Wednesday 30 March 2022

உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் --அனில் ரஜீம்வாலே

 

உக்ரைன் நெருக்கடி : 
போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

--அனில் ரஜீம்வாலே

            உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகளின் நுழைவு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதன் முறையாக ஐரோப்பா நீண்ட போரின், அதுவும் அணுஆயுதப் போரின், விளிம்பில் நிற்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் வலிமை பொருந்திய பெரும் அணுஆயுதச் சக்திகள். அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற பயன்பாடே பொறுப்பற்றது. ஹிரோஷிமா பெருந்துயரை யாரும் மறந்துவிட முடியாது.

            போரிடும் இரு தரப்பு நாடுகளும் அதற்கான தங்கள் தங்கள் நியாயங்களைக் கூறுவர். பதற்றத்தையும் இராணுவ ரீதியான மோதல்களை போராக முற்றச் செய்வதிலும் நேட்டோ மற்றும் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக ரஷ்யா சரியாகவே குற்றம் சாட்டுகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவின் ஆயுதம் தாங்கிய இராணுவத் தாக்குதல், (சர்வ தேசச் சட்டப்படியான) உக்ரைனின் இறையாண்மையும் தேச ஒருமைப்பாட்டையும் தெளிவாக மீறிய செயலாகும்.

            சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (யுஎஸ்எஸ்ஆர்) மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சோஷலிச ஆட்சிகளும் வீழ்ச்சி அடைந்தது முதல், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆளுமை செலுத்தி கட்டுப்படுத்தவும் அந்நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராகத் தூண்டி விடவும் அமெரிக்கா முயன்று வருகிறது. பலம் பொருந்திய சோவியத் யூனியனிலிருந்து வரும் ‘அச்சுறுத்தல்’களின் பெயரில் கடந்த காலத்தில் அமெரிக்கா தனது இராணுவ – ஏகாதிபத்திய விரிவாக்கத்தையும் நேட்டோ இராணுவத் தளங்கள் கட்டுவதையும் நியாயப்படுத்தியது. ‘பனிப்போர்’ என்று அழைக்கப்படும் பதற்றமான சூழ்நிலைக்குச் சோவியத் யூனியன்தான் காரணம் என்றது. அந்த வாதத்தின்படி பார்த்தால், சோவியத் யூனியன் உடைந்து சிதறிய உடன் பனிப் போரும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

            ஆனால் சோவியத் மற்றும் முன்னாள் கிழக்கு ஐரோப்பிய சோஷலிச ஆட்சிகளின் வீழ்ச்சி மேற்குலகிற்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியது. ஐரோப்பாவிலிருந்து இராணுவ நிலைகளைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக அவர்கள், கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் நடத்திய (இராணுவ ரீதியிலான) கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை, உண்மையில் மேலும் கூடுதல் தீவிரத்துடன், செய்து வருகிறது. போலந்து, பால்டிக் நாடுகள், ருமேனியா முதலிய நாடுகளில் நேட்டோ இராணுவத் தளங்களை நிறுவியுள்ளது. நேட்டோ இராணுவக் கூட்டணியில் அல்பேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, ஸ்லோவேனியா, பல்கேரியா முதலியன உறுப்பு நாடுகளாக உள்ளன. நேட்டோவில் ஒரு போதும் உக்ரைன் உறுப்பினராக இருந்ததில்லை; இந்நிலையில், 1991க்கு பிந்தைய ரஷ்யா நேட்டோவில் உறுப்பினராகச் சேர திரும்பத் திரும்ப மனு செய்தது என்பது, சரித்திரத்தின் விநோதமான திருப்பம் இல்லையா!

            ஒருபுறம் அமெரிக்காவும் நேட்டோவும், மறு புறத்தில் ரஷ்யாவுமாக நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இராணுவ மற்றும் அரசியல் பரிசோதனைக் கூடமாக உக்ரைனை மாற்றி விட்டன. மேற்குலகு, குறிப்பாக அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட்டு, அந்நாட்டில் தன் விருப்பத்திற்கேற்ற ஆட்சிகளைக் கொண்டுவர தேர்தல் நடைமுறைகளில் செல்வாக்கு செலுத்த முயன்றது; ரஷ்யாவுக்கு எதிரான பாசிசக் குழுக்களுக்கும் உதவியது. ரஷ்ய எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத் தளமாக உக்ரைனை அமெரிக்கா பயன்படுத்தியது. நேட்டோவின் கொள்கைகளைக் கூடுதல் சாக்காகப் பயன்படுத்தி, ரஷ்யா தனது சொந்த நலன்களை உக்ரைன் மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியை நோக்கி நீட்டித்தது. ரஷ்யாவின் இராணுவப் படையெப்புக்கு எந்த நியாயமும் இல்லை. ரஷ்யா உக்ரைனை நசுக்க முயல்கிறது.

உக்ரைன் : சிறிய வரலாறு மற்றும் லெனினிய நிலைபாடு

            உக்ரைன், ஜார் மன்னன் சாம்ராஜ்யத்தின் கீழ் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஒன்று; அதனால்தான் அந்நாடு சரியாக ‘நாடுகளின் சிறைச்சாலை’ (‘prison of nations’) என அழைக்கப்பட்டது. ஜாரின் ஆட்சியில் சிறிய மற்றும் வலிமை குன்றிய நாடுகள்/ தேசங்கள் ரஷ்ய ஏகபோக, ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ – இராணுவ முறையின் கீழ் சுரண்டலுக்கு ஆளாயின; மோசமாக நடத்தப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டன. அந்நாடுகளின் ஒன்றான உக்ரைன் எப்போதும் தனது சுதந்திரமான அடையாளத்திற்காகப் போராடியது.

            1917 ரஷ்யப் புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யா (சோவியத் யூனியன் அல்ல) அந்த அனைத்து தேசங்கள் மற்றும் நாடுகளை விடுதலை செய்வதாக அறிவித்தது. (தேசம் என்பது பொதுவான மொழி, கலாச்சாரம் உடைய மக்கள் தொகுதி; நாடு என்பது மக்களோடு இறையாண்மையும் தன்னாட்சி அரசியல் அதிகாரமும் உடைய நிலப்பரப்பைக் குறிப்பது.)  மேலும் நாடுகள், சோவியத் கூட்டமைப்பு / யூனியனில் இருப்பதா அல்லது (தனி நாடாக) விலகிச் செல்வதா என்பதைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம் என அறிவித்தது.

            விடுதலை மற்றும் பிரிந்து செல்லும் சுதந்திர உரிமையை உக்ரேனியர்களுக்கும், ஜார் சாம்ராஜ்ய ரஷ்யாவின் அங்கங்களான பிற நாடுகளுக்கும் முதலாவதாக அங்கீகரித்தது போல்ஷ்விக்குகளும் லெனினும்தான். ஜார் மன்னன் ‘நாடுகளின் சிறைச்சாலை’யிலிருந்து அவர்களை விடுவித்தாக வேண்டும். 

            1917, நவம்பர் 7 புரட்சிக்குப் பிறகு, லெனினும் அவரது அரசும் நாடுகளுக்குச் சோவியத் ரஷ்யாவில் நீடித்திருக்கவோ அல்லது பிரிந்து செல்லவோ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை கொடுத்தது. 1918ல் பின்லாந்து பிரிந்து சென்றது. முதலில் ரஷ்யச் சம்மேளனம், பின்னர் 1922ல் மாற்றியமைக்கப்பட்ட சோவியத் சோஷலிசக் குடியரசு ஒன்றியத்தில் (யுஎஸ்எஸ்ஆர்) நீடித்திருப்பது என்பதை உக்ரைன் தேர்ந்தெடுத்தது.

           

உக்ரைன் மீதான நிலைபாட்டை லெனின் திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்தினார். 1917ன் மத்தியில் அவர் சொன்னார்: “எந்த ஜனநாயகவாதியும், சுதந்திரமாக ரஷ்யாவிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையை உக்ரைனுக்கு மறுக்க முடியாது. தன்னிச்சையாக முன்வந்து இரண்டு மக்களின் கூட்டமைப்பாக ஒரே நாட்டின் ஆட்சியின் கீழ் இருக்க -- சுதந்திரமான உக்ரேனியர்களின் யூனியனுக்கும் மற்றும் பெரும் ரஷ்யர்களுக்கும் (தி கிரேட் ரஷ்யன்ஸ்) -- ஆலோசனை கூற வேண்டுமெனில், இவ்வுரிமையை நிபந்தனையற்று அங்கீகரிப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியம். சபிக்கப்பட்ட ஜாரியத்தின் கடந்த காலத்திலிருந்து முழுமையாக மீண்டும் திரும்ப முடியாதபடி உண்மையில் உடைத்துக் கொண்டு வர, இந்த உரிமையை நிபந்தனை அற்று அங்கீகரிப்பதே வழி. ….சபிக்கப்பட்ட ஜாரிசம், உக்ரேனிய மக்களைத் தூக்கு மேடையில் ஏற்றி தி கிரேட் ரஷ்யர்களைக் கொலை தண்டனை நிறைவேற்றுபவர்களாக ஆக்கியது…”

(தேர்ந்தெடுத்த லெனின் படைப்புகள் தொகுதி 25 பக்கம் 91 –92 பார்க்க)

            1919 டிசம்பரில் லெனின் மீண்டும் எழுதினார்: “உக்ரைனில் சோவியத் அதிகாரம் அதற்கான சொந்த சிறப்புக் கடமை பொறுப்புகளை உடையது … ஒன்று,… உக்ரைன் ‘தனியான சுதந்திர உக்ரேனியன் சோவியத் சோஷலிசக் குடியரசு கூட்டமை’ப்பாக ரஷ்யன் சோஷலிசக் கூட்டமைப்பான சோவியத் குடியரசுடன் சேர்ந்து இருக்க வேண்டுமா என்பது முதல் கேள்வி …

“ உக்ரைனின் சுதந்திரத்தை R.S.F.S.R, ரஷ்ய சோஷலிச கூட்டமைப்பான சோவியத் குடியரசின் அனைத்து ரஷ்ய மத்திய செயற்குழு மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) இரண்டாலும் அங்கீகரிக்கப்பட்டது”    “… உக்ரைனிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அவர்களாக மட்டுமே முடிவு செய்ய முடியும் …”

1922ல் சோவியத் சோஷலிச குடியரசின் ஒன்றியம் (பொதுவாக சோவியத் யூனியன் என அழைக்கப்படும்) யுஎஸ்எஸ்ஆர் நிறுவப்பட்ட பிறகு உக்ரைன், ‘உக்ரேனிய சோவியத் சோஷலிசக் குடியரசு’ என, யுஎஸ்எஸ்ஆர்–இன் இணைப்பு குடியரசுகளின் ஒன்றாக ஆனது. சோவியத் யூனியன் 15 குடியரசுகளைக் கொண்டது, அவை ஒவ்வொன்றும் பிரிந்து செல்வது உட்பட சுயநிர்ணய உரிமை உடையன.

யுஎஸ்எஸ்ஆர் ஆட்சியில் உக்ரைன் வளர்ச்சியும் மக்கள் மனநிலையும்

    சோவியத் குடியரசுகளுக்குள் உக்ரைன் பெரும் பலன் அடைந்தது. சோவியத் ஆட்சியின்போது உக்ரைனின் பொருளாதாரம், பொதுவான மக்கள் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள், கல்வி, மக்களின் சுகாதார ஆரோக்கியம், தகவல் தொடர்புகள் முதலிய துறைகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

அதே நேரத்தில், உக்ரைனியர்கள் தங்கள் தேசத்தின் பல்வேறு பண்பாட்டு, கலாச்சார மற்றும் அடையாள அம்சங்கள், குறிப்பாக லெனின் மறைவுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்; மேலும், தங்கள் மரபு, பாரம்பரிய வழக்கங்கள், கலாச்சாரப் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை ‘ரஷ்ய மயம் ஆக்கப்படுவ’தாகவும் ஒடுக்கப்படுவதாகவும் உணர்ந்தனர். உக்ரைனியர்கள் தீவிரமான தேசியவாதிகள் (உக்ரைனிய தேசியம்) மற்றும் சுதந்திரமான உணர்வு படைத்த மக்கள். இது ஓர் உணர்வுநிலை சார்ந்த பிரச்சனை. கடந்த பல்வேறு காலங்களில் நடந்த சோவியத் ஆட்சிகள், இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த ஆட்சிகளோ அல்லது பிந்தைய ஆட்சிகளோ, எப்போதும் (உக்ரைனியர்களின்) இந்தப் பிரச்சனையைப் போதுமான அளவு நிறைவளிக்கும் வகையில் கையாளவில்லை.  

உக்ரைன் ‘லெனின் உருவாக்கியது அல்ல’

            1991ல் சோவியத் யூனியன் சரிவுக்குப் பிறகு, உக்ரைன் விடுதலையைப் பிரகடனம் செய்து, தனி நாடானது. உக்ரைன் ‘லெனின் உருவாக்கியது’ என்பதுபோலச் சொல்வது தவறு. அதற்கு மாறாக, மேலே விவரிக்கப்பட்டபடி உக்ரைன் வரலாறு உருவாக்கியது. சுதந்திரமான, இறையாண்மை உள்ள அமைப்பாக (entity) உக்ரைன் நடத்தப்பட வேண்டும். அது, வல்லரசு நாடுகளின் பெரும் அதிகார மோதலில் சோதனைச் சாலையில் வதைபடும் சிறு விலங்குகளாக (கினியா பிக், கினிப் பன்றி) நடத்தப்படக் கூடாது; அந்த மோதலில் நேட்டோ மற்றும் மேற்குலக நாடுகளால் அவர்களின் சூழ்ச்சித் திட்டங்களில் உக்ரைன் கட்டாயப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகிறது. மறுபுறத்தில், அது ரஷ்யாவால் அச்சுறுத்தப்படுகிறது, ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு ஆளாகிறது – அதனால் புதிய தன்னல நோக்கம் உருவாகிறது. நம் ஆர்வத்தைத் தூண்டிக் கூடிய ஒரு செய்தி, ஐநாவின் பொதுச் சபையில் சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு மூன்று வாக்குகள் – அதாவது, யுஎஸ்எஸ்ஆர், பெலாரஷ்யா குடியரசு (ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள நாடு) மற்றும் உக்ரைன்; உக்ரைனின் குடியரசு அந்தஸ்தைக் கருதி அதற்கு ஒரு வாக்கு.

சமூகப் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள்

            சோவியத் யூனியன் சிதறி சுமார் 30 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்தக் காலக் கட்டத்தின்போது இப்பிராந்தியத்திலும் ரஷ்யாவிலும் தீவிரமான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் நடந்தேறின. இந்த இடைக் காலத்தில் ரஷ்யா பெரும் உலக சக்தியாக நன்கு வெளிப்பட்டது.

            ஒரு வகையில் பார்த்தால், ரஷ்யாவின் எழுச்சி உலக மக்களுக்கு, ஆதரவு அளிக்கும் சக்தியாகவும், மேற்குலக நாடுகள் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தும் சக்தியாகவும் நிம்மதி ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகளின் காய் நகர்த்தல் திட்டங்களுக்கு எதிராக, பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு உண்மையில் ரஷ்யா உதவி செய்தது; அதன் மூலம், அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு எதிரான (பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையை) சமநிலைப்படுத்தும் எதிர்த்திறன் வன்மையுடையதாக (deterrent against the West) நிரூபித்தது.

இப்பிராந்தியத்தில் குறுக்கும் நெடுக்குமாக இன்று கச்சா எண்ணெய் மற்றும் பிற பைப்லைன்களோடு மாற்றங்களும் ஏற்பட்டன. கச்சா எண்ணெய், பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல அரசியலிலும், முக்கியமான ஆதார வளம். முரண்படும் அரசியல் கட்டமைப்புகள் இப்பகுதியில் உருவாயின. செல்வாக்கு செலுத்தும் புதிய ஆளும் வர்க்கங்களும் வட்டங்களும் ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் எழுந்தன. அரசியல் நிலைபாடுகள் எடுப்பதை,  நிலக்கரி, கோதுமை, எரிபொருள் எண்ணெய், போக்குவரத்து, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இராணுவ வலிமை அதிகரிப்பு முதலியன மேலும் மேலும் நிர்ணயிக்கத் தொடங்கின. பல நேரம் வலதுசாரிகளுக்கு உக்ரைன், புதிய பொருளாதார மற்றும் அரசியல் கொதிநிலைக் களனாக (ஹாட்பெட்) உருவானது. மத்திய தரைக்கடல் பகுதிக்கும் மற்றும் அங்கிருந்தும் போஸ்போரஸ் மற்றும் டார்னயநெலீஸ் வழியாக வர்த்தகம் நடைபெறுவது பல மடங்கு அதிகரித்தது – இது கேந்திரமான புவிசார் அரசியல் அம்சமானதால், உக்ரைனின் முக்கியத்துவத்தை அதிகரித்தது.  

புதிய வர்க்க (இணைவு) உருவாக்கம்

            ரஷ்யாவும் உக்ரைனும் மற்றும் அதுபோல இப்பகுதியின் பிற நாடுகள் ஒவ்வொன்றும் மேலும் வளர்ச்சி பெற அதனதன் சொந்த பாதைகளைப் பின்பற்றின. உக்ரைன் மற்றும் ரஷ்யா இரண்டிலும் புதிய பணக்காரர்கள், அட்டைபோல் உறிஞ்சும் அரசு ஆதரவு முதலாளிகளின் (க்ரோனி பூர்ஷ்வாகள்) நலன்கள், பொதுவாக அடிக்கடி வர்த்தகம் மற்றும் வணிக அடிப்படையில், உருவாயின. ரஷ்யா முதலாளித்தவ மேல்தட்டு சார்புடைய தன்னல சிறுகுழு ஆட்சி (oligarchic) நலன்களை வளர்த்தது; அவை ஏற்கனவே அவர்களிடம் சோவியத் காலத்திலிருந்து ஸ்வீகரிக்கப்பட்ட அபரிமிதமான செல்வத்துடன் புதிய நிறுவனங்கள் மூலம் உருவான புதிய செல்வத்தையும் சேர்த்துப் பயன்படுத்தியது. அவர்களுள், குறிப்பாக ரஷ்யா தொழிற்சாலைகளை உருவாக்கி ஆலைமயமாக்கியது. இரண்டு நாடுகளிலும் மட்டுமல்லாமல் அண்மை நாடுகளிலும் புதிய நடுத்தர வர்க்கம் எழுந்தது.

            நோட்டோ மற்றும் அது போன்ற பிற சக்திகளிடமிருந்து தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்துதல் போன்ற பிரச்சனைகளில் ரஷ்ய நிலைபாடு நியாயப்படுத்தும்போது புறக்கணிக்க முடியாத வேறு சில சங்கடப்படுத்தும் நிச்சயமான எதார்த்த உண்மைகளும் உள்ளன.  

சங்கடப்படுத்தும் அம்சங்களுடன் ரஷ்யா புதிய சக்தியாக உருவாகிறது

            பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தனது சொந்த இராணுவ தொழிற்சாலை வளாகங்களை (மிலிட்டரி காம்ப்ளக்ஸ்) மேம்படுத்தி இராணுவ ரீதியாகவும் ரஷ்யா புதிய உலக அதிகாரச் சக்தியானது. இதன் விளைவாய், ரஷ்யா தனது தன்னலக் குழு நலன்களை வளர்த்தது: அது வெளிப்படுத்தும் குறிப்பிட்ட சங்கடப்படுத்தும் அம்சங்களை வெறும் நேட்டோவிடமிருந்து அச்சுறுத்தல் என குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. (அதன் ஒரு வெளிப்பாடாய்) அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் சாத்தியம் என்ற தேவையற்ற பேச்சு குறிப்பிடப்படுவதை இச்சூழலில் ஒருவர் காண முடியும். ஒருபோதும் ஹிரோஷிமாவை யாரும் மறந்துவிட முடியாது. நேட்டோவிடமிருந்து ரஷ்யாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கேள்வி புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும் உக்ரைனுக்குள் ரஷ்ய இராணுவத்தினரின் மிகப்பெரும் படையெடுப்புத் தாக்குதல் முற்றிலுமாக தேவையற்ற ஒன்று. உக்ரைனிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலை ரஷ்யா மற்ற வழிகளில் சந்தித்திருக்க முடியும்.

            ரஷ்யா ‘அகண்ட ரஷ்யா’வாக (கிரேட்டர் ரஷ்யா) எத்தனிக்கிறது.  

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு:

            அபாயகரமானது, நியாயமற்றது, ரஷ்ய இராணுவப் படையெடுப்பு முற்றிலுமாகத் தேவையற்றது. உக்ரைனிடமிருந்து உடனடியான இராணுவ அச்சுறுத்தல் ரஷ்யாவுக்கு இல்லை, அல்லது எல்லையில் உக்ரைன் படைகள் குவிக்கப்படவும் இல்லை. மாறாக, எல்லையில் ரஷ்யப் படைகளைக் குவித்து அழுத்தம் தருவதையும் அதே நேரம் பேச்சுவார்த்தை நடத்துவதையும் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எதற்காக ஆக்கிரமிப்புப் படையெடுப்பு? இத்தனைக்கும் உக்ரைன் முறையான நேட்டோ உறுப்பினர்கூட இல்லை. அதன் மண்ணில் வெளிநாட்டு இராணுவ வீரர் ஒருவர்கூட இல்லை. தன்னிடமிருந்த அணுஆயுதக் களஞ்சியத்தை (ஸ்டோர்) ரஷ்யாவிடமும் அணுசக்தி எரிபொருளை (ஃப்யூயல்) அமெரிக்காவிடமும் ஏற்கனவே கையளித்து விட்டது. எனவே அதனிடமிருந்து அணுஆயுத அச்சுறுத்தல் இல்லை. உக்ரைன் நிச்சயமாக வலதுசாரியைத்தான், பாசிசச் சக்திகளையும்கூட ஆதரிக்கிறது: ஆனால் அது எந்த வகையிலும் தாக்குதலுக்கான அடிப்படையைத் தந்துவிடாது.

       உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ரஷ்யாவின் புதிய அபாயகரமான அம்சத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது : அது பிரச்சனைகளை இராணுவ வழிமுறையில் தீர்க்க எத்தனிக்கிறது.. ரஷ்ய நடவடிக்கையானது பெரிதும் இராணுவ உத்தி சார்ந்த ஒன்று என்ற முடிவுக்கு ஒருவர் வருவதைத் தவிர்க்க முடியாது; அந்த இராணுவ உத்தி, உக்ரைனை நசுக்கி மத்திய தரைக்கடல் பகுதிக்கும், அதனோடு கிரிமீயா, மரியுபோல், செவஸ்டோபோல் முதலிய கேந்திரமான தளங்களுக்கும் வழிப்பாதை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது. லுகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகள் நிலக்கரி மற்றும் பிற பொருட்களுக்குக் கேந்திரமானது. உக்ரைனில் கோதுமை உற்பத்தி, உலகத்திற்கே முக்கியமான கூடை என்ற அளவு, மிக அதிகம். உக்ரைன், நேட்டோ தளமான துருக்கிக்கு எதிரான முக்கியமான தளத்தை வழங்கக் கூடியது.

உக்ரைன் இறையாண்மை உள்ள நாடு

உக்ரைன் சுதந்திரமான இறையாண்மை உள்ள நாடு, பலம்பொருந்திய இராணுவப் படையெடுப்புக்கு எதிராகத் தனது சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறது. சுதந்திரமான எந்த நாடும் அதைத்தான் செய்யும், செய்ய வேண்டும். 21ம் நூற்றாண்டு என்பது ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒன்று. இந்த நூற்றாண்டில் இராணுவ வழிமுறைகள் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். இது மிகக் கூடுதலாக அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்குப் பொருந்தும், மேலும் ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கும் பொருந்தும்.

இன்றைய உலகில், சிறிய, எளிய மற்றும் நொய்மையான நாடுகள் மற்றும் தேசங்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை தனிச் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

நம் நம்பிக்கை -- போர் முடிவுக்கு வர வேண்டும்

          சாந்தியும் சமாதானமும் அமைதியும் விரும்பும் உலக மக்கள், முரண்பாடு மோதல்கள் மற்றும் உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வர விரும்புகிறார்கள். ரஷ்ய இராணுவத் துருப்புக்கள் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர்கள் மீண்டும் பேச்சு வார்த்தைக்குத் திரும்ப வேண்டும். அமைதியே ஒரே மாற்று.

 சாந்தி நிலவ வேண்டும் – உலகிலே

 சாந்தி நிலவ வேண்டும்

 கருணை, ஒற்றுமை கதிரொளி பரவி

 சாந்தி நிலவ வேண்டும்

 காந்தி மகாத்மா கட்டளை அதுவே”       


 
--நியூ ஏஜ் (மார்ச் 27 – ஏப்ரல் 2)                                                 
--தமிழில் : நீலகண்டன், 
  என்எப்டிஇ, கடலூர்
                                                                                                                    

No comments:

Post a Comment