Tuesday 28 September 2021

அமைதியான உலகம் சாத்தியம், போரில்லாத உலகைப் படைப்போம்!

 


அமைதியான உலகம் சாத்தியம்,

போரில்லாத உலகைப் படைப்போம்!

--பேரா. டாக்டர் யுகல் ராயலு

            சர்வதேச அமைதி நாளில் அமைதி மற்றும் அகிம்சையின் தூதுவர் மகாத்மா காந்திஜி உரைத்ததை நினைவு கொள்வோம் : “இப்பூமியில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானவை உள்ளன, ஆனால் ஒரு மனிதனின் பேராசையைக்கூட பூர்த்தி செய்யப் போதுமானது இல்லை.”

            ஒரு துண்டு நிலம் அல்லது செல்வத்திற்காவது சதா சர்வ காலமும் போரிடும் குழுக்கள் இடையே நடந்த ஓயாத போர்களின் நாள் முதலாய் நீண்ட தூரம் மனித நாகரீகம் கடந்து வந்துள்ளது. வேறுபட்ட மனிதக் குழுக்கள் ஒவ்வொன்றும் தாங்கள்தான் மேன்மையான உயர்ந்த இனமென்றும்; எனவே மற்றவர்களை அடக்கி ஆள உரிமை பெற்றதாகவும் நினைக்கின்றன. நல்ல வேளை, நம் அறிவியல் தெளிவின் காரணமாக இப்பூமியின் அனைத்து மனிதர்களும் பொதுவான மனிதகுலக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்ற புரிதல் இன்று ஏற்பட்டுள்ளது. நம் அனைவருக்கும் பொதுவான முதாதையரையே நாம் பகிர்கிறோம்.

            காலம் தோறும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவியலாளர்கள், முனிவர்கள் மற்றும் பெரும் தலைவர்கள் எல்லாம் தங்களோடு வாழ்ந்த சக மனிதர்களுக்கு எடுத்துச் சொல்லியபடியே இருந்தார்கள் – வாழ்வதற்கு மிகச் சிறந்த நல்ல வழி அமைதியே! ‘பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி…யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கொன்றே’ என்று பாரதி சொன்னபடி அனைத்துச் சமயங்களும் சமாதான சகவாழ்வு பாதையில் நம்மை அழைத்துச் செல்ல வழிகாட்டின.

            மனிதகுலம் இரண்டு கோரமான யுத்தங்களைப் பார்த்தன. இரண்டாவது உலகப்போரில் பூமித்தாயின் புதல்வர்களும் புதல்விகளுமாக 5கோடி பேர் கொல்லப்பட்டனர். ஒரு சர்வாதிகாரி தான் மேன்மையான உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன் என நினைத்ததே காரணம்! அந்தப் போரில் அழிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடுகட்டித் தருவதற்கு அது போதுமான தொகையாகும். அப்பணத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், நீலவானும் கடலும் சூழ்ந்த இந்த நிலவுலகின் ஒவ்வொரு தாயின் வீட்டு வாசலுக்கே சுத்தமான குடிநீர் வசதியைக் கொண்டு சென்று தந்திருக்க முடியும்.

            இன்று உலகின் எல்லா நாடுகளும் பாதுகாப்புக்காகச் செலவிடும் மொத்த தொகை (1981 பில்லியன் டாலர்) ரூபாய் 91,12,600 கோடி. நகரத்தில் சராசரியாக ரூ10லட்சத்தில் நடுத்தர வசதிகளுடைய வீடு கட்ட முடியும். பாதுகாப்புக்காகச் செலவிடுவதை ஒரு குவியலாக்கி அந்தத் தொகையில் 91 கோடி வீடுகள் கட்டி எழுப்ப முடியும். (‘காணி நிலத்தினிலே ஓர் மாளிகை’ என்ற மகாகவியின் மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்). இந்தியாவில் இருக்கும் மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை சுமார் 40 கோடி. உலகம் முழுவதிலுமே வீடில்லாத குடும்பங்கள் 50 கோடிக்கு மேல் இல்லை.

            உலகம் கெட்ட போரிடுவதை விட்டொழித்தால் சொர்க்கம் மண்ணில் வந்திறங்கும். நான்கு நாடுகள் –இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா – புதிய பீரங்கி கவச வாகனங்கள் (டாங்குகள்) வாங்குவதைக் குறைந்தது ஓராண்டிற்கு தள்ளி வைத்தால், இந்நாடுகளின் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான நல்ல குடிநீர் வசதி செய்து  தர அத்தொகை போதுமானதாகும்.  

            ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த வகையில் 20 ஆண்டுகளில் அமெரிக்கா செலவிட்டது 2 ஆயிரம் பில்லியன் டாலர் (அதாவது, ரூ1,56,65,800  கோடி). ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையே நான்கு கோடிதான். எனவே ஒவ்வொரு ஆப்கானிஸ்தான் குடிமகனுக்கும் அமெரிக்கா 40 லட்சம் செலவிட்டுள்ளது என்பது கொடுமை. இதையே அந்த மக்களின் நலவாழ்விற்காகச் செலவிட்டு இருந்தால், அந்நாடு ஏனைய ஐரோப்பிய நாடுகள்போல வளர்ச்சி பெற்றிருக்கும். அர்த்தமற்ற போரில் அத்தொகை வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கான் குடிமக்கள் மட்டுமில்லாமல் அமெரிக்க வீரர்களும் பலியாகி இருக்கிறார்கள்; அழகிய ஆப்கான் தேசம் பாலைவனமாகி இருக்கிறது.

            நாம் கற்பனை செய்து பார்க்கலாம், மனித நாகரீகம் தனது ஞானத்தைக் கொண்டு போர் என்ற முட்டாள்தனத்தை ஒழித்தால் பிறகு எவ்வளவு செல்வங்களைச் சேமிக்கலாம்? இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் ரூ.5 லட்சம் கோடி. இதன் பொருள் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓராண்டிற்கு ரூ நான்காயிரம் பாதுகாப்புக்காகச் செலவிடுகிறோம் என்பதே. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை சராசரியாக ஆயிரம் எனக் கொண்டால் அந்த 1000 x 4000 என ரூ 40 லட்சம்  அந்தக் கிராமத்தின் வளர்ச்சிப் பணிக்காகச் செலவிடக் கிடைத்திருக்கும். இதுபோல ஒவ்வொரு கிராமம் நகரம் என வளர்ச்சி பெற்று, சில வருட காலத்திலேயே ஏழ்மையும் பசியும் இப்புவியின் முகத்திலிருந்து துடைத்து அகற்றப்பட இயலும்!

            சிலர் கேட்கிறார்கள், உலகத்திலிருந்து போரை ஒழிப்பது சாத்தியமா? இதற்குப் பதில் மிகச் சாதாரணமான ’ஆம்’ முடியும் என்பதே. உலகத்தின் மக்களாகிய நாம்தான் நல்லதொரு வாழ்வை அமைத்துத்தர வேண்டி நமது அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறோம்; போர்களைத் தொடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கவில்லை. குடிமக்கள் அனைவரும் முறையே தங்கள் தேசம் மற்றும் அதைச் சுற்றியும் அமைதியைக் கோரத் தொடங்கினால், உலகத் தலைவர்கள் அத்திசைவழியில் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்படுவார்கள். அமைதியை ஒரு மூலையில் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அது ஓர் உலகளாவிய தேவை. உலக மாந்தர் அனைவர்க்கும் தேவை, அமைதியே!

            இரு நாடுகள் போரிடும்போது அவை இரண்டுமே ஓரிரண்டு நாள் போரில் ஆண்டுக் கணக்கிலான வளர்ச்சியை இழந்து, இரு தரப்பிலேயும் கடும் நட்டங்கள் விளைகின்றன. இந்தப் போரில் ஆதாயம் அடையும் ஒரே தரப்பு, உலகின் மற்றொரு மூலையில் உட்கார்ந்திருக்கும் ‘ஆயுத உற்பத்தியாளர்களே’. (உற்பத்தியாளர்கள் இல்லை, அவர்கள் ‘சாவு வியாபாரிகள்’). அவர்களைத் தவிர போரிடும் நாடுகளில் உள்ள ஆயுத பேரத் தரகர்களும் கமிஷன் ஆதாயம் அடைகின்றனர். இதில் வேடிக்கை அந்த நாடுகளில் ஆயுத பேரங்களில் ஈடுபடுபவர்கள்தாம் தேசபக்தி என்றும் தேசியவாதம் என்றும் உச்சபட்ச கூச்சலை எழுப்புகின்றனர்! இதில் ஆகக்கூடுதலான அதிகபட்சம் முழுமையாக அவதிப்படுபவர்கள் அத்தேசங்களின் பொதுமக்களே!

            காலங்காலமாகப் போர் விரும்பிகள் பேரழிவு ஆயுத விற்பனையை உலகின் சர்வதேச எல்லைகளில் தங்குதடையின்றி நடத்துவதற்காகப் புதிய சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள். டாங்கிகளையும் வெடிகுண்டுகளையும் தேசபக்தி என்றழைக்கின்றனர், ஆனால் உண்மை அதற்கு மாறானதல்லவா! வெடிகுண்டு எதையும் உண்டாக்காது, அது அழிவை மட்டுமே ஏற்படுத்தும்! உருண்டோடும் கவச வாகனம் கட்டட வாழ்விடங்களையும், மனித ஆற்றலின் அடையாளமான அணைக்கட்டுகளையும் அழிக்க மட்டுமே செய்யும்! அது எதையும் உண்டாக்காது. கட்டடங்கள் மற்றும் மற்ற கட்டுமானங்கள் தலையில் போர் விமானங்கள் குண்டு மழை மட்டுமே பொழியும். அந்த இடங்களைப் போர்வெறியர்கள் தங்கள் மொழியில் எதிரியின் நாடு என்று பெயரிட்டு வெறியூட்டும். அழிக்கும் போர் விமானங்கள் மக்களை ஏற்றிச் செல்லாது!

            உண்மை யாதெனில், எந்தப் பிரச்சனைக்கும் போர் தீர்வாகாது. மனித நாகரீகத்தின் மிகப் பெரிய பிரச்சனையே போர்தான்! பிறகு அது எப்படி எந்தப் பிரச்சனையையும் தீர்க்கும்?

            பிரச்சனைகள் பரஸ்பர பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள் மூலமே தீர்க்கப்படுகின்றன. நவீன அறிவியல், அற்புதமான தகவல் தொழில்நுட்ப வசதியை வழங்கியிருக்கிறது. இரண்டு அதிபர்கள் அல்லது பிரதமர்கள் தொலைபேசியை எடுத்துச் சர்வ சாதாரணமாகப் பேச முடியும். தேவை, உரையாடலைத் துவக்குவது என்பதே! பரஸ்பரப் புரிதல் மூலம் இந்த உலகில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளே இல்லை! அருகமை தேசத் தலைவர்கள் இடையேயான சில நிமிட உரையாடல் பல நூறு உயிர்களை, பலகோடி ரூபாய் மதிப்புடைய வாழ்வாதாரப் பொருட்களை (போர்) அழிவிலிருந்து காப்பாற்றும். இதில் விளையும் மிகப் பெரிய லாபம் அமைதியும் அனைவருக்குமான வளர்ச்சியுமே!

            இரண்டாவது உலக யுத்தம் வரை, ஐரோப்பாவின் நாடுகள் தொடர்ச்சியாகப் பதற்றத்திலும் சிலநேரம் போர்களிலும் கூட இருந்தன. பரஸ்பர பேச்சுவார்த்தை, உரையாடல் மற்றும் கவனமான திட்டமிடல் என்ற நீண்டகால கடுமையான நிகழ்முறைக்குப் பின்னர் ஐரோப்பிய யூனியன் பிறந்தது. (புதிய குழந்தை குடும்பத்தில் பிறந்ததும்) அப்பகுதியின் பல எல்லைகளில் போர்கள் முடிவுக்கு வந்தன. பரந்ததொரு நிலப்பரப்பில் அமைதி நிலைநாட்டப்பட்டது. இதனையே பிரதி எடுத்து உலகின் மற்ற பகுதிகளுக்கும் ஏன் விரிவுபடுத்த முடியாது? “தெற்காசிய இறையாண்மை குடியரசுகளின் கூட்டமைப்பு” (Union of South Asian Sovereign Republics) என்ற ஓர் அமைப்பை ஏன் நம்மால் ஏற்படுத்த முடியாது? இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பூட்டான் நாடுகளின் கூட்டமைப்பு, மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய ஒரு பிராந்தியமாகக் கட்டமைப்பது சாத்தியமே. இது பலநூறு கோடி ரூபாயை மிச்சப்படுத்தும், அப்பகுதியே அமைதி மற்றும் வளர்ச்சியின் வளாகமாக மாறும்; அல்லாது போனால் அர்த்தமற்ற எல்லை அத்துமீறல்கள், சீண்டல்கள், மோதல்கள் என சர்வதேச எல்லைகளில் அந்தச் செல்வாதாரம் வீணடிக்கப்படும்.

            நம் முன்னோர்கள் உருவாக்கித்தந்த வளர்ச்சிக் கொள்கையை வெளிப்படுத்தும் வேத வாக்கியம், “வசுதைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்), மகா உபநிஷத் நூலில் இடம்பெற்றது. (அந்தச் சுலோகத்தின் முழுமையான பொருள்: 




“இவர் எனக்கு வேண்டியவர்; அவர் எனக்கு வேண்டாதவர்’ என்று வேறுபாடுகள் காண்பவர் சிறுமதியுடையவர். இவை மிகவும் கீழ்த்தரமான புத்தியின் வெளிபாடாகும். குறுகிய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கடந்த சான்றோர், “இவ்வுலகமே ஒரு குடும்பம்” என்ற உண்மையை உணர்வர்.) இதனை நம் வாழ்வில் உண்மையாக ஆக்க வேண்டிய தருணம் இது. தத்துவம் வாழ்வியல் எதார்த்தமாக வேண்டும், நம் வாழ்வில் அதனைக் கடைபிடிக்க வேண்டும்.  

            உலகக் குடிமக்கள் அனைவரின் தேவை சாந்தியும், சமாதானமும், அமைதியுமே. உணவை உற்பத்தி செய்துதரும் அன்னதாதாக்களாகிய விவசாயிகளுக்கும் அமைதி தேவை. இந்த அழகிய பூமிப் பந்தின் தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் மட்டுமல்ல, பூமித் தாய்க்கே அமைதி தேவை. எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்காக இப்பூமிக் கோளின் அமைதியை நாம் பாதுகாப்போம்! நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அமைதியையும் வளர்ச்சியையும்; போரையும் அழிவையும் அல்ல. உலகில் அமைதியும் சமாதானமும் நிலவட்டும்!

            வேண்டாம், வேண்டாம் அணுகுண்டுகள் வேண்டவே வேண்டாம்!

            வேண்டும் நமக்கு உண்ண உணவும், உலகில் அமைதியும்!

                        “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட 

                          போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!

    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இது எனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்!”

--நன்றி : நியூஏஜ் (செப்.26 – அக்.2)

--தமிழில் : நீலகண்டன், கடலூர்

 

 

No comments:

Post a Comment