Sunday 1 November 2020

நியூஏஜ் தலையங்கம் -- இந்துத்துவா வேடம் கலைந்தது

 


நியூஏஜ் தலையங்கம் (நவ.1 –7 இதழ்)

இந்துத்துவா வேடம் கலைந்தது

          இத்தாலிய சூழ்நிலையில் பாசிசத்தின் குணாம்சங்களை அந்தோனியோ கிராம்சி (முஸோலினி ஆட்சியில் சிறை தண்டனை அனுபவித்த இத்தாலிய மார்க்சிய சிந்தையாளர், எழுத்தாளர், பன்முக ஆற்றலாளர்) பின்வருமாறு பட்டியலிடுகின்றார்: ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் முன், அதற்கு வாய்பான களச் சூழ்நிலையைத் தயார்படுத்துவார்கள்.  மெல்ல பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கைப்பற்றப்படும். பன்முகக் கலாச்சாரத்தை மாற்றி, அந்த இடத்தில் ஒத்த ஒற்றைக் கலாச்சாரம் திணிக்கப்படும். மக்களின் சமூக உளப்பாங்கை ஈர்த்து வெற்றி கொள்ள முயல்வர்; அன்றி, எதிர் பிரிவினர்களை முடித்துக் கட்டிவிட அதிதீவிரமான நிலைபாடுகளைக் கைக்கொண்டு அதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காலமெல்லாம் சூழ்ச்சி செய்து எல்லா வகைகளிலும் மேலாண்மை அதிகாரத்தை எப்படியோ அடைந்துவிட வேண்டும்.

          வேறு எந்தத் தத்துவமும் இருக்கக் கூடாது, வேறு யாரையும் அனுமதித்துவிடக் கூடாது, தாங்கள் மட்டுமே என்ற நோக்கத்தை அடையத் தொடங்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. ஆர்எஸ்எஸ் தொடங்கிய 1925 முதல் மேற்கண்ட பாசிச நிகழ்முறையைத்தான் வளர்த்து வந்துள்ளது என்பதை நாக்பூரில் இந்த ஆண்டு அக்டோபர் 24ல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய தசரா உரை வெளிப்படுத்துகிறது. அந்த உரையில் அதிகாரப் பசி கொண்டு அலையும் அமைப்பு அல்ல ஆர்எஸ்எஸ் என்றும் அவர் கூறினார்; ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது –ஆர்எஸ்எஸ் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பாஜகவின் கைகளில்தான் மத்திய ஆட்சி 2014 முதல் இருந்து வருகிறது.

          ஆளும் பாஜக எவ்வளவோ தூரம் கடந்து வந்து விட்டது என்பதைத்தான் பின்வரும் அவரது கூற்று காட்டுகிறது: “இந்தியா என்பது இந்து ராஷ்டிரம் மற்றும் அதன் ‘ஸ்வ’யத்தின் (தனித்தன்மைப் பண்பின்) சாரம் இந்துத்துவா.” அவர் பயன்படுத்திய சொல் புதியது அல்ல என்றாலும் சொல்லிய தொனியின் உறுதிப்பாடு புதிது. மேலும் கூறுகிறார், “நம்மைப் பொருத்தவரை அந்தச் சொல் ஆன்மிக அடிப்படையிலான, பாரத மண்ணின் மதிப்புறு அனைத்துச் செல்வங்களின் பாரம்பரியத்தில் வந்த நம் அடையாளத்தின் தொடர்ச்சி.” இந்துத்துவாவின் பகுதி என அவர் சொல்கின்ற பாரம்பரிய மரபு மற்றும் மதிப்பீடுகள், ‘ஸ்வ’யத்தை (தனித்தன்மைப் பண்பை) விளக்குவதற்காக (வலிந்து) கூறப்பட்டன – ஆனால் ஸ்வயம்தான், பன்மைத்துவத்திற்கு இடமளிக்காத, இந்து ராஷ்டிராவின் சாரம்.

          ‘பாரதவர்ஷ்’-ன் (‘இடம்’ என்பது பொருள். அவர்கள் தத்துவத்தின்படி உலகத்தின் முழு இடமுமே பாரதவர்ஷ்-தான்; ஆனால் குறிப்பாக இமயமலைக்குத் தெற்கே உள்ள முழுமையான  நிலப்பகுதியின்) 130கோடி மக்களுக்கும் இந்து ராஷ்டிரா என்ற சொல் பொருந்தக்கூடியது என்பதை மோகன் பாகவத் சுற்றி வளைத்துச் சொல்லவில்லை –பச்சையாகவே சொல்லிவிட்டார்.

அனைத்து மக்களையும் தன்னோடு அடையாளப்படுத்தும் பாரதவர்ஷ் எனும் இந்து ராஷ்டிராவில், தேசம் தனது வேறுபட்ட பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்தை இழக்கும். அங்கே வேறு யாரும், வேறு எந்தக் கலாச்சாரமும் இல்லை. மாறுபாடுகள் (ஏறி மிதித்து) அழுத்திச் சமமாக்கப்படும். சிறுபான்மையினர் தொல்லைகளைச் சந்திக்கும்படி தனித்து விடப்படுவர்.

நோக்கங்களைத் தெளிவுபடுத்திய ஆர்எஸ்எஸ், தலைவர் பாகவத், ‘இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைச் சிதைக்க எண்ணும் சில குழுக்கள்’ குறித்து எச்சரித்து மேலும் கூறினார்: “எனவே இந்தக் காரணத்தால்தான், நமது நாட்டையும் சமூகத்தையும் பிளவுபடுத்த, குழுக்களிடையே மோதல்களைத் தூண்டிவிடுபவர்களால், இந்தச் சொற்பிரயோகம் (இந்து ராஷ்டிரா) முதலில் தாக்குதலுக்கு உள்ளாகி தண்டிக்கப்படுகிறது.” (இந்துத்துவாவை விமர்சிப்பவர்கள் பிளவுவாதிகளாம், பாகவத் கூறுகிறார்)

இன்னும் தெளிவாக பாகவத் கூறினார், ‘இந்து ராஷ்டிராவின் பகுதியாக இருப்பதால், ஒருவர் இந்துவாக இருக்க வேண்டும்-- ஆனால் அதற்காக ஒருவர் தன் நம்பிக்கையை, மொழியை, வாழும் நிலத்தை அல்லது வேறு எந்த அடையாளத்தையும் கைவிட்டுவிட வேண்டும் என்ற தேவை இல்லை’. விளங்குகிறதா? அந்த அடையாளங்கள் மேலாண்மை அதிகாரம் அடைய நினைக்கும் விருப்பத்திற்கு அங்கே இடமே இல்லை. எனவே இந்து ராஷ்டிராவில் உச்சபட்ச மேலாண்மை அதிகாரம் கொண்டதாக ஒரு சக்திதான் நாட்டில் ஆட்சி செலுத்த முடியும்; அதற்கு எதிரான சவால்கள் சகித்துக் கொள்ளப்படாது. பாரதவர்ஷின் தேசிய அடையாளத்தை வரையறுக்கும் தனித்த உரிமை உடையவர்கள் இந்துகள் மட்டுமே என்ற கருத்தைச் சவார்க்கர் முன்வைத்தபோது, அந்தக் கருத்து தொளதொளப்பானதாக, கறார் தன்மை இல்லாமல் இருந்தது. ஆனால் கோல்வால்கர், ஆர்எஸ்எஸ்-ன் தலைவராக வருவதற்கு எட்டு மாதங்களுக்கு முன் 1939 மார்ச் மாதத்தில், “நாம் அல்லது நமது தேசியத்துவத் தன்மை –வரையறுப்பு” (‘We or Our Nationhood Defined’) என்ற நூலை முதன் முறையாக வெளியிட்டார். அந்த நூலில், இந்து ராஷ்டிராவை மேலெடுத்துச் செல்லும் திட்டத்தை, ஜெர்மனியின் யூதர்களுக்கு எதிரான (anti-semitism) திட்டத்தோடு அவர் ஒப்பிட்டார். மேலும் அந்நூலில், ‘யூதர்களை ஹிட்லர் நடத்திய விதம்’ நமக்கும் இங்கு இந்தியாவின் முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது அமல்படுத்துவதற்கு முன்மாதிரியாக இருக்குமென பெருமகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

