Thursday 19 November 2020

பெண்களும் தொழிலாளர் வர்க்க இயக்கமும்

 

பெண்களும்

இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கமும்

--டாக்டர் B V விஜயலெட்சுமி

நன்றி : நியூஏஜ் (நவ.15 –21 இதழ்)

லாலா லஜபதி ராய் தலைமையில் பம்பாய் எம்ப்பயர் தியேட்டரில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் 1920 அக்டோபர் 31ம் நாள் AITUC பேரியக்கம் பிறந்தது. மாநாடு நிறைவேற்றியப் பல தீர்மானங்களில் உணவு தானியங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது, வேலை இல்லாதோர் விபரங்களை முறையாகப் பதிவு செய்வது, விபத்துக் காப்பீடு, உடல் நலமின்மை மற்றும் தனித்த சலுகை விடுப்புகள் வழங்குவது, தொழிலாளர்கள், ஊழியர்கள் மீது போலீசார் நடத்தும் காட்டுமிராண்டித் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவது போன்றனவும் அடங்கும். இவை தவிரவும் மற்றொரு முக்கியத் தீர்மானம் உழைக்கும் பெண்களின் கைக் குழந்தைகள் பராமரிப்பு நலத்திற்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது. இன்றைக்கு, தாய் தொழிற்சங்கம் பிறந்து 100 ஆண்டுகள் கொண்டாடும் நிலையிலும், பணி செய்யும் இடங்களில், அது அரசு அலுவலகமாயினும் சரி, எங்கேயும் குழந்தைகள் காப்பக மையம் (crèche) என்ற வசதி ஏற்படுத்தப்படவில்லை என்பது உறுத்தலான உண்மை. ஆளும் வர்க்கங்களுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க நேர்மையான அக்கறை இல்லை என்பதே அதன் பொருள்.

ஏஐடியுசி பிறப்பதற்கு முன்பே பல்வேறு பாட்டாளி வர்க்கப் போராட்ட இயக்கங்கள் நம் தோழர்கள் பலரால் நடத்தப்பட்டுள்ளன. தொழிற்புரட்சி, உலகில் வெகுகாலம் முன்பே தொடங்கி விட்டாலும் இந்தியாவில் தாமதமாகவே ஏற்பட்டது. ஒரு காரணம், நமது நாடு விவசாய நாடு; மற்றொன்று, நம் நாட்டிலிருந்து மூலக் கச்சாப் பொருள்கள் ஏற்றுமதி கட்டாயப்படுத்தப்பட்டு அதிலிருந்து உற்பத்திச் செய்யப்பட்ட பயன்படு பொருள்களுக்கு நம்மை வெளிநாடுகளைச் சார்ந்திருக்கச் செய்த அடிமைநிலை. நமது நாட்டில் 1850ல் பம்பாயில் நிறுவப்பட்ட டெக்ஸ்டைல் ஆலையே முதலாவது தொழிற்சாலை; பின் அதே போன்ற பல ஆலைகள் பம்பாயிலேயே துவக்கப்பட்டன. வங்காளத்தில் சணல் ஆலைகளும், கேரளாவில் தென்னை நாரினால் செய்யப்படும் கயிறு ஆலைகள் பலவும் தொழில் வளர்ச்சியின் அடையாளமாயின. மெல்ல மெல்ல வேறுபல ஆலைகளும் முளைக்கத் தொடங்கின.

தொழிலாளர் வர்க்க இயக்கம் -- மூன்று கட்டம்

வரலாற்றாளர்கள் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை மூன்று கட்டங்களாகப் பகுக்கின்றனர். முதல் கட்டம், 19ம் நூற்றாண்டின் பாதியிலிருந்து முதல் உலகப்போர் வரை; இரண்டாவது அதிலிருந்து நமது தேசம் விடுதலை அடைந்தது வரை; மூன்றாவது கட்டம், சுதந்திர இந்தியாவில் தற்போதைய வளர்ச்சி கட்டம். முதல் கட்டத்தில் அமைப்பு ரீதியான தொழிற் சங்கம் இல்லை எனினும், பிரச்சனைகள் தீர்வுக்காக வர்க்க அணுகுமுறையில் போராட்டங்கள் நிகழவே செய்தன. பம்பாய் டெக்ஸ்டைல் ஆலையில் முதலாவதும் மூத்ததுமான தொழிற்சங்கம் 1851ல் தொடங்கப்பட்டது. பின்னர் 1854ல் கல்கத்தா சணல் ஆலையில் இரண்டாவது தொழிற்சங்கம் வந்தது மட்டுமல்ல, 1879லேயே இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் பணிநிலைகள் மற்றும் வாழ்க்கை நிலையை ஆராயக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

தொடக்கத்திலிருந்து பெண்களின் பங்கேற்பு

1891ல் முதலாவது தொழிற்சாலை சட்டம் சாதிக்கப்பட்டது. அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. 10ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்க 1890ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட இயக்கம் நடைபெற்றது. மற்ற கோரிக்கைகளோடு உழைக்கும் பெண்கள் முன் வைத்த வாராந்திர விடுமுறை கோரிக்கை இடம் பெற்றது. இதன் பிறகு ஒவ்வொரு தொழில் பிரிவிலும், ஒவ்வொரு ஆலையிலும் தொழிற் சங்கங்கள் அமைக்கப்பட்டன. அந்தச் சங்கங்களின் பிரிக்க முடியாத பகுதியாகப் பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் பெண்கள் சேர்ந்தனர். தொழில்மயம் வந்த இடமெல்லாம் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கு பெற்றனர். 1913ல் பம்பாயின் 1,10,033 தொழிலாளர்களில் 22,402  பேர் பெண்கள் என்பது மொத்த எண்ணிக்கையில் 20 சதமாகும்.

அந்த ஆலைகளின் பணிச் சூழல் நிலைமைகள் மிக மோசம். தொழிலாளர் சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில் அங்கே மனித உழைப்புச் சுரண்டல் தலைவிரித்தாட, வரைமுறை அற்ற நீண்ட வேலை நேரம், வாராந்திர ஓய்வு குறைவு, அற்பக் கூலி கோலோச்சியது. இதனால் தவிர்க்க இயலாத தன்னெழுச்சிப் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் வெடித்தன. அனைத்து ஆலைகளிலும் ஆண்களோடு பெண்களும் தங்கள் குழந்தைகளோடு வேலை செய்வது வழக்கம். இந்த அனைத்துப் போராட்டங்களிலும் பெண்கள் பெரும் உற்சாகத்தோடு பங்கேற்றனர். போராடிய அந்தப் பெண்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் அச்சுறுத்தல்களுக்கும் அளவே இல்லை. பணிப் பாதுகாப்பும் இல்லை. இவை அனைத்தையும் மீறி ஒவ்வொரு போராட்டத்திலும் பெண்கள் அச்சமின்றித் துணிவோடு வீராங்கனைகளாகக் களத்தில் முன் நின்றனர்.

கேரளாவில் காயர் இன்டஸ்டரி

19ம் நூற்றாண்டிலேயே கேரளாவில் தென்னை நார் கொண்டு தயாரிக்கப்பட்ட காயர் இன்டஸ்டரி பொருள்களில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மலையாள மொழியில் ‘கயர்’ என்றால் கயிறு, முறுக்கப்பட்ட சங்கிலி என்பது பொருள். அந்த வார்த்தை இத்தொழில் மூலமே ஆங்கிலத்திற்கும் காயர்(coir) என்று சென்றது. மணிக் கயிறு மூலம் பின்னப்படும் தரைவிரிப்புகள் இங்கிலாந்து போன்ற பிற பகுதிகளிலும் 1840களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த விரிப்புகள் ஐரோப்பாவிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.  1860ல் ரூபாய் 6 லட்சமாக இருந்த இதன் ஏற்றுமதி மதிப்பு 1864 –65ல் ரூபாய் 43.6 லட்சமாக உயர்ந்தது. அலப்பி எனப்படும் ஆலப்புழாவில் 1901ல் தொடங்கப்பட்ட தரைவிரிப்பு (கார்ப்பெட்) பின்னல் ஆலையில் ஆயிரத்து நூறு பேர் பணியாற்றினர். முதல் உலகப் போரின்போது உச்சத்தை அடைந்த ஏற்றுமதி, போரின் பின்விளைவாய் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. ஆலைகளில் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே கிராமப் பகுதிகளின் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை ஆலைகளில் வந்து ஆலைத் தொழிலாளர்களாக வேலை செய்யக் கெஞ்சினர். 1930 வாக்கில் ஆலப்புழாவில் மட்டும் 1லட்சத்து 33 ஆயிரம் ஆலைத் தொழிலாளர்களும், 32,000 பேர் ஆலைகளுக்கான கச்சாப் பொருள்களைத் தயாரிக்கும் குடிசைத் தொழில்களிலும் இருந்தனர்.

