Friday 1 April 2022

பூவுலகைக் காக்க சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் -- ஐ நா


               பூவுலகைக் காக்க இந்தியா

சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் – ஐ நா 

--டாக்டர் ஞான் பதக்

--நியூ ஏஜ் (மார்ச் 13 –19)

“பருவநிலை மாற்றம் 2022 : தாக்கம், தகவமைப்பு மற்றும் பாதிப்பு” என்ற அறிக்கையின் மூலம் ஐநா விஞ்ஞானிகள் உலகத்திற்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்; அது இந்தியாவுக்கும் பொருந்தும். சூழலியலைப் பாதிக்கும் பல்வேறு வாயுக்களின் அளவை, அவ்வாயுக்களை உமிழும் மாசுபடுத்தும் பெரிய நாடுகள் ஒப்புக் கொண்டபடி குறைக்கவில்லை எனில், இந்தியா வாழத் தகுதியற்றதாகும் ஆபத்தைச் சந்திப்பதால், இந்திய அரசு தனது மக்களைப் பாதுகாக்க சூழலியல் அறிஞர்களின் குரலைக் கேட்டு நடக்க வேண்டும்.

            பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மக்கட் தொகையில் சீனாவை அடுத்த பெரும் நாடான இந்தியாவின் பெரும்பான்மையான மக்களே, உலகின் பெரும் எண்ணிக்கையில், அதிகம் பாதிக்கப்படுவர். எனவே, புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுகள் வெளியிடுதலைக் குறைக்கவும், பருவநிலை மாற்றம் தொடர்பான இந்தச் சவாலின் பிற அபாயங்களை எதிர்கொள்ளவும் வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவே தயாராக வேண்டிய தேவை உள்ளது.

            சூழலியல் ஒழுங்கு சீர்குலைவு, உயிரினங்கள் அழிதல், கடுமையான வெப்பக் காற்றலை, வெள்ளப் பெருக்கு இவற்றுடன் புவிவெப்பமடைதல் காரணமாக ’தவிர்க்க இயலாத பன்முகப் பருவநிலை ஆபத்துகள்’ இன்னும் இருபதாண்டுகளில், அதாவது 2050 வாக்கில் ஏற்படும் என பொதுவான விஞ்ஞான ஆய்வு எச்சரிக்கிறது. மனிதர்கள் செயல்பாடுகளால் உண்டாக்கப்படும் பருவநிலை மாற்றம், இயற்கையைப் பரவலாக அபாயகரமாகச் சீர்குலைத்து உலகின் கோடிக் கணக்கானோர் வாழ்க்கையைப் பாதிக்கிறது என அந்த அறிக்கை கூறுகிறது; அந்த ஆபத்தைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதையும் மீறி இயற்கைச் சூழலியல்கள் மக்கள் அதனோடு இயைந்து வாழ இயலாதபடி மிகக் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன, சீர்குலைக்கப்படுகின்றன.

ஐநா-வின் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில், இரண்டாவதான இவ்வறிக்கையில் ஐநா பருவநிலை உயர் விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிப்படையக்கூடிய 11 இந்திய மாநிலங்களைப் பட்டியலிட்டுள்ளது; அசாம், மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஷ்கர், உபி, ஹரியானா மற்றும் பஞ்சாப்; இவற்றுடன் பெரும் எண்ணிக்கையிலான நகரங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் பருவநிலையால் தூண்டப்படும் ஆபத்துக்களான வெள்ளம், வறட்சி, தண்ணீர் நெருக்கடிகள் மற்றும் மிக மோசமான விளைவான ‘ஈரக் குமிழ் நிகழ்வு’ (வெட் பல்ப் பினாமினான்) போன்றவற்றால் பாதிப்படையும்.

[‘ஈரக் குமிழ் நிகழ்வு’ என்பது,  வெப்பம் மற்றும் காற்று ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றம்; அது நமது உடல்நிலை வெப்பம், வளிமண்டல வெப்பம் போல ‘ஈர உலர் குமிழ் வெப்பம்’ (வெட் பல்ப் டெம்பரேச்சர்) எனப்படும். அதனை அறிவியலில், “நிலையான அழுத்தத்தில் தண்ணீர் ஆவி ஆவதன் மூலம் சுற்றியுள்ள காற்றைக் குளிர்விக்கத் தேவையான குறைந்தபட்ச வெப்பம்” என்று வரையறுப்பார்கள்.

ஈரக்குமிழ் வெப்பம் என்பது உண்மையில் ‘இயல்புநிலையில் (நாம் சுவாசிக்கும்) வளிமண்டலக் காற்றின் வெப்பம் மற்றும் சார்பு ஈரப்பதம் (ரிலேடிவ் க்யூமிடிட்டி) இரண்டின் செயல்பாடாகும்’. இவ்வகை வெப்பம், ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் சுற்றுச்சூழல் காற்றில் நிறுத்தி வைத்திருக்க இயலும் நீராவியின் அளவை (வாட்டர் வேப்பர்) அளப்பதாகும். 

அந்த ஈரக்குமிழ் வெப்பம் அதிகரித்தால் என்ன நிகழும்? அந்த வெப்பம் நம் உடல்நிலை வெப்பத்தைவிட அதிகமானால், மனிதன் வியர்ப்பதன் மூலம் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் தாங்கக்கூடிய வெப்பத்தைவிட அது அதிகமானது எனப் பொருள்படும்; எனவே நம்மை நாமே குளிர்வித்துக் கொள்ளமுடியாது, அதாவது உயிர் வாழ முடியாது’ என்கிறார் கலிஃபோர்னியா பேராசிரியரான விஞ்ஞானி.]

எனவே ஒரு தெர்மாமீட்டரின் பல்பைச் சுற்றி ஒரு ஈரமான திரி போன்ற குச்சியை வைத்து அந்த வெப்பத்தை அளப்பார்கள்.

அகமதாபாத் நகரம் ஒரு வெப்பமான தீவாக மாறும்; மும்பை, வெள்ளம் மற்றும் கடல் மட்டம் உயரும் அதிக அபாயத்தை சந்திக்கும் சாத்தியப்பாடு உள்ளது. வெப்பமும் ஈரப்பதமும் சென்னை, புவனேஸ்வர், பாட்னா மற்றும் லக்னோ உள்ளிட்ட மற்ற பிற நகரங்களில் அபாயகரமான மட்டத்தை அடையும். பொதுவாக வெப்ப உயர்வு குறித்து அந்த அறிக்கை எச்சரிக்கும்போது குறிப்பாக மிகவும் ஆபத்தான ஈரக்குமிழ் வெப்பம் , 31 டிகிரி செல்சியஷ் அளவு உயரும் என எச்சரிக்கிறது – அந்த வெப்ப நிலை மனிதர்களுக்கு மிக மிக அபாயகரமானதாகக் கருதப்படுகிறது.

இந்தியா இதுவரை இந்த நிலையில் துன்பப்பட்டதில்லை. ஈரக்குமிழ் வெப்பத்தின் தீவிர அபாயகரமான அளவு 31 டிகிரி செல்சியஷ். ஆனால் இந்தியாவில் அதன் அளவு 25 முதல் 30 ஆக மட்டுமே உள்ளது, தீவிர அபாய அளவை எட்டவில்லை. அதுவே 35 டிகிரி அளவு உயருமென்றால், நல்ல உடல்நிலையில் உள்ள மனிதர்கள்கூட அந்த வெப்பத்தில் உயிர்வாழ முடியாது, அச்சூழலில் வெறும் ஆறு மணி நேரம் இருந்தாலே அது உயிர்க்கு இறுதியாகிவிடும்.

சர்வதேச மாநாடுகளில் உறுதியளித்த மட்டத்திற்கு வாயுக்கள் வெளியிடுவதைக் குறைக்காவிடில், நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவின் வடக்கு மற்றும் கரையோரப் பிராந்தியங்களின் பல பகுதிகளில் தீவிர அபாயமான ஈரக்குமிழ் வெப்பம் 31 டிகிரி செல்ஷியத்தைத் தாண்டிவிடும் என அறிக்கை எச்சரிக்கிறது. மாறாக, பெரும்பான்மை உலக நாடுகளோடு இந்தியாவின் பல பகுதியிலும் தொடர்ந்து அதிகரிக்கும் வாயுக்கள் வெளியீட்டால் ஈரக்குமிழ் வெப்பம், மனிதகுலம் வாழ முடியாத, 35 டிகிரியையும் தாண்டிவிடும். “வாயுக்கள் உமிழ்வதை நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் உலகளாவிய அளவில், வெப்பம் மற்றும் ஈரப்பதம், மனிதன் தாங்க முடியாத நிலையை அடைந்துவிடும்; தாங்கவொண்ணா அந்நிலையை அனுபவிக்கும் துயர இடங்களில் ஒன்றாகும் இந்தியா” என்கிறது அறிக்கை.

வெப்பக் காற்று வீசுவது உள்ளிட்ட வெப்பத்தின் மீமிகை உச்சம் ஏற்கனவே பல நகரங்களில் தீவிரமடைந்ததுடன் கடுமையான தண்ணீர் நெருக்கடியுடன் காற்று மாசுபாடும் மோசமடைந்துள்ளது. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதுபோல நகர்ப்புறத்தின் பொருளாதார, சமூக ரீதியாக விளிப்புநிலையில் வாழ்வோர் மீது இந்நிலை சமமற்ற விகிதத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகப் போக்குவரத்து, கட்டமைப்பு, குடிநீர், சரக்குப் போக்குவரத்து முதலிய ஒவ்வொரு வாழ்க்கை வசதிகளிலும் சமரசம் செய்ய கொள்ளப்படுகிறது. 2050 வாக்கில் நகர்புறத்து மக்கள் தொகை 87.7 கோடியாகும் என கணிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புற இந்தியா மற்ற பகுதிகளைவிட இரண்டு மடங்கு கூடுதல் அபாயத்தைச் சந்திக்கும்.

‘நாடுகளுக்கு இடையிலான பருவநிலை மாற்றம் குறித்த குழு’வின் (IPCC) அறிக்கை, இந்நூற்றாண்டின் மத்தியில் கடற்கரை பகுதிகளில் வாழும் 350 லட்சம் இந்திய மக்கள் ஆண்டு தோறும் வெள்ள அபாயத்தைச் சந்திப்பர் என எச்சரித்தது; வாயு வெளியீடு அதிகரிக்கும் பட்சத்தில், அந்த ஆபத்து 500 லட்சம் மக்களைப் பாதிக்கும் என்கிறது. உறுதி அளித்தபடி வாயு வெளியீடு குறைக்கப்பட்டால் 24 பில்லியன் டாலர் நேரடி இழப்பு என்ற மதிப்பீடு, வாயு வெளியீடு அதிகரித்தால் 36 பில்லியன் டாலரென ஆகிவிடும் என்கிறது. கடலுக்கடியில் இருக்கும் பனிப் பாறை படலங்கள் உறுதியற்று உள்ளன; இதனால் மும்பையில் கடல்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்பு இழப்பு மட்டும் 2050 வாக்கில் ஆண்டுக்கு 162 பில்லியன் டாலர் என உயரும் என்று மதிப்பீடுகள் எச்சரிக்கின்றன. 

இவை சுற்றுச் சூழல், சூழுலியலைப் பராமரிக்க வேண்டிய அத்தியாவசியத் தேவை மற்றும் நம் கடமைகளை வலியுறுத்துகின்றன. அதனைப் புறக்கணித்து வாயு வெளியீடு அதிகரிக்குமானால் நாடு முழுமையும் பாதிப்படையும், வேளாண்மை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்தியாவின் நெல் உற்பத்தியாகும் பகுதிகள் 30 சதவீதமாக வீழ்ச்சியடையும். ஒட்டு மொத்தமாக தானிய உற்பத்தியைப் பொருத்த அளவில் இந்தியாவை மிக பாதிப்படையக் கூடிய நாடாக வகைப்படுத்தியுள்ளார்கள். இதனை எதிர்கொள்ள திறன் வாய்ந்த முறையில் சில அணுகுமுறை திருத்த நடவடிக்கைகளை நாடு அவசரமாக எடுக்க வேண்டிய தேவை உள்ளது.

தெற்காசியாவுக்குக் குறிப்பான தனித்த எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த அறிக்கை. அதன்படி, நாடுகளுக்கு இடையே ஓடும் ஆறுகளின் வடிநிலங்களான அமு தாரியா (மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான பெரிய ஆறு), சிந்து நதி தீரம், கங்கையாறு போன்றவைகள்கூட கடுமையான தண்ணீர் பற்றாக்குறையைச் சந்திக்கும், நூற்றாண்டின் இறுதியில் சாத்தியமாகக்கூடிய வறட்சி நிலை 5 முதல் 20% அதிகரிக்குமென எச்சரித்தது. 2050 வாக்கில் 40% இந்திய மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை, இப்போதைவிட 7% அதிகமாகச் சந்திப்பர். தென்னிந்தியா, வடஇந்தியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும், பிரம்மபுத்ரா மற்றும் கங்கை ஆற்று வடிநிலங்களிலும் (ரிவர் பேசின்) கூடுதல் வெள்ளப் பெருக்கைக் காண்பர். மனிதத் துயர்கள் மட்டுமின்றி பொருளாதாரப் பாதிப்புக்களில் இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும்.

சூழலியல் பாதுகாப்புக்காக தற்போது ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றினாலும், உலகளாவிய வாயு வெளியீடு தற்போதைய பத்தாண்டுகளில் ஏறத்தாழ 14 சதவீதம் அதிகரிக்கும் என்பதே பேரழிவைச் சுட்டிக்காட்டும் கவலையளிக்கும் உண்மையாகும். தன் பங்கிற்கு உலகளாவிய அளவிலும், உள்நாட்டு அளவிலும், மிகப் பெரிய பங்களிப்பை ஆற்ற வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு.


பூவுலகைக் காப்பது நம் முதல் கடமை! 

தன்னலம் மறந்து தரணியின் 

           சூழலியல் காப்போம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 

 

 

 

 

 

 



 

No comments:

Post a Comment