Tuesday 12 April 2022

கேரள மறுமலர்ச்சியும் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளும்

           மறுமலர்ச்சியின் வரலாற்று நிகழ்முறை

கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள்

--ஆர் அஜயன்

            கேரள மறுமலர்ச்சியின் வரலாற்று நிகழ்முறை மக்களிடையே இடதுசாரி மனநிலையை இயல்பாக்கியது. கேரளாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது மறுமலர்சியின் தொடர்ச்சியே ஆகும். கேரள மறுமலர்ச்சியின் (Renaissance) தலைவர் ஸ்ரீநாராயண குருதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலாவது தொழிற்சங்கம் அமைக்கப்பட உந்து சக்தியாக விளங்கியவர். அந்தத் தொழிற்சங்கம் பின்னாட்களில் டி வி தாமஸ், ஆர் சுகதன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களால் வழிநடத்தப்பட்டது. முதலாவது தொழிற்சங்கம் திருவிதாங்கூரில் அமைய அன்றைய அந்தச் சமஸ்தானத்தின் சமூக அமைப்பு சுரண்டும் நிலவுடைமை மற்றும் காலனிய முறையைக் கொண்டிருந்ததேயாகும்.

            1859ல் ‘தாரா ஸ்மெயில் காயர் கம்பெனி’ (தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் நிறுவனம்) ஆலப்புழாவில் அமைக்கப்பட்டது. இந்த பம்பாய் கம்பெனியைத் தொடர்ந்து

அஸ்பின் வால், வால்கோட் பிரதர்ஸ், எம்ப்பையர் மற்றும் பிற காயர் தொழிற்சாலைகள் ஆலப்புழாவில் கட்டப்பட்டன. எல்லாத் தொழிற்சாலைகளிலும் மூப்பன் என அழைக்கப்படும் போர்மென்கள் (மேஸ்திரி) தொழிலாளர்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர். ஆலைகள் வளர வளர ஆலப்புழா, திருவிதாங்கூரின் முக்கிய வர்த்தக மையமாயிற்று, 50ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றினர். மிகக் குறுகிய காலத்தில் முதலாளித்துவமும் காலனியமும் உண்மையான குணத்தை வெளிக்காட்டியது. பணிநேரம் வரையறையற்றதாக நீட்டிக்கப்பட்டது போலவே சுரண்டலும் வரையறை அற்றதானது. 

            தொழிலாளர்கள் தங்கள்  உழைப்புச் சக்தியை ஊதியமின்றி செலவிட்டனர், உழைப்பின்

உபரிமதிப்பு கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டது. தொழிலாளர்களில் குத்தகைதாரர்களாக இருந்தவர்கள் நிலவுடைமையாளர்களின் வயல்களில் விடியற்காலையில் வேலை செய்ய வேண்டும். காலை நேர அந்த வேலைக்குப் பிறகு அவர்கள் தொழிற்சாலைக்கு விரைந்து ஓடுவார்கள். அங்கே மூப்பன்களான மேய்ப்பவர்கள் மற்றும் அவர்களது கையாட்கள் அற்பமான காரணங்களுக்காக அடிக்கடி தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்துவார்கள். வேலை நாள் முடிவில் தொழிலாளர்கள் பெற்ற அற்பமான கூலியிலிருந்து காசு பறிப்பார்கள்.

 எம்ப்பையர் காயர் தொழிற்சாலையில் வடப்புரம் பாவா என்பவர் ஒரு மூப்பன். தொழிலாளர்படும் கொடுமைகளைக் கண்ட பிறகு. அக்கொடுமையான ஒடுக்குமுறையை எதிர்த்து அவர் தொழிலாளர்கள்பால் நிற்க முடிவு செய்தார். ஸ்ரீநாராயண குருவைச் சந்தித்துத் தொழிலாளர் பாடுகளை விளக்கமாக எடுத்துக் கூறினார். குரு, ஒரு வரலாற்று அடிப்படை உபதேச வாக்கியத்தைப் பாவாவிடம் அளித்தார்: “ஒடுக்கு முறைக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஓரமைப்பாகத் திரள வேண்டும்.” இந்த ஆலோசனையால் ஊக்கம் பெற்ற பாவா அதனைச் செயல்படுத்தி முன்னெடுத்துச் செல்ல ஆலப்புழா பிரமுகர்களுடன் கலந்து பேசினார். அதன்


விளைவாய் 1922ல் ‘தொழிலாளர் சங்கம்’ (லேபர் யூனியன்) அமைக்கப்பட்டது. பாவா அதன் நிறுவனப் பொதுச் செயலாளர். கூட்டத்திற்கு வழக்கறிஞர் முகமது தலைமையேற்க, ஸ்ரீநாராயண குருவின் நெருங்கிய சீடரான சுவாமி சத்தியவிரதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. சங்கத்தின் பணிகளை விரிவுபடுத்த அதன் பெயர் திருவிதாங்கூர் லேபர் அசோஸியேஷன் என மாற்றப்பட்டது. தொடக்கத்தில் அதன் முக்கியச் செயல்பாடுகள் தொழிலாளர் மருத்துவச் சிகிச்சைக்காகப் பணம் திரட்டுவதும் நூலகங்கள் அமைப்பதுமாகும். ஆனால் அதன் பிறகுதான் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட முழக்கங்கள் வந்தன.

தொழிலாளர் வர்க்க இயக்கங்கள், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை மாற்றும் வரலாற்று ஆற்றல் கொண்டவை. காரல் மார்க்ஸின் இந்தக் கண்டுபிடிப்பைத் திருவிதாங்கூர் லேபர் அசோஸியேஷன் கட்டியம் கூறி நிரூபித்தது. தொழிலாளர் கூட்டமைப்பு, ஒரு நூலகம் மற்றும் மருத்துவமனையை வாடகை கட்டத்தில் நிர்மாணித்தது; சங்க உறுப்பினர்களின் அவரசத் தேவைகளுக்கான நிதியத்தை ஏற்படுத்தியது; மேலும் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஐம்பது தன்னார்வத் தொண்டர்களை அனுப்பி சமூகச் சீர்திருத்தத்திற்கும் தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கும் இடையே உறுதியான வரலாற்றுத் தொடர்பை ஏற்படுத்தி வலிமைப்படுத்தியது.

திருவிதாங்கூர் தொழிலாளர் கூட்டமைப்பின் மூலமாகத்தான் தொழிலாளர்களின் அரசியல் கோரிக்கைகள் ஆலப்புழா மற்றும் திருவிதாங்கூரில் எதிரொலித்தன. சமஸ்தானத்தில் தீண்டாமை ஒழிப்புக்கான அரசப் பிரகடனம் வெளியிடப்பட வேண்டும் என சங்கம் கோரியது; மேலும் நியம சபா, பிரஜா சபா (மக்கள் மன்றம்) முதலியவற்றில் போதுமான பிரதிநிதித்துவம்,

எல்லா ஆலைகளிலும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவது, வயது வந்தோர் வாக்குரிமை மற்றும் தொடக்கக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினர். “ஒர்க்கர்” (தொழிலாளி) என்ற இதழையும் பதிப்பிக்கத் தொடங்கி வெளியிட்டனர். அமைப்பின் ஆண்டுக் கூட்டங்களில் தந்தை பெரியார் மற்றும் (பின்னாட்களில் குடியரசுத் தலைவரான) வி வி கிரி கலந்து கொண்டனர்.      

            பாம்பே காயர் கம்பெனியில் 1931ல் நடைபெற்ற வேலை நிறுத்தமே முதலாவது வேலைநிறுத்தம். அப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 100 தொகுதிகளுக்கு (blocks) 80 சக்ரம் (chakrams) என்பதில் தோல்வி அடைந்தாலும், அது காத்திருக்கும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிய அடையாளம். எழுத்தாளரான கேசவ் தேவ் பதவி விலகியதும், அமைப்பின் 12வது ஆண்டு மாநாட்டில் தோழர் ஆர் சுகதன் அதன் பொதுச் செயலாளர் ஆனார்; அதன் பிறகு அமைப்பின் செயல்பாடுகள் தீவிரமடைந்தன.

            திருவிதாங்கூர் தொழிலாளர் கூட்டமைப்பின் மாபெரும் வேலைநிறுத்த அறைகூவலைத்


தொடர்ந்து ஆர் சுகதன், பிஎன் கிருஷ்ணப் பிள்ளை, பிகே குஞ்சு, சிகே வேலாயுதம் மற்றும் விகே புருஷோத்தமன் முதலானோர் கைது செய்யப்பட்டனர். தங்கள் அன்பிற்குரிய தோழர்களை விடுதலை செய்யக் கோரி தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றைய தினத்தில் நடத்தப்பட்ட குண்டாந்தடி தாக்குதலில் குருதன் பாவா என்ற தொழிலாளர் பலியாகி, ஆலப்புழா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் முதல் தியாகியானார் தோழர் பாவா.

            அந்நிகழ்வை விசாரிக்க முதலில் பி கிருஷ்ணப் பிள்ளை வந்தார்; அவர் அழைக்க பின்பு தோழர் கே தாமோதரன் மற்றும் கேகே வாரியார் வந்து தொழிலாளர்கள் மத்தியில் சென்று அரசியல் உணர்வை விதைத்தனர். வேலை நிறுத்த அழைப்பைத் தொடர்ந்து ஆர் சுகதன் 1937ல் கைது செய்யப்பட்டார். ஆனால் வேலைநிறுத்தங்களின் வெற்றி, அவற்றை நசுக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தோற்கடித்த பிறகே வந்தன. இப்போராட்டங்களின் பலனாய் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட வழி கோலியது; ஃபாக்டரிஸ் சட்டம், தொழில் தகராறு சட்டம், பணியாளர்களுக்கான ஈட்டுறுதி சட்டம் மற்றும் தொழிற் சங்கச் சட்டம் போன்ற சட்டங்கள் விளைந்தன. தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் திருவிதாங்கூர் காயர் ஃபாக்டரி ஒர்க்கர்ஸ் யூனியன் 1938ல் பதிவு பெற்று நிறுவப்பட்டது. பின்னர் தொழிற்சங்கங்கள் சேர்த்தலா உட்பட பகுதிகளில் பதிவு பெற்றன. பி கிருஷ்ணப் பிள்ளையின் செயல்பாடுகள் அமைப்பிற்குப் புரட்சிகர செயலாற்றலைச் சாதிக்க உதவியது.

            1938ல் மன்னரின் பிறந்த நாளான அக்டோபர் 22ல் அக்கம்மா செரியன் தலைமையில் தொழிற்சங்கத்தின் 24 தொண்டர்கள் தலைநகருக்குப் பேரணியாகச் சென்றனர். அதனைத்


தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்; ஆனாலும், தொழிலாளர்களைத் துன்புறுத்தி வேட்டையாடுவது குறைந்தபாடில்லை. காலாவூரிலிருந்து தொடங்கிய பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று தொழிலாளர் தோழர்கள் பலியானார்கள். சிறையிலிருந்து விடுதலையான
ஏகே கோபாலன் மற்றும் கே தாமோதரன் அந்நாட்களில் ஆலப்புழா வந்து தொழிற்சங்கச் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தினர். தளர்வின்றி போராட்டம் மேலெடுத்துச் செல்லப்பட, எதிர்க்கும் கைக்கூலிகளையும் இழிந்தவர்களையும் மறிப்பது என முடிவு செய்யப்பட்டது. பி கிருஷ்ணப் பிள்ளையின் வழிகாட்டலில் கேகே வாரியார், கேவி பட்ரோஸ், சிஓ மேத்யூ, பி ஏ மற்றும் சாலமன் அதற்குப் பொறுப்பாக இருந்தனர். 

    ஏகாதிபத்திய குழப்பங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் தோல்வியால் ஏற்பட்ட பஞ்சத்தின்போது கயிறு ஆலை தொழிலாளர்களுக்கு ரேஷன் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என திவான் சி பி இராமசாமி உறுதியளித்தார். ஆனால் தொழிற்சங்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ரேஷன் வழங்கக் கோரியது. முதலாளித்துவத்தின் சேவகரான சி பி இராமசாமி அக்காலத்தில் மன்னரை ஒரு பொம்மையாகப் பயன்படுத்தி திருவிதாங்கூர் சமஸ்தானத்தைத் தனது சொந்த சொத்துபோல நடத்தி வந்தார். இராமசாமி ஏகாதிபத்தியத்தின் அடிமைபோல இருந்து சாதிப் பாகுபாடு போதை தலைக்கேறியவராக இருந்தார். நிலவுடைமை சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ பொருளாதார முறைமையை இணைத்து “சுதந்திரத் திருவிதாங்கூர்” என்ற தனி கோட்பாட்டிற்காக அவர் தயாரிப்புக்களைச் செய்து வந்தார்.

            அனைத்துத் திருவிதாங்கூர் தொழிற்சங்கக் காங்கிரஸ் என்பது மைய அமைப்பாக நிறுவப்பட்டு தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் அரசியலைத் தூக்கி எறிய முயற்சித்த சிபி இராமசாமிக்கு 1946 வேலைநிறுத்தம் பலத்த அடியாக விழுந்தது. அந்த அமைப்புகளின் தலைவராக தோழர் டி வி தாமஸ் மற்றும் பொதுச் செயலாளராக ஆர் சுகதன் பொறுப்பேற்ற பிறகு போராட்டங்கள் தீவிரமடைந்தன.

            டி வி தாமஸ் வீரம் செறிந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரான பிறகு கேரளாவின் அரசியல் வரலாறு மாற்றி எழுதப்பட்டது. காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு அவ்வமைப்பு தயாரித்தபோது இராமசாமி இயக்கத்தை அச்சுறுத்த முயன்றார். திருவம்பாடியில் தொழிலாளர் பேரணியை நோக்கிப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினனர். அதற்குப் பதிலடியாக போலீஸ் முகாம் ஒன்று தாக்கப்பட்டது, புன்னப்புராவிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. திருவிதாங்கூர் போலீஸ் வயலூரில் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர். மாரரிகுலம், ஓலத்தலா, மனச்சேரி மற்றும் காட்டூரில் கலவரங்கள் வெடித்தன. இங்கே சி கே குமார பணிக்கர் வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தினார்.

            திருவிதாங்கூர் நிலவுடைமை குணங்களுடன் கூடிய தனியான, முதலாளித்துவ சமஸ்தான அரசாக இருந்தது. அநீதிகள் நிரம்பிய அவ்வரசு காலனியச் சுரண்டலின் தாக்கத்தின் கீழ் இருந்தது. இதை எதிர்த்துப் போராடித்தான் தொழிற்சங்க இயக்கம் வளர்ந்தது. திருவிதாங்கூரில் தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சி, எப்படித் தொழிலாளர் வர்க்க அரசியல் ஓர் இடத்தின் வரலாற்றை முற்றிலும் தீவிரமாக மாற்றும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.

            உண்மைதான், மண்ணின் குணம் மக்களின் குணத்தைப் பொருத்தது என்பார் ஔவையார். நாடு என்பது காடோ மலையோ பள்ளமோ அல்ல, “எவ்வழி நல்லை ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே!” என்பார். அப்படித்தான் கேரள மக்களின் பண்பாக இடதுசாரி மனநிலையைத் தொழிலாளர் வர்க்க அரசியலும், தொழிற்சங்கப் போராட்டங்களும் ஏற்படுத்தின.                                                                            

                                                                                     --நன்றி: நியூஏஜ் (ஏப்ரல் 10 –16)

                                                                                       --தமிழில்: நீலகண்டன்,

                                                                                        என்எப்டிஇ, கடலூர்  

No comments:

Post a Comment