Friday 29 April 2022

பாவேந்தர் பிறந்த நாள் -- ஒரு மாணவி பேசுவதற்காக


பாவேந்தரின் தமிழ் உணர்வு

தேன் சிந்தும் சித்திரப் பூஞ்சோலையில் தமிழ் மதுவை உண்ணக் குழுமியிருக்கும் அவையோருக்கு வணக்கம். தித்திப்பால் மயங்காது கொல்லிமலைத் தேன் தேறும் ஆசிரியப் பெருமக்களைத் தமிழால் வணங்கிப் பேசத் தொடங்குகிறேன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்கள் முன் நிற்கிறேன். ‘நீராரும் கடல் உடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்து இனி தமிழகத்தின் பாட்டு, மாநில கீதம், State Anthem. ‘மகன் தந்தைக் காற்றும் உதவி’யென இன்றைய தமிழக முதல்வர் அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளார் என்ற பெருமிதம். காரணம் அவரது தந்தை கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னே 1970ல் ‘நீராரும் கடல் உடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆணை வெளியிட்டார். அந்த உணர்வுப் பெருக்குடன் பாவேந்தர் தமிழ் உணர்வு குறித்துப் பேச வந்துள்ளேன்.

‘தமிழுக்கு அமுதென்று பேர்; நிலவு, நீர், வேர், மண், வான், பால், சுடர் தந்தத் தேன் என்ற அனைத்துமே போதாது என்பதால் தவறென்று கூறத் துணிகிறேன். யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். “தமிழுக்குப் பாவேந்தர்” என்றல்லவா பேர். அதைச் சொன்னால் முந்தைய அனைத்தும் வரிசையில் பின்னேதானே வர வேண்டும்.

அந்தப் பாவேந்தர் என்றாலும் அவர் தமிழ் மூதாட்டி, எங்கள் ஔவையை மறுத்துப் பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை. கொன்றை வேந்தனில் ஔவை மூதாட்டி “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றல்லவா கற்றுக் கொடுத்தார். பாரதிதாசனோ ‘தாய் சொல்லைக் கேட்காதே’ என்கிறார், எப்படி ஏற்க முடியும்?

என் தயக்கத்தை அறிந்தவராய், ‘தலைவாரி பூச்சூட்டிக் கல்விச் சாலைக்குப் போவென்று..  மலைவாழை சுவை’ ஊட்டியவர் என்னை ‘சின்னப் பெண்ணே வா’ வென்று அருகே அழைத்தார். அந்தக் குரல் நான் குழந்தையாய் தூங்கும்போது தாலாட்டு இசைத்த குரல். “பெண்ணைத் தாயென்று காட்ட வாய்த்தவளே! மூடத்தனம் வீசுகின்ற காடு கமழ வந்த கற்பூரப் பெட்டகமே ! உய்விக்க வந்த உவப்பே .. பகுத்தறிவே.. புதுமைசெய வந்தவளே! சிலர் செய்கைக்கு நாணி உறங்கு …நகைத்து நீ கண்ணுறங்கு!” எனப் பெண் குழந்தைக்குத் தாலாட்டு இசைத்த தாயுமானவர் குரல் அல்லவா. அருகே சென்றதும் சொன்னார்: “நானும் தமிழ் மூதாட்டி சொன்னபடி ‘தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே’ என்று தாயை உயர்வுதானே செய்தேன். ஆனால் அவள் ஊட்டிய தமிழ்ப்பால் என்னைப் பாட வைத்தது, ‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே’. உண்மைதான் அந்த உணர்வுதான் கனக, விஜயர் தலையில் கல் சுமக்கச் செய்தது.

பாவேந்தர் தமிழ் உணர்வு அத்தகையது. அந்த உணர்வுக்கு அவர் வாழ்விலிருந்தே இரண்டு உதாரணங்களைக் கூறுவேன். பாரதிதாசன் கடவுள் நம்பிக்கை அற்றவர், நாமறிவோம். புதுவையில் அவர் வசித்த தெருவில் –மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்-- மார்கழி மாதத்தில் கோயிலிருந்து ஆண்டாளின் திருப்பாவை ஒலிப்பது வழக்கம். திடீரென்று அந்த வழக்கம் நின்றுபோக, உடனே பாரதிதாசன் என்ன செய்தார் தெரியுமா? ‘ஏன் நிறுத்தினீர்கள்’ எனச் சண்டைக்குப் போய்விட்டார். அவர் பக்திமானல்ல, எங்கள் தமிழ் மண்ணின் கோமான். அதனால்தான் காதலைப் பாடும்போதும் தமிழின் மேன்மையைப் பாடினார்.

இன்னொரு முறை ரசிகமணி டிகேசி எனப்படும் சிதம்பரநாத முதலியார் கம்பனில் தோய்ந்து, அவற்றில் சில பாடல்கள் இடைச் செருகல் எனத் தள்ள முற்பட்டார். ‘கம்பனை மறுக்க இவர் யார் கொம்பன்’ எனச் சமருக்குப் புறப்பட்டார் பாவேந்தர். ஏனெனில் அவரே கூறுகிறார் “தமிழும் நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர்”. அது மட்டுமா, கன்னல் பிழிந்திட்ட சாறு என இனிமைகளைப் பட்டியலிட்டவர், ‘இனிமை தமிழ்மொழி எமக்கு’ என்பதோடு நிறுத்தவில்லை, “தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!” எனப் பிரகடனம் செய்கிறார்.

‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுபோல அவர் உணர்ச்சி மிக்கவர் மட்டும்தானா என்று கேட்டால், இல்லை. ’கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’ எனப் பழம் பெருமை பேசுவதோடு அவர் நிற்கவில்லை. ‘கெடல் எங்கே தமிழர் நலன் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க” என்று கட்டளை இட்டவர், தமிழ்மொழியின் சீரிளமைத் திறம் வியத்தலோடு நிற்காது, தமிழ் மொழிக்காகத் தமிழர் என்ன செய்ய வேண்டும் எனத் திட்டங்களைத் தருகிறார், இப்படியாக:

“மனிதரெலாம் அன்பு நெறி காண்பதற்கும்

 தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்குவதற்கும்

 புத்தகச்சாலை வேண்டும் நாட்டில், யாண்டும்!”

சரி, நூலகங்கள் அமைத்துவிட்டோம், வேறென்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால், அவர் தொடர்ந்து சொல்கிறார்:

            “தமிழர்க்குத் தமிழ்மொழியில் சுவடிச் சாலை

             சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்!

             தமிழில்இலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல

             தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்!”

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன், “பாவேந்தர் உணர்வு நமக்கு வேண்டும், பாவேந்தர் தமிழ் வேண்டும்…

            “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்’

            என்று சங்க நாதம் செய்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

            வாழ்க தமிழ்! வாழ்க பாவேந்தர்!    நன்றி! வணக்கம்!           

No comments:

Post a Comment