Sunday 28 February 2021

தனியார்மயத்தின் விளைவு சமோலி பேரழிவு

 

        

தனியார்மயத்தின் விளைவு

சமோலி பேரழிவு


--டாக்டர் சோமு      

       இமயமலைப் பகுதி நந்தாதேவி பனிச்சிகரத்தின் ஒருபகுதி உடைந்ததால் உத்தர்காண்ட் மாநில சமோலி மாவட்டத்தைப் பேரழிவு தாக்கியது. கங்கை பேராறின் தௌலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலகநந்தா துணை ஆறுகளின் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் உட்பட பலரும் பலியாயினர்; சுரங்கத்தில் பாய்ந்து வந்த வெள்ளநீரில் சிக்கிய இன்னும் பலரையும் காணவில்லை. அங்கே தேசிய தர்மல் பவர் கார்ப்ரேஷன் செயல்படுத்திய தபோவன்–விஷ்ணுகாட் நீர்மின் திட்டம் மற்றும் ரிஷிகங்கா நீர்மின் திட்டம் இரண்டும் வெகுவாக அழிவுக்கு உள்ளானதுடன், சுற்றியிருந்த கிராமங்களையும் சேதப்படுத்தியது.

          சமோலி பேரழிவுத் துயரம், 2013 ஜூனில் சோராபாரி பனிச்சிகரம் உடைப்பால் மந்தாக்கினி நதியில் ஏற்பட்டப் பெருவெள்ளம் கேதார்நாத்தில் 5000 மேற்பட்ட மக்களைப் பலி வாங்கிய துயரத்தை நினைவுபடுத்துகிறது. இந்தத் துயர சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக, இமயமலைப் பகுதியின் எளிதில் பாதிக்கக்கூடிய தன்மையைக் கணக்கில் கொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்ற வகையில் அமைந்த, அப்பகுதியை மேம்படுத்துவதற்கான திட்டம்தான் அவசியமான தேவை என்பதை வலியுறுத்துகிறது. மிகவும் நொய்மையான வகையில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இமயமலை இயற்கை சுற்றுச்சூழலுக்குப் பொருளாதார வளர்ச்சி முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வளர்ச்சி, கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல, சுற்றுச்சூழலை விலையாகக் கொடுத்து வரக்கூடாது. அப்பகுதியின் முக்கியமான செல்வாதாரங்களை அழித்துவிடாது நிலையாகப் பேணுகின்ற வகையில் பயன்படுத்துவதாகவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகவும்  அமைந்த, வித்தியாசமான வளர்ச்சித் திட்டங்கள் தேவைப்படுகிறது.

எளிதில் உடையக்கூடிய சுற்றுச்சூழல்

          இமயமலைத் தொடர்ச்சி சுமார் 7,41,706 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குப் பரந்து விரிந்துள்ளது. சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா போன்ற நதிகளின் தாய் வீடு. அந்நதிகள் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களா தேஷ் தேசங்களின் வழியாகப் பாய்ந்தோடுகின்றன. பாரதி புகழ்ந்துரைத்த ‘கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம்’ விளையும் வடஇந்தியாவில், கங்கை பள்ளத்தாக்கு 1,56,300 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி வழங்குகிறது. பனிச்சிகரங்கள் மற்றும் மலையிலிருந்து ஓடிவரும் நீர்பெருக்கு, புனல்மின்திட்டங்களின் மின்சார உற்பத்திக்குச் செல்வம்மிக்க ஆதாரமாகும். ஆக்கமும் அழிவும் அதனால் என்பதுபோல, இந்தச் செல்வாதாரம் வழங்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அழிவுகள் அடிப்படையிலும் விவாதிக்கப்பட வேண்டும்; அந்த அழிவு, சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நதிகளின் நீரோட்ட வேகத்தைப் பயன்படுத்தும் திட்டங்களும், அணைக்கட்டுகளைக் கட்டி நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் திட்டங்களும் தற்போது அளவுக்கதிகமாகக் கட்டுவதற்கான ஓட்டம் வெறிபிடித்த வேகத்தில் நடைபெறுகிறது. இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா நான்கு நாடுகளிலும் இந்துகுஷ் இமயமலைப் பகுதியில் 334 கிகா வாட்ஸ் திறனுள்ள நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. (ஒரு கிகா வாட்ஸ் என்பது 109 வாட்ஸ்; அதாவது பத்தைப் பத்தால் ஒன்பது முறை பெருக்குவதால் கிடைக்கும் அளவு). இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் நீர்மின் உற்பத்தித் திட்டங்களுக்கான அனுமதியைத் தனியார் கம்பெனிகளுக்குத் தலைபோகும் வேகத்தில் வழங்குகின்றன. உத்தர்காண்ட் மாநிலத்தின் கங்கைப் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 10ஆயிரம் மெகா வாட்ஸ் மின் உற்பத்திக்கான சுமார் 70க்கும் மேற்பட்டத் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

          மின் உற்பத்தி, மாநில வருவாய் பெருக்கத்திற்கான மிகப்பெரிய செல்வாதாரம்; ஆனால் அது முழுமையாக இயற்கை சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி, மக்கள் உயிர் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் அழித்துத்தானா திரட்டுவது? உலகின் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் பொருத்தமான மிகப்பெரிய தொட்டிலாக இருப்பது இமயமலைப் பகுதி. அப்படிக் கூறுவதைவிட, பின்வரும் புள்ளிவிபரங்களை அறிந்தால் அதன் பெருமையை உணர முடியும். இமயமலைப் பகுதியில் பத்தாயிரம் தாவர வகைகள், 300 வகையான விலங்கினங்கள், 977 பறவையினங்கள் மற்றும் 269 மீன்வகைகள் தம்இடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தன. இவற்றில் அளவுக்கதிகமான மனிதத் தலையீடு, காடுகளை அழித்தல், நதிகளைத் திசைமாற்றித் திருப்புதல் காரணமாக 31.6 சதவீதத் தாவரங்கள், 12% விலங்குகள், தூயநீரில் வசிக்கும் மீன்கள் 33% மற்றும் 15 சதவீதப் பறவையினங்கள் ஏற்கனவே இந்தப் புவியிலிருந்து மறைந்து விட்டன.

          பருவநிலை மாற்ற அபாயம் அதிகரித்த போதிலும், நதிகள் போன்ற இயற்கைச் செல்வாதாரங்களைப் பெருமளவில் தனியார்மயப்படுத்த அவசரம் காட்டப்படுகிறது; இந்தப் போக்கின் விளைவு, புதிய தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒருபகுதியாக 2000 ஆண்டிலிருந்து வெறித்தனமான நீர்மின் உற்பத்தி அதிகரிக்கும் திட்டங்களில் முடிந்தது; அதுவும் சாதாரணமாக இல்லை, அரசின் நிதி ஆதரவு மற்றும் வரிக்குறைப்புச் சலுகைகளோடு தனியார் முதலீட்டாளர்களுக்குத் தேசத்தின் பொதுவான நதிகள் கான்டிராக்டுக்குத் தாரை வார்க்கப்பட்டன. புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கத்தில் நதிகள் போன்ற சமூகத்தின் இயற்கை செல்வாதாரங்கள் ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டு, மிக மலிவான விலையில் அரசு ஆதரவோடு செயல்படும் முதலாளிகளுக்குத் தானமாகத் தரப்படுகின்றன. தனியார் முதலாளிகள் அதனைப் பயன்படுத்தி நீர்மின் திட்டக் கட்டுமானங்களை மேற்கொள்வார்களாம். இந்தியாவின் 2008 நீர்மின் திட்டக் கொள்கைகள்படி அத்திட்டங்களை மேம்படுத்தும் தனியார் கம்பெனிகளுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதுடன், (நட்டம் போன்ற) எந்தவித ஆபத்தும் சூழாமல் அவர்களது லாபத்தை அதிகரிக்க உத்தரவாதம் வழங்கப்படுகிறது. 

