Monday 20 September 2021

சமூக நீதியில் அபாரமாகச் சாதிக்கும் தமிழ்நாடு

 

           சமூக நீதியில் அபாரமாகச் 
                  சாதிக்கும் தமிழ்நாடு

                                 --கே எஸ் சலம்  

                                                  (தேசியத் தலைவர்,         AIPF  அனைத்திந்திய முற்போக்குப் பேரவை)

            நீட் தேர்விலிருந்து மாநிலத்தைத் துண்டித்து விலக்கு கோரி தமிழக அரசு சமீபத்தில் சட்டம் நிறைவேற்றியுள்ளது; அதன் மூலம் சமகால இந்தியாவின் தொடர்ச்சியான சட்டவழக்குகளின் இரண்டு முக்கியப் பிரச்சனைகளில் நாட்டை வழிநடத்துகிறது. ஒன்று, கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி அவசர கால சகாப்தத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைப் பொதுவெளிக்கு விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

            இரண்டாவது, தற்போதைய பாஜக அரசு மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட்டு மருத்துவ மற்றும் தொழில்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான (பொதுவான போட்டித்) தேர்வுகளை நடத்துவது; அது மட்டுமல்ல, அந்தந்த மாநிலங்களில் மாணவர் இடஒதுக்கீடு குறித்தச் சமூகவாரியான எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகத்தினர் என அடையாளம் காணப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப நடைமுறையில் உள்ள சமூகநீதி சார்ந்த அம்சங்களிலும் தலையிடுகிறது. இச்சூழ்நிலையில் தமிழ்நாடு இயற்றிய சட்டமும் ஸ்டாலின் அரசு எடுத்துள்ள முன்னெடுப்புகளும் ஒன்றிய – மாநில அரசு உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வந்துள்ளது.

திராவிட அற்புதம்

            கடந்த நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் சில சமுதாயக் குழுக்கள் மெட்ராஸ் (ராஜதானி) மாகாணத்தில் மேல் நோக்கி நகர்ந்து முன்னேறியது; அதற்குத் திராவிடக் கொள்கைகளின் தாக்கம் சமூகச் சீர்திருத்தத்தில் மட்டுமல்லாமல், கல்வியை ஜனநாயகப்படுத்தியதன் மூலமாக நிகழ்ந்ததே காரணம். இதனை இக்கட்டுரையின் ஆசிரியர் (கே எஸ் சலம்) 2002ல் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் “திராவிட அற்புதம்” என வர்ணித்துள்ளார்: அப்புத்தகம் அனைத்திந்திய மற்றும் நான்கு தென் மாநிலங்களில் மனித வளர்ச்சிக் குறியீட்டு மதிப்பீடு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. நீட் தேர்வில் இதர பின்தங்கிய வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீட்டினை, ஒன்றிய அரசுடன் நீண்டகால போராட்டத்திற்குப் பின், சாதித்ததன் மூலமாக (அந்தத் ‘திராவிட அற்புதம்) மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தச் சாதனைக்கான பெருமை தற்போதைய தமிழக அரசையே சாரும்; அதன் உறுதியான தொடர் முயற்சி மற்றும் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த புத்திசாலித்தன நடவடிக்கைகளால் சட்டபூர்வமான பங்கைப் பெற முடிந்தது.

ஐந்து தென்மாநிலங்களில் முன்னேற்றம்

            இந்தப் பின்னணியில்தான் தற்போதைய ஐந்து தென்மாநிலங்களின் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும்;  தற்போதைய தெலுங்கானா மற்றும் சில சமஸ்தானங்களைத் தவிர்த்த அவை முன்பு மெட்ராஸ் (ராஜதானி) மாகாணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன. கல்வி குறிப்பாக உயர்கல்வி இன்று வாழ்க்கைக்கான தயாரிப்புகளுக்காக அல்லாமல் நாகரீகச் சமுதாயத்தின் ஒரு பகுதியாக அவசியத் தேவையாகக் கருதப்படுகிறது. உள்ளடக்கம் மற்றும் நிகழ்முறை அம்சத்தைப் பொருத்து 21ம் நூற்றாண்டின் உயர்கல்வி, இருபதாம் நூற்றாண்டிலிருந்து வேறுபடுகிறது. கல்வியில் அறிவின் பெரும் விரிவும், அதனை அது தொடர்பான கல்விச் செயல்திட்டங்களாக மாற்றும் முறைகளும் மற்றும் திறன் தொகுப்புகளும் பெரும் மாறுதல்களை அடைந்துள்ளன. இம்மாநிலங்கள் அல்லது பகுதிகள் பல்கலைக்கழக

உயர்கல்வி தயாரிப்புகளுக்கான தொடக்ககால முயற்சிகள் வெகுகாலம் முன்பே 1887ல் கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பம்பாயில் நிறுவப்பட்ட மூன்று நவீன பல்கலைக் கழகங்களின் மூலமான வரலாற்றுச் சாதகத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால் கிடைத்துள்ள தரவுகள் தென்னிந்தியா குறிப்பாக, தமிழ்நாடு, கர்னாடகா, கேரளா மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட கல்வியில் மிகவும் முன்னேறி நடைபோடுவதைக் காட்டுகின்றன.

உயர்கல்வி அகில இந்திய சர்வே

            2019 – 20ம் ஆண்டிற்கான உயர்கல்வி குறித்த அனைத்திந்திய புள்ளி விபரம் வருமாறு: 18 முதல் 23 வயது பிரிவினரில் ஒட்டு மொத்த சேர்க்கை விகிதத்தில் (75 சதவீதத்துடன் உள்ள சிறிய மாநிலமான சிக்கிம் தவிர்த்து) நாட்டில் முதன் முறையாகத் தமிழ்நாடு 50 சதவீதத்தைக் கடந்துள்ளது. (இது 2030ல் அடைய வேண்டிய இலக்காகப் புதிய கல்விக் கொள்கை நிர்ணயித்துள்ளது.) இதில் தற்போது தேசிய சராசரி 27.1 சதவீதமாக இருக்க, தமிழ்நாடு இரண்டு மடங்காக அதாவது 51.4 சதவீதம் சாதித்துள்ளது மிகவும் வியப்பிற்குரியது. சேர்க்கை விகிதம் கேரளாவில் 38.8%, தெலுங்கானா 35.6%, ஆந்திரப் பிரதேசம் 35.2% மற்றும் கர்னாடகா 32%; இது தேசிய சராசரியை விட அதிகம் என்பது மட்டுமல்ல நாட்டின் செல்வச்செழிப்புமிக்க சில பணக்கார மாநிலங்களையும் விஞ்சியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தென்னகத்தின் இந்த உன்னதமான பயணம் உயர்கல்வியில் மட்டுமல்லாமல் பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளிலும் பிரதிபலிக்கிறது; ஜிடிபி தனிநபர் வருமானம் நாட்டில் அதிகமாக உள்ள மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தென்னகத்தின் இந்தப் பெருமிதப் பயணம் தனித்தச் சிறப்பு மிக்கது.

         இது புதிர்போன்ற முரண்பாடாகத் தோன்றினாலும் அனுபவ உண்மை சாத்தியமாக்கியது;  1990களில் தென்னகத்தின் புதியன சாதிக்கும் அறிவார்ந்த கல்வி (தொழில்) முனைவோரின் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் சாதுரியம், புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் இதனைச் சாதித்தது. பல்வேறு மட்டங்களில் உயர்கல்வியில் சேர்ந்த 3.8 கோடி மாணவர்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகா, மகாராஷ்டிரா மற்றும் உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டுமே 50சதவீதமானவர்கள் உள்ளனர்; அதிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழ்நாடு முன்னணியில் விளங்கி நாட்டிலே மிக அதிக எண்ணிக்கையான 26 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது; தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்ட்டிராவும் கர்னாடகாவும் உள்ளன. இதே முன்னணி பாத்திரத்தைப் பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கையில் 455 தமிழ்நாட்டிலும், அடுத்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசமும் வருகின்றன. பொறியியல் மட்டுமின்றி பலவித வேறு துறை படிப்புகளிலும் மெல்ல கல்வி நிறுவனங்களை அமைத்து வருகின்றன. இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் 42 (அடுத்து கர்னாடகாவில் 29, தெலுங்கானாவில் 22) உள்ள நிலையில் நீட் தேர்வில் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கானப் போராட்ட இயக்கத்தைத் தமிழ்நாடு தலைமையேற்று நடத்தியது என்பது மிகவும் இயல்பானதேயாகும். மேலும் இங்கெல்லாம் 1960கள் முதலே ஓபிசி இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகையும் கல்லூரிகளும்

            தென்னிந்தியாவில் உயர்கல்வி பரவி விரிந்துள்ளதைக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் பார்க்கலாம். லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனைக் கல்லூரிகள் உள்ளன என்ற விகிதம் தெலுங்கானாவில் 59, கர்னாடகா 53, ஆந்திரப் பிரதேசம் 48, கேரளா 44 மற்றும் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 38 கல்லூரிகள் என்ற விகிதத்தில் (மொத்தம் 2610 கல்லூரிகள்) உள்ளன. இதில் தேசிய சராசரி 30 மட்டுமே. நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் என்ற வகையில் பெங்களூரில் 1043 கல்லூரிகள் இருப்பது மிகவும் வியப்பூட்டக்கூடியது. கல்வி முறையின் தரம் மற்றும் பெருமிதம் என்பதை ஒரு மாநிலத்தில் எத்தனை வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து பயில்கிறார்கள் என்பதைக் கொண்டு அளவிடலாம். அதன்படி கர்னாடகாவில் 10261, உ.பி. 5189, மகாராஷ்டிரா 4599, தமிழ்நாடு 4461 மற்றும் ஆந்திராவில் 4356 வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளார்கள். இதன் பொருள் இந்தியாவில் பயிலும் மொத்த வெளிநாட்டு மாணவர்களில் ஏறத்தாழ 60 சதவீதத்தினர் இந்த ஐந்து மாநிலங்களில் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

கல்வியில் சமூக, பாலினச் சமத்துவம்

            கல்வியில் சமத்தன்மை பிரச்சனையை ஒரு தரக்கட்டுப்பாடு அளவீடாகக் கொண்டால் அதனைக் கல்லூரியில் சேர்க்கை எண்ணிக்கை விகிதத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கான விகிதத்தின்படி மதிப்பிட முடியும். அதுதானே உயர்கல்வி வழங்குவதின் இலட்சிய நோக்கங்களில் ஒன்றாகும்; உயர்கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை மதிக்கும் மற்றும் ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் உண்மையான நாகரீக சமூகத்தை உருவாக்குவதே நோக்கம். தேசிய மட்டத்தில் கல்லூரி சேர்க்கையில் ஷெட்யூல்டு சமுகத்தினருக்கான சராசரி விகிதம் 13.5 சதவீதம், இது 2010ல் 19.4%ஆக இருந்தது. இடைவெளி 5.9%. இந்த இடைவெளி 2019ம் ஆண்டு 3.7%ஆகக் குறைந்தது. (அதாவது, அனைவருக்குமான தேசிய சராசரி எண்ணிக்கை விகிதம் 27.1 சதவீதமாக இருந்தபோது, எஸ்சி சமூகத்தினருக்கான விகிதம் 23.4 சதவீதம் மட்டுமே. எனவே வித்தியாச இடைவெளி 3.7 சதவீதம்). இதுவே மலை சாதி எஸ்டி இன மக்களுக்கான அதேஆண்டு வாரியான ஒப்பீட்டு விகிதம் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இடைவெளி தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

           பாலினச் சமத்துவக் குறியீடு அனைத்துப் பிரிவினருக்கும் நேர்மறையாக 1.01 எனவும், எஸ்சிக்கு 1.05 என இருக்கும்போது எஸ்டி பிரிவினருக்கு 0.97 என்ற நிலையில் உள்ளது. கல்லூரி எஸ்சி இன மாணவர்கள் சேர்க்கையில் 2010ல் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிராவைப் பின்னுக்குத் தள்ளி 2019ல் தமிழகத்தில் மிக அதிகமான 39.6 சதவீதமாக முதல் இடத்தைப் பிடித்தது.

            ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கை விகிதங்களில் அனைத்து வகை தேசிய சராசரியை ஒப்பிட எஸ்சி பிரிவின் விகிதத்தில் தென்னிந்திய அனைத்து மாநிலங்களும் மிகச் சிறப்பாக விளங்குகின்றன. ஆனால் இப்பிரிவு மக்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம் மற்றும் உள்ளடக்கம் குறித்து ஆராய வேண்டிய தேவை எழுந்துள்ளது; ஏனெனில் இந்திய தொழில்நுட்ப

நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் உயர்கல்வி நிறுவனத்தில் கல்வியை இடைநிறுத்தும் ஷெட்யூல்டு இன மாணவர்களின் விகிதம் ஏனைய பிற கல்வி நிறுவனங்களைவிட ஒப்பீட்டளவில் எதிர்மறையாக மிக அதிகமாவதில்  சிறந்து விளங்குகிறது: இதன் பொருள் உயர் கல்வியில் எதிர் புரட்சி அரங்கேற்றப்படுகிறது என்பதன் சமிக்ஞையே. எவ்வளவு விரைவாக அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்க்கிறதோ அவ்வளவு விரைவாக (‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ உள்ளிட்ட) தென்னிந்தியா கொண்டாடுவதற்கான நல்ல நாட்கள் காத்திருக்கின்றன.

--நன்றி: நியூஏஜ் (செப். 19—25)

--தமிழில் : நீலகண்டன்,

    தொடர்புக்கு 94879 22786     

 

 

 

 

 

 

No comments:

Post a Comment