Thursday 28 April 2022

விடுதலை அடைவதற்கு முன் இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம்


விடுதலை அடைவதற்கு முன் 

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம்

--திக்காரம் சர்மா

            ஐரோப்பாவில் ஆலைத் தொழிலாளி தோன்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாகத்தான் இந்திய ஆலைத் தொழிலாளி என்போர் பிறந்தார்; அங்கே ஏற்கனவே தொழிற்புரட்சி நடந்துவிட்டதே அதன் காரணம். ஆலைகள் இல்லாத இந்தியா முழுமையாக ஒரு வேளாண் சமுதாயம் என்பதால் ஆங்கிலேய மற்றும் இந்தியத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தவர்கள் மற்றும் விவசாயம் செய்தவர்களே இங்கே உழைப்பாளிகள். இங்கே வசித்தவர்கள் விவசாயிகள், நிலச்சுவான்தார்கள் மற்றும் கைவினைஞர்களான கொல்லர்கள், நெசவாளிகள், தையல்காரர்கள், காலணிகள் செய்வோர், குயவர்கள், தச்சர்கள் போன்றோரே; அவர்கள் ‘குடைகள் செய்வோம், உழுபடைகள் செய்வோம்’ என சமுதாயத்திற்குத் தேவையான கருவிகள், உடைகள், பானைகள் முதலியவற்றைச் செய்வதை வழக்கமாகக் கொண்டனர்.

            இருப்பினும் பின்னர், நில உடைமையாளர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களால் நாசமாக்கப்பட்ட விவசாயிகளும், ஆங்கில ஆட்சியாளரால் அழிக்கப்பட்ட கைவினைஞர்களும் தங்களது கிராமங்களிலிருந்து மந்தை மந்தையாக அருகே கடற்கரைகளை ஒட்டியிருந்த புது நகரங்களுக்கு இடம் பெயர நிர்பந்திக்கப்பட்டனர்; அங்கே கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கும் சுமையாட்களாகவோ அல்லது வீட்டு வேலைக்காரர்களாகவோ பணி செய்தனர். பெரும் எண்ணிக்கையிலான இந்திய உழைப்பாளிகள் தென்னாப்பிரிக்கா, பசிஃபிக் கடற்கரை மற்றும் ஃபிஜி போன்ற நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றனர். உழைப்பாளிகளின் அத்தகைய இடப்பெயர்வு ஓட்டம் 1830ம் ஆண்டில் தொடங்கி 1922வரை நீடித்தது.

புதிய தொழிலாளர் வர்க்கம்

            1853ல் முதலாவது இரயில் பம்பாயிலிருந்து தானே வரை இயங்கத் தொடங்கியது போல அதே வருடம் முதலாவது டெக்ஸ்டைல் மில் செயல்படத் தொடங்கியது. இந்தியாவில் முதலாவது சணல் ஆலை 1853ல். இதன் விளைவாய் புதிய தொழிலாளர் வர்க்கம் பிறந்தது. 1852 முதல் 1880வரை இந்த ஆலைகளில் தொழிலாளர்கள் மிக மோசமான மனிதத் தன்மையற்ற வகையில் சுரண்டப்பட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தொழிலாளர்களும் 12 மணி நேரம், 16, 18 ஏன் 23 மணி நேரம் வரையில் உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.  5 அல்லது 6 வயதான குழந்தைகளே வளர்ந்த பெரியவர்கள்போல முழு நேரப் பணி செய்தனர். முதலாளி வர்க்கத்தின் இத்தகு கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் நிலையில் தொழிலாளர் வர்க்கம் இல்லை. எனவே சட்டப்படியான நிவாரணங்கள் அல்லது சீர்திருத்தங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.  இக்கால கட்டத்தில் நாட்டில் 156 ஆலைகளும் 44ஆயிரம் தொழிலாளர்களுக்குக் குறையாத உழைப்புச் சக்தியும் அவற்றில் ஈடுபடுத்தப்பட்டது.

 இந்த மலிவான குழந்தைத் தொழிலாளர் முறை காரணமாக ஆங்கில மற்றும் இந்திய உரிமையாளர்களின் இந்திய ஆலைகள், லங்காஷயர் பஞ்சாலைகளுடன் போட்டியிட்டது; இங்கிலாந்தின் ஆங்கில உரிமையாளர்கள், இந்தியாவில் தொழிலாளர்கள் மீதான மிகக் கூடுதலான சுரண்டலை இந்திய அரசு தடுக்க வேண்டுமெனக் கோரினர். இதன் விளைவாய் இந்தியாவில் இருந்த தொழிலாளர்களின் நிலை குறித்து விசாரிக்க ஃபாக்டரி கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அந்த விசாரணைக் குழு ஞாயிறு விடுமுறையைச் சிபார்சு செய்தது; மேலும் இந்தியக் குழந்தைத் தொழிலாளர் வயது குறித்தும், பெண்கள் இரவு நேரப் பணியாற்ற வேண்டியது குறித்தும் கவலையுற்று வருத்தம் தெரிவித்தது. 1890வாக்கில் ஞாயிறு விடுமுறை, 9 வயதிற்குக் கீழான குழந்தைத் தொழிலாளர் தடை போன்ற சிபார்சுகள் அமல்படுத்தப்பட்டன.

            ஓர் ஆலைத் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கிய என் எம் லோஹான்டே பின்னர் பத்திரிக்கையாளராகி, ஆலைத் தொழிலாளர்களிடையே பணியாற்றத் தொடங்கி அவர்களது பிரச்சனைகளைப் புரிந்து கொண்டார். அவர் ‘தீனபந்து’ என்ற மராத்தி வாராந்திரப் பத்திரிக்கையை 1877 ஜனவரியில் தொடங்கினார். (இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் மக்களின் குறைகளும் செய்திகளும் முதன்முறையாக வெளிப்படையாக வெளியிடப்பட்டன.) 1884 ஏப்ரலில் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர் கோரிக்கை கடிதத்தைத் தயாரித்தார்.  

            முக்கியமான கோரிக்கைகள்: வேலை நேரம், வாராந்திர ஓய்வு, உணவு இடைவேளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பணி. 1890 ஏப்ரலில் சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மனு ஒன்று வடிவமைக்கப்பட்டு “ஆலைக் கரங்கள்” (‘Mill Hands’) என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்புக்கு உறுப்பினர் (கட்டணம்/ சந்தா) இல்லை, அமைப்பை நடத்த நிதியும் ஏதும் இல்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகள் சம்பந்தமான ஆதாரத் தகவல்களைத் திரட்ட லோஹாண்டேவை அரசு நியமித்ததுதான் இதன் ஒரே பயன். ஆனால் துரதிருஷ்டம், 19ம் நூற்றாண்டிற்குச் சற்று முன் அவர் இறந்துவிட்டார்.

தொழிலாளர் இயக்கத்தின் இரண்டாவது கட்டம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. அச்சகத் தொழிலாளர்கள், யூனியன் மெட்ராஸ் (1903), தி பாம்பே போஸ்டல் யூனியன் (1907), தி காம்கர், ஹிட்வார்தக் சபா (தொழிலாளி, நலவாழ்வு மன்றம்) முதலிய சில தொழிலாளர் அமைப்புகள் உருவாயின. இக்கால கட்டத்தில் எண்ணற்ற வேலைநிறுத்தங்கள்  நடைபெற்றன. பஞ்சாலைகளில் பணிநேரம் குறித்த தகராறு தொடங்க, வேலைநிறுத்தங்கள் நடைபெற்று, அவை கலகங்களில் முடிந்தன. இது தவிர பிரிட்டிஷ்காரர்கள் கைகளில் இருந்த இரயில்வேயிலும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தத்தில் ஆங்கிலேய ஓட்டுநர்களும்கூட பங்கேற்றனர். இரயில்வே நிர்வாகம் அவர்கள் பங்கேற்பதைத் தவிர்க்க எடுத்த தீவிர முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.  வங்கப் பிரிவினை காரணமாக நாடுமுழுவதும் மக்களிடையே கொந்தளிப்பு நிலவியது. வங்கப் பிரிவினைக்கான அரசாணை (கெசட்) அறிவிக்கையை அச்சிட மறுத்த கல்கத்தா அரசு அச்சகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகிய மூன்று புகழ்பெற்ற தலைவர்கள் அந்த இயக்கத்தை வழிநடத்தினர்.

            தொழிற்சாலை செயல்பாடுகள் வளர்ச்சி அடைந்ததன் காரணமாகத் தொழிலாளர்கள் எண்ணிக்கை நாட்டில் அபரிமிதமாக அதிகரித்தது. சுரங்கம், எஃகு, பொறியியல், இரயில்வே, ஆயில் முதலிய புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டன. இவை அனைத்தும் தனியார் கைகளில் இருக்க, பொதுப் பணித் துறை, தபால் தந்தி மற்றும் வேறு சில அரசுத் துறையில் முதலாவது உலகப்போர் வரை இருந்தன. விரைவில் கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ், கராச்சி, கான்பூர் முதலிய புதிய மாநகர்கள் உருவாயின. புதிய தொழிற்சாலை பிரிவுகளைச் சுலபமாகத் தொடங்க முடிந்ததால் இந்திய ஆலை முதலாளிகளுக்கு இக்கால கட்டம் வளமாக அமைந்தது.

வர்க்கம் பிறந்தது

            இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தை முதலுலகப் போர் புதிய சகாப்தத்தில் செலுத்தியது. போர் இந்திய ஆலைத் தொழிலாளர் கண்ணோட்டத்தை ஒரு வர்க்கம் என்ற தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்க்கை செலவு தாக்குப் பிடிக்க முடியாத அளவு உயர்ந்ததால் ஏற்பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும் தேசிய இயக்க அலையின் எழுச்சி முக்கிய அம்சமாக விளங்கின. இன்ஃபுலுயன்சா போன்ற தொற்று பரவுவது போல தொழிற்சாலைகளின் பெருக்கத்துடன் தொழிலாளர்கள் மத்தியிலிருந்து தலைமையும் உருவாகியது. தொழிலாளர் வர்க்கம் ஓரமைப்பாக சில மையங்களில் வேலைநிறுத்தங்களை நடத்தினாலும், தொடக்கத்தில் அவர்கள் தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் மட்டும் அடைந்து கிடந்தனர்.

முதலாவது அரசியல் வேலைநிறுத்தம்

            தேச விரோதக் குற்றச்சாட்டுகளின் பெயரில் திலகர் கைது செய்யப்பட்டார். முகமது அலி ஜின்னா அவரது வழக்கை எடுத்து வாதாடினார். நீதிபதிகள் ஆயத்தில் (ஜூரி) ஏழு பேர் பிரிட்டிஷ்காரர்கள்; அவர்கள் திலகரின் சிறை தண்டனையை ஆதரிக்க, இந்தியர்களான இரண்டு ஜூரிகள் அதனை எதிர்த்தனர். ஆனால் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திலகர் பர்மாவில் இருந்த மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு நாள் என பம்பாய் தொழிலாளர் வர்க்கம் ஆறு நாட்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். தொழிலாளர்கள் மட்டுமல்ல, கடைக்காரர்கள், வியாபாரிகளும் மற்றவர்களுமான நடுத்தர வர்க்கத்தினர் முழுமையாக எதிர்ப்பியக்கத்தில் பங்கேற்றனர். இதன் விளைவாய் பம்பாய் முழுவதும் ஹர்த்தாலில் ஸ்தம்பித்தது. 1908ல் இந்தியத் தொழிலாளர்கள் நடத்திய முதலாவது அரசியல் வேலைநிறுத்தம் அது.

           


“தேசியப் புரட்சியாளர்களில் திலகர் ஒரு தலைவர்தான், ஏகாதிபத்திய எதிர்ப்பில் அமைதியான மற்றும் அமைதியற்ற; சட்டபூர்வமான மற்றும் சட்ட விரோதமான; வெளிப்படையான மற்றும் மறைவான சூழ்ச்சி உட்பட அனைத்து வடிவ போராட்டங்களையும் இணைத்துப் போராடிய தலைவராக, எப்போதும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தும், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டும், எப்போதும் தலைமை தாங்கி மக்களை வழிநடத்தியவர்” என்று எழுதினார் தேசத் தொழிற்சங்க இயக்கம் மிக உச்சத்தில் கொள்ளும் தலைவரான எஸ்ஏ டாங்கே; அவர் எழுதிய ‘இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் ஊற்றுக் கண்கள்’ என்ற நூலில் இப்பதிவு இடம் பெற்றுள்ளது.

ஏஐடியுசி பேரியக்கம் பிறந்தது

திலகர் மட்டும் கைது செய்யப்படாது இருந்தால், 1905 –08 ஆண்டு காலகட்டத்திலேயே ஏஐடியுசி அமைக்கப்பட்டிருக்கும் என்பது சில அறிஞர்களின் கருத்து. இருப்பினும், அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரியக்கம் 1920 அக்டோபர் 31ல் அமைக்கப்பட்டது. அத்தகைய ஓர் அமைப்பு நிறுவப்பட மிக விரும்பியும் அதற்காக உழைத்துப் பாடுபட்டவருமான திலகர் அனைத்திந்திய தொழிலாளர் அமைப்பு நிறுவப்பட்டதைக் காண உயிருடன் இல்லை. அவர் 1920 ஆகஸ்ட் 1ம் நாள் மறைந்தார்.

தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள்

                     ஏஐடியுசியின் முதலாவது மாநாட்டு அமர்வு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேசியத் தலைவரான லாலா லஜபதி ராய் தலைமையில் பம்பாயில் நடைபெற்றது. அம்மாநாட்டில் 64 இணைப்புச் சங்கங்கள் மற்றும் 40 ஆதரவுச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 107 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரதிநிதிகள் தவிர மாநாட்டில் பங்கேற்ற பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரில் தேசியத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூகப் பணியாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் முதலாளிகள் போன்றோரும் இருந்தனர். மாநாட்டில் பங்கேற்காதவர்களில் மகாத்மா காந்தி, பி பி வாடியா மற்றும் அன்னிபெசன்ட் உள்ளிட்டோர் அடங்குவர். மகாத்மா காந்தி தொழிலாளர்களுக்கு விரோதமானவர் இல்லை; அகமதாபாத் மில் உரிமையாளர்களுக்கும் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் இடையில் எழுந்த தகராறுகளைத் தீர்த்து வைப்பதிலும், பிளேக் தொற்று படி வழங்கும் பிரச்சனையைத் தீர்ப்பதிலும் மகாத்மாவின் பங்களிப்புகள் அனைவரும் அறிந்ததே. இருந்த போதிலும் தொழில்வயப்பட்ட சமூகத்தில் வர்க்க உணர்வுநிலை (கிளாஸ் கான்ஷியஸ்னஸ்) என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு ஏஐடியுசி, நாடு முழுமைக்குமான முதலாவது தொழிற்சங்க மையமாக இயங்கத் தொடங்கியது. ஏஐடியுசியின் முன்னோடிகள் பொது வாழ்வில் நன்கு அறியப்பட்ட புகழ்பெற்ற முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்: அவர்கள், சமூக வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் வந்த தேசியவாதிகள் ஆவர். அவர்களில் மிகப் பிரபலமானோர் லாலா லஜபதி ராய், ஜவகர்லால் நேரு, திவான் சமன்லால், சி ஆர் தாஸ், மோதிலால் நேரு மற்றும் வேறு சிலர்.


            ஏஐடியுசி அமைக்கப்பட்ட பிறகு தொழிற்சங்க இயக்கம், இந்திய தேசியக் காங்கிரஸ் தலைமையில் நடந்த தேசிய விடுதலை இயக்கத்துடன் மிகவும் நெருங்கிச் செயல்பட்டது. நாட்டின் தொழிற்சங்கச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக மட்டுமின்றி, 1919ல் நிறுவப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ-விற்குத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கவும் ஏஐடியுசி அமைக்கப்பட்டது.  இந்தியத் தொழிற்சங்க இயக்கம் 1917 ரஷ்ய அக்டோபர் புரட்சியின் ஆழமான செல்வாக்கிற்கு ஆளாகி, அப்புரட்சி அன்றைய ரஷ்யாவில் நிலவிய சுரண்டல் சமுதாயத்தைப் புரட்டி அமைத்த சரித்திர மாற்றத்தின் செய்தியையும் கொண்டு வந்தது.

மெட்ராஸில் நூற்றாண்டுக்கு முன் முதலாவது மே தினம்

           

அப்படி அமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்க இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வலிமை பெற்றது. இரயில்வே, பஞ்சாலை, தபால் தந்தி, சுரங்கம், இரும்பு மற்றும் எஃகு, துறைமுகங்கள் போன்ற தொழிற்சாலைகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உழைக்கும் மக்களின் சர்வதேசத் திருவிழாவான மே தினம், இந்தியத் திருநாட்டில் முதன் முதலாக 1923ல் மெட்ராசில் கொண்டாடப்பட்டபோது சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு செட்டியார் செங்கொடியை ஏற்றினார். (அவ்வகையில் இவ்வாண்டு மேதினம் நம்நாட்டில் 100வது ஆண்டு).

            அதைக் கண்டு அச்சமுற்ற பிரிட்டிஷ் காலனியவாதிகள் தொழிலாளர் வர்க்கத்தின் மிக உயர்ந்த தலைவர்களான எஸ்ஏ டாங்கே, முஸாஃபர் அகமது, சௌகத் உஸ்மானி மற்றும் நளினி குப்தா ஆகிய நால்வரைப் பொய்யான வழக்கில் கைது செய்தனர்; அவர்கள் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறியச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த வழக்கு கான்பூர் போல்ஷ்விக் வழக்கு என்று அறியப்படுகிறது.

            தொழிலாளர் பிரச்சனைகளை இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கத்திற்குக் கொண்டு வந்த பெருமை கம்யூனிஸ்ட் முன்னோடிகளையே சாரும் என்பது உண்மை. தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி குழுகள் அமைத்து, அதற்கான நிதி ஒதுக்கினாலும் அக்கட்சி, தொழிலாளர் வர்க்க நலனுக்காகப் பணியாற்றுவதை ஒருபோதும் தீவிரமாகக் கருதியதில்லை. அதற்கு மாறாக காங்கிரஸ், தொழிற்சங்க அல்லது அரசியல் கட்சிகளாக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு அமைவதை ஊக்கப்படுத்தாமல் இருப்பதே பாதுகாப்பானது என்றே கருதியது.

போராட்டங்கள்

            1926ல் அரசு இந்தியத் தொழிற்சங்கச் சட்டத்தை நிறைவேற்றியது. 1928 ஜனவரி 3ல் சைமன் குழு இந்தியா வந்தபோது, அதனை எதிர்த்து ஏஐடியுசி தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் 1928 பிப்ரவரியில் நடைபெற்றன. பங்கேற்ற சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ‘ஏகாதிபத்தியம் வீழ்க’, மற்றும் ‘சைமனே திரும்பிப் போ’ என்று முழங்கினர். கிர்ணி காம்கார் சங்கப் பதாகையின் கீழ் டாங்கே மற்றும் பிறரால் நடத்தப்பட்ட பம்பாய் பஞ்சாலை தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆறு மாதங்கள் நீடித்தது – அக்காலத்தில் அதுவே நீண்டகாலம் நடைபெற்ற போராட்டம். வெற்றியோடு முடிந்த அந்த வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் புகழ்க் கொடியோடு செம்மாந்து வந்தனர்.

தற்காலிகப் பிளவுகள்

            சர்வதேசத் தொழிற்சங்க அமைப்புகளுடன் இணைப்புச் சங்கமாக இணையும் பிரச்சனையில் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. நாராணன் மார்கர் ராவ் ஜோஷி, திவான் சமன்லால், விவி கிரி மற்றும் பி ஷிவா ராவ் ஏஐடியுசிலிருந்து விலக முடிவெடுத்து, இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஐஎன்டியுசி இல்லை, இது ‘ITUC’) என்ற அமைப்பை நிறுவினர். தொழிற்சங்க இயக்கத்தில் ஏற்பட்ட முதல் பிளவு இது.

            மேலும், கிர்ணி காம்கார் சங்கத்தை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் ஏஐடியுசி அமைப்பைக் கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான ரெட் இன்டர்நேஷனல் லேபர் யூனியனுடன் இணைப்புச் சங்கமாகச் சேர்க்கும் தீர்மானம் நிராகரிப்பு என்ற பிரச்சனைகளின் பெயரில் இரண்டாவது பிளவு 1931ல் நிகழ்ந்தது. பிரிந்து சென்ற குழு, ‘ரெட் டிரேடு யூனியன் காங்கிரஸ்’ என்ற தனி அமைப்பை ஏற்படுத்தினர்.

            இருந்த போதிலும் 1935ம் ஆண்டு ஏப்ரல் 20ல் ரெட் டிரேடு யூனியன் காங்கிரஸ் அந்த அமைப்பைக் கலைத்துவிட்டு ஏஐடியுசியுடன் ஒன்றிணைந்தது; அதைத் தொடர்ந்து ஐடியுசி சங்கமும் அதைப்போல ஏஐடியுசியுடன் இணைந்தது. சில ஆண்டுகள் பிளவு பனிபோல விலகி தொழிற்சங்க இயக்கம் மீண்டும் ஓரமைப்பானது.

            தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டுப்படுத்தி தடுக்க இந்திய அரசு விரைவாகச் செயல்பட்டது. தொழிற் தகராறு சட்டம் நிறைவேற்றியதுடன், பொது(மக்கள்) பாதுகாப்பு மசோதா போன்ற வழியில் அவசர சட்டமும் பிறப்பித்தது. 1929மார்ச்சில் தொழிற்சங்க இயக்கத்தின் பெரும் தலைவர்களும் வேறுசிலரும் –மீரட் சதி வழக்கு என்றறியப்படும் வழக்கில் -- கைது செய்யப்பட்டனர். மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஷோலாப்பூரில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். நகரம் முழுமையும் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பகுதியினர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவச் சட்டம் திணிக்கப்பட்டது. 1934 வாக்கில் மீரட் சதி வழக்கில் கைதானோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலைக்கு முன் தேர்தல்கள்

            1937ல் நாட்டில் உள்ள 1585 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் 58.23% வாக்குகளுடன் 923 இடங்களை வென்றது; முஸ்லீம் லீக், இஸ்லாமியர் ஒதுக்கீட்டு இடங்களில் 25% இடங்களுடன் மொத்தம் 425 இடங்களில் வென்றது, வாக்கு சதவீதம் 26.81%. காங்கிரஸில் இருந்த முஸ்லீம்கள் 6 சதவீத இடங்களைப் பெற்றனர். மொத்தம் 11 (ப்ராவின்ஸ்) மாகாணங்களில் காங்கிரஸ் 8ல் அதிகாரத்தைப் பிடித்தது; காங்கிரஸ் அரசு அமைக்க முடியாத மூன்று மாநிலங்கள் வங்காளம், மெட்ராஸ் மற்றும் பஞ்சாப். பஞ்சாபில் முஸ்லீம் லீக்கிற்குப் பெரும்பான்மை. மத்திய சட்டமன்றத்தின் (சென்ட்ரல் அஸம்பிளி) இடஒதுக்கீடு தொகுதிகள் அனைத்திலும் முஸ்லீம் லீக் அனைத்து இடங்களையும் வென்றது. இந்தியத் தொழிலாளர்கள் முழு மனதுடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைத் தேர்தலில் ஆதரித்தனர்; ஆனால் மாநில அரசுகள் நீண்ட காலம் நீடிக்கவில்லை, 1939 அக்டோபரில் ராஜினாமா செய்தன.

இரண்டாம் உலகப் போரும் தொழிற்சங்க இயக்கமும்

            ஜெர்மனி ஒருபக்கமும், எதிர்த்து மறுபுறம் பிரான்சு மற்றும் இங்கிலாந்தும் இருக்க இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் 1ம் நாள் தொடங்கியது. தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் இந்திய அரசு யுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்தது. அதனைக் கண்டித்து ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராகப் பம்பாயில் ஒன்பதாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். போரின் காரணமாக உயர்ந்துவிட்ட வாழ்வாதார செலவுகளை ஈடுகட்ட கிராக்கிப் படி வழங்கக் கோரியும் அவர்கள் 40 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

            இதன் மத்தியில் ஐரோப்பாவைப் பிடித்த பிறகு ஹிட்லர் 1941 ஜூன் 22ம் நாள் சோவியத் யூனியனைத் தாக்க தனது படைகளைத் திருப்பினான். இப்போது உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்தது: ஒருபுறம் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான்; மறுபுறம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சோவியத் யூனியன். 1940ல் ஏஐடியுசி-யின் பம்பாய் அமர்வில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகும் போர் மீதான பொதுவான தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை; காரணம், எந்தத் தீர்மானத்திற்கும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்கவில்லை.

            1942 ஆகஸ்ட் 9ம் தேதி அனைத்திந்திய காங்கிரஸ் கட்சி வெள்ளையனே வெளியேறு (க்விட் இந்தியா) அறைகூவலை விடுத்தது. அக்கால கட்டத் தொழிற்சங்கச் செயல்பாடுகளைப் பொதுச் செயலாளர் என் எம் ஜோஷி விடுத்த அறிக்கையிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்: “ஆய்வுக்குரிய கால கட்டத்தின்போது, பொதுவாகத் தொழிற்சங்கவாதிகளின் கொள்கை வேலைநிறுத்தங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதும், இத்தகைய சிரமமான காலத்தில் வேலைநிறுத்தங்களை நடத்துவது எத்தகைய இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை அங்கீகரித்துத் தொழிற் தகராறுகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதாகவும் இருந்தது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

மீண்டும் பிளவு

            உலகப் போரை ஆதரிக்கும் பிரச்சனையில் எம் என் ராய் ஏஐடியுசியிலிருந்து பிரிந்து ‘இந்தியத் தொழிலாளர் சம்மேளனம்’ (இந்தியன் ஃபெடரேஷன் ஆஃப் லேபர்) என்ற பெயரில் தனி அமைப்பைத் தொடங்கினார்; அவர் பொதுச் செயலாளர், ஜம்னாதாஸ் மேத்தா தலைவர். எம் என் ராய் போர் குறித்து அரசை ஆதரித்தார். அவரது சம்மேளனத்திற்கு அரசு மாதம் 13000 ரூபாய் மானிய உதவி அளித்தது. அவ்மைப்பு வேகமாக வளர்ந்து அதனை வங்காளம், பீகார் மற்றும் பஞ்சாப் இரயில்வே தொழிலாளர்கள் பெருமளவு பின்பற்றினர்.

            அந்தத் தருணத்தில் முக்கியமாக மூன்று தொழிலாளர் அமைப்புகள் நிலவின. கம்யூனிஸ்ட்கள் செல்வாக்கில் இருந்த ஏஐடியுசி போரை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. ராய் போரை ஆதரித்தார்; தேசியவாதிகளும் சோஷலிஸ்ட்களும் போருக்கு எதிரான துணிச்சலான அணுகுமுறையை மேற்கொண்டனர். ராய் தனது சம்மேளனம்தான் மிகப் பெரிது என ஐஎல்ஓ அமைப்பிற்கான இந்திய பிரதிநிதித்துவ உரிமை கோரினார்; ஆனால் ஏஐடியுசி தொழிற்சங்க அமைப்பே மிகப் பெரிது என நிரூபிக்கப்பட்டு ஐஎல்ஓ உரிமையைத் தொடர்ந்து தக்க வைத்தது. 1945ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

விடுதலையை விரைவுபடுத்திய போராட்டங்கள்

            பாசிசம் தோற்கடிக்கப்பட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெகுவாக வலிமை இழந்தது. பல காலனிய நாடுகளுக்கு அது விடுதலை அளிக்க வேண்டி வந்தது. டெல்லி, பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸில் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன: அவர்களது கோரிக்கை, போரின் இறுதியில் கைது செய்யப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தினரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே. தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிற தேசிய அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

            இராயல் விமானப் படையைச் சேர்ந்த கமிஷன் அந்தஸ்து பெறாத உயரதிகாரிகள் உட்பட ஏர் ஃபோர்ஸைச் சேர்ந்தவர்கள் இனப் பாகுபாட்டை எதிர்த்தும் நிறுத்தப்பட்ட ஊதியமாகக் கருதப்படும் பணிக்கொடை (கிராஜூட்டி) போன்றவை கோரியும் டெல்லியில் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். தி இராயல் இந்தியக் கப்பற் படையினர் 1946 பிப்ரவரி 18ல் கிளர்ச்சியில் இறங்கி, ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூவண்ணக் கொடி, முஸ்லீம் லீக்கின் பச்சைக் கொடி மற்றும் கம்யூனிஸ்ட்களின் செங்கொடிகளைக் கப்பல்களில் ஏற்றிப் பறக்க விட்டனர். வேலைநிறுத்தக் குழுக்களை அமைத்தனர்.  கிளர்ச்சிகள் மக்களின் பேராதரவைப் பெற்றன.

            தொழிற்சங்கம் மற்றும் சிபிஐ பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க, அதன் விளைவாய் பம்பாய் நகர் முழு குழப்பத்தில் ஆழ்ந்தது. தடுப்புகள் கட்டப்பட்டன, ஆனால் கிளர்ச்சியாளர்களைச் சுடுவதற்கு இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். ஆங்கிலப் படைகள்

தருவிக்கப்பட, அவர்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் இடையில் கடுமையான போராட்டங்கள் தொடங்கின. இறுதியில் 250 பேர் பலியாயினர். வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற பிற நகரங்களில் போலீஸ் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். 1945ல் நிறுவப்பட்ட உலகத் தொழிற்சங்கச் சம்மேளனம் (WFTU) அமைப்பில் எஸ்ஏ டாங்கே, ஆர் ஏ ஹாதில்கார் மற்றும் சுதீந்திர பிரமார்த் ஏஐடியுசி பிரதிநிதிகளாக இடம் பெற்றனர்.

            ஏஐடியுசி தவிர, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஏஐபிஇஏ, இரயில்வேமென் சம்மேளனம், பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனம், ஆசிரியர் கூட்டமைப்புகள் போன்ற வேறு சில சம்மேளனங்களும் இக்கால கட்டத்தில் நிறுவப்பட்டு இயங்கின. அகமதாபாத் பஞ்சாலை தொழிலில் மகாத்மா காந்தியின்மஸ்தூர் மகாஜன அமைப்பு’ தீவிரமாகச் செயல்பட்டது. மேலும் ஒரு தொழிலாளர் அமைப்பு ‘மஸ்தூர் சேவா சங்(கம்)’ என்ற பெயரில் குல்சாரி லால் நந்தாவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்பட்டது; அது ஏஐடியுசி அமைப்பைப் பிளவுபடுத்தக் கூடியதாக, காங்கிரஸ் கட்சி சார்பான “இந்திய தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்” (ஐஎன்டியுசி) என்ற பெயரில் இணையான தொழிற்சங்க மையத்தை நாடு விடுதலை அடைவதற்குச் சற்று முன்பு நிறுவியது.

தியாகத்தில் சிவந்த இயக்கத்தை மேலெடுத்துச் செல்வோம்

            அனைத்துத் தொழிலாளர் அமைப்புகளிலும் புகழ்பெற்ற தலைவர்கள் இருந்தனர்; அவர்களில் மிகவும் புகழ்பெற்றவர்களாக பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், திவான் சமன்லால், ஜெ பட்டிஸ்டா, என்எம் ஜோஷி, வி வி கிரி, எஸ் ஏ டாங்கே, மனிபென் கரா முதலானவர்களைக் குறிப்பிடலாம். கடுமையான போராட்டங்களை நடத்தி தொழிலாளர்கள் விடாமல் மோதியதன் விளைவாய் எட்டு மணி நேர வேலைநாள், வாராந்திர ஓய்வு, குறைந்தபட்சக் கூலி, வேலைநிறுத்தம் செய்யும் உரிமை போன்ற மிக முக்கியமான சில கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டன; வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு சாதனைக்காகவும் தொழிலாளர் வர்கத்தினர் செங்குருதி சிந்தி இன்னுயிர் துறந்து விலைதர வேண்டியிருந்தது. சில தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர், சிலர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர், சிலர் நீண்ட காலம் கொடும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

            காலங் காலமாக தொழிலாளர்களின் இரத்தத்தில் தோய்ந்து சிவந்த செங்கொடியை உயர்த்தி அவர்கள் லட்சியத்தை மேலெடுத்துச் செல்ல மே தினத்தில் சபதமேற்போம்!

         

ஒர்க்கர்ஸ் யூனிட்டி ஜிந்தாபாத்!

     இன்குலாப் ஜிந்தாபாத்!

          மேதினி போற்றும் மேதினம் வாழ்க!


                                                                                                                    --நியூஏஜ் (ஏப்ரல் 17 -- 23)                                                                     

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

  

No comments:

Post a Comment