Wednesday 30 March 2022

உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் --அனில் ரஜீம்வாலே

 

உக்ரைன் நெருக்கடி : 
போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

--அனில் ரஜீம்வாலே

            உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகளின் நுழைவு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதன் முறையாக ஐரோப்பா நீண்ட போரின், அதுவும் அணுஆயுதப் போரின், விளிம்பில் நிற்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் வலிமை பொருந்திய பெரும் அணுஆயுதச் சக்திகள். அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற பயன்பாடே பொறுப்பற்றது. ஹிரோஷிமா பெருந்துயரை யாரும் மறந்துவிட முடியாது.

            போரிடும் இரு தரப்பு நாடுகளும் அதற்கான தங்கள் தங்கள் நியாயங்களைக் கூறுவர். பதற்றத்தையும் இராணுவ ரீதியான மோதல்களை போராக முற்றச் செய்வதிலும் நேட்டோ மற்றும் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக ரஷ்யா சரியாகவே குற்றம் சாட்டுகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவின் ஆயுதம் தாங்கிய இராணுவத் தாக்குதல், (சர்வ தேசச் சட்டப்படியான) உக்ரைனின் இறையாண்மையும் தேச ஒருமைப்பாட்டையும் தெளிவாக மீறிய செயலாகும்.

            சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (யுஎஸ்எஸ்ஆர்) மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சோஷலிச ஆட்சிகளும் வீழ்ச்சி அடைந்தது முதல், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆளுமை செலுத்தி கட்டுப்படுத்தவும் அந்நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராகத் தூண்டி விடவும் அமெரிக்கா முயன்று வருகிறது. பலம் பொருந்திய சோவியத் யூனியனிலிருந்து வரும் ‘அச்சுறுத்தல்’களின் பெயரில் கடந்த காலத்தில் அமெரிக்கா தனது இராணுவ – ஏகாதிபத்திய விரிவாக்கத்தையும் நேட்டோ இராணுவத் தளங்கள் கட்டுவதையும் நியாயப்படுத்தியது. ‘பனிப்போர்’ என்று அழைக்கப்படும் பதற்றமான சூழ்நிலைக்குச் சோவியத் யூனியன்தான் காரணம் என்றது. அந்த வாதத்தின்படி பார்த்தால், சோவியத் யூனியன் உடைந்து சிதறிய உடன் பனிப் போரும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

            ஆனால் சோவியத் மற்றும் முன்னாள் கிழக்கு ஐரோப்பிய சோஷலிச ஆட்சிகளின் வீழ்ச்சி மேற்குலகிற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியது. ஐரோப்பாவிலிருந்து இராணுவ நிலைகளைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக அவர்கள், கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் நடத்திய (இராணுவ ரீதியிலான) கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை, உண்மையில் மேலும் கூடுதல் தீவிரத்துடன், செய்து வருகிறது. போலந்து, பால்டிக் நாடுகள், ருமேனியா முதலிய நாடுகளில் நேட்டோ இராணுவத் தளங்களை நிறுவியுள்ளது. நேட்டோ இராணுவக் கூட்டணியில் அல்பேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, ஸ்லோவேனியா, பல்கேரியா முதலியன உறுப்பு நாடுகளாக உள்ளன. நேட்டோவில் ஒரு போதும் உக்ரைன் உறுப்பினராக இருந்ததில்லை; இந்நிலையில், 1991க்கு பிந்தைய ரஷ்யா நேட்டோவில் உறுப்பினராகச் சேர திரும்பத் திரும்ப மனு செய்தது என்பது, சரித்திரத்தின் விநோதமான திருப்பம் இல்லையா!

            ஒருபுறம் அமெரிக்காவும் நேட்டோவும், மறு புறத்தில் ரஷ்யாவுமாக நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இராணுவ மற்றும் அரசியல் பரிசோதனைக் கூடமாக உக்ரைனை மாற்றி விட்டன. மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட்டு, அந்நாட்டில் தன் விருப்பத்திற்கேற்ற ஆட்சிகளைக் கொண்டுவர தேர்தல் நடைமுறைகளில் செல்வாக்கு செலுத்த முயன்றது; ரஷ்யாவுக்கு எதிரான பாசிசக் குழுக்களுக்கும் உதவியது. ரஷ்ய எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத் தளமாக உக்ரைனை அமெரிக்கா பயன்படுத்தியது. நேட்டோவின் கொள்கைகளைக் கூடுதல் சாக்காகப் பயன்படுத்தி, ரஷ்யா தனது சொந்த நலன்களை உக்ரைன் மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியை நோக்கி நீட்டித்தது. ரஷ்யாவின் இராணுவப் படையெப்புக்கு எந்த நியாயமும் இல்லை. ரஷ்யா உக்ரைனை நசுக்க முயல்கிறது.

உக்ரைன் : சிறிய வரலாறு மற்றும் லெனினிய நிலைபாடு

            உக்ரைன், ஜார் மன்னன் சாம்ராஜ்யத்தின் கீழ் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஒன்று; அதனால்தான் அந்நாடு சரியாக ‘நாடுகளின் சிறைச்சாலை’ (‘prison of nations’) என அழைக்கப்பட்டது. ஜாரின் ஆட்சியில் சிறிய மற்றும் வலிமை குன்றிய நாடுகள்/ தேசங்கள் ரஷ்ய ஏகபோக, ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ – இராணுவ முறையின் கீழ் சுரண்டலுக்கு ஆளாயின; மோசமாக நடத்தப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டன. அந்நாடுகளின் ஒன்றான உக்ரைன் எப்போதும் தனது சுதந்திரமான அடையாளத்திற்காகப் போராடியது.

            1917 ரஷ்யப் புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யா (சோவியத் யூனியன் அல்ல) அந்த அனைத்து தேசங்கள் மற்றும் நாடுகளை விடுதலை செய்வதாக அறிவித்தது. (தேசம் என்பது பொதுவான மொழி, கலாச்சாரம் உடைய மக்கள் தொகுதி; நாடு என்பது மக்களோடு இறையாண்மையும் தன்னாட்சி அரசியல் அதிகாரமும் உடைய நிலப்பரப்பைக் குறிப்பது.)  மேலும் நாடுகள், சோவியத் கூட்டமைப்பு / யூனியனில் இருப்பதா அல்லது (தனி நாடாக) விலகிச் செல்வதா என்பதைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம் என அறிவித்தது.

            விடுதலை மற்றும் பிரிந்து செல்லும் சுதந்திர உரிமையை உக்ரேனியர்களுக்கும், ஜார் சாம்ராஜ்ய ரஷ்யாவின் அங்கங்களான பிற நாடுகளுக்கும் முதலாவதாக அங்கீகரித்தது போல்ஷ்விக்குகளும் லெனினும்தான். ஜார் மன்னன் ‘நாடுகளின் சிறைச்சாலை’யிலிருந்து அவர்களை விடுவித்தாக வேண்டும். 

            1917, நவம்பர் 7 புரட்சிக்குப் பிறகு, லெனினும் அவரது அரசும் நாடுகளுக்குச் சோவியத் ரஷ்யாவில் நீடித்திருக்கவோ அல்லது பிரிந்து செல்லவோ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை கொடுத்தது. 1918ல் பின்லாந்து பிரிந்து சென்றது. முதலில் ரஷ்யச் சம்மேளனம், பின்னர் 1922ல் மாற்றியமைக்கப்பட்ட சோவியத் சோஷலிசக் குடியரசு ஒன்றியத்தில் (யுஎஸ்எஸ்ஆர்) நீடித்திருப்பது என்பதை உக்ரைன் தேர்ந்தெடுத்தது.

           

உக்ரைன் மீதான நிலைபாட்டை லெனின் திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்தினார். 1917ன் மத்தியில் அவர் சொன்னார்: “எந்த ஜனநாயகவாதியும், சுதந்திரமாக ரஷ்யாவிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையை உக்ரைனுக்கு மறுக்க முடியாது. தன்னிச்சையாக முன்வந்து இரண்டு மக்களின் கூட்டமைப்பாக ஒரே நாட்டின் ஆட்சியின் கீழ் இருக்க -- சுதந்திரமான உக்ரேனியர்களின் யூனியனுக்கும் மற்றும் பெரும் ரஷ்யர்களுக்கும் (தி கிரேட் ரஷ்யன்ஸ்) -- ஆலோசனை கூற வேண்டுமெனில், இவ்வுரிமையை நிபந்தனையற்று அங்கீகரிப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியம். சபிக்கப்பட்ட ஜாரியத்தின் கடந்த காலத்திலிருந்து முழுமையாக மீண்டும் திரும்ப முடியாதபடி உண்மையில் உடைத்துக் கொண்டு வர, இந்த உரிமையை நிபந்தனை அற்று அங்கீகரிப்பதே வழி. ….சபிக்கப்பட்ட ஜாரிசம், உக்ரேனிய மக்களைத் தூக்கு மேடையில் ஏற்றி தி கிரேட் ரஷ்யர்களைக் கொலை தண்டனை நிறைவேற்றுபவர்களாக ஆக்கியது…”

(தேர்ந்தெடுத்த லெனின் படைப்புகள் தொகுதி 25 பக்கம் 91 –92 பார்க்க)

            1919 டிசம்பரில் லெனின் மீண்டும் எழுதினார்: “உக்ரைனில் சோவியத் அதிகாரம் அதற்கான சொந்த சிறப்புக் கடமை பொறுப்புகளை உடையது … ஒன்று,… உக்ரைன் ‘தனியான சுதந்திர உக்ரேனியன் சோவியத் சோஷலிசக் குடியரசு கூட்டமை’ப்பாக ரஷ்யன் சோஷலிசக் கூட்டமைப்பான சோவியத் குடியரசுடன் சேர்ந்து இருக்க வேண்டுமா என்பது முதல் கேள்வி …

“ உக்ரைனின் சுதந்திரத்தை R.S.F.S.R, ரஷ்ய சோஷலிச கூட்டமைப்பான சோவியத் குடியரசின் அனைத்து ரஷ்ய மத்திய செயற்குழு மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) இரண்டாலும் அங்கீகரிக்கப்பட்டது”    “… உக்ரைனிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அவர்களாக மட்டுமே முடிவு செய்ய முடியும் …”

1922ல் சோவியத் சோஷலிச குடியரசின் ஒன்றியம் (பொதுவாக சோவியத் யூனியன் என அழைக்கப்படும்) யுஎஸ்எஸ்ஆர் நிறுவப்பட்ட பிறகு உக்ரைன், ‘உக்ரேனிய சோவியத் சோஷலிசக் குடியரசு’ என, யுஎஸ்எஸ்ஆர்–இன் இணைப்பு குடியரசுகளின் ஒன்றாக ஆனது. சோவியத் யூனியன் 15 குடியரசுகளைக் கொண்டது, அவை ஒவ்வொன்றும் பிரிந்து செல்வது உட்பட சுயநிர்ணய உரிமை உடையன.

யுஎஸ்எஸ்ஆர் ஆட்சியில் உக்ரைன் வளர்ச்சியும் மக்கள் மனநிலையும்

    சோவியத் குடியரசுகளுக்குள் உக்ரைன் பெரும் பலன் அடைந்தது. சோவியத் ஆட்சியின்போது உக்ரைனின் பொருளாதாரம், பொதுவான மக்கள் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள், கல்வி, மக்களின் சுகாதார ஆரோக்கியம், தகவல் தொடர்புகள் முதலிய துறைகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

அதே நேரத்தில், உக்ரைனியர்கள் தங்கள் தேசத்தின் பல்வேறு பண்பாட்டு, கலாச்சார மற்றும் அடையாள அம்சங்கள், குறிப்பாக லெனின் மறைவுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்; மேலும், தங்கள் மரபு, பாரம்பரிய வழக்கங்கள், கலாச்சாரப் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை ‘ரஷ்ய மயம் ஆக்கப்படுவ’தாகவும் ஒடுக்கப்படுவதாகவும் உணர்ந்தனர். உக்ரைனியர்கள் தீவிரமான தேசியவாதிகள் (உக்ரைனிய தேசியம்) மற்றும் சுதந்திரமான உணர்வு படைத்த மக்கள். இது ஓர் உணர்வுநிலை சார்ந்த பிரச்சனை. கடந்த பல்வேறு காலங்களில் நடந்த சோவியத் ஆட்சிகள், இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த ஆட்சிகளோ அல்லது பிந்தைய ஆட்சிகளோ, எப்போதும் (உக்ரைனியர்களின்) இந்தப் பிரச்சனையைப் போதுமான அளவு நிறைவளிக்கும் வகையில் கையாளவில்லை.  

உக்ரைன் ‘லெனின் உருவாக்கியது அல்ல’

            1991ல் சோவியத் யூனியன் சரிவுக்குப் பிறகு, உக்ரைன் விடுதலையைப் பிரகடனம் செய்து, தனி நாடானது. உக்ரைன் ‘லெனின் உருவாக்கியது’ என்பதுபோலச் சொல்வது தவறு. அதற்கு மாறாக, மேலே விவரிக்கப்பட்டபடி உக்ரைன் வரலாறு உருவாக்கியது. சுதந்திரமான, இறையாண்மை உள்ள அமைப்பாக (entity) உக்ரைன் நடத்தப்பட வேண்டும். அது, வல்லரசு நாடுகளின் பெரும் அதிகார மோதலில் சோதனைச் சாலையில் வதைபடும் சிறு விலங்குகளாக (கினியா பிக், கினிப் பன்றி) நடத்தப்படக் கூடாது; அந்த மோதலில் நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகளால் அவர்களின் சூழ்ச்சித் திட்டங்களில் உக்ரைன் கட்டாயப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகிறது. மறுபுறத்தில், அது ரஷ்யாவால் அச்சுறுத்தப்படுகிறது, ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு ஆளாகிறது – அதனால் புதிய தன்னல நோக்கம் உருவாகிறது. நம் ஆர்வத்தைத் தூண்டிக் கூடிய ஒரு செய்தி, ஐநாவின் பொதுச் சபையில் சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு மூன்று வாக்குகள் – அதாவது, யுஎஸ்எஸ்ஆர், பெலாரஷ்யா குடியரசு (ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள நாடு) மற்றும் உக்ரைன்; உக்ரைனின் குடியரசு அந்தஸ்தைக் கருதி அதற்கு ஒரு வாக்கு.

சமூகப் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள்

            சோவியத் யூனியன் சிதறி சுமார் 30 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்தக் காலக் கட்டத்தின்போது இப்பிராந்தியத்திலும் ரஷ்யாவிலும் தீவிரமான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் நடந்தேறின. இந்த இடைக் காலத்தில் ரஷ்யா பெரும் உலக சக்தியாக நன்கு வெளிப்பட்டது.

            ஒரு வகையில் பார்த்தால், ரஷ்யாவின் எழுச்சி உலக மக்களுக்கு, ஆதரவு அளிக்கும் சக்தியாகவும், மேற்குலக நாடுகள் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தும் சக்தியாகவும் நிம்மதி ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகளின் காய் நகர்த்தல் திட்டங்களுக்கு எதிராக, பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு உண்மையில் ரஷ்யா உதவி செய்தது; அதன் மூலம், அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு எதிரான (பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையை) சமநிலைப்படுத்தும் எதிர்த்திறன் வன்மையுடையதாக (deterrent against the West) நிரூபித்தது.

இப்பிராந்தியத்தில் குறுக்கும் நெடுக்குமாக இன்று கச்சா எண்ணெய் மற்றும் பிற பைப்லைன்களோடு மாற்றங்களும் ஏற்பட்டன. கச்சா எண்ணெய், பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல அரசியலிலும், முக்கியமான ஆதார வளம். முரண்படும் அரசியல் கட்டமைப்புகள் இப்பகுதியில் உருவாயின. செல்வாக்கு செலுத்தும் புதிய ஆளும் வர்க்கங்களும் வட்டங்களும் ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் எழுந்தன. அரசியல் நிலைபாடுகள் எடுப்பதை,  நிலக்கரி, கோதுமை, எரிபொருள் எண்ணெய், போக்குவரத்து, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இராணுவ வலிமை அதிகரிப்பு முதலியன மேலும் மேலும் நிர்ணயிக்கத் தொடங்கின. பல நேரம் வலதுசாரிகளுக்கு உக்ரைன், புதிய பொருளாதார மற்றும் அரசியல் கொதிநிலைக் களனாக (ஹாட்பெட்) உருவானது. மத்திய தரைக்கடல் பகுதிக்கும் மற்றும் அங்கிருந்தும் போஸ்போரஸ் மற்றும் டார்னயநெலீஸ் வழியாக வர்த்தகம் நடைபெறுவது பல மடங்கு அதிகரித்தது – இது கேந்திரமான புவிசார் அரசியல் அம்சமானதால், உக்ரைனின் முக்கியத்துவத்தை அதிகரித்தது.  

புதிய வர்க்க (இணைவு) உருவாக்கம்

            ரஷ்யாவும் உக்ரைனும் மற்றும் அதுபோல இப்பகுதியின் பிற நாடுகள் ஒவ்வொன்றும் மேலும் வளர்ச்சி பெற அதனதன் சொந்த பாதைகளைப் பின்பற்றின. உக்ரைன் மற்றும் ரஷ்யா இரண்டிலும் புதிய பணக்காரர்கள், அட்டைபோல் உறிஞ்சும் அரசு ஆதரவு முதலாளிகளின் (க்ரோனி பூர்ஷ்வாகள்) நலன்கள், பொதுவாக அடிக்கடி வர்த்தகம் மற்றும் வணிக அடிப்படையில், உருவாயின. ரஷ்யா முதலாளித்தவ மேல்தட்டு சார்புடைய தன்னல சிறுகுழு ஆட்சி (oligarchic) நலன்களை வளர்த்தது; அவை ஏற்கனவே அவர்களிடம் சோவியத் காலத்திலிருந்து ஸ்வீகரிக்கப்பட்ட அபரிமிதமான செல்வத்துடன் புதிய நிறுவனங்கள் மூலம் உருவான புதிய செல்வத்தையும் சேர்த்துப் பயன்படுத்தியது. அவர்களுள், குறிப்பாக ரஷ்யா தொழிற்சாலைகளை உருவாக்கி ஆலைமயமாக்கியது. இரண்டு நாடுகளிலும் மட்டுமல்லாமல் அண்மை நாடுகளிலும் புதிய நடுத்தர வர்க்கம் எழுந்தது.

            நோட்டோ மற்றும் அது போன்ற பிற சக்திகளிடமிருந்து தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்துதல் போன்ற பிரச்சனைகளில் ரஷ்ய நிலைபாடு நியாயப்படுத்தும்போது புறக்கணிக்க முடியாத வேறு சில சங்கடப்படுத்தும் நிச்சயமான எதார்த்த உண்மைகளும் உள்ளன.  

சங்கடப்படுத்தும் அம்சங்களுடன் ரஷ்யா புதிய சக்தியாக உருவாகிறது

            பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தனது சொந்த இராணுவ தொழிற்சாலை வளாகங்களை (மிலிட்டரி காம்ப்ளக்ஸ்) மேம்படுத்தி இராணுவ ரீதியாகவும் ரஷ்யா புதிய உலக அதிகாரச் சக்தியானது. இதன் விளைவாய், ரஷ்யா தனது தன்னலக் குழு நலன்களை வளர்த்தது: அது வெளிப்படுத்தும் குறிப்பிட்ட சங்கடப்படுத்தும் அம்சங்களை வெறும் நேட்டோவிடமிருந்து அச்சுறுத்தல் என குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. (அதன் ஒரு வெளிப்பாடாய்) அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் சாத்தியம் என்ற தேவையற்ற பேச்சு குறிப்பிடப்படுவதை இச்சூழலில் ஒருவர் காண முடியும். ஒருபோதும் ஹிரோஷிமாவை யாரும் மறந்துவிட முடியாது. நேட்டோவிடமிருந்து ரஷ்யாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கேள்வி புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும் உக்ரைனுக்குள் ரஷ்ய இராணுவத்தினரின் மிகப்பெரும் படையெடுப்புத் தாக்குதல் முற்றிலுமாக தேவையற்ற ஒன்று. உக்ரைனிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலை ரஷ்யா மற்ற வழிகளில் சந்தித்திருக்க முடியும்.

            ரஷ்யா ‘அகண்ட ரஷ்யா’வாக (கிரேட்டர் ரஷ்யா) எத்தனிக்கிறது.  

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு:

            அபாயகரமானது, நியாயமற்றது, ரஷ்ய இராணுவப் படையெடுப்பு முற்றிலுமாகத் தேவையற்றது. உக்ரைனிடமிருந்து உடனடியான இராணுவ அச்சுறுத்தல் ரஷ்யாவுக்கு இல்லை, அல்லது எல்லையில் உக்ரைன் படைகள் குவிக்கப்படவும் இல்லை. மாறாக, எல்லையில் ரஷ்யப் படைகளைக் குவித்து அழுத்தம் தருவதையும் அதே நேரம் பேச்சுவார்த்தை நடத்துவதையும் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எதற்காக ஆக்கிரமிப்புப் படையெடுப்பு? இத்தனைக்கும் உக்ரைன் முறையான நேட்டோ உறுப்பினர்கூட இல்லை. அதன் மண்ணில் வெளிநாட்டு இராணுவ வீரர் ஒருவர்கூட இல்லை. தன்னிடமிருந்த அணுஆயுதக் களஞ்சியத்தை (ஸ்டோர்) ரஷ்யாவிடமும் அணுசக்தி எரிபொருளை (ஃப்யூயல்) அமெரிக்காவிடமும் ஏற்கனவே கையளித்து விட்டது. எனவே அதனிடமிருந்து அணுஆயுத அச்சுறுத்தல் இல்லை. உக்ரைன் நிச்சயமாக வலதுசாரியைத்தான், பாசிசச் சக்திகளையும்கூட ஆதரிக்கிறது: ஆனால் அது எந்த வகையிலும் தாக்குதலுக்கான அடிப்படையைத் தந்துவிடாது.

       உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ரஷ்யாவின் புதிய அபாயகரமான அம்சத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது : அது பிரச்சனைகளை இராணுவ வழிமுறையில் தீர்க்க எத்தனிக்கிறது.. ரஷ்ய நடவடிக்கையானது பெரிதும் இராணுவ உத்தி சார்ந்த ஒன்று என்ற முடிவுக்கு ஒருவர் வருவதைத் தவிர்க்க முடியாது; அந்த இராணுவ உத்தி, உக்ரைனை நசுக்கி மத்திய தரைக்கடல் பகுதிக்கும், அதனோடு கிரிமீயா, மரியுபோல், செவஸ்டோபோல் முதலிய கேந்திரமான தளங்களுக்கும் வழிப்பாதை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது. லுகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகள் நிலக்கரி மற்றும் பிற பொருட்களுக்குக் கேந்திரமானது. உக்ரைனில் கோதுமை உற்பத்தி, உலகத்திற்கே முக்கியமான கூடை என்ற அளவு, மிக அதிகம். உக்ரைன், நேட்டோ தளமான துருக்கிக்கு எதிரான முக்கியமான தளத்தை வழங்கக் கூடியது.

உக்ரைன் இறையாண்மை உள்ள நாடு

உக்ரைன் சுதந்திரமான இறையாண்மை உள்ள நாடு, பலம்பொருந்திய இராணுவப் படையெடுப்புக்கு எதிராகத் தனது சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறது. சுதந்திரமான எந்த நாடும் அதைத்தான் செய்யும், செய்ய வேண்டும். 21ம் நூற்றாண்டு என்பது ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒன்று. இந்த நூற்றாண்டில் இராணுவ வழிமுறைகள் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். இது மிகக் கூடுதலாக அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்குப் பொருந்தும், மேலும் ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கும் பொருந்தும்.

இன்றைய உலகில், சிறிய, எளிய மற்றும் நொய்மையான நாடுகள் மற்றும் தேசங்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை தனிச் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

நம் நம்பிக்கை -- போர் முடிவுக்கு வர வேண்டும்

          சாந்தியும் சமாதானமும் அமைதியும் விரும்பும் உலக மக்கள், முரண்பாடு மோதல்கள் மற்றும் உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வர விரும்புகிறார்கள். ரஷ்ய இராணுவத் துருப்புக்கள் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர்கள் மீண்டும் பேச்சு வார்த்தைக்குத் திரும்ப வேண்டும். அமைதியே ஒரே மாற்று.

 சாந்தி நிலவ வேண்டும் – உலகிலே

 சாந்தி நிலவ வேண்டும்

 கருணை, ஒற்றுமை கதிரொளி பரவி

 சாந்தி நிலவ வேண்டும்

 காந்தி மகாத்மா கட்டளை அதுவே”       


 
--நியூ ஏஜ் (மார்ச் 27 – ஏப்ரல் 2)                                                 
--தமிழில் : நீலகண்டன், 
  என்எப்டிஇ, கடலூர்
                                                                                                                    

Wednesday 23 March 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரிசை 60 -- பிரகாஷ் ராய், தேபகா இயக்கத் தலைவர்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 60


பிரகாஷ் ராய்– தேபகா இயக்கத் தலைவர்,

மத்திய இந்தியாவில் 
கட்சியைக் கட்டியவர்

--அனில் ரஜீம்வாலே

நன்றி : நியூஏஜ் (பிப்.20 --26)

            பிரகாஷ் ராயின் உண்மையான பெயர் அசோக் போஸ். 1946ல் வரலாற்றுப் புகழ்பெற்ற தேபகா (விவசாயிகள்) இயக்கத்தைத் தலைமையேற்று நடத்திய தலைவர்களில் ஒருவர்; வங்காள மாநிலத்திலும் மத்திய இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர். இந்தியா உருவாக்கிய அற்புதமான கம்யூனிஸ்ட்களில் ஒருவர்.

            அசோக் (பிரகாஷ் ராய்) மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம் பாரா ஜுகாலியா கிராமத்தில் 1922 செப்டம்பர் 23ல் பிறந்தார். தந்தை பிஸாத் குமார் போஸ், தாய் பீனாபானி தேவி. தந்தை, நெல் பயிரிடும் நிலங்களைக் குத்தகை பயிரிட குத்தகைக்கு விடும் ஜோடேதார் (ஜமீன்தார்). இரண்டு வயதில் தாயை இழந்த அசோக் பாட்டியார் மிராணாளி தேவி கவனிப்பில் வளர்ந்தார்.

            மிருணாளினி, புகழ்பெற்ற புரட்சியாளர் டாக்டர் பூபேந்திரநாத் தத்தா அவர்களின் (உடன்பிறந்தார் மகள் என்ற) மருமகள் உறவானவர். பூபேந்திரநாத், சுவாமி விவேகாந்தரின் இளைய சகோதரர். அவர், 1921 மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலம் (மாநாடு) காங்கிரஸில் கலந்து கொண்டு லெனின் மற்றும் பிற பிரபலமான தலைவர்களைச் சந்தித்தார்.

            பூபேந்திரநாத் போன்று அசோக்கை வளர்க்க எண்ணிய மிருணாளினி தேவி, புத்திசாலியான அசோக் மீது சிறப்பு அக்கறை செலுத்தினார். கிராமத்தில் குத்தகை விவசாய ஏழைப் பிள்ளைகளோடு கலந்துறவாடி அவர்களுடன் விளையாட அசோக்கைப் பாட்டியார் ஊக்குவித்தார்.

            மிருணாளினி தேவியின் இந்த அணுகுமுறை அசோக்கின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு அசோக்கைக் கல்கத்தா நியூ இந்தியா இங்கிலீஷ் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். உண்மையில், எதிர்காலத்தில் அசோக் தன்னைப் போல ஜமீந்தார் ஆக வேண்டும் என அவர் விரும்பினார்.

 மாணவர் தலைவராக வளருதல்

            கல்கத்தா மாணவர் விடுதியில் தங்கிய அசோக், கலாச்சார, சமூகச் செயற்பாடுகளில் பங்கேற்றார். 1937ல் அந்தமான் சிறை அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி ‘கோரிக்கை நாள்’ அனுசரிக்கும்படித் தேசியத் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். அப்போது 9ம் வகுப்பில் படித்து வந்த அசோக், மாணவர்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, மறியல் போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் மறியல் செய்த மாணவர்களைத் தனது அறைக்கு வரவழைத்து அவர்களைச் சக்கையாகப் பிரம்பால் அடித்தார்; பிறகு, பிரிட்டீஷ் போலீசார் கையில் இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தண்டனை துன்பத்தை அனுபவிப்பதற்கு அவர்களைத் ‘தயாரித்ததாக’ கூறினார்!

            இந்த இயக்கத்தின்போது அவர் உள்ளூர் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் சிலரைச் சந்தித்தார். அசோக்கின் அமைப்பு திரட்டும் பணியின் திறனைக் கண்டு, அவர்கள் அசோக்கிடம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் நூல்கள் மற்றும் புரட்சிகளின் வரலாறுகளைப் படிக்குமாறு அறிவுரை கூறினர். மேலும், கிராமப்புற மக்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறினர். அசோக் அடிக்கடி கிராமத்திற்குச் செல்லத் தொடங்கினார்; அதற்கு அசோக்கின் பாட்டி மிருணாளினி தேவி பெரிதும் உதவி செய்தார்.

            சிறப்புத் தகுதியுடன் மெட்ரிகுலேசன் தேர்வுகளில் தேறி மேற்படிப்புக்காக கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அசோக் ‘ஆபத்தான’ பாதையை நோக்கிப் பயணிப்பதைக் கண்ட அவரது தந்தை படிப்பைப் பாதியிலேயே இடை நிறுத்தினார்; அசோக்கைக் கல்கத்தா தபால் மற்றும் தந்தித் துறையில் எழுத்தராகப் பணியில் அமரச் செய்தார்.

தொழிற்சங்க இயக்கத்துடன் தொடர்பு

            1939ல் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. அசோக் வேறு பலருடன் பாட்னா தபால்

தந்தித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாட்னாவில் பூபென் கோஷ் மற்றும் கே ஜி போஸ் (படம்) போன்ற பிரபலமான நன்கறிந்த தபால் தந்தி ஊழியர்களின் தலைவர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அசோக்கைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அவர்கள், அவரிடம் தபால் ஊழியர் தொழிற்சங்க வேலைகளின் பொறுப்பை அளித்தனர்.

            1943ல் பெரும் வங்கப் பஞ்சம் வெடித்தது. அசோக் தபால் துறை பணியை விட்டு விட்டு பஞ்சம் பீடித்த தனது சொந்த மாவட்ட மக்களுக்கு நிவாரணச் சேவைகளை ஆற்றச் சென்றார். தந்தையுடன் முரண்பாடு முற்றியது. அசோக் மிருணாளினி தேவியின் கால்களைத் தொட்டு வணங்கி  அவருடைய ஆசிகளைப் பெற்று இயக்கத்தில் முழு நேரச் செயற்பாட்டாளராகப் பணியாற்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டார். தேவையான வழிகாட்டலைப் பெறுவதற்காக மாகாணக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பவானி சென் மற்றும் நித்யானந்த சௌத்திரியைச் சந்தித்தார்; கிசான் சபாவில் பணியாற்ற அவர்கள் ஆலோசனை வழங்கினர்.  

கிஸான் மற்றும் தேபகா இயக்கத்தில்

            மைமென்சிங் மாவட்டத்தின் மோனி சிங் மற்றும் மணிப்பூரின் இராபோட் சிங் போன்ற புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அப்போது கிசான் போராட்டங்களை வழிநடத்தி வந்தனர். ஒன்பதாயிரம் ஏக்கர் நிலங்களின் உரிமைகளை ரத்து செய்து விவசாயிகளைக் கட்டாயமாக வெளியேற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகள் நடவடிக்கையை எதிர்த்து ஹரிங்கட்டா பகுதி விவசாயிகளை அசோக் ஒன்று திரட்டினார். ஆயிரக் கணக்கான விவசாயிகளுக்குத் தலைமையேற்று வழிநடத்தி செங்கொடியை ஏற்றி நிலங்களைக் கைப்பற்றினார். அதில் அவர்கள் விவசாயம் செய்து தானியங்களை அறுவடை செய்து பகிர்ந்தளித்தனர். வெளியேற்றப்பட்ட விவசாயிகள் இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் பெற்றனர். அருகிலிருந்த 24 பர்கானா மாவட்டத்திலும் அசோக் இருந்தார். சில காலத்திற்குப் பிறகு 24 பர்கானா மாவட்டச் சிபிஐ மாவட்டச் செயலாளராக அசோக் தேர்வு செய்யப்பட்டார்.

           

1940களில் வங்காளத்தில் குத்தகை விவசாயிகள் மத்தியில் நிலவுடமையாளர்களுக்கு எதிராகப் பெரும் எழுச்சி ஏற்பட்டு, நெல் தானிய உற்பத்தியில் நியாயமான பங்கைக் கோரினர். 1946ல் வங்காளத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல்லாயிரம் குத்தகை விவசாயிகள் உற்பத்தியில் கூடுதல் பங்கு வழங்கக் கோரினர். தாங்கள் உற்பத்தி செய்த அறுவடையில் மூன்றில் இரண்டு பங்கு (எனவே ‘தேபகா’ அல்லது மூன்று பங்கு என்று பெயர்) வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. அப்போது அவர்கள் உற்பத்தியில் பாதி அளவு மட்டுமே பெற்று வந்தனர். கோரிக்கை மீது போராட்டங்கள் வலுவடைந்தபோது அசோக் போஸ் அவர்களது திறன் மிக்கத் தலைவராக விளங்கினார். 

            1946ல் தேபகா போராட்டம் கிஸான் சபா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்றது; அப்போராட்டம் 24 பர்கானாஸ், நாடியா, மித்னாபூர், மால்டா, பங்கூரா, ஜல்பைகுரி, மைமென்சிங், ஜெஸ்ஸோர் போன்ற பல மாவட்டங்களில் பரவி ஆயிரமாய் பெண்கள் உட்பட 60லட்சம் குத்தகை விவசாயிகள் பங்கேற்றனர். உலகத்தில் விவசாயிகளின் முக்கியமான பெரும் போராட்டம் அது என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. அதனை வழிநடத்தியதில் சிபிஐ பொதுச் செயலாளர் பி சி ஜோஷி மிக முக்கியமான பங்காற்றினார்.

            1940ல் (தற்போது பங்களா தேசத்தில் உள்ள) ஜெஸ்ஸோர் மாவட்டத்தில் நடைபெற்ற மாகாண கிசான் சபா மாநாட்டில் இந்த ‘தேபகா’ (முன்றில் இரண்டு பங்கு) கோரிக்கை முதன் முதலாக எழுப்பபப்பட்டது. வருமானத்தை உயர்த்த வழிமுறைகளைச் சிபார்சு செய்ய பிரிட்டிஷ் அரசு ஒரு குழுவை அமைத்தது. அவர்கள், குத்தகை விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லில் பாதிக்கும் மேல் வசூலிக்க முடிவு செய்தனர். அதனைக் கிஸான் சபா எதிர்த்தது, ‘தேபகா’ கோரிக்கையை எழுப்பியது.

            1946 – 47 காலகட்டம் கல்கத்தா, 24 பர்க்கானா மற்றும் பிற பகுதிகள் வகுப்புவாதக் கலவரங்களில்  மூழ்கிய கடினமான ஆண்டுகள். அசோக் போஸ் மற்றும் அவரது குழுவினர் தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டி வகுப்புவாதக் கலவரங்களைத் தடுக்கவும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டது.

            வகுப்புவாதச் சூழ்நிலைகளை மீறி, தேபகா போராட்டம் பல மாதங்கள் நடைபெற்று, அன்றைய மேற்கு வங்க முஸ்லீம் லீக் அமைச்சரவை கோரிக்கையை ஏற்க நிர்பந்தித்தது; முஸ்லீம் அமைச்சரவையும் 1947ல் ‘ஜமீந்தாரி ஒழிப்பு மற்றும் குத்தகை விவசாயிகள் உரிமை மசோதா’வை முன் மொழிந்தது.

            தேபகா போராட்ட இயக்கத்திற்குத் தொழிலாளர்கள் மற்றும் படைப்பூக்கம் மிக்க இடதுசாரி அறிஞர்களிடையே பரவலான ஆதரவு இருந்தது. பிரபலமான பாடகர்கள் சலீல் சௌத்திரி மற்றும் ஹேமந்த முகோபாத்யாயா போன்றோர் இயக்கத்திற்கு ஆதரவாக எண்ணிறைந்த புகழ்பெற்ற பாடல்களைப் புனைந்து பாடினர். 

இயக்கம் பரவியது

            கன்சாரி ஹால்டர், அசோக் போஸ் மற்றும் பிறர் இந்த வரலாற்றுப் போராட்டதின் முன்னணியில் இருந்தனர்.  அவர்கள் சுமார் 2000 தொண்டர்களைத் திரட்ட, ஜோட்டேதார்கள், நில உரிமையாளர்கள் அரசின் உதவியை நாட, பிரிட்டிஷ் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் படைகளை நிறுத்தினர். அசோக் போஸ், கன்சாரி ஹால்டர் மற்றும் பலரின் பெயர்களில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட அவர்கள் தலைமறைவில் செல்ல நேர்ந்தது. என்றாலும் அசோக் போஸ் தேபகா இயக்கத்தின் ஆதாரமான முக்கிய பகுதிகளில், ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு (மின்னல், அறிவானவர் எனப் பொருள்படும்) ‘பித்யூத்’ மற்றும் (பகவான் கிருஷ்ணரின் பெயரான) ‘நிகுன்ஜ்’ என்ற பெயரில் மாறு வேடங்களில் இயங்கியபடி இருந்தார். சந்தன்பிரி மற்றும் அதன் அருகில் அமைந்த பகுதிகளில் குறிப்பாக பெண்கள் மீது கடுமையான அடக்குமுறை ஏவிவிடப்பட்டது.

            காக்த்வீப் சதி வழக்கில் அசோக் போஸ் முதல் குற்றவாளி, இரண்டாவது புகழ்பெற்ற கன்சாரி ஹால்டர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ‘பிரகாஷ் ராய்’ என்ற பெயரில் அசோக் தலைமறைவில் இருந்தார். கஜன் மாலி, மானிக் ஹஜ்ரா மற்றும் பலர் என மொத்தம் 26பேர் மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன; அவர்களும் தலைமறைவுக்கு அனுப்பப்பட்டனர்.

            ஒருமுறை காக்த்வீப் பகுதியின் புடகாலி கிராமத்தில் அசோக் போஸ் பிடிபட்டு, அவரைச் சங்கிலியால் பிணைத்து, உடல் முழுதும் கயிறால் சுற்றி சுட்டுக் கொல்லப்படுவதற்காகத் தயார் படுத்தப்பட்டார். பெண்கள் உட்பட மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு போலீஸ் பிடியிலிருந்து அவரை விடுவித்துச் சென்றனர்.

            1949 –50களில் சுந்தர்பன் பகுதியில் லால்கஞ்ச் இடத்தை மையமாகக் கொண்டு ஒரு ‘குட்டி தெலுங்கானா’ (‘சிசு தெலுங்கானா’) நிறுவப்பபட்டது.

‘பிடிஆர் பாதை’யும் தேபகா மீது அதன் எதிர்மறை தாக்கமும்

            1948ன் பிடிஆர் பாதை தேபகா போராட்டத்தை ஆயுதத்தை நாடக் கட்டாயப்படுத்தியது. தொண்டர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லாத நிலையில் பாரம்பரியமான ஆயுதங்களைக் கொண்டு போலீசை எதிர்க்க நேர்ந்தது. வங்காள விரிகுடாவின் டெல்டா பகுதிகளான காக்த்வீப், மதுராபூர், ஜெய்நகர், சந்தேஷ் காலி, ஹஸ்னாபாத் மற்றும் பிற இடங்களில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றாலும் தோல்வியே அடைந்தது – ஆயுதப் போராட்டம் வெற்றி பெறும் என்ற கட்சியின் பாதைக்கு (பார்ட்டி லைன்) மாறாக அங்கு நிலவிய எதார்த்த உண்மை முரண்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டப் பாதை, இயக்கத்தில் பெரும் குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தியது. (முன்பு) பி சி ஜோஷியின் தலைமையின் கீழ் தேபகா போராட்ட இயக்கம் வெற்றிகரமான பெருந்திரள் மக்கள் பாதையைப் பின்பற்றியது.  

            அசோக் போஸ் மற்றும் கன்சாரி ஹால்டர் இவர்களுடன் ஹேமந்த கோஸால், ராஷ்பிகாரி கோஷ், மானிக் ஹஸ்ரா, அப்துல் ரஸாக் கான் மற்றும் பலர் முன்னணித் தலைவர்களாக இருந்தனர். போலீஸ் தொண்டர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்து, நவீன ஆயுதங்களுடன் தேபகா போராட்டத்தை வீழ்த்தியது. டோங்கா ஜோரா மற்றும் பிற இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. அசோக் போஸ் மீது 13 கிரிமினல் குற்ற வழக்குகள் பதியப்பட, மேற்கு வங்க அரசு அவரை உயிருடனோ அன்றிப் பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ50,000 பரிசுத் தொகையை அறிவித்தது. காச நோயால் பாதிக்கப்பட்ட அசோக்கைக் கட்சி மத்தியப் பிரதேசத்தின் ராஜ்நந்த்கௌண் (தற்போது சத்தீஸ்கரில் உள்ளது) என்ற இடத்திற்கு மாற்றியது.

            1948ல் கைதாகி 6மாதங்கள் அலிபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு சுந்தர்பன் பகுதியில் தலைமறைவானார்.

அசோக் போஸ் மத்திய பிரதேசத்தில் ‘பிரகாஷ் ராய்’ எனத் தோன்றுதல்

            அசோக் போஸ், மனைவி மாதவி தேவி மற்றும் இரண்டு வயது மகன் அமித் உடன் ராஜ்நந்த்கௌண் பகுதிக்கு 1952 ஜூனில் வந்தார். அப்போது அவர் ‘பிரகாஷ் ராய்’ என்று வந்தவர் இன்றும் கூட பெருமளவு அப்படியே அறியப்படுகிறார், வெகுசிலரே அவரது உண்மையான பெயரை அறிவார்கள்! அவர்கள் ஒரு தொழிலாளர் காலனியில் சுமார் 40 பீடி தொழிலாளர்களுக்குப் படிப்பு மையத்தை நடத்திக் கொண்டு வசித்தனர். மாதவி தேவி பயிற்சி பெற்ற ஒரு செவிலியர். அவர்கள் இருவருமாக பீடித் தொழிலாளர்களின் குடும்பங்களோடு சேர்ந்து பணியாற்றி அவர்களைச் செங்கொடியின் கீழ் ஒன்று திரட்டினர். தொழிலாளர்களின் குடும்பங்கள் பிரகாஷ் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தனர். தொழிலாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசும்போது தனது மோசமான நிதிநிலையைப் பிரகாஷ் விளக்கினார். அவர்கள், குறிப்பாக பெண்கள், உணவு தானியங்கள், பருப்புகள், காய்கறி, சமையல் எண்ணெய் முதலியவற்றை ஒவ்வொரு வாரமும் அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர். இந்த நடைமுறை முழுமையாக நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. சில தருணம் அவர்கள் பட்டினியாகக்கூட இருக்க நேர்ந்தது.

            ராஜ்நந்த்கௌண் பகுதி பீடி தயாரிப்பில் பெரும் மையமாக இருந்ததால், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ‘கர் –கட்டா’ முறையில் வணிகர்களின் கீழ் வேலை செய்தனர்.

(குடிசைப் பணியாக எவ்வளவு பீடி சுற்றப்பட்டதோ அதற்குக் கூலி என்ற முறை). தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பிரகாஷ் மற்றும் மாதவியும் நினைவில் நிற்கும் பல போராட்டங்களை நடத்தினர். பிரகாஷ் ராய் மோட்டார் வண்டி டிரைவர்களைத் திரட்டியும், பிஎன்சி மில் தொழிலாளர்களையும் செங்கொடியின் கீழ் திரட்டி சங்கம் அமைத்தார். ஒரு சம்பவத்தின்போது ஒரு டிரக்கின் முன் படுத்து மறியல் செய்ய, அவர் மீது வண்டியை ஏற்றும் நோக்கத்தில் வண்டி ஓட்டுநர் என்ஜினை இயக்கி ஓடவிட்டுக் கொண்டிருந்ததற்காக அவரிடம் மன்னிப்புக் கோரினார்.

            பேராசிரியர் கஜானந்த் மாதவ் முக்திபோத் போன்ற அறிவுஜீவிகள், சுதந்திரப் போராட்ட வீரர் கன்னையா லால் அகர்வால், டாக்டர் நந்துலால் சோட்டியா, ரமேஷ் யாக்னிக், வழக்கறிஞர் அடல் பிகாரி துபே, பத்திரிக்கையாளர் ஷரத் கோதாரி மற்றும் பலர் பிரகாஷ் ராயைச் சூழ்ந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியும் ராஜ்நந்த்கௌண் பகுதியில் பலம் பொருந்திய அரசியல் சக்தியானது.

தல்லி – ராஜ்கராவில் (In Dalli-Rajhara)

                அப்போது பிலாய் ஸ்டீல் பிளாண்ட் மற்றும் அதன் இரும்புத் தாது வெட்டும் சுரங்கங்கள், ராஜ்நந்த்கௌண் அருகே அமைந்துள்ள தல்லி-ராஜ்கரா அருகே வந்தது. சுரங்கத்

தொழிலாளர்களை ஏஐடியுசி தொழிற்சங்க அமைப்பின் கீழ் திரட்ட பிரகாஷ் ராயை ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் எஸ் ஏ டாங்கே (படம்) அனுப்பி வைத்தார். இந்தப் பணியில் பிராகாஷின் தோழர்களாக பாஜிராவ் ஷிண்டே, அர்ஜுன் ஷயாம்கர், கணேஷ் ராம் யாதவ், மகாதேவ் பொம்ப்ளே, நஸீம் ஆலம் நக்வி மற்றும் சிலர் இருந்தனர். பிரகாஷ் ராய் 15000 உடல் உழைப்பு ஒப்பந்தத் தொழிலாளர்களைத் திரட்டினார். 1960ல் ‘சம்யுக்த கதன் மஸ்தூர் சங்’ (SKMS, ‘ஐக்கிய குவாரித் தொழிலாளர்கள் சங்கம்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட புதிய சங்கத்தில் 3000 நிரந்தர ஊழியர்களும் சேர்ந்தனர்.

            நிலக்கரி, சுண்ணாம்புக் கல், டோலோமைட் தாது (மெக்னீசியத்தின் ஆதாரமான, கால்சியம் மெக்னீசியம் கார்பனேட்டைக் கொண்ட ஒரு ஒளி வண்ணத் தாது; பீங்கான் மற்றும் உரம் தயாரிப்பில் பயன்படுவது) வெட்டும் சுரங்கங்களில் தொழிற்சங்கக் கிளைகள் தொடங்கப்பட்டன. மேலும் NMDC என்ற ‘தேசிய தாது மேம்பாட்டுக் கழக’த்தின் கீழ் பாஸ்டர் பகுதியில் பைலாடிலா மற்றும் பாசேலி இரும்புத் தாது சுரங்கங்களிலும் சங்கக் கிளைகள் தொடங்கப்பட்டன. எஸ் கே சன்யால் (நாக்பூர்), எஸ் டி முகர்ஜி மற்றும் பி கே தாக்கூர் (ஜபல்பூர்), கிருஷ்ணா மோடி (பாலாகாட்) மற்றும் சுதீர் முகர்ஜி (ராய்ப்பூர்) போன்ற மூத்த தொழிற்சங்கத் தலைவர்கள் தல்லி-ராஜ்கரா மற்றும் பிற இடங்களில் உதவி செய்தனர்.  

            தேபகா போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அப்போதைய மாணவர் சிஆர் பக்க்ஷி-யையும் பிரகாஷ் சந்தித்தார்.  

            தல்லி-ராஜ்கரா, நந்தினி லைம் ஸ்டோன் சுரங்கம் மற்றும் ஹிர்ரி டோலோமைட் சுரங்கங்களிலும் பிரகாஷ் ராய் தொழிலாளர் கூட்டு பண்டகச் சாலைகள் அமைப்பதை முன்னெடுத்தார். கான்டிராக்டர்களிடம் வேலை செய்த 10,000 உள்ளூர் தொழிலாளர்களைப் பிலாய் ஸ்டீல் பிளாண்ட்டின் ஊழியர்களாக முறைப்படுத்தப்பட்டனர்.

            இவை அனைத்தையும் சாதிக்கும் போதும் பிரகாஷ் ராய் தனது கடந்த காலப் பின்னணியை வெளிப்படுத்தவில்லை.

                      1961 டிசம்பர் 7ம் நாள், எஸ்ஏ டாங்கே, பூபேஷ் குப்தா, இஎம்எஸ், அஜாய் கோஷ்

மற்றும் சோகன் சிங் பாக்னா அடங்கிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக் குழு பிரதமர் நேருவை ஒரு கோரிக்கை மனுவுடன் சந்தித்தனர். அதில், பிரகாஷ் ராய் மற்றும் பிறர் மீது அவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினர். 1962 ஆகஸ்ட் 15ம் நாள் பல்வேறு மாநிலங்களில் எண்ணற்ற கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிரகாஷ் ராய் என்கிற அசோக் போசுக்கு எதிரான பிடி வாரண்ட் மேற்கு வங்க அரசால் ரத்து செய்யப்பட்டது .

            நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்நந்த்கௌண் தொகுதியிலிருந்து பிரகாஷ் ராயைச் சிபிஐ கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அவர் 40ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றார்.

சிபிஐ தலைவராக

          சிபிஐயின் தேசியக் குழு உறுப்பினராக பிரகாஷ் ராய்  9வது கட்சிக் காங்கிரஸ் (1971) மற்றும் 10வது விஜயவாடா கட்சிக் காங்கிரசிலும் (1975) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவசரநிலையின்போது இந்திரா காந்தி அரசு தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் நடத்தியபோது பிலாய் ஸ்டீல் பிளாண்ட் மற்றும் BSP சுரங்கங்களில் வேலைநிறுத்தம் நடத்த பிரகாஷ் ராய் அறைகூவல் விடுத்தார்.

            மத்திய பிரதேசத்தின் மாநிலச் செயலாளர் ஐ.எஸ் காந்த்கர் மற்றும் ஹோமி தாஜி, ஷாகிர் அலி கான், பால்கிருஷ்ண குப்தா மற்றும் பி.கே தாக்கூருடன் இணைந்து பிரகாஷ் ராய் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கட்சியை வலிமையாக கட்டக் கடுமையாகப் பாடுபட்டார்.

            ராஜ்நந்த்கௌண் –ல் பிரதேசக் கிஸான் சபா மாநாடு நடத்த ஏற்பாடு செய்த பிரகாஷ், பிரதேசத் தொழிற்சங்கப் பள்ளியையும் நடத்தினார்.

            உடல் நலமின்மை மற்றும் மூளை இரத்தக் கசிவு பிரச்சனைகள் பிரகாஷ் ராயைத் தீவிரச் செயல்பாடுகளில் ஈடுபட இயலாது தடுத்தாலும், பெருந்திரள் நடவடிக்கைகளில் தொடர்ந்து அவர் பங்கேற்றார்.

தேபகா போராட்டப் பகுதிகளுக்கு மறுவிஜயம்

            1973ல் பிரகாஷ், மனைவி மாதவி மற்றும் மகன் அமித் உடன் காக்த்விப், சந்தன்பிரி மற்றும் பிற இடங்களுக்கு விஜயம் செய்தார். பெரும் எண்ணிக்கையில் கிராம மக்கள் ஒன்றுகூடி அவர்களை வரவேற்றனர்.

            1975 டிசம்பர் 3ம் நாள் மாதவி ராய் மறைந்தார். பிரகாஷ் ராயின் உடல்நிலையும் மேலும் பாதிப்படைந்தது. அந்த உடல்நிலையிலும் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் படிண்டா 1978 கட்சிக் காங்கிரஸில் கலந்து கொண்டு விவாதங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார். 1978ல் வாரணாசியில் நடைபெற்ற 12வது கட்சிக் காங்கிரசிலும் கலந்து கொண்டார்.

            மனைவின் மறைவுக்குப் பிறகு சுருக்கமான தன்வரலாற்று நூல் எழுதினார்.

            வனக் கோட்டத்தைப் பிரிக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக 1983 செப்டம்பரில் நடைபெற்ற கண்டனக் கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உடல் நலம் இல்லாவிட்டாலும் அவர் சென்றார். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. விரைவாக அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்; ஆனால் மறு நாள் 1983 செப்டம்பர் 3ம் நாள் தமது 61வது வயதில் மறைந்தார்.

(கட்டுரை தரவுகள் சி.ஆர் பக்க்ஷி மற்றும் பிற ஆதாரங்களிலிருந்து எடுத்தாளப்பட்டது)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

Monday 21 March 2022

உண்மையான ‘புதிய இந்தியா’ படைக்க இன்னுயிர் கொடுத்த தியாகி, பகத் சிங்


            உண்மையான ‘புதிய இந்தியா’ படைக்க 

இன்னுயிர் கொடுத்த தியாகி, பகத் சிங்

--ஆர் எஸ் யாதவ்

    1931 மார்ச் 23, லாகூரின் மத்திய சிறையில் புரட்சியாளர்கள் – பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜ குரு– மூவரும் தூக்குமேடையில் ஏறி நின்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழங்கினர். அப்போது பகத்சிங் வயது வெறும் 24. இந்திய விடுதலை வேள்வியில் புரட்சியாளர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரும் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாகத் தந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகப்பெரிதும் மதித்துப் புகழ்ந்து கொண்டாடப்பட்டனர். அத்தகைய தியாகிகள் நிறைந்த வான்பரப்பில் பகத்சிங் தனித்த இடம் வகிக்கிறார். எது அவரைத் தனித்துவமாகக் காட்டுகிறது? அது, எதிர்காலம் பற்றிய அவரது பார்வை, அதுவே இந்திய மக்களால் அவரை மிகவும் நேசிக்கச் செய்தது. ‘ஷாகீத்-இ-ஆஸாம்’ (மாபெரும் தியாகி) என இந்தியமக்கள் அவரை அங்கீகரித்தனர்.

அவரது கண்ணோட்டம், எதிர்காலத் தொலைநோக்குப் பார்வைதான் என்ன?

            இந்தியச் சுதந்திரத்திற்காக மட்டுமே பகத்சிங் போராடவில்லை. அவரது போராட்டம் புதிய இந்தியா படைப்பதற்கானதும்கூட. இக்காலத்தில் பலமுறை ‘புதிய இந்தியா’ என்பதைப் பிரதமர் நரேந்திரமோடி முதலிய தலைவர்களிடமிருந்து நாம் கேட்கிறோம். மோடியின் ‘புதிய இந்தியா’ கருத்தாக்கம், நாட்டின் சொத்துக்களை உள்ளூர் மற்றும் அயல்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையளிப்பதைக் கனவு காண்கிறது. அவரது ‘புதிய இந்தியா’ மேலும் மேலும் முதலாளித்துவத்தை இந்தியாவில் வலிமைபெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘தேசியப் பணமாக்கும் பாதை’ (NMP, நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன்) திட்டமே மோடி பிராண்டு ‘புதிய இந்தியா’வின்  தொலைநோக்குப் பார்வை.

பகத்சிங்கின் புதிய இந்தியா கருத்தாக்கம், ‘முதலாளித்துவம், வர்க்க வேறுபாடுகள் மற்றும் சலுகைகளுக்கு சாவு மணி அடிக்கப்படும்’ எனக் கற்பனை செய்கிறது. இந்துஸ்தான் குடியரசு அஸோசியேஷன் (HRSA) என்ற புரட்சிகர அமைப்பின் ‘வெடிகுண்டு தத்துவம்’ (பிலாசபி ஆப் பாம்) என்ற வரலாற்று ஆவண வரைவறிக்கை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்ட பகத்சிங் கூறுகிறார்: “…(சமூக வாழ்வில்) அது புதிய ஒழுங்குமுறையை வழிநடத்தும். முதலாளித்துவம், வர்க்க வேறுபாடுகள் மற்றும் சலுகைகளுக்கு அது சாவு மணி அடிக்கும். கொடுமையான இந்திய மற்றும் அயல்நாட்டு சுரண்டல்வாதிகளின் அடிமை நுகத்தடியின்கீழ் இன்று பட்டினியில் உழலும் லட்சோப லட்ச மக்களுக்கு மகிழ்ச்சியையும் வளமையையும் கொண்டு வரும். புரட்சி, பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை நிறுவும், சமூக ஒட்டுண்ணிகளை அரசியல் அதிகார அரியணையிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கும்…” என்றெல்லாம் அந்த ஆவணம் பிரகடனம் செய்கிறது.

பகத்சிங், மார்க்சியம் மற்றும் கம்யூனிசத் தத்துவத்தை நம்பினார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்கள் அரசியல் லாபத்திற்காக பகத்சிங்கின் பெயரையும் புகழையும் நேர்மையற்ற விஷமத்தனமான முறையில் அபகரிக்க முயல்கிறது. ஆனால் அவரது அரசியல் கொள்கை பற்றி வாயை இறுக மூடிக்கொள்கிறது. பகத்சிங்கின் தேசபக்தி, துணிச்சல், வீரம் மற்றும் ஆகப்பெரிய தியாகம் இவற்றின்மீது போற்றிப் பாடல் இசைக்கும் அவர்கள், தந்திரமாக அவரது தத்துவங்களைத் தவிர்க்கிறார்கள். அவர்களால் அதைப் பேசவும் முடியாது, காரணம் –அவரது தத்துவத்தை அவர்கள் வெறுக்கிறார்கள்.

பகத்சிங் படங்களைப் போஸ்டர்களிலும், பெயரைத் தங்கள் உரைகள் முதலியவற்றிலும் அவர்கள் பயன்படுத்துவார்கள் எனில், அவரது தத்துவம் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம் முதலியவற்றில் தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். ‘முதலாளித்துவத்திற்குச் சாவு மணி அடிக்க வேண்டும்’ என பகத்சிங் விரும்பினார். ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அது தலைமையேற்கும் என்டிஏ அரசு மிகத் தீவிரமாக முதலாளித்துவத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த லட்சணத்தில் பிறகு எந்த உரிமையில் பகத்சிங் பெயரை அவர்கள் பயன்படுத்துகிறார்களோ!

விடுதலை பெற்ற இந்தியாவுக்கு சோஷலிச அமைப்பு முறையிலான சமுதாயத்தைப் பகத்சிங் கனவு கண்டார்; அவர் கண்ட விடுதலைபெற்ற அந்தச் சமுதாயத்தில் அநீதியும் சுரண்டலும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் கோலோச்சும். (அங்கே, ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு, குடிமை நீதி…அடிமைக்குத் தளை இல்லை, யாருமிப்போது அடிமை இல்லை’.)

 பகத்சிங்கின் மேன்மையான இந்த எண்ணத்திற்கு மாறாக, ஆர்எஸ்எஸ் தத்துவத்தின் அடிப்படையாக தங்குதடையற்ற முதலாளித்துவ வளர்ச்சி, வகுப்பு வாதம் மற்றும் இந்துத்துவா கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது; அதில் சிறுபான்மை முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்து மக்கள்தொகையின் பெரும் பகுதியாக விளங்கும் ‘சதுர்வர்ண’ (நால் வருண) கீழ்மேல் படிநிலையில் கீழ்நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக தலித்துகள் இழிவுபடுத்தப்பட்டு மிக அலட்சியமாக நடத்தப்படுவார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் எப்போதாவது தங்கள் லட்சியமாக ‘சோஷலிச’த்தை ஏற்றிருக்கிறார்களா? அவர்களது தலைமையிலான ஒன்றிய அரசு 2014 மே மாதத்திலிருந்து ஆட்சியில் இருக்கிறதே, பகத்சிங் தத்துவத்தின் மீது ஏதாவது மரியாதை இருந்தால், ‘சோஷலிச பாணியிலானச் சமுதாயத்தை’ இந்தியாவில் அமைக்க அவர்கள் செயல்படட்டும். அதற்கு அவர்கள் தயாரா? இல்லை என்பதே பதில். அவர்களால் முடியாது, சோஷலிசம் அவர்களுக்கு எட்டிக்காய். ஆனால் ஏதோ தங்களுக்கு பகத்சிங் மீதும் அவர் தத்துவத்தின் மீதும் பெரும்அன்பு இருப்பதாக நாட்டு மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.

பகத்சிங் சோஷலிசத்தைத் தனது லட்சியமாகப் பிரகடனம் செய்தவர். ஆர்எஸ்எஸ் /பாஜக-வோ சோஷலிசம் மற்றும் கம்யூனிசத் தத்துவத்திற்கு மிகப் பெரிய எதிரிகள். சமீபத்தில் பிரதமர் மோடி இடதுசாரி கோட்பாட்டை ‘மிக ஆபத்தானது’ என விமர்சித்திருந்தார். அப்படிக் கூறும்போது உண்மையில் அவர் பகத்சிங்கையும் அவருடைய கோட்பாட்டையும் இழிவு செய்கிறார் இல்லையா?

பகத்சிங், “செல்வத்தைச் சமமாகப் பகிர்ந்து கொடுத்தல், சாதியத் தடைகள் மற்றும் சமத்துவமின்மைகளை ஒழித்தல் மற்றும் வகுப்புவாதத்தையும் மதரீதியான சகிப்பின்மையை அழிப்பதையும்” வற்புறுத்துகிறார். ஆர்எஸ்எஸ்/ பாஜக என்ன செய்கின்றன? சாதியத் தடைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைகளைச் சட்டரீதியாக நியாயப்படுத்தும் ‘சதுர் வர்ண’ (பிராமணன், ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்ற நான்கு வருண) முறையைக் கட்டாயமாக அமல்படுத்துவதை வற்புறுத்தும் ‘மனுஸ்மிருதி’ கோட்பாடுகளை ஸ்தாபிக்க ஆர்எஸ்எஸ் சபதம் செய்கிறது. (இந்தியாவில் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி வாய் திறவாத ஆர்எஸ்எஸ், மிகச் சமீபத்தில் ‘இந்துக்களைப் பாதுகாப்பதில் வங்கதேச அரசு தோல்வி’ என்று குற்றம் சாட்டியது.)

‘வகுப்புவாதம் மற்றும் மத சகிப்பின்மை அழிப்பை’ பகத்சிங் வற்புறுத்துகிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் எப்போதும் வகுப்புவாதப் பிளவைத் தூண்டிவிட்டு வளர்க்கிறது. அது எப்போதும் மத ரீதியான சகிப்பின்மை நெருப்பை விசிறிவிடுவதன் காரணமாக அதன் அணிகள் சிறுபான்மையினரை, குறிப்பாக முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு ஆட்சிக்கு வந்தநாள் முதல், தலித்துகள் மீதும் கும்பல் தாக்குதல்களை நடத்துகின்றன.

தொழிலாளர் வர்க்கம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளைத் ‘தொழிற் சங்க தகராறு மசோதா’ மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வரையறுத்துக் குறைக்க முயற்சி செய்தனர். அப்போது பகத்சிங்கும் அவரது இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அஸோசியேஷன் அமைப்பும் அதற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்தினர். அவர்கள் அதனைக் காது கொடுத்து கேட்க மறுத்தபோது பகத்சிங் மற்றும் பி.கே. தத், அப்படிக் கேளா காதினர் கேட்கும்படி, அக்கறையற்று புறக்கணிப்போருக்கு தக்க நேரத்தில் எச்சரிக்கை’ விடுவதாய் ‘தேசியச் சட்டமன்ற’ மைய மண்டபத்தில் வெடி குண்டுகள் வீசினர்.

மோடி அரசு அதைவிட மிக மிக மோசமான திருத்தங்களைத் தொழிலாளர் சட்டங்களில் செய்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்தது; அதற்குப் பதில் அந்த இடத்தில் நான்கு தொழிலாளர் குறுங்குறிகளைக் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் விரோதக் குறுங்குறிகளைச் சட்டமாக நிறைவேற்றியதன் மூலம் மோடி அரசு தொழிலாளர் வர்க்கத்தின்பால் மேலும் கொடூரமானது என்பதை நிரூபித்துள்ளது. பகத்சிங் போல தொழிலாளர்களின் குரலைக் கேட்கச் செய்ய நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசத் தேவையில்லை, மாறாக தொழிலாளர்கள், 2022 மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் செய்ய, தோள் தட்டித் தயாரிப்புகளில் இறங்கி விட்டனர்!

தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமான மோடி அரசும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்கள் உதடுகளில் மாவீரன் பகத்சிங் பெயரை உச்சரிக்கக்கூட உரிமையற்றவர்கள்.

1925ல் இந்துஸ்தான் குடியரசு படை (பின்னர் அது இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அஸோசியேஷன் என மறு அவதாரம் எடுத்தது) ஒரு சிறு கையேடு ஒன்றை ‘தி ரெவலூஷனரி’ (‘புரட்சியாளன்’) என்ற தலைப்பில் வெளியிட்டது. அதில், இரயில்வே, பிற போக்குவரத்து சாதனங்கள், தகவல் தொடர்பு மற்றும் பெரிய ஆலைத் தொழில்களைத் தேசியமயமாக்குவது பற்றிய நடவடிக்கைகளுக்கு யோசனை தெரிவித்திருந்தது. மோடி அரசு அவற்றிற்கு நேர் எதிராகச் செயல் பட்டுவருகிறது. இந்தியா விடுதலை பெற்றதும் தேசியமயமாக்கப்பட்ட இரயில்வே துறையை மோடி அரசு தற்போது தனியார்மயமாக்குகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் பல பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றுவிட்டது. இப்போது அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பிற தேசியசொத்துக்களையும் ‘ஹோல் சேல்’ மொத்த விற்பனைக்கு ‘நேஷனல் மானிடைசேஷன் பைப்-லைன்’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்நடவடிக்கைகளின் விளைவு, ‘நாட்டை விற்பனை செய்வதே’. வரலாற்றுப் பக்கங்களின் கடைந்தெடுத்த துரோகிகள் ஜெய் சந்த் மற்றும் மீர் ஜாஃபர் போன்றோரும்கூட (இந்தத் துரோகத்தைப் பார்த்து) தங்கள் கல்லறைகளில் சங்கடத்தில் நெளிவார்கள்!

[சன்யோகிதாவைத் திருமணம் செய்ய இயலாது தன்னைத் தோற்கடித்த பிரிதிவி ராஜ் சௌகானை முகமதுகோரியை அழைத்து வந்து தரைன் போரில் பிரிதிவிராஜைக் கொன்று பழிதீர்த்தவன் ஜெய்சந்த் என்ற இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவன்.

மீர் ஜாஃபர், பிரிட்டிஷ்காரர்கள் ஆதரவுடன் சூழ்ச்சியாக ப்ளாசே போரில் சிராஜ்-உத்-துல்லாவை வீழ்த்தி வங்காளத்தின் முதல் நவாப் ஆனவர். பின்னர் அவர் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் முரண்பட அவரைத் தூக்கி எறிந்த கம்பெனியார் மிர் காசிமை நவாப் ஆக்கினர். --மொழிபெயர்ப்பாளர் இணைத்தது]

அவர்கள் தூக்கு மேடை ஏறுவதற்குச் சில நாட்கள் முன்பு பகத்சிங் சுக தேவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில், “நீங்களும் நானும் வாழ முடியாது போகலாம், ஆனால் நமது மக்கள் நிச்சயம் ஜீவித்து வாழ்வார்கள். மார்க்ஸிசம் மற்றும் கம்யூனிசம் வெல்வதற்காகவே தோன்றின” என்ற உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

பகத்சிங்கின் இந்தக் கனவை நிச்சயம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பகிர்ந்து கொள்ள முடியாது; அது மட்டுமல்ல, அந்தக் கனவுக்கு எதிராகவும் அவர்கள் செயல்படுவார்கள்.  அப்படி பகத்சிங்கின் கனவு மற்றும் தத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டே தாங்கள் அவனைப் பின்பற்றுவதாகவும் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். இது அவர்களின் கபட நாடகத்தின் உச்சம் என்பதைத் தவிர வேறில்லை.

 

பகத்சிங்கின் கொள்கைகளை இந்த நாட்டின் இளைஞர்கள் உண்மையாக உயர்த்திப் பிடிப்பார்கள். அவர்களது கனவை நிறைவேற்றப் பாடுபடுவார்கள், 
“இன்குலாப் ஜிந்தாபாத்”


--நன்றி: நியூஏஜ் (மார்ச் 20 –26)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்