Wednesday 26 April 2023

கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து கற்கிறார்கள் --பினாய் விஸ்வம், எம்பி

  


கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து கற்கிறார்கள்,

அவர்களுடன் இணைந்து போராடுகிறார்கள்

--பினாய் விஸ்வம், எம்பி

            மேல்மட்டத் தலைமை பீடத்திடமிருந்து பச்சைக் கொடி காட்டப்படும் தகுந்த தருணம் வருவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் காத்திருந்தது போலும். 2023 ஏப்ரல் 10ல் இந்தியக் கம்யூனிஸ்ட்

கட்சியின் தேசிய அங்கீகாரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரபூர்வ அறிவிப்பை ஆணையம் வெளியிட்டது. கட்சியைப் பொறுத்தவரை இப்பிரகடனம் எதிர்பாராத ஒன்றல்ல; ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவிக்கைகளை வழங்குவதிலும், விசாரணைகளை நிர்ணயித்தும், முடிவுகளை நிறுத்தி வைத்தும் என மீண்டும் மீண்டும் இதே சூழற்சி நடவடிக்கைகளில் 2019லிருந்தே ஈடுபட்டு வந்துள்ளது.

            தன்னிச்சையாக ஆணையமே நிர்ணயித்த வரையறைகளின்படி சிபிஐ, தேசியக் கட்சி அங்கீகாரத்திற்குத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை இடங்களை இழந்துள்ளது. சுயமாக நிர்ணயித்த வரையறைகளின் ஜனநாயக நம்பகத்தன்மை பற்றி அக்கறைப்படாத தேர்தல் ஆணையத்தின் இயல்பும் அதன் கட்டமைப்பும் அப்படி. எந்திரத்தனமாக வரையறுத்த அளவுகோல்களின்படி செயல்படுவது மட்டுமே அவர்களின் உத்தரவு. தெளிவாகக் கூறினால், இந்த அளவுகோல்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் திரளும் ஜனரஞ்சக மக்கள் ஆதரவை அளவிடுவதற்குச் சக்தியற்றவை.

          ஓர் அரசியல் கட்சியின் பலம் அல்லது பலவீனத்தை அளவிடுவதற்கு அவர்களிடம் உள்ள ஒன்றேயொரு முறை எளிய பன்முகத் தேர்தல்’ (‘first pass the post’) முறை மட்டுமே. நமது தேர்தல் முறையின் உள்ளார்ந்த மற்றும் கடுமையாகப் பாதிக்கும் பற்றாக்குறைகள், போதாமைகள் எல்லாம் அவர்கள் கவனத்திற்கு ஒருபோதும் வந்ததில்லை. சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிளும் ஜனநாயகச் சக்திகளும் எழுப்பும் தேர்தல் சீர்திருத்தக் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்ட முயற்சி செய்யும் அரசும், இந்தியத் தேர்தல் ஆணையமும் அலட்சியப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன.

         தேர்தல் சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட இந்திரஜித் குப்தா கமிட்டி சிபார்சுகளைச் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்தும் ஒரு மைல்கல் முயற்சி என அனைத்து ஜனநாயகவாதிகளும் வரவேற்றனர்.

ஆனால் ஆணையமோ அச்சிபார்சுகளை அக்கறையுடன் பரிசீலிக்கவில்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், தேர்தல்களுக்கு அரசு நிதி அளித்தல், பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை (அதாவது தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர் பின்னர் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றத் தவறும் நிலையில், தேர்ந்தெடுத்த மக்கள் அவரை உறுப்பினர் பொறுப்பிலிருந்து திரும்ப அழைக்கும் உரிமை) எனப் பொருத்தமான ஆலோசனைகளை முன்வைத்த இந்திரஜித் குப்தா கமிட்டி 1998லேயே நாட்டிற்கு அதனைச் சமர்ப்பித்தது.

       அச்சிபார்சுகள் பற்றி அரசியல் கட்சிகள் அல்லது பொதுமக்கள் கருத்தறிய  தேர்தல் ஆணையம் அதனை சுற்றுக்கு ஒருபோதும் விடவில்லை. அதற்கு மாறாக, தேர்தல் பத்திரங்களை (எலெக்டரல் பாண்டு) அமலாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தது மட்டுமின்றி, தேர்தல் நிதி அளித்தல் பொறுப்புக் குறித்து வானளாவ உரிமையும் கோரினர். இந்தியக் குடிமக்கள் இப்போது தேர்தல் பத்திரங்களுக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சியை நன்றாகப் புரிந்து கொண்டனர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அளித்த அறிக்கையின்படி அது (தேர்தல் பத்திரங்களின் ஆதாயம்) ஒரே ஒரு அரசியல் கட்சியால் வாரிச் சுருட்டப்பட்டது எனத் தெரிகிறது. யாரும் வியப்படையவில்லை, அந்தக் கட்சி பாரதிய ஜனதா கட்சி.

வலதுசாரியினர் கொண்டாட்டம்

       தேசிய அங்கீகார ரத்து அறிவிப்பு வெளிவந்த உடன், வலதுசாரி அரசியல் வட்டத்தில் உளள பலரும் அதனைக் கொண்டாடத் தொடங்கினர். வலதுசாரி அணி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஏதோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவமும் போராட்டக் குணமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் எந்திரத்தனமான அங்கீகார அடிப்படையில் கட்டப்பட்டதென எண்ணிவிட்டனர். உண்மை, சில அரசியல் கட்சிகள் ஜீவித்திருப்பதற்கே ஆணையம் வழங்கும் தேசிய அங்கீகாரச் “சான்றிதழ்” ஆக முக்கியத்துவம் உள்ள உணர்ச்சிபூர்வமான விஷயம் –அந்தக் கட்சிகளுக்கு.

         இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய கொள்கையில் நம்பிக்கை உடையதல்ல. கட்சி பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பது உண்மையே, எனவே தேர்தல்களும் வாக்குகளும் கட்சிக்கு முக்கியமான விஷயங்கள்தாம். ஆனால் ஒரு புரட்சிகரக் கட்சி அவற்றை மட்டுமே ஒரே அம்சமாகப் பற்றி கொண்டு இயங்க முடியாது.

            மக்களும் அவர்களின் போராட்டங்களுமே ஆக மிக முக்கியம் எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தமும் அரசியல் நிலைபாடும் கற்றுத் தந்துள்ளன. அந்தப் போராட்டங்களில் தேர்தல் களப் போராட்டங்களும் ஒரு பகுதி. அதன் காரணமாகத்தான் அங்கீகாரம் என்பது மக்களின் மனங்களில் உள்ளது என்பதில் கட்சி உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

சிபிஐ வரலாற்றுத் தடங்கள்

            சிபிஐ உதித்த முதல் நாளிலிருந்தே இந்திய வரலாற்றில் தனது தடங்களைப் பதித்துள்ளது. அதிகாரபூர்வமாகக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதற்கு முன்பே, இந்திய விடுதலைப் போராட்ட ஆண்டுகளின் சரித்திரக் குறிப்புகளில் பூரண சுதந்திரம் என்ற நிகழ்ச்சிநிரலைப் பொறித்தது கம்யூனிஸ்ட்களே. அவர்கள்தான் விவசாயிகளை அணி திரட்டவும் (அனைத்திந்திய கிசான் சபா AIKS), மாணவர்களைத் திரட்டவும் (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), எழுத்தாளர்கள் (முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு PWA) மற்றும் கலைஞர்களைத் திரட்டவும் (இந்திய

மக்கள் நாடக மன்றம், இப்டா) அமைப்புகளை ஏற்படுத்த முன்னணியில் செயல்பட்டனர். தொழிலாளர் வர்க்கத்தின் வலிமை பொருந்திய அமைப்புக்கு (ஏஐடியுசி) வடிவம் கொடுத்ததில் கம்யூனிஸ்ட்களின் பங்கு மறக்க முடியாதது. நமது மாபெரும் தேசத்தின் விதியை வகுத்ததில் கம்யூனிஸ்ட்கள் வகித்த தலைமைப் பாத்திரம் எந்த மூலையிலிருந்து எவரிடமிருந்தும், ஏதோவொரு அங்கீகாரத்தைப் பெறலாம் என்ற காரணத்திற்காக அல்ல.

போராட்ட வரலாறு  

            கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வரலாறு –இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் – எண்ணிறைந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்களால் நிரம்பியது. முதலாளித்துவ வழி வளர்ச்சி என்பதற்கு எதிராகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராடியதில் தீரமுடன் நின்றது, இந்தக் கட்சிதான். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்த ஆயிரமாயிரம் தியாகிகளின் ஞாபகம் இந்தக் கட்சிக்கு உண்டு. தேசத்தின் சுதந்திரம், சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்காக –புன்னபுரா வயலார், தெலுங்கானா மற்றும் தேபகா போன்ற --போர்க் களங்களில் இந்தக் கட்சி  போராடியபோது, எந்தவிதமான தேசிய அங்கீகாரத்திற்காகவும் ஒருபோதும் எண்ணி ஏங்கியது இல்லை. பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை எதிர்த்தும், பிற இடங்களில் வகுப்புவாத பாசிஸ்ட்களை எதிர்த்தும் போராடியதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை முனையிலே முன் நிற்கச் செய்தது. தேசிய அங்கீகாரம் ஒருபோதும் அவர்களைப் பின்னே இழுத்ததும் இல்லை, முன்னே தள்ளியதும் இல்லை. கட்சியின் ஒரே அக்கறையும் கவலையும் தேசம், அதனது மக்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் மட்டுமே ஆகும்.

     போராட்டங்களுக்கு மத்தியில் கட்சி போட்டியிட்டு தேர்தல்களில் வென்றதும் உண்டு. தேசத்தின் முதன் முதலான காங்கிரஸ் அல்லாத அரசை 1957லேயே கேரள மாநிலத்தில் அமைத்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பே, அவ்வாறே கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிகளையும் தோல்விகளையும் அனுபவித்துள்ளது. வெற்றி பெற்றபோது தலைகால் புரியாமல் தாண்டிக் குதித்ததும் இல்லை, தோல்வி அடைந்த போது நம்பிக்கைகளை ஒருபோதும் இழந்ததும் இல்லை. அத்தகைய ஒரு கட்சிக்கு ஆட்சி நிர்வாகத்தின் எந்தப் பிரகடனமும் நிர்ணயிப்புக் காரணியாக இருக்க முடியாது.

சிபிஐ குறிவைக்கப்படுவது ஏன்? -- அவர்கள் நன்கு அறிவார்கள்…,

பாசிசத் தாக்குதலின் ஆதரவாளர்களால், இந்த வரலாற்றுத் தருணத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறி வைக்கப்படுவது ஒன்றும் எதேச்சையான விபத்ததல்ல. ஹிட்லரிசப் பாசிசத்தின் இந்தியப் பதிப்பான மிகப் பெரிய எதிரியை எதிர்த்துப் போரிட அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் பரந்த ஒத்துழைப்புக்கான தெளிவான அறைகூவலை முதன்முதலாக விடுத்தது இந்தக் கட்சிதான் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

            சுரண்டும் கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிராகப் பாடுபடும் மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை பற்றுறுதியுடன் ஆற்றும் வீரம் செறிந்த பங்கினையும் அவர்கள் நன்கு அறிவார்கள். 

            அரசியலமைப்புச் சட்ட அடிப்படை ஆதாரக் கோட்பாடுகளைப் பாதுகாக்க கம்யூனிஸ்ட் கட்சியால் உயர்த்திப் பிடிக்கப்படும் தேசபக்தப் பங்கினையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்தால், கட்சியைச் சிறிதாகச் சிதைத்துவிடலாம் எனவும், கட்சியைப் 

போராட்டக் களங்களிலிருந்து அகற்றி விடலாம் எனவும் அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்கள் முற்றாகத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முன்னோக்கிய கம்யூனிஸ்ட் போராட்டப் பாதையைத் தாமதித்துத் தடுத்து நிறுத்தி விடாது. கட்சி நன்கு அறியும் மக்களே எஜமானர்கள், கட்சி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் அவர்களுடன் இணைந்து போராடும்! அதுதான் கம்யூனிஸ்ட் கட்சிக்கான முன்னோக்கிச் செல்லும் பாதை!

--நன்றி : நியூஏஜ் (ஏப்.23 –29)

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர் 

Sunday 23 April 2023

கம்யூனிஸ்ட் அறிக்கை 175 ஆண்டுகள்

 


கம்யூனிஸ்ட் அறிக்கை 175 ஆண்டுகள்

கம்யூனிஸ்ட் அறிக்கை, ஜனநாயகம் மற்றும் சோஷலிசம்

--அனில் ரஜிம்வாலே

இன்றைக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மெனிஃபெஸ்டோ அல்லது ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ 1848 பிப்ரவரியில் பதிப்பிக்கப்பட்டது. அது உலகின் முதலாவது கம்யூனிஸ்ட் கட்சியான கம்யூனிஸ்ட் லீக் அமைப்பிற்காக 1847 நவம்பரில் காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கல்ஸ் இருவராலும் எழுதப்பட்டது.

        இப்படைப்பின் மூலம் மார்க்சும் ஏங்கெல்சும் இறுதியாகப் புரட்சி குறித்த யூகங்களுக்கு முடிவு கட்டி, சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தின் கருத்தியலை விஞ்ஞான அடிப்படையில் முன் வைத்தனர். முதன் முறையாகத் தொழிலாளர் வர்க்கம், புரட்சியின் --அதாவது ஜனநாயகப் புரட்சி மற்றும் சோஷலிசம்/கம்யூனிசம் இவற்றின்-- செயல்திட்டத் தந்திரோபாயம் மற்றும் உத்திகளை வகுத்து உருவாக்கியது.

        வரலாற்றில் 1789ன் ஃபிரெஞ்ச் புரட்சி, 1776ன் அமெரிக்கப் புரட்சி, 1640 மற்றும் 1688ன் பிரிட்டன் புரட்சிகள், 1848 –50களின் ஐரோப்பியப் புரட்சிகள் போன்ற பெரும் புரட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவை எதனிலும் ‘செயல்திட்டத் தந்திரோபாயம்’ (ஸ்டடர்ஜி) வகுக்கப்படவில்லை.

  மார்க்சும் ஏங்கல்சும் கம்யூனிசத்தின் விஞ்ஞான கோட்பாடுகளை வகுத்து, விஞ்ஞானபூர்வமல்லாத உட்டோபிய (கற்பனைவாத) சோஷலிசத்திற்கு எதிராக விஞ்ஞான சோஷலிசத்தை மேம்படுத்தி வளர்த்தனர்; ஜனநாயகக் கோரிக்கைகளுக்கான அன்றாடப் போராட்டங்களின் திட்டங்களை வகுத்தளித்தும், பிற ஜனநாயகக் கட்சிகளுடன் ஒத்துழைப்புக்கான உத்திகளையும் வளர்த்தனர். உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டம், எதிர்கால சோஷலிசப் போராட்டத்துடன் இயக்கவியல் ரீதியாக இணைக்கப்படுகின்றது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு

ஃபெடரிக் ஏங்கல்ஸ் கூற்றின்படி, புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கடமைகளில் முதலாவதும் முக்கியமானதுமான, ஜனநாயகத்தில் பொது வாக்குரிமையை வென்றடைவது’ எனக் கம்யூனிஸ்ட் அறிக்கை ஏற்கனவே பிரகடனப்படுத்தி உள்ளதுஎன மார்க்ஸ் எழுதிய பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் என்ற நூலுக்கு 1895ல் எழுதிய முகவுரையில் ஃபெடரிக் ஏங்கல்ஸ் குறிப்பிட்டுள்ளார் (SW1, Moscow, 1973, p195). இதிலிருந்து தெளிவாவது, தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளுக்குப் பொது வாக்குரிமை என்பதன் முக்கியத்தும் குறித்து ஏங்கல்ஸ் மற்றும் மார்க்ஸ் வலியுறுத்தியுள்ளனர் என்பதே. இந்தக் கோரிக்கை 1830கள் மற்றும் 1840களில் இங்கிலாந்து தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுப் புகழ்மிக்கச் சாசன இயக்கம் (Chartist movement) எழுப்பிய கோரிக்கையாகும்.

மார்க்சும் ஏங்கல்சும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மற்றும் ஜனநாயக முறைகளிலான போராட்ட வடிவங்களுக்குப் பெரும் முக்கியத்தும் அளித்தனர். ஆனால் பெரும்பாலான மக்களிடம்அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் பெரும் ஆதரவாளர்கள் என்று பதிந்துள்ள கருத்து, முற்றிலும் தவறானது. இக்கருத்து உண்மைக்கு முற்றிலும் மாறானது, உண்மைக்கு வெகு தொலைவில் இருப்பது. ஆயுதப் போராட்டத்தைப் பரிந்துரைத்த ஒரு தருணம், ஒற்றை மேற்கோள் அவர்களுடைய நூல்களில் ஒரு இடத்தில்கூட காணப்படவில்லை.

பிரெஷ்யாவில் வாக்குரிமையை அறிமுகப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிஸ்மார்க், அதனைத் தனது சொந்த நலனுக்குப் பயன்படுத்த முயன்றார். ஆனால் அவ்வாய்ப்பை உடனடியாக இறுகப் பிடித்துக்கொண்ட தொழிலாளர்கள் (ஜெர்மன் சோஷலிசவாதியான) “ஆகஸ்ட் பேபெல் என்பரை முதலாவதாக அரசமைப்பு ரீச்ஸ்டாக் (ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு) அனுப்பினர். அந்த நாள் முதலாக வாக்குரிமையை அவர்கள் ஆயிரம் மடங்கு தங்களுக்குப் பயன்அளிக்கும் வகையில் பயன்படுத்தினர்; அது அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகியது” (அதே நூலில் ஏங்கெல்ஸ்). இவ்வாறு அது விடுதலைக்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டது.

இந்த வார்த்தைகள் ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது! அது முதலாக, அவை இன்னும் கூடுதலாக 21ம் நூற்றாண்டில் பொருத்தப்பாடு உடையதாகத் திகழ்கின்றன. இன்று, ஜனநாயகம், ஜனநாயக அரசியலமைப்புச் சட்டங்கள் மற்றும் பாராளுமன்ற முறைமைகள் என்பன நன்கு நிலைநிறுத்தப்பட்ட உண்மைகள் ஆயின, அவை மேலும் பரவலாக்கப்படவும் வலிமைபடுத்தப்படவும் வேண்டும். இது, கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு உடைய போதனைகளில் ஒன்று.

(உடோபிய) கற்பனாவாதமும் விஞ்ஞான சோஷலிசமும்

    மெனிஃபெஸ்டோவில் வரலாற்றின் பொருள்முதல்வாதக் கருத்துருவாக்கம் பொதுவாக முன்வைக்கப்பட்டது. அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளில் அவை தங்கள் சமூக பொருளாதார வேர்களையும் வரலாற்றையும் கொண்டிருந்தது.

வரலாறு மற்றும் சமூகத்தின் இயக்க சக்திகளையும் எதார்த்தமாகக் காணக்கூடிய விதிகளையும் குறித்த விஞ்ஞான ரீதியான புரிதலில் பற்றாக்குறை கொண்டிருந்த  உடோபிய சோஷலிசம்/கம்யூனிசத்தை, அதன் காரணமாகவே, மார்க்சும் ஏங்கெல்சும் விமர்சித்தனர். அறிக்கையில் அவர்கள் அடையாளப்படுத்திய பலவித ‘சோஷலிச மாதிரி’களில் ‘விமர்சன கற்பனாவாத சோஷலிசம் மற்றும் கம்யூனிசம்’ என்பதும் ஒன்று. “விமர்சன கற்பனாவாத சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தின் முக்கியத்துவம், வரலாற்று வளர்ச்சிப் போக்கினுடன் தலைகீழ் உறவைக் கொண்டிருப்பதைத் தாங்கியுள்ளதைக் காட்டுகிறது“ (பார்வை: கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்டோவில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், ‘சோஷலிச மற்றும் கம்யூனிச இலக்கியம் பகுதி III).

அதன் பின் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் பணியை மேலெடுத்துச் சென்ற லெனின், அராஜகவாதம் (அல்லது அரசின்மைவாதம்),


ஜனரஞ்சகவாதம் (Anarchism, Narodnismமற்றும் ‘இடதுசாரி’ சாகசக் கம்யூனிசம் இவற்றை அவர்களின் (சமூக எதார்த்தத்தைப் புறக்கணித்து) சுயவிருப்ப விழைவு மற்றும் அகவயப்பட்ட சமூகச் செயல்பாட்டிற்காக விமர்சித்தார். நவீனகால மாவோயிசவாதிகள், உலகச் சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் பெரும் மாறுதல்களைக் கணக்கில் கொள்ளாமல், இந்த விஞ்ஞானபூர்வமற்ற, வரலாற்று பூர்வமற்ற அணுகுமுறையை வலியுறுத்துகின்றனர்.

இத்தகைய குறுகிய கருத்தியல் அணுகுமுறைகள், உற்பத்தி சக்திகள், பொருளாதாரம், சந்தை, அறிவியல், தொழில்நுட்பம் முதலிய மற்றும் புதிய தொழில்நுட்பப் புரட்சி உள்ளிட்டவற்றின் புதிய வளர்ச்சிப் போக்குகளைப் புறக்கணிக்கின்றன.

கற்பனாவாதச் சோஷலிசத்தின் மீது இரக்கமற்ற விமர்சனம் மூலமாகவே மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் விஞ்ஞான சோஷலிசம் உருவானது

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அடிப்படைகள் மீதான ஆய்வு

       அரசியல் நிகழ்வுகளின் பொருளாதார வேர்களைக் குறித்த ஆய்வைக் கம்யூனிஸ்ட் அறிக்கை தொடங்கி வைத்தது. அது இல்லாமல் இருந்தால், மிக மோசமான மாதிரியான உட்டோபிய கற்பனாவாதத்தில் விழும் ஆபத்து விளைந்து இருக்கும்.

        1848 –50ன் ஐரோப்பிய புரட்சி சம்பந்தமான தெளிவில்லாத பல அம்சங்கள் குறித்து மார்க்சும் ஏங்கெல்சும் ஆழமான பொருளாதார ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்ட ஆண்டான 1847ல்தான் அவர்கள் 1847 உலக வர்த்தக நெருக்கடியின் மீது கவனம் செலுத்தினர். அவர்கள் தங்களின் முந்தைய சில மதிப்பீடுகளை திருத்தியமைத்து, “ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாகவே ஒரு புதிய புரட்சி சாத்தியம்” (பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்) என்று கூறினர்.

            உண்மையில் இந்த ஆய்வுகள்தான் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவரின் பிரம்மாண்ட ‘டாஸ் கேபிடல்’ (மூலதனம்) என்ற படைப்பிற்கான களத் தயாரிப்புகளுக்குக் காரணமாயிற்று. அந்த மாபெரும் நூல் அரசியல்

பொருளாதாரம் மற்றும் இயக்கவியல் ஆய்வுமுறை என்ற இரண்டின் மீதான படைப்பு. அது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்ளார்ந்த எதார்த்த செயல்முறையை விளக்கியது. அந்த இரு மேதைகளின் இந்த படைப்பு இல்லாமல் ஒருவரால் எவ்வாறு சமுதாயத்தை மாற்றுவது என்பதைப் புரிந்து கொள்ளவே முடியாது.

சோஷலிசத்திற்கான மாற்றத்தில் 

நாடாளுமன்ற ஜனநாயக வடிவங்கள்

வயது வந்தோர் அனைவருக்கும் வாக்கு உரிமையை ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியான ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SDP) சிறப்பாகப் பயன்படுத்தியது குறித்து ஏங்கல்ஸ் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார்.  அக்குறிப்பு  பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் என்ற மார்க்சின் நூலுக்கு அவர் எழுதிய முகவுரையில் (1895) இடம் பெற்றுள்ளது. பாட்டாளிகளின் போராட்டத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முற்றிலும் புதிய முறை என்று கருதும் ஏங்கல்ஸ், அது மிகவும் ஆற்றல் மிக்கது, அதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து அரசமைப்பது மட்டுமல்ல, அதன் உதவியோடு சோஷலிசத்திற்கான தொடர்சியான மாறுதல்களைச் சமூகத்தில் ஏற்படுத்தவும் முடியும் என்று கூறுகிறார். மேலும் ஏங்கல்ஸ், ஜெர்மன் தொழிலாளர்கள், பிற நாடுகளில் இருக்கும் தங்கள் தோழர்களுக்கு ஒரு புதிய ஆயுதத்தை, மிகக் கூர்மையான ஆயுதத்தை, அனைவருக்கும் வாக்குரிமையை எப்படிப் பயன்படுத்துவது என்பதை எடுத்துக்காட்டி மிகப் பெரிய சேவையை ஆற்றியிருக்கிறார்கள் என்று புகழ்ந்து எழுதியுள்ளார். (அதே நூலில்)

    தேர்தல் நிகழ்முறை, நாடாளுமன்ற அமைப்பு குறித்த மார்க்ஸிய அணுகுமுறையின் அடிப்படை கோட்பாடுகளை  ஃபெடரிக் ஏங்கெல்சின் ஆய்வுகள் நிறுவுகின்றன.

அனைவருக்கும் வாக்குரிமையை அறிவார்ந்த முறையில் ஜெர்மன் தொழிலாளர்கள் பயன்படுத்தியதால், அவர்களுடைய கட்சியிலும் (SDP) பிரமிப்பூட்டும் வளர்ச்சி ஏற்பட்டது என ஏங்கல்ஸ் விமர்சனக் குறிப்பில் குறிப்பிடுகிறார். SDP-ன் மறுக்க முடியாத ஓட்டு எண்ணிக்கை உயர்விலிருந்து இது தெளிவாகிறது: 1871: 1,02,000; 1874: 3,52,000; 1877: 4,93,000.  சோஷலிச எதிர்ப்புச் சட்டம் ஜெர்மனியில் 1878ல் கொண்டு வரப்பட்டது. SDPகட்சி அமைப்புகள், வெகுஜன தொழிலாளர் அமைப்புகள், தொழிலாளர்களின் அச்சகம் தடை செய்யப்பட்டு, சோஷலிசப் பிரசுரங்கள் பறிமுதலுக்கு உள்ளாயின. 1890ல் கடுமையான பெருந்திரள் தொழிலாளர் போராட்ட இயக்கங்கள் தந்த நெருக்கடியால் அந்தத் தடை நீக்கப்பட்டது. 1881ல் தற்காலிக பின்னடைவுக்குப் பிறகு SDP கட்சி, அந்தச் சட்டம் இருந்தபோதும், தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது. 1884ல் 5,50,000 வாக்குகளும் 1887ல் 7,63,000; 1890ல் 14,27,000 வாக்குகளும் பெற்றது. இப்படி அதிகரித்த வாக்குகள் ஏங்கல்ஸ் உயிரோடு இருந்த காலத்தில் (அவர் 1895 ஆக.5ல் மறைந்தார்) 17 லட்சத்து 87ஆயிரம் வரை அல்லது பதிவான மொத்த வாக்குகளில் கால் பங்கு என அதிகரித்தது.

SDP ஜெர்மனியில் பலம் பொருந்திய கட்சிகளில் ஒன்றானது. அது பெற்ற வாக்குகள் சதவீதம் 1898ல் 27.2% (30லட்சம் வாக்குகளுக்கு மேல்) 1912ல் 34.8% (40 லட்சம் வாக்குகளுக்கு மேல்). ஜெர்மன் SDP கட்சி பெருந்திரள் அமைப்பாகவும் நாட்டின் மிகப் பெரிய கட்சியாகவும் ஆனது. 1907ல் அந்தக் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தினசரி நாளிதழ்களை நடத்தியது!

மேற்கண்ட முன்னுரையில், வெற்றிகரமாக வாக்குரிமையைப் பயன்படுத்தியதன் மூலம், முற்றிலும் புதியதான பாட்டாளிகளின் போராட்ட முறை பயன்பாட்டிற்கு வந்து விட்டது என்று கூறினார். இந்த முறை விரைவாக மேலும் வளர்ச்சி அடைந்தது. அரசு அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தொழிலாளி வர்க்கத்திற்குப் புதிய வாய்ப்புகளும் புதிய ஆயுதங்களும் கிடைத்துள்ளன. முதலாளிகள் மற்றும் அரசுகள் தொழிலாளர் கட்சியின் சட்டவிரோத செயல்பாடுகளுக்குப் பதில், தற்போது அதன் சட்டப்படியான போராட்டங்களுக்கு – “தொழிலாளர் கட்சியின் கலகத்தைவிட, தேர்தல் முடிவுகளில் அதுபெறும் வெற்றிகளைக் குறித்து-- அதிகமாக அச்சப்படுகின்றன.

தெருச் சண்டைகள் மற்றும் தடைகளை ஏற்படுத்திப் போராடுவது மற்றும் பொதுவாக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மீதான மாயையை விட்டொழிக்க ஏங்கல்ஸ் அறைகூவல் விடுகிறார்.

மிகுந்த பொருள் பொதிந்த முறையில், ஒரு வகையில் எச்சரிப்பதாகவும் ஏங்கல்ஸ் கூறுவார், நாம் அவ்வளவு முட்டாள்கள் இல்லை எவ்வாறு, எங்கே துப்பாக்கிகள் சுடும், பட்டாக்கத்திகள் வெட்டும்அந்த இடத்திற்கு, எதிரிகள் விரும்புகிற மாதிரி, நாம் சென்று அகப்பட்டுக் கொள்வதற்கு. (ஆளும் வர்க்க எதிரிகள் தொழிலாளி வர்க்கத்தை ஆத்திரமூட்டி, ஆயுதப் புரட்சிக்கு உந்தித் தள்ளும் பிரச்சனையில் தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஏங்கல்ஸ் எச்சரிக்கிறார்.)

ஜெர்மன் SDP கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் உலகத் தொழிலாளர் இயக்கத்தின் அதிர்வு உந்து சக்திஎன ஏங்கல்ஸ் அதன் குணாம்சத்தை விரித்துரைப்பார்: வாக்குப் பெட்டியில் விழுந்த 20 லட்சம் வாக்குகளும், அந்த வாக்காளர்களோடு உடன் நின்ற வாக்குரிமை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுமாகச் சேர்ந்து மிகப் பிரம்மாண்டமான திரளாக, சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் படையினுடைய தீர்மானகரமான நிச்சயிக்கும் ஆற்றல்மிக்க அதிர்வு உந்து சக்தி ஆவர்.

(தேர்தல்களில் தொழிலாளர் இயக்கம் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வந்தது. இந்த வளர்ச்சியை ஏங்கல்ஸ் பின்வருமாறு, இந்த வளர்ச்சி தன்னியல்பாக, நிதானமாக, எதிர்க்க முடியாதபடி மற்றும் அதே நேரத்தில் அமைதியான இயல்பான நிகழ்வாய் முன்னேறி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.)

மேலும் ஏங்கல்ஸ் மிகவும் பொருள் பொதிந்து கூறுவார்: “தடைப்படுத்த முடியாத இந்த (வளர்ச்சி) நிகழ்முறையில் இடையூறு செய்து தடைப்படுத்தக் கூடிய ஒரே வழி என்பது, இராணுவத்தோடு மிகப்பெரிய அளவில், 1871 பாரீசில் இரத்த ஆறு ஓடியதைப் போன்று, மோதலில் ஈடுபடுவது (அதாவது அத்தகைய மோதல் ஒன்றே சமூக ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதில் முடியும். எனவே) சாகசமாக இராணுவத்துடன் மோதிடச் செய்யும் ஆத்திரமூட்டல்களுக்கு இரையாவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு பாட்டாளி வர்க்கத்தை ஏங்கெல்ஸ் எச்சரிக்கிறார்.

வாக்குப் பெட்டியின் மூலம் ஜனநாயக உரிமைகளைச் சாதித்த பிறகு, சோஷலிசப் புரட்சியை அடைவதற்கான சாதனமாக மார்க்சும் ஏங்கல்சும் வாக்குப் பெட்டியைப் பார்த்தனர்.

21ம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை, ஜனநாயகம் மற்றும் சோஷலிசம்

          உலகச் சமுதாயத்தைக் கவ்விப் பிடித்திருக்கும் புதிய மாற்றங்களை ஒன்றிணைத்து 21ம் நூற்றாண்டின் நோக்கு நிலையிலிருந்து நாம் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படிக்க வேண்டும். நமக்கு நாமே மீண்டும் நினைவூட்டிக் கொள்வோம், ஜனநாயக உரிமைகளும் வாய்ப்புகளும் நமக்குச் சும்மா வரவில்லை: நம்முடைய கருத்தியல் மற்றும் கோட்பாட்டின்படி அதற்காக நாம் போராடினோம். எனவே அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் பங்கை நாம் குறைத்து மதிப்பிடலாகாது.

         லத்தீன் அமெரிக்கா நிகழ்வுகளிலிருந்து நீண்ட காலத்திற்கான பாடங்களை நாம் பெற வேண்டிய தேவை உள்ளது. அங்கே பெரும்பான்மையான நாடுகளில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் திரும்பத் திரும்ப ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றன. நாம் ஒன்றைப் பார்க்க வேண்டும், லத்தீன் அமெரிக்கச் சமூகத்தின் ஒருங்கமைவு நகரமயமாதல் நோக்கி தீவிர மாறுதல்களைக் கடந்து வந்துள்ளது: அந்தச் சமூகம் இன்று நகரமயமான ஒரு கண்டம். (நகரமயமாதல் ஆங்கிலத்தில் அர்பனைசேஷன், கிராமப்பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் நகரங்களை நோக்கிச் செல்லும் சமூக நிகழ்வு)

            இதனோடு முன்பு, லத்தீன் அமெரிக்காவில் ஆயுதப்படைகள் ஜனநாயகத் தீர்ப்புகளை ஆதரித்தது இல்லை அல்லது எதிர்த்ததும் இல்லை. இன்று இராணுவப்படைகள் பொதுவாக ஜனநாயக நிகழ்முறையை ஆதரிக்கின்றன, இதனால் சமூக மாற்றத்திற்கான புதிய களங்கள் பரந்து விரிந்துள்ளன.

      (இதனால் இதனைப் புரட்சி என்றிடலாமா எனில்,) புரட்சி குறித்த நம்முடைய தெளிவில்லாத கருத்துகளை லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிகழ்வுகளில் சுமத்தி, அதற்கான முடிவுகளை எதிர்பார்ப்பதுபோல, மனம்போன போக்கில் ‘புரட்சி’ என்ற பதத்தை லத்தீன் அமெரிக்கச் சூழலில் பயன்படுத்த முடியாது.

            இந்நாடுகளில் தனித்தனி அம்சங்கள் உள்ளன, உதாரணத்திற்கு ‘ஹவுஸ் ஒய்ஃப்’ புரட்சி (சிலி), தொழிலாளர் பிரதிநிதிகளின் கூடுலான பெரும் பங்கேற்பு (பிரேசில்), இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெரும்பான்மை (சிலி), பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களின் கூடுதல் பெரும் பங்கு, முதலியனவற்றைக் கூறலாம்.

         செய்து நடத்திக் காட்டுவதே (பர்ஃபார்மன்ஸ்) இன்று வெற்றிக்கான திறவுகோல்.

         ஜனநாயக மாற்றத்தின் நிகழ்முறை மிக நீண்டதொரு மாற்றமடைகின்ற ஒன்றாக இருக்கும் என்பதை லத்தீன் அமெரிக்கா காட்டுகிறது. தற்போதைய நிகழ்வுகள் சமூகத்தை மேலும் ஜனநாயகப்படுத்துவதில் சாதகமான சமநிலை சக்திகளை ஏற்படுத்துகின்றன.

        இதே போன்று முக்கியமான புதிய வளர்ச்சிப் போக்குகள் உலகின் வேறெங்கும்கூட நடந்து கொண்டிருக்கின்றன. அவைகளை நாம் ஆராய வேண்டிய தேவை உள்ளது.

        அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பது இந்தியாவில் ஜனநாயகவாதிகளின்

 முக்கிய கடமையாகி உள்ளது. வகுப்புவாத பாசிச வடிவிலான வலதுசாரி பிற்போக்குச் சக்திகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படியும் அழிப்பது என்று அலைகிறார்கள். உண்மையில் இந்திய அரசியலமைப்பு மக்கள் கையில் உள்ள திறன்வாய்ந்த கருவி என்பதால் அது ‘மக்களின் அரசியலமைப்பு.’

   21ம் நூற்றாண்டில் நிகழும் மின்னணு மற்றும் தகவல் புரட்சி முன்னேறிச் செல்ல நாம் புவி அடுக்கு மாறிச் செல்வது போன்ற ஆகப்பெரும் மாற்றங்களைக் காண்கின்றோம். தகவல் தொழில்நுட்பம், பொதுவாகத் தகவல் என்பது முக்கியமான அம்சம், அதனைக் கையாள்வதில் இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் திறமை பெற வேண்டும். இம்மாற்றங்களுடன், நகரமயமாதலும் வேகம் எடுத்துள்ளது.

        மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சகாப்தத்தில், சோஷலிசம் என்பதற்கான புதிய வரையறைகளை வகுக்கவும், ‘21ம் நூற்றாண்டு சோஷலிச’த்தை வளர்தெடுக்கவும் வேண்டிய தேவை உள்ளது. இந்தியாவுக்கு ‘சமூக நீதி’ உள்ளிட்ட அதற்கே உரிய சொந்த தெளிவான அம்சங்கள் உண்டு.

    இப்பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் புதிய வளர்ச்சிப் போக்குகளையும் 21ம் நூற்றாண்டின் இந்திய குணாம்சத்தையும் ஆய்வுசெய்யவும், கம்யூனிஸ்ட் அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆய்வு மாதிரிமுறைகள் நமது வழிகாட்டி ஆகட்டும்!

            நம் பயணத்தின் வழிகாட்டி மற்றும் வழித் துணையாக மாமேதைகள் உலகிற்கு அளித்த கம்யூனிஸ்ட் அறிக்கையை மீண்டும் பயில்வோம்!

--நன்றி : நியூஏஜ் (ஏப்ரல் 16 –22)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

 

 

           

 

 

Monday 10 April 2023

சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாகப் பிரகடனம் செய்க!

 

                                                

                   
சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாகப் பிரகடனம் செய்க!

--டாக்டர் அருண் மித்ரா

        இராஜஸ்தான் சட்டமன்றம் நிறைவேற்றிய சுகாதார உரிமை மசோதா, நீண்ட காலமாகச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் வற்புறுத்திய கோரிக்கையும் குடிமக்களின் தேவையுமாகும், வெகு தாமதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இராஜஸ்தானில் வசிப்பவர்களுக்கு

இலவச சுகாதாரப் பராமரிப்பு உரிமையை வழங்குகிறது. சுகாதார உரிமை இவ்வாறு நியாயபூர்வமானதாக ஆகி இருப்பதுடன், சட்டத்தின் பார்வையில் அரசைப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் வைத்துள்ளது. ஊட்டச் சத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவுநீர் அகற்றல் வசதிகள் முதலியவற்றின் மூலம் மக்களுக்கான சுகாதாரப் பராமரிப்பை உறுதிப்படுத்தும் கடமைப் பொறுப்பை   இச்சட்டம் பிரதானமாக அரசின் மீது சுமத்தியுள்ளது. நோயாளிகள் பொதுசுகாதாரக் கட்டமைப்புகளில் வெளிப்புற நோயாளியாகவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவராகவோ -- கட்டணம் ஏதுமின்றி—இந்த வசதியைப் பெறுவதற்கு இச்சட்டம் வகை செய்துள்ளது.

      நமது நாட்டில் பெரும் பகுதி முக்கியமான சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் தனியார் துறையில் வளர்ச்சி பெற்றுள்ளதால், இச்சட்டம் தேவையானவர்களுக்கும் மற்றும் ஒரு மனிதன் அவசர நிலையில், கட்டணத்தைக் கட்ட முடியாத நிலையிலும் நிலையிலும்கூட

அவசரகால மருத்துவ வசதியை வழங்குவதில் தனியார் பிரிவையும்கூட ஈடுபடுத்துகிறது. (இதனால்) இராஜஸ்தான் மருத்துவர்கள் இச்சட்டத்திற்கு எதிராகப் போராடி வந்தார்கள். அதைப் பரிசீலித்த மாநில அரசு, மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, 50 படுகை வசதிகளுக்குக் குறைவாக உள்ள தனியார் மருத்துவ மனைகள் மற்றும் அரசிடமிருந்து எந்த மானிய உதவிகளையும் பெறாத மருத்துவமனைகளையும் இச்சட்ட வரம்பிலிருந்து விலக்கி உள்ளது.

      இராஜஸ்தான் வழிகாட்டியுள்ளது; ஒன்றிய அரசின் மட்டத்திலும் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்படுவதும் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாகப் பிரகடனப்படுத்துவதும் தற்போது முக்கியமாகியுள்ளது.

சுகாதார உரிமையின் தேவை

            இது மிக முக்கியமானது, ஏனெனில் நமது நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரப் பராமரிப்புத் தரத்தின் மதிப்பீடு பற்றிய குறியீட்டு எண்கள் படு மோசமாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 36.11 நபர்கள் காச நோயால் மரணம் அடைகின்றனர்; (1) பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள், மூளை அழற்சி, வ்யிற்றுப் போக்கு (டயேரியா), மலேரியா மற்றும் பல பிற தொற்றும் நோய்களுக்குப் பலியாவது ஆழ்ந்த கவலைக்கு உரியது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களை, பீதிகளைச் சொல்லத் தேவை இல்லை –அப்போது நாம் பல்லாயிரக் கணக்கான சாவுகளைத் தடுக்கத் தவறிவிட்டோம், தவறான நிர்வாகக் கையாளல் மற்றும் கோணலான நமது முன்னுரிமைகளே அதற்குக் காரணம். தொற்றிப் பரவாத நோய்களும் கூட அதிகரித்தபடி உள்ளன. 29.8 சதவீத இந்தியர்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தில் மிக விரைவில் இந்தியா நீரழிவு நோயின் தலைநகராகக் கூடும்.

உச்சநீதி மன்றத்தின் பார்வையில்

            ஓர் அவசர சூழ்நிலையில், பணம் இல்லாதது அன்றி, சில தொழில்நுட்ப நடைமுறைகள் காரணமாகவும் ஒருவருக்கு மருத்துவச் சிகிச்சை மறுக்கப்படுவது மிகவும் துரதிருஷ்டமானது. இது ஒப்புக்கொள்ள முடியாததும், மனித அடிப்படை உரிமையான உயிர்வாழும் உரிமையை முற்றாக மீறியதும் ஆகும். வெகுகாலம் முன்பு 1989லேயே நமது உச்சநீதிமன்றம் பரமானந்த கடாரா எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில் (வழக்கு எண் AIR 1989 SC 2039) பின்வரும் கருத்தைக் கூறியது: ‘விபத்துகள் 

நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கக் கூடிய மருத்துவ மனை அல்லது மருத்துவத் தொழில் செய்பவரிடம் எடுத்துச் செல்கையில், மிகச் சரியாகக் கூறுவதெனில், அந்த விபத்து  ஒரு மருத்துவ –சட்ட சம்பந்தமுடைய வழக்கு என்று காரணம் கூறி, தேவையான அவசர மருத்துவச் சிகிச்சை அளிக்க மறுத்துக் காயமடைந்தவர்களை அரசு மருத்துவ மனைக்குச் செல்லுமாறு சொல்லப்படுகிறார்கள்.’ மருத்துவ மனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் அவசர மருத்துவப் பராமரிப்பை வழங்குவதைக் கட்டாயம் ஆக்க வேண்டிய தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. சிகிச்சை மறுக்கப்பட்டதற்கு இது மட்டுமே காரணம் அல்ல என்ற உச்சநீதிமன்றம் மேலும் கூறியது, ‘சில நேரங்களில் அவசரச் சிகிச்சைக்காக அப்படி வருபவர்கள் உடனடியாகப் பணத்தைக் கட்டமுடியாத நிலையில் இருப்பார்கள் அல்லது, அவர்களிடம் மருத்துவக் காப்பீடு இராது அல்லது, மருத்துவச் செலவைத் திரும்ப அவர்களுக்கு வழங்கும் எந்தத் திட்டத்தின் கீழும் அவர்கள் உறுப்பினராக இல்லாது இருப்பார்கள்.’ (2)

சுகாதாரக் கமிட்டி மற்றும் WHO பிரகடனம்

       மேலே சொல்லப்பட்ட தகவல்களைச் சுகாதார விஷயங்களுக்குப் பொறுப்பானவர்கள் நன்கு அறிந்திருந்தும், அனைத்துக் குடிமக்களுக்கும் சுகாதார வசதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதில் நாம் தோல்வி அடைந்து

உள்ளோம். (இந்தியாவின் சுகாதார நிலையை ஆராய பிரிட்டிஷ் இந்திய அரசு 1943ல் வளர்ச்சிக் குழுவின் சார்பில் சர்வே நடத்த அமைத்த) ஜோஸப் வில்லியம் போர் கமிட்டியின் அறிக்கை வெகுகாலம் முன்பு 1946லேயே ஒரு நபரின் கட்டணம் செலுத்தும் தகுதியைப் பாராமல் அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான மருத்துவ வசதியை உறுதிப்படுத்துவது தேவை என்று சிபார்சு செய்துள்ளது.

  மேலும் உலகளாவிய 1978 அல்மா ஆட்டா பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அதன் மூலம் நமது இந்திய நாடு 2000 ஆண்டிற்குள் அனைவருக்கும் சுகாதாரத்தை  உறுதிப்படுத்த  உறுதி  மொழிந்த  கடப்பாடு  உள்ளது.   ஆனால்  அதில்  நாம் தோல்வி அடைந்துள்ளோம்.

(அல்மா ஆட்டா பிரகடனம் என்பது 1978ஆம் ஆண்டில் கசகஸ்தானில் அல்மா ஆட்டா எனும் இடத்தில் நடந்த மாநாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனமாகும். இது, ஆரம்ப சுகாதார கவனிப்பு அல்லது முதல்நிலை சுகாதார கவனிப்பை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனைத்துலகப் பிரகடனம் ஆகும்.)

கழுத்தை நெரிக்கும் மருத்துவச் செலவு

        தற்போது 75 சதவீத சுகாதாரப் பராமரிப்புச் செலவீனங்களை வீடுகளில் இருப்போர் தங்கள் சொந்த சேமிப்பிலிருந்தே செய்கிறார்கள். (சுகாதார வசதிகளைப் பெறுகின்ற தருணத்தில் மக்கள் நேரடியாகப் பணம் செலத்த வேண்டிய கட்டாய நிலையில் அவர்கள் செய்யும் செலவை ‘அவுட்–ஆப்—பாக்கெட் எக்ஸ்பென்டிசர்’ என்பர்.) இதனால் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடியே 30 லட்சம் இந்திய மக்கள் ஏழ்மையில் தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மையை ஹெல்த் பாலிசி 2017 ஒப்புக் கொண்டுள்ளது. அழிவேற்படுத்தும் இம்மருத்துவச் செலவு ஏழ்மைக்கு முக்கியமான காரணம் என்பது மட்டுமல்ல, அது மேலும் உடல்நலக் குறைவுடையவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுகிறது. பொது சுகாதாரத்திற்காக நமது அரசு செலவிடுவது உலகிலேயே மிகக் குறைவானது. உலகச் சுகாதார அமைப்பு (WHO) அரசுகள் சுகாதாரத்திற்காகக் குறைந்தபட்சம் 5 சதவீதம் செலவிட பரிந்துரை செய்துள்ள நிலையில், நமது நாடோ ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் வெறும் 1.1 சதவீதமே செலவிடுகிறது.

தவறான தீர்வு

            நம்முடைய தேவையும் எதிர்பார்ப்பும் இவ்வாறு இருப்பதற்கு மாறாக, சுகாதார வசதிகள் விஷயமாக நமது அரசின் அணுகுமுறையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசியச் சுகாதாரக் கொள்கை 2017 நாட்டின் சுகாதார நிலைமை குறித்துக் கவலை தெரிவித்தாலும், அதற்கு அவர்கள் தரும் தீர்வு  இன்ஷூரன்ஸ் அடிப்படையிலான மருத்துவப் பராமரிப்பு என்பதே. (அதாவது, அரசே சுகாதாரத்தைக் கவனித்துக் கொள்வது அல்ல.) தற்போதைய காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் மருத்துவமனை உள்சிகிச்சைகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஆனால் 67 சதவீதமான மருத்துவச் செலவுகள் ஓபிடி கவனிப்பு என்னும் வெளிப்புற சிகிச்சை செலவுகளால் நேரிடுகிறது. மருத்துவப் பராபரிப்பு சிஸ்டத்தில் கார்ப்பரேட் பிரிவு நுழைவால், மருத்துவப் பராமரிப்பு ஒரு சமூகப் பொறுப்பு என்பதற்கு மாறாக, ஒரு வணிகமாகிவிட்டது. மேலும் அரசின் எந்தக் காப்பீடு திட்டங்களின் கீழும் வராதவர்கள், பெருந்தொகையைக் காப்பீட்டிற்காக ஒதுக்க வேண்டிய நிர்பந்தம். இதில் மூத்த குடிமக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அரசின் தேசியச் சுகாதாரக் கொள்கையின் தீர்வான காப்பீடு அடிப்படையிலான திட்டம் உண்மையில் பொதுப் பணத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதாக மாறியுள்ளது.

சுகாதார உரிமையும் நமது அரசியலமைப்புச் சட்டமும்

    சுகாதாரம், 1966லேயே மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது. முன்பிருந்த சோவியத் யூனியன் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத்தை உரிமையாகவும், அரசின் பொறுப்பாகவும் 1936ல் பிரகடனப்படுத்தியது. பிரிட்டிஷ் அரசு அதே போன்ற நடவடிக்கை எடுத்து 1948ல் ‘தேசியச் சுகாதாரச் சேவை’ (நேஷனல் ஹெல்த் சர்வீஸ்) என்ற அமைப்பை நிறுவியது. ஆனால் முரண்பாடாக (பல உரிமைகளை வழங்கிய) இந்திய அரசியலமைப்புச் சட்டம், அடிப்படை சுகாதார உரிமைக்கான உத்தரவாதத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும்,

மக்களின் ஆரோக்கிய நலனுக்கான அரசின் பொறுப்பைச் சுட்டிக் காட்டும் பல குறிப்புகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம் 4ல் வழிகாட்டு நெறி கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நிச்சயம் சுகாதார உரிமைக்கான அடிப்படையை வழங்குகின்றன. சட்ட ஷரத்து 42, நியாயமான மற்றும் மனித நேயப் பணியிடச் சூழலை ஏற்படுத்த அரசைப் பணிக்கிறது; சட்ட ஷரத்து 47 மக்களின் ஊட்டச் சத்து மற்றும் வாழ்வியல் தரத்தின் மட்டங்களை உயர்த்தி பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் கடமையை அரசின் மீது சுமத்துகிறது; சட்ட ஷரத்து 21 உயிர் வாழும் உரிமைக்கு உத்தரவாதமளிக்கிறது.

அடிப்படை உரிமையாக்க வற்புறுத்துவோம்

       ஆரோக்கிய, சுகாதாரப் பராமரிப்பு போன்ற ஒரு விஷயத்தைச் சந்தை சக்திகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது. அது, தரமான சுகாதார வசதிகளைப் பெறுவதிலிருந்து குறைந்த வருமானம் உள்ள பிரிவினர்களை மேலும் விலக்கிவிடும். ‘சமாதானம் மற்றும் வளர்ச்சிக்கான இந்திய மருத்துவர்கள்’ (IDPD) மற்றும் ‘நெறிசார்ந்த சுகாதாரப் பராமரிப்புக்கான மருத்துவர்களின் கூட்டணி’ (ADEH) போன்ற அமைப்புகள் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாகப் பிரகடப்படுத்தும் அத்தகைய ஒரு சட்டத்தை நீண்ட காலமாக ஒன்றிய அரசிடமிருந்து கோரிவருகிறார்கள். சுகாதாரத்தின் பாதுகாவலர்கள் என்ற முறையில் அனைத்து மருத்துவர்களும் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்கக் கோருவது பிரதானமான கடமையாகும். இது இன்னொரு வகையில் மருத்துவர்களுக்கும் மருத்துவச் சிகிச்சை பெறுபவர்களுக்கும் இடையே உள்ள நம்பிகை பற்றாக்குறையைக் குறைக்க  உதவிடும்.

      இராஜஸ்தான் மருத்துவ உரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததுடன், அதையே ஒன்றிய அரசும் பின்பற்றுவதற்கு இதுவே தருணம்.

--நன்றி : நியூஏஜ் (ஏப்.9 –15)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்