Friday 1 April 2022

விரைவில் புவிக் கோளம் வாழத் தகுதியற்றதாகும் -- ஐ நா

 

புவிக்கோளம் வாழத் தகுதியற்றதாகும்

 -- பருவநிலை அறிக்கை எச்சரிக்கை

-- டாக்டர் சோம மார்லோ

--நியூ ஏஜ் (மார்ச் 13 –19)

(சூழலியலைப் பாதுகாக்கும் கடமையைத் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றுமா? இக்கேள்விக்கு நம்பிக்கை தரும் பதிலை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையோ அல்லது நடவடிக்கைகளோ தரவில்லை என்பதை விளக்குகிறது டாக்டர் சோம மார்லோ எழுதிய ‘Planet Would be Soon Unlivable: Climate Report’ தலைப்பிலான கட்டுரையின் பின்வரும் பகுதி:) 

“67 நாடுகளைச் சேர்ந்த 270 விஞ்ஞானிகள் ஐநா மன்றத்தில் IPCC-ன் அறிக்கையைச் சமர்ப்பித்தது; அதில் நமது பருவநிலை எப்படி மாற்றமடைகிறது, அதன் தாக்கம் மற்றும் இன்றைய அதன் தீர்வு தொகுத்துச் சொல்லப்பட்டது.

ஐநாவில் அறிக்கையை அறிமுகம் செய்த ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறினார்:

“நமது மக்களும் புவிக்கோளும் பருவநிலை மாற்றத்தால் தாக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ பாதி மனிதகுலம் அபாயப்பகுதியில் இப்போது வாழ்ந்து வருகிறது. (வனச் சூழலியல், பாலைவனங்கள், புல் நிலப்பரப்புகள், கடல் போன்ற) பல வகை சூழலியல் அமைப்புகள் இன்று திரும்ப வரமுடியாத நிலையில் உள்ளன. உண்மைகள் மறுக்க இயலாதபடி உள்ளன. ஆட்சித் தலைமைகள் தங்கள் கடமைப் பொறுப்பைத் துறப்பது கிரிமினல் குற்றம். உலகை மிகப் பெரிதும் மாசுபடுத்துபவர்கள் நமது ஒரே சொந்த வீட்டிற்குத் தீ வைக்கும் குற்றம் இழைப்பவர்கள்” எனக் விமர்சித்து அறிக்கையில் உள்ள விஷயங்களை விளக்கினார்.

புகழ்பெற்ற சூழலியல் ஆய்வாளர்களில் ஒருவர், “பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய உலகிற்கு ஒரு சிறு திறப்பே (வின்டோ) இருப்தை IPCC அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது; …மேலும் மேலும் மோசமடையும் பாதிப்பில், அதற்கு எந்தவகையிலும் காரணமாகாத, உலகின் ஏழைகளே அதிகம் பாதிக்கப்பட்டு பலியாக உள்ளனர் என்பதையும் அறிக்கை அங்கீகரித்துள்ளது” எனக் கூறினார்.

புவி வெப்பமடைதல் மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாகவும் பாதிக்கப்படும் சூழலியலால் அடிக்கடி வெள்ளப் பெருக்கு, வறட்சி ஏற்படுகிறது. பல தாவர இனங்கள், பறவைகள், விலங்குகள் நிரந்தரமாக மறைந்து உயிரி பன்மயம் (பையோ டைவர்சிட்டி) சுருங்குகிறது. “பருவநிலை மாற்றம், குறிப்பிடத்தக்க அழிவுகள், திரும்ப முடியாத இழப்புகள் அதிகரிப்பு, மண்ணில், நன்னீரில் மற்றும் கடலில் வாழும் உயிரினங்களையும் அது சார்ந்த சூழலியல்களையும் பெரிதும் பாதிப்படையச் செய்கிறது” என அறிக்கை விளக்குகிறது.

இந்தப் பேரழிவுகளையும் திரும்ப முடியாத தாக்கங்களையும் கட்டுப்படுத்த ஒரே தீர்வு,

வெப்ப உயர்வைத் தடுப்பது –அதுவே அவசரத் தேவை. ஒவ்வொரு அரை டிகிரி வெப்ப உயர்வும் ஒவ்வொரு ஆண்டும் அக்கறைப்பட வேண்டிய விஷயமாகும். வெப்பமடைதலை 1.5 டிகிரியாகக் கட்டுப்படுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அந்த வாயில் விரைவாக மூடப்பட்டு வருகிறது. அந்நிலையை எட்ட அடுத்த எட்டாண்டுகளில் உலகளாவிய வாயு உமிழ்வை 45 சதவீதம் குறைக்க வேண்டும். இருப்பினும் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த கான்பிரஸ் ஆப் பார்ட்டிஸ் 26வது (COP26) மாநாடு எனப்படும் ஐநா பருவநிலை மாநாட்டில் உலகின் சமகாலத்துத் தேசிய அரசுகள் ஒப்புக்கொண்ட அளவை நிறைவேற்றினால் அதே கால அளவில் வெளியிட்ட வாயுக்களின் அளவைவிட அது 14% அதிகமானதாகவே இருக்கும்.

