Tuesday 7 September 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 31 நாகேந்திர சக்லானி

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 31

 


நாகேந்திர சக்லானி :

டெஹ்ரி கார்வால் இணைப்புப் போராட்டக் கதாநாயகன்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஜனவரி 24 – 30

            நாகேந்திர சக்லானி ஓர் இளம் கம்யூனிஸ்ட் ஹீரோ; டெஹ்ரி கார்வால் சமஸ்தான அரசை விடுவித்து அதனை இந்தியாவுடன் இணைப்பதற்கான எழுச்சியில் சுடப்பட்டு வீரமரணமடைந்த வீரன். 28 வயதுக்கும் குறைவான இளம் வயதில் உயிர்த்தியாகம் செய்த தியாகி.

            அப்போது சமஸ்தான அரசாக இருந்த டெஹ்ரி கார்வாலின் சக்லானா பட்டியின் புஜர்காவுன் கிராமத்தில் நரேந்திர சக்லானி 1920 நவம்பர் 16ல் பிறந்தார். டேராடூனில் பத்தாவது வரை படித்தார்; அப்போது மாணவர்கள் சம்மேளனத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பெருநிலக்கிழார் குறுநில ஆட்சியை எதிர்த்த பரந்த அடிப்படையிலான பிரஜா மண்டல் (மக்கள் சபை) அமைப்போடும் தொடர்பு கொண்டார். நரேந்திரா அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவராகி, மார்க்ஸியத்தின்பால் ஈர்க்கப்பட்டு இறுதியில் மேல்நிலை சிபிஐ தலைவரானார்.

டெஹ்ரி- கார்வால் சமஸ்தான அரசு

            டெஹ்ரி- கார்வால் சமஸ்தான அரசின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. 19ம் நூற்றாண்டில் அப்பகுதியைக் கூர்க்காக்கள் ஆண்டபோது மிக மோசமான அடிமைப்படுத்தும் ஒடுக்குமுறை வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தினர். வரிகட்ட முடியாதவர்கள் தங்களையே ஏலத்தில் எடுக்க சம்மதித்தோ அல்லது விற்கவோ வேண்டும்; அப்படிச் செய்யத் தவறுபவர்கள் கட்டாயமாக வெளிப்படையான அடிமைச் சந்தையில் விற்கப்பட்டு விடுவார்கள். ஹரித்வார் ஹர்-கி-பௌரி அருகே பீம்கோடாவில் எப்போதும் வழக்கமாக நடைபெறும் ‘அடிமைச் சந்தை’யில் 3 வயது முதல் 30 வயதுவரை உள்ள மனிதர்கள் காட்சிப்படுத்தப்பட்டு 10 ரூபாய் முதல் 150வரை ஏதோவொரு விலையில் விற்கப்பட்டுவிடுவார்கள். இந்த முறையில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அடிமைகள் விற்கப்படுவார்கள்; சமஸ்தானத்திற்குள் விற்கப்படும் எண்ணிக்கையைத் தவிர இது தனி.

            19ம் நூற்றாண்டில் ஆங்கிலேய – கூர்க்கா யுத்தம் கூர்க்காகள் தோல்வியில் முடிந்தது. பிரிட்டிஷார் அப்பகுதியை இரண்டாகப் பிரித்து அலகநந்தா நதிக்கு வடக்கே உள்ள பகுதி பிரிட்டிஷ் – கார்வால் என்றும் வலதுபுறம் ஷா பரம்பரை சமஸ்தானத்தின் கீழ் டெஹ்ரி- கார்வால் என்றும் ஆனது. நரேந்திர ஷா மற்றும் மனவேந்திர ஷா பிற்கால ஆட்சியாளர்களில் சிலர். அந்த ஆட்சியில் ‘காஸ் பட்டி’ மக்கள் மிகக் கொடுமையாகச் சுரண்டப்பட்டு, அங்கே திரும்பத் திரும்ப கிளர்ச்சிகள் மூண்டன என்று ‘மேல்நிலை ஆய்வுக்கான சர்வதேச சஞ்சிகை’ (IJAS இதழ் எண் 4, 2016) கூறுகிறது. சக்லானியும் பிற கம்யூனிஸ்ட்களும் அப்போராட்டங்களில் விளைந்தவர்கள். அப்பகுதியின் ‘ராஜ்ஷாஹி’ தில்லாரி மற்றும் ரன்வாய் என்ற இடங்களில் 1930 மே 30ம் நாள் நூற்றுக் கணக்கான விவசாயிகள் கொல்லப்பட்டனர். (ராஜ்ஷாஹி ராஜ்யம் என்பது மிகப் பெரிய ஜமீன்தார், வங்காளத்தில் பெரும் பகுதியை உடையது. 33,670 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு சொந்தமாகக் கொண்ட, பெரும்பணக்கார இரண்டாவது பெரிய ஜமீன். ராஜ்ஷாஹி ராயல் குடும்பம் ராய்/ ரே என்ற பட்டப் பெயரும் மைத்ரா என்ற குடும்பப் பெயரையும் பயன்படுத்தியது. 18ம் நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது. – இணையத் தகவல்).

            இரயில்வே கட்டுமான பரவலுக்காகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குத் தண்டவாளத்தின் கீழ் வைக்கப்படும் மர ஸ்லீப்பர் கட்டைகள் தேவைப்பட்டன. அதற்கான ஒப்பந்தம் இந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்களும் காடுகளில் பெரிய பெரிய மரங்களை வெட்டினர். அதற்காக வனத்தில் வசிக்கும் ஏழை மக்களை மிகக் கொடுமையாகச் சுரண்டினர்.

            சமஸ்தான அரசு மக்கள் மீது அனைத்து வகையான வரிகளையும் விதித்து அவர்களை செர்ஃப் (serf) எனப்படும் ஊதியமற்ற வேலைக்காரர்களாகப் (நிலஉடைமையாளரின் நிலத்தில் ஊதியமில்லாத, அற்பச் சலுகைகளுடன் அடிமையாகப் பணியாற்றுவது) பயன்படுத்தியது. சக்லானியும் பிற கம்யூனிஸ்ட்களும் அந்தத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்ற கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று மேற்கண்ட சஞ்சிகையின் அதே இதழில் கூறப்பட்டுள்ளது.

மார்க்ஸியத்தின் செல்வாக்கு

          பிரஜா மண்டல் (மக்கள் சபா) அமைப்பில் பணியாற்றும்போது சக்லானி மார்க்ஸியத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். கட்சி அலகாபாத்திலிருந்து ஆனந்த் ஸ்வரூப் பரத்வாஜ் டேராடூன் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட அனுப்பப்பட்டார். அவர் இளம் புரட்சியாளர்கள் குழு ஒன்றைத் திரட்டியபோது அவர்களில் நாகேந்திர சக்லானியும் ஒருவராக இருந்தார்; ஓர் அரசியல் பள்ளி நிறுவப்பட முதல் குழு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை உருவாக்கியது. பிரஜேஷ் குப்தா மற்றும் தாதா தௌலத் ராமுடன் இணைந்து சக்லானி விவசாயிகள் மத்தியில் பணியாற்றினார். ஆனந்த் ஸ்வரூப் டேராடூன் சிபிஐ அமைப்பாளர் ஆனார். சக்லானியும் மற்ற தோழர்களும் மக்களுக்கான ரேஷன், மண்ணெண்ணை, உப்பு முதலான பொருட்கள் பிரச்சனைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர். சக்லானி 1942ல் கட்சி உறுப்பினரானார்.

            1945 ஜூலை 25ல் டெஹ்ரி எதிர்ப்புப் போராட்டத்தின் புகழ்பெற்ற தலைவரான ஸ்ரீ தேவ் சுமனின் முதலாமாண்டு நினைவு நாளை அனுசரிக்க டேராடூனில் சிபிஐ ஏற்பாடு செய்தது. அதில் முக்கிய பங்காற்றிய சக்லானி சிபிஐ மற்றும் பிரஜா மண்டலுக்குப் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்த்தார்.     

            அப்படி ஈர்க்கப்பட்டவர்களில் புகழ்பெற்ற சிபிஐ தலைவரும் எழுத்தாளருமான கோவிந்த் சிங் நேகியும் ஒருவர்; அவர் அதற்கு முன்பு தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருந்தவர். அவர் தனது நினைவுக் குறிப்புகளில் எழுதும்போது சக்லானியைச் சந்திக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு, அதுவும் பத்து நிமிடம் அவருடன் நடத்திய உரையாடல் தனது வாழ்க்கை திசைவழியை மாற்றியது என்கிறார்.

            கடகோட் (டாங்சௌரா) பகுதியின் விவசாயிகள் எழுச்சியில் நாகேந்திர சக்லானி தீவிரமாக ஈடுபட்டார். இதனால் பிரஜா மண்டல் தலைமையின் ஒரு பிரிவு அவரிடமிருந்து விலகியது; அவர்கள் சமஸ்தான அரசுடன் மென்மையான அணுகுமுறையை விரும்பியதே காரணம். இதனால் சக்லானி மண்டல் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் டிரேபன் சிங், புதேவ் லக்கேரா, இந்தர் சிங் மற்றும் சில இளம் செயற்பாட்டாளர்கள் குழுவை அமைத்துக் கார்வால் பகுதியில் செயல்பட்டார்.

            பின்னர் பிரஜேஷ் மற்றும் பிற தோழர்களுடன் இணைந்து சக்லானி வலிமையான கட்சி மையத்தைப் பௌரியில் ஏற்படுத்தினார்.

            சமஸ்தானத்திற்குள் நுழையும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் எடுத்து வரும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி விதிப்பது வழக்கமானது. ஒருவர் கைது செய்யப்படுவதற்குத்  தீங்கற்ற மென்மையான பாடல்கள், கவிதைகள் போதுமானதாக இருந்தன. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பல வீரர்கள் டேராடூன் மற்றும் அருகமைந்த இடங்களுக்கு வந்தனர். அவர்களில் பலரும் காந்தி குல்லாய் அணிந்து ‘ஜெய் ஹிந்த்’ என எப்போதும் முழக்கமிடுவது வழக்கம். அக்‘குற்ற’த்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.

            சக்லானி, பிரஜேஷ் மற்றும் சிலரைக் கைது செய்து டெஹ்ரி சிறையில் அடைத்தனர். சக்லானிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களோடு சேர்ந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அவருக்குக் கட்டாயப்படுத்தி உணவைப் புகட்டும்போது அவரது பற்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. 1946 டிசம்பர் 3ல் விடுதலையாகி உடனடியாகப் பல இடங்களில் சத்தியாகிரகிகள் முகாம்களை அமைக்கச் சென்றார்.

சக்லானாவில் போராட்டம் : இந்தியாவுடன் இணைப்பு

            டெஹ்ரி – கார்வால் அரசுக்குச் சொந்தமாக அதற்குள் அமைந்த சக்லானா ஒரு சிறு அரசாக இருந்தது. மக்களைப் புதிய வரிகளைக் கட்ட நிர்பந்தித்து 1947 செப்டம்பர் 13ம் நாள் அரசர் சிறு படையை சக்லானாவுக்குள் அனுப்பினார். கூட்டு அபராதத் தொகையாக 13ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் விதிக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய சமஸ்தான படைகள் கிராமத்தைவிட்டு ஓடிய மக்களின் சொத்துக்களைக் கைப்பற்றிச் சென்றனர். பெரும்பான்மையோர் சுதந்திர இந்தியாவின் டேராடூன் மாவட்டக் கியாராவுக்கு ஓடினர்.

            சக்லானாவின் தலைமையின் கீழ் கிராமத்தினர் ஒன்று திரண்டு அரசரின் படைகளைத் திரும்பத் தாக்கிப் போராடினர். சக்லானாவின் மஞ்ச்காவுன் ஆகோடியில் போலீஸ் குழு ஒன்றை மக்கள் கைது செய்தனர். போலீஸ்காரர்கள் டெஹ்ரிக்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு சக்லானா சமஸ்தானம் டெஹ்ரி சமஸ்தான அரசுடன் செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஒன்றுமில்லாமல் செய்து ரத்து செய்து (தாங்கள்) இந்தியாவுடன் இணைந்து விட்டதாகப் பிரகடனப்படுத்தியது.

            இந்த நிகழ்வு “சக்லானா தன்தக்” என்று அறியப்படுகிறது. ‘தன்தக்’ (Dhandhak i.e., FLARE UP தீப்பந்தங்கள் / ஜோதிகளை உயர்த்தும் சமிக்ஞை) என்பது சமஸ்தான அரசில் இருந்த ஒரு வழக்கம். அதன்படி பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தனித்தனியே அரசரிடம் முறையிடலாம். கூட்டாக அது ஓர் இயக்கமாயிற்று.

1946 தேர்தல்களில் பணி

            1946 சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் அந்நேரத்தில் புகழ்பெற்றிருந்த சந்திரா சிங் கார்வாலியை நிறுத்த கட்சி முடிவு செய்தது. ஆனால் 1930 பெஷாவரில் மக்களைச் சுட படைவீரர்கள் மறுத்த நிகழ்வில் ஈடுபட்டதன் காரணமாக இராணுவக் கோர்ட் விதித்த தடை உத்தரவால் சமஸ்தானப் பகுதிக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்குவதற்கான முயற்சிகளை எடுக்கும் பொறுப்பு நகேந்திர சக்லானி, பிரஜேஷ் குப்தா மற்றும் சிலரிடம் அளிக்கப்பட்டது. தேவையான நடவடிக்கைகளுக்காக அவர்கள் லக்னோ, டெல்லி மற்றும் பிற இடங்களுக்கு ஓடினர். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை நிராகரிக்க அனைத்தும் செய்தனர். இறுதியில் சக்லானி குழுவினர் தங்கள் முயற்சியில் வென்று சந்திரா சிங்கால் போட்டியிட இயன்றது.

டெஹ்ரி சமஸ்தான விடுதலை, இந்தியாவுடன் இணைப்பு மற்றும் சக்லானியின் உயிர்பலி

           

      1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா அடைந்த விடுதலையை டெஹ்ரி-கார்வால் சமஸ்தான அரசு அங்கீகரிக்கவில்லை. நாகேந்திர சக்லானி மற்றும் பிற சிபிஐ தலைவர்கள் அதனை இந்தியாவுடன் இணைக்கக் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 1948 ஜனவரி 10ம் நாள் சக்லானி ஒரு கடிதம் எழுதினார்; அக்கடிதம் தற்போது வரலாற்று ஆவணமாகப் புகழ்பெற்றது. ‘கீர்த்தி நகர் நிகழ்வு’ பற்றி எழுதும்போது அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “நேற்று கீர்த்தி நகரில் 600 தன்னார்வத் தொண்டர்களின் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அந்த இடத்தைக் காலி செய்து அகன்றுவிடுமாறு சப்-டிவிஷனல் மேஜிஸ்டிரேட்டுக்கு இறுதி கெடு விதித்து பிரகடனம் செய்தோம்; அவரும் அதனை ஏற்று அவ்வாறே செய்தார். போலீசும் இராணுவப் படையினரும் சரணடைந்து நரேந்திர நகருக்கு மோட்டார் வாகனங்களில் சென்றுவிட்டனர். டெஹ்ரி சமஸ்தான அரசிலிருந்து கீர்த்தி நகர் விடுதலை அடைந்தது, இப்போது அது இந்தியாவின் பகுதியானது.”  (படம் நன்றி விக்கிபீடியா)

            சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் வந்தனர்; நகரின் தலைவராகத் தௌலத் ராம், அவர் கீழ் ரகுநந்தன் பிரதாப் புதிய சப் டிவிஷனல் அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். விவசாயியான மஞ்சு சிங் காந்தாரி புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அடுத்த நாள் டெஹ்ரி நோக்கிச் சென்று ஜனவரி 15 வாக்கில் அதனை விடுதலை செய்ய அவர்கள் அனைவரும் திட்டமிட்டனர்.

            ஆனால் அடுத்த நாள், 1948 ஜனவரி 11ல் ஜகதீஷ் தோபால் தலைமையின் கீழ் ஒரு ராயல் படைப் பிரிவு கீர்த்தி நகர் கோர்ட் மற்றும் பிற கட்டடங்களப் பலவந்தமாகக் கைப்பற்றும் உத்தரவுடன் கீர்த்தி நகருக்கு வந்தது. வன்முறை மோதல் வெடிக்க அதில் மோலு ராம் பண்டாரி என்ற கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் தோபாலால் சுடப்பட்டு மாண்டார். அதன் பிறகு அந்த இடத்திலிருந்து ஓடிய தோபாலைத் துரத்திக் கொண்டு சக்லானி மக்களோடு ஓடினார். காட்டில் மறைவதற்குள் சக்லானி அவரைக் கண்டு பிடித்து அவரது கால்களை இறுகப் பிடித்து விட்டார்.  ஆனால் தோபால் மிக நெருக்கத்தில் நாகேந்திர சக்லானியைச் சுட்டுக் கொன்று விட்டார்.

            மக்கள் உடனடியாக தோபால் உட்பட டெஹ்ரி அரசு அதிகாரிகளைக் கைது செய்தனர். அவர்களை ஓர் அறையில் அடைத்துப் பூட்டிய மக்கள் உடனடி நியாயம் கிடைக்க விரும்பினர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரபன் சிங் நேகி மற்றும் தேவி தத் திவாரி, விவசாயத் தலைவர் தௌலத் ராம் மற்றும் காங்கிரஸ் தொண்டர் திரிலோகி நாத் புர்வார் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்தினர்.

           

    மறுநாள் வந்த சந்திரா சிங் கார்வாலி (படம்), வீர மரணம் அடைந்தவர்களின் உடல்களை டெஹ்ரிக்குச் சுமந்து செல்லும் யோசனையைத் தெரிவித்தார். மக்கள் உடனடியாகப் பேரணியாக நடக்கத் தொடங்கினர். அந்தப் பிரம்மாண்டமான பேரணிக்கு சமஸ்தான அரசின் தலைநகரை அடைய மூன்று நாட்கள் பிடித்தன. தியாகிகளின் இந்தப் புனித இறுதி ஊர்வலத்தில் வழி நெடுக போலீஸ் குழுக்கள் சரணடைந்தன. தோபால் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் பேரணியில் கைதிகளாக நடந்தனர்.

            அது மிகப் பிரம்மாண்டமான எழுச்சி; 1948 ஜனவரி 14ல் போராட்டக் குழுவிடம் அரசரும் படைப்பிரிவு மற்றும் நிர்வாகமும் சரணடைந்தனர். அந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் குழுவின் முக்கிய தலைவர்களில் சக்லானியும் இருந்தார். புரட்சியாளர்களின் நிர்வாகம் அப்பகுதி 1949 ஆகஸ்ட் 1ம் நாள் முறையாக டெஹ்ரி இந்தியாவுடன் இணையும் வரை நீடித்தது.

            (டெஹ்ரி விடுதலை மற்றும் இணைப்பு குறித்து இந்த வரலாற்றுத் தொடரின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரிசையில் “சந்திரா சிங் கார்வாலி :  அமைதியான 1930 பெஷாவர் கிளர்ச்சியின் கதாநாயகன்” என்ற 42வது கட்டுரையில் பின்வருமாறு எழுதப்பட்டது:

        டெஹ்ரி சமஸ்தான அரசை எதிர்த்துப் போராட்டம்

       …பௌரி கட்சி மையமாக்கப்பட்டது. சந்திரா சிங், சக்லானி, மற்றவர்களும் கட்சிக்காகவும் டெஹ்ரி சமஸ்தான அரசு (Tehri princely state) எதிர்ப்புப் போராட்டங்களுக்காகவும் கடுமையாக உழைத்தார்கள். 1948 ஜனவரி 11ல் சக்லானி சுடப்பட்டு மாண்டார், மோலு சிங்கும் களபலி ஆனார். கொல்லப்பட்ட அவர்களின் உடல்களைச் சுமந்து கொண்டு மிகப் பிரம்மாண்டமான பேரணி மலைகளின் ஊடாகப் பல நாட்களுக்குச் சந்திரா சிங் மற்றும் பிறர் தலைமையில் நடந்து சென்றது. இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு சந்திரா சிங் பிரகடனப்படுத்தினார் : “டெஹ்ரி விடுதலை ஆனது!”)

          இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 நாள் நாகேந்திர சக்லானியின் தியாகத்தைப் போற்றும் தியாகிகளின் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. அவருடைய நினைவாக டெஹ்ரி கார்வாலில் பல்வேறு ஞாபகார்த்தச் சின்னங்களும் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

            நாமும் நம் நெஞ்சங்களில் நாகேந்திர சக்லானியின் நினைவை நிலை நிறுத்துவோம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

  

No comments:

Post a Comment