Friday 30 April 2021

மேதினி போற்றும் மேதினம் ஒரு வரலாற்றுப் பார்வை --

 மேதினி போற்றும் மேதினம் ஒரு வரலாற்றுப் பார்வை --

மே நாள், செங்கொடி மற்றும் 21ம் நூற்றாண்டு

--அனில் ரஜீம்வாலே

நன்றி: நியூஏஜ் (ஏப்ரல் 25 –மே1)

1832 ஜூன் மாதம் தங்கள் கோரிக்கைகளுக்காகக் கிளர்ச்சி செய்த பாரீஸ் தொழிலாளர்கள் போலீஸ் தடுப்பு அரணுக்குள் தடுத்து நிறுத்தப்பட்டபோது, (கிருஷ்ண பகவான் சிறைச்சாலையில் பிறந்தது போல), அங்கேயே அப்போது செங்கொடி பிறந்தது. செங்கொடி ஆர்வத்தைத் தூண்டக் கூடிய வரலாறு உடையது; அதன் தலைமையிலும் ஊக்கத்தினாலும் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகள் இறுதியில் 1886 மேதின நிகழ்வுகளை வந்தடைந்தது.

பிரெஞ்ச் புரட்சியும் செங்கொடியும் 

செந்நிறம் பிரெஞ்ச் புரட்சியோடும் அன்றைய காலத்தில் நிலவிய நிலஉடைமைச் சமூக முறைகளோடும் ஆழமான தொடர்புடையது. உண்மையில் செங்கொடி அபாயம் அல்லது எச்சரிப்பதற்கான அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.  மக்களை எச்சரிக்க அல்லது அறிவிப்புச் செய்ய மன்னர் நகரம் முழுவதும்  சிவப்பு நிற சிறு கொடிகளை நட்டார். பிற்காலத்தில் புரட்சியின் அடையாளமான செந்நிறம் அப்போது அப்படி இல்லை. 1789 பிரெஞ்ச் புரட்சிக்குப் பின்னர் 1789 அக்டோபர் 21ம் நாள் இராணுவச் சட்டத்தை அறிவிக்கச் செங்கொடிகள் நடப்பட்டன; அந்த நடைமுறையே பிறகு எங்கெல்லாம் சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டுமோ அங்கெல்லாம் மக்களுக்கான அடையாளமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனைச் செய்ய பாரீசின் டவுன் ஹால் முக்கிய சன்னலில் ஒரு செங்கொடி ஏற்றப்பட்டு அனைத்து வீதிகள் மற்றும் சதுக்கங்களிலும் நாட்டினர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் ‘இறையாண்மையுள்ள மக்களின் இராணுவச் சட்டம்’ என்று பொறிக்கப்பட்ட செங்கொடியின் கீழ் கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்து வந்ததாகச் சொல்லப்பட்டது. 1793ல் மக்கள் பரவலாகச் சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தனர், இது குறித்து புகழ்பெற்ற இராபஸ்பியர் (Robespierre) என்பாரின் “மூவண்ணத்திற்கெதிராகச் சிகப்பு தொப்பிகள்” என்ற விவாதத்திற்குரிய கூற்றும் உண்டு. முற்போக்கான குடியரசுவாதிகள் (ரிபப்ளிகன்ஸ்) செங்கொடியை ஒரு அடையாளமாக ஒப்புக்கொண்டனர். பிரெஞ்ச் புரட்சியின்போது ’சான்ஸ்-க்லோட்ஸ்’ முன்னணியில் இருந்தனர்; அவர்கள், இன்னும் ஒரு வர்க்கமாக உருவாகாத, தொளதொளப்பான இயல்புகளோடான உழைக்கும் பெருந்திரள் மக்கள் – அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட ஆலைத் தொழிலாளர் வர்க்கத்தைவிட அதில்  அதிகம் கைவினைஞர்கள் இருந்தனர். (சான்ஸ்-க்லோட்ஸ் ‘sansculottes’ என்ற சொல் கப்பலில் சுமை ஏற்றும் தொழிலாளர்கள் போன்று பட்டையான கோடுகள் உள்ள நீண்ட கால்சட்டை அணிந்தவர்கள் என்று நேரடிப் பொருள்படும், அதாவது தாழ்ந்த வர்க்கத்தினர் –அவர்கள் பிரெஞ்ச் புரட்சிக்குப் பெரும் ஆதரவாக இருந்தனர்) 

சிகப்பு குருக்கள்கள் (‘Red priests’)

பிரெஞ்ச் புரட்சியின்போது பாரம்பரியமான மதக் குருக்கள்களிடமிருந்து முரண்பட்ட, தங்கள் சொற்களிலும் செயல்களிலும் நவீன முற்போக்கு எண்ணமுடைய, மதக் குருக்கள் சிகப்புப் பூசாரிகள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் தத்துவ மற்றும் சமூகத் தளங்கள் இரண்டிலும், ஒரு சீரான தொடர்ச்சி இல்லாவிடினும், போராடினர். அவர்கள் போராடிய காலம், இருண்மை பிற்போக்கு பழக்க வழக்கங்கள் நிறைந்த நடைமுறைகளிலிருந்து விடுதலையடைய விரும்பிய மத்திய காலம்.

சிகப்புக் குருக்கள்மார்களின் புரட்சிகர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக --பிரெஞ்ச் புரட்சியின் முத்திரையான‘ --  நேரடி ஜனநாயத்தை நோக்கி நடந்தது. பெட்டிட் ஜீன், ஜாக்கஸ் ரௌஸ், டோலிவர், க்ரோய்சி மற்றும் பிறர் ரெட் ப்ரீட்ஸ்கள் ஆவர். 

பிரான்சில் தொழிலாளர்களின் செங்கொடி

பிரான்சில் 1830ல் நடந்த புரட்சி தொழிலாளர்கள் நடத்திய முதலாவது பெருந்திரள் நடவடிக்கையாகும்; அதில் அன்றைய இணைந்த நிலப்பிரபுத்துவ -- முதலாளித்துவ அரசியல் ஆட்சி அதிகாரம் தூக்கி எறியப்பட்டது. அது முதலாளித்துவம் ஆட்சிக்கு வரச் செய்தது. ஆகஸ்ட் ப்ளாங்கி அதன் முன்னணி தலைவராவார்.  இவ்வாறு முந்தைய சான்ஸ்-க்லோட்ஸ் மரபுரிமையைப் பாட்டாளிகள் முன்னெடுத்துச் சென்றார்கள். பிரான்சின் இரண்டாவது பெரிய நகரான லியான்ஸில் தொழிலாளர்கள் 1831 நவம்பரில் நடத்திய கிளர்ச்சி பிரான்ஸ் நாட்டைக் குலுக்கியது. 30ஆயிரம் நெசவாளர்களும் 70ஆயிரம் பிற தொழிலாளர்களும் நகரின் அனைத்து ஐந்து வாயில்களையும் மறித்து அடைத்துவிட்டனர். வரலாற்றில் முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே முதலாவது ஆயுதம் தாங்கிய மோதல் 1831 நவம்பர் 21ல் நடைபெற்றது. அடுத்த நாள் தொழிலாளர்கள், ‘பணியாற்றி வாழ்வது அல்லது போராடி மடிவது’ என்ற வாசகம் பொறித்த கறுப்புப் பதாகையை ஏற்றினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் நகரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியில் அவர்களால் மேற்கொண்டு செல்ல இயலவில்லை – ஆனால் இங்கிலாந்தில் பின்னர் சாசன இயக்கத்தினர் அதனைச் சாதித்தனர். 1834 ஏப்ரல் 9ம் நாள் லியான்ஸில் இரண்டாவது எழுச்சி வெடிக்க கிளர்ச்சியாளர்கள் ‘குடியரசு அல்லது சாவு’ என்று பொறிக்கப்பட்ட சிகப்புப் பதாகையை உயர்த்தினர். 

1832, ஜூன் 25ம் நாள் பாரீஸ் தொழிலாளர்கள் லூயிஸ் பிலிப் ஆட்சியை எதிர்த்து கிளர்ந்தெழ அவர்கள் தடுக்கப்பட்டபோது செங்கொடியை உயர்த்தினர். 

இங்கிலாந்தில் சாசன இயக்கம்

பிரெஞ்ச் இயக்கம் பலபோழ்து ஆயுத மோதலான ஒன்றாக இருந்தபோது, தெளிவான அரசியல் நோக்கங்களோடு, வலிமையான அமைதியான பெருந்திரள் தொழிலாளர் போராட்ட  அலைகள் 1830–40களில் இங்கிலாந்தை அடித்துச் சென்றது. 1834 இறுதியில் தொழிற்சங்களின் ஒருங்கிணைக்கப்பட்டத் தேசிய மகா அமைப்பு (கிராண்டு நேஷனல் கன்சாலிடேட் டிரேடு யூனியன்) 50 லட்சம் உறுப்பினர்களோடு அமைக்கப்பட்டது; 1836ல் லண்டன் உழைக்கும் ஆண்கள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது; மேலும் ஜனநாயக அஸோசியேஷன் மற்றும் மாபெரும் வடக்கு யூனியன் செயல்படத் தொடங்கின. இவையனைத்தும் ஒன்றிணைந்து சில பத்து லட்சங்களில் தொழிலாளர்கள் திரண்டனர். முதலாவது சாசன இயக்க மாநாடு (சார்ட்டிஸ்ட் கன்வென்ஷன்) 1839 பிப்ரவரியில் நடந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் முதலாவது பெருந்திரள் அரசியல் அமைப்பு தேசிய சாசன அஸோசியேஷன் ஆகும். அப்போது நிலவிய நிர்வாக முறைமையை எதிர்த்து 1842ல் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்ய வெளிப்படையாக வீதியில் இறங்கியபோதும், அந்த கிளர்ச்சிப் போராட்டங்கள் அமைதியாக நடத்தப்பட்டன. 

சாசன இயக்கம் இரண்டு முக்கியமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பியது: ஒன்று, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நாடு தழுவிய பொதுவான வாக்குரிமை; இரண்டு, பத்து மணி நேர வேலை நாள். தேசிய அளவில் மனுஅளித்தல் (நேஷனல் பெட்டிஷன்) இரண்டாவது மாநாட்டில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க 33 லட்சம் கையெழுத்துகள் திரட்டப்பட்டன. முதன் முறை பத்து லட்சத்திற்கும் மேல் கையெழுத்துகள் மட்டுமே பெறப்பட்டன. பொது வேலைநிறுத்தங்கள், பேரணிகள், மனு அளித்தல் மற்றும் பாராளுமன்றம் நோக்கிப் பேரணி எனப் போராட்ட இயக்கங்கள் இங்கிலாந்து முழுவதும் அலையலையாய் நடந்தன. இங்கிலாந்தைக் குலுக்கிய    பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணி அதன் உச்சத்தை 1842ல் அடைந்தது. முதலாளித்துவ ஆட்சி முறைமையை எதிர்த்து முதலாவது முக்கியமான கிளர்ச்சி, வாக்குரிமை கோரிய பாட்டாளிகளின் அமைதியான இயக்கமாகும்.

10 மணி வேலைநாள் சட்டபூர்வமான வழிமுறைகள் மூலம் 1847ல் நிலைநாட்டப்பட்டது.

ஜெர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் தேர்தல் வெற்றிகள் 

ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி) தொழிலாளர் வர்க்கத்தின் முதலாவது அரசியல் கட்சியாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதின் தொடக்கத்திலும் அக்கட்சியின் வென்ற வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கையையும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. 1878 முதல் 1890 வரை கட்சி தடைசெய்யப்பட்டாலும் அந்நடவடிக்கையால் கட்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒருமுறை நான்கில் ஒருபங்கும், ஏன் மற்றுமொரு முறை மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பாராளுமன்றத்தில் பெற்றது. 107க்கும் அதிகமான தினசரி செய்திப் பத்திரிக்கைகளை அக்கட்சி பதிப்பித்து வெளியிட்டது. சோஷலிசம் நோக்கி முன்னேறுவதற்கு வாக்குப் பெட்டி தேர்தல் முறையை அது பயன்படுத்தியதை மார்க்சும் பின்னர் ஏங்கெல்சும் வெகுவாக மதிப்பிட்டு புகழ்ந்துரைத்தனர். ஏங்கெல்ஸ் இன்னுமொரு படி மேலே சென்று அந்த வாக்காளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களைச் சர்வதேசிய தொழிலாளர்கள் இயக்கத்தின் முன்னணிக் காவல் படை என்றழைத்தார்.

அமெரிக்காவில் போராட்டங்கள்

1791ல் பிளடெல்பியாவில் தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி வேலைநாள் கோரி வேலைநிறுத்தமும், 1835ல் அங்கே அனைத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். அப்போது அவர்கள் உயர்த்திப் பிடித்த பதாகையில் “6 மணியிலிருந்து 6 மணி, இரண்டு மணி நேர உணவு இடைவேளையுடன் 10 மணி நேர வேலை’‘ என்று பொறித்திருந்தனர். 1836ல் எட்டு மணி நேரக் கோரிக்கை எழுப்பப்பட்டது; போஸ்ட்டன் கப்பல் தச்சுத் தொழிலாளர்கள் அதனை 1842லேயே வென்று சாதித்தனர். 1864ல் சிக்காகோ தொழிலாளர்கள் எட்டு மணிநேரக் கோரிக்கையை மையமானதாக வைத்தனர். 

அமெரிக்காவில் பத்து மணிநேர வேலை நாள் சட்டம் 1847ல் நியூ ஹேம்ஸ்பியரில்  முதன் முறையாக நிறைவேற்றப்பட்டது. 1829 தேர்தல்களில் தொழிலாளர்கள் 28 சதவீத வாக்குகளைப் பெற்றார்கள், ஸ்கிட்மோர் என்பவர் நன்கறிந்த தலைவராக எழுந்தார். 1873ல் ஒர்க்கிங்மென் பார்ட்டி இல்லினாய்சிலும், வட அமெரிக்காவின் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி 1874லிலும் உருவாயின. தொழிலாளர்களின் ஆர்டர் ஆஃப் நைட்ஸ் என்ற தொழிற்சங்கம் 1869ல் அமைக்கப்பட்டது. 1870களில் முக்கியமாக எட்டு மணி வேலைநாள் கோரி வேலைநிறுத்தங்கள் பல நடைபெற்றன. அமெரிக்கா மற்றும் கனடாவின் தொழில் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பிலிருந்து ‘தொழிலாளர்களின் அமெரிக்கக் கூட்டமைப்பு’ (AFL) 1881ல் உருவானது. 

ஒர்க்கிங்மென் பார்ட்டி, ஜனாதிபதி ஜான்சனைச் சந்தித்து 8மணி வேலைநாள் கோரிக்கையை வற்புறுத்தியது. ஜனாதிபதி உலிசெஸ் கிராண்ட் 1869 மே 19ம் நாள் எட்டு மணி வேலைநாள் பிரகடனத்தை வெளியிட்டார். மெக்கானிக்குகள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பெடரல் ஊழியர்களுக்கு அமெரிக்க காங்கிரஸ் 1868 ஜூன் 25ம் நாள் எட்டுமணிநேர சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் அதனை அமல்படுத்த பெருந்திரள் தொழிலாளர் இயக்கங்கள் நடத்த வேண்டியிருந்தது.  

1870களில் எட்டு மணி நேர வேலைநாள் மையமான கோரிக்கையானது. நியூயார்க் நகரத்தின் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து 1872ல் எட்டுமணி நாள் கோரிக்கையை வென்றனர். அல்பர்ட் பார்சன்ஸ் 1878ல் ‘சிக்காகோ 8 மணி லீக்’ அமைப்பின் செயலாளர் ஆனார். ‘தேசிய எட்டுமணி நேர கமிட்டி’ ஒன்று 1880ல் செயல்படத் தொடங்கியது.  

ஒன்று திரட்டப்பட்ட தொழில்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ( பின்னர் இந்த அமைப்பு AFL எனப்படும் அமெரிக்கன் பெடரேஷன் ஆஃப் லேபர் என்றானது) 1884லில் ஒரு கருத்தரங்க மாநாட்டில் 1886ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியை ‘8மணி நேர வேலை நாள்’ என அனுசரிப்பது என முடிவு செய்தது. நைட்ஸ் ஆஃப் லேபர் (the Knights of Labor, உழைப்பின் வீரர்கள் என்று பொருள்படும்) அமைப்பின் உள்ளூர் கிளைகள் அக்கோரிக்கையை ஆதரித்தது.  அமெரிக்க நாடு முழுவதும் 1886 மே 1ம் தேதி வேலைநிறுத்தம் நடத்த தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பு வரலாறு காணாத பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. (நைட்ஸ் ஆஃப் லேபர் அமைப்பின்) ஆல்பர்ட் பார்சன்ஸ், அவருடைய மனைவி லூசி பார்சன்ஸ் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் 80 ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்கி சிக்காகோ, மிச்சிகன் அவின்யு வீதிகளில் மே 1ம் தேதி பேரணி நடத்தினர். அடுத்து வந்த நாட்களில் அமெரிக்கா முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். “எங்கள் படைகளை அறைகூவி அழைக்கிறோம், கப்பல் தளங்கள், கடைகள், ஆலைகளிலிருந்து… அழைக்கிறோம்” என்ற ஜெஜி பால்சார்டின் “எட்டு மணிநேர பாடல்” பின்னே தேசம் ஒன்று திரண்டது.

‘ஒர்க்கர்ஸ் நியூஸ்பேப்பர்’ இதழின் ஆசிரியர் ஆகஸ்ட் ஸ்பைஸ், சிக்காகோ மேக் கார்மிக் ஆலையின் தொழிலாளர்களிடையே மே 3ம் நாள் சொற்பொழிவாற்றினார். வேலைநிறுத்தத்திற்கு எதிரான ஆலையின் கருங்காலிகள் காரணமாக பதற்றம் நிலவியது. போலீஸ் துப்பாக்கியிலிருந்து சீறிய தோட்டாக்கள் நான்கு தொழிலாளர்களைக் கொன்றன. மே 4ம் நாள் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கூட்டத்தின் இறுதியில் குண்டு ஒன்று வெடித்தது; அது போதாதா, தலைவர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி போலீஸ் கைது செய்வதற்கும், தூக்கு தண்டனை விதிக்க நீதிபதிகளுக்கும் ஒரு சாக்குப் போக்கு கிடைத்தது.

எட்டு தலைவர்களைத் தூக்கிலிட தண்டனை : பார்சன்ஸ், ஸ்பைஸ், ஏங்கல், ஃபிஷ்சர், ஃபீல்டன், ஸ்ச்வாப், லிங் மற்றும் ஆஸ்கர் நீபி. முதல் நான்கு பேரும் 1887 நவம்பர் 11ல் தூக்கிலிடப்பட்டனர். இல்லினாய்ஸ் கவர்னர் ஜான் பி ஆல்ட்கெல்டு, நடந்த விசாரணை முழுவதும் தவறானது, ஜோடிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தினார்; மீதம் உள்ள கைதிகளை விடுவித்து, “மனநோய், திணிக்கப்பட்ட ஜூரிகள் மற்றும் ஒருதலைச் சார்பான நீதிபதி” காரணமாகப் பலியானவர்களே தூக்கிலிடப்பட்ட அந்த மனிதர்கள் என்று அவர் குறிப்பிட்டார். 

“எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணிநேர மன மகிழ்வு மற்றும் எட்டு மணி நேர ஓய்வு” என்பதைப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் சோஷலிஸ்ட்டுமான இராபர்ட் ஓவன் முதன் முதலான வடிவமைத்தார். 

1888 டிசம்பரில் ஏஎஃப்எல் சங்கம் தொழிலாளர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் கூடாது என்று முடிவெடுத்தது. 1889ல் இரண்டாவது சர்வதேச அகிலம் 1890ம் ஆண்டு தொடங்கி ஆண்டு தோறும் மே 1ம் தேதியைச் சர்வதேசத் தொழிலாளர் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.  

மேதினமும் செங்கொடியும்

நாம் மேலே கண்டதுபோல செங்கொடியின் வரலாறு 1886ம் ஆண்டிற்கும் வெகு காலத்திற்கு முன்பே பழைமையானது; அந்த ஆண்டில் அனைவரும் அறியும் வகையில் பொதுவானதாக ஆனது. உண்மையில் பாரம்பரியமாக ‘உழைப்போர் தினம்’ அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வந்தது. வணிகச் சுழற்சி உள்ளிட்ட சில காரணங்களால் 1884ல் அது மே மாதத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கமாக உழைப்போர் தினம் கொண்டாட்டமான விழா தருணமாகும்; அப்போது சிகப்பு ரிப்பன்கள், பேனர்கள், கொடிகள், தோரணங்களோடு குடும்பம் குடும்பமாக வெளியே வந்து கொண்டாடுவது வழக்கம். 1840கள் தொடங்கியே சிகப்பு பேனர்கள் பயன்படுத்துவது தொடங்கிவிட்டது. 1886ல் நிகழ்ந்த மேதின நிகழ்வுகள் அதனை உலகம் முழுவதும் பரவச் செய்தது. 

இந்தியாவில் முதன்முதலாக மே தினக் கொண்டாட்டம் 1923ல் சென்னையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடந்தது. 1925ல் கராச்சியிலும், 1927ல் பாம்பே மற்றும் 1928ல் பிற இடங்களிலும் விழா நடந்ததாகச் செய்திக் குறிப்புகள் உள்ளன. சென்னையில் செங்கொடிகள் ஏற்றப்பட்டன.

21ம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கம்

1886 மேதினத்திலிருந்து ஒரு முழு வரலாற்று சகாப்தம் கடந்து விட்டது, மேலும் முதலாளித்துவம், சோஷலிசம் மற்றும் தொழிலாளி வர்க்கத்திலும் பெரும் மாற்றம் நடந்துள்ளது. புதிய சமுதாயம் படைப்பதற்குப் போராடும் ஒரு வர்க்கமாகச் சர்வதேசிய தொழிலாளர் வர்க்க இயக்கம் வரலாற்றில் தடம் பதித்துள்ளது. தொழிலாளர் தினம் அல்லது மேதினம் ஒரு சர்வதேசிய விழாவாகியுள்ளது.

தாவிப் பாய்ச்சலில் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் தகவல் தொலைத் தொடர்பு புரட்சி நடைபெற்றுவரும் காலத்தை நாம் கடந்து வருகிறோம்; இப்புரட்சி தொழில்புரட்சியைவிட  உயர் மட்டத்திலும் ஆழத்திலும் நடைபெறுவதாகும். தகவல் தொலைத்தொடர்பு மற்றும் உற்பத்திச் சாதனங்களில்  அடிப்படையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே நாம் ஆலைத்தொழில் சகாப்தக் காலத்தில் உருவாக்கிய பல கோட்பாடுகளை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.  

தொழில்நுட்பவியல் மற்றும் கருவிகளின் இயல்பின் அடிப்படையில் வர்க்கங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு முக்கியமாக நிர்ணயிக்கப்படுகிறது. இன்றைய நாளில் சமூக விழா நிகழ்வுகள் கணினி, எலெக்ட்ரானிக் இணையவழியில் நடைபெறும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேவைகள் மற்றும் தகவல் வலைப்பின்னல் அடிப்படையில் நகரமயமாதல் புதிய அம்சங்களாகச் சேர்ந்து கொள்கிறது. 

விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி (STR), நமது சமூகத்தின் சேர்மானக் கட்டமைப்பையே மாற்றி வருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் கட்டமைப்பே (காம்போசிஷன்) தீவிரமான மாறுதல்களுக்கு உள்ளாகி வருகிறது. அதன் வீச்சு அகலமாகிப் பரவலாகும்போது தகவல் பிரிவு, சேவைப் பிரிவு ஊழியர்கள், பொறியாளர்கள், கணினி நிரலர்கள் (ப்ரோகிராமர்ஸ்), மேலாண்மையாளர்கள், கணினி கன்ட்ரோலர்கள் முதலானவர்களையும் தொழிலாளர்களாக உள்ளடக்குகிறது. நடுத்தர வர்க்கம் தொழிலாளி – ஊழியர் போன்ற குணாம்சங்களைத் தழுவுகிறது. 

சமூகம், உற்பத்தியிலிருந்து சேவை மற்றும் தகவல் தொடர்பு நோக்கி அடிப்படையில் மாறிச் செல்கிறது என்று 1970களில் டேனியல் பெல் சுட்டிக் காட்டியுள்ளார். டோஃப்ளர், போஸ்டர், ரீச்ட்டா, ரிஃப்கின் முதலான பல அறிஞர்கள், உருவாகி முகிழ்த்து வரும் பல (மாறுதல்) அம்சங்களைக் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியுள்ளனர். 

தொழிலாளர் வர்க்கத்தில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றம்: உற்பத்தியிலிருந்து சேவைப் பிரிவுக்கு மாறியது; அதாவது, உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் விகிதாச்சாரம் வீழ்ச்சியடையும்போது சேவைப் பிரிவுகளில் அதிகரிக்கிறது. தொழிலாளர் கட்டமைப்பில் பொருள் உற்பத்தியில் ஈடுபடாத தொழிலாளர்கள் 70 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். பல நூறு கிலோ மீட்டர்களுக்கு இந்தியாவில் நூற்பு மற்றும் நெசவு இணைந்த ஆலைகளைக் காண்பது அரிது. (நூற்பு ஆலை தனி, நெசவு ஆலை தனி); பிரம்மாண்டமான பழைய பாணியில் அமைந்த தொழில் மையங்கள் இருந்த இடங்களில் சேவை, எலெக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு, தகவல் பரிமாற்றம் முதலிய புதிய மையங்கள் ஏற்பட்டுள்ளன. 

புதிய தொழிலாளர்கள் எழுப்பும் முழக்கங்கள், கோரிக்கைகள், (போராட்டத்) தந்திர உத்திகள் அனைத்தும் வித்தியாசமானவை என்பது தெளிவாகத் தெரிகிறது. புதிய வரலாற்று, அரசியல் மாற்றங்கள் லத்தின் அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், ஐரோப்பா முதலான நாடுகளில் நிகழ்ந்து வருகின்றன. எதிரே கண்ணில் காணும் காட்சியிலிருந்து பழைய பாணி ஆலைத் தொழிலாளர்கள் மெல்ல மறைந்து அருகி வரும்போது, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்கள் பதிலியாக அமர்த்தப்படுகின்றனர். 

ஒரு நாளின் பணி நேரம் எவ்வளவு என்ற கேள்வி மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. இந்தியா உட்பட சில வலதுசாரி ஆட்சியாளர்களின் தாக்குதல் பணி நேரத்தை நீட்டிப்பதிலும் தொழிலாளர்கள் உரிமைகளை இழக்கச் செய்வதிலும் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. மேலும் ‘பணி’த் தன்மையிலும் (‘work’) மாற்றங்கள் நிகழ்வதால், கூட்டாக உழைக்கும் பணி நேரத்தை நிர்ணயிப்பதையும் அடையாளம் காண்பதையும் கடினமாக்கி உள்ளது. 

21ம் நூற்றாண்டின் இத்தகைய புதிய கேள்விகளுக்கு விடை கண்டு தொழிலாளி வர்க்கம் தீர்வு காண வேண்டும்.

அனைவருக்கும் மேதின புரட்சி தோழமை வாழ்த்துகள்!    


--தமிழில் : நீலகண்டன், 

NFTE தொலைத் தொடர்பு சங்கம், கடலூர்


Wednesday 28 April 2021

21ம் நூற்றாண்டில் லெனினிய உத்தியின் பொருத்தப்பாடு

 

21ம் நூற்றாண்டில் லெனினிய உத்தியின் பொருத்தப்பாடு

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (ஏப்ரல் 18 –24)

ஏகாதிபத்தியத்தின் புதிய வளர்ச்சி நிலையைக் கண்டறிந்ததன் மூலம் 20ம் நூற்றாண்டில் புரட்சியின் உத்தியை மறுதகவமைப்புச் செய்தவர் லெனின். (ஏகாதிபத்தியத்திற்கு முந்தைய தொழில் புரட்சி கால) ஆலைமுதலாளித்துவத்தின் வளர்ச்சி நிலையிலிருந்து அடிப்படையில் வேறுபடும் ஏகாதிபத்தியத்தின் ஐந்து புதிய அம்சங்களை அவர் அடையாளப்படுத்தினார். லெனின் தனது புகழ்பெற்ற “ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சபட்ச வளர்ச்சிநிலை”என்ற நூலில் ஏகாதிபத்தியத்தை ஒரு புதிய சமூகப்பொருளாதார வடிவஅமைப்பாகிறது என குணாம்சப்படுத்தினார். 

லெனினியப் பரிசீலனையில் நிதிமூலதனம் என்பது மையமாகும்; அது, தொழிற்சாலை முதலீடு மற்றும் வங்கி முதலீடு இரண்டும் இணைந்த புதிய வகையான முதலீடாகும். இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள முதலீடு ஏகபோகமாகத் திரள்வதன் காரணமாக இந்த இணைப்புத் தவிர்க்க முடியாததாகி இம்மாற்றம் நிகழ்கிறது. 

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கி மற்றும் நிதிப் பிரிவு ஏகபோகமாகக் குவித்து மையப்படுத்தப்பட்டதால், உற்பத்தித்துறை உட்பட குணாம்ச ரீதியில் ஒரு புதிய உயர் மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டது. (இந்த இணைப்பின் காரணமாக உருவான) நிதிமூலம் உடனடியாக உற்பத்தித் துறையிலிருந்தும், உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதிலிருந்தும் விலகிக் கொள்ளும் எனக் கருதுவது பிழையானதாகும். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகும் மிகப்பெரும் அளவில் உற்பத்தியில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டதை 1960கள் மற்றும் 70களில் உலகம் முழுவதும் நாம் பார்க்க முடியும். 

ஜனநாயகப் புரட்சி -- லெனினிய உத்தி

ஜனநாயகப் புரட்சி குறித்த லெனினுடைய கோட்பாடு வெறும் ஆசை, விருப்பம் அன்று; மாறாக ஏகபோக மூலதனத்தின் குவிப்பு மற்றும் மையப்படுத்தல் காரணமாக பாதிக்கப்படும் அனைத்துச் சமூக சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டியதன் தேவை காரணமாக எழுந்தது. இது ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான விஞ்ஞான முறையாகும். ஜனநாயகம் என்பதன் பொருள், பெருந்திரள் மக்கள் மற்றும் வர்க்கங்கள் பங்கேற்பதும், அதனோடுகூட ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்ந்தது. இதைத்தான் நாம் கற்றுணரவேண்டும். ஏகபோகம் மற்றும் ஏகாதிபத்தியம் உலக ஜனநாயக மற்றும் புரட்சிகர நிகழ்முறைக்கு எதிரான பெரும் தடைகள் என லெனின் அடையாளப்படுத்தினார். இந்தப் பகுப்பாய்வில் பெறப்படும் இயல்பான மறுதலை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி எனும் முக்கியமான உத்தியாகும்.

லெனின்தான் முதன்முறையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் விரிவான நுட்ப விபரங்களை வகுத்தளித்தார் –அதுதான், குறுகிய (தன்னல) வட்டமான ஆகக்கூடுதல் ஏகபோக மூலதனக்குவிப்பை ஒதுக்கி அழித்தொழிக்க வல்லது. பரந்ததொரு முன்னணியே அதற்கான விடை. இப்புரட்சி, ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பாராளுமன்ற வடிவங்களைப் பயன்படுத்துதலையும், அவற்றை வலிமைப் படுத்துதலையும் உள்ளடக்கியது. தீவிர வலதுசாரி மற்றும் பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதும் பூர்ஷ்வா ஜனநாயகத்தைப் பாதுகாத்து வலிமைப்படுத்த வேண்டியதும் இக்கடமையைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளாகும். லெனின் பாராளுமன்ற அமைப்புக்களின் முக்கியத்துவத்தை, குறிப்பாக மேற்கத்திய அமைப்புக்களை, பெரிதும் வலியுறுத்தினார். 

2015ல் ஏற்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறித்த ஆவணத்தில் ஜனநாயகப் புரட்சிக் கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்று பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிட்டது: “இந்த ஜனநாயகப் புரட்சி நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய, ஏகபோக எதிர்ப்பு குணாம்சம் கொண்டதாக இருக்க வேண்டும்.” (பத்தி 9.1)

உற்பத்தி எதிர் நிதிமூலதனம் : முற்றும் முரண்பாடுகள் 

20ம் நூற்றாண்டின் கடைசி சில பத்தாண்டுகள் மற்றும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏகாதிபத்திய உலகில் ஒரு புது போக்கு எழுந்தது. முன்பு எப்போதும் நிகழ்ந்திராத வகையில் முதலீடு நிதிமூலதனமானது மட்டுமல்ல, ஏகபோகமாக்கப்பட்ட மூலதனம் மற்றும் நிதி மூலதனம் இரண்டும் உற்பத்தித் துறையிலிருந்து விலகி யூகப் பங்குச் சந்தையில் ஈடுபடும் அணுகுமுறை வளர்ந்தது. 

செல்வம் வேகமாக வளரும்போதே பற்றாக்குறையும், உற்பத்திக்கான அபரிமிதமான முதலீடும் வளர்ந்தது. தன்னையும் நவீன சமூகத்தையும் எது தாங்கிப் பிடித்ததோ அதே உற்பத்தி வாய்ப்புச் சாத்தியப்பாடுகளிலிருந்து இன்று ஏகாதிபத்தியம் பெருமளவில் விலகத் தொடங்கியுள்ளது. முதலாளித்துவம் இதுவரை முக்கியமாக தொழிலாளர்களையும் விவசாயிகளையும்தான் சுரண்டியது. 20ம் நூற்றாண்டின் முதன் முறையாக, குறிப்பாக 21ம் நூற்றாண்டில் நிதிமூலம், பெரிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களுக்கு (முதலாளிகளுக்கு) எதிராக அதிக அளவில் செல்வது மட்டுமல்ல அவர்களை உச்சபட்ச அளவில் சுரண்டவும் செய்கிறது. 

உற்பத்தி மற்றும் நிதிமூலதனத்தின் இடையேயான வரலாற்றுபூர்வ பிளவே சமகால முதலாளித்துவத்தின் குணம்சமாகிறது; அப்பிளவே சமகால ஏகாதிபத்தியத்தின் மையமான நெருக்கடியாகவும் இருப்பதுடன் சமுதாயத்தின் ஜனநாயக திட்ட மாற்றங்களுக்கான புதிய அடித்தளங்களையும் உண்டாக்குகிறது. வரம் கொடுத்தவன் தலையிலே கை வைப்பது போல நிதி மூலதனத்தை உண்டாக்கிய அதே உற்பத்தி முறைகளுக்கு (mode of production) எதிராக நிதிமூலதனம் செல்கிறது. (மார்க்ஸியத்தில் உற்பத்தி முறை என்பது உற்பத்தியில் செயல்படும் உற்பத்திச் சக்திகள், உற்பத்திச் சாதனங்கள், உற்பத்தி உறவு அனைத்தும் சேர்ந்ததைக் குறிக்கும்)

மறுபுறம், உற்பத்திக்கு நேர்ந்துள்ள அபாயம் குறித்துச்  சமூதாயத்தின் பிற பகுதியின் கவலை அதிகரிக்கிறது. நிதிசாராத, சமுதாயத்தின் இந்தப் பகுதியினரின் (கவலையை) பாதுகாப்பை உள்ளடக்கியதே நவீன ஜனநாயகப் புரட்சியின் சாரமாகும்.  

கார்ப்பரேட் சேமிப்பு (அதாவது லாபம்) மற்றும் கார்ப்பரேட் முதலீடுகளுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கிறது. ஒரே நேரத்தில் மிதமிஞ்சிய நிலையும் பற்றாக்குறையும் இருக்க முடியுமா? ஆனால் அறிஞர்கள் அபரிமிதமான மூலதனமும் (அதேநேரத்தில்) மூலதனப் பற்றாக்குறையும் இருப்பது குறித்துப் பேசுகிறார்கள்; காரணம் முதலீடு செய்யும் போக்கில் வீழ்ச்சி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியைச் சார்ந்து செயல்படும் கார்ப்பரேட் முதலீடுகள் உலகம் முழுவதும் 1990களிலிருந்து சரிந்து வருகிறது. (முதலீடுகளுக்கு மாறாக) பங்குகளை (equity buy-backs) வாங்குவது, முதலீட்டாளர்களுக்குப் பட்டுவாடா செய்வது, வாடகை தரும் சொத்துகள், நிதிசார்ந்த சொத்துக்களைக் குவிப்பது போன்ற போக்கு அதிகரித்து வருகிறது. ஒட்டுண்ணி கார்ப்பரேட் மயம் வளர்கிறது.

1990களிலிருந்து மூலதனம் 41 சதம் வளர்ந்துள்ளது, உபரி மதிப்பு விகிதம் 7சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் லாப விகிதம் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது லாபத்தில் வீழ்ச்சி என்று பொருள்படாது, லாப விகிதத்தில் மட்டுமே வீழ்ச்சி. இந்த லாப விகித வீழ்ச்சியை முறியடித்து வெல்ல உற்பத்திச் செலவு யூகத்தின் மூலம்  முயல்கிறார்கள்.

இன்று மூலதனம் ரியல் எஸ்டேட், பங்கு மார்க்கெட்டில் ஈடுபடுத்தப்பட்டு வாடகை ஈட்டும் சொத்துகளில் லாபம் தேடுகிறது. மைக்கேல் ராபர்ட்ஸ் கூற்றுப்படி அந்தக் கால முதலாளித்துவம் ஆலைகளைக் கட்டி லாபம் ஈட்டியது; ஆனால் புதிய முதலாளித்துவம் பயர் (FIRE) செக்டாரில் அதாவது நிதி, இன்ஷுரன்ஸ், ரியல் எஸ்டேட்டில் மையம் கொண்டிருக்கிறது. அடமானங்கள், ஹெட்ஜ் பண்டு, நிகர்நிலை முதலீடுகள் அதன் முக்கியமான பாகங்களாகிறது. சேமிப்புக்களை மறுசுழற்சி செய்து ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் பங்கு விலைகள் ஆக்குவதால் புதிய செல்வாதாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.  ஐபிஎம் நிறுவனத்தில் நடந்தது போல கார்ப்பரேஷன்கள் தங்களது வருமானத்தைத் தங்கள் சொந்த பங்குகளை வாங்குவதற்கே பயன்படுத்துகின்றன.

ஆலைத் தொழில் சார்ந்த முதலாளித்துவத்தின் கீழ் கூலி உழைப்பின் மூலம் உபரி மதிப்பு உண்டாக்கப்பட்டது. இன்று கூலி உழைப்பும் ஆலை முதலாளிகளும்கூட நிதி மூலதனத்தால் சுரண்டப்படுகின்றனர் – இது புதிய வகை ஜனநாயகப் புரட்சியை அவசியமாக்குகிறது.

ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பிற்கான விரிவான களம் உருவாகிறது என்பதையே பின்வரும் கேந்திரமான முழக்கம் அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறது: (“அவர்கள் வெகு சிலர், நாம் மிகப் பலர் :) “99 சதவீதம் ஒரு சதவீதத்திற்கு எதிராக”

பெருங்கோடீஸ்வரர்கள் பெருக்கம்

உற்பத்தி மூலதனம் நிதிமூலதனம் இரண்டையும் முன்பு எப்போதுமில்லாதபடி அணி பிரித்து நிறுத்தியிருக்கிறது, உலகின் கொரோனா தொற்று நெருக்கடி. உலகப் பொருளாதாரம் நெருக்கடி ஆழத்தில் நழுவி விழும்போது நிதிமூலதன பகாஸ்வரர்கள் முன்பு எப்போதுமில்லாதபடி செல்வத்தை, முக்கியமாக யூக வணிகத்தின் மூலம், குவிக்கிறார்கள். ஹூரன் (Hurun) அறிக்கையின்படி, கொரோனா குழப்பத்திற்கு மத்தியிலும் கடந்த பத்தாண்டுகளில் 2020ம் ஆண்டு மிகப் பெரிய செல்வக் குவிப்பைக் கண்டுள்ளது. அந்த ஆண்டில் ஒவ்வொரு வாரமும் நூறு கோடி டாலர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக எட்டு பேர் சேர்கிறார்கள்.  முன்பு ஒரே ஆண்டில் இத்தனை செல்வம் உலகில் உண்டாக்கப்பட்டதில்லை. அதேபோல அமைதி காலத்தில் இத்தனை குழப்பங்கள் பொருளாதாரத்தில் ஏற்பட்டதுமில்லை.

உலக அளவில் புதிதாக 412பேர் சேர, தற்போது பில்லியனர்கள் (நூறு கோடி டாலர் சொத்துடையவர்கள்) உலகில் 3228 பேர் உள்ளனர். 

உலகில் மிகப் பெரிய முதன்மை பணக்காரர் எலோன் மஸ்க் (Elon Musk) 197 பில்லியன் டாலர் சொத்துடனும், அடுத்து ஜெஃப் பெஜாஸ் 189 பில்லியன் டாலர், அடுத்தடுத்து பில்கேட்சும் ஜுக்கர் பெர்க்கும். உலகின் ‘பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் மன்னன்’ எனப் புகழப்படும் ஜோங்க் ஷன்ஷான் (Zhong Shanshan), முதன் முறையாக ஒரு சீனர், 85 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளார். 

இந்தியக் கோடீஸ்வரர்கள்

சென்ற 2020ம் ஆண்டில், உலக பில்லியன் (நூறு கோடி) டாலர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 40 புதிய மகா கோடீஸ்வரர்கள் இணைந்துள்ளனர். தற்போது இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த 209 பில்லியனர்களில் 177 பேர் இந்தியாவில் வசிப்பவர்கள் ஆவர்.

அம்பானியின் சொத்து 24 சதவீதம் ஊதிப் பெருகி 83 பில்லியன் டாலர் ஆகி, உலகின் 8வது நபராகப் பட்டியலில் உள்ளார். 

சீனாவில் 256 புதிய பெருங்கோடீஸ்வரர்கள் இணைய அந்நாட்டில் உலகிலேயே 1056 ‘ஊரறிந்த’ கோடீஸ்வரர்கள் உள்ளனர்; அந்த எண்ணிக்கை அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜெர்மனி மூன்று நாடுகளின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் 160 புதிய பில்லியனர்கள் எண்ணிக்கையை ஒப்பிட சீனாவில் 490 புதிய பெருங் கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர். 

ஏன் மற்றும் எப்படி இது நிகழ்கிறது? 

உற்பத்தித் துறை முதலீட்டிலிருந்து மூலதனம் மறையும்போது இவ்வளவு சொத்து சிலரது கைகளில் மட்டும் அதிகரித்துக் குவிக்கப்படுவது எப்படிச் சாத்தியமாகிறது?  ஒரு காரணம், முதலீடு நிதிமூலதனமாக்கப்படுவது விரைவுபடுத்தப்படுவதாலும் மற்றும் யூகப் பங்குச் சந்தை (ஸ்டாக் மார்க்கெட்) அதிவிரைவாக வளர்ச்சியடைவதாலும் நிகழ்கிறது. இதனோடு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஊரடங்கு தொடர்பான தவறான கையாலுதல் போன்ற அரசே முன்னின்று நடத்தும் நடவடிக்கைகள் மூலம் பணத்தையும் முதலீட்டையும் யூக வணிகத்தில் ஆற்றுப்படுத்துவதும் சேர்ந்து கொள்கிறது. சாதாரண பொது மக்கள் தங்கள் சேமிப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் இழந்தார்கள்; அதேபோல சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் பிரிவினர் மற்றும் சிறு கடைக்காரர்களும் இழந்தனர்.  

பங்குச் சந்தை மதிப்பீடு அல்லது நிதிசார்ந்த சொத்துக்களின் மதிப்பு உயர்வு – அதாவது, கம்பெனிகளின் ஷேர்கள் தாறுமாறாக அதிகரிப்பது, மிகப் பெருமளவிலான யூக வணிகத்திற்கு இட்டுச் செல்கிறது. நாஷ்டாக் நிறுவனத்தின் மதிப்பு 2020ல் 42 சதவீதம் அதிகரிக்க சென்ஷான் (சீன) நிறுவனம் 40 சதவீதமும் ஜப்பானின் நிக்காய் 22.9 சதவீதமும் அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டின் மார்ச் 2ல் பிஎஸ்இ சென்செக்ஸ் புள்ளிகள் 50 ஆயிரம் மார்க்கைக் கடந்து, ஷேர்களுக்கு மிகப் பெரிய லாபத்தைத் தந்துள்ளது. பல்வேறு மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளது.

21ம் நூற்றாண்டின் இன்றைய வளர்ச்சிப் போக்குகள் நடுத்தர வர்க்கங்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தி முதலீட்டாளர்கள் உள்ளிட்ட நிதிமூலதன எதிர்ப்பு சக்திகள் பரந்த அளவில் ஒன்றுபடுவதற்கான தேவையை வலியுறுத்தி அழைப்பு விடுக்கிறது. சேவைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிதி மூலதனத்தின் கொடுமையான பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அப்படி விடுவிக்கப்பட்டால் மட்டுமே சமுதாயத்தில் உண்மையான ஜனநாயகப்படுத்தலும் ஜனநாயக அமைப்புகளும் மலரும். தகவல் தொழில்நுட்பம் இன்றைய சமூகத்தைச் செலுத்துவதால் அது ஜனநாயக நிகழ்முறையோடு ஒத்திசைவாக ஒன்றிணைய வேண்டும். 

ஊரடங்கைப் பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர ஆலைகளும் விவசாயமும் அழித்தொழிக்கப் படுகிறது. சிறுவணிக நிறுவனங்கள் அப்படியே பூட்டப்பட்டு, ஆலைகள் மூடப்பட்டதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெகுசாதாரணமாக வீதிகளில் வீசப்பட்டனர். சாதாரண தொழிலாளர்கள் போலவே நடுததர வர்க்க ஊழியர்களும் தொழில் முனைவோரும் அதே விதியைச் சந்தித்தனர். கடைகள் வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. 

உற்பத்தித் தரப்பில் ஒரு பக்கம் இப்படி (நெருக்கடியில்) நடக்கும்போது, நிதி மூலதனம் மறு தரப்பில் பொங்கி செழிக்கிறது.  இதுவே நவீன கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடு. (சாதாரணமாகத் தொழிலகங்களின் முதலாளிகள் லாபம் அதிகரிக்கும்போது, அங்கே பணியாற்றும் ஊழியர்கள் வாழ்வும் ஓரளவு நெருக்கடியின்றி செழிப்பதைப் பார்த்திருக்கிறோம். எனவேதான் தொழில்கள் வளர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்)

இந்த நிலைமை இதற்கு முன் நிகழாததும் புதியதான நிகழ்வுப் போக்கும் ஆகும். இதனை எதிர்கொள்ள நாம் லெனினின் கோட்பாடுகளை மேலும் வளர்ச்சி பெறச் செய்து மேலெடுத்துச் செல்ல வேண்டும். 

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

Wednesday 7 April 2021

தோழர் குப்தா நூற்றாண்டு தொடக்கம் -- ஏப்ரல் 8, 2021

 

தோழர் குப்தா –

ஒன்றுபடுத்தல்,

இணைந்து போராடல்,

தீர்வு காணல்

இவற்றின் அடையாளச் சின்னம்,

உயர்தனி நாயகன்

தோழர் குப்தா ---தொலைத்தொடர்பு தொழிற்சங்க இயக்க வரலாற்றின் தந்தை–--அவரது நெடிதுயர் வடிவத்தை உருவகப்படுத்துவதின் வாயிலாக ‘தொழிற்சங்க வாழ்வின் குறைவிலா பண்பின் சகாப்தம்’  ஒன்றை நம் வாழ்வின் கண் எதிரே தரிசிக்கும் பேறு பெற்றோம் நாம்.

            இருபத்திநான்கே வயதில், தலைநிமிர்ந்து, தொழிற்சங்க இயக்கப் பெருவாழ்வில் அடியெடுத்து வைத்தவர் அவர். தபால் தந்தித் தொழிலாளர்களைத் திரட்டுவது ஒன்றிணைப்பது என்ற புனிதப் பணிக்காகத் தோழர் டாங்கே மற்றும் தோழர் தாதா கோஷ் அவர்களின் சார்பில் அனுப்பப்பட்ட வாராது வந்த மாமணி.

            திரு ராம்லால் திருமதி சோனா தேவி இணையருக்கு ஏப்ரல் 8-ம் தேதி 1922ம் ஆண்டு இரண்டு சகோதரிகள் மற்றும் ஐந்து சகோதரர்களுடன் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் ஓம் பிரகாஷ் குப்தா. தொடக்கக் கல்வியை (Karnal) கர்னலிலும், உயர்நிலைக் கல்வியை முல்தான் மற்றும் லாகூரில் பெற்றார். லாகூரில் பயிலும் போது திரு ஐ.கே. குஜரால் (நமது முன்னாள் பிரதமர்) குப்தாவின் சீனியர். 1942 ஆண்டு காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத் தொடர்பில் இருந்தார் என்றும் தலைமறைவு குழுக்களை அமைத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு இராணுவத் தலைமையக அரசுப் பணியிலிருந்து வேலைநீக்கம் செய்யப்பட்டார்.

            அவரது வாழ்வின் பிற்கால சாதனையோடு வேலைநீக்கத்தை இணைத்துப் பார்த்தால் ஒரு அபூர்வமான வரலாற்று முரண்நகை ஒன்றை அவதானிக்கலாம். ஓய்வூதியப்பலன் ஏதுமின்றி பிரிட்டீஷ் அரசாங்கத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்ட குப்தாதான் சுதந்திர இந்திய அரசாங்கத்தோடு வாதாடிப் போராடி அரசுப் பென்ஷனை நமக்கு பாதுகாத்து கையளித்தார், அதுமட்டுமா வேலைநீக்கம் செய்யப்பட்ட BSNL தொழிலாளிக்கும் அரசுப் பென்ஷனைப் பெற வகைசெய்தார்.

            அரசியல் கைதிகளுக்காக ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட சிறப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுமாறு தோழர் குப்தாவை அழைத்தவர் வேறுயாருமல்ல, தோழர் சுர்ஜீத்தான். (பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் தோழர் சுர்ஜீத்).  அந்தப் பள்ளி நடைபெற பலரிடமும் நன்கொடை பெற்று நிதி திரட்டித் தந்தார் குப்தா.  தனது முதுகலைப் படிப்பைத் தொடர மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்.

            தற்போது பாக்கிஸ்தானுடன் இணைந்த பகுதியிலிருந்து வந்தவரான தோழியர் ஜனக், நமது சங்கத்தின் டெல்லி கிளைச் செயலாளராக இருந்தார். 1949 வேலைநிறுத்தத்தில் குப்தா 14 மாத காலம் சிறையிலிருந்தபோது தோழியர் ஜனக் அவர்களும் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கிடையே அரும்பிய நட்பு திருமணத்தில் மலர்ந்தது. ஆனால் துவக்கத்தில் ஜனக்கின் தாயார் அவர்கள் திருமணத்தை எதிர்த்தார். அதற்குக் காரணம் தோழர் குப்தா தொழில்முறை தொழிற்சங்வாதியாக இருந்தார் என்பதே.

            தொழிற்சங்க இயக்கத்தில் தோழர் குப்தா முதலில் துவக்கியது UPTW இணைப்பு முன்மொழிவுத் தீர்மானம்தான்.  இணைப்பு என்பது அவரைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு சாதாரண இயந்திரகதியான யுக்தியாக இருந்ததில்லை.  முடியாதவொன்றில்லை, எதையும் சாதித்து முடிக்க முடியும் என்ற உயரிய தொலைநோக்குப் பார்வை கொண்டவர். ஒற்றுமை என்பதை ஒரு ஆத்மசுத்தியோடு உறுதியான லட்சியமாகக் கொண்டு அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.

            மார்க்ஸிய ஞானம், காந்திய சிந்தனைத் தெளிவு நன்கு உடையவர் என்றபோதும், தனது அறிவுப் பெருமிதத்தை வெளிக்காட்டாதவர் மட்டுமல்ல, அப்படியொருத் தோற்றமளிப்பதையும் தவிர்க்க விரும்புபவர் தோழர் குப்தா. ஆனால் அன்றாடத் தொழிற்சங்கப் பிரச்சனைகளில் மார்க்ஸிய அறிவை காந்திய வழிமுறையில் பயன்படுத்த முயல்வார்.  தொழிலாளர்களை இயக்கங்களில் பெருமளவில் திரட்டிடவும், பிரச்சனைத் தீர்வில் அரசுகளை வழிக்குக் கொண்டு வருவதிலும் அவர் அதிகம் பயன்படுத்திய புகழ்மிக்க ஆயுதங்கள் உண்ணாவிரதமும் ஒத்துழையாமையுமே!

            அடிமட்ட மக்களுக்காகப் போராடி அவர்கள் வாழ்வை உயர்த்தி மேல்நிலைப்படுத்துவது என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்.  அந்தக் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து வெற்றிபெற்ற தருணம்தான் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட காசுவல் கூலித் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தியது மட்டுமல்ல அவர்களை இலாக்காவின் படிநிலைகளில்  TM / TTA என உயரச் செய்ததுமாகும்.

            அவர் செயல்பாட்டின் அடிப்படை ஆதார சுருதி ’பாகுபாடு காட்டாதே’ என்ற உறுதிப்பாடே.  விடுமுறை நாட்கள், மருத்துவம் முதலிய சலுகைகள் மற்றும் வார ஓய்வுநாள் பிரச்சனைகளில் மூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு ஊழியர்களுக்கிடையே பாரபட்சம் நீக்கிச் சமநிலையைக் கொண்டு வந்தது.

            அவரது சொற்பொழிவு பாணி ஆடம்பரமற்றது, அலங்காரமான அடுக்குமொழிச் சொற்கள், குழப்பும், பயமுறுத்தும் டாம்பீக வெற்றுச் சொற்கள் ஏதுமில்லாத எளிமையான மக்கள் பேச்சு பாணி ஆகும்.  ஊழியர் நலன்களுக்குச் சம்பந்தமில்லாத எந்தச் சொற்களையும் அவரது நா உதிர்த்ததில்லை, விவாதித்ததில்லை.

            மாநாடு தொழிற்சங்கக் கூட்டங்களில் பேசும்போது குப்தா இரண்டு முரண்பட்ட எதிரும் புதிருமான மேற்கோள்களைக் கையாள்வார்.  ஒன்று மகாபாரதம், இன்னொன்று மாசேதுங்கின் சிகப்புப் புத்தகம்.

            NFPTE மற்றும் அதன் ஒன்பது சங்கங்களின் செயல்பாடுகளில் குப்தா கடைபிடித்தது தோழர் லெனின் அவர்களின் சுயநிர்ணய உரிமை கொள்கை.

            மார்ஸிய விஞ்ஞானம் உற்பத்தி சக்திகளின் மறுமலர்ச்சியை புத்தாக்கத்தைக் கூறும். அந்த மார்க்ஸிய ஞானமே குப்தா முன்வைத்த கேடர் சீரமைப்பின் அடிநாதம் —ஜீவ சுரம்.  பிரச்சனைத் தீர்வுகளில் அவர் மிகச் சிறந்த விவாத மேன்மைமிக்கவராகவும், விடாப்பிடியான போராளியாகவும் தொடர்ந்து திகழ்ந்தார்.

            இயக்கத்தின் அமைப்புக் கோட்பாடுகளில் அவர் கடைபிடித்தவை செவ்வியல் உதாரணமாகத் திகழக் கூடியவையும் மனிதநேயம் மிக்கதுமாகும்.  அது அப்படித்தான் இருக்க முடியும், ஏனெனில், செவ்வியல்கள் எல்லாம் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவைதாமே!

            அவர் நம் அனைவருக்கும் போதித்தார், கற்றுத் தந்தார்: “பெரும்பான்மைக்குப் பெரும்பான்மை என்ற (அதிகார) போதை இருக்கலாகாது; அதே போழ்து, சிறுபான்மைக்கு நிராகரிக்கும் உரிமை இருக்க முடியாது”  ஒத்த கருத்துள்ள சிலர் சேர்ந்து தமக்குள்ள உரிமையைப் பயன்படுத்துகிறோம் என்று, தலைமையைக் காட்டிக் கொடுக்க முனைந்தால் --– பிறகு, தலைமைக்கும் அமைப்பை, அமைப்பின் முடிவுகளைப் பாதுகாக்கும் உரிமை நிச்சயம் இருக்க முடியும் என உறுதியாக நம்பியவர் குப்தா.

            1982 டெலிகாம் இதழில் தோழர் குப்தா இப்படி எழுதினார்: ”ஒற்றுமையைக் கட்ட வேண்டுமென்றால், அப்போது சுயகட்டுப்பாடும், அமைதியும் காக்க வேண்டியதும் முக்கியம்.  முதலில் மற்றவர்களின் கருத்தை மதிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரின் தடுமாற்றங்களை –-பலவீனங்களை-- வெல்வதற்கு அவருக்கு நாம் உதவ வேண்டுமே அன்றி, அந்தத் தடுமாற்றங்களை -– பலவீனங்களையே-- நாம் துஷ்பிரயோகம் செய்தால் ஒற்றுமையைக் கொண்டு வருவதென்பது மேலும் மேலும் சிரமமானதாகிவிடும்”

            தன்னுடைய வாழ்நாளெல்லாம் NFTE அமைப்பை அனைத்துக் கருத்தோட்டங்களும் கொண்ட பரந்துபட்ட அமைப்பாகக் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். NFTE  அமைப்பின் மீது அரசியல் சாயம் ஆகக் கூடுதலாகக் கவிந்து விடுவதைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்தார்.

            அவர் எப்போதும் அனைவரின் நலன் விரும்புவராகவும், அனைவரோடும் பகிர்பவராகவும், பண்பின் பான்மை மிக்கவராகவும் இருந்தார்.  டெல்லியில் குப்தா வீடு ஒன்று வாங்கிக் கொள்ள அவரது தந்தை அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்தார்…  ஆனால் அவரோ அந்தப் பணத்தில் உறுப்பினர்களின் பங்களிப்போடு நமது சங்கத்திற்கென ஒரு கட்டிடம் – தாதா கோஷ் பவன் – வாங்கினார். 

            தோழர்களோடு பழகுவதில் தோழர் குப்தாவுக்கெனத் தனித்துவமான ஒரு பாங்கு உண்டு. பழமையான தோழமைத் தருணங்களைப் பசுமையாகப் புத்தகத்தில் மூடி வைத்த மயிலிறகாய்ப் போற்றி நெகிழும் நெஞ்சினர் நம் குப்தா. தோழர்கள்  K.இராமமூர்த்தி, K.G. போஸ், மோனி போஸ் மற்றும் ஜெகன் இல்லங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வருகை தருவதைத் தவறவிட்டதில்லை.  குப்தா குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவை ஒரு நெகிழ்வான தருணத்தை அசை போட ஆயிரம் இருக்கும்.  அதில் ஒன்று,

தோழர் ஜெகன் வேலைநீக்கம் செய்யப்பட்டபோது ஜெகனின் பொருளாதார சிரமங்களைச் சிறிதே குறைக்க தோழர் குப்தா அவருக்கு அனுப்பிய ஒரு பத்து ரூபாய் தாள் இன்றும் மதிப்பு மிக்கதாய் விளங்குகிறது.                               

     2013-ம் ஆண்டு  ஜனவரி 6ம் நாள் நமக்காகச் சிந்திப்பதை நிறுத்தி அவர் மறைந்தாலும் என்றும் நம்மோடு வாழும் தோழர் குப்தா நினைவைப் போற்றுவோம்! 


2021ம் ஆண்டு இந்த ஏப்ரல் 8ல் தொடங்கும்

     தோழர் ஓம் பிரகாஷ் குப்தா நூற்றாண்டு விழாவை

ஆண்டு முழுதும் கொண்டாடி அவரது சிந்தனைகளை அசைபோட்டு

ஓபிஜி புகழ் பாடுவோம் !

(முன்பு வெளியான தோழர் பட்டாபி எழுதிய

ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் -- நீலகண்டன்

வெளியீடு: கடலூர் மாவட்டச் சங்கம் )

Sunday 4 April 2021

சிந்திக்கச் சில கேள்விகள் -- தோழர் பட்டாபி வலைப்பூ பக்கத்திலிருந்து

 


என் கேள்விக்கு என்ன பதில்?

தோழர் பட்டாபி வலைப்பூ பக்கத்திலிருந்து (PATTABI WRITES )


BSNL விஆர்எஸ் 2019 திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றவர்களின் கனிவான பார்வைக்கு…


சிந்திக்கச் சில கேள்விகள்

1.   பென்ஷன் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கான (செலவுத் தொகைக்குப்) பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா?

ஆம். சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் கோரியதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு வாரியாக மத்திய பட்ஜெட் ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது; BSNLல் நம்மைப் பொருத்தவரை, மத்திய தொலைத்தொடர்பு இலாக்கா (DOT) டிமாண்டு எழுப்புகிறது.  

2.   (நம் தொலைத்தொடர்பு பிரிவில்) விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் BSNL அப்சார்ப்டு விஆர்எஸ் பெற்றவர்கள் என்று இருக்கின்ற இரண்டு வகையினரும் ஒரே விதியின் கீழ் பென்ஷன் பெறுகிறார்களா?

‘இல்லை’ என்று நாம் சொல்ல முடியும். விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் விருப்ப ஓய்வு பெற்ற தேதியிலிருந்து சிசிஎஸ் (மத்திய பணியாளர் சேவை) விதிகள் 37-ஏ படி ஓய்வூதியம் பெறுகின்றனர்.

AIBSNLDPA ஓய்வூதியர் சங்கத்திற்கு DOT இலாக்கா எழுதிய 2021 மார்ச் 9 தேதியிட்ட கடிதத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தின்படி, BSNL 2019 விஆர்எஸ் பெற்றவர்கள் சிசிஎஸ் விதிகள் 37-ஏ படி ஓய்வூதியம் பெறவில்லை. DOT பயன்படுத்திய வார்த்தைகள் அப்படியே கீழே தரப்படுகிறது:

‘அடிப்படையில் பொதுவாக அர்த்தம் கொள்ளும் எந்த வகையிலும் (Any generic reference of CCS pension Rules) சிசிஎஸ் பென்ஷன் விதிகளைத்  தொடர்புபடுத்துவது (விஆர்எஸ் சிறப்புத் திட்டத்தின்) தனித்துவமான பலன்களை மோசமாகப் பாதித்துவிடக் கூடும்.’

3.   அந்தக் கடிதத்தில் எந்த உறுதிமொழியும் இருக்கிறதா?

ஆம். (ஓய்வூதியர்களின்) பிபிஓ உத்தரவில் ‘BSNL விஆர்எஸ் 2019’ எனக் குறிப்பிடுவது, தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி வழங்கக்கூடிய நியாயமான எந்த ஓய்வூதியப் பலன்களையும், ஓய்வூதியர்களிடமிருந்து எதிர்காலத்தில், பறித்துவிடாது என்று அக்கடிதம் வலியுறுத்துகிறது.

4.   (வயதுமூப்பு ஓய்வு / விருப்ப ஓய்வு / விஆர்எஸ் 2019 என) அனைத்து BSNL ஓய்வுபெற்றவர்களுக்கும் பென்ஷன் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கான (பட்ஜெட் நிதி) ஒதுக்கீடு ஒரே முதன்மை கணக்கின் கீழ் (single Major Head) வழங்கப்படுகிறதா?

இதற்கான பதிலும் ஒரு பெரிய ‘ இல்லை ’ என்றே நாம் சொல்ல வேண்டியுள்ளது. சிடிஏ பென்ஷனர்கள், BSNL ஐடிஏ பென்ஷனர்கள் மற்றும் MTNL ஐடிஏ பென்ஷனர்கள் அனைவரும் ஒரே முதன்மை கணக்குத் தலைப்பின் கீழ், அதாவது ‘மேஜர் ஹெட் 2071, பென்ஷன் மற்றும் பிற ஓய்வூதியப்பலன்கள்’, (நிதி ஒதுக்கீடு) செய்யப்படுகிறது.

BSNL விஆர்எஸ் 2019 பென்ஷனர்கள் இந்தத் தலைப்பின்படி ஒதுக்கீடு பெறவில்லை.

5.   அவ்வாறெனில், பிறகு எந்தக் கணக்குத் தலைப்பின் கீழ் BSNL விஆர்எஸ் 2019 பென்ஷனர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்?

BSNL விஆர்எஸ் 2019 பென்ஷனர்கள் வேறு வித்தியாசமான மேஜர் ஹெட் 3275 அதாவது, ‘பிற தொலைத்தொடர்பு சேவைகள்‘ (Major Head 3275  viz  'Other Communication Services') தலைப்பின் கீழ் தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர். எக்ஸ்கிரீஷியா எனப்படும் சிறப்புக் கருணைத் தொகையும் இந்த முதன்மை தலைப்பின் கீழேயே வழங்கப்படுகிறது.

6.   எந்தத் தலைப்பின் கீழ் அவர்கள் விஆர்எஸ் ஓய்வூதியர்களுக்கான ‘பென்ஷன் அம்சத்தை’ (‘the item Pension’) கொண்டு வருகிறார்கள்?

அவர்கள் அதற்குத் தரும் பெயர் ‘விருப்ப ஓய்வு பெற்ற BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கான கூடுதல் பென்ஷன் பட்டுவாடா’ (‘Incremental Pension Payment). BSNL நிறுவனம் மற்றும் MTNL நிறுவனம் இரண்டிற்கும் தனித்தனியே கணக்குகள் காட்டப்படுகின்றன.

7.   என்னென்ன ஒதுக்கீடுகள்?

DOT டிமாண்ட் செய்தபடி நமக்கு நான்கு விதமான தொகைகளுக்கான புள்ளிவிபரங்களை வழக்கமாகப் பெறுகிறோம். அவை 2019–20ம் ஆண்டிற்கான உண்மையான செலவு (Actual expenditure), 2020–21ம் ஆண்டிற்கான பட்ஜெட் எஸ்டிமேட் (மதிப்பீடு), அதே ஆண்டிற்கான ரிவைஸ்டு எஸ்டிமேட் (திருத்தப்பட்ட மதிப்பீடு) மற்றும் நான்காவதாக எதிர்வரும் 2021 –22 காலத்திற்கான பட்ஜெட் எஸ்டிமேட்.

இவை நான்கும் மேஜர் ஹெட் 2071க்குத் தனியாகவும் விஆர்எஸ் 2019 ஊழியர்களுக்கான இன்கிரிமெண்டல் பென்ஷனுக்குத் தனியாகவும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது: (ரூபாய் கோடிகளில்)

 

தலைப்பு

உண்மை செலவு

Actual expen.

2019 --20

பட்ஜெட் எஸ்டிமேட்

BE 2020 -- 21

ரிவைஸ்டு எஸ்டிமேட்

RE 2020 -- 21

எதிர்காலபட்ஜெட்

எஸ்டிமேட் BE

2021--22

ஹெட் 2071

13450.66 கோடி

13981.68 கோடி

14481.08 கோடி

15350.00 கோடி

VRS 2019

ஹெட் 3275

295.01 கோடி

3294.70  கோடி

2160.30 கோடி

3000.00  கோடி

மேற்கண்ட அட்டவணையில் கோவிட் 19 பாதிப்புள்ள 2020 – 21ஆண்டிற்கான ரிவைஸ்டு எஸ்டிமேட் (column 4ல்) அதே ஆண்டிற்கான பட்ஜெட் எஸ்டிமேட்டை (column 3ஐ) விட (சிடிஏ, BSNL / MTNL ஐடிஏ பென்ஷனர்கள் அனைவருக்குமான மேஜர் ஹெட் 2071ன் கீழ் அதிகரித்திருக்கும்போது, விஆர்எஸ் ஓய்வூதியர்களுக்கான எஸ்டிமேட் மேஜர் ஹெட் 3275ன் கீழ் குறைந்திருப்பதைப் பாராளுமன்றக் குழுவின் தலைவர் திரு சசி தரூர் அவதானித்துச் சுட்டிக்காட்டியுள்ளார்.  

 

தலைப்பு

உண்மை செலவு

Actual expen.

2019 --20

பட்ஜெட் எஸ்டிமேட்

BE 2020 -- 21

ரிவைஸ்டு எஸ்டிமேட்

RE 2020 -- 21

எதிர்காலபட்ஜெட்

எஸ்டிமேட் BE

2021--22

எக்ஸ்கிரிஷீயா ஹெட் 3275

5000  கோடி

9889.65 கோடி

11206 கோடி

இல்லை

 

8.   விஆர்எஸ் 2019 பென்ஷன் பற்றி BSNL புத்தாக்கம் குறித்த DOT கடிதம் என்ன கூறுகிறது?

DOT அலுவலக மெமோரண்டம் 2019 அக்டோபர் 29 தேதியிட்ட (DOT OM dt Oct 29, 2019 ) கடிதத்தின் பாரா 2.iii ல் அமைச்சரவை முடிவின் படி (கூறப்பட்டிருப்பதாவது)

“விஆர்எஸ் ஊழியர்களுக்கான எக்ஸ்கிரீஷியா பட்டுவாடா ரூ 17,169 கோடி மற்றும் 10 ஆண்டுகளில் (அவர்களுக்கு) வழங்கப்படக்கூடிய ஓய்வூதியத்திற்கான முன்கூட்டிய செலவு (preponed Pensionary liability) ரூ 12,768 கோடி இவை இரண்டும் இந்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டின் ஆதரவோடு செயல்படுத்தப்படும்…”

இலாக்காவின் அலுவலகக் கடிதம் ‘விஆர்எஸ் ஊழியர்களின் 10 ஆண்டுகளில் வழங்கப்படக்கூடிய ஓய்வூதியத்திற்கு ரூ 12,768 கோடிக்கான முன்கூட்டிய செலவு இந்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டின் ஆதரவோடு செயல்படுத்தப்படும்’ என்று மட்டுமே பேசுகிறது.  முன்கூட்டிய செலவான இந்தத் தொகைதான் தற்போது 2019—20, 2020 –21 மற்றும் எதிர்கால 2021 –22 காலத்திற்கான ஒதுக்கீடாகப் பிரித்துப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும் தற்போது BSNL மற்றும் MTNL விஆர்எஸ் ஊழியர்களுக்கான இன்கிரிமெண்டல் (கூடுதல்) பென்ஷன் பட்டுவாடா” என்ற தலைப்பின் கீழ் அதற்கான நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.

அலுவலகக் கடிதம் எந்த விதியின் கீழ் பென்ஷன் பட்டுவாடா செய்யப்படுகிறது என்பது பற்றி எதுவும் குறிப்பிட்டுத் தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறது.

அமைச்ரவை ஒப்புதலுக்காக 2019 அக்டோபர் 23ல் அனுப்பப்பட்ட 2019 அக்டோபர் 22 தேதியிட்ட அமைச்சரவை மெமோ குறிப்பு (தயாரிக்கும்போது) இது குறித்து என்ன விவாதிக்கப்பட்டு, என்ன நடந்தது என்பது பற்றி நாம் அறியோம் பராபரமே.

9.   பென்ஷன் குறித்து BSNL விஆர்எஸ் 2019 திட்டம் என்ன பேசுகிறது?

விஆர்எஸ் 2019 திட்டம் பாரா 6.2ல் ஓய்வுக்கால இறுதிப் பலன்கள் குறித்து பேசுவதாவது…

“…தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஊழியர்கள் என்ன ஓய்வவூதிய இறுதி மற்றும் பிற பலன்களைப் பெறுவதற்கு உரியவையோ அவற்றை இத்திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்கள் பெறுவதற்கு உரிமை உடையவர்கள். அத்தகயை பலன்களுக்கான பட்டுவாடாக்களைக் கீழ்க்கண்ட முறையில் பெறுவார்கள்.’’

“6.2. a இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் ஊழியர்கள் பென்ஷன் / குடும்ப பென்ஷன் பெற உரிமை உள்ளவர்கள்; விருப்ப ஓய்வு அனுமதிக்கப்பட்டு அமலான தேதிக்கு மறுநாளிலிருந்து, தற்போதைய நடைமுறையின்படி, (பலன்களைப்பெற) உத்தரவு வழங்கப்படுவார்கள்”

10.             இத்திட்டத்தின் மீதான எந்தக் குழப்பத்திற்கும் விளக்கம் அளிக்க அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரி யார்? அல்லது இத்திட்டத்தில் சொல்லப்படும் விதிமுறை வார்த்தைகளுக்கு (terms) அர்த்தம் மற்றும் பொருள் விளக்கம் தருவதற்கான அதிகாரி யார்?

BSNL விஆர்எஸ் 2019 பாரா 9ன் இணைப்பு 1 கூறுகிறது, CMD BSNL ன் முடிவு இறுதியானதும் அனைவரையும் கட்டுப்படுத்துவதுமாகும்”.

எனவே மேற்கண்ட பத்தி 6.2ன் மீது நமக்கு ஏற்படும் குழப்பத்தைத் தீர்த்து வைக்கவும் / சந்தேகத்திற்கு விளக்கம் அளிப்பதற்குமான அதிகாரி CMD BSNLயே ஆவர்.

யாரும் “தற்போது நடைமுறையில் உள்ள விதிகள்” என்ற பதம் / வாசகம் என்ன பொருளைத் தருகிறது என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு வற்புறுத்தினால் CMD BSNL, தற்போதைய நடைமுறை விதிகள் என்பது என்ன அர்த்தப்படுகிறது என்ற விளக்கத்தை அளிக்கும்  தனது கடமைப்  பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

விதியின் பெயரைக் கூறு எனக் கேட்பது சுலபமான ஒன்றாகத் தோன்றலாம்; ஆனால், அற்கான விடையைப் பெறுவதுதான் சிரமமானது.   

   (பதிவிட்ட நாள் 4-4-2021 நேரம் பிற்பகல் 12. 25)

தமிழாக்கம் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்