நமது ஒன்றிய அரசு என்ன செய்கிறது?

            சர்வதேச மாநாடுகளில் பசுமை எரிசக்தி உற்பத்தி குறித்த உறுதி மொழிகள் குறித்து வீரதீரமாக உரத்து வாய் ஜாலம் காட்டியதற்கு மாறாக நேர் எதிராகச் செயல்படுகிறது. சென்ற
ஆண்டு தொழிற்சாலை முதலாளிகள் பயன்பெறும் வகையில் சூழலியல் சட்டங்களை மிகக் கடுமையாக நீர்த்துப்போகச் செய்தது; அதன் மூலம் எளிதில் சூழலியல் பாதிப்படையக்கூடிய இமயமலை மற்றும் அந்தமான் தீவுகளில் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்க அதிபர்கள் கட்டுப்படுத்தப்படாத வரைமுறையற்ற செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதித்தது. சமீபத்தில் முன்மொழிந்த
உயிரி பன்மயச் சட்டம் 2002 (பையோ டைவர்சிட்டி ஆக்ட்) இந்தியாவின் தேசியப் பூங்காக்கள் மற்றும் பாதுகாப்புக் (ரிசர்வ்டு) காடுகளின் அரிய மருத்துவ மூலிகைகள், உள்நாட்டு பாரம்பரிய வகை பயிரினங்களைச் சுதந்திரமாகச் சுரண்டுவதற்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு மருந்து நிறுவன ஆலைகளுக்கு வசதி செய்து தந்துள்ளது.

            2022 -23ம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை, இந்த விஷயத்தில் மிகப் பெரிய ஏமாற்றம். சட்டப்படியான அமைப்பான ‘காற்று தர மேலாண்மைக்கான ஆணைய’த்திற்குப் பட்ஜெட் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. சில சூழலியல் அமைப்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் போர்டுகளுக்கான நிதியும் சுருங்கியுள்ளது. இந்த நிதி குறைப்பு நடவடிக்கைகள், தூய்மையான ஆற்றல் உற்பத்தி மற்றும் பருவநிலை நடவடிக்கை குறித்து இந்திய அரசு சர்வதேச அரங்குகளில் வழங்கிய உறுதிமொழி பற்றிய நம்பகத் தன்மை மீது நமக்குச் சந்தேகத்தை எழுப்புகிறது. பருவநிலை மாற்ற அபாயத்தைக் குறைப்பது குறித்த ஒட்டுமொத்த அவசர உணர்வு இல்லாதவரை நாம் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்குத் தயாராக மாட்டோம்.

            பருவநிலை ஆபத்துக்கு எதிரான நடவடிக்கையைப் புறக்கணிப்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தி!  

            முதலாளித்துவத்தில் தண்ணீர், வனங்கள், வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் மற்றும் இயற்கையின் அனைத்து வஸ்துகளும் கொள்ளை லாபத்திற்கான விற்பனை பண்டங்களாக மாற்றப்படுகிறது. இயற்கை செல்வாதாரங்கள் அனைத்தையும் முதலாளித்துவ முறை கொள்ளையடித்து, பெருமளவிலான உற்பத்தியில் பயன்படுத்தி, சுற்றுச் சூழல் சார்ந்த சூழலியல் முறைமையை மீளமுடியாதபடி சேதப்படுத்துகிறது. கொள்ளை லாபப் பெரும் பசியில் நடைபெறும் முதலாளித்துவ உற்பத்தி முறையை மாற்ற வேண்டும்; நீடித்து நிலைத்திருக்கும் இயற்கைக்குச் சாதகமான நட்பு முறை உற்பத்தி முறையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்; பொறுப்பும் சக குடிமக்களுக்கு சமத்துவத்தை அளிக்கும் ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படும் உற்பத்தி முறைக்கு மாற வேண்டும்; அது சோஷலிச ஆட்சி முறையின் கீழ் மட்டுமே சாத்தியம்.

     சர்வதேச உழைக்கும் வர்க்கம், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து லாபத்திற்காக அல்லாமல், சோஷலிசத்திற்காக, அடிப்படையில் சமூகம் மனிதத் தேவையை அங்கீகரித்துப் போராட வேண்டிய அவசரத்தை, அறிக்கை எச்சரிக்கைகள்,  அதிகரிக்கின்றன.

            பூவுலகைக் காக்கும் போராட்டமும், புதியதோர் உலகம் செய்வதற்கான போராட்டமும் வேறு வேறு அல்ல!   

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment