Wednesday 2 August 2023

ம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 80 --நாம்தேயோ ஷென்மாரே

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –80

                                              

      
நாம்தேயோ ஷென்மாரே --மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் சிபிஐ நிறுவனர்களில் ஒருவர்

-- அனில் ரஜீம்வாலே

            நாம்தேயோ இராமச்சந்திர ஷென்மாரே (Namdeo Ramchandra Shenmare) மகாராஷ்டிரா, யோட்மால் மாவட்ட, தார்வா தாலுக்காவின் வாட்ஃபாலி கிராமத்தில் 1921 ஏப்ரல் 21ல் பிறந்தார். தந்தை இராமச்சந்திர நாம்தேயோ, தாயார் நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட பார்வதிபாய். இராமச்சந்திரா ஓர் ஏழை விவசாயி, குடும்பம் ஏறத்தாழ முழு ஏழ்மையில் உழன்றது.

            பல நேரம் அவர்கள் கூலித் தொழிலாளியாக உழைக்க வேண்டியிருந்தது. அவர் தன் மகனைப் படிக்க வைக்க விரும்பினாலும் மோசமான பொருளாதார நிலை காரணமாக நிறைவேற்ற முடியவில்லை. நாம்தேயோ தொடக்கக் கல்வியைக் கிராமப் பள்ளியில் பெற்ற பிறகு, உயர்நிலைப் பள்ளிக்காகத் தனது மாமாவுடன் தங்கிப் படிக்க பத்நேராவுக்குத் அனுப்பப்பட்டார். நாம்தேயோ புத்திசாலியான மாணவன், ஆனால் ஏழையான அவரது தந்தையால் மெட்ரிக் தேர்வுகளுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. வெறும் அந்த ஐந்து ரூபாய்க்காக நாம்தேயோ மெட்ரிக் தேர்வு எழுத முடியாமல் போயிற்று. குடும்பத்தின் கடுமையான ஏழ்மையின் காரணமாக இளம் வயதிலேயே கிடைத்த சிறுசிறு வேலைகளைச் செய்தார். ஆனால் தன் முயற்சிகளைக் கைவிடாது தனது படிப்பைத் தொடர முடிவு செய்தார்.

            தேசிய இயக்கத்தின் அறைகூவலை ஏற்று தங்கள் வேலைகளையும் படிப்பையும் பலரும் உதறி எறிந்ததுபோல அவரும் அரசு வேலையை ஏற்கவில்லை. மகாராஷ்டிரா, பத்நேராவில் டெக்ஸ்டைல் ஆலை ஒன்றில் நெசவாளராகப் பணியில் சேர்ந்தார். விரைவில் தொழிலாளர் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஏஐடியுசி-யுடன் தொடர்பு கொண்டார். நாம்தேயோ எப்போதும் தொழிலாளர் நலனுக்காகப் போராடும் இயல்பு உடையவராக, அவர்களின் பிரச்சனைகளின் மீது கண் வைத்திருந்தார். பொதுமக்களுக்காக எப்போதும் பரிவுணர்வு கொண்டிருந்தார். பத்நேரா ஆலையில் அவருடைய இரண்டு மாமா உட்பட சுமார் 500 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களது பிரச்சனைகளை நாம்தேயோ எடுத்துக் கொண்டார்.

            பத்நேராவில் தீவான்ஜி என்றொரு தோழர் இருந்தார். அவர்தான் நாம்தேயோவைத் தொழிலாளர் இயக்கத்திற்குள் கொண்டு வந்தார். பின்னர் மத்திய இந்தியாவின் புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவரும் கம்யூனிஸ்ட் தலைவருமான சுதம் தேஷ்முக் அவர் மீது பெரும் செல்வாக்கு செலுத்தினார். விரைவில் ஷென்மாரே இரயில்வே தொழிலாளர்கள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு அவர்களது நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தார். பத்நேரா, பூசாவல் இடையே கட்சிக் கிளை அமைக்கப்பட்டு அதன் செயலாளராகவும் தொழிற்சங்கச் செயலாளர் ஆகவும் செயல்பட்டார். கட்சிக் கிளையிலிருந்து பின்னர் விதர்பா கட்சிச் செயலாளரானார்.

            நாம்தேயோ திருமணம் லீலாவுடன் நடந்தது. எளிய, ஏழையான அப்பெண் 4வது வரை மட்டுமே படித்திருந்தாலும், நாம்தேயோ கூறும்போது, தனது அரசியல் பணிகளுக்கு அவரே முக்கியமாக ஊக்கமளித்தார் என்றார். கடுமையான ஏழ்மையில் வாழ்ந்தபோதும் லீலா எப்போதும் அவருக்குப் பக்கபலமாக இருந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள், மூவருமே அவரவர் துறைகளில் அனைத்துத் திறமைகளையும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது இரண்டாவது மகன் விஜய் ஏஐடியுசி மற்றும்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார். இப்போது விஜய் ஷென்மாரே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குஜராத் மாநிலச் செயலாளர்.

1942 இயக்கத்தில்

    1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது நாம்தேயோ 21 வயது இளைஞன். காந்திஜி அறைகூவலை ஏற்று தனது வேலையைத் துறந்து இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவரது நண்பன் லக்ஷ்மண் ராவ் டெக்ஸ்டைல் ஆலையில் வேலைக்காக அவரைச் சூரத்துக்கு அழைக்க, நாம்தேயோ சூரத் சென்றார். அங்கே டெக்ஸ்டைல் ஆலையில் சுரண்டல் தீவிரமாகவும் கடுமையாகவும் நிலவியது. அத்தகைய அடிமைத் தளைகளிலிருந்து தன்னை மட்டுமின்றி மற்றவர்களையும் விடுவிக்க வழிமுறைகளை நாம்தேயோ எண்ணினர்.

சூரத்தில், தொழிற்சங்க இயக்கத்தில்

            அப்பகுதியின் இரண்டு சிபிஐ தலைவர்களால் ஆழமான செல்வாக்கிற்கு ஆட்பட்டார் நாம்தேயோ. அவர் பிரபல மக்கள் தலைவரான ஜஸ்வந்த் சௌகான் உடன் தீவிரமாகப் பணியாற்றினார். வசந்த் மேகன்தாலே அறிவார்ந்த வகைப்பட்ட தலைவர். நாம்தேயோ அவர்கள் இருவரிடமிருந்தும் கற்றுக் கொண்டார். அவர் மீது செல்வாக்கு செலுத்திய மற்றவர்கள் தனாஜி மகார்த்தே, நானுபாய் தேசாய் மற்றும் அவரது மனைவி சீதாபென். அவர்கள் அனைவரும் சூரத்தில் ஒன்றாகக் கம்யூன் வாழ்க்கை வாழ்ந்தனர். நாம்தேயோ அவர்களுடன் இணைந்தார். அவர் அற்ப ஊதியத்தில் டெக்ஸ்டைல் மில்லில் ஒரு நெசவாளியாகப் பணியாற்றத் தொடங்கினார்.

      கம்யூன் கூட்டு வாழ்க்கையில் இணைந்த பிறகு, தனது ஊதியத்தை ஒப்படைக்கத் தொடங்கினார். கம்யூன் வேலைகளில் உதவியவர் ஓர் ஆட்டினை வாங்கி வந்தார், அது பெரிய விஷயம்.  பொதுவாக நடத்தப்பட்ட கம்யூனில் அவர்களும் இணைந்து சமைப்பதே வழக்கம். லீலாவும் அவருடன் அங்கே வசித்தார். அலுவலகமும் கம்யூனும் முதல் மாடியில், நொறுங்கும் நிலையில் மாடிப்படி. கட்டடத்தில் தண்ணீர் வசதி இல்லை என்பதால் லீலா பக்கெட்டுகளில் நிரப்பி எடுத்து வந்து சமைப்பது வழக்கம். அதே நேரத்தில் அவர் படிப்பையும் தொடர்ந்து மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு மாதம் ரூ300 சம்பளத்தில் முனிசிபாலிட்டியில் எழுத்தர் வேலை கிடைத்தது. அது நாம்தேயோ குடும்பத்திற்கு ஓரளவு ஆறுதலாயிற்று. அதன் பிறகுதான் அவர்களுக்கு இரண்டு வேளை முறையான உணவு கிடைத்தது. அப்போது அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.

            நாம்தேயோவுக்கு டெக்ஸ்டைல் தொழிலாளர்களைத் திரட்டிச் சங்கங்கள் அமைக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. விரைவில் அவர் தனது வேலையை இழந்தார். வேலை இழப்பு என்பது நாம்தேயோவுக்கு வழக்கமான பழகிய ஒன்று. எப்போதெல்லாம் வேலையை இழக்கிறாரோ அப்போது அவரது நண்பர் காந்திலால் தூத்பாக்வாலா தங்க இடம் உட்பட உதவி செய்வார்.

            நாம்தேயோ ஷென்மாரே சூரத்தில் முதலாவது சூத்ராய் (குஜராத்தி மொழியில் முனிசிபாலிடி) மஸ்தூர் யூனியன் என்பதை ஏஐடியுசி அமைப்பின் கீழ் கட்டியமைத்தார். அதுபோலவே அங்கே பணியாற்றி முனிசிபல், சினிமா, ஹோட்டல், டெக்ஸ்டைல், மருத்துவமனை, சிமெண்ட் ஆலை மற்றும் ரிக்க்ஷா இழுப்போர் முதலான தொழிலாளர் சங்கங்களை அமைத்தார்.  

விடுதலைக்குப் பிந்தைய காலம்

        தேச விடுதலை பெற்ற சிறிய காலத்திற்குப் பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ‘பிடிஆர் பாதை’ செல்வாக்கிற்கு வந்தது. பிசி ஜோஷி நீக்கப்பட்டு பிடி ரணதிவே பொதுச் செயலாளர் ஆனார். கட்சி சாகசப் பாதையைப் பின்பற்றியது. அது விதர்பா மற்றும் குஜராத் பகுதிகளிலும் கட்சி நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்துக் கட்சியை அழித்தது. ஷென்மாரேவும் பெரும் இன்னலுக்கு ஆளானார். பிடிஆர் தலைமையின் கீழ் 1949 மார்ச் 9ல் இரயில்வே வேலைநிறுத்தத்திற்கு விடுக்கப்பட்ட அறைகூவலைக் கட்சி உத்தரவாக ஏற்று அமலாக்க ஷென்மாரே தீவிரமாக முயற்சி செய்தும் பலன் ஏதும் இல்லை. அவர் அப்போது அகில இந்திய இரயில்வே-மென் சம்மேளனத்தில் பணியாற்றி வந்தார். கைது செய்யப்பட்ட அவர் அமராவதி, ஜபல்பூர், சாகர் முதலான பல்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டார். 1951ல் விடுதலையான பிறகு, அவரிடம் மெட்ரிக் தேர்வு பெற்ற சான்றிதழ் இல்லாத போதும், உடல் ஊனமுற்றவர்களுக்கான பள்ளியில் ஆசிரியராக அக்கோலாவில் பணியாற்றினார்.

       நாம்தேயோ 1952ல் கட்சி முழுநேர ஊழியர் ஆனார். கட்சி அலுவலகத்திற்கு அருகே இருந்த சிறிய அறையில் அவர் தங்குவது வழக்கம். மேலும் அவர் கைது செய்யப்பட்டு பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது அவருடன் ஏபி பரதனும் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

        1956 வாக்கில் முனிசிபல் தொழிலாளர்கள் சங்கம் சக்திவாய்ந்த அமைப்பாயிற்று. அந்தச் சங்கத்திலும் கட்சி அலுவலகத்திலும் அவர் தொடர்ந்து பணியாற்றியபடி இருந்தார்; அதுவும், அவரது மகன்களுக்கு வேலை கிடைத்துக் குடும்பம் வேறொரு இடத்திற்கு மாறிச் சென்ற பிறகும் அவர் தொடர்ந்து பணியாற்றியபடி இருந்தார்

ஷென்மாரே சக்கரை ஆலைத் தொழிலாளர்கள் மத்தியிலும் தீவிரமாகச் செயல்பட்டார். 1979ல் அவர் அகில இந்திய சக்கரைத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போலீஸ் பட்டேல்ஸ் அமைப்பு

       ஷென்மாரேவின் தனித்துவமான அனுபவங்கள் மற்றும் பங்களிப்புகளில் ஒன்று ‘போலீஸ் பட்டேல்களை (சௌக்கிதார், காவல் அதிகாரி) ஒவ்வொரு கிராமத்திலும் திரட்டி அமைத்தது, அவர்கள் பிரிட்டிஷ் நாட்களிலிருந்து மாதம் ரூ35 மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்தனர். பிரிட்டிஷ் நிர்வாகம்தான் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற இடங்களில் போலீஸ் அமைப்பைக் கொண்டு வந்தது. ஷென்மாரே அவர்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றி அவர்களைச் சங்கங்களாகத் திரட்டி அமைத்தார். பெரும் எண்ணிக்கையிலான கிராமங்களில் சுற்றித் திரிந்து அவர்களின் தனித்துவமான சங்கத்தை அவர் கட்டியமைத்தார். அவை குஜராத்தில் 18ஆயிரம் கிராமங்களில் பரவி இருந்தது. முன்பு அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை. அவர் போராடி அவர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து கிடைக்கச் செய்தார். குஜராத் உயர் நீதிமன்றம் உள்பட நீண்ட சட்டப் போராட்டங்களை ஷென்மாரே நடத்தி அவர்களுக்கு நானூறு கோடிக்கு அதிகமாக நிவாரணத் தொகையைப் பெற்றுத் தந்தார். இந்த வழியில் குஜராத்தின் கிராமங்களில் செங்கொடி பறப்பதைக் காண முடிந்தது, ஷென்மாரேவின் கனவு அது. பின்னர் குஜராத் அரசு போலீஸ் பட்டேல்கள் முறையை ஒழித்தது. அது செங்கொடியை நீக்குவது நோக்கிய ஒரு நடவடிக்கை, ஆனால் அவர்கள் அதில் தோல்வியே அடைந்தனர்.

மகாகுஜராத் இயக்கத்தில்

    1950கள்--60களில் நடைபெற்ற மாபெரும் மகாகுஜராத் இயக்கத்தில் நாம்தேயோ ஷென்மாரே தீவிரமாகப் பங்கேற்றார். அந்த இயக்கம் மிகப் பரவலாக 1956 முதல் 1960 மே முதல் நாள், பெருந்திரள் மக்கள் அழுத்தத்தின் காரணமாக, பம்பாய் மண்டலத்தில் (பிராவின்ஸ்) இருந்து குஜராத் தனியாகப் பிரிக்கப்படும் வரை நடந்தது. இது மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடந்தது.

       தனி குஜராத் மாநிலம் கோரி பிரம்மாண்டமான இயக்கம் 1956 ஆகஸ்ட் 8ல் தொடங்கியது. இதனால் துப்பாக்கிச் சூடும் பலர் மரணமடையவும் நேரிட்டது. இயக்கம் மாநிலம் முழுமையும் பரவியது. பின்னர் இருமொழி பம்பாய் மாநிலம் அமைக்கும் முன்மொழிவுக்கு எதிராகப் பரவலாக இயக்கம் வெடித்தெழுந்தது. மக்கள் இதனை ஏற்கத் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல, அதைச் சகிக்காமல் தனி குஜராத் மாநிலக் கோரிக்கையை எழுப்பினர்.

ஷென்மாரே இப்போராட்டத்தில் தீவிரமாக முன்னணிப் பொறுப்பையும் வகித்தார். மதலால், பவிலால், ரங்கூனி போன்ற தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த இயக்கத்தின் புகழார்ந்த முன்னணித் தலைவரான இந்துலால் யாக்னிக் உடனும் தீவிரத் தொடர்பு கொண்டார். இந்துலால் யாக்னிக் ஓர் இடதுசாரித் தலைவர், சிபிஐ உடன் மிக நெருக்கமாக இருந்தவர். விவசாயிகள் தொழிலாளர்கள் இயக்கம் தொடர்பாக அவர் சூரத் வருவது வழக்கம். அப்போது கட்சி அலுவலகத்திற்கு வழக்கமாக வருபவர் கட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள தொழிற்சாலைகள் உட்பட தொழிலாளர்கள் மத்தியில் வாயிற் கூட்டங்களில் பேசுவார்.

மகாகுஜராத் இயக்க நிகழ்வுகளின்போது கைது செய்யப்பட்ட ஷென்மாரே அகமதாபாத் மாவட்டச் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருடன் அவரது மனைவி லீலாவதியும் ஆறுமாதக் குழந்தையான அவர்களது மகன் சசிகாந்த்தும் சிறையில் இருந்தனர்.

1962 சீன ஆக்கிரமிப்பின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது எண்ணற்ற தோழர்கள் மீது பொய்யாக வழக்குகள் தவறாகப் புனையப்பட்டன. அவர் சிறையில் ஆறு மாதங்கள் இருந்தார்.

கட்சித் தலைவராக

பாலச்சந்திர திரிவேதிக்குப் பிறகு நாம்தேயோ ஷென்மாரே மாநிலக் கட்சி செயலாளராகி அந்தப் பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்தார். அவரது பெரும் முயற்சிகளில் ஒன்று போலீஸ் பட்டேல்களுக்காகப் போராடியது. நரேந்திர மோடி குஜராத் மாநில முதல் அமைச்சராகிய ஒரு வாரத்தில் ஷென்மாரே ஒரு தூதுக் குழுவினரோடு அவரைச் சந்தித்தார். அவர் சந்தித்த முதல் தூதுக் குழுவே ‘செங் கொடி’யிலிருந்து என்பதில் மோடிக்குப் பெரும் வியப்பு!

பத்திரிக்கைகள்

       நாம்தேயோ ஷென்மாரே பல்வேறு இதழ்கள், செய்திப் பத்திரிக்கைகள் நடத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவை ‘பிரஜா ஆவாஸ்’ (குடிமக்கள் குரல்), ‘ஆவாஸ் மற்றும் இருவார இதழான ‘ஜனதா கா முக்திசங்கார்ஷ்’ (விடுதலை போராட்டம்) என்ற இதழ் அதற்கு முன் ‘சங்கார்ஷ்’ என்று வந்தது.

            மேலும் அவர் புத்தங்கள், கட்டுரைகள் மற்றும் தனது வெளிநாட்டு பயணங்கள் குறித்த சிற்றேடுகளையும் எழுதியுள்ளார். அவர் முதலில் பயணம் சென்ற வெளிநாடு மங்கோலியா மற்றும் அதன் பின் கே எல் மகேந்திராவுடன் 1967ல் சோவியத் யூனியனுக்கும் சென்றார். பின் ஹரியானா கட்சிச் செயலாளரான மக்கான் சிங்குடன் பல்கேரியாவுக்கும், டி ராஜாவுடன் சீனாவுக்கும் 1994ல் சென்றார்.

கட்சிப் பொறுப்புகள்

    நாம்தேயோ ஷென்மாரே நீண்ட காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சூரத் கிளைக்குச் செயலாளராக இருந்தார். பின்னர் கட்சியின் மாநிலக் குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையின் கீழ் முக்கியமான செல்வாக்குமிக்க சக்தியாக கட்சி வளர்ந்தது. பிறகு மாநிலக் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்டார். சிபிஐ தேசியக் குழு உறுப்பினராகவும்கூட அவர் இருந்துள்ளார்.

தேர்தல்கள்பால் அணுகுமுறை

            நாம்தேயோ ஷென்மாரே தேர்தல்களைப் பொதுவான தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழி என்றே பார்த்தார். தேர்தல்களை வர்க்கப் போராட்டத்தின் ஒரு வடிவமாக அவர் நடத்தினார். தேர்தல் நடவடிக்கைகள் மூலம் கட்சி அணியினரையும் ஆதரவாளர்களையும் வளர்த்தெடுப்பது அவரது வழக்கம். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு அவர் வேட்பாளர்களை நிறுத்த உதவினார். ஆதிவாசித் தலைவர் ஜீவன் பாய் சௌத்திரி, பீர்சிங் பிஷ்ராம் பட்டேல், சோனா பேகன் பட்டேல், போசலியா காமிட், ரேவா பேகன் பட்டேல் மற்றும் பலரை அவர் வேட்பாளர்களாகக் கண்டெடுத்தார். மேலும் கிராமப் பஞ்சாயத்துகள், தாலுக்கா கவுன்சில், ஜில்லா கவுன்சில் முதலானவற்றிற்கு எண்ணிறைந்த வேட்பாளர்களையும்கூட அவர் பெற்றார்.

‘நகரிக் சம்மான்’

       சமூக நலன்களுக்காக ஆற்றிய சேவைக்காக 1991ல் நாம்தேயோ ஷென்மாரே ‘நகரிக் சம்மான்’ (குடிமக்களின் மரியாதை) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

        அவர் தனது இறுதிப் பேட்டியை அனில் ரஜீம்வாலே மற்றும் கிருஷ்ண ஜாவுக்கு அளித்தார். அந்தப் பேட்டி ( ஏஐடியுசியின், என் எம் ஜோஷி தொழிலாளர் ஆய்வு மற்றும் கல்வி மையம்; மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தால் 1974ல் நிறுவப்பட்ட ‘விவி கிரி தொழிலாளர் தேசிய நிறுவனம்’, VVGNLI, என்ற சுயேச்சை அமைப்புக்காக) வாய்மொழி வரலாற்று திட்டம் (Oral History Program) என்பதன் கீழ் எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டி அளித்த இரண்டு வாரத்தில் 2004 அக்டோபர் 11ம் நாள் ஷென்மாரே மறைந்தார்.

            வாழ்க தோழர் நாம்தேயோ ஷென்மாரே புகழ்!

      [இந்தக் கட்டுரையைக் கட்டுரையாளர் (அனில் ரஜீம்வாலே) எழுதுவதற்கான மதிப்புமிக்கத் தகவல் உள்ளீடு தரவுகளை அளித்ததற்காக நாம்தேயோ ஷென்மாரேயின் மகன், தோழர் விஜய் ஷென்மாரே அவர்களுக்கு நன்றி கடப்பாடு உடையேன். விஜய் ஷென்மாரே சிபிஐ குஜராத் மாநிலக் குழுவின் செயலாளர் ஆவார்.]

--நன்றி : நியூஏஜ் (2023, பிப்.12 –18)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்