1922ல் தொடங்கப்பட்ட திருவாங்கூர் தொழிலாளர் அசோசியேஷன் (AITUC) குறைந்த காலத்திலேயே பலம் பொருந்திய சங்கமாயிற்று. அத்தொழிற்சங்கத் தலைவர்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுபவர்களாக இல்லாமல் நன்கு முதிர்ச்சி அடைந்த அரசியல் ஆளுமைகளாகவும் பரிணமித்தார்கள் என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். இயக்கங்களை அவர்கள் தொழிலாளர் வர்க்கமாக ஒழுங்குபடுத்தி உயர்த்தினார்கள். 1931 முதலே முதலாளிகள், தொழிலாளர்களின் உரிமைப்படியான உரிய ஊதியத்தை வெட்டத் துவங்கினர். பணிப் பாதுகாப்பும் குறையத் தொடங்கியது. அப்போது தென்னை நார் காயர் இன்டஸ்டரியில் இரண்டு விதமான வகை இருந்தன. ஒன்று, கயிறு பொருள் பின்னல் ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருள் தென்னை நார் எடுத்து சுத்தப்படுத்தித் தருவதற்கான திரட்டப்படாத உதிரித் தொழிலாளர்கள் பிரிவு; இரண்டாவது, அப்படித் தயாரித்தளித்த மூலப் பொருளைக் கொண்டு தரைவிரிப்பு முதலான (மதிப்புக் கூட்டல்) பொருள்களைத் தயாரிக்கும் பின்னல் ஆலைகள் அமைப்பு ரீதியான தொழிலாளர்களைக் கொண்டது. திரட்டப்படாத பிரிவில் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்ற, திரட்டப்பட்ட பிரிவில் பெண்கள் 25 சதவீதம் மட்டுமே. நாளுக்கு நாள் கூலி குறைக்கப்பட்டு, வேலை நேரம் மட்டும் அதிகரிக்கப்பட்டது. அமைப்புரீதியான பலம் பொருந்திய சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களுக்கான சட்டங்களை இயற்ற கோரிக்கை வைத்தனர். இறுதியில் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டது. 1938 அக்டோபர் 21ம் நாள் தொடங்கிய வேலை நிறுத்தத்தில் ஒவ்வொரு நாளும் மோதலும் போராட்டமும்தான். அதில் பெருமளவு பெண்கள் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தத்தில் முதல் கள பலி

வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது இராணுவம் 1938 அக்டோபர் 24ல் நடத்திய கொடுமையானத் துப்பாக்கிச் சூட்டில் அம்மு மற்றும் சுபோதா, இரண்டு பெண் தொழிலாளர்கள், முதல் களபலி ஆயினர். அதன் பிறகும் பெண்கள் வீறுகொண்டு உறுதியோடு போராடினர். அவர்களின் தியாகம் மற்றும் உறுதிப்பாடு காரணமாக பல கோரிக்கைகளை வெல்ல முடிந்தது. 1938 நவம்பர் 15ம் நாள் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆலைகளிலும் பெண்களின் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தப் பெண்கள் குழுவின் வழிகாட்டலில் பெண் தொழிலாளர்களுக்குத் தங்களைத் தாங்களே அமைப்பு ரீதியாகப் பெருமளவில் திரட்ட முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.

வீராங்கனை கே தேவயானி

அதே துறையில் வீராங்கனையாக உருவாகி வரலாற்றுப் பங்களிப்பு செய்த மற்றொரு பெண்மணி கே தேவயானி – அவர் இறுதி மூச்சுவரை பல பிரச்சனைகளோடு போராடியவர். 1936 தனது 15வது வயதில் ஆலப்புழா தாலுக்காவில் பெண்களுக்கான சங்கம் அமைத்தார். விரைவிலே பெருமளவிலான அமைப்புகளின் பலன்களை உணர்ந்து கொண்டவர், தொழிற்சங்க இயக்கத்தின் மைய நீரோட்டத்தில் இணைந்து பெருமளவில் பெண்களைத் திரட்டிச் சாதித்தார். தன்னுடைய சக நண்பர்கள் மீனாட்சி, தாட்சாயணி மற்றும் பவானியோடு கூட்டுக் கம்யூன் வாழ்க்கை நடத்தி பெண் செயல்வீரர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தினார். தங்கள் பணி முடித்ததும், கயிறு ஆலை பெண் ஊழியர்கள் முகாம்களில் கலந்து கொண்டனர்.

ஆலை பெண் தொழிலாளர்கள் தவிர அவர் விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டினார். ஆலப்புழா தாலுக்காவிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள கொல்லர்கோடு விவசாய நிலங்களில் பணியாற்றிய விவசாயப் பெண் தொழிலாளர்களை விழிப்புணர்வு பெறச் செய்தார். அங்கே அவர் முன்னின்று நடத்திய வேலைநிறுத்தம் வெற்றிகரமாக அமைந்தது. அந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக 6 அணா கூலி உயர்வும் பிற்பகலில் அரை மணிநேர ஓய்வும் சாதிக்கப்பட்டது. மெல்ல அவர் மீதான போலீஸ் தாக்குதல்கள் அதிகரித்தன. போலீஸ் துரத்தியதிலிருந்து தப்பிக்க ஒரு நாள் இரவு முழுவதும் சுடுகாட்டில் தங்க நேரிட்டது. வறுமையின் காரணமாக அவரது மகள் ராதாம்மாள் இறந்தே போனார். இத்துயரச் சம்பவம், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முதலாவது எழுச்சியாகப் போற்றப்படும் வரலாற்றுப் புகழ்மிக்க, காரிவேலூர் போராட்ட காலத்தில் நிகழ்ந்தது. இதன் பிறகு தேவயானி புன்னப்புரா வயலூர் போராட்டத்திற்குப் பெண்களைத் திரட்டினார். வறுமையோடும் வேறு பல பிரச்சனைகளோடும் அவர் போராடினார். பெரும்பாலும் அனைத்துப் பெண்களும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தாலும், புரட்சிகரமான (திருவாதிரை) பாடல்களைப் பாட அவர்கள் மிகுந்த ஊக்கம் பெற்றனர். சங்கங்களில் பெண்களைச் சேர்ப்பதற்காகப் பெண் தலைவர்கள் மிகக் கடுமையாகப் பாடுபட்டனர்.

வங்கத்தின் சணல் ஆலைகளும் ‘துக்மத் தீதி’யும்

கேந்திரமான தொழில் பிரிவில் அடுத்து முக்கியமானது வங்காளத்தின் சணல் ஆலைகள். அன்றைய கல்கத்தா நகரின் (வடக்கு 24 பர்க்கானா மாவட்ட) பாராநகர் பகுதியில் அநேக சணல் ஆலைகள் இயங்கின. வாழ்வாதாரம் தேடி நாட்டின் பலபகுதிகளிலிருந்து பல குடும்பங்கள் கல்கத்தாவுக்குப் புலம்பெயர்ந்தன; அதுபோல போலவே 1930ல் மத்திய பிரதேசத்திலிருந்து துக்மத் தீதி (துக்மத் அக்கா) தனது கணவரோடு கல்கத்தா வந்தார். கணவன் மனைவி இருவருமே சணல் ஆலை எந்திர அறையில் ஆறு அணா ஊதியத்தில் பணியாற்றினர். அங்கே 600 முதல் 700 பெண் தொழிலாளர்களும் இருந்தனர். அனைவருமே குறைந்த ஊதியம், கூடுதல் வேலை நேரம் எனக் கடும் சுரண்டலுக்கு உள்ளாகி வேலை பாதுகாப்பு எதுவுமின்றி உழன்றனர். கொதித்தெழுந்த துக்மத் தீதி தொழிலாளர்களை அணிதிரட்டத் தொடங்கினார். ஒடுக்குதலுக்கு எதிராக இணைந்து போராடுவதை அவர்களுக்குக் கற்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1946ல் பாராநகர் சணல் ஆலை 14ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஆலையின் நுழைவாயிலில் மேலாளர் வாகனத்தை முற்றுகை இட்டனர். 700 பெண் தொழிலாளர்களோடு துக்மத் வீரம் செறிந்த பங்கு வகித்த அந்தப் போராட்டத்தால் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிட்டியது.

1947 தேச விடுதலைக்குப் பிறகு ஆலை சம்பந்தமான விவாதங்களில் பங்கேற்க வசதியாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவைத் தேர்தல் மூலம் மறுசீரமைக்க அழுத்தம் தரப்பட, இறுதியில் ஆலை நிர்வாகமும் அதற்கு 1950ல் ஒப்புக் கொண்டனர். முதன் முறையாக அந்தக் குழுவின் உறுப்பினராகத் துக்மத் ஏஐடியுசி பிரதிநிதியாகத் தேர்வு பெற்றார்.

கல்கத்தா டல்ஹவ்சி பகுதியில், இந்தியச் சணல் ஆலை அதிபர்களின் அசோசியேஷனை 1953ல் 20ஆயிரம் தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அதன் தலைமை துக்மத் தீதி. அவர் சணல் பிரிவு தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பிற சமூகப் பிரச்சனைகளுக்காகவும் தீவிரமாகப் பணியாற்றினார். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்களின் உணவுப் பிரச்சனை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான சமூகப் பிரச்சனைகளில் சேவை செய்ய ஏராளமான பெண்களை அணிதிரட்டி அவர்களின் சமூக உணர்வை எழுப்பினார். அவரைக் கைதுசெய்து சிறையில் தள்ள போலீஸ் பெரும் படையோடு அவரது அலுவலகத்தைச் சூழ்ந்து கொண்டனர். வீரப்பெண்மணி அவர், மிக எளிதாகப் போலீசார் கண் முன்பே ஆண் உடையில் பிடிபடாது தப்பி விட்டார்.

