Saturday 29 October 2022

நியூஏஜ் தலையங்கம் -- 24வது கட்சிப் பேராயத்தின் பேரிகை முழக்கம்

 நியூஏஜ் தலையங்கம் (அக்.23 --நவ.5)

24வது கட்சிப் பேராயத்தின் பேரிகை முழக்கம்

          இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடுகள் குறிப்பிட்ட இடைவெளியில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, நடை பெறுவது வழக்கம். அம்மாநாட்டைக் கட்சிக் காங்கிரஸ் (பேராயம்) என அழைப்பர். அவ்வாறு கட்சியின் 24வது பேராயம் வரலாற்றுப் புகழ் மிக்க விஜயவாடா நகரில் நடைபெற்றது. அப்பேராயம் நம்பிக்கை மற்றும் புது உற்சாக உணர்வு கரைபுரண்டு ஓடிய காங்கிரஸ் என வரலாற்றில் இடம்பெறும். கட்சி முன்னோக்கி செம்மாந்து நடக்க புது ஊக்கத்தை அளித்து அக்டோபர் 14 முதல் 18வரை நடைபெற்ற பேராயத்தின் ஒவ்வொரு தருணமும் பொருள் நிறைந்ததாய் விளங்கியது. மாற்றுப் பிரதிநிதிகளுடன் 872 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் தங்கள் அனுபவம், சக்தி அனைத்தையும் கட்சியை வலிமைப்படுத்த செலவிட்டு எதிர்காலப் புதிய பாதையை வகுத்தனர். ஆக முக்கியமான போர்களில் வெல்ல தாங்கள் போரிட வேண்டிய களதின் அகச் சூழல்கள் மற்றும் புறச் சூழல் எதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் கடமை உணர்வு மிக்கவர்கள்.

          கடந்த கால நடவடிக்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தேவையான முடிவுகளை எடுப்பதில், உண்மையில், கட்சிப் பேராயமே இரண்டாம் நிலை உயர் அமைப்பாகும். சிபிஐ 24வது கட்சிப் பேராய விவாதங்களும் அமர்வுகளும் நாட்டின் கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் முக்கியமானவை அல்ல. ஒற்றுமை மற்றும் போராட்டத்திற்கான அதனது அழைப்பு மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் பிற இடதுசாரி சக்திகளுக்கும் கூடுதல் பொருத்தப்பாடு உடையது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள், புதிய இந்தியாவைப் படைப்பதற்கான அர்ப்பணிப்பு மிக்க போராளிகளின் கட்சியாகக் காண்கிறார்கள். அக்டோபர் 14ல் கட்சிப் பேராயத் தொடக்கத்தின் அடையாளமாக

நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் உற்சாகம் பொங்கியது, விஜயவாடா வீதிகளில் ஆயிரம் பல்லாயிரமாய் ஆண்களும் பெண்களும் செங்கொடிகள் உயர்த்தி நடந்த அணிவகுப்பு, செங்கடல் பேரொலியாய் முழங்கியது. அந்தப் பேரணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேலும் வலிமை பெற்று நாட்டின் எதிர்காலத்தைச் செதுக்க ஏற்கத்தக்க தனது பங்கை ஆற்றும் என்பதற்கான பிரகடனம்!

மார்க்சிய விஞ்ஞானத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கம்யூனிஸ்ட்கள், தங்கள் முன் நிலவும் எதார்த்தங்களைத் தெளிவாகப் பகுப்பாய்வு செய்து தங்கள் பொறுப்பை மேற்கொள்ளும் கடமை வீரர்கள். இந்தப் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிய 24வது கட்சிப் பேராயம், குழப்பமில்லாத தெளிவான வகையில் அதனது எதிர்காலச் செயல் திட்டப் பாதையைத் தயாரித்தது. உண்மையில், அவ்வகையில் ‘வரலாற்றுச் சிறப்புடையது’ என நாம் நியாயமாகவே அதனை அழைக்கலாம். அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற மூத்த தோழர்கள் மற்றும் இளையோரின் ஆற்றல்மிக்க சுறுசுறுப்பும் பின்னிப் பிணைந்து பேராயத்தின் மகத்தான வெற்றிக்குப் பங்களித்தன.

பிரதிநிதிகளின் தகுதி குறித்த அறிக்கை பேராயத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் 51.2 சதவீதத்தினர் 60 வயதிற்குக் குறைவானவர்கள் என்ற உண்மையின் மீது வெளிச்சம் பாச்சுகிறது. அவர்களில் சிலர் தங்கள் இருபதுகளில் இருப்பவர்கள். பிரதிநிதிகளில் பலர் பெருந்திரள் போராட்டம் மற்றும் இயக்கங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்கள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைக்காகப் போராடிய தலைவர்கள். லட்சத்தீவு கட்சி மாநிலச் செயலாளர் உட்பட மாநிலத்தின் மூன்று பிரதிநிதிகள் பேராயத்தில் கலந்து கொள்ள இயலவில்லை; ஏனெனில், மக்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர் என்று லட்சத் தீவு நிர்வாகத்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவ்வகையில் விஜயவாடா கட்சிக் காங்கிரஸைத் தலைமுறை தலைமுறையான கம்யூனிஸ்ட்கள் உயர்த்திப் பிடித்த ஒன்றுபட்ட விழைவு மற்றும் ஊசலாட்டமில்லாத நம்பிக்கையின் பேராயம் என அழைக்கலாம்.

வலதுசாரி ஊடக அணியினரின் ‘கம்யூனிஸ்ட் நிபுணர்கள்(?)’ சிபிஐ கட்சிக்குள் அமைப்பு மற்றும் அரசியல் வேறுபாடுகள் மூண்டுவிட்டதாகக் கண்டுபிடிக்க இம்முறையும் இரவு பகலாக மோப்பம் பிடித்துப் பணியாற்றினர். வயது வரம்பு சம்பந்தமான வழிகாட்டல் முடிவுகள் பேராயத்தில் ஒன்றுமில்லாது ஆக்கப்படும் என்று பிரச்சாரம் செய்தனர். அரசியல் பாதை குறித்தும் கடுமையான வேறுபாடுகள் கட்சிக்குள் நிலவுவதாகவும் அவர்கள் மேலும் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் எதிர்ப்பார்த்ததுபோல அதுபோன்ற எதுவும் 24வது கட்சிப் பேராயத்தில் நிகழவில்லை என்பதில் அவர்கள் அவமானகரமாக ஏமாந்தார்கள். ஆனால் அரசியல் மற்றும் ஸ்தாபன அமைப்பு குறித்து --கம்யூனிஸ்ட் கட்சிக்கே உரிய முறையில்-- தீவிரமான மற்றும் ஆழமான விவாதங்கள் பேராயத்தில் நடைபெற்றன. உண்மையில், விமர்சனம் மற்றும் சுயவிமர்சனத்துடன் கூடிய அத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சிப் பேராயத்தின் ஜீவன் அல்லவா! முன்னோக்கிய தனது பயணத்திற்கான வழியை இந்த ஜனநாயக நிகழ்முறையின் மூலமாக மட்டுமே கட்சி கண்டறிகிறது. இந்தக் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடு எந்த வலதுசாரி கட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. பெரும்பான்மை தருணங்களில் அக்கட்சிகளின் தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் (தேர்ந்தெடுக்கப்படுவதில்லை). அரிதான சில சூழ்நிலைகளில், அங்கே தேர்தல் நடக்கும்போது, போட்டியாளர்களும் அவர்களின் கட்சித் தலைவர்களும் கொள்கைகள் குறித்துத் தப்பித் தவறி ஒரு வார்த்தையும் உதிர்த்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் எச்சரிக்கை கொள்கின்றனர்! அது கம்யூனிஸ்ட்களின் வழியாக முடியாது!

கம்யூனிஸ்ட்களின் தேசபக்த உணர்வின் கனல், அதிதீவிர வலதுசாரிகளின் போலி தேசியவாதத்திலிருந்து, தனித்து வேறுபட்டு ஒளி வீசுவது. கம்யூனிஸ்ட்கள் தங்கள் தாய் மண்ணிற்கும் தங்கள் மக்களுக்கும் ஊசலாட்டமற்ற வகையில் தங்களை அர்ப்பணித்தவர்கள். அதே நேரத்தில் சர்வதேசியப் பதாகையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் உலகெங்கும் உள்ள பாடுபடும் மக்களுடன் தங்கள் தோழமையை வெளிப்படுத்துபவர்கள். இந்தத் தோழமையின் அடையாளமாக 24வது கட்சிப் பேராயம், 16 நாடுகளிலிருந்து 17 சகோதரத்துவப் பிரதிநிதிக் குழுக்களை வரவேற்கும் பெருமை பெற்றது. ‘எல்லா இடங்களிலும் கம்யூனிசம் இறந்து விட்டது’ என்று ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்ட பழிவாங்கும் இழிவுப் பிரச்சாரத்திற்குச் சிபிஐ கட்சிக் காங்கிரசில் அவர்கள் வருகையும் பங்கேற்பும் மென்மையான தக்க பதிலாகும்!

கட்சிப் பேராயம் தொடர்பான எல்லா ஆவணங்களும் முழுமையான விவாதங்களுக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மாநிலக் குழுக்கள் தவிர, ஆவணங்கள் தனியான கமிஷன்களிலும்கூட விவாதிக்கப்பட்டன. அதற்கென அமைக்கப்பட்ட கமிஷன்கள் 1) அரசியல் தீர்மானங்கள் 2) அரசியல் பரிசீலனை ஆய்வறிக்கை 3) அமைப்புநிலை அறிக்கை மற்றும் 4) கட்சி செயல்திட்டங்கள் மற்றும் அமைப்பு விதிகள் என்று வகைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஆவணத்திற்கும் கீழ்மட்ட அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் முன் வைத்த திருத்தங்கள் அனைத்தும் ஒவ்வொரு கமிஷனிலும் விவாதிக்கப்பட்டன.

அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் பரிசீலனைக்குப் பின் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம், நாட்டின் மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளின் பரந்த விரிவான கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. தேசத்திற்கு ஒரு மாற்றம் தேவை. நமது மாபெரும் தேசத்தின் அடித்தளங்களை ஆர்எஸ்எஸ் – பாஜக பாழ்படுத்துகிறது. மக்கள் விரோத நிலைபாட்டுடன் பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாடு வழிகாட்டலில் செயல்படும் அரசு தூக்கி எறியப்பட வேண்டும். மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும்  சோஷலிச இலட்சியம் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் முக்கிய எதிரி யார் என்பதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகத்  தெளிவாக உள்ளது.

மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவதன் மூலமாக மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமையிலான வலதுசாரி பிற்போக்குச் சக்திகளைத் தோற்கடிக்க முடியும். நாடு முழுவதும் அத்தகைய கூட்டமைப்பு ஒருபடித்தான தன்மையில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடலாம். அத்தகைய கூட்டமைப்புச் சக்திகளோடு இணைந்து நடக்க சித்தமாகவே இருக்கும் மனநிலையை மக்கள் வெளிப்படுத்தி விட்டார்கள்; ஆனால் ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு மாற்றாக அந்தக் கூட்டு நடவடிக்கை நம்பிக்கைக்குரிய மாற்றாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இன்றைய இந்தச் சிக்கலான நிலையில் இடதுசாரிகள் முக்கிய அரசியல் பங்கை ஆற்ற வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் இந்தக் கடமை பொறுப்புக் குறித்து விழிப்பாகவே இருக்கிறது, இடதுசாரி சக்திகளின் பயன்தரும் ஒற்றுமைக்காக உறுதியாக நிற்கிறது!

24வது கட்சிப் பேராயத்தின் தொடக்க அமர்வில் சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்), பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரைகளில் இடதுசாரி ஒற்றுமை குறித்த தங்கள் நிலைபாட்டை வலியுறுத்தினர். ஆர்எஸ்பி (புரட்சிகர சோஷலிசக் கட்சி) தங்கள்

அமைப்புப் பணிகளின் காரணமாகப் பேராயத்தில் கலந்து கொள்ள இயலாத போதும் அவர்களும் இணைந்து போராடுவதில் அதே புரிதலைப் பகிர்ந்து கொண்டார்கள். சிபிஐ கட்சியை மேலும் வலிமையானதாகக் கட்டி எழுப்ப வேண்டிய தேவையைக் கட்சிப் பேராயம் அடிக்கோடிட்டு வலியுறுத்தியது. விவாதங்களில் பங்கேற்ற தோழர்கள் இது சம்பந்தமாகத் தொடர்ச்சியான செயல் திட்டத்தைக் கோரினர். இப்போதிலிருந்து மூன்றாண்டுகளில் சிபிஐ, கட்சியின் நூற்றாண்டைக் கொண்டாட உள்ளது. போராட்டம் மற்றும் தியாகத்தின் பெருமைமிகு வரலாறே இந்த நூறாண்டுகள்; அது, சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றத்தைச் சாதிக்கவும் பாதுகாக்கவும் கம்யூனிஸ்ட்கள் ஆற்றிய அரும்பெரும் பங்கைப் பக்கம் பக்கமாகப் பேசும்.

அந்த மாபெரும் பாரம்பரியத்தில் நிலைகொண்டு, இன்றைய சவாலான கடமைகளைக் கட்சி மேற்கொள்ள வேண்டும். கட்சி நூற்றாண்டு விழா வருடத்தின்போது உறுப்பினர் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்துவது என்றும், அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தவும் எடுக்கப்பட்ட முடிவு, முக்கியமானதொரு தீர்மானம். கம்யூனிஸ்ட் கட்சியைத் தத்துவார்த்த, அரசியல் கொள்கை அறிவாயுதத்துடன் ஆயத்தப்படுத்தும் வகையில்
அமைப்பு ரீதியான தயார்நிலையை எட்ட கட்சி இன்னும் பயணிக்க வேண்டிய பாதையின் தொலைவு மிக நீண்டது. கட்டாயமான அந்தக் கடமைகளை நிறைவேற்றும் வரையில் அது உறங்கவோ ஓய்வெடுக்கவோ முடியாது.

24வது கட்சிப் பேராயம், அதன் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்சாக ஊக்க விழுமியங்களைச் சுமந்து உயர்ந்து பறக்கும் செங்கொடியின் கீழ் இந்தத் திசைவழியில் முன்னோக்கிச் செல்ல ஜெய பேரிகை கொட்டி முழங்குகிறது!


செங்கொடி வாழ்க! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 


Wednesday 19 October 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 73 -- ரஜனி பால்மே தத்

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 73


ஆர்பிடி – இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்                      நண்பன், மந்திரி, நல்லாசிரியன்

--அனில் ரஜீம்வாலே

            ஜனி பால்மே தத், வரலாற்றில் புகழ்பெற்ற ஆர்பிடி (RPD) என்ற மூன்றெழுத்துக்காரர், தலைசிறந்த தலைவர் மற்றும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) கோட்பாட்டாளர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக ஒருபோதும் இல்லாவிட்டாலும், அவருடைய பெயர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்தது. (கண்ணனைப் பாரதி வர்ணிப்பாரே ‘எங்கிருந்தோ வந்தான்…ஈங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்’ என அப்படி) இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு நண்பனாய், மந்திரியாய் வழிகாட்டி, தத்துவ நல்லாசிரியனாய் ஏராளமாக அவர் பங்களித்தார். தலைமுறை தலைமுறையாக இந்தியக் கம்யூனிஸ்ட்கள், புரட்சியாளர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களை அவரது புகழ்பெற்ற நூலான ‘இந்தியா டு-டே’ ஒழுங்கமைத்து உருவாக்கியது.

தொடக்க கால வாழ்க்கை

       இங்கிலாந்து கேம்பிரிட்ஜின் மில் ரோட்டில் அமைந்ததொரு வீட்டில் 1896, ஜூன் 19ல் ஆர் பால்மே தத் பிறந்தார். இந்திய சர்ஜனான அவரது தந்தை டாக்டர் உபேந்திர கிருஷ்ணா தத் பிரிட்டனில் மருத்துவப் பணி ஆற்றி வந்தார். பால்மே தத்தின் பெரிய மாமா ரொமேஷ் சந்திர தத் (அறிஞர், நாவலாசிரியர் மற்றும் 19ம் நூற்றாண்டின் வரலாற்றாளர்) ஆவார். தாயார், அன்னா பால்மே, ஸ்வீடிஷ் நாட்டவர்; அவர் ஸ்வீடன் பிரதமர் ஓலோஃப் பால்மே அவர்களின் பெரிய அத்தை. பால்மே தத்தின் சகோதரி எல்னா பால்மே தத், பின்னர் ஜெனிவா ஐஎல்ஓ அமைப்பின் அலுவலரானார். பால்மேயின் மூத்த சகோதரர் மற்றொரு புகழ்பெற்ற கம்யூனிஸ்ட்டான கிளமென்ஸ் பால்மே தத்.

   டாக்டர் உபேந்திர கிருஷ்ணா லண்டனில் இந்தியர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். உண்மையில், இந்திய மாணவர்களின் மஜ்லீஸ்* அமைப்பின் கூட்டங்கள் வழக்கமாக அவரது இல்லத்தில்தான் நடக்கும். ரஜனி பால்மே தத் அந்தக் கூட்டங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்தார், அதில் ஜவகர்லால் நேருகூட பங்கேற்றிருக்கிறார். (*மஜ்லீஸ் என்ற அரபுச் சொல்லிற்கு ஒத்த கருத்துடையவர்கள் கூடும் இடம் என்பது பொருள்; ஈரான் நாடாளுமன்றத்திற்கும் மஜ்லீஸ் என்று பெயர்)

       பால்மே தத் பள்ளிக் கல்வியை கேம்ப்பிரிட்ஜ் தி பேர்ஸ் (பொது) பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை ஆக்ஸ்போர்டு பலியால் (Balliol) கல்லூரியிலும் பெற்றார். முதலாவது உலகப் போருக்குக் கட்டாய ஆளெடுப்பை எதிர்த்ததற்காக அவர் 1916ல் பிரிட்டிஷ் சிறையில் தள்ளப்பட்டார். படிப்பில் அவர் செவ்வியல், தத்துவம் மற்றும் வரலாறு இவற்றில் முதல் வகுப்பில் முதல் ஹானர்ஸ் தகுதி பெற்றார். கல்லூரியில் இருக்கும்போது ரஷ்யப் புரட்சிக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார் என்பதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரியில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட அவர் பாராட்டிற்குரிய சிறப்புகளுடன் தேர்வு பெற்றார். பால்மே தத் சமூக ஜனநாயக பெடரேஷன் கூட்டங்களில் வழக்கமாகக் கலந்து கொள்வார் என புகழ்பெற்ற அறிஞர் அன்ட்ரூ ரோத்ஸ்டின் (பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் மற்றும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்) எழுதியுள்ளார்.

       1919 மார்ச் 21ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கர்சன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் கிளமென்ஸ் தத் மற்றும் ரஜனி பால்மே தத் போன்ற சில (சினிஸ்டர் கேரக்டர்ஸ்) ‘தொல்லைப் பேர்வழிகள்’ (!) இருப்பதாக எழுதினார்.

   சல்மே மூரிக் என்ற ஈஸ்டோனிய பெண்மணியை ரஜனி 1922ல் திருமணம் செய்து கொண்டார்; அவர், (1919 மார்ச் 2ல் லெனின் நிறுவிய சர்வதேசக் கம்யூனிஸ்ட் அமைப்பு, காமின்டர்ன், 3வது அகிலம் என்றும் அழைக்கப்படும்) கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலின் பிரதிநிதியாகப் பிரிட்டன் வந்தவர்.

ஐஎல்பி அமைப்பில்

     பால்மே தத் கல்லூரியில் படித்த காலத்திலேயே சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ILP)யில் இணைந்தார். 1919ல் அக்கட்சியின் சர்வதேசப் பிரிவின் தொழிலாளர் ஆய்வுத் துறையில் செயலாளராகச் சேர்ந்தார். 1921ல் வெளியிடப்பட்ட தொழிலாளர் சர்வதேசிய கையேட்டின் ஆசிரியராக இருந்தார். ஷபூர்ஜி சக்லத்வாலாவுடன் இணைந்து ரஜனி பால்மே தத் கட்சியில் கம்யூனிசத்தைப் பரப்பினார்; வலதுசாரி ஸ்னோடென் மற்றும் மேக்டொனால்டை எதிர்த்தார்.

  மூன்றாவது அகிலத்தில் இணைய வேண்டும் என்பதைக் கட்சிக்குள் இருந்தே வற்புறுத்துவதற்காகப் பால்மே தத், சக்லத்வாலா, வால்டன் நியூபோல்டு மற்றும் எமிலி பர்ன்ஸ் ஒரு குழு அமைத்தனர். அவர்கள் ‘சர்வதேசியம்’ (தி இன்டர்நேஷனல்) என்ற தலைப்பில் செய்தி மடல் சுற்றறிக்கையும் வெளியிட்டனர்.

கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில்

     கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) அமைக்கப்பட்ட உடன் 1921 ஜனவரியில் அந்தக் குழு முறையாகக் கட்சியில் இணைந்தது. 1921ல் புகழ்பெற்ற ‘தொழிலாளர் மாத சஞ்சிகை’ (‘லேபர் மந்த்லி’) இதழை நிறுவிய பால்மே தத், இறக்கும் வரை அதன் ஆசிரியர் பொறுப்பை வகித்தார். பின்னர் அவர் கட்சியின் ‘டெய்லி ஒர்க்கர்’ இதழின் ஆசிரியராகவும், 1922ல் கட்சிப் பத்திரிக்கை ‘ஒர்க்கர்ஸ் வீக்லி’ இதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். வெறும் 8ஆயிரத்தில் இருந்த வாராந்திர இதழின் சர்குலேஷன் எண்ணிக்கை 50,000மாக அதிகரித்தது.

       பால்மே தத் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதன் உறுப்பினராக 1965வரை இருந்தார். அது மட்டுமின்றி, கட்சி பொலிட் பீரோவிலும் இருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவில் (ECCI) 1923ல் கலந்து கொண்டவர், அதன் தலைமைக் குழு மாற்று உறுப்பினராகவும் இருந்தார்.

    பால்மே தத் பல ஆண்டுகள் காமின்டர்ன் (கம்யூனிஸ்ட் அகிலம்) பிரதிநிதியாகப் பெல்ஜியத்திலும் ஸ்வீடனிலும் தங்கியிருந்தார்.

       1937ல் பல்வேறு போக்குகளைச் சேர்ந்த ஐக்கிய முன்னணி கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் ஆர்பி தத், கிரிப்ஸ், பீவன், பொலிட், ப்ரோக்வே மற்றும் மாக்ஸ்டன் இருந்தனர்.

 பால்மே தத்தும் இந்தியாவும்

     1974ல் எஸ் ஏ டாங்கே எழுதினார்: கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் முழுமையானதொரு காலத்தின் களஞ்சியமாக எங்களிடம் ‘ஆர்பிடி’ என்ற மூன்றெழுத்து இருந்தது. முழுமையான 54 ஆண்டுகள், அந்த எழுத்துகளில்தான், கிரேட் பிரிட்டன், இந்தியா மற்றும் ஆங்கிலம் அறிந்த பகுதிகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலார் இயக்கம் தோழர் ரஜனி பால்மே தத்தின் அற்புதமான எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருந்தது.” லேபர் மந்த்லியில் அவரது ‘மாதாந்திரக் குறிப்புகள்,’ உலக நிகழ்வுகள், உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் குறித்த அற்புதமான ஆய்வுகளை வழங்கியது’ என்றார் டாங்கே.

     அவரது ‘மாடர்ன் இந்தியா’ மற்றும் ‘இந்தியா டுடே’ இந்திய வரலாற்றின் செவ்வியல் நூல்களாகத் திகழ்கின்றன. ரஜனி பால்மே தத் எழுதிய பிற நூல்களான ‘பாசிசமும் சமூகப் புரட்சியும்,’ ‘உலக அரசியல் 1918 –36,’ மற்றும் ’பிரிட்டனின் நெருக்கடியும் பிரித்தானிய பேரரசும்’ முதலியன உலக முதலாளித்துவ நெருக்கடியையும், பாசிசத்தையும் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன.

       பெரும்பான்மை இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு, ஊடுபாவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றுடன் பிணைந்திருந்த ஆர்பி தத், ‘கிரேட் பிரிட்டனில் இருந்த ஓர் இந்தியக் கம்யூனிஸ்ட்’ ஆக நம் உணர்வோடு கலந்துள்ளார்.

        பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்லஸ் ஆஷ்லெய்க், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்கு உதவ 1921 செப்டம்பர் 19 இந்தியா வந்தார்; ஆனால் அவர் இந்தியாவில் கால்

வைத்ததுமே கைது செய்யப்பட்டார். நாட்டை விட்டு வெளியேறக் கூறியபோது தப்பிய அவர் ‘பாம்பே க்ரானிகல்’ பத்திரிக்கை அலுவலகத்தில் ரகசியமாக எஸ்ஏ டாங்கேவைச் சந்தித்துப் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பால்மே தத் குறித்துத் தகவல் தெரிவித்தார். டாங்கேவின் ‘சோஷலிஸ்ட்’ இதழ், பால்மே தத்தின் லேபர் மந்த்லி மற்றும் பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடிய சில்வியா பங்க்ருஸ்ட் (படம்) வெளியிட்ட ‘ஒர்க்கர்ஸ் டிரெட்நாட்’ (அச்சமறியா தொழிலாளி) பத்திரிக்கையுடன் தொடர்பில் இருந்தது. (டிரெட்நாட் என்பது வலிமையான பெரிய பிரிட்டிஷ் போர்க் கப்பலின் பெயர்).

     டாங்கே மற்றும் பிற கம்யூனிஸ்ட்கள் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் பால்மே தத் எழுதிய ‘கம்யூனிசம்’ என்பதை ஒரு சிறு பிரசுரமாக அச்சடித்து 2 அணாக்களுக்கு விற்றனர். அது குறித்த விளம்பரமும் ‘தி சோஷலிஸ்ட்’ 1922 நவம்பர்18 இதழில் வெளியானது.

        அவர் எழுதிய ‘மார்டன் இந்தியா’ பாம்பேயில் 1926ல் பிரசுரமானது.

     மீரட் சதி வழக்குகள் (1929 –33) கைதிகளுக்கு ஆதரவாக ‘மீரட் பாதுகாப்புக் குழு’வைப் பால்மே தத்தும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைத்தது.

இந்திய மாணவர்கள் மீது செல்வாக்கு

ரஜனி பால்மே தத் மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி பல தலைமுறை மாணவர்கள் மீது செல்வாக்கு செலுத்தியது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் காலனியத் துறை (காலனிய விஷயங்களைக் கவனித்த கட்சியின் பிரிவு) இந்திய விடுதலை இயக்கத்திற்கு உதவியது. அத்தகைய செல்வாக்கு பெற்றவர்களில் குறிப்பிடத் தக்க சிலர் வருமாறு: ஜவகர்லால் நேரு, விகே கிருஷ்ண மேனன், இந்திரா காந்தி, டிஆர் காட்கில், ஸுஷோபன் சர்க்கார், கேவி கோபால்சாமி, பக்ர் அலி மிஸ்ரா, நிகரேந்து தத் மஜூம்தார், மொகித் சென், ஜோதி பாசு, இந்திர ஜித் குப்தா, பிஎன் ஹக்ஸர், என்கே கிருஷ்ணன், ரேணு சக்ரவர்த்தி, பேரா. தேவிப்பிரஸாத் சட்டோபாத்யாயா, திலீப் போஸ், பார்வதி கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, ஹஜ்ரா பேகம், சாஜ்ஜட் ஸாஹீர் மற்றும் எண்ணற்ற பலராவர். அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் ஆனார்கள். அவர்கள், பால்மே தத் உள்ளிட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் எடுத்த அரசியல் தியரி வகுப்புகளில் படித்தவர்கள்.

தத் –பிராட்லே தீசிஸ் (1936)

       உலகில் பாசிசம் எழுச்சி பெற்றும் ஏகாதிபத்தியம் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டும் வந்தபோது, பால்மே தத் மற்றும் பென் பிராட்லே இருவரால் எழுதப்பட்ட ஆய்வறிக்கைகள் (தீசிஸ்) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தீசிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அமைக்குமாறு யோசனை கூறியது. மேலும் அதில் தேசிய பூர்ஷ்வாகள், தொழிலாளர்களின் கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகளின் அமைப்புகள் உள்ளிட்டவர்களுடன் காங்கிரசும் இடம் பெற வேண்டும் என்று கூறியது.  அந்த ஆய்வறிக்கை ஐக்கிய முன்னணி உத்திகளைத் தீட்டுவதில் முக்கிய பங்காற்றியது.

    லெனின் மறைவுக்குப் பிறகு உடனே காமின்டர்ன், லெனினின் காலனிய கருதுகோள் மற்றும்

ஐக்கிய முன்னணி தந்திரம் இரண்டையும் கைவிட்டு விடுதலை இயக்கங்கள்பால் குறுங்குழுவாத (செக்டேரியன்) அணுகுமுறையைப் பின்பற்றியது. “இந்தியாவில் தேசிய பூர்ஷ்வாகள் ‘ஏகாதிபத்தியத்திற்குச் சென்று விட்டனர்’’ என்று 1925ல் அறிவித்த ஸ்டாலின், காந்தி ‘ஏகாதிபத்தியத்தின் எடுபிடி வேலையாள் (சர்விட்டர்)’ ஆகிவிட்டார்” என்றார் (1926). காமின்டர்னின் 6வது பேராயம் முழுமையான குறுங்குழு வாதம் மற்றும் இறுக்கமான கோட்பாட்டுப் பாதையை ஏற்றது.

    மீரட் சதி வழக்கில் தலைவர்கள் பலர் கைதான பிறகு (1929), வெளியே இருந்த கம்யூனிஸ்ட்கள் கேலிக்குரிய குறுங்குழுவாத நிலைபாடு எடுத்து, தாங்களே முழுமையாகத் தனிமைப்பட்டுப் போயினர். ஜவகர்லால் நேரு ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக்’ அமைப்பிலிருந்து ‘வெளியேற்ற’ப்பட்டார்’; அது மட்டுமின்றி, அவரை ‘இந்திய மக்களை விடுவிக்கும் போராட்டத்தின் துரோகி!’ என்றும் அழைத்தனர்.

       பிசி ஜோஷி 1935ல் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனதும், சூழ்நிலை மெல்ல மேம்படத் தொடங்கியது. அவர் ‘தேசிய முன்னணி’ முழக்கத்தை முன் வைத்தார்.

ஆர்பி தத், நேரு மற்றும் போஸ்

       ஆர்பி தத் 1936 பிப்ரவரி ஸ்வீசர்லாந்தில் நேருவைச் சந்தித்தார். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்தனர், அந்த விவாதம் 16 மணி நேரம் நீடித்தது! அவர்கள் வாழ்நாள் நண்பர்கள் ஆயினர். நேரு அடிக்கடி தனது பிரச்சனைகளைக் கம்யூனிஸ்ட்களுடன் விவாதிப்பார், அவர்களுக்கிடையே ரஜனி பால்மே தத் சமரசம் செய்பவராக இருந்தார்!

      1936ம் ஆண்டின் காங்கிரஸ் அமர்வில் நேரு ஆற்றிய தலைமை உரையைப் பெரிதும் செல்வாக்கு செலுத்தியவர் பால்மே தத். நேரு பல தருணங்களில் கம்யூனிஸ்ட்களுக்கு உதவினார். நேரு சோஷலிசத்தை ஏற்று நம்பிக்கை கொண்டார்; ‘‘சோஷலிசம் என்பதன் மேலெழுந்தவாரியான தெளிவற்ற மனிதாபிமான அடிப்படையில் அல்ல, மாறாக, அதன் விஞ்ஞானபூர்வ, பொருளாதார உணர்வு அடிப்படையிலானதாகும் அந்த நம்பிக்கை.”

       ஏற்கனவே மேலே குறிப்பிட்ட தத் – பிராட்லே அறிக்கைகளில் கூறப்பட்ட இரண்டு முக்கிய பெரிய யோசனை திட்டங்களை நேரு லக்னோவில் முன்மொழிந்தார். நேருவின் முழுமையான உரையைப் பால்மே தத் லேபர் மந்த்லி இதழில் வெளியிட்டார். பிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ மத்தியக் குழு 1936 ஜூலை 24ல் ‘நேருவின் உரை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மிகத் தெளிவான உரை’ என்று பிரகடனம் செய்தது.

இணைப்புக் குறித்த நேருவின் யோசனைத் திட்டங்கள் காங்கிரஸ் காரியக் குழுவில் நிராகரிக்கப்பட்டது. சர்தார் பட்டேல் உட்பட மத்திய செயற்குழு (சிடபிள்யுசி) உறுப்பினர்கள் ஏழு பேர் ராஜினாமா செய்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸ் முன்பு, “நேருவின் கம்யூனிசப் பரிவு ஆதரவை” விமர்சித்தார்; ஆனால் அந்தக் கருத்தை, 1938 லண்டனில் பால்மே தத்துடன் நடத்திய விவாதங்களுக்குப் பிறகு, மாற்றிக் கொண்டார். அது குறித்த செய்தி டெய்லி ஒர்க்கர் பத்திரிக்கையின் 1938 ஜனவரி 24 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதையே போசும் தனது ‘இந்தியப் போராட்டம் : 1920 –40’ புத்தகத்தில் மீண்டும் மறு பிரசுரம் செய்தார்.

போஸ் ஒரு நேர்முகப் பேட்டியில், ‘மார்க்ஸ், லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனல் கூறிய கம்யூனிசத்தில், தான் திருப்தி அடைவதாகவும், அது தேசிய விடுதலைக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறது’ என்று கூறினார். காங்கிரஸ் கட்சியை ஒரு பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாக உருமாற்றம் செய்வதும் முக்கிய தேவை என்றார்

1938 ஜனவரி 11ல் லண்டன், செயின்ட் பான்கிரஸ் ஹாலில் ரஜனி பால்மே தத் தலைமையில் போஸ் உரையாற்றினார். “நான், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் … அணுகுமுறைகளால் பெரிதும் உற்சாகம் அடைந்தேன்…” என்று தெளிவாகக் கூறினார்.

தேர்தல்களில் போட்டி

        பிரிட்டிஷ் நாடாளுமன்ற தேர்தல்களில் பால்மே தத் பர்மிங்ஹாம் தொகுதியில், --அப்போது இந்தியாவின் பிரிட்டிஷ் அரசு செகரெட்டரியாக இருந்து, இந்திய விடுதலைப் போராளிகளுக்கு எதிரான கொடுமையான அடக்குமுறைகளுக்குக் காரணமாகி இழிவுப் பெயரெடுத்த, -- டோரி கட்சி வேட்பாளர் அம்ரேவை எதிர்த்துப் போட்டியிட்டார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுமென்றே ரஜனி பால்மே தத்தை அங்கு வேட்பாளராக நிறுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாகவும் தனது நிலைபாட்டை வெளிப்படுத்தியது. பர்மிங்ஹாமில் பால்மே தத்திற்கு ஆதரவாக எஸ்ஏ டாங்கே பிரச்சாரம் செய்தார்.

இந்தியாவில் பால்மே தத்

     1946 மார்ச்சில் ‘டெய்லி ஒர்க்கரின்’ சிறப்புப் பத்திரிக்கையாளராகக் கேபினட் மிஷன் குறித்த செய்திகளைச் சேகரிக்க பால்மே தத் இந்தியா வந்தார். அவரது முன்னோர்களின் நகரமான கல்கத்தாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மே தின ஊர்வலம் மற்றும் கேசோரம் காட்டன் மில் கூட்டம் உட்பட பல கூட்டங்களில் கலந்து கொண்டார்.

      பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி எழுதினார்: “இந்தத் தேசம் அவர் பிறந்த மண்ணாக இல்லா விட்டாலும், இத்தேசம் அவரது தந்தையர் நாடு. ராம்பஹனின் புகழார்ந்த தத்தா குடும்பத்தின் ரத்தினங்களில் ஒருவர் அவர்” அந்தப் பெருமகன் கம்யூனிசத்தை எந்தத் தயக்கமும் இன்றி ஏற்று வரித்துக் கொண்டார்.

       அவருடைய விஜயத்தின்போது பம்பாயில் அவரது 50வது பிறந்த நாள் வெகு விமர்சையாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட, அவரும் பெரிதும் அகமகிழ்ந்தார்.

    சர்தார் பட்டேல், சரோஜினி நாயுடு, எஸ்கே பாட்டீல், சி இராஜகோபாலச்சாரி, நேரு, காந்திஜி, அபுல் கலாம் ஆஸாத் மற்றும் பிற புகழ்பெற்ற தலைவர்களை அவர் சந்தித்தார்; லேபர்

மந்த்லியில் அது குறித்த பயண நாட்குறிப்புகளையும் எழுதினார். அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் நிர்ணய சபை அமைக்க ஆலோசனை கூறினார். பாக்கிஸ்தான் அமைக்கப்படுவதையும், இந்திய தேசப் பிரிவினையையும் அவர் மிக உறுதியாக எதிர்த்தார்.

      1947 நவம்பரில் லண்டன் நேர்முகம் ஒன்றில் சோஷலிசத் தலைவர் மது லிமாயி அவர்களிடம் ‘அவர் காங்கிரஸில் நீடித்து, கட்சியில் கம்யூனிஸ்ட்கள் அனுமதிக்கப்பட போராட வேண்டும்’ என்று கூறினார்.

பிடிஆர் காலமும் பால்மே தத்தும்

       பிடி ரணதிவே காலத்தின்போது பின்பற்றப்பட்ட குறுங்குழுவாதப் பாதை குறித்துப் பால்மே தத் மிகவும் சங்கடப்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட்களை அதனை மறுபரிசீலனை செய்யக் கோரினார். காமின்டர்ன் அமைப்பின் LPPD (‘For a Lasting Peace, For People’s Democracy’, நீடிக்கும் அமைதிக்காக, மக்கள் ஜனநாயகத்திற்காக) இதழில் மூன்றாவது உலக நாடுகளில் சுதந்திரத்தின் புதிய வாய்ப்புகள் குறித்து எழுதினார். இந்தியச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, பிற்போக்கு பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராட, விரைவில் நிலச்சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் நாட்டின் முற்போக்கு சத்திகளுடன் கூட்டிணைவது முக்கியம் என்று சுட்டிக் காட்டினார்.

      அந்தக் கட்டுரை சிபிஐ கட்சிக்குள் தீவிரமாக விவாதிக்கப்பட்டது, கட்சி அதிதீவிர இடதுசாரி கொள்கைகளைக் கைவிடவும் உதவியது. LPPD இதழின் தலையங்க விமர்சனக் குறிப்புக்குப் பிறகு, “ஆர்பி தத் எண்ணற்ற வழிகளில் நமது கட்சிக்கு, அது தொடங்கப்பட்ட நாளிலிருந்து, உதவி வருகிறார்; கட்சியை, அதனது பொலிட் பீரோவின் முதலாளித்துவ ஆதிக்க மனோபாவம் மற்றும் குறுங்குழு வாத முட்டாள்தனத்திலிருந்தும் பாதுகாத்தது” என்பதைச் சிபிஐ ஒப்புக் கொண்டது.

       கோரிய யுத்தத்தில் நேருவின் பங்களிப்பு குறித்தும் ஆர் பி தத் புகழ்ந்துரைத்தார். (லேபர் மந்த்லி, நவம்பர் 1950 )

      அதன் பிறகு, மூன்று கட்சிகள் கடிதம் (1933), தத்-பிராட்லே ஆய்வறிக்கைகள் (1936), கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் கடிதம் (1933) போன்றவை மூலம் ”எண்ணற்ற பல நெருக்கடியான தருணங்களில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்பி தத்தும் எங்களை சரி செய்தது” என்பதைச் சிபிஐ கட்சி ஒப்புக் கொண்டது.

ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக

    1948 –50களின் ஆயுதப் போராட்டம், தற்கொலை முயற்சி என்று கூறிய பால்மே தத் அதனைக் கைவிட வற்புறுத்தினார். இது தொடர்பாக நேருவை ஆதரிக்கவும் அமைதிக்கான போராட்டத்தையும் அவர் வலியுறுத்தினார். 1951ல் சிபிஐ அவரிடம் பல கேள்விகளைக் கேட்டது, அதற்கு அவர் நேர்மறையான முறையில் பதில் அளித்து, பெருந்திரள் போராட்டங்களை வலிறுத்தினார். பால்மே தத்தின் இந்தச் சிந்தனைப் போக்கின் தாக்கத்தை 1951ன் சிபிஐ செயல்திட்டப் புரோகிராம் தெளிவாகப் பிரதிபலித்தது. 1954 எல்பிபிடி இதழில் தேசிய விடுதலை இயக்கத்தின் புதிய அம்சங்கள் குறித்து எழுதினார். அதில் அமைதிக்கானப் போராட்டமும் சுதந்திரத்திற்கானதும் தனியானதல்ல என வற்புறுத்தியவர், தொழிலாளர்கள், விவசாயிகள், கற்றறிந்த சான்றோர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளிகள், தேசிய நடுத்தரவர்க்க முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணியை, ஜனநாயக ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியில் ஒன்று திரட்டி அமைக்க வற்புறுத்தினார்.

ஈடு இணையற்ற கோட்பாட்டாளர்

       ரஜனி பால்மே தத் தனித்துச் சிறந்து விளங்கிய மார்க்ஸிய ஆய்வாளர் மற்றும் அவரே ஒரு கலைக்களஞ்சியம். அவரது தினசரி பணிகள் மிகுந்த கட்டுப்பாடானவை. தத்துவ ஆழத்துடன் நுணுக்கமாக ஆய்ந்தறியும் அறிஞர், விரல் நுனியில் பல்துறைப் பொருள்களின் விபரங்களைத் துல்லியமாக வைத்திருந்தவர்.

      உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய எண்ணிறைந்த கட்டுரைகள், விமர்சன மதிப்புரைகள், ஆய்வேடுகள், புத்தகங்கள் மற்றும் கையேடுகளை எழுதிக் குவித்தவர். சகோரதரக் கட்சிகளின், குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், பிரச்சனைகளைத் தீர்க்க – அமைப்பில் குறுக்கிடாமல் –தலையிட்டு தீர்வு காண உதவியவர்.

    தீவிர அரசியலில் இருந்து 1960களின் மத்தியில் விலகினார், அனைத்துப் பதவிப் பொறுப்புகளையும் கைவிட்டார், ஆனால் தொடர்ந்து பணியாற்றினார். நீண்ட காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர் 1974 டிசம்பர் 20ல் மறைந்தார். (ஏங்கெல்சின் மொழியில் கூறினால், கம்யூனிச இயக்கத்திற்காகச் சிந்திப்பதை அவர் நிறுத்தினார். அந்தப் பணியை அவரது எழுத்துகள் தொடர்ந்து ஆற்றி வருகிறது. படித்துப் பயன்பெறுவோம்!)

            வாழ்க ஆர்பிடி எனும் மூன்றெழுத்து அறிஞர் பெருமகனார்!

--நன்றி : நியூஏஜ் (செப்.25 –அக்.1)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

             

 

 

Monday 17 October 2022

சிபிஐ 24வது கட்சிக் காங்கிரஸ் சிறப்புக் கட்டுரை -- ஒரு வரலாற்றுப் பார்வை

                   
கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரஸ் மாநாடுகள் வழி,                              ஒரு வரலாற்றுப் பார்வை

                                                                  --அனில் ரஜீம்வாலே

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் கான்பூரில் நிறுவப்பட்டது. அதிலிருந்து கட்சி நடத்திய பல்வேறு மாநாடுகள் மற்றும் காங்கிரஸ்களில் (குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் பேராயங்கள்) கட்சியின் அரசியல், தத்துவக் கோட்பாடு மற்றும் செயல்திட்ட நிலைபாடுகளைத் தீட்டி, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

     முதலில் குறிப்பிடத்தக்க ஒன்று, தேசியக் காங்கிரஸ் கட்சியின் அகமதாபாத் அமர்வில் (1921) இந்தியாவுக்கு “அனைத்து அன்னியக் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலை என்னும் ‘பூரண சுயராஜ்யம்’’ என்ற தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்தது கம்யூனிஸ்டான மௌலானா ஹஸ்ரத் மொகானி. ஆனால் அத்தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்றது.

சிபிஐ அமைப்பு மாநாடு, கான்பூர், 1925

       இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் அமைப்பு மாநாடு 1925 டிசம்பர் 25 முதல் 29 வரை நடைபெற்றது.

    மாநாட்டின் அமைப்பாளரான சத்தியபக்தா, 1925 ஜூன் 18ம் தேதியிட்ட அவரது சுற்றறிக்கை கடிதத்தில், “கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதி லட்சியம், ‘இந்தியாவில் முழுமையான சுதந்திர’த்தை ஏற்படுத்துவது, அதன் விளைவாய் நியாயமான ஒரு சமூகத்தை அமைப்பது” என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.

        கான்பூரில் கம்யூனிஸ்ட்களின் மாநாட்டின் தலைவரான ம சிங்காரவேலர்னது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “…கட்சியின் உடனடி லட்சியம், சுயராஜ்யத்தை அல்லது முழுமையான விடுதலையை அனைத்து நியாயமான வழிகளிலும் நிறுவுவதே.”

    மொஹானியும் சிங்காரவேலரும் தங்கள் உரைகளில் தொடர்ச்சியாக ‘சுயராஜ்’ என்பது முழுமையான விடுதலை என உறுதியாக விளக்கமளித்தனர்.

    கான்பூர் மாநாட்டில் ஏற்கப்பட்ட அமைப்பு விதி ஷரத்து 1, “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்து இந்தியாவின் விடுதலை”யைக் கட்சியின் லட்சியங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியது. மேலும் கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இருக்கலாம் என மாநாடு முடிவுசெய்தது.

 கான்பூர் அமைப்பு மாநாடு எஸ் வி காட்டே மற்றும் ஜெ பி பஹர்ஹட்டா இருவரையும் பொதுச் செயலாளர்களாகவும் சிங்காரவேலரைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

சிபிஐ-யின் விரிவடைந்த சிஇசி கூட்டம், பாம்பே, 1927

          பாம்பேயில் 1927 மே 29 முதல் 31வரை நடைபெற்ற கட்சியின் (பொதுக்குழு என்று அழைக்கப்படும்) விரிவடைந்த மத்திய செயற்குழு (சிஇசி) கூட்டம் கட்சியின் அமைப்புச் சட்டம்

மற்றும் செயல்திட்டத்தை மாற்றியமைத்தது. மற்றும் செயல்திட்டத்தை மாற்றியமைத்தது. சிபிஐ அமைப்பு விதி, ‘ப்ரோகிராம்’ பிரிவு பத்தி 6, கட்சியின் லட்சியத்தை, “முழுமையான தேசிய விடுதலை மற்றும் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் ஜனநாயகக் குடியரசை நிர்மாணிப்பது” என்று மேம்படுத்தி மாற்றியமைத்தது. அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் அதனது இடதுசாரி அணியின் ஒத்துழைப்புடன் குடியரசு அணியை அமைப்பதைக் கம்யூனிஸ்ட்கள் லட்சியமாகக் கொண்டனர்.

 சிஇசி கூட்டம் எஸ் வி காட்டேவைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது.       


  கல்கத்தா மாநாடு, 1933

      1933ல் மீரட் கைதிகள் விடுதலைக்குப் பிறகு, சிபிஐ-யின் சிறிய மாநாடு கல்கத்தாவில் 1933 டிசம்பரில் நடைபெற்றது; அதில் அரசியல் தீர்மானம், கட்சியின் புதிய அமைப்பு விதி ஏற்கப்பட்டு, டாக்டர் ஜி அதிகாரியைப் பொதுச் செயலாளராகக் கொண்ட புதிய மத்திய குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு, எஸ் எஸ் மிராஜ்கர் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். சில காலத்திற்குப் பிறகு அவர் மாற்றப்பட்டு சோமநாத் லாகிரி பொதுச் செயலாளரானார்.

   அம்மாநாடு இந்தியாவின் விடுதலையை வென்றடைய வற்புறுத்தியது.

சிபிஐயும், முழு விடுதலை காங்கிரஸால் ஏற்கப்பட்டதும்

    முழு விடுதலையை லட்சியமாகத் தீர்மானிப்பதை நோக்கிய நடவடிக்கைகளில் இந்திய தேசியக் காங்கிரசின் மெட்ராஸ் (1927), கல்கத்தா (1928) மற்றும் லாகூர் (1929) அமர்வுகள் முக்கியமானவை: அதில் சிபிஐ மற்றும் WPP (தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி)  கேந்திரமான முக்கிய பங்கு வகித்தன. 1927 மெட்ராஸ் அமர்வில் முழு விடுதலை குறித்த தீர்மானத்தைப் பொருளாய்வுக் குழுவில் கே என் ஜோக்லேக்கர் (சிபிஐ) முன்மொழிய, ஜவகர்லால் நேரு ஆதரித்தார், அத்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பொது அரங்கில் முழு விடுதலைத் தீர்மானத்தை ஜவகர்லால் நேரு முன்மொழிய கேஎன் ஜோக்லேக்கர் வழிமொழிந்தார். ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரசின் 1928 கல்கத்தா அமர்வில் சிபிஐ மற்றும் தொழிலாளர் விவசாயக் கட்சி தலைமையில் 50ஆயிரம் மக்கள் பங்கேற்க மாபெரும் பேரணி காங்கிரஸ் அமர்வு நடைபெறும் பந்தலுக்குள், காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு அனுமதியுடன் நுழைந்தது. முழு விடுதலையை ஆதரித்து நடத்தப்பட்ட பேரணியில் ஜோக்லேக்கரும், ஜவகர்லால் நேருவும் உரையாற்றினர்.

     அதன் விளைவாய், ஓராண்டிற்குள் முழு விடுதலை லட்சியத் தீர்மானத்தை ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது; மேலும் 1929 டிசம்பர் 31 லாகூர் அமர்வில் அவ்வாறே செய்தது: அமர்வின் தீர்மானம், “இந்தக் காங்கிரஸ், கடந்த ஆண்டின் அதன் கல்கத்தா அமர்வில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்ப, பிரகடனம் செய்கிறது: காங்கிரஸ் அமைப்பு விதி ஷரத்து 1ல் உள்ள ‘சுயராஜ்’ என்ற வார்த்தைக்கு முழு விடுதலை என்றே பொருள்படும்…”

பிசி ஜோஷி பொதுச் செயலாளராக, 1935

    1935ல் பிசி ஜோஷி சிபிஐ பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். ‘தேசிய முன்னணி’ என்றழைக்கப்பட்ட பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை அமைப்பதன் மூலம் முழு விடுதலை என்ற முழக்கங்களை அவர் மேலெடுத்துச் சென்றார்.

சிபிஐ முதலாவது கட்சிக் காங்கிரஸ், பாம்பே, 1943

     இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது கட்சிக் காங்கிரஸ் (பேராயம்) 1943 மே 23 லிருந்து ஜூன் 1 வரை பாம்பேயில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தீவிரமான அரசியல் போராட்டங்கள் நிகழ்ந்த சூழ்நிலையின் மத்தியில், தேசிய வாழ்வில் பெரும் நிகழ்வாக நடைபெற்றது. பேராயம், முக்கிய எதிரியாகிய உலகப் பாசிசத்தை எதிர்த்துப் போரிட முடிவு செய்தது.

     கட்சியின் மீதான தடை நீக்கப்பட்டது. நாடு முழுவதுமிருந்து 139 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசிய முன்னணி மற்றும் தேசியப் பாதுகாப்பிற்காகத் தேசிய அரசு குறித்துப் பேராயம் விவாதித்து ‘மக்களின் யுத்தம்’ (பியூபிள்ஸ் வார்) என்ற முழக்கத்தைத் தந்தது. அதன் முக்கிய அம்சம் பாசிச எதிர்ப்பு முன்னணியை அமைப்பது.

            அந்நேரத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 5ஆயிரத்திலிருந்து 15,000மாக உயர்ந்தது. 1931ன் அமைப்பு விதியை 1943 அமைப்பு விதி மாற்றியமைத்தது. அதுபோழ்து கட்சி ஒரு தேசிய சக்தியாக மாறி, பெருந்திரள் மக்களின் கட்சியாக உருவாகும் பாதையில் இருந்தது. கட்சி அமைப்பு விதி, இந்தியாவின் சுதந்திரத்தை விரும்பும் அனைத்து மக்களின், தேசிய ஐக்கிய முன்னணி கட்டியமைக்கும் கடமை பொறுப்பை வலியுறுத்தியது.

              சிபிஐயின் இலச்சினை சின்னம், ஐந்து கூர் முனைகள் உள்ள சிகப்பு நட்சத்திரம், அதன்
மத்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்று வட்டமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துகளுடன் குறுக்காக அமைந்த சுத்தியல் அரிவாள் என்பதாகும்.

 இது பின்னர் (சிகப்பு நட்சத்திரம் இல்லாமல்) சிகப்புப் பின்னணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்று வெள்ளை நிறத்தில் வட்ட வடிவிலான வார்த்தைகளுடன் வெள்ளை நிறத்தில் அரிவாள் சுத்தியல் குறுக்காக அமையுமாறு மாற்றப்பட்டது.

            பிசி ஜோஷி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய விடுதலையும் சிபிஐ கட்சியும்

   கடுமையான போராட்டங்களால் 1947 ஆகஸ்ட் 15ல் வென்றடைந்த இந்தியாவின் சுதந்திரத்தைப் பிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ மனப்பூர்வமாக மகிழ்ந்து வரவேற்றது, அதனைக் கொண்டாடும் வகையில் தொடர்ச்சியான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தியது. சிபிஐ-யின் அதிகாரபூர்வ ஏடு ‘மக்களின் சகாப்தம்’ (பியூபிள்ஸ் ஏஜ்) தனது 1947 ஆகஸ்ட் 3 இதழில், “நூற்றாண்டுகளாக யூனியன் ஜாக் கொடி பறந்த இடத்தில், இந்தியாவின் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்க உள்ளது… இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகப் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட உள்ளது” என்று எழுதியது.   

 பியூபிள்ஸ் ஏஜ் விடுதலை நாள் சிறப்பிதழை வெளியிட்டு, அதில் நாடு முழுவதும் நடந்த விழா கொண்டாட்டங்களில் சிபிஐ-யின் பங்கேற்பு குறித்த செய்திகளை விரிவாகத் தந்தது.

சிபிஐ 2வது பேராயம், கல்கத்தா, 1948

  1947 டிசம்பரில் நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிசி ஜோஷி, ‘சீர்திருத்தவாதம்’ என்ற பெயரில், நீக்கப்பட்டு, பிடி ரணதிவே நியமிக்கப்பட்டார்; அது ‘பிடிஆர்’ பாதை என்ற தற்கொலை சாகசத்திற்குக் கட்சியில் தொடக்கம் செய்தது. 1948 பிப்ரவரி-மார்ச்சில் கல்கத்தாவில் நடைபெற்ற 632 பிரதிநிதிகள் கலந்து கொண்ட சிபிஐ 2வது பேராயம் பிடி ரணதிவேவைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அப்பேராயம், இந்தியச் சுதந்திரத்தைப் ‘போலி’ என்றும் நேருவின் அரசை ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்ட் என்றும் குணாம்சப்படுத்தியது. அது நேரு அரசை உடனடியாக ஆயுதப் போராட்டம் மூலம் தூக்கி எறிந்து, ‘சோஷலிசம்’ நோக்கி நகர்த்த அறைகூவல் விடுத்தது. 1948 மார்ச் 9ல் தேசம் தழுவிய காலவரையறையற்ற ரயில்வே வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு, புரட்சி வெடிக்கும் என்ற நம்பிக்கையில் விடுக்கப்பட்டது, ஆனால் அது முழுமையாகத் தோல்வியில் முடிந்தது.

   ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தின் தெலுங்கானா பகுதியில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம், அப்பகுதிக்குள் இந்திய இராணுவப்படைகள் 1948 செப்டம்பர் 13ல் நுழைந்த பிறகும், தவறாகத் தொடர்ந்தது. அதன் விளைவாய், சிபிஐ மற்றும் அதன் ஜனரஞ்சக அமைப்புகள் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு, சிதறின. 1948ன் தொடக்கத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 89ஆயிரத்திற்கும் மேல் இருந்தது, 1950ன் இறுதியில் வெறும் 9,000 ஆகக் குறைந்தது! சாகசப் பாதை கட்சியை அழித்தது.

       பிடிஆர் நீக்கப்பட்டு, முதலில் சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகவும், பின்னர் அஜாய் கோஷ் பொதுச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

சிபிஐ சிறப்பு மாநாடு, கல்கத்தா, 1951

        அது, தலைமறைவாக 1951 அக்டோபர் 9முதல் 15வரை நடைபெற்றது. புதிய, முறையான, கட்சி செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. தலைமறைவு வாழ்வில் அஜாய் கோஷ், டாங்கே மற்றும் காட்டேவின் புனைப் பெயரின் தொடக்கமான ஆங்கில ‘P’ என்ற எழுத்தில் அமைந்த அவர்களிடமிருந்து வந்த ‘3 P’ கடிதத்தின் அடிப்படையில் அந்த மாற்றம் ஏற்கப்பட்டது; அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய புரிதலைப் பின்பற்றி, கட்சித் திட்டங்களை மேம்படுத்தினர். ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று 1952 பொதுத் தேர்தல்களில் பங்கெடுக்க கட்சி முடிவு செய்தது.

      கட்சித் திட்டம், “தொழிலாளர் வர்க்கம், வேளாண் குடிகள், உழைக்கும் கற்றறிவாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் லட்சோப லட்சம் பாடுபடும் மக்கள் திரளையும், நாட்டின் விடுதலையில் ஆர்வம் உடைய தேசிய முதலாளிகளையும்” ஒன்றிணைத்து அதனை ஒரே ஜனநாயக முன்னணியாக மேம்படுத்த அழைப்பு விடுத்தது. திட்டம் மேலும் கூறும்போது புரட்சியின் இந்தக் கட்டம், சோஷலிசப் புரட்சி அன்று; மாறாக அது ஜனநாயகப் புரட்சிக்கானது  என்று வரையறுத்தது.

       மேலும் அது ‘கொள்கை அறிக்கை’ (பாலிசி ஸ்டேட்மெண்ட்) நிறைவேற்றியது. அஜாய் கோஷ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3வது கட்சிப் பேராயம், மதுரை, 1953 --54

     1953 டிசம்பர் 27 முதல் 1954 ஜனவரி வரை தமிழகத்தின் மதுரையில் நடைபெற்ற 3வதுகட்சிப் பேராயம், நேருவின் வெளிநாட்டுக் கொள்கையின் முற்போக்குத் தன்மையை அங்கீகரித்து அரசியல் தீர்மானம் நிறைவேற்றியது.

     நமது முக்கியமான கடமைப் பொறுப்பு, காங்கிரஸ் அரசை மாற்றுவது; அதனை முற்போக்குக் காங்கிரஸ்காரர்களை உள்ளடக்கிய ஜனநாயக ஒன்றாக மாற்றி அமைப்பதென அஜாய் கோஷ் விளக்கினார். பொதுச் செயலாளராக அஜாய் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 1955 தீர்மானம்

   இந்த முக்கியமான ஆவணம் உத்திகள் மற்றும் தந்திரோபாய நிலைபாடுகளையும், நாடாளுமன்ற அமைப்புகளின் நேர்மறை பங்கையும் வரையறுத்தது. ஜனநாயக முன்னணியின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையையும், உள்நாட்டில் பொதுத்துறை சார்பான கொள்கைகளையும் நேர்மறையாக மதிப்பிட்டு வலியுறுத்தியது; மேலும், அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போரிடும்போது, வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அதிகாரத்திற்கு வந்துவிடாத வகையில் மிகக் கவனமாகக் கையாளவும் எச்சரித்தது. காங்கிரஸின் முற்போக்குப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ஜனநாயக முன்னணி இருக்கும் என்றது.

4வது கட்சிப் பேராயம், பாலக்காட், 1956

    கட்சியின் அரசியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளின் வரலாற்றில் இப்பேராயம் ஒரு குணாம்சரீதியான திருப்பு முனை, பிடிஆர் காலத்தின் சரிவுக்குப் பிறகு கட்சியை அரசியல் மைய நீரோட்டத்தில் இணைய உதவியது. கேரள மாநில பாலக்காட்டில் 1956 ஏப்ரல் 19முதல் 29வரை நடைபெற்றது. ஒரு லட்சத்து ஐயாயிரம் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 407பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

     அஜாய் கோஷ், தேசிய சர்வதேசிய நிலைகள் மற்றும் புதிய கடமை பொறுப்புகளையும் வரலாற்றுச் சிறப்புமிக்க சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) 20வது காங்கிரஸ் குறித்தும் அறிக்கை தந்து, புதிய உலக எதார்த்தங்கள் மற்றும் உத்திகள், தந்திரோபாயங்களில் மாற்றத்தின் தேவையை வலியுறுத்தினார். நாடாளுமன்ற அமைப்புகள் மற்றும் அமைதியான மாற்றத்தின் பங்கினை அடிக்கோடிட்டு வலியுறுத்தினார்.

      கட்சிப் பேராயம் ஸ்டாலின் தலைமை வழிபாட்டை (பர்சனாலிட்டி கல்ட்) விமர்சனம் செய்தது; மேலும் அவரது பங்களிப்புக் குறித்துச் சமச்சீரான மதிப்பீடு தேவை என்றது.

     பாலக்காட் பேராயம் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பை ஆதரித்தது. ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியாக இருக்காது என அரசியல் தீர்மானம் தெளிவு படுத்தியது. “இந்தியச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடு, ஒரு பக்கம் ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவமும் இருக்க, மறுபுறம் தேசிய நடுத்தர வர்க்க முதலாளிகள் (நேஷனல் பூர்ஷ்வாசி) உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடாகும்” என்று விளக்கியது தீர்மானம். (ஏகாதிபத்தியம் மற்றும் நிதிமூலதனத்தை ஆதரிக்கும் பெரு முதலாளிகள் –கார்ப்பரேட் பூர்ஷ்வாஸி-- வேறு, நடுத்தர வர்க்க தேசிய பூர்ஷ்வா முதலாளிகள் வேறு. மாற்றத்திற்கான போராட்டத்தில் தேசிய பூர்ஷ்வாக்களின் ஒத்துழைப்பு தேவை)

            வலதுசாரி சக்திகளுக்கு எந்தவகையிலும் இடம் தரும் கேள்வியே எழவில்லை.

            ஜாய் கோஷ் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5வது (அசாதாரண) கட்சிப் பேராயம், அமிர்தசரஸ், 1958      

      கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற (1957) பின்னணியில், இந்தப் பேராயம் ஒரு மைல்கல் பேராயம். கட்சி அமைப்பு விதிகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி கட்சிக்கான புதிய அமைப்பு விதி நிறைவேற்றப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:

1.‘பாட்டாளிகளின் சர்வாதிகாரம்’ என்ற கோட்பாடு கைவிடப்பட்டது.

2.இந்தியாவில் எதிர்கால சோஷலிசத்தில் எதிர்க்கட்சிகளின் இருப்பை அங்கீகரிப்பது

3.அமைதியான வழிகளில் முழு ஜனநாயகத்தையும் சோஷலிசத்தையும் வென்றெடுக்கச் சிபிஐ பாடுபடும் என அறிவிக்கிறது.

4.அனைத்து தேசபக்த மற்றும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்துத் தேசிய விடுதலையைப் பாதுகாக்க உறுதி ஏற்கிறது.

5. தேசியமயமாக்கல் மற்றும் பொதுத் துறைகள் போன்ற நல்ல அம்சங்களை வலதுசாரி பிற்போக்குச் சக்திகள் தாக்குகின்றன என்பதைக் கட்சிப் பேராயம் சுட்டிக் காட்டுகிறது.

6.அமிர்தசரஸ் பேராயம் குறித்து விமர்சித்த இஎம்எஸ், ‘நியூ ஏஜ்’ இதழில் பின்வருமாறு எழுதினார்: “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையில் தேசியம், ஜனநாயகம் மற்றும் மக்களுக்குச் சேவை என்ற செயல்திட்டத்தைப் பின்பற்றுகிறது; மேலும் அகிம்சை, ஒத்துழையாமை மற்றும் சுயராஜ் என்ற காந்திஜியின் உணர்வைப் பின்பற்றுகிறது”

7.கட்சி அமைப்பு விதிகள் ஸ்தாபனக் கட்டமைப்பில் முந்தைய இரண்டடுக்கு என்பதற்குப் பதிலாக மூன்று அடுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றியது.

6வது கட்சிப் பேராயம், விஜயவாடா, 1961

இப்பேராயம், சர்வதேசிய மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் அழிவு தரும் மாவோயிசப் பிளவு நடவடிக்கைகளின் பின்னணியில் நடைபெற்றது, பல பிளவுகளுக்கு இட்டுச் சென்றது.

கட்சிப் பேராயம் 1961 ஏப்ரல் 7 முதல் 16வரை 1,77,501 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 439 பிரதிநிதிகள் பங்கேற்புடன் நடைபெற்றது. மாவோயிசத்தால் தூண்டிவிடப்பட்ட சீனப் பாதையைப் பின்பற்றியவர்கள் கட்சியைப் பிளவுபடுத்தும் தயாரிப்புகளில் ஈடுபட்டாலும், தக்க சமயத்தில் அஜாய் கோஷ் தலையீட்டால் காக்கப்பட்டது. கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவர் ஆற்றிய நீண்ட உரை ‘கட்சிப் பாதை’யாக (பார்ட்டி லைன்) நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்திற்குப் பிளவு தவிர்க்கப்பட்டது.

சீனா ஆக்கிரமிப்பு, 1962      

       தங்கள் சொந்த வாக்குறுதிக்கு மாறாக அதை மீறி, 1962 அக்டோபரில் சீனப்படைகள் இந்தியப் பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது. சீன ஆக்கிரமிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு (CEC) ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படையாகக் கண்டித்தது; மேலும் தேசப் பாதுகாப்பிற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரித்தது.

7வது கட்சிப் பேராயம், பாம்பே, 1964

            கட்சிப் பிளவிற்குப் பிறகு நடந்த முதலாவது பேராயம், 1964 டிசம்பர் 13 முதல் 23 வரை நடைபெற்றது. பிளவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சுட்டிக் காட்டியது. பேராயம், தேசிய ஜனநாயகப் புரட்சிக்கான புதிய செயல்திட்டத்தை நிறைவேற்றியது. மாவோயிசம் மற்றும் சீன ஆக்கிரமிப்பைச் சிபிஐ பேராயம் கண்டித்தது.

            சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8வது கட்சிப் பேராயம், பாட்னா, 1968

    1968 பிப்ரவரி 7 முதல் 15வரை நடத்தப்பட்டது. சிபிஐ(எம்) கட்சியிலும் 1967ல் பிளவு ஏற்பட்டு ‘நக்சலைட்டுகள்’ வெளியே வந்தார்கள். அரசியல் தீர்மானம் பெருந்திரள் மக்கள்

எழுச்சியையும் பந்த் (கடையடைப்பு) இயக்கத்தையும் சுட்டிக் காட்டியது, சிபிஐ அந்தப் போராட்டங்களில் முன்னணியில் இருந்தது. வலதுசாரி பிற்போக்குச் சக்திகளிடமிருந்து அதிகரித்து வளரும் ஆபத்துக்களுக்கு எதிராக அது எச்சரித்தது; பெருந்திரள் ஜனநாயக முன்னணியை விரிவுபடுத்த அது அறைகூவல் விடுத்தது.

  சி இராஜேஸ்வர  ராவ் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9வது கட்சிப் பேராயம், கொச்சி, 1971

   2,43,248 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 995 சார்பாளர்கள் மற்றும் 182 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 

       பேராயம் அரசியல் அறிக்கை, அரசியல் தீர்மானம், அமைப்புநிலை அறிக்கை மற்றும் பிற ஆவணங்களை நிறைவேற்றியது. காங்கிரஸ் விரோத அல்லது காங்கிரஸ் அல்லாத முன்னணி

போன்ற எந்தக் கருத்தும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கே உதவிடும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியது. ஜனசங்கம் –ஆர்எஸ்எஸ் கூட்டு ஆகப் பெரிய ஆபத்து. 1969ல் 14 ஏகபோக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. பிற்போக்கு மற்றும் முற்போக்கு சக்திகள்  இடையே மோதல், முரண்பாடு கூர்மை அடைந்தது; சிபிஐ ஆதரவுடன் வி வி கிரி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

        எஸ் ஏ டாங்கே தலைவராகவும் (சேர்மன்) சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10வது கட்சிப் பேராயம், விஜயவாடா, 1975

  3,55,526 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1246 சார்பாளர்கள் கலந்து கொள்ள, இப்பேராயம் 1975 ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றது. சிபிஐ அமைக்கப்பட்ட 50ம் ஆண்டு பொன்விழா குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிபிஐ சேர்மன் எஸ் ஏ டாங்கே, ‘வலதுசாரி பிற்போக்கை அதிகாரத்திற்கு வர சிபிஐ அனுமதிக்காது’ என்று கூறினார்.

      பேராயத்தின் இறுதி நாளில் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

        எஸ் ஏ டாங்கே தலைவராகவும், சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11வது கட்சிப் பேராயம், பட்டிண்டா, 1978

       பஞ்சாப் மாநில பட்டிண்டாவில் 1978 மார்ச் 31 முதல் ஏப்ரல் 7வரை நடைபெற்றது. 5,46,732 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1183 முழு பிரதிநிதிகளும் மற்றும் 259 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    பேராயம், அவசரநிலையை (எமர்ஜென்சி) சிபிஐ ஆதரித்தது தவறு என்று முடிவு செய்தது. தொடக்கத்தில் இருந்தே எமெர்ஜென்சி மக்கள் விரோதமாகவே இருந்தது. அதே நேரத்தில் ‘முழுப் புரட்சி’ என்றழைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைமையிலான (ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம்) ஜெபி இயக்கத்திடமிருந்து உண்மையான அச்சுறுத்தல் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்திய பேராயம், எனவே நாம் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டது சரியே என்றும் கூறியது.

இந்த இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்தது ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கம் என்று சுட்டிக் காட்டிய பட்டிண்டா பேராயம் இவ்வாறு அறிவித்தது: “அதிதீவிர வலதுசாரிகளால் கைப்பற்றுப்படும் ஆபத்து இவ்வாறு கடுமையானதாக இருந்தது.”

என்னதான் நோக்கமாக இருந்தாலும், அவசரநிலை திணிப்பு இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஆட்சியை மட்டுமே வலுப்படுத்தியது; மேலும் அது வலதுசாரி பிற்போக்கிற்கே உதவியது.

பேராயம் சேர்மன் மற்றும் பொதுச் செயலாளரை மீண்டும் தேர்ந்தெடுத்தது.

12வது கட்சிப் பேராயம், வாரணாசி, 1982

    உ.பி. மாநில (காசி மற்றும் பெனாரஸ் எனப்படும்) வாரணாசியில் 1982 மார்ச் 22 முதல் 28வரை நடைபெற்றது. 1223 முழு பிரதிநிதிகளும் மற்றும் 188 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சென்ற மாநாடு நடந்த காலத்திலிருந்து நாட்டில் அனைத்து வகையான வகுப்புவாத மற்றும் சீர்குலைவு சக்திகள் தலை தூக்கி ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுத்தின எனப் பேராயம் சுட்டிக் காட்டியது. (கொள்கையற்ற) “அனைத்தும் சேர்ந்த எதிர்த்தரப்பு ஒற்றுமை” (ஆல்-இன் அப்பொஸிஷன் யூனிட்டி) என்ற கோட்பாட்டைக் கட்சிப் பேராயம் கூர்மையாக விமர்சனம் செய்தது.

       சி இராஜேஸ்வர ராவ் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13வது கட்சிப் பேராயம், பாட்னா, 1986

   1986 மார்ச் 12 முதல் 17வரை நடைபெற்றது. 1027 பிரதிநிதிகளும் மற்றும் 71 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். “கொள்கை அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மீண்டும் ஒன்றிணைப்பது” என்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது, ஆனால் அதற்கு மறுமொழி கிடைக்கவில்லை. தேசிய அளவில் சிபிஐ, இந்திய தேசியக் காங்கிரசுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது.

        சி இராஜேஸ்வர ராவ் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

14வது கட்சிப் பேராயம், கல்கத்தா, 1989

    1989 மார்ச் 6 முதல் 12வரை நடைபெற்றது. 956 பிரதிநிதிகளும் மற்றும் 91 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சோவியத் யூனியனின் நிகழ்வுகள் பிரதிநிதிகளின் கவனத்தைக் கவர்ந்தது. பெரேஸ்ட்ரோய்கா மற்றும் க்ளாஸ்நாட் (சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத் தன்மை), குறித்து அங்கே பிரதிநிதிகள் பலவாறு பேசினர். கட்சிப் பேராயம், “இத்தகைய சீர்திருத்தங்களின் முக்கியமான திசைவழி சரியானது என்று நமது கட்சி திருப்தி அடைகிறது மற்றும் நாம் அதனை ஆதரிக்கிறோம்” என்று கூறியது. அப்படிக் கூறியதால் அதற்கு எல்லாமும் சரி என்று பொருளாகாது.

   இந்திய அரசு அதனது வெளியுறவுக் கொள்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளது. நாட்டில் வகுப்புவாத நிலைமை மோசத்திலிருந்து படு மோசமாகப் போனது.

        சி.இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகத் திரும்ப மீண்டும் தேர்வானார்.

15வது கட்சிப் பேராயம், ஹைதராபாத், 1992

        1992 ஏப்ரல் 16 முதல் நடைபெற்றது.

     பேராயத்தின் விவாதங்களில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிகழ்வுகளும் அது தொடர்ந்து சோவியத் யூனியன் சிதறியதற்கு இட்டுச் சென்றது குறித்தும் மேலோங்கி இருந்தது: அது ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் குறித்த கேள்விகளை எழுப்பியது.

       பேராயத்திற்கு முந்தைய நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, பேராயத்தில் “சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நிகழ்ச்சிப் போக்குகள்” என்ற தலைப்பில் விரிவான ஆவணம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான ஆவணம், (பார்ட்டி ப்ரோகிராம்) செயல்திட்ட ஆவணமாகும். இந்திய மற்றும் உலக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் முழுமையான செயல்திட்ட ஆணவம் நிறைவேற்றுவதிலும் அதன் மீதான விவாதங்களையும் தாமதப்படுத்தி ஒத்தி வைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. கட்சியில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு இதுவும் ஏற்கப்பட்டது.

        ஹைதராபாத் பேராயம் நடைபெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் சி இராஜேஸ்வர ராவ் உடல்நலம் குன்றிய காரணத்தால் இந்திரஜித் குப்தா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பேராயம் இந்திரஜித் குப்தாவைப் பொதுச் செயலாளராக உறுதி செய்தது.

திரிச்சூர் அமைப்புநிலை மாநாடு, 1993

     கேரள மாநிலம், திருச்சூரில் 1993 மார்ச் 11 முதல் 14 வரை இரண்டு ஆவணங்களை விவாதிக்க நடத்தப்பட்டது: ஒன்று, “சில ஸ்தாபனக் கடமைகள்,” மற்றொன்று, “ஜனரஞ்சகப் பெருந்திரள் அமைப்புகளும் கட்சியும்.” இம்மாநாடு மூன்றடுக்கு கட்சிக் கட்டமைப்பை, இரண்டடுக்காக மாற்றியது. இவ்வாறு மாற்றியமைப்பதால் பணிகளை மறுமுறையும் திரும்ப (டூப்ளிகேட்டாக) செய்வதைக் குறைக்கும் எனக் கருதப்பட்டது. செயலகம் என்ற அமைப்பு எடுக்கப்பட்டது, மத்திய செயற்குழு (சிஇசி) ‘தேசியச் செயற்குழு’ என்றானது.

     மாநாடு, கட்சி அமைப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் பிரிவுகள் மற்றும் பெண்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்தது.

   இரண்டடுக்கு ஏற்பாடு எதிர்பார்க்கப்பட்டவாறு செயல்படவில்லை; எனவே, கட்சி மூன்றடுக்கு கட்டமைப்புக்கு மீண்டும் திரும்பியது.

16வது கட்சிப் பேராயம், புதுடெல்லி, 1995

        1995 அக்டோபர் 7முதல் 11வரை நடைபெற்றது. 720 பிரதிநிதிகளும் மற்றும் 44 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பாபர் மசூதி இடிப்பு (1992), இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் ஒற்றுமை குறித்த கேள்விகள் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பா நிகழ்வுகள் பேராயத்தில் முக்கிய பொருளாக விவாதிக்கப்பட்டன.

   எதிர்வரும் தேர்தல்களில் மூன்று அணிகள் போட்டியிடக் கூடும் என்று சிபிஐ கட்சிப் பேராயம் கூறியது: தேசியக் காங்கிரஸ் மற்றும் கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் தேசிய முன்னணி –இடதுசாரி முன்னணி கூட்டு. காங்கிரஸ் மற்றும் பாஜக –சிவசேனா கூட்டு இரண்டையும் எதிர்த்துத் தேசிய முன்னணி – இடது முன்னணி (NF-LF) போராடும்.

 இந்திரஜித் குப்தா பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

17வது கட்சிப் பேராயம், சென்னை, 1998

       சென்னையில் 1998 செப்டம்பர் 14முதல் 19வரை கூட்டப்பட்டது. 975 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு 1998ல் சிறிது காலம் அதிகாரத்திற்கு வந்தது. பேராயம், ஒரு மதசார்பற்ற ஜனநாயக மாற்றை மேலெடுத்து, வலதுசாரி பக்கம் திரும்புவதைத் தடுத்து, இடதுசாரிப் பக்கம் கொண்டு வருவதே நோக்கம் என்று கூறியது. புதிய மாற்றில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்காற்ற வேண்டும்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியக் குழு ஏபி பரதனைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. இந்திரஜித் குப்தா 1996ல் ஒன்றிய அமைச்சரவையில் சேர்ந்து உள்துறை அமைச்சரானதும், ஏபி பரதன் 1996லேயே பொதுச் செயலாளர் ஆனார்.

18வது கட்சிப் பேராயம், திருவனந்தபுரம், 2002

 2002 மார்ச் 26முதல் 31வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. 604பிரதிநிதிகளும் மற்றும் 56 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இப்பேராயம் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சூழலிலும், குஜராத்தில் பரவலான வகுப்புவாதக் கலவரங்கள் நடந்த பின்னணியிலும் நடந்தது.

  சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடு நின்று போனது. வலிமையான சிபிஐ கட்சியே தற்போதைய தேவை; மற்றும் எதிர்வரும் காலம் தவறுகளைச் சரிசெய்வதாகவும், கட்சியை மறுசீரமைப்பதாகவும் இருக்கும் என்று பேராயம் கூறியது.

   ஏபி பரதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19வது கட்சிப் பேராயம், சண்டிகார், 2005

       2005 மார்ச் 29முதல் ஏப்ரல் 3வரை நடைபெற்றது. 549பிரதிநிதிகளும் மற்றும் 61 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

        இக்காலகட்டத்தில் சிபிஐ மற்றும் இடதுசாரிகள், (யூபிஏ-1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 அரசை ஆதரித்தன. கட்சிப் பேராயம், கம்யூனிஸ்ட் ஒற்றுமைக்காகக் கையேந்தி இரந்து நிற்காது என்பதைத் தெளிவாக்கியதுடன், வலிமையான சுதந்திரமான கட்சியைக் கட்டும் என்று அறிவித்தது. 1964 பிளவு ஏற்பட்டதிலிருந்து சிபிஐ-யின் கருத்து பெருமளவு நிரூபிக்கப்பட்டது.

   ஏபி பரதன் பொதுச் செயலாளராகவும், எஸ் சுதாகர் ரெட்டி துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

20வது கட்சிப் பேராயம், ஹைதராபாத், 2008

      2008 மார்ச் 23முதல் 27வரை நடைபெற்றது. கட்சியின் அடித்தளத்தையும், கட்சியின் தனித்த சுதந்திரமான இமேஜையும் கட்டுவது என்பதன் மீது முக்கிய அழுத்தம் தரப்பட்டது. மேலும் ஜனரஞ்சக பெருந்திரள் அமைப்புக்களின் அடித்தளத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் ஏபி பரதன் பொதுச் செயலாளராகவும், எஸ் சுதாகர் ரெட்டி துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

21து கட்சிப் பேராயம், பாட்னா, 2012

    2012 மார்ச் 27முதல் 31வரை நடைபெற்றது. அரசியல் தீர்மானம், அரசியல் மறுபரிசீலனை (ரெவியு) அறிக்கை மற்றும் ஸ்தாபன அறிக்கை விவாதிக்கப்பட்டன. கட்சி அமைப்பு விதிகளில் நுழைவுக் கட்டணம், செயலர்களின் பதவிக் காலம் முதலிய சில திருத்தங்கள் செய்யப்பட்டன. பேராயம், பரந்த இடதுசாரி மற்றும் ஜனநாயக ஒற்றுமையை வலியுறுத்தியதுடன், இடதுசாரி ஒற்றுமை மேலும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றது.

எஸ் சுதாகர் ரெட்டி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

22வது கட்சிப் பேராயம், புதுச்சேரி, 2015

   2015 மார்ச் 25முதல் 29வரை புதுச்சேரியில் நடைபெற்றது. 819பிரதிநிதிகள், மாற்றுப் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் புதிய செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிரந்தரமான செயல்திட்ட ஆணையம் (ப்ரோகிராம் கமிஷன்) நியமிக்கப்பட்டது. பேராயத்தின் அரசியல் தீர்மானம், கார்ப்ரேட் வலதுசாரி வகுப்புவாதச் சக்திகளை அதிகாரத்திலிருந்து இறக்குவதும், மக்களின் மாற்றைக் கட்டி எழுப்புவதும் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியது.

 “மக்களுடன் மீண்டும் ஒன்றிணயுங்கள்!” என்று பேராயம் கட்சி முழுமையையும் அறிவுறுத்தியது.

    எஸ் சுதாகர் ரெட்டி பொதுச் செயலாளராகவும், குருதாஸ் தாஸ்குப்தா துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

23வது கட்சிப் பேராயம், கொல்லம், 2018

      2018 ஏப்ரல் 25முதல் 29வரை கேரளாவின் கொல்லத்தில் நடைபெற்ற பேராயத்தில் மற்றவர்கள் உள்ளிட்ட 810பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வலிமையான சிபிஐ கட்சியைக் கட்டுவதை வலியுறுத்தும்போது, பரந்துபட்ட ஒற்றுமைக்கு எதிரானதாக இடதுசாரி ஒற்றுமை அமையக் கூடாது என்பதை அரசியல் தீர்மானம் தெளிவாக்கியது. 
          அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளின் பரந்த மேடை கட்டியமைக்க வேண்டும் என்றது.
 
    எஸ் சுதாகர் ரெட்டி பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஜூலை தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து சுதாகர் ரெட்டி ஓய்வு பெற்றார்; அந்தப் பொறுப்பிற்கு டி ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த 24வது பேராயம், விஜயவாடா, 2022

கடந்த சில ஆண்டுகளில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 6,50,000 ஆகும். அடுத்த 24வது கட்சிப் பேராயம் தற்போது விஜயவாடா நகரில் (2022 அக்டோபர் 14 முதல் 18வரை) சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (அக்.16 –22)
--தமிழில் : நீலகண்டன்,
தொலைத் தொடர்பு ஊழியர், கடலூர்