Friday 10 September 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 49 என்கே கிருஷ்ணன்

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 49


என்கே கிருஷ்ணன் :

விஞ்ஞான பூர்வ சிந்தனையாளர்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் செப். 05 – 11

            என் கே கிருஷ்ணன் 1913 ஏப்ரல் 12ம் நாள் கொச்சி சமஸ்தானத்தின் (தற்போது கேரள மாநிலப் பகுதி) நாடவரம்பா கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவரது குடும்பம் ‘சேரயத்து மடம்’ என்றழைக்கப்பட்ட வாழை மரங்கள், தென்னை மரங்கள் நிறைந்த தோட்டத்துடன் அமைந்த மிகப் பெரிய சுற்றுக்கட்டுள்ள வீட்டில் வாழ்ந்தது. தந்தை என் டி நாராயண அய்யர். கிருஷ்ணனின் பெற்றோர் திருச்சூர், அதன் பின் 1918ல் எர்ணாகுளத்திற்கும் மாறினார்கள். பள்ளியில் ஐந்து வயதில் நுழைந்த கிருஷ்ணன் அப்போதிருந்தே பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் முதல் மாணவராகக் கல்வியில் சிறந்து விளங்கினார்.

கிருஷ்ணன் நான்காம் வகுப்பில்  கொச்சி அரசின் கல்வி உதவித் தொகைக்கான தேர்வில் முதலாவதாக வந்து ஒரு பதக்கமும் பெற்றார். 1922ல் (பாலக்காடு) சித்தூருக்கு மாறியதால் சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் பரந்த வாசிப்பு, கீட்ஸ் முதல் ஷெல்லி வரை, சேக்க்ஷ்பியர் என ஆங்கில இலக்கிய ஆளுமைகளின் நூல்களையும் அவற்றோடு சமஸ்கிருதமும் படித்தவர், கர்னாடக சங்கீதம் மற்றும் டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

1926 வடக்கஞ்சேரியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று கொச்சி மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். முதலில் திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியிலும் பின்னர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியிலும் சேர்ந்தார். மெட்ராஸ் மகாகாணத்திலேயே முதல் மாணவராக வந்து 1930ல் இன்டர் தேர்வில் வென்றார்.

1930ல் மெட்ராஸ் பிரிஸிடென்சி கல்லூரியில் எம்ஏ (கணிதம்) படிப்பில் சேர்ந்தார்.

அரசியலில் தொடர்பு

            அந்தக் கல்லூரியில் 1929ல் ஹெச் வி காமத் ( பின்னாட்களில் ஐசிஎஸ் தேர்வில் வென்று ஆங்கில அரசின் அதிகாரமிக்கப் பதவியில் இருந்தவர் அதனை உதறித் தள்ளி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். பின்னர் சுபாஷ் சந்திர போசின் பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தவர், அரசியல் அமைப்பு நிர்ணய சபை உறுப்பினராக அடிப்படை உரிமைகளுக்காக வாதாடியவர், இருமுறை எம்பி) தலைமையில் மாணவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்கள். 1930ல் கல்லூரியில் அனைத்திந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது; அதைக் கல்லூரி முதல்வர் தடுத்து நிறுத்த முயன்றார். (அன்றைய நாட்களில் எளிய உணவகமாக இருந்த மைலாப்பூரின்) ‘ஹோட்டல் தே பிச்சு’ அவர்கள் சந்தித்து விவாதிக்கும் இடமாயிற்று. 1934ல் அவர் இரவீந்திர நாத் தாகூர் செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.  

