Sunday 12 September 2021

தேசிய பணமாக்கும் திட்டம் (என்எம்பி) : காத்திருக்கும் பேரழிவு AITUC தலைவர் வஹிதா நிஜாம்

தேசிய பணமாக்கும் திட்டம் (என்எம்பி) : காத்திருக்கும் பேரழிவு

                                                                                                       


--வஹிதா நிஜாம்

AITUCதலைவர்

--நியூஏஜ் செப்.12 – 18

‘தேசிய (சொத்துக்களைப்) பணமாக்கும் வழித்தடத் திட்டம்’ (NMP) என்ற திருநாமத்துடன் ஞானஸ்தானம் செய்து அரசு அறிவித்தது, வேறெதுவும் இல்லை, ‘மொத்தமாக விற்று’ தலைமுழுகுவது என்பதை மறைத்துச் சொன்னதே. பணமதிப்பிழப்பு புகழ் நரேந்திர மோடியின் அதிகாரப் போக்கு வேதப் புத்தகத்தில் சொன்னபடி, வருவது உரைக்கும் பொருளாதார ஞானியின் அடக்கத்துடன், அடுத்து இம்முறை வெளிவந்துள்ளது ‘பணமாக்கல்’ திட்டம் – எப்படிப்பட்ட திட்டம்? தேசிய செல்வங்களையும் நலவாழ்வையும் காவு கொடுத்து மோடியின் நண்பர்களான பெரும் வணிக முதலைகளின் கஜானாக்களை நிரப்பும் திட்டம். புதிய திட்டம் பற்றி இதுமட்டும்தான் இதுவரை தெரியவந்துள்ளது. சுருக்கமாக பிரம்மாண்டமான பேரம், பெரு வர்த்தக நிறுவனங்களின் நலனுக்காகச் சகாய விலையில் விற்றுவிடுவது. மேலெழுந்தவாரியாக இவ்வளவுதான் என்றாலும், சாத்தானின் தாக்குதல்கள், திட்டத்தின் விரிவான தகவல்களில் மறைந்துள்ளது.

இதற்கு முன் இரண்டாண்டுகளுக்கு முன்பு ‘தேசிய அடிப்படை கட்டமைப்பு வழித்தடம்’ (நேஷனல் இன்ஃப்ரா ஸ்டரக்ஸ்ஸர் பைப்-ஃலைன்) என்ற ரூ102.5 லட்சம் கோடி திட்டம் தொடங்கப்பட்டது; தற்போது மற்றுமொரு பைப்லைன் திட்டம் ரூ6 லட்சம் கோடி திரட்ட அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய யோசனை என்றெல்லாம் டமாரம் கொட்டினாலும் அது புதியது இல்லை. இந்த அரசு வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தது என்பது அறிந்ததுதான்; அப்படி கவர்ச்சிகரமாக அறிவித்து தாங்கள் தாங்கிப் பிடிக்கும் பெருமுதலாளிகளுக்காகத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறது.

            நிதி ஆயோக் வெளியிட்டுள்ள என்எம்பி திட்டத்திற்கான பணமாக்கல் வழிகாட்டி புத்தகம் அதன் புனிதமான நோக்கத்தை “அடிப்படை கட்டமைப்பு மிக முக்கியமாக வளர்ச்சியோடு தொடர்புடையது…” என்பதுடன் ஆரம்பித்து வேலை வாய்ப்புகள் என்றும், சந்தையும், பொருட்களும் கைக்கெட்டுவது என்றும்; வாழ்க்கைத் தர மேம்பாடு மற்றும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு அதிகாரமளித்தல் என்றெல்லாம் தனது பிரசங்கத்தைத் தொடர்கிறது. ஆனால் என்எம்பி-யின் உள்ளடக்கமும் நோக்கமும் மேற்கண்ட அனைத்திற்கும் அப்படியே நேர் எதிரானது. வேலைவாய்ப்புகளைப் பறித்து, பாதிக்கப்படும் நிலையிலுள்ள பிரிவினரின் அதிகாரங்களைச் சாத்தியப்படும் ஒவ்வொரு வகையிலும் அதிகாரமிழக்கச் செய்து இந்தப் பணமாக்கல் திட்டம் சமூகத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தப் போகிறது.

            நலவாழ்வு அரசு என்ற லட்சிய விழுமியத்தை ஏற்று, அதனை அடைவதற்காக முழுமையாக உறுதி பூண்ட இந்தியா, தன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய முதன்மையான  கடமைப் பொறுப்பை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது. மோடி அரசின் கொள்கைகள் வேண்டுமென்றே சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழித்து வருகிறது. ஆழமாக ஏழ்மை பீடித்த இந்தியாவுக்கு, அதுவும் தொற்று காலத்தில் சுமார் 10 கோடி மக்கள் மேலும் ஏழ்மையில் தள்ளப்பட்ட நிலையில், அவர்களுக்கும் பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தினருக்கும் அரசின் ஆதரவு என்பது மிக மிக முக்கியமானது. அந்த ஆதரவை வழங்கி மக்களைக் கை தூக்கிவிடுவதும், அவர்களின் நலனில் அக்கறையுள்ள கொள்கைகளை நோக்கமாகக் கொள்வதும்தான் நல வாழ்வு அரசின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால் தேசிய பணமாக்கல் வழித்தடத் திட்டம் என்பது பொதுமக்கள் பணத்தால் உருவாக்கப்பட்ட தேசிய சொத்துக்களை அரசின் அதிகாரம் மற்றும் ஆதரவோடு வளரும் பெருமுதலாளிகளுக்கு (க்ரோனி கேப்பிடலிஸ்ட்) தாரை வார்ப்பதற்கான வழிகாட்டுத் திட்டம்தான்; மேலும் மக்களைப் பாதுகாப்பதற்கான தனது பங்கை வேண்டுமென்று தெரிந்தே  அரசு சுருக்கிக் கொள்வதும் கைவிடுவதுமாகும்.

பொதுத்துறைகளைப் போட்டியிடும் நிறுவனங்களாக மாற்று

            பொதுத் துறை நிறுவனங்கள் (PSEs) பொதுமக்கள் பணத்தால் நிதியளிக்கப்படுபவை. அவை அரசின் சார்பில் பொருளாதாரச் சேவைகளை வழங்கி நிர்வகிக்கும் அல்லது சமூகப் பண்போடு செயல்படும் நிறுவனங்களாகும்; அரசின் சார்பில் செயல்பட்டாலும்கூட, அவை சுதந்திரமான சட்டபூர்வ நிறுவனங்களாகவே திகழ்கின்றன. அரசு மற்றும் நாடாளுமன்றம் மூலம் நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்புடையவை. ஆனால் இத்தகைய சிறப்புடைய  பொதுத்துறை நிறுவனங்களை அரசு ‘குறைவாகப் பயன்படுத்தப்படும் பிரௌன் ஃபீல்டு சொத்துகள் என்று அழைக்கிறது; அவசர அவசரமாகக் குத்தகைக்கு விடவும் (அதாவது தள்ளுபடியில் விற்க) தயாராகிறது. (பொருளாதாரச் செயல்பாடுகளில், ‘உற்பத்தி வசதிகளோடு பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் ஒரு சொத்து (உற்பத்தி சாதனம்), அதன் திறனுக்குக் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது போன்ற காரணங்களால் குத்தகைக்கு விடப்படும்போது, குத்தகை எடுத்த முதலீட்டாளர் தாமதமின்றி நேரடியாகப் புதிய உற்பத்திகளுக்கு அத்தகைய சொத்துக்களைப் பயன்படுத்த முடியும்’ என்ற வகையிலானவைகளைப் ‘பிரௌன் ஃபீல்டு அஸட்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.) விவாதத்திற்கு இடமின்றி இந்திய நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்த பொதுத்துறை நிறுவனச் சொத்துகள் அதன்  செயல்திறனுக்குக் குறைவாகப் பயன்படுத்தப்படுவதற்கு யார் காரணம்?

            தற்போதுள்ள கொள்கைச் சூழலில் தனியார் நிறுவனங்கள் செழிப்பதற்குப் பொதுவான இடம் இருக்கிறது. (அவற்றோடு) போட்டியிடும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை மாற்ற முடியும். காலத்திற்கேற்ப தேசிய முன்னுரிமையோடு இயைந்து, பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கங்களைச் சரிசெய்து, அவை பொருத்தப்பாடு உடையவையாகத் தொடர, உரிய கொள்கை வரையறை சட்டகங்களை (அரசு) வழங்க வேண்டும். அவற்றின் நிர்வாகத்தில் மேம்படுத்தப்பட்ட கார்ப்பரேட் (கலாச்சார) நிர்வாகத் திறன், ஊழியர்களின் திறன் மேம்பாடு, உற்பத்திக்கான புதிய தொழில்நுட்பங்களை உட்செரித்து ஏற்கும் தன்மை, அகவய கட்டுப்பாடு செயல்பாடுகள் மற்றும் பொறுப்பு வரையறைகள் என்ற குணாம்சங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

            பொதுத் துறைகள் ஊக்கமளிக்கப்பட்டு சந்தையோடு கூட்டிணைவதாக மீண்டும் அவை புத்துயிர்ப்புச் செய்யப்பட வேண்டும். இத்தகைய யுக்திசார் திட்டங்களுக்குப் போதுமான முதலீடு உள்ளீடு செய்ய வேண்டியது தேவை. ஆனால் அரசுக்கு ‘நவ இந்தியாவின் ஆலயங்க’ளைப் பாதுகாக்கவோ காப்பாற்றவோ விரும்பம் ஏதும் இல்லை; மாறாக, அவற்றை வந்தவிலைக்குக் குறைவாகத் தள்ளி விற்றுவிட்டு விரைவாகப் பணம் பண்ணுவதில் கருத்தாக உள்ளது.

ஐரோப்பா, கொரியா மற்றும் நார்டிக் நாடுகளின் நல்ல மாடல்

          ஐரோப்பிய யூனியனின் பல நாடுகளில் ‘அரசுக்கு உரிமையான நிறுவனங்கள்’ (SOE ஸ்டேட் ஓன்டு என்டர்பிரெய்சஸ்) அந்நாடுகளின் மொத்த உற்பத்தி குறியீட்டிற்கு (ஜிடிபி) முக்கியமான பங்களிப்பைத் தருகின்றன; அதிலும் குறிப்பாக, நாட்டின் சந்தை நிலையில் பெரும்பாலும் ஏகபோக அந்தஸ்துடன் எனர்ஜி, குடிநீர் வழங்கல், பொதுப் போக்குவரத்து, எலெக்ட்ரானிக் தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி முதலிய முக்கியமான பொதுமக்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. ஐரோப்பிய யூனியனின் லித்துவேனியா என்ற சிறிய நாடு, தனது நாட்டைத் ‘துறைசார்ந்த நிபுணத்துவமும் புதிய திறனுமுடைய அரசுரிமை நிறுவனங்கள் ஆக்குவது’ என்ற லட்சியத்துடன்  SOE நிறுவனங்களின் சீர்திருத்தத்தைத் தொடங்கி உள்ளது.

            ஸ்வீடன் நாட்டின் வெற்றிகரமான சீர்திருத்தம், SOE நிறுவனங்களைச் சுதந்திரமான உரிமை உடைய தேசியக் கம்பெனிகளாக இயங்கக் கூடியதாக மாற்ற முடியுமெனக் காட்டி உள்ளது. லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் கொரியா நாடுகள் அரசு உரிமையுடைய நிறுவனங்களில் வெற்றிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்தி, அந்நிறுவனங்களை மிக மிக அதிகமாகப் பயன்படக் கூடியவனவாக மாற்றியதுடன், சமூகப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றவும் செய்துள்ளன. 

இவையெல்லாம் முதலாளித்துவ பொருளாதாரங்கள், சிறந்த மாடல்களாக உயர்ந்து நிற்கின்றன. இந்த முதலாளித்துவ நாடுகள் சமூக நலவாழ்விற்கான தங்கள் பொறுப்புணர்வு உறுதிப்பாட்டை மிகத் தீவிரமாக மனதில் கொண்டுள்ளன. இதில் புதியது யாதெனில், நிர்வாக அமைப்பு முறையில் கவனம் குவித்தது. நிறுவனங்களின் அத்தகைய மேலான நிர்வாக அமைப்பு முறை தொழில் நிபுணத்துவம் மற்றும் சுயாட்சி உரிமையை அதிகரிக்க உதவிடும். உலகமே சமூகப் பொறுப்புணர்வு என்ற புனிதமான பக்கத்தை நோக்கித் திரும்பும்போது, இங்கே இந்தியாவில் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை கஜானாக்களை நிரப்பிட மக்களின் நலவாழ்வைப் பலி கொடுக்கும் அநியாயத்தைப் பார்த்து வருகிறோம்.

என்எம்பி திட்டத்தின் நிதி அம்சம் நியாயப்படுத்த முடியாதது

                அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டவே இத்திட்டமென முக்கிய காரணம் கூறப்படுகிறது. இது உண்மையில் நியாயப்படுத்த முடியாதது. இந்தியா தற்போதைய வளர்ச்சி விகிதத்தைப் பராமரிக்க அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக 2030வரை செலவிட 4.5 டிரிலியன் அமெரிக்க டாலர் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அடிப்படைக் கட்டமைப்பு வழித்தடம் திட்டத்தின் கீழ் 102 லட்சம் கோடி அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. அந்த முதல் திட்ட நோக்கத்தின் இணை திட்டமாக என்எம்பி அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு நிதி திரட்டவே திட்டமிடப்பட்டுள்ளது.

                வளர்ச்சிக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் முக்கியமானவையே. ஆனால் அது அரசின் அடிப்படை பொறுப்பு; எனவே அரசு தனது இருப்பு நிதிகளிலிருந்து செலவிட வேண்டுமே தவிர ஆஸ்திகளை நீர்க்கச் செய்யக் கூடாது. அனைத்தையும் உள்ளடக்கிய அடிப்படை கட்டமைப்பு மட்டுமே வளர்ச்சியை நோக்கமாகக் கொள்ளும். பொதுக் கொள்கை சீர்திருத்தங்களும் பௌதீக ரீதியான அடிப்படை கட்டமைப்புகளில் முதலீடும் நிச்சயமாக அனைவரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சி முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றும். தனியார்களிடம் மக்களுக்கான சேவை அளிப்பதைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு நிதி திரட்டுவது என்பது மக்கள் மீது நடத்தப்படும் குரூரமான கேலியாகும்.

            இத்தகைய மிக பிரம்மாண்டமான தொகையில் சொத்துகளைக் காசாக்குவது என்பது அரசு முழுமையாகத் திவால் ஆகிவிட்டதை அம்பலப்படுத்துகிறது; முற்றுமாகத் தோல்வியடைந்த அரசு, பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மீது வரி விதித்துத் தேவையான நிதியைத் திரட்ட விருப்பமின்றி உள்ளது; மேலும் வரி ஏய்ப்புகளைத் தடுப்பதற்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை; மாறாக, தாங்கிப் பிடித்து முதலாளிகளின் தேவைகளுக்குச் சேவை செய்ய எப்போதுமே தயாராக உள்ளது. வருவாய் பற்றாக்குறை மற்றும் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்திற்குக் கொடூரமான பணமதிப்பிழப்பு மற்றும் மோசமான ஜிஎஸ்டி இதனோடுக் கார்ப்பரேட்டுகளுக்கு அரசு வாரி வழங்கிய வாயைப் பிளக்க வைக்கும் வரி குறைப்புகளே காரணமும் பொறுப்பும் ஆகும்.

தனியார் மயத்தைவிட குத்தகைக்கு விடுதல் மோசமானது

            “நாங்கள் தனியார்மயப்படுத்தவில்லை, குத்தகைக்குத்தான் விடுகிறோம். அரசு தொடர்ந்து அந்தச் சொத்துக்களின் உரிமையாளராக இருக்கும்”. இது அரசின் ஒரு மாதிரி சமாளிப்பு உளறல். குத்தகைக்கு விடுதல் என்பது மிக மோசமான தேர்வு. மானிடைசேஷனின் பொருள் ஏதோ ஒன்றைக் காசாக்குதல் என்பதே. என்எம்பி திட்டத்தில் இது, ஒரு தொகையைப் பெறுவதற்காக, வருவாய் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள், அளிக்கும் சேவைகள் மற்றும் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளிடம் (குத்தகைதாரர்) மாற்றி விடுவது. அதாவது, (வருவாய்க்கு வழி செய்யும் முட்டையிடும் கோழியின் உரிமையை விடுவது போல) அரசு அடிப்படையில் வருவாய் உரிமைகளைத் தனி நபர்களிடம் குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்வரும் குறிப்பிட்ட பிரதி பலன் தொகைக்காக மாற்றித் தருகிறது. வேறொரு வகையில் சொல்வதானால், பணமாக்கும் திட்டம் -- முடிவான குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் -- இச்சொத்துக்களைக் குத்தகைக்கு எடுக்கத் தனியார் கம்பெனிகளுக்கு உரிமை வழங்குகிறது.

            சொத்து குறித்த அடிப்படை அம்சங்களில் தனியார் குத்தகைதாரருக்கு அதன் மீது எந்தப் பொறுப்பும் இல்லை. குத்தகை உரிமையாளர் அச்சொத்திலிருந்து ஆகக் கூடுதலாகச் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார். சொத்தின் மீதான பயன்பாட்டுத் தேய்மானம் மற்றும் சேதாரம் முற்று முழுவதுமாக இருந்தாலும் அது அவர் கவலை இல்லை. குத்தகை காலம் முடிந்த பிறகு மதிப்புமிக்க அந்தச் சொத்து குத்தகைதாரருக்குச் சொந்தமாக இருக்கப்போவதில்லை என்பதால் அக்குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே அதன் மதிப்பை உரித்து, லாபங்களை உறிஞ்சி விலகிவிடப் போகிறார்கள். இதனால் இறுதியில் அச்சொத்தின் சாரம் முற்றாக உரிஞ்சப்பட்டு சொத்து அதன் மதிப்பை இழந்து நிற்கும்.

ஏகபோகங்களையும் இரட்டை முற்றுரிமை உடையவர்களையும் எம்எம்பி ஏற்படுத்தும்  

          (ஒரு நிறுவனத்தின் ஆதிக்கம் ஏகபோகம் என்றால், குறிப்பிட்ட உற்பத்தி அல்லது சேவையளிப்பதில் இரண்டு கம்பெனிகளின் தனித்த ஆதிக்கம்  முற்றுரிமையாளர்கள் (Duopolies) எனப்படுகிறது.)

            புதிய பொருளாதாரக் கொள்கை அமலான 1991 --92லிருந்து 2011 –12வரை இந்தியாவில் தொழில் முனைவோர் முதலாளித்துவம் குறைந்துபோய் அந்த இடத்தில் ‘பல நிறுவனங்களின் கூட்டுப் பேரமைப்பு முதலாளியம்’ (‘conglomerate capitalism’ அதாவது பல தொழில்களைச் செய்யும் பல துணை நிறுவனங்களைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனம்) வளர்ந்தது, பல தேசிய (தொழில்) சாம்பியன்கள் ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் இது தனியார் சாம்பியன்களிடையே ஏகபோக குணாம்ச அபாயத்தை அதிகரித்தது. ஒரு பொருளைத் தயாரிக்கும் அல்லது சேவை அளிக்கும் ஏகபோகங்களுக்குப் போட்டி இராது, விலை கட்டுப்பாடும் இருக்காது. அவர்கள் மற்ற நிறுவனங்களை இணைத்துக் கொள்வதையும் வாங்குவதையும் பயன்படுத்தித் தொழில் ஆதிக்கத்தைப் பெற்றுஅத்தொழிலில் சந்தை நுழைவதைத் தடுப்பார்கள். ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் கண்காணிக்கப்படாத ஏகபோகங்கள் வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பார்கள். இதில் மோசமாக பாதிக்கப்படுவது நுகர்கவோர்களே.

இந்தியாவில் நம்பிக்கை மோசடி சட்டங்களின் போதாமை

            அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் முதலாளித்துவப் பொருளாதாரத்தைப் பின்பற்றினாலும் வலிமையான நம்பிக்கை மோசடி(க்கு எதிரான) சட்டங்களை இயற்றியுள்ளன. அச்சட்டங்களின் நோக்கம், ஏற்படக்கூடிய துஷ்பிரயோகங்களைத் தடுத்து ஆரோக்கியமான போட்டி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை வளர்ப்பதேயாகும். அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் தனியார் துறைகளை ஆதரித்து உற்சாகம் அளிக்கிறது; ஆனால் ஒரு தனியார் செயற்பாட்டாளரை மட்டும் உற்சாகப்படுத்துவதுமில்லை, அல்லது அவர் ஏகபோகத்தை ஏற்படுத்துவதையும் ஊக்கப்படுத்துவமில்லை.

            இந்தச் சட்டங்களின் பின்னே உள்ள கருத்து ஒவ்வொரு சந்தையிலும் வலிமையான போட்டி இருக்க வேண்டும். அப்படிப் பல விற்பனையாளர்கள் போட்டியிட்டு நுகர்வோர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை விற்றாலோ அல்லது சேவை வழங்கினாலோ அவர்களால் வாங்குவோர் மீது முறையற்ற உரிமையை எடுத்துக் கொண்டுவிட முடியாது; மாறாக, ஒவ்வொரு விற்பனையாளரும் போட்டியிட்டு தரமான பொருளை நியாயமான குறைந்த விலையில்  விற்பதுடன், நுகர்வோருடன் திறமையான பொறுப்பான வணிக உறவைப் பேணுவார்கள். அப்படி இல்லை என்றால், வாங்குவோர் நல்ல இடம் தேடி வேறு ஒரு நல்ல விற்பனையாளரை நாடிச் சென்று கொண்டே இருப்பார்.