“ஒன்றுபட்டு முன்னேறுவோம்! இணைந்து நாமே வென்றிடுவோம்!” என்பதவர் முழக்கம். உழைக்கும் வர்க்கக் குடும்பத்தில் பிறந்து தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டு ஆயிரக் கணக்கான சணல் ஆலைத் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர். அதனால்தான் மக்கள் அவரை மிகுந்த அன்போடு ‘அக்கா’ (வங்கமொழியில் தீதி எனில் சகோதரி) துக்மத் தீதி என்றழைத்தனர். நேயத்திற்குரிய அந்தப் பெண் போராளி 1994ல் தனது 84 வயதில் மறைந்தார். அவரைப் போலவே பெண்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கி, அணிதிரட்டிய இயக்க அமைப்பாளர்கள், வீரம் செறிந்த வர்க்கப் போராளிகளாக இன்னும் பல பெண் தலைவர்கள் உண்டு. அவர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே பலமான தொழிற்சங்க அமைப்புகள் மலர்ந்து மணம் வீசி, வெற்றியும் பெற்று பீடு நடை போட்டு வருகின்றன.

ஆந்திரா தொழிற்சங்க இயக்கத்தில் பெண்கள்

ஆந்திரப் பிரதேசம் அமைக்கப்படுவதற்கு முன்பு, 1956ல் ஆந்திரா, ஹைத்ராபாத் நிஜாம் மாநிலங்களில் பல்வேறு ஆலைகள், சணல், டெக்ஸ்டைல், புகையிலை மற்றும் பீடித் தொழில் பெரிய ஆலைகளாக இருந்தன. அவற்றில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பணியாற்றினர். கடுமையான வேலைக்குக் குறைவான கூலி, சுகாதாரமற்ற மற்றும் உடல்நலத்திற்குக் கேடான மிக மோசமான பணிச்சூழல். இத்தனையும் மீறி வருந்தத்தக்க ஏழ்மையின் காரணமாக அவர்கள் அங்கே வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

பணியாற்றும் இடத்திற்குக் குழந்தைகளையும் அழைத்துச் சென்று விடுவதால் அடிக்கடி தாய்மார்களும் குழந்தைகளும் நெஞ்சக நோய்களால் பாதிக்கப்பட்டனர். ஹைத்ராபாத்தில் டெக்ஸ்டைல் ஆலைகள் தவிர குடிசைத் தொழில்களாக இருந்த தீப்பெட்டி செய்தல், பீடி, வளையல்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சிகரெட் தயாரிப்பு முதலிய ஆலைகளிலும் பெண்கள் பெருமளவில் இடம் பெற்றனர். ஹைத்ராபாத்தில் உருவான பல்வேறு தொழிற்சாலை எஸ்டேட்டுகள் தவிர மற்ற பிரிவுகளிலும் அதிகமான திரட்டப்படாத தொழிலாளர்கள் இருந்தனர்.

ஆந்திரா பிராந்தியத்தின் புகையிலை தொழிற்சாலைகளில் பெண்கள் பலர் பணியாற்றினர். விஜயவாடா வெளிப்பகுதியில் கிருஷ்ணா மாவட்டம் கொல்லப்புடி பகுதியில் இருந்த ITDC புகையிலை குடோன்களில் ஜோஷ்யபாட்லா சுப்பம்மா என்பவர் பெண்களை அணிதிரட்டுவதில் சோர்வின்றிக் கடுமையாகப் பாடுபட்டார். அவர்களை AITUC பேரியக்கக் குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களின் குறை களையப் போராடவும் செய்தார். விவசாயப் பெண் தொழிலாளர்களுக்குச் சமவேலைக்குச் சம ஊதியம் பெறவும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

குண்டூரில் இருந்த பல புகையிலை குடோன்களில் ஆயிரமாகப் பெண்கள் பணியாற்றினர். அவர்களை அணி திரட்ட உழைத்த பல பெண் தலைவர்களில் பாக்கியம்மா ஒருவர். அவரது தீவிரமான செயல்பாடு பெண்களை வீரத்தோடு போராட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமின்றி வீட்டிலும் வெளியிலும் தைரியம் மிக்கவர்களாக செயல்படுவும் ஊக்கப்படுத்தியது.

தெலுங்கானா ஆயுதப் போராட்டக் காலங்களின்போது பிரமிளா தாய் மகேந்திரா சிறந்த திறன் மிக்க தொழிலாளியாக இருந்தார். ஆயுதப் போராளிகளுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பவராக மட்டுமல்ல ஆயுதங்களையும்கூட பலமுறை எடுத்துச் சென்று வழங்கிய தைரிய லெட்சுமியாகவும் அறிவுக் கூர்மை உள்ளவராகவும் செயல்பட்டார். அதன் பிறகு தொழிற்சாலைப் பிரிவுகளில் தொழிற்சங்கங்களைக் கட்டுவதிலும் அதே திறமையோடு பாடுபட்டார். பிஸ்கெட் தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிய இளம் பெண்களின் உரிமைகளுக்காகச் சோர்வின்றி உழைத்து AITUC சங்கங்களை அமைத்தார். தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் மற்றொரு வீராங்கனை பிரிஜ்ராணி கவுர். அவர் மகிளா சம்ஐக்யா பெண்கள் அமைப்பில் பணியாற்றினாலும் திரட்டப்படாத தொழிலாளர்கள் பிரிவில் பல பெண்களை அணிதிரட்டினார். தனது கணவர் டாக்டர் ராஜ் பகதூர் கவுர் அவர்களுடன் மிக எளிமையான வாழ்க்கையை –கழிவுநீர் கால்வாய் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் காலனியில்—வாழ்ந்தார்.

அரசு சாலைப் போக்குவரத்து கார்பரேஷனில் பணியாற்றியவர் (நாயுடம்மா எனப் புகழோடு அறியப்படும்) பத்மா நாயுடு. சமூகப் பணிகளோடு, பெண் செயல் வீராங்கனைகள் பலரைத் தொழிற்சங்கத்தில் அணி திரட்டினார். அவரோடு ருக்மணி மற்றும் சாந்தா தீவிரப் பங்கு வகித்தனர். போக்குவரத்து கழகத்தில் 1960களில் நீண்ட கால வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மற்ற பெண்களை அணி திரட்டியது மட்டுமல்ல, தொழிலாளர் காலனி குடும்ப உறுப்பினர்களையும் குழந்தைகளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்தினார். கொடுமையான லத்தி தாக்குதலுக்கு ஆளாகி பத்து நாட்கள் சிறையிலும் இருந்தார். அதன் வலியும் வேதனையும் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது.

தொழிற்சங்க இயக்கத்தில் பெண்களின் இடர்பாடு

சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பல சாதாரண பெண்கள் களத்தில் முன் நின்றது போலவே வர்க்க உணர்வுடைய பல பெண் செயல்வீரர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர். இரண்டு தெலுங்கு மாநிலங்களின் மருத்துவத் தொழிலாளர்கள் சங்கம், 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண் ஊழியர்களைக் கொண்டது, கடந்த 70 ஆண்டுகளில் தங்களின் பல கோரிக்கைகளை வென்றுள்ளனர். பீடித் தொழிலில் இரவும் பகலும் கடும் பணியாற்றும் திரட்டப்படாத பிரிவு பெண்களை அணி திரட்டி அந்தச் சங்கங்கள் பாடுபட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு அந்தப் பெண் தலைவர்கள் மேல்நிலை அடைய இயலவில்லை. ஏன் என ஆராயந்தால் அவர்களின் குடும்பப் பொறுப்பு மட்டுமின்றி, நீக்கமறப் பரவியுள்ள ஆணாதிக்க மனப்பான்மை பெருமளவுக்கு அதன் அடிவேர் காரணமாக உள்ளது; வர்க்க உணர்வை வளர்த்துத் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே அந்த மனத் தடையை உடைக்க வேண்டும்.

நமது இந்தியச் சமூகத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றிருந்த காலத்திலேயே, “விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை/ வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்” என்று பாரதி முழங்கியபடி அந்தக் கண்ணாடிச் சிறை விதானத்தை உடைத்துப் பல துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றும் நடுத்தர வர்க்கப் பெண்களும் பெண் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதைக் கவுரவக் குறைச்சலாகக் கருதுகின்றனர்; ஆனால் வர்க்க உணர்வுள்ள பெண் தொழிலாளர்கள் இயக்கங்களின் முன்னணிப் படையாக முந்தி நிற்பதில் பின்வாங்குவதில்லை. ஒரு சம்பவத்தை நினைவுவூட்டத்தான் வேண்டும். கேரளா மூணாறு மலைப் பகுதியில் மிகப் பெரிய தோட்டப் பயிர் எஸ்டேட்டாக இருப்பது கண்ணன் தேவன் டீ எஸ்டேட். அங்கே 2015 செப்டம்பரில் ஊதிய உயர்வு கோரி 5ஆயிரம் பெண் தொழிலாளர்கள் மின்னல் வேக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைதியாக அந்தப் போராட்டம் பல நாள்கள் நீடித்தது. அவர்களிடையே தொழிற்சங்க அமைப்பு ஏதுமில்லை எனினும் அவர்களின் ஒற்றுமையான சக்தியின் மூலம் கோரிக்கைகளில் வெற்றி அடைந்தனர்; இறுதியில் பேச்சுவார்த்தைகள் பலனளித்தன.

2016 செப்டம்பரில் மத்திய அரசு பிராவிடெண்ட் பண்டு கணக்கிலிருந்து தொழிலாளர்கள் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்குச் சில தடைகளை விதித்தது. இதைக் கேள்விப்பட்டதும் ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிய 1,20,000 பெண் தொழிலாளர்கள் பெங்களூரு வீதிகளில் திரண்டனர். சில மணி நேரத்தில் பிற ஆலைத் தொழிலாளர்களும் அவர்களோடு சேர்ந்தனர். பெங்களூரின் உழைக்கும் பெண்கள் நகரை முடக்கினர். இறுதியில் மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டி வந்தது. இந்த அனுபவங்களிலிருந்து, பெண்கள் தங்கள் பிரச்சனைகளை உணர்ந்து விட்டால், இயற்கையாகவே ஒன்றிணைந்து எதிர்க்கத் துணிந்து விடுவார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே பெண்களை மேலும் மேலும் ஊக்குவித்து அமைப்புகளில் போராட்ட இயக்கங்களில் பங்குபெற உற்சாகப்படுத்துக!

திரட்டப்படாத தொழிலாளர்களின் அவலம்

 குறிப்பாகத் திரட்டப்படாதப் பகுதியினரின் பிரச்சனைகள் ஏராளம். அங்கே அவர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்களோ, உரிய ஊதியம், சமூக மற்றும் பணி பாதுகாப்போ எதுவுமில்லை. லட்சக் கணக்கான விவசாயத் துறை உழைப்பாளிகள், சில்லறை விற்பனையாளர்கள், வீட்டுப் பணி செய்வோர், அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு மற்றும் பிற திட்டப் பணியாளர்கள் இவர்களுக்கெல்லாம் ’தொழிலாளி’ என்ற அந்தஸ்துகூட

 வழங்கப்படுவதில்லை. அவர்களெல்லாம் அற்பக் கூலி அளிக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். இயக்கப் போராட்டங்கள் அனைத்திலும் அவர்கள் முன்னே நிற்கிறார்கள்; கடும் போராட்டங்களுக்குப் பிறகும் கோரிக்கைகளில் சிறிதளவே முன்னேற்றம் காண்கிறார்கள். அங்கேயும் வீரம் செறிந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன, இன்னும் எதிர்காலத்திலும் நிகழும். இன்றைய மக்கள் விரோத அரசின் கீழ் ஆகப் பெரிய போராட்டங்களுக்கு அவர்கள் தயாராக வேண்டும். அத்தகயை போராட்டங்களை மேலெடுத்துச் செல்லவதற்காக அவர்களை உற்சாகப்படுத்தி ,ஊக்கப்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.

புகழ் வானில் பெண் நட்சத்திரத் தலைவர்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற முக்கிய AITUC தலைவர்கள், க்ளாரா ஜெட்கின்சன், ரோசா லுக்சம்பர்க், மேரி ஜோன்ஸ் போன்றோர் உள்ளனர். இயக்கத்தின் சல்லி வேர் தொடங்கி தொழிலாளர் வர்க்கத்திற்காகப் பாடுபட்டு தேசிய அளவில் உயர்ந்த பார்வதி கிருஷ்ணன், ரோசா தேஷ்பாண்டே போன்றவர்கள் இருந்தனர். சுதந்திரப் போராட்ட வீராங்கனையான பார்வதி கிருஷ்ணன் கோயம்புத்தூர் டெக்ஸ்டைல் ஆலைத் தொழிலாளர்களிடையே பணியாற்றினார்.

அவர் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும் செல்வச் சீமாட்டி குடும்பத்தில் 5ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரராகப் பிறந்தவர், அத்தனை சொத்து சுகங்களையும் விட்டு விட்டுத் தொழிலாளர்களுக்காகப் பாடுபடத் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர். தேசிய அளவில் AITUC பேரியக்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துத் தமது 94வது வயதில் 2014 பிப்ரவரி 20ம் நாள் மறைந்தார். மற்றொரு வீராங்கனை தோழர் எஸ் ஏ டாங்கேவின் வாழ்க்கை துணையான   பம்பாயின் உஷாதாய் டாங்கே, பல வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர், அவரது தலைமையில் ஆலை மேலாளர் ஒருவரைப் பெண் தொழிலாளர்கள் ஒரு முழு இரவும் மறியல் செய்தார்கள்.

மற்றொரு மெய் சிலிர்க்கும் சம்பவம் 1929ல் துணி ஆலைகளில் நடந்த மிகப் பெரிய வேலைநிறுத்தத்தின்போது நடந்தது. ஆலை முதலாளிகளைத் ஆலைக்குள் நுழைய விடாமல் கேட்டின் முன்பு தன் பெண் குழந்தையைக் கிடத்தினார் – உஷாதாய் டாங்கே! அந்தப் பெண் வேறு யாருமல்ல, பெற்றோரின் பெயர் சொல்லப் பிறந்த புலிக் குட்டி ரோசா தேஷ்பாண்டே, புலிக்குப் பிறந்தது பூனையாவதில்லை. பிறகு அவரும் பின்னாட்களில் மும்பையின் புகழ்வாய்ந்த தொழிற்சங்கவாதியாகப் பரிணமித்தார். மும்பை மக்கள் அவரை அன்போடு ‘சிகப்பு ரோஜா’ என்றழைப்பார்கள். அவரும் பல டெக்ஸ்டைல் மில்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் ஆலைகளில் பல தொழிற்சங்களில் தலைமை வகித்தார். அவரால்தான் தங்களது பணி நிலைமைகள் உயர்ந்தன என மருந்து கம்பெனிகளின் ஊழியர்கள் நன்றியோடு நினைவு கூர்கிறார்கள்.

இதற்கு முன்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் திருமணமாகாத பெண்களை மட்டுமே வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்; அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் எனில் உடனே வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள். அவர்களுக்குப் பேறு கால விடுமுறை மற்றும் சலுகைகள் அளிப்பதைத் தவிர்த்துவிடலாம் எனக் கம்பெனிகளின் நிர்வாகம் கருதியதே காரணம். இதே நிலைமை ஏர் இந்தியா நிறுவனத்திலும் நிலவியது. (பேர் அண்ட் லவ்லி போல விமானப் பணிப்பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என விரும்பும் ஆணாதிக்க மனோபாவ எதிர்பார்ப்பு.) மனிதத் தன்மையற்ற இந்நிலைமைகளை எதிர்த்துத் தளர்வின்றிப் போராடினார். இறுதியில் நிர்வாகங்கள் பணிந்தன என்பதே அவரது போராடும் குணத்தின் வெளிப்பாடு. பெரும் வாக்கு வித்தியாசத்தோடு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1994ல். அவரது இயல்பும் குணமுமான அநீதிகளை எதிர்த்து உரத்துக் குரல் எழுப்பும் சக்திமிக்க கர்ஜனை பாராளுமன்றத்திலும் எதிரொலித்து, பலரும் அதனால் ஈர்க்கப்பட்டனர். அவர் சமீபத்தில் தமது 91வது வயதில் 2020 கடந்த செப்டம்பர் 19ம் நாள் மறைந்தார். (அந்த நாள் மத்திய அரசு ஊழியர்களின் போராட்ட வரலாற்றில் தியாகிகள் தினம் –1968—என அனுசரிக்கப்படுகிறது). இறுதி மூச்சுவரை படிப்பில் திளைத்து இலக்கியப் பணிகளில் ஈடுபட்ட அவர் தீவிரச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தார்.

விண்ணில் பெயரிடப்படாத விண்மீன்கள்

புகழோடு விளங்கிய இந்த வீரப் பெண்மணி தலைவர்களைத் தவிர, களச் செயல்பாடுகளில், பெயர் வெளிப்படாத எத்தனையோ தலைவர்கள் அல்லும் பகலும் இயக்கங்களில் வான வீதியின் கோள்கள் போல இயங்கி வருகிறார்கள்; தொழிலாளர் வர்க்கச் சரித்திர ஏடுகளில் தங்கள் அறிவார்ந்த திறமைகள் மற்றும் போர்க் குணங்களாலும் செம்மை சேர்க்கின்றனர்.(அமைப்பு ரீதியான சங்கங்களில், அரசு, வங்கி, தொலைபேசி எனப் பல பிரிவு தொழிற்சங்கங்களிலும் எத்தனையோ பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்)
       
நூற்றாண்டு காலத் தொழிற்சங்க இயக்க வரலாறு தியாகங்களால் நிரம்பித் தளும்புகின்றது. பாடுபடும் பாட்டாளிகளுக்காக உழைக்கவும், தியாகங்களை ஏற்கவும் முன் வருவோம்! வர்க்கப் போராட்டத்தின் வார்ப்படங்களாய், போர் வாளாய், நன்கு பயிற்றுவித்தக் கட்டுப்பாடு மிக்கப் படைவீரர்களாய் தொழிலாளர்களை – ஆண் பெண் என்ற பேதம் இன்றி – உருவாக்குவோம்!

“எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
 எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
 எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக
 எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!”
      

                                                              –-பாவேந்தர் பாரதி தாசன்

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment