்துதலை, சிஸ்டத்தை மாற்றுவதற்கான தேவை மற்றும் விழைவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலைப் புரட்சிகர மாற்றத்திற்கான புறச்சூழல் எதார்தத்தின் களநிலைமையோடு ஒப்பிடலாம். இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின், சிஸ்டத்தை மாற்றுவதற்கு ஆதரவான ஒரு பொதுவான சூழல் நிலவவில்லை. அதற்கு மாறாக, இது முற்றிலும் ஒரு புதிய சூழல், ஒரு புதிய வாய்ப்பு. இது நம்பிக்கைக்கான புதிய வெளிச்சம். இந்தப் புதிய வாய்ப்பான சூழ்நிலையை –மாற்றத்திற்கு ஆதரவாக -- மக்கள் திரளைத் திரட்டும் முயற்சியில் மார்க்சிய-லெனினியவாதிகள் முற்போக்கான முதன்மைப் பங்கு வகிக்க முடியும். இந்த அற்புதமான அரிய வாய்ப்பை நாம் புறக்கணித்து நழுவவிடலாகாது.
        ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற தத்துவ போதம் ஊட்டிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் 202வது பிறந்த நாளில்
“மாற்றம் படைப்போம்” என்ற செய்தியை-- உலகின் தொடு வானத்தின் எல்லைவரை கொண்டு சேர்க்கச் சபதம் ஏற்போம்!

குறிப்பு: *’கலாந்தர் பத்திரிகா’ வங்க மொழியில் 1965ல் வார இதழாகத் துவங்கப்பட்டு, 1960பிற்பகுதியிலிருந்து சிபிஐ மாநிலக் கட்சியின் நாளிதழாக வெளிவருகிறது. தற்போது நான்கு வண்ணப் பயன்பாட்டோடு வெளிவரும் நாளிதழின் துவக்க கால ஆசிரியர்களாகச் சோமநாத் லஹரி போன்ற புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். தின நாளேட்டுடன் வாரஇதழும் வெளிவருகிறது. பத்திரிக்கையின் பெயர் தாங்கிய முகப்பை உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குநர் சத்தியஜித் ரே அவர்களே உருவாக்கினார் என்பது சிறப்பு.
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்