            இந்தியாவில் இத்தகைய நம்பிக்கை மோசடிக்கு எதிரான சட்டங்கள் அந்தக் கடமையை நிறைவேற்றுமளவு சிறப்பாக இல்லை. இதனால் ஏகபோகங்கள் உண்டாக்கப்படும், அதற்கு என்எம்பி ஒதுங்கி பெரும் வழி அமைத்துத் தரும்.

இந்தியா பின்நோக்கி

          முன்னேறிய நாடுகளில் பெரும் அரசு நிர்வாக சகாப்தம்  மீண்டும் எழுகிறது. சமீபத்தில் பிரிட்டன், இரயில்வே துறையை மறு தேசியமயமாக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. 1993ல் பிரிட்டிஷ் இரயில்வேத் துறையைத் தனியார்மயமாக்கியது தோல்வி அடைந்த திட்டமென பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். இதன் விளைவு, “சிதறுண்டது, குழப்பம் மற்றும் கூடுதலான சிக்கல்க”ளுக்கு வழிகோலியது மட்டுமே என்றார். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் அரசு, அமெரிக்க வரலாற்றில் “அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக” மிகப் பெரிய தொகையைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது; அந்தத் தொகையில் சாலைகள், பாலங்கள், தண்ணீர் கட்டமைப்புகள், (இணையதள) சைபர் பாதுகாப்பு மற்றும் அகலக் கற்றை (பிராடு பேண்ட்) முதலியனவற்றிற்கு நிதியளிப்பதும் அடங்கும்.

            சிங்கப்பூர் நகரிய ரயில்கள் மற்றும் சிக்னலிங் சிஸ்டங்களைத் தேசியமயப்படுத்த உள்ளது; காரணம் அதன் முக்கியமான தனியார் செயல்பாட்டாளர் ரயில்கள் பராமரிப்பில் முதலீடுகளைக் குறைத்ததால் அடிக்கடி ரயில்கள் பழுதுபட்டு நின்றதும், தவிக்கவிடப்பட்ட பயணிகளின் கோபம் கொண்டதுமே கண்ட பலன். நியூ சௌத் வேல்ஸ் நாட்டில் மின்சாரக் கம்பங்களும் கம்பிகளும் தனியார்மயமாக்கப்பட்டதற்குப் பிறகு ஐந்தாண்டுகளில் மின்சாரத்தின் விலை இரண்டு மடங்கானது; இதனால் அரசு வாடிக்கையாளர் மீதானச் சுமைகளைக் குறைக்க உடனே தலையிட்டு ‘எனர்ஜி சாத்தியப்பாடு தொகுப்புத் திட்டம்’ கொண்டு வந்துள்ளது. 

            ஆஸ்திரேலியாவில் 2013ல் முதலில் கெம்ளா துறைமுகத்தையும் சிட்னிக்கு அருகே பாட்டனி துறைமுகத்தையும் குத்தகைக்கு விடுவதிலிருந்து அங்கே சொத்து மறு சுழற்சி (அஸட் ரீசைக்கிளிங்) வேகம் தலையெடுத்தது. ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவினுடைய ‘போட்டி மற்றும் வாடிக்கையாளர் கமிஷன்’ அமைப்பின் தலைவர் ராட் சிம்ஸ், ‘தனியார்மயம் எதிர்பார்த்த திறமையை நோக்கி முன்னேறவில்லையானால், பிறகு சொத்து மறுசூழற்சி அல்லது தனியார் மயத்தைத் தவிர்ப்பதே நல்லது” என எச்சரித்துள்ளார்.

            என்எம்பி குறித்த நிதி ஆயோக்கின் ஆவணத்தில் ஓர் அத்தியாயத்தில் ஆஸ்திரேலிய அஸட் ரீசைக்கிளிங் அனுபம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் தங்களுக்கு ஏற்றபடி அந்த அனுபவத்தைச் சிதைத்துக் கூறி பொய்யான ஒன்றைஅரங்கேற்ற முனைந்துள்ளது.

வேலை வாய்ப்பின் மீது தாக்கம்

            இந்தியப் பொருளாதாரம் உற்சாகமிழந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது; குறிப்பாக, வேலையில்லா இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிப்பதாக உயர்ந்து உலகிலேயே இந்தியாதான் இதில் மிக மோசமாகச் செயல்படும் நாடாக உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்க அரசிடம் கொள்கை இல்லை, வழியோ அல்லது செயல் திட்டமோ இல்லை. இந்தியச் சொத்துக்களை 25ஆண்டுகளுக்குத் தனியாருக்குக் குத்தகைவிடும் திட்டம் எதார்த்தத்தில் வேலை வாய்ப்புகளை அடைப்பதுடன், உடனடியாக வேலையில் இருக்கும் லட்சக் கணக்கானவர்களை வேலையைவிட்டுத் துரத்தும் உண்மையான அபாயமும் உள்ளது. மேலும் ஏகபோகம் அல்லது இரட்டை முற்றுரிமையில் அவற்றின் முதலாளிகளால் தொழிலாளர்கள் மிக மோசமாக நடத்தப்படுவார்கள் என்பது உண்மையான ஆபத்தாகும். தொழிலாளர்களின் பேர உரிமை நிச்சயம் சுருங்கும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியாவில் ஏகபோகத்திற்கு எதிரான சட்டங்கள் இல்லை.

மோசமாக பாதிக்கப்படுவது நுகர்வோரே

            தேசிய பணமாக்கும் வழித்தடத் திட்டத்தில் தனியார் செயல்பாட்டின் மீது கண்காணிப்பு, மேற்பார்வை அல்லது ஒழுங்குபடுத்தும் அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. கிடைக்கும் சேவைகள், நுகர்வோர்களுக்குக் கட்டுப்படியாகும் தன்மை மற்றும் சேவை அளிக்கப்படும் தரம் இவற்றின் மீது அரசுக்கு இத்திட்டத்தில் எதையும் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ‘பணமாக்கும்’ திட்டத்தின் கீழ் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள சேவைத் துறைகளுள் 13 கேந்திரமான பிரிவுகள் உள்ளன: அவை இரயில்வே, சாலைப் போக்குவரத்து, மின்சாரம் போன்ற எரிசக்தி உற்பத்தி, தொலைத் தொடர்பு முதலானவை அடங்கும். இந்த அழிவுதரும் யோசனையின் பாதிப்புகளைச் சுமக்கப் போவது நுகர்வோர்களும், வசதி சலுகை குறைவானவர்களும், நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே. போக்குவரத்து, மின்சாரம், மொபைல் கட்டணமென ஒவ்வொரு சேவைகளின் விலையும் அதிகரித்து மக்களின் வாழ்க்கையை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.

            நிதி ஆயோக்கின் என்எம்பி ஆவணத்தின் நுழைவாயில் முகவுரை ‘வளர்ச்சி’ எனப் பேசுகிறது. அதன் பொருள் தேசத்தின் வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு என்பதாயின், பிறகு சமூக மேம்பாட்டின் வளர்ச்சி செயல்முறையில் மக்களை முன் நிறுத்துத்திட அக்கறை மற்றும்  கவனத்தைக் குவித்தல் அவசியம். ஒவ்வொரு தனிமனிதனின் நலனை மேம்படுத்துவதாகவும் திட்டத்தின் பலன் முழுமையாக அவர்களுக்குக் கிட்டுவதாகவும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அது பொருள்பட வேண்டும். அவ்வாறாயின் அனைத்துக் குடிமக்களும் தங்கள் கனவுகளை நோக்கி கண்ணியத்துடனும், நம்பிக்கையுடனும் சுலபமாகப் பயணிப்பதை உறுதி செய்வதாக அதன் பொருள் விரிய வேண்டும். ஆனால் அரசு அனைத்து வகைகளிலும் எதையெல்லாம் செய்கிறதோ, அவை அப்படியே நேர் எதிரானது. எனவே தேசிய பணமாக்கும் வழித்தடத் திட்டம் மோசமானது, அழிவு ஏற்படுத்தக்கூடியது, மக்களுக்கும், நாட்டுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது.

            அதனை எதிர்க்கும் நமது போராட்டங்கள் மேலும் ஒற்றுமையாகத் தீவிரமாகட்டும்!

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 2286

 

 


No comments:

Post a Comment