Sunday 10 April 2022

நியூஏஜ் தலையங்கம் -- தன்னலக் குழு ஆட்சியை நோக்கி நாடு நகர்கிறதா?

 நியூஏஜ் தலையங்கம் ( ஏப்ரல் 10 – 16)

                                          

 தன்னலக் குழு ஆட்சியை நோக்கி நாடு நகர்கிறதா?

            விடுதலைக்கு வெகு காலம் முன்பே 1888ல் சர் ஜான் ஸ்ட்ராச்சி, கேம்ப்பிரிட்ஜ் இளநிலை பட்டதாரிகளிடையே பேசும்போது கூறினார்: “…அங்கே இல்லை, ஒருபோதும் இந்தியா என்ற ஒன்று இல்லை; அல்லது இந்தியா என்றவொரு நாடோ, இந்திய தேசமோ, இந்திய தேச மக்கள் என நாம் கேள்விப்பட்டதோ இல்லை; நாம் கேட்டிருக்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த மக்கள், வங்காளம், வடகிழக்குப் பிராந்தியங்கள் மற்றும் மெட்ராஸ் மக்கள் என்றெல்லாம்; அவர்களும் தாங்கள் ஒரு பெரிய இந்திய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என எப்போதாவது உணர்ந்ததாக நினைப்பதும், முற்றிலும் சாத்தியமில்லாதது.” (ஸ்ட்ராச்சி இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ் சிவில் உயர் அதிகாரி. ஆக்ராவில் நமுனா நதியின் குறுக்கே இரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாலம் அமைத்தவர். இன்றும் பயன்பாட்டில் உள்ள அந்தப் பாலத்திற்கு ஸ்ட்ராச்சி பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது).

            நமது பன்மைத்துவம் ஓரமைப்பு என ஒன்றாக உருவாவதைக் கட்டுப்படுத்தி தடுத்திட ஆங்கிலேயர்களின் அடிப்படை கோட்பாடு அது. இந்தியா ஒரு நாடாக உருவாகி விட்டதை, 1857ல் முதல் விடுதலைப்போர் மூண்டபோதே, அவர்கள் உணர்ந்து விட்டார்கள். அதன் பிறகு ஓய்வு என்பதே இல்லை. ஒவ்வொரு சரித்திரத் திருப்பு முனையிலும், இந்திய தேசம் எனும் கருத்தாக்கத்தைத் தெளிவற்றதாக்கி மறைக்க தொடர்ந்து முயற்சிகள், எவ்வளவுதான் பலமற்று சிறிதாக இருந்தாலும், உயிர்ப்பாக மேற்கொள்ளப்பட்டன. ஒன்று என்ற உணர்வு வந்துவிடக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை.

            ஆனால் 1857 முதல் சுதந்திரப் போரின் ஜீவ நோக்கத்தை அழித்துவிட முடிந்ததில்லை.

சுதந்திரம் யாருக்காக? ஒரு மாநிலத்திற்கு அல்லது ஒரு பகுதிக்கு அல்ல, அது முழுமையான மக்களுக்கு – இந்திய மக்கள் அனைவருக்குமான விடுதலை. அந்த எழுச்சி பூகோள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விரிவடைந்தது; அக்கிளர்ச்சி எழுச்சி அலைகள் உச்சங்களையும் தொட்டது, வீழ்ச்சிகளையும் கண்டது – அந்த அலைகள் உச்சம் தொட்ட காலங்கள் 1905 –1908, 1919 –22, 1928—34, 1942  மற்றும் 1945 –46. 

            அக்காலங்களோடு தொடர்புடைய போக்குகளும் புதிய வடிவத்தில் பலவாக இருந்தன. சுதேசி, புறக்கணிப்பு (பகிஷ்காரம்), மென்மையான எதிர்ப்பு; மற்றும் மறுபுறத்தில் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் புரட்சிகர உணர்வின் எழுச்சி, வேலைநிறுத்தங்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களின் வெடித்தெழுந்த சீற்றம் என இப்படிப் பலபல வடிவில்.

            1920ல் அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரியக்கம் பிறந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு 1925ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1936ல் கிஸான் சபா, மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், (ஏஐஎஸ்எப்) பிறந்தது. பெருந்திரள் மக்களின் விழிப்புணர்வு எழுச்சியை நசுக்க காலனிய அரசு மக்கள் மீது நேரடியாகவும் உணர்வு மட்டத்திலும் தனது நிலைபாட்டைத் தொடர்ந்து மாற்றி வந்தது. அவர்கள் வலதுசாரி பிற்போக்கு சக்திகளை ஊட்டி வளர்க்க இயன்றதனைத்தும் செய்தாலும், அச்சக்திகள் குறிப்பிடுமளவு ஆகிவிடவில்லை; இத்தனைக்கும் அவர்களுக்குக் காலனியவாதிகளின் ஊக்கமும் ஆதரவும் மட்டுமின்றி இத்தாலிய முஸோலினி மற்றும் ஜெர்மனியின் ஹிட்லர் சர்வாதிகாரிகளின் ஆதரவும் கிடைத்தது.

            இதற்கு நேர் மாறாக, 1939 பாம்பேயில் 70ஆயிரம் தொழிலாளர்களும் பொதுமக்களும் பங்கேற்ற முதலாவது மாபெரும் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. விடுதலை போராட்ட இயக்கத்தின் ஊற்றுக் கண்ணாக பன்மைத்துவமே வழிநடத்தியது. இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட 1885முதல் 1947வரை நாடு விடுதலையடைந்தபோது இந்தியா ஒரு தேசமாக உருவானது, 1950ல் தனக்கான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று நாம் இறையாண்மை உடைய ஜனநாயகக் குடியரசாக மலர்ந்தோம். தேசப்பிரிவினை அதனைத் தொடர்ந்த துயரங்கள் இருந்தாலும் நாடு ஒன்றாக இருந்தது. முதலாவது பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் வாக்களித்து கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாவது பெரிய கட்சியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

            பொதுத் தேர்தலின் முடிவை மதச்சார்பின்மையின் வெற்றியாகப் பிரகடனப்படுத்தினார் முதல் பிரதமரான நேரு. வலதுசாரி சக்திகளின் தோல்வி ஏறத்தாழ முழுமையானது. அவர்கள்  மொத்தமாக ஏழு இடங்களை மட்டுமே பெற்றார்கள். ஆனால் அதுவே முடிவல்ல. பெரும்பான்மை மதவாத அதிதீவிர தேசியவாதம், தேசிய விடுதலை இயக்கத்தைப் பலவீனப்படுத்த அதற்கு இணையாகவே தொடங்கப்பட்டு, அதுமட்டுமின்றி அதனுடன் ஏகாதிபத்தியத் தோற்றத்திற்கு ஆதரவாகவும் இயங்கியது. அவர்களுடைய கூட்டு முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பு காலனிய சக்திகளை வளர்ப்பதை முக்கிய கடமையாகக் கொண்டது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்களது முயற்சிகள் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்திலும்; அந்த நிகழ்முறை, இந்திய மக்கள் பெருமையாகக் கருதிப் போற்றிய பன்மைத்துவத்தை அழிப்பதில், அவர்களை மிகவும் மோசமான சக்திகளுடன் இணையச் செய்தது.

            சுதந்திர இந்தியா, சுயச்சார்பு பொருளாதார அடித்தளங்களை ஏற்படுத்த 

உறுதியாக நடைபோட்டது; பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களைக் கட்டியமைத்தது, வங்கிகள் தேசியமயம், சுரங்கங்கள், சாலை போக்குவரத்து, விமான சேவை மற்றும் இரயில்வே, மின்சாரம், மருத்துவமனை கட்டமைப்புகள், ‘வீதிதோறும் இரண்டொரு பள்ளி…நகர்கள் எங்கும் பலபலப் பள்ளி’கள், கலையின் விளக்கமாகக் கல்லூரிகள் என்ற பிறவற்றையும் அமைத்தது.

            இடதுசாரி இயக்கங்கள் பரிணாமம் பெற்று செழித்து வளரவும் நிகழ்ந்தது அந்த நாட்கள். மக்கள் கம்யூனிஸ்ட்களை, அரசமைத்து கேரள மாநில ஆட்சியை நடத்த, தேர்ந்தெடுத்தார்கள். அதே நேரம் வலதுசாரிகளும்கூட வலிமையடைந்தார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் புதிதாக (ஒரு மந்திரச் சொல் இடம்பெற்று) தேசத்தை இறையாண்மை உள்ள, ஜனநாயக, மதசார்பற்ற, சோஷலிசக் குடியரசு என உயர்த்தியது. புதிய சொல்லாடல் வலதுசாரிகளிடமிருந்து வந்த சவால்களுக்கு அழுத்தம் கொடுத்தது. பன்மைத்துவக் கோட்பாடு நீடித்து நிலைப்பதில் அச்சுறுத்தல்களை, குறிப்பாகப் பெரும்பான்மை சமூக அதிதீவிரத் தேசியத்திடமிருந்து, சந்தித்தது. ஜனநாயகம் முடக்கப்படும் விளைவுகளைச் சந்தித்தது.

            ‘வளர்ச்சிக்காக ஜனநாயகத்தின் தூண்கள் ஒன்றிணைய வேண்டும்’ என அரசியலமைப்புச் சட்ட தினத்தில் வலியுறுத்தினார் பிரதமர்; அதாவது, நிர்வாகம், நீதி மற்றும் சட்டமியற்றும் மன்றங்கள் என்ற அந்தத் தூண்கள் ஏறத்தாழ ஒன்றாக வேண்டும் என்றார். ‘வளர்ச்சி’யை நோக்கிய அந்த நடவடிக்கைகள் ஒருவருக்கு ஹிட்லரின் இராணுவ படைக்கலத் தொழிற்சாலை வளாகம் (மிலிட்டரி இன்டஸ்ட்ரியல் காப்ளக்ஸ்) என்பதை ஞாபகப்படுத்தும். அந்த முன்னெடுப்பு அதனளவில் ஜனநாயக நிகழ்முறைக்கு எதிரானது; அந்த ஜனநாயக நிகழ்முறை அடிப்படை உரிமைகளைக் காத்து, நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் மன்றங்களுக்கான அதிகாரங்களைத் தனித்தனியாக வகுத்தளித்தது. அந்த அமைப்பு முறை இல்லாமல் வளர்ச்சி என்பது ஒரு மாயை, கட்டுக்கதையாகும்.

            அதனோடுகூட ஓர் எச்சரிக்கை, சுதந்திரமான பேச்சுரிமையை வெட்டுவதற்கு முன்பு விளைவுகளுக்கு ஒருவர் தயாராக வேண்டும். (நமது அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 19 (1) குடிமக்களுக்குக் கருத்துகளை அரசின் தலையீடின்றிச் சுதந்திரமாக வெளிப்படுத்த 

அடிப்படை உரிமையை வழங்குகிறது. சுதந்திரமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை எனில், உதாரணத்திற்கு பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, அல்லது கட்டுரைகள், புத்தகங்கள், சுற்றறிக்கைகளை வெளியிடுவது மற்றும் ரேடியோ தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை). வளர்ச்சி என்ற மாயப் போர்வையில் பேச்சுரிமையை நசுக்குவது ஆபத்தானது. ஜனநாயகத் தூண்கள் ஒன்றாதல் என்பதும் அத்தகைய ஒன்றே. (தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை அமர்த்த வேண்டும் என்கிறார்.)

            இத்தகைய அனைத்து பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகளின் கீழ் நீரோட்டமாக இருப்பது ஜனநாயக முறைமைக்குக் கடுமையான அச்சுறுத்தல்களை உள்ளடக்கி இருப்பதே. மேலும் அது தன்னலக்குழு ஆட்சியை (அலிகார்க்கி) நோக்கி எடுத்து வைக்கும் நடவடிக்கையாகும்.

            [சமூகத்தில் மிக மோசமான சில மனிதர்கள் அடங்கிய குழு, நியாயமற்ற முறையில் ஆட்சி அதிகாரம் செலுத்துவதை “மேல்தட்டு தன்னலக் குழு ஆட்சி (அலிகார்க்கி)” என்பார் அரிஸ்டாட்டில். அவ்வகையில் பிரபுகள் ஆட்சி (அரிஸ்டோகிரஸி) சிறுபான்மை சிலர் நடத்தும் ஆட்சி எனினும், அந்தச் சிலர் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக இருப்பார்கள். தன்னலக்குழு ஆட்சி பிரபுகள் ஆட்சியின் சிதைந்த வடிவம்.

            பெடரிக் ஏங்கெல்ஸ், தன்னலக்குழு ஆட்சியை, வசதி மிக்க சிறு குழு தங்கள் சுயநலத்திற்காக ஊழல் மற்றும் எதேச்சிகார சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றும் ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களான செல்வம் மிகுந்த பணக்காரர்கள், தங்கள் செல்வத்தைக் கொண்டு நடத்தும் பணக்கார ஆட்சி என வரையறுப்பார். ]

           
நாட்டு மக்கள் விழிப்பாய் இருத்தல் வேண்டும்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment