Wednesday 11 November 2020

இந்தியத் தொழிலாளர் வர்க்க வரலாற்றுச் சுவடுகள் –1

 


இந்தியத் தொழிலாளர் வர்க்க

வரலாற்றுச் சுவடுகள் –ஒரு மீள் பார்வை -1


--அமர்ஜித் கவுர்

ஏஐடியுசி பொதுச் செயலாளர்

                  புகழார்ந்த நூற்றாண்டு வரலாற்றைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்க்கிறோம். 1920ம் ஆண்டு அக்டோபர் 31ம் நாள் மும்பை நகரில் நடந்த அமைப்பு மாநாட்டில் அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், ஏஐடியுசி பேரியக்கம் துவங்கி இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி நிறைவு செய்துள்ளது. அதன் வரலாறு நெடுக எத்தனை எத்தனை இயக்க நிகழ்வுகள், போராட்டங்கள், தியாகங்கள் என நினைக்க நினைக்க வெற்றித் திளைப்பில் தோள்கள் புடைக்கும். ஏஐடியுசி பேரியக்கம் தோன்றிய வரலாற்றுப் பின்னணி, சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் அதன் செயல்பாடுகளை இந்தத் தருணத்தில் சுருக்கமாகப் பட்டியலிடலாம். 

பின்னணி ஒரு பார்வை

          காலனி ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள் பிரம்மாண்ட வடிவை எடுத்த சூழ்நிலையில், பல பிரிவுகளில் செயல்பட்டுவந்த சங்கங்கள் ஒன்றுகூடி மும்பையில் ஏஐடியுசி பிறந்தது. அதற்குச் சற்று முன்தான் பைசாகித் திருநாளைக் கொண்டாடத் திரண்டிருந்த பொதுமக்கள் மீது ஜெனரல் டயர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய ஜாலியன் வாலா பாக் படுகொலையில் நூற்றுக் கணக்கானோர் இறந்தனர். இதனால் நாடு முழுதும் முழுதும் மூண்ட கோபக் கனலைத் தொடர்ந்து மகாத்மா காந்தி ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். கிராமங்கள் நகரங்கள் என தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகத்தின் பிறபகுதி மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

          ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர்களின் எழுச்சி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்த தற்காலிகப் பொதுத் தொழிலாளர்கள் வர்க்கப் பிரிவு உருவான, 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கி விட்டது. அதுவரை தன்னிறைவு பெற்று நடந்த கிராமப் பொருளாதாரத்தைச் சின்னாபின்னமாக்கி, அதற்கு ஈடான வேறு எந்த மாற்று வழிமுறை அமைப்பையும் ஏற்படுத்தாத நிலையில், கிராமப்புற வேளாண் மக்கள் ஏழ்மைக்கு ஆளாக்கி நிலமற்ற கூலித் தொழிலாளர் பிரிவை உண்டாக்கியது. விலை மலிவான ஆலை உற்பத்திப் பொருட்கள் குவிக்கப்பட்டதால் இலட்சக் கணக்கான உழைப்பாளிகள், நூற்பு மற்றும் நெசவாளர்கள், கைவினைஞர்கள், உலைக்களத் தொழிலாளர்கள், கொல்லர்கள், குயவர்கள் என கிராமத்தில் வாழ்வாதாரம் இழந்தனர். இதனால் இந்தியாவில் 1850–90 காலகட்டத்தில் பரவலான பஞ்சங்கள் ஏற்பட இலட்சக் கணக்கானோர் பட்டினியால் மாளவும், பல இலட்சம் மக்கள் பஞ்சைப் பராரிகளாகவும் ஆனார்கள்.  

          பெருந்திரள் மக்களின் இந்த ஏழ்மை, அழிக்கப்பட்ட விவசாயம் கலகங்களை விளைவிக்க, வெடித்த பல்வேறு இயக்கங்களை ஆட்சியாளர்கள் நசுக்கி ஒடுக்கினர். இந்தப் பின்னணியில் அன்னிய ஆட்சியாளர்கள் சுதேச மன்னர்களை அதிகாரமற்றவர்களாக மாற்ற முனைய, அந்தச் சமஸ்தானங்களில் 1857 சிப்பாய் புரட்சி, முதலாவது சுதந்திரப் போராக வெடித்தது. கிராமத்தில் வாழ்விழந்த ஏழை விவசாயிகள், கைவினைஞர்கள், மலிவான கூலி ஆலைத் தொழிலாளியாக நகரங்களில் தள்ளப்பட்டனர். அத்தகைய மிக மோசமான சுரண்டல் சூழ்நிலையில் அப்படி உருவானதுதான் தற்காலிகப் பொதுத் தொழிலாளர்கள் பிரிவு.

          பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்கும் நாடாகவும், வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருட்களையும் வாங்கும் நாடாகவும் இந்தியா மாற்றப்பட்டது; இரயில்வே கட்டுமானங்கள் மற்றும் டீ, காப்பி, சணல் முதலிய தோட்டப் பணப்பயிர் தொழிலாக இங்கே வளர்ச்சி பெற்றது அப்படித்தான். நீண்ட ஒப்பந்த அடிப்படையில் கட்டாயப்படுத்தி நிலமற்ற தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்; கங்காணி அடிமை முறை கொடுமைகள், ஒப்பந்த மீறல் எனில் கைது என்பது இயல்பானது. பிரிட்டிஷ் ஆட்சியினரால் இந்தியாவில் முதலாளித்துவ சகாப்தம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கால் கொண்டது.

 ஆலைகளின் தோற்றம்

          1918ல் வங்கத்தில் அன்னிய பருத்தி ஆலை கம்பெனி (பௌரியா காட்டன் மில்ஸ்), 1839ல் அசாமில் டீ கம்பெனி, தானே பகுதியில் இந்தியாவின் முதல் இரயில் பாதை 1853, ஏப்ரல் 16ல் நிர்மாணிக்கப்பட்டு, (மேற்கு வங்க அசன்ஸோல் பகுதி, நிலக்கரி வயலுக்குப் புகழ்பெற்ற) ரானிகஞ்ச் இரயில் பாதை 1854ல் வந்தது.

          1854ல் கல்கத்தாவில் பிரிட்டிஷ் முதலீட்டில் முதலாவது சணல் தொழிற்சாலையும், இந்திய முதலீட்டில் பம்பாயில் முதலாவது டெக்ஸ்டைல் ஆலையும் நிறுவப்பட்டது. பிரிட்டிஷ்காரர்களுக்கு பீகாரில் முதலில் நிலக்கரி வெட்டி எடுக்கவும் பின்னர் இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகளை அமைக்கவும் இரயில்வே பாதைகளின் வளர்ச்சி உதவியது.  அங்கே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஒரு நாளைக்கு 16 முதல் 17 மணி நேரம் உழைப்பு, ஊதியம் குறைவு, மனிதத்தன்மையற்ற பணிநிலைமைகள் நிலவின. இச்சூழலில் உழைப்பாளிகள் மத்தியில் தொழில் அமைதி இன்மை தவிர்க்க இயலாது போனது.

வேலைநிறுத்தங்கள்

1827லேயே வேலைநிறுத்தம் நடைபெற்றதற்கான சான்றுகள் உண்டு. கல்கத்தாவில் பல்லக்குச் சுமப்போர்1862 மே மாதம் ஒரு மாத வேலைநிறுத்தம் செய்தனர்; 1200 ஹௌரா ரயில்வே தொழிலாளர்கள் எட்டுமணிநேர கோரிக்கையை முன் வைத்து ஸ்டிரைக் நடத்தினர்; கிழக்கிந்திய இரயில்வே எழுத்தர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாட்டு வண்டி தொழிலாளர்கள், கல்கத்தாவில் ஹேக்னே (குதிரை) வாடகை  வண்டி ஓட்டுநர்கள், பம்பாயில் சலவைத் தொழிலாளர்கள் மற்றும் அச்சுத் தொழில் அச்சு கோர்ப்போர், மெட்ராசில் பால் விற்பனையாளர்கள் உட்பட பலபகுதியினரின் வேலைநிறுத்தங்கள் 1862 முதல் 1873வரை நடைபெற்றன. ஆனால் தொழிலாளர்களை ஒன்று திரட்டத் தொழிலாளர்களின் அமைப்பு இன்னும் உருவாகாத நிலையில், தொழிலாளர்கள் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

          1866ல் அமெரிக்காவில் 60 தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்து எட்டு மணி நேர வேலை நாள் திட்டத்திற்காக இயக்கம் நடத்தினர். பல நாடுகளிலும் 1820 –40 காலகட்டத்தில் வேலை நேரக் குறைப்பு கோரிக்கையை முன் வைத்து வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. 1866ல் வேலைநேர நிர்ணயிப்பு கோரிய சிக்காகோ தொழிலாளர்களின் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் 1890ல் உலகின் பல பகுதிகளிலும் மே 1ம் நாள் எட்டுமணி நேர கோரிக்கை நாளாக அனுசரிக்கப்பட்டது. உலக நாடுகளின் இந்தச் செயல்பாட்டு நிகழ்வுகள் இந்தியத் தொழிலாளர் இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தியது.

          1877ல் ஊதிய உயர்வு கோரி நாக்பூர் எம்ப்பிரஸ் மில்களின் வேலைநிறுத்தத்தில் பின்னர் இரயில்வே தொழிலாளர்கள், பம்பாய் மற்றும் அகமதாபாத் காட்டன் மில், சணல் ஆலை எனப் பல பிரிவு தொழிலாளர்களும் இணைந்தனர். தோட்டத் தொழிலாளர்களிடையே கிளர்ச்சியும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் நிலைபெற்றன. இப்படி 1882 முதல் 1890 வரையிலான எட்டு ஆண்டுகளில் சுமார் 25 வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன.

வர்க்க உணர்வும் விடுதலை இயக்கமும்

          1891 முதல் 1901 வரை தன்னெழுச்சியான தொழிலாளர் வர்க்க எதிர்ப்பு நடவடிக்கைகள், அது வேலை நிறுத்தமாக, பிற பகுதி தொழிலாளர்களுக்கு ஆதரவு காட்டுவதான வர்க்க உணர்வு ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் உருவானது. இந்தப் போக்கு, முதல் உலகப் போருக்கு முன்பு வரையான ஆண்டுகளில் மெல்ல வளர்ந்து வந்தது. 1905 முதல் தொழிலாளர் வர்க்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டு, தேசத்தின் வளர்ந்து வரும் விடுதலை இயக்கத்தோடு மேலும் மேலும் கூடுதலாகத் தன்னைப் பிணைத்துக் கொண்டது.

          பணிநேர நீடிப்புக்கு எதிராக பம்பாய், கல்கத்தா அச்சுக் கூடத்திலும் வேலைநிறுத்தம் நடந்தது. இக்காலத்தில் மிகப் பெரிய ஒரு நிகழ்வு 1908 ஜூலை 24 முதல் 28 வரை பம்பாய் ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய பிரம்மாண்டமான வேலைநிறுத்தம்: அது, விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த தீர்ப்புக்கு எதிரான தொழிலாளர்களின் எழுச்சி.  தொழிலாளர்கள் தெருக்களில் காவலர்களோடும் பிரிட்டிஷ் ஆட்சி இராணுவத்தினரோடும் சண்டையிட்ட காட்சிகள் அரங்கேறின.

          இந்த வேலைநிறுத்தம் பற்றி தோழர் லெனின் எழுதினார், “இந்தியப் பாட்டாளிகள், வர்க்க உணர்வோடு அரசியல் பெருந்திரள் போராட்டங்களைத் தொடுக்க ஏற்கனவே போதுமான அளவு முதிர்ச்சி பெற்றுள்ளனர்; அது அவ்வாறு அமையும்போது, இந்தியாவிலும் ஆங்கிலோ –ரஷ்ய (ஒப்பந்த) முறைகள் செயல்படுத்தப்படும்.” (1907ல் பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய காலனிப் பகுதிகளின் பிரச்சனைகளைத் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம். அது போலவே அந்த முறைகள் தோல்வியடையும் played out என்பது குறிப்பு).”

          1914 முதல் இன்னும் பல பிரிவுகளிலும் அமைப்பு ரீதியாகத் திரள உழைக்கும் வர்க்கம் முன்னோக்கி நடை போட்டது. முதல் உலகப் போரின்போது 1917ல் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி இந்தியத் தொழிலாளர் இயக்கத்திற்கு பெரும் ஊக்க சக்தியாக விளங்கியது. 

          அகமதாபாத்தில் நெசவுத் தொழிலாளிகள் 1917லும், மாலுமிகள் 1918லும் சங்கம் அமைக்க, 1918 ஏப்ரல் 27ம் நாள் மெட்ராஸ் லேபர் யூனியன் அமைக்கப்பட்டது. பம்பாய் மாகாணத்தில் தபால்காரர்கள் சங்கம், எழுத்தர்கள் சங்கம்; கல்கத்தாவில் துறைமுகத் தொழிலாளர் அஸோசியேஷன், (மாலுமிகளின்) ஆசிய சலூன் பணியாளர்கள் சங்கம், பம்பாய் முதலான பல சங்க அமைப்புகள்1918ல் துவங்கப்பட்டன. 1919ல் கல்கத்தா பத்திரிக்கை தொழிலாளர், கல்கத்தா டிராம்வே தொழிலாளர், கல்கத்தா ஊழியர் அஸோசியேஷன்களும், மெக்கானிகல் ஓர்க்கர்ஸ் யூனியன், பஞ்சாப் பத்திரிக்கையாளர் அஸோசியேஷன் முதலானவை அமைக்கப்பட்டன.  

          1918ல் துவங்கிய பம்பாய் காட்டன் மில்களின் தொழிலாளர் வேலைநிறுத்தம் விரைவில் மற்ற இடங்களுக்கும் பரவி ஜனவரி 1919ல் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். கொடுங்கோன்மையான ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1920ம் ஆண்டின் முதல் பாதியில் நடந்த 200க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்களில் 15 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்று, பத்து மணி வேலை நேரம், மற்றும் கிராக்கிப்படி கோரினர். ஆண்டின் பிற்பகுதியில் நடந்த 97 வேலைநிறுத்தங்களில் 31 மட்டுமே தோல்வியில் முடிந்தன. மற்ற எல்லா போராட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிட்டியது.

          அதே போல 1920ல் இன்னும் பல சங்கங்கள் உருவாகின. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி, 1900 முதலே சங்கம் அமைப்பது அதிகரித்தபோது, இந்தியத் தண்டனைச் சட்டமும் (இன்டியன் பீனல் கோடு) 1913ல் தொழிற்சங்கங்களை அடக்குவதற்காகத் திருத்தப்பட்டது. ஆனால் அது தொழிலாளர்களை மேலும் உறுதிபட வீரம் செறிந்தவர்களாக மாற்றியது. அப்படித்தான், 1914க்குப் பிறகு தளர்வின்றி சங்கம் சேர்ந்த தொழிலாளிகளின் செயல்பாட்டை ஒருவர் விளக்கி புரிந்து கொள்ள முடியும்.

தாய் தொழிற்சங்கம் பிறந்தது!

          மேலே விவரித்த வரலாற்றுப் பின்னணியில்தான் 1920 ஜூலை 16ல் கூட்டப்பட்ட ஒரு கன்வென்ஷன் “பம்பாயில் ஓர் அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்” அமைப்பது என்று முடிவு செய்தது. ஜோசப் பாப்டிஸ்டா தலைமையில் 500 பேர் அடங்கிய வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. பம்பாய் எம்ப்பயர் தியேட்டரில் அமைப்பு மாநாட்டின் முதல் கூட்ட அமர்வு  1920 அக்டோபர் திங்கள் 31ம் நாள் லாலா லஜபதி ராய் அவர்களை ஸ்தாபனத் தலைவராகக் கொண்டு துவங்கியது.64சங்கங்களின் 1,40,854 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 101 பிரதிநிதிகள் –நாட்டின் பல்வேறு அரசியல் சித்தாந்தப் போக்குகள் உடைய தலைவர்கள் முன்பு—கூடினர்; அவர்களில் மோதிலால் நேரு, முகமது அலி ஜின்னா, திருமதி அன்னிபெசன்ட், வி ஜே பட்டேல், B P வாடியா, ஜெ பாப்டிஸ்டா, லாலு பாய் சமல்தாஸ் , ஜமனாதாஸ், துர்க்கா தாஸ், B W வாடியா, ஆர் ஆர் கிரந்திகார் மற்றும் கர்னல் ஜெ சி வெட்ஜ்வுட் பிரித்தானிய தொழிற்சங்கக் காங்கிரஸ் சகோதரப் பிரதிநிதியாகவும் இடம் பெற்றனர். மாநாட்டிற்கு வரமுடியாத மேலும் 43 சங்கங்கள் முழுமையான தார்மிக ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

          பம்பாய் நகரின் வீதிகளில் பத்தாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணியை லாலா லஜபதி ராய் தலைமையேற்று நடத்தினர். லாலா லஜபதி ராய் முழங்கிப் பிரகடனப்படுத்தினார், “தற்போதைக்கு நமது மிகப் பெரிய தேவை அமைப்பாகத் திரளுவது, கிளர்ச்சி செய்வது மற்றும் கற்பிப்பது. நம்முடைய தொழிலாளர்களை நாம் ஒன்று திரட்ட வேண்டும், அவர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டவேண்டும் மற்றும் பொது நலத்தை மேம்படுத்தும் நோக்கிலான வழிமுறைகளில் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்”.

          மேலும் பேசும்போது அவர் குறிப்பிட்டார், “தற்காலம் சர்வதேச அம்சமாக மாறி, உலகம் முழுவதும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒருவரோடு ஒருவரைச் சார்ந்து பிணைத்துள்ளது. ஆசியத் தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டு, சர்வதேச இணைப்பு உடையதாக மாற்றப்படும் வரை விடுதலை என்பது சாத்தியம் இல்லை”.

          அமைப்பின் முதல் தலைவராக லாலா லஜபதி ராய், பொதுச் செயலாளராக வி எம் பவார் அவர்களையும் மாநாடு தேர்ந்தெடுத்தது.  அதன் பிறகு நடந்த மாநாடுகளில் பண்டிட் ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வி வி கிரி, சரோஜினி நாயுடு, சி ஆர் தாஸ் மற்றும் புகழ்பெற்ற பல சுதந்திர இயக்கத் தலைவர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டு ஏஐடியுசி பேரமைப்பு தனது பணிகளில் செயல் வேகம் கூட்டியது.

          ஏஐடியுசி தனது 1921 ஜாரியா இரண்டாவது அமர்விலேயே “பூரண சுயராஜ்யம்” (பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை) கோரிக்கை தீர்மானத்தை நிறைவேற்றியது – அது, சுதந்திரப் போராட்டத்தை நடத்திய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் அத்தகைய தீர்மானத்தை 1929ல் நிறைவேற்றுவதற்கு – எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் தொழிற்சங்கம், ஏஐடியுசி அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியது. 

          போராடும் உற்சாகத்தில் இருந்த தொழிலாளி வர்க்கத்தோடு ஏஐடியுசி தலைமை, தொழிற்சங்க அமைப்பை புதிய உச்சத்திற்கு வழி நடத்தியது. தொழிற்சங்கப் போராட்ட இயக்கங்களால் பல சட்டங்கள் மேம்படுத்தப்பட்டன; தொழிலாளர் நட்ட ஈடு சட்டம் 1923லும்; 1920 முதல் 1925 வரை கடுமையாகத் தொடர்ந்து போராடி ‘தொழிற் சங்க சட்டம், 1926’ம் சாதிக்கப்பட்டன. அதுவரை தலைவர்கள் தொடர்ந்து நடுத்தர வர்க்கம், கல்வி அறிவுடைய பலரின் பரோபகார தயாள குண அணுகுமுறை பால் தொடர்பு கொண்டு இயங்கினர். ஆனால் அதே நேரம் மார்க்சியம் மற்றும் சோஷலிச கொள்கைகளோடு இருந்தவர்களும் சங்கப் பணிகளில் தீவிர ஆர்வம் கொண்டு இயங்கினர். 1922ல் எஸ் ஏ டாங்கே ஆங்கிலத்தில் ‘சோஷலிஸ்ட்’ என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.

          1927ல் முதன் முறையாக ஏஐடியுசி அதிகாரபூர்வமாகத் தனது இணைப்புச் சங்கங்களை மேதினம் கொண்டாடும்படி கேட்டுக் கொண்டது. 1928 முதல் 1931 காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கச் செயல்பாடுகள் அரசியல் ரீதியாகவும் பெரும் எழுச்சி பெற்றது. சோஷலிசக் கொள்கை உடைய தலைவர்கள் செல்வாக்கு பெற்றனர். பெரும்பாலான ஏஐடியுசி மாநாடுகளில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர் அல்லது தோழமை ஆதரவு வாழ்த்துச் செய்திகள் அனுப்பினர். சிகப்பு சர்வதேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சர்வதேசச் சம்மேளனம் பலநேரங்களில் வாழ்த்துகளையும் சில போழ்து பிரதிநிதிகளையும் அனுப்பின. உலகத் தொழிற்சங்க அமைப்பான ஐஎல்ஓ கூட்டங்களில் 1920 முதலே ஏஐடியுசி பிரதிநிதித்துவம் பெற்றது. ஐஎல்ஓ கூட்டங்களில் ஆசியப் பகுதித் தொழிலாளர்களின் பாடுகள், கவலைகளை எடுத்துரைப்பதில் ஏஐடியுசி பிரதிநிதிகள் முக்கிய பங்காற்றினர்.

          1925க்குப் பிறகு இயக்கம் உறுதிபடக் கட்டமைத்தல் வேகம் பெற்றதோடு தொழிற்சங்கச் சட்டம்,1926ம் அமலானது. பின்னர் அரசியல் சக்திகள் முன்னெடுத்த சைமன் குழு எதிர்ப்பில் தொழிற்சங்கங்களும் இணைந்தன. வேலைநிறுத்த நடவடிக்கைகள் அன்றாட நிகழ்வாயிற்று.

          1931முதல் 1938வரையான பெரும் பொருளாதார வீழ்ச்சி, அடக்கு முறைகளையும் பொருளாதாரத் துயரங்களையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தியது; ஆட்சியாளர்கள் மற்றும் முதலாளிகளின் தாக்குதலை எதிர்கொள்ள தொழிற்சங்கங்கள் (வேறுபாடுகள் களைந்து) மேலும் ஒன்றுபட்டு அணி சேர்ந்தது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த 1939 --45 காலம் மிகவும் சிரமமான காலம், தொழிலாளர் வர்க்கத்திற்குச் சோதனைக் காலமும்கூட. தொழிலாளர்கள் தங்கள் சொந்தக் கோரிக்கைகளுக்காகவும், விடுதலை இயக்கத்தின் ஓர் அங்கமாகவும் மட்டுமின்றி, நாஜிப் படைகளால் நாசமாக்கப்பட்ட நாடுகளின் தொழிலாளர்களோடும் தார்மிகத் தோழமை ஆதரவு தந்து செயல்பட வேண்டியிருந்தது.

உலக அமைப்புகளில் ஏஐடியுசி

          உலக தொழிற்சங்கச் சம்மேளனம் WFTU அமைப்பதில் ஏஐடியுசி முக்கிய பங்காற்றியது. அதற்கான தயாரிப்பு சர்வதேச மாநாடு லண்டனில் பிப்ரவரி 1945ல் நடந்தபோது 67 கோடி தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உலகின் பலபகுதிகளிலிருந்து 204 சார்பாளர்களும் பார்வையாளர்களும் பங்கேற்றனர். ஏஐடியுசி பேரியக்கத்தின் பிரதிநிதிகளாக எஸ் ஏ டாங்கே, ஆர் ஏ ஹேத்கிகார் மற்றும் சுதீந்திர பிரமானிக் பங்கேற்றனர். அந்த மாநாடு தொழிலாளர்களின் சாசனத்தை நிறைவேற்றியது. இறுதியாக WFTU அமைப்பு 1945 அக்டோபர் 3ம் நாள் பாரீசில் அமைக்கப்பட்டது.

          1947ல் இந்தியத் துணைக் கண்டம் விடுதலையை நோக்கி நகர்ந்தது. ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து பெற்ற அரசியல் விடுதலையைத் தொழிலாளி வர்க்கம் மகிழ்ந்து கொண்டாடியது. தேசியச் சுதந்திரப் போராட்டத்தில் விடப்பட்ட அறைகூவல் இயக்கங்கள் அனைத்திலும் பெருந்திரள் மக்களைத் திரட்டியதிலும், தொழிலாளர்களுக்கான உரிமைகளை அடையச் செய்ததிலும் ஏஐடியுசி பேரியக்கம் வழிநடத்திய தொழிலாளர் இயக்கம் வகித்த பங்கு இணையில்லாதது. இந்தப் பெரும் பங்கை அரசியலமைப்பு நிர்ணய சபை நன்கு அங்கீகரித்தது; அதன் விளைவே விடுதலை பெற்ற இந்திய தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் தொழிலாளர்களின் அக்கறையும் அவர்களின் கோரிக்கைகளும் தீர்மானங்களும் உரிய முறையில் விவாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. சங்கம் சேர்வதற்கான ஜனநாயக உரிமை, பேச்சுரிமை, வாழ்க்கை ஊதியம், சமமாக நடத்துதல், சமவேலைக்குச் சம ஊதியம், பெண்களுக்கான பேறு கால பலன்கள் முதலிய உரிமைகளும் சலுகைகளும் இப்படி முன்னும் பின்னுமாக எத்தனையோ, சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

          இந்த நெடிய வரலாற்றுப் பின்னணியில் சாதிக்கப்பட்ட இவ்வுரிமைகள்தான் இன்றைய காலகட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. சர்வதேச நிதி மூலதனம் வரலாற்றைத் தலைகீழாகத் திசை திருப்ப விரும்புகிறது. ஆட்சியாளர்கள் இச்சூழ்நிலைக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதும்; 150 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கடும் போராட்டங்களால் நம் கைகளில் வரப்பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க எப்படித் தொழிலாளர் வர்க்கம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு போராட்டக் களத்தில் குதிக்கிறது என்பதும் மிக முக்கியமானது.

                                      (இரண்டாம் பகுதியில் நிகழ்காலப் பயணம் தொடரும்)

--நன்றி : நியூஏஜ் நவ.8 --14

--தமிழில் : நீலகண்டன்,

  கடலூர் 94879 22786

 

No comments:

Post a Comment