“இனத்தின் தூய்மை மற்றும் அதன் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக ஜெர்மனி, தனது நாட்டின் யூத இனங்களை ஒழித்துக்கட்டியதன் மூலம் உலகத்தையே அதிர்ச்சி அடைய வைத்தது” என கோல்வால்கர் எழுதியுள்ளார். இனத்தின் பெருமிதம், அதன் உச்சபட்ச வடிவத்தில் இங்கே விதந்தோதப்படுகிறது. “அடிவேர்களிலேயே வேறுபாடுகள் உள்ள இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஒருங்கிணைந்த ஒன்றாக முழுமைபெறச் செய்வதென்ற ஏறத்தாழ முடியாத ஒரு செயலை ஜெர்மனி சாதித்துக் காட்டியுள்ளது, இங்கே இந்துஸ்தானத்தில் நமக்குக் கற்றுக் கொள்வதற்கும் அதனால் பயன்பெறுவதற்கும் நல்லதொரு பாடமாகும்.” 

“இந்தக் கருதுநிலையிலிருந்து, (….) இந்துஸ்தானத்தின் இந்துகள் அல்லாத மக்கள், ஒன்று இந்து கலாச்சாரம் மற்றும் பாஷையை ஸ்வீகரிக்க வேண்டும்; இந்து மதத்திற்கு மிக உயர்ந்த கீழ்ப்படிதலோடு மரியாதை தர கற்றுக் கொள்ள வேண்டும்; இந்து இனம் மற்றும் கலாச்சாரத்தை உயர்த்திப் புகழ்வதைத் தவிர அதற்கு மாறான வேறு எண்ணங்களை நினைக்கவும் அவர்கள் கட்டாயம் அனுமதித்துவிடக் கூடாது; (….) தனித்த இருத்தலை அவர்கள் துறந்து இந்து இனத்துடன் ஒன்று கலக்கவும் அல்லது இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிதலுடன் இந்த நாட்டில் வசிக்கவும் வேண்டும்; எதற்கும் உரிமை கோராது, எந்தச் சலுகைகளையும், அவ்வளவு ஏன், உரிமைகளில் சில முன்னுரிமைகூட கோராமலும் மற்றும் குடியுரிமைகள் உட்பட எதையும் உரிமையாகக் கோராமலும் இருக்க வேண்டும்” என்று மேலும் கட்டளையாக எழுதியுள்ளார்.

துவங்கிய அந்த வட்டம் (பாகவத்தின் தசரா உரையோடு)  இப்போது நிறைவுறுகிறது… என்றாலும், சுதந்திரப் போராட்ட இயக்கத்தோடு போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்ட வளம் நிரம்பிய உயர்ந்த மரபுகள் நமக்கு உண்டு; சுதந்திரம் பெற்ற பின் இவ்வளவு ஆண்டு காலமாகக் கட்டி எழுப்பிய தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டபடி நமது தேசம் இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக விளங்குகிறது. நமது வேறுபட்ட பன்முகக் கலாச்சாரத்தைத் துடிப்புடன் பாதுகாத்து நாம் ஒன்றாகவே இருப்போம். வேற்றுமையில் ஒற்றுமை -- அதுவே நம் தாரக மந்திரம்.

“நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்– இது

 நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!”

--தமிழில் நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

             

 

No comments:

Post a Comment