இங்கிலாந்தில்

          எம்ஏ தேர்வுக்குப் பிறகு மேல் படிப்புக்காகவும் ஐசிஎஸ் தயாரிப்புகளுக்காகவும் பெற்றோர் அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினர். 1934ல் எஸ்எஸ் நால்தேரா கப்பலில் இங்கிலாந்து புறப்பட்டார். டில்பரி என்ற இந்திய மாணவர்கள் விடுதியில் தங்கியவர் பின்னர் பல்வேறு இடங்களில் பணம் தந்து தங்கும் விருந்தாளியாக இருந்தார். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (எல்எஸ்இ) சேர்ந்தார். (டென்மார்க், பின்லாந்து, நார்வே போன்ற நாடுகள் சேர்ந்த வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லாண்டிக் பகுதியான) நார்டிக் நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைதல்

            1930களின் மத்திய காலம் ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் பாசிச எதிர்ப்பு எழுச்சி இயக்கங்களின் காலமாக இருந்தது. ரீடிங் ரூமிற்கு (படிப்பகம்) எப்போதும் செல்லும் வழக்கம் உடையவரான கிருஷ்ணன் பல கம்யூனிஸ்ட்களை அங்கே சந்தித்தார். மார்க்ஸிய நூல்களை விடாது படிப்பவராக மாறியவர், விரைவில் கிரேட் பிரட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) யுடன் தொடர்பு கொண்டு அதில் தீவிரமாக ஈடுபட்டார். ‘டெய்லி ஒர்க்கர்’ மற்றும் ‘லேபர் மன்த்லி,’  ரஜினி பால்மே தத் எழுதி வந்த ‘மாதாந்திரக் குறிப்புகள்’ என தினசரி, மாதாந்திர இதழ்களைத் தொடர்ந்து படிக்கலானார். வான வீதியின் பெரும் பரப்பு போன்ற விரிந்த சிந்தனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் முதலானவர்களுடன் தொடர்பு கொண்டார்.

            கம்யூனிச எதிர்ப்பு கொண்ட கல்லூரி முதல்வரின் போக்கு பிடிக்காமல் அவர் கல்லூரி மாறினார்; பேராசிரியர் ஹைமன் லெவியின் கீழ் ஹைட்ரோ-டைனமிக்ஸ் பாடப்பிரிவில் சேர்ந்தார். பேராசிரியர் இதயத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு மென்மையான இடமிருந்தது, அவர்கள் உறவும் சுமுகமாகச் சென்றது.

            அவரது கம்யூனிசக் கருத்தோட்டம் காரணமாக ஐசிஎஸ் தேர்வில் நிராகரிக்கப்பட்டார். ஒரு வாரம் வேல்ஸ் பகுதி சுற்றுப் பயணம் செய்தவர், அங்கே நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் எத்தகைய மோசமான வறுமையிலும் துன்பங்களிலும் வாழ்வதைக் கண்டார்.

            கிருஷ்ண மேனன் தலைமையிலான இந்தியா லீக் அமைப்பில் தீவிரமாகப் பங்கேற்றார். ஹேரி பொலிட், ரஜினி பால்மே தத் (RPD), பென் பிராட்லே, ஜேம்ஸ் குலுக்மென், மைக்கேல் கேரிட், எமிலி பர்ன்ஸ், வில்லியம் கல்லாச்சர் முதலான பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களோடு கிருஷ்ணனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. கேரிட் வங்காளத்தில் முன்பு ஐசிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது விடுதலை இயக்கத்திற்கும் இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கும் உதவியவர். பின்னர் பதவியை உதறிவிட்டு கிரேட் பிரட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

            முடிசூட்டு நாளின்போது 1935ல் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘டெய்லி ஒர்க்கர்’ பத்திரிக்கையை விற்றுக் கொண்டிருந்ததற்காகக் கிருஷ்ணன் லண்டனில் முதன் முறையாகக் கைதானார்.

            இந்தியக் கம்யூனிஸ்ட்கள் கட்சிக் கிளைக்குச் செயலாளர் ஆனார் கிருஷ்ணன். பால் ரோபிசன், நேரு முதலானவர்கள் லண்டன் வந்தபோது அவர்களை அவர் சந்தித்தார். 1930களில் பாரீஸில் நடைபெற்ற சர்வதேச மாணவர் மாநாடுகளில் யூசுப் மெகர்லே, பார்வதி, ஹக்ஸ்சர், கே டி சாண்டி முதலானவர்களுடன் கிருஷ்ணன் பங்கேற்றார். பிரெஞ்ச் மொழி அறிவால் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பும் பிற பிரெஞ்ச் இதழ்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது. மேலும் அவர் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட்களான (இரண்டாம் உலகப் போரில் நாஜிகளால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்) கேப்ரியல் பெரி, (பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுச் சாதித்த) ஜாக்யூஸ் டக்ளஸ், (நீண்டகாலம் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் 1946 -47ல் துணைப் பிரதமராகவும் இருந்த) மௌரிஸ் தோரெஸ், (கட்சி தினசரி பத்திரிக்கையின் முதல் ஆசிரியரான) மார்ஸெல் முதலானவர்களின் நூல்களையும் படித்தார்.

            சிபிஐ கட்சிப் பத்திரிக்கையான ‘நேஷனல் ஃப்ரண்ட்’ இதழுக்காகப் பணியாற்றிய கிருஷ்ணன், கட்சிக் கல்வி முகாம்களை அமைத்தும், மாணவர் அமைப்புகளான (கேம்பிரிட்ஜ்) மஜ்லிஸ் மற்றும் மாணவர்களுக்கான இந்தியச் சம்மேளனமான FEDIND அமைப்பிலும் பணியாற்றினார். நேஷனல் ஃப்ரண்ட் பத்திரிக்கை விற்பனை 300ஆக அதிகரித்தது. கட்சிக் கிளையில் பூபேஷ் குப்தா, ஹக்ஸர், நிகில் (சக்ரவர்த்தி), ரேணு (சக்கரவர்த்தி), ஜோதி பாசு முதலான பலர் இருந்தனர். ஃபெரோஸ் காந்தி மற்றும் இந்திரா காந்தியும் அங்கே இருந்தார்கள். இந்தியா லீக் அமைப்பில் அவர் ஃபென்னர் புரோக்வே, ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் மற்றும் சிலரையும், கேடிகே தங்கமணியையும் சந்தித்தார்.

            பார்வதி குமாரமங்கலத்தை 1938 நவம்பரில் ஆக்ஸ்ஃபோர்டில் என்கே சந்தித்தார்.

இந்தியா திரும்பல்

            இரண்டாம் உலக யுத்தம் மூளும் நிலையில் 1939 ஜூனில் இந்தியா புறப்பட்டார். (மேலே குறிப்பிட்ட) மைக்கேல் கேரிட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவரது உறுப்பினர் சான்று ஆவணங்கள் (கிரடென்ஷியல்ஸ்), சில அறிக்கைகளையும் கொடுத்தனுப்பினார். கிருஷ்ணன் 1939 ஜூலை 17ல் பம்பாய் வந்தடைந்தார்; சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடமிருந்த ஆவணங்களைக் கண்டறியத் தவறிவிட்டார்கள்.

            கிருஷ்ணனைச் சந்தித்த பிசி ஜோஷி அவரிடம் நீண்ட நேரம் பேசினார். முழுநேரக் கட்சி ஊழியராக மத்தியக் குழு தலைமையகத்தில் அவர் இணைந்தார். அவர் சாரி குடும்பத்தினர் (ஏஎஸ்ஆர் மற்றும் தில்ஷத்)துடன் தங்கினார்.

            கட்சித் தலைமையக ஊழியர்களுக்காக விரிவான மார்க்ஸிய படிப்பு பாடத் திட்டத்தைத் தயாரித்த கிருஷ்ணன், வகுப்புகளில் அதன் மீது விளக்கவுரைகள் ஆற்றினார். அதற்கு அனைத்து வகைகளிலும் ஓர் இளம் மாணவர் விர்சுக் பாண்டியா உதவினார். அகாலமாக இளம்வயதிலேயே அவர் 1942ல் இறந்தார். பிறகு ஆஜாய் கோஷின் ‘குருவிக் கூடு’ (‘den’) இடத்திலும் அதன் பின் 1940ல் கட்டாரே மற்றும் டிபி சின்ஹாவும் தங்கியிருந்த (டாக்டர்) அதிகாரியின் குருவிக் கூடு வீட்டிலும் தங்கினார். (கேரளாவில் பிறந்த கம்யூனிஸ்ட், நேஷனல் ஃப்ரண்ட் பத்திரிக்கையில் பணயாற்றிய எழுத்தாளரான TK) கோவிந்த் வித்யார்த்தியும் பக்கத்திலேயே இருந்தார்.

            1940ல் கிராக்கிப்படிக்கான வேலைநிறுத்தங்கள் தொடங்கியபோது தம்பித்கர், பட்கர், முகமது ஷாகீது, பார்வதிபாய், போகேல் போன்ற தலைவர்களோடு பழகி அறிந்து கொண்டார்.

            மற்றவர்களோடு கிருஷ்ணன் (பம்பாயின்) மிகக் கொடுமையான பைகுல்லா சிறையிலும் பின்னர் நாசிக் சிறைக்கும் மாற்றப்பட்டார். சிறையில் சர்தேசாய் மற்றும் கிருஷ்ணனைச் செயலாளர்களாகக் கொண்ட கட்சி குழு அமைக்கப்பட்டது. உடனிருந்த 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கைதிகளும் கம்யூனிஸ்ட்டுகளுடன் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தனர். ஜலாலுதின் புக்காரி உருது மொழியில் வகுப்புக்களை நடத்தினார்.

            1942 ஏப்ரல் 28ல் என்கே விடுதலையானார். அகில இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) மற்றும் பம்பாய் மாணவர் சங்கம் (BSU) அமைத்திட உதவியவர் அதற்காக நர்கிஸ் பாட்லிவாலா போன்றவர்களுடன் ஒத்துழைத்தார். சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி (இராஜாஜி) அவர்களையும் சந்தித்து நீண்ட நேரம் அவருடன் விவாதித்தார். மெட்ராஸ் மாகாணக் கட்சியை மறுசீரமைத்திட 1942 ஜூனில் சேலத்தில் இருந்தவர் தென்பகுதிகளின் மாணவர் பெருமன்ற மாநாட்டினை ஏற்பாடு செய்ய பார்வதி, எஸ் இராமகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரனுடன் உதவினார். சுப்ரமணிய சர்மா, மோகன் குமாரமங்கலம், பி சீனுவாச ராவ் உட்பட அப்போது விடுதலையான சில தலைவர்களும் இருந்தனர். மாகாணக் குழுவை அமைத்திடும் பொறுப்பைக் கிருஷ்ணன் மற்றும் சுந்தரையாவிடம் பிசி ஜோஷி ஒப்படைத்திருந்தார். திருச்செங்கோட்டில் டாக்டர் சுப்பராயனின் மிகப் பிரம்மாண்டமான மூதாதையர்கள் வீட்டில் என்கேவும் மற்றவர்களும் தங்கியிருந்தனர். சுப்பராயனின் மனைவி ராதாபாய் சுப்பராயன் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.

            நாடறிந்த புகழ்வாய்ந்த சுப்பராயன் குடும்பத்தினர் அரசியல், சங்கீதம், இராணுவம், கம்யூனிஸ்ட் இயக்கம் போன்ற பல துறைகளில் நாட்டிற்கு அபாரமான பங்களிப்புகளைச் செய்தவர்கள். இராதாபாய் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர், மத்திய சட்டமன்றத்தில் அங்கம் வகித்த முதல் பெண் பிரதிநிதியாவார். மெட்ராஸ் முதலமைச்சரானவர் டாக்டர் சுப்பராயன். பார்வதியும் மோகனும் அவர்களது இரண்டு குழந்தைகள்.

திருமணம்

            இந்த இல்லத்தில்தான் கிருஷ்ணனும் பார்வதியும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்தனர். அதன்படியே பம்பாய் ராஜ்பவன் கட்சி தலைமையகத்தில் 1942ல் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். (அந்தத் திருமணம் பற்றி இந்த வரலாற்றுத் தொடரில் பார்வதி கிருஷ்ணன் குறித்த 6வது கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கப்பட்டது:

   சுதந்திரத்திற்கு முன்பே பார்வதி கட்சியின் முழுநேர ஊழியராகி, பாம்பேயில் கட்சி தலைமையகத்தில் பணியாற்றினார். சிபிஐ பொதுச் செயலாளர் பிசி ஜோஷியின் தனிச் செயலாளரானார். கட்சியின் புகழ்பெற்ற தலைவர் என்கே கிருஷ்ணன் அவர்களை மிக எளிய விழாவில் வாழ்க்கை துணைவராக, ‘அவர் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் மாட்சிமை பெற’ மணமுடித்தார். எளிய விழா எனில், திருமண விழாவின் மொத்த செலவே இருபது ரூபாய்தான்! ஏஎஸ்ஆர் சாரி, மோகன் முதலிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.)

            பம்பாய் திரும்பியதும் என்கே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

1942 இயக்கம்

            1942 ஆகஸ்ட் 8ம் நாள் பம்பாய் ‘கவாலியா டேங் மைதான’த்தில் மகாத்மா காந்தி ‘செய் அல்லது செத்து மடி’ என்ற முழக்கமிட்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் அறிவித்தபோது கிருஷ்ணன் அங்கிருந்தார்.  [காய் (பசு), வாலா (மாட்டுக்காரர்) சேர்ந்து ‘கவாலியா’ என்றானது. தென் மும்பையைச் சுற்றி வாழ்ந்த மக்கள் அங்குள்ள தண்ணீர் தொட்டியில்தான் தங்கள் பசுக்களைக் குளிப்பாட்டுவது வழக்கம். இன்று ஆகஸ்ட் கிராந்தி அல்லது ‘ஆகஸ்ட் புரட்சி மைதானம்’ என்று அழைக்கப்படுகிறது].

            பிரிட்டிஷாருடன் கம்யூனிஸ்ட்டுகள் கூட்டு சேர்ந்து விட்டனர் என்றும் பிசி ஜோஷி இரகசியமாக பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் ரெஜினால்டு மாக்ஸ்வெல்-லைச் சந்தித்தார் என்றும் பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது. என்கே கிருஷ்ணன் சக்திமிக்க சிறு துண்டுப் பிரசுரம் எழுதி வெளியிட்டு  ‘மாக்ஸ்வெல் கடிதம்’ போலியானது என்பதை நிரூபித்தார்.

யுத்த ஆண்டுகளும் கட்சி கம்யூன் வாழ்வும்

                பிசி ஜோஷி முன்னெடுப்பில் பம்பாய் ராஜ்பவனில் அமைக்கப்பட்ட கட்சி கம்யூன் (கூட்டுக் குடில் வாழ்க்கை) சிபிஐ வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது. அதில் என்கேவும் பார்வதியும் அங்கம் வகித்தனர். அந்த இடத்தில் மத்திய கட்சி அலுவலகங்கள், பொலிட் பிரோ, மத்திய கமிட்டி, செய்திப் பத்திரிக்கைகள், நூலகம் முதலிய அனைத்தும் இடம் பெற்றன. ஊதியம் போதுமானதாக இல்லாதபோது தனிப்பட்ட நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட என்கேவும் மற்றவர்களும் இரண்டாம் தர பழைய ஆடைகளைச் சேகரித்து வருவார்கள்.

                தேசிய மற்றும் சர்வதேசிய புகழ்பெற்ற ஆளுமைமைகள் கூட்டுக் குடிலுக்கு விஜயம் செய்துள்ளனர்: சுப்பராயன், இராஜாஜி, உதய் ஷங்கர், வள்ளத்தோல், எட்கர் ஸ்நோ, ‘லைப் மேகஸீன் இதழின் மார்கிரட் போர்க் ஒயிட், ‘காலீயர்ஸ் மேகஸீ’னின் பெட்டி காலியர் முதலானவர்கள் வந்துள்ளனர்.

            1943 பம்பாயில் நடைபெற்ற முதலாவது கட்சிக் காங்கிரஸில் என் கே கிருஷ்ணன் மத்திய கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செம்படை மற்றும் சோவியத் மக்களுக்கு வாழ்த்துக் கூறும் முக்கிய தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார்.

மெட்ராஸ் (இராஜதானி) மாகாணத்தில்

          1943 முதல் 47 வரை என்கே மெட்ராஸ் மாகாணத்தில் சிபிஐ ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவினார்; சிஎஸ் சுப்பிரமணியம், மணலி கந்தசாமி, சீனுவாச ராவ் மற்றும் பிறரை ஒரு குழுவாக அவர் ஒன்றுபடுத்திக் கொண்டு வந்தார்.

            திருச்சி பொன்மலைக்குப் பார்வதியுடன் 1943 மார்ச்சில் வந்த என்கே தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் (எஸ்ஐஆர் லேபர் யூனியன்) படிப்பு வட்டங்களில் விரிவான வகுப்புகள் எடுத்தார். மாணவத் தோழர்களுக்காகக் கட்சிக் கல்வி முகாம் ஸ்ரீரங்கத்தில் ஏற்பாடு செய்து நடத்தினார். எம்எஸ் கிருஷ்ணன், என்சி ஸ்ரீனுவாசன் மற்றும் எம்சி நரசிம்மன் கலந்து கொண்டனர்.

           


1942ல் அகில இந்திய கிசான் சபா (பீகார்) பிட்டா மாநாட்டில் பிசி ஜோஷியுடன் என்கே சென்றார். சோவியத் யூனியன் நண்பர்கள் அமைப்பு (FSU), பெண்கள் இயக்கம், மாணவர் பெருமன்றம் முதலானவற்றின் பொறுப்பாளராகக் கவனித்துக் கொண்டார். கலை இலக்கியவாதிகளான பிரேம் தவான், பால்ராஜ், பிரிதிவி ராஜ் கபூர், இஸ்மத் சௌக்தாய் மற்றும் புகழ் பெற்ற ஆளுமைகளை என்கே தனது பணிகளின் மத்தியில் சந்தித்தார்.

1946 கப்பல் படை எழுச்சி (இராயல் இந்தியன் நேவி) கிளர்ச்சியில் என்கே தீவிரமாகப் பங்கு பெற்றார்.

மதுரை சதி வழக்கு, 1947

                மாகாணம் முழுவதும் 1947 ஜனவரியில் என்கே, வெங்கட்ராமன், இஎம்எஸ், பி இராமமூர்த்தி, ஏகேஜி, மோயாராம், கே முருகேசன், என் ராஜ்சேகர ரெட்டி முதலானோர்    உட்பட சுமார் 100 கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் என்கே மகாணத்தின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் (பார்வதியின் தந்தை) வீட்டில் தங்கியிருந்தார். விடியற்காலை 2 மணிக்கு என்கே போலீஸ்காரர்களால் கைது செய்யப்படுவதற்கு முன்பு குளியலறையிலிருந்து சுப்பிரமணிய சர்மா தப்பிச் செல்ல உதவினார். 1947 ஆகஸ்ட் 15, இந்திய விடுதலை நாளில், என்கே விடுதலையானார்.

பிடிஆர் காலம்

            பிடிஆரும், கிருஷ்ணனான தான் உட்பட மற்றவர்கள் எப்படிப் பிசி ஜோஷியை இன்னும் கூடுதலான தீவிர’ப் பாதையைப் பின்பற்றும்படி 1946 மத்திய கமிட்டி கூட்டம் நடந்ததிலிருந்து வற்புறுத்தினோம் என்பதை என்கே விவரித்துள்ளார். 1947 செப்டம்பரில் என்கே விடுதலையான போது உட்கட்சி மோதல் கூர்மையடைந்து, 1948 பிப்ரவரி மார்ச்சில் கல்கத்தாவில் நடந்த இரண்டாவது கட்சி காங்கிரஸில் குழுப் போக்கு தாவிப் பாய்ச்சல் சாகசப் பாதை (sectarian adventurist line) என்ற உச்ச கட்டத்தை அடைந்தது. கிருஷ்ணன் அந்தப் பாதையை முழுமையாக ஆதரித்தார். அப்போது அவர் 9 உறுப்பினர்கள் கொண்ட பொலிட் பீரோவில் ஓர் உறுப்பினராக இருந்தார்.

            கிருஷ்ணன் எழுதுகிறார்: “தேசிய பூர்ஷ்வாக்களின் இரட்டைப் பங்களிப்பு குறித்து லெனினிய போதனைகளை மறுத்து, கட்சி இளம்பிள்ளைவாத குழுப்போக்கு மற்றும் இடது சாகசப் பாதை தீர்மானத்தை மேற்கொண்டது; அது, ‘பணிசார்ந்த நோய்’ போல! ‘ஜோஷியன் சீர்திருத்தம்’ ஒரு ‘யுத்தக் கூச்சல்’ போல கண்டிக்கப்பட்டது (பைபிள், யூதர்கள், மன்னன் ஜோஷியா தொடர்புடைய மரபுத் தொடர்).

கிருஷ்ணன் எழுதுகிறார்:

            “எந்த மேடையிலிருந்து புதிய மத்திய கமிட்டிக்கான அதிகாரபூர்வ குழு முன்மொழியப் பட்டதோ, அந்தக் குழுவில் பிசி ஜோஷி இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த மேடையே அவரைத் தோற்கடித்து பொறுப்பிலிருந்து வெளியேற்றியது…” என்கே சொல்கிறார், ‘ஜோஷியின் காலம்’ புகழ்மிக்கக் காலமாக இருந்தது.

            கட்சி காங்கிரஸ் மாநாட்டிலிருந்து திரும்பியதும், இளைப்பாறுவதற்காகக் கிருஷ்ணன் ஒரு சினிமா பார்க்கச் சென்றார். திடீரென்று திரையில் அவருடைய புகைப்படம், (அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குச்) சன்மானம் அளிக்கப்படும் என்ற அறிவிப்போடு, ஒளிபரப்பப்பட்டது. தன் இருக்கையிலேயே அவர் உறைந்து போனார். அரங்கில் விளக்குகள் நின்றபின் அவர் மாயமாய் மறைந்து போனார்.

            மெட்ராசுக்கு வெளியே தலைமறைவு மாகாணப் பகுதியின் கமிட்டி கூட்டம் 1948 ஏப்ரலில் நடந்தது. ஒரு நாள் நிமோனியா காய்ச்சலுடன் MSP (மைசூர் சிறப்புப் போலீஸ்) வேனைக் கண்டதும் அவர் ஓடினார். தனது மாமனார் வீட்டில் இரகசியமாகத் தங்கியபோது அந்த நேரத்தில் அவர் மாகாணத்தின் உள்துறை அமைச்சர்! மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு டாக்டர் சீனுவாசன் பிணவறை மூலம் அவர் தப்பிச் செல்வதற்கு உதவினார். அவர் மாஸ்கோவில் காணப்பட்டார் என்ற ‘தகவல் தந்த’தன் காரணகர்த்தாவாக அவருடைய செல்ல மகள் ‘இந்தி’ (இந்திரா) இருந்தார்! அந்தத் தகவல் அறிக்கை உளவுத்துறை கோப்புகளை அடைந்து, உள்துறை அமைச்சர் உட்பட பலரையும் விசாரிக்கக் காரணமாயிற்று! இவையெல்லாம் நடந்தபோது என்கே இந்தியாவில்தான் இருந்தார்!

            பிடிஆர் உட்பட நான்கு பேருடன் என்கே 1950ல் பொலிட் பீரோவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். காசநோய் மற்றும் இதர உடல்நலப் பிரச்சனைகளால் அவரும் பார்வதியும் சில மாதங்களை(ஜார்க்ண்ட் மாநில அழகிய ஏரி, இயற்கை காட்சி நிறைந்த) ஹஜாரிபாக்கிலும் பின்னர் (மேற்குவங்க மலை வாசஸ்தலமான) காலிம்போங்-கிலும் கழித்தனர்.

            திருச்சி சதி வழக்கில் அவர் நம்பர் 1 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டதால் 1952வரை தலைமறைவாக இருந்தார்.

1952க்கு பிறகு

          கேரளாவில் தலைமறைவாகப் பணியாற்றிய பிறகு, இறுதியில் கோயம்புத்தூரில் மே 1953ல் என்கே குடியமர்ந்தார். ஆலைத் தொழிலாளர்களை, குறிப்பாக நெசவாலை தொழிலாளர்களைத் திரட்டிப் பணியாற்றினார். தங்கள் வாழ்க்கைக்காக அவரும் பார்வதியும் மெட்ரிக் தேர்வுக்குத் தயாராகும் தொழிலாளர் – மாணவர்களுக்காக மாலை நேரப் பள்ளி நடத்தினர். தனிப்பட்ட முறையில் அவர் டியூஷன் பாடமும் நடத்தினார். பார்வதி பகுதி நேர லெக்சரர் பணியையும் மேற்கொண்டார்.

            ஏஐடியுசி பேரியக்கத்தின் துணைத் தலைவராக என்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகத் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் (WFTU) பொதுக் குழுவிலும் அவர் இடம் பெற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு செயற்குழு உறுப்பினராக 1960லிருந்து 64வரை இருந்தார்.

            என்கே 1961ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழுவுக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            1964ல் புதுடெல்லி சிபிஐ தலைமையகத்துக்கு மாறினார். கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் செயலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் சர்வதேசியத் துறைக்கும் தலைமை வகித்தார். 1970லிருந்து நான்கு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

சர்வதேசியப் பிரச்சனைகளில் நிபுணர்

          சர்வதேசியப் பிரச்சனைகளில் சிறப்புற்றவரான என்கே கிருஷ்ணன் உலக மாநாடுகள் பலவற்றில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். 1969ல் மாஸ்கோ உலகக் கம்யூனிஸ்ட் மாநாடு தயாரிப்புகளில் சிபிஐ தூதுக்குழு உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) அலெக்ஸி கோஸிஜின் உட்பட பல ஆளுமைத் தலைவர்களைச் சந்தித்தார். எண்ணிறைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகளில் அவர் கலந்து கொண்டார். தேசியக் குழு கூட்டங்களில் உலக நிகழ்வுகள் குறித்து அறிக்கை அளித்து உரையாற்றியுள்ளார். 1989 கல்கத்தா கட்சி காங்கிரஸ் மாநாட்டில் கொடி ஏற்றி உரையாற்றினார்.

            அறிவார்ந்த பெரும் சிந்தனையாளர் என் கே கிருஷ்ணன் கோயம்புத்தூரில் 1992ம் ஆண்டு நவம்பர் 2ல் இயற்கை எய்தினார். (2014 பிப்ரவரி 20ல் பார்வதி கிருஷ்ணன் மறைந்தார்)

            வாழ்க அவர் புகழ்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

       

                 

No comments:

Post a Comment