Sunday 15 November 2020

இந்தியத் தொழிலாளர் வர்க்க வரலாற்றுச் சுவடுகள் ஒரு மீள் பார்வை -2


இந்தியத் தொழிலாளர் வர்க்க வரலாற்றுச் சுவடுகள்

ஒரு மீள் பார்வை -2

(சென்ற கட்டுரை தொடர்ச்சி --நிறைவுப் பகுதி-- சமகால நடப்புகள்)

--அமர்ஜித் கவுர்

ஏஐடியுசி பொதுச் செயலாளர்

சென்ற பகுதியில் விவரிக்கப்பட்ட நெடிய வரலாற்றுப் பின்னணியில் சாதிக்கப்பட்ட உரிமைகள்தான் இன்றைய காலகட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. சர்வதேச நிதி மூலதனம் வரலாற்று சக்கரத்தைத் திசை திருப்ப விரும்புகிறது. ஆட்சியாளர்கள் இச்சூழ்நிலைக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதும்; 150 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கடும் போராட்டங்களால் கைவரப்பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கத் தொழிலாளி வர்க்கமாகிய நாம் எப்படி நம்மைத் தயார்படுத்திப் போராட்டக் களம் காண்கிறோம் என்பதும் மிக முக்கியமானது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பாசிசப் போக்குகள், ஆளும் வர்க்கத்தினரின் அறிவிக்கப் படாத ஆதரவுடன், வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம். சகல மட்டங்களிலும் மோதல்–நாட்டிற்குள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கிடையே – மோதல்கள் அதிகரிக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கைகளுக்கு, அவர்களின் சதிச் செயல் திட்டங்களுக்கு, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியப் பகுதிகள் இலக்காகின்றன.

சர்வதேச நிதிமூலதன உத்தரவுகளுக்கு இந்திய அரசாங்கம் சரணடைகிறது. ஒரு புறம் நாட்டின் பொருளாதாரம் கார்ப்பரேட்டுகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் கையளிக்கப்பட்டு வருகிறது; மறுபுறமோ சமூகத்தில் வெறுப்பை, மதரீதியான விஷத்தைப் பரப்புபவர்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சமூகத்தைப் பிளவு படுத்தும் இத்தகைய செயல்களால், பொது சுகாதாரம், தூய்மை, மருத்துவம், வாழ்விடம், நல்ல குடிநீர் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற மக்களின் அன்றாட வாழ்வியல் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கவனம் சிதறடிக்கப்படுகிறது.

இதன் விளைவாக ஏற்கனவே வேலைவாய்ப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி எதிர்காலம் மிகவும் இருளடைந்துள்ளது. ஒப்பந்தப் பணி முறை மற்றும் தற்காலிக வேலை என்பதே இன்றைய நடப்பாகி உள்ளது. பணி நியமனம் செய்வோர் எந்தவிதமான பயமோ தண்டனையோ இன்றி, மனம் போன போக்கில் ஆட்குறைப்பு, லே-ஆஃப்  பணி இடைநிறுத்தம் மற்றும் தொழிலாளர்களைச் சஸ்பெண்ட் செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது சாதாரண நடைமுறையாகி உள்ளது.

நாட்டின் செல்வத்தை நாளும் கொள்ளை கொண்டு போக சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு விரித்த சிகப்புக் கம்பள வரவேற்பே ‘மேக்-இன் இந்தியா.’  கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்க வசதியாக, ஒருபுறம் ஊக்கமும் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன; மறுபுறம் அதற்கு மாறாக, ‘சுலபமாகத் தொழில் நடத்துவது’ என்ற பெயரில், நடப்பு தொழிலாளர் நலச் சட்டங்கள், பாதகமாகத் திருத்தப்படுகின்றன. அதிரடியான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குழப்பமான ஜிஎஸ்டி அமலாக்கம், நாளும் அதிகரிக்கும் வங்கிகளின் வாரக் கடன் சுமை, உச்சத்தைத் தொடும் ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை மீட்க வக்கற்ற அரசின் கையாலாகாத்தனம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கி உள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரி கல்வியின் மீதான தாக்குதல்கள் --வணிகமயமாக்குதல், தனியார் மயமாக்குதல் மூலமாக-- மேலும் மூர்க்கமாக அதிகரிக்கப்பட்டுள்ளன; இந்தக் கொள்கைகளுக்கு எதிரான கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் விமர்சனபூர்வமான மாற்று கருத்துகள் மற்றும் எதிர்ப்புகள் நசுக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரை உலகப் பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள், அமைப்பு சாரா சுதந்திரச் சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவக் கோட்பாட்டாளர்கள் அனைவருமே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். (சமீபத்திய உதாரணம், தமிழ் நாட்டின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர், அந்தப் பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேடுஸ்’ என்ற மனித உரிமை சார்ந்த நூலைத் தன்னிச்சையாக நீக்கியது). எதிர்ப்பு, மாற்றுக் கருத்தை வன்முறையாக மௌனமாக்குவது என்ற (பாசிச) அரசியலைப் பின்பற்றி இந்திய அரசியலமைப்பில் பொறிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளுக்குக் குழிபறிக்கிறார்கள்.

தொழிற்சங்கங்கள் என்பன கூட்டுச் செயல்பாடு, ஜனநாயகம் மற்றும் ஒன்றுகூடி இருத்தலுக்கான ஒற்றுமையின் அடையாளம்; அனைத்து சாதி, சமூக, மத நம்பிக்கை உள்ளவர்களும் தொழிற்சங்கத்தில் ஒன்றாய் இணைந்து --வேலை வாய்ப்பு, பணிபாதுகாப்பு, பணியிடம் சார்ந்த உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக– சாதாரண மனிதனின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான தங்கள் செயல் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லக் கூட்டாகப் போராடும் அமைப்பே தொழிற்சங்கம்! ஆனால் மத்திய அரசோ, முத்தரப்பு மற்றும் இருதரப்பு அமர்வுகளில் அவர்களோடு விவாதிக்க மறுத்து, கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்தியத் தொழிலாளர் மாநாட்டையும் நடத்த மறுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாறாக, தீவிரமான மூர்க்கத்தோடு உழைப்பாளி மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்களின் மீது கொடுமையான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துள்ளது.  

கோவிட் 19 பெருந்தொற்று உலகச் சமுதாயத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி சகல பகுதி மக்களையும், அனைத்து மனிதச் செயல்பாடுகளையும் பாதித்துள்ளது; அதிலும் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்கு ஆளோனார், தொழிலாளர் பிரிவினரே. மனித குலத்தின் பெரும் சவாலாக முன்நிற்கும் இப்பாதிப்பிலிருந்து உதவ முன்வருவதற்கு மாறாக, உலக முதலாளிகள் தங்கள் பங்கிற்கு மேலும் சுரண்ட, இந்த நெருக்கடியான சூழலையும் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலோ வெறும் நான்கு மணிநேர முன்னறிவிப்பு மட்டுமே தந்து, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது; தங்கள் சொந்த இடங்களில் இருந்து பணி நிமித்தம், மருத்துவச் சிகிச்சை பெற, குடும்ப வேலையாகச் சென்றவர்கள் மற்றும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர் என எண்ணிறைந்த குடிமக்களைப் பத்திரமாக ஊர் திரும்ப இயலாதபடி, சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆட்படுத்தி ஊரடங்கு அமலாக்கப்பட்டது. அவர்களில்


திடீரென வேலை இழந்த தொழிலாளர்கள், வாழ்விழந்த பலதரப்பட்டப் பணியாளர்கள் தங்க இடமும் இன்றி தவிக்க விடப்பட்டார்கள். பயணிக்க எந்த வசதியும் இல்லாத நிலையில் பல நூறு மைல் தூரம், குடும்பத்தினரோடு உயிரைப் பணயம் வைத்து நடந்து சென்றனர். அந்த அப்பாவிப் புலம் பெயர் தொழிலாளிகளின் குழந்தைகள், பெண்கள், வயதானோர் வழியில் அடைந்த இன்னல்கள் கல்நெஞ்சமுடையோரையும் கலங்கச் செய்வதாய் இருந்தது.

2019 டிசம்பர் தொடங்கிய முதல் நான்கு மாதகாலம் மார்ச் 2020வரை பெருந்தொற்றின் தீவீரம் பற்றி வாளாவிருந்து, எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தூங்கிவிட்டு, ஒரு சுகாதார அவசரநிலையை மருத்துவப் பிரச்சனையாக எதிர்கொள்ளாமல், பேரிடர் மேலாண்மை (DMA) சட்டத்தைத் திணிக்கும் பாதையையே அரசு தேர்ந்தெடுத்தது. அச்சட்டத்தின் கீழ் ஊரடங்கைப் பிரகடனப்படுத்திய அரசின் செயல் நன்கு தெரிந்து திட்டமிட்டுச் செய்ததே!  அப்போதுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களைச் சட்டம் ஒழுங்கின் கீழ் கட்டுப்படுத்தவும்; மேலும் தனியார் மயப்படுத்தல், பொதுத்துறை நிறுவனங்களை விற்றல், தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொடுமையாகத் தொழிலாளர்களுக்கு எதிராகத் திருத்துவது, மேலும் அதிக அளவில் ஜனநாயக அமைப்புகளைப் பலமிழக்கச் செய்வது, நாட்டின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிக்குள் தள்ளுவது போன்ற தங்களது நிகழ்ச்சி நிரல் திட்டங்களை எதிர்ப்பின்றிச் சுலபமாக அமலாக்கவும் முடியும் என்பது அவர்கள் கையாண்ட திறமையான உத்தி.

எல்லாம் தற்போது அனைவர் கண்முன்பும் வெட்டவெளிச்சமாகி உள்ளன. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக் குறியீடு ஜிடிபி, எதிர்மறையாகக் கீழ்நோக்கி 23.8 சதவீதம் சரிவடைந்துள்ள அதிர்ச்சியான செய்தி ஏற்கனவே சமூகத்தின் பல தரப்பு மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2019ல் மிக மோசமாக உயர்ந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது இன்னும் விரைவாக அதிகரிக்கிறது. எது குறித்தும் கவலையின்றி, அனைத்து யோசனைகளையும் புறக்கணித்து, எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தின் கருத்துகளையும் மீறி, மோடி அரசு தனது திட்டத்தின்படி நடைமுறையில் இருந்த 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு குறுங்குறிகளாக (code) மாற்ற முனைந்துள்ளது.  

மாநில ஆளுநர்களின் அவசரச் சட்டங்கள் மூலமாகவும் மாநில அமைச்சரவைகளின் அத்தகைய முடிவுகளுக்கு அவசரமாக ஒப்புதல் வழங்குவதன் மூலமாகவும் பல தொழிலாளர் சட்டங்களின் பயன்களை முடக்குவதில் காட்டப்படும் வேகம் அரசினுடைய அந்த நிகழ்ச்சிநிரல் திட்டங்கள்தான். தொழிலாளர் சட்டங்களில் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்கள் எல்லாம் மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம் அனுப்பும் சுற்றறிக்கைகள் வாயிலாக அவர்கள் வற்புறுத்தல் பேரிலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாகத் தொழில் தகராறு சட்டம், ஒப்பந்தப் பணியாளர், தொழிற்சாலைகள், சமவேலைக்கு சம ஊதியம், பணி பழகுநர் முதலான சட்டங்களில் மாறுதல்களை ஏற்படுத்தவும், கால வரையறைப் பணிநியமன (ஃபிக்ஸட் டெர்ம்) முறைகளைத் திணிக்கவும், வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கவும் மாநில அரசுகள் வற்புறுத்தப்படுகின்றன. 

ஆனால் கள எதார்த்தம் கொடுமையானது; முறைசாரா பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடும் 90 சதவீதத் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் எந்தப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாப்புப் பெற்ற தொழிலாளர்களும்கூட அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் உரிமைகளை இழக்கின்றனர். உலகத் தொழிலாளர் (ஐஎல்ஓ)  அமைப்பிற்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் சீர்குலைக்கும் மத்திய அரசு, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளையும் மீறுகிறது – அது சர்வதேச தொழிலாளர் தர நிர்ணயங்களைப் பின்பற்றுவதாக இருந்தாலும், சமூகத்தில் பன்முகக் கலாச்சாரப் பண்பாடு, நம்பிக்கைகள் மற்றும் பழக்கங்களை அனுசரிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பது என அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டது.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் வேளாண் மசோதா மற்றும் அத்தியாவசிய (உணவுப்) பொருள்கள் சட்டத்தில் திருத்தம், போதுமான விவாதம் இன்றி, அவசரகதியில் நிறைவேற்றுப்பட்டு விட்டன. அதற்கு மறுநாள் அனைத்து எதிர்கட்சிகளும் பாராளுமன்ற நடவடிக்கைளில் கலந்து கொள்ளாது புறக்கணித்த நிலையில் வெட்கமின்றி தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றான மூன்று தொழிலாளர் குறுங்குறிகளை நிறைவேற்றினர்.

நாட்டின் வணிகம், தொழில் மற்றும் வர்த்தக நிலைமை மிகவும் பரிதாபகரமானது. ஊரடங்கால் நிலைகுலைந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) ஏறத்தாழ 35 சதவீதம் மீண்டும் தொழிலைத் தொடங்க முடியாத நிலையிலும்; 35 சதவீதம் மட்டும் 6 மாதங்களுக்குப் பின் செயல்படவும், தொழில் தொடங்கிய ஏனை 30 சதவீதம் தங்கள் தொழிலில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே பலன் காணக்கூடிய நிலையிலும் உள்ளன. முதலாளிகளின் அமைப்புகள் நடத்திய சர்வேபடி இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்களின் மறு புனரமைப்பு நடவடிக்கைகளில் 30முதல் 50 சதவீத ஊழியர்களே எடுத்துக் கொள்ளப்படுவதால், தொழில் இயல்புநிலைக்கு வரும் வரை 40 வயதிற்கு மேற்பட்ட அனுபவம் உள்ள தொழிலாளர்களையே முதலாளிகள் முதலில் பணிக்கு வரவழைத்துள்ளனர். இதனால் இளம் வயது தொழிலாளர்களில் பலரும் வேலை இழந்து அந்தத் தலைமுறை தொழிலாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளனர் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மிகக் கூடுதலான திறமையுள்ள இளம் வயது தொழிலாளர்கள், வாழ்க்கையில் தப்பிப் பிழைக்கும் உபாயமாக, பகுதித் திறமை அல்லது திறமை தேவைப்படாத பணிகளை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கள எதார்த்தத்தை மேலும் ஆய்வு விவரிக்கிறது. இதனால் பகுதித் திறமை மற்றும் திறமையற்ற உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாய்ப்பு சுருங்கிப் போய் அந்தப் பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உண்மைகளை எல்லாம் ஒரேயடியாக மறுக்கும் போக்கிலும், சரியாகச் சொல்வதென்றால், உண்மைகளைத் திரித்து நாட்டின் பொருளாதாரம் முழு வேகத்தில் ஏதோ மீண்டும் நடைபோடுவதான சித்திரத்தைத் தீட்டவும் மத்திய அரசு முயல்கிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகளை, தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப, உருவாக்குவது என்று தான் முன்பு அளித்த உறுதிமொழியிலிருந்து மோடி ஏற்கனவே தலைகீழாகத் திரும்பி பின்வாங்கி விட்டார். (கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டுவதாக) தற்போது அரசு மார் தட்டுகிறது, அவர்கள் (வேலை கொடுக்க முடியாத) இளைஞர்களை வேலை தேடுபவர்களாக அல்ல, வேலைகளை உருவாக்குபவர்களாக (சுய தொழில்முனைவர்களாக) மாற்றுவார்களாம் – சொல்கிறார்கள், கேப்பையில் நெய்வடிகிறதென்று.

சர்வதேச நிதிமூலதனம், பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் இந்தியப் பெரும் கார்ப்பரேட்டுகளிடம் முழுமையாகச் சரண் அடைந்த அரசு கொள்கைகளின் விளைவு, இந்தியப் பொருளாதாரத்தை முதலாளித்துவ உலகிற்கு அடிமைப்படுத்தி, அவர்களைக் கூடுதலாகச் சார்ந்திருக்கச் செய்துவிடும். இன்றைய ஆளும் தரப்பினர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல; இந்திய விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து, செக்கிழுத்து, சிறைக் கொடுமைகளையும், வெள்ளைக் காவலர்களின் சித்தரவதைகளையும், குண்டாந்தடி அடிகளையும் எதிர்கொண்ட தியாகிகள் –இந்திய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், படித்த வர்க்கத்தினர், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என எண்ணிறைந்தோர் செங்குருதித் தியாக வேள்விக்கு – எதிராக, விஷமாகச் செயல்பட்டவர்களும் கூட. அவர்களுக்கு --பாரதியின் வார்த்தைகளில்  ‘இந்த நிலைகெட்ட மனிதர்களுக்கு’-- இந்தியத் தாய் மடியின் இயற்கைச் செல்வங்கள், மனித ஆற்றல் உள்பட நாட்டின் ஆஸ்தி கொள்ளையடிக்கப்படுவதும், நாடு இறையாண்மை உரிமைகளை இழப்பதும் ஒரு பொருட்டே அல்ல. எல்லாவற்றையும் தனியார்மயப்படுத்தவும், விற்பதற்கும் துணிந்து விட்டார்கள்

பெருந் தொற்று உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட குணத்தை மழுங்கடித்து விட முடியாது. மருத்துவர்களின் அனைத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கிளர்ச்சி, போராட்டங்கள் நடைபெற்றன; இணைந்து மேதினம் அனுசரிக்கப்பட்டது; மே 22, ஜூலை 3, தேசத்தைப் பாதுகாப்போம் தினம் ஆகஸ்ட் 9 மற்றும் செப்டம்பர் 23 தேதிகளில் நாடு தழுவிய போராட்ட இயக்கங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. மத்திய தொழிற்சங்கங்களின் ஒவ்வொரு கிளர்ச்சிப் பிரச்சாரத்திலும் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரித்தது. அரசின் நாசகாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு வளர்ந்தது; பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் (BPCL) மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்கீம் ஒர்க்கர்ஸ் எனப்படும் திட்டம் சார்ந்த பணியாளர்களின் வேலைநிறுத்தங்கள் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தன. பாதுகாப்புத் தளவாட ஆலைகளின் ஊழியர்கள் விடுத்த கால வரையறையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு, சமரப் பேச்சு வார்த்தைகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது போன்று பல்வேறு போராட்டங்கள் பல துறைப் பிரிவுகளிலும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள மற்றொரு மாபெரும் பொது வேலைநிறுத்தம் எதிர்வரும் நவம்பர் 26ம் நாள் நடைபெற உள்ளது. சங்கங்கள் அதற்கான தயாரிப்புப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றன. தொழிற்சங்கங்களின் இந்தச் செயல்பாட்டு ஒற்றுமை நடவடிக்கைகளும், போராட்டக் களம் காண விவசாய அமைப்புகளும் தயாராவதும் அதிகரித்துள்ளது வரவேற்க வேண்டிய நல்லதொரு இயக்கப் போக்கு.

எதிரே களம் விரிந்துள்ளது; சமத்துவம், சமநீதி அடிப்படையில் அமைந்த சுரண்டலற்ற சமுதாயத்தை அமைப்பதற்கான நமது போர்கள் தொடரும்! சமரசமற்ற அந்தச் சமரில் நாம் வெல்வது உறுதி!

“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே!

 வாருங்கள் தோழர்களே! ஒன்றாய்ச் சேருங்கள்!”

--தமிழில் : நீலகண்டன், கடலூர்


 

 

  

No comments:

Post a Comment