Saturday 2 October 2021

ஜாலியன்வாலா பாக் வரலாற்றுப் பாரம்பரியத்தை மீண்டும் நிறுவிடுக!

வரலாற்றைச் சிதைக்கும் பாஜக

ஜாலியன்வாலா பாக் வரலாற்றுப் பாரம்பரியத்தை மீண்டும் நிறுவிடுக!

--குர்னாம் கன்வர்

சண்டிகார்: இரத்த வெறிபிடித்த பிரிகேடியர் ஜெனரல் டயரின் கொடுங்கோன்மைக்கு அடையாளச் சின்னம் மட்டுமல்ல, ஜாலியன் வாலா பாக் நமது விடுதலைப் போராட்டத்தின் உற்சாகமளிக்கும் நினைவிடம்; அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட வீரம் செறிந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய புனித பூமியும்கூட. ஆனால் அது மட்டுமல்ல, விடுதலை இயக்கத் தேசியத் தலைவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்றுத் தொண்டுசெய்யவும்,  ரௌலட் சட்டத்தை எதிர்த்ததற்காக அமிர்தசரஸ் பிரிட்டீஷ் நிர்வாகம் கைது செய்த, டாக்டர் சத்யபால், டாக்டர் சைஃபுதீன் கிச்சுலு மற்றும் பிற தலைவர்களை விடுவிக்க வற்புறுத்தியும் அங்கே திரண்டவர்கள் அந்தத் தியாகிகள்.

அந்தப் பயங்கரமான நாளில், பைசாகித் திருவிழா தினமாகிய 1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலா பாக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். நடக்கவிருக்கும் அசம்பாவிதம் குறித்த அறிகுறிகள் எதுவும் மக்களுக்குத் தெரியாது. உள்ளே வருவதற்கும் தப்பிப்பதற்கும் இருந்த குறுகலான ஒரே வழியை அடைத்துவிட்ட ஜெனரல் டயர், கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் தராமல் கூட்டத்தினரை நோக்கிக் கண்டபடிச் சுடும்படி உத்தரவிட்டான்: சில வினாடிகளில் வீரர்களின் 0.303 துப்பாக்கிகளிலிருந்து 1650 முறை குண்டுகளை மழையாய்ப் பொழிந்தது – டயர் கொக்கரித்தான், ‘சுட்டேன், சுட்டேன் தோட்டாகள் தீரும்வரை சுட்டேன்’. துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பி ஓட முயன்ற மக்கள் மீது தொடர்ந்து தோட்டாக்கள் சீறின. இந்தப் படுகொலையில் (இறந்தவர்கள் 376 என்று அரசாங்கம் கணக்குக் காட்டினாலும்) ஓராயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். பலியானவர்களில் மிக இளையவருக்கு 9வயது, மிக மூத்தவருக்கு வயது 80.

மிக அதிருஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் எஸ் நாயக் சிங் ஒருவராவார், அவர் பஞ்சாபி மொழியின் பெரும் நாவலாசிரியர். 1920ல் தடைசெய்யப்பட்ட அவர் எழுதிய கவிதை அந்நிகழ்வு குறித்துப் பின்வருமாறு விவரிக்கிறது:

“குறுகலான பாக்கின் நுழைவாயில் அடைக்க உத்தரவிட்டான் டயர், என் நண்பர்களே

வெளியேற வழியில்லை, தப்பவும் முடியாது, எவ்வழியும் எங்களுக்கு இல்லை

பாக் பகுதி கொல்வதற்குச் சிக்க வைக்கும் பொறியானது, என் நண்பர்களே

அதிருஷ்டமுள்ள சிலர் தப்பி என்ன நண்பர்களே,

பலரும் அங்கே அப்போதே கொல்லப்பட்டார்கள், என் நண்பர்களே!

மார்பில் துளைத்த தோட்டாக்களுடன் ஓடிய சிலர்

தடுமாறித் தடுமாறி வாழ்வின் வலிமிகுந்த இறுதியில் வீழ்ந்துபட்டார், நண்பர்களே

மற்ற சிலர் ஓடுகையில் குண்டுபட்டு உயிரற்றச் சடலமாய்

குவியலாய் வீழ்ந்த அவலம் என்னென்பேன், என் நண்பர்களே…”

அந்தப் பயங்கரப் படுகொலையை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், ஏன் இங்கிலாந்திலேயே கண்டித்தனர். மகாகவி இரவீந்திரநாத் தாகூர், ‘நாகரீகமடைந்த அரசுகளின் வரலாற்றில் அதுவரை காணாதது அந்தப் படுகொலை’ எனக் கூறி தனக்களிக்கப்பட்ட (knighthood) ராஜாங்கச் சிறப்புப் பட்டத்தைத் திருப்பி அளித்தார். வின்சென்ட் சர்ச்சிலேகூட ‘மிருகத்தனமான கொடூர நிகழ்வு’ என்றார்.

விடுதலை என்று அழைக்கப்பட்ட அந்தப் பாரம்பரிய நினைவிடத்தைக் கடைத்தெருவுக்கு மாற்ற பிரிட்டீஷ் விரும்பியது; அப்போதுதான் படுகொலையின் ஞாபகங்கள் மீண்டும் தூண்டப்படாமல் மறக்கடிக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அதற்குள் அந்த இடத்தின் உரிமையாளரிடமிருந்து தேசியக் குழு ஒன்று விலைக்கு வாங்கியதால் அந்த இடத்தின் அடையாளம் அப்படியே பாதுகாக்கப்பட்டது. அந்த இடம் விடுதலை ஆர்வத்தைத் தூண்டும் ஆதர்சமான பூமியாகத் தொடர்ந்து விளங்கியது. இந்த இடத்தில் மிக முக்கியமான மாநாடுகள் நடைபெற்றன. அவற்றுள் தோழர் சோகன் சிங் ஜோஷ் மற்றும் மாவீரன் பகத் சிங் 1928 ஏப்ரல் 11 –13 தேதிகளில் நிர்மாணித்த ‘நவஜவான் பாரத் சபா’வின் முதல் அமைப்பு நிலை மாநாடு நடத்தப்பட்டதும் ஒன்று. கீர்த்தி கிசான் பார்ட்டி என்னும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின் (.WPP) பல மாநாடுகளும் 1926 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட அதன் ‘கீர்த்தி (தொழிலாளர்கள்) மாத இத’ழின் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

1951 மே முதல் நாள் அந்த இடத்தை ‘ஜாலியன்வாலா பாக் தேசிய அறக்கட்டளை’ அமைப்பிடம் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரஸாத் ஒப்படைத்தார்.

நினைவுச் சின்னங்களைச் சிதைக்கும் பாஜக அரசு

தற்போதைய பாஜக அரசு தனது காவி கொள்கை திட்டங்களை முன்னெடுப்பதற்காக விடுதலைப் போராட்ட இயக்கத்தையும் அதனோடு தொடர்புடைய நினைவுச் சின்னங்களையும் சிதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது; காரணம், விடுதலைப் போராட்டத்தில் (அப்போது பிறக்காத) பாஜகவும் அதனுடைய தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் எந்தப் பங்கும் எடுக்கவில்லை என்பதுடன், விடுதலைப் போராட்டத்தை எதிர்த்துப் பிரிட்டிஷ்காரர்களுடன் கைகோர்த்து அவர்கள் தரப்பில் நின்றனர் (என்ற குற்ற உணர்ச்சியே). எனவே நினைவுச் சின்னங்களைப் புதுப்பித்து அழகுபடுத்துவது என்ற பெயரில் நினைவுச் சின்னத்தின் உண்மை பண்பு குணத்தையும் உணர்வையும் அதிலிருந்து உரித்துவிடும் கீழ்மையில் இறங்கியுள்ளனர். புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்ற முழு காலத்திற்கும், உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தில் அந்த இடத்தையும் கட்டடங்களையும் முழுமையாகப் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்து விட்டனர். ஆனால் அடிப்படையான வரலாற்று கட்டமைப்பில் என்ன மாற்றங்களைச் செய்கிறார்கள் என்பது பற்றிய செய்திகள் வெளியே கசியத் தொடங்கியதும், பல அமைப்புகள், அமிர்தசரஸ் நகர மக்கள் மற்றும் கல்வியாளர்களும், குறிப்பாக ‘தேசபக்த் யாத்கர் கமிட்டி’ (தேசபக்தத் தியாகிகள் நினைவுக் குழு) எனப் பலரும் தேசிய நினைவுச் சின்னத்தைச் சிதைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடியால் அது திறந்து வைக்கப்பட்ட பிறகு கோபக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி நினைவுச் சின்னத்தின் ஒரிஜினல் கட்டமைப்பை அப்படியே மீண்டும் மறு நிர்மாணம் செய்ய வற்புறுத்தி கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. இந்த இடத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த தியாகிகளின் இக்காலச் சந்ததியினர் மறு நிர்மாணத்திற்காக ஊர்வலங்கள் நடத்தினர்.  

முக்கியமாகச் செய்யப்பட்ட மாற்றங்கள்:

Ø    ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் பொதுமக்கள் நுழைவதற்கான சிறிய சந்து வழி –அந்தக் குறுகிய வழியேதான் ஜெனரல் டயர் போலீசார் வந்தார்கள், எவ்வளவு மக்களை முடியுமோ அவ்வளவு பேர்களைச் சுட்டுக் கொல்வதற்காக வழியை அடைத்தார்கள் – அந்த வழியை மாற்றி அமைத்துள்ளனர்; இருபுறமும் பிரம்மாண்டமான பஞ்சாபிய பங்ரா குழு நடனக் காட்சிகளை ஓவியமாகத் தீட்டியும் சித்தரங்களைச் செதுக்கியும் வைத்துள்ளனர், செல்பி எடுத்து மகிழும் பார்வையாளர்களுக்காக.

Ø   தோட்டாக்களிலிருந்து உயிர் தப்பிக்க  மக்கள் விழுந்து அதிலேயே நூற்றுக்


கணக்கானோர் மாண்ட வரலாற்றுக்குரிய கிணற்றை முழுமையாக பூசி மூடிவிட்டார்கள்; அதனைச் சுற்றி செங்கல் மற்றும் கண்ணாடிகள் கொண்ட கட்டுமானத்தை, பார்வையாளர்கள் மும்முரமாக அங்கே செல்பி எடுத்து மகிழ, ஏற்படுத்தியுள்ளனர். கிணற்றின் பக்கச் சுவர்களில் தோட்டாக்கள் வெடித்து ஏற்படுத்திய வரலாற்றுச் சுவடுகளின் உண்மை தன்மை அடையாளங்களை மாற்றி விட்டனர்.

Ø    தியாகிகளின் அணையாத ஜோதி இடத்தை, எங்கிருந்து டயர் சுடுவதற்கு உத்தரவிட்டான் என்பதைச் சுட்டிக் காட்டும் ஸ்தம்பத்தை -- அதன் தோற்றப் பொலிவு மற்றும் அமைந்த  இடம்  என -- அனைத்தையும் மாற்றி விட்டார்கள்.

Ø    நுழைவுச் சீட்டு ஜன்னல் கவுண்டர் ஒன்றையும் நுழைவாயில் கதவருகே அமைத்துள்ளனர்.

Ø   முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பிருக்கும் நீர்த் தடாகத்தில் – மறைமுகமாக பாஜக கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பிரச்சாரம் செய்வதற்காக -- தாமரை குளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இவையெல்லாம் மக்களிடையே கடுமையான கோபத்தை மூட்டியுள்ளன.

            பஞ்சாபிக் கவிஞர் ஒருவர் குறியீட்டு அடையாளத்துடன் எழுதினார் :

“தோட்டாச் சுவடுகள் முழுமையாகத் தெரியவில்லை,

சுவர்களில் மின்னும் பளிங்குக் கற்கள் கண்ணைப் பறிக்கிறது!

வா போவோம், நாம் வேறெங்காவது சந்திப்போம்,

இவ்’விடம்’ அதே ஜாலியன்வாலா பாக் இல்லை!”

எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

முற்போக்கு எழுத்தாளர் கூட்டமைப்பின் தலைவர், பொன்னீலன்; பொதுச் செயலாளர் டாக்டர் சுக்தேவ் சிங் சிர்சா மற்றும் இராஜேந்திர ராஜன், வினீத் திவாரி; இந்திய நாடகக் கலை மன்றத்தின் (இப்டா) அனைத்திந்திந்தியத் தலைவர் ரன்பீர் சிங் மற்றும் பொதுச் செயலாளர் ராகேஷ் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஜாலியன்வாலா பாக் வரலாற்று தேசிய நினைவுச் சின்னத்தைச் சிதைத்துச் சீர்குலைத்ததைக் கடுமையாகக் கண்டித்து மீண்டும் அதன் பழைய வரலாற்றுப் புனித நிலைக்குப் புத்துயிர்த்து அதனை நிறுவிட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட மரபுகளின் வரலாற்றுப் பெருமையைப் பாதுகாப்போம்!

--நன்றி : நியூஏஜ் (அக்.3 –9)

--தமிழில் : கவிஞர் நீலகண்டன், கடலூர்

 

              

 

              

No comments:

Post a Comment