          கடந்த பத்தாண்டுகளில் உத்தர்காண்ட் அரசு 12க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டக் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்கியதில் பெரும்பான்மையும் தனியார் கம்பெனிகளுக்கானது. மேலும் அரசே 17 பெரிய நீர்மின்திட்டங்களைச் செயல்படுத்துகிறது; அதில் ஒன்றுதான் பாகீரதி மீது கட்டப்பட்ட இந்தியாவின் மிக உயரமானதும் உலகின் பத்தாவதுமான டெஹ்ரி அணைக்கட்டும், (புவிஈர்ப்பு விசை பயன்பாட்டில் கட்டப்பட்ட) மனேரிபாலி அணைக்கட்டின் மூலம் (முதலாவது மற்றும் இரண்டாவது  நிலைகளின்)  நீர்மின் திட்டம் செயல்படுகிறது. மேலும் சில்லா நீர்மின் திட்டம் மற்றும் சிப்ரோ நீர்மின் திட்டம் செயல்படுகின்றன. அருகே உள்ள இமாச்சல் பிரதேச மாநிலம் லாஹவுல் மாவட்டத்தில் அரசு 5 மாபெரும் திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளது. (லாஹவுல் என்பது திபேத்திய வார்த்தை, தெற்கு தேசம் அல்லது கடவுளின் தேசம் என்று பொருள். லாஹவுல் மாவட்டம், ஸ்பிட்டி என்ற முந்தைய தனிமாவட்டத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டது). லாஹவுல் நூற்றுக்கும் மேற்பட்டப் பனிச்சிகரங்களின் தாயகமாகும்; அவற்றில் இமாசலத்தின் மிகப்பெரிய பனிச்சிகரமான பதா சிக்ரி அமைந்துள்ளது. அங்கேதான் 5 மகாபெரிய திட்டங்களைச் ‘சட்லஜ் ஜல் வித்யூத் நிகம் லிட். என்ற SJVNL நிறுனமும் தேசிய தர்மல் பவர் கார்பரேஷனும் செயல்படுத்த உள்ளன. செனாப்  (ஆற்றுப்) பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 16 மகாபெரிய நீர்மின் திட்டங்களுக்கு ஆலோசிக்கப்படுகிறது; விரைவில் பாதிக்கப்படக்கூடிய மிக நொய்மையான இயற்கைச் சுற்றுச்சூழலை உடைய இப்பகுதிக்கு இந்தத் திட்டங்கள் லாஹவுல் மற்றும் பாங்கிப் பள்ளத்தாக்குகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இணைந்த இத்திட்டங்கள் ஐயாயிரம் மெகா வாட்ஸ் மின்சார உற்பத்தித் திறன் உடையன.

சிப்கோ இயக்கமும் காடுகளின் உரிமைகளும்

         கிராம மக்கள் அமைதியான முறையில் நடத்திய சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமே சிப்கோ இயக்கம் அல்லது போராட்டமாகும். முந்தைய ஒன்றுபட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தின் (தற்போது உத்தர்காண்டில் உள்ளது) டெஹ்ராடூன் மாவட்டத்தில் 1973ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இந்தியாவின்

இமாலயப் பிராந்தியம் முழுவதும் விரைவில் பரவியது. பொருளாதார வணிகப்பயன்பாட்டிற்காக வனப்பகுதிகளை வளைத்துப் போட்டு, காடுகள் அழிப்பதை எதிர்த்து, (அப்படிப் பெருவணிகர்கள் மரங்களை வெட்ட வரும்போது) பெண்கள் மரத்தைக் கட்டி அணைத்து, வனங்களை அழிப்பதற்கு எதிராக அமைதியான முறையில் மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டினார்கள். குறிப்பாக, டெஹ்ரி அணைக்கட்டு கட்டப்படுதற்கு எதிராக 1980கள் முழுவதும் பல போராட்டங்கள் நடந்தன. இத்தகைய மக்கள் போராட்டங்கள் மற்றும் சிப்கோ இயக்கத்தால் ‘வனப் பாதுகாப்புச் சட்ட’த்தை (1980) கொண்டு வரவும், காடுகளின் பாதுகாவலர்களாக மலைசாதி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட ‘2006 காடுகள் உரிமைச் சட்ட’மும் நிறைவேற்றப்பட வழிவகுத்தன.

நிபுணர்களின் கருத்துகளை நிராகரிக்கும் அரசு

          ஆறுகளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் சுரண்டலும் நீர்மின் திட்டங்களுக்கான மனம்போன போக்கில் கட்டுப்பாடற்று அணைகளைக் கட்டுவதுமே சிமோலி அழிவுக்கு மிகப்பெரிய பொறுப்பு என விஞ்ஞானிகளும் நிபுணர்களும் உறுதியாக நம்புகிறார்கள். மிகநொய்மையான விரைவில் பாதிக்கப்படக்கூடிய இயற்கைச் சுற்றுச்சூழலை உடைய இமாயலப் பகுதியில் கட்டப்படும் நீர்மின் திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சித்தது, சார் தம் கமிட்டி மட்டுமே அல்ல. 2013 கேதார்நாத் வெள்ளத்தால் ஏற்பட்டப் பேரழிவு தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவும், இமாலத்தின் மேலடுக்குகளில் இனியும் எந்தவொரு நீர்மின் திட்டமும் கட்டப்படக் கூடாது எனக் கடுமையாக அதிகாரிகளை எச்சரித்தது. கேதார்நாத் நிபுணர் குழுவும்கூட பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அளவுக்கதிகமாகச் சுரண்டுவதை எதிர்த்து உத்தர்காண்டில் திட்டமிடப்படும் நீர்மின்திட்டங்களை மீண்டும் ஆய்வு செய்து மறுமதிப்பீடுகளைச் செய்யுமாறு வலியுறுத்தியது. 2000மீட்டர் உயரத்தில் நீர்மின் திட்டங்களைக் கட்டுவதா என அறிக்கையில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில், உத்தர்காண்ட்டின் மாபெரும் நீர்மின் திட்டங்களால் ‘ஆற்றுப் படுகைகளின் இயல்பு’ மிகக் கடுமையான மாற்றத்துக்கு உள்ளாகியதைச் சுட்டிக்காட்டி இதனால் எதிர்காலத்தில் பேரளவிலான மோசமான அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.

          2013 கேதார்நாத் சோகத்திற்குப் பிறகும் தற்போதைய சமோலி பெருவெள்ள சேதாரங்களுக்குப் பிறகும், நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்குக் காது கொடுக்காமல் அவற்றைப் புறக்கணித்து, இயற்கையின் மிக நுட்பமான பகுதிகளிலும் தீவிரமாகக் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது மிகப் பெரிய துயரம். “நிபுணர் குழு அறிக்கைக்குப் பிறகு உத்தர்காண்டின் 24க்கும் மேற்பட்ட நீர்மின் திட்ங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்து விட்டது” என சார்தம் குழுவின் உறுப்பினரான ஹெமந்த் தியானி கூறுகிறார். 

மின்சாரமின்றி இருளடைந்த கிராமங்கள்

          சமீபத்தில் மத்திய அரசு தம்பட்டமடித்தது: டெஹ்ரி பகுதியில் 100 சதவீதம் மின்வசதி வழங்கப்பட்டுள்ளது அரசின் வெற்றிச் சாதனையாம். ஆனால் அங்கே உண்மையில் 50 சதவீதம் மட்டுமே மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. சரித்திரத்தில் நமது அனுபவம் யாதெனில், பெரும் அணைக்கட்டுகளைக் கட்டுவது அப்பகுதியின் இயற்கை சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிப்பதுடன், உள்ளூர் மக்களைக் கட்டாயமாக அங்கிருந்து வேரொடுபிடுங்கி அப்புறப்படுத்துவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. மலைப்பகுதிகளின் தொலைதூர இடங்களுக்கு மின்சார வசதி வழங்குவதில் இடர்பாடுகள் உள்ளன என்பதால், அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு 25 மெகா வாட்ஸ் திறன் மட்டுமே உடைய சிறிய திட்டங்களை மேற்கொள்வதே உசிதமானதும், வரவேற்கக்கூடியதுமாகும்.

          உத்தர்காண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு இன்னும் மோசமாகக் காரணம், அனுபவமற்ற தனியார் கம்பெனிகளின் தரக்குறைவான நீர்மின் திட்டக் கட்டுமானங்களே. இத்திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது தேவையெனில் முற்றாக கைவிடப்பட வேண்டும். நீரை அடிப்படையாகக் கொண்டு மின்சக்தி தயாரிப்பதில் இமாலய சுற்றுச்சூழல் பகுதியில் மிக கவனமாக இரண்டு அம்சங்களைச் சீர்தூக்கி சமப்படுத்தி செயல்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சுற்றுச்சூழலையும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும் விலையாகத் தந்து, பொருளாதார வளர்ச்சி காண்பதாக இருக்க முடியாது. அது கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல.

          நல்லதொரு அறிவு நின்று செயல்படட்டும்! 

                   “எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு

                    அவ்வது உறைவது அறிவு”              (திருக்குறள் 426)

-- நன்றி: நியூஏஜ் (பிப்.28 –மார்ச் 6)

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

 

 

 

 

 

 

             

 

Sunday 21 February 2021

வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயக்கவியல் -- ஆழமான சுற்றுச் சூழல் கட்டுரை

 

வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயக்கவியல்

(உத்தர்காண்ட் சமோலி இயற்கைப் பேரிடரை முன்வைத்து)

--அனில் ரஜீம்வாலே

          மிகப்பெரும் விஞ்ஞான சிந்தனையாளர் பிடெரிக் ஏங்கல்ஸ் பல காலம் முன்பே எச்சரித்தார்: “இயற்கையின் மீது மனிதகுல வெற்றி பற்றி நம்மை நாமே முதுகில் தட்டிப் புகழ்ந்து கொள்ள வேண்டாம். நமது ஒவ்வொரு வெற்றிக்கும்

இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. எடுத்த எடுப்பில் நாம் எதிர்பார்க்கும் பலன்களை ஒவ்வொரு வெற்றியும் கொண்டு வருகிறது என்பது உண்மையே; ஆனால் அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது முறை விளைவு முற்றிலும் வேறாக, எதிர்பாராத பாதிப்புக்களோடு –முதலாவது பலன்களையும் வாரிச் சுருட்டிச் செல்லும் வகையில் – அமைந்து விடுகின்றன.”

          அந்த முன்னறிவித்த தீர்க்க தரிசனம் 21 நூற்றாண்டிற்காகவே சொல்லப்பட்டதோ! கோவிட் தொற்றின் காரணமாக உலகெங்கும் அமலான ஊரடங்கு இந்தியாவையும் முடக்கிப் போட்டதுடன், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையையும் அடிக்கோடிட்டு உணர வைத்துள்ளது. இயற்கை முதலில் பெரிய மனதோடு சிறிது மன்னித்து, நாம் எடுத்துக் கொண்ட (மண்) வளத்தினை மீண்டும் இட்டு நிரப்பி இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு பூத்துச் சிரித்துச் சரிசெய்து கொள்கிறது. பனிப் பாறை குன்றுகள் பலநூறு கி.மீ. தொலைவில் கண்ணில்படுகிறது, நதிநீர் மீண்டும் மணிபோலத் தெளிவாகவும், முன்பு அவ்விடத்தில் காணப்படாத இடங்களில் விதவிதமான வண்ணப் பறவைகள் வந்து இறங்குகின்றன, மீண்டும் பச்சைப் பயிர்கள் செழிக்கத் தொடங்குகின்றன. பொதுவாக இயற்கை மேலும் தூய்மையானதாகி நமக்கும் ஒரு செய்தி சொல்கிறது: உங்கள் வளர்ச்சியின் செயல்பாடுகளை, திசை வழியை மாற்றிக் கொள்ளுங்கள!

உத்தர்காண்ட் தரும் படிப்பினைகள் :

பாசாங்குத்தனமான கொள்கையின் முரண்பாடுகள்

          சமீபத்திய உத்தர்காண்ட் மாநில சமோலி மாவட்ட இயற்கைப் பேரிடர், மலைகள் நமக்கு உரத்துத் தெளிவாக சொல்லும் செய்தியாகும். அப்பேரிடரின் பிழிவை நடுங்கும் குரலில் சுருக்கமாக ஒரு பெரிய இயந்திரத்தை இயக்கும் நபர் கூறினார். அவர் மண்ணை வெட்டித் தோண்டும் பெரிய எக்ஸவேட்டர் இயந்திரத்தை இயக்குபவர். ரிஷிகங்கா, விக்ரம் சௌகான் பகுதியில் சுரங்கப் பணிக்காக அதனைச் செய்யும் அவர் கூறினார்: “நான் ஒருநாளும் இயற்கையைப் பாதுகாத்தவன் இல்லை. ஆனால் வெள்ளத்தில் என்னை அடித்துச் செல்லாமல் ஒரு மரம்தாம் என் உயிரைக் காப்பாற்றியது!”. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ (திருக்குறள் 151) தன்னை வெட்டும் மனிதனுக்கும் நிழல்தரும் மரம்போல அந்த மரம் மனித உயிரைக் காப்பாற்றியது.

          உண்மையில் நமக்கு லட்சக் கணக்கான மரங்கள் வேண்டும். உத்தர்காண்ட் மற்றும் பெரும்பான்மை இமாலயப் பகுதிகள் இரக்கமின்றி அழிக்கப்படுகின்றன, குறிப்பாக கார்ப்பரேட்டுகள் பேராசை லாபத்திற்காக. சிமெண்ட் ஆலைகள், அணைக்கட்டுகள், சாலைகள், கட்டடங்கள் ஹோட்டல்கள், மோட்டல்கள் (காரிலே வந்து  காரிலேயே உணவருந்தும் வசதி உள்ள பரந்துவிரிந்த உணவு விடுதிகள்) முதலிய பலவும் பணக்காரர்கள் வசதிக்காக அங்கே எழுந்த வண்ணம் உள்ளன, இமாலய மலைப் பகுதிகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை ஏதுமின்றி. இந்தியப் பழங்காலப் பாரம்பரிய பெருமிதங்கள் பற்றி போலி மத உணர்வையும் வகுப்புவாத உணர்வையும் எழுப்புகிறது இன்றைய ஆளும் தரப்பு; ஆனால் அவர்களே எந்த இயற்கை சக்திகள் பல கடவுள்கள், பெண் தெய்வங்கங்களின் ஆலயங்களை எழுப்பக் காரணமானவைகளோ, அதே இயற்கையை அழிக்கின்றனர். இங்கே அங்கே என்றில்லாமல் பெரும் உயரத்தில் நுட்பமான உணர்வுமிகுந்த கர்ண பிராயாகையில் கூட (இயற்கையை அழித்து) சாலைகள், இரயில்வே பாதைகள், பெரும்பாலும் தனியார் மயமான கான்கிரிட் கட்டுமானங்களைத் திணிக்கிறார்கள். (இரண்டு நதிகள் சங்கமிங்கும் இடம் பிரயாகை.  உத்தர்கண்ட் மாநிலத்தில் விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, தேவ பிரயாகை என்ற ”பஞ்ச பிரயாகை” உள்ளன. இவை அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும். கர்ண பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ‘பிண்டார்’ நதியும் சங்கமிக்கும் இடம். கர்ணன் தவம் செய்த இடமாதலால் அந்தப் பெயர் பெற்றது.) இத்தகைய செயற்கை கட்டுமானங்களால் மலைச் சரிதலும் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படக் காரணமாகின்றன. போலி தேசியவாதத்தை ஆள்வோர் உதடுகள் உச்சரிக்கும்போது மேற்குலகைப் பார்த்து கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறது. பல இடங்களிலும் புதிய கட்டுமானங்களைக் கட்டவும், சுரங்கங்களைத் தோண்டவும் சட்டபூர்வமான தடைகள் உள்ளபோதும் இயற்கையை அழித்தல் தொடர்கிறது. இன்றைய தினம் நிலைகுலையாத இமாலயா பகுதிதான் மிகவும் ஆழமான அழுத்தத்திலும் இயற்கைத்தன்மை காயப்படுத்தப்பட்டு பாதிப்பு மாறுதலுக்கும் உள்ளாகும் நிலையில் உள்ளது.

          இரக்கமற்று மாபெரும் நதிகள் மாசுபடுத்தப்படுகின்றன; அதைச் சுற்றி ‘கங்கா மாதா’ போன்ற ‘மிகப் புனித’ அடையாளங்கள் என்றெல்லாம் பாசாங்குத்தனமான போலி மதவாதப் பிரச்சாரம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. கங்கா, யமுனா போன்ற நதிகளைச் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் லட்சக் கணக்கான கோடி ரூபாய்களும் மறைந்து போனதற்குப் பிறகும் அந்த நதிகள் கழிவுநீர் கால்வாய்களாகத்தான் உள்ளன! இதுதான் முரண்பாடான ஆளும் வர்க்கத்தின் பிளவுபடுத்தும் கொள்கை; அதைப் பயன்படுத்திச் சுற்றுச்சூழலை மேலும் ஏகபோக நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனுக்குப் பயன்படுத்துவது.

வளர்ச்சி : நேருவினது மாடலும் ‘காலனிய புத்தி கட்டமைப்பும்’

          ‘நேருவினது மாடலி’ல் அமைந்த பொதுத்துறைப் பிரிவு அடித்தளத்தைத் தாக்குவதற்கான புதிய ஆயுதமே சுற்றுச்சூழல். தற்போதைய பொருளாதார மற்றும்

சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கெல்லாம் அந்த  ‘மாடல்’தான் பொறுப்பு என வலதுசாரி பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. (படத்தில் என்எல்சி திறப்புவிழாவில் காமராஜருடன் நேரு) விடுதலைக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட அனைத்து சாதனைகளும் தற்போது  வலதுசாரி பிற்போக்குச் சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. பழிவாங்குதல் உணர்வால் உந்தப்பட்ட அவர்களது நோக்கம், நேரு மாடல் நிர்மாணித்தப் படைப்பூக்கப் பொருளதாரத்தைப் பிய்த்து எறிவது என்பதே.  

          விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ‘காலனிய புத்தி கட்டமைப்பு’ நிலவியதாகக் கூறி, அதுவே சுற்றுச்சூழல் இயற்கை அழிவதற்குக் காரணம் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்! எப்படி இருக்கிறது? அது சரி, ‘காலனிய புத்தி கட்டமைப்பு’ என்பதுதான் என்ன? இயற்கையைக் கட்டுப்படுத்தும் அளப்பரிய ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு இருக்கிறது என்ற ‘எஃகு போன்ற நம்பிக்கை’தான் அது. அந்தக் குயிக்தியான தாக்குதல் திட்டத்தின் கீழ், பக்ரா

நங்கல் (படம் --பஞ்சாபில் உள்ள அணை), பொக்காரோ (ஜார்கண்ட் மாநில எஃகுத் தொழிற்சாலை), பரூனி (மத்திய பீகார் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் அனல்மின் நிலையம்), விசாகப்பட்டினம் எஃகுத் தொழிற்சாலை, இரயில்வே முதலாகத் துவங்கும் அனைத்துமே  இயற்கையின் அழிவுக்குக் காரணம் என்ற பிரச்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. தங்களைத் தாங்களே இயற்கையின் சிறந்த நண்பர்கள் எனப் புகழ்ந்து கொள்பவர்கள், தங்கள் ‘புதிய’ தொலைநோக்குக் கண்ணோட்டத்தை மக்களை நம்பச் செய்ய முயல்கிறார்கள்!

          விடுதலை பெற்றதிலிருந்து தேசம் பின்பற்றும் சுயேச்சையான சுயச்சார்பு வளர்ச்சிப் பாதையை நலிவடையச் செய்ய, ‘இயற்கை சார்ந்த’ (‘eco’) சுற்றுச்சூழல் பிரச்சனையையே மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்துகிறார்கள். உத்தர்காண்டில் 75 நீர்மின் திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கையை அளவிறந்து 171 ஆக உயர்த்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. (மாபெரும் பாதகமான) இதனைச் செய்வது, மிகவும் உரத்த குரலில் நேருவின் கட்டமைப்பை விமர்சனம் செய்யும் இன்றைய ஆட்சியாளர்களே!

சுதந்திர இந்தியாவும் வளர்ச்சி செயல்திட்ட அணுகுமுறையும்

          சரியான நோக்குநிலையில் விஷயங்களை வைத்து நாம் அணுகினால், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா, சுயசார்புள்ள -- பொதுத்துறை நிறுவனங்கள் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட  ‘தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பாதை’யைப் பின்பற்றியது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். காலனியத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு பிற்போக்குநிலையில் இருந்த இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் இவை இரண்டையும் பாதுகாக்க, இந்தப் பாதை நமக்குப் பேருதவியாக இருந்தது. இந்த வழிமுறையில்தான் இந்தியா கனரக இயந்திரங்கள் தயாரிக்க முடிந்தது, நவீனமான உற்பத்திச் சாதனங்கள் (சமூக மற்றும் பொருளாதார ரீதியில், குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில், பண்டங்களின் பொருளாதார மதிப்பை உருவாக்குவதற்குப் பயன்படும்-- மனித ஆற்றல், நிதி தவிர்த்த-- இதர மூலப் பொருள் வசதிகளை உற்பத்திச் செய்தல்) உருவாக்குவதற்கும், நவீன கட்டமைப்பைக் கட்டியெழுப்பவும் முடிந்தது. தொழில்நுட்ப அறிவு ஆற்றலைச் சோஷலிச நாடுகள், குறிப்பாக சோவியத் யூனியன் நமக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் வழங்கின. இப்படித்தான் இந்தியா வலிமையான சுயசார்புள்ள சுதந்திர தேசமாக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.

வளர்ச்சியும் சுற்றுச் சூழலும்

          இந்தச் சாதனைகளைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் அழித்துவிடத் துடிக்கிறார்கள். சுற்றுச்சூழல் குறித்த கேள்விகளைச் சரியான நோக்குநிலையில் மட்டுமே அன்றி, அதற்கு வெளியே வைத்துப் பரிசீலிக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களை (பொருளாதார) அதிகாரத்தின் உச்சத்தில் தொடர்ந்து பேணவும், கார்ப்பரேட் நிதிமூலதன முதலாளிகளை ஓர் எல்லையில் வைக்கவும், அதே நேரம் சுற்றுச்சூழல் இயற்கையையும் பாதுகாப்பது எப்படி என்பதே இன்றைக்கு நம்முன் உள்ள கேள்வி. தொழில்மயப்படுத்துதல், வேளாண் வளர்ச்சி முன்னெடுக்கப்படுவதுகூட சுற்றுச்சூழல் அழிவதற்குக் காரணமாகின்றன என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் தனியார் கார்ப்பரேட்டுகளின் அபரிமித வளர்ச்சி என்பது சுற்றுச்சூழலின் மிகப்பெரிய எதிரி. சுற்றுச்சூழல் இயற்கையைப் பாதுகாக்கும் அதே வேளையில் வளர்ச்சியை எப்படி அடைவது என்பது பற்றிய விவாதத்திற்கு இதுதான் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

          (அரசனை நம்பி புருஷனைக் கைவிடுதல் என்ற பழமொழிக்கேற்ப, கார்ப்பரேட்டுகளை நம்பி) பொதுத்துறை பிரிவை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து எறிவது இயற்கையைப் பாதுகாக்க உதவாது. அதானி, அம்பானி மற்றும் பிற நிதிமூலதனக் கார்ப்பரேட்டுகள் மற்றும் நிதி ஏகாதிபத்திய வணிகர்களுக்கு மிகப் பெரிய சலுகைகளை வழங்குவதால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிப்பதை இதற்குமுன் காணாத வகையில் விரைவுபடுத்துகிறார்கள். எந்தவித எதிர்ப்பும் தண்டனையும் இன்றி  (அரசின் ஆதரவோடு) சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை ஒருசிறிதும் மதிக்காமல் காற்றில் பறக்கவிடுகிறார்கள். சுற்றுச்சூழல் கட்டுப்பாடு உள்ள இடங்களிலேயே நிதிக் குழுமங்களுக்கு அடிப்படைக் கட்டுமானங்களைக் கட்ட மனம்போன போக்கில் தன்னிச்சையான அனுமதிகள் வழங்கப்படுகின்றன; அங்கே அவர்கள் வங்கிச் செயல்பாடுகளையும் தங்கள் வேளாண் வணிக நலன்களையும் மேற்கொள்கிறார்கள் . கடந்த ஐந்து ஆண்டுகளைப் போல ஒருபோதும் நமது காடுகள், நதிகள், கடல்கள், மண் மற்றும் மலைகள் மிகப் பெரிய ஆபத்துக்கு உள்ளானதில்லை. கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்குச் சுற்றுச்சூழல் ஒரு தடையாக இருக்கிறது என அவர்கள் கருதிச் செயல்படுகிறார்கள்.

இயற்கையை நிதிமூலக் கார்ப்பரேட்டுகளின் தேவைக்காக வளைப்பது நிச்சயமாக ’காலனிய’ அணுகுமுறையே.

வளர்ச்சிக்கான நமது செயல்திட்ட அணுகுமுறையை மறுபரிசிலனை செய்து அதன் திசைவழியை நாம் நிச்சயம் மாற்றியமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அணைகளும் சாலைகளும் நமக்கு அவசியம் வேண்டும்; ஆனால் எப்போது, எங்கே மற்றும் எந்தவகையானது என்ற கேள்வியும் முக்கியம். வளர்ச்சிக்கு உத்தர்காண்ட் பகுதியில் 171 அணைகள் மிக அவசியமா? (2013 ஜூன் மாதம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய) உத்தர்காண்ட் கேதார்நாத் துயத்திற்குப் பிறகு உச்சநீதிமன்ற நிபுணர்குழு அப்பகுதியில் மேலும் அணைகள் கட்டுவது பேரழிவுகளைத் தீவிரப்படுத்தும் எனக் கருத்து தெரிவித்து எச்சரித்தது. பாரா-கிளேசியல் பகுதிகளில் இனியொரு நீர்மின் திட்டமும் கட்டப்படக்கூடாது என்று அக்குழு தீர்மானகரமான பரிந்துரையும் செய்தது. (பாரா-கிளேசியல் என்பது, பனிக்குன்றுகள் உருகுவதால் அருகமைப் பகுதிகளில் வண்டல் மண் குவிந்து, புதிய நிலப்பரப்புகள் உருவாகி, மனிதப் பயன்பாட்டிற்கு ஏற்ற நில அமைப்புமுறை, நேரடியாக பனிக்குன்றுகள் உருவாவதாலும், உருகுவதாலும் அமைவது. இது இயற்கையான நிகழ்வு). கடல் மட்டத்திற்கு மேல் 11,500 அடி உயரத்தில் 1982ல் அமைக்கப்பட்ட உத்தர்காண்ட் மாநில நந்தாதேவி புவிக்கோள (பல்லுயிர் பெருக்க) சரணாலயம் (Nanda Devi Biosphere Reserve) பகுதியில் இனி எந்தவகையிலும் செயற்கையாக வெடிவைத்துத் தகர்ப்பது மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

உத்தர்காண்டில் பலநூறு கிராமங்களை இடப்பெயர்ச்சி செய்து வேறுஇடத்தில் ‘மறுநிர்மாணம்’ செய்வது சுற்றுச்சூழலை ஆபத்திற்கு உள்ளாக்கும். நொறுங்கிவிழும் நிலையில் உலகின் மிகப்பெரிய கங்கை நதிப்புறத்துச் சுந்தர்வனக் காடுகளின் சுற்றுச்சூழல் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. அந்த அலையாத்தி சதுப்புநிலக் காடுகளிலிருந்து பல லட்சம் டன்கள் கார்பன்-டை- ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. (அங்கே வன விலங்குகளின் வாழ்க்கையிலும், கடற்கரை பரிணாமத்திலும் உயிரியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்அலைகளை ஆத்தி அவற்றின் வீரியத்தைக் குறைத்து ஊருக்குள் கடல் புகாமல் தடுப்பதால் அலையாத்திக் காடு, கண்டல் –மாங்க்ரோ- காடு என்று

பெயர். சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில கண்டல்காடு --படம்) அந்தமான் வளர்ச்சித் திட்டம், சுற்றுலா வளர்ச்சி, பிரம்மாண்ட கப்பல் போக்குவரத்துத் திட்டங்களால் தடித்ததோல் போர்த்திய பிரம்மாண்ட ஆமைகள் --கடல் ஜீவராசிகளில் 2மீட்டர் நீளமும் 900 கிலோ எடையும் கொண்ட நீர்வாழ் பிராணி -- போன்றவை அபாயத்திற்கு உள்ளாகின்றன. இவையெல்லாம் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றன.

பொருளாதார –சுற்றுச்சூழல் செயல்திட்டம் :

தொழில்நுட்ப நோக்குநிலை மறுதகவமைத்தல்

          இயற்கையை இதற்கு மேலும் நாம் இழக்க முடியாது. இது, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய உறவால் இணைத்து அணுகுக வேண்டிய பிரச்சனை. பிரம்மாண்ட ஏகாதிபத்திய வணிகக் குழுமங்களைக் கட்டுப்பாடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றி ஒருசிறிதும் கவலைப்படாது தன்னிச்சையான வளர்ச்சியை நோக்கி அது செலுத்திவிடும்; குஜராத், கர்னாடகா முதலிய கடற்கரைப் பிரதேசங்கள் உட்பட இதுதான் நடந்தது; இயற்கை மீது மிக அதிகமான தாக்குதல் அங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது; அது இமயமலைப் பகுதிகள், நதிகளை மாசுபடுத்தல் மற்றும் வற்றச்செய்தல், லாபத்திற்காக மண்ணைப் பாழாக்கி எரிவாயு எடுப்பது, மிகப்பிரம்மாண்டமான கட்டுமான வேலைகளை நிதிமூல நிறுவனங்களின் உதவியால் எழில்கொஞ்சும் இயற்கையை வெறும் குப்பைக் குவியல் மேடாக்கிக் கொண்டுள்ளன.

          கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல் பெரிய நகரங்களில்கூட அதிக அளவில் குப்பை குவிவதற்கு இடமாகிறது. இந்த அணுகுமுறையை மேற்கத்திய உலகமும் கண்டிக்கிறது.

          வளர்ச்சி என்பதை (மகாத்மா காந்தி கூறியதைப் போல தொழில்நகரங்களில் மையப்படுத்தி ராட்சச உற்பத்தியில் ஈடுபடுவதற்கு பதில்) சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) மாற்ற வேண்டும்; வீட்டிலேயே சிறு உற்பத்திக் கூடங்கள், வேளாண்மை முதலியவற்றைப் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிச் செயல்பாடுகளை உச்சபட்ச அதிகாரமுடையதாக ஆக்குவதன் மூலம் உள்ளூர் முயற்சிகளைத் துவக்க வேண்டும். பொருளாதாரத்தை மையத்தை நோக்கிக் குவிப்பதற்கு எதிராக, ஜனநாயகப்படுத்திப் பரவலாக்க வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது. உற்பத்தி மையங்கள் என்பன இடிபாடுகளுடைய மிச்ச சொச்சங்களின் குப்பைக் குவியலாக மாறி, நிதிமூலதனமும் சேவைப்பிரிவு மட்டுமே வளர்ச்சி காண்கின்றன. புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அவைகளை புதிய நோக்குநிலை மறுதகவமைப்பு செய்ய வேண்டியது அவசியம். நிதிமூலதனங்களின் லாபம் வளர்ச்சி அடையும் போதும், இயற்கை இரக்கமற்று அழிக்கப்படும்போதும் வளர்ச்சி ஒருநிலையில் நின்று போனதே. உற்பத்திக்குப் புதிய மற்றும் தூய்மையான தொழில்நுட்பப் பயன்படுத்துதலின் தேவையைக் கோவிட் ஊரடங்கு வலியுறுத்தியது; பேட்டரி போன்ற டிஜிடல் மற்றும் ஆன்-லைன் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். தூய்மையான மற்றும் பசுமையான தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான ஆற்றலையும் கொண்டுள்ளது, அதே நேரம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.

          வேறுவிதமாகச் சொல்வதென்றால், அரசு / பொதுத்துறை பிரிவுகள் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையிலும், புதிய கடமைகளை முன்னிறுத்தியும் மீண்டும் துவங்கப்பட வேண்டும்; அவைகளின் செயல்பாட்டில் இயற்கையைப் பாதுகாப்பது முக்கிய பங்காற்றும். (ஒரு உதாரணம், வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடையாவிட்டாலும் பொதுத்துறை பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம் தனது செல்கோபுரங்களின் திறனை உயிரினங்களின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விஞ்ஞானபூர்வமான சட்டப்படியான வரையறையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளபோது, தனியார் நிறுவனங்கள் லாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு அலைவரிசைத் திறனை –உயிரின உடல்நலன் பாதிப்புப் பற்றிக் கவலைப்படாது-- அதிகரிப்பதைச் சொல்லலாம். –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது).

அரசுக்குத்தான் இயற்கையைப் பாதுகாத்தல், பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்தல் என்ற இரட்டை பொறுப்புணர்வு உண்டு. திட்டங்களைச் சரியான திசைவழியில் செயல்படுத்துவதன் மூலம் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் உச்சநிலை அடைய வேண்டும், நிதி முதலீடு பாய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அதனது தொழில்நுட்ப அடித்தளத்தை மாற்றி ஏனைய பிரிவுகள் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்.  பொதுத்துறை நிறுவனங்களின் பழைய தொழில்நுட்ப – பொருளாதாரக் கட்டமைப்பு இனியும் நன்கு செயல்பட முடியாது, அவை வழக்கொழிந்தவை. புதிய தொழில்நுட்பம் மக்களுக்கும் தனிநபர்களுக்கும் பயன்படுத்த நட்புரீதியானது. பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பரிவான புரிதல் இவற்றின் இயக்கவியல் ரீதியான ஒன்றிணைப்பே காலத்தின் தேவை. 

          சுற்றுச்சூழல் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான தடைக்கல் மிகப் பெரிய நிதி ஏகாதிபத்தியங்கள். அவர்கள் புதிய மற்றும் தூய்மை தொழில் நுட்பம் பரவலாக்கப்படுவதில், சிறிய அளவு உற்பத்தி மற்றும் வணிகத்தில்கூட, தலையிட்டுத் தடுக்கிறார்கள். உதாரணத்திற்கு சூரிய சக்தி, பேட்டரி பேனல்கள் மற்றும் போக்குவரத்து அறிமுகப்படுத்துவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.  

பேரழிவின் விளிம்பில் சுற்றுச்சூழல்  

          உலகம் சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. பருவநிலை மாறுதல் சீர்குலைக்கப்பட்டு கவலைதருவதாக மாறுகிறது. துருவப் பிரதேசங்கள் விரைவாக உருகுகின்றன. காடுகள், பெருங்கடல்களின் கார்பன் உட்கிரகிப்புத் திறன் (Carbon sinks) தீவிரமாகக் குறைகிறது. (காடுகள் முக்கியமாக பெருங்கடல்கள் உலகின் 50 சதவீத கார்பன் வெளியேற்றத்தை உட்கிரகித்து, கார்பன் வளிமண்டலத்தில் சேராது காக்கும் இயற்கையான பெரும்பணியைச் செய்கின்றன. இல்லையெனில் கார்பன் அதிகரிப்பால் புவி வெப்பமயமாதல், துருவங்கள் உருகுதல், பெருவெள்ளம், வறட்சி, கடல்மட்டம் உயர்தல், வளிமண்டல ஓசோன் படலம் பாதிப்பு போன்ற எண்ணற்ற தீங்குகள் ஏற்படும்.கரோனா பாதிப்பும்கூட மனிதர்கள் இயற்கையைச் சீர்குலைத்ததன் விளைவே). நீர்நிலைகளும் காற்றலைகளும் மாசுபடுத்தப்பட்டு சீர்குலைவுக்கு உள்ளாகிறது. இயற்கையின் பல்லுயிர் சங்கிலித் தொடர் பலஇடங்களில் அறுபட்டு நிற்கிறது. எதிர்பார்த்தைவிட விரைவாக புவி வெப்பமயமாதல் உயர்கிறது. பல்லுயிர் பெருக்கம் பாதுகாப்பற்று ஒவ்வொரு நாளும் உயிரினங்கள் மறைகின்றன. பெருவெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி பொதுவான சாதாரண நிகழ்வாக மாறுகிறது. சைபீரியா மற்றும் அலஸ்காவும் கூட அபாயகரமான வெப்பநிலை உயர்வால் பாதிக்கப்படுகின்றன. குளிர் பிரதேசத்திலேயே எப்போதும் நிலைத்த உறைபனி (permafrost) மறைந்து அங்கெல்லாம் பசும்புல் வளர்ச்சி தலைகாட்டுகிறது.

          திரும்பிச் செல்லமுடியாத ஓர் இடத்தில் நாம் வந்து நிற்கிறோம். இதற்குப் பொறுப்பு,  அமெரிக்காவால் தலைமை தாங்கப்படும் பெருநிதிமூலதன வணிகமும் ஏகாதிபத்தியமுமே என்பதில் சந்தேகமில்லை. நம் அனைவருக்கும்கூட, தனிநபர்கள் உட்பட, நமக்கான சொந்த பொறுப்பு உண்டு. இது ஒரு போராட்டம் – நாம் வாழும் புவியைக் காக்க, மனித குலத்தை மற்றும் அனைத்து உயிரின வடிவங்களையும் பாதுகாப்பதற்கான போராட்டம். மிக முக்கியமான ஜனநாயகக் கடமையாக வளர்ச்சி செயல்திட்டங்கள் மற்றும் இயற்கைச் செல்வங்களை மறுஆக்கம் செய்வது இவற்றின் சரியான இயக்கவியல் உறவை நாம் அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும். இது அவசர அவசியம்.

  “சுற்றுச்சூழல் சிதைத்து நாம் அழிவின் தொடக்கத்தில் உள்ளோம் ஆனால், உலகத் தலைவர்களே நீங்கள் பொருளாதாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நம்பப் போவதில்லை. எங்கள் கனவுகளை நீங்கள் களவாடிவிட்டீர்கள்!”

                                            --சுற்றுச்சூழல் இளம் போராளி கிரேட்டா துன்பர்க்

          ஐநா காலநிலை மாநாட்டு உரையிலிருந்து

--நன்றி : (நியூஏஜ் பிப்.21 –27)

-- தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

Saturday 20 February 2021

பிப்ரவரி 20 (2001) தோழர் இந்திரஜித் குப்தா நினைவு நாள்

 


தோழர் இந்திரஜித் குப்தா பிறந்த நூற்றாண்டு

”வலதுசாரி பிற்போக்கை எதிர்த்துப் போரிட ஒன்றுசேருங்கள்” --  இந்திரஜித் குப்தா

அனில் ரஜிம்வாலே

இளவயதில் இந்திரஜித் குப்தா: 1919 மார்ச் 18-ல் கல்கத்தாவில் பிறந்தார்.  அவரது துடிப்பான செயல்பாடுகளும் பல முக்கிய நிகழ்வுகளும் கொண்ட பெருவாழ்வு இந்திய அரசியலில் --குறிப்பாகப் பாராளுமன்ற ஜனநாயகத்தில்-- ஆழமான தாக்கத்தைப் பதித்துச் சென்றுள்ள ஒன்றாகும். கல்கத்தாவின் (Brahmo family) பிரம்ம (சமாஜ்) குடும்பத்தைச் சார்ந்தவர்.  அந்த வகுப்பைச் சார்ந்தவர்களே அப்போது அரசின் உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். மரபார்ந்த வங்காளி உயர்ஜாதியினரான பிரம்மசமாஜ் பிரிவு உபனிஷத்துகளின் போதனைகளால் வழிநடத்தப்பட்டவர்கள்.  கிழக்கிந்திய காலனிய நிர்வாக அமைப்பில் வரலாற்றுரீதியாக  அங்கம் வகித்தவர்கள். பெரும்பாலும் குறிப்பிட்ட சில மேன்மையான பள்ளிகள், கல்லூரிகளில் படித்தவர்கள். ஆங்கில நடைமுறையில் வாழ்ந்த பெரும் பணக்காரர்கள் – பிரிட்டீஷ் பேரரசின் இளைய கூட்டாளிகள் எனலாம். அவர்களே பெங்கால் ராஜதானியின் கவர்னர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், கமிஷ்னர், கலெக்டர், மேஜிஸ்ரேட்டுகள், கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், பெரும் வியாபாரிகள். சுதந்திரப் போராட்ட அரசியலைப் பொருத்தவரை மிதவாதிகள், மேதகு மகாராணியின் கீழ் செயல்படும் அமைப்பை விரும்புவோர் என்றெல்லாம் வலையதளத் தேடலில் கூறப்பட்டுள்ளன.)

            குப்தாவின் தந்தை இந்திய அக்கௌண்டன்ட் ஜெனரல், மூத்த சகோதரர் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர். இந்திரஜித் குப்தாவின் பள்ளிப் படிப்பு சிம்லாவில், அப்போது அவரது தந்தை அங்கேதான் பணிசெய்தார். 1937 டெல்லியில் செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவருடைய பெற்றோர் உயர்படிப்பிற்காக அவரை இங்கிலாந்து அனுப்பினர். கேம்பிரிட்ஜ்  கிங்ஸ் கல்லூரியில் படித்தார். அதுவரையில் இந்திரஜித்திற்கு அரசியலில் ஆர்வம் ஏதும் இல்லை – அவ்வளவு ஏன் துடிப்பான மாணவர் அரசியல் இயக்கச் செயல்பாடுகளில் கூட ஈடுபட்டதில்லை.  இதனால் அவரின் எதிர்கால வாழ்க்கை குடும்ப பாரம்பரியத்தின் வழியில் அவரது பெருமைமிகு குடும்ப உறவினர்களின் காலடித் தடத்தை ஒட்டியே அமையும் எனப் பெரிதும் நம்பப்பட்டது.  ஆனால் நிகழ்வுகள் வித்தியாசமாக வேறு பாதையில் திரும்பியது.

தோழர்களைச் சந்தித்தார் : இங்கிலாந்தில் பெரும் ஆளுமைகளோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.  வரலாற்றில் இப்போது அந்தப் பெயர்களே ஆச்சரித்தோடு உச்சரிக்கப்படுவவை.  அவர்களோடு நம் இந்திரஜித் விவாதித்திருக்கிறார், வாழ்ந்திருக்கிறார். RPD எனப்படும் ரஜனி பால்மி தத் போன்ற எண்ணற்றோர் அவரின் பாதையை மாற்றியிருக்கின்றனர். அந்தக் காலம் பாசிசம் தலைகொழுத்த நேரம், அதற்கேற்ப பாசிச எதிர் நடவடிக்கைகளும் உறுதியாக வீறுகொண்டு எழுந்த பெரும்பொழுது.  ஸ்பெனின் குடியரசில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் இளைஞர்களை ஆழமாக பாதித்தது.  அந்தப் போருக்கு ஆதரவாக தார்மீகப் போராட்டங்கள் இன்டர்நேஷனல் பிரிகேடு முதலிய வடிவங்களில் பெருகின.

            இந்திரஜித் குப்தாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ரேனுசக்ரவர்த்தி அவரை இந்தியன் மஜ்லிஸ், ஐரோப்பியாவில் படிக்கும் இந்திய மாணவர் சொஸைட்டி கூட்டமைப்பு முதலிய மாக்ஸியம் கற்கும் மாணவக் குழுக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் குழுக்கள் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியோடு (GPGB) தொடர்பில் இருந்தனர். அவைகளில் இருந்த ஆளுமைகள்தான் எவ்வளவு பேர்? புகழ்மிக்க நிகில் சக்ரவர்த்தி, பூபேஷ் குப்தா, ரேனுசக்ரவர்த்தி, மோகன் குமாரமங்களம், என்.கே. கிருஷ்ணன், ஜோதி பாசு, ரொமேஷ் சந்திரா முதலானோர். பொதுஉடைமைத் தத்துவம், கம்யூனிச பிரசுரங்கள்- சஞ்சிகைகள் முதலியவற்றில் இந்திரஜித் குப்தாவிற்குப் பெரும் ஆர்வமும், இயக்க நடவடிக்கைகளில் ஈடுபாடும் உண்டாயிற்று.  இவற்றோடு கூட நேரு, ஜெடி பெர்னால், லிட்டன் ஸ்ட்ரேச்சே இன்னபிறவற்றையும் கற்றார்.  1939லேயே தனது குடும்பத்தினருக்குத் தன்னுடைய பாதை மாற்றத்தைத் தெரிவித்ததோடு மட்டுமின்றி இனி அரசு வேலைக்கோ அன்றி குடிமைப்பணி தேர்வுகளையோ எழுதப்போவதில்லை என்ற தனது கருத்தையும் பிரகடனப்படுத்தி விட்டார். இதனால் எல்லாம், குப்தா தனது படிப்பைக் கைவிட்டாரோ எனில் இல்லை என்பது மட்டுமல்ல – அவர் உறுதியாகக் கூறியிருக்கிறார், ”ஒருபோதும் ஒரு பொதுஉடைமை மாணவன் தனது கல்வியைக் கைவிடவே கூடாது”.  இந்திரஜித் குப்தா படிப்பில் தனது சிறந்த ரிக்கார்டை நிலைநாட்டியிருக்கிறார் – குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் சிறந்து விளங்கினார்.  1940ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்து  அவர் தனது (Tripos) ட்டிரிபோஸ் பட்டம் பெற்றார்.

 

கம்யூனிஸ்ட்டாக இந்தியா திரும்பல் : 1939ல் இரண்டாவது உலக யுத்தம் வெடித்தது. இந்திரஜித் குப்தா லிவர்பூலிருந்து புறப்பட்டு –சூயஸ் கால்வாய் மூடப்பட்டதால் -- ஐந்து வார கப்பல் பயணத்திற்குப் பிறகு பம்பாய் வந்தார்.  திரும்பி வந்தவுடன், தலைமறைவு இயக்கமாக இயங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் தொடர்பு கொண்டு, முழு நேர கட்சிப் பணிக்குத் தன்னை ஒப்புவித்தார். சிலகாலம் காத்திருப்பில் வைத்தபின் அவரை லக்னௌவிலிருந்து தலைமறைவாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டார். அவருடைய பணி, தனக்கான பதுங்கிடத்தை ஏற்பாடு செய்துகொண்டு, செய்தி சுமந்து செல்லும் ’தபால்கார’ராக –கூரியர் மேனாக-- வண்டி வண்டியாய் அறிக்கைகளையும் தஸ்தாவேஜ்களையும் செய்திகளையும் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது.  அந்தச் சாகசப் பணியில் இந்திரஜித் சிலிர்த்துப் போனார்.  பின்னர் அவர் கட்சியின் தலைமையிடமான மும்பைக்குக் கட்சியின் பொதுச் செயலர் பிசி ஜோஷி அவர்களின் நேரடி பார்வையின் கீழ் மாற்றப்பட்டார்.  அங்கு இந்திரஜித் மத்திய தபால்காரர்.  அங்குக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் ஜோஷி, சோமநாத் லாகிரி, பவானி சென் முதலானோரின் இரகசிய இயக்க நடவடிக்கைகளில் அவர் உடன் பங்குபெற்றார்.  

தொழிற்சங்கத் தலைவரானார்: 1942ல் இந்திரஜித் குப்தா பெங்காலுக்கு மாற்றப்பட்டார், அங்குள்ள சணல்ஆலைத் தொழிற்சங்கத்தில் பணியாற்றுவதற்காக. பின்னர் துறைமுகத் தொழிலாளர்களோடும், இரயில்வே தொழிலாளர்களோடும் பணியாற்றினார்.  அகில இந்திய துறைமுக கப்பல் கட்டும் தொழிற்சங்க கூட்டமைப்பின் (All India Port and Dock Workers Federation) பொதுச் செயலாளராகவும், அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றின் கடினமான, இடர்பாடுகள் மிகுந்த காலமான 1948 –49 களில் இந்திரஜித் சிறையில் அடைக்கப்பட்டார்.  புகழ் மிக்க முக்கியமான தொழிற்சங்கத் தலைவராக ஏற்றம் பெற்றார். 1980-ல் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஏஐடியுசி அமைப்பின் அகில இந்தியப் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிலும் ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டு செயலாற்றினார். 1998-ல் WFTU–ன் தலைவராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மிகுந்த உழைப்பும் ஆழமான ஆய்வும் மேற்கொண்டு அவர் எழுதிய புகழ்மிக்க புத்தகமே ’சணல் ஆலைத் தொழிலில் முதலீடும் தொழிலாளர் உழைப்பும்’.  இன்றும் அந்த ஆலைத் துறை பிரிவில் அந்நூலே சட்ட புத்தகம் – வேதாகமம்.

 

ஒப்பில்லாத உயர்தனி பாராளுமன்றவாதி : 1960-ல் நிகழ்ந்த இடைத்தேர்தலில்  தென் மேற்கு கல்கத்தா தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியாக இந்திரஜித் குப்தா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதனையும் சேர்த்து 11 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இடையே 1977—80 ஆண்டுகளின் சில காலம் நீங்கலாக, மொத்தம் 37 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார்.  அலிப்பூர், ஃபசிர்ஹட் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் ஏனைய காலம் முழுவதும் மித்னாபூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.  பத்தாவது மக்களவைத் தொடங்கி 13வது மக்களவைக் கூடும் வரை அவையின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் இடைக்காலச் சபாநாயகராக அனைவருக்கும் பதவிப் பிரமாணம் நடத்தி வைத்துள்ளார்.  இந்திரஜித் குப்தா அவையின் மூத்த உறுப்பினர் மட்டுமல்ல, மிக நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராகச் சேவை புரிந்தவருமாவார்.  1992-ல் மிகச் சிறந்த பாராளுமன்றவாதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தனக்கெனவோர் தனித்த முத்திரையைப் பதித்துப் பாராளுமன்ற வரலாற்றில் போற்றுதலுக்குரிய இடத்தைப் பெற்றார்; பாராளுமன்றத் தந்தை எனவும் புகழப்படுகிறார்.

 மாடல் கம்யூ. எம்பி : அவரது பாராளுமன்ற உரைகள் மிக உன்னிப்பாக அனைவராலும் கவனமாகக் கேட்கப்பட்டது.  பாராளுமன்றத்தின் உள்ளே அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் பாராளுமன்றச் சட்டம், விதிமுறைகள், மரபுகளை மிகக் கறாராகப் பின்பற்றி அமைந்தன.  அவர் ஒரு முன்மாதிரி கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்.  பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், அவை நடவடிக்கைகளில் எப்படி முன் தயாரிப்புகளுடன் வர வேண்டும் என்பதைத் தன் வார்த்தைகளால் அன்றி தனது செயல்களால் மற்றவர்களுக்கு ஒப்பற்ற முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.  பாராளுமன்ற வட்டாரத்தில் கட்சிப் பாகுபாடுகள் தாண்டி அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டவராக, புகழ் ஓங்கியவராக, பெரிதும் மதிப்பும் மரியாதையும் மிக்கவராக விளங்கினார். பாராளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் கீழ்நிலை பாதுகாவலர் தொடங்கி பாராளுமன்ற அலுவலக எழுத்தர்கள் பணியாளர்கள் வரை அனைவரும் அன்போடும் பாசத்தோடும் நினைவுகூரப்படுபவராக அனைவரோடும் தனிப்பட்ட மனித உறவைப் பேணியவர் இந்திரஜித் குப்தா.

பாராளுமன்ற நிலைக்குழு தலைவர்

1995-96 ல் இந்திரஜித் குப்தா பாதுகாப்புத் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு தலைவராகச் செயல்பட்டார். துணைவிதிகள் சட்டமியற்றுதல், மேல் முறையீடு, நூலகக் குழு முதலான பல்வேறு குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தார். பாராளுமன்றத்தில், உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின்-- தொழிலாளர் பெருந்திரள் மக்களின்--  உண்மையான பிரதிநிதியாக இந்திரஜித் குப்தா இருந்தார். அவர் பாராளுமன்றத்தில் நுழைந்ததே நன்கறியப்பட்ட  தொழிற்சங்கத் தலைவராகத்தானே! தொழிலாளர்களின் மத்தியில் உழைத்தவர், செயல்பட்டவர் என்ற வகையில் தொழிலாளர் வர்க்கக் குரலையும் அவர்களின் ஏனைய கோரிக்கைகளையும் வலிமையாக மக்களவையில் முன்வைத்தார். சமூக, தேசிய பிரச்சனைகளும் அவரது குரலில் நன்கு எதிலொலித்தன.

 அப்போது விவாதங்களில் அவர் பேசாத விஷயங்களா? இராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு; காவல் துறையினரின் செயல்பாடுகள் மட்டுமின்றி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்; தீவிர வாதத்திற்கு எதிராக – பாதுகாப்பிற்கு ஆதரவாக; சாதி – மத – இன வேறுபாடுகளை முன்னிறுத்தி நடக்கும் பிளவுவாதங்களுக்கு எதிராக, மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆதரவாக– மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி; தேசிய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடித்து நிற்றல்; பொருளாதாரப் பிரச்சனைகள், அதன் அரசியல் தாக்கம்; வெளிஉறவுக் கொள்கை மற்றும் உலகளாவிய பிரச்சனைகள்;  தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் பற்றிய பிரச்சனைகள்; பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் --அவர்களின் நிலை குறித்த கேள்விகள்; அரசியல் அமைப்புச் சட்டம் மீது தொடுக்கப்பட்ட வினாக்கள்-- விளக்கங்கள்; தேர்தல் சீர்திருத்தம் –விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை; இப்படி எத்தனை.. எத்தனை.. தலைப்புகள்.  அதுமட்டுமா, மத்திய உள்துறை அமைச்சராக எத்தனை உரைகள் என இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.  

அவரது உரைகள் மிகுந்த உழைப்புடன் நேர்த்தியாக முன்தயாரிப்பு செய்யப்பட்டவை; அவை அனைவராலும் சிதறா கவனத்துடன் கேட்கப்பட்டன.  ஆழமான ஆய்வின் வெளிப்பாடே அவர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள். (மார்க்சும் நூலகமும் போல) பாராளுமன்ற நூலகத்தில் அவர் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார். அவர் உண்மையைப் பேசினார், புள்ளிவிபரம் தரவுகளுடன் பேசினார். உதாரணத்திற்கு, பாதுகாப்புத் துறை பற்றிய கேள்விகள் கேட்கும்போது  ஏதோ அந்தத் துறையே அவர் பொறுப்பில் இருப்பதாகப்படும் – அந்தத் துறையின் மூலை முடுக்கு, சிறிதும் பெரிதுமான நுட்பங்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி, என்னும்படி அவரது கேள்விகள் இருக்கும். புரூலியா பகுதியில் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவத்தில் அரசின் தோல்வியை அடுத்து, பாதுகாப்புத்துறை பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அரசியல் உயர் அளவீடுகளைப் போற்றிக் காப்பதில், அரசியல் மாண்புகளை மதிப்பதில் கறாரானவராக இருந்தார்.

தொழிலாளர் பிரச்சனைகள் –சட்டம் இயற்றுவது குறித்த உரைகளில் இடம் பெற்ற பொருள் தலைப்புகள்தான் எத்தனை..எத்தனை! தொழிற்சாலைகளில் பணி, பணித்தன்மை; குறைந்தபட்ச கூலி, ஊதியம் வழங்கப்படுதல், போனஸ்; தொழிற்சங்கங்கள். தொழிற்சங்க உரிமை, சணல் ஆலை ஊழியர்களின் படுதுயர் பணிச்சுமை, பீடி புகையிலைத் தொழிலாளர் பிரச்சனை என ஏராளம்.  விவசாயப் பிரச்சனைகளைத் துறைசார் ஆய்வு ஆழத்துடன் அணுகுவார்.  தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதில் மிக வலிமையுடன் முன்நின்று வாதிட்டவர்.

உள்துறை அமைச்சராக

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அவ்வளவு ஏன், இடதுசாரிகளின் சார்பில்கூட மத்தியில் அமைச்சர்களாகப் பணியாற்றிவர் இருவர் மட்டுமே.  ஒருவர் இந்திரஜித் குப்தா; மற்றோருவர் சதுரானன் மிஸ்ரா. 1996-98 ல் HPதேவகௌடா, ஐ.கே. குஜ்ரால் தலைமையில் அமைந்த யுனைட்டட் முன்னணி அரசில் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார், இந்திரஜித் குப்தா.  மிகப் புதுமையான நவீன அனுபவம்.  அது,  சரித்திர பூர்வமான சம்பவம் –இந்திய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஆழமான பரிசீலனை–புரிதல் இனிதான் செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் அங்கமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது அந்த முறை மட்டுமே.

 மத்திய உள்துறை அமைச்சராக இந்திரஜித் குப்தா ஆற்றிய சாதனைப் பணிகள் பலப்பல, இன்றும் அவை கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவராலும் நினைவு கூரப்படுகின்றன.  போலீஸ் மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.  உறவை மேம்படுத்தும் வகையில் அந்தக் கவுன்சிலைப் புத்துயிர்ப்பு செய்து மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது அவர் தேசத்திற்கு ஆற்றிய பெரும் பங்களிப்பு. வட கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவர் பல திட்டங்களை வழங்கி நடவடிக்கை எடுத்தார். (மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுவில் 40 சதவீத ஊதிய உயர்வு என்ற ஒப்பற்ற தீர்வு ஏற்பட அவரது தலையீடே காரணம் என்பதை அந்த ஊழியர்கள் இப்போதும் நினைவுகூர்கிறார்கள்.) அரசியல் கட்சிகளுக்கு அரசே நிதி உதவி வழங்குவது பற்றிய ஆலோசனை வழங்கிட அமைக்கப்பட்ட 8 உறுப்பினர் தேர்தல் சீர்திருத்தக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.  அப்போது அவர் வழங்கிய பல ஆலோசனைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசே நிதிஉதவியைப் பணமாக நேரடியாக அளிக்காமல், (போஸ்டர் – கட்சி பிரசுரங்கள் போன்ற) பொருள் வகை இனமாகத் தரலாம் என்பதும் ஒன்று.  குணாம்ச ரீதியில் மிகப் புதுமையான ஆரோக்கியமான யோசனை இது எனலாம். 

மத்திய உள்துறை அமைச்சராக இந்திரஜித் குப்தா எடுத்த  -- நாம் மறவாது நினைவில் கொள்ளத்தக்க  -- முன்முயற்சிகள் இன்னும் பல உண்டு. கம்யூனிஸ்ட்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதற்கு அவர் ஓர் முன்னுதாரணம்.  கம்யூனிஸ்ட்கள் நேர்மையாக, உண்மையாக, ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்து ஜனநாயக அமைப்புகளை எப்படி வலிமை பெறச் செய்வார்கள் – அந்த அமைப்புகளை மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் செயல்பட வைப்பார்கள் என்பதற்கு அவரே உதாரணம்.  (போராட்டங்களின் மூலம் மட்டுமின்றி) அரசில் அங்கம் வகித்து, பாராளுமன்ற முறைமைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும் மக்கள்  லட்சியங்களை நிறைவேற்றுவதில் கம்யூனிஸ்ட்கள் முன் நிற்பார்கள் என்பதன் உதாரண புருஷனும் அவர்தான்.

கட்சி செயலாளராக இந்திரஜித் குப்தா. டிசம்பர் 1964ல் பம்பாயில் நடைபெற்ற கட்சி காங்கிரஸில் இந்திரஜித் குப்தா மத்திய செயற்குழுவில் CEC உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.  1971 கொச்சி கட்சி காங்கிரசில் அமைக்கப்பட்ட மத்திய நிர்வாகக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 லிருந்து கட்சியின் துணைப் பொதுச்செயலராகச் செயல்பட்டார். ஏப்ரல் 1990ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1996-ம் ஆண்டு பாதி வரை அந்தப் பொறுப்பை நிறைவேற்றினார். மத்திய உள்துறை அமைச்சரான உடன் கட்சியின் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய இரு பெரும் பொறுப்புகளை வகித்து வெற்றிகரமாகக் கடமையாற்றினார்.

 இன்றைக்கு நமக்கான அறிவுரை:  அவரது பல ஒப்பற்ற கருத்துகளில் பின்வரும் இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. ”கம்யூனிஸ்ட்கள், மார்க்ஸியவாதிகள்( இன்று வரை) இந்தியாவில் நிலவும் சாதிய முறைமை பற்றி போதுமான அளவு தங்கள் சிந்தனையை, கவனக் குவிப்பை, நியாயமான ஆய்வினை மேற்கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன்”

மற்றொரு அவரது அவதானிப்பு அல்லது நமக்கான கடமை நினைவூட்டல் என்பது, ”நீங்கள் பிரகடனப்படுத்திய உங்கள் லட்சியக் கொள்கைகளை வெற்றிகரமாக அடைய வேண்டும் –நிறைவேற்ற வேண்டும் – என விரும்பினால், பின்னர் அதற்கேற்ற தந்திரோபமான வழிமுறைகளைப் பின்பற்றி  பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிதறுவதை –கூறுபடுவதைத் தவிர்க்க அல்லது கூடுமான வரை குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்….”

2001 பிப்ரவரி 20ம் நாள் மறைந்தார்.

-- நியூஏஜ், மார்ச்17-23, 2019 இதழ்

                                                            --தமிழில்:  நீலகண்டன்

என்எப்டிஇ, கடலூர்