Monday 28 November 2022

ஆர்எஸ்எஸ் – பாஜக கருத்தியலை எதிர்க்க வேண்டியதன் தேவை -- --டாக்டர் பி கே காங்கோ

 


       ஆர்எஸ்எஸ் – பாஜக சித்தாந்தக் கருத்தியலை எதிர்க்க வேண்டியதன் தேவை

--டாக்டர் பி கே காங்கோ


             ‘சம்ரஸ்தா’ மற்றும் ‘பலசாலி பாரத்’ ஆகிய கருத்துகள்   ஆர்எஸ்எஸ் --பாஜக கருத்தியல் மற்றும் நடைமுறையின் முக்கியக் கூறாக முன் வைக்கப்படுகிறது. இவ்விரு கருதுகோள்களும் ’இந்தியா என்ற கருத்தாக்கம்’ என அழைக்கப்படும் சமத்துவம், சோஷலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை கருத்துகளுக்கு எதிரானவை.

            உலகெங்கும் புதிய கருத்துகளின் அலையை யுகப் புரட்சி என்னும் 1917 போல்ஷ்விக் புரட்சி கட்டவிழ்த்தது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். பாடுபடும் மக்கட் பெருந்திரள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளாகிய மக்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மைய இடத்திற்குக் கொண்டு வரப்பட்டது, அவ்வாறே ‘ஜனநாயகம்’. 1920ல் ஏஐடியுசி பேரமைப்பு நிறுவப்பட்டபோதும், 1921ல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ஹஸ்ரத் மொஹானி பூரண சுதந்திர முழக்கத்தை முன் வைத்தபோதும் மாபெரும் மக்கள் கூட்டம் ஒன்று திரண்டதைக் கண்டோம்; இது நாட்டில் அன்றைக்கிருந்த சுயநலக் கும்பலுக்கு அச்சத்தை ஏற்படுத்த –சுயநலக் கும்பலின் நலன்களைப் பாதுகாக்கவும், மக்களைக் குழப்பி தவறான வழிகாட்டவும் --1925 செப்டம்பர் 27 நாக்பூரில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பு தொடங்கப்பட்டது.

            எனினும், ‘சமத்துவம், ஜனநாயகம், சோஷலிசம்’ போன்ற புதிய கருத்துகள் பரவலான செல்வாக்கு மற்றும் வரவேற்பைப் பெற்றதையும் மக்களுக்கு அதிகாரமளித்ததையும் தடுத்து நிறுத்துவது மிகச் சிரமமான, ஏறத்தாழ இயலாத ஒன்றாகியது; எனவே மக்களைக் குழப்ப சுயநலக் குப்பல் தந்திரம் செய்தது, (ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டது.) மேலும், தலித்கள் ஆலய

நுழைவு, சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை எதிர்ப்பு, டாக்டர் பிஆர் அம்பேத்கர் தனது ‘இந்து கோடு மசோதா’ அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மூலம் கொண்டு வர விரும்பிய பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முற்போக்குப் பிரச்சனைகளை எல்லாம் ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்ட நாளிலிருந்தே ஆதரிக்கவில்லை. மக்களுக்கு ஆதரவான இந்த முன்னெடுப்புகளை எல்லாம், மேல் சாதி சலுகைகளைப் பாதுகாக்க விரும்பிய ஆர்எஸ்எஸ் நேரடியாக அல்லது மறைமுகமாக எதிர்த்தது; மேலும், இம்முயற்சிகளை ‘இந்து மதத்தில் தலையீடு’ என முன்நிறுத்தி பிரச்சனையைத் திசை திருப்பியது.

            தற்போது தீவிரவாதமே இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றும், சோவியத் யூனியன் வீழ்ச்சி முதலாளித்துவத்தின் வெற்றி எனவும் சமமானதாகக் கருதப்படும்போது; வெறுப்பு, சகிப்பின்மை, அச்சம் அடிப்படையில் அமைந்த ஆர்எஸ்எஸ் கருத்தியல் மற்றும் உயர் சாதி, உயர் வகுப்பு மேட்டிமை முதலியன  வளர செழிப்பான களத்தைக் கண்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதார்த்தத்தில் தங்கள் திட்டத்தை நனவாக்கவும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இட்டுக் கட்டிய கதைகள், வெட்டி ஒட்டிய தகவல்கள் நிரம்பிய பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. எனவே ஆர்எஸ்எஸ் சிந்தாந்தத்தின் மைய கருத்தியலாக ஏன்
சம்ரஸ்தா’ மற்றும் ‘பலசாலி பாரத்’ வைக்கப்பட்டன
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. ‘விதியுடன் ஓர் உடன்பாடு’ என்ற புகழ்பெற்ற உரையில் பண்டிட் நேரு 
இந்தியப் பொதுமக்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் இந்தியாவை மாபெரும் நாடாக்க வலியுறுத்தினார்: இதற்காக அவர் வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம், சோஷலிசம், நீதி, மதச்சார்பின்மை போன்ற கருத்தியல்களை வலியுறுத்தினார்.

    இம்முக்கிய பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் பிரிக்க முடியாத பங்கு வகித்தபோது ஆர்எஸ்எஸ் இதிலிருந்து விலகி நின்றது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் மாபெரும் தேசம், இந்தியப் பெருமிதம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் உலகச் சமாதானத்தில் நம்பிக்கை கொண்ட அமைதியான ஜனநாயக, சோஷலிச இந்தியாவாக இருந்தது.

       எனினும், இந்தக் கருத்துக்குப் ‘பலசாலி பாரத்’ கருத்து நேர் எதிரிடையாக இருந்தது. அந்தக் கருத்தியலின் பார்வை ‘தீவிர வலிமை பொருந்திய இந்தியா’ (மிலிடன்ட் இந்தியா), அது பெரும் கார்ப்பரேட்டுகள் அல்லது முதலாளித்துவக் குழுமங்களால் அதிகாரச் செல்வாக்கு செலுத்தும் பொருளாதாரமாகும். ‘சம்ரஸ்தா’ என்பது மேலெழுந்த வாரியாகச் சமத்துவம் என்று பொருள்படும்: ஆனால் அந்தச் ‘சம்ரஸ்தா’, மக்கள் தங்கள் உரிமைகளைக் கைவிட்டு, தன்னலகக் கும்பலின் மேலாதிக்கத்தை ஏற்று, தங்கள் கௌரவம் அல்லது சமத்துவம் பற்றி கவலைப்படாமல் அவர்களின் கருணை அல்லது நல்லலெண்ணத்தினால் பிழைத்திருப்பதான சமத்துவம் – ஒரு வகையில், ‘நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’ என்பது போல (ரம்பையின் காதல் படத்தில் மருதகாசி பாடல்), மயான அமைதி நிலவும் சமத்துவம். தேசத்தின் மேன்மைக்காக, பெரு முதலாளிகளின் லாபத்திலிற்காக உழைக்கும் மக்கள் திரள் எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து பாடுபட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களது அந்தக் கருத்தியலில் மாபெரும் தேசத்திற்காக மக்கள் இருக்கிறார்களே தவிர, விடுதலைப் போராட்ட இயக்கத்தின் ‘இந்தியக் கருத்தாக்க’த்தின் கோட்பாடான ‘மக்களுக்காக மாபெரும் தேசம்’ இல்லை.

     சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடும் முற்போக்கு சக்திகள், ‘சம்ரஸ்தா’ மற்றும் ‘பலசாலி பாரத்’ போன்ற கருத்துகள் மூலம் ஆர்எஸ்எஸ் – பாஜக முன் வைக்கும் மேலாதிக்க உலகப் பார்வையை எதிர்த்துப் போராட வேண்டும்.

     முதலாளித்துவப் பொது நெருக்கடிக்குப் பின் 1929 –30களில், ஆங்கிலோ -சாக்சன் உலகில் (அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்) நிலவிய முதலாளித்துவ முறைமை நலவாழ்வு பொருளாதாரக் கருத்தைத் தழுவியது; அன்றைக்கு நிலவிய சோவியத் யூனியன் மற்றும் நெருக்கடியின் விளைவாக எழுந்த வலிமையான தொழிற்சங்க இயக்கத்தின் செல்வாக்கே இதற்குக் காரணமாக அமைந்தது. இருப்பினும், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் முதலான நாடுகள் தொழிற்சங்க இயக்கத்தை நசுக்கிய பாசிச மாடலைப் பின்பற்றி முதலாளிகளுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் வழங்கின. இப்பாசிச மாதிரியால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ், இந்தியாவில் மேலாதிக்கத்தைச் சாதிக்கப் பலசாலி பாரத் மற்றும் சம்ரஸ்தா ஆகிய கருத்தாக்க மாடல்களை கொண்டு வந்துள்ளது. எனவேதான் அவர்கள் கலாச்சார பண்பாட்டு தேசியவாதம் மற்றும் தீவிர தேசியத்தை வலியுறுத்துகின்றனர்; மேலும் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற எதன் மீதும் அர்த்தமுள்ள விவாதம் நடத்துவதையும் தவிர்க்கிறது.

            நாடாளுமன்ற அவைகளில் விவாதமின்றி, மூன்று கருப்பு வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றும் தொழிலாளர் குறுங்குறிகளை –சம்பந்தப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடனும் கலந்து பேசாமல்-- தன்னிச்சையாக நிறைவேற்றியது, இந்தப் பாசிசப் போக்கின் வெளிப்பாடே ஆகும்.

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

மேன்மையுறக் குடிமை நீதி

கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று உலகறியக் கூற…”

ஜனநாயகம், சோஷலிசம், சோஷலிசத்தைப் பாதுகாக்க ஆர்எஸ்எஸ் – பாஜகவின் தீய நோக்கமுடைய திட்டங்களை எதிர்க்க வேண்டியது அவசியமான தேவை.

--நன்றி : நியூஏஜ் (நவ.27 –டிச.3)

--தமிழாக்கம் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

Friday 18 November 2022

நியூஏஜ் தலையங்கம் -- நேருவுடன் இருப்பதா, கைவிடுவதா!

நியூஏஜ் தலையங்கம் (நவ.20 –26)


காங்கிரஸ் முன் எழுந்து நிற்கும் கேள்வி  --

நேருவுடன் இருப்பதா, கைவிடுவதா!

  தத்துவக் கோட்பாட்டின் அடித்தளத்தின் மீதே அரசியல் சிந்தனைகளும் செயல்களும் வடிவம் கொள்கின்றன. அதுவே ஒவ்வொரு சமூக –அரசியல் போர்க் களத்தின் மையத்திலும் இறுதி முடிவெடுக்கும் காரணியாகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் சில குறிப்பிட்ட தத்துவக் கொள்கை போக்குகளை, அதனதன் வர்க்க குணத்திற்கேற்ப பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

    காங்கிரஸ் வரலாற்றில் அதன் அரசியல் செயல் திசைவழிக்கான தத்துவக் கோட்பாடு புரிதலுக்குப் பாதை அமைக்கக் கடுமையாகப் போராடியவர் நேரு. அவர், பரந்த முறையில், சோஷலிசத்தின்பால் அக்கறையுள்ள ஜனநாயம் மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். நேருவின் சோஷலிசம் குறித்த புரிதல் விஞ்ஞானபூர்வமானது அல்ல எனப் பலர் விமர்சனம் செய்தனர். தனக்கே உரிய முறையில் சோவியத் யூனியனுடன் நட்புறவைப் பேணிய நேரு, இடதுசாரிகளின் கோட்பாடுகளுடன் ஒரு வகையான நட்பு மற்றும் பகை உறவை மேற்கொள்ள முயன்றார். இதன் காரணமாகச் சொந்த கட்சிக்குள்ளே நண்பர்களையும் எதிரிகளையும் தேடிக் கொண்டார். இந்திய தேசத்தில் விடுதலைக்கு முன்பும், பின்புமான காங்கிரஸ் வரலாறு இவ்வுண்மைக்குச் சான்று பகர்கிறது.

       உலகமயமாக்கல் சகாப்தத்தில், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகின் தத்துவக் கோட்பாட்டுச் சூழல் தீவிரமான மாற்றங்களைக் கண்டது. அப்புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் செல்வாக்கில் ஆட்பட தூக்கி வீசப்பட்ட பல கட்சிகளில், காங்கிரஸ் கட்சியும் விலக்கில்லை. காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் தங்களை நேரு மற்றும் காந்தியிடம் இருந்தும்கூட தொலைவில் நிறுத்திக் கொண்டனர். இதன் விளைவு, இயல்பாகக் காங்கிரஸ் இடம் பிடிந்திருந்த மதச்சார்பின்மை ஜனநாயக வெளியின் வலிமை குறைந்தது.

     எதிர்பார்த்தது போலவே, காங்கிரசின் மரபார்ந்த ஆதரவு அடித்தளம் அரிக்கப்பட்டது. சமூகத்தின் பின்தங்கிய பிரிவு காங்கிரசிடம் தங்கள் நம்பிக்கையை இழந்தது, மதசார்பற்ற சக்திகள் காங்கிரசின் தகுதிப்பாடு சான்றுகள் குறித்துச் சந்தேகம் கொள்ளத் தொடங்கின. இந்த நிகழ்முறைதான் கடந்த முப்பது ஆண்டுகளின் போக்கில் வடிவெடுத்தது. கட்சியின் பேரழிவுத் துயருக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் தலைமை, கட்சி சந்தித்த நெருக்கடியின் மீது எந்த ஆழமான உள்முக ஆய்வையும் மேற்கொள்ள ஒருபோதும் முயன்றதே இல்லை.

      தற்போதைய அரசியல் நிலைமைகளில், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் பாசிசக் கொள்கை செயல்பாடுகள் நாட்டின் மதசார்பற்ற ஜனநாயக உணர்வுநிலையை மூழ்கடிக்கும்போது, காங்கிரஸ் தனது சொந்த காந்தி –நேரு மரபையும் அதன் வரலாற்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என இடதுசாரிகள் விழைகின்றனர். உலகமயமாக்கல் காலத்தின்போது காங்கிரஸ் எடுத்த பொருளாதார மற்றும் அரசியல் நிலைபாடுகள் குறித்து அக்கட்சி சுயவிமர்சனமாகப் பரிசீலிக்க வேண்டுமென நாம் காங்கிரஸ் கட்சியை வற்புறுத்துகிறோம். அதுதான் காங்கிரஸ் மீது இடதுசாரி விமர்சனத்தின் தீவிர மையமாக இன்னும் உள்ளது.

கட்சிக்குப் புத்துயிர் ஊட்டும் ஒரு முயற்சியாகக் கருதப்படும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ –செப்டம்பர் 7 கன்யாகுமரியில் தொடங்கி 150 நாட்களில் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள) இயக்கத்தின்போது கூட, காந்தி–நேரு மரபு குறித்த இந்த அம்சம் போதுமான முக்கியத்துவத்துடன் ஆழமாக எடுத்துக் கொண்டு பேசப்படவும் இல்லை, உரைகளிலும் பிரச்சாரம் செய்யப்படவும் இல்லை. காங்கிரஸ் கட்சி, இடதுசாரி தத்துவக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதன் அரசியல் கண்ணோட்டங்களில் இடதுசாரியாக வேண்டுமென அக்கட்சியை இடதுசாரிகள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

நேருவுக்கு எதிராகக் கடும் அவதூறு தாக்குதல்களைக் கட்டவிழ்ப்பதில் பிற்போக்கு சக்திகள் குறியாக இருப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் காங்கிரசில் உள்ள பலரும் முழுமையாகத் தோல்வி அடைகின்றனர். ஆர்எஸ்எஸ் புதிதாகக் கண்டுபிடித்துள்ள சர்தார் பட்டேலை நோக்கிய காதல், நேருவின்பால் அவர்களது கசப்பான

வெறுப்பிலிருந்து முளைவிட்டதாகும். கட்சியின் காந்தி –நேரு கொள்கை அடித்தளத்தை இலக்காக நோக்கிய தத்துவார்த்த ஆயுதத் தாக்குதலின்பால் காங்கிரஸ் தலைமை, வியப்பூட்டும் வகையில் பரிதாபகரமாக அலட்சியமாக உள்ளது. தற்போது இந்த அலட்சியம், புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. பின்பு பொறுப்பான காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் நோக்கிய தங்களின் பாசத்தை நினைவூட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். வேறு யாரும் இல்லை, மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் கேரளா பிரதேஷ் காங்கிரஸ் குழு தலைவரே, ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவான இந்தக் குரலை எழுப்புவதில் முன்னே நிற்கிறார். இத்துடன் திருப்தி அடையாத அவர், மேலும் வகுப்புவாதப் பாசிசத்தின் கூட்டாளி நேரு எனவும் சித்திரம் தீட்டும் அளவு சென்று விட்டார்.

இந்த மிகக் கடுமையான பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்தியத் தலைமை, அதன் சொந்தக் காரணங்களுக்காக மௌனமாக இருக்கிறது. தத்துவார்த்த கோட்பாட்டில் இவ்வகைப்பட்ட (நடுவுநிலை) சார்பற்ற தன்மையுடன், காங்கிரஸ் கட்சி அவர்கள் அகப்பட்டுள்ள ஆழமான நெருக்கடியிலிருந்து வெளியே வர இயலாது. காங்கிரஸ் உறுதியான முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தத்துவார்த்தக் கோட்பாடு மற்றும் அரசியல் தெளிவிற்கான அவர்களின் தேடுதலில் ஜவகர்லால் நேருவே அடிப்படையான அம்சமாக இருப்பார் என்பதில் அவர்களுக்கு எந்த ஐயமும் இருக்கத் தேவையில்லை.

     நேருவுடன் இருப்பதா, இல்லை நேருவைக் கைவிடுவதா? என்பதே அவர்கள் முன் நிற்கும் கேள்வி!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

Tuesday 15 November 2022

சூழலியல் கட்டுரை 2 --பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைச் சுமப்பது வளரும்நாடுகளே

 

                         

                            பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைச் சுமப்பது வளரும்நாடுகளே

--டாக்டர் சோம மார்லா

          தற்போது நடைபெற்று வரும் ஐநா பருவநிலை உச்சி மாநாட்டில் பார்படாஸ் நாட்டின் பிரதமர் மியா மோட்லி, ‘பணக்கார நாடுகளின் சரித்திர ரீதியான கடந்த காலக் குற்றச் செயல்களே தற்போதைய பருவநிலை நெருக்கடிக்குக் காரணம்’ என்பதால்

அந்நாடுகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்; மேலும், வருவாய் குறைந்த நாடுகள் இயற்கைப் பேரழிவைச் சரிசெய்ய ஒரு டிரிலியன் (அதாவது, ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் நிவாரணம் வழங்கவும் கோரினார். ஒரு சிறிய கரிபியன் நாடான பார்படாஸின் பெண் பிரதமர், வளரும் தென்பகுதி நாடுகளின் நலன்களை ஆதரித்து உலக மேடைகளில் துணிச்சலாகப் பேசுவதற்குப் பெயர் போனவர்.

          அவரது கோரிக்கை நியாயமானது. கடந்த கால நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகள் தென்பகுதி நாடுகளைக் காலனியாக அடிமைப்படுத்தி அதன் செல்வாதாரங்கள், உழைப்பு சக்தியைக் கொள்ளையடித்து அவற்றைத் தொழில் புரட்சியில் பயன்படுத்தின. அன்று வளரும் நாடுகளின் செலவில் அவை செல்வத்தைப் பெருக்கின, கூடவே அதிக அளவு கார்பன் (மாசு) வாயுவை வெளியே உமிழ்ந்தலையும் சாதித்தன. இன்றோ –கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததுபோல – (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட) பருவநிலை பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட தென்பகுதி நாடுகளே மீண்டும் பெருந்தொகையைச் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கப்- படுகின்றன.

சமீபத்தில் பாக்கிஸ்தான், இமயமலைப் பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைச் சந்தித்தது. கலிஃபோர்னியா மற்றும் ஐரோப்பா அதிகபட்ச வெப்பநிலை, ஆப்பிரிக்கா வறட்சி, பெங்களூரு, கேரளா மற்றும் சமீபத்தில் சென்னையை வெள்ளக் காடாக்கிய பருவம் தப்பிய மிகக் கூடுதல் மழைப் பொழிவு இவற்றிற்கெல்லாம் பசுமை இல்ல வாயுகள் மற்றும் புவி வெப்பமயம் அதிகரித்ததே பொறுப்பு. தொழில் புரட்சியிலிருந்து உலகில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களால் விளையும் இயற்கை பேரிடர்களின் சுமைக்கான செலவையும் செய்ய நிர்பந்திக்கப்படும் வளரும் உலக நாடுகள், ஒரு வகையில், உயிர் உடமைகளுக்கு இரட்டை ஆபத்தைச் சந்திக்கின்றன, இது மிகவும் அநியாயமானது.

     கொடூரமான பருவநிலை பேரழிவான இந்த ஆண்டின் கோடை மற்றும் இலையுதிர் காலம் மற்றும் பணக்கார மேலைநாடுகள் திணித்த பாதிப்புக்களுக்குக் காரணம் அவர்கள் கடந்த காலத்திலும் தற்போதும் உமிழும் கூடுதல் கார்பன் அல்லவா – பிறகு, அதற்கான பகுதியளவு தார்மிக பொறுப்பை ஏற்பதுதானே முறை. எனவேதான் சுமார் 100 நாடுகள் பங்கேற்புடன் தற்போது நடைபெற்று வரும் COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் பருவநிலை பாதிப்புக்கான நிவாரண நிதியம் என்பது மாநாட்டில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. (நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற) புதைபடிவ எரிபொருள்களிலிருந்து பசுமை எரிசக்தி நோக்கிய மாற்றமான அடிப்படை கட்டமைப்பில் பெரும்பகுதி வளர்ச்சி (பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, சீனா போன்ற) வளர்ந்துவரும் உலகத் தென்பகுதியில்  நடைபெறுகிறது.

     குறைந்த அளவு கார்பன் வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக்கு நிதியளிப்பது, மாற்றத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு மாறுவதற்கு ஆண்டிற்குச் சுமார் ஒரு டிரிலியன் அமெரிக்க டாலர் தேவை. மேலும் அந்த நிதி, பேரழிவால் பாதிக்கப்பட்ட தேசங்கள் தங்கள் நாட்டின் மேற்பரப்பில் மிகையாகப் பொழியும் புயல் நீர் (ஸ்டார்ம் வாட்டர்) ஓடிச் சென்று இயற்கை நீர் சுழற்சியை மேம்படுத்தும் வடிகால் மறுகட்டுமானங்களைக் கட்ட,

ஏரிகளைப் புனரமைக்க, உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்பும் அலையாத்திக் காடுகள் (படம் பிச்சாவரம், சிதம்பரம்என்னும் சதுப்புநிலக் காடுகளில் கண்டல் தாவரங்களை வளர்க்க, கடல் அரிப்பைத் தடுக்கும் தடுப்புச் சுவர்களைக் கட்ட, சுனாமி, புயல் போன்ற பேரழிவு முன்னெச்சரிக்கை வழங்கும் அறிவியல் முறைமைகளை ஏற்படுத்தவும் தேவைப்படுகிறது.

ஏழை நாடுகள், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் மிகத் தீவிர பருவநிலையுடன் இணங்கி வாழவும் 2009முதல் பாரீஸ் உடன்பாடு மற்றும் சென்ற கிளாஸ்கோ பருவநிலை மாநாடுகள் மூலம் ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர் (பத்தாயிரம் கோடி டாலர்) வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டன. [உலக வெப்பமயத்தைத் தொழிற்புரட்சி முன் நிலையுடன் ஒப்பிட்டு 2 அல்லது 1.5டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கட்டுப்படுத்த 196 நாடுகள் சட்டப்படி ஏற்றது பாரீஸ் பருவநிலை உடன்பாடு (COP21/டிச.2015); அதனை அமல்படுத்த நிதியளித்தல் மற்றும் வழிமுறைகளை இறுதி செய்தது கிளாஸ்கோ மாநாடு (COP26/நவ.2021 ஸ்காட்லாந்து)]

பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செல்வாதார நாடுகள், ஐநா பருவநிலை மாநாடுகள் குறிப்பிடும் ‘இழப்பு மற்றும் சேதாரம்’ அல்லது உலக வெப்பமயமாதலின் பின்விளைவுகளைச் சமாளிக்க ஏழைநாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது பற்றிய விவாதங்களை நிராகரித்து வந்தன. சமீப காலம்வரை மேற்கத்திய நாடுகள் வரலாற்று ரீதியாகப் பசுமை இல்ல வாயுகள் வெளியீட்டிலும் தற்போதைய உலக வெப்பமயமாக்கலிலும் அவர்களின் பொறுப்பை மறுத்து வந்தனர். இறுதியாக அவர்கள் தார்மிகப் பொறுப்பை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. எகிப்தில் நடைபெறும் மாநாட்டில் ‘இழப்பு மற்றும் சேதாரம்’ பிரச்சனையைத் தீர்ப்பதற்கான கவனக் குவிப்பு நிகழ்காலப் பருவநிலை நெருக்கடியைக் குறைக்கவும் அதனை அனுசரித்து ஈடுகொடுக்கவும் உதவும். எதார்த்த உலகில் பருவநிலை நீதிக்கான நிதியம் தேவையுள்ள தென்னுலக நாடுகளைச் சென்றடையவில்லை.

பேரழிவு ஆபத்து அறிவு, உற்று நோக்கல் மற்றும் முன்கணித்தல், தயார்நிலைமற்றும் எதிர்வினை மற்றும் தகுந்த நேரத்தில் முன்எச்சரிக்கை தகவல் தொடர்பை உலகம் முழுவதும் அளிப்பதை டிரிலியன்கள் கணக்கில் அமெரிக்க டாலர் முதலீடுகள் செய்ய முடியும். ‘உலக வானிலையியல் அசோஸியேஷன்’ மற்றும் அதன் தொழிற்நுட்பப் பங்குதாரர்கள் தயாரித்து அளித்த திட்டத்திற்கு இந்தியா உட்பட 50 நாடுகள் ஆதரவளிகின்றன.

 வளங்குன்றா நிலைத்த வளர்ச்சி’ எனும் பசுமை பொருளாதாரத்திற்கான ஐநா சுற்றுச்சூழல் செயல்திட்டம் (UNEP) மீது ரியோ+20 உச்சி மாநாடு, அரசுகள் கொள்கைகளை மறுவடிவாக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் பின்வரும் பிரிவுகளில் அவற்றிற்கு உதவிட முன்வந்துள்ளது: தூய்மையான தொழில் நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள், தண்ணீர் சேவைகள், (பேட்டரி வாகனங்கள் போன்ற) பசுமைப் போக்குவரத்து, கழிவு மேலாண்மை, பசுமை கட்டிடங்கள், நிலைத்த வேளாண்மை மற்றும் காடுகள் முதலிய பிரிவுகள்.

முன்தடுப்பு எச்சரிக்கை முறைமைகள்

தற்போது பாதிக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இத்தகைய வசதிகள் பற்றாக்குறை நிலவுவதால், காத்திருக்கும் பேரழிவுகளிலிருந்து தங்கள் உயிர் உடமைகளைப் பாதுகாக்க முன்கூட்டிய எச்சரிக்கை இன்றி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். வளரும் நாடுகள் ஆண்டிற்கு 3முதல் 16 பில்லியன் டாலர் இழப்புக்களைத் தவிர்க்க அத்தகைய முன்தடுப்பு நடவடிக்கை முறைமைகளை ஏற்படுத்த வெறும் 80கோடி அமெரிக்க டாலர்களை செலவிட்டால் போதுமானது என தகவமைத்து வாழ்தல் மீதான உலக கமிஷன் கண்டறிந்தது.

பசுமை முதலாளித்துவம்

உலகைச் சுற்றி புதிய தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் அரசுகள், சமூகத்தின் சொத்தான காடுகள், சுரங்கங்கள், ஆறுகள் நதிகள் மலைகள் என இன்ன பிற உள்ளிட்ட பொதுத்துறை பிரிவு நிறுவனங்களை மனம்போன போக்கில் தீவிரமாக மாற்றி வருகின்றன. லாபப் பேராசை பிடித்த முதலாளித்துவம் இயற்கை குறித்த அக்கறை ஏதுமின்றி காடுகளை வெட்டிச் சாய்கின்றன, நதிகள், மண்

மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. ஐரோப்பாவில் வனங்களின் பரப்பு ஒற்றை இலக்கத்தில் சுருங்கியது, பெரும்பான்மை நதிகள் மீன் பிடிக்கக்கூட பயன்படாத அளவு மாசுபடுத்தப்பட்டன. அத்துடன் ஆறுகள், காடுகளுக்கு அவர்கள் விலைப் பட்டியல் அறிவிப்பை மாட்டிவிட்டுள்ளனர். இன்று நிலக்கரி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிபொருளை மாற்றியமைத்து கூடுதலான பிரிவுகள் பசுமையாக மாறின. மலர்ந்து வரும் பசுமை முதலாளித்துவத்திலும் அவர்களின் லாபமே கோலோச்சுகிறது. சூரிய சக்தி மின் தயாரிப்பில் அதானியின் கிரீன்ஸ் பெரும்பான்மை பங்கைக் கைப்பற்றியுள்ளது; எலெக்ரானிக் வாகனங்கள் எனும் இ-ஆட்டோமொபைல்ஸ் தயாரிப்பில் எலான் மஸக், டொயோடா, ஃபோர்டு, ஹூண்டாய் முதலியன முக்கிய நிறுவனங்களாக உள்ளன.

பருவநிலை நீதி நிதியத்திற்காக ஆண்டிற்குப் பத்தாயிரம் கோடி டாலர் வாக்குறுதி அளித்ததற்கு மாறாக, அதில் சிறிய பகுதியான 20ஆயிரம் கோடி மட்டுமே வளரும் நாடுகளை வந்தடைந்துள்ளது. இதில் முரண்நகை யாதெனில், அந்த நிதியும்கூட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ஒருபோதும் அளிக்கப் படவில்லை. மாறாக, வரையறுக்கப்பட்ட இந்தக் குறைந்த நிதியில் பெரும்பகுதி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் இ-ஆட்டோமொபைல்ஸ் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு மாற்றித்தரப்பட்டன. கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான திட்டங்களில் ஒன்றாகக் கார்பன் வரவினம் (கார்பன் கிரிடிட்) என்ற வர்த்தக முன்மொழிவு அளிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட இந்தக் கார்பன் வரவினத்தையும்கூட பசுமை பொருள் உற்பத்தி ஆலைகளின் மேலே குறிப்பிட்ட முக்கிய கம்பெனிகள் ஏகபோகப்படுத்தின. ஐஎம்ஃஎப் விடுவிக்கும் நிதியும்கூட மானியங்கள் அல்ல, அவை வளரும் நாடுகள், கடல் தடுப்புச் சுவர்களை மீண்டும் கட்டவும் இன்னபிற பேரழிவுக் குறைப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் அளிக்கப்படும் வட்டியுடன் கூடிய கடன் மட்டுமே.

வரலாற்றுக் காலம் நெடுக இப்பூமண்டலத்தை மாசுபடுத்தியவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். மேலும் இயற்கை பேரழிவுச் சீற்றங்களை எதிர்கொண்டு, சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்குத்தக வாழ்வைத் தகவமைத்துக் கொள்வும், பேரழிவை முன்கூட்டிக் கணித்துக் கூறும் அறிவியல் எச்சரிக்கை முறைமைகளை விரைவில் கட்டவும் தேவையுள்ள ஏழைநாடுகளுக்குப் பருவநிலை நிதியை வழங்கி பருவநிலை நீதி காக்கப்பட வேண்டும். 

                                                               

அதற்கு
எகிப்து பருவநிலை உச்சி மாநாடு வழி காண வேண்டும்!

நன்றி : நியூஏஜ் (நவ.13 –19)
--தமிழில்  : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

        

 

 

Sunday 13 November 2022

சூழலியல் கட்டுரை -- நியூஏஜ் தலையங்கம்

 நியூஏஜ் தலையங்கம் (நவ.13 –19)


சூழலியல் நெருக்கடி, அபாயகரமான நிலையில்வந்து நிற்கிறது


                    2022 செப்டம்பர் 18ல் ‘மதிப்புமிக்க’ நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் எலிப் பொந்து அல்லது எலிப்பொறி சுரங்கத்தில் பணியாற்றிய மூன்று தொழிலாளர்களின் அற்பமான’ உயிர்கள் பலியாகி உள்ளன.

ஆம், ஆளும் அரசிற்குத் தொழிலாளர்களின் உயிர்கள் வெல்லமாகிப் போனது. அசாம் மாநில தின்சுகியா மாவட்டம், மர்கேரிடா துணைக் கோட்டத்திற்குக் கீழே லேடோ பகுதியில் டிகோக் மாலு குன்றுகளில் அமைந்த நிலக்கரிச் சுரங்கத்தில் விஷவாயுவைச் சுவாசித்ததனால் எனச் சந்தேகிக்கப்படும் துர்பாக்கியமான மரணம், இல்லை – அது ஆளும் அரசும் சுரண்டல் முதலாளிகளும் வாங்கிய பலி! சைதுல் இஸ்லாம், ஹுசைன் அலி மற்றும் அஸ்மத் அலி எனும் 30 வயதிற்குக் கீழுள்ள இளைஞர்கள் பலியானதற்குக் காரணம், சுற்றுச் சூழல் ஆபத்து ஏற்படுத்தும் பயங்கர தாக்கத்திற்கு எதிராக எந்தவிதப் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கை- களும் எடுக்கப்படவில்லை என்பதுதான். இந்த இடத்தில் அது சுரங்கத்தில் வெளியான விஷ வாயு. இங்கு மாவட்ட அதிகாரிகள் நன்கு அறிந்த வண்ணமே சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பது தேசிய நாளிதழ்கள் தரும் செய்தி; அப்படித் தெரிந்தாலும் ஆளும் கட்சித் தலைவர்கள் பலர் இதில் ஈடுபட்டிருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்க நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள். இது ஊர் அறிந்த ரகசியம், அன்றாடக் காட்சி. வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில் வேலை தேடி அலையும் நிர்கதியான தொழிலாளர்கள், போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையிலும் இச்சுரங்கப்பணியில் சாவின் பொறிகளாக மாறிப்போன எலிப்பொந்து சுரங்கத்தில் பணியாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஏற்றுக் கொள்கிறார்கள்.

  விஷ வாயுவைத் தவிர, சுரங்கப் பகுதிகள் புத்தாக்க நடவடிக்கைகள் இன்றி கைவிடப்படுவதால், இங்கு விபத்துச் சாவுகளும்கூட ஏற்படுகின்றன. சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுத்து வரப்படும் நிலக்கரியின் மதிப்பைவிட இங்கு மனித உயிர்கள் மலிவாகின. ஊடகங்கங்கள் செய்திகள் சேகரிக்க அனுமதிக்கப்படாவிட்டாலும் வேறு சம்பந்தமில்லாமல் விபத்து நடைபெறவில்லை என்பது நிதர்சனம். சமீபத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 900 கி.மீ. தொலைவில் (அசாம் மாநில பிரம்மபுத்ரா நதி வடகரையில் பொங்கைகான் மாவட்டச் சிறிய நகர்) ஜோகிகோபா என்ற இடத்தில் முதல்முறை இப்படி நடந்தது. இம்மாவட்டத்தில் மட்டும் ஒன்றல்ல, ஓராயிரம் எலிப்பொந்து சுரங்கங்கள் உள்ளன. அதன் ஆபத்துக்களை எதிர்த்து எவரும் குரல் எழுப்ப அனுமதி இல்லை.


    (குறுகலான நுழைவுப் பகுதியுடன் பல அடி ஆழத்திற்குக் கீழே சென்று உள்ளுக்குள் பக்கவாட்டிலும் மனிதர்கள் படுத்தபடி தோண்டிச் சென்று நிலக்கரி படிமங்களை வெட்டி எடுத்துவரும் சட்டவிரோதமான) எலிப்பொந்து சுரங்கங்கள் மனித வாழ்விற்கும் உயிருக்கும் மட்டுமே அச்சுறுத்தல் அல்ல; அவை வனவாழ் உயிரினங்களுக்கும் இயற்கையின் பசுமை வாழ்விற்குமேகூட பெரும் அச்சுறுத்தலானது. ஆனால் இவை போன்ற ஒவ்வொரு பிரச்சனையிலும் லாப வேட்டைக்காக இயற்கையைச் சுரண்டும் பேராசைக்காரர்களின் மீதே அழிவிற்கான பொறுப்பு விழும்.

        89.44 சதுர கிமீ பரப்புள்ள மழைக்காடு பகுதியில் அமைந்துள்ள டெஹிங் பட்காய் பூங்கா, 2004 ஜூன் 13ல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அசாம் மாநில அரசு 2020 டிசம்பர்13ல் அதனைத் தேசியப் பூங்காவாக அறிவிக்க, அரசின் காட்டிலாக்கா அதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியிட்டது. இந்தியத் தாழ்நில மழைக்காடுகளில் பெரும் பரப்பு இந்தத் தேசியப் பூங்காவாகும். மனதைக் கொள்ளை கொண்டு மயக்கும் இப்பகுதியின் இயற்கை அழகைப் புறக்கணித்து, ‘வன உயிரினத்திற்கான தேசிய வாரியம்’ (NBWL), இதயமற்ற ஒரு சிபார்சு யோசனைக்குத் தலையசைத்து அனுமதித்தது: டெஹிங் பட்காய் பூங்கா வனவிலங்கு சரணாலயத்திற்குச் சொந்தமான 98.59 நிலப் பரப்பை நிலகரி வெட்டி எடுக்கப் பயன்படுத்த கோல் இந்தியா லிட்., நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அக்காட்டின் வழியாக ஓடும் டெஹிங் நதி மற்றும் பட்காய் மலை இவற்றின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது ஒருவருக்கும் தெரியாது.

         
        வன உயிரினத்திற்கான தேசிய வாரியம், வனநில ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்ட சலேஹி பகுதியில், நிலக்கரி சுரங்கம் அமைக்க கோல்இந்தியா லிட் நிறுவன அலகான
வடகிழக்கு நிலக்கரி பீல்டு முன்வைத்த செயல்திட்டம் பற்றியும் விவாதித்தது.
சலேஹி, டெஹிங் பட்காய் மழைக்காடு பகுதியின் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட 111.19 சதுர கிமீ இடத்தை உள்ளடக்கியதாகும்; மேலும் திப்ரூகர், டின்சுகியா மற்றும் சிப்சாஹர் மாவட்டங்களின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் பலவற்றில் பரவியுள்ளது. சூழலியல் பன்மைத்துவம் மற்றும் வனங்கள் அழிப்புடன் நேரடித் தொடர்புடைய பல்வேறு நோய்கள்   கடுமையாக அதிகரிப்பதாக விஞ்ஞானிகளும் உணர்கின்றனர். இது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இத்தகைய --பறவைக் காய்ச்சல், எபோலா, மத்திய கிழக்கு சுவாசக் கோளாறு (
MERS) நிபா வைரஸ், ஸிகா வைரஸ் மற்றும் கடைசியாகக் கரோனா வைரஸ் போன்ற நோய்கள் படையெடுப்புக்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது.

          சுனாமி போன்ற இத்தகைய பலிவாங்கும் எல்லா இன்னல்களுக்கும் ஒரே ஆதார மூலமாக இருப்பது, (இயற்கையில்) மனிதத் தலையீடே என்றால் ஆச்சரியம் இல்லை. காடுகளை அழிப்பதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நாட்டிற்குள் வருவதில்லையா? பெருந்தொற்று காலத்தில் ஒன்றிய அரசின் ‘சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சரகம்’ (MoEFCC) சூழலியல் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் தொழில்துறை மற்றும் அடிப்படை கட்டுமான செயல்திட்டங்களுக்குத் திட்டமிட்டது. அது மட்டுமின்றி, உண்மையில் அதற்கான சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிப்பு 2020 வரைவறிக்கைக்குப் புது சட்ட விதிகள் தொகுப்பை அறிமுகப்படுத்தியது; இதன் மூலம் அதற்கு முந்தைய 2006 இஐஏ அறிக்கை மாற்றி அமைக்கப்படுகிறது: இது சுற்றுச் சூழல் பாதுகாப்பு கொள்கைகளுக்கு முற்றிலும் நேர் எதிரிடையானது. வன உயிரினத்திற்கான தேசிய வாரியம் அனுமதி வழங்கிய செயல், வனப்பாதுகாப்புச் சட்டம் 1980க்கு விரோதமானது, மீறியது என்பதை நிரூபிக்கிறது.

      கோல் இந்தியா துணை அமைப்பான வட கிழக்கு கோல்ஃபீல்டுஸ் நிறுவனத்திற்கு இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கான சுரங்கக் குத்தகை 1973ல் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து அந்நிறுவனம் இப்பகுதியில் சுரங்கம் வெட்டும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது. அனுமதி அளிக்கப்பட்ட குத்தகை காலம் நீண்டகாலம் முன்பே 2003ல் முடிந்து விட்டது. ஆனால் இன்னும் சுரங்கம் வெட்டும் பணிகளைச் சட்டவிரோதமாகத் தொடர்கிறது. (இந்தியாவின் தேயிலை நகரம் என அழைக்கப்படும் அசாமின்) திப்ரூகரில் எலிப் பொறி சுரங்கத்தில் நமது சுரங்கத் தொழிலாளர்கள் சந்தித்த அதே ஆபத்தை டெஹிங் பட்காய் வன உயிர்கள் பகுதி மற்றும் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட வனமும் சந்திக்கின்றன. இந்த ஆபத்துகள் எல்லாமே கடலின் மேற்பரப்பில் தெரியும் பனிப்பாறை முகடு போன்றது. வாழ்வியல் எதார்த்த உண்மை மேலும் இருள் சூழ்ந்ததாகவும் மிகவும் கவலைக்குரியதாகும்.

        2030 வாக்கில் பசுமை இல்ல வாயு வெளியேற்ற பாதிப்பை 1.5 டிகிரியைத் தாண்டாது என உறுதிமொழி அளித்த 197 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைப் பருவநிலை மாற்ற அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை குறித்த அரசு நடவடிக்கையைக் கண்காணிக்கும் சுயேச்சையான பரிசீலனை, இந்தியாவின் நடவடிக்கையைப் ‘போதாமை மிகக் கூடுதலானது’ என வகைப்படுத்தியுள்ளது. நிலக்கரித் தொழிலுக்கான தொடரும் இந்திய ஆதரவு, பசுமையை


மீட்டெடுப்பதைச் சீர்குலைக்கிறது என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. உலகின் வெப்பம் வெறும் 1.2 டிகிரி உயர்ந்ததற்கே, பூமண்டலம் அதிகரிக்கும் வெப்ப அலைகள், புயல்கள், பருவம் தப்பிய பெருமழை, வெள்ளம் என இடற்பாடுகளைச் சந்தித்த பிறகும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் அவசர நடவடிக்கை எடுப்பதில் தோல்வியடைகிறது என ஐநா பருவநிலை மாற்ற அறிக்கை கூறுகிறது. நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றினாலும்கூட, சுமார் 2.5 டிகிரி வெப்பமயமாக்கும் பாதையில் நாம் இருப்போம் என்பது கவலைக்குரிய பேரழிவாகும்.

சமீபத்திய ‘தேசியப் பங்களிப்பு நிர்ணயிப்பு (நேஷனலி டிட்டர்மைண்டு கான்ட்ரிபியூஷன்ஸ், NDCs) அல்லது கார்பன்-டை-ஆக்ஸைடு முதலிய பசுமை இல்ல வாயுகள் வெளியேற்றத்தை வெட்டிக் குறைப்பதற்கான தனித்தனி ‘குறிப்பிட்ட நாட்’டின் திட்டங்கள் மற்றும் பருவநிலை மாற்ற தாக்கத்திற்கு அனுசரித்து நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்ததே இந்தக் கண்டுபிடிப்பு மதிப்பீடுகள். பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டு இலக்கை எட்ட, 2030க்குள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 2010ம் ஆண்டு மட்டத்தினுடன் ஒப்பிட இன்னும் 45 சதவீதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை மேலும் கூறுகிறது. ஒரு காலத்தில் பூமண்டலம் மகிழ்ந்து கொண்டாடிய உயிரோட்டம் ததும்பிய வாழ்கையை உண்மையில் இம்மணுலகம் இன்று நிராகரிக்கிறது.

        அதைத்தான் தற்போது எகிப்து நாட்டின் ஷர்ம் அல் ஷேக் நகரில் நடைபெறும் பருவநிலை

மாற்ற உலக உச்சி மாநாடு அல்லது காப் 27 (கான்பரன்ஸ் ஆப் பார்ட்டீஸ், COP27) மாநாடு பிரதிபலிக்கிறது. அதில் தொடக்க உரை ஆற்றிய ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ்,உலகம் பருவநிலை மாற்ற நரகம் நோக்கிய ஹை-வே பாதையில் உள்ளது’ என உலகத்தைச் சரியாகவே எச்சரித்தார். 


என்ன செய்யப் போகிறது உலக நாடுகள்?  

 


                    

--தமிழில்: நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

 

 

Wednesday 9 November 2022

பிரிட்டனின் பொருளாதாரப் பெருங்குழப்பம்

             

   அந்த நாள் பேரரசு, பிரிட்டனில் இன்று பொருளாதாரப் பெருங்குழப்பம்

--ஸ்ரீனிவாஸ் கந்தேவாலே

            கிரேட் பிரிட்டன், தற்போது பெரும் பொருளாதாரக் குழப்பத்தில் நீந்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளுமே கோவிட் பெருந்தொற்றின் மோசமான பொருளாதாரத் தாக்கத்தின் இன்னல்களை 2020 –21, பின்னர் மீண்டும் 2021 –22ல் அனுபவித்தன, அவை இப்போது மெல்ல மீட்சியடைந்து வருகின்றன. பிரிட்டனும் ஐரோப்பாவும் மேலும் ரஷ்யா –உக்ரைன் போரின் காரணமாகக் கோதுமை தானியம் வரத்து, பெட்ரோல் கச்சா எண்ணை மற்றும் எரிவாயு வழங்கல் வரத்துக் குறைந்ததன் தாக்கத்தாலும் துன்பப்பட்டு வருகின்றன. இதன் விளைவு பிரிட்டனில் அதிகரித்த பணவீக்கம் (சுமார் 10%). இது கடந்த 40 ஆண்டுகளில் உச்சபட்சமாக இருக்கலாம். இதன் காரணமாக மேலும்

வணிகத் தொழில் மத்தியில் ஸ்திரத்தன்மையின்மை ஏற்பட்டது. வெறும் 45 நாட்களுக்குள் நாட்டின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் இரண்டு பிரதமர்கள் மாறிவிட்டார்கள், தற்போது  மூன்றாவது பிரதமராக ரிஷி சுனக் (இந்தியப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்) அக்டோபர் 24ல் ஆளும் கட்சி நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாதாரத்தில் கடும் ஏற்ற இறக்கம், தடுமாற்றம் மற்றும் அதன் அரசியல் பின்விளைவுகள் அடுத்தடுத்த விரைவான காட்சி மாற்றம் என உலகை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன.

            பிரிட்டிஷ் பொருளாதாரம் சந்திக்கும் முக்கியப் பொருளாதாரச் சவால்களில் வரலாற்று ரீதியான உயர் பணவீக்கம் முக்கியமானது; தொடரும் பணவீக்கம், முலாம் பூசப்பட்ட அரசுப் பத்திரங்களின் மதிப்பைக் குறைத்துவிட்டதால் (முன்பு அரசுப் பத்திரங்களின் முனைகள் தங்கமுலாம் பூசப்பட்டதால் அப்பத்திரங்களுக்கு இந்த அடைமொழி) அவற்றின் விலைகளும் வீழ்ச்சி அடைந்தன. இப்பத்திரங்கள் ஊழியர்களின் பென்ஷன் நிதியத்தின் முக்கிய ஆஸ்தியாக (முதலீடு) இருந்தது. இந்த நிதியம் (ஃபண்டு) ஒரு பக்கம், சந்தையில் மறைமுக நிதியின் முக்கிய ஊற்றாகவும், மறுபுறம் ஊழியர்களின் (அந்தச்) சேமிப்புக்கு நிலைத்த வருவாயாகவும் இருந்தது. பணவீக்கம், சாதாரண மனிதருக்குக் கிடைந்த இந்த வருவாய் ஆதார ஊற்றையும் மற்றும் பிரிட்டிஷ் முதலீட்டுச் சந்தையின் பென்ஷன் நிதியத்தின் பங்கையும் கீழே தள்ளிவிட்டது.

            ரஷ்யாவிலிருந்து எரிவாயு வழங்கல் மற்றும் கச்சா எண்ணெய் வரத்துக் கடுமையாக குறைந்ததால் -- நீண்ட கடும் மழை காலத்தைச் சந்திக்கும் நிலையில் – எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டது. (ஐரோப்பாவும் பிரிட்டனும் எரிசக்திக்கு ரஷ்யாவையே பெரிதும் சார்ந்துள்ளன.) எரிபொருளுக்கு ரேஷன் முறையை அமல்படுத்துவது பரிசீலனையில் உள்ளது; மேலும் எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் வாழ்க்கை செலவு நெருக்கடி உண்டாகிறது.  சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்ஃஎப்) ‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்’ ஆய்வறிக்கை அதன் துணைத் தலைப்பாக ‘வாழ்க்கை செலவு நெருக்கடியை எதிர்கொள்ள’ என்பதை இணைத்துள்ளது.

            பிரிட்டனின் பொருளாதாரம் இந்தியாவைவிட மேம்பட்ட மட்டத்தில் இயங்கினாலும், அது புதிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. அமெரிக்காவில் ‘சப்-பிரைம் கடன் வழங்கல் நெருக்கடி’யின் விளைவாக ஏற்பட்ட 2008 பொருளாதார மாபெரும் பின்னடைவின் தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டாலும், பிரிட்டன் தற்போது கரோனா பெருந்தொற்றின் பின்விளைவுகள், ரஷ்ய உக்ரைன் போரின் நேரடி பாதிப்பு மற்றும் அவற்றுடன் பொதுமக்கள் திரளின் வருவாய் குறைவு, வாங்கும் சக்தியில் வீழ்ச்சி மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்கள், மற்றும் (கடன்களின் மீது) வட்டி விகித அதிகரிப்பால் வேலைவாய்ப்பை உண்டாக்குவதில் ஏற்படும் பாதிப்புப் போன்ற  அவ்வவ்போது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஏற்படும் பின்விளைவுகளைச் சந்திக்கிறது. [அமெரிக்காவில் 2008 பொருளாதாரப் பெரும்பின்னடைவு என்பது வகைதொகை இல்லாமல் எளிய வட்டிக்குக் கடன் கொடுத்ததால் கட்டுமானத் தொழில் அபரிமிதமாகக் கொழிக்க, மக்கள் தேவைக்கும் அதிகமாக வீடுகளையும், அரசுப் பத்திரங்களையும் கடனுக்கு வாங்கிக் குவித்தனர். இது ஒரு நிலையில் தேக்கத்தை ஏற்படுத்த, மக்கள் வீடுகளை விற்க முடியாமல், வாங்கிய கடனையும் திரும்பச் செலுத்தாததால், ‘வளர்ச்சி போன்று வீங்கிய நீர்க்குமிழி உடைந்தது’ (பப்பிள் பர்ஸ்ட்), கடன் கொடுத்த வங்கிகள் திவால் ஆயின. ஒரு நிலையில் வங்கிகளில் கடன் கொடுக்க கரன்சி இல்லை, மதிப்பிழந்த செக்குரிட்டி பத்திரங்கள் மட்டுமே இருந்தன. இதையே ‘சப்-பிரைம் கடன் வழங்கல் நெருக்கடி’ என அழைக்கிறார்கள். இந்த 2008 பொருளாதாரப் பின்னடைவால் பலர் வேலை இழந்தனர், தங்கள் சேமிப்புகளையும் வீடுகளையும் இழந்தனர்.]

‘கன்சர்வேடிவ்’ கொள்கைகள்

            பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி, அதன் குறை கால அரசுகள் மூலம், அதனது பணக்காரர்களுக்கு ஆதரவான, தொழிலாளர் விரோதமான கொள்கைகளை அமல்படுத்த முயன்றது; அம்முயற்சி தொழிலாளர் வர்க்கத்தின் மீதும், மூலதனச் சந்தையின் மீதும்கூட தாக்குதல்களை ஏவியது. பொருளாதார மீட்பை ஊக்குவிக்க அரசு பொதுமக்களுக்கு எந்த நிவாரண உதவிகளையும் அளிப்பதைத் தவிர்த்தது; ஆனால், அதிபணக்காரர்களுக்கு வரிகளைக் குறைத்துச் சலுகைகள் வழங்கியது; இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைப் பொதுமக்களிடமிருந்து கடன் வாங்கி ஈடுகட்டும் யோசனையை முன் வைத்தது.

கூடுதல் கடன்களைத் திரும்பச் செலுத்தும் சக்தி அரசுக்கு இல்லை என்ற புரிதல் காரணமாகச் சந்தையும் பொது மக்களும் திடீரெனவும் கூர்மையாகவும் எதிர்வினையாற்றினர். முந்தைய பிரதமரும் நிதியமைச்சரும் நோக்கமின்றி ‘நம்பிக்கையில் செய்த தவறு’க்காகப் பதவி விலக வேண்டிய நிர்பந்தம். பெரும் தொழில்களின் முக்கிய தொழிற்சங்கங்கள் சில ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டன, மற்றவை வேலைநிறுத்த அறிவிப்புக் கொடுத்திருந்தன. ஒட்டுமொத்தத்தில் நிலைமை மக்கள் விரோதமாக ஆகியிருந்தது. (படம் நன்றி க்ரானிகல் லைவ்)

            புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ரிஷி சுனக், நீண்ட காலம் முன்பே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்க, அவரது இப்போதைய இந்தியத் திருமண உறவு இந்தியாவில் புதிதாகக் கொண்டாடப்படுகிறது. ஆயினும் ஒரு பிரிட்டிஷ்காரராகப் பிறந்து, பிரிட்டிஷ் கல்வி கற்று இங்கிலாந்தின் தற்போதைய மன்னரைவிட செல்வந்தராக உள்ள ரிஷி சுனக் ஒரு பிரிட்டிஷ் குடிமகன்; கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர், கன்சர்வேடிவ் பொருளாதாரக் கொள்கை பார்வையைக் கொண்டிருக்கிறார். கட்சியின் பார்வைக்குள் நின்று தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் அறிவுறுத்தலுடன் கட்சியால் அவர் தேர்ந்தெடுக்கப்- பட்டுள்ளார்.

            புதிய பிரதமரிடமிருந்து நமது எதிர்பார்ப்புகளை மேற்கண்ட அனைத்து அம்சங்களும் குறைத்து விட்டன என்பதே உண்மை. 2022 மற்றும் 2023ம் ஆண்டின் மழைக்காலப் பருவங்களின்போது எரிபொருள் அவசரநிலை உறையச் செய்யும் அம்சமாகும். ஐஎம்ஃஎப் அறிக்கை, ‘‘மிக மோசமானவை இனிதான் வர உள்ளன’’ என ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன் மேலும், “எங்களின் சமீபத்திய உலக வளர்ச்சி குறித்த முன்கணிப்புகள் 2022ல் 3.2 சதவீதமாகவும் 2023ல் அது மெல்ல 2.7சதவீதமாகும் என்றும், 25சதவீத நிகழ்தகவுடன் அது 2 சதவீதத்திற்குக் கீழேயும் சரியலாம் என்பது மாற்றமின்றி அப்படியே உள்ளன; எண்ணற்ற பல மக்கள் 2023ம் ஆண்டை (பொருளாதாரப்) பின்னடைவு போல உணர்வர்” (தகவல் ஆதாரம் ஐஎம்ஃஎப் ‘உலகப் பொருளாதாரப் பார்வை- 2022’ அறிக்கை P. XIII). “குறைந்த வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த பல நாடுகள் கடன் வலை துன்பத்திலோ அல்லது அதற்கு நெருக்கமாகவோ உள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இறையாண்மை கடன் நெருக்கடி அலையைத் தவிர்க்க அவசரமாகப் பொதுவான திட்டச் சட்டகம் தேவைப்படுகிறது. காலம் விரைவாகக் கரைந்து கொண்டிருக்கிறது. உடனடியாகச் செயல்பட வேண்டிய தருணம்” (மேற்கண்ட ஆய்வறிக்கை p. XIV)

ஏகாதிபத்திய அம்சம்

            ஆழமாக எண்ணிப் பார்த்தால் ஒரு கேள்வி நம்முன் எழும். பிரிட்டன் போன்ற வல்லமையான பேரரசரின் நாடு தொடரும் பணவீக்கத்தைச் சந்திக்கும் நிலையில், பொருளாதார நிலைத்தன்மை இன்மை, வேலையின்மை, குறைந்த ஊதியம் போன்ற பிரச்சனைகளில் ஏன் துன்பப்பட வேண்டும்? ஏற்கத்தக்கதாகத் தோன்றும் ஒரு பதில் யாதெனில், அன்று இந்தப் பேரரசின் (குறைந்த ஊதியம், பணவீக்கம், வேலையின்மை, ஏழ்மை முதலான) பொருளாதாரப் பிரச்சனைகளின் தாக்கத்தைத் தாங்கிப் பிடிக்க, காலனிய நாடுகள் அதிர்ச்சிகளைத் தாங்கும் சுமை தாங்கிகளாக (ஷாக் அப்ஸார்ப்பர்) நடத்தப்பட்டதாக இருக்கலாம்; மேலும் நாளும் காலனிய நாடுகளின் செல்வத்தின் பயன் மட்டும் மாமன்னர் ராஜாங்கத்துக்குக் கொள்ளையடித்து கொண்டு செல்லப்பட்டன  – அப்படித்தான் ஆவணச் சாட்சியங்கள் காட்டுகின்றன. பேரரசரின் ஏகாதிபத்திய நாட்டிலும்கூட செல்வத்தின் பயன்கள் பணக்காரர்களுக்கே சென்றன, சாதாரண பிரிட்டன் மக்கள் நல்ல ஊதியத்திற்காக (முக்கியமாக அமெரிக்காவுக்கு) புலம் பெயர்ந்து சென்றனர். இதன் பொருள் பிரிட்டிஷ் முதலாளித்துவம் எப்போதுமில்லாத மாபெரும் சாம்ராஜ்யத்துடன் (சுமார் 40 காலனிய நாடுகள் அதன் ஆட்சியில்), தான் அடிமைப்படுத்திய நாடுகளின் மக்களுக்கும் அல்லது சொந்த மக்களுக்கும்கூட பொருளாதார நியாயம் வழங்கவில்லை என்பதுதான். ஆனால் குறுக்கும் நெடுக்குமான வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலம் சாம்ராஜ்யமும் பிற சிறிய மன்னர்களும் நிலைத் தன்மையை அப்போது அனுபவித்தனர்.

            இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காலனிய நாடுகளின் விடுதலை பிரச்சனை தீர்க்கப்பட்ட நிலையில் பேரரசு பிரிட்டனின் பொருளாதாரம் ஒரு சிறிய நாட்டின் பொருளாதாரம் போல மாறியது; ஐரோப்பிய பொதுச் சந்தையில் நீடிப்பதா இல்லையா, குவிந்துவிட்ட அரசின் பொதுக் கடனைத் திரும்பச் செலுத்துவது எப்படி என்பது போன்ற தனது சொந்த சமூக –பொருளாதார –அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் திணறியது. மேலும் முந்தைய பேரரசின் தனது சொந்த மக்கள் விசா மூலம் வெள்ளமாகத் திரும்பி வருவதை எப்படிக் கட்டுப்படுத்துவது, தனது பொருளாதாரத்திற்கு நிலைத்தன்மை அளிப்பது எப்படி, தற்போதைய இறுக்கமான பொருளாதாரத்தில் வருவாய்ச் சமத்துவமின்மையைக் கட்டுப்படுத்துவது எப்படி மற்றும் 2024ல் பொதுத் தேர்தலைச் சந்திக்க உள்ள கன்சர்வேடிவ் கட்சிக்குப் பொது மக்களின் வாக்குகளை எப்படித் திரட்டுவது போன்ற பிரச்சனைகள் கன்சர்வேடிவ் கட்சி முன் நிற்கின்றன.

சாம்ராஜ்ய சகாப்தத்தின்போது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் சமாளித்து நடத்திச் செல்லவும் பிரிட்டனில் புதிய அரசியல் கருத்துகள், கோட்பாடுகள் உருவானது மிகவும் புதிர்போன்ற குழப்பமான கேள்வி. ஆனால் சாம்ராஜ்யத்தை இழந்துவிட்ட பிறகு பிரிட்டனின் புதியன படைக்கும் இப்புதிய உத்வேகம் பலவீனமடையத் தொடங்கியதாகத் தோன்றுகிறது. அரசு ஆக்ஸ்போர்டு பிளாவட்நிக் பள்ளியில் பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை  துறையின் பேராசிரியர் பால் காலினர் (Paul Collier) தனது நூலில் ஆழமாக விமர்சிக்கிறார்: “முதலாளித்துவம் பிளவுபட்டச் சமூகங்களை உருவாக்குகிறது, அச்சமூகங்களில் எண்ணற்ற மக்கள் கவலையும் பதற்றமும் நிறைந்த நிச்சயமற்ற வாழ்க்கையில் தள்ளப்படுவார்கள்…” (மேற்குறிப்பிட்ட நூல் ‘முதலாளித்துவத்தின் எதிர்காலம் : புதிய பதற்றங்களைச் சந்திக்கும்’, ஆலன் லேன் பதிப்பகம், 2018, பக்.201).

பொருளாதாரப் பெருமந்தம் (கிரேட் டிப்ரஷன் 2008) நிகழ்வைத் தொடர்ந்த சகாப்தத்தின்போது நடைமுறைக்கேற்ற சாதுரியமான கொள்கைகள் முதலாளித்துவத்தை மீண்டும் சீரான பாதையில் கொண்டு வந்தது; மீண்டும் அவர்கள் அதனை முயற்சி செய்யலாம். இன்னும் நமது அரசியல் முறைமை அத்தகையக் கொள்கைகளை உண்டாக்கவில்லை. நமது பொருளாதாரம் போலவே அதுவும் செயல்படாத நிலையில் உள்ளது. பிரச்சனைகளுக்கான தீர்வைக் காரிய சாத்தியமான நடைமுறைகேற்ற வண்ணம் சிந்திக்கும் ஆற்றல் அவர்களை விட்டு அற்றுப் போய்விட்டதா என்ன?

பிரிட்டனின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பிரிட்டிஷ் முறைமையில் மாற்றம் கொண்டு வர பிரதமர் ரிஷி சுனக் அவர்களால் இயலுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

--நன்றி : நியூஏஜ் (நவ.6 –12)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

Sunday 6 November 2022

நியூஏஜ் தலையங்கம் -- பாசிசமும் முசோலினியும்

 
நியூஏஜ் தலையங்கம் (நவ.6 –12)

பாசிசமும் முசோலினியும்

          நமக்கு முன் மீண்டும் வந்து நிற்கிறது அக்டோபர் 31, நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நாளில்தான், முசோலினி ஆயுதம் தாங்கிய தனது இளைஞர் ‘கருஞ்சட்டை படை’யுடன் பேரணியாக இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நுழைந்தான். அதன் முன்பே 1922 அக்டோபர் 28ல் இத்தாலிய மன்னர் விக்டர் இமானுவேல், முசோலினியை நாட்டின் பிரதமராக ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். ஆனால் அனைத்தும் அத்தோடு முடியவில்லை. ஜனநாயகத்தை அழிப்பது என்ற ஒற்றை லட்சியத்துடன் முசோலினி 1925ல் படுகொலை அட்டூழியம் ஒன்றை நடத்த, காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அவனது பயங்கர ஆட்சியை நிறுவ உதவின. ஏதேச்சிகாரத்தை நோக்கி நடந்த அவனது ஆட்சியின் வேர்களில் பயங்கரத்தைக் கட்டியமைத்தான் என்ற உண்மைக்கு மாறாக அதற்கு அவன் ‘முழுமையான அரசு’ (டோட்டாலிடேரியன் ஸ்டேட்) என்று பெயரிட்டான். சர்வாதிகாரத்திற்கு அப்படி ஒரு ஒரு பெயர்!

    இந்தியர்களாகிய நமக்கும் 1925ம் ஆண்டு முக்கியமானது. அதே ஆண்டில்தான் செப்டம்பர் 27ல் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் பிறந்தது, (கம்சனுடன் அவன் எதிரி கிருஷ்ணன் பிறந்தது போல) கூடவே அதனை வீழ்த்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

1925 டிசம்பர் 26ல் பிறந்தது. முசோலினி 1925 அக்டோபர் 28“பாசிசப் புரட்சி தினம்” என்று பிரகடனம் செய்தான். ஆனால் அந்தப் புரட்சி ஒருபோதும் நிறைவேறவில்லை. அதற்கு முன்பே, பாசிசத் தாக்குதல்கள் மற்றும் முடிவற்ற இடையூறுகளையும் மீறி ஏப்ரல் 6ல் PCI அல்லது இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல்களில் பங்கெடுத்தது; பல இடங்களை வென்றதுடன் 2,68,000 வாக்குகளையும் பெற்றது. வெற்றி பெற்றவர்களில் அன்டனியோ கிராம்சி மிகப் பிரபலமான தலைவராவார்.

       1920களின் பத்தாண்டுகள், மட்டியோட்டி நெருக்கடி வெடித்தபோது குறிப்பிடத்தக்க சில இன்னல்களை ஏற்படுத்தியது. பாசிசவாதிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மட்டியோட்டி ஒரு சோஷலிச நாடாளுமன்றவாதி. இத்தாலி நாடு கடும் முரண்பாடுகளில் சிக்கி கூறுபட்டது. பாசிசத்திற்கு எதிரான சக்திகள் தலைநிமிரத் தொடங்கின, (இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன உறுப்பினரும் செயலாளருமான) பால்மிரோ டோக்ளியாட்டி மற்றும் அன்டோனியோ கிராம்சி போன்றவர்கள் பாசிச ஆட்சிக்கு எதிராக ஐக்கிய முன்னணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து எழுதத் தொடங்கினர்.

      1931ல் ஜெர்மனியில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் 4வது கட்சிப் பேராயத்தில் இத்தாலியத் தலைவர் டோக்ளியாட்டி ‘ஐக்கிய முன்னணி’

என்ற முழக்கத்தை முன் வைத்தார்; அவரது முன்முயற்சியில் புரட்சியாளர்கள், டிராட்ஸ்கியவாதிகள், சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஒன்றாகத் திரண்டு 1934 ஆகஸ்ட் 17ல் ஓர் உடன்பாட்டிற்கு வந்தனர். விரைவில் 1935ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது பேராயத்தில் (பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவரும், 1935முதல் 1943வரை கம்யூனிஸ்ட் அகிலத்தை வழிநடத்தியவருமான) ஜார்ஜ் டிமிட்ரோ, (படம்) பாசிசத்தைத் தோற்கடிக்க நாடுகள் மற்றும் வர்க்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

     இந்த நாட்களின்போதுதான் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோக்ளியாட்டி, “பாசிசம் தனது பலத்தை எங்கிருந்து பெறுகிறது” என்ற அவரது

கட்டுரையில், ‘பாசிசத்தை அதனுடைய உண்மையான நிறங்களில் அங்கீகரிக்க வேண்டும்’ என எழுதினார். அதாவது பாசிசத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அர்த்தமற்ற அறிக்கைகள் மற்றும் கிளிப் பிள்ளை கோட்பாடுகளை மீண்டும் திரும்பச் செய்வதற்கு எதிராக அவர் எச்சரித்தார்; பிற நாடுகளின் எதார்த்த சூழல்களில் இத்தாலியப் பாசிசத்தின் உதாரணத்தை எந்திரத்தனமாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரித்தார். இத்தாலியில் எவை எல்லாம் உண்மையோ, அப்படித்தான் அவை பிற நாடுகளிலும் உண்மையாகும்; ஆனால் அவை எப்போதும் அப்படியே இருப்பதில்லை எனவும் அழுத்தமாகக் கூறினார்.

          அவர் தனது உரைகளில் பாசிசத்தின் தோற்றம், அதன் கட்டமைப்பு மற்றும் வர்க்க குணாம்சம் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றைக் குறித்தும், ஜெர்மனியின் நாசிசம் மற்றும் இத்தாலியின் பாசிசம் இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளையும் எடுத்துக் கூறினார். பாசிசத்தை அதனது உண்மையான கலரில் தோலுரித்துக் காண வேண்டும், அது ஒரு போதும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் இன்னொரு வடிவம் இல்லை. என்னதான் ஜனநாயகத்திற்கு வரையறைகள் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஜனநாயகம் ஒருபோதும் பாசிசத்தின் மற்றொரு வடிவம் அல்ல. மேலும் பாசிசம், ஒடுக்குமுறை குணத்துடன் மக்கள் ஆதரவு இல்லாத ஜனநாயக ஆட்சி போன்றதல்ல. பாசிசத்தை டோக்ளியாட்டி, ஆணாதிக்கச் சக்திகளின் பயங்கரவாதச் சர்வாதிகாரம் என்றும், அதுதான் ஏகாதிபத்தியவாத மற்றும் நிதிமூலதனப் பிற்போக்கு அம்சங்கள் எனவும் வரையறுத்தார். பாசிசம், ஏகபோக மூலதனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவான ஜனரஞ்சகக் களத்தைத் தயாரிக்கிறது.

       மேலும்,  பெட்டி அலுவலக ஊழியர்கள் (பெட்டி என்ற பிரெஞ்ச் வார்த்தைக்கு மதிப்புக் குறைந்த, தாழ்வான, இரண்டாம் தரம் என்று பொருள்படும்), மற்றும் தங்கள் சொந்த அடையாளம் இழந்த சிவில் பணியாளர்கள் மத்தியில் பாசிசம் தனது பரவலான ஜனரஞ்சக ஆதரவு அடித்தளத்தைத் தயாரிக்கிறது என டோக்ளியாட்டியும் பிற கம்யூனிஸ்ட்களும் 13வது ப்ளீனம் மாநாட்டில் வற்புறுத்தினர். இது குறித்து லெனின், பாசிசம் பரிணாமடைந்த தொடக்க காலத்தில் வளர்ச்சிபெற்ற அந்த ஜனநாயக அம்சங்களிலிருந்து ஏகாதிபத்தியவாதிகளும் ஏகபோக முதலாளிகளும், முதல் உலகப் போரின்போதே, அதைப் புறக்கணித்து ஒதுங்கிச் சென்றதைக் கண்டதாகக் கூறுகிறார்; மேலும் அதற்கு மாறாக அவர்கள் அவற்றின் மீது தாக்குதல் தொடுக்கவும் முயன்றார்கள் என்கிறார்.

      உண்மையில், இந்தப் புதியப் பொருளாதாரத்தின் அம்சம், ஏகபோக முதலாளித்துவ அம்சத்தைக் கொண்டிருக்கிறது; அது, அரசியல் ஜனநாயக முறைமையிலிருந்து அரசியல்
பிற்போக்குத்தன முறைமையாக வளர்கிறது. இது ஜனநாயகத்திலிருந்து விடுதலை பெற்ற போட்டியின்படி (அமைந்து) அரசியல் பிற்போக்குத்தனமான ஏகபோகப் பொருளாதாரத்தைப் பின்பற்றுகிறது. மாமேதை லெனின் அவதானித்து குறிப்பிட்டார்: ‘இங்கே ஏகபோக மூலதனத்தின் இயல்பான போக்கு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி அப்பட்டமான ஏதேச்சிகார ஆட்சியை நிறுவுவதே’. அவர் எப்போதுமே ஜனநாயகத்தின் வரையறுக்கப்பட்ட பங்கை விமர்சிப்பார், மேலும் சோஷலிச ஜனநாயகத்தை வலியுறுத்துவார். ஆனால் அதன் பொருள் முதலாளித்துவ முறையில் லெனின் ஜனநாயகத்தை நிராகரிக்கிறார் என்பதல்ல; மாறாக, முதலாளித்துவத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் மற்றும் எவ்வாறு முதலாளித்துவ ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கும் ஆதரவாகவே லெனின் நின்றுள்ளார்.

     பதின்ஆண்டுகள் பல பல கடந்த பிறகும், இந்த உண்மைகள் மாறாது நிலைத்துள்ளன. இந்தியாவே ஓர் உதாரணம்தான். நமது நாட்டின் பொருளாதாரப் பரப்பின் மீது நிதிமூலதனம் ஆட்சி செலுத்துகிறது. இதற்குமுன் காணாத மட்டங்களுக்குச் சுரண்டலின் உயர் மட்டம் சென்றுள்ளது. பாசிசம், கார்ப்பரேட் அரசுக் கோட்பாட்டை வழங்கியது; ஆனால் கார்ப்பரேட்- மயமாக்கல் அதுவே, முரண்பாடுகளின் ஊற்றுக் கண்ணாக நிரூபித்துள்ளது. மக்களின் பிரதிநிதித்துவம் கண்ணுக்குப் புலப்படும் ஒரு வெளியாக நாடாளுமன்றம் பயன்படுகிறது. அதனைப் பாசிசம், தனது தாக்குதலுக்கான முதலாவது இலக்குகளில் ஒன்றாக ஆக்கியது. மக்கள் கூட்டத்தின் மீது சட்டங்கள் சுமையாக ஏற்றப்பட்டு, இதற்கு மேலும் சுமக்க இயலாது என்ற நிலைக்கு ஆக்கியுள்ளது. [தற்போது நம் நாட்டில்[ அதிரடியாகக் கொண்டுவரப்படும் வேளாண் சட்டங்கள், தொழிலாளர் குறுங்குறிகள், குடியுரிமை சட்ட திருத்தம் போன்று மக்கள் மீது ஏற்றப்படும் சட்டங்களின் சுமையைச் சுட்டிக் காட்டலாம். –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது] ஆனால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை, அவர்களின் நன்நம்பிக்கை இன்னும் உயிர்ப்போடு உள்ளது – காரணம், அவர்களுக்குத் தெரியும் சரித்திரம் முசோலியையும் விட்டுவைக்கவில்லை. அவரும் மக்கள் திரளைச் சந்திக்க வேண்டி வந்தது, மற்றவர்களை முசோலினி எப்படி நடத்தினாரோ அதனையே மக்களும் அவருக்குத் திரும்ப வழங்கினர்.

    (1945 ஏப்ரல் 27-ல் மாறுவேடத்தில், முசோலினி சுவிட்சர்லாந்துக்குத் தப்ப முயன்றபோது, இத்தாலி அரசு எதிர்ப்புப் படை வீரரால் அடையாளம் காணப்பட்டு, மறுநாள் மிலன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார்; மக்கள் கூடும் சதுக்கத்தில் பெரிய கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி கிளாரா பெட்டாசி, அவளுடைய தம்பி மார்செலோ பெட்டாசியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதே கதிதான். ஹிட்லருக்கும் அதே முடிவுதான்)

வரலாறு சர்வாதிகாரிகளுக்குக் கோர முடிவையே வழங்கியது! 

--தமிழில் நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்