Friday 8 April 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 62 சி எஸ் சுப்பிரமணியம்

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 62


சிஎஸ் சுப்பிரமணியம் :

தென்பகுதியில் கம்யூனிச இயக்கம் நிறுவியவர்களில் ஒருவர்

--அனில் ரஜீம்வாலே

-- நியூ ஏஜ் (ஏப்ரல் 3 –9)

          1939ல் மெட்ராஸ் போலீஸ் ஒரு விளம்பரம் இப்படி விவரித்தது: “சிஎஸ் சுப்பிரமணியம், நுங்கம்பாக்கத்தில் (மெட்ராஸ்) வசிப்பவர், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அதிகாரி சிஎஸ் ஐயரின் மகன், 5அடி 7அங்குல உயரம், ஒல்லியான உடல், வட்ட முகம், கோதுமை நிறம், நன்கு தலை வாரிய முடி.” இந்த வர்ணனைக்கு உரியவர் சிஎஸ் என்றறியப்படும் பேராளுமை கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர். 

            காலனிய அரசின் அவ்விளம்பரம் பின்வருவோரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ100 சன்மானம் வழங்கப்படும் என்றது. அப்படித் தேடப்பட்டவர்களில் எஸ் மோகன் குமாரமங்கலம், பி இராமமூர்த்தி மற்றும் எம்ஆர் வெங்கட்ராமன் அடங்குவர்.

            இந்தியாவின் தென்பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்த ஆளுமைகளில் சிஎஸ் சுப்பிரமணியமும் ஒருவர். மெட்ராஸ் சைதாபேட்டையில் 1910 ஜூலை 16ல் தஞ்சாவூர்

மாவட்டக் கல்வி அதிகாரி சுந்தரம் ஐயரின் முதல் குழந்தையாகச் சிஎஸ் பிறந்தார். அவர்களது குடும்பம் ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட, மைலாடுதுறை அருகே கோமல் கிராமத்திலிருந்து வந்தது. தந்தை பல ஊர்களுக்கு மாற்றல் செய்யப்பட்டதால் சிஎஸ் பல கல்வி நிறுவனங்களில் படித்தார். வேலூர் ஊரிஸ் கல்லூரியில் படித்த பின் மெட்ராஸ் பிரிசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார்

            1928ல் முதுநிலை இன்டர்மீடியட் வகுப்பில் படித்தபோது பிரிசிடென்சி மாணவர் பருவ நாட்களில் அவர் புகழ்பெற்ற கம்யூனிட்ஸ்ட் தலைவர் பி இராமமூர்த்தியைச் சந்தித்தார். சைமன் கமிஷன் வருகையை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறகணித்துச் ‘சைமன் குழுவே திரும்பிச் செல்’ போராட்ட இயக்கத்தில் பங்கேற்றனர். போராடிய மாணவர்களில் ஹெச் வி காமத் ஒருவர். 1930 உப்பு சத்தியாகிரக இயக்கத்துடன் சிஎஸ் அனுதாபம் கொண்டு ஆதரித்தாலும் விரைவில் வேறுபாடுகள் வளர்ந்தது; இறுதியில் ஏற்பட்ட காந்தி – இர்வின் ஒப்பந்தத்தை (1931) அவர் விரும்பவில்லை.

இங்கிலாந்தில்

            1930ல் உயர் படிப்புக்காகச் சிஎஸ் லண்டன் அனுப்பப்பட்டார்; தந்தையின் எதிர்பார்ப்பு ‘தொந்தரவுகளில்’ இருந்து அவர் விலகி இருப்பார், பிரிட்டிஷ் அரசு சேவையில் இயல்பான ஒரு வேலையை மேற்கொள்வார் என்பது. ஆனால் தந்தை எதிர்பார்ப்புக்கு எதிராகவே நடந்தது. ஆக்ஸ்ஃபோர்டு பல்லியோல் கல்லூரியின் படித்து வரலாறு பாடத்தில் முதுகலை எம்ஏ பட்டம் பெற்றார். காந்தியிசம் மற்றும் மார்க்சியத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட, அதன் விளைவாய் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் வேலை செய்வதில்லை என்று முடிவு செய்தார். ஐசிஎஸ் தேர்வில் எழுத்துத் தேர்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து மற்ற எல்லா தேர்வுகளிலும் தேறியும் இருந்தார்; ஆனால் ஸ்ரீ அரவிந்தரைப் பின்பற்றி, (கட்டாயமான) குதிரை சவாரியில் பங்கேற்க மறுத்து வேண்டுமென்றே தன்னைத் தானே தகுதியில்லாமல் செய்து கொண்டார்.

            ஆக்ஸ்ஃபோர்டில் கம்யூனிஸ்ட் மாணவர்களின் அக்டோபர் கிளப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB)யின் ‘டெய்லி ஒர்க்கர்’ பத்திரிக்கையில் தன்னார்வலராகப் பணியாற்றினார். ஆர்பி தத், கிளமெண்ஸ் தத் போன்ற CPGBயின் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ஐரோப்பாவில் பாசிசம் எழுச்சி பெற்று வந்த அக்காலத்தில் பாசிச எதிர்ப்பு, நாஜிகளுக்கு எதிரான இயக்கங்களில் CPGB முன்னணியில் இருந்தது.

            வட்ட மேஜை மாநாட்டிற்காக காந்திஜி லண்டன் வந்தார். சிஎஸ் மிகுந்த துணிச்சலுடன் அவரை இந்திய மாணவர்கள் இடையே உரையாற்ற பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்து வந்தார். காந்திஜி மீது அவர் அளப்பரிய மரியாதை வைத்திருந்தார், (காந்திஜியின் படுகொலை அவரது மனதில் ஆறாத வடுவாகத் தங்கி விட்டது). பின்னர் சிஎஸ், நேரு மற்றும் சுபாஷ் போசுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

            1933ல் இந்தியா திரும்பிய சிஎஸ், (1932ல் மெட்ராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிய) ஆர்யா என்கிற பாஷ்யம், ம சிங்காரவேலு, சக்கரைச் செட்டியார் மற்றும் கே முருகேசன் உள்ளிட்ட பிறரோடும் நெருக்கமாகப் பணியாற்றினார்.

            அப்போது விடுதலையாகி தலைமறைவாகப் பணியாற்றிய அமீர் ஹைதர் கானை (இத்தொடரில் 16வது கட்டுரை காண்க) 1934 ஜூலையில் இரகசியமாக அவர் சந்தித்தார். இருவரும் மற்றவர்களுடன் இணைந்து மெட்ராஸில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பது பற்றி விவாதித்தனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இராஜா வடிவேலு, பின்னர் நாளாவட்டத்தில் கம்யூனிஸ்ட் ஆனார். தனது மாதாந்திர செய்தி இதழின் தன்மையை அவர் கம்யூனிசம் சார்ந்ததாக மாற்றிக் கொண்டார்.

            போலீஸ் அறிக்கைகளின்படி தென்னிந்தியாவில் போல்ஷ்விக் பிரச்சாரம் செய்து வந்த ஒரே அமைப்பு தந்தை பெரியார் (ஈ வெ இராமசாமி நாய்க்கர்) நடத்திய சுயமரியாதை இயக்கம் மட்டுமே. சுய மரியாதை இயக்கம், அப்போது எழுச்சிபெற்று வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு கொண்டது. (இராஜா வடிவேலு போல) அதன் பல உறுப்பினர்களும் தலைவர்களும் கம்யூனிட்களாக மாறினர்.


மெட்ராஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுதல்

            சிஎஸ் கூறுகிறார்: “1934 –37 கால கட்டம் இங்கே (மெட்ராஸில்) கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வந்த நிகழ்முறையைச் சந்தித்தது” (மல்லிகார்ஜூன் ஷர்மாவுக்குச் சிஎஸ் அளித்தபேட்டி,1986). யாரெல்லாம் புரிந்து கொண்டு கம்யூனிசத்திற்காக உழைக்க முன்வருவார்களோ அவர்களை இயக்கத்திற்குள் கொண்டு வர அவரும் மற்றவர்களும் பெரு முயற்சி செய்தார்கள். 1937ல்தான் அவர்களால் சொந்தமாக செய்திப் பத்திரிக்கை வெளியிட முடிந்தது. குழு விவாதங்களையும் படிப்பு வட்டங்களையும் அமைத்தார்கள். தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலிருந்து செந்தொண்டர் படை (ரெட் வாலண்டீர் கார்ப்ஸ்) உருவாக்கினார்கள். சிஎஸ் மேலும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP) அமைக்கவும் உதவினார்; ஆனால் அக்கட்சியிலோ அல்லது காங்கிரசிலோ அவர் ஒருபோதும் முறையாக இணையவில்லை. ‘சுயமரியாதை’ சோஷலிஸ்ட் அமைப்பு முழுமையும் CSPல் சேர்ந்தது. CSPன் முதல் மாகாண மாநாடு 1936ல் சேலத்தில் நடைபெற்றது.

             CSPன் கட்சிப் பத்திரிக்கையாக ‘ஜனசக்தி’ இதழ் 1937 நவம்பரில் தோழர் ஜீவா என்கிற

ப ஜீவானந்தத்தால் நிறுவப்பட்டது; விரைவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழானது. ஜனசக்தியை நிர்வகிக்கும் பொறுப்பு சிஎஸ்-யிடம் அளிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தையும் அவர் நடத்தினார். தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தாலும் சிபிஐ கிளைஅமைப்பு 1934லேயே நிறுவப்பட்டது. மாகாணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உட்கரு குழுவாக ம சிங்காரவேலு, அமீர் ஹைதர் கான், சிஸ், கே பாஷ்யம், ‘ரஷ்யா’ மாணிக்கம், கம்மம்பட்டி சத்திய நாராயணா, வ சுப்பையா மற்றும் சிலர் இருந்தனர்.

            இரண்டாம் உலகப் போரின் சில மாதங்கள் வரை சிஎஸ் கட்சி செயலாளராக இருந்தார்.

       பாசிச எதிர்ப்புப் போராட்டம் எழுச்சி பெற்ற பின்னணியில் ஆர்பி தத் மற்றும் பென் பிராட்லே இருவரும் ‘தத்– பிராட்லே தீசிஸ்’ என அழைக்கப்படும் அறிக்கையைத் தயாரித்தனர்; தேசியவாதிகள் உள்ளிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுகளைப் பொதுவாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், குறிப்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைக்க வற்புறுத்தினர். தத் பிராட்லே கருதுகோள் அறிக்கை சிபிஐக்குப் பெரிதும் உதவியது.

மெட்ராஸ் சதி வழக்கு

            இரண்டாம் உலகப்போர் வெடித்ததும் பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட்கள் அலைஅலையாய் கைது செய்யப்பட்டனர். சிலரை அவர்களது கிராமங்களிலேயே சிறை வைத்தனர். “சட்டப்படியான ஆட்சியைத் தூக்கி எறிய சதி” செய்ததாகக் கம்யூனிட்ஸ்ட்களுக்கு எதிராக மூன்று சதி வழக்குகள். அதில் பிரபலமான ஒன்று 1940ன் மெட்ராஸ் சதி வழக்கு. இதற்கு முன்புதான் கட்டுரையின் தொடக்கத்தில் காணப்படும் சன்மான அறிவிப்பு விளம்பரம் தரப்பட்டது – குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்துத் தகவல் தருபவர்களுக்குச் சன்மானமாம்.

 முகுந்த்லால் சர்க்கார், சி எஸ், மோகன் குமாரமங்கலம், பி இராமமூர்த்தி (படம்), எஸ் சுப்பிரமணிய சர்மா, கேரளீயன், ஆர் உமாநாத் என பிரபலமான தலைவர்கள் மீது பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொலை செய்யவும் கஜானாவைக் கொள்ளையடிக்கவும் சதி செய்ததாகக் குற்றம் சுமத்தி, வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். ஜெகந்நாத் தாஸ் தலைவர், பி.இராமமூர்த்தி செயலாளர் என சட்ட உதவிக் குழு அமைக்கப்பட்டது. சட்டக் குழுவுக்கு கே பாஷ்யம் அய்யங்கார் தலைமை வகித்தார், குழு நடவடிக்கைகளில் சுபாஷ் சந்திர போஸ் தீவிரமாக ஈடுபட்டார். இது தவிரவும் திருநெல்வெலி சதி வழக்கு ஒன்று இருந்தது. சிஎஸ்-ம் மற்றவர்களும் 1942 ஜூலையில்தான் விடுதலை செய்யப்பட்டனர்.     

            விடுதலையானதும் சிஎஸ்-சுக்கு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த கட்சி நிலைபாட்டை விளக்குவது மிகவும் கடினமான ஒரு நேரமாக இருந்தது. கட்சி நிலைபாட்டின் மீது ஐயங்களை எழுப்பிய பி சீனுவாச ராவ் மற்றும் பி இராமமூர்த்தியுடன் சிஎஸ் இணைந்து கொண்டார் (சிஎஸ், ‘தமிழ்நாட்டில் நமது கட்சியின் வளர்ச்சி’ நூலைக் காண்க)

            கட்சியின் பெருமளவிலான பெருந்திரள் பணி, மண்ணெண்ணை, உணவுப் பொருள் வழங்கல், கறுப்புச் சந்தை கள்ள மார்கெட்காரர்களை எதிர்த்தல், பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிடல், போலீஸ் குண்டாந்தடித் தாக்குதல், துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ளல் மற்றும் 1943 வங்காளப் பெரும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றது என கட்சி ஆற்றிய பெரும் பணிகள் காரணமாக அன்றைக்குக் கட்சிக்கு எதிராக நிலவிய சூழ்நிலையையும் சந்தித்து கட்சியால் திரும்பப் போராட முடிந்தது.

            1946ன் கடற்படை எழுச்சி (RIN ரிவோல்ட்) போராட்டத்தின்போது கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறைகளை எதிர்த்துச் சிஎஸ் தீவிரப் பங்காற்றினார். அதற்கு முன் 1946 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் விமானப்படையினரும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பம்பாயில் போலீசின் கொடிய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மெட்ராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகே உள்ள மெமோரியல் ஹாலில் ‘பத்திரிக்கை தொழிலாளர் சங்க’த்தின் மாநாடு நடைபெற்றது; பின்னர் அது, ப ஜீவானந்தம் போன்றவர்கள் தலைமையில் கண்டனப் பேரணியாக மாறி நேப்பியர் பூங்கா சிந்தாதரிப்பேட்டை நோக்கி நடைபெற்றது. அன்று இரவே மெட்ராஸ் பகுதியின் தொழிற்சங்கக் கவுன்சில் வேலை நிறுத்தத்திற்கும், பொது கதவடைப்புக்கும் அறைகூவல் விடுத்தது – அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றியாக முழுமையாக நடைபெற்றது; ஷெட்டை விட்டு ஒரு டிராம் வண்டியும் வெளியே வரவில்லை; பஸ்கள் ஓடவில்லை, கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.  திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், மைலாப்பூர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து மாபெரும் பேரணிகள் புறப்பட்டன; போலீஸ் அவர்களைப் பெரம்பூரில் தடுத்து நிறுத்த முயன்றனர். பி அண்ட் சி மில் தொழிலாளர்களும் மற்றவர்களும்கூட வெளியே வந்தனர். இந்தச் செயல்பாடுகளில் மற்றவர்களுடன் சிஎஸ் முனையிலே முன் நின்றார். ஜனசக்தி அச்சகம் ஆயிரக் கணக்கில் துண்டறிக்கைகளை அச்சடித்து விடியற் காலையில் வினியோகித்தது.

பிடிஆர் காலமும் அதன் பின்னரும்

            (1948 –50) பிடிஆர் காலத்தில் நடத்தப்பட்ட அழிவுகளில் தோழமை இழப்பும் சந்தேகச் சூழ்நிலை உருவாக்கப்பட்டதும்தான் மிகவும் முக்கியமாக துரதிருஷ்டம், அது ஆகப் பெரும் அழிவு. சிஎஸ் சுப்பிரமணியம் பிடிஆர் பாதையுடன் உடன்படவில்லை, அப்படி உடன்படாத காரணத்தால் அவர் மிகவும் துன்பப்பட நேர்ந்தது. 1952ல் சிஎஸ், முற்றிலும் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  ஆனால் உண்மையில் அவர் ஒருபோதும் கட்சியைவிட்டு நீங்கவில்லை! அவர் எஸ் சுகுணா என்பவரைத் திருமணம் செய்தது சர்ச்சைக்குரிய பிரச்சனையானது. பின்னர் சுகுணா மருத்துவராகச் சேவையாற்றினார்.

            கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சிஎஸ் தமது இருப்பிடத்தை கோபிச்செட்டி பாளையத்தற்கு மாற்றினார்.

கே முருகேசனுடன் கூட்டு மற்றும் பெரும் எழுத்துப் பணி

            விரிவாகப் படிப்பதிலும் ஆய்வுப் பணிகளிலும் சிஎஸ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1980களின் தொடக்கத்தில், சிபிஐ மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) பதிப்பகத்தின் கீழ் ‘தென்னிந்திய ஆய்வுகள் நிறுவன’த்தை (ISIS, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சவுத் இந்தியன் ஸ்டடீஸ்) நிறுவினார்.  

மெட்ராஸ் மற்றும் தென்னிந்தியாவின் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் கே முருகேசனின் நெருங்கிய சகா, கூட்டாளியாவார் சிஎஸ். அவர்களது நட்பு 1930களிலிருந்து பழமையானது. இருவருமாக இணைந்து பல நூல்களைப் படைத்தார்கள்; அவற்றுள் 1975ல் ப்யூபிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்ட “சிங்காரவேலு -- தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்ற புகழ்பெற்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலும் ஒன்று.

ஆய்வு நூல்கள்

மற்றொரு முக்கியமான ஆங்கிலப் பெரும் படைப்பு, MPT ஆச்சார்யா : வாழ்வும் காலமும்.ஆச்சார்யா பிரபலமான புரட்சியாளர், வெளிநாடுகளில் பெரும்பணி ஆற்றியவர். சிஎஸ், ‘இந்தியச் சமூக அறிவியல் ஆய்வுக் கவுன்சில்’ (ICSSR) அமைப்பிடமிருந்து சிறியதொரு நிதிஉதவி கிடைக்கப் பெற்று ஆச்சாயா குறித்து, ‘தாஷ்கண்ட் சிபிஐ*’ அமைப்பதில் அவரது பங்களிப்பு உட்பட, முழுமையான விரிந்த ஆய்வினை மேற்கொண்டார். 

(*1920களில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை ஏற்படுத்த வெளிநாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களும் முயற்சி செய்து வந்தனர். அதுபோன்ற முயற்சியில் 1920ல் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பைத் “தாஷ்கண்ட் சிபிஐ” என்பர். அதுவே சிபிஐ முதலாவது அமைப்பு மாநாடு என்பது சிபிஐ (எம்) கட்சி நிலைபாடு. ஆனால் சிபிஐ கட்சியைப் பொருத்த அளவில், வரலாற்று அடிப்படையிலும் கட்சி ஒன்றாக இருந்தபோது நடைபெற்ற மத்தியக்குழு விவாதங்களின் அடிப்படையிலும் இந்திய மண்ணில் 1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற மாநாடே சிபிஐ முதலாவது அமைப்பு மாநாடு. – அனில் ரஜீம்வாலே முந்தைய கட்டுரைகளின் அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர் இணைத்தது. முழுமையான விவரங்களுக்கு ஆசிரியரின்  தனிக் கட்டுரையைப் பார்க்க).

மேலும் ஆச்சார்யா குறித்த தமது நூலுக்காக தமிழ்நாடு மாநில மற்றும் தேசிய ஆவணக் காப்பகங்கள், நேரு நினைவு (தீன் மூர்த்தி) நூலகம், பிசி ஜோஷி ஆவணங்கள் மற்றும் பூனாவில் இருக்கும் கேசரி- மராட்டா நூலகம் போன்ற இடங்களிலிருந்தும் தரவுகளை, மலர்கள் தோறும் தேன் தேறும் தேனீ என, தேடித் தேடி சேகரித்தார். இப்பணியில் அவர் அபூர்வமான குடும்ப ஞாபகார்த்த நினைவுகள் மற்றும் கடிதங்களை வெளிக்கொணர்ந்தார். அப்பெரும் படைப்பு 1955ல் வெளியிடப்பட்டது.

பாரதி ஆய்வுக்கு ஒரு கொடை

அமீர் ஹைதர் கான் எழுதிய ‘டிஸ்கவரி ஆப் சவுத் இந்தியா’ நூலின் தமிழ் மொழி பெயர்ப்பையும் அவர் ஆசிரியராக இருந்து பதிப்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழ் இதழான ‘இந்தியா’வில் எழுதிய கட்டுரைகளையும் சிஎஸ் தொகுத்தளித்தார். இப்பணியில் பாண்டிச்சேரி மக்கள் தலைவர் வ சுப்பையாவுடன் தனக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி, பாரதியின் ‘இந்தியா’ இதழ்களின் 1908 –09 ஆண்டு தொகுதியை அப்போது பாண்டிச்சேரியில் வசித்த மூத்த தமிழ் எழுத்தாளர் பி கோதண்டராமனிடம் இருப்பதைத் தேடிக் கண்டடைந்தார். சிஸ் பதிப்பித்த “பாரதி தரிசனம்” என்ற இவ்விரு தொகுதிகளே மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் குறித்து அறிவதற்கான பிரதான ஆதாரங்களாக உள்ளன.

தமிழ்நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு குறித்துச் சிஎஸ், “தமிழ்நாட்டில் நமது கட்சியின் வளர்ச்சி” என்ற தலைப்பில் எழுதிய சுருக்கமான சித்தரிப்பு நூலை 1998ல் சென்னையில் கட்சி காங்கிரஸ் நடந்த தருணத்தில் சிபிஐ தமிழ் மாநிலக் குழு ஆங்கிலத்தில் வெளியிட்டது.

புகழ்பெற்ற அறிஞர் வவெசு ஐயரின் கொள்கைகள் குறித்த கட்டுரைகளையும் சிஎஸ்

எழுதியுள்ளார். வவெசு ஐயர் (படம்) ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சிறுகதையையும்சேரன்மாதேவி குருகுல’த்தின் சார்பான வேண்டுகோளையும் தேர்ந்தெடுத்து, அவற்றை அத்தொகுதியின் பின் இணைப்பாக இணைத்துள்ளார். இத்தகவல்கள் எல்லாம், ‘ஸ்வதர்மா’ (சுய தர்மம்) என்ற வார இதழிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. (‘ஸ்வதர்மா,’ இதழ் ஒருக்கால், தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்காகப் பிரத்தேகமாக வெளிவந்த முதல் ஆங்கில வார இதழாக இருக்கலாம்)

லௌகீக முனிவர்

கம்யூனிஸ்ட் அறிக்கை’யை(கம்யூனிஸ்ட்-மெனிஃபெஸ்டோ)ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் படிக்க வேண்டும் என அவர் வற்புறுத்துவார். புரட்சிகரக் காங்கிரஸ்காரரும் தொழிற்சங்கத் தலைவருமான திரு வி கல்யாணசுந்தரனார் (திருவிக), தன் காலத்திய கம்யூனிஸ்ட்களை ‘லௌகீக சன்யாசிகள்’ என அழைப்பார் என்பது (தொண்டால் பொழுதளக்கும்) மூத்த சிபிஐ தலைவர் ஆர் நல்லகண்ணு தருகின்ற செய்தி. நல்லகண்ணு மேலும் கூறும்போது (திருவிகவின்) இந்த வர்ணனைச் சிஎஸ்-க்கு அப்படியே முழுமையாகப் பொருந்துகிறது என்றார்.

1980களின் பிற்பகுதியில், சோவியத் யூனியனின் *க்ளாஸ்னாஸ்ட் (வெளிப்படைத் தன்மை) சூழ்நிலையில், கட்சியில் தனக்கு மறுவாழ்வு (பழைய அந்தந்தஸ்து அளித்தல்) கோரி வேண்டுகோள் கடிதம் எழுதுமாறு சிஎஸ் கேட்டுக் கொள்ளப்பட்டார்; சிஎஸ், “தன்னை வெளியேற்றிய தீர்மானத்தை ரத்து செய்வது முறையாக இருக்காதா?” எனக் கட்சியைக் கேட்டார்!

[*1980களில் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கோர்பசேவ் செயல்படுத்திய கொள்கையே க்ளாஸ்னாஸ்ட் மற்றும் பெரஸ்ட்ரோயிகா. அவை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வெளிப்படை தன்மையையும் சீர்திருத்தத்தையும் வற்புறுத்தியது]

மனைவி இறந்ததற்குப் பிறகு சிஎஸ், தனது குடும்ப இருப்பிடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜோசியர் தெருவுக்கு மீண்டும் மாற்றினார். அவரது மூத்த சகோதரி அவரது வீட்டைப் பகிர்ந்து கொண்டார். சிஎஸ் மிகவும் சிக்கனமான மனிதர், தனது உணவைத் தானே சமைத்துக் கொண்டார்; உடைகளைத் தானே துவைத்தார். மனைவி டாக்டர் சுகுணா பார்கின்சன் நோயால் (முதுமையில் ஏற்படும் தீவிர மறதி நோய், கைநடுக்கம், நடையில் சமநிலை தவறுதல்) பாதிக்கப்பட்டபோது அவரை (‘காலச் சுமைதாங்கி போலே மார்பில் தனைத் தாங்கி, ஆலம் …வேரென இருந்து… வீழ்ந்து விடாமல்’) முழுவதுமாகக் கவனித்துக் கொண்டார், பிறர் உதவியை நாடாமலேயே.

சிபிஐ கட்சி பிளவிற்குப் பிறகு சிஎஸ் கட்சியுடனே இருந்தார். டாக்டர் அதிகாரியின் வேண்டுகோளை ஏற்றே ‘தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை’த் தொகுக்கும் பெரும் பணியைச் சிஎஸ் மேற்கொண்டார்.

ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் அவர் தீவிரமாகக் கலந்துகொண்டார், டாக்டர் மனைவியுடன் தனது காரை அவரே நீண்ட தொலைவு ஓட்டிச் செல்வார்.

கோபிச்செட்டிப் பாளையத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய அவருக்குச் சொந்தமான கட்டடத்தையும் இடத்தையும் நன்கொடையாக அளித்தார். அந்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு  மூன்று அடுக்கு மாளிகையை எழுப்பி, அதற்குச் ‘சிஎஸ்எஸ் நினைவு கட்சிப் பள்ளி” எனப் பெயர் சூட்டியுள்ளது.

சிஎஸ் சுப்பிரமணியம் தமது 101வது வயதில் 2011ம் ஆண்டு செப்டம்பர் 18ம் நாள் மறைந்தார். அவரை அறிந்த அனைவரும் அவர் நினைவுகளைப் புனிதமாகப் பொன்போல் போற்றுவர். 

எப்படி அத்தகைய மனிதரைஅவ்வளவுச் சுலபமாக மறந்துவிட முடியும்? மறக்க முடியாத மாமனிதர் சிஎஸ் சுப்பிரமணியம்! சிஎஸ் நினைவைப் போற்றுவோம்!

--தமிழில் நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

            

        

      

No comments:

Post a Comment