Saturday 7 November 2020

மீள் பதிவு 2 : சிபிஐ நடத்திய சர்வதேசிய கருத்தரங்கில் CPI(M) பிரதிநிதி உரை

 


மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டச் சர்வதேசக் கருத்தரங்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்பாக முன்வைக்கப்பட்டது:

அன்புள்ள தோழர்களே!

          துவக்கத்திலேயே, மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம். 20-ம் நூற்றாண்டில் மக்களின் வாழ்வில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்திய நிகழ்வு அக்டோபர் புரட்சி. அதன் பெரும்பான்மை அனுபவங்கள், படிப்பினைகள், கோட்பாடுகள் இன்றைய நிகழ்கால உலகிற்கும், இந்த நூற்றாண்டிற்கும் மிகவும் பொருந்துவதும், மதிப்புடையதும் ஆகும்.  இந்தக் கருத்தரங்கின் தலைப்பின் கீழ் எங்கள் கட்சியினுடைய கருத்துகளைப் பகிர்வதற்கு வாய்ப்பளித்த சிபிஐ தோழர்களுக்கு மீண்டும் நன்றி.  இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் பிற நாடுகளின் சகோதர கட்சிகளின் சார்பாளர்களை வரவேற்பதிலும், வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலும் மகிழ்கிறோம்.  சுரண்டலற்ற ஒரு உலகை நிர்மாணிப்பதில் முதன் முறையாக வெற்றியடைந்த மாபெரும் அக்டோபர் புரட்சி நமக்களித்த இலக்கை அடைய, நம்முடைய பணிகளை நிறைவேற்ற இந்த அனுபவ / சிந்தனைப் பகிர்வு உதவும் என நம்புகிறோம்.  

          கருத்தரங்கில் நாங்கள் முன்வைக்கும் இந்த அறிக்கையின் முன்னுரையாக, இந்த அறிக்கை எங்களது கட்சிக்குள், கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் விரிவாக விவாதித்து எடுக்கப்பட்டக் கொள்கை சார்ந்து அமைகிறது என்பதைத் தெரிவிக்கிறோம். ஜனவரி 1992–ல், எடுக்கப்பட்ட ‘சில சித்தாந்தப் பிரச்சனைகளின் (ideology) மீது கட்சியின் நிலைபாடு’ பற்றி மேலும் கூட்டாக விவாதித்து (2012 ஏப்ரல் 4 முதல் 9 வரை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த ) 20-வது கட்சி காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டச் ”சித்தாந்தப் பிரச்சனைகளின் மீதான தீர்மான”தை அடியொற்றி அமைகிறது.

          1930 களின் பெரும் பொருளாதார மந்தநிலை வீழ்ச்சி காலத்தைவிட, தற்போது முதலாளித்துவத்திற்குள் எழுந்துள்ள உலக நெருக்கடியின் பல்வேறு வெளிப்பாடுகள், முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அதன் கடும் ஒடுக்கும் தன்மைக்கும் சுரண்டும் குணத்திற்கும் சாட்சியமாக உள்ளன.  இந்த முதலாளித்துவ நெருக்கடி, உலக மக்கள் திரளின் பெரும்பகுதியினரைக் கடும் துன்பத்திற்கு உள்ளாக்குகிறது. தனது நெருக்கடியை மூடி மறைக்க மனிதகுலத்தின் மீது தாக்குதல்களை அதிகரிக்கிறது.  உலக மேலாண்மையை அடைந்துவிட வேண்டும் என்பது ஏகாதிபத்தியத்தின் தணியாத தாகம். அதுவே மனிதகுலம் முழுமையான விடுதலை அடைவதையும் முன்னேறுவதையும் மறுக்கும் மூலாதாரமாகும்.

          சோவியத் யூனியன் சிதறிய பிறகு, 1992 ல் எங்களது 14—வது கட்சி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி 25 ஆண்டுகள் கடந்து விட்டன.  இந்நிலையில், சர்வதேச பரஸ்பர வர்க்க நிலமை ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமாக மாறி உள்ளது. இது உலக அளவில் அரசியல், பொருளாதார, சமூக நிலைகளிலும் ஆழமான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாறுதல்களோடு ஏகாதிபத்தியத்தின் சித்தாந்தத் தாக்குதலும் மூர்க்கமாக சேர்ந்தே தொடுக்கப்பட்டு வருகிறது; அது, மார்க்ஸியமும் சோஷலிசமும் மறைந்து போன / மாண்டுபோன ஒன்று என்பதான ஏகாதிபத்தியத்தின் கணிப்பே ஆகும். அது மட்டுமா, முதலாளித்துவம்தான் இனி, சாஸ்வதமானது, நிலையானது; அதுவே மனிதகுல சமூகப் பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையும் ஆகுமென்றும் ஏகாதிபத்தியவாதிகள் பிதற்றித் திரிகின்றனர்.

          இது எதிர்பார்க்கப்பட்டதே. எல்லா முனைகளிலும் கூர்மை யடைந்துள்ள இந்தத் தாக்குதலோடு ஏகாதிபத்தியத்தின் இன்றைய உலகமயமும் சேர்ந்து கொண்டுள்ளது. அது உலக நாடுகளையெல்லாம் தனது சூழல் மையத்தை நோக்கி இழுத்துக் கொண்டுள்ளது.

          இந்த நிலைமை நம் மீது ஒரு மாபெரும் பொறுப்பைச் சுமத்தி உள்ளது.  முழுமையான மனித குல விடுதலைக்கும், நாடுகளின் சுதந்திரத்திற்கும் போராடும் நாம், மார்க்ஸிய -- லெனினிய சித்தாந்த அடிப்படையில் உலகின் இன்றைய மாறுதல்களை ஆராய்ந்து, அவை உலகின் மீது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியுள்ளன என்பதையும் ஆராய வேண்டும்.  இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால், உலகச் சூழ்நிலை, அதாவது பரஸ்பர வர்க்க நிலைமை; மற்றும், நமது நாட்டில் அது எப்படி நமது போராட்டங்களை முன்னெடுப்பதில், புரட்சிகர நோக்கங்களைத் திட்டமிடுவதில் தாக்கத்தை உருவாக்க முடியும் என்பனவெல்லாம் ஆராயப்பட வேண்டும்.

          உள்நாடு மற்றும் உலகநாடுகளில் மாறி வரும் அனைத்துப் பிரச்சனைகளையும் வகுத்தும் தொகுத்தும் இணைத்துமே கட்சி ஆராய்ந்து தனது சிந்தாந்த நிலைபாடுகளை எடுத்துள்ளது. இதன் மூலம் சிபிஐ(எம்) தொடர்ந்து சிந்தாந்தப் போராட்டங்களை நடத்தி மார்க்ஸிய –லெனினியத்தின் சாரமான புரட்சிகர உள்ளடக்கத்தையும், சர்வதேசியப் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தையும் உயர்த்திப் பிடித்து வந்துள்ளது. சர்வதேசிய கம்யூனிச இயக்கங்களின் பேரமைப்புக்களான சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுக்கும் இடையேயான சித்தாந்தக் கருத்து மோதல்களிலுமே இத்தகைய வழிமுறைகளிலேயே முடிவெடுத்தோம். இந்தச் சிந்தாந்தப் போராட்டங்களே எங்களது கட்சியை எஃகுபோல வலுவாக்கி இந்தியாவின் தேசிய அரசியலில் அழுத்தமான செல்வாக்கைச் செலுத்த முடிந்தது.

          கட்சியின் யுக்திகள் சார்ந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில், 1968 பர்த்துவான் ப்ளீனம் முதலே, இத்தகைய சிந்தாந்தப் போராட்டங்களில் ஈடுபடுவது தேவையாக இருந்தது. சோவியத் சிதறல், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசம் பின்னடைந்ததைத் தொடர்ந்த 14 வது கட்சிக் காங்கிரஸை அடுத்த 2000-களில், உலக மாறுதல்களுக்கு ஏற்ப, எங்கள் ’கட்சித் திட்டம்’ நிகழ்காலத்திற்குப் பொருத்தமாக மேம்படுத்தப்பட்டது. அடுத்து நடந்த கட்சி காங்கிரஸில், சோவியத் சிதறல் மற்றும் ஏகாதிபத்திய உலகமயத்தின் எழுச்சியின் பின்னணியில், இதை மேலும் செழுமைப்படுத்தினோம். 

             ஏகாதிபத்திய உலகமய எழுச்சியின் விளைவாய் மனிதகுலத்தின் துன்பதுயரங்கள் அதிகரித்தது மட்டுமல்ல, அதற்கு எதிர் விளைவாகப் பொதுமக்களின் எதிர்த்துப் போராடும் இயக்கங்களும் அதிகரித்தன.  இன்றைய உலக சூழ்நிலையும், குறிப்பாக லத்தீன் அமெரிக்க நிகழ்வுகளும் இதனைத் தெளிவாகக் காட்டும்.  இந்த எழுச்சி உலகின் பிறநாடுகளிலும் வளர்ந்து வருகின்றது; ஐரோப்பாவில், மக்கள் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஏகாதிபத்தியத்தின் புதிய தாராளமயம், உலகமயத்திற்கு எதிரான இயக்கங்கள், அமெரிக்காவில் ’வால் ஸ்டிட்ரிட்டை கைப்பற்றுவோம்’ இயக்கம் போன்றவை, -- முதலாளித்துவ நெருக்கடியின் / பொருளாதாரப் பின்னடைவின் பின்புலத்தில் – மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றன. இந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களே எதிர்காலத்தில் புரட்சிகர போராட்டங்களின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கின்றன.

          இந்தப் போராட்டங்களை முதலீடுகளின் ஆட்சிக்கு எதிரான ஒரு வலுவான தாக்குதலாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, இன்றைய வர்க்கங்களின் பரஸ்பர வலிமைகளின் பின்னணியில், நாம் தடைகளைத் தாண்டித்தான் மேற்கொள்ள வேண்டும்.   அந்த வர்க்கப் போர் கூர்மையடைய வேண்டுமானால் அது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ்தான் நடக்க வேண்டும். புரட்சிகரப் போராட்டங்களின் உள்ளீடு, மனிதகுல அனைத்து விடுதலைக்காகப் போராடும் சுரண்டப்படும் மக்கள்திரளின் வர்க்க ஒற்றுமையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த வர்க்க ஒற்றுமை மேலும் ஒன்று திரட்டப்பட்டு மேலும் மேலும் வலிமையாக வேண்டும்.

          மாற்றங்கள் மிக வேகமாக தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.  அந்த மாற்றங்களினால் சவால்கள் மற்றும் சித்தாந்த பிரச்சனைகள் எழுகின்றன.  அவற்றின் மீது விஞ்ஞான பூர்வ மார்க்ஸிய –லெனினிய அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாம் புரட்சிகரமான சபதம் செய்வோம்.  அது, மனிதகுலத்தை விடுவிக்க வர்க்கப் போராட்டத்தை வலிமையாக்குவது என்ற ஒற்றை உயர் இலக்கை நோக்கமாகக் கொண்ட சபதமேயாகும்.

          சோவியத் சிதறல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசத்தின் வீழ்ச்சி, ஒருபோதும் மார்க்ஸிய –லெனினிய சிந்தாந்தத்தையோ அல்லது சோஷலிசத்தின் மேன்மைகளையோ, உண்மை இல்லை என மறுத்தது ஆகாது; மேலும், இந்தப் பின்னடைவுகள், உலகம் இதுவரை ஒரு போதும் கண்டிராத மனித வாழ்க்கையின் உயர்வுகளை, மனித நாகரீகத்தின் உச்சத்தைச் சோஷலிசம் மெய்ம்மையாக நிர்மாணித்ததை அழித்து விட்டதும் ஆகாது” – இது எங்கள் 14—வது கட்சி காங்கிரஸ் ’சில சித்தாந்தப் பிரச்னைகள்’ மீது நிறைவேற்றியத் தீர்மானம் ஆகும்.

                   இந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் மனிதகுலத்தை இரண்டு காட்டுமிராண்டி உலக யுத்தத்தில் மூழ்கடித்துப் பல லட்சம் மனித உயிர்களைக் காவு வாங்கியது.  அது, அணு ஆயுதங்களைத் தயாரித்தது; அவற்றைப் பயன்படுத்தியது; கடும் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத போட்டியில் உலகைத் தள்ளியது.    அதன் நோக்கம், மனிதத்தன்மையற்ற தனது மேலாண்மையைப் பறைசாற்றுவதே. மனிதகுலம் சோஷலிசத்தை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க பலப்பல சிறு போர்களை மூளச்செய்தது; சுதந்திரநாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் மூக்கை நழைத்தது; அந்த நாடுகளில் ராணுவ எதிர்ப்புரட்சிகளை உண்டாக்கியது; தங்களின் சொந்த நலன்களுக்கு உதவும் வகையில் பிற்போக்கு பழைமை வாத, ராணுவ ஆட்சிகளைத் திணித்தது.  அதன் காட்டுமிராண்டி வடிவம் பாசிச சர்வாதிகார ஆட்சிகள் மூலம் வெளிப்பட்டது.

          சோஷலிசப் புரட்சிகளும் நாட்டு விடுதலைப் போராட்டங்களும் மனிதகுல நாகரீகத்தில் மேன்மை பொருந்திய உள்ளடக்கத்தைப் பதித்தன; அது, தேசிய ஒடுக்குமுறைககளும் சுரண்டலுமற்ற ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கையைப் பல நாடுகளின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்தியது.  இதன் விளைவு எதிர்கால மனிதகுல முன்னேற்றத்தின் தேசிய, சமூக விடுதலைப் போராட்டங்களின் வழிகாட்டும் வரைபடமாகத் தொடர்கிறது. ஆனால் இதன் செயல் முறை மிக நீண்டதாக, எதிர்பாராதத் திருப்பங்களும் வளைவுகளும் சிக்கல்களும் உடைய பாதையாக இருக்கக் கூடும்.  ஆனால் புதிய வரலாறு படைத்த சகாப்தத்தின் இந்த அடிப்படை திசைவழி, முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறுவதை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும்.

          இருபதாம் நூற்றாண்டில் புதிய பாதை சமைத்தச் சோஷலிசத்தின் இந்த முன்னேற்றம், புரட்சிகள் நடந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் (சிலவற்றைத் தவிர்த்து) முதலாளித்துவ முறையிலான முன்னேற்றத்தில் பின்தங்கிய நிலைலிருந்த நாடுகளிலேயே நடந்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சோஷலிசப் புரட்சி உலக சந்தையின் மூன்றில் ஒரு பங்கில் முதலாளித்துவ சந்தை முறையை நீக்கியது.  ஆனாலும், அதுவரை உலக முதலாளித்துவம் உற்பத்திச் சக்திகளில் அடைந்த வளர்ச்சியை, இது போதுமான அளவில் பாதிக்கவும் இல்லை; விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் உற்பத்திச் சக்திகளை மேலும் மேம்படுத்தும் முதலாளித்துவத்தின் சக்தியைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. இதனால் 20-ம் நூற்றாண்டு சோஷலிசப் புரட்சியின் காரணமாக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டப் பின்னடைவுகளை முதலாளித்துவம் வெற்றிகரமாகத் தாண்டவும் முடிந்தது; உற்பத்திச் சக்திகளை வளர்ச்சிபெறச் செய்து, உலக முதலாளித்துவச் சந்தையை மேலும் விரிவாக்கவும் சாத்தியமாகியது. முதலாளித்துவச் சந்தையின் இந்த விரிவாக்கம், அதன் புதிய காலணி--யாதிக்கத்தின் மூலமாகவே சாதிக்கப்பட்டது.

          இதன் மறுபக்கத்தில், குறுகிய காலத்தில் சோஷலிசம் குணாம்ச ரீதியாக அடைந்த உயர்ந்த முன்னேற்றங்கள், குறிப்பாகச் சர்வதேச அளவில் ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பகைப்புலப் பின்ணணியில் சாதிக்கப்பட்டவை; இந்தச் சாதனைகள் ஒருபோதும் பின்னோக்கி மாற்ற முடியாதன என நம்பப்பட்டன.  லெனினிய எச்சரிக்கைவீழ்த்தப்பட்ட பூர்ஷ்வாகள் மீண்டும் திரும்பத் தாக்குவார்கள், அதுவும் நூறு மடங்கு வலிமையுடன் தாக்குவார்கள் -- என்ற எச்சரிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டது. 

          அப்படி உலக முதலாளித்துவத்தின் சக்தியைக் குறைத்து மதிப்பீடு செய்ததும், சோஷலிசத்தின் வலிமையைக் கூடுதலாக மதிப்பீடு செய்ததும் உலக கம்யூனிச இயக்க மதிப்பீட்டில் வெளிப்பட்டது. 1960-ம் ஆண்டு 81 கம்யூனிச நாடுகள் பங்கேற்ற மாநாட்டின் ஆவணத்தில் அப்போதைய உலக நிலைமைகளைப் பரிசீலனை செய்தபோது, உலக முதலாளித்துவம் தனது மூன்றாவது பெரும் பொருளாதார மந்தநிலை வீழ்ச்சியின் போது வீழும் எனக் கூறியது.  எங்களது (ஜனவரி, 1992) 14வது கட்சிக் காங்கிரஸ், (81 கம்யூனிச நாடுகளின்) இந்த மதிப்பீட்டை — உலக சோஷலிசத்தின் முன்னேற்றத்தைத் தாமதிக்கச் செய்த இந்த மதிப்பீட்டை-–மறுபரீசிலனைசெய்து, மிக மோசமானத் தவறு எனத் தீர்மானித்தது.

          மேலும், சோஷலிச முன்னேற்றப் பாதை என்பது நேர்கோட்டு (linear Progression) வளர்ச்சிப் பாதையென உய்த்துணரப்பட்டது. ஒருமுறை சோஷலிசம் வெற்றி அடைந்த பிறகு, எதிர்கால வளர்ச்சி மாற்றம், எந்தவிதமான தடைகளும் இன்றி, வர்க்கமில்லாத கம்யூனிசச் சமூகமாக மாறும் நேர்கோட்டில் பயணிக்கும் எனத் தவறுதலாகக் கருதப்பட்டது. சோஷலிசம் என்பது கம்யூனிசத்திற்கு முந்தைய நிலை, அத்தகைய மாற்றத்தை நோக்கிய இடைக்காலம் என்பதாக அனுபவமும் உறுதிப்படுத்தியது; அல்லது மார்க்ஸ் கூறியது போல, சோஷலிசம் என்பது கம்யூனிசத்தின் முதல் நிலை; முதலாளித்துவ முறைமையின் சுரண்டல் நீடிக்கின்ற வர்க்கங்களாகப் பிளவுபட்ட நிலைக்கும், வர்க்கங்கள் அற்ற கம்யூனிச முறைமைக்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஆகும். மார்க்ஸின் இந்த வரையறையின்படி, மாற்றம் நிகழும் இந்த இடைப்பட்ட காலம், வர்க்க மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்ட காலம் ஆகாது. மாறாக, வர்க்க மோதல்கள் உச்சமடையும் காலமாகும்; இந்த மோதல்கள் உலக முதலாளித்துவம் தான் இழந்த பிரதேசங்களை மீட்பதற்கு எடுக்கும் முயற்சிகளின் உதவியோடு நிகழும்.  எனவே தான், இந்த இடைக் காலம் என்பது, எதிர்பாராதத் திருப்பங்களும் வளைவுகளும் உடையதாக மிக நீண்டதாகவே அமையும். இது குறிப்பாக, முதலாளித்துவ ரீதியாக வளர்ச்சி குன்றியிருந்த நிலையில் சோஷலிசப் புரட்சி நடந்த நாடுகளைப் பொறுத்து அவ்வாறே நிகழும். 

          எவ்வாறாயினும், மாற்றத்திற்கான இடைக்காலம் என்பது உடனடியான முதலாளித்துவ வீழ்ச்சியாக, உலகளாவிய சோஷலிசத்தின் வெற்றியாக எளிமையாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பது திருத்தப்பட வேண்டும். இதன் பொருள் யாதெனின், வர்க்கங்களால் பிளவுபட்டச் சமூகம், வர்க்கமற்ற சமூகம் நோக்கி மாறும் இடைக்காலத்தில் சோஷலிசமும், முதலாளித்துவமும் உலகத்தில் ஒரே நேரத்தில், நீண்ட காலத்திற்கு இருக்கவே செய்யும் என்பதுதான்.  முதலாளித்துவச் சுரண்டல் முறையைப் பாதுகாக்க எதிர் புரட்சி சக்திகளும், மானுடத்தை விடுதலை செய்ய விரும்பும் புரட்சிகர சக்திகளும் மோதுகின்ற காலமாகவே இந்த நீண்ட இடைக்காலம் இருக்கும். இந்த மோதல்கள் உலக அளவிலும், சோஷலிச நாடுகளுக்குள்ளும் இடைவிடாது தொடர்ச்சியாக நடைபெறும்.

          பாட்டாளி சர்வாதிகாரத்தின் வடிவங்கள் என்பது நிலையானதோ மாறாததோ இல்லை.  சோஷலிசச் சமூகம் தன் வளர்ச்சிப் போக்கில் இந்த வடிவங்களும் பல காலகட்டங்களில் பலவாறாக மாற்றம் அடையும்.

          ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குச் சமூக மாற்றம் என்பது, தேசிய, சர்வதேசிய சூழல்களைப் பொருத்தும், பரஸ்பர வர்க்க சக்திகளின் வலிமை மற்றும் அவற்றைச் சரியாக மதிப்பிடுவதைப் பொருத்தும் நிகழும்.  பிறந்து விட்ட சோஷலிசக் குழந்தையை அழிப்பதற்கு ஏகாதிபத்திய தலையீடும் அதன் விளைவாய் உள்நாட்டு யுத்தங்களும் மூளும் போது, பாட்டாளிகளின் அரசு எதிர் புரட்சியையும் சுரண்டும் சக்திகளையும் முற்றாக அழித்தொழிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிவிடுகிறது.  இதற்கு மையப்படுத்தப்பட்ட அரசு என்கின்ற கருவி தேவையாவது மட்டுமல்ல, அந்த அரசின் மூலமாகவே திட்டமிட்ட பொருளாதாரத்தையும் செயல்படுத்தியாக வேண்டும்.  இந்தக் கட்டம் முடிந்த பிறகு, சோஷலிச அரசு வலிமையாகக் கால் ஊன்றி வர்க்க சக்திகள் சாதகமாக மாறிய பிறகுதான், ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதும், பிற முன்முயற்சிகளைச் செயல்படுத்திப் பார்க்கவும் முடியும்.  துரதிருஷ்டவசமாக, எதார்த்த நிலைமைகளை மதிப்பிடுவதில் தவறுவோமானால், முன்பு குறிப்பிட்ட புதிய முயற்சிகளைத் தளநிலைமை சாதகமாகக் தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே (அடுத்த கட்டத்தில் அமல்படுத்த வேண்டியதை) முன்கூட்டியே அமல்படுத்தி, மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.  சோஷலிச ஜனநாகத்தை விரிவுபடுத்தி அதன் ஆகப்பெரும் பலன்களைப் பெறுவதற்கு மாறாக, தோல்வியுறும்; மக்களின் பங்கேற்பு உறுதிப்படுவதற்கு மாறாக சோஷலிசத்தின் மாண்பு சீர்குலைக்கப்பட்டு, அதிகாரத்துவம் பெருகும், சோஷலிச சட்டமுறைமை மீறப்படும், தனிநபர் சுதந்திரமும் உரிமையும் பறிபோகும்.  பாட்டாளி சர்வாதிகாரத்தின் வடிவங்கள் அடுத்தடுத்த உயர்நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதான இயக்கம் என்பது சோஷலிச ஜனநாயகத்தை முற்போக்காக செழுமைப்படுத்துவதும், மேன்மையுறச் செய்வதுமே ஆகும்.

          இந்தத் தொடர்ச்சியான வடிவ மாறுதல்கள் எல்லா சோஷலிச நாடுகளிலும் ஒன்றாய் இருக்க முடியாது, அப்படி இருக்கத் தேவையும் இல்லை.  ஒரு சோஷலிச நாட்டின் ஒரு குறிப்பிட்ட வடிவிலான பாட்டாளி சர்வாதிகாரம் அந்த நாட்டின் சமூக, பொருளாதார, சரித்திர வரலாற்று பின்னணிக்கு ஏற்றாற் போலவே அமையும்.  லெனின், தனது அரசும் புரட்சியும் நூலில் தெளிவாகவே குறிப்பிடுகின்றார்:”பூர்ஷ்வா அரசுகளின் வடிவங்கள் பல்வேறாக இருக்கலாம்; ஆனால் சாராம்சத்தில் அவைகளின் மைய இழை பூர்ஷ்வாக்களின் சர்வாதிகாரமாகவே இருக்கும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலத்தில் ஏற்படும் அரசுகள் எண்ணிறந்த வடிவங்களில் இருக்கக் கூடும், ஆனால் சர்வ நிச்சயமாக அதன் மைய சாராம்சம் பாட்டாளிகளின் சர்வாதிகாரமாகவே இருக்கும்.  ( அடிக்கோடு இட்டது கட்டுரையாளர்)”

           மாற்றம் நிகழும் இடைக்காலத்தின் இந்தப் போராட்டத்தில் உலக சோஷலிசச் சக்திகளின் வெற்றி அல்லது தோல்வி என்பது, சோஷலிசத்தைக் கட்டுவதில் நாம் அடையும் வெற்றியையும், வர்க்க சக்திகளின் ஒப்பீட்டு வலிமையையும் பொறுத்திருக்கிறது.  மேலும் மதிப்பிடும்போது, நமது பலம், பலவீனம்; எதிர் சக்திகளின் பலம், பலவீனத்தைச் சரியாக மதிப்பிடுவதில் உள்ளது.  நமது தோல்விகளை, வளர்ச்சியின் போதாமையை, சோஷலிச முறைமையின் பலவீனத்தை மறைப்பதாலும்; எதிரியான முதலாளித்துவத்தின் வெற்றியை, முன்னேற்றத்தை மறுப்பதாலும், நமது வலிமையை உண்மைக்கு மாறாக, உயர் மதிப்பிடுவதிலும், எதிரியான ஏகாதிபத்தியத்தின் வலிமையைக் குறைத்துத் தவறாக மதிப்பிடுவதிலும் போய் முடியும், விளைவும் மோசமாகவே இருக்கும்.

          நடைமுறையில் சோஷலிசத்தின் கீழ் இயங்கும் அரசின் வர்க்க குணாம்சத்தில் ஏற்படும் சீர்குலைவுகள் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். சோஷலிச ஜனநாயகத்தை வலிமை உடையதாக்குதலிலும், அர்த்தமுள்ள ஆழமுடையதாக்குதலிலும் சீர்குலைவு; பொருளாதார நிர்வாகத்தில் பொருத்தமான காலத்தில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதில் திறமையின்மை; புரட்சிகர நன்நடத்தை ஒழுகலாற்றுத் தரங்களில் ஏற்படும் அரிப்பு, சிந்தாந்த நடைமுறையில் நிகழும் திரிபுகள், விலகல்கள்தான் மக்களைக் கட்சி அமைப்புகளிடமிருந்தும், அரசிடமி-- ருந்தும் வேற்றுமைப்படுத்தித் தள்ளி விலகியிருக்கச் செய்யும். அதன் தொடர்ச்சியாய், உள்நாட்டு, வெளிநாட்டு எதிர் புரட்சி சக்திகளை, சோஷலிசத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கத் தாக்குதல் தொடுக்க, நாமே அனுமதி கொடுத்ததும் ஆகும்.

             சோவியத் சோஷலிசக் குடியரசு ஒன்றியங்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சோஷலிச அனுபவங்களிலிருந்து மதிப்புமிக்கப் பாடங்களை நாம் பெறுவோம். ஆனாலும்,  21--ம் நூற்றாண்டில் சோஷலிசத்தை நோக்கிய மாற்றம் என்பது 20—ம் நூற்றாண்டு அனுபவத்தின் மறுபதிப்பாக நிச்சயம் இருக்க முடியாது.

          இருபதாம் நூற்றாண்டு சோஷலிச வெளிச்சத்தால் ஊக்கம் பெற்ற உலகளாவிய மக்கள் போராட்டங்களின் விளைவாய் ஏற்பட்ட அழிக்க முடியாத பயன்களில் ஒன்று, ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டதும், (பெண்களுக்கான வாக்குரிமை போல) குடியுரிமைகள் மேம்பட்டதுமாகும். உழைக்கும் பாட்டாளிகள் அதுவரை கேட்டறியாத சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக நலஉதவித் திட்டங்கள், எது ஒன்றும், முதலாளிகளின் கருணையினால் விளைந்த பயன் இல்லை; மாறாக, அவை இன்று உலகளாவி இயல்பான நடைமுறையாகி உள்ளதற்கு மக்களின் போராட்டங்களே காரணமாகும்.

          21-ம் நூற்றாண்டின் மாற்றத்தை நோக்கிய இந்தச் சகாப்தம், வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் நிச்சயம் தவிர்க்க முடியாதபடி மிக நீண்ட போராட்டமாகவே இருக்கும்.  இந்த வரலாற்றுப் போக்கை விரைவுபடுத்தும் கடமை கம்யூனிஸ்ட்களிடம், உழைக்கும் வர்க்கத்திடம், அனைத்து நாடுகளைச் சேர்ந்த முற்போக்கு மக்களிடம் உள்ளது. நாடுகள் வித்தியாசமின்றி இந்தப் போராட்டத்தைத் தீவிரமாக்குவோம்.  தவிர்க்க முடியாத நமது வெற்றியை / நமது முன்னோக்கிய பயணத்தை ஏகாதிபத்தியம் தொடர்ந்து தடுத்து நிறுத்தி, மேலும் பின்னுக்குத் தள்ளவே எல்லா முயற்சிகளையும் நிச்சயம் செய்யும்.

          21 ம் நூற்றாண்டின் இந்தப் போராட்டம், மனிதனை மனிதன் -- ஒரு நாட்டை இன்னொரு நாடு -- சுரண்டும் முறையிலிருந்து விடுவிக்கும் போராட்டமாகும். இது மக்களின் ஜனநாயக, குடியுரிமைகளை மேலும் வலிமையாக்குவதன் மூலமே சாத்தியமாகும். முதலாளித்துவத்தை விட சகலவிதத்திலும் மேம்பட்ட ஒரு முறையை நிர்மாணிப்பதன் மூலம், உற்பத்தியில் / உற்பத்திச் சக்திகளின் உயர் தரத்தை / இலக்கை எட்டுவதிலும், உயர் வாழ்க்கைத் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இவையெல்லாம் சோஷலிசத்தின் உன்னதக் கொள்கையான,    ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் திறமைக்கேற்ப உழைத்தல்”, ”உழைப்புக்கேற்ற  ஊதியம் பெறுதல் என்பதிலிருந்து கம்யூனிச சமூகத்தின் ஆகச் சிறந்த சாரமான ”ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்பப் பெறுதல்” என்பதை நோக்கி பயணிக்கும். இந்த உயர்ந்த லட்சியச் சமூகத்தை நிர்மாணித்தல் என்பது அரசியல், சமூக, கலாச்சாரம் முதலிய சகல தளங்களிலும் மேலும் மேலும் பெருந்திரளான பெரும்பான்மை மக்கட்திரள் பங்கேற்பதன் மூலமே சாத்தியமாகும்.

i) சோஷலிசத்தின் கீழ் ஜனநாயகம், ii).சோஷலிசத்தில் சொத்துரிமையின் வடிவங்கள், iii) திட்டமிடுதல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தின் உறவு போன்றவை குறித்து எங்களது 14 வது கட்சி காங்கிரஸில் நடந்த விவாதங்களின் புரிதலின் அடிப்படையில் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட”கட்சி திட்ட”த்தில் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கொள்கை புரிதலே எங்களைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியத்தின் இன்றைய காலகட்டத்தில் நிகழும் மாற்றங்கள் உலகத்தின் அடிப்படை சமூக முரண்பாடுகளை வேவ்வேறு பகுதிகளில் வேவ்வேறாகக் கூர்மையடையச் செய்து வருகிறது. முதலாளித்துவத்தின் கீழ் உழைக்கும் வர்க்கத்திற்கும் பெரும் முதலீட்டிற்கும் இடையேயான பிரதானமான மோதல், இன்றைய முதலாளித்துவப் பொருளாதார மந்தநிலை மற்றும் நெருக்கடியை மேலும் கடுமையாக்கியுள்ளது. இதற்கு எதிராக தனது மேலாண்மையை நிலைநிறுத்திக்கொள்ள முதலாளித்துவம் பல முயற்சிகளை எடுக்கிறது; ஒரு புறம், வளரும் நாடுகளின் ஆட்சியாளர்களை தங்கள் பொறுப்பின் கீழ் திரட்டுகிறது; மறுபுறமோ, ஏகாதிபத்தியத்திற்கும் வளரும் நாடுகளின் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயும் பல வடிவங்களில், பல பகுதிகளில் முரண்பாடுகள் வெளிப்படாமல் இல்லை.  ஆனால் லாபத்தை உச்சபட்சமாக அதிகரிக்க, உலகளாவிய சுரண்டலைக் கடுமையாக்க-- வேண்டி அவை அடக்கி வாசித்து மறைக்கப்படுகின்றன. மாற்றத்தின் நிகழ்கால மையமான--முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையேதான் நீடிக்கிறது. இந்த மையமான முரண்பாட்டை இடம்பெயரச் செய்யாமலேயே, இந்த முரண்பாடுகளில் எந்த ஒன்றும் உலக வளர்ச்சிப் போக்கில், குறிப்பிட்டக் காலச்சூழலில், முன்னே முன்னணிக்கு வந்துவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது. 

இருக்கின்ற பல முரண்பாடுகளில், மேலே சொல்லப்பட்ட நான்கையும்தான், உலகின் பெரும் சமூக முரண்பாடுகளாகச் சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரித்துள்ளது.  அவையே இன்றைய காலத்தில் நிகழ்ந்து வரும் மாற்றத்தை உந்தித் தள்ளும், விரைவுபடுத்தும் முக்கியமானவையாகவும் இருக்கப் போகின்றன.  சமீபகாலங்களில், முதலாளித்துவச் சமூக உற்பத்தியின் குணாம்சத்திற்கும், செல்வாதாரத்தைப் பங்குபோட்டுக் கொள்வதில் தனிநபர் குணாம்சத்திற்கும் இடையே உள்ள அடிப்படை முரண்பாடு, தரத்தில் தாழ்ந்து மிக இழிவான முறையில், உலக அளவில் எப்படியும் ஆக அதிகமான லாபத்தைச் சுருட்டி விடுவதெனத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஏகாதிபத்தியத்தின் இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில், இது (அதிகப்படியான லாபம்) மட்டுமே முக்கியம் எனத் தனித்து வலியுறுத்தி அதன் செயல்பாடுகள் அமைகின்றன. இந்த முரண்பாடு கட்டுப்பாடற்று அளவுக்கு மீறி சென்று மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது. அதன் லாபவேட்டை பருவகால மாற்றங்களைக் கடுமையாக பாதித்து / இயற்கைச் சமநிலையைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய அபாயங்களை ஏற்படுத்தி மனித குலத்தின் எதிர்கால இருத்தலையே கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தச் செயல்கள் ஏகாதிபத்தி-- யத்திற்கும் வளரும் நாடுகளுக்கிடையேயும் மிகப் பெரிய முரண்பாடாக வளர்ந்து நிற்கிறது. அதன் விளைவாய், (முதலாளித்துவ நவீன ஆலை உற்பத்தி முறைகளின் பாதிப்பான) உலக பருவகால மாற்றங்களைத் தடுத்து நிறுத்திப் பாதுகாக்கும் பெரும் பொறுப்புகளை வளரும் நாடுகளின் மீது திணிக்கிறது. பூமி வெப்பமயமாதல் மற்றும் பசுமைக் குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான பெரும் செலவுப் பொறுப்பை வளரும் நாடுகளின் தலைகளின் மீது சுமத்துவதற்கு ஏகாதிபத்தியம் முயல்கிறது. சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேசிய உலக மாநாடுகளில் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் இது பிரதிபலிக்கிறது. அம்மாநாடுகளில் முன்பு நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலிருந்து தொழிற் வளர்ச்சி பெற்ற நாடுகள் பின்வாங்குகின்றன. முன்பு இந்தப் பொறுப்புகளைத் தங்கள் உற்பத்திக்கு ஏற்றாற்போல (இயற்கைச் சமநிலையைத் தாங்கள் பாதித்த அளவு) விகிதாசாரத்தில் பொதுவாக ஏற்கிறோம் என்றார்கள்.  ஆனால் தற்போது லாபத்தை அதிகப்படுத்துவதற்காக, இயற்கைச் சுற்றுச்சூழலைக் கொள்ளையடிப்பதைத் தொடர்கிறார்கள்.

தொழில் முன்னேற்ற நாடுகள் இதற்கு முன்பும் பின்பும் தொடரும் லாப வேட்டைக்காக இயற்கைச் செல்வங்களைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப, இயற்கைச் சீரழிவைச் சரிசெய்யும் பொறுப்பையும் கூடுதலாக ஏற்க வேண்டும். (நவீன தொழிற்சாலைகள் பெருக்கம் உட்பட பல காரணங்களால் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்றவை வளி மண்டலத்தில், மனிதகுலத்தைப் பாதிக்கும் அளவு சேர்ந்து வருகிறது.  இது பருவநிலை மாற்றங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.  மனித உயிர்வாழ்க்கைக்குப் பாதகமான இதனை ஆராய்ந்து தடுத்து நிறுத்த ஐ.நா. சபை, ”பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு’ [ Intergovernmental Panel on Climate Change சுருக்கமாக, IPCC]  ஒன்றை அமைத்தது. அதன் 5-வது அமர்வில் 2100 ஆண்டுவரை எல்லாவகையிலும் வெளியிடப்படும் கார்பன் அளவு 2900 ஹிகா டன்கள் அளவுக்கு அதிகமானால், புவியின் சராசரி வெப்பநிலை இரண்டு டிகிரியை விட அதிகரிக்கும் என்று எச்சரித்தது. இதுவே ”கார்பன் வெளி” Carbon Space என அழைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே முன்னேறிய, வளர்ந்து வரும் நாடுகள் கார்பன் அளவை எப்படிக் குறைக்கலாம் என்பது குறித்து சர்வதேச மாநாடுகளை நடத்துகின்றன.  (மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது)  

மனிதகுலத்திற்குப் பொதுவான வளிமண்டலத்தை மாசுபடுத்தும் கார்பன் வெளி’ – அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டிய அடிப்படை சமஉரிமையை ஏகாதிபத்தியம் மறுக்கிறது.  சுற்றுச் சூழல் அழிந்துவருவதைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு முன்னேறிய நாடுகளுக்கு கூடுதலாக இருக்கிறது.  ஆனால் அதை மறுப்பதற்றே அவர்கள் முயல்கிறார்கள்.  இன்றைய நிலையில், உலகச் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பின் சுமையை வளரும் நாடுகளின் தோள்களுக்கு மாற்றுவது என்பது ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வர்க்கச் சுரண்டலின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் இந்த முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதும்கூட, வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்களின் சர்வதேச வர்க்கச் போராட்டத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

இந்தச் சூழ்நிலையில் உலக மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்கள் விரும்பியவாறு அமைத்திட, இன்றைய எதார்த்த நிலைமையின் சவால்களைச் சந்திக்கத்தான் வேண்டும்.  மக்கள் போராட்டங்களைச் சக்திமிக்கதாக தீவிரப்படுத்த வேண்டும்.  இந்தப் போராட்டங்களை மக்கள் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக்குகிறார்களோ, அந்த அளவு சமூக மாற்றம் விரைவுபடுத்தப்படும்.

இதைத் தொகுத்துக் கூறுவதெனில், கடந்த 30 ஆண்டுகளின் சீரமைப்புகளால் சீனா, பொருளாதார முன்னேற்றத்திலும், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.  முதலாளித்துவ வரலாற்றில், இதுவரை எந்த முதலாளித்தவ நாடும் அடைந்திராத, 30 ஆண்டுகளில் சராசரி 10 சதவீதத்திற்கும் கூடுதலான வளர்ச்சி விகிதத்தை மக்கள் சீனம் சாதித்துள்ளது.  இந்த அபார வளர்ச்சியோடு வேறு சில பிரச்சனைகளும் எழுந்துள்ளன.  உற்பத்தி உறவு முறையில் பாதகமான மாறுதல்கள், அதனால் சீனாவின் சமூக உறவிலும் பாதிப்புகளை உண்டாக்கி அவை இன்று மேலெழுந்துள்ளது. இந்த முரண்பாடுகள் எவ்வளவு வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டுத் தீர்க்கப்படுமோ அதைப் பொறுத்தே சீனா பின்பற்றும் வழிமுறைகள் அமையும்.  சீனாவில் சோஷலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில், வலிமையாக்குவதில் அவர்களுடைய முயற்சிகளுக்கெல்லாம் உலகம் முழுவதுமுள்ள கம்யூனிட்களின் தார்மீக ஆதரவு நிச்சயம் உண்டு.

அதே போல, வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி.  1986 அவர்களது 6—வது கட்சி காங்கிரஸில் பொருளாதாரத்தில் முதலில் உற்பத்தி மற்றும் முதலீட்டு கட்டுமானங்களில், புற நிலைமைகள் எவ்வாறாயினும், வேகமாக முன்னேற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  அதில் மாறுகின்ற இடைக்காலத்தில் சொத்துரிமை பல வடிவங்களில் தொடர வேண்டியதற்கான தேவை பற்றி விவாதித்துள்ளனர். 7—வது கட்சி காங்கிரஸிலும் எழுந்துள்ள பல பிரச்சனைகள் குறித்தும், சோஷலிசத்தை மறுக்கும் போக்குகளை முறியடிப்பதற்கான அவசியம் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர்.

லத்தீன் அமெரிக்காவில் பல நாடுகளின் தேர்தல்களில் வென்று இடதுசாரி முற்போக்கு அரசாங்கங்கள் அமைந்துள்ளன. அவற்றில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உண்டு, இடதுசாரிக் கொள்கைகளுக்கு ஆதரவான முற்போக்குச் சக்திகளின் கட்சிகளும் உண்டு. அவை, ஏகாதிபத்தியத்தின் உலகமயம், புதிய தாராளமயத்திற்கு மாற்றான அரசாங்கங்களை முதலாளித்துவ முறைக்கு உட்பட்டே அமைத்துள்ளன.  அந்த அரசாங்கங்கள் சோஷலிச மாற்று அரசு ஆகாது என்றாலும், நிச்சயம் அவை ஏகாதிபத்தியம் மற்றும் தாராளமய முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நேர்மறையான வீச்சையும் வலுவையும் ஏற்படுத்துபவை. இந்த அனுபவங்கள் பெரு மற்றும் கொலம்பியா நாடுகளில் நடக்கும் இடதுசாரி அதிதீவிர யுத்தங்களுக்கு நேர்எதிரானது மட்டுமல்ல, அவை மீண்டும் ஒருமுறை இடதுசாரி சாகசப் போக்கு பயனற்றது என்பதற்குச் செய்முறை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  கொலம்பியா நாட்டு வலதுசாரி பிற்போக்கு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி அமெரிக்கா அந்நாட்டில், ’ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம்’ என்ற போர்வையில், ஏழு இடங்களில் இராணுவத்தளங்களை அமைத்துள்ளது.  அவையெல்லாம் உண்மையில் முக்கியமாக வெனிசுலாவைக் குறி வைத்து அமைக்கப்பட்டவை. 

கடந்த சில ஆண்டுகளாக, இந்த முற்போக்கு நாடுகளின் பொருளாதாரம், சோஷலிச க்யூபா நாட்டின் வலிமையான செல்வாக்கின் காரணமாக, வளர்ச்சி பெற்றுள்ளன.  அவை அமெரிக்காவைச் சார்ந்து இருந்தது பெருமளவு குறைக்கப்பட்டு, தங்கள் வர்த்தகத்தைத் தென்பகுதி நாடுகளுடன் அதிகரித்துள்ளன. இவை ஓரளவு அந்தக் கண்டத்தின் பொருளாதார நெருக்கடியைக் குறைத்ததுடன், அந்த நாடுகளும் தங்கள் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து மீண்டுவரவும் உதவி உள்ளன. வெனிசுலா, ஈக்வெட்டார், பொலிவியா நாடுகள் உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டில் நிற்கின்றனர்.  அந்த நாடுகளின் முந்தைய ஆட்சியாளர்களால் பெருமளவு பொதுச் சொத்து தனியார் அதிகாரத்தின் கீழ் இருந்தன; அவைகளெல்லாம் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்டன.  வெனிசுலாவிலும் ஈக்வெட்டாரிலும் பல வங்கிகள் தேசியஉடமை ஆக்கப்பட்டதை அடுத்து, பொலிவியா போல, எரிசக்தி ஆதாரங்களையும் நாட்டுடமை ஆக்கியுள்ளன. இந்நாடுகள் சமூக நலத்திட்டங்களில் அதிக அளவு செலவு செய்யத் தொடங்கி உள்ளன; சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் அரசாங்கம் முக்கிய பங்குவகிக்கத் தொடங்கி உள்ள செயல்பாடுகள், அந்தக் கண்டத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கு வழிகாட்டுகின்ற முன்னோடியாக உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் தேசிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்று இனஒதுக்கல் முறையை ஒழிந்தது.  ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் அரசு மூவர் கூட்டணியில் அமைந்ததாகும்; அவை, ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC), தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP), தென்னாப்பிரிக்க தொழிற்சங்கங்களின் மகாசம்மேளனம் (COSATU), ஆகியவை இணைந்து உருவானது.  மிகக் கடுமையான சுரண்டலும், இனரீதியான பாகுபாடு காட்டும் இனஒதுக்கல் கொள்கையைப் பின்பற்றிய கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் இந்தக் கூட்டணி கடுமையாக முயற்சி செய்து பெரும்பான்மை மக்களான கறுப்பின மக்களுக்கு பொருளாதார அதிகாரம் வழங்கப் பாடுபட்டது. துவக்கத்தில் 1996 தீர்மானத்தின்படி அவர்கள் பின்பற்றிய கொள்கை ’கியர்’ (GEAR) [Growth, Employment And Redistribution] அதாவது, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மற்றும் மறுபங்கீட்டு வழங்கல் என்பதாகும். ஆனால் 2008-ல் இந்த முறை புதிய தாரளமயச் சீரமைப்பு மாற்றத்தை முன்னேற்றுவதாகக் கண்டறிந்தார்கள்; இதனால் தேசிய மொத்த உற்பத்தி ஜிடிபி—யில் தொழிலாளர்களின் பங்கு 1994 ல் 51 சதமாக இருந்தது, 2008ல் 42 சதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது.  எனவே, கொள்கை அமலாக்கத்தில் தேவையான மாறுதல்களைச் செய்யும் பணியில் கடுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நம்முடைய சரித்திரத்தின்படி, தற்போது புதுவிதமான சவால்கள் சமூகத்தின் மையத்திற்கு வந்துள்ளன. மத அடையாளங்களைத் திறமையாக உபயோகப்படுத்தி பிரிட்டீஷ் ஏகாதிபத்தியமும் உள்நாட்டு ஆளும் வர்க்கமும், இந்தியத் துணைக் கண்டத்தைக் கூறு போட முயற்சிக்கிறார்கள்.  சுரண்டப்படுகின்ற மக்கள் கூட்டத்தினரை வர்க்க ரீதியாக ஒன்றுதிரட்ட நாம் முயற்சி செய்கிறோம்; அந்த முயற்சிகளைச் சீர்குலைக்கும் வகையில் மதவாத, சாதிய சக்திகள் மக்களைத் தங்கள் பக்கம் திரட்டுகிறார்கள். இன்றைய நிலைமைகளில், ஒருபக்கம் ஆளும் பூர்ஷ்வா வர்க்கம், (சாதி, மத) அடையாள அரசியலைப் பயன்படுத்தி உழைக்கும் வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைக்கிறார்கள்; மறுபுறமோ, பொதுவாக இத்தகைய அடையாள அரசியலை முன்னெடுப்பதன் மூலம் மக்களை உண்மையான அரசியல் உணர்வற்றவர்களாக ஆக்கி வருகிறார்கள்.

மார்க்ஸியத்திற்கு எதிராக, மார்க்ஸியத்தின் பெயராலேயே ’பின் நவீனத்துவவாதிகள்’ (post modernism) -- உண்மையில் மார்க்ஸியத்தின் எதிரிகள் – புதிய விவாதத்தை முன் வைக்கிறார்கள்.  அதாவது, அரசியல் என்பதே (மைக்ரோ) சிறிய அளவில் உள்ளூர் அளவிலே; அதுவும் வித்தியாசங்கள், வேறுபாடுகள் அடிப்படையிலும்; அடையாள அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும் என வாதிடுகிறார்கள். இந்த வாதம் முன்பே அடையாள அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு புதிய அடிப்படையை வழங்குவதாக இருக்கிறது. 

இந்தப் பின் நவீனனத்துவ ஆதரவாளர்களான அடையாள அரசியல் நடத்துபவர்களுக்குத் தற்போதைய நிலையில், இனம், மதம், சாதி, குலம் அல்லது பாலினம் முதலியவற்றின் அடையாள அடிப்படைகள், மக்களைத் தங்கள் அடையாள அரசியலுக்குத் திரட்ட மேலும் மேலும் பயன்படுகிறது. அவர்களைப் பொருத்தவரை, வர்க்கம் என்பதே இந்த அடையாளங்களில் ஒரு சிறு பகுதிதான்.  இதன் பொருள் யாதெனின், அடையாள அரசியல், உழைக்கும் வர்க்கம் என்ற கருத்தாக்கத்தையே மறுக்கிறார்கள் என்பதுதான். அதன் இயல்புப்படியே அடையாள அரசியல் மக்களைத் தனித்தனியாக வேறுபடுத்திப் பிரிக்கிறது; ஒரு அடையாளப் பிரிவினரோடு மற்றவர் இணைய முடியாமல் தனித்து வைக்கிறது. இப்படிப் பிரித்து வைப்பதால் பல நேரங்களில் ஒரு பிரிவினரோடு மற்றவரை எப்போதும் முரண்படவும் மோதவும் போட்டியிடவும் வைக்கிறது.

சமூகத்தில் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்கள் பிரிவினர் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சிக்கு எதிராக, அடையாள அரசியல், மிகப் பெரிய சவாலாக உள்ளது. உழைக்கும் மக்களின் கட்சி, தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டச் சாதியைச் சேர்ந்த மக்களின் நிலம் சார்ந்த, கூலி, வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னெடுப்பதுடன், சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதியப் பாகுபாடுகளைக் களையவும் இயக்கம் காண வேண்டும். இப்படி வர்க்கப் பிரச்சனைகளையும் சமூகப் பிரச்சனைகளையும் ஒன்றாக எடுப்பதன் மூலம்தான் பெருங்கேட்டினை உண்டாக்கும் அடையாள அரசியலின் விளைவுகளை முறியடிக்க முடியும்; சாதிகளாகப் பிளவுபட்டுச் சிதறுவதற்கு எதிராகப் போராடவும் முடியும். இதனை மார்க்ஸிய அடிப்படையில் பார்த்தால், வர்க்க அடிப்படையிலானச் சுரண்டலும் சமூக ரீதியான ஒடுக்குமுறைகளும் பின்னிப் பிணைந்து ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைய நமது நாட்டின் சமூக பொருளாதார அமைப்பு நிலையில், முதலாளிகள் மற்றும் விவசாய பண்ணை முறை சார்ந்த சுரண்டலோடு, பல வடிவங்களில் சாதி, குலம், பாலின அடிப்படையிலான சமூக ஒடுக்கு முறைகளும் ஒரே நேரத்தில் இருந்து வருவதைப் பார்க்க முடியும். ஆளும் வர்க்கங்கள், சுரண்டலின் மூலம் உபரி—மதிப்பை உரிஞ்சுவதிலும், தங்களின் மேலாண்மையைக் கெட்டிப்படுத்தப் பலவடிவ சமூக ஒடுக்கு முறைகளையும் பயன்படுத்துகின்றனர்.  இதனால்தான், இரு வடிவங்களான சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளை எதிர்த்து, ஒரே நேரத்தில், நாம் போராட்டங்களை நடத்துவது அவசியமாகிறது.  சாதிய அடிப்படையில் விளைந்த சமூக ஒடுக்குமுறைகளோடு கூடிய விவசாயப் பண்ணை ஜமீன்தார்களின் முடிவிலாது தொடரும் ஆதிக்கம், குடும்ப இன ஆட்சி சிந்தாந்தத்திற்குச் சாதகமான பலமான ஆதரவைச் சேர்க்கிறது. புதிய தாராளமயம் இதனை மேலும் தாங்கிப் பிடிக்கிறது.  பாலினப் பாகுபாடு என்பது பண்ணையடிமைக்கால மிச்சசொச்சம் மட்டுமல்ல, வர்க்க அடிப்படையில் அமைந்த அனைத்து சமூக முறையின் உடலெங்கும் பரவி உள்ளதும் ஆகும். சமச்சீரற்ற வேலைப் பிரிப்பு, குடும்பப் பொருளாதாரத்தில் பொருத்தமற்ற விகிதத்தில் பெண்கள் மீது சுமத்தப்படும் பாரம் புதிய பொருளாதார தாராளமயக் கொள்கைகளால் இன்னும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன; மேலும், சமூக நலத்தைப் பேணுவதில் அரசின் பங்கு குறைந்து வருவதுமட்டுமல்ல, அந்தப் பொறுப்பையே அரசாங்கம் கைவிட்டும் வருகிறது. அனைத்து இடங்களிலும் பாலின சமத்துவமின்மை மற்றும் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.  உழைக்கும் வர்க்கக் கட்சி, இந்திய மக்களிடையே பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான தேவையான சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதனை வர்க்கப் போராட்டத்தைத் தீவிரமாக்கிட, பிரிக்க முடியாத ஒரு பகுதி ஆக்கி, இடைவிடாது தொய்வில்லாது போராட வேண்டும்.

பெரும்பான்மை மதவெறிச் சக்திகளுக்கும், அனைத்து வகை சிறுபான்மை மத அடிப்படைவாத வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டங்களை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். சுதந்திரத்திற்குப்பின் நவீனஇந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அடிப்படையே மக்களின் ஜனநாயக உரிமைகளைச் செயல்படுத்துவதற்குப் பெரிதும் துணை செய்வதும், வர்க்க ரீதியாக மக்களைத் திரட்டுவதில் நமக்குச் சாதகமாக விளங்கும் முன்நிபந்தனையும் ஆகும்.  ஆனால் ஆர்எஸ்எஸ் போல சகிப்புத்தன்மையற்ற, பிடிவாதமான, பாசிச ’ஹிந்து ராஷ்ட்டிரா’ அமைப்பினர், நமது நாட்டின் ஆதாரமான இந்த அடிப்படையையே சீர்குலைக்கவும் வலிமை குன்றவும் செய்கிறார்கள்; அதற்கென அந்தச் சக்திகள் உழைக்கும் மக்களின்/ சுரண்டப்படும் மக்களின் வர்க்க ஒற்றுமையை நேரடியாகச் சீர்குலைக்கிறார்கள்; இதனைச் செயல்படுத்த அவர்களிடையே மதவெறி உணர்வுகளை விசிறிவிடுகிறார்கள். எனவேதான் மதவெறிச் சக்திகளை முறியடிக்க உறுதியான போராட்டங்களை நடத்தாமல், புரட்சிகர முன்னேற்றம் என்பது நமது நாட்டில் சாத்தியமே இல்லை.  

நவீன தேசியம் முதலாளித்துவ வர்க்க வளர்சியோடும், எழுச்சி பெற்றத் தேசிய விழிப்புணர்வு அன்றைய பண்ணையடிமை முறையை எதிர்த்தும் வளர்ந்தது.  இருபதாம் நூற்றாண்டில் காலனிய நாடுகளிலும், அரைகுறை காலனிய நாடுகளிலும், நாட்டுப்பற்றும்  தேசிய உணர்ச்சியும் வீறுகொண்டு காலனிய மற்றும் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்தது. இந்த முன்னாள் காலனி நாடுகள் விடுதலை பெற்று ஆட்சியதிகாரம் உள்நாட்டு ஆளும் வர்க்கத்திடம் வந்த பிறகு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய உணர்ச்சி, நீர்த்துப் போனது.  ஏகாதிபத்திய உலகமயமாக்கலில் தேசிய இறையாண்மையின் மீது திட்டமிட்டத் தாக்குதல் நடைபெறுகிறது.  ஏகாதிபத்திய நிதி மூலதனம் அனைத்து தேசிய அரசுகள் தங்கள் தேசிய இறையாண்மையை அவர்களது ஏவல்களுக்கு அடிபணிய வேண்டுமெனக் கோருகின்றனர். 

பல்வேறு வட்டார / பிரதேச மற்றும் இன அடையாள அடைப்படையில் மக்கள் திரட்டப்பட்டு, அதன் மூலம் புதிய சவால்கள் தொடுக்கப்படுகின்றன.  புதிய தனி மாநிலங்கள் அமைக்கக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள், மொழிவழி அமைந்த இந்திய அரசு அமைப்பு முறையின் அடித்தளத்தைச் சீர்குலைப்பது மட்டுமல்ல, சுரண்டப்படும் மக்கள் கூட்டத்தின் ஒற்றுமையையும் சீர்குலைக்கிறது.

மாபெரும் அக்டோபர் புரட்சி மற்றும் அதன் பின் நடைபெற்ற புரட்சிகளின் அனுபவங்களின் பலவீனங்கள், சவால்கள், பின்னடைவுகள் முக்கியமாக, ஸ்தூலமான நமது வரலாற்று அனுபவத்தின் பின்னணியில் எழுகின்ற கேள்வி – இந்திய நிலைமைகளில் சோஷலிசம் என்பது என்ன?  இதற்கான விவரமான செயல்முறை திட்ட வரைபடம் -- மக்கள் ஜனநாயகப் புரட்சி முழுமையாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வரை – இருக்க முடியாது என்பது உண்மைதான்.  ஆனாலும் நமது முந்தைய சிந்தாந்த ஆவணங்களில் நாம் பெற்ற புரிதல் என்பதை மேலும் குறிப்பாகக் கோடிகாட்டி கீழ்க்கண்டவாறு மேம்படுத்த முடியும்:

எங்களது பார்வையில்

சோஷலிசம் என்பதன் பொருள் யாதெனின், 

அது அனைத்து மக்களுக்கும் உண்ண உணவை உறுதி செய்வது, முழுமையான வேலைவாய்ப்பு, அனைவரும் கல்வி பெறும் உரிமை, சுகாதாரம் மற்றும் இருக்க இடம் –வீட்டு வசதி பெறுவது

சோஷலிசம் என்பதன் பொருள் யாதெனின்,

மக்களுக்குப் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அதிகாரம் அளிப்பது, உழைப்பாளிகளின், விவசாயிகளின், இதுவரை புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த வாழ்க்கைச் சூழலை / வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது; அதன் பொருள் யாதெனின், முதலாவதாகவும் முழுமையானதாகவும் மக்கள் சக்தியையே உயர் அதிகாரமிக்கதாக அங்கீகரிப்பது; சட்ட நீதி நடைமுறைகளில், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடி--உரிமைகளைப் பிரிக்கவொண்ணாதப் பகுதியாக்குவது,  முதலாளித்துவ ஜனநாயகத்தில் மேலெழுந்தவாரியாகச் சாதாரணமாக அனைத்து உரிமைகளும் இருப்பது போன்ற மாயத்தோற்றம் இருக்குமே தவிர, பெரும்பான்மை மக்கள் அந்த உரிமைகளைப் பயன்படுத்த வகையற்றவர்களாக மறுக்கப்பட்டிருப்பார்கள். மாறாக, சோஷலிசத்தின் கீழ், ஜனநாயகம் என்பது அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொருளாதார, கல்வி மற்றும் சமூக அதிகாரமளித்தலை ஆதாரமாகக் கொண்டு விளங்கும்.  மனித வாழ்க்கைத் தொடர்ந்து அர்த்தமுடையதாக மேம்படுத்தப்பட்டு, அதனை ஆதாரமாகக் கொண்டே சோஷலிச ஜனநாயகம் தழைத்தோங்கும்.  சோஷலிசத்தின் கீழ், ஒரு கருத்தை மறுத்து மாற்றுக் கருத்து உரைப்பதற்கான உரிமை, பேச்சு சுதந்திரம்         –--சோஷலிசத்தை வலிமைப்படுத்தும் வகையில்--, பலவிதமான அபிப்பிராயங்கள் வளர்ச்சி பெறும்.  இவையெல்லாம் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார ஆட்சி முறையில் நடைமுறைப் படுத்தப்படும்.

சோஷலிசம் என்பதன் பொருள் யாதெனின்,

சாதிய முறை ஒழிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறை முடிவுக்குக் கொண்டுவரப்படுவது. பெரும்பான்மை, சிறுபான்மை அனைத்து மொழிவழி குழுக்களும் சம உரிமை பெறுவது; அனைத்து மொழிகளும் சமச்சீரான வளர்ச்சி பெறுவது.

பாலின ஒடுக்கு முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அனைத்து சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பிரிவு மக்கள் அனைவருக்கும் சமத்துவம் உறுதி செய்யப்படுவது.

சோஷலிசம் என்பதன் பொருள் யாதெனின்,

சோஷலிசப் பொருளாதாரக் கட்டமைத்தல், சோஷலிச உற்பத்திக் கருவிகள் மூலமும் மையப்படுத்தத் திட்டமிடுதல் மூலமும் நிர்மாணித்தல். பொருள் சரக்கு உற்பத்தி நீடிக்கும் வரை, சந்தை என்பது இருக்கவே செய்யும். ஆனாலும் சந்தை ஆதிக்கமான மார்க்கெட் சக்தி, மத்திய மையத் திட்டமிடலின் வழிகாட்டுதல் விதிகளின் கீழ் மட்டுமே இயங்குவது. பலவிதமான சொத்துரிமை இருக்க முடியும் / நீடிக்கவே செய்யும் என்றாலும், முடிவு செய்யும் மைய வடிவம் என்பது உற்பத்திக் கருவிகள் பொது உரிமை சார்ந்ததாக மட்டுமே இருப்பது.  ஆனால் இதன் பொருள் அரசின் உடமையானப் பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இயங்கும் என்பதாகாது; மாறாக, பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றபோதும், பிற வடிவங்களான ஒன்று சேர்ந்த மற்றும் கூட்டுறவு உரிமை உடைய நிறுவனங்களும் இயங்கும் என்பதுதான்.  சாராம்சமாக, நாட்டின் பொருளாதார ஆதார சுருதி என்பது அரசினால் கட்டுப்படுத்தப்பட்டப் பொருளாதாரக் கொள்கை வழியிலேயே ஒழுங்கமைப்பட்டுச் செயல் படுத்தப்படுவது, அவசியமாக அதே போழ்து பிற வடிவங்களுடன் கடைபிடிக்கப்படுவது.

இந்தியாவில் புரட்சிகரப் போராட்டங்களை வலிமை பெறச் செய்ய ஏனைய நாட்டு அனுபவங்களிலிருந்து சரியான பாடத்தை எடுத்துக் கொள்வோம்.  அந்த நாடுகள் இன்றைய உலக எதார்த்த நிலைகளின் அடிப்படையில் எழுந்துள்ள சவால்களை எதிர்த்து, அவர்களுக்கான வழிமுறைகளைத் திட்டமிடுகிறார்கள்.  அதே போல, இந்தியாவில் இருக்கும் நாம், உலக முதலாளித்துவ முறையில் உலகமயம் அமலாகிக் கொண்டிருக்கும் வேளையில், அதனால் பரவலான வகையில் எழுந்துள்ள சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்களைப் பொதுவாகவும், -- இந்திய மக்களையும் இந்தியப் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் குறிப்பாகவும் – கவனத்தில் கொண்டு நமது வழிமுறைகளைத் திட்டமிடுவோம். எனவே, இன்றைய காலகட்டம் சரியான போராட்ட யுக்திகளை வகுக்கும் பெரும் பொறுப்பை நம் மீது சுமத்தியுள்ளது. இந்திய மக்களைச் சுரண்டல் மற்றும் அடிமைத்தளைகளிலிருந்து முற்றாக விடுதலைப்பெறச் செய்ய, நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, அத்தகைய யுக்திகளை கட்சி காங்கிரஸ்களில் பொருத்தமாகக் காலமாற்றத்திற்கு இயையுமாறு வடித்தெடுக்க வேண்டும்.

ஆகையால், நம்முடைய கடந்த கால அனைத்து அனுபவங்கள் மற்றும் சித்தாந்த, அரசியல் வினாக்களின் மீது நமது புரிதல்களைத் தொகுத்துக் கூறுவதென்றால் :

உலக சோஷலிசம் பின்னடைவைச் சந்தித்து, சர்வதேசப் பரஸ்பர வர்க்க வலிமைகள் ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமாக மாறியுள்ள இந்த நிலைமையிலும் --- படைப்பூக்கமிக்க விஞ்ஞானமான மார்க்ஸிய-- லெனினியச் சிந்தாந்தத்தில் பற்றுறுதி கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) [CPI(M)], இந்திய மக்களை அனைத்து ஒடுக்குமுறை அடிமைத்தளைகளிருந்து உண்மையான விட்டுவிடுதலையாகச் செய்யும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்! இருபதாம் நூற்றாண்டின் பிரச்சனைகளின் வளர்ச்சிப் போக்குகள், தவறுகள், பின்னடைவுகளையும் தாண்டி, இன்றைய காலம் கட்டியம் கூறும் உண்மை யாதெனின், அடிப்படையான வரலாற்றின் திசைவழி, தவிர்க்க முடியாமல், சர்வ நிச்சயமாகத் தேசிய மற்றும் சமூக விடுதலையை நோக்கித்தான் செல்லும் என்பதுதான்.

இன்றைய இந்தச் சூழ்நிலையில் CPI(M) கட்சி, சீர்குலைவு இயக்கங்களின் சவால்களை முறியடித்து, புரட்சிகர மார்க்ஸிய-- லெனினியச் சிந்தாந்தத்திலிருந்து விலகிச் செல்லும் திரிபுகளுக்கு இரையாகும் போக்குகளிலிருந்து இயக்கத்தைப் பாதுகாத்து, மார்க்ஸிய-- லெனினியச் சிந்தாந்தத்தின் உள்ளார்ந்த சாரமான புரட்சிகர அம்சத்தை வலிமைபெறச் செய்ய உறுதி பூணுகிறது. சவால்களை எதிர்கொள்ளப் பொருத்தமான வழிமுறைகளை / யுக்திகளைக் கட்சிக் காங்கிரஸ்களில் விவாதித்துத் தீர்மானிக்கிறோம்.  அந்த அடிப்படையில் இப்போதும், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளச் சரியான போராட்ட யுக்திகளை, இலக்குகளை, வழிமுறைகளைக் கண்டறிவது மிகமுக்கியமானதாகும்.

CPI(M) கட்சி பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு ஏற்ப, கொள்கைத் திரிபுகள், சிந்தாந்தத்திலிருந்து விலகிச் செல்லும் போக்குகளை எதிர்த்துப் போராடி, மார்க்ஸிய – லெனினியத்தின் சாரமான புரட்சிகர அம்சத்தை எப்போதும் உறுதியாகப் பற்றி, மேலுயர்த்திப் பிடித்து வந்துள்ளது. 20—ம் நூற்றாண்டு மக்கள் வாழ்வில் நாகரீகச் சமூகமாக மாற்றியமைப்பதில் சோஷலிசத்தின் அனுபவங்கள் நீங்கா இடம் பெற்றுள்ளன. அவற்றையும்,  நிகழ்கால உலக முதலாளித்துவ மற்றும் சோஷலிசத்தின் சமூக பொருளாதார முறைகளையும், விஞ்ஞான மார்க்ஸிய லெனினியச் சிந்தாந்தத்தின் வழியில் ஆய்ந்தறிந்து CPI(M) கட்சி முடிவு செய்யும். அதன் அடிப்படையில் இந்திய மக்கள் இறுதி வெற்றி அடையும் வரையில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று நடத்தும்.

CPI(M) கட்சி தனது புரட்சிகர கடமையை நிச்சயம் முன்னெடுத்துச் செல்லும். இந்தியாவின் பரஸ்பர வர்க்கங்களின் வலிமையை உழைக்கும் வர்க்கத்திற்குச் சாதகமாக மாற்ற, நமது நாட்டின் சுரண்டப்படும் மக்கள் திரளை ஒன்று திரட்டும்.  அவர்களின் துணை கொண்டு புரட்சிகரத் தாக்குதலை நடத்த மக்கள் ஜனநாயகத்தை அதிகாரம் பெறச் செய்யும்.  அமையவிருக்கும் அந்த மக்கள் ஜனநாயகத்தின் அடிப்படையில் -- சமூக விடுதலைக்கும் மனிதகுல விடுதலைக்கும் ஒரே அடிப்படை ஆதாரமான--   சோஷலிசத்தை நிர்மாணிக்கும்!

                                      ---- 000   000   000 ----

{ ஆங்கிலத்திருந்து தமிழாக்கம் :

  வெ. நீலகண்டன், தொலைபேசித்துறை, கடலூர் }

                     

No comments:

Post a Comment