Thursday 5 November 2020

புரட்சியின் நூற்றாண்டு -- சிபிஐ முன்பு நடத்திய கருத்தரங்கம்

 


மாபெரும் அக்டோபர் புரட்சிநூற்றாண்டு

புது டெல்லியில் சிபிஐ நடத்திய கருத்தரங்கம்


 

தோழர் விஜய் குமார் பௌடெல் (Com Vijay Kumar Pudel (Ph.D), நேபாள் கம்யூனிஸ்ட் (ஒன்றுபட்ட மார்க்ஸிஸ்ட்–லெனினிஸ்ட்) கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் ஆற்றிய உரை

       மரியாதைக்குரிய தலைவர் அவர்களே! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் எஸ். சுதாகர் ரெட்டி அவர்களே! சிறப்புமிக்க மாநாட்டுப் பிரதிநிதிகளே மற்றும் பங்கேற்பாளர்களே! அன்பார்ந்த இருபால் பார்வையாளர்களே!

       இந்த மேன்மையான மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு நான், எனது சார்பிலும், எனது நேபாள் நாட்டு மக்களின் சார்பிலும், நேபாள் கம்யூனிஸ்ட் (ஒன்றுபட்ட மார்க்ஸிஸ்ட் –லெனினிஸ்ட்) கட்சியின் மத்தியக் குழுவின் சார்பிலும் தோழமை வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். சரித்திரப் புகழ்மிக்க நகரமும் மேற்குவங்கத்தின் மையமும தலைநகருமானக் கொல்கத்தா மாநகரில் கூட்டப்பட்ட இந்தச் சர்வதேச நிகழ்வில் பங்கேற்பதற்குக் கிடைத்த வாய்ப்பிற்காக நான் பெரிதும் உவகையடைகிறேன். இங்கு கூடியுள்ள பத்திரிக்கையாளர்கள், மேன்மைமிக்க மாநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் இமைய மலையின் மடியில், அமைதியின் தூதர்—பகவான் புத்தரின் – புண்ணிய பூமியிலிருந்து வந்துள்ள எனது வீர வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். உங்களுடைய சிறப்பான ஏற்பாடுகள், உயரிய உபசரிப்பு மற்றும் சர்வதேச நிகழ்வுக்குப் பொருத்தமான சூழலை ஏற்படுத்தியமைக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் உரித்தாக்குகிறேன்.

       உலகின் மற்றொரு பகுதி மக்களின் பிரதிநிதிகளாக நாம் இங்கே கூடி மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்; சோஷலிசத்தின் அடுத்த கட்ட நகர்வைக் குறித்து விவாதத்தைத் துவக்கியிருக்கிறோம். மார்க்ஸ் அவர்களால் கட்டமமைக்கப்பட்ட ஆழமான இந்தச் சிந்தாந்தம் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தப்பாடு உடையதாக விளங்குகிறது.  இன்றைய சூழல் மார்க்சியத்தின் உண்மைக்கு மேலும் எதார்த்த நிரூபணமாக உள்ளது. ஆனால் 1950 தொடங்கிய பத்தாண்டுகளில் பல முறை ”மார்க்சியம் தோற்றுவிட்டது” என்பதான பிரச்சாரம் வலுவாகத் தூண்டிவிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.1955-ல் ’கலாச்சாரச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்’ என்று இத்தாலி மிலான் நகரில் கூட்டப்பட்ட மாநாடு அத்தகைய தூண்டல்களுக்கு ஒரு உதாரணம். ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளர்களுக்கு அமெரிக்க சிஐஏ நிதிஉதவி வழங்கியது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. வளரும் நாடுகளில் மாக்சியத்தின் தாக்கம் வீழ்ந்து வருவதாகக் கம்யூனிச எதிர்ப்பு அறிவாளிகளால் முதன் முறையாகப் பிரச்சாரம் முளைவிடத் தொடங்கியுள்ளது. அது தொடங்கி, டேனியல் பெல்லி முதல் பிரான்சிஸ் ஃபுக்குயாமா வரையான எதிர்ப்புச் சிந்தனாவாதிகளின் பேனாக்கள், ’கிராண்ட் நெரேஷனின் முடிவு’, ’மார்க்சியத்தின் இறுதி’, ’சோஷலிசத்தின் முடிவுரை’, ’சரித்திரத்தின் இறுதி அத்தியாயம்’ என எழுதிக்குவிக்கின்றன. அவர்களுடைய ஒற்றை நோக்கம் மார்க்சியம் பொருத்தமற்றது, காரிய சாத்தியமற்றது, முடிந்துபோன பழைய உதவாதத் தத்துவம் என நிரூபிப்பது மட்டுமேயாக உள்ளது. ஒன்றுமில்லாத அவர்களின் இத்தனை முயற்சிகளுக்கும் மாறாக, இன்றைய நிலையில், மார்க்சியம் இருந்துவருவது மட்டுமல்ல, மிகமிகப் பொருத்தமுடையதாகச் சிறப்பாக விளங்குகிறது. எங்கெல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றனவோ அவற்றிற்கெல்லாம் மார்க்சியமே உந்துசக்தியாக உற்சாகத்தின் ஊற்றாக விளங்குகிறது. மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழாவின் இந்தத் தருணத்தில் நாம் மார்க்சியத்தை, இன்றைய அதன் தேவை, பொருத்தப்பாட்டை, அடுத்தக்கட்டப் புரட்சிக்கு அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதைப் பற்றி, நிகழ்கால முதலாளித்துவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள, முறியடிக்க மார்க்சியத்தை மேலும் ஆழமாக விவாதிக்க வேண்டும். மார்க்சியத்தின் / சோஷலிசத்தின் சாதனைகளில்—வெற்றிகளில் -- பெருமிதம் கொள்வோம்; அதே போழ்து, நமது இயக்க அமைப்புகளின் பலத்தை, பலவீனத்தையும் ஆராய்வோம்!

       தத்துவம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சரித்திரம் முதலிய துறைகளுக்கு மாமேதை காரல் மார்க்ஸ் ஆற்றிய பங்கு அளவில்லாதது.   அவர் மிகப்பெரிய தத்துவஞானியும் சிந்தனாவாதியும் ஆவார். இன்றைய மனிதகுலச் சமூகத்தின் மீது அவர் மேதமையின் தாக்கம் பெரிது. மார்க்சியவாதிகள் மட்டுமல்லாமல், அல்லாதவர்களும் இந்த உண்மையை ஒப்புக்கொள்வார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், டார்வின் முதலிய உலகின் புகழ்மிக்க மேதைகள் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்.  1999–ல் பிபிசி நடத்திய ஒரு ஆய்வில் சமகால உலகின் மிகச் சிறந்தத் தத்துவஞானியென மார்க்ஸ் போற்றப்பட்டார். அமெரிக்க முதலாளித்துவ பூர்ஷ்வா முன்னணிப் பதிப்பகமான ’நியூயார்க்கர்’ 1990களில் காரல் மார்க்ஸை 21 ம் நூற்றாண்டின் நம்பிக்கைக்குரிய இணையற்ற தத்துவஞானி என ஒப்புக்கொண்டது. இவர்களெல்லாம் ஒப்புக்கொண்டார்கள் என்பதன் சாரமான பொருள், மார்க்சியம் இன்றும் பொருத்தப்பாடு உடையது என்ற உண்மையோடு தொடர்புடையதே ஆகும். மார்க்சின் ஈடுஇணையற்ற புகழை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்குகிறார், மார்க்சிய வரலாற்று அறிஞரான எரிக் ஹாப்ஸ்வாம் (Eric Hobsbawm).  காரல் மார்க்சும், ஹெர்பர்ட் ஸ்பென்சரும் சமகாலத்தவர். அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ஸ்பென்ஸர் புகழின் உச்சத்தில் அந்தக்காலத்தின் அரிஸ்டாட்டில் எனப் புகழப்பட்டார். மார்க்ஸ் அவர்களோ அதிகம் அறியப்படாதவராக இருந்தார்.  ஆனால் இன்று நிலைமை என்ன? ஸ்பென்ஸரை அறிந்தவர்கள் இன்று ஒரு சிலரே.  ஆனால் மார்க்ஸின் கல்லறைக்குச் சாரை சாரையாக, கூட்டம் கூட்டமாக வயது முதிர்ந்த இந்தியர்களும் ஜப்பானியர்களும் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள். அது மட்டுமா, தலைமறைவு இரானியர்களும், ஈராக்கிய கம்யூனிட்டுகளும் மார்க்சின் கல்லறைக்கு அருகே தங்களுக்கோர் இடம் வேண்டுமென உருக்கமாகக் கேட்கிறார்கள்.

       மார்க்சின் ஆளுமை போலவே ஏங்கெல்ஸ் அவர்களும் ஒரு புரட்சிகர மனிதராக நினைவு கூரப்படுகிறார். மார்க்சின் பிழிவு அவரின் ஆளுமையில் உள்ளார்ந்து நிறைந்திருக்கிறது என்பார் எங்கெல்ஸ். உலகை மாற்றும் அதன் ஆற்றலின் புரட்சிகர ஆன்மா, மார்க்சின் தொலைநோக்குப் பார்வையில்/ கருத்தாக்கங்களில் நுட்பமாய்ப் பொதிந்திருக்கிறது என மேலும் சித்தரிப்பார். மார்க்சே தனது வார்த்தைகளில் கூறுவார், இதுவரையான எல்லா தத்துவஞானிகளும் உலகத்தைப் பற்றி விளக்கவுரை தந்துள்ளனர், ஆனால் மிக முக்கியமான பணி உலகை மாற்றுவதுதான். இந்த ஒற்றை வரியில் மொத்தமான தத்துவத்தின் சாரத்தை உருக்கி ஒன்றாக்கி உருவாக்கித் தந்திருக்கிறார், மார்க்ஸ். பின்னடைவால் தற்காப்பு நிலையில் கம்யூனிச இயக்கம் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், புரட்சிகர நல்ல எதிர்கால நம்பிக்கைக்குத் தேவை மேலும் ஊக்கமும் உற்சாகமும்,; அதற்கு ஒரே வழி மேலும் மேலும் கூடுதலாக இறுக்கமாக மார்க்சியத்தைப் பற்றி நிற்பதேயாகும்.  எவ்வளவு அதிகமாக ஊக்கம்நிறை மார்க்சியத்தைத் தகுந்த முறையில் புரிந்து அதனைச் செயல்பாடுகளில் நடைமுறைப்படுத்துகிறோமோ, அதன் விளைவாய், அவ்வளவு அதிகமாக கம்யூனிச இயக்கம் வெற்றிகளைக் குவித்து முன்னேறும்.

       டெமோகிரட்ஸ் மற்றும் எபிக்யூரியன் இயற்கைத் தத்துவஇயலில் Ph.D. முனைவர் பட்டம் பெற்றவரான மார்க்ஸ் ஹெகலியன் இயக்கவியலின் தாக்கத்தால் ஆழமாகக் கவரப்பட்டார். பாயர் பாக்கின் பொருளியல் கருத்தியலையும் பின்தொடர்ந்தார். இவர்கள் மட்டுமல்லாமல், ஜெர்மானிய செவ்வியல் தத்துவங்கள், ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோவின் அரசியல் பொருளாதாரம், ஃபோரியர் மற்றும் ராபர்ட் ஓவன் அவர்களுடைய கற்பனாவாதச் சோஷலிஸம் முதலியவற்றின் தாக்கத்தாலும் மார்க்சியத்தின் சிந்தனை வளர்ச்சிப் போக்கு செழுமை பெற்றதாகும். லெனின், அவைகளை மார்க்சியத்தின் தோற்றுவாய் ஆதாரம் என்பார். மிக முக்கியமாக, பொருளாதாரம், அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி; விஞ்ஞானத்தின் முன்னேற்றம், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், புதுமை உருவாக்கம்; மற்றும் சமகால ஐரோப்பிய, உலக நிகழ்வுகளும் மார்க்சியச் சிந்தனை உருவாக்கத்தில் கூடுதலாகவே தாக்கத்தைச் செலுத்தின. மேற்கத்திய உலகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள இமயத்தின் மடியில், நேபாள நாட்டை ஆண்டுவந்த நிலவுடமை ராணா ஆட்சியாளர்கள் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை அண்டிப் பிழைக்கும் கொத்தடிமைகளாக இருப்பதை மார்க்ஸ் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மார்க்சின் சிந்தனை விரிவு/ பார்வை எவ்வளவு தொலைவு தாண்டி இருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டும்.

       வாழ்வின் பன்முகப் பரிமாணங்கள் மற்றும் புரட்சிகரமான கொள்கை வழியில் அமையும் ஒர் உலகம் என்பது குறித்தான ஒட்டுமொத்த அணுகுமுறையை முழுமையாகக் கூறிய உலகின் ஆகச் சிறந்த முதல் சிந்தனாவாதியும் தத்துவஞானியும் மார்க்ஸ் அவர்களே ஆவார். உலகைப் புரட்சிகரமாக மாற்றுவதற்கு அவர் தொடர்ந்து கடுமையாகப் போராடி வந்தார். 1847 ல் கம்யூனிஸ்ட் லீகில் இணைந்து, 1864-ல் கம்யூனிஸ்ட் அகிலம் நிறுவுவதில் அவர் மிக முக்கியமான பங்கு வகித்தார்.  உயிர்த்துடிப்பு மிக்க புரட்சிகர கொள்கை வாழ்க்கை காரணமாக, நாடுகடத்தப்பட்டு புலம்பெயர் வாழ்க்கைத் துன்பத்தைக் கடுமையாக அனுபவிக்க நேர்ந்தாலும், மார்க்ஸ் ஒருபோதும் வாழ்க்கையில் தடம்புரண்டு தகாதவழிச் சென்றவரில்லை. பாட்டாளி வர்க்கத்தினரின் மிகப்பெரிய தலைவர்.  அவரது பல நூல்கள், சொல்லும் செயலும் இயைந்து செல்லும் அழகிய காவியங்கள், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதர்சம். பல நூல்கள் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவராலும் இணைந்து எழுதப்பட்டவை. மார்க்சின் எழுத்துகள் உலகத்திற்கு அரிய சொத்து; உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளிவிளக்கு.

            அரசியல் பொருளாதாரம் குறித்து மிக ஆழமாக ஆய்வு செய்த மார்க்ஸ், சாராம்சத்தை மேலும் மேலும் செழுமைப்படுத்தி, சரித்திரத்தில் முதலாளித்துவத்தின் பங்கு, அதன் குணாம்சம், முதலாளித்துவத்திற்குள் உள்ள முரண்பாடுகள், மோதல்கள் குறித்து விரிவாக எழுதி முதலாளித்துவத்தின் முடிவு குறித்தும் பேசுகிறார். முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு எதுவரை என்ற எல்லைகளைக் குறிப்பிடுவது மட்டுமல்ல, அதன் மனிதநேயமற்ற மனிதகுல விரோத குணத்தையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.  மார்க்ஸ் ஒருவரைத் தவிர இன்றுவரை வேறு யாரும் முதலாளித்துவத்தை இவ்வளவு ஆழமாக, விரிவாக ஆராய்ந்து, மிகச் சரியாகவும் வரையறுத்தது இல்லை. சமூகத்தின் மீது முதலாளித்துவத்தின் பிடிமானம், அதன் உலகளாவிய குணாம்சம், ஏகாதிபத்தியப் போக்கு மற்றும் பாட்டாளிகளின் நிலை, அவர்களின் போராட்டம்; அதற்கு எதிரிடையாக முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறை இவற்றின் மீதெல்லாம் அறிவு வெளிச்சம் பாய்ச்சி, உபரி மதிப்பு கோட்பாடு மூலம் எல்லோரும் விளக்கமாக அறியத் தருகிறார். சமூக வளர்ச்சிப்போக்கில் முதலாளித்துவத்திற்கு அடுத்த கட்டம் விஞ்ஞான சோஷலிசம் என்று எடுத்த எடுப்பில் முதலாவதாக மார்க்ஸ் ஒழுங்கமைவு செய்கிறார். போதுமான அளவுக்கு உடோபியன் (கற்பனாவாத) சோஷலிசக்கருத்துக்களிலிருந்து எடுத்துக் கொண்டு, விஞ்ஞான சோஷலிசம் பற்றிய கருதுகோளைத் தகவமைக்கிறார்; வர்க்கப் பாகுபாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்து மனிதகுலம் விடுதலை அடைவதை நோக்கமாகக் கொண்டு சோஷலிசச் சமுதாயம் கட்டமைப்பது பற்றி தனது கண்ணோட்டத்தைத் தெளிவாக்குகிறார். அரசு அமைப்பைப் பற்றி மார்க்ஸ் அதிகம் விவரிக்கவில்லை, அவரைப் பொறுத்த வரை அரசு என்பது ஒரு இடைக்காலத் தேவையாக இருந்தாலும், சாராம்சத்தில் அரசு நிறுவனம் என்பதே ஆளும் வர்க்கம் சார்ந்த ஒடுக்குமுறைக் கருவிதான். எனவேதான், (நிறுவனமாக்கப்பட்ட) அரசு--அற்ற அரசு ஆட்சிமுறை பற்றி விவாதித்துவிட்டு, கம்யூனிச ஆட்சி முறை அமைக்க வேண்டியதற்கான தேவை பற்றி குறிப்புக் காட்டுகிறார். பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்பது அவரைப் பொறுத்த வரை ஒரு இடைக்கால, தற்காலிக ஏற்பாடுதான்.  மார்க்ஸினுடைய சர்வாதிகாரக் கோட்பாடு என்பது சகல விதமான சர்வாதிகாரங்களையும் ஒழிப்பதற்காகத்தான். பாரீஸ் கம்யூன் முயற்சி தோல்வியில் முடிந்த அனுபவம் மார்க்ஸை மேலும் சிந்திக்கத் தூண்டியது; பாட்டாளிகளின் அணியில் புதிய வகைத் தொழிலாளர்கள் சேர்ந்தனர், ஆனால் மேலும் மேலும் வேகமாகச் சமூக விளிப்புநிலைக்குத் தள்ளப்பட்டு, ஏழை பணக்காரர்களிடையேயான பிளவு இன்னும் கூடுதலாகிறது. செல்வாதாரங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பணக்ககாரர்கள் கையிலே குவிகிறது. இது முதலாளித்துவத்தின் இன்றைய கோரமுகத்தை விகாரமாகக் காட்டுவது மட்டுமின்றி, விஞ்ஞான சோஷலிசம் இன்றைக்கு அத்தியாவசியத் தேவையாகவும் மேலும் பொருத்தப்பாடுடன் விளங்குவதற்கு அத்தாட்சியாகவும் இருக்கிறது.  1990 களின் கடைசியில் மைக்கேல் டேவிஸ் என்ற மார்க்ஸியவாதி அல்லாத ஒரு சிந்தனாவாதி மார்க்ஸியத்தின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, மார்க்ஸ் மீண்டும் திரும்பத் தேவைப்படுகிறார் என்றும் எழுதினார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால், முதலாளித்துவம் இந்த மண்ணில் இருக்கும் வரை, மார்க்ஸியத் தத்துவமும் இந்த உலகத்தில் பயிலப்பட்டுக் கொண்டே இருக்கும்

       முதலாளித்துவச் சிந்தனையாளர்களால் இன்றைக்கும் மார்க்ஸியத்தின் மீதான தாக்குதல் மிகக் கூர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. வர்க்கப் போராட்டம் என்பதைப் பண்பாட்டிற்கானப் போராட்டம் என்பதாக மாற்றி மையமான பிரச்சனைகளிலிருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். சமூக மற்றும் இனங்களின் அங்கீகாரப் பிரச்சனை என்று, கலாச்சாரப் பிரச்சனைகளை மையத்திற்கு கொண்டு வந்து, முக்கியமான பெரிய பிரச்சனையான சமூகமாற்றத்திற்கான வர்க்கப் போராட்டம் என்பதைப் பின்னுக்குத் தள்ளி, போராடும் நமது அணியினரைப் பிரித்தாள நினைக்கின்றனர்; அதுவே நிகழ்கால முதலாளித்துவத்தின் பிரதான முன்னுரிமைச் செயல்திட்டமாக இருக்கிறது. இயற்கைப் பேரழிவு மற்றும் ஆயுதப் போட்டியின் தாய் தந்தையாக மட்டும் முதலாளித்துவம் இல்லை; தீவிரவாதம், பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள், சமூகச் சகிப்பின்மை, சமூகப் பாகுபாடு, சமத்துவமின்மை மற்றும் போர்களுக்கான கட்டியம் கூறும் சாத்தானாகவும் முதலாளித்துவம் விளங்குகிறது. மக்களின் முழுமையான நம்பிக்கை உறுதிப்பாட்டைத் திசை திருப்பி முதலாளித்துவத்திற்கு எதிரான அனைத்துப் போராட்டங்களையும் முற்றாக முடிவுக்குக் கொண்டுவர எண்ணுகிறது.

       சந்தேகமே இல்லை, இன்றைய நிலையில், இத்தகைய தாக்குதல்களைக் கம்யூனிச இயக்கங்கள் தடுப்பதிலேயே கவனமாக இருக்கின்றன; ஆனாலும், முதலாளித்துவம் மார்க்ஸ் என்னும் பூதத்தைக் கண்டு சகிக்கமுடியாத பயத்திலே அச்சப்பட்டு உழல்கிறது. உலகின் பல நாடுகளில் கம்யூனிச இயக்கங்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவை நாளும் பொழுதும் பலமாக வளர்ந்தும் வருகின்றன. முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறைகள், ஏகாதிபத்தியம், புதிய காலணியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் உலகின் பலபகுதிகளிலும் தொடுக்கப்பட்டு கூர்மையடைந்து வருகின்றன.

       தற்போது முதலாளித்துவம் அதற்குள்ளாகவே வளர்ந்து வரும் முரண்பாடுகளால் அமைப்பு ரீதியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.  சாராம்சத்திலும் வடிவத்திலும் இன்றைய முதலாளித்துவம் வெல்லப்பட முடியாதது இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தாலும், சில கம்யூனிஸ்ட் கட்சிகள் நினைப்பது போல அது அத்தனைச் சுலபமானது இல்லை.  நிகழ்கால முதலாளித்துவத்தை நிர்ணயிக்கும் போது எந்திர ரீதியான கோட்பாட்டு கருத்தியல்களை நாம் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அந்த நாட்டிற்கே பிரத்தேகமாக உள்ள தேசியச் சூழ்நிலைகளும், குணங்களும் உண்டு என்பது உண்மையே; ஆனாலும், நாம் உலகளாவிய அளவில் முதலாளித்துவத்தை வெற்றி கொள்ள தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் என்பதும் அவசியத் தேவையாகும்.

       நமது இயக்கங்களைத் தவிர்த்து, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்த்து உலகில் பலவடிவங்களில் வேறு போராட்டங்களும் நிகழ்ந்தே வருகின்றன; பிரபுத்துவ, இராணுவ ஆட்சிகளை எதிர்த்துக் கிளர்ச்சிகள், செழிப்பான வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் கூட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட்டங்கள் கூர்மையடைந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களையும்கூட, நாம் துல்லியமாக அவதானிக்க வேண்டும். அப்போதுதான், ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்த்த நமது போராட்டத்தை விரிவுபடுத்த முடியும்.

       நவீன தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைய உலகம் மிகவும் குறுகி விட்டது.  தொழில் நுட்பத்தின் பலன்கள் நமது வளர்ச்சிக்கும் பயன்படும். லெனின் வார்த்தையில் அந்தப் பலன்களைச் சொல்வதானால்,   ”போராட்டங்கள், போராட்டங்கள் மட்டுமே’ போராட்டக் கருவிகளில் மாற்றத்தை உண்டாக்கும். கம்யூனிச இயக்கங்களின் கடுமையான பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமைப்பு மாற்றங்களைக் கணக்கில் கொள்வது அவசியம்; அதே போல, மார்க்சியத்தின் பெயரால் சில இயக்கங்களில் காணப்படும் அதீத எண்ணங்கங்கள் மற்றும் நடைமுறைகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்வதும் அவசியம்.

       சோவியத் சோஷலிச வீழ்ச்சிக்குக் காரணம், மார்க்சியத்தை அப்படியே (எந்திர ரீதியாக) அமலாக்கியதுதான். லெனின் மறைவுக்குப் பிறகு, தவறுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. ஸ்டாலின் காலத்தில் சில பலவீனங்கள் இருந்தன, அவருக்குப் பின் மேலும் பல.  சோவியத் சோஷலிசத்தை நிர்மாணித்த லெனின், பாசிசத்துக்கு எதிரான அவரது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் போற்றுதலுக்குரியன; என்றாலும், சோஷலிசம் நிர்மாணிக்கப்பட்ட வேளையில் கண்டறியப்பட்ட சில பலவீனங்கள் மன்னிக்க முடியாதவை.

       சோவியத் சோஷலிசத்தின் வீழ்ச்சி ஒரு சோஷலிச சமூகத்தின் சமூக ஜனநாயக குணம் கீழ்க் கண்டவற்றில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து பரிசீலனை செய்யக் கோருகிறது : அரசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள உறவு, கட்சிச் செயல்பாட்டில் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தன்மை, சோஷலிசத் தன்மையுடனான பொருளாதாரம், சோஷலிசச் சமூகத்தில் தனிநபர் சொத்துரிமை, கலாச்சார—பண்பாட்டு பிரச்சனைகளில் மறுஉருவாக்கம் முதலியவை பற்றி ஆழமாகப் பரிசீலித்து சரியான புரிதல் மற்றும் கண்ணோட்டத்துடன் மேலெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

       ஆனால் உண்மையாகப் பார்க்கப்போனால், மார்க்ஸ் ஒருபோதும் முழுமையான எதேச்சிகாரக் கொள்கையை ஆதரித்தவர் இல்லை. சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் இடைப்பட்ட காலத்திற்கு மட்டுமே உரியதாகச் சர்வாதிகாரத்தை அவர் கருதினார்.  அதே போல, அனைத்து நாடுகளுக்கும் புரட்சியின் வடிவத்தை ஒற்றைத் தன்மை உடையதாய் அவர் முன்னிறுத்தவில்லை.  ஒரு குறிப்பிட்ட நாட்டின் குறிப்பிட்ட (அகவய / புறவய) நிலைமை மற்றும் காலச் சூழலைப் பொருத்தே அந்த நாட்டின் புரட்சியின் வடிவமும் தன்மையும் பெற்று அமையும் என்கின்ற மார்க்ஸின் புரட்சி குறித்த கருத்து தெட்டத் தெளிவானது.  எந்தெந்த தேசங்களில் சுதந்திரமான ஜனநாயக அரசியல் முறைமை இருக்கிறதோ அங்கெல்லாம் அமைதியான இயக்கங்கள் வழியில் சமூக மாற்றத்திற்குள்ள வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக் காட்டுகிறார்.  புரட்சி, அமைதியான வழியிலா அல்லது ஆயுதம் தாங்கியா என்பதை அந்த நாட்டின் அன்றைய சூழலைப் பொருத்தே அமையும் என மேலும் விவரிக்கும் மார்க்ஸ், புரட்சி குறித்த தனது ஆய்வு முடிவில் மிகச் சரியாகவே நிற்கிறார். அனைத்துப் புரட்சிகளுக்கும் உலகளாவிய ஒற்றை வடிவம் என்று ஒன்று இல்லை; அப்படி உருவாக்கவும் முடியாது.  இவற்றையெல்லாம் சாதிக்க, உருக்கு போன்ற ஒரு கட்சி ஸ்தாபன அமைப்பின் தேவையைச் சுட்டிக் காட்டுகிறார்.  அத்தகைய கட்சி அமைப்பிற்கு தனது நோக்கம் பற்றிய தெளிவும், பாட்டாளி மக்களுக்கான கட்சி அமைப்பைக் கட்டி எழுப்ப வேண்டியது குறித்தும் மார்க்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

       எந்தப் பிரச்சனை குறித்தும் திறந்த உள்ளத்தோடு, ஓர்ந்து கண்னோடாது, ஆராய்ந்து முடிவுக்கு வருவதும், படைப்பூக்கத்துடன் சிந்திப்பதும் மார்க்ஸின் தனித்துவமான குணம்.  ஏங்கெல்ஸ் கூட தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு யோசனையாகக் கூறுவார்: மார்க்ஸ் மற்றும் தன்னுடைய எழுத்துகளை அப்படியே வேதம் போல —பெரும் காவியம் போல— எடுத்துக் கொள்ளாதீர்கள்; அதன் பிழிவை அப்படியே பின்பற்றாதீர்கள்; அது குறித்து நீங்களே ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வாருங்கள், நாங்கள் இருவரும் செய்ததைப் போல (அதாவது, அவர்கள் யாருடைய கருத்தையும் ஆராயாமல் ஏற்றதில்லை).   மார்க்ஸை யாரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது; தவறான வியாக்கியானங்கள், திருத்தல்கள், திரிபுகள் என மார்க்கியத்தின் சாரமான மெய்ம்மை கொள்ளையடித்துப் போய்விடக்கூடாது என்பதே ஏங்கெல்ஸின் எச்சரிக்கையின் நோக்கமாகும்.  ஏங்கெல்ஸைப் பொருத்த வரை, மார்க்ஸியத்தின் மெய்ம்மைப் பிழிவு அதன் படைப்பூக்கமான பயன்படுத்தலிலேயே இருக்கிறது; அதை நாம் கைவிடலாகாது என்பது ஏங்கெல்ஸின் கருத்து.  கம்யூனிஸ்ட் கொள்கை, கம்யூனிஸ்ட் நன்நெறி, கம்யூனிஸ்ட் விழுமியங்கள் (உயர் மதிப்பு) பற்றிக் குறிப்பிடத்தக்கக் கோட்பாடுகளை மார்க்ஸ் முன் வைத்துள்ளார்.  கம்யூனிஸ்ட் கொள்கை, நன்நெறி, விழுமியங்கள் இவற்றைப் பெரிதும் போற்றி ஒழுகுவதும், நடைமுறையில் பின்பற்றுவது என்பது தவிக்க முடியாத கட்டாயம் ஆக்கப்படுவதும், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வெற்றிக்கும், நிலைத்த மாற்றத்தை உறுதிப்படுத்தவும், முன்னேறவும் மிகமிக அவசியமானதாகும்.  கம்யூனிஸ்ட் நன்நெறி என்பது, ஒருவர் அனைவருக்காக; அனைவரும் ஒருவருக்காக ன்ற சொலவடையில் ரத்தினச் சுருக்கமாக, மிகப் பொருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.  கம்யூனிஸ்ட் கலாச்சாரத்தின் நோக்கம், மனித குலச் சமுதாயத்தைச் சோஷலிச, கம்யூனிச அமைப்பாக மாற்றுவதே.  மனிதர்களின் மனோபாவத்தை, நடத்தையை அகவயமாகச் சீரமைப்பதன் மூலமே சாத்தியமாகும்.  கம்யூனிஸ்ட் கலாச்சாரம் பொது மக்கள் நலம் கருதி கீழ்க்கண்ட கொள்கை முழக்கங்களில் வெளிப்படுகிறது: உழைப்புக்கு மரியாதை, விஞ்ஞான சிந்தனையை ஏற்றல், விழுமியங்கள், உயர் நன்நெறிமதிப்புகளைப் போற்றி ஒழுகல், பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவது, சமூக மனித நேயத்தில் பெருவிருப்பம், பாட்டாளிகளின் சர்வதேசியம், சமநிலைச் சமூகம் அமைப்பது, உலகளாவிய சமாதானத்தை ஏற்படுத்துவது.  இத்தகைய உயர் கம்யூனிஸ்ட் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் காணப்படும் குறைபாடுகள், கம்யூனிஸ்ட் இயக்கங்களில் மிகக் கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       1980 பத்தாண்டுகள் தொடங்கி புதிய தாராளமயம் வந்துள்ளது.  இந்த நூற்றாண்டின் இறுதியில் சோவியத் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி முறையின் தோல்வி நிகழ்ந்தது.  சோவியத் சோஷலிசம் வீழ்ந்த பிறகு தொடர்ந்து முழுமையாகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி முறையின் சரிவு காணப்பட்டது. மார்க்ஸியம் இறுதிக்கு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்த முதலாளித்துவச் சிந்தனையாளர்களின் திட்டமிட்டப் பொய்ப்பிரச்சார மாயாஜாலம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பொய் என்று தெரிந்தே பரப்பப்படும் இந்தப் பாசாங்கு இன்னும் ஓய்தபாடில்லை; மாறாக, முதலாளித்துவ ஜனநாயக முறைதான் ஆகச்சிறந்ததும், மனிதகுல வரலாற்றின் முதிர்ந்து பிதுங்கி நிற்கும் இறுதி அரசியல் ஆட்சிமுறைமை என்றும் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.  அவர்களின் திட்டப்படி அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பிதற்றிக் கொண்டிருக்கட்டும்; சோவியத் சோஷலிசத்தின் வீழ்ச்சி ஒருபோதும் மார்க்சியத்தின் முடிவுரையாகாது, சோஷலிசம் முடிந்து போனதும் ஆகாது. இன்றைய காலகட்டத்தில் முதலாளித்துவம் பிற்போக்குத்தனமாகத் தனது ஒடுக்குமுறையில் மூர்க்கமாக மாறி, மனிதகுல விரோதமாகச் செயல்படுவதன் காரணமாக விஞ்ஞான சோஷலிசம் மிகவும் பொருத்தமுடைய மாற்றாக மேலும் கூடுதலாக முக்கியத்துவம் பெறுகிறது.

       மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதலாளித்துவத்தின் குணத்தை என்னவாக நிர்ணயம் செய்தாரோ அது, இன்றைக்கும்கூட மாறாத உண்மையாக இருக்கிறது. முதலாளித்துவம் அடிப்படை குணத்தில் மார்க்ஸ் காலத்தில் இருந்தது போலவே தோன்றினாலும், சில அம்சங்களில் மாறுதல்கள் ஏற்படவே செய்துள்ளன. நிகழ்காலத்தில் முதலாளித்துவத்தின் முகம் தாராளமயப் பொருளாதாரப் புதிய வடிவத்தில் –-- அதன் உலகமயமாதலின் குணத்தில்—முரண் கலவையாகவும், மனிதகுல விரோதமாகவும் காட்சியளிக்கிறது.  புதிய தாராளமயம், முதலீட்டுச் சந்தையைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம், புதிய காலணியாதிக்கம், நுகர்பொருள் பண்பாடு முதலிய அம்சங்கள் அதன் முக்கிய குணாம்சமாக உள்ளன. உலகளாவிய முதலாளித்துவக் குவியலின் இன்றைய காலகட்டத்திலும்கூட பிரதானமான முரண்பாடு, உழைக்கும் வர்க்கத்தினருக்கும் சுரண்டும் முதலாளித்துவத்திற்குமிடையேதான் உள்ளது. ஒடுக்கும் நாட்டிற்கும், ஒடுக்குதலுக்கு உள்ளான நாடுகளுக்கும் இடையே; சோஷலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே; உலகமயமான முதலாளித்துவத்திற்கும் உலக மக்கட் சமூகத்திற்கும் இடையேதான் முரண்பாடுகள் நிலவுகின்றன.  ஏகாதிபத்திய அடக்குமுறை என்பது மிக அபாயகரமாக முன்நிற்கிறது. விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவால் பெருகிவரும் ஆலைகளால், உழைக்கும் பாட்டாளிகளின் எண்ணிக்கை கூடிவருகிறதே தவிர, குறைந்து போகவில்லை.

       சமூக ஜனநாயக, சோஷலிசத் தளத்தின் மீதுதான் மார்க்சியம் நிற்கிறது; சுதந்திர ஜனநாயகத்தை ஒப்பிட, சமூக ஜனநாயகமும் சோஷலிசமும் ஒவ்வொருவகையிலும் துறைதோறும் மேம்பட்ட சூழலை வேண்டிநிற்கிறது. சோஷலிச முறையின் எல்லைக்குட்பட்டு பல(கட்சி) அமைப்பு முறை தோளோடு தோள் சேர்ந்து ஒன்றாய் பயணித்து முன்னேற முடியும். மக்களின் பங்கேற்பு மற்றும் மக்களின் (பொதுச்சொத்து) உரிமைக் கோட்பாடு மிகுந்த முக்கியத்துவம் உடையது; அதனைத் தவறாக – அரசின் பொதுச் சொத்துரிமை என்பது தனிநபரின் உரிமையேயாகும் எனத் தவறாக – எண்ணுவதற்கு இடம் தரக் கூடாது.  தனிநபரின் நலன், அனைவரின் பொதுநலன் என்ற இரண்டும், சோஷலிசப் பொருளாதார முறையில், போதுமான கவனம் செலுத்தப்படவேண்டியவையாகும். சந்தைப் பொருளாதாரம் என்பதும் கவனத்திற்கு உரியதே, அதனை முற்றாகத் தவிர்த்தல் என்பது சரியல்ல. மாறாக, உரிய முறையில் சந்தைப் பொருளாதாரத்தைத் தகவமைத்து மேம்படுத்தப்பட வேண்டும். கட்சிச் செயல்பாடுகளில் ஜனநாயக மத்தியத்துவம் என்பதற்கான மதிப்புறு ஒழுகலாறுகள் கறாராக உறுதி செய்யப்பட்டு, கட்சி அமைப்பை ஒரு நிறுவனப்பட்ட அதிகார பீடமாக மாறுவதிலிருந்து காத்திட வேண்டும். சோஷலிசத்திற்கு ஏற்றவாறு மனித குலச் சமூகத்தை கட்டி நிர்மாணித்திட, கலாச்சார பண்பாடுகள் மறுகட்டுமானம் செய்வதற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் தருதல் தவிர்க்க முடியாதது.  லெனின் கூற்றுப்படி மார்க்ஸியத்தை நடைமுறைப்படுத்துவதில் சரியான புரிதல், சரியான பார்வை யைக் கைக்கொள்வதால், மார்க்ஸியம் உயிர்த்துடிப்புடன் நீடிக்கும் என்பது மட்டுமல்ல, புரட்சியின் ஆக்கம் மிகு ஆற்றலை அதிகரிக்கும், புரட்சி சாதித்த மாற்றங்களைத் தொடர்ந்து நிலைத்திருப்பதாய்க் காத்து நிற்கும். சர்வதேசியப் பிரச்சனைகளைச் சரியாகப் பொருத்தமான வகையில் ஆராய்ந்து மார்க்சியத் தத்துவக் கோட்பாடுகளைப் படைப்பூக்கமாகச் செயல்படுத்துவதில் கம்யூனிஸ்ட்டுகள் பெரும் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மட்டுமே மார்க்சியமும், விஞ்ஞான சோஷலிசமும் இன்றைக்கும் பொருத்தமுடையதாய் உயிர்த்துடிப்புடன் விளங்க முடியும். மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அத்தகை படைப்பூக்கமான வகையில் மார்க்சியத் தத்துவம், அதன் ஒருங்கமைக்கப்பட்டப் புரட்சியின் சாரத்தைக் கைவிடாமல், பயன்படுத்தப்படுவது உள்ளார்ந்த பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தருணத்தில் மாற்றத்திற்கானத் தொடர்ச்சியான போராட்டத்திற்குத் தேவை, நம்பிக்கையோடு கூடிய உறுதிப்பாடு.

[CPN (UML)] நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்ட மார்க்ஸிஸ்ட் –லெனினிஸ்ட்) நேபாள நாட்டின் புரட்சியின் நடைமுறைகளில், படைப்பூக்கமான வகையில் மார்க்சியத் தத்துவம் செயல்படுவதைச் சமரசமற்ற வகையில் பற்றி நிற்கிறது; அது மட்டுமல்ல, அதையே உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் வேண்டுகோளாக வைக்கிறது. உலக கம்யூனிஸ்ட் இயக்கம், சோவியத் வீழ்ச்சி, நேபாள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனுபவம் மற்றும் அனைத்துச் சூழ்நிலைகளையும் சரியாகப் பகுத்தாய்ந்த பிறகு, படைப்பூக்கமான வகையில் மார்க்சியத் தத்துவம் செயல்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  எங்களது CPN (UML) கட்சி, நேபாளிகளின் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல, மார்க்சியம் -- லெனினியத்தின் படைப்பூக்கமாக, பலகட்சி மக்கள் ஜனநாயகப் பாதை என்னும் PMPD ஐ முன்மொழிந்தோம்.  நாங்கள் பின்பற்றிய இந்த வழிமுறையால் தீவிரமான இடதுசாரி மற்றும் வலதுசாரி கருத்துகளை எதிர்த்துப் போராடினோம். சரியான திசைவழியில் CPN (UML) கட்சி நேபாளத்தில் புரட்சியை முன்நடத்துகிறது. 2006-ல் நேபாளத்தில் நடந்த மக்கள் ஜனநாயகப்புரட்சியின் போது எங்கள் கட்சி முக்கிமான பங்காற்றியது.   பலகட்சி மக்கள் ஜனநாயகப் பாதை யின் கொள்கை வழியில் செயல்படும் எங்கள் கட்சி, நேபாள நாட்டில் புரட்சியை அமைதியான முறையில் முழுமைபெறச் செய்வதிலும்; சோஷலிச வழிமுறையில் நாட்டை ஆள்வதிலும்; பலகட்சி போட்டிச் சூழ்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை நிறுவுவதிலும் வெல்வோம் என்பதில் உறுதி பூண்டிருக்கிறோம். ஜனநாயக சோஷலிச அரசு அதிகாரம் என்பது சாராம்சம்.  பலகட்சி போட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை நிறுவுவது அதன் வடிவம்.  பாட்டாளி வர்க்க அடிப்படை மற்றும் வர்க்க ஒற்றுமையை முன்நிறுத்தி, சோஷலிச புரட்சியை முழுமைபெறச் செய்ய, ஜனநாயக மதிப்புகளையும் ஜனநாயக முறையையும் முன்னெடுத்துச் செல்வோம். கட்சி அமைப்பைப் பலமாகக் கட்டுவதிலும் இதனைக் கடைபிடிப்போம். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோஷலிசத்திற்கு வேகமாக முன்னேறுவதில் பிரபுத்துவத்தின் மிச்சசொச்சத்தை ஒழிப்பது, ஏகாதிபத்தியத் தலையீடு மற்றும் மேலாண்மையைக் கட்டுப்படுத்துவது, ஒடுக்குமுறைகளை எதிர்ப்பது, தரகு முதலாளித்துவத்தின் சுரண்டலை ஒழிப்பது என்பன தவிர்க்க முடியாதவை. மேலும் தேசத்தின் தேவைக்கேற்பவும், தேசியப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் உற்பத்தி சக்திகளை முன்னேற்றுவது எங்களது முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்று; அதில், புதிய தாராளமயம் மற்றும் உலகமயத்தை எதிர்ப்பதும் அடங்கும். இந்தத் திட்டங்கள் எங்களது முழுமனதான கவனத்தில் உள்ளவையாகும்.

மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாங்கள் தெளிவாக அறைகூவிச் சொல்கிறோம், மார்க்சியம், புரட்சிகர சாரத்தோடு கூடிய, என்றென்றும் புதுமை விஞ்ஞானம். மார்க்சியம் மாபெரும் காவியம் அன்று. அப்படி அதைப் பெருங்காவியமாக மாற்றச் செய்யப்படும் எந்த முயற்சியையும் விமர்சனத்துக்கு உரியதாகவே கருதுவோம்; அதைத்தான் நேபாளத்தில் நாங்கள் செய்து வருகின்றோம்.

நேபாளத்தில் இயங்கும் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு எங்களது கட்சி அர்ப்பணிப்போடு முயற்சிக்கும். இது குறித்து இணைந்த செயல்பாட்டிற்கான ஒன்பது அம்ச உடன்பாட்டினை எங்களது கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அமைப்புடன் தற்போது கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த உடன்பாடு, சமீபத்தில் மாகாண, தேசியப் பாராளுமன்றங்களுக்கு நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு செய்து கொள்ளப்பட்டதாகும். இந்தத் திசைவழியில், டாக்டர் பாபுராம் பட்டராய் தலைமையில் இயங்கும் நயா சக்தி பார்ட்டி எங்களோடு இணைய முன்வந்துள்ளது.  சிதறிக்கிடக்கும் அனைத்து இடதுசாரி, கம்யூனிஸ்ட், உழைப்பாளர்களின் குழுக்களை ஒன்றிணைத்து, உருக்கு போன்ற பெருந்திரள் அமைப்பினை ஏற்படுத்துவதில் காட்டப்படும் உறுதியான நம்பிக்கை மற்றும் முயற்சி என்பதே அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையின் உண்மையான சாரமாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.

தனிச்சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகிறேன். மேன்மைமிக்க பங்கேற்பாளர்களின் இந்த அமர்வின் வெற்றியின் விளைவு உலக கம்யூனிஸ்ட் இயக்கம் மேலெடுத்துச் செல்லப்பட பெரிதும் உதவிகரமாக இருக்கும். அந்தந்தப் பகுதியின் தனித்துவத்தோடுச் சோஷலிசத்தைக் கட்டுவது என்ற நம்முடைய நோக்கம் மிகவும் மேன்மையானது, பொதுவான மனித குலத்தை நன்மையடையச் செய்வது, முன்னேற்றுவது.  நான் உறுதியாக நம்புகிறேன், நம்முடைய இணைந்த முயற்சி, ஆதரவு மற்றும் ஒருமைப்பாடு நிச்சயம் ஆயுதப் போட்டியைக் குறைக்கும்; பிராந்திய மற்றும் உலகளாவிய பதற்றத்தைத் தணிக்கும்; சமாதான சகவாழ்வு மேம்பட வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும்; மனிதகுலம், கவலை இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்திடப் புதியதோர் உலகம் செய்வோம்.  இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றதன் மூலம் நான் புதிய வெளிச்சத்தை அடைந்தேன், மதிப்பு கூடியுள்ளதாக உணர்கிறேன்.  நாம் ஒருவரோடு ஒருவர் நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மற்றும் நம்முள் ஏற்பட்டுள்ள தொடர்பு மிகப்பெரிய விலைமதிக்க முடியாத செல்வாதாரமாக வருங்காலங்களில் இருக்கப் போகிறது என நான் நம்புகிறேன்.

அனைவருக்கும் பெரிதும் நன்றி பாராட்டுகிறேன்!

   (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்:

           வெ. நீலகண்டன், தொலைபேசித்துறை, கடலூர்)

No comments:

Post a Comment