Friday 27 August 2021

அனில் ரஜீம்வாலே எழுதிய பொருளாதாரக் கட்டுரை -- தமிழாக்கம்

 


தங்கு தடையற்ற நிதிமயமாக்கல் பொருளாதாரத் தேசியத்தின் மீது மதவாத பாசிசம் நடத்தும் தாக்குதல்

--அனில் ரஜீம்வாலே

          விடுதலை பெற்ற இந்திய மாளிகை பொருளாதாரத்தின் அழகிய முகப்பான பொதுத்துறை நிறுவனங்களைப் பிய்த்தெறிவதில் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது; அந்த இடத்தில் கார்ப்பரேட் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தை வைக்க நினைக்கிறது. இதற்கு, 1991ம் ஆண்டின் விவாதத்திற்குரிய தாராளமயக் கொள்கை அமலான ‘30 வது ஆண்டு’ தினத்தைப் பயன்படுத்தி ‘நேருவினது பொருளாதாரத் திட்ட வழிமுறை’யைத் தாக்கவும், தங்களது சொந்த ‘புதிய’ பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தவும் பாஜக முயல்கிறது. பாஜகவின் வலதுசாரி பிற்போக்கு பொருளாதாரக் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு முழுமையான ஆபத்தாக வந்து நிற்கிறது.

            நெருக்கடி மிகுந்த பொருளாதாரத்தைத் ‘தாராளமயப்படுத்தும்’ சகாப்தத்தைத் தொடங்கி வைத்த 1991-சீர்திருத்தங்கள், தனியார்மயத்திற்கும் உலகமயத்திற்கும் வழிகோலியது. அந்த நெருக்கடியிலிருந்து வெளிவர இரண்டு வழிமுறைகள் இருந்தன: ஒன்று, தேவையான மாற்றங்களை அதற்குள்ளேயே செய்து, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ‘நேருவினது பொருளாதார வழிமுறை’யைச் செழுமைப்படுத்திப் பொதுத்துறையை வலிமைபெறச் செய்வது. மற்றொரு வழி, பெரும் தேசிய மற்றும் பன்னாட்டு வணிகக் குழுமங்களுக்கு உதவும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டு அன்னிய நேரடி மூலதனத்தை ஆதரிப்பது. துரதிருஷ்டவசமாக, இரண்டாவது பாதையே தேர்ந்தெடுக்கப்பட்டது.

            பொருளாதாரத்தைத் தாராளமயப்படுத்துவது எப்போதுமே எதிர்மறையானது இல்லை; சில நேரம் புதிய தொழில்நுட்பம் மற்றும் சில நுகர்பொருட்கள் (உற்பத்தி) போன்ற பிரிவுகளில் தாராளமயம் தேவைப்படலாம். வளர்ந்துவரும் உலகச் சந்தைகள், தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தைத் திரட்டுவது இவற்றைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அவசியம். பரஸ்பரம் பலனளிக்கும் அடிப்படையில், சர்வதேசக் கட்டண விகிதங்களைக் குறைப்பதும் விரும்பத்தக்கதே. ஆனால் மிகப் பெருமளவில் சலுகைகளைப் பன்னாட்டு மற்றும் பெரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு அளிப்பது தவறானது. இன்றைய பாஜக ஆட்சி தேசத்தின அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்பின் மீது  கட்டுப்பாடற்ற பிற்போக்குத் தாக்குதலை ஏவிவிட்டுள்ளது; அது அனைத்து வகைகளிலும் நெருக்கடியை உண்டாக்குகிறது.

உலகமயமாக்கலும் சர்வதேசியமயமும்

            இரண்டு கோட்பாடுகளைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். இன்றைய உலகில் இரண்டு பெரும் வளர்ச்சிப் போக்குகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்று, கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில், பணத்தையும் பொருட்களையும் பரிமாற்றிக் கொண்டு எப்போதுமில்லாத அளவில் மிகப் பிரம்மாண்டமாக உலகச் சந்தை வளர்ந்து வந்தது: 21ம் நூற்றாண்டின் ஒரு பத்தாண்டின் உற்பத்தி, முழுமையான 20ம் நூற்றாண்டின் உற்பத்திக்குச் சமமாக இருந்தது. உலகச் சந்தையின் இந்தச் சர்வதேசியமயத்தை அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் பலன்களை வாரிச் சுருட்டி ஏகபோகமாக்கும் நோக்கத்தில் ‘உலகமயமாக்கல்’ என்று உருச் சிதைத்தார்கள். பொருட்கள் (பண்டங்கள்), முதலீடு, பணம் மற்றும் உழைப்பு இவற்றைச் சர்வதேசியமயமாக்குவது இந்த நிகழ்முறையின் நோக்கம்; இந்நிகழ்முறை தொழில்நுட்பப் புரட்சியுடன் இணையும்போது அது சமகாலத்தின் பலமான சக்தியாகிறது. நிதி ஏகபோகங்கள் ஒருபுறம், அதற்கு எதிரான மற்றும் ஏகபோகமற்ற சக்திகள் மறுபுறமாக இரண்டுக்கும் இடையே உலகச் சந்தை போர்க்களமாகிறது.  

            அடுத்து இரண்டாவது அம்சம், தொழிட்நுட்பப் புரட்சி மற்றும் தகவல் புரட்சி இரண்டும் எலெக்ட்ரானிக், கம்யூட்டர் புரட்சி மற்றும் இணையத்தோடு (இன்டர்நெட்) இணைந்து உலகச் சந்தையை அதிவேகமாகவும் அமைப்பு ரீதியிலும் உருமாற்றி மறுவடிவம் கொள்ளச் செய்கிறது. 21ம் நூற்றாண்டின் இருபது ஆண்டுகளிலேயே இன்டர்நெட் மொபைல், தகவல் தொடர்புக்கான முக்கிய கருவியானது மட்டுமல்ல, உற்பத்தியிலும்கூட முக்கியமானது. உள்நாட்டு மற்றும் உலகச் சந்தையில் பெரிதும் நுழைய வீடுகளிலேயே உற்பத்திச் செய்யப்படும் பொருட்களும் சிறு குறு (MSMEs) பிரிவு வர்த்தகமும் போராடுகின்றன; இப்போராட்டம் கார்ப்பரேட் உலகத்துடன் முரண்பாட்டை அதிகரிக்கின்றது. எனவே (சந்தையை ஆக்கிரமிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக) சந்தையை ஜனநாயகப்படுத்துவதும் முக்கியமான போராட்டமாகிறது.

GATT மற்றும் WTO

            அமெரிக்காவும் பிற மேற்கத்திய அரசுகளும் கட்டணம் மற்றும் வர்த்தகப் பொது உடன்பாடு (GATT) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) இரண்டையும் பயன்படுத்தி உலக ஒழுங்குமுறையை (வோர்ல்ட் ஆர்டர்) ‘உலகமயப்படுத்த’ முயன்றன. வலிமைமிக்க சில நாடுகளின் நலனுக்காக வர்த்தகக் கட்டணங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (IPR) சிதைக்கப்பட்டன. தொடக்கத்தில் தயங்கினாலும் வளர்ந்து வரும் நாடுகள் காட் மற்றும் உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்து அமெரிக்காவின் நோக்கத்தைத் தடுத்தன. காட் மற்றும் உலக வர்த்தக அமைப்பை அந்த அமைப்பிற்குள் இருந்துதான் எதிர்க்க  முடியும் என்பதை வளர்ந்துவரும் நாடுகள் உணர்ந்தன. சுமார் 200 நாடுகள் இணைந்தன.

உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிரான பல வழக்குகளில் இந்தியா வென்றுள்ளது. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். பாஜக ஆட்சி அமெரிக்காவிடம் மண்டியிடும் கொள்கைகள் காரணமாக உலக வர்த்தக அமைப்பில் இந்திய நிலையைப் பலவீனப்படுத்தியது மட்டுமல்ல சில தருணங்களில் சரணடையவும் செய்தது.

பொதுத்துறையும் அரசும்

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு பாத்திரமும் காலத்தோடு மாறத்தான் வேண்டும், உதாரணத்திற்குப் புதிய தொழில் நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதைச் சொல்லலாம். அவற்றின் உச்சபட்சச் செல்வாக்கைக் கைவிடாமல் அது பரவலாக்கப்பட வேண்டும். எல்லாப் பொருட்களையும் பொதுத்துறையில்தான் உற்பத்திச் செய்ய வேண்டும் என்பது எவருடைய வழக்கும் அல்ல, அப்படி யாரும் கோரவும் இல்லை. உதாரணத்திற்குப் பொதுவான நுகர் பொருட்கள், சில எலெக்ரானிக் கருவிகள் முதலானவற்றின் உற்பத்தியில் நேரடியான அரசுக் கட்டுப்பாடோ மேற்பார்வையோ தேவையில்லை. ஆனால் அடிப்படையான தொழிற்சாலைகள், உள்கட்டமைப்புகள் பொதுத்துறையில்தான் நீடிக்க வேண்டும். அவை பிரிக்கப்படக் கூடாது.

நடுத்தர, சிறு குறு வர்த்தக நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை அல்லாத தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வசதி செய்து தருவதே அரசுப் பிரிவின் பணியாகும். அவற்றிற்குக் கச்சாப் பொருட்கள், மெஷினரி, உள்கட்டமைப்பு, வங்கிக் கடன் முதலானவைகள் பெறுவதில் உதவிட வேண்டும். பொதுத் துறை குறித்த முக்கியமான கேள்வி மற்றும் விவாதங்களில் கடுமையாக நடந்த அரசியல் தத்துவார்த்தக் கொள்கை போராட்டங்களே சுதந்திர இந்தியாவை அடையாளப்படுத்தின.

பொருளாதாரத் தேசியமயத்தின் மீது

பாஜக நடத்தும் தத்துவார்த்தப் பொருளாதாரத் தாக்குதல்

          பாஜக-ஆர்எஸ்எஸ் தோன்றியதுடன் முதன் முறையாக முழுமையான வலதுசாரி பிற்போக்கு அரசு மத்தியில் அமைந்தது. இந்த அரசு தேசக்கட்டுமானத்தில் ஊடுருவி, விடுதலைக்குப் பிறகு நாடு சாதித்த அனைத்து நேர்மறையான சாதனைகளையும் உடைத்து ஒவ்வொன்றாகப் பிய்த்து எறிந்து வருகிறது; ‘நேருவினது மாடல் அல்லது (வளர்ச்சிச்) சட்டகம்’ மீது முழுவீச்சில் நிதி மூலதனத்தின் தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது. ஜனசங் – ஆர்எஸ்எஸ் (தற்போது பாஜக – ஆர்எஸ்எஸ்) வழிநெடுக பொதுத்துறை நிறுவனங்கள் அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான பிற்போக்கு எதிர் துருவமாக அமைந்து, எதிர்த்தே வந்துள்ளது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் எதிர்கால வரலாறு என்பது வளர்ச்சி மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு இடையேயான போராட்டக் களங்களை நடத்துவதைப் பொருத்தே அமையும்.

இந்திய வளர்ச்சியில் பொதுத்துறைகள்

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரதமர் நேரு மற்றும் ஏனைய முற்போக்குச் சக்திகள் கடுமையான போராட்டங்களை நடத்தியே பின்வரும் துறைகளில் வலிமையான பொருளாதார அடித்தளத்தை அமைத்தன: இரும்பு மற்றும் எஃகு, நிலக்கரி, எண்ணெய் மற்றும் பெட்ரோலியம், மின்சாரம், கனரகத் தொழில்கள் –- கருவிகள், இரயில்வே மற்றும் பெரும் போக்குவரத்து அமைப்புகள், முக்கியமான கச்சாப் பொருட்கள், எண்ணெய் சுத்திகரிப்பு

ஆலைகள், உலோகவியல் தொழில்கள், அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள் (அமோனியா, கந்தக அமிலம் போன்ற ஹெவி கெமிகல்), சுரங்கம், நீர் பாசனத் திட்டங்கள் முதலானவை பொதுத்துறைப் பிரிவில் நிறுவப்பட்டன. வேளாண்மை உட்பட இந்தியாவின் திசைவழியை நிர்ணயித்த வங்கிகள் தேசியமயத்திற்காகக் கடுமையான போராட்டங்கள் 1969ல் நடத்தப்பட்டன. இந்தியப் பொருளாதாரத்தின் ‘அதிகார உச்சத்தில்’ (கமாண்டிங் ஹைட்ஸ்) வலிமையான பொதுத்துறைகள் அமைக்கப்பட்டதன் மூலம் இந்தியா அதற்கு முன் அனுபவித்த பிற்போக்கு நிலையை வென்றது.

i)   அடிப்படைக் கட்டுமைப்புகள் ii) கனரக இயந்திர உற்பத்தித் தொழிற்சாலைகள் iii) போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு முதலானவைகள் பொதுத் துறை மற்றும் அரசுத் துறையில் ஏற்படுத்தப்பட்டன. உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்வது வளரும் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கனரக இயந்திரங்கள், இரும்பு மற்றும் எஃகு இவற்றோடு அடிப்படைக் கட்டமைப்புகள் ஒரு வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப அத்தியாவசியமானவை. தேசமும் தேசிய உணர்வும் வலுவான பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்டவை. வளர்ந்து வந்த முதலாளித்துவ ஏகபோகம் மேற்கண்ட முக்கியமான துறைகளைக் கபளீகரம் செய்வதைத் தவிர்க்கப் போராடுவதற்குப் பொதுத்துறைகள் வலிமையான சக்திமிக்க ஆயுதம் என்பதை நிரூபித்தன. பொதுத்துறைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம், எழுச்சிபெற்றுவரும் 75 ஏகபோகங்களின் கட்டுப்பாட்டில் இந்தியப் பொருளாதாரம் முழுமையாகச் சென்றிருக்கும். இந்திய வரைபடத்தின் முக்கிய நட்சத்திரப் புள்ளிகளாகப் பிளாய், பொக்காரோ, (பீகார் பகுசராயில் உள்ள) பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, விசாகப்பட்டினம் எஃகு ஆலை, (கர்னாடகா சிக்கமங்களூர் மலைத்தொடரான) குத்ரேமுக் தேசியப்பூங்கா, BHEL, HCL, HAL, மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு, HMT முதலானவைகளும் ஆசியாவிலேயே மிகப் பெரியதும், உலகில் 4வது பெரிய அமைப்பான இந்திய இரயில்வேயும் அமைந்துள்ளன.

பொருளாதார நிதிமயமாக்கல் : பாஜக கொள்கையின் விளைவு

                 தொழில்துறை மூலதனம்  அதாவது உற்பத்திக்கான மூலதனம் மற்றும் வங்கி மூலதனம் இணைக்கப்படும் நிலையை நிதிமூலதனம் (பைனான்ஸ் கேப்பிடல்) என்று லெனின் வரையறை செய்கிறார். இன்றைய நிலையில் நிதிமூலதனம்  புதிய அம்சங்களைப் பெற்றிருப்பதால் லெனின் வரையறை மேலும் செழுமைப்படுத்தப்பட்டதாகக் கொள்ளலாம். (உற்பத்தியுடன் ஒப்பிடும்போது) தொழில்துறை மூலதனத்தில் கூடுதலாக உபரி மூலதனம் இருக்கிறது; அது உற்பத்தியிலிருந்து பறந்துபோய் யூக வணிகத்தில் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வாறாக நிதிமூலதனம் மேலும் ஸ்டாக் மற்றும் பங்குகளிலும், செக்குரிட்டிகள், பாண்டுகள், (நிதி ஒப்பந்தம் மற்றும் அதன் மீது எதிர்காலத்திலும் நடக்கும் பரிவர்த்தைகளான) டெரிவிடிவ்கள், அன்னிய நேரடி முதலீடுகள் FII எனப்படும் அன்னிய நிதி நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள், (நீண்டகால லாபத்தை எதிர்நோக்கிச் செய்யப்படும் ஸ்டாக், பாண்ட் போன்ற நிதிசார் சொத்துகளின்) போர்ட்ஃபோலியோ முதலீடுகள், பிற நிதி சார்ந்த ஒப்பந்த ஆவணங்கள் (இன்ஸ்ட்ருமெண்ட்) முதலியன ஸ்டாக் மார்க்கெட்டிலும் வெளியிலும் முதலீடு செய்யப்படுகின்றன. உற்பத்தியிலிருந்து அல்லாமல் மாறாக ஸ்டாக் பங்குப் பரிவர்த்தனை மற்றும் யூக வணிகத்திலிருந்து நிதிமூலதனம் சூப்பர் லாபத்தை எதிர்பார்க்கிறது. இது ‘பணம் மேலும் பணம்’ வர்த்தகப் பரிவர்த்தனை மூலம் நடத்தப்படுகிறதே தவிர ‘பணம் – பண்டம்’ பரிவர்த்தனைகள் மூலம் அல்ல. (அதாவது ஒரு பங்குப் பத்திரம் கை மாறும்போது அதன் மதிப்பு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்கிறது. இது காகிதத்தில் இருப்பதே தவிர, உண்மையில் மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு உற்பத்தி அதிகரித்து அதன் மூலம் செல்வம் உயர்வதல்ல. இதில் உற்பத்தியே நடைபெறாததால் அது தொடர்பான தொழிலாளர்கள், மக்கள் என எவருக்கும் எந்தப் பயனும் இல்லை. வேலை வாய்ப்பும் உயராது).

                 நிதிமூலதனம் செல்வாக்குப் பெற்று உற்பத்தி முதலீட்டிற்கு எதிராகவும் உற்பத்தி முதலீட்டின் மீது ஒட்டுண்ணியாகவும் உரிஞ்சுகிறது. அது மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து அதானிகளாகவும், அம்பானிகளாகவும் பிற புதிய மற்றும் நிதி, ஏகபோகங்களின் உருவமாக வளர்ந்து நிற்கிறது. மூலதனம், பணம் மற்றும் நிதிகள் அரசு மற்றும் உற்பத்திப் பிரிவுகளிலிருந்து பெருமளவு அசுர நிதி கார்ப்ரேட்டுகளுக்கு மாற்றப்பட்டு தற்போது வேகம் எடுத்துள்ளது. உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய முதலீடு மடைமாற்றப்பட்டு இவ்வாறு மாறி நிற்பதே பொருளாதாரத்தை நிதிமூலதனமாக்கல் என்பதாகும்.

                 இந்த நிதி மாற்றத்திற்கு (ஃபைனான்சியல் கன்வர்ஷன்) பாஜ தலைமையிலான அரசே முக்கிய கருவி. வேளாண் பொருளாதாரத்திலிருந்து கிடைக்கும் மிகப் பெரிய லாபங்களை ஏகபோக நிதிப் பிரிவுகளுக்கு மடைமாற்றம் செய்வதால், உற்பத்தியின் அடக்கச் செலவில் நெருக்கடியை உண்டாக்குகிறது. இந்த நிகழ்முறையைத்தான் மூன்று வேளாண் சட்டங்கள் பிரதிபலிக்கின்றன. நகரமயமாக்கலும் அதன் காரணமாக விவசாய நிலப் பரப்பை இழத்தலும் லாபதை மடைமாற்றும் பாதையாகிறது.         

கரோனா பெருந்தொற்று : நிதிமயமாக்கலின் கருவி

                 எல்லா முறைகளிலும் லாபங்களைப் பணமாக்கப்பட்டச் செல்வமாக மாற்றும் நிதிமயமாக்கல், கரோனா / கோவிட் நெருக்கடியைப் புதிய கருவியாகப் பயன்படுத்துகிறது. மக்கள் மேலும் ஏழைகளாகவும் நடுத்தர சிறு குறு தொழிலகங்கள் அழிக்கப்படும்போது, நூறுகோடி சொத்துடைய பில்லியனர்கள் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் வேலை இழந்து உற்பத்தி, வங்கித் தொழில் மற்றும் நிதிநிலைமை முதலியன இந்தியாவில் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் இது நடக்கிறது. தொழிற்சாலைகளின் லாபத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு மாறாக லாபங்கள் நிதிமூலதனம் ஆக்கப்படுவதால் உற்பத்திக்கான முதலீட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தி, நடுத்தர சிறு குறு தொழிலகங்களைக் கடுமையான அபாயத்தில் தள்ளியுள்ளது.

(பொருளாதார) அதிகார மாற்றம்

                 சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, பொதுத்துறைப் பிரிவிலிருந்து முழு அளவில் அதிகார மாற்றம் நிதி சார்ந்த தனியார் பிரிவுக்கு நடந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களைக்     கட்டாயமாகப் பிரிப்பதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டிற்கு 1.75 லட்சம் கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டடுள்ளது. நாடக பாணியில் கடந்த காலத்திலிருந்து துண்டித்துக் கொண்டு அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் குறைந்தபட்சம் இரண்டையும் பொதுக் காப்பீட்டுக் கழகத்தையும் அரசாங்கம் தனியார்மயமாக்கப் போகிறது. பொருளாதார நிதிநிலைக்கு ‘மாபெரும் நிதி ஊக்குவிப்பு’ என்று 2021 – 22 ஆண்டு பட்ஜெட் மார்தட்டுகிறது – அந்தச் சொற்றொடர் நம் பொருளாதாரத்தை அல்ல, நிதிமூலதனத்திற்கான ஊக்குவிப்பு என்பதன் வேறொரு பெயர்தான். அதன் கீழ் லட்சக் கணக்கான கோடிகள் ரூபாய் கொட்டப்படுகிறது.

                 அரசின் பொதுத்துறைகளை ‘யுக்திசார் விற்பனை’ (ஸ்டாடர்ஜிக் சேல்) செய்யும் திட்டத்தில் பாரத் பெட்ரோலியம் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் (BPCL), சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (CCI), ஷிப்பிங் கார்ப்ரேஷன், (இரயில் கோச்சுகள், உதிரி பாகங்கள், சுரங்கக் கருவிகள் உற்பத்திச் செய்யும்) பாரத் எர்த் மூவர்ஸ் லிட்.,(BEML), தொழிற்சாலைகள் வளர்ச்சி இந்திய வங்கியான IDBI, (இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் ஒரிசாவின்) நீலசல் ஸ்பேட் நிகம் லிட்., முதலானவை அடங்கும். தேசத்தின் மிகப்பெரிய முதலீட்டாளரும், காப்பீட்டாளாரும், அதிக லாபம் ஈட்டும், 34 ட்ரில்லியன் ரூபாய் சொத்து மதிப்புள்ள (ஒரு ட்ரில்லியன் = நூறாயிரம் கோடி) அரசுத் துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்பதற்கு ஐபிஓ எனப்படும் ‘தொடக்கநிலை பொது முகமதிப்பை’  (பங்கிற்கான தொடக்க விலையை) அரசு வெளியிட உள்ளது. எல்ஐசி இப்போது விற்பனைக்காக உள்ளது எனில் நன்றாகச் செயல்பட்டதால் ‘தண்டிக்க’ப்பட்டிருக்கிறது!

                 இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிட்.,(HPCL) நிறுவனத்தின் 49சதவீதத்தை கழட்டிவிட்டதன் மூலம் அரசுக்கு மிகப் பிரம்மாண்ட தொகை கிடைத்துள்ளது : 2016-17லிருந்து வருடவாரியாக 2020-21வரை முறையே ரூ 46 378கோடி, ரூ100 642கோடி, ரூ85,063கோடி, ரூ49,828 கோடி மற்றும் ரூ18 223 கோடி கிடைத்துள்ளது –இந்தத் தொகை அனைத்தும் அப்படியே தனியார் நிதிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு விட்டது. தேசியப் பணமாக்கல் பாதை (நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன்) என்பது அரசு மற்றும் பொதுமக்கள் முதலீட்டை நிதிமயமாக்கல் பணமாக மாற்றும் வாகனமாகும்.

’பேடு பேங்க்ஸ் Bad banks’’ : நிதி மூலதனவாதிகளின் தந்திரம்

                 பெரிய வணிகக் கம்பெனிகள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்து என அவர்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலமாக அல்லாமல், குயுக்தியான வழிமுறையில் வங்கிப் பிரிவின் மோசமான கடன் பிரச்சனையைத் (bad loans) தீர்க்க முனைந்துள்ளது அரசு: அதற்காக ஊர் உலகில் கேள்விப்படாத பெயரில் ’பேடு பேங்க்ஸ்’ (மோசமான வங்கிகள்) என்ற ஒன்றை நிறுவுவார்களாம்! (நல்ல வங்கிகள் கொடுத்த கடனை மோசமான வங்கிகள் தீர்த்து வைக்குமாம்). கடைந்தெடுத்த பொய்யனுக்கு அரிச்சந்திரன் எனப் பெயர் சூட்டுவதைப்போல ‘சொத்து மேலாண்மை’ (அஸட் மேனேஜ்மெண்ட்) அல்லது ’புனர் நிர்மாண நிறுவனம்’ (ரீகன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனி) நொடித்துப்போன நிறுவனங்களின் ஆஸ்தியைக் (ஸ்ட்டிரஸ்டு அஸட்ஸ்) கைப்பற்றி ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு அதனை விற்பனை செய்து பைசல் செய்யுமாம். அதுமட்டுமல்ல, அதற்காக வங்கிகள் ஈக்குவிட்டி பங்குகளை உள்ளீடு செய்வதற்காக ரூ20ஆயிரம் கோடி ரூபாய்களை இந்த ஆண்டு அடிப்படை மூலதனமாக ஒதுக்கித் தருமாம். மாற்று முதலீட்டு நிதியம் (AIFs) மோசமான கடன்களை ‘வாங்கி’க் கொள்ளுமாம்! ஏதேதோ பெயர்களில் மக்கள் சொத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள்.

பில்லியனர்களும் நிதிமூலதனமும்

                 பிரதமர் பெருமிதத்துடன் சொல்கிறார், தற்சார்பு கண்ணோட்டம்! இதோ இங்கே அவருடைய தற்சார்பு: 1991ல் இந்தியா பெற்ற அன்னிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 129 மில்லியன் டாலர்கள், அது 2020-21ம் ஆண்டில் 576 மடங்குகள் வளர்ந்து அதிர்ச்சியளிக்கும் 74,390 மில்லியன் டாலர்களாகியுள்ளது! (ஒரு மில்லியன் என்றால் 10 லட்சம்; ஒரு டாலருக்குச் சுமார் 74ரூபாய் என்றால் அது இந்திய ரூபாயில் நினைத்துப் பார்க்க மலைப்பாக உள்ளது). வெளியுறவு முதலீடு 1991ல் வெறும் 4 மில்லியன் டாலர்கள்; ஆனால் 2021 ஜனவரி 31ல் தொற்று சூழ்நிலையிலேயே அது 30,542 மில்லியன் டாலராக வளர்ந்து நிற்கிறது! இந்தியர்கள் காப்பீட்டுப் பிரிவில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முற்றாக இழப்பார்கள்.

                 அதிக பில்லியனர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாதான் மூன்றாவதாக இருப்பதாக (Hurun) ‘ஹுரூண் உலகப் பணக்காரர்கள் அறிக்கை’ தெரிவிக்கிறது. அந்த ஆய்வறிக்கை டாலர்களில் உலகப் பில்லியனர்கள் பட்டியலில் (100 கோடி ரூபாய் அல்ல, டாலர்களில் 100 கோடி பட்டியலில்) 2020ம் ஆண்டின்போது மேலும் 40 புதிய இந்தியர்கள் சேர்க்கப்பட்டதான தகவலை வெளிப்படுத்தியது. அந்தப் பட்டியலில் இப்போது மொத்தம் 209 இந்திய வம்சாவளி பில்லியர்கள் உள்ளனர்; அவர்களில் முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் முதலாவதாக இருக்க  177 பேர் இந்தியாவில் வசிக்கும் அதிபணக்காரர்கள். கொரோனா தொற்று காலத்தில் முதல் 100 பில்லியனர்களின் சொத்து 35 சதவீதம் தாவிப் பாய்ச்சலில் வளர்ந்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு 13.8 கோடி இந்தியப் பரம ஏழைகளுக்குத் தலைக்கு ரூபாய் 94,045 காசோலையாகத் தரலாம்!

                 அம்பானியின் சொத்து 24%உயர்ந்து 83 பில்லியன் டாலராக ஆகி உலகப் பில்லியனர்கள் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். அதானி சொத்து ஏறத்தாழ இரண்டு மடங்காக 32 பில்லியன் டாலராகியுள்ளது. தொற்றின்போது இந்தியாவில் ஏழு பேருக்கு ஒருவர் வேலை இழந்துள்ளபோது, ஒரு மணி நேரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 90 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது!  2020 ஏப்ரலில் மட்டும் இந்தியாவில் 1லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வேலை இழந்துள்ளபோது சந்தை முதலீட்டுக் குவிப்பும் பங்கு சந்தையும் சூடுபிடித்துள்ளது. அம்பானியின் சொத்து மட்டுமே 40 கோடி முறைசாரா தொழிலாளர்களை வறுமைக் கோட்டுக்கு மேலே ஐந்து மாதங்களுக்கு வைத்திருக்க முடியும்.

                 கடந்த பத்தாண்டுகளில் 2020ல் மட்டும் மிகக் கூடுதலான செல்வ அதிகரிப்பைக் கண்டதாகவும் இந்த ஆண்டில் ஒவ்வொரு வாரமும் எட்டு புதிய டாலர் பில்லியர்கள் உருவாகியதாகவும் ‘ஹுரூண்’ அறிக்கை கூறுகிறது. ஒரு வருடத்தில் இத்தனைச் செல்வம் உருவாக்கப்பட்டதை உலகம் எப்போதும் பார்த்ததில்லை. அரசே முன்னின்று பணத்தைக் கொட்டியும் முதலீட்டை யூக வணிகத்தில் ஈடுபடுத்தும்போது பொதுமக்கள், நடுத்தர சிறு குறு தொழிலகங்கள் மற்றும் கடை வைத்திருப்போர் தங்கள் சேமிப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் மிகக் கூடுதலாக இழந்துள்ளனர்.

                 ஸ்டாக் மார்க்கெட் மதிப்பு உயர்வு (நிதிசார்ந்த சொத்துகள் மதிப்பு உயர்வு) தீவிரமான யூத்திற்கு வழிகோலியது. இந்த ஆண்டு மார்ச் 2ல் மும்பை ஸ்டாக் மார்கெட் (BSE Sensex) 447 புள்ளிகள் உயர்ந்து, ஐம்பதாயிரம் மட்டத்தைக் கடந்து, பங்குகளுக்கு பெரும் லாபம் தந்தது. நிப்டி (NIFTY) எனப்படும் ‘தேசிய பங்குச் சந்தை 50’ன் புள்ளிகளும் உயர்ந்து கூடுதல் லாபம் கண்டது. (தேசிய பங்குச் சந்தை, என்எஸ்இ, பரவலாக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. நிப்டியோ அந்நிறுவனங்களில் உச்சத்தில் இருக்கும் 50 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டது.) லாபம் ஈட்டும் ஓஎன்ஜிசி நிறுவனத்தைப் பிரித்தெறியச் செய்யும் வகையில் அதானி எண்ணெய் தொழில் பிரிவில் வெடிப்புற வளர்ச்சியை நிகழ்த்தியுள்ளார்.

பொருளாதாரம் பல வேறுபட்ட நிலைகளில்

                 குணாம்ச ரீதியில் பொருளாதாரம் வித்தியாசமான நிலையில் நுழைந்துள்ளது; பொதுத்துறைகள், ஏகபோகமற்ற வணிகம் மற்றும் உற்பத்தி(துறை)க்கு எதிராக நிதி(மூலதனக்) கார்ப்பரேஷன்களுக்கு நிபந்தனையற்ற கட்டற்றச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், அறிவாளிகள், சிறு உற்பத்தியாளர்களை மட்டுமல்ல, சிறு மற்றும் நடுத்தர முதலாளிகள் மற்றும் தொழில் முனைவோர்களையும் நிதிமூலதனம் விழுங்கிச் சாப்பிட்டுக் கபளீகரம் செய்கிறது. பொருளாதாரத்தில் ஒட்டுண்ணியான யூக வணிகம் செல்வாக்குச் செலுத்துவதால் உற்பத்தி (பிரிவு) அபாயத்தில் உள்ளது.

                 பொருளாதாரத்தைத் தங்குதடையற்ற நிதிமயமாக்கல், மதவாத பாசிசத்தின் முக்கியமான ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது.

                 முற்போக்கு, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளின் பரந்துபட்ட விரிவான முன்னணியே மேற்கண்ட அபாயங்களைத் தடுத்து நிறுத்தி விரட்டவல்லது. பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்தலே இந்த நேரத்தின் தலையாய தேவை.

-- நன்றி : நியூஏஜ் (ஆக. 15 -- 21)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

           

No comments:

Post a Comment