Wednesday 21 June 2023

அழிப்பதற்கல்ல வரலாறு, அது சொந்தம் கொண்டாடுவதற்கு --நீதிபதி ஆர் எஸ் சௌகான்


                                                               
           
--ஆர் எஸ் சௌகான், 
நீதிபதி (பணி நிறைவு)

“மார்க்ஸிய வரலாற்றாளர்கள் வரலாற்றை மேலிருந்து கீழாகப் பார்ப்பதில்லை, ஆனால் கீழிருந்து மேலாகப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, தனிநபர்கள் வரலாற்றின் போக்கை மாற்றுவதில்லை; இயக்கங்கள் மாற்றுகின்றன. அவர்கள் சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து வரலாற்றைப் பார்க்கிறார்கள், குரலற்றவர்களின் குரலை, முகமற்றோர் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அத்தகைய சரித்திரங்களில் எகிப்தின் மாபெரும் பிரமிடுகளும், பரோவா பட்டத்துடன் அழைக்கப்படும் பழங்கால எகிப்தின் ஆட்சியாளர்களும் முக்கியமல்ல. எது முக்கியமென்றால், அந்தப் பிரமிட்டுகளைக் கட்டிய மக்கள் முக்கியம் …” 

ஒவ்வொரு தலைமுறைக்கும் வரலாற்றை விளக்குவதற்கு உரிமை உண்டு. ஜெர்மன் தத்துவவாதி, எழுத்தாளர், சமூகக் கருத்தியலாளரும் பொருளாதாரவியல் அறிஞருமான காரல் மார்க்ஸ், “வரலாறு மீண்டும் நிகழ்கிறது, முதல் முறை சோகமாக, இரண்டாவது முறை கேலிக் கூத்தாக” என்று நமக்கு நினைவூட்டுகிறார். எனவே வரலாறு கடந்தகாலத்தின் தவறுகளை / ஆபத்துக்ளைத் தவிர்க்க நமக்கு வழிகாட்டுகிறது.

வரலாற்றை எழுதுவது பல மாற்றங்களைக் கண்டுள்ளது. மேற்குலக வரலாற்றாளர்கள் வரலாற்றை நீளும் ஒற்றைக் கோடு முறையில் பார்க்கிறார்கள் –அதில் மனிதன், குகையில் வாழ்ந்த கற்கால மனிதனிலிருந்து பின்னவீனத்துவ மனிதனாகச் செல்கிறான். இவ்வாறு, மேற்கத்திய வரலாற்றாளர்கள் கூற்றின்படி வரலாறு என்பது ஒரு கட்டத்திலிருந்த மற்றொரு கட்டத்திற்குத் தொடர்ச்சியாக வளர்ந்து செல்லும் பயணமாகும்.

மற்றவர்கள் இந்த விவரிப்புக் குறித்துச் சந்தேகப்படுகிறார்கள்: அவர்கள், வலிமை பொருந்திய எகிப்திய மற்றும் ரோமானியப் பேரரசுகள் (பழங்கால மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கப் பகுதி) மாயன் இனக்குழு மற்றும் (அமெரிக்கக் கண்ட மெக்ஸிகோ பகுதி) ஆஸ்டெக் பழங்குடியினம் போன்ற இனக்குழுக்களின் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகின்றனர். வேறு சிலர், வலிமையான ரோமன் சாம்ராஜ்யத்திலிருந்து இருண்ட காலங்கள் வரையான வரலாற்றின் ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுகின்றனர். பலரும் வரலாற்றை அரசர்கள், அரசிகள், பேரரசர்களின் வம்சத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கின்றனர். இதுதான் – வரலாற்றை முழுமையாகத் தனிநபர்கள், ஆண்டுகள், தேதிகள், நிகழ்வுகளெனக் -- கற்பிக்கும் பிரபலமான முறை.

மார்க்ஸியப் பார்வை

மார்க்ஸிய வரலாற்றாளர்கள் வரலாற்றை மேலிருந்து கீழாகப் பார்ப்பதில்லை, மாறாக கீழிருந்து மேலாகப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, தனிநபர்கள் வரலாற்றின் போக்கை மாற்றுவதில்லை; இயக்கங்கள் மாற்றுகின்றன. அவர்கள் சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து வரலாற்றைப் பார்க்கிறார்கள், குரலற்றவர்களின் குரலை, முகமற்றோர் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அத்தகைய சரித்திரங்களில் எகிப்தின் மாபெரும் பிரமிடுகளும், பரோவா பட்டத்துடன் அழைக்கப்படும் பழங்கால எகிப்தின் ஆட்சியாளர்களும் முக்கியமல்ல. எது முக்கியமென்றால், அந்தப் பிரமிட்டுகளைக் கட்டிய மக்கள் முக்கியம்; தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதவியலின் துல்லியம் என்பதைப் பயன்படுத்தி பண்டைய உலகத்தின் அற்புதம் கட்டப்படுகிறது.

எவ்வாறாயினும், வரலாற்றை விளக்குவது, வியாக்ஞானம் செய்வது என்பது ஒன்று; மற்றது, பாடப் புத்தகங்களிலிருந்து வரலாற்றை அழிப்பது.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) நிறுவனம் சமீபத்தில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் புதிய தொகுப்பை வெளியிட்டது. புதிய ‘பதிப்பு’ பாடநூல்களில் முகலாய வரலாறு குறித்த அத்தியாயங்கள் நீக்கப்பட்டன, இது புயலை எழுப்பியுள்ளது.

பிரச்சனை, பாடத் திட்டத்தின் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்கும் தேசியக் குழுவின் செயல்திறன் தகுதி பற்றியது அல்ல. பிரச்சனை, நம் வரலாற்றில் இத்தகைய நீக்கம் எத்தகைய பின்விளைவுளை ஏற்படுத்தும் என்பது பற்றியே. வரலாறு என்பது பெருமைக்குரியது மட்டுமல்ல, அது தொடர்ச்சியானதும்கூட.

என்சிஇஆர்டி --க்கு சில கேள்விகள்

நமது வரலாற்றின் சில பகுதிகளை மறைப்பதற்கு முன், என்சிஇஆர்டி முக்கியமான சில

கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்: நாம் ஏன் வரலாறு படிக்கிறோம்? சில வரலாற்றுப் பகுதிகளை அழிப்பதன் விளைவுகள் என்ன? வரலாற்றுத் தொடர்ச்சியில் வேண்டுமென்று ஏற்படுத்தப்படும் இடைவெளிகள் குடிமக்களுக்கு அறிவு விழிப்புணர்வை ஏற்படுத்துமா? வரலாற்றின் சில கால கட்டங்களின் வரலாற்றை நீக்குவது நமது தேசத்தை வலிமையாக்குமா அல்லது பலவீனமடையச் செய்யுமா? அரசின் நோக்கம் தேசத்தை வலிமை பெறச் செய்வது எனில், “அனைவரின் ஆதரவுடன் அனைவரின் முன்னேற்றத்திற்காக” (சப்கா சாத், சப்கா விகாஸ்) உறுதிப்படுத்த வேண்டுமெனில், பின் நமது வரலாற்றில் இத்தகைய நீக்கம் சுயமாகத் தோல்வியைத் தேடும் முன்மொழிவு ஆலோசனை தவிர வேறில்லை.

வரலாறு கற்பிப்பது மாணவர்களுக்கு ஒரு சுமையாக அல்ல, மாறாக அவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவே. முதலில், நாம் எங்கிருந்து வந்தோம் 

என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதகுலம் முன்னோக்கிப் பார்ப்பது மட்டுமல்ல, கடந்து வந்த பாதையைப் பினோக்கிப் பார்க்கவும்கூட. ஜமைக்கா நாட்டின் அரசியல் செயற்பாட்டாளர் மார்க்கஸ் கார்வே, “தங்களின் கடந்த கால வரலாறு, பூர்வீகத் தொடக்கம் மற்றும் பண்பாடு குறித்து அறிவில்லாத ஒரு மக்கள், வேர்கள் இல்லாத மரத்தைப் போல” என்று கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் நமது சோதனை முயற்சிகள், சந்தித்த பிரச்சனைகள் மற்றும் சாதித்த வெற்றிகளைக் குழந்தைகள் அறிவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும். (குகைகளில் தானே நாம் இருந்தோம், பின்) நாம் எப்படி

மனிதர்களாகவும் ஒரு சமூகமாகவும் ஒரு தேசமாகவும் வளர்ச்சி அடைந்தோம்? நாம் எங்கே போகிறோம்? அனுபவம் வாய்ந்த பிரிட்டிஷ் அரசியல் மேதை, இராணுவ வீரர் மற்றும் எழுத்தாளரான சர் வின்ஸ்டன் சர்ச்சில், “எவ்வளவு தூரம் பின்னோக்கி நீங்கள் பார்க்கிறீர்களோ, அதைத் தாண்டி முன்னோக்கி நீங்கள் பார்ப்பது கூடும்” என்று கூறியதில் தவறேதுமில்லை. இவ்வாறு வரலாற்று அறிவு நம்மை ஒரு காலச் சிமிழில் இருத்தி வைத்துள்ளது.

பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது

இரண்டாவதாக, அது நமது சொந்த தேசம் மற்றும் அதன் பண்பாட்டை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. எங்கிருந்து சாதிய முறை வந்தது? சனாதன தர்மம் எப்படி வளர்ந்தது? பக்தி இயக்கம் எப்போது தொடங்கியது? ஏன் வடஇந்தியாவும் தென்னிந்தியாவும் மிகவும் வேறுபட்டிருக்கின்றன? இந்தியாவில் உள்ள வேறுபட்ட மொழிகளின் பூர்வீகங்கள் என்னென்ன? முஸ்லீகள், பார்சிகள், கிருஸ்துவர்கள் போன்ற வேறுபட்டச் சமூகங்கள் எங்கிருந்து வந்தன? ஜைனமும் சீக்கியமும் எப்போது எப்படி உருவாயின? இந்தப் பழக்க வழக்கங்கள் உருவாகத் தூண்டியது எது? இப்படியாக வரலாறு சமூகவியல். மானுடவியல், தத்துவம், கலைகள், இலக்கியம் மற்றும் மொழியியல் என விரிந்து செல்கிறது. நாம் யார், நாம் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என்பதை அது நமக்குச் சொல்கிறது.

மூன்றாவதாக வரலாறு கடந்த காலத் தவறுகளையும், பேரழிவு

விபத்துகளையும் நமக்கு எடுத்துக் கூறி கற்றுக் கொடுக்கிறது. இனஅழிப்புப் படுகொலைகள், அணுகுண்டின் பேரழிவுகளின் கொடூரங்கள் குறித்து நாம் கற்றுக் கொள்கிறோம். (ஸ்பெயின்) ஸ்பானிஷ்—அமெரிக்கத் தத்துவவாதி, கட்டுரையாளர், கவிஞர் மற்றும் நாவலாசிரியரான ஜார்ஜ் சந்தாயனா, “கடந்த காலத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதவர்கள், மீண்டும் பழைய தவறையே திரும்பச் செய்ய சபிக்கப்பட்டவர்கள்” என்கிறார்.

உலக நாகரீகங்களை அறிமுகம் செய்கிறது

நான்காவதாக, வரலாறு உலகில் நம்மைச் சுற்றி இருக்கும் பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகிறது. பல்வேறுபட்ட பண்பாடுகள், நாகரீகங்கள், வேறுபட்ட கவலைகள், அக்கறைகள் மற்றும் தீர்வுகளைக் குறித்தும் நமக்குச் சொல்லுகிறது; மக்கள் குறிப்பிட்ட வகைகளில் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணங்களை வெளிப்படுத்துகிறது. கிரேக்க, ரோமானிய நாகரீகங்கள் மற்றும் அவர்களின் தற்பெருமை, விஞ்ஞானக் கண்ணோட்ட உணர்வு, துன்பியல் நாடகங்கள், ஜனநாயக நகர –அரசுகள் (city-States, இறையாண்மையுள்ள நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதி ஓர் அரசாக அமையப் பெற்ற முறை) போன்றவை மீது அவர்கள் தந்த அழுத்தம் முதலியன பற்றியெல்லாம் நாம் கற்கிறோம். வேறுபட்ட மக்கள் குழுக்கள் தங்கள் சமூகத்தின் கைம்பெண்கள் பிரச்சனையைத் தீர்க்க எவ்வாறு முயன்றனர் எனப் பார்க்கிறோம். கிருஸ்துவ உலகம் தங்கள் கைம்பெண்களைச் சேவை செய்ய கன்னியாஸ்திரி இல்லங்களுக்கு அனுப்பி வைத்தபோது, இஸ்லாமிய உலகம் அவர்களை மறுமணம் செய்ய அனுமதித்தது; நாம் நம் கைம்பெண்களைச் சதிச் சிதையில் தள்ளி எரியவிட்டோம், அல்லது கோயில் நகரங்களுக்கு அனுப்பிவிட்டோம். பல்வேறு காலங்களிலும் இடங்களிலும் மனிதகுலப் பிரச்சனைகள் ஒரு குழுவுக்கென்ற பொது குணாம்சத்தைக் கட்டியமைக்கிறது. பண்டைகால மனிதர்கள் போல மீண்டும் நாம் சக்ரத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, மற்றவர்களின் தீர்வுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

உலகக் கணோட்டத்தைத் தருகிறது

ஐந்தாவதாக, வரலாறு நமது உலகக் கண்ணோட்டப் பார்வையைத் திறக்கிறது; நாமும் மெல்ல மெல்ல மேலும், பிற பண்பாடு கலாச்சாரங்கள், அவற்றின் விழுமியங்கள் முறைமை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம். கடுமையான அரேபிய பாலைவனத்தில் இஸ்லாம் பிறந்தது என்பதை நாம் நினைவு கொண்டால் நாம் சில இஸ்லாமிய மரபுகளைப் புரிந்துகொண்டு பாராட்டுவோம்: ஒன்றாக ஒரே தட்டில் உண்பது--தண்ணீர் பற்றாக்குறை ஒவ்வொருவருக்கும் தனி பாத்திரங்களைப் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கவில்லை; பச்சை வண்ணத்தின் மீது அவர்களின் அன்பும் ஈர்ப்பும் – பாலைவனத்தில் பசுமை வண்ணம் உயிரின் அடையாளம்; தங்களின் தோட்டங்களில் நீர் ஊற்று, நீர்த் தடாகங்கள் மீது அன்பு – அவர்களுக்கு நீர் என்பது உயிர், நீர் என்பது சொர்க்கம்.

யார் பார்வையில் படிக்கிறோம்

ஆறாவதாக, வரலாற்றைக் கற்பது, பல்வேறு கோணங்களிலிருந்து ஓர் உண்மையைப் பார்க்கின்ற பழக்கத்தை ஆதரித்து வளர்க்கும். அதே உண்மைக்கு வேறுபட்ட விளக்கங்கள் இருக்க முடியும்: 1857ல் வடஇந்தியாவில் நடந்த நிகழ்வுகளை ஆங்கிலேயர்கள் “கலகம்” என அழைத்தார்கள். இருப்பினும் நமக்கு அது “முதலாவது சுதந்திரப் போர்”. சிப்பாய் எழுச்சியின் கலகக்காரர்கள் திடீரென்று சுதந்திரப் போராட்ட வீரர்களாக மாறினர். அதேபோல, 2-ம் உலகப் போரின் ஜப்பான்–அமெரிக்க இடையேயான மோதலுக்கு வேறுபட்ட, எதிரிடையான இரண்டு விளக்கங்கள் உண்டு – அது நாம், ஜப்பானியர் எழுதிய வரலாற்றைப் படிக்கிறோமா அல்லது, அமெரிக்கர் எழுதியதா என்பதைப் பொருத்தது. வரலாறு இவ்வாறு ஆராய்ந்து பரிசீலிக்கும் திறன் மற்றும் விளக்கும் திறனை மாணவர்களிடம் கட்டி வளர்க்கிறது.

எத்தனை எத்தனை உதாரணங்கள்

ஏழாவதாக, வரலாறு மனிதர்களின் குணத்தை வெளிப்படுத்துகிறது. அது நல்லது, கெட்டது, அருவருப்பானதை திறப்புச் செய்கிறது; வீரர்கள், கோழைகள்; பிடிவாதமான, அசட்டையான; இப்படி எல்லா வகை குணங்களும் வெளிப்படுகிறது. வரலாற்றில் நாம், அலைந்து கொண்டிருந்த துறவியும் சமய ஆசிரியரும் பௌத்த மதத்தை நிறுவியவருமான கௌதம புத்தரை, ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரரை, சுவாமி விவேகானந்தரைப் பார்க்கிறோம். ஆஸ்ட்டிரியரான ஜெர்மன் சர்வாதிகாரி அடாஃப் ஹிட்லரை; சோவியத் அரசியல்வாதி, அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் புரட்சியாளரான விளாதிமிர் இலியானிச் லெனின் அவர்களைப் பற்றியும்கூட படிக்கிறோம். ஒட்டோமான் பேரரசின் சூல்தான் தி மெக்னீஃபிசன்ட் (மகத்துவம் பெற்றவர்) அவர்களின் அறிவு, கமீகஸ் விமானவோட்டிகளின் வீரம் (இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகள் கப்பல்களுக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல்

மேற்கொண்ட ஜப்பானிய இராணுவவீரர்கள்) நாம் வியப்படைந்து போற்றுகிறோம்; மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை முதலாவதாக அண்டிப் பிழைத்த இராணுவத் தலைமைத் தளபதி, வங்கத்தின் நவாப்பான மீர் ஜாஃபரின் கோழைத்தனத்தைப் பார்க்கிறோம். ஏதெனிய வரலாற்றாளர் மற்றும் ஜெனரல் துசிடிடஸ், (Thucydides) “வரலாறு என்பது உதாரணங்கள் மூலம் போதிக்கும் தத்துவம்” என்றார். வரலாற்றில்தான் எத்தனை எத்தனை உதாரணங்கள்.

வாழ்க்கைத் தத்துவமும் நம்பிக்கையும்

எட்டாவதாக, உண்மையில் வரலாறு, வாழ்க்கைத் தத்துவத்துடன் வழங்குகிறது. போர்கள், சமூகக் குழப்பங்கள் இருந்தாலும், பஞ்சமும் தொற்றுக்களையும் மீறி, இயற்கைப் பேரிடர்கள், கடுமைகளைத் தாண்டியும் மனிதகுலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறது. அது நம்பிக்கை, அனுபவம், ஞானம், கண்ணோட்டப் பார்வையைத் தருகிறது. வரலாற்றில் சந்திக்கும் எண்ணிறந்த பாத்திரங்களிலிருந்து நாம் வாழ்க்கை குறித்துப் பாடம்


படிக்கிறோம். ஒருமுறை காந்திஜி, “நான் நம்பிக்கை இழந்து சோர்வுறும்போது, வரலாறு நெடுக உண்மையின் பாதையும் அன்புமே எப்போதும் வென்றிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வேன். அங்கே சர்வாதிகாரிகளும் கொலைகாரர்களும் இருந்தது மட்டுமல்ல, நீண்ட காலம் அவர்கள் வெல்லப்பட முடியாதவர்களாகக்கூட தோற்றமளித்திருக்கிறது, ஆனால் இறுதியில் அவர்கள் எப்போதும் வீழ்ச்சி அடைந்தார்கள் –அதை நினைத்துக் கொள்வேன் –எப்போதும்” என்று கூறினார்.

ஒன்பதாவதாக, வரலாறு தனிநபர் மற்றும் சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கிறது. நமது கடந்த காலச் சாதனைகளும் வெற்றிகளும் நம் சுய அடையாள உணர்வை வலிமையாக்குகிறது. ஜப்பானில், தாங்கள் சூரியக் கடவுளின் வழிவந்தவர்கள் என்றும் சாமுராய் பண்பாட்டை ஸ்வீகரித்தவர்கள் என்றும் குழந்தைகளுக்குப் போதிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் தோல்வி அடைந்தபோது, ஒரு ஜப்பானியரைச் செய்தியாளர், ‘அமெரிக்கர்களால் தோற்கடிக்கப்பட்டதை எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, அந்த ஜப்பானியர், “எங்களுக்கு 20 வருடங்கள் தாருங்கள், நாங்கள் அமெரிக்கர்களைத் தோற்கடிப்போம்” என்று பதில் கூறினார். இருபது ஆண்டுகளுக்குள் ஜப்பானியப் பொருளாதாரம் அமெரிக்கர்களைத் தாண்டி இருந்தது. துரதிருஷ்டவசமாக நாம், நமது தேசம் புதிதாக விடுதலை அடைந்த இளம் தேசமாக இருக்கலாம், ஆனால் நாம்தான் இப்பூமியில் பழம்பெரும் மூத்த நாகரீகம் என்பதை நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை.

இறுதியாக, நம்பிக்கை உள்ள மனிதர்களே நல்ல குடிமக்கள் ஆகிறார்கள். அவர்கள் தங்கள் தேசம், அதன் நிறுவன அமைப்புகள், பண்பாடு, மரபு குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள். நம்மிடம் தேசியப் பெருமித உணர்வு பற்றாக்குறையால், தேசத்தின் மக்களாக நாம் நமது கடந்தகாலச் சாதனைகள் பற்றிப் புகார் தெரிவிக்கிறோம்.  கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் பெரும் பாய்ச்சல்களை நாம் பாராட்டுவதில்லை. இவ்வாறு, அழுகைவாதிகளும் அவநம்பிக்கையாளர்களும் நிரம்பிய நாடாக நாம் மாறியுள்ளோம். ஒரு தனி நபரைப் போலவே, ஒரு தேசமும் நம்பிக்கையையும் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் இழக்குமானால் அது ஒருபோதும் சராசரியிலிருந்து மேலே எழ முடியாது.

வரலாறு நீக்கத்தின் விளைவு

துரதிருஷ்டவசமாக, பாடங்களிலிருந்து வரலாற்றை, அதன் பகுதிகளாக இருந்தாலும், நீக்குவது அந்தப் பாடத்தைப் படிப்பதால் கிடைக்கும் பயன்களைக் குழந்தைகளிடமிருந்து திருடிவிடுகிறது. மேலதிகமாக, ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் வரலாற்றை மட்டும் நீக்குவது, அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகுப்பு வழிகாட்டும் சுக்கான் இல்லாததாக, (“நாமிருக்கும் நாடு நமதென்ப தறிவோம், அது நமக்கே உரிமையாம் என்பதறிவோம்” என்ற) சொந்தம் கொண்டாடும் உணர்வில்லாததாக, ஊன்றி நிற்கும் நங்கூரப் பிடிமானம் இல்லாததாக ஆகிவிடும். அது, தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டோம் என்று குன்றிவிடச் செய்யும்.

மேலும், குறிப்பிட்ட வகுப்பின் வரலாற்றை நீக்கி அழிப்பது, அதன் அடையாளத்தைத்  துடைத்தெறியும். குறிப்பிட்ட சமூகம் பொருட்படுத்தத் தேவை இல்லாதது, அற்பமானது என பெரும்பான்மை வகுப்புச் சுலபமாக நம்ப வைக்கப்படும். அது பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்வது மட்டுமல்ல, அதே அளவு சமமாக சிறுபான்மையினரை ஒரு சேரியில் / தனிக் குடியிருப்பு முகாம்களில் அடைத்து வைப்பதில் (ghettoisation) போய் முடியும். அனைவருடன் கலந்து வாழ்ந்தவர்களைத் தனியே ஒதுக்கி வைப்பது என்ற நிலையில் சிறுபான்மைச் சமூகத்தினர் பாதுகாப்பின்மையையும் அச்சுறுத்தப்படுவதையும் உணர்வர். அத்தகையப் பிளவு இரண்டு சமூகங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும். நமது தேசத்தை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அத்தகைய அமைதிக் குலைவு மற்றும் இடையூறுகள், நம்மைப் பலவீனப்படுத்திவிடும்.

மேலும் நமது வரலாற்றின் தவறுகளையே நாம் மீண்டும் திருப்பச் செய்வதில் போய் நிற்போம்.

ஆங்கிலேயர்கள் ‘பிரித்தாளும் கொள்கை’யைப் பின்பற்றினர் என்பது தவறான சொல்லாக்கம். உண்மையில் வரலாறு முழுவதும், கிரேக்கப் படையெடுப்பிலிருந்து 1962 சீனாவுடன் போர் வரை, நாம் எப்போதும் பிரிந்து இருந்ததாலேயே நாம் வெல்லப்பட்டோம். ரோமன் படைகளுக்கு எதிராக ஜெர்மானிய பழங்குடிகள் ஒன்றாய்த் திரண்டு ஓரமைப்பாய்ப் போரிட்டதுபோல அல்லாமல், இந்தியாவில் ஒற்றை ஜாதி மட்டும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டது. பெரும்பான்மையான மக்கள் வெறும் பார்வையாளர்களாக ஒதுங்கி நின்றபோது, ஆக்கிரப்பாளர்களை விரட்டி அடிப்பதில் போரிடும் மறவர் ஜாதி முடிவின்றி வெற்றிபெற முடியவில்லை. நாம் பிரிந்து இருந்தோம், வீழ்ச்சி அடைந்தோம். எனவே இன்றும்கூட குழுப் போக்குப் பாதையில் (செக்டேரியன்) பிளவுபடுவது நம்மை மேலும் பலவீனமாக்கிவிடும்.

அசோகரும் அக்பரும்

கடந்த காலத்தின் பெரும் ஆசிரியர்களிடமிருந்து நாம் கற்க மறுக்கிறோம். வியப்பூட்டும் ஒரு செய்தி, ஐயாயிரம் ஆண்டுகள் வரலாற்றில் இரண்டு சக்கரவர்த்திகளுக்கு மட்டும் ‘தி கிரேட்’ என்ற பட்டம் தரப்பட்டுள்ளது: அசோகரும் அக்பரும். ஆனால் நம் வரலாறில் மாமன்னர்களுக்கும் அரசிகளுக்கும் பஞ்சமே இல்லை. என்ன, நாம் சாளுக்கிய, பல்லவ, சோழ மன்னர்கள் என்று பெருமிதப்படலாம். ஆனால் ‘மாபெரும்’ அடைமொழி அந்த இருவருக்கு மட்டுமே உரியது.

ஆனால் அசோகரையும் அக்பரையும் மட்டும் நாம் ஏன் தி கிரேட் என்று அழைக்க வேண்டும்? ஏனெனில், அவர்கள் இருவரும், நம் காலத்தைப் போலவே, அவரவர் காலத்தில் நிலவிய குழுவாதப் போக்கால் பிளவுபட்ட அதே பிரசசனைகளைச் சந்தித்தனர். அசோகரின் காலத்தில் சமூகம் இந்துகள், பௌத்தர்கள் எனப் பிரிந்து கிடந்து இரு வகுப்புகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அக்பர் ஆட்சி காலத்தில் சிறுபான்மை வகுப்பு விரிந்து பரந்திருந்த பெரும்பான்மை வகுப்பினர் மீது ஆட்சி செலுத்த முயன்றது. பிரச்சனை இரண்டு பேரரசர்கள் முன்பும் ஒன்றே:எவ்வாறு எனது மக்களை நான் ஒன்றுபடுத்துவேன்?’ 

இருவரும் இணைவு, ஐக்கியப்படுதல் பற்றிப் பேசினார்கள். முதலாமவர் “தம்மம்” என்று –ஒருவருக்கொருவர் பின்பற்ற வேண்டிய மக்களின் அறநெறி நியதி சார்ந்த கடமையைப் – பேசினார். பின்னவர், கங்கா ஜமுனி தஹ்ஜீப்” (கங்கையும் ஜமுனாவும் கலந்த கலாச்சாரம்) என இந்து முஸ்லீம் நாகரீகங்களின் இணைவு, ஐக்கியப்படுதலை ஆதரித்தார். (“பொங்குபல (சமயமெனும்) நதிகள் எல்லாம் கலந்திட…பொங்கி ஓங்கும் கங்குகரை காணத கடல்” என வள்ளலார் பாடுவதுபோல) ஒன்று கலந்து ஐக்கியப்படுதலே நமது நாகரீகத்தின் முத்திரை அடையாளம்.  

மேற்குலக நாகரீகம் போல நாம் ஒருபோதும் அடியோடு அழிப்பதில் (extermination) நம்பிக்கை உடையவர்கள் இல்லை. நாகரீகங்கள் மோதிக்கொள்வதில் அல்ல, நாகரீகங்கள் சங்கமத்தில் என்ற நம்பிக்கை உடையவர்கள் நாம். இவ்வாறு வேறுபட்ட பண்பாடுகள், வகுப்புகள், தத்துவங்களை நாம் நம்முடைய சொந்தம் போல உடனே ஏற்றுக்கொள்பவர்கள். இதுதான் இந்தப் பூமியில் நிலைத்திருக்கும் நாகரீகமாக நமது உயிர் வாழ்தலுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான கோட்பாடு.

இதற்கு மாறாக எண்ணுபவர்கள் ஒன்றை நினைவில் நிறுத்த வேண்டும், “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.” திகட்டத் திகட்டத் திரும்பச் சொல்லப்படும் இந்தப் பொன்மொழியையே ஒரு தேசமாக நமது வரலாறு மெய்ப்பிக்கிறது, ‘நன்றிது தேர்ந்திடல் வேண்டும்’. இருப்பினும் துயரகரமானது யாதெனில், இந்தச் சாதாரண வரலாற்று உண்மையைப் புரிந்து கொள்ள நாம் தவறிவிடுகிறோம்.

வரலாறு அங்கே நீங்கள் விரும்ப வேண்டும் அல்லது வெறுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. 
அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்என்பதற்காகஇருக்கிறது. அது  உங்களைத் தொல்லைப்படுத்திக் குத்திக் காட்டிக் காயப்படுத்துமானால் இன்னும் நல்லது.
 ஏனெனில் மீண்டும் நீங்கள் அவற்றைச் செய்ய மாட்டீர்கள். வரலாறு இங்கே அழிப்பதற்காக அல்ல. அது நம் அனைவருக்கும் சொந்தமானது. கொண்டாடுவோம்!

(“சரித்திரத் தேர்ச்சி கொள்! சிதையா நெஞ்சுகொள்! 

தேசத்தைக் காத்தல் செய்!” –பாரதி)

--நன்றி : நியூஏஜ் (ஜூன் 18 –24)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்   

                    

 

 

.

 

Sunday 4 June 2023

மாதர் சம்மேளனத்தின் எழுச்சிமிக்க எழுபதாம் ஆண்டு

 

--ஆனி ராஜா

பொதுச் செயலாளர், NFIW

                 உலகம் முழுவதும் பெண்கள் இயக்கமும் பாலினப் பாகுபாடு குறித்த கேள்வியும் நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ளன. ஆணும் பெண்ணும் இணைந்ததே சமூகம். அதில் இரு பாலினத்தவர்களும் பல்வேறு பிரிவுகள், மட்டங்களில் அந்தஸ்தில் பாகுபாடுகளைச் சந்திக்கின்றனர். ஆனால் அனைத்துச் சமூகப் பிரிவுகளிலும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ள பெண்களையெல்லாம் ஒரே தொகுப்பாகப் பெண்ணினம் உருவகப்படுத்தப்பட்டு பாகுபடுத்தப்படுகிறது. பெண்களும் தங்களுக்கிடையில் நிலவும் பல்வேறு பாகுபாடுகளுடன் பெண்ணினம் என்ற தொகுப்பாகச் சமூகம் மற்றும் அரசியலில் விளிப்புநிலையில் கட்டாயப்படுத்தி தள்ளப்படுகின்றனர். இதுதான் சமூகக் குறுக்கு வெட்டுத் தோற்றம். மேலும் அவர்கள் (மட்டுமே) கலாச்சாரம் மற்றும் தேசத்தின் மாண்பு, நாடு –அரசு மற்றும் குடும்பத்தின் கௌரவத்திற்குப் பொறுப்பானவர்களாகக் குறுக்கப்பட்டு விடுகின்றனர். பல்வேறு சமூக குடியிருப்பு இடங்களில் பயன்படுத்தப்படும் பெண்களுக்கான மொழியின் வார்த்தைக் கட்டமைப்பு மற்றும் மரபுத் தொடர்களிலும்கூட, அது வீடாயினும் உலகமாக இருந்தாலும், அவர்கள் ஒதுக்கப்பட்டு பாகுபடுத்தப்படுவதே அடையாளமாகிறது. 

கூட்டாகப் பெண்கள் தொடுத்த போராட்டங்களின் விளைவாய், பொதுவாகச் சமூகம், ஜனநாயகம் மற்றும் நீதியை நோக்கி பெரும் பாய்ச்சலில் முன்னேறச் செய்திருக்கிறது; பொதுச் சமூகம் மேலும் அனைவரையும் உள்ளிணைத்ததாக, பிரதிநிதித்துவம் உள்ளதாக மறுதகவமைக்கச் செய்துள்ளது. பெண்கள் இயக்கம் பல்லாண்டுகளாக நடத்திய உரையாடல்  வேலைவாய்ப்பு, ஊதியம், ஊட்டச்சத்து, வசதிகள் கிட்டுதல், வன்முறை மற்றும் பிரதிநித்துவம் குறித்தவைகளில் நிலவும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு குறித்த கேள்விகளைத் திறமையாக முன்னேடுத்துச் சென்றுள்ளது; அதே நேரத்தில் பாலினப் பண்பு, ஒப்புதல், தன்னுடல் மீது உரிமை,வன்முறை போன்றவற்றில் பல புதிய நுணுக்கங்கள் மற்றும் பரிமாணங்களை மையமாகக் கொண்டு அவற்றை முற்போக்கு அரசியலில் வெற்றிகரமாக அறிமுகம் செய்தது. ஆணாதிக்கம், இனவெறுப்பு தேசியவாதம் மற்றும் முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இயக்கப்படும் பாலின அதிகாரக் கட்டமைப்புகளைப் பெண்கள் இயக்கம் தொடர்ந்து எதிர்த்துச் சவால்விடுத்தது.

இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் (NFIW) 70வது ஆண்டில் நுழைகிறது. அந்தப் பொன்னான நாள் 1954 ஜூன் 4ல் கல்கத்தாவில் 13 மாநிலங்கள்/ பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 600 பெண்கள் இந்தச் சம்மேளனத்தை ஒரு பரந்துபட்ட, குழுப் போக்கு இல்லாத, அனைத்துச் சமூகப் பின்னணிகளிலிருந்தும் வந்த பெண்கள் அமைப்புகள் மற்றும் தனிநபர் பெண்களுக்கான மாபெரும் மேடையாக அமைத்தனர். மாதர் சம்மேளனம், பெண்களின் சமத்துவத்திற்காகப் பணியாற்ற உறுதி கொண்டது; மேலும் முக்கியமாக இதனைப் பரந்துபட்ட சமூக -அரசியல் மற்றும் பொருளாதாரச் சமத்துவத்தின் பிரச்சனைகளிலிருந்து பிரிக்க முடியாத கேள்வியாகவும் பார்த்தது. எனவே நமது அமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து சோஷலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை இலட்சியங்களில் தெளிவான நம் பற்றுறுதியை நாம் வெளிப்படுத்தி வருகிறோம்.

கடந்த எழுபது ஆண்டுகளில், பெண்கள் அமைப்புகளில் மிகப் பெரிய அமைப்பாக, 27 மாநிலங்களில் கிளைகளுடன், நாம் உருவாகி கிளைபரப்பியுள்ளோம். ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்ட விழுமியங்கள், அதன் உறுதிமொழிகள் மற்றும் உரிமைகளுக்காகவும் நாம் எண்ணிறந்த போராட்ட இயக்கங்களை நடத்தியுள்ளோம். மாதர் சம்மேளனம் எப்போதும் சமாதானம், வகுப்பு நல்லிணக்கம் மற்றும் சர்வதேச ஒருமைப்பாடு போன்றவற்றிற்காக நிற்கிறது.

அமைப்பு உருவான வரலாறு

          பல்வேறு தேசிய, சர்வதேசிய வளர்ச்சிப் போக்குகளின் செல்வாக்கால் மாதர் சம்மேளனம் உருவானதன் வரலாறு, விடுதலைப் போராட்டக் காலத்திற்கு முன்பிருந்து தொடங்குகிறது. குறிப்பாக, 1940களின் தொடக்க காலத்தில் பல்வேறு பிராந்தியங்களில் அமைக்கப்பட்ட பெருந்திரள் பெண்கள் அமைப்புகளைச் சொல்லலாம். சத்ரீ சங் (ஒருகுடை அமைப்பு 1940) அவற்றில் ஒன்று. அதன் பின், வங்கத்தில் மகிளா ஆத்ம ரக்ஷா சமிதி (MARS), மணிப்பூரில் மகிளா சம்மேளினீ (1940 பெண்கள் மாநாடு), கேரள மகிளா சங்கம் (1943), ஆந்திர மகிளா சங்கம் (1943), பஞ்சாப் பெண்கள் தற்காப்பு லீக் (1940), டெல்லி மகிளா சங் (1942) போன்ற அமைப்புகள் நிறுவப்பட்டன. இது தவிர, சர்வதேசிய அளவில் 1945ல் அமைக்கப்பட்ட பெண்கள் சர்வதேசிய ஜனநாயக சம்மேளனம் (WIDF), மற்றும் 1953ல் கோபன்ஹெகனில் நிறைவேற்றப்பட்ட ‘பெண்கள் உரிமைகள் பற்றி கோபன்ஹெகன் பிரகடனம்’ இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் நிறுவப்பட்டதில் முக்கிய பங்காற்றியது.

            நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலிருந்து பல அரசியல் கருத்தோட்டங்களைச் சார்ந்த 25 பெண்கள் அடங்கிய குழு கோபன்ஹெகன் பேராயத்தில் கலந்து கொண்டது. மாநாட்டிலிருந்து திரும்பும்போது அவர்கள், வேலைவாய்ப்பில் சம உரிமை, சமவேலைக்குச் சம ஊதியம், சமூகக் காப்பீடு, நிலம் மற்றும் சொத்தில் சம உரிமை, திருமணம் மற்றும் குழந்தைகள் தொடர்பாகவும், தாய் மற்றும் குழந்தைக்கு அரசுப் பாதுகாப்பு, பேறுகால விடுமுறை மற்றும் பலன்கள், கல்விக்கான உரிமை உள்ளிட்டவைகள் குறித்து மாநாட்டின் பிரகடனம் எழுப்பிய பல கோரிக்கைள் மீது தாங்களும் போராட்டங்களைத் தொடங்க வேண்டியதை உணர்ந்தனர்.

புகழ்பெற்ற நம் தலைவர்கள்

        மாதர் சம்மேளனத்தின் நிறுவன உறுப்பினர்களாக விமலா டெங், B B சகுந்தலா (பஞ்சாப்), டாக்டர் ஜெ பி லெட்சுமி, ஜமாலுன்னிஸா பேகம் (ஆந்திரா), ஆனி மாஸ்கிரீன், கே ஆர் கௌரி (அம்மா), சுசீலா கோபாலன் மற்றும் , P யசோதா (கேரளா), மனோரமா சேடின், ஹேனா போரா (அசாம்), டாக்டர் துங்கம்மா (மணிப்பூர்), ஃபிர்ஸோ வாடியா, மஞ்சு காந்தி, தாரா ரெட்டி, அகல்யா ரங்கேகர் (மகாராஷ்டிரம்), சாரா லதீஃப், அனுசுயா ஞான்சந்த்,

அருணா ஆஸஃப் அலி, விமலா கபூர் (டெல்லி), மோகினி ஸ்ரீநிவாஸ்தவ், ஹஜ்ரா பேகம் (உபி), புஷ்மமாயி போஸ், கமலா முகர்ஜி, கனக் முகர்ஜி, ரேணு சக்ரவர்த்தி, பங்கஜ ஆச்சார்ய, மணிகுந்தளா சென், வாணி தாஸ் குப்தா (வங்கம்) உள்ளிடவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லாம் இந்தியாவின் பெணகள் இயக்கத்தின் பெரும் தலைவர்களும் நாடு நன்கறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களும் ஆவர்.

    இராமேஸ்வரி நேரு, ஹன்னா சென், ராஜ்குமாரி அமிர்த் கவுர், கமலாதேவி சட்டோபாத்தியா, சுபத்ரா ஜோஷி, புஷ்பமோயி போஸ் போன்ற பல புகழ்பெற்ற தலைவர்களிடமிருந்து மாதர் சம்மேளனம் ஆதரவையும் ஊக்கப்படுத்தலையும் பெற்றது.

       பிராந்திய சமிதிகள் பாடுபடும் உழைக்கும் பெண்களைத் தங்கள் நீரோட்டத்தில் அழைத்து வந்து அன்றைய காலத்தின் பெண்கள் இயக்கத்திற்குப் புதிய தீவிர வழிகாட்டலைத் தந்தன. இந்த அமைப்புகள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் பெண்களின் முன்முயற்சியில் திரட்டி

அமைக்கப்பட்டன. அவைகளே கேந்திரமான கிளை அலகுகளாகி, பிற்காலத்தில் இந்திய மாதர் தேசியச் சம்மேளனத்தை அமைத்தன. இச்சமிதிகள் பெண்களின் பிரச்சனைகளைப், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான, விரிந்த அரசியல் போராட்ட இயக்கங்களுடன் இணைத்தன. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளைக் குண்டுவீசித் தாக்கிய போதும், அதைத் தொடர்ந்த உணவு நெருக்கடி மற்றும் பஞ்சத்தின்போதும் அவர்கள் அதற்குப் பதிலளிக்கும் வகையில் கிளர்ந்து எழுந்தனர்.

       இந்தச் சமிதிகள் மற்றும் அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC) அமைப்பும் இணைந்து பல கூட்டு இயக்கங்களை நடத்திய போதும், அவர்களுக்கு இடையிலான சித்தாந்தக் கருத்து முரண்பாடு தோன்றி, விடுதலைக்குப் பிறகு பிளவு வளர்ந்தது; அதுவே பெருந்திரள் மாற்று தேசிய மேடையை அமைக்க வழிகோலியது.

மாதர் சம்மேளத்தின் செயல்பாடு

   தோன்றிய அதன் தொடக்கம் முதல் மாதர் சம்மேளனம் பல்வேறு பெண்கள் அமைப்புகளுக்குள் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை கருத்தைத் திறந்த மனதுடன் வரவேற்றது. பெண்கள் அமைப்பின் சம்மேளனம் என்ற வகையில், மாதர் சம்மேளனம் பன்முகப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. பல்வேறு பொருளாதார வர்க்கங்கள், கல்விப் பின்னணி, சமூகக் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வந்த பெண்கள், சம்மேளனத்தில் உயிரோட்டமான அங்கம் வகித்தனர். இப்பெண்களில் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட எதார்த்த உண்மைகள் மற்றும் பிரச்சனைகளைச் சந்திக்க, அவை ஒன்றுதிரட்டப்பட்ட இணைந்த முறையில் மாதர் சம்மேளனத்தால் எடுக்கப்பட்டன.

முதல் பேராயத்தின் தீர்மானங்கள்

    கூட்டாட்சி கட்டமைப்பிலான மாதர் சம்மேளனம், கட்சி சார்பற்ற பெண்கள் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கும் இடமளித்து சம்மேளனத்தைக் குழுப்போக்கு அற்ற முன்னணியாகக் கட்டியமைத்தது. கல்கத்தாவில் நடந்த

சம்மேளனத்தின் முதல் பேராயத்தில்     (04 -06 -1954) பல்வேறு பிரச்சனைகள், சமூகக் குறைபாடுகள், இயலாமைகள் மீதும், சிறப்புத் திருமணம், இந்து திருமணம் மற்றும் மண முறிவு, சொத்து வாரிசுரிமை மசோதா, வரதட்சிணை மசோதா, முஸ்லீம் பெண்களின் சொத்துரிமைகள், உழைக்கும் பெண்கள், வேலைவாய்ப்பைத் தேடுதல், விவசாயப் பெண்கள் உரிமைகள், அகதிப் பெண்கள், கிழக்கு மற்றும் மேற்குப் பாக்கிஸ்தான் அகதிகள், பன்முகப்பட்ட போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் மற்றும் மாதர் சம்மேளனத்தின் நடவடிக்கைகள் மீது விவாதங்களும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சம்மேளனத்தின் தனித்துவம்

        மாதர் சம்மேளத்தின் நடவடிக்கையின் தனித்துவமான அமசம் அதன் பன்முகப் பரிமாண அணுகுறை. அந்த அணுகுமுறை அனைத்துப் பிரச்சனைகள் மற்றும் பெண்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வயது வந்தோர் கல்வியறிவு மையங்கள், சட்ட விழிப்புணர்வு முகாம்கள், தேவையுள்ள பெண்களுக்கு உற்பத்தி அலகுகள், வேலைவாய்ப்புப் பயிற்சி, வன்முறை மற்றும் சமூக ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி போன்ற ஆக்கபூர்வ வளர்ச்சி செயல்திட்டங்களைச் சுற்றி விழிப்புணர்வை எழுப்பி பெருந்திரள் பிரச்சாரங்களை இணைத்து நடத்தியது.

        மாதர் சம்மேளன மாநிலக் கிளைகள் உழைக்கும் பெண்களுக்கான விடுதிகளைக் கட்டியது மட்டுமல்ல, பால்வாடிகள் மற்றும் குழந்தைக் காப்பகங்களையும் நடத்துகின்றன. நம் மாதர் சம்மேளனம் மற்றும் அதன் பெரும் தலைவர்கள் ஆற்றிய கேந்திரமான பணிகளைப் போற்றி அங்கீகரிக்காவிட்டால், இந்தியப் பெண்கள் இயக்கம் குறித்த வரலாற்றுப் பதிவு முழுமையற்றதாகவும், காரண காரியத் தொடர்ச்சி அற்றதாகவும் இருக்கும். 1954ல் சம்மேளனம் முகிழ்த்ததிலிருந்து ஆற்றும் பணிகள் இன்றும் தொடர்கின்றன. இந்த நாட்டின் பெண்களின் 70 ஆண்டு கால வரலாறு மற்றும் சமாதானம், சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான அவர்களின் திரட்டி அமைத்த அரசியலின் தொடர்ச்சியே இந்திய மாதர் தேசியச் சம்மேளனம்.

     வரலாற்றாளர்கள் மற்றும் அறிஞர்கள் சிலர் வரலாற்றைப் பகுதியளவு ஆராய்ந்து இந்நாட்டில் திரட்டப்பட்ட பெண்கள் இயக்கம் 1970களின் பிற்காலத்தில் தொடங்கப்பட்டது மட்டுமே என்று கருதி வரலாற்றுப் பிழையை அவர்கள் அறியாமலேயே செய்கின்றனர். முந்தைய பல பத்தாண்டுகள் தேசிய ஆர்வம் மற்றும் சுதந்திரப் பரபரப்பில் தூண்டப்பட்டு செயல்பட்டதால், பெண்கள் இயக்கம் அதனை அனுபவம் இன்றிச் சோர்வாகக் கடந்தது என்று கருதிவிட்டனர். இது அரை குறை பார்வை, காலனிய ஆட்சியின் கீழும் மற்றும் அதற்குப் பிறகும், நிறைவேற்றி முடிக்கப்படாத பாலின நீதி நோக்கத்திலிருந்து குறிக்கோளை விலக்காது செயல்பட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் செய்த முக்கிய பங்களிப்புகளுக்குச் செய்யப்படும் தீமை மற்றும் அவமரியாதை தவிர இது வேறில்லை.


சட்டங்கள் செய்ய வந்தோம்

       எண்ணற்ற வரலாற்று திருப்பங்களை ஏற்படுத்தும் சட்டரீதியான  தலையீடுகள் 50கள் மற்றும் 60களில் தொடங்கி வைக்கப்பட்டன. இக்காலகட்டம் பெண்களுக்கான முழுமையான சமத்துவக் குடியுரிமைக்கு உதவிடும் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படக் கண்டது. இவற்றில் சில சட்டங்கள் அதன் சட்டவரம்பு மற்றும் திறனை விரிவுபடுத்தும் வண்ணம் தொடர்ச்சியாகப் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்டன. சட்டம் மற்றும் சமூகச் சீர்திருத்தம் நிச்சயமாக மாதர் சம்மேளனத்தின் கவனக் குவிப்பு பகுதியானது. பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான இதற்கான போராட்டங்கள், பிரச்சாரங்கள் முதலியவற்றில் மாதர் சம்மேளனம் முன்னணியில் இடம் பெற்றது.

            திருமணம், மணவிலக்கு, வரதட்சிணை, வாரிசுரிமை மற்றும் (உடன்கட்டை ஏற்றும்) சதி போன்றவை தொடர்பான தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தம் ஏற்படுத்தியதில் மாதர் சம்மேளனம் ஆற்றிய பங்கைக் குறிப்பாகச் சுட்டிக் காட்ட வேண்டும். திருமணம், குடும்பம், வாரிசுரிமை முதலியவற்றை சமத்துவம் மற்றும் நீதி பற்றிய நவீன கருத்துக்களுடன் பொருந்துமாறு சட்டரீதியாக முறைப்படுத்தவும் சீர்திருத்தவும் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றுதான் இந்து குறுங்குறி மசோதா (ஹிந்து கோட் பில்). அந்த முயற்சி சமூகத்தின் பழமைவாதப் பிரிவுகளின், முக்கியமாக இந்து மகாசபாவின், கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது என்பதில் வியப்பில்லை. நேரு சமரசத் திட்டமாக மசோதாவை நான்கு தனிப்பகுதிகளாக்கினார். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாதர் சம்மேளனம் இதர மதசார்பற்ற பெண்கள் அமைப்புகளுடன் சேர்ந்து மசோதா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களின் ஆதரவைத் திரட்டவும் இயக்கத்தைத் தொடங்கியது. இந்தியப் பெண்களைப் பீடித்த சமூக -பொருளாதாரச் சமத்துவமின்மைப் பிரச்சனையை இம்மசோதா தீர்க்கும் என மாதர் சம்மேளனம் நம்பியது. மேலும் மக்கள் சட்டத்தை ஏற்கவும், அமலுக்குக் கொண்டுவரவும் சட்ட சீர்திருத்தத்துடன் இணையாக சமூக இயக்கமும் முன்னெடுப்பது அவசியம் என்பது சம்மேளனத்தின் கருத்து.

     சட்டத்தை நிறைவேற்றுவது மட்டுமே சமூகத்தில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தப் போதுமானதில்லை என்பதில் தெளிவாக இருந்த மாதர் சம்மேளனம், இந்த நெடும் நோக்கத்துடன் மசோதாவுக்காகத் தீவிரப் பிரச்சார இயக்கங்களைத் தொடங்கியது. ஒலிபரப்பு மற்றும் தகவல் பரிமாற்ற வசதிகள் மிகவும் வரையறுக்கப்பட்டு இருந்த காலத்தில்  மிகுந்த மனித உழைப்பும் நேரத்தையும் கோரும் கையெழுத்து இயக்கங்களை முன்னெடுத்து 45ஆயிரம் மற்றும் 22160 கையெழுத்துகளுடன் இரண்டு மனுக்களை நாடாளுமன்ற பெட்டிஷன் கமிட்டிக்குச் சமர்ப்பித்தது. மாதர் சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள் பெட்டிஷன் கமிட்டியையும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களையும் சந்தித்தனர்.

வரதட்சணைக்கு எதிராக

    வரதட்சணையைச் சட்டவிரோதமாக்கும் மசோதாவை வடிவமைப்பதிலும் அதனைச் சட்டமாக நிறைவேற்றவும் ஆற்றிய பங்கு NFIWவின் மற்றொரு வரலாற்றுப் பங்களிப்பாகும். முன்பு துணிச்சலாக மோதி நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்ட சீர்திருத்தங்களை மேலெடுத்துச் சென்ற ரேணு சக்ரவர்த்தி

(படம்) வரதட்சணை ஒழிப்புக்குத் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தினார். எனினும் பெரும் அரசியல் அணியினரின் அரசியல் உறுதிப்பாட்டின் பற்றாக்குறை காரணமாக இம்மசோதா பல்வேறு நடைமுறை தடைகளைச் சந்தித்தது. எனவே வரதட்சணைக்கு எதிரான மசோதாவை அறிமுகம் செய்யவும், சட்டமாக நிறைவேற்றவும் மாதர் சம்மேளனம் நாடுதழுவிய பெரும் இயக்கத்தை நடத்தியது. தொடர்ச்சியான இயக்கங்கள், மனுக்கள், ஆர்ப்பாட்ட பிரச்சாரங்கள் (agitprop, ருஷ்ய வார்த்தையின் சுருக்கம்) எனத் தொடர்ச்சியான பல்வேறு போராட்ட இயக்கங்கள் மூலம் வரதட்சணை தடை சட்டம் 1961ல் அமலுக்கு வந்தது.

            நாடாளுமன்ற, மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்களாகவும் இருந்த நம்முடைய பல தலைவர்கள், பெண்களுக்கு ஆதரவான மசோதாக்களை அறிமுகம் செய்தனர்; அந்த மசோதாக்களின் மீதான தேர்வுக் குழுக்களுக்குத் தலைமை தாங்கி அச்சட்ட ஷரத்துகள் மீது விரிவாக விவாதித்து செழுமைப்படுத்தினர்; மன்றங்களுக்கு வெளியே நாடு முழுவதும் அதற்கு மக்களின் ஆதரவையும் திரட்டினர். இந்து கோடு மசோதா, வரதட்சணை

தடை, சம ஊதியம், பேறுகாலச் சலுகைகள், பாலின வன்கொடுமை
எதிர்ப்புச் சட்டம், நாடாளுமன்ற, சட்ட மன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமை சட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (
NFSA), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் போன்றவற்றில் பாலினச் சமத்துவச் சட்டங்களை நிறைவேற்ற வற்புறுத்திய வலிமையான குரல்களில் நமது அமைப்பின் குரலும் ஒன்று.

மாதர் சம்மேளனம் ஒரு சம்மேளன அமைப்பாக / கம்யூனிஸ்ட், சோஷலிச ஜனநாயக மதசார்பற்ற அமைப்புகளின் மேடையாகத் தேசிய, பிராந்திய முக்கியத்துவமுடைய பிரச்சனைகளை, தன்னாட்சி மற்றும் பிரச்சனை அடிப்டையில் அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தீர்க்க முயன்றது. அத்துடன், முறைசார்ந்த மற்றும் முறைசாரா பெண் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகளையும், பெண்கள் வாழ்வியலைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் தனியாக அல்லது பிற அமைப்புகளுடன் கூட்டாக எடுத்தது.

சீர்குலைக்கப்படும் சட்டங்கள்

            ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாஜக அரசு ஒன்றியத்தில் அதிகாரத்திற்கு வந்தது முதல், பெண்கள் மற்றும் பெண்கள் இயக்கத்திற்கு எதிரான சவால்கள் மேலும் சிக்கல் நிறைந்ததாகி உள்ளன. தற்போது பாசிசத் தாக்குதலுடன் ஆணாதிக்கம் அதிகரித்துள்ளது. வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆள்வோர் பாதுகாப்புடன் இதற்கு முன் இல்லாத கொடூரத்துடன் அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு, கௌரவம் மற்றும் சமத்துவத்திற்காக நாம் போராடிச் சாதித்த, பெண்கள் மற்றும் குழந்தையை மையமாகக் கொண்டு வந்த சட்டங்கள் இன்று அர்த்தமில்லாதவைகளாக மாறியுள்ளன. நாடாளுமன்றம் நிறைவேற்றிய

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் அச்சட்டங்களைச் சீர்குலைக்க அரசுகள், சட்டத்தை அமல்படுத்தும் முகமைகள் குற்றவாளிகளுடன் கை கோர்த்துக் குற்றங்களைத் தடுக்கத் தவறுகின்றன. பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கொடுங் குற்றவாளிகளுக்குக் குஜராத் அரசு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. அதுவும், இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நாளில் விடுதலை செய்ததும், ஒன்றிய உள்துறை அமைச்சகமும் டெல்லி போலீசும் அந்த வழக்கைக் கையாண்ட விதம் மற்றும் நீதி நிகழ்முறையைத் தாமதித்ததும் இதற்கு ஆகச் சிறந்த உதாரணங்களாகும்.

பெண்களுக்கு முன்னுள்ள சவால்கள்

   கார்ப்பரேட்களின் லாப நோக்கத்திற்கு ஆதரவாக வகுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள், கண்ணியத்துடன் வாழ்வதற்கான பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றன. பெண்களின் வேலைவாய்ப்பு மேலும் மேலும் அரிதாகிறது, வேலை கிடைத்தாலும் அது குறைந்த கூலிக்கு அல்லது ஊதியமில்லாத வேலையாகிறது. சமூக அக்கறையில்லாத புதிய கல்விக் கொள்கையும், கல்விக்கு அரசின் குறைந்த நிதிஉதவியும் பெண்களை இருளில் தள்ளுகிறது. சிறுபான்மையினரின் கல்வி உதவித் தொகைகளை நிறுத்தும் ஒன்றிய அரசின் முடிவுகள், பெண்களுக்கு அனைத்து வகையிலும் அதிகாரமளிக்கும் கதவுகளை இழுத்து மூடுவது என்பதைத் தவிர வேறில்லை.

            வரலாற்றைச் சிதைத்து, பாடத் திட்டங்களைத் திருத்தி எழுதுவதை விரைந்து பின்பற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் செயல், அறிவியலுக்கு விரோதமானது மற்றும் அறிவியல் உணர்வுக்கு எதிரானது. வெறுப்பைப் பரப்புல், வன்முறை தாக்குதல்கள் மற்றும் வெளிப்படையாகப் பாகுபாடுகளைக் காட்ட அழைப்பு விடுதல் என்று பெரும்பான்மையின பாசிச அமைப்புகள் பாஜக அரசுகளின் மறைமுக ஆதரவுடன் ஆடும் வெறியாட்டம், மக்களின் வாழ்விலும் ஒட்டு மொத்தச் சமூகத்திலும் கற்பனை செய்ய முடியாத பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

     பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் அமைப்புகளையும், பெண்கள் உரிமை குழுக்களையும் ஒன்றிணைக்கவும் கூட்டாகச் செயல்படச் செய்யவும் இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் ஆற்றிய தளராத தொடர் பணி இந்தியாவில் பெண்கள் இயக்கத்திற்கு உற்சாக எழுச்சியையும் பல பலன்கள் மற்றும் வெற்றிகளையும் வழங்கியுள்ளது.

     இத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்பது தவிர்க்க முடியாத கட்டாயமாகியுள்ளது. அது பெண்கள் இயக்கத்திற்கு மட்டுமல்ல, மாறாக அனைத்துப் பெருந்திரள் வர்க்க அமைப்புகளுக்கும், பொதுவாகக் குடிமைச் சமூகத்திற்கும் நல்லது. ஆணாதிக்கம் மற்றும் பாசிசத்தை வீழ்த்தி நமது அரசியலமைப்பின் உயிர்ப்பான விழுமியங்கள் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை உயர்த்திப் பிடிக்கவும் நாம் ஒன்றாக இருப்பது கட்டாயம்.

அமைப்பை வலிமைப்படுத்துவோம்!

        வலிமையான அமைப்பினால் மட்டுமே அத்தகைய முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும். பல்வேறு மாநிலங்களில் செயல்படும் சம்மேளனத்தின் துணை அமைப்புகளில் நம் அமைப்பிற்கு நெருக்கமான தனிநபர்களையும், அமைப்புகளையும் மேலும் மேலும் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் அவற்றை எல்லாம் வலிமைப்படுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை வலிமைபடுத்த நாம் உறுதி ஏற்போம்.

 பெண்கள் ஒற்றுமை வாழ்க! மாதர்  சம்மேளனம் வாழ்க வாழ்க!
 (இக்கட்டுரையில் கார்க்கி சக்ரவர்த்தி மற்றும் சுப்பிரியா சோடானி எழுதிய  “புதிய பாதைக்கான வரைபடம் --NFIWன் தொடக்க ஆண்டுகள்” நூலில்        இருந்து செய்திகள் நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளன)

--நன்றி : நியூஏஜ் (மே 28 –ஜூன்3)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்