Thursday 23 September 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 50 பாபா சோகன் சிங் பாக்னா

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 50

 


பாபா சோகன் சிங் பாக்னா :

கதார் கட்சி நிறுவனர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் செப்.19– 25

            பாபா சோகன் சிங் பாக்னா வரலாற்றுப் புகழ் வாய்ந்த கதார் கட்சியின் (அல்லது கதார் இயக்கம்) நிறுவனரும் பஞ்சாப் மற்றும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் தலைவருமாவார். 1870 ஜனவரி தொடக்கத்தில் (ஜனவரி 22 என்பது இணையப் பதிவு) பஞ்சாப், அமிர்தசரஸின் குத்ரே என்ற கிராமத்தில் பிறந்தார். அது அவரது தாயார் ராம் கவுர் அவர்களின் மூதாதையர் வீடு. அமிர்தசரஸில் இருந்து 16கிமீ தொலைவில் உள்ள பாக்னா கிராமத்தைச் சேர்ந்தவர் அவருடைய தந்தை பாய் கரம் சிங். 65 ஏக்கர் நிலங்களைச் சொந்தமாக உடைய பணக்கார விவசாயி அவர். சோகன் சிங் இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்தார். பாக்னாவில் வசித்த சோகன் அங்கிருந்த குருத்வாரா ஒன்றிற்குக் கல்வி கற்க அனுப்பப்பட்டார். அவருடைய ‘கிராந்தி’க்கு (சீக்கியப் புனித நூல்களை வாசிப்பவர்) முறையாக எழுதக்கூடத் தெரியாது; எனவே சோகன் சிங் ஒருபோதும் பஞ்சாபி மொழியை எழுதத் தெரியாதவராக இருந்தார். பின்னர் அவர் ஆரிய சமாஜ் பள்ளிக்கும் பிறகு ஓர் உருதுப் பள்ளிக்கும் சென்றார். 1896ல் தனது 16 வயதில் அவர் பள்ளிக் கல்வியை முடித்தார்.

            அவருக்குப் பத்து வயதாகும்போது பிஷன் கவுர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

      இளம் வயதில் குடித்துச் சீரழிந்து கெட்ட சகவாசத்தினருடன் சுற்றியதால் 32 ஏக்கர் நிலங்களையும் இழந்தார், இளமை வாழ்வின் 25 ஆண்டுகளையும் தொலைத்தார்! ஏழை பராரி ஆனார்.

வாழ்க்கை திசைவழிப் போக்கில் மாற்றம்

            ஒரு நாள் மாலை சோகன் சிங் ஒரு குருத்வாரா வழியே சென்றபோது பாபா ஃபரீத்தின் சுலோகங்களைப் பாபா கேசர் சிங் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டார். கேசர் சிங் ஒரு நாமதாரி (பகவானின் நாமங்களையே பாடிக் கொண்டிருக்கும் ஒரு சீக்கிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்), நல்ல செயல்களைச் செய்து கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று கொண்டிருப்பவர். அவருக்கு (அந்தப் பிரிவினருக்கு) எல்லா சமூகப் பிரிவினரும் சமம். அவரால் ஈர்க்கப்பட்டு அவருடைய செல்வாக்கிற்கு ஆட்பட்ட சோகன் சிங் அடிக்கடி அவரைச் சந்திக்கலானார். தனது குடிப் பழக்கத்தையும் கெட்ட சகவாசத்தையும் கைவிட்டார். பாபா நேர்மையான உழைப்பை நோக்கி அவரை இழுக்க, சோகன் சிங்கும் விவசாய நிலங்களில் உழைக்கத் தொடங்கினார்.

            பஞ்சாபில் அந்நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் அதிகரித்தன. 1905–06 குக்கா இயக்கம் (நாமதாரி இயக்கத்தின் மற்றொரு பெயர் Kuka movement) நடைபெற்றது. பாபாவே ஒரு குக்காதான் (கட்டுப்பாடான, சிக்கன வாழ்க்கை நடத்துபவர்கள்) சோகன் சிங்கும் அவர்பால் ஈர்க்கப்பட்டார்.

            இதன் மத்தியில் அமெரிக்காவிலிருந்து அவருடை நண்பர் ஒருவர் அமெரிக்கா செல்ல அவருக்கு உதவிட முன்வந்தார். சோகன் சிங்கும் முறையான வருமானத்திற்கான ஒருவழியைத் தேடிக் கொண்டிருந்தார்.

அமெரிக்கா பயணம்

            1909 பிப்ரவரி 3ல் இந்தியாவைவிட்டுப் புறப்பட்ட சோகன் சிங் ஏப்ரல் 4ல் சீயெட்டல் (Seattle) அடைந்தார். விரைவில் அங்கே நகருக்கு அருகே ‘மொனார்க்’ (பேரரசர்) என்ற மரம் அறுக்கும் ஆலையில் வேலை கிடைத்தது. அந்த நாட்களில் ஓரிகான் மற்றும் பிற (அமெரிக்க) மாநிலங்களில் புதிய சாலைகள், இரயில் பாதைகள் மற்றும் ஆலைகள் நிறுவப்பட்டு வேகமாக வளர்ச்சிப் பணிகள் நடந்து வந்தன. மரப்பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலைகள் வந்தன. அவரது தினசரி வேலை மிகக் கடினமானது, மரப்பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒற்றை சக்கர வண்டியைக் கட்டட உச்சிக்குத் தள்ளிச் செல்ல வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 12 மணி நேரம்கூட வேலை செய்ய வேண்டியிருக்கும்.

            (அமெரிக்காவிலிருந்து) கனடா நாட்டிற்குள் செல்ல இந்தியர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தன. இந்தியாவில் இருந்து நேரடியாகக் கனடா செல்லும் கப்பலில் மட்டுமே அவர்கள் செல்ல முடியும். இது தவிர அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் இந்திய மக்களின் வருத்தத்திற்கும் கோபத்திற்கும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. மேலும் அங்கே மிக மோசமான இனப்பாகுபாடும் இழிவு படுத்தல்களும் இருந்தன. இந்தியர்கள் அடிக்கடி பிரிட்டீஷ் ஹோண்டுராஸ் பகுதிக்குத் துரத்தப் பட்டனர், அங்கே கொடுமையாக மனிதத்தன்மையற்று வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.

            இந்த நிலைமைகளைக் கண்டித்து இந்தியக் குடியேற்றவாசிகள் அணிதிரண்டனர். 1912ன் தொடக்கத்தில் இந்தியர்களின் ஓர் அமைப்பை ஏற்படுத்த அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. பாபா ஹர்னாம் சிங் மற்றும் சோகன் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.

            சோகன் சிங் தலைவராகவும், ஜிடி குமார் முதன்மைச் செயலாளராகவும் பண்டிட் கன்ஷி ராம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘பசிஃபிக் கடற்கரை இந்திய அசோஸியேஷன்’ அமைக்கப்பட்டது. போர்ட்லேண்டில் அலுவலகம் திறக்கப்பட்டு ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயரில் செய்திப் பத்திரிக்கையும் வெளியிடத் தொடங்கினர். இதன் மத்தியில் சோகன் சிங்கும் மற்றவர்களும் அஸ்டோரியாவுக்கு இடம் மாறி அங்கே அசோஸியேஷனின் கிளைகளைத் தொடங்கினர். கர்த்தார் சிங் சரபாவும் அங்கே வந்து சேர்ந்தார். 1913 மார்ச்சில் அங்கே வந்த லாலா ஹர்தயாள் மற்றும் பாய் பரமானந்த்  பிரதானமான முக்கிய பங்கு வகித்தனர். அமைப்பின் பெயர் ‘பசிஃபிக் கடற்கரை இந்தி அசோஸியேஷன்’ என மாற்றப்பட்டது. அவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடுவது என முடிவெடுத்து ‘கதார்’ என்ற பெயரில் வாராந்திர இதழைத் தொடங்கினர். (கதார் என்ற பஞ்சாபி மற்றும் உருது வார்த்தை அரபியிலிருந்து வந்தது; அதன் பொருள் “கிளர்ச்சி) சான் ஃபிரான்சிஸ்கோவில் கட்சி அலுவலகம் நிறுவப்பட்டது. பின்னர் அந்த இதழின் பெயரே கட்சியின் பெயராக ‘கதார் பார்ட்டி’ (கதார் கட்சி) என்றாகியது. (அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த இந்தியக் குடியேற்றவாசிகளால், இந்திய விடுதலைக்கு உதவிட, துவக்கப்பட்ட கதார் கட்சி பின்னர் பல நாடுகளில் பரவியது. சோகன் சிங் பாக்னா, லாலா ஹர்தயாள், ராஷ் பிகாரி போஸ் (இந்தியத் தேசப் படையை நிறுவியவர்), சசீந்திர சன்யால், கணேஷ் பிங்காலே, பாபா கர்த்தார் சிங் போன்ற பலர் அமைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.)

           

சோகன் சிங் பாக்னா கதார் கட்சித் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர் ‘இரகசியக் குழு’ உறுப்பினராகவும், லாலா ஹர்தயாள் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

            இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க ஒரு பெரும் பிரதிநிதிகள் மாநாடு 1913 பிப்ரவரியில் வான்கூவர் நகரில் நடத்தப்பட்டது.

            யுகாந்தர் ஆஸ்ரம் சான்ஃபிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது. (யுகாந்தர் ஆசிரமம் என்பது கலிபோர்னியாவின் சான்பிரான் சிஸ்கோவில் உள்ள கட்டடம், கதார் கட்சித் தலைமையகம்.) 1913 நவம்பர் 1ல் ‘கதார்’ வார பத்திரிக்கையின் முதல் இதழ் வெளியானது. அதன் அச்சகப் பணிகள் கர்த்தார் சிங் சரபா மற்றும் ரக்பீர் தயாளிடம் ஒப்படைக்கப்பட்டது. உருது, இந்தி, பஞ்சாபி, குஜராத்தி முதலான பல மொழிகளில் கதார் இதழ் கொண்டுவரப்பட்டது. சோகன் சிங்கும் சரபாவும் மிக நெருக்கமாகப் பணியாற்றினார்கள்.

            அசோஸியேஷன் மற்றும் கட்சிப் பணிகளுக்காக அவர்கள் ஏராளமான நேரத்தைச் செலவிட வேண்டியிருந்ததால் சோகன் சிங் தனது ஆலை வேலையைக் கைவிட்டு அமைப்புப் பணியில் முழுநேரம் ஈடுபட்டார்.

‘கோமகட்டா மாரு’ கிளர்ச்சி மற்றும் இந்தியா திரும்பல்

          ‘கோமகட்டா மாரு’ (காமகட்டா மாரு எனவும் அழைக்கப்படும்) தொடர்பாக இந்தியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்காக நடைபெற்ற பல கூட்டங்களில் சோகன் சிங் தீவிரமாகப் பங்கேற்றார். 1914 ஏப்ரல் பாதியில் அவர்கள் புறப்பட்டனர். கப்பலைத் (துறைமுகக்) கரையில் நிறுத்துவதைத் தடுத்த அதிகாரிகளின் செயலைப் பரிசீலிக்கப் போர்ட்லேண்டில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  இதுபோன்ற கூட்டங்கள் வாஷிங்டன், வைன், அம்பர் டின், சியெட்டல் முதலான பல இடங்களில் நடைபெற்றன.

           (‘கோமகட்டா மாரு’ என்பது சிறிய ஜப்பானிய நீராவிக் கப்பல்). அக்கப்பலைக் கரைக்கு வரவிடாமல் தடுத்ததால் அதன் பயணிகள் நடு கடலிலேயே தவிக்கவிடப்பட்டனர். நேரடியாக மட்டும் வரலாம் என்ற கனடா அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டி பாபா குர்தீத் சிங் பெரும் பொருள் செலவு செய்து அந்தக் கப்பலை வாடகைக்கு அமர்த்தியிருந்தார். 1914 ஏப்ரல் 4ல் அந்தக் கப்பல் ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு மே 22ல் வான்கூவர் அடைந்தது; ஆனால் கப்பலைக் கரையைத் தொட அனுமதிக்காதது மட்டுமின்றி பிரேசிலுக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை. 1917 ஜூலை 23ல் அக்கப்பல் வலுக்கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. பணஉதவி உட்பட ஒவ்வொரு வகைகளிலும் கதார் கட்சி பயணிகளுக்கு உதவினர்.

           முன்னதாகவே ஜப்பான் யோகோஹமாவுக்குச் சென்று கோமகட்டா மாரு கப்பலுக்காகக் காத்திருக்கும்படி சோகன் சிங்கிடம் கதார் கட்சி கூறியது. கட்சி மற்றும் புரட்சியின் நோக்கத்தை விளக்கிப் பிரச்சாரம் செய்வது அவருக்கான பணியாகும். கர்த்தார் சிங் சரபா மற்றும் பகவான் சிங் பயணிகளிடம் ரிவால்வர்களையும் வெடிமருந்துகளையும் வினியோகித்தனர். கோமகட்டா மாருவை நீர்மூழ்கி வெடிகுண்டுகளால் தாக்காது இருக்க சோகன் சிங் ஜெர்மானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு அவர் ஷாங்காய், ஹாங்காங் முதலான நகர்களுக்குச் சென்று கதார் உறுப்பினர்களைச் சந்தித்தார், அவர்களில் பெரும்பாலானோர் பின்னர் இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தவர்களாவர்.

     நூற்றுக் கணக்கான பிற புரட்சியாளர்களுடன் சோகன் சிங் ‘நாம்சேங்’ கப்பலில் புறப்பட்டார். பினாங்கை அடைந்த உடன், ‘கல்கத்தா அருகே பட்ஜ் பட்ஜ் என்ற இடத்தில் கோமகட்டா மாரு சுடப்பட்டது என்றும் அத்தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தார்கள்’ என்ற தகவல் அவர்களுக்குக்கிடைத்தது. மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். ‘நாம்சேங்’ கப்பல் ஒரு வாரத்திற்குப் பிறகு கல்கத்தாவை அடைந்தது; சோகன் சிங் அந்தக் கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவர் எனக் கைது செய்யப்பட்டு மூல்தான் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். செல்லும் வழியில் கர்த்தார் சிங் சரபா ஒரு சைக்கிளில் அவரோடு சேர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது!

            சோகன் சிங் தூக்கிலிடப்படுவார் என அவர்கள் சொல்லியதால் அவருடைய தாய் சோகன் சிங்கைப் பார்ப்பதற்குச் சிறைக்கு வந்தார். தாயிடம் சோகன் சிங் கூறினார்: “நான், ஒரு தாயின் மகன், உங்கள் மகன், ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்வதன் மூலம் என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் என்னுடைய அறிக்கையின் விளைவால் பல மகன்கள் தூக்கிலிடப் படுவார்கள்… உங்களின் தாய் அன்பு அது நியாயம் எனக் கருதுமா?”. அதைக் கேட்ட அவருடைய தாய் பதில் கூறினார்: “நீ காப்பாற்றப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை, மேலும் வேறு தாய்களின் பல மகன்கள் தூக்கிலிடப்படவும் நான் விரும்பவில்லை.” சோகன் சிங் லாகூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

            சோகன் சிங் உட்பட 24 கதாரியர்கள் தூக்கிலிடப்பட உத்தரவிடப்பட்டது. முகாமின் 24 சிறு சிறை அறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டனர். வழக்கு தொடர்ந்து நடந்தபோது அது உலகில் புயலைக் கிளப்பியது. அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள், தூக்கிலிடுவதற்கான சகல தயாரிப்பு வேலைகளும் நடந்தன, ஆனால் கடைசி தருணத்தில் தூக்கிலிடுவது ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. லாலா ரகுநாத் சகாய் மற்றும் பிற தேசபக்த வழக்கறிஞர்கள்  ஒரு சட்ட உதவிக்குழுவை அமைத்தனர். பண்டித மோதிலால் நேருவும் பிறரும் தண்டனை விதிக்கப்பட்ட 24 பேரில் 17 பேர்கள் இந்திய மண்ணை மிதிக்கவே இல்லை; எனவே தூக்கிலிடப்படக் கூடாதென வாதாடினர். பிரிட்டீஷ் அதிகாரிகளை வழக்கறிஞர்கள்  சந்தித்தனர். இறுதியாக அரசு சமாதனமாயிற்று. அந்த 17பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது; ஏனையவர்களுக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. கத்தார் சிங் சரபா மற்றும் விஷ்ணு ஜி பிங்கிள் உள்பட ஏழு பேரும் 1915 நவம்பர் 16ல் தூக்கிலிடப்பட்டனர்.

           


சோகன் சிங்கும் மற்றவர்களும் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டு மிக மோசமான நிலைகளைச் சந்தித்ததுடன் சித்திரவதைகளுக்கும் ஆட்பட்டனர். அந்தச் சித்தரவதைகளில் சிலர் மாண்டே போயினர். 1921ல் அவர்கள் கோயம்புத்தூருக்கும் மெட்ராஸ் மாகாணத்தின் பிற சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர். அங்கே அவர்கள் மாப்ளா கிளர்ச்சியாளர்களைச் சந்தித்தனர். அந்தக் கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில்தான் (கேரளாவின்) மாப்பிள்ளைமார் கிளர்ச்சியின் புரட்சியாளர்கள் 105பேர் இரயில் சரக்கு வண்டிப் பெட்டியில் அடைக்கப்பட்டு மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்த கொடுமை (வேகன் துயர சம்பவம்) நிகழ்ந்தது. அதில் உயிர் பிழைத்த சில கைதிகள் சோகன் சிங்கும் மற்றவர்களும் அடைக்கப்பட்ட அந்தச் சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். 

            சோகன் சிங்கும் தோழர்களும் எப்போதும் சிறைகளை மாற்றி அலைகழிக்கப்பட்டார்கள். சிலகாலம் எரவாடா சிறையில், பின்னர் மற்றவர்களோடு லாகூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும் அவரை விடுதலை செய்ய அரசு மறுத்த காரணத்தால் லாகூரில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உயர் சாதி சீக்கியர்களிடமிருந்து மழபி பிரிவு சீக்கியர்களைப் பிரித்து தனியே வைத்ததைக் கண்டித்தும் அந்த உண்ணா நோன்பை மேற்கொண்டார்.

1929ல் பகத் சிங்கும் தோழர்களும் பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டபோதும் சோகன் சிங்கும் உணவைக் கைவிட்டார். ஆனால் அது தேவையில்லை என பகத்சிங்கும் தோழர்களும் இயன்ற அளவு முயன்றும் அவரது உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய முடியவில்லை.

     16 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு 1930 ஜூலையில் அவர் விடுதலையானார். அவருக்கு ஒரு வீரக் கதாநாயகனின் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    

லாலா ஹர்தயாள், பாய் பரமானந்த் (படம்) போன்ற புகழார்ந்த செயல் மறவர்கள் தேச விடுதலைக்கான பணியைக் கைவிட்டுப் பாதை மாறிச் சென்றாலும் சோகன் சிங் தொடர்ந்து கதார் கட்சிக்காகப் பணியாற்றினார்.

கிசான் சபாவில் இணைதல்

            விடுதலையானதும் அவர் தனது தோழர்களின் விடுதலைக்காகப் பணியாற்றினார். விவசாயிகளுடன் பழகி அவர்கள் மத்தியில் பணியாற்றி கிசான் சபாவில் இணைந்தார். 1942ல் அகில இந்திய கிசான் சபா (AIKS)வின் தலைவராக உயர்ந்தார். ஆந்திரா மாநில பால்சாவில் நடைபெற்ற கிசான் அனைத்திந்திய மாநாட்டில் இராகுல் சாங்கிருத்தியாயனா வர இயலாத நிலையில் சோகன் சிங் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். அவர் சிறையில் இருந்தபோது கிசான் சபா சோகன் சிங்கிற்கு மரியாதை செய்ய பாக்னா கலன்-இல் தனது மாநாட்டினை நடத்திட முடிவு செய்தது. சரியாக மாநாடு நடந்தபோது அவர் விடுதலையாகி மாநாட்டு வளாகத்திற்கு வந்தபோது அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தியோலி முகாமில்

            இரண்டாவது உலக யுத்தம் மூண்ட பிறகு 1939ல் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். வாரணாசி எனப்படும் காசியில் (பெனாரஸ்) அவர் கைதாகி தியோலி முகாமிற்கு அனுப்பப்பட்டார்.

            தியோலி முகாமில் ஏராளமான கம்யூனிஸ்ட்களும் பிறரும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் எஸ்ஏ டாங்கே, இசட் ஏ அகமது, இராகுல், பிடிஆர், எஸ்வி காட்டே மற்றும் சிலர் அடங்குவர். சோகன் சிங் பாக்னாவும் அவர்களில் ஒருவர். பஞ்சாப் கம்யூனிஸ்ட்கள் மோசமாகப் பிளவுபட்டிருந்தனர். அவர்களை ஒன்றுபடுத்துவதில் எஸ்வி காட்டே முக்கிய பங்காற்றினார். பாபா சோகன் சிங் பாக்னா, வாசகா சிங், பாக் சிங் கனடியான் மற்றும் சிலர் ஒற்றுமை முயற்சிகளை வரவேற்று கட்சியின் ஒற்றுமைக்கு உதவினர்.

யோளி சிறையில்

            1948ல் மீண்டும் கைது செய்யப்பட்ட சோகன் சிங் பாக்னா மற்றவர்களோடு ஹிமாச்சல் பிரதேச காங்கிரா மாவட்ட யோளி சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் மற்றவர்களுடன் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவு அவருடைய முதுகு வில் போல் வளைந்து கூனானது (Kyphosis என்ற அசாதாரணமான கூன் முதுகு). சிறையின் நிலைமையும் படு மோசமாக இருந்தது. அப்போதே அவருக்கு 78 வயதாகி இருந்தது. சட்ட விரோதமான சிறையில் அடைப்பு மற்றும் உண்ணாவிரதங்கள் அவரது முதுகெலும்பு அமைப்புச் சிதைவுக்குக் காரணமானது.

            விடுதலையான பிறகு 17 ஏக்கர் நிலங்களை நன்கொடையாக வழங்கி பாபா ஜ்வாலா சிங்குடன் சேர்ந்து ‘கீர்த்தி கிசான் ஆஸ்சிரமம்’ (பாட்டாளி விவசாயி ஆசிரமம்) அமைத்தார். இது மறைந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் அனாதையாக விடப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு இல்லமாக விளங்கியது. தன்னுடைய கிராமத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கவும் அவர் உதவினார்.

இறுதி மரண சாசனம்

          1968 நவம்பர் 16ல் கர்த்தார் சிங் சரபாவின் தியாகத்தை அனுசரிக்க அழைப்பு கிடைத்ததும் பாபா சோகன் சிங் தனது மரியாதையைச் செலுத்த லூதியானா மாவட்டச் சரபா கிராமத்திற்குச் சென்றார். அவர் நல்ல உடல்நிலையில் இல்லை. திரும்பியதும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு அமிர்தசரஸ் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (கம்யூனிஸ்ட் தலைவர்) சத்யபால் டாங் கவர்னரைச் சந்தித்து அவரிடம் பாபாஜியின் நிலைமை குறித்த்து தெரிவித்தார். கவர்னரும்

அரசு செலவில் சிறப்பு வார்டுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சிறப்பு மருத்துவச் சிகிச்சையைப் பாபாஜி மறுத்து விட்டு “தனது மக்களோடு” அதே வார்டில் இருப்பதையே தேர்வு செய்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்தது; ஆனால், “எனக்குத் தேவை எதுவுமில்லை” என்று மறுமொழி கூறினார். அவர் தனது “இறுதி மரண சாசனத்தை” எழுதி முடித்து விட்டார்.

            பாபா சோகன் சிங் பாக்னா 1968 டிசம்பர் 20நாள் இம்மண்ணுலக வாழ்வை நீத்து இயற்கை எய்தினார்.

            என்ன ஓர் உறுதி!

பாபா சோகன் சிங் பாக்னாவுக்குச் செவ்வணக்கம்!

இன்குலாப் ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment