Monday 23 November 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 20 டாக்டர் கே எம் அஷ்ரஃப்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -20


கே எம் அஷ்ரஃப் : மார்க்ஸிய வரலாற்றாளர்,

விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிபிஐ அமைப்பாளர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–நவ.08 --14, 2020)

            குன்வர் முகமது அஷ்ரஃப் ஒரு தனித்துவமான மார்க்ஸிய வரலாற்றாளர், கம்யூனிச இயக்கத்தின் தலைவரும் கட்சிக்காகப் பாடுபட்ட அமைப்பாளரும் ஆவார்; வரலாற்றுத் துறை, மாணவர் இயக்கம் உட்பட அவரது பங்களிப்பு அழிக்க முடியாத மதிப்புடையது. அவருக்கே உரிய அமைதியான வழியில் தலை சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகக் காங்கிரஸ் இயக்கத்தில் முற்போக்கு குணம் வளர முக்கியப் பங்காற்றினார்.

          அவர் முஸ்லீம் ராஜபுத்ர குடும்பத்தில், உபி, அலிகார் மாவட்ட ஹத்ராஸ் தாலுக்கா தாரியாபூர் கிராமத்தில் 1903 ஆண்டு நவம்பர் 24ம் நாள் பிறந்தார்.  அவர்கள் இந்து ராஜபுத்ரர்கள் போல பல வகைகளிலும் நெருங்கிய ஒத்த தன்மை உடையவர்கள்; பல பழக்க வழக்கங்களும் நடைமுறையில் ஒன்றே தான்; மதங்களும் கூட, நுட்பமான விபரங்கள் தவிர, மிகவும் ஒன்றுபோலவே இருக்கும். இவை எல்லாமுமாகச் சேர்ந்து பன்முகக் கலாச்சாரத்தையும் மதச்சார்பற்ற அரசியல் வாழ்வை மேற்கொள்ளவும் மிக நல்ல வாய்ப்பான சூழலை வழங்கியது.

          அவர்களின் முன்னோர்கள் 19ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மன்னராட்சின் கீழ் அமைந்த அல்வார் அல்லது ஆழ்வார் சமஸ்தானத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவருடைய தந்தை தாக்கூர் முராத் அலி முதலில் இரயில்வேயிலும் அதன் பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்திலும் சேர்ந்து முதலாவது உலக யுத்தத்தில் இராக், ஆப்ரிக்கா முதலான நாடுகளில் போர்களில் பணியாற்றி உள்ளார். அவரது இளம் வயதிலேயே தனது தாய், அன்ச்சீ (Anchhi)யை இழந்தார்.

புத்திசாலியான சிறந்த மாணவர்

          தாரியாபூர் கிராமத்தில்  மேல்நிலை தொடக்கக் கல்வி கற்கும்போது ஆசிரியர் பண்டிட் ராம்லால் அஷ்ஃரப்பிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். தந்தை அவரை அலிகார் ஆர்ய சமாஜ் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றினார். அந்தப் பள்ளியின் மதப் பிரசங்கங்கள் அவரை ஈர்க்காவிட்டாலும், நிச்சயமாக அவர்களது தேசிய அரசியல் சார்புகள் தாக்கத்தைச் செலுத்தின. தந்தை முராத் அலி மொராதாபாத் மாறிய போது அஷ்ரஃப் அங்கே இருந்த முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கே சமஸ்கிருதம் இந்திக்குப் பதில் பெர்சிய (பாரசீகம்) மொழியும் உருதுவும் படித்தார். 1918ல் மெட்ரிக் தேர்வில் தேர்வு பெற்றார். அரசியல் ரீதியாகப் பண்டிட் சங்கர் லால் கைது செய்யப்பட்டதும், அன்னிபெசன்ட் மற்றும் முகமது மௌலானா அப்துல்லா சித்திக் கைதும் அவரை ஆழமாகப் பாதித்தது.

          அஷ்ரஃப் அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் அரபி தர்க்கவியல் மற்றும் வரலாறு பிஏ இளங்கலையில் சேர்ந்து படித்தார். (முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி MAO என்பது அலிகாரில், முஸ்லீம் விழிப்புணர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட அலிகார் இயக்கத்தின் ஒருபகுதியாக,  சர் சையத் அகமத் கான் அவர்களால் 1875ல் துவங்கப்பட்ட கல்லூரி; அதுவே பின்னர் 1920ல் புகழ்பெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.)

ஒத்துழையாமை இயக்கத்தில்

          1920 –21களில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமடைந்தது. சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவராக மகாத்மா காந்தி பரிணாமம் பெற்றார். அந்த இயக்கத்தினுள் இணையாகத் தேசிய கல்வி நிறுவனங்களை அமைக்கும் பிரச்சாரம் வேகம் பெற்றது. தேசியக் கல்வியின் ஓர் அடையாளமாக அலிகார் ஜாமியா மிலியா மலர்வதற்கு அடித்தளமிட்டவர்களில் கே எம் அஷ்ரஃப் பங்காற்றினார். ஒவ்வொரு செங்கல்லாக உயர்த்துவது என்பார்களே அப்படி, அந்தத் தேசியக் கல்வி நிறுவனத்தின் வகுப்புகள் ஓராண்டுக்கு மேல் (டெண்ட்) கூடாரங்களில் நடந்தது. இந்தக் கல்லூரியிலிருந்துதான் இஸ்லாமியத் தத்துவம் மற்றும் வரலாற்று பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அவர் திலகரின் சுயராஜ்ய நிதி, கதர் பிரச்சாரம் மற்றும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை பிரச்சார இயக்கங்கள் போன்றவற்றில் பங்கேற்றார்.

          1926ல் கேஎம் அஷ்ரஃப், ‘சட்டங்களில் இளங்கலை’ எனும் LL.B சட்டவியல் பட்டப் படிப்பில், முதல் வகுப்பில் தேர்வு பெற்றதன் மூலம் ஒரு சாதனையையே நிகழ்த்தினார். (அது ஒரு கடினமான தேர்வு; LL.B என்பது Legum Baccalaureus என்ற லத்தீன் மொழியின் சுருக்கம். லத்தீன் மொழியில் ஒரு வார்த்தையின் பன்மை வடிவம் அந்த வார்த்தையின் முதல் எழுத்தை இரட்டிப்பதன் மூலம் எழுதுவார்கள். இதனால் சட்டம் (Legum) என்பது சட்டங்கள் எனப் பொருள் தரும் LL என்று எழுதப்படுகிறது)

தீவிர அரசியலில்

          ஒத்துழையாமை இயக்கத்தில் பணியாற்றியது மட்டுமின்றி, 1922ல் அவர் சௌகத் உஸ்மானியைச்  சந்திக்க, சோஷலிசம் குறித்து அறிய ஆரம்பித்தார். 1923ல் முஸாஃபர் அகமது, குத்புதீன் இருவரையும் கல்கத்தாவில் சந்தித்தார். ஆழ்வார் சமஸ்தானத்தில் இருந்தபோது நிலப்பிரபுத்துவ முறையை நெருக்கமாக இருந்து தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. 1926ல் எம்ஏ முதுகலைப் பட்டப் படிப்பில் தேர்வு பெற்றதற்காக ஆழ்வார் சமஸ்தான மகாராஜா அரசு விருந்தினராக அவரை வரவழைத்து பாராட்டி கௌரவித்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் படிக்க ரியாசத்தின் (சமஸ்தான அரசின்) கல்வி உதவித் தொகை கிடைக்கப் பெற்றார்.

லண்டனில்

          1927ல் லண்டன் சென்ற அஷ்ரஃப் சட்டம் படித்ததுடன், பாரிஸ்டராகவும் அனுபவம் பெறத் தொடங்கினார். “1200 –1550 காலகட்டத்தில் இந்தியாவில் சமூக வாழ்க்கை” என்ற தலைப்பில் PhD முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அங்கே ஷக்லத்வாலா, சாஜ்ஜட் ஸாகீர் முதலானவர்களின் தொடர்பு ஏற்பட இறுதியில் கம்யூனிசக் கோட்பாட்டைத் தழுவினார்.

          1929ல் ஆழ்வார் மகாராஜாவின் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை ஒட்டி, (கல்வி உதவித் தொகை வழங்கிய) மகாராஜா அவரைத் திரும்ப வருமாறு கடிதமெழுதினார். திரும்பி வந்த அஷ்ரஃப் மகாராஜாவின் தனிச் செயலாளர் ஆனார். மன்னர் விழா கொண்டாட்டங்களில் ரூ 15 லட்சம்  விரயச் செலவாகி இருப்பதை ஒரு வாரத்திலேயே கண்டுபிடித்தார். இது அவரை சொல்லமுடியாத அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இர்வின் பிரபுவும்கூட வந்திருந்தார். தனிச் செயலாளராக மூன்று மாதம் பணியாற்றியபோது சமஸ்தான ஆட்சியின் நிலப்பிரபுத்துவ (டாம்பீகச்) செயல்முறைகளை மிக நெருக்கமாக இருந்து நேரடியாக அறிந்து கொண்ட அவரால் சீற்றம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு மீண்டும் லண்டன் திரும்பினார்.  

          முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து டாக்டர் அஷ்ரஃப் ஆனார். இதற்கு மத்தியில் சீனுவாச ஐயங்கார், முகமது அலி, சக்லத்வாலா மற்றும் பிறரோடு சேர்ந்து இந்திய தேசியக் காங்கிரஸின் லண்டன் குழுவை அமைத்தார். மார்க்ஸியச்  செயல்பாடுகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் இடதுசாரி குழுவில்

          1932ல் இந்தியா திரும்பியதும் முஸ்லீம் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இதன் மத்தியில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தவர், அதன் இடதுசாரி அணியின் முன்னணித் தலைவரானார். காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (CSP)யில் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இஎம்எஸ், ஆச்சார்ய நரேந்திர தேவ்,

இசட் ஏ அகமது, ஷாஜ்ஜட் ஸாகீர், ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா முதலானவர்களோடு அஷ்ரஃப் அவர்களும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1936ல் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர்களில் ஒருவரானார். காங்கிரஸ் தலைவர், இஸ்லாமிய விவகாரங்களைக் கவனிக்கும் பணிக்கு இவரைப் பொறுப்பாளாராக நியமித்தார். 

          பெர்சிய, உருது மற்றும் மத்திய காலச் சமூக, தத்துவ வாழ்வியலில் முழுமையான பாண்டியத்யமும் முஸ்லீம் தலைவர்களுடன் மிக நெருங்கிய அணுக்கமும் உடையவர் அஷ்ரஃப். எனவே அந்தப் பணிக்கு அவரே மிகவும் பொருத்தமானவராக இருந்தார். டாக்டர் கே எம் அஷ்ரஃப் அலகாபாத் அகில இந்தியக் காங்கிரஸ்  கமிட்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ஏஐஎஸ்எஃப் மாணவர் அமைப்புடன் கூட்டாக

          இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டாக்டர் அஷ்ரஃப் அவர்களை மாணவர் அரங்கில் பணியாற்றுமாறு பணிக்க, மாணவர் இயக்கத்தின் கட்சி குழுவுக்கு (ப்ராக்க்ஷனில்) வழிகாட்டுவதை வழக்கமாகக் கொண்டார். 1939 ஜனவரியில் ஏஐஎஸ்எஃப் கல்கத்தா அமர்வுக்குத் தலைமை தாங்கினார்; 1940 டிசம்பர் நாக்பூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏஐஎஸ்எஃப் அமர்வைத் துவக்கி வைத்து உரையாற்றினார். நாக்பூர் மாநாட்டில், எம் எல் ஷா அணியுடனும் மற்றும் பேராசிரியர் சதீஷ் காலேல்கர் அவார்டு உட்பட, எழுந்த முரண்பாடுகளில் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு, மாணவர்களின் இரண்டு பிரிவினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கடுமையாக முயன்றார்; ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர்களுக்கிடையேயான கூட்டங்களில் அவர் கவர்ந்து ஈர்க்கும் மையப் புள்ளியானார். ஏஐஎஸ்எஃப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்தி பெரும் பங்காற்றினார்.

          மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் செயலாளராகவும் டாக்டர் அஷ்ரஃப் பணியாற்றினார்.

தியோலி தடுப்புக் காவல் முகாமில்

          1940 முதல் வேறுசில கம்யூனிஸ்ட் தலைவர்களோடும் டாக்டர் அஷ்ரஃப் தியோலி தடுப்புக் காவல் முகாமில் அடைக்கப்பட்டார். அங்கே நடந்த 30 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றார். பட்டினிப் போர் பங்கேற்பும், சிறை முகாமின் மோசமான நிலைமைகளுமாகச் சேர்ந்து அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்க, நைந்த உடல்நிலையோடு 1943ல் விடுதலையானார்.

சிபிஐ தலைமையகத்தில்

          விடுதலைக்குப் பிறகு பம்பாய் கட்சி மையத்தில் பணியாற்றியவர் ஏராளமாக எழுதிக் குவித்தார். அங்கே அப்போது ஆர் டி பரத்வாஜ் (இந்தத் தொடரின் 5வது கட்டுரையில் இடம் பெற்ற தலைவர்) உடல்நிலை பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்தார். எனவே டாக்டர் அஷ்ரஃப் அவரது சில பணிகளையும் மேற்கொண்டதுடன் காங்கிரஸ் இயக்கத்திற்குள் கம்யூனிஸ்ட்களின் சார்பாகப் பேசும் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

          1946ல் டெல்லிக்கு இடம் மாறியவர், தர்யாகஞ்ச் பகுதியில் இருந்த கட்சி கம்யூன் கூட்டு வாழ்வில் கட்சி வழங்கிய சொற்ப ஊதியமான 8 ரூபாயிலேயே வாழ்வதை வழக்கமாகக் கொண்டார். அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், அஷ்ரஃப் மட்டுமே வயதில் மூத்தவர். மற்றவர்களோடு அனுசரித்து இணைந்து வாழ்வது, மென்மையான மேன்மையான குணங்களோடு மிக உயரிய கட்டுப்பாடு முறைமைகளைப் பின்பற்றியவர் அவர். அவர் இருக்கும் இடத்தின் சூழலை மகிழ்ச்சிகரமானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் மாற்றி விடுவார்.

தேசப் பிரிவினைக்குப் பிறகு, பாக்கிஸ்தான் செல்லல்

          இதுதான் அவருடைய வாழ்வில் மிகவும் மோசமான துரதிருஷ்டமான காலம். அங்கங்கு எல்லா இடங்களிலும் மதக் கலவரங்கள். தேசம் இரண்டாகப் பிளவு பட்டது. அவரது சொந்தப் பாதுகாப்புக் காரணமாக அவரைத் தர்யாகஞ்சிலிருந்து ஜாமா மஸ்ஜித் (டெல்லி மசூதி) பகுதி மாகாண கட்சி அலுவலகப் பகுதிக்குச் சென்றுவிடுமாறு கட்சி உத்தரவிட்டது. இந்த இடமாற்றம் காரணமாக அவர் நொறுங்கி அழுதுவிடுவார் போலச் சோகத்தில் மிகவும் உடைந்து சோர்ந்து போய் விட்டார்: அவர் போய்த்தான் தீர வேண்டும், மிகவும் அற்பமான காரணம், ஏனெனில், அவர் ஒரு முஸ்லீம்! (எனில், அந்தக் கற்றறிந்த சான்றோன் மனதில் கம்யூன் வாழ்க்கை எவ்வளவு நேயத்திற்குரியதாக இருந்திருக்கும்!)

       

‘அவாமி தௌர்’ என்ற பெயரில் உருது ’மக்கள்  தினசரி’ ஒன்றை டெல்லியிலிருந்து வெளியிட கட்சி முடிவு செய்தது. டாக்டர் கே எம் அஷ்ரஃப் அதன் ஆசிரியர், டீகாராம் சகுன் (படம்) அதன் துணை ஆசிரியர். கனோட் ப்ளேஸ் பகுதியில் ஓர் அலுவலகமும் திறக்கப்பட்டது.

          மக்கள் தினசரி இதழ் மூடப்பட்டதும் 1948ல் டாக்டர் அஷ்ரஃப் பாக்கிஸ்தான் சென்றுவிடுமாறு கட்சி கேட்டுக் கொண்டது. அங்கே நிலைமை மிகக் கடினமான ஒன்றாகவும் கம்யூனிஸ்ட்கள் கடுமையான அடக்குமுறைகளையும் சந்திக்க வேண்டி வந்தது. பாக்கிஸ்தானில் கட்சி தடை செய்யப்பட்ட உடன் அவர் தலைமறைவாகும்படி ஆயிற்று. சட்ட விரோதமாகப் பாக்கிஸ்தானில் வசிக்கும் இந்தியக் குடிமகன் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமாகப் பாதிப்படையத் தொடங்கியது. மீண்டும் பாக்கிஸ்தான் திரும்பக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அவரை விடுவித்தனர். இந்தியாவும் கூட அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை, காரணம் அவர் இந்தியக் குடிமகன் இல்லை. (புகழ்பெற்ற கல்வியாளரின் கதி, பிரிவினை சோகத்தின் உச்சம்! அப்போதே இவ்வாறெனின், இன்று குடியுரிமைச் சட்டம் மக்களை எப்படியெல்லாம் வாட்டக் கூடும்?)

          இங்கிலாந்து திரும்பியவர், இந்தியச் சமூகம் மற்றும் வரலாறு குறித்தத் தனது ஆய்வை மீண்டும் மேற்கொண்டார். மருத்துவச் சிகிச்சையும் எடுத்துக் கொண்டு, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தளர்வில்லாது பணிகளை மேற்கொண்டார்.

இந்தியா திரும்புதல்

          இங்கிலாந்தில் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதாய் இல்லை, தனது நெஞ்சம் நிறைந்த தாய் மண் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற தணியாத தாகம். இத்தனைக்கும் நேரு மற்றும் மௌலானா ஆஸாத்துடன் மிக நெருக்கமானவராக அவர் இருந்தும், அவரது விருப்பம் ஈடேற நீண்ட காலம் பிடித்ததது. அதற்காக நேரு பிரத்தேகமான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகே அவருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்தது. நேருவின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் மக்கள் வரலாறு குறித்து

ஆராய ஸ்ரீநகரில் தங்கிப் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி கே எம் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து வரலாறுத் துறை தலைவரானார். (கே எம் கல்லூரி (படம்) டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற இணைப்புக் கல்லூரி. முந்தைய நிர்மலா கல்லூரி தேசப் பிரிவினைக்குப் பிறகு சேத் கிரோரி மால் என்பவர் தலைமையிலான அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் கிரோரி மால் கல்லூரி ஆனது)

          பாக்கிஸ்தானிலிருந்து திரும்பியதும் நேரு மற்றும் அபுல் கலாம் ஆஸாத்தைச் சந்தித்தார் அஷ்ரஃப்;  அப்போது, ‘நீங்கள் இனியும் இந்தியக் குடிமகன் இல்லையே…’ என்று நேரு விளையாட்டாகக் கூறி சீண்டினார்: வந்ததே கோபம் அஷ்ரஃப்பிற்கு –சீற்றத்தோடு நேருவுக்குப் பதிலளித்தார், “உங்களைவிட நான் அதிகம் இந்தியன், தெரியுமா? நான் ஒரு ராஜபுத்ர வம்சத்தவன்!”

          இந்திய வரலாற்று காங்கிரஸ் பேரவை அமர்வுகளில் (Indian History Congresses) பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.

          1969ல் ஜெர்மனி ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ‘மத்திய கால இந்தியாவில் மக்களின் வாழ்க்கை நிலை’ என்பது குறித்த ஆய்வினை மேற்கொண்டு, ஆய்வு நூலை பெர்லினில் வெளியிட்டார். அது உலகம் முழுவதும் புகழ்பெற்று கொண்டாடப்படுவதாயிற்று. மாஸ்கோ மற்றும் தாஷ்கண்ட்டிற்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.

          தனது 58வது வயதில்  மாரடைப்பு காரணமாக டாக்டர் கே எம் அஷ்ரஃப் 1962 ஜூன் 7ம் நாள் மறைந்தார். அரசியல் உலகிலும் கல்விப் புலனங்கள் வட்டாரத்திலும் அவரது மறைவுக்குப் பரவலாக அஞ்சலி செலுத்தப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை  மற்றும் நமது பன்மைத்துவக் கூட்டுப் பண்பாடு கலாச்சாரத்திற்கு அவர் ஒரு வாழும் உதாரண புருஷராக விளங்கினார். மிகக் கூர்மையான ஆழமாகக் கற்றல் மற்றும் ஆய்வுத் துறை பணிகளை மேற்கொள்ளும்போதே அரசியல் மற்றும் கட்சி அமைப்பு தீவிரச் செயல்பாடுகளையும் இணைத்தே மேற்கொண்டார். அவர் ஒரு மக்கள் தலைவர் மட்டுமல்ல, மார்க்சிய முறையில் வரலாற்றை ஆய்வு செய்த மக்கள் வரலாற்றாளரும் கூட!

          அவரது பங்களிப்பை ஊன்றிப் படிப்போம், பயன் பெறுவோம்! டாக்டர் கே எம் அஷ்ரஃப் ஜிந்தாபாத்!

--தமிழில்: நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்  

No comments:

Post a Comment