Wednesday 30 September 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 14 தோழர் எஸ் எஸ் மிராஜ்கர்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -14


எஸ்.எஸ். மிராஜ்கர் :

தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய தலைவர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ் செப்.20 –26, 2020)

            சாதாரணப் பின்புலத்திலிருந்து வந்த, சாந்தாராம் சௌலராம் மிராஜ்கர், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மற்றும் கம்யூனிச இயக்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவராக மேலெழுந்தார். 1899ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் மகாராஷ்டிர மாநிலம் ரெய்கார்க் மாவட்டம், மன்கான் தாலுக்காவில் உள்ள காரவல்லி என்ற கிராமத்தில் பிறந்தார். சிறிய பிளாட் மட்டுமே வைத்திருந்த அவருடைய தந்தை சௌலராமுக்குக் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்ற இயலாத ஏழ்மை. எனவே அவர் துணிகள் விற்பனையோடு கூடிய சிறிய மளிகைக் கடை ஒன்றைத் துவக்கினார். நல்ல வேலை தேடி அவரது மூத்த மகன் உரன் என்ற பகுதிக்குச் செல்ல மிராஜ்கரும் சகோதரருடன் சென்று அங்கேயே நடுநிலைப் பள்ளித் தேர்வை முடித்தார். அன்னையும்கூட பாம்பேயில் டெக்ஸ்டைல் ஆலை ஒன்றில் வேலை செய்தார். 13 வயதிலேயே மிராஜ்கர் ஒரு தையல்காரரிடம் பயிற்சிப் பணியாளராகச் சேர்ந்தார். 1914ல் மராதா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். 

தொழிலாளர் இயக்கத்தில்

            உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமையை முதலாவது உலக யுத்தம் கடுமையாகப் பாதித்தது. 1917ல் தபால் ஊழியர்கள், (டெக்ஸ்டைல்) ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் நீண்ட வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பள்ளிப் படிப்பை முடித்த மிராஜ்கர் தொழிலாளர் இயக்கத்தில் இணைந்தார். பிரஞ்ச் வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்தார். 1920ல் ஏஐடியுசி அமைப்பின் துவக்க மாநாட்டின்போது ஓட்டல் தொழிலாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்ட மாபெரும் பேரணியை நடத்தினார்.

            1920ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஒயின் ஷாப் கடைமுன் மறியல் செய்து கைதானார். அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்ட்டது.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி ஸ்தாபித்தல்

          பம்பாய் காங்கிரசுக்குள் இருந்த ‘காங்கிரஸ் லேபர் பார்ட்டி’யின் மறுவடிவமாக 1927ல் பம்பாயில் ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ [Workers’ and Peasants’ Party (WPP), Kirti Kisan Party என்றும் அழைக்கப்படும்] கட்சி அமைக்கப்பட்டது. துந்திராஜ் தெங்கடி அதன் தலைவர்,  மிராஜ்கர் செயலாளர். அந்தக் கட்சி அமைப்பில் எஸ்வி காட்டே, நிம்கர், ஜோக்லேகர், ஜாப்வாலா முதலான பிரபல தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர்.

1927ல் பாம்பேயில் வெளியான ‘கிராந்தி’ (புரட்சி) என்ற மராத்தி வார இதழின் முதல் ஆசிரியர் மிராஜ்கர்.

1928ல் பம்பாயில் நடந்த ஜவுளி ஆலைத் தொழிலாளர்களின் ஆறுமாதங்கள் நீண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலைநிறுத்தத்தின் முக்கிய அமைப்பாளர்கள் டாங்கே, ஜோக்லேக்கர், நிம்கர், விவி கிரி மற்றும் பிறருடன் மிராஜ்கரும் திகழ்ந்தார். புகழ்பெற்ற ’கிர்னி காம்கார் யூனியன்’ (மில்களின் தொழிலாளர் சங்கம்) அப்போதுதான் உதயமானது. அந்தச் சங்கமானது அதற்கு முன் இருந்த கிர்னி காம்கார் மகாமண்டல் என்ற அமைப்பின் செம்மையாகத் திரட்டிக் கட்டமைக்கப்பட்ட அமைப்பாகும். தாதரில் இருந்த கஸ்தூர் சந்த் மில்லின் தொழிலாளர்கள் முதலில் வேலைநிறுத்தத்தில் இறங்க, பத்து நாட்களுக்குள் தொழிலாளி வர்க்கம் முழுமையும் பின் தொடர்ந்தது. மிராஜ்கர் முனிசிபல் தொழிலாளர்களையும் திரட்டினார்.

1927 பாம்பேயில் ’லெனின் தினம்’ அனுசரிக்க சௌபாட்டியில் (கிர்காவ் மாவட்டத்தில் சௌபாட்டி பீச் என்பது புகழ்பெற்ற கடற்கரை) பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததில் மிராஜ்கர் தீவிரமாகப் பங்கேற்றார். அமெரிக்காவில் பொய்யான வழக்கில் சாக்கோ மற்றும் வென்ஸெட்டி தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடந்த கண்டன எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்று அது பற்றிய பிரச்சாரக் கையேடுகளை விநியோகித்தார். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி முதன் முறையாக 1927ல் மேதினத்தைப் பெரும் சிறப்பாகக் கொண்டாடியது.

[பிரிட்டனின் 1919ம் ஆண்டு சட்டத்தை ஆராய சர் ஜான் சைமன் தலைமையில் --இந்தியப் பிரதிநிதிகள் யாரும் இடம் பெறாத-- 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டு, இந்தியாவில் ஆய்வு நடத்த வந்தபோது] அந்தச் சைமன் குழுவை நிராகரித்து இயக்கம் நடத்தப்பட்டது. 1928 பாம்பேயில் மிராஜ்கர் மிகத் தீவிரமாக அந்தப் புறக்கணிப்பு இயக்கத்தை கட்டமைத்து நடத்த, அந்தக் குழு பாம்பே நகரத்திற்குள் நுழைய முடியாமல் நேரே பூனா செல்ல நேர்ந்தது. ‘சைமன் கமிஷன் ஏழு’க்காக ஏழு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சைமன் குழுவை எதிர்த்துத் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இளைஞர் மாநாட்டினர் 50ஆயிரம் மக்கள் அடங்கிய மிகப் பிரம்மாண்டமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மீரட் சதி வழக்கு, 1928

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட பிறகு வேகமாக வளர்ந்ததால், அதிர்ச்சி அடைந்த பிரிட்டீஷ் அரசு கடுமையான அடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் வகையில் 1929 மார்ச் 20ம் நாள் நாடு முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கப் பெரும் தலைவர்கள் மிராஜ்கர் உட்பட, 32பேர் மீது சதி வழக்குகளைப் புனைந்து அவர்கள் அனைவரையும் மீரட்டில் சிறை வைத்தனர். நீதிமன்றத்தில் மிராஜ்கரின் அறிக்கை, தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின் நோக்கம் இந்திய தேசத்திற்கு விடுதலையை புரட்சியின் மூலம் அடைவது என்பதைத் தெளிவுபடுத்தியது. மிராஜ்கருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டாலும், தேசிய மற்றும் சர்வதேசிய நாடுகளின் பரவலான அழுத்தத்தின் காரணமாக 1933ல் மற்றவர்களுடன் சேர்ந்து அவரும் விடுவிக்கப்பட்டார்.  

கட்சி மறுசீரமைப்பு

          BTரணதிவேயும், எஸ்.வி.தேஷ்பாண்டேயும் செக்டேரியனிசத்தையும் தாவிப்பாயும் சாகசத்தையும் இடையூறில்லாமல் அமுல்படுத்தினர் என்றும் காங்கிரஸ் எதிர்ப்பு கட்டுப்பாடின்றி இருந்ததாகவும் அப்போதைய வெளிச்சூழ்நிலையை மிராஜ்கர் விவரிக்கிறார். மேலும் தேஷ்பாண்டே தனது சொந்த ‘போல்ஷ்விக் (பாணி) கட்சி’யையும் அமைத்தார் என்று கூறும் மிராஜ்கர், திடீரென்று ரணதிவே 1929ல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் தந்தது, தொழிலாளர்களின் அமைப்புகளைச் சீர்குலைத்தது என்றும் கூறுகிறார்.

            (மீரட் சதிவழக்கில் சிறைசென்ற தலைவர்கள்) விடுவிக்கப்பட்ட பிறகு தோழர்கள் கூடி கட்சித் தலைமையை அமைத்தார்கள். முதலில் டாக்டர் அதிகாரி, பின்பு எஸ்எஸ் மிராஜ்கர் அதன் பின் சோமநாத் லாகிரி சிறிது காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்களாகச் செயல்பட்டனர். ஒருவர் பின் ஒருவராகக் கைதாக, இறுதியில் பி சி ஜோஷி பொதுச் செயலாளர் பொறுப்பேற்றார்.

            அந்த இடைக்காலத்தில் மிராஜ்கர் கைதாகி எரவாடா சிறையில் அடைக்கப் பட்டார்.

            1934ல் மிராஜ்கர் ’இளம் தொழிலாளர்கள் லீக்’ அமைப்பிற்கு அலுவலகம் ஏற்பாடு செய்தார். ஒன்றுபட்ட தேசிய முன்னணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய மிராஜ்கர், பல காங்கிரஸ்காரர்கள், ஜெயபிரகாஷ் நாராயண், மினு மசானி, அசோக் மேத்தா, யூசுப் மெஹ்ரலே முதலான சோஷலிஸ்ட்டுகளையும் பிறரையும் சந்தித்தார்.

கம்யூனிஸ்ட் அகிலம், காமின்டர்ன் காங்கிரசின் சாகசம், 1935

            1935ல் பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் கெம்ப்பெல் மூலமாக 7வது காமின்டர்ன் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள மிராஜ்கர் மற்றும் இருவருக்கு அழைப்பு கிடைத்தது. கொழும்புவிலிருந்து கப்பல் மூலம் சிங்கப்பூர் சென்று அங்கே மலாயா முதலான வழியே மேலும் பயணத்தைத் தொடர சிலநாட்கள் தங்கி ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் ஒரு உளவு அதிகாரி அவர்களை அடையாளம் கண்டுவிட கைது செய்யப்பபட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மிராஜ்கர் ஒரு ‘சாது’ வேடத்தில் பூனா அருகே தலைமறைவாக இருந்தார்!.

தியோலி தடுப்பு முகாமில்

1940ல் மிராஜ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு இம்முறை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் –மெர்வாரா பாலைவனத்தில் அமைந்த தியோலி தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். முகாம் எண் 2ல் அவர் 200 கைதிகளுடன் இருந்தார்; அவர்களில் சுமார் 160 கம்யூனிஸ்ட்கள் மற்றும் 30 சோஷலிஸ்ட்களும் அடங்குவர். ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களில் ஒருவர். மேலும் டாங்கே, BPL பேடி, ரஜினி பட்டேல், பாட்கர், பிடிஆர், சோலி பாட்லிவாலா ஆகியோர் இருந்தனர்.

            அவர்களில் சிலரை வேறு முகாமிற்கு மாற்ற நினைத்தபோது, பிடிஆரும் வேறுசிலரும் சிறை அலுவலர்களைத் தாக்குவது, கற்களால் அடிப்பது முதலான சாகச ‘எதிர்ப்பை’ மேற்கொள்ள யோசனை தெரிவித்தனர். அந்த எதிர்ப்பில் துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டு சிலர் இறக்க நேர்ந்தாலும் அதனால் இழப்பு பாதகம் இல்லையாம்!

            அத்தகைய ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு வாக்கெடுப்பு நடத்தலாம் என மிராஜ்கர் யோசனை தெரிவித்தார். பிடிஆரின் திட்டத்திற்கு ஆதரவாக 12தோழர்களுக்கு மேல் இருந்த அந்தப் பெரிய கமிட்டியில் இரண்டு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

            தியோலியில் கருக்கொண்டு துவங்கிய 1942ன் பிடிஆர் (செக்டேரியன், சாகச) பாதையுடன் முழுமையாக உடன்படவில்லை என மிராஜ்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா விடுதலை அடைந்தது

            1947 ஆகஸ்ட் 15ல் இந்தியநாடு விடுதலை அடைந்ததை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று பல விழாக்களுக்கு ஏற்பாடு செய்தது. பாம்பே சிவாஜி பூங்காவில் பிரம்மாண்டமான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சிபிஐ பிரதிநிதியாக மேடையில் எஸ்எஸ் மிராஜ்கர் வீற்றிருந்தார். எஸ்கே பாட்டீல் முதலானோர் பேசிய பிறகு மிராஜ்கரின் முறை வந்தது. தனது பேச்சில் விலைவாசி ஏற்றம், கறுப்புச் சந்தை, அரசின் தோல்விகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கும்போது மைக் அணைக்கப்பட்டது. மைக் நிறுத்தப்பட்ட போதும், மிராஜ்கர் பத்து பதினைந்தாயிரம் மக்கள் கூட்டம் கேட்கும் அளவு தனது குரலை உயர்த்தினார். அடுத்தப் பேச்சாளர் வந்தபோது மைக் உயிர்பெற்றது! என்ன ஏய்த்தல் தந்திரம் நடத்தப்பட்டிருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். 1948ல் பிசி ஜோஷி மாற்றப்பட்டு BTரணதிவே பொதுச் செயலாளர் ஆனதும், விரைவில் கட்சி சாகசத்தில் இறங்கியது. இரண்டாவது கட்சி மாநாட்டில் மிராஜ்கர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். பாம்பே திரும்பிய உடன் அவர் கைது செய்யப்பட்டு, பிரபல வழக்கறிஞர்கள் KTசுலே, ஏஎஸ்கே அய்யங்கார் இவர்களோடு, ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர்களது ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் எம்சி சாக்லா (பின்னாட்களில் நேரு அமைச்சரவையில் கல்வி, வெளியுறவுத்துறை அமைச்சரானவர்) மற்றும் கஜேந்திர கட்கர் விசாரித்தனர். ஆயுதங்கள் சேகரித்தது, (இராணுவப்) படையை உருவாக்கியது போன்று தன்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து மிராஜ்கர் நீதிமன்றத்தில் ஒன்னரை மணிநேரம் திறமையாக வாதாடினார். தன்னிடம் ஒரு கத்திகூட இல்லை என்றார் மிராஜ்கர்! 1929ல் மீரட் சதி வழக்கில் மிராஜ்கர் முதலானோர்க்கு எம்சி சாக்லா வழக்கறிஞராக ஆஜராகி ஆதரித்தவர். தற்போது அதே சாக்லா நீதிபதியாக மிராஜ்கரின் வாதக் கருத்துகளை ஏற்றுக் கொண்டாலும், தடுப்புக் காவல் சட்டங்கள் முன்பு அவர் ஏதும் செய்ய இயலாதவராக இருந்தார்! மிராஜ்கர் மீண்டும் சிறைக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.  

சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கம்

            1950களில், பாம்பேயுடன் மகாராஷ்டிரா மாநிலம் அமைக்க வற்புறுத்திப் போராடிய சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி (SMS) இயக்கத்தின் முன்னணியில் மிராஜ்கர் செயல்பட்டார்.  1955 நவம்பர் 21ம் நாள் பாம்பேயில் நான்கு முதல் ஆறு லட்சம் பேர் கலந்து கொண்ட மிகப் பெரிய பேரணி நடைபெற்றது. 

அதில் நூற்றுக் கணக்கானோர் பலியாயினர், ஆயிரமாக மக்கள் காயமடைந்தனர்; அதன் பிறகு சில ஆண்டுகள் வேலைநிறுத்தம், பேரணி, கூட்டங்கள் என்பதே அன்றாட நிகழ்வாயிற்று. சிறைக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. அங்கு, இங்கு என எல்லா இடத்திலும் மிராஜ்கர் இருந்தார். எஸ்.ஏ.டாங்கே, சேனாபதி பாபட், லால்ஜி பென்ட்சே, ஆச்சார்ய ஆத்ரே எனப் பலரும் முன்னிலை பெற்றுத் தலைவர்களாக உருவாகினர்.

            சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி தேர்தல்களில் வெற்றி வாகை சூடி அதிகாரத்திற்கு வெகு அருகில் வந்தது.

            1960 மே முதல் நாள் ‘சம்யுக்த மகாராஷ்டிரா’ (ஒன்றுபட்ட மராட்டியம்) பாம்பேயுடன் சேர்த்து அமைக்கப்பட்டது. அது பற்றி மிராஜ்கர் எழுதிக் குவித்துள்ளார்.

படம் நன்றி பாம்பே மிரர்

கோவா விடுதலை    

            கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கோவா விமோசன் சமிதி மூலம் கோவா விடுதலைப் போராட்டம் 1946ல் துவங்கியது. விடுதலைப் படைகளால் நகர் ஹவேலி 1954ல் விடுவிக்கப்பட்டது, மேலும் தாத்ரா (1954) ஜூலை 23ல் விடுதலையானது. (ஆட்சி செய்த) போர்த்துகீசியர் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து ‘சுதந்திர அரசு’ (ஆசாத் சர்க்கார்) அறிவிக்கப்பட்டது. நரோலி மற்றும் கிராமங்கள் ஜூலை 29லும் தொடர்ந்து ஆகஸ்ட் 1ல் சில்வாசாவும் கோவா மக்கள் கட்சி மற்றும் ஆசாத் கோமந்தக் தள் கட்சிகளால் கைப்பற்றப்பட்டன. வீரம்செறிந்த இப்போராட்டங்களில் பங்கேற்ற கம்யூனிஸ்ட்களால் நரோலிக்கு அருகிருந்த பகுதிகள் விடுதலை செய்யப்பட்டன.

            எஸ்ஏ டாங்கே மற்றும் பிறருடன் இணைந்து வரலாற்றுப் புகழ்மிக்க கோவா விடுதலை சத்யாகிரகத்தில் மிராஜ்கர் முன்னணிப் பங்கு வகித்தார். கொல்லப்பட்ட தியாகிகளின் பூத உடல்களோடு மிராஜ்கர் உடன் திரும்ப வந்தபோது ஆயிரக்கணக்கானோர் அதில் பங்கேற்றனர். இறுதியாக இந்திய இராணுவம் 1961 டிசம்பரில் கோவாவை முற்றிலுமாக விடுவித்தது.

பாம்பே மேயராக

            1958 பாம்பே மாநகராட்சித் தேர்தலில் சம்யுக்த மகாராஷ்டிர சமிதி பெரும்பான்மை பெற்றதும் மிராஜ்கர் அம்மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பலமுறை மாநகராட்சிக்கு அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு டெல்லி மேயராகவும் ஒரு கம்யூனிஸ்ட், அருணா ஆஸப் அலி, இருந்தார். மிராஜ்கர் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்தபோதும், சோஷலிஸ்ட்களும் வேறு சிலரும் தொல்லைதரும் வண்ணம், மற்றொரு முறை கிராக்கிப்படி உயர்வு கோரி, தொழிலாளர் வேலைநிறுத்தங்களைத் தூண்டினர் – அந்த அளவு ஊதியத்தை மாநகராட்சி வழங்குவது சாத்தியமற்றது என அறிந்தே செய்தனர். டாங்கேயும் சோஷலிஸ்ட் தலைவர் எஸ்எம் ஜோஷியும் தலையிட்டதால் மிராஜ்கரால் மாநகராட்சி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல முடிந்தது.

            இந்த நேரத்தில் மிராஜ்கர் ஏஐடியுசியின் தலைவராகவும் இருந்தார்.

கட்சிப் பிளவும் மிராஜ்கரும்

            1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மிராஜ்கர் முடிவெடுக்க முடியாமல் இருந்ததோடு, அந்தப் பிளவு அவரை ஆழமாகப் பாதித்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் வெளியே எதனோடும் சேராமல் சிறிது காலம் இருந்தார். சீன ஆக்கிரமிப்பு நடந்தபோது அதனை அவர் கண்டித்தார்; பல தருணங்களில் பிடிஆர் (செல்லும்) பாதையைத் திரும்பத் திரும்ப விமர்சித்துள்ளார். சில கொள்கைகளில் மாறுதல் இருக்கும் என்று உறுதிமொழி அளித்து சிபிஐ (எம்) கட்சியில் சேர இணங்கும்படி மிராஜ்கர் வற்புறுத்தப்பட்டார். தனியான ஒரு தொழிற்சங்க அமைப்பு துவங்கத் திட்டமிடப்பட்டதால் 1970 ஏஐடியுசி குண்டூர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என மிராஜ்கருக்கு [சிபிஐ (எம்) கட்சி] உத்தரவிட்டிருந்தும், அதனை மீறி ஏஐடியுசி தலைவர் என்ற முறையில் அந்த மாநாட்டில் மிராஜ்கர் கலந்து கொண்டார். அதனை அடுத்து எதிர்பார்க்கப்பட்டபடி சிபிஐ (எம்) கட்சி மிராஜ்கரைக் கட்சியிலிருந்து நீக்கியது. சி இராஜேஸ்வர ராவ் அறிவுத்தலின்படி 1973ல் மிராஜ்கர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ், ஏஐடியுசியில் பணியாற்றினார்.

            எஸ் எஸ் மிராஜ்கர் 1980 பிப்ரவரி 15ம் நாள் இயற்கை எய்தினார். மிக உயர்வாக மதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இயக்க, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரின் மறைவுக்கு அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

            உழைக்கும் வர்க்கத் தலைவர், எஸ் எஸ் மிராஜ்கரின் நினைவைப் போற்றுவோம்!      

                                                                                                                             --தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

 

Saturday 26 September 2020

ஈஸ்வர்சந்திர வித்யாசாகர் 200வது பிறந்தநாள்

 

19ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி

ஈஸ்வர்சந்திர வித்யாசாகருக்கு 200வது பிறந்தநாள் புகழஞ்சலி


--பவித்ரா சர்க்கார்

(நியூஏஜ் செப்.27 –அக்.3 இதழ்)

ஈஸ்வர் சந்திரா 1820ம் ஆண்டு, செப்டம்பர் 26ம் நாள், தற்போது மேற்கு வங்க மாநிலம் மித்னாபூர் மாவட்டத்தின் எங்கோ இருக்கும் குக்கிராமம் பீர்சிங்கா என்ற இடத்தில் மிகவும் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி முதலிய பெருமகன்கள் அவரைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர். இன்று 2020, செப்டம்பர் 26ம் நாள் அந்த மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியின் 200வது பிறந்தநாள்!

2020ஆண்டு ஆகஸ்ட் 5ம்நாள் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் அசாதாரணமான ஒரு நிகழ்வு – அன்று நாட்டின் பிரதமர், ஒரு மதம் சார்ந்த கோயிலுக்கான அடிகல்லை நாட்டினார்; கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே அயோத்தியா இராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா -- அரசியல் நோக்கத்திற்காக, இந்துத்துவா வெறியுணர்வை ஊட்டுவதற்காக -- நடத்தப்பட்டது. இன்றைய அரசிற்கோ அல்லது பிரதமருக்கோ அது புதியதன்று, வழக்கமானதுதான்; இந்தக் களேபரத்தில் அவர்கள் செய்ய மறந்த எவ்வளவோ விஷயங்களில் பண்டிட் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் இரண்டாவது நூற்றாண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாட மறந்ததும் ஒன்று. வித்யாசாகர் என்ற அவரது பட்டப்பெயருக்கு ஏற்ப அவர் ஒரு கல்விக் கடல், அறிவின் சாகரம் – பொருத்தமாகவே அந்தப் பட்டம் அவரது வாழ்நாளிலேயே அவருக்குச் சூட்டப்பட்டது.

ஈஸ்வர் சந்திரா கல்வியில் மட்டுமல்ல, அன்பில், ஆதுரமான கருணையில், பரிவில், பெருந்தன்மையில் இப்படி மனிதப் பண்புகள் பலவும் நிரம்பிய மாபெருங்கடல். அவர் ஓர் இந்து, பிராமணரும்கூட. ஆனால் அவருக்குப் பிராமணர்–சூத்திரர், இந்து–முஸ்லீம் இப்படி எந்தப் பேதமும் இல்லை, அவருக்கு அனைவரும் ஒன்றே. அவர் செய்த பல நல்ல செயல்களில் உயர்வு தாழ்வு வித்தியாசம் பார்த்ததில்லை. அவருடைய பேராசிரியர் ஒருவர் காலரா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அவருக்குப் பணிவிடை செய்து பார்த்துக் கொண்டார்; பேராசிரியர் ஏழை என்பதால், சிகிச்சைக்கான செலவுகளை ஈஸ்வர் சந்திராவே ஏற்றுக் கொண்டதுடன், ஒரு செவிலியர் போல பேராசிரியர் இயற்கைக் கடன் கழிக்க உதவுவதில் இருந்து, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என அனைத்துப் பணிகளையும் செய்தார்.

மேற்கு வங்கம் சந்தன் நகரில் இருந்த ஏழை முஸ்லீம்களுக்குத் தனது பொருட்செலவில் உணவு, தயிர் முதலியன வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தேவையானபோது பணம் தந்தும் உதவி இருக்கிறார்.

1905ம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ஈஸ்வர் சந்திரா குறித்த வரலாற்றுச் சித்தரிப்பு ஒன்றில் இவ்வாறு எழுதினார்: “ராம் மோகன் ராய் தொடங்கி வங்காளத்தில், மற்ற பிராந்தியங்களைவிட உயர் புகழோடு, கதாநாயகர்கள் எழுந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் ஈஸ்வர் சந்திர வித்தயாசாகர் அவர்களைத் தலைச் சிறந்தவர் என்று சொல்ல வேண்டும்…”

இந்திய மறுமலர்ச்சி இயக்க உயர் கோபுரத்தில் ஒளிரும் நட்சத்திரமான ஈஸ்வர் சந்திர வித்தயாசாகர், தேசத்தின் பெரும் சீர்திருத்தவாதி, பெரும் கல்விமான், நவீன வங்காள மொழி உரைநடையின் சிற்பி என்பவற்றிற்கெல்லாம் மேலாக அவர் ஒரு மதசார்பற்ற மனிதாபிமானி. 19ம் நூற்றாண்டு இந்தியாவில் நவீனமானவை ஒவ்வொன்றின் காரணகர்த்தா அவர். அவரது வெற்றிகளில் போற்றப்பட வேண்டிய ஆகச் சிறந்த சாதனை இந்து கைம்பெண்களின் மறுமணம்.

1855ல் சமஸ்கிருதக் கல்லூரி முதல்வராக இருந்தபோது இந்து கைம்பெண்கள் மறுமணம் பற்றி வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, பாரம்பரியத்தில் கட்டுண்டு கிடந்த நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் கலவரத் தீயை மூட்டியது. மேல்சாதி இந்துக்களின் பிரச்சனை அது என்ற போதிலும், சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அந்தப் பழக்கம் புரையோடிப் போயிருந்தது. 1856ல் சட்டமன்றக் கவுன்சிலின் உறுப்பினர்க‘ளிடம் வித்தியாசாகர் விளக்கமளித்துச் சமாதானம் கூற, மறுமணத்திற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட சில மாதங்களிலேயே 1856ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள் முதல் இந்து கைம்பெண்ணின் மறுமணத்தைக் கொல்கத்தாவில் நடத்தி வைத்தார். மணமகள் பத்து வயது சிறுமி, காளிமதி, பிராமண விதவை; மணமகன், படித்தவனான சிரிஸ் சந்திர வித்யாரத்னா. இது அக்காலத்தில் சனாதனத்தில் சிக்கிப் பாரம்பரியத்தைச் சுமந்த சமூகத்தில் ஆகப் பெரும் கலகம், புரட்சி –கலகக்காரர் வித்யாசாகரின் பெயர் நாடு முழுதும் பரவியது. இது மகாராஷ்ட்ரா, குஜராத், அசாம் மற்றும் ஒரிசா என எங்கும் சீர்திருத்த இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தியது. அந்தந்த மாநிலங்களில் இருந்த சமூகச் சீர்திருத்தப் போராளிகள் இந்து பெண்கள் மறுமணத்திற்கான முயற்சிகளைத் துவக்கினர். அதற்கு முன் 1850களிலேயே குழந்தைத் திருமண முறையை எதிர்த்துக் குரல் எழுப்பிய வித்யாசாகர் ஒரு பகுத்தறிவு சீர்திருத்தவாதியாக மலர்ந்தார். உயர் சாதி (கூலின்) சமூகத்தில் நிலவிய பலதார திருமணமுறையை எதிர்த்தும் கட்டுரைகள் எழுதினார்.  

கல்வியின் மூலம் மட்டுமே நமது நாடு முன்னேற முடியும் என உறுதியாக அவர் நம்பினார். 1848ல் பெண்களுக்கான முதலாவது பொதுப் பள்ளியைக் கொல்கத்தாவில் பெத்தியூன் நிறுவினார், பின்னர் அப்பள்ளி பெத்தியூன் பள்ளி என அழைக்கப்படலாயிற்று. சில காலத்தில் வித்யாசாகர் அப்பள்ளியின் செயலாளர் ஆனார். 1851 -- 1858க்கு மத்தியில் வங்காளத்தின் பல பகுதிகளில் பெண்களுக்கான 31 பள்ளிக் கூடங்களை நிர்மாணித்தார். இராஜா ராம் மோகன் ராய் ஏற்றி வைத்த வங்க மறுமலர்ச்சியின் ஒளிவிளக்கு, பகுத்தறிவு, மனிதாபிமானம் என்ற இயல்புகளோடு நிலப்பிரபுத்துவ பழக்க வழக்கங்களுக்கு எதிராக உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. ‘19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடற்பறவை போன்ற புயல்வேகத் தீவிரச் சிந்தனையாளரான ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோவின் சீடர்களான ‘இளம் வங்காளிகள்’ (அல்லது டெரோசியன்கள்) எனப்படுவோர் இந்துயிசத்தின் தீய பழக்க வழக்கங்களைச் சாடினார்கள். ஆனால் அவர்களது எதிர்ப்பில் பரபரப்பு இருந்ததே தவிர ஆக்கபூர்வமானதாக இல்லை. (ஹென்றி லூயிஸ் 1809 முதல் 1931 வரை வாழ்ந்த இந்தியக் கவிஞர், தீவிர முற்போக்காளர், இந்து பழக்க வழக்கங்களை விமர்சித்தவர், இந்து கல்லூரியின் உதவித் தலைமை ஆசிரியர், மாணவர்களைக் கவர்ந்து கற்பித்தவர். காலரா தொற்றால் இறந்தார்)

அந்தச் சூழலில், கிருஸ்துவ மிஷினரிகள் இந்து சமூகத்தை அரிப்பதைக்  கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தேவேந்திரநாத் தாகூர், கேசவ் சந்திர சென் மற்றும் பிறர் தலைமையில் இயங்கிய பிரம்ம சமாஜ் அமைப்பு, மேல்ஜாதி இந்துகளிடம் செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனாலும் மிஷினரிகள் கல்விஅறிவில்லாத ஏழைகள் மத்தியில் மெல்ல ஊடுருவியது. எவ்வாறாயினும், வங்க மொழி உரைநடையைக் கட்டமைத்தில் துவக்ககால பங்கு, மற்றும் கல்வியைப் பரவலாக்கியதில் அவர்கள் ஆற்றிய பங்கு மறுக்க முடியாதது. இந்தியாவில் சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதில் வித்தியாசாகர் தனித்த ஒற்றை மனிதராய் வினைஊக்கித் தூண்டுகோலாய் இருந்தார். பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் உதவியுடன்தான் சீர்திருத்த நடவடிக்கைகளை அவரால் மேற்கொள்ள இயன்றது என்பது உண்மைதான். வித்யாசாகரின் தனித்த ஆளுமை, அவரது சுயமரியாதை, நேர்மைப் பண்பு, துணிவு, உறுதிப்பாடு, பகுத்தறிவு அணுகுமுறை ஆளும் வர்க்கத்தினரைக் கவர்ந்தது. வங்கத்தின் காலனிய ஆட்சியாளர்கள் தங்கள் வர்க்க நிலையிலிருந்து நிலப்பிரபுத்துவ இருண்மைக் கருத்துகளையும் பழக்கங்களையும் எதிர்க்க விரும்பினார்கள்–அதுவே வித்யாசாகரின் பொது நோக்காகவும் இருந்தது. அதைத் தாண்டி ஒரு போதும் எந்தத் தருணத்திலும் அநியாயமாகப் பிரிட்டீஷ்காரர்களுடன் அவர் சமரசமாக நடந்து கொண்டதே இல்லை.

மாறாக, காலனிய ஆட்சியாளர்களின் கொடூரத்தையும் ஊழல் குணத்தையும் அவர் தனது எழுத்துகள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘வங்காள இதிகாஸ்’ (வங்கத்தின் வரலாறு) என்ற நூலில், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எலிஜா இம்பே உடந்தையாக இருக்க அப்போதைய கவர்னர் ஜெனரல் வாரன் ஹெஸ்டிங், எப்படி பணத்தைச் சுருட்டும் ராஜியத்தை வங்காளத்தில் நிறுவனப்படுத்தினார் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஹெஸ்டிங்கை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக நந்தகுமார் என்ற மக்கள் நேசித்த செல்வாக்குமிக்க மனிதன் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். 

‘ஆக்யான் மஞ்சரி’ (கதைகளின் மொட்டுக்கள்) என்ற அவரது இன்னொரு நூலின் நான்கு அல்லது ஐந்து உறைய வைக்கும் கதைகளில், காலனிய ஆக்ரமிப்பாளர்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்பதை விவரித்திருப்பார். இப்படிப்பட்ட வித்யாசாகரை ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்ட் என முத்திரை குத்திய ஒரு அதிதீவிர இடதுசாரிப் பிரிவினர் அல்லது நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இம்மாமனிதர் சிலையை ஒருமுறை  1970ல் உடைத்துச் சேதப்படுத்தினர். இத்தகைய சிந்தனைப் போக்கு எந்திரத்தனமான நிர்ணயிப்பு என்பதைத் தவிர வேறில்லை. மற்றொரு முறை 2019 மே மாதம் (அமித் ஷா பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில்), கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த பழமையான வித்யா சாகர் சிலையின் தலைப்பகுதி பாஜக ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்களால் மீண்டும் உடைக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டைப் பாஜக மறுத்தாலும் அதன் பழமைவாத கொள்கைகள் வித்யாசாகரின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானது என்பது வெளிப்படை.

வித்யாசாகரின் பணி பல திறப்பட்டது, கல்வி அறிவை வளர்ப்பது, பெண்கள் விடுதலை, கைம்பெண் மறுமணம், மண்சார்ந்த மொழி வகைகள் மற்றும் அம்மொழி இலக்கியங்களின் வளர்ச்சி என வேறுவேறு துறை செயல்பாடுகளில் ஈடுபட்டார். கொல்கத்தா வில்லியம் கோட்டை கல்லூரியில் இரண்டு முறையாக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அந்தக் காலக் கட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இல்லை எனினும் அவரது வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கட்டமைத்த காலம் அது. 1841-- 1846 முதல் காலகட்டத்தில் ‘வேதாள் பாஞ்ச்பின்ஷதி’ (25 வேதாளக் கதைகள்) மற்றும் ’வசுதேவ் சரித்’ (வசுதேவரின் சரித்திரம்) என்ற இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டார். அந்தக் கல்லூரியில் இருந்துதான் அவரது இந்தி மற்றும் ஆங்கில அறிவு மேம்பட்டது.

1851 முதல் 1858 வரை ஏழு ஆண்டுகள் சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராக வித்யாசாகர் பணியாற்றினார். அதற்கு முன்னரே அந்தக் கல்லூரியில் 1846ல் ஓராண்டு பணியாற்றி உள்ளார். கல்லூரி பாடத் திட்டத்தில் அடிப்படையான மாறுதல்களை அவரால் கொண்டுவர முடிந்தது. தத்துவம் மற்றும் அறிவியல் அடிப்படையில் அமைந்த நவீனக் கல்விக்கு ஆதரவாக இருந்தார். அவருடைய மதசார்பற்ற விரிந்த பார்வை அவரது கல்வித் திட்டங்களில் பிரதிபலித்தது. அப்போது கல்விக் கவுன்சிலின் செயலாளராக இருந்த டாக்டர் மௌட் அவர்களுக்கு 1853 செப்டம்பர் 7ம் தேதி எழுதி கடிதத்தில் வித்தியாசாகர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “ஏகான்ம வாதமாகிய வேதாந்தமும் (கபிலரின் துவைத வாதமாகிய) சாங்கியமும் தவறான தத்துவ முறைகள்  என்பது பற்றி மேலும் விவாதமில்லை (அது முடிந்துபோன கருத்து)…சமஸ்கிருதக் கல்லூரியில் இவற்றைக் கற்றுத் தருவதால் ஏற்படும் அதன் செல்வாக்கை எதிர்த்து முறியடிக்க ஆங்கிலத்தில் ஆழமான தத்துவப் படிப்பு (கற்றுத்தர) வேண்டும்.” அந்தக் காலத்தில் சாங்கியத்தையும் வேதாந்தத்தையும் தவறான முறைகள் எனச் சொல்வதற்கு ஆகக் கூடுதலான தைரியம் வேண்டும், அது ஈஸ்வர சந்திராவுக்கு இருந்தது. சமஸ்கிருதக் கல்லூரி முதல்வராக இருந்தபோது கல்லூரியில் சேர ஜாதிப் பாகுபாடு முற்றாக ஒழிக்கப்பட்டது அவரது குறிப்பிடத்தக்க சீர்திருத்த நடவடிக்கை. கடுமையான பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் அவர் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை பாட நூல்கள், குறிப்புக்களை வழக்கமாக எழுதினார். வங்கமொழி அறிமுக நூல் –‘வர்ண பரிச்சய’ (அறிமுக எழுத்துகள்), 1855ல் அவர் எழுதிய முக்கியமான இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன.

பல துறைகளிலும் வித்யாசாகர் ஆற்றிய பங்களிப்பு பிரமிப்பூட்டக் கூடியது. இதழியல் துறையில் தொடர்ந்து அவர் எழுதினார். ஐந்து பத்திரிக்கைகளோடு அவரது பெயர் தொடர்பு கொண்டுள்ளது. அவை, தத்துவபோதினி பத்திரிகா, சர்வ சுவாங்கரி பத்திரிகா, சோம்பிரகாஷ், இந்து பேட்ரியாட், விபிதார்த்த சங்கிரகா.  ஹரீஷ் சந்திர முகர்ஜிக்குப் பிறகு இந்து பேட்ரியாட்டின் ஆசிரியராக மதுசூததன் தத்தாவை அறிமுகம் செய்தார். பொழுதுபோக்காக ஹோமியோபதி மருத்துவத்தைக் கற்றவர் சிலநேரங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளார். வாழ்வின் பிற்பகுதியில் சுமார் 18 ஆண்டுகள் தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்மதார் என்ற இடத்தில் கழித்தார். மத்தியதர மக்கள் மற்றும் அவரது உறவினர்களின் நன்றியில்லா குணம் ஒருக்கால் வித்யாசாகரைப் புறக்கணிக்கப்பட்ட ஐந்தாம் வர்ண மக்களான சந்தல்கள் மற்றும் கர்மதார் பகுதியில் வசித்த பிற பழங்குடியினத்தவரை நோக்கி இழுத்து வந்திருக்கலாம். பூர்வ பழங்குடி மக்களின் வாழ்வியலை மாற்ற முயன்று பாடுபட்டார். அச்செயற்பாட்டு நடவடிக்கையில் அவர்தான் முன்னோடி. ஏழை சந்தல் இன மக்களுக்கு உணவளித்து, ஹோமியோபதி மருந்துகள் தந்து கட்டணமின்றி அவர்களுக்குச் சிகிச்சையும் அளித்து பலரையும் குணப்படுத்தியிருக்கிறார்.

கீழ்க்கண்ட வார்த்தைகளில் புகழ்ந்து இரவீந்திரநாத் தாகூர் அவரை மதிப்பீடு செய்துள்ளார்: “வித்தியாசாகர் வாழ்க்கையை படிக்கும்போது, கற்றறிந்த வங்காளியாக, அல்லது அப்பழுக்கற்ற இந்துவாக அவரை மதிப்பிடுவதைத் தாண்டி, மனிதன் என்ற பதத்திற்கு உண்மையான பொருட்செறிவுள்ள அர்த்தம் வழங்கும் மனிதர் அவர் என்பதை அவரது வாழ்க்கை பலமுறை திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறது. அவரது வாழ்க்கையின் ஆகப் பெரும் புகழ், அபரிமிதமாகப் பொங்கிப் பிரவாகிக்கும் அவரது அசாதாரணமான இந்த மனிதநேயமே!”

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தமது 71வது வயதில் 1891ம் ஆண்டு ஜூலை 29ல் மறைந்தார். காந்திஜி குறிப்பிடுவார், “இந்த உலகில் அவரைப்போல வெகு சிலரே இருக்க முடியும்!”

--தமிழில் நீலகண்டன்

என்எப்டிஇ, கடலூர்

Friday 25 September 2020

CATல் BSNL ஐடிஏ பென்ஷனர்கள் வழக்கு குறித்து தோழர் பட்டாபி பதிவின் தமிழாக்கம்

 

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) முன்

BSNL ஐடிஏ பென்ஷனர்கள் வழக்கு குறித்து


--ஆர். பட்டாபிராமன்

 

மேற்கண்ட தலைப்பில் 23 பக்கங்கள் உடைய விஷயத்தை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் நான் படிக்க நேர்ந்தது. இந்த மனு (ஒரிஜினல் அப்ளிகேஷன் OA) மனுதாரர்களுக்குப் பென்ஷன் ரிவிஷனை மறுத்த அநீதியை எதிர்த்து, நீதி வழங்கிடக் கோருவது. அவர்களின் முயற்சி வெற்றி அடைய எனது வாழ்த்துகள்!

மனுவில் சில எதார்த்தமான உண்மைகள் பிழைபட வைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுவதால் அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சிறு பதிவு. என் எண்ணங்களைப் பகிரும் முன், சட்டபூர்வ விஷயங்களில் எனது புரிதலின் வரம்பை நான் பணிவோடு ஏற்பதுடன், சட்டஅறிவின் முன்ஜாக்கிரதை விவேகம் எனக்கு இல்லை என்பதையும் தெரிவிக்கிறேன். ஆனால் உண்மை என்பது உண்மைதான், அதைப் புரிந்து கொள்ள பொது அறிவைப் பயன்படுத்துகிறேன். பொதுவான கருத்துருக்கள் மற்றும் மனுவில் வலியுறுத்தப்படும் நீதி இந்தப் பகிர்வில் முன்வைக்கப்பட்டு, அவை மீதான எனது புரிதலை எழுதியுள்ளேன்.

1.)      பத்தி 4.44 உண்மையில் சரியானது அல்ல.

ஒரிஜினல் அப்ளிகேஷன் (மனு என்று இனி கூறப்படும்) பத்தி 4.4 ல் “முன்பே குறிப்பிடப்பட்டதைப் போல, விதி 37-ஏ, ‘தானே தனி இனமான தனித்துவமுள்ள குழு’வாகப் (sui-generis) – பொதுத்துறையில் இணைந்து ஏற்கப்பட்ட (absorbee) பென்ஷனர்கள் அடங்கிய -- குழுவை ஏற்படுத்துகிறது. (அந்தக் குழுவின்) அனைத்து அப்சார்ப்டு BSNL பென்ஷனர்களும் அரசு சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி (அதன் பின்னர்) உச்சபட்சமாக 17 ஆண்டுகள் BSNLல் பணியாற்றியுள்ளனர்” என்றும் மனுவின் அந்தப் பத்தி குறிப்பிட்டுள்ளது.

01--10--2000 அன்று, ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரெகுலர் மஸ்தூர் தோழர்கள் – 10ஆண்டுகளுக்கும் குறைவான அரசு சேவைக் காலத்துடன் –இருந்தார்கள். எந்த ஓர் அரசு ஊழியரும் பென்ஷன் பெறுவதற்கு அவர் குறைந்த பட்சம் 10ஆண்டுகள் அரசு சேவை ஆற்றியிருக்க வேண்டும். ஆனால் இங்கு BSNLலில் நாம், பத்து ஆண்டுகளுக்கும் குறைவான அரசு சேவை உடைய அவர்களுக்கும் பொதுத்துறை BSNLலோடு இணைந்த சேவை காரணமாக அரசு பென்ஷனைப் பெற்றுள்ளோம். இதற்காகவே தோழர் குப்தாவை நான் வணங்குகிறேன்!

2.மனுவின் பத்தி 4.46ல், “அப்சார்ப்டு BSNLஐடிஏ பென்ஷனர்களின் பென்ஷன் மாற்றி அமைக்கப்படாத காரணத்தால் –அவர்களைப் போன்று அதே கிரேடில் பணியாற்றி ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களான CDA பென்ஷனர்களை விட—அவர்கள் குறைவான விகிதத்தில் பென்ஷன் பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. உதாரணத்திற்கு, (BSNL ஊழியரான) இந்த மனுவின் 2வது மனுதாரர் அவரைப் போன்ற மத்திய அரசு பென்ஷனரைவிட 01-01-2017அன்று ஒரு மாதத்திற்கு ரூ1677/= குறைவாகப் பெறுகிறார்”.

இந்தப் பத்தியை நான் விமர்சனம் செய்யவில்லை; ஆனால் சமச் சீரான புரிதலைப் பெற இங்கே மற்றொரு ஒப்பீட்டை உதாரணமாகத் தருகிறேன். ஹையர் செலெக்ஷன் கிரேடு மத்திய அரசு ஊழியர் மற்றும் என்இ 11 ஊதிய விகித BSNL ஊழியர் இருவருக்கும் இடையே (2020 மே மாதத்தில்) அவர்கள் பெற்ற பென்ஷன் ஒப்பீட்டைக் கீழே தருகிறேன். (2016 ஏழாவது மத்திய ஊதியக்குழு விகிதத்தில்) . மத்திய அரசு ஊழியர் 2018ம் ஆண்டு மே மாதம் பணிஓய்வு பெற்றவர். (2007 இரண்டாவது பிஆர்சி விகிதத்தில்) என்இ 11 BSNL ஊழியர் 2016ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றவர்.

 

மாதம்

பென்ஷன் விபரம்

7th CPC 2016

அடிப்படையில்

மத்தியஅரசு ஊழியர்

2nd PRC 2007 அடிப்படையில்

BSNL ஊழியர்

மே 2020

அடிப்படை பென்ஷன்

     ரூ31,100

      ரூ15,070

    

CDA/ IDA                    

     ரூ  5,287

      ரூ23,706

     

கம்யூடேஷன்

     ரூ12,440

      ரூ  6,028

     

வரவு வைத்த பென்ஷன்

     ரூ23,947

      ரூ32,748

  

மேலே உள்ள பட்டியல்படி ஹையர் செலெக்க்ஷன் கிரேடில் 2018ல் ஓய்வு பெற்ற இன்றைய 7வது மத்திய ஊதியக்குழுவின் மத்திய அரசு பென்ஷனர், அவரைவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஓய்வுபெற்ற 2வது பிஆர்சி BSNL ஐடிஏ பென்ஷனரை ஒப்பிட இன்றைய தேதியில் ஒரு மாதத்திற்கு ரூ8,801 குறைவாகப் பெறுகிறார்.

2.)        DOT /DOPPW

          7வது மத்திய ஊதியக் குழுவின் முடிவுகள் எதுவும் BSNL ஐடிஏ பென்ஷனர்களுக்கும் பொருத்தமுடையதாக நீட்டிக்க, – கிராஜூவிட்டியை உயர்த்தி வழங்குவதற்காக DOT தேதி 16-03-2017யில் வெளியிட்டதைப் போன்ற -- ஒரே ஒரு உத்தரவு அதே 1-1-2016 தேதியிலிருந்து என DOT யிடமிருந்து வழங்கப்பட்டால் போதும். மேலும் எதிர்காலப் பென்ஷனர்களுக்கும் பொருத்தமுடையதாக வேண்டின், ‘யாரெல்லாம் அந்தத் தேதியில் ஊழியர்களாக இருந்தார்களோ’ என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். ஆனால், பஞ்சப்படியோடு இணைத்து கிராஜூவிட்டியை உயர்த்துவது, மற்றும் குறைந்தபட்ச பென்ஷன் தொகை ரூ9000 என்பன போன்ற சில அம்சங்களைச் சேர்ப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்று, பென்ஷனை மாற்றியமைக்கும் (பென்ஷன் ரிவிஷன்) உத்தரவை வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும்.

          தகவல் அறியும் உரிமைச் சட்டமான ஆர்டிஐ-யின்படி பென்ஷன் ரிவிஷன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு DOPPW (பென்ஷன் மற்றும் பென்ஷனர்கள் நல இலாக்கா) அளித்த பதில் நாம் எல்லோரும் அறிந்ததே. நினைவூட்டலுக்காக அதன் முக்கியமான பகுதி பின்வருமாறு:

DOPPWயின் அலுவலகக் கடித எண் தேதி 4-8-2016 பொருத்தமான பத்தி

        ஒரு பொதுத்துறையில் நிரந்தரமாக இணைந்த அரசு ஊழியர்கள் தொடர்ந்து தனியாக அரசிடமிருந்து பென்ஷன் பெறுவார்கள் என்றால், அத்தகைய அப்சார்ப்டு ஊழியர்களின் பென்ஷன் இவ்வுத்தரவுகளின்படி மேம்படுத்தப்படும்…” இந்தப் பத்தியின் உத்தரவு ப்ரோ ரேட்டா (சரிசம விகிதாசாரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்) பென்ஷனர்கள் பற்றிப் பேசுகிறது.

7வது மத்திய ஊதியக்குழு முடிவுகள் பொருந்துவது பற்றிய ஆர்டிஐ கேள்விக்கு DOPPWஅளித்த 2018 ஜூலை 18 தேதியிட்ட பதில்:

“…. ஐடிஏ பாணி அடிப்படையில், அரசு மற்றும் பொதுத்துறையில் ஆற்றிய இணைந்த சேவைக்காகப் பென்ஷன் பெறும் அப்சார்ப்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது.”

7வது மத்திய ஊதியக்குழு உத்தரவுகள்  (அலுவலகக் கடிதம் தேதி 4-8-16 மற்றும் தேதி 12-05-2017 தொடர்புடைய பத்திகள்) பொருந்துவது பற்றிய மேலும் ஒரு ஆர்டிஐ கேள்விக்கு விளக்கம் அளித்து DOPPW தந்த10-08- 2018  தேதியிட்ட பதில்:

வெளிப்படையாக எதார்த்தத்தில் இந்த உத்தரவுகள் -- அரசு மற்றும் பொதுத்துறையில் ஆற்றிய இணைந்த சேவைக்காக ஐடிஏ விகிதத்தில் பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு -- பொருந்தாது.”

4) விதி 37-Aவின் துணைவிதி 4ஐ எதிர்த்(து வழக்காடு)தல்

        துணைவிதி (4) : பொதுத்துறை நிறுவனத்தில் இணைவதற்கான அரசு ஊழியர்களின் ஆப்ஷன்கள் அரசால் ஏற்கப்பட்ட தேதியிலிருந்து அத்தகைய (அப்சார்ப்டு) ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என்ற அந்தஸ்தை இழந்து, அவர்கள் அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்றதாகக் கருதப்படுவார்கள்.

          வரையறுக்கப்பட்ட எனது அறிவின்படி, 15-12-1995 தேதியிட்ட தீர்ப்பு (துணைவிதி 4ஐ எதிர்த்து வழக்காடுவதற்கு உதவ) இதற்குப் பொருத்தமுடையது இல்லை. 15-12-1995 தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் அதற்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பு கீழே தரப்படுகிறது, (அதைத் தெரிந்து கொண்டால்) புரிதல் எளிதாகும் என்பதற்காக.

          பின்னணி: (பொது விஷயங்களுக்காக நீதிமன்றங்களில் வழக்காடும்) காமன் காஸ் என்ற பொதுநல அமைப்பு, பென்ஷனில் கம்யூட் செய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு பென்ஷனை மீண்டும் 12 ஆண்டுகளில் திரும்ப அளிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டரீதியான போரை நடத்தியது. அந்த வழக்கின் தீர்ப்பை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா 1986 டிசம்பர் 9ம் நாள் வழங்கினார்.

          வழக்கு இதுதான்:அரசமைப்பு சட்ட ஷரத்து 32ன் கீழ் மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில், கம்யூடேஷனாகப் பென்ஷனர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் (மாதாந்திரப் பென்ஷனில்) பிடித்தம் செய்ய மத்திய அரசுக்கு அனுமதி வழங்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவின் ஷரத்துக்களைச் செல்லாதென ரத்து செய்து அறிவிக்கக் கோரியுள்ளனர். மேலும் கம்யூடேஷன் திட்டத்தில் பொருத்தமாகச் சீர்திருத்தவும் உத்தரவிடக் கோரியுள்ளனர்; அதற்குக் காரணமாக, வாழ்க்கைமுறை மேம்பாடு அடைந்ததன் பலனாய் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதைக் கணக்கில் கொள்ளும் வகையில் திட்டத்தில் மாற்றம் வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். கம்யூடேஷனாக வழங்கப்பட்ட மொத்த தொகையைச் சாதாரணமாக 12 ஆண்டுகளில் திரும்ப வசூலிக்கப்பட்டு விடுகிறது. எனவே கம்யூடேஷன் பங்கு பிடித்தத்திற்கான காலத்தை 15 ஆண்டுகளான நிர்ணயிப்பது நியாயமானதல்ல” என வலியுறுத்தியுள்ளனர்.

          அந்த வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டல்: “எனவே நாங்கள் கருதுவது யாதெனில், படைப் பிரிவு அலுவலர்களுக்கு மட்டும் ஒரு கால வரையறையைத் தனியே நிர்ணயிக்கத் தேவையில்லை; அவர்களும் மற்ற சிவில் பென்ஷனர்கள் போலவே நிர்ணயிக்கப்பட்ட காலமான 15 ஆண்டுகள் முடிந்த பிறகு, தங்களது பிடிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு (கம்யூட்டெட்) பென்ஷன் பங்கினை முழுமையாகப் பெறுவதற்கு உரிமை உடையவர்கள். அவர்களுக்கும் உத்தரவு அமல் தேதி 01-04-1985 ஆகும்.”

இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதே DOPPWன் உத்தரவான, கடித எண்“ DOPPW  OM  மார்ச்5, 1987  

பொருள்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூட்டெட் பங்கினைத் திரும்ப அளித்தல் – உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக”

அந்த அலுவலகக் கடிதத்தில் கீழ்க்கண்ட பத்தி இடம் பெற்றுள்ளது:

       “4: மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அப்சார்ப் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் யாரெல்லாம் பென்ஷனில் மூன்றில் ஒரு பங்கு கம்யூட் செய்து அதன் அடிப்படையில் மற்ற ஓய்வூதிய இறுதிப் பயன்களைப் பெற்றார்களோ / அல்லது பெற விருப்பம் தெரிவித்தார்களோ அவர்களுக்கு இந்த உத்தரவுகளின் அடிப்படையிலான எந்தப் பலனையும் பெறுவதற்கு உரிமை கிடையாது, காரணம் (பொதுத்துறையில் அப்ஸார்ப்ஷனுக்குப் பிறகு), அவர்கள் மத்திய அரசு பென்ஷனர்களாக  நீடிக்கவில்லை (ceased to be CG Pensioners)

          மேற்கண்ட இந்தப் பத்தி ஒரு பிரச்சனையை உருவாக்கியதன் காரணமாக மேலும் சட்டரீதியாக வழக்கினைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து வெளியானதே உச்சநீதிமன்றத்தின் 1995 டிசம்பர் 15ம் தேதியிட்ட தீர்ப்பு

தீர்ப்பினை எழுதியவர் : V.K. பெஞ்ச் -- நீதியரசர் வெங்கடசுவாமி K

வழக்கு இதுதான் :இந்திய அரசமைப்புச் சட்ட ஷரத்து 32ன் கீழ் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை வாதங்களின்போது ரிட் மனுக்களின் சார்பாக வாதாடிய அறிவார்ந்த வழக்கறிஞர்கள் இரண்டு விஷயங்களில் நிவாரணம் கோருவதோடு தங்கள் வழக்கை வரையறுத்தனர்; ஒன்று, இந்த நீதிமன்றத்தின் காமன் காஸ் தீர்ப்பின்படி (ரிஜிஸ்டர்டு சொஸைட்டி மற்றும் பிறர் –எதிர்-- யூனியன் ஆஃப் இந்தியா (1987) 1 SCR 497) மூன்றில் ஒரு பங்கு கம்யூட்டெட் பென்ஷனைத் திரும்ப முழுமையாக்குதல்; இரண்டு, மேலும் அது தொடர்பாக இந்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்ஷனர்கள் நல இலாக்கா வெளியிட்ட O.M. 3412/86 உத்தரவின்-- DOPPW  OM 5th மார்ச் 1987 -- பத்தி 4 ஐ செல்லாது என அறிவித்தல்”

வழக்கின் தீர்ப்பு வழங்கிய வழிகாட்டல்: “கீழ்க்கண்ட காரணங்களால், காமன் காஸ் வழக்கில் மூன்றில் ஒரு பங்கு கம்யூடெட் பென்ஷன் பங்கினைத் திரும்ப அளிப்பதைப் பொருத்த அளவில் இந்த நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டலின் பலன்களைப் பெற மனுதாரர்களுக்கு உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம். மேலும் அது தொடர்பான DOPPW  OM 5.3.1987ன் பத்தி 4 ஐ செல்லாது என அறிவிக்கிறோம். வழக்குச் செலவு இல்லை.”

          இங்கே வழக்கு – மூன்றில் ஒரு பங்கு கம்யூடேஷனை (15ஆண்டுகளுக்குப் பின்) மீட்டளிப்பது மற்றும், உத்தரவை அதே தேதியிலிருந்து அமலாக்கும் விஷயத்தில் -- மத்திய அரசு பென்ஷனர்கள் பெறும் பலனை அப்சார்ப்டு பென்ஷனர்களுக்கும் நீட்டிப்பது பற்றியதுதான். (வழக்கு தொடுக்கப்பட்ட) முரண்பாட்டின் சாராம்சம் (contention), (OM உத்தரவின் 4வது பத்தியின்)  ‘அவர்கள் அரசு பென்ஷனர்களாக நீடிக்கவில்லை’  என்ற விஷயம் பற்றியது அல்ல.

5) DOT OM dt16-3-2017

விதி 37-A (8) கூறுவதாவது : பொதுத்துறை நிறுவனத்தில் அப்சார்ப்டு செய்யப்பட்ட ஒரு நிரந்தர அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பம் ஓய்வூதியப் பலன்களை (பென்ஷன் கம்யூடேஷன், கிராஜூவிட்டி, குடும்ப பென்ஷன் அல்லது எக்ஸ்ட்ராடினரி பென்ஷன் உட்பட) பெறுவதற்கு தகுதி உடையது; இணைந்த சேவைக்கான அடிப்படையில் வழங்கப்படும் அந்தப் பென்ஷன் பலன்கள் –அவற்றைக் கணக்கிடுவதற்கு (அவர் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும்போது அல்லது அவரது இறப்பின்போது அல்லது அவரது ஆப்ஷனுக்கு ஏற்ப) அமலில் உள்ள பார்முலாபடி – மத்திய அரசு சேவை காலத்திற்கான பலன்களை, மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப, பெறலாம்.

இங்கே DOTயின் அலுவலக OM தேதி 16-3-2017, பார்முலாவில் மாற்றம் குறித்து எதுவும் பேசவில்லை என்பதை நாம் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய தேவை உள்ளது.

DOTயின் OM தேதி 16-3-2017 :

பொருள்: 7வது மத்திய ஊதியக் குழுவின் சிபார்சுகள் அமலாக்கம்: BSNL/ MTNL அப்சார்ப்டு ஊழியர்களுக்கு விதி 37-ஏவின் கீழ் பொருந்துவது குறித்து

இந்த அலுவலக உத்தரவு, ஜனவரி 2016 அன்று அல்லது பிறகு ஓய்வுபெறும் BSNL அப்சார்ப்டு ஊழியர்களுக்கு டிஏவை இணைக்காமல் (without DA linked), உச்சபட்ச கிராஜூவிட்டி வரம்பை ரூபாய் 20 லட்சமாக மாற்றி அமைக்க மட்டும் பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவின் 3வது பத்தி கூறுவதாவது,

            01-01-2016 முதல் (அமலில் உள்ள) பென்ஷன் / குடும்ப பென்ஷன் பார்முலாவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே BSNL/ MTNL அப்சார்ப்டு ஊழியர்கள் தொடர்ந்து அதே பார்முலாபடி பென்ஷன் பெறுவார்கள்.

விதி 37-A (9) கூறுவதாவது : துணைவிதி (8)ன் கீழ் ஓர் ஊழியரின் பென்ஷன், ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது சராசரி ஊதியம் இதில் எது அவருக்கு அதிகப் பலன் அளிப்பதாக இருக்குமோ அதன்படி கணக்கிடப்படும்.

2017க்கு பின் ஓய்வுபெற்ற பென்ஷன்தாரர்களின் பென்ஷன் இந்தச் சேவை விதிப்படி (SR) நிர்ணயிக்கப்படுகிறது. 2017க்கு பின் ஓய்வுபெற்ற இந்தப் பென்ஷன்தாரர்களின் பென்ஷனைத் திருத்தி மேம்படுத்துவது, ஊதிய மாற்றம் இல்லாமல், இந்தச் சேவை விதியின்படி சாத்தியமற்றது.

6) 2017க்கு பின் பென்ஷன் அப்டேஷன் பிரச்சனை:

          கடந்த கால பென்ஷனர்களுக்குக்கூட 7வது மத்திய ஊதியக்குழு முடிவுகள் பற்றிய கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் 01-01-2017லிருந்து ஓய்வுபெறும் ஊழியர்கள் அதனைப் பெறுவதில்லை; காரணம், அந்த ஊழியர்கள் ஊதிய மாற்றக் கமிட்டி (பிஆர்சி) அல்லது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையின் கீழ் வருகிறார்கள் என்பதுதான். எனவே இரண்டு (கேட்டகரி) வகையான பென்ஷனர்கள் – 7வது மத்திய ஊதியக்குழுவின் கீழ் வரும் கடந்த கால பென்ஷனர்கள், (இரண்டு,) பிஆர்சி அல்லது இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையின் கீழ் வரும் எதிர்கால பென்ஷனர்கள் – உள்ளனர். (இப்படி இரண்டு வகையான பென்ஷனர்கள் இருக்கும்) இது நாக்ரா வழக்கின் உயிர் மூச்சான உணர்வுகளுக்கு எதிரானது. இந்தக் கோரிக்கை 2017க்குப் பிறகு ஓய்வு பெறும் பென்ஷனர்களுக்கு எதிரான பாகுபாட்டை உண்டாக்கும் என்பதை நன்றாக அறிந்தே (பென்ஷனர்) அசோஸியேஷன் (மற்றும் வேறு சில அமைப்புகளும்) இந்தப் பாகுபாட்டின் மீது சட்டபூர்வமான முத்திரையைப் பெற விரும்புகிறது.

7) டிலிங்கிங் பிரச்சனை குறித்து

DOTக்கு  DOPPW இலாக்கா எழுதிய 8-3-2019 தேதி அலுவலக கடிதத்தில் குறிப்பாகக் கீழ்க்கண்ட அவதானிப்பை முன் வைத்துள்ளது:

     “…கடந்த கால பென்ஷனர்களின் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் பட்சத்தில், அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட பென்ஷன் தொகை, தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் ஓய்வுபெறும்போது அவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் பென்ஷன் தொகையைவிட, அதிகமாகி விடும். இதனால் BSNL/ MTNL நிறுவனங்களில் (கடந்த கால பென்ஷனர்கள் புதிதாக ஓய்வுபெறும் பென்ஷனர்களை விட கூடுதல் பென்ஷன் பெறுகின்ற) பென்ஷன் முரண்பாடு நிலைமை உண்டாகும். எனவே தொலைத் தொடர்பு இலாக்கா (DOT) இந்த முரண்பாட்டை எவ்வாறு தீர்க்க உத்தேசித்துள்ளது என்பது பற்றிய அவர்களது கருத்துருவைக் கொண்டுவர வேண்டிய அவசியம் எழுந்துள்ளது”  

எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் 11-3-2020ல் அளிக்கப்பட்ட பதில்:

            “பணியில் இருக்கும் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அவர்கள் ஓய்வுபெறும்போது வழங்க வேண்டிய பென்ஷன் கணக்கிடப்படுவதால், அதனோடு BSNL அப்சார்ப்டு ஊழியர்களின் பென்ஷன் மாற்றப் பிரச்சனை இணைந்துள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம், ஊதிய மாற்றத்தின் (pay revision) காரணமாக, மாற்றப்படும்போது பென்ஷனும் மாற்றியமைக்கப்படும்.”

மேற்கண்ட பதிலிலிருந்து, ஊதிய மாற்றம் இல்லாமல் பென்ஷன் மாற்றத்தை வழங்குவதன் மூலம் ஒரு முரண்பாடான எந்த நிலையையும் உண்டாக்கிவிட DOT இலாக்கா விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. இன்றைய தேதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட 2017க்குப் பிறகு ஓய்வு பெற்ற பென்ஷனர்களுக்கு –ஒவ்வொரு மாதமும், 2026 மற்றும் அதற்கு அப்பாலும், ஊழியர்கள் ஓய்வுபெறுவதால் மேலும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் பென்ஷனர்களுக்கு—ஒரு முரண்பாடான (பென்ஷன்) நிலையை ஏற்படுத்த ஓய்வூதியர்களின் சங்கம் / சங்கங்கள் விரும்புகிறது.

எனது வரையறுக்கப்பட்ட அறிவின்படி, DOPPW அலுவலக 8-3-2019 தேதியிட்ட கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள முரண்பாடு, ஏக காலத்தில் ஊழியர்களுக்கான ஊதிய மாற்றமும், அந்த பார்முலாபடியே 01-01-2017 முதலான பென்ஷனர்களின் பென்ஷனும் மாற்றி அமைக்கப்படுவதன் மூலமாக அன்றி, வேறு எப்படியும் தீர்த்து வைக்கப்பட முடியாது. மாறாக, பென்ஷனர் அசோஸியேஷன்களின் கோரிக்கை – எந்த நீதிமன்றத்திலோ, ஏதோ ஒரு மட்டத்தில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் -- வலியுறுத்தி ஏற்கப்படுமானால், உண்டாகும் முரண்பாட்டையும் தலைகீழாக இணைப்பதன் மூலமாகவே தீர்க்க முடியும். அது ரிவர்ஸ் லிங்கிங் என்பதைத் தவிர வேறில்லை. (ஊதிய மாற்றம் மற்றும் பென்ஷன் மாற்றம் இரண்டையும் தனித்தனியாக்கி) டி-லிங் செய்வது என்ற கேள்விக்கு விடை காண்பது, எதிர்கால ஐடிஏ பென்ஷனர்கள் இருக்கும் வரை, சாத்தியமில்லை.

பதிவிட்ட நாள்: 23-09-2020          

வலைப்பூவில் பதிவிட்டது : ஆர் பட்டாபிராமன்BSNL ஐடிஏ பென்ஷனர்

                                                                                                                             தமிழாக்கம்: நீலகண்டன்,

                                                                                                                               என்எப்டிஇ, கடலூர்