Tuesday 3 November 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 18 கோவா விடுதலையின் தந்தை குன்ஹா

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -18



ட்டிரிஸ்டோ டி பிரகன்ஸா குன்ஹா:

கோவா விடுதலையின் தந்தை


--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–அக்.25 --31, 2020)

          

        கோவா விடுதலையின் தந்தை, ட்டிரிஸ்டோ டி பிரகன்ஸா குன்ஹா (Tristao de Braganza Cunha) 1891 ஏப்ரல் 2ம் நாள் கோவாவின் சல்செட் (Salcete) தாலுக்காவின் சந்தூர் கிராமத்தில் பிறந்தார். (சல்செட் என்ற பெயர் 66 என்று பொருள்படும் ஷட்-சஷ்டி என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. வட இந்தியாவிலிருந்து 66 குடும்பங்கள் இடம் பெயர்ந்து தங்கிய பகுதி என்பதைக் குறிக்கும்). அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர், ஓரளவு பணக்காரக் குடும்பம் எனலாம். குன்ஹா போர்த்துகீசிய கல்வி முறையில் (Leseve அநேகமாக எளிதான எனப் பொருள்படலாம்) பயின்றார்; அதில் போர்த்துகீசியம் பயிற்று மொழி. உயர்கல்விக்காக அப்போது பிரான்ஸ் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிச்சேரிக்குச் சென்றார். எனவே அங்கு பிரெஞ்சு பயிற்று மொழி. குன்ஹா பிஏ என்ஜினீரிங் படிப்பை முடித்து தனது 21வயதில் கல்வியை நிறைவு செய்ய 1912ம் ஆண்டு பாரீஸ்  சென்றார்.

பிரான்ஸ் தேசத்தில் : சோஷலிசத்தோடு தொடர்பு

          (இராபர்ட் தே சோர்போன் என்பரால் நிர்மாணிக்கப்பட்ட) பிரான்சின் பழமையான,  புகழ்பெற்ற சோர்போன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து குன்ஹா எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் பாடத்தில் பட்டம் பெற்றார். அங்கே உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ரோமன் ரோலண்டு மற்றும் அவரது குழுவினரோடு தொடர்பு ஏற்பட்டது. சோஷலிசக் கொள்கையின் பால் அவரது கவனம் திரும்பியது. அங்கே அவர் இந்தியச் சுதந்திர இயக்கம் பற்றிய செய்திகளையும் பரப்பினார்.

          முதலாவது உலகப் போருக்கு முன்பு பிரான்சின் சோஷலிசக் கட்சி இரண்டாவது அகிலத்தில் இணைந்தது. போருக்குப் பின் அதிலிருந்து பெரும்பான்மையினர் வெளியேறி பிரஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியை (FCP) அமைத்தனர்.

          இதன் மத்தியில் குன்ஹா சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று, நேரடியாகவே புரட்சிகர நிகழ்வுகளைப் பார்த்தார். தனது வாழ்க்கைச் செலவுக்காகப் பாரீசில் ஓர் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதே க்ளார்டே மற்றும் எல்’ ஹுமாநிட் (Clarte and L’Humanite) சஞ்சிகைகளில் எழுதினார். எல்’ ஹுமாநிட் சோஷலிஸ்ட் கட்சியின் முதலாவது (வார) இதழ், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழாகவும் ஆகி பின்னாட்களில் தினசரி நாளிதழாயிற்று. குன்ஹா அங்குப் பல இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்தார்; அவர்களில் சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். பிரான்ஸ் தேசத்தில் காந்திஜி மிகவும் புகழ்பெற்றவராக அறியப்பட்டிருந்தார்; ஹென்றி பர்பூஸ், ரோமன் ரோலண்ட் (காந்தி குறித்து ரொமெய்ன் ரோலந்து எழுதிய நூல் எழுத்தாளர் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பில் ’வாழ்விக்க வந்த காந்தி’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது) முதலிய பிரான்சின் அறிவுஜீவிகளால் மதித்துக் கொண்டாடப்பட்டார். (பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர், அரசுத் தூதர், கேரள சாகித்ய அக்காதமியின் முதலாவது தலைவரான காவலம் மாதவா பணிக்கர் எனும்) கே எம் பணிக்கர், பிரகன்ஸா குன்ஹாவைப் “இந்திய தேசியத்தினுடைய பிரான்சின் முதல் தூதர்” எனப் புகழ்ந்துள்ளார்.

          ரோமன் ரோலண்ட் அமைத்த இந்தியர்களுக்கு ஆதரவான தகவல் பீரோ கமிட்டியின் இந்திய தேசபக்தர்களோடு பிரகன்ஸா கூட்டாகப் பணியாற்றினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு லீக் அமைப்பிலும் குன்ஹா ஓர் உறுப்பினர்.

பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவுதல் : ஹோ சி மின் உடன் சந்திப்பு    

          டூர்ஸ் என்ற நகரில் (பிரான்சின் செர் மற்றும் லாய்ரே ஆறுகளுக்கும் இடையே அமைந்த ஒரு பல்கலைக்கழக நகரம்) 1920 டிசம்பர் 25ல் பிரஞ்ச் சோஷலிஸ்ட் கட்சியின் முக்கியமான மாநாடு நடைபெற்றது. அதில் வியத்நாம் விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத் தலைவரான ஹொ சி மின்னும் கலந்து கொண்டார். அப்போது அங்கே படித்துக் கொண்டிருந்த அவர், வாழ்க்கையை நடத்துவதற்காகப் பலவிதமான பணிகளையும் செய்து வந்தார்.

          கம்யூனிஸ்ட் அகிலத்திலும், ‘கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரஞ்ச் பிரிவி’லும் சேர்வது என  மாநாடு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் முடிவு செய்தது. Marcel Cahin, Souvarine, Frossard போன்ற பிரபலமான கட்சித் தலைவர்கள் அதில் இருந்தனர். 1921ல் இந்தப் பிரிவுதான் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியானது, எல் ‘ஹுமாநிட் கட்சியின் அதிகாரபூர்வ இதழானது.

          இங்கேதான் குன்ஹா, ஹோ சி மின் அவர்களைச் சந்தித்தார். அது ஒரு சரித்திர நிகழ்வு : இரண்டு புரட்சியாளர்கள் சந்திப்பு, ஒருவர் கோவாவிலிருந்தும் மற்றவர் வியத்நாமின் புரட்சியாளர்! அவர்களிடையே நீண்ட உரையாடல்; இருவரும் பிரெஞ்ச் கம்யூனிட் கட்சிக்காக இணைந்து பணியாற்றினர். 1921லேயே போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சி (PCP)யும் ஸ்தாபிக்கப்பட்டது. FCP மற்றும் PCP இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கோவா விடுதலைக்காக உதவி செய்தன.

இந்தியா திரும்புதல்

          T B குன்ஹா பிரான்சு தேசத்தில் முழு 14 ஆண்டுகள் தங்கி 1926ல் தாயகம் திரும்பினார். திரும்பியதும், 1928ல் கோவா காங்கிரஸ் குழுவை (கமிஸ்சோ டோ காங்கிரஸ்சோ டி கோவா) அமைத்தார். அந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை; அது, கடுமையான அடக்குமுறைகளை வரவேற்பதாகிவிடும் என்பதே காரணம்.

          குன்ஹா அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கோவா காங்கிரஸ் கமிட்டியும் காங்கிரஸ் இயக்கத்தோடு இணைப்பு பெற்றாலும், கோவா காங்கிரஸ் கமிட்டி ஓர் ‘அன்னிய’ அமைப்பாகவே நடத்தப்பட்டது என்றே குன்ஹா கருதினார். காங்கிரஸ் கட்சியும் கோவா கமிட்டி இணைப்பை ரத்து செய்தது. கோவா பிரிட்டீஷ் ஆளுகையில் வராமல் போர்த்துகீசிய அதிகாரத்தின் கீழ் இருந்த சட்டபூர்வமான நிலையும் அதற்கு ஒரு காரணம். கோவாவைச் சேர்ந்த பலர் பம்பாயில் வசித்ததால், குன்ஹா பம்பாய்க்கு இடம் மாறினார். 1950ல் பம்பாயில் ஒரு லட்சம் கோவா மக்கள் இருந்தனர். மட்கைகர், நாராயன் பாலேகர், ஜார்ஜ் வாஸ், மரியோ ரோட்டரிஹ், காசிநாத் டென்டூல்கர் முதலான பல தோழர்கள் பம்பாயில் தங்கி பணியாற்றினர். மட்கைகர் நிறுவிய கோமந்தக் இந்து யுவ சங் அமைப்பே பின்னாட்களில் கோமந்தக் தருண் சங் ஆனது.

போர்த்துகீசிய சிறையில்

          சிறந்த கோவா பெருமக்களை ஒன்று திரட்டிய T B குன்ஹா, 1945ல் பம்பாயில் ‘கோவா இளைஞர்கள் லீக்’ அமைப்பைத் தொடங்க முன்கையெடுத்தார்.

          இப்படி அவரது பலகால உழைப்பு ஒரு சிறந்த களத்தைப் பண்படுத்தி வைக்கவும், 1946 ஜூன் 18ல் டாக்டர் ராம் மனோகர் லோகியா குடிமை விடுதலைக்கான இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கவும் பொருத்தமாயிற்று. குன்ஹா ஜூன் 30ல் லோகியோவுடன் ஒரு கூட்டத்திற்குச் சென்றபோது காவலர்களின் துப்பாக்கி முனை கத்தியால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். அந்தக் காயத்தின் தழும்பைத் தனது வாழ்நாளின் இறுதிவரை சுமந்தார். துப்பாக்கித் தோட்டா பாய்வதிலிருந்து மையிரிழையில் தப்பினார். 1946 ஜூலை 12ல் மார்கௌவ் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டவரை எங்கோ அடையாளம் தெரியா இடத்திற்குக் கடத்திச் சென்று பிறகு (கோவா சிங்குவெரிம் கடற்கரையில் கட்டப்பட்ட 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துகீசிய கோட்டையான) அகுவாடா கோட்டை இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டார்.

          இராணுவ நீதிமன்றம் குன்ஹாவிற்கு எட்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெருந் திரளாக மக்கள் குவிந்ததால், நீதிபதிகளை மூடிய காரில் வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. குன்ஹா வெளிச்சம் புக முடியாத இருட் கொட்டடியில் அடைக்கப்பட்டார். நுரையீரல் சுவாசக் கோளாறு தொற்றிக் கொண்டதும், வாஸ்கோ ட காமா (நகரில்) இருந்து  அவரை (காப்ளர்ஸ் ஹில்ஸ் எனப்படும்) ஆல்டோ டாஸ் அல்பார்க்யூரோஸ் (Alto dos Alparquieros) மீதிருந்த இராணுவ முகாம் படைவீட்டிற்கு மாற்றினர். அதன் பிறகு அங்கிருந்து (போர்த்துகீசிய கடல்வழி வணிகர் Lourenzo Marques பெயரால் அமைந்த) கப்பல் மூலம் போர்ச்சுகல் கொண்டு செல்லப்பட்டார். கப்பல் புறப்படும் வரை தான் எங்குக் கொண்டு செல்லப்படுகிறோம் என்பது அவருக்குத் தெரியாது.

          போர்ச்சுகலில் சில நாட்கள் அல்ஜுபியில் வைத்திருந்த பிறகு பெனிச்சி கோட்டைக்கு மாற்றினர். அங்கே கடுமையான நிமோனியா காய்ச்சல் தாக்கியதில், உயிர் பிழைப்பதே அரிதாயிற்று. அங்கே சில அற்புதமான போர்த்துகீசிய மற்றும் இந்திய ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்களான புருஷோத்தம் ககோட்கர் (9ஆண்டுகள் கடுங்காவல் பெற்ற சமூக சேவகர், சுதந்திரப் போராட்ட, கோவா வீரர்; விடுதலைக்குப் பின் காங். சார்பில் பனாஜி தொகுதி எம்பி ஆனார்), ஆர் கே ஹெக்டே (டாக்டர் ராம் ஹெக்டேவாக இருக்கலாம், 8 ஆண்டுகள் தண்டனை), ஜோஸ் இக்னேஷியஸ் லயோலா (வழக்கறிஞர் 4 ஆண்டுகள்), லக்ஷ்மிகாந்த் பிம்ப்ரே (வழக்கறிஞர் 4 ஆண்டுகள்) முதலானோரைச் சந்தித்தார். பின்னர் குன்ஹா இவ்வாறு எழுதினார் : “கற்றறிந்த சான்றோர் பெருமக்களைப் போர்ச்சுகலில் சிறையில்தான் பார்க்கலாம்!” சிறையில் நிலைமை படு மோசமாகவும் உணவும் நீரும் அருவருக்கத் தக்க அளவு பாதிப்படைந்தனவாகவும் இருந்தன.

          குன்ஹா நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்த பின், பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டாலும் தலைநகர் லிஸ்பனிலேயே இருக்குமாறு அடைத்தனர். சர்வாதிகாரி அந்தோனியோ டி ஒலிவேரா சலாஸார் (Salazar)--இன் PIDE ("International and State Defence Police) படையினர் எப்போதும் குன்காவைத் தொடர்ந்து கண்காணித்தனர். (PIDE படை என்பது, நாஜி ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட ஐரோப்பாவில் கண்காணிப்பதற்காக ஹெர்மன் கோரிங்-ஆல் அமைக்கப்பட்ட இகசியப் போலீஸ் படை, சுருக்கமாக ஹெஸ்டபோ (Nazi Gestapo) அமைப்பிற்குச் சமமானது.) இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பாரீசுக்குத் தப்பினார். அங்கே வசித்த –புகழ்பெற்ற இந்திய ஆய்வாளரான-- அவரது சகோதரர் ஃபிரான்சிஸ்கோ பிரகன்சா உடன் தங்கினார்.

மீண்டும் இந்தியா திரும்புதல்

          1953 செப்டம்பர் 4ம்நாள் டாக்டர் குன்ஹா பம்பாய் திரும்பினார். சிறை இருந்த அந்தக் காலத்தில் எவ்வளவோ மாறிப்போய் இருந்தன; இயக்கம் முரண்படும் பல குழுக்களாகச் சிதறிப் பலரும் பம்பாயில் தனித்தனி அலுவலகம் நடத்தி வந்தனர். டாக்டர் குன்ஹா அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் ஆதலின், அவர் அனைவரையும் ஒன்றிணைக்கக் கடும் முயற்சி மேற்கொண்டு அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார். இதே நோக்கத்தோடு குன்ஹாவைத் தலைவராகக் கொண்டு ‘கோவா நடவடிக்கை குழு’ (ஆக்க்ஷன் கமிட்டி) அமைக்கப்பட்டது.

‘கோவா விடுதலை’ (ஆஸாத் கோயம்) என்ற பெயரில் கொங்கணி மொழியில் ஓர் இதழை நடத்தினார். அது பெல்ஹாமிலிருந்து ஃபர்டாடோ நடத்திய ‘சுதந்திர கோவா’ (ஃபிரீ கோவா) என்ற ஏட்டுடன் இணைந்து செயல்பட்டது. சில காலத்திற்குப் பின்பு அந்த ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு குன்ஹாவுக்கு வழங்கப்பட்டது.

கோவா நடவடிக்கை குழு சில காலம் தனித்தே பணியாற்றியது. பிரிட்டீஷ் ஆட்சிக்கும் போர்த்துகீசிய ஆட்சிக்கும் குணத்தில் பெரும் வித்தியாசம் இருந்தது – போர்த்துகீசிய ஆட்சி முழுமையாக பாசிசமயமானது. போர்த்துகீசிய ஆட்சியில் விடுதலை இயக்கத் தலைவர்கள் போர்ச்சுகல் மற்றும் போர்த்துகீசிய ஆளுகையில் இருந்த மேற்கு ஆப்ரிக்காவின் மிக மோசமான சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர், (பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தமான் தீவைப் போல, போர்ச்சுகல்லுக்கு பயன்பட்ட) அங்கோலாவின் ‘ரொ ஹாடஸ் கோட்டை’யில் (‘Forte Rocadas’) வைக்கப்பட்டனர். இன்னும் அங்கே புருஷோத்தம் ககோட்கர், டாக்டர் ஆர் கே ஹெக்டே, ஜோஸ் இக்னேஷியஸ் லயோலா, ஸ்ரீரோத்கர் லக்ஷ்மிகாந்த் பிம்ப்ரே, Guilherme Ticlo முதலானோர் சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

கடத்தல், கறுப்பு மார்கெட், கள்ள நோட்டு மாற்றல் முதலிய சமூக விரோதச் செயல்கள் எல்லையோரங்களில் நடைபெறாது தடுக்க, போர்த்துகீசிய பகுதிகளைச் சுற்றி தடுப்பு அமைக்கக் கோவா நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்தது. தடுப்பு தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால் போர்த்துகீசிய தகவல் பறிமாற்றம் நிலைகுலைய, அது விடுதலை இயக்கதிற்கு உதவுவதாக இருந்தது. (தடுப்பின் காரணமாக) நிலைகுலைந்து போனதின் முதல் விளைவு தாத்ரா –நகர் ஹவேலி விடுதலையானதுதான். அடுத்து, அந்த விடுதலைப் படையை தலைமையேற்று நடத்திய கம்யூனிஸ்ட்கள் (கோவா மக்கள் கட்சி) மற்றும் பிறரை எதிர்த்து தடுத்து நிறுத்தக் கூடுதல் படையினரைப் போர்த்துகீசியரால் அனுப்ப முடியாது போனது.  கோவா மக்கள் கட்சி, கோவா ஐக்கிய முன்னணி மற்றும் ஆஸாத் கோமந்தக் கட்சி நாற்பதாயிரம் மக்களை விடுதலை செய்தது.

இந்தச் சூழ்நிலையில் சத்தியாகிரக இயக்கம் 1954 முதல் தீவிரப்படுத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் பாசிசச் சித்திரவதை மற்றும் அடக்குமுறைகள் காரணமாக ஆயிரக் கணக்கில் மக்கள் விவரிக்க முடியாத துன்பங்களைச் சந்தித்தனர்; நூற்றுக் கணக்கில் பலியாயினர். ஆனால் துரதிருஷ்டம், ‘கோவர்களின் ஐக்கிய முன்னணி’ அந்த இயக்கத்தைப் பிளவுபடுத்திச் சீர்குலைக்க முயன்றனர்; அவர்கள் கம்யூனிஸ்ட்களைத் தடுத்து நிறுத்தியும் பம்பாய் முதலமைச்சர் மொரார்ஜி தேசாய் உதவியோடு கைது செய்தும் இயக்கத்தைச் சீர்குலைத்தனர். தாத்ரா நகர் ஹவேலி விடுதலை செய்யப்பட்டதும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜ் வாஸ் போலீசாரால் கைதானார். கொடி ஏற்று விழாவிற்கு T B குன்ஹா அழைக்கப்பட்டபோது, இந்தக் கைதுகளை அறிந்த அவர், கைதானவர்கள் விடுதலை செய்யப்படும் வரை விழாவிற்கு வர மறுத்துவிட்டார். உறுதிமொழி அளித்துச்  சமாதானம் செய்து அவரைக் கொடி ஏற்றச் செய்தனர். ஆனால் மொரார்ஜி அரசு கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியது.

குன்ஹாவின் இறுதி நாட்கள்

          1961ல் கோவா விடுதலை (டிசம்பர் 19ம் நாள்) அடையும் முன்பே குன்ஹா மறைந்து விட்டார். சுதந்திரப் போராட்டச் சுடர் அணையாது பாதுகாக்க வாழ்நாளெல்லாம் தனது நடவடிக்கைகளால் பாடுபட்டார். கடுமையான சுவாசப் பிரச்சனை மற்றும் சர்வாதிகாரி சலாஸார் சிறைக் கொட்டடியின் மனிதத்தன்மையற்ற நிலைமை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் உடல் ரீதியாக மிகவும் சோர்ந்து போனார். இறுதியில் இரத்த நாளத்தில் குருதி உறைதலால் ஏற்பட்ட மாரடைப்பு தாக்க, கோவாவின் தேசியத் தந்தை குன்ஹா 1958ம் ஆண்டு, செப்டம்பர் 26ம் நாள் இயற்கை எய்தினார். பம்பாயின் ஸ்காட்லாண்டு சர்ச்சின் சவேரா கல்லறைத் தோட்டத்தில் (Cemetery at Sewri) நல்லடக்கம் செய்யப்பட்டார். சர்வதேச அளவில் அவரது மறைவுக்கு மிகப் பரவலாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

          25 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய புனித அஸ்தி பனாஜியில் உள்ள ஆஸாத் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அவரது நினைவாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு குன்ஹாவைச் சிறப்பித்தது. பல கல்வி நிலையங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. கோவா விடுதலையின் பொன்விழாவின்போது 2011ல் அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து இந்தியப் பாராளுமன்றம் பொலிவு பெற்றது. கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியின் ஒரு முக்கிய நெடுஞ்சாலை அவரது பெயரைத் தாங்கி விளங்குகிறது.

கோவா தேசியத்தின் தந்தை பிரகன்ஸா குன்ஹா புகழ்

கோவாவின் அழகுக்கு அணி செய்து பிரகாசிக்கட்டும்!

--தமிழில் நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

No comments:

Post a Comment