Thursday 25 November 2021

ரஷ்யப் புரட்சியின் 104வது ஆண்டு -- 21ம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள்

 

ரஷ்யப் புரட்சியின் 104வது ஆண்டு

மாபெரும் அக்டோபர் :

21ம் நூற்றாண்டில் ஜனநாயகம் 

மற்றும் புரட்சிகர நிகழ்முறை

--அனில் ரஜீம் வாலே

நியூஏஜ் ( நவ.14 – 20)

            ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’ என பாரதி ஆனந்தக் கூத்தாடிய ரஷ்யப் புரட்சி பொதுவானதும் மற்றும் குறிப்பானதுமான அம்சங்களை உள்ளடக்கியது: ஒன்று, அனைத்துப் புரட்சிகள் மற்றும் ஜனநாயக மாற்றங்கள் என்பனவற்றிற்குப் பொருந்தக் கூடியவை; மற்றொன்று முழுவதும் ரஷ்யப் பண்புகளைக் கொண்ட அந்த மண்ணிற்கே உரிய அம்சம். சில குறிப்பிட்ட அகவய மற்றும் புறவயமான நிலைமைகள் நிலவிய சூழ்நிலையில், அங்கே ஏகாதிபத்தியத்தின் அனைத்து முக்கிய முரண்பாடுகளும் ரஷ்யாவில் திரட்சியாகக் குவிக்கப்பட அது,  புரட்சிக்கான எதார்த்த சூழல் உருவாவதை நோக்கிச் செலுத்தியது.

       

ஜாரின் ரஷ்யா ஜனநாயக நாடு அல்ல, ஏதேச்சிகார முடியாட்சி; அங்கே தேர்தல்கள் நடத்தப்படுவது அபூர்வம்; முற்போக்கான கட்சிகள், குறிப்பாக (RSDLP) ‘ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி’, பொதுவாக சட்டவிரோதமாகவே செயல்பட்டது. வாக்களிக்கும் உரிமை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் வி ஐ லெனின் சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக வாய்ப்புகள் எவை கிடைத்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தினார். ரஷ்ய RSDLP கட்சி ஜனநாயக உரிமைகள் மற்றும் வாய்ப்புகளைத் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தது. அந்தக் கட்சி 1906ல் ரஷ்யப் பாராளுமன்றமான டூமாவுக்கு நடந்த தேர்தல்களைப் புறக்கணித்தது மாபெரும் தவறு என்று கருதினார் லெனின். இரண்டாவது டூமாவுக்கு 1907லும், மூன்றாவது 1907 –12 மற்றும் நான்காவது தேர்தல் 1912 –17ல் நடைபெற்றன.

               ரஷ்யத் தொழிலாளர் கட்சி 1907 டூமாவுக்கு 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் வெற்றி அடைந்தபோது, அவர்கள் அந்த அவையை முழுமையாகப் பயன்படுத்தினர். ரஷ்யாவில் தேர்தல் பிரச்சாரம் என்பது அபூர்வம்; இருப்பினும் கிடைக்கும் வாய்ப்புகளைக் கட்சி முறையாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் லெனின்.

               ரஷ்யப் புரட்சிக்கு முன்பும் அதற்குப் பின்பும் மேற்கத்திய நாடுகளில் புரட்சியாளர்கள் ஜனநாயக அமைப்புகளில் பங்கெடுத்து அவற்றைப் புரட்சிகரப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினர் என்பதைச் சுட்டிக் காட்டி லெனின் வலியுறுத்துகிறார். ‘எந்தச் சூழ்நிலையிலும் ரஷ்யப் புரட்சி வழிமுறைகளைப் பிரதி எடுத்து (காப்பி அடிக்கும்) போலச் செய்தலில் ஈடுபடக் கூடாது’ என லெனின் வற்புறுத்தி எச்சரிக்கிறார். இதை அவரது புகழ்பெற்ற “இடதுசாரி கம்யூனிசம்: ஓர் இளம்பருவக் கோளாறு” என்ற நூலில் மிகத் தெளிவாக்குகிறார். பாராளுமன்ற மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களின் மீது அவர் ஆகக் கூடுதலான அழுத்தம் தருகிறார்.

சோவியத்கள் வகித்த பங்கு

               ரஷ்யாவில் சோவியத்கள் அதிகாரபூர்வமற்ற மக்கள் திரள் ஜனநாயக அமைப்புகளாகத் திகழ்ந்தாலும், பரவலாக அங்கீகரிக்கப்பட்டன. அந்த அமைப்பு 1905 புரட்சியின்போது பிறந்தது. ஏறத்தாழ ஆண்டுதோறும் நடக்கும் அதற்கான தேர்தல்களில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. சோவியத்கள் 1917ல் நடந்த புரட்சியில் முக்கிய பங்காற்றின. உண்மையில் ரஷ்யப் புரட்சியே ‘சோவியத் புரட்சி’தான் – அதிலிருந்துதான் முதலில் சோவியத் ரஷ்யா மலர்ந்து பின்னர் சோவியத் யூனியனாக அமைக்கப்பட்டது.

               ரஷ்ய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படைவீரர்களின் அதிகார அமைப்புகளே சோவியத்கள். அந்தச் சோவியத்கள் மூலமாகவும் அதன் வடிவத்திலும் உழைக்கும் மக்கள் கூட்டம் தங்களின் ஆட்சியைச் செலுத்தினர் என்பதால் அது பெருந்திரள் உறுப்புகளாகும். எனவே வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு மன்றத்தைவிட (கான்ஸ்டிடியுவன்ட் அசம்பிளி) சோவியத்கள் கூடுதல் ஜனநாயகத் தன்மை உடையன. மார்ச் மாதத்திற்கும் நவம்பருக்கும் இடையே (பழைய காலண்டர்படி பிப்ரவரி முதல் அக்டோபர் வரை) 1917ல் அடுத்தடுத்து சோவித்களுக்கு நடந்த தேர்தல்களில் மெல்ல மெல்ல உறுதியாக போல்ஷ்விக்குகள் (சற்றே புரட்சிக்கு முன்னதாக) மென்ஷ்விக்குகள் மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்களைவிட பலம் அடைந்து பெரும்பான்மை பெற்றதன் மூலம் சோவியத்களை வழிநடத்த அடித்தளம் இட்டனர். 

               இவ்வாறாக, ரஷ்யப் புரட்சியின் வரலாறு ஆயுதம் தாங்கிய தொழிலாளர்களின் வெறும் வரலாறு மட்டுமல்ல; ஆனால் அதற்கும் மேல் மக்களிடையே சோவியத்களாகத் திரண்டு அமைந்த பெருந்திரள் ஜனநாயகச் செயல்பாட்டின் வரலாறாகும். இதுவே ரஷ்யப் புரட்சியின் ஜனநாயக இயல்பும் தன்மையுமாகும்.  

சோவியத்களும் கட்சியும்

               சோவியத்கள் அதிகாரத்தைக் கட்சியின் கைகளில் குவிப்பதை லெனின் எதிர்த்தார். உழைக்கும் வர்க்கம் மற்றும் சோவியத்கள் ‘சார்பாகச் செயல்படும்’ போக்கைக் கட்சி வளர்த்துக் கொள்ள, இது அந்த வர்க்கத்தின் நியாயபூர்வமான செயல்பாடுகளை மெல்ல மெல்ல இழக்கச் செய்தது. கட்சியானது யோசனைகளைத் தெரிவித்து வழிகாட்டலாமே தவிர, அது சோவியத்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்திற்கு இப்படிச் செய் என உத்தரவிடக் கூடாது. வர்க்கத்தின் ஆட்சியே தவிர கட்சியின் ஆட்சி அல்ல. இது குறித்த விவாதங்கள் கட்சிக்குள் நீண்ட காலம் நடைபெற்று வந்தன; மேற்கண்ட கருத்தின் அம்சத்தைப் பார்க்கத் தவறிய ஸ்டாலின் மற்றும் மற்ற சில தோழர்கள் குறித்து லெனின் மிகவும் அதிருப்தி அடைந்தார். லெனின் மறைவுக்குப் பிறகு, சோவியத்கள் மெல்ல தங்கள் அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் இழந்து, புறக்கணித்துப் பின்னுக்குத் தள்ளப்பட, முழு அதிகாரமும் போல்ஷ்விக் கட்சியின் கைகளுக்கு இடம் மாறியது.

               இது தனிப்பட்ட அதிகாரத்திற்கு வழியமைத்து, இறுதியில் ஸ்டாலின் கைகளில் அதிகாரம் அனைத்தும் குவிக்கப்பட்டதன் விளைவு, பேரழிவு ஏற்பட்டது. இந்த அபாயகரமான, ஜனநாயக விரோத அணுகுமுறையை முன்னுணர்ந்தவராக லெனின், தனது இறுதி கடிதங்களில் இது குறித்துக் கட்சியின் மத்திய குழுவை எச்சரித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை உடனடியாக நீக்குவதற்கு லெனின் விடுத்த அழைப்பு உதாசீனப்படுத்தப்பட்டது. சோவியத்களிடமிருந்து அதிகாரங்களைக் கட்சியின் மத்திய குழுவும் பொலிட் பீரோவும் பறிக்கும் இக்கேடு தரும் போக்கு குறித்து ரோசா லக்சம்பர்க்கும் எச்சரித்தார். இந்த நெடுநோக்குப் பார்வையுடன்தான் லெனின், அந்தஸ்தில் மத்திய குழுவிற்குச் சமமான பரவலான அதிகாரங்களுடன், ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆய்வு’ (இன்ஸ்பெக்க்ஷன்) என்பதை ஏற்படுத்தி அமைக்குமாறு யோசனை தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகில் –                      

ஜனநாயகமும் புரட்சியும் :

            1917ல் ரஷ்யப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் கடந்து விட்டது. சர்வதேசச் சூழலில் தீவிரமான மாறுதல்கள் உலகில் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றங்கள் உத்தி மற்றும் தந்திரோபாயங்களில் பெரும் மாறுதல்களைத் தேவைப்படுத்தியுள்ளன. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய நிலைமைகளின் குணாம்ச ரீதியிலான மாற்றங்களை மதிப்பீடு செய்ததில், புதிய உத்திகளையும் தந்திரோபாயங்களையும் ஏற்படுத்திடக் கோரியுள்ளன.

               உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள் புரட்சி குறித்த மார்க்சிய – லெனினியக் கோட்பாட்டுக்களில் புதிய அம்சங்களை இணைத்து அவற்றை (தற்காலத்திற்குப் பொருந்துமாறு) புதுப்பித்துள்ளன. எனவே அந்த ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை. முன்பு எப்போதும் இல்லாத அளவு ஜனநாயக அமைப்புக்களும் உரிமைகளும் பரவி உள்ளதால், எதிர்காலப் புரட்சிகள் ஆயுதங்களை நாடிப் போக வேண்டாம் என உறுதியாகச் சான்றளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வடிவத்திலான போராட்டம், முக்கியமான ஒன்றாக மாறி, பெருந்திரள் மக்கள் சக்தி இயக்கங்களால் ஆதரிக்கப்படுகிறது. சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களில் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவது (தற்போது) கம்யூனிஸ்ட்கள், தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகர கட்சிகளுக்குக் கேந்திரமான முக்கியத்துவம் உடையதாக மாறியுள்ளது. 

         

 இது உண்மையில், பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, மக்கள் திரளுக்கான வெற்றி. மிகத் துல்லியமாக, அனைவருக்குமான வாக்குரிமை உட்பட, இவ்வுரிமைகளுக்காகத்தான் தொழிலாளர் வர்க்க இயக்கம், மார்க்சின் காலத்திலிருந்தே, போராடி வந்தது. 1830கள் மற்றும் 40களின் காலத்தின்போது அனைவருக்குமான வாக்குரிமை என்ற கேள்வி முதலில் கூடுதல் அழுத்தத்துடன் எழுப்பப்பட்டது; இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் (சார்ட்டிஸ்ட் மூவ்மெண்ட்) தனது முக்கிய கோரிக்கையாக இதை வலியுறுத்தியது. இதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு மார்க்சும் ஏங்கெல்சும் இந்த இயக்கத்திற்குத் தீவிரமாக ஆதரவு வழங்கினர்.

   தொழிலாளர்கள் மற்றும் பரவலான புரட்சிகர போராட்டத்தில் 20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் இந்த அம்சத்தில் முக்கியமானதாக ஆனது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இவ்வாறு புதிய பாத்திரத்தையும் பொறுப்புகளையும் வைத்தது. மேலும் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் முதன் முறையாக என்ன விலை தந்தாகிலும் புதிய உலகப் போரைத் தவிர்க்குமாறு உலக மக்களை அறைகூவி அழைத்தது. ‘அணு ஆயுதம் மற்றும் நியூக்கிளியர் ஆயுதங்களைக் குறைப்பது மட்டுமின்றி, பொதுவாகவே படைக்குறைப்பு, பதட்டத் தணிவு’ என்ற அதன் முழக்கம், உலகின் ஜனநாயக இயக்கத்திற்கு உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் வழங்கிய புதிய பங்களிப்பாகும். (இரண்டாவது உலகப் போரில் பயன்படுத்திய அணுவைப் பிளப்பதன், fission மூலம் செயல்படுவது அணு ஆயுதம்; அணுவின் மையக் கருவில் பிணைத்தல், fusion மூலம் செயல்படும் ஹைட்ரஜன் அணு குண்டு போன்றவை நியூக்கிளியர் ஆயுதம்). இந்தப் பின்னணியில்தான் அமைதியான சமாதான சகவாழ்வு என்ற கருத்தாக்கம் மேலும் வளர்ச்சி பெற்றது. மாமேதை லெனின் அவர்களால்தான், 1917 ரஷ்யப் புரட்சி வெற்றி அடைந்த உடனடியாக, அந்தக் கோட்பாடு முதன்முறையாக அமைத்து உருவாக்கப்பட்டது,

               சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்களுக்கு இவ்வாறு, உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் புதிய பின்னணியை அல்லது ஏற்றதொரு சூழலை விரிவாக்கித் தந்தது.

வளரும் நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள்

            கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளுக்குத் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வெற்றி, புதிய கடமைகள் மற்றும் பொறுப்புகளை அளித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் மரபார்ந்த கோட்பாட்டின்படி அதன் கடமை, பாட்டாளி மற்றும் சோஷலிசப் புரட்சியை நடத்தி முடிப்பது அல்லது வழிகாட்டுவது என்பதே. அப்படித்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் படைப்புகளில், எப்போதும் இல்லை என்றாலும், பொதுவாகச்  சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கடமைகளில் லெனின் சில மாறுதல்களைச் செய்தார். லெனின் அவரது எழுத்துக்களிலும், காலனிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேசும்போதும் பின்வருமாறு அவர் வலியுறுத்தினார்: ‘‘அந்நாடுகளின் கம்யூனிஸ்ட்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ‘எல்லா காலங்களிலும்’ தேசிய விடுதலை மற்றும் ஜனநாயக இயக்கங்களில் பங்கேற்றே ஆக வேண்டும்; தங்களது அமைப்பின் தனித்த அடையாளங்கள் மற்றும் திட்டங்களை மேற்கொள்ளும் அதே நேரத்தில் அவை பூர்ஷ்வா சக்திகளுடன் ஒத்துழைக்க வேண்டும். விடுதலை அடைந்த பிறகும்கூட கம்யூனிஸ்ட் கட்சிகளும் புரட்சிகரக் கட்சிகளும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் தேசிய மறுகட்டமைப்புக்காகவும் தங்களது போராட்டங்களைத் தொடர வேண்டும்.”

               இக்கருத்துகள் தொடக்க வடிவத்திலும் மேலோட்டமாகவும் லெனின் படைப்புகளில் காணப்படுகின்றன. இந்தக் கோட்பாடுகளை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் 1960கள் -- 70களில் மேலும் செழுமைப்படுத்தி மேம்படுத்தின. முன்பு ஏகாதிபத்திய காலனி நாடுகளாக இருந்த, புதிதாக விடுதலை அடைந்த, பின்தங்கிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதானமான முக்கிய பங்கு பாத்திரம் என்ன என்ற கேள்வி புதிய மட்டங்களில் விவாதிக்கப்பட்டது. அத்தகைய நாடுகளில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’யின் பங்கு மற்றும் முக்கிய பொறுப்பு என்ன? தற்போது அது, எதார்த்தமாக பாட்டாளி அல்லது சோஷலிசப் புரட்சியை உடனடியாக நடத்துவது அல்ல; அது, அவசரமாக தீவிர ஜனநாயகப் புரட்சியில் இறங்குவதும் அல்ல. இந்த நாடுகளில் நிலவும் சமூகப் பொருளாதார நிலையோ மற்றும் வர்க்க அம்சத்தைப் பொருத்தோ அத்தகைய புரட்சியை நடத்துவதற்கேற்ற (அகப் புற) சூழலைப் பெற்றிருக்கவில்லை. வேறுபட்ட காலத்திலும் வேறுபட்டச் சூழல் நிலைகளிலும் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களைப் பார்த்துக் காப்பி அடிப்பது எதார்த்ததில் சாத்தியமானதல்ல.

                கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலில் லெனின் ரஷ்யப் புரட்சியைப் பிரதி எடுத்துச் செய்யாதீர்கள் எனத் திரும்பத் திரும்ப எச்சரித்தார். பல கம்யூனிஸ்ட்களும் அவர்களது கூடுதல் உற்சாகத்தால் பூர்ஷ்வா அரசை ‘உடனடியாக’த் தூக்கி எறிந்து ‘சோவியத்’ புரட்சியை அவர்களின் நாடுகளில்  ‘கொண்டு வந்துவிட’ விரும்பினார்கள். இந்த அணுகுமுறை போக்குகளை லெனின் மேலே குறிப்பிட்ட ‘இடதுசாரி‘ கம்யூனிசம் என்ற நூலிலும் பிற இடங்களிலும் விமர்சித்துள்ளார்.

விடுதலையடைந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமைகள்

               வளரும் நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நாட்டின் ‘வாராது போல வந்த மாமணியாம்’ சுதந்திரத்தை ஏகாதிபத்திய நாடுகளின் புதிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கும் ஸ்தூலமான பிரச்சனைகளைச் சந்தித்தனர். தேசக் கட்டுமானம் மற்றும் மறுகட்டுமானத்திற்கான ஸ்தூலமான செயற்திட்டங்களில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் சமூகப் பொருளாதார மாற்றம் மற்றும் தொழிற்சாலைகள், விவசாய மேம்பாட்டிற்கான திட்ட நடவடிக்கைகளை அமைத்திடுவதையும் உள்ளடக்கியிருந்தது. உதாரணத்திற்கு அடிப்படை மற்றும் கனரக மெஷின் ஆலைகளை மேம்படுத்தவும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் வேண்டும். அதேபோல அவர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளை முன்னேற்றுவதற்கும்; சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களான (MSMEs) பிரிவுகளை மேம்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் திட்டமிட வேண்டியிருந்தது. இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கியத் தொழில் பிரிவுகளைத் தேசியமயப்படுத்தவும், பொதுத் துறைகளை ஏற்படுத்தவும் – குறிப்பாக அரசு மற்றும் பொதுத் துறை பிரிவுகளில் அவைகளை ஏற்படுத்தவும் – போராட வேண்டி இருந்தது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி

          இந்தியாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியாக அந்தப் பங்கினையே ஆற்றியது. 90களின் பிற்பகுதி இரண்டு ஆண்டுகளைத் தவிர சிபிஐ ஒரு போதும் ஆட்சியில் இருந்ததில்லை.

ஆனால் ஏகபோகத்திற்கு எதிரான பொதுத் துறைகள், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலச் சீர்திருத்தங்கள், கனரக மெஷின் தொழிற்சாலைகளைக் கட்டுதல், பெரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வணிகத்தைத் தேசியமயமாக்கல், 14 பெரும் ஏகபோக வங்கிகளைத் தேசியமயமாக்கல், அடிப்படைக் கட்டமைப்புகளைப் பொதுத் துறையில் ஏற்படுத்துதல், வலிமைவாய்ந்த இரும்பு எஃகு தொழிற்சாலைகளை நிறுவுதல், நிலக்கரி சுரங்கம், கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், மின்சாரம், இரயில்வே கட்டமைப்பு மற்றும் பிற தொழிற்சாலைகளைப் பொதுத் துறையில் ஏற்படுத்துதல் முதலியவற்றிற்கான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்று நடத்தியது. நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்தளித்தலுக்கான போராட்டங்களைச் சிபிஐ நடத்தியதன் மூலம் நிலப்பிரபுத்துவ உறவுகளை அழித்திட வழிகோலியது. புதிய தேசம், புதிய கல்வி, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் முதலியவற்றிற்குச் சிபிஐ போராடியதன் வாயிலாக ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் முகத்திற்கு எதிராகச் சோஷலிச (நாடுகளின்) உதவியுடன் தேசத்தை வலிமையாகக் கட்டியெழுப்ப துணை நின்றது. 

இன்றைய காலத்தின் ஜனநாயகப் புரட்சி

                இவ்வாறு தற்போதைய காலத்தின் வளரும் உலகில் கம்யூனிஸ்ட் கட்சி, வளர்ச்சி மற்றும் தேசத்தைக் கட்டும் பிரச்சனைகளில் ஸ்தூலமான வரையரையில் எழும் கேள்விகளைத் தவிர்க்க முடியாது. இல்லாவிடில், நாடுகள் மீண்டும் ஏகாதிபத்தியம், பெரும் வணிக முதலைகள் மற்றும் நிதி மூலதனத்திற்கு இரையாக வீழ்ந்துபடும். தற்சார்பு பொருளாதாரம் மற்றும் ஜனநாயக அரசியல் அமைப்பு, தேசத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன், ஏகபோகத்திற்கு எதிரான வலிமை என்ற சுயபாதுகாப்பு ஆயுதங்களை கொண்டிருக்கும்; அவற்றோடு மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் வளம் உடையதாகவும் விளங்கும். இந்த நிகழ்வுகள் ஜனநாயகப் புரட்சி உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் – அதுதான், நவீன காலத்தில் லெனின் கோட்பாடான பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியை மேலும் பரிணாம வளர்ச்சியுறச் செய்வது.  இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் பிற ஜனநாயக மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன் இணைந்து அத்தகைய மாற்றத்திற்கான வாகனங்களாகச் செயல்படும். அதன் பிறகுதான் எதிர்கால புரட்சிக்கான வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்த முடியும். உண்மையில் இன்றைய புரட்சி, இருக்கும் சூழ்நிலையைத் திடீரென அதிரடியாக மாற்றுவது அல்ல, மாறாக அது ஒரு தொடர் நிகழ்வு, ஏற்றதொரு சூழலுக்கான அடித்தளத்தை எதிர்காலத்தில் ஆழமாக்கி ஏற்படுத்துவது.

        இன்றைய உலகில் ரஷ்யா, சீனா, கியூபா அல்லது வியட்நாம் போன்ற புரட்சிகள் ஏற்படாது என்பது மிகத் தெளிவானது. அந்த நாட்கள் முடிந்து விட்டன. 21ம் நூற்றாண்டின் புரட்சிகள் குணாம்ச ரீதியில் வேறு வகையானவை. திடீர் கிளர்ச்சிகள் அல்லது கொரில்லா வடிவிலான போராட்டங்கள் பொதுவாக இன்று வழக்கொழிந்தவை என்பது ஒரு பக்கம் இருக்க, அவை தேவையுமில்லை, சாத்தியமும் இல்லை. நவீன இராணுவப்படைகள் மிகவும் வலிமையானவை, அவற்றை அத்தகைய கிளர்ச்சி, கொரில்லா தாக்குதல் சக்திகளால் சந்திக்க முடியாது. பொதுவாக இன்று இராணுவங்கள், லத்தீன் அமெரிக்கா போன்று, ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிப்பவை. தற்காலத்தில் பெருந்திரள் போராட்டங்களுக்கும் சமூக மாற்றங்களுக்கும், ஜனநாயகம் மற்றும் முற்போக்கான அரசியலமைப்புச் சட்டங்கள் ஆயுதங்களாகி உள்ளன.

21ம் நூற்றாண்டில் ஜனநாயகம் மற்றும் புரட்சி

        21ம் நூற்றாண்டில் பெரிய மாறுதல்கள் நடந்துள்ளன; அவை நம்முடைய கோட்பாடுகள் மற்றும் அமைப்புச் சூத்திர உருவாக்கங்களில் அடிப்படை மாற்றங்களின் தேவையைக் கோரியுள்ளன. மேலும் அவை மார்க்ஸித்தைப் புதுப்பிக்கவும் கோருகின்றன. இன்று நாம் பாட்டாளி வர்க்கம் (/சர்வாதிகாரம்) என்று பேச முடியாது; அதைவிட சமூக மற்றும் பொருளாதார மதிப்புகளை உருவாக்குபவர்கள் என்ற வகையில் ‘உழைக்கும் வர்க்கம்’ எனப் பேசுவதே விரும்பத் தக்கது. சரித்திரப் போராட்டங்களால் அந்த வார்த்தை கூடுதலாகப் பொருள் தருவதாகி விட்டது. தொழில் நுட்பப் புரட்சி அதன் வாழ்வியல் நிலைமைகளை உயர்த்துவதில் உதவி உள்ளது.

               உழைக்கும் வர்க்கத்தின் கட்டமைப்பு பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. அதனைப் ‘பாட்டாளி’ (ப்ராலிடேரியட்) எனப் பண்புடையதாக வகைப்படுத்துவது சிரமம். அதன் கூறுகளின் ஒழுங்கமைவு முறை ஆகக் கூடுதலாக சேவைப் பிரிவுகளால் (சர்வீஸ் செக்டார்) செல்வாக்குப் பெற்று, உற்பத்திப் பிரிவுகளால் குறைவாகவே இருப்பதைக் காண்கிறோம். இன்றைய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் சேவைகளே கூடுதலாகச் செல்வாக்கு செலுத்துகிறது. (உழைக்கும் வர்க்கம் என்பதைவிட) ‘உழைக்கும் மக்கள் திரள்’ என்றழைப்பதே மிகவும் பொருத்தமானது. மேலும் மேலும் அதிகமான மனிதர்கள் ‘தகவல்’ என்பதை அடிப்படைப் பொருளாகக் கொண்டு பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள், முழக்கங்கள் மற்றும் வழிமுறைகள் (மெத்தட்) இப்போது வித்தியாசமாக உள்ளன.

        சமூக அமைப்பு பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது : பழைய வர்க்கங்கள் மற்றும் பிரிவுகள் உருமாற்றமடைந்து, ஒருவகையில் பழையன வரலாற்றில் முடிந்து போனவைகளாக, எலெக்ட்ரானிக்ஸ் (மின்னணுவியல்) போன்ற புதிய பிரிவுகள் உருவாகின்றன. நடுத்தரப் பிரிவுகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன; உற்பத்தியின் ஒப்பீட்டு அந்தஸ்து குறைக்கப்படுகிறது. நகரமயமாதல் வேகமாக நடைபெறுகின்றன; விரைவில் பெரும்பான்மை மக்கள் மின்னணு சாதனங்களால் ‘இணைக்கப்பட்ட’ (வயர்டு), பல லட்சம் மக்கள் தொகை உள்ள, நகரங்களில் வசிக்கப் போகிறார்கள். விவசாயம் சுருங்குகிறது. இத்தகைய பின்னணியில் ஜனநாயக அமைப்புகள் மற்றும் மாற்றங்களின் பங்கும் முக்கியத்தவமும் அதிகரிக்கின்றன. 

        ‘வருங் காலம்’ இனியும் புரட்சிகளின் முழக்கங்களால் ஆன காலமாக இருக்கப் போவதில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகரக் கட்சிகள் ‘செயல்பட்டே’ (பர்ஃபார்ம்) ஆக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், பிரச்சனைகளில் முடிவெடுக்கும் உச்சத்திற்கு வர வேண்டும்; அது மட்டுமின்றி, எவ்வாறு காரியமாற்ற வேண்டும் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை (செயல்படுத்திக்) காட்ட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக சிஸ்டம் அதனை ஜனநாயக, கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சக்திகளால் ஜனநாயக வழிமுறையில் அரசு அதிகாரத்திற்கு வருவதையும், வளர்ச்சிக் களத்தில் செயல்படுத்துவதையும் சாத்தியமாக்கி உள்ளது. இந்தியாவில் இடதுசாரி கூட்டாக நான்கு மாநிலங்களில் ஆட்சி செலுத்தியும் சிலவற்றில் நன்றாகச் செயலாற்றியும் வருகின்றது.

        லத்தீன் அமெரிக்கா நாம் பேசி விவாதிக்க வேண்டியதும், ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய தேவையையும் ஏற்படுத்தி உள்ளது. ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக 12 நாடுகளில் தொடர்ச்சியாகக் கம்யூனிஸ்ட்கள் உட்பட இடதுசாரி சக்திகள் இடைவெளி இன்றி மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு அதிகாரத்திற்கு வந்து ஆட்சி நடத்தி வருகிறார்கள். இந்த நாடுகளில் இருபது ஆண்டுகளாக இடதுசாரி ஆதரவாக உள்ள அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இராணுவப் படைப் பிரிவுகளும் மக்களின் தேர்தல் தீர்ப்புகளை எதிர்க்காது, நடுநிலை வகிக்கின்றன.

               நேபாளத்திலும் பிற இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளும் பாடம் போதிக்கின்றன. இந்த எல்லா நிகழ்வுகளும் சமூகத்தின் புரட்சிகர ஜனநாயக மாற்றத்தில் ஜனநாயக அமைப்புகளின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. ஜனநாயக மாற்றம் அல்லது புரட்சியின் இயல்பு மற்றும் வழிமுறை 21ம் நூற்றாண்டில் கடுமையான மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது.

               ரஷ்யப் புரட்சியின் சாரமான அடிப்படை சமூக மாற்றம் அப்படியே நீடிக்கும்போது, புரட்சியின் வடிவங்கள், வழிமுறைகள் மற்றும் மாற்றங்களின் தன்மை வேறாக வித்தியாசப்படுகின்றன என்பது தெளிவு. 21ம் நூற்றாண்டில் புரட்சிகள், குணாம்ச ரீதியில் வித்தியாசமானவை; அவை பரவலான பன்முகச் சக்திகளுடன் மேலும் ஜனநாயகத் தன்மை உடையனவாகச் செயல்படுபவை!

               காலத்திற்கேற்ப புரட்சி தொடரட்டும்! ‘புதியதோர் உலகம் செய்வோம்!’

--தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

Friday 19 November 2021

கம்யூனிஸ்ட் வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 53 தோழர் பி கே கொடியன்

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 53       


தோழர் பி கே கொடியன் --

விவசாயத் தொழிலாளர்களின் 

தன்னேரில்லா தலைவர்

– அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (அக்.31 –நவ.6)

            தோழர் P K கொடியன் 1922ம் ஆண்டு கேரளா, எர்ணாகுளத்தின் வைப்பின்கரா என்ற இடத்தில் பிறந்தார். இவ்வாண்டு அக்டோபர் 20ல் அவருடைய 20வது நினைவுநாள். தோழர் கொடியன் முதன்மையான சமூகச் சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு ஏழை மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டவர். தனது வாழ்க்கை முழுமையும் சமூகத்தின் எளிய, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவிட்டார்.

தோழர் கொடியன் வாய்ப்பு வசதியற்றவர்களின் முன்னேற்திற்காக உழைத்த போராளி, கொள்கை உறுதிப்பாடுடைய புரட்சியாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் உற்சாகமான, முழுமையான விஸ்வாசம் மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தவர். குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களின் நன்மைக்காக அர்ப்பணித்தவர். சிறந்த சொற்பொழிவாளரும் இயக்கம் கட்டுவதில் திறமையானவருமாவார். இத்திறன்களின் வலிமையோடு இருந்தபோது அவர்  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமான ‘பாரதிய கெந்த் மஸ்தூர் யூனியன்’ (BKMU) அமைப்பின் பொதுச் செயலாளர் ஆனார். (இந்தியக் கம்யூனிட் கட்சியை ஆதரித்தாலும் BKMU சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி, அதன் ஏஐடியுசி மற்றும் அகில இந்திய கிசான் சபா அமைப்புகளிலிருந்து சுயேச்சையாகவே செயல்பட்டது --இணையத்திலிருந்து). விவசாயத் தொழிலாளர்களின் உரிமை நலன்களுக்காகப் பெரும் ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் போராடினார். விவசாயத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிற்சங்கம், வனம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே சமூக ஊழியராக

            உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தபோதே சமூகக்களத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கினார். மாணவர்கள் குழுவுடன் சுற்றியிருந்த ஷெட்யூல்டு இன மக்களின் குடிசைகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு பிரச்சாரம் செய்வார். 1940களின் அக்காலங்களில் பட்டியலினச் சாதியினரிடையே கல்வியறிவின் மட்டம் மிகவும் குறைவானதாக இருந்தது. பெரும்பான்மையான குழந்தைகள் வயல்களில் விவசாயப் பணிகளுக்கோ அல்லது வீட்டு வேலைகளிலும் கைக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் உதவியாகவும் வீட்டிலேயே நிறுத்திக் கொள்ளப்பட்டுவிடுவார்கள். இவர் வழிகாட்டலில் ஆண்டு கோடை விடுமுறை காலங்களில் இதுபோன்ற தன்னார்வத் தொண்டுகளை மேற்கொள்வது இளம் ஹரிஜன மாணவர்கள் குழுவின் வழக்கமான பணியாயிற்று. 

            இளம் பருவத்திலிருந்தே தோழர் கொடியன் படிப்பில் ஆர்வத்துடன் மிகவும் புத்திசாலியான மாணவராக விளங்கினார். கதைகள் கவிதைகள் புனைவதிலும் குழந்தைகளை ஒருங்கிணைத்து நாடகங்களை அரங்கேற்றுவதும் அவரது வழக்கம். கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து பல நேரங்களில் நாடகங்கள் எழுதுவார். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு அவரும் நண்பர்களும் வழக்கமாக நூலகத்தில் கூடுவார்கள். அவர்கள் அனைவருமே புத்தகப் புழுக்களாக நிறைய நூல்களைப் படிப்பவர்கள். அவர்களது செயல்பாட்டு மையங்களில் நூலகமும் ஒரு மையமாயிற்று. நிறைய புத்தகங்களைப் படித்ததால் தோழர் கொடியன் இந்து புராணங்களில் முழுமையான ஞானம் உடையவரானார். அவரும் அவரது நண்பர்களும் (கேரளாவின்) கதகளி நாட்டிய நாடகத்தை நடிப்பது வழக்கம். அவர்களுடைய நாடகங்களும் கலாச்சாரச் செயல்பாடுகளும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மிகவும் பிரபலம். அந்த நாடகங்களையும் கவிதைகள் வாசிப்பதையும் காண மக்கள் கூடுவது வழக்கம்.

            இரண்டாவது உலகப் போரின்போது உடல் கட்டுமஸ்தான ஹரிஜன இளைஞர்கள் பலர் வருமானம் மற்றும் குடும்பத்திற்கு பணம் அனுப்பி ஆதரிக்க வேண்டி  இராணுவத்தில் சேர்ந்தனர். அந்த இளைஞர்களின் படிப்பறிவில்லாத பெற்றோர்கள், போர் குறித்த தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ள, ஆங்கிலச் செய்தித் தாள்களை நூலகத்தில் ஆழ்ந்து படிப்பவரான கொடியனை அணுகுவார்கள். சந்தையில் கூடும் பெற்றோர்கள் பத்திரிக்கை செய்தி விஷயங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். கொடியனும் மணல்தரையில் (உலக நாடுகளின்) வரைபடங்களை வரைந்து வேறுபட்ட பல போர்முனைகளின் நிலைமைகளை அவர்களுக்கு விளக்கிக் கூறுவார். அந்த நாட்களிலிருந்தே அவர் ‘கொடியன் மாஸ்டர்’ என மரியாதைக்குரிய அடைமொழியோடு புகழ்பெற்றார். உண்மையான ஆசிரியராக ஒருபோதும் இல்லாத அவரோ எஞ்சிய வாழ்நாட்களில் எல்லாம் அந்தப் புகழ் அடைமொழியோடு இணைத்தே அழைக்கப்பட்டார்.

சமூக நீதி இயக்கத்தில் பங்கேற்றல்

            ஆரம்பத்திலிருந்தே தோழர் கொடியன் சமூக நீதி இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். காந்திஜி கைது செய்யப்பட்டபோது அவரும் நண்பர்களும் நிதி திரட்டி ‘காந்திஜியை நிபந்தனை இன்றி விடுதலை செய்க’ என அதிகாரிகளுக்குத் தந்தி அனுப்பினர். விடுதலை இயக்கத்தால்

ஊக்கம் பெற்றனர். சாதி முறைமை பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதால், சாதி முறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவரும் அடித்தட்டு மக்கள் முன்னேற அவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என வற்புறுத்திய சமூகச் சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குரு அவர்களைப் பின்பற்றுபவரானார்கள். (நிலச்சுவாந்தார் பலியம் எஸ்டேட் வழியாகச் செல்லும்) பொது சாலையில் ஹரிஜன மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழையும் உரிமை கோரி 1946ல் பலியம் சத்தியாகிரகம் நடைபெற்றது; அதில் போலீஸ்காரர்கள் சித்திரவதையில் ஏ வி வேலாயுதம் கொல்லப்பட்டார். அந்நிகழ்வு குறித்து தோழர் கொடியனும் நண்பர்களும் ஒரு நாடகம் நடத்தினர்.

            உயர்நிலைப் பள்ளி மாணவராக அவர் புலையர் மகா சபா போராட்ட இயக்கங்களில் ஒரு தன்னார்வத் தொண்டராகப் பங்கேற்றார். மகாசபாவின் நடவடிக்கைகளில் மேலும் மேலும் ஈர்க்கப்பட்டார். அதே நேரத்தில் அதற்குச் சற்றும் குறையாமல் உயர்கல்வி கற்பதிலும் கவனமாக இருந்தார்; ஏனெனில், அப்படிக் கல்வி கற்றவனாவதால், தனது குடும்பம் மற்றும் சமூகத்திற்குத் தான் கூடுதல் பயனுடையவனாக முடியும் என உணர்ந்தார். எனவே படிப்பதில் கூடுதல் நேரம் அர்ப்பணித்ததால் எப்போதாவது தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட முடிந்தது. கூடுதலான மதிப்பெண்களோடு உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளில் தேறி, மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார்.

            கல்லூரி நாட்களில் மெல்ல சமூக இயக்கங்களில் மேலும் பங்கேற்றார். மற்ற சில மாணவர்களுடன் சேர்ந்து கொச்சி ஹரிஜன் மாணவர்கள் சம்மேளனம் அமைப்பை நிறுவி அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டாமை காரணமாக பட்டியலின மாணவர்களை விடுதிகளில் தங்க அனுமதிக்காததால் அவர்களில் பலரும் பல மைல்கள் பயணம் செய்து கல்லூரி வர வேண்டியிருந்தது; சிலரால் அப்படிப் போக்குவரத்துக்குச் செலவு செய்ய இயலவில்லை. கொடியன் முன்முயற்சியில் கொச்சியில் கட்டப்பட்ட ஒரு ஹரிஜன விடுதி ஏழை மலைசாதி மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது.  கொச்சி புலையர் மகாசபையின் நிர்வாகப் பொறுப்பாளர்களில் ஒருவரானார். சமூக ஒடுக்குமுறை மற்றும் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக மகாசபா தொடர்ச்சியாகப் பல போராட்ட இயங்கங்களை முந்தைய கொச்சி சமஸ்தானத்தின் பல பகுதிகளில் நடத்தியது.

            கல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்களில் சமஸ்தானத்தின் தொலைதூர உட்பகுதி குக்கிராமங்களுக்குச் சென்ற மாணவர் குழுவில் இடம் பெற்ற தோழர் கொடியன் கல்வியின் (சமூக மாற்றச்) சக்தியைப் பிரச்சாரம் செய்து வருவது வழக்கம். கிராமத்தின் வீடு வீடாகச் சென்று குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி வற்புறுத்துவார்கள். இந்தத் தருணத்தில் குடிசை வாழ் மக்களின் இன்னல் பாடுகளில் கொடியனின் ஆர்வம் வளர்ந்தது. சுற்றி நிலம் அமைந்த வீடுகள் குடியிருப்புகளிலிருந்து (homestead lands) வெளியேற்றப்படுவதை எதிர்த்தும் அந்த இடங்களுக்கு உரிமைகோரியும் போராடுவதற்காக ஓர் அமைப்பை நிறுவிப் போராடினார்.

கம்யூனிட்ஸ்ட் கட்சியில் இணைதல், 1948

            மகாராஜா கல்லூரியிலிருந்து மலையாளத்தில் தனிச்சிறப்பு மற்றும் முதல் வகுப்பில் 1948ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டில்தான் கொடியன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவரும் தோழர் நாராயணனும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைக் கொச்சி சமஸ்தானத்தின் கணயன்னூர் தாலுக்காவில் அமைத்தனர். செயலாளர் கொடியனுடன் சங்கம், தனது உறுப்பினர்களுக்கு அவர்களது உரிமைகளை எடுத்துக் கூற முயன்று சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராட ஊக்கப்படுத்தியது. சாதி போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவதே அவர்களுடைய நோக்கம். 1949ல் திரு–கொச்சி மாநிலம் அமைக்கப்பட்டு தேர்தல்களும் நடத்தப்பட்டன. [திரு-கொச்சி என்பது, முன்னாள் திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் 1949 ஜூலை 1தேதியில் இணைந்த பிறகு ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களின் ஒன்றிய அரசாகும் (யுனைட்டெட் ஸ்டேட்). இந்தியாவில் அது 1950வரை சிறிது காலமே நீடித்தது. பின்னர் அதற்குத் திருவாங்கூர் – கொச்சி மாநிலம் என மறுபெயரிடப்பட்டது. –விக்கிப் பீடியாவிலிருந்து.]

            கணயன்னூர் தாலுக்காவில் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. உள்ளூர் பிரச்சாரக் குழவில் தோழர் கொடியனும் ஒருவராக இடம் பெற்றார். தேர்தலில் வெல்வது அவர்களுடைய நோக்கம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தியைப் பரப்புவதே அவர்களின் முக்கியமாக எண்ணம்.

            விரைவில் அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. கட்சி தடை செய்யப்பட்டதும் பல பிராந்தியங்களில் போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கேரளாவிலும் அதிக எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். எடப்பள்ளி காவல் நிலையம் தாக்கப்பட்ட சம்பவம் கேரளா முழுமையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; இதைச் சாக்காகக் கொண்டு போலீஸ் அனைத்துக் கம்யூனிட்களையும் வேட்டையாடியது. எடப்பள்ளி வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட கொடியன் சிறையில் மிகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்ட தகவலைத் தாயிடம் தெரிவிக்க வேண்டாம் என முதலாமாண்டு கல்லூரி மாணவரான இளைய சகோதரர் கிருஷ்ணனைக் கேட்டுக் கொண்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

            விடுதலையானவுடன் நேரே இளைய சகோதரர் விடுதிக்குச் சென்றார். உடலில் இருந்த வீக்கங்கள் சித்திரவதையின் அடையாளத்தை வெளிப்படுத்த கொடியனின் உருக்குலைந்த தோற்றத்தைக் கண்ட கிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். அவரால் நடக்கவோ பேசவோகூட முடியவில்லை. இதை எல்லாம்விட சிறையின் மோசமான நிலைமைகள் ஈசினோபிலியா என்ற கடுமையான உடல் உபாதையை அவரிடம் தூண்டியது. 

         இவை அனைத்தும் அவரை மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. ஓர் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் ஓராண்டாக பணிசெய்து வந்த கொடியனின் மூத்த சகோதருக்கு, அப்பள்ளிக்கு அரசு மானியம் வராததால், சம்பளம் வழங்கப்படாது தாமதிக்கப்பட்டது. நிதி உதவி வந்து வழங்கப்பட்ட ஊதியம் அனைத்தையும் அவர் கொடியனின் சிகிச்சைக்காகச் செலவிட்டார். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் அவருக்கு மறுவாழ்வை வழங்கியது; இருப்பினும் மோசமான முதுகுவலி மற்றும் ஈசினோபிலியா பாதிப்பை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர் சுமந்தார்.  

         உடல்நலம் தேறியதும் கொடியன் மீண்டும் தீவிரக் கட்சிப் பணிகளை மேற்கொண்டார். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டுவதில் பணியாற்றத் தொடங்கிய கொடியனுக்கு அதன் பிறகு அதுவே வாழ்நாள் பணியும் பொறுப்புமாயிற்று. 1957 வாக்கில் அவர் கேரளா மாநிலம் அறிந்த புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் பிரபலமானார். அதே நேரத்தில் ஏற்கனவே விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தின் அனைத்திந்தியத் தலைவராக உருவாகி இருந்தார். 1957ல் (மலபார் கடற்கரையில் அமைந்த) கொல்லம் பாராளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் கொடியன்தான் அத்தேர்தலில் கேரளாவிலேயே அதிகபட்ச வாக்குகள் வாங்கிய வேட்பாளரும், அகில இந்திய அளவில் நாடுமுழுவதும் வெற்றிக்கான அதிகபட்சக் கூடுதல் வாக்குகள் (விக்ட்ரி மார்ஜின்) பெற்றவருமாவார்.

         மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பெரும்பான்மையாக அவருடைய கவனம் தேசியக் கம்யூனிஸ்ட் கட்சி பணிகளில், முக்கியமாக பிகேஎம்யு விவசாயச் சங்கத்தைக் கட்டியமைப்பதில் சென்றது. சிபிஐ தேசியச் செயற்குழு உறுப்பினராக அவர் தேர்வானார். மக்களவையில் பிரச்சனைகளை எழுப்பும்போது அவர் பேசும் விஷயங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, பிரச்சனைகளை எடுத்துக்கூறும் தெளிவான பான்மை மற்றும் திறனுக்காக அவர் நன்கு அறியப்பட்டார்.

1968ல் BKMU நிறுவுதல் 

   1968ல் அன்றைய சிபிஐ பொதுச் செயலாளர் தோழர் சி ராஜேஸ்வர ராவ் மற்றும் தோழர் கொடியன் முதன்முறையாக அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தை அமைத்தனர். அந்த ஆண்டே பஞ்சாப் மாநிலம் மோகாவில் அனைத்திந்திய மாநாடு நடத்தப்பட்டு முறையாக BKMU நிறுவப்பட்டது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு அனைத்திந்திய அளவில் ஓர் அமைப்பை ஏற்படுத்தும் தோழர் கொடியனின் நீண்டகால விருப்பம் அதன் மூலம் நிறைவேறியது. அதுவரை பல ஆண்டுகள் மாநிலங்கள் தோறும் போராட்ட இயக்கங்களை நடத்திட களைப்பின்றி முயன்றார். போராட்டத்தின் லட்சிய நோக்கம் விவசாயத் தொழிலாளர்களின் கூலி, வேலைநேரம், வீட்டு வசதி மற்றும் நிலத்திற்கான உரிமை முதலியவைகளை ஒழுங்குபடுத்தி அவர்களுக்காக தேசிய அளவில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. அப்போராட்டங்களின் மூலம் குரலற்ற விளிம்புநிலை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கான  சில ஒழுங்குமுறை சட்ட விதிகளை அரசுகள் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  

         விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தும் பொறிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மசோதாவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய இறுதி விருப்பம் அமல்படுத்தப்பட்டு நிறைவேறவே இல்லை. தனது வாழ்நாளின் இறுதிவரை நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை பலமுறை எழுப்ப அவர் உதவினார். அரசை நிர்பந்தித்து அந்த மசோதாவை நிறைவேற்ற பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் BKMU அனைத்திந்திய அமைப்பாக வளர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களில் நீண்டகாலப் போராட்டங்கள் பலவற்றை நடத்தியது. இந்த இயக்கங்களின் பலனாய் பல இடங்களில் சில நன்மைகளை விவசாயத் தொழிலாளர்கள் சாதித்து வென்றார்கள்.

         தோழர் கொடியனின் ஓய்வில்லாத சோர்வற்ற தொடர் பணியின் காரணமாகவே  விவசாயத் தொழிலாளர்களுக்கென்று சொந்தமாக ஓர் அமைப்பு கிடைத்தது. விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தபோது அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற அவரது உண்மையான முயற்சி,


அவருடைய செயல்பாட்டுப் பணிகளில் புகழ்ந்து குறிப்பிடத்தக்கது. அவருடைய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (Trade Union International of Agricultural, Forestry and Plantation Workers) துணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆழ்ந்தகன்ற அறிவு மற்றும் அனுபவத்தால், இந்திய விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தோழர் கொடியன் உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிந்தது.

1957 மக்களவை உறுப்பினராகத் தேர்வு

       1957 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தின் கொல்லம் நாடாளுமன்றத் தனித் தொகுதியிலிருந்து தோழர் கொடியன் சிபிஐ கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறுதான் கொடியன் மாஸ்டரின் நாடாளுமன்றச் சகாப்தம் தொடங்கியது. பல விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற அவையில் அவர் ஆற்றிய உரைகள் தலைசிறந்து விளங்கின. பட்டியலின மக்களின் பல பிரிவு அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினார். 1960 மற்றும் 1970களில் எண்ணற்ற பல கூட்டங்களில் கலந்து கொண்டு பிரிந்து கிடக்கும் பல்வேறு அமைப்புகள் என்பதைக் கைவிடுமாறு தோழர் கொடியன் அவர்களை அறைகூவி அழைத்தார். அந்த முயற்சிகள் ‘ஹரிஜன் சம்யுக்த சமிதி’ (ஹரிஜன் இணைப்புக் குழு) அமைப்பதை நோக்கிச் செலுத்தியது. 

           


(இன்றைய 2021 நவம்பர் 19ம் நாள் விவசாயப் போராட்ட வெற்றியின் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்ட நாள்போல) 1979 மார்ச் 20ம் நாள் இத்தேசத்தின் விவசாயத் தொழிலாளர் இயக்க வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்ட நாளாகும். அன்றைய தினத்தில் முதன் முறையாக அனைத்திந்திய அளவில் விவசாயத் தொழிலாளர்களின் டெல்லி பேரணி நிகழ்ந்தது; அதிக அளவில் தோழர்கள் திரண்டு வந்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதாகைகள், கோரிக்கை அட்டைகள், கொடிகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்ற பிரம்மாண்டமான பேரணி நடந்தது. அந்த மாபெரும் பேரணியின் வெற்றிக்காகத் தோழர் கொடியன் தனிப்பட்ட முறையிலும், பாரதிய கெந்த் மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையிலும் தனது ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்கினார். இமயமலை பகுதிகளிலிருந்து பல்வேறு கிராமங்கள், கடலன்னை தாலாட்டும் கேரளாவிலிருந்தும், குஜராத் மற்றும் ராஜஸ்தான் பாலைவனங்கள் வரண்ட பிராந்தியங்கள் மற்றும் வடகிழக்கிலிருந்தும் பேரணியில் கலந்து கொள்ள மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

         ஏழை எளிய மக்கள் நெடுந்தொலைவுக்கு அப்பால் குக்கிராமங்களில் வசிக்கிறார்கள், அவர்களால் ஓர் அமைப்பாக ஒன்று திரள முடியாது மற்றும் அவர்களுக்கு என்ன கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்பதும் தெரியாது என்று கருதிக் கொண்டு, இத்தேசத்தின் பரம ஏழைகளைப் புறக்கணிக்கும் அதிகார வர்க்கம் மற்றும் ‘அரசுக்கு உரத்து எடுத்துச் சொல்வதே’ இப்பேரணியின் பிரதானமான நோக்கம் என்ற பேரணியின் மிக முக்கியமான கருத்தைத் தோழர் கொடியன் அழுத்தமாகப் புரிய வைத்தார். அவர்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்படாவிட்டால், தங்களைப் பாதுகாக்கும் பிரச்சனையை விவசாயத் தொழிலாளர்களே தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வர் எனத் தோழர் கொடியன் பிரகடனப்படுத்தினார்.

         விவசாயத் தொழிலாளர்களுக்குப் பொருத்தமான சட்டங்களைச் சட்டமன்றத்திலும் குறிப்பாக நாடாளுமன்றத்திலும் ஏற்று சட்டமாக நிறைவேற்றுவதற்காகத் தோழர் கொடியன் சோர்வின்றி கடுமையாக உழைத்தார். அதை நனவாக்குவது மிகக் கடினமான பணி என்பதை உணர்ந்தே ஆக வேண்டும். அது வரை விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்டப் பிரிவினராகவே இருந்தனர்; முறையான பணி நிலைமைகள், பணி நேரம் இவற்றைச் சட்டபூர்வமாகச் சட்ட வடிவிலே கொண்டுவந்து அவர்களை உண்மையாகப் பாதுகாக்கலாம் என ஒருவரும் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.  அது தொடர்பாக முக்கியமான பெரும் முயற்சிகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கான மத்திய சட்டமியற்றும் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைகளில் விவாதத்திற்குக் கொண்டு வந்ததைக் குறிப்பிடலாம். இந்த முயற்சிகளுக்குப் பின்னால் ஆகக் கூடுதலான தயாரிப்புகள் நடைபெற்றன – அவற்றில் தோழர் கொடியனின் பங்களிப்பு இருந்தது என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. அவருடைய வாழ்வும் ஜீவனும் அதுதானே, விவசாயத் தொழிலாளர்களின் மேம்பாடு!  

[ பிற்சேர்க்கை : 7வது லோக் சபா உறுப்பினர்கள் சுய விவரக் குறிப்புகளிலிருந்து

ஸ்ரீ கொடியன் (சிபிஐ, கேரளா அடூர்  (எஸ்சி தனித் தொகுதி)

தந்தை-- திரு பண்டாரத்தில் கொடியன்; பிறப்பு – எர்ணாகுளம் மாவட்டம் இளங்குன்னபுழா கிராமம், 1923 செப்டம்பர் 23; கல்வி -- நரக்கல் உயர்நிலைப் பள்ளி மற்றும் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி; திருமணம் மற்றும் குடும்பம்திருமதி  சிசிலி,  1958 பிப்ரவரி 4;  இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள்

வகித்த பதவிகளும் பொறுப்புகளும் -- 1954 –57ல் சிபிஐ எர்ணாகுளம் மாவட்டக் குழு செயலாளர்; 1957 -- 62ல் சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர்;  1961 –64ல் சிபிஐ தேசியக் குழு உறுப்பினர்; மீண்டும் தற்போது கட்சி தேசியக் குழு உறுப்பினர்;  அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்; 1975லிருந்து விவசாயம், வனம் மற்றும் தோட்டப் பயிர்கள் தொழிலாளர்களுக்கான சர்வதேசத் தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர்; 1957 –62ம் ஆண்டின் 2வது லோக் சபா, 1977 –79ம் ஆண்டின் 6வது லோக்சபா உறுப்பினர் மற்றும் 1977 –78ல் பொது கணக்குக் குழு உறுப்பினர் மற்றும் 7வது லோக் சபா உறுப்பினர்.

பிடித்தமான பொழுது போக்கு – நூல்களைப் படிப்பது

வெளிநாட்டுப் பயணம்  -- 1964ல் பல்கேரியா, 1964, 70, 74 மற்றும் 75ல் சோவியத் யூனியன், 1964ல் கிரீஸ், 1976ல் செக்கோஸ்லேவாக்கியா மற்றும் அல்ஜீரியா, பிரான்ஸ் மற்றும் போலந்து

நிரந்தர முகவரி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அடூர், கொல்லம் மாவட்டம், கேரளா]

மறைவு

கடுமையான ஆஸ்துமா நோய் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவசாயிகளின் தன்னேரில்லா தலைவரான கொடியன் மாஸ்டர் தனது 78வது வயதில் 2001 அக்டோபர் 28ல் மறைந்தார்.

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி” “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என

உழுவார் உலகில் உள்ளவரை தோழர் கொடியன் மாஸ்டர் புகழ் நீடித்து நிலைக்கட்டும்! செவ்வணக்கம் மாஸ்டர்!


--தமிழில் : நீலகண்டன்,
              என்எப்டிஇ, கடலூர்


கருத்துப் படம் நன்றி : Rachana Dhaka 



‘உயர்த்திப் பிடித்தால் கொடியாகும்

 திருப்பிப் பிடித்தால் தடியாகும்’ 

 என முழக்கமிட்டவர்கள் நாம்!

                           “மண்ணில் புதையுண்டு கவிழ்ந்து கிடந்த கலப்பைகள்

                                      விண்ணில் நிமிர்ந்து உயர்த்தினர் உழுபடையினர்

                                      ‘வெண்கொற்றக் குடை தானே தாழ்ந்தது’ (குறள் 3034)

                                      என்றும் ‘உழந்தும் உழவே தலை’! ”

 




Tuesday 9 November 2021

ஐடிஏ சமப்படுத்தலும், ஊதிய மாற்றமும் -- தோழர் ஆர் பட்டாபி கட்டுரையின் தமிழாக்கம்

 

                

  
IDA Neutralisation and Pay Revision

ஐடிஏ சமப்படுத்தலும், ஊதிய மாற்றமும் 

08 – 11 –2021 அன்று தோழர் ஆர் பட்டாபிராமன்

தனது வலைப்பூவில் பதிவிட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.)

08–11–21ல் தோழர் பட்டாபி பதிவிட்ட கட்டுரையின் தொடக்கத்தில் பிரச்சனையைப் புரிந்து கொள்ளவதற்கான சில உண்மைகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள ஊதியமாற்றம் தொடர்பான பழைய உத்தரவு இலாக்கா கடிதங்களின் சாராம்சத்தைக் காலவாரியாக எழுதி (அப்பகுதி தமிழாக்கம் செய்யப்படவில்லை). ஒன்றிய அமைச்சர் திரு அரவிந்த சாவந்த் அவர்களுக்குத் தோழர் பட்டாபி 2019 ஜூன் 11ம் தேதி எழுதிய கடிதத்தைப் பதிவிட்டிருந்தார்.

                                    அமைச்சருக்கு எழுதிய கடிதம் வருமாறு:

      மதிப்புக்குரிய மாண்புமிகு ஐயா,

      கனரகத் தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவன இலாக்காவின் ஒன்றிய அமைச்சராக (Minister for HI&PE) தாங்கள் பொறுப்பேற்று உள்ளதற்குப் பாராட்டுதல்களும் நல் வாழ்த்துகளும்.

      இத்துடன் மிக நீண்ட கட்டுரை ஒன்றை இணைத்துள்ளேன். தங்களுக்கு நேரம் இருப்பின் அருள்கூர்ந்து அதனைப் படிக்கவோ அல்லது பொருத்தமான அதிகாரிகளைப் பணித்து அதில் கூறியுள்ளவைகளை அறிந்து தேவையானதைச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன்.

      இத்துடன் பிரச்சனையின் சாராம்சத்தைத் தங்களின் சாதகமான பரிசீலனைக்கு வைக்கிறேன்; இது லட்சக்கணக்கான பொதுத்துறை ஊழியர்களுக்குச் சில நிவாரணம் கிடைக்க உதவும். தயவு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறேன்.

            குறைந்தபட்சம் ஒருகோரிக்கை ஏற்கப்பட்டால் அனைத்து 70 நட்டமடையும் நிறுவனங்களின் பெரும்பான்மை ஊழியர்களுக்கும் 2017 புதிய ஊதியவிகிதத்தை அமலாக்க உதவிடும். ஏன் வெவ்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் – அது லாபம் ஈட்டும் நிறுவனமோ, நட்டம் அடையும் நிறுவனமோ, அவை – 2017, 2007, 1997 போன்ற இன்னபிற வேறுபட்ட ஊதிய விகிதங்களில் இருக்க வேண்டும்? மேலும் வெவ்வேறு ஊதிய விகிதங்களுக்கு வித்தியாசமான (தனித்தனி) ஐடிஏ-வைப் பெற DPE இலாக்கா ஏன் அதற்கான வெவ்வேறு உத்தரவுகளை வெளியிட வேண்டும்? அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் புதிய 2017 ஊதிய விகிதத்தைப் பொருந்தக்கூடியதாக ஆக்குவதில் நிதி ஸ்திரத்தன்மைக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? இப்படிச் செய்வது பழைய ஊதிய விகிதத்தைப் புதிய ஊதிய விகிதமாக, புதிய ஐடிஏவுடன், மாற்றுவதைப் போலத்தான்.

            புதிய ஊதியவிகிதங்கள் அறிமுகப்படுத்தும்போது அவற்றை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஊதியமாற்றக் குழுவின்படி அறிமுகப்படுத்துவது சாலச் சிறந்தது என்பதைக் கூறுவதே மேற்கண்ட கோரிக்கை. குறிப்பிட்ட தேதியில் ஐடிஏ இணைப்பு என்பது ஊதிய உயர்வு அல்ல. அது (அடிப்படை ஊதியம், ஐடிஏ என) இரண்டு பகுதிகளாக இருப்பதை ஒன்றாக்குவது (subsumption), அவ்வளவுதான்; மேலும் அது 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ஊதியத்தின் உண்மை மதிப்பு (ரியல் வேஜ்) பணவீக்கத்தின் காரணமாக அரிக்கப்படுவதைச் சரிசெய்ய செய்யப்படுவதாகும். ஃபிட்மெண்ட் என்பது ஊதிய உயர்வு. படிநிலை ஃபிட்மெண்ட் என்பதுகூட புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் புதிய ஊதிய விகிதத்தை மறுப்பது பாரபட்சமாகப் பாகுபாடு காட்டுவதாகும்.

            3வது ஊதிய மாற்றக் குழு டிபிஇ வழிகாட்டுதலில் தேவைப்படும் மாற்றம் யாது எனில், அது பின்வருமாறு: “நட்டமடையும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் 2017 ஊதிய விகிதத்தையும், நிறுவனத்தின் வரிகட்டுவதற்கு முன் உள்ள லாபத்தின்படி (as per PBT) படிநிலை (கிரேடட்) ஃபிட்மெண்ட்டை ஏற்கவும் அனுமதிக்கப்படுகிறது”

இந்த ஒரு கோரிக்கை ஏற்கப்பட்டால், சாத்தியப்பாடு (அஃபோர்டபிலிட்டி) ஷரத்து ஒரேயடியாக நீக்கப்படும்வரையில், அது ஒரு மேம்பட்ட தீர்வாக இருக்கும். 2007 அல்லது 1997 போன்ற பழைய ஊதிய விகிதங்களில் வெறுமே (மாற்றமின்றி) நிற்பதைவிட அது மேம்பட்ட நிலையாகும்.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் DPEக்கு 

ஒரு வேண்டுகோள்

(08 – 11 –2021ல் தோழர் ஆர் பட்டாபிராமன் வலைப்பூவில் பதிவிட்டது.)

            ஏன் வெவ்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் – அது லாபம் ஈட்டும் நிறுவனமோ, நட்டம் அடையும் நிறுவனமோ, அவை – 2017, 2007, 1997 போன்ற இன்னபிற வேறுபட்ட ஊதிய விகிதங்களில்  இருக்க வேண்டும்? மேலும் வெவ்வேறு ஊதிய விகிதங்களுக்கு வித்தியாசமான (தனித்தனி) ஐடிஏ-வைப் பெற DPE இலாக்கா அதற்கான வெவ்வேறு உத்தரவுகளை ஏன் வெளியிட வேண்டும்? புதிய ஊதிய விகிதத்தில் பொருத்துவதற்கான (ஃபிட்மெண்ட்) பிரச்சனையோடு ஒப்பிடும்போது, புதிய 2017 ஊதியவிகிதத்தை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்புடையதாகச் செய்வதில் நிதி ஸ்திரத்தன்மை பிரச்சனை குறைவானதாகும்; ஏனெனில் அனைவரும் ஐடிஏ விகிதத்தைக் குறிப்பிட்ட பழைய ஊதிய விகிதத்திலேயே வழங்குகிறார்கள். இப்படிச் செய்வது பழைய ஊதிய விகிதத்தைப் புதிய ஊதிய விகிதமாக, புதிய ஐடிஏவுடன், மாற்றுவதைப் போலத்தான்.

            குறிப்பிட்ட தேதியில் ஐடிஏ இணைப்பு (மெர்ஜர்) என்பது ஊதிய உயர்வு அல்ல. அது (அடிப்படை ஊதியம், ஐடிஏ என) இரண்டு பகுதிகளாக இருப்பதை ஒன்றாக்குவது (subsumption), அவ்வளவுதா; மேலும் அது 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ஊதியத்தின் உண்மை மதிப்பு (ரியல் வேஜ்) பணவீக்கத்தின் காரணமாக அரிக்கப்படுவதைச் சரிசெய்வதாகும். (ஆனால்) ஃபிட்மெண்ட் என்பது ஊதிய உயர்வு. படிநிலை ஃபிட்மெண்ட் என்பதுகூட புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் புதிய ஊதிய விகிதத்தை மறுப்பது பாரபட்சமாகப் பாகுபாடு காட்டுவதாகும்.

            நாம் (மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் இன்டஸ்டிரியல் தொழிலகச் சங்கங்கள் என) அனைவரும் 2007ம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கின்ற, 2017லிருந்து தீவிரமாக வற்புறுத்தப்படும் சாத்தியப்பாடு (அஃபோர்டபிலிடி) ஷரத்தை நீக்கத் தவறியதால், குறைந்தபட்சம் நாம் வேறுபட்ட ஊதிய விகிதத்தில் இருக்கும் 70 அல்லது அதற்கு மேற்பட்ட நட்டமடையும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப்  பின்வரும் கோரிக்கையைக் கோருவதில் எதார்த்த உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் (என விழைகிறேன்).

            கோரிக்கை : “முழு ஐடிஏ நியூட்ரலைசேஷனுடன் 3வது ஊதிய மாற்றக் குழுவின் (3rd PRC) ஊதிய விகிதங்களை அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் ஏற்று அமல்படுத்த அனுமதிக்க வேண்டும்.

 ஊதியவிகிதத்தில் பொருத்துவது (ஃபிட்மெண்ட்), சாத்தியப்பாடு (அஃபோர்டபிலிட்டி) ஷரத்தின்படி இருக்கலாம். கோரிக்கையின் உண்மையான பயனை முழுமையாக அமலாக்குவது அந்தந்த தொழில் துறை சார்ந்து விவாதித்து முடிவு செய்யலாம்.”

முகநூல் பதிவில் தோழர் பட்டாபியின் மேலும் சில விளக்கங்கள்

      1. இந்தக் குறிப்பு ஃபிட்மெண்ட் பற்றிய எதுவும் அல்ல. இங்கே முன் வைக்கப்படும் வேண்டுகோள்: BSNL போன்று நட்டமடையும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 01--01--2017 தேதிமுதல் 3வது ஊதியமாற்றக்குழுவின் ஐடிஏ நியூட்ரலைசேஷனுடன் கூடிய ஊதிய மாற்றம் வேண்டுவது மட்டுமே. BSNLபிரச்சனையை முன்வைத்து வேண்டுகோள் இங்கே விவரிக்கப்பட்டது.

      2. பொருந்தக் கூடிய தன்மை (அப்ளிகபிலிட்டி) ஷரத்தை நீக்க அரசுக்கு அழுத்தம் தரவும் அல்லது நட்டமடையும் நிறுவனங்களுக்கு மாற்று கோரிக்கைகளை முன்வைக்கவும் யாராலும் இயலாதபோது, (அதேபோல) நட்டமடையும் தொழிற்சாலைகளின் தொழிலக சங்கங்கள் (இன்டஸ்டிரியல் யூனியன்) தங்களைப் புதிய ஊதிய விகிதத்தில், புதிய ஐடிஏவுடம் பொருத்திக் கொள்ள சில மாற்று வழிகளோடு முயல்கிறார்கள்; அவர்களின் விருப்பமான நம்பிக்கை (ஊதிய உயர்வுக்கான) ஃபிட்மெண்ட் பெறுவதைத் தொழில் நிறுவனத்திற்கு லாபம் வரும்போது (கோரிக்கை எழுப்பி) விவாதிக்கலாம் என்பதே.

      3. தற்போது நடைமுறையில் உள்ள அலுவலக மெமோ (OM)படி, BSNL நிறுவனம் தகுதிப்பாடு (எலிஜிபிலிட்டி) வகைக்குள் வரவில்லை… அவர்கள் எல்லாம் அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஷரத்தை மாற்றவோ அல்லது சில விலக்குகளைக் கோரவோ முயல வேண்டும்.


ஆங்கிலக் கட்டுரை படிக்க முகவரி

http://www.pattabiwrites.in/2021/11/ida-neutralisation-and-pay-revision.html


இந்தப் பதிவு 8-11-2021ல் மறைந்த தொ மு ச பேரவையின் தலைவரும் 

தொலைத் தொடர்பின் TEPU சங்கத்தின் பொதுச் செயலாளருமான 

தோழர் V சுப்புராமன் அவர்களுக்குச் சமர்ப்பணம் 

தமிழாக்கம் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்