Thursday 12 November 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 19 ஹரீஷ் திவாரி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -19



ஹரீஷ் திவாரி : 

கட்சியின் சலிப்பறியா மக்கள் தலைவர் 

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–நவ.01 --07, 2020)

        ஹரீஷ் சந்திர திவாரி, உ.பி., கான்பூர் மாவட்டத்தின் பங்கி எனும் இடத்திற்கு அருகே அமைந்த மஸ்வான்பூரில் —பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், 1915, செப்டம்பர் 5ம் நாள் பிறந்தார். 1936ம் ஆண்டு லக்னோவில் ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்’ AISF அமைப்பு மாநாட்டின் தீவிரமான அமைப்பாளர்களில் ஒருவராகச் செயல்பட்ட ஒருசில கம்யூனிஸ்ட்களில் ஹரீஷ் திவாரியும் ஒருவர். அவருடைய தந்தை பண்டிட் இராமசந்திர திவாரி நஜீபாபாத் நகரப் பள்ளி ஒன்றின் தலைமையாசியர். ஹரீஷ் இன்டர் மீடியட் படிப்பைக் கான்பூரில் பெற்று உயர்கல்விக்காக லக்னோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

இளமைக் காலமும் படிப்பும்

        உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையிலேயே புரட்சிகர நூல்களைச் சேகரிப்பது ஹரீஷின் வழக்கம். ஒரு நாள் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முதலிய முழக்கங்களை எழுப்பியவாறு அங்கும் இங்குமாக அலைந்தார்; அப்படிச் செய்தால் தன்னைப் போலீஸ் கைதுசெய்துவிடும் என்பது அவரது உற்சாகமான நம்பிக்கை! சமூகத்தில் அவரது தந்தை பெரும் மரியாதைக்குரியவராக இருந்ததால், சிறுவன் திவாரியை எச்சரித்து விட்டுவிட்டனர். ஆனால் ஹரீஷ் பின்வாங்குவதாக இல்லை. இதன் பிறகுதான் மாமா ஷிவ் நந்தன் திவாரியின் கடுமையான பாதுகாப்பில் இருக்க வேண்டி அவர் கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படிப்புக்காக லக்னோ சென்றார்.

            பல்கலைக்கழகத்தில் மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் துவங்கி, உணர்வுபூர்வமான தலைமைக்கே உரிய மிக மிக நேர்மையான மாணவர் தலைவராக உருவானார். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கப் போராட்டங்களில் மாணவர்களைத் திரட்டினார் – தனக்கென்ற ஓர் இடத்தை நிலைநிறுத்தினார். இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் சரளமான புலமையும் பேச்சாற்றலும் மிளிர இளங்கலை பிஏ பட்டத்தை நிறைவு செய்தார்.

ஏஐஎஸ்எஃப் AISF அமைப்பு மாநாட்டில்

        அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் அமைப்பு மாநாடு 1936ம் ஆண்டு ஆகஸ்ட் 12ல் லக்னோவில் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த மாநாட்டின் தயாரிப்புப் பணிகளில் முக்கியமான பங்கு வகித்தவர் ஹரீஷ் திவாரி.

            அதே 1936 லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் மாநாடும் நடைபெற்றது. அந்த லக்னோ அமர்வில்தான் பத்யுதீன், பல்ராம் சிங், பி என் பார்கவா முதலானவர்களுடன் ஹரீஷ் திவாரி ஜவகர்லால் நேரு அவர்களைச் சந்தித்தார்; அகில இந்திய மாணவர்கள் மாநாட்டினை நடத்தும் யோசனையைத் தெரிவித்தனர். நேரு மிகுந்த உற்சாகத்தோடு மாநாட்டினைத் துவக்கி வைத்து உரையாற்ற உடனடியாகச் சம்மதித்தார்; அதுமட்டுமின்றி, அந்த யோசனையை மகாத்மா காந்தியும் ஆதரித்தார். இவ்வாறு அந்தக் காங்கிரஸ் மாநாடு மாணவர்கள் மற்றும் பிற தலைவர்களோடு கலந்து ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது.

            அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநாட்டினைத் துவக்கி வைக்கும்படி ஜவகர்லால் நேருவை முறைப்படி அழைப்பதற்காக ஹரீஷ் திவாரிதான் அலகாபாத் அனுப்பி வைக்கப்பட்டார். இவ்வாறு AISFன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரானார் ஹரீஷ். உ.பி மற்றும் இந்தியா முழுமையிலும் மாணவர் அமைப்புகளைக் கட்டியெழுப்பி பெருந்திரள் மாணவர் இயக்கங்களை நடத்திய மிக உயர்ந்த மாணவர் தலைவர்களில் ஒருவர் ஹரீஷ் திவாரி.

            1938–39ல் லக்னோ பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்திற்கான தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு ஹரீஷ் போட்டியிட தலைவர் பொறுப்புக்கு GL பன்ஸால் போட்டியிட்டார். அவர்களுக்காகத் தேர்தல் பணி மற்றும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட பல மாணவர்களில் பிற்காலத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராக சிறந்து விளங்கிய PD ஸ்ரீமாலியும் ஒருவர். AISF அமைப்பின் ஷஃபீக் நக்வீயும் பிரச்சாரம் செய்தார். இருவரும் வெற்றி பெற்றது மட்டுமல்ல, ஹரீஷ் பொதுச் செயலாளராகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

            புகழ்பெற்ற 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் வெடித்தது. லக்னோ பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய மாபெரும் பேரணியில் முன்னின்ற தலைவர்களில் ஹரீஷ் முக்கிய அமைப்பாளர். (தற்போது அனுமான் சேது என்றழைக்கப்படும்) ‘குரங்குப் பாலம்’ அருகே பேரணியில் வந்தவர்களைப் போலீசார் கடுமையாகத் தாக்கினார்கள். அந்த மிருகத்தனமானத் தாக்குதலில் ஹரீஷ் அடித்துத் துவைக்கப்பட்டு, இரு கை எலும்புகளும் உடைக்கப்பட்டன.

சிபிஐ கட்சியில் இணைதல்

        மிகவும் நெருக்கடியான இரண்டாம் உலகப் போர் மூண்ட காலத்தில் 1940ல், ஹரீஷ் திவாரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதற்கு முன் கட்சி, தேசிய முன்னணி அமைக்க அறைகூவல் விட்டிருந்தது. அப்போது ஹரீஷ் இன்னும் மாணவராகப் பகல் பொழுதில் பல்கலையில் படித்துக் கொண்டு இருந்தார்; கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால், இரவு நேரத்தில் தலைமறைவு கட்சி செயற்பாட்டாளராக அவர் பணியாற்றினார். லக்னோவில் கட்சி அமைப்பைக் கட்டுவதில் உதவினார்.

            அந்த நேரத்தில் ஸ்ரீ நாராயண் திவாரி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது; பழைய புரட்சியாளரான அவர் அமீனாபாத்தில் குல்லாய் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வந்தார். அங்கே ஓர் ‘அம்மாஜி’ அமர்வது வழக்கம், அவர் அங்கு அனைவருக்குமே அம்மாஜிதான். அவர் அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் இடம் தந்தது விவாதம் நடத்த வசதியாகப் போயிற்று. ஏறத்தாழ அது புரட்சியாளர்களின் மெய்நிகர் மையமாயிற்று. அருகே இருந்த டீ கடைகளும் கூட தொடர்பு கொள்ளவும் கூடிப் பேசவும் பரபரப்பான மையங்களாயின. ஹரீஷ் திவாரியும் தீவிரமான தகவல் தொடர்பு மையமானார்.  ஸ்ரீ நாராயண் திவாரியுடன் ஏற்பட்டத் தொடர்பு தொழிற்சங்க இயக்கத்தின்பால் ஹரீஷை மடை மாற்றியது.

தொழிற்சங்கச் செயல்பாடுகள்

வாழ்வின் சில கொள்கைகளை ஹரீஷ் விடாப்பிடியாகப் பின்பற்றினார். கட்சிப் பணிகளில் தன் முழு கவனத்தையும் செலுத்தி அர்ப்பணிப்புடன் உழைத்தவர், ஒருபோதும் பதவிகளுக்கு அலைந்தது இல்லை. வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் அங்கிருந்து பண உதவியைப் பெறுவதை மறுத்து, அப்போது வெறும் ரூ30/-ஆக இருந்த கட்சி தரும் ஊதியத்தில் வாழ்வது என்று முடிவு செய்தார்.

            1940ல் ஹரீஷ் திவாரி, (உபி, பிரதாப்கர்க் மாவட்டத்தின்) காலாகாங்கர் வட்டாரத்தைச் சேர்ந்த குன்வர் பிரஜேஷ் சிங், நைம் கான், பாபு லால், AP திவாரி முதலானவர்களுடன் சேர்ந்து லக்னோவில் ‘மின்சாரத் தொழிலாளர்கள் (பிஜிலி மஸ்தூர்) சங்கம்’ அமைத்தார். மார்ட்டின் பர்ன் கம்பெனிகள் அனைத்தின் தொழிலாளர் சங்கங்களின் இணைப்பு சம்மேளனமாக அது மாறியது. அதே நேரத்தில் 1940 நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            மின்சாரம் மற்றும் ஏனைய அனைத்து ஆலைகளின் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாகாண மட்டத்தில் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். அரசு வேறு வழியின்றி ஊதிய நிர்ணயத்திற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டி வந்தது. அந்தக் குழு ‘நிம்கர் அவார்டு’ என அழைக்கப்படுகிறது. அந்தக் குழு அனைத்து ஆலைத் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியத்தைச் சாதகமாகப் பரிசீலித்தது. ஆனால் தொழிலாளர்கள் மத்தியில் ‘நிம்கர் அவார்டு’ (சிபாரிசு) ‘ஹரீஷ் திவாரி அவார்டு!’ என இன்னும் கூடுதல் பிரபலமாகப் புகழ் பெற்றது.

            ஹரீஷ் மேலும் பீடி, துணி ஆலைகள், இராணுவப் பொறியியல், அரசு ஊழியர்கள், ப்ளை வுட் என மற்ற பிரிவினர்களுக்கும் சங்க அமைப்புகளை அமைத்தார். ஹரீஷ் திவாரியைப் புகழ்ந்து அவர் பெயரில் பாடல்கள் புனைந்து தொழிலாளர்கள் பாடுவது வழக்கம்.

            ஹரீஷ் 1945–46 காலகட்டத்தில் வாரணாசியில் சந்தித்த பிரேம்லதா திவாரியைப் பின்னர் மணம் புரிந்தார். பிரேம்லதாவும் கூட வாழ்நாளெல்லாம் தீவிரமான கட்சி ஊழியராகப் பணியாற்றினார். அவர் (ஹரியானா ஃபரிதாபாத், பல்லா கர்க்-கில் உள்ள) அகர்வால் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். ஹரீஷின் தலைமறைவு செயல்பாடுகளுக்கு அவர் உதவிகரமாக இருந்ததால், ஹரீஷால் தோற்றத்தை மாற்றிக் கொண்டு சுற்றித் திரிய முடிந்தது.

            விடுதலைக்குப் பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுய அழிப்பு ‘பிடிஆர் பாதை’யைப் பின்பற்றியதால் கட்சி அமைப்புகள் சீர்குலைந்தன. உ.பி., அலகாபாத்திலும் கட்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஸ்தாபனப் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு இடங்களுக்கு அவர் அனுப்பப் பட்டார். வேலைநிறுத்தம் செய்தவர்கள் பக்கம் இணைந்து நிற்கும்படி பிரேம்லதாவைக் கட்சி பணித்தது; தொடர்ந்து அவர் தமது பதவியை ராஜினாமா செய்திட கட்டாயப்படுத்தப்பட்டார். ஒரு பொய் வழக்கில் அவர் கைதானார்; அப்போது ஹரீஷ் திவாரியும் சிறையில் இருந்தார்.

            அப்பொழுது கட்சித் தலைமையுடன் தவறான புரிதல் ஏற்பட, ஒரு நாளிதழ் செய்தி அடிப்படையில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த தினசரியே தனது செய்தியிலிருந்து பின்வாங்கியது; கட்சியும் அவர் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற்றது. இத்தகைய கூத்துகள் பிடிஆர் காலத்தின் வினோத நிகழ்வுகள்.

            கடுமையான ஏழ்மைநிலையில் ஹரீஷும் பிரேம்லதாவும் திருமணம் செய்து கொண்டு பொறுப்புகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வாழ்வது என முடிவெடுத்தனர்.

இணை பிரியாதவை, மூன்று Tகள் –திவாரி, டைப்ரைட்டர், டுபாக்கோ!  

          ஹரீஷிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாத இணைந்த ஒரு பகுதி டைப்ரைட்டர். அவருடைய பெயரிலேயே ஒரு T,திவாரி; தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றியதால் அவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ‘புகையிலை’ (டுபாக்கோ) பழக்கத்தைக் கைக்கொண்டு (உறவுப்) பாலம் அமைத்தார்; ஏதாவது எழுத வேண்டுமென்றால் உடனே டைப் ரைட்டரில் டைப் அடிக்கத் தொடங்கி விடுவார், அது அவரது அறையானாலும் சரி, அன்றி மாபெரும் பொதுக் கூட்டமாயினும் சரி! அறிக்கையோ கடிதமோ எதுவாயினும் டைப்ரைட்டர் இயங்கத் தொடங்கிவிடும் – தனது ஒரு விரலைப் பயன்படுத்தியே டைப் செய்தாலும், படு பயங்கரமான வேகத்தில் டைப் செய்வார். சலியாத உழைப்பாளி அவர்.

            1950 –60களில் மாநில மற்றும் அகில இந்திய மட்டத்தில் மின்சாரத் தொழிலாளர்களைத் திரட்டுவதில் ஹரீஷ் தீவிரமாக ஈடுபட்டார். தமிழகத்தின் தோழர் எஸ் சி கிருஷ்ணன் மற்றும் மகாராஷ்டிராவின் தோழர் ஏ பி பரதன் இவர்களோடு சேர்ந்து அனைத்திந்திய மாநாடு நடத்தி, ‘மின்சார ஊழியர்களுக்கான அகில இந்திய சம்மேளனம்’ அமைப்பை நாக்பூரில் நிறுவினார்.

            அந்தச் சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளராக ஹரீஷ் திவாரி தேர்வானார். உண்மையில் டாக்டர் வி வி கிரி தலைமையில் நடந்த முந்தைய அமைப்பை மறு சீரமைப்பு செய்து மீண்டும் தீவிரமாகச் செயல்பட ஊக்குவித்து அமைக்கப்பட்டதே அச்சம்மேளனம்.

            ஏஐடியுசி தேசியச் செயற்குழுவின் ஒரு உறுப்பினர் அவர். ஏஐடியுசி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகத் தொழிற்சங்கச் சம்மேளனம் WFTU–ன் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

            தொழிற்சங்க வாழ்க்கையில் பல சிக்கலான கட்டங்களை –அமைப்பில் பிளவுகள், ஒற்றுமைப்படுவது மற்றும் 1964 சிபிஐ கட்சி பிளவுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பங்கள் இப்படி – பலவற்றைக் கடந்து வந்தார். இந்தக் குழப்பங்கள் தொழிற்சங்க இயக்கத்தில் சிக்கலான சூழலை உருவாக்கியது. உ.பி.யில் 28க்கும் மேற்பட்ட நூற்பு ஆலைகளில் சங்க இயக்கம் கட்டினார்.

கலை இலக்கிய ஆர்வம்

            தொழிலாளர்களை உற்சாகப்படுத்த ஹரீஷ் நாடகம் நடத்தியுள்ளார்: அதன் பெயர் ‘என்ன மாறி விட்டது?’ (க்யா பத்லா ஹை?). தொழிலாளர்களின் ஒரு பேரணி நடத்தி முடித்த இரண்டு நாட்களில் ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ IPTA தோழர்கள் அந்நாடகத்தைத் தயாரித்து


அரங்கேற்றினர்; பெருவாரியான வரவேற்பைப் பெற்ற அந்நாடகத்தைப் பல போராட்டங்களின்போதும் திரும்ப நடத்தினர். அந்த ஆண்டு 1978, சாஜ்ஜட் ஷாகீர் மற்றும் டாக்டர் ரஹீத் ஜஹான் அதில் சேர்ந்து கொண்டனர். இந்த முயற்சி மாநில தொழிற்சங்க அலுவலகக் கட்டடம் கட்டவும் உதவியது. இலக்கியத்தில் பெரும் ஆர்வம் உடையவரான ஹரீஷ், ஏராளமான புத்தகங்களையும் படித்தார்.

            பல பெரும் தலைவர்களுக்கு மத்தியில் ஹரீஷ் திவாரி பணியாற்ற வேண்டி இருந்தது;  நட்சத்திரத் தலைவர்களாக எஸ்எஸ் யூசுப், ரஸ்டம் சாட்டீன், இசட் ஏ அகமது, ரமேஷ் சின்ஹா, அலி சர்தார் ஜாஃப்ரி, ஸரூ பாண்டே, ஜெய் பகதூர் சிங், ஜார்கண்டே ராய் இப்படிப் பலர் மத்தியில் பணியாற்றினாலும், தனக்கென்ற ஓர் இடத்தை அவர் படைத்தார்.

            1978 படிண்டா கட்சி காங்கிரஸ் மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் மாநிலக் கட்சிக் குழு செயலகத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

            நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஹரீஷ் திவாரி 1988 டிசம்பர் 10ம் நாள் மறைந்தார். அவரது மறைவு தொழிலாளர் வர்க்கத்தின் இழப்பாகப் பெரிதும் உணரப்பட்டது. அவரை மிக ஆழமாக நேசித்தத் தொழிலாளர்கள் பல்லாயிரக் கணக்கில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஹரீஷ் திவாரி இறுதிவரை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத மேன்மையான உண்மை கம்யூனிஸ்ட்டிற்கு இலக்கணமாக வாழ்ந்தார்.

        அவர் வாழ்வும் பணியும் நம்மையும்

கொள்கைப் பற்றாளர்களாக உயர்த்தட